“எல்லா மதிப்பீடுகளுக்குமான மறு மதிப்பீடு தான் காலத்தின் தேவை”
–நீட்சே
சாம்ராஜின் மொழி அலங்காரங்கள் அற்றது. அதன் இயல்பே அதன் அழகு. சொற்களின் எதார்த்த கூட்டிசைவு படைப்போடு ஒன்ற வைத்துவிடுகிறது. முதல் வரிகளே அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட களத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் நோக்குடன் காத்திருப்பவை. ‘மரியபுஷ்பம் அவசர அவசரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள்’ என்றோ ‘கணேசனோடு எப்போது அந்த வார்த்தை ஒட்டிக் கொண்டது என கணேசனுக்கே தெரியாது’ என்றோ தொடங்கும் வரிகள் ஊருக்கு வழி சொல்லும் அடையாளங்கள் போல கதைக்கான திறவை முன்வைப்பன.
காட்சிகளாக விரியும் சொற்கள் திடமான வரைவுக்குள் கதையை நகர்த்துகிறது. அந்த வரைவு புகுத்தப்பட்டதாக இல்லாமல் அதன் போக்கிலேயே தீர்மானிக்கப்பட்டதாக அமைவது நம்பகத்தன்மை உடையதாக்குகிறது.
முதல் கதை குள்ளன் பினு, பினுவின் அறிமுகத்திற்கு அவன் காலை ஊன்ற வாகாக, வண்டியை நிறுத்த இடம் தேடுவது நீரோட்டம் பார்க்கிறவர்களை ஒத்து இருக்கும் என்ற ஒப்பீடு தெளிவான அறிமுகத்தை ஏற்படுத்தும். அவனுடைய உயரமான தாத்தா, உயரமான பேபி கொச்சம்மாளை கல்யாணம் செய்து உயரமான மகன்களை மகள்களை ஈன்றெடுக்கிறார். அந்த குடும்பத்திலேயே குள்ளனான பினு தாத்தாவிடமிருந்து தந்தையிடமிருந்து உறவினர்களிடமிருந்தும் எவ்வித அன்பையும் பெறவில்லை. தனியனாகவே திரியும் அவலம் அவனுக்கு.
தந்தைக்கு பிறகு அவர் நடத்திய மெஸ் பார்த்துக் கொள்ளும் பொறுப்புக்கு வருகிறான். அவனது அக்காவின் மகளைக் கேலி செய்யும் இளைஞர்களை எதிர்க்க துணியும் போது தன்னுடைய உயரமே சண்டையில் சாதகமாகிறது. உயரத்தால் அல்லாது மனதில் தான் உயர்ந்துவிட்டதாக நம்புகிறான். அதுவரை அவனை கூட்டிச் செல்ல வரும் உமரின் ஆட்டோவில், அதன் பிறகு வராமல் நடந்தே செல்ல தொடங்குகிறான். இறுதியில் கதை இவ்வரியோடு முடிகிறது, ‘அவனது நிழல் நீளமாய் ஆற்றின் நடுப்பகுதி வரை நீண்டு தெரிய, அதிர்ந்து சட்டென்று பின்வாங்கினான் பினு ’. உயரத்தைக் கண்டு பயம் கொள்ளுகிற புனைவு கதையை இறுதி செய்கிறது.
காட்சிகளாக விரியும் கதைகளில் காலம் இரண்டொரு வரிகளில் கடந்துவிடுகின்றன. அவையும் காற்புள்ளிக்கு பிறகு இன்னொரு பரிணாமத்தை காட்டிவிடுகின்றன.
இந்த கட்டுரை ஆரம்பித்ததில் இருந்து ஒரு சின்ன நெருடல் எனக்குள் இருந்துக் கொண்டே இருக்கிறது. ரொம்ப சீரியஸாக கட்டுரை பயணப்படுகிறதோ என்று. இதற்கு நேர் எதிரான கட்டுடைக்கப்பட்ட எளிய மொழியில் தான் இக்கதைகள். மனிதர்களின் இயல்பான குறும்பை, கேலியை, பகடியை தன்னுடைய தூண்களாக கொண்ட தொகுப்பை விமர்சிக்கும் போது மட்டும் இறுக்கமான மொழியாக இருந்தா எப்படி?
வடிவேலுவை ஏன் கொண்டாடுகிறோம் என யோசித்து பார்த்தால் அவருடைய மறுக்க முடியாத அடையாளமாக மதுரக்காரன் என்கிற தொனி இருப்பதை சொல்ல முடியும். சாம்ராஜ்க்கும் அது பொருந்தும். ஏறத்தாழ மதுரையோடு நெருங்கிய தொடர்பு கொண்ட யாரும் சொல்லிவிட முடியும், மதுரை எவ்வளவு கொண்டாட்டமான நகரம் என்று. அதே நேரத்தில் பிடிவாதம் கொண்ட இடமும் கூட.
சாம்ராஜின் கதைகள் ஒரு எளிய கதைசொல்லியை அறிமுகப்படுத்துகிறது. கதைசொல்லி கதைகளைச் சொல்லி சிரிக்கிறான், கூடவே அழுகிறான், கடக்க முடியாத இடத்தை ‘ச்சை… இதெல்லாம் பெருசா’ என உதாசீனப்படுத்தி அழைத்துச் செல்கிறான். அவன் மொழிக்கு பழகிய நாம் அவனோடு சென்ற விட்ட நம்மை, வெகு நேரமாக தேடிக் கொண்டிருக்கிறோம்.
சாமின் கதைகள் மனிதர்களைச் சுற்றியது. அவர்களின் உணர்வுகளை சுற்றியது. குள்ளனான பினுவிற்கு உயரமே அவனுடைய சிக்கல். முத்திருளாண்டிக்கு வாக்கப்பட்டு வரும் செவ்வாக்கியத்திற்கு கணவனுடன் எதிர்பார்த்த தாம்பத்திய உறவு இல்லாது போவது சிக்கல். பரமேஸ்வரிக்கு மாமனார், அச்சுதன் நாயருக்கு தன்னுடைய கேப்டன் கனவு, லக்ஷ்மியக்காவிற்கு விரக்தி, மல்லிகாவிற்கு ஒரே சந்தோசமான சினிமா இல்லாது போனது, மரியபுஷ்பத்தின் கணவனான சகாயத்திற்கு மனைவியின் மீதான சந்தேகம் – என உழலும் மனிதர்களை நாம் இயல்பான உலகில் எல்லா மூலைகளிலும் சந்திக்க நேரிடும். இவர்கள் தங்களுக்கான வாழ்வின் மீதான பிடித்தத்தை பழிவாங்கும், நிறைவேற்றும், முற்றிலுமாக துறந்து விடும் முடிவுகள் வழியாக உறுதி செய்கின்றனர்.
இன்னொரு பார்வையில் தோழர்கள், கலகம், புரட்சி, அரசியல் குறித்த பகடிகளைக் குறிப்பிடலாம். அதிலும் மனிதர்கள் தங்களுக்கான வாழ்க்கை உறுதிப்பாட்டிற்கே அரசியலை அணுகுகின்றனர்.
பகடியின் உச்சபட்சத்தை தரிசிக்க ‘தொழில் –புரட்சி’ ‘மருள்’ ‘ஜார் ஒழிக’ கதைகளைக் குறிப்பிடலாம்.
மிக எளிமையானது தான் படைப்பு உருவாக்கத்தில் சிக்கலானதும் கூட. பகடியை அவ்வகையில் சேர்க்கலாம்.
மத்திய அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பைக் காட்ட திட்டமிடும் தோழர்கள் சின்ன வட்டம் தான் ஆறு பேர். அதிலும் ஒருவர் தன் தங்கைக்கு சொந்த சாதியில் மாப்பிள்ளை பார்க்க போவதை மறைத்து விட்டு துக்க நிகழ்விற்கு போவதாக கூறிச் செல்பவர். மூன்று குழு. கண்காணிப்பு, செயலாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு. ஒரு நாய் இருந்ததை கவனிக்க மறந்ததால் அத்திட்டமே முடங்குகிறது. வந்தவய்ங்க கொளுத்தி விட்டுட்டு போயிருந்தவாச்சும் புது ஜீப் கிடைச்சுருக்கும் என புலம்பும் ஆபிசர், அவரிடம் சாப்பாடு பாக்கி வாங்க காத்து நிற்கும் தள்ளு வண்டி கடைக்காரர் என கதை கையாண்டிருக்கும் பாத்திரங்கள் உண்மைக்கு நெருக்கமானவை. தாங்கள் நம்பும் அரசியல் பாதையை கொண்டிருப்பவர்களின் செயல்களைப் பகடி செய்யும் கதைகளில் வெகுளித்தனமும் ஏமாற்றமும் சேர்ந்தே தொனிக்கிறது. புரட்சி வந்துக் கொண்டிருக்கிறது என கனவுகளை வளர்த்துக் கொண்டவர்கள் அவை பொய்த்து போவதை அறியும் போது விரக்தி அடைகின்றனர். அதன் மீதான விமர்சனத்தை பகடிகள் வழியாக வெளிப்படுத்துகின்றனர். பின்னணியில் ஆற்றாமை இருப்பதை யாரும் மறுக்க இயலாது.
எழுதப்படாத தியாகங்கள் எத்தனையோ இடதுசாரிய அரசியலில் அடையாளப்படுத்தபடாது கரைந்திருக்கின்றன. செயல்பாடுகளின் நோக்கங்கள் மறைந்து நடைமுறைகள் இறுகும் போது சடங்குகள் போலவே அலுப்பு வெளிப்பட்டு விடுகிறது.
பிராச்சாரத்திற்கு பயன்படாத படைப்புகள் வெகு அரிதாகவே காணக் கிடைக்கும் இடதுசாரிய பரப்பில் சாம்ராஜ் முதல் அடிகளை முன்வைக்கிறார். பகடி என்பதுவும் விமர்சனம் தான். எதிர் கருத்தியல்களில் இருந்து வரும் விமர்சனங்களை விட இவை ஆற்றல் நிரம்பியவை.
மருள் என்கிற கதை ஒட்டுமொத்த கட்டுக்கோப்பான நிறுவனத்தை ஒரே நாளில் குலைத்து போடும் குறும்புக்கார அருளைப் பற்றி சொல்வது. கலகம் அப்படியானது தான் என நிறுவ முயல்கிற கதை. கொஞ்சம் கூட சிரிக்காது இந்த கதையைக் கடப்பவர்கள் சொற்பம். அதே போல ஜார் ஒழிக கதையும். பெயிண்டர் கணேசனுக்கு ங்கொம்மலாக்க என்ற வார்த்தை இல்லது ஒரு வரியைப் பேச தெரியாது. தோழர்களோடு இணைந்து பயணிக்கிற போது அவனை அறியாமலேயே உருவாகும் மூர்த்தியுடனான தோழமை அந்த வார்த்தையை மறக்க செய்கிறது. விநாயகர் சிலையோடு இஸ்லாமிய தெருக்களில் நுழையும் கூட்டத்தினரை எதிர்கொள்ளும் போது மூர்த்தி அதே வார்த்தையே உச்சரிக்க நேருகிறது. மூர்த்தி கணேசனிடம் நீங்க என்னை மன்னிச்சு தான் ஆகணும் என உரக்க சொல்லுவதோடு கதை நிறைவு பெறும்.
சாம்ராஜின் கதைகளில் வரும் தோழர்கள் மிக சிறு குழுக்களாக இயங்கும் எம்.எல். இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பெரிய பொருளாதார பலமோ அல்லது ஆள் பலமோ இருப்பதில்லை. இடதுசாரிய தோழர்களுக்கே இல்லாத போது, அதை விட குறைவு இவர்கள் பலம். ஆனாலும் சமூகத்தில் மாற்றங்களுக்காகவும் புரட்சி வந்துவிடும் என இன்றும் நம்புகிற தோழர்களின் வட்டத்தை நான் அறிவேன். அவற்றோடு சாம்ராஜ் முன்வைக்கும் பகடி நுண்மையான விமர்சனமே ஒழிய குற்றச்சாட்டாக இருப்பதில்லை.
அவருடைய மொழி ஆளுகை பல இடங்களில் ஒளிருவதைக் காண முடியும். செவ்வாக்கியம் தன் கணவன் தொடுப்பு வைத்திருப்பதை அறிந்தும் பொறுந்திருந்தவள், பத்து வயது சிறுமியை சீண்டும் கணவனைக் கண்ட பிறகு அவனுக்கு தான் நம்பும் தண்டனையை அளிக்க துணிகிறாள். தன் தோழி சொர்ணத்தோடு மலையாள மாந்தீரிக பெண் ஒருத்தியிடம் செல்கிறாள். அந்த காட்சி இப்படியாக விரிகிறது, ‘நடுக்கூடத்தில் ஒரு சிறிய பீடத்தின் மேல் அமர்ந்திருந்தாள் அந்தப் பெண். தலைமுடி ஆலமரம் விழு போலிருந்தது. படங்களும் தாமிரத் தகடுகளும் மின்ன, முன்னே ஒரு ஆறு திரி விளக்கு பதக் பதக் என துடித்துக் கொண்டிருந்தது.” என்ன செய்யணும் என அந்த பெண் கேட்கிறாள், ‘சுடர் பதறியது’ தனக்கு பயன்படாதது யாருக்கும் பயன்படக் கூடாது என செவ்வாக்கியம் சொல்கிறாள். அதன் பிறகு கணவன் நடுங்கத் தொடங்கி விடுகிறான்.
‘கரண்ட் முழுநாளும் இருந்தால் சகட சகட சகட’ என நூற்பாலை இயந்திர ஒலியையும் , ‘கோரிப்பாளையம் கண்மாயில் தண்ணி கெத்து கெத்தென கிடந்தது’, என நில வர்ணிப்பையும் காட்டும் மொழி அவ்விடங்களிற்கு உயிர் கொடுக்கிறது.
மிக குறிப்பாக அவருடைய கதைகளின் பெண்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்கிற இடங்கள் உண்டு. அதில் மிக உறுதியாக நிற்கிற மனப்பான்மை உறுதியுடைவர்களாக காட்டுகிறது. மூவிலேண்ட் கதையில் மல்லிகாவிற்கு சினிமா என்றால் உயிர். சினிமா ஆப்ரேட்டர் உடன் காதல் வயப்படுகிறாள். அண்ணநும் அம்மாவும் எதிர்க்க வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். அவன் மல்லிகாவை ஒரு குடியில் வைக்கிறான்.பகலெல்லாம் தனியாக இருக்கிறாள். ‘சூரியன் கோழிக் குஞ்சுகள் மீதேறி அவள் மீதேறி வீட்டின் மீதேறி மாலையில் தூரத்து மலையில் போய் மறையும்’ அவளை குடும்பத்தினர் வந்து மீட்டு சென்று கல்யாணம் செய்து வைக்கின்றனர். கணவன் சினிமாவிற்கு போகக் கூடாது என்கிறான். மகள் பிறக்கிறாள். கானவன் பார்க்க வர மறுக்கிறான். பஞ்சாயத்தில் இவள் படத்திற்கு போகவே கூடாது என சத்தியம் வாங்குகிறான். அதன் பிறகு வருடக்கணக்காக சினிமாவைப் பார்க்க போகவே இல்லை அவள். இந்த பிடிவாதம் பெண்களுக்கே சாத்தியம். வைராக்கியம். தன்னை தானே அதிலிருந்து விலக்கிக் கொள்வது என்றென்றைக்குமாக.
மீ–எதார்த்த முடிவுகளில் சாம்ராஜின் சில கதைகள் முடிக்கப்படுகிறது. குள்ளன் பினுவின் மேலே சொன்ன வரி. கப்பல் என்கிற கதையில் கேப்டன்களால் எப்போதும் கீழேயே பார்க்கப்பட்ட பொறியாளர் அச்சுதன் நாயர் கப்பல் போன்ற பிரம்மாண்டமான வீட்டை கடற்கரையில் நிர்மாணிக்கிறார். அந்த இடத்தில் இருந்த குடிகளை அப்புறப்படுத்துகின்றனர். அங்கு வாழ்ந்த நாயொன்று மட்டும் முன்னர் குடிசைகள் இருந்ததற்கு சாட்சியாக இருந்தது. அதன் பார்வையில், “நாய் தண்ணீரில் தெரியும் கப்பல் வீட்டின் தலைகீழ் பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென ஆவேசமாய் குலைத்தது. பிறகு ஆச்சரியத்துடன் நிமிர்ந்து வீட்டைப் பார்க்க, கப்பல் வீடு தண்ணீரில் கடல் இருக்கும் திசை நோக்கி மெதுவாய் மிதந்து போய்க் கொண்டிருந்தது’. தன்னை மதிக்காத கேப்டன் போலவே தன்னால் மதிக்கப்படாத மக்கள் இருந்தால் தான் தானும் கேப்டன் என்பது அதிகாரத்தின் படிமட்டங்களைக் காட்டுகிறது. தாழ்வு இருந்தால் தான் உயரம் தெரியும்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் காட்சி போல் லக்ஷ்மியாக்கவோடு போன தன்ராஜ் படுக்கையில் இறந்து போகிறான். அதோடு லக்ஷ்மி மொட்டையடித்து அதுவரையில் இருந்த எல்லாவற்றையும் துறந்து விட்டு குழந்தைகளுக்கு ஆசிர்வதிக்க தொடங்குகிறாள். காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறது.
சாம்ராஜின் கதைகளில் போலி கிடையாது எங்குமே. எதார்த்த உலகின் கோடிக்கணக்கான கதைகளில் சிலவற்றை மட்டுமே பதிவு செய்திருக்கிறார். இழையோடும் மெல்லிய பகடியும், எளிமையும் கதைகளை வலிமை உடையனவாக்குகிறது. கதை மாந்தர்கள் வெகு அரிதாகவே உரையாடுகின்றனர். கதைசொல்லியே பேசிவிடுகிறான். தொழில் புரட்சி போன்ற கதைகள் நாவலாக மாறினால் தமிழின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கும்.
கதைகளின் அடித்தளமே அவை காலந்தோறும் புதுபுது பரிணாமங்களைக் காட்சிப்படுத்துவதே. ஒவ்வொரு நேரத்திலும் எழுகிற படைப்புகள் அதற்கு முன்பு திகழ்ந்தவற்றை விமர்சித்தே தன்னை செம்மைப்படுத்திக் கொள்கிறது. சாம்ராஜின் கதைகள் எது போலவும் இல்லாதது அதன் மீதான ஈர்ப்புக்கு காரணமாகிறது. மற்றும் முந்தைய படைப்புகளில் இருந்து தன்னை செம்மை செய்துக் கொள்கிறது.
வடிவேலு பிரதி செய்ய முடியாதவர். சாம்ராஜும் அது போலத் தான்.