சலோமி – ம.கிருஷ்ணகுமார் கவிதை

​​சலோமி​​ எனக்கு நெருக்கம்

காக்காவுக்கும் குருவிக்கும் கல்யாணம் நடந்த ஒரு மழை நாளில்
பேருந்தின் சன்னலை சாத்தும் போது  அவளை கண்டுகொண்டேன்

சலோமி
மலர்ந்தது 07/07/1987
உதிர்ந்தது 13/06/2020

கழுத்தின் அளவை வைத்து பார்க்கும் போது உயரம் அநேகமாக 152 செண்டி மீட்டர் இருக்கலாம்
சிவப்புச் சேலையில் எண்ணெய் மொழுகிய  இசக்கி அம்மன் சாயல்
அன்னை மேரியின் சாயல்  என்போரும் உண்டு
வழுவழுப்பான வண்ணத் தாளில் நிறுத்தப்பட்டிருந்த இரங்கல் தட்டியில் இருபுறமும் மெழுகுவர்த்திகள் கண்ணீர் உகுக்க அவளை முதன்முதலில் சந்திக்கிறேன்

வெளியிலிருந்து வீடு திரும்பும் அப்பாவைக்  கண்ட குழந்தை போல கையில் ஏறி அமர்ந்து கொண்டது சோகம் அவளைக் கண்டதும்
மூடிய சன்னலின் வழி நேரம் சொட்டு சொட்டாக வடிகிறது
இறக்கிவிடவும் மனம் வராது இறங்கவும் மறுக்கும் குழந்தையை யாரிடம் கைமாற்ற?

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.