Month: August 2020

முத்தாபாய் காத்திருக்கிறாள் – வளவ.துரையன் சிறுகதை

வாசலில் இருந்த ஒற்றைத் தூணைப் பிடித்துக் கொண்டு நின்றுகொண்டு முத்தாபாய் காத்திருக்கிறாள். யாருக்காக என்று அவளுக்கே தெரியாது. அதற்குள் உள்ளே இருந்து அம்சவேணியின் குரல் கேட்டது.

“முத்தா, வாசலுக்குப் போயாச்சா?” “ஆமாம்மா, இங்கதான் நிக்கறேன்” “ஐஞ்சரை மணிக்கெல்லாம் வரவேண்டியது; காப்பித்தண்ணியைக் குடிக்க வேண்டியது; முகம் கழுவி பௌடர் பூசிக்கிட்டு தலையை வாரிப் பூ வைச்சுக்கிட்டு சரியா ஆறு மணிக்கு வாசல்ல போயி அந்தத் தூண் எங்க உழுந்திடப் போவுதுன்னு அதைப் புடிச்சிக்கிட்டு நிக்க வேண்டியது; ஏழு மணிக்கு தான் வருவ”

நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த சேதுராமனின் காதிலும் விழுந்தது. “ஏங்க நான் சொல்றது காதுல விழுந்ததா?” “தெனம்தான் சொல்ற; அவளுக்கு ஏதோ பராக்கா இருக்கு; அதான் போயி நிக்கறா; உடு” ”ஏன் உள்ள ஒக்காறது? டிவி பாக்கறது?” “ஏழு மணிக்கப்பறம்தான் பாக்கறாள; ரொம்ப நேரம் பாத்தா அதுக்கும்தான் எதாவது சொல்ற” அம்சவேணி ஏதும் பதில் சொல்லவில்லை.

இரவு சிற்றுண்டிக்கு சப்பாத்தி செய்ய மாவு பிசைய உட்கார்ந்தாள். தண்ணீரை ஊற்றி, உப்புப் போட்டுக் கொண்டே, ”கால்தான் வலிக்காதோ” என்றாள். “வலிச்சா ஒக்காந்துக்கிட்டுப் பாப்பா; நீ கவலப்படாத” “அப்படி என்னதான் பாக்கறா?” “நீ வேற, மாடி கட்டியிருந்தாலும் அங்க நின்னு சீதா மாதிரி பாக்கலாம்” “அது யாரு சீதா?” ஜனகன் பொண்ணு, மிதிலையில மேல் மாடத்துல நின்னு பாத்தா. அப்பதான ராமன் வந்தான்.

“இந்த வக்கணப் பேச்சுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல; கதை எழுதி விருது வாங்கினா போதுமா? மேடையிலப் பேசினா எல்லாம் வந்துடுமா?” “இப்ப என்னா வரணும்ற?” “எனக்கு ஒண்ணும் வர வாணாம். ஒரே ஒரு பொட்டிக் கடையைத்தான் வச்சிக்கிட்டு இருக்கோம். இந்தப் பொண்ணக் கரையேத்தற வழியைப் பாருங்கன்னு சொல்றேன்” “ஏன் போன வாரம் கூடத்தான் ஒருத்தன் வந்தான்” “சரி, வந்தவங்ககிட்ட அப்படிச் சொல்லணுமா?” “வேற வழி?”

“ஒடையார! அருமையான ஜாதகம் இது. மூல நட்சத்திரம்; ஆண் மூலம் அரசாளும்னு சொல்வாங்க; பையன் செதம்பரத்துல பாங்கில இருக்கான். நம்ம பொண்ணும் புவனகிரிதான? வேலையை மாத்திக்கினா மாத்திக்கலாம். இல்லன்னா அங்கேந்தே தெனம் வந்துட்டுப் போலாம்.” என்றார் திருமணத் தரகர் சொக்கலிங்கம். ”சரி சொக்கு, அவங்க ஜாதகம் பாத்துட்டாங்களா?” “அவங்க பாத்துட்டாங்களாம்; நீங்க சரின்னு சொன்னா அடுத்தவாரம் பொண்ணு பாக்கக் கூப்பிடலாம்”.

சேதுராமன் வழக்கமாகப் பொருத்தம் பார்க்கும் ஜோசியரிடம் போய்ப் பார்த்தார். பொருத்தமாக இருந்தது. சொன்னபடி அடுத்தவாரம் வந்தது. பையனுடன் அப்பா, அம்மா, அண்ணன், தரகர் சொக்கு என்று நான்கு பேர் வந்தனர். முத்தாபாய் தழையத்தழைய பச்சை வண்ணச் சேலையுடன், அளவான நகைகளுடன், நெற்றியில் திலகத்துடன், தட்டில் இனிப்பும் பலகாரமும் எடுத்து வந்து கொடுத்தாள். பார்த்தாலே பிடித்துப் போகும் அமைதியான அழகு உண்டு அவளிடத்தில்.

‘என்னாடா, நல்லாப் பாத்துக்க” என்று அண்ணன் கேலி பேசினான். இனிப்பைத் தின்றுகொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். ”மாப்பிள்ளைக்குப் பொண்ணப் புடிச்சுப் போச்சு” என்றார் சொக்கு. “அப்பறம் என்ன? நீங்கதான் பொண்ணக் கேக்கணும்?” என்றார் பையனின் அப்பா. முத்தாபாய் எழுந்து உள்ளே செல்ல அம்சவேணியும் சென்றாள். “எங்களுக்குப் புடிச்சிருக்குது; எங்களுக்குப் புடிச்சிருந்தா முத்தாபாயிக்கும் புடிச்ச மாதிரிதான்” என்றார் சேதுராமன்.

“ம்.. மேல சொல்லுங்க; அடுத்து நிச்சயம்தான்” என்றார் பையனின் அப்பா. சற்று நேரம் எல்லாரும் பேசாமல் இருந்தனர். மின்விசிறிக் காற்றில் மாட்டப்பட்டிருந்த காலண்டர் ஆடிக்கொண்டிருந்தது. சேதுராமன் ஆரம்பித்தார். “நான் சொல்றேன்னு நீங்க தப்பா நெனச்சுக்கக் கூடாது?” “அதெல்லாம் பரவாயில்ல எதுவானாலும் சொல்லுங்க” என்றார் பையனின் அப்பா.

“ஒண்ணும் இல்ல; இந்த வீடுதான் எங்களுக்கு இருக்கற ஒரே சொத்து. நான் ஒரே ஒரு பொட்டிக்கடையை வச்சு ஓட்டிக்கிட்டிருக்கேன். முத்தாவுக்கு வேல கெடச்சதால இப்ப கொஞ்சம் சமாளிச்சிக்கிட்டிருக்கேன். அவ இல்லாட்டா சங்கடம்தான். அதால நீங்கப் பெரிய மனசு செஞ்சு கல்யாணம் ஆயிட்டா கூட மாசம் பத்தாயிரம் அவ எங்களுக்குக் கொடுக்கச் சம்மதிக்கணும்” கேட்ட பையனின் அப்பாவின் முகம் மாறியது. அவர் சொக்குவைப் பார்த்தார்.

சொக்கு சேதுராமனைப் பார்த்தார். இதை ஏன் என்னிடம் முன்கூட்டியே சொல்லவில்லை என்று சொக்குவின் பார்வை கூறியது. “இதைக் கல்யாணம் ஆனதுக்கப்பறம் சொன்னா சரியா இருக்காது, அதாலதான் முன்னாடியே சொல்லிட்டன்” என்றார் சேதுராமன். “ஆமாங்க. ஒங்களுக்கும் ஒரே பொண்ணுதான? இதெல்லாம் சகஜம்தான்” என்று பையனின் அப்பா சொல்ல, பையனின் அம்மாவோ, “எல்லாம் நல்லா முடியட்டுங்க; நாங்களும் ஜாதகப் பொருத்தம் பாத்துட்டு சொல்றோம்” என்றார்’

“அப்ப நீங்க பொருத்தம் பாக்கலியா” என்று சேதுராமன் கேட்டார். “இல்லீங்க” என்று பதில் வந்தது. அவர்கள் கிளம்பிச் சென்றபின், ‘ஏன்யா சொக்கு? அவங்க ஜாதகம் பாத்துட்டாங்கன்னு சொன்னியே” என்று கேட்டார் சேதுராமன். “ஆமாம், அப்ப அப்படித்தான் சொன்னாங்க” ”இப்ப ஏன் இத மாதிரி பேசறாங்க” “புரியலீங்களா? அவங்களுக்கு இஷ்டம் இல்லன்னு அர்த்தம்; அது சரிங்க, நீங்க ஏன் மாசாமாசம் பணம் குடுக்கணுன்ற விசயத்த எங்கிட்ட சொல்லல?”

”சரி பொண்ணு புடிச்சிருந்தா சொல்லிக்கலாம்னு நெனச்சிருந்தேன்” அதற்குள் உள்ளிருந்து வந்த அம்சவேணி “இனிமே பொண்ணு பாக்கறதுக்கு முன்னாடியே சொல்லிப்புடுங்க” என்றாள்.

”அப்பாவை நினைத்தாலும் பாவமாய் இருந்த்து முத்தாபாய்க்கு, “நாமளும் கல்யாணம் ஆயிப் போயிட்டா அவரு எப்படிக் குடும்பத்தை நடத்துவாரு? நான் படிச்சு முடிக்கறவரை கூட கடை நல்லா ஓடிக்கிட்டிருந்ததுதான்; அப்பறம் இந்த மாலு எல்லாம் வந்திச்சா? அதால அப்பாவோட கடை போல இருக்கறப் பொட்டிக்கடையெல்லாம் படுத்துடுத்து. அப்பாவோட நிபந்தனைக்கு யாராவது ஒரு ராமன் இல்ல; ராவணன் கூடவா வரமாட்டான்?” என்றெல்லாம் நினைத்துக் கொண்டு முத்தாபாய் காத்திருக்கிறாள்.

தனியார் பள்ளியின் பேருந்து ஒன்று போகும். ‘ணங்’ ’ணங்’ என்று வாணலியைத் தட்டி ஓசை எழுப்பியபடி நிலக்கடலை விற்பவன் வண்டியைத் தள்ளிக்கொண்டு போவான். ராயல் என்ஃபீல்டு வண்டியில் ஒருவர் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போவார். இதெல்லாம் கிழக்கேயிருந்து வருபவை. மேற்கேயிருந்து நான்கு எருமை மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற சிறுவர் திரும்புவார்கள். காக்கைக் கூட்டமொன்று பறந்து வந்து எதிரே செல்லும் மின்கம்பிகளில் உட்கார்ந்து சற்று நேரம் ஓய்வெடுப்பது போல இருந்து பின் மீண்டும் பறந்து செல்லும். இந்த ஐந்து வினைகளும் சற்று முன்பின் நடக்கும். எல்லாம் அந்த ஆறுமணியிலிருந்து ஏழு மணிக்குள்தான். அதன்பின் முத்தா பாய் உள்ளே செல்வாள்.

கடந்த வாரம் மதியம் அலுவலகத்தில் உணவு வேளையில் உடன் பணியாற்றும் கோபால் கேட்டது ஞாபகம் வந்தது. “என்னா முத்தா, இந்த தடவையும் வழக்கம் போலத்தானா?” என்று கேட்டான் சிரித்துக் கொண்டே. “ஆமா, ஆமா” “என்னா கண்டிஷன் பெயிலா?” “இல்ல, கண்டிஷன் ஜெயில். ஆமா ஒங்களுக்கு யாரு சொன்னது? சொக்கலிங்கம் எங்கத் தெருவிலதான் இருக்காரு. காலை நடையிலச் சந்திப்போம். வருத்தமாத்தான் சொன்னாரு அவரும்.”

“சரி, அவரு ஒங்களுக்கு என்னா சொன்னாரு” “நல்ல ஜாதகம் அமையலன்னாரு” “சீக்கிரம் ஆனா ஒங்க அம்மாவுக்குக் கொஞ்சம் நிம்மதி” “ஆமா அவங்களுக்கும் வயசாயிக்கிட்டே வருது” “ஏன் ஒங்க அண்ணன் அக்கா, தங்கச்சி யாரும் பாக்க மாட்டாங்களா?” “நான் எப்பவும் தனிமையிலே இனிமை காண்பவன்” என்றான் அவன் சிரித்துக் கொண்டே. ”என்னப் போலத்தான்” என்றாள் அவளும்.

இரண்டு நாள்கள் கழித்து வழக்கம்போல முத்தாபாய் காத்திருக்கிறாள். கடையை சற்றுச் சீக்கிரம் மூடிவிட்டு வந்த அப்பா உள்ளே சென்றதும், “முத்தா, கொஞ்சம் இங்க வந்துட்டுப் போ” என்றார். அவளுக்கு ஆச்சரியம். அப்பா எப்பொழுதும் அழைக்கவே மாட்டார். அவளுக்கு வருகைப் பதிவேட்டில் இன்னும் தள்ளுவண்டிக்காரனும், ஹெல்மெட்காரரும் பாக்கி இருந்தனர். ஆனால் இதுவரை கூப்பிடாத அப்பா கூப்பிடுவதால் உள்ளே போனாள்.

உள்ளே போனதும் “அம்சா; நீயும் இங்கக் கொஞ்சம் வா” என்று மனைவியையும் அழைத்தார். அவள் வந்து நின்றாள். முத்தாபாய் நாற்காலியில் உட்கார்ந்தாள். ‘ஏம்மா, கோபாலுன்றது யாரும்மா?” “என்கூட வேல செய்யறவருப்பா; ஏம்பா?” “இன்னிக்கு அவன் மதிய நேரத்துலக் கடைக்கு வந்தான். இந்த ஊருதானாம். “ஆமாம்பா; நம்ம சொக்கு வராறே? அந்தத் தெருவுலதான் இருக்காரு”

“ஏங்க எதாவது தகராறா?” என்றார் அம்சவேணி. “தகராறெல்லாம் ஒண்ணுமில்ல; முத்தாவைப் பொண்ணு கேக்க வந்தான் அவன்.” முத்தாபாய்க்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. “நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்ல்லியே? அப்பா அம்மா இத எப்படி எடுத்துக்கப் போறாங்க”ன்னு நினைத்தாள். ”அவன் ஒரே பையனாம். அவனோட அவன் அம்மா மட்டும்தான் இருக்கங்களாம்; சொக்கு எல்லாம் சொன்னாராம். எல்லாத்துக்கும் ஒத்துக்கறனாம். ஏம்மா. ஒங்கிட்ட ஏதவது கேட்டானா?”

“இல்லப்பா, சாப்பிடும் போது ரெண்டு பெரும் ஒண்ணா ஒக்காந்து சாப்பிடுவோம், அதான். அப்பதான் எப்பவாவது குடும்ப விஷயங்கள் பேசிக்கறது உண்டு அவ்வளவுதான்” “சரி சொல்லுங்க; அவனும்தான் இவளைப் பாத்திருக்கான். இவளுக்கும் அவன் குடும்பத்தைப் பத்தித் தெரிஞ்சிருக்கு; எல்லாத்துக்கும்தான் ஒத்துக்கறான்” என்றார் அமசவேணி. சற்று நேரம் பேசாமல் இருந்த சேதுராமன் பட்டென்று, ”ஆனா அவன் நாயுடுப் பையனாண்டி. நாம எப்படிக் கொடுக்கறது? இல்லனு சொல்லிட்டேன்” என்றார்.

“சரி, இதுவும் கூடல” என்று சொல்லிக்கொண்டே அம்சவேணி உள்ளே செல்ல முத்தாபாய் வாசலில் போய்க் காத்திருக்கிறாள். மறுநாள் மதிய உணவு வேளையில் கோபாலுவும் முத்தாபாயும் ஒன்றாகத்தான் சாப்பிட்டார்கள். ஆனால் பேச்சு மிகமிகக் குறைவாக இருந்தது. அப்பா கேட்டதைப் பற்றி அவளும் கேட்க வில்லை, அவனும் பேசவில்லை. ஒருவரை ஒருவர் இதுநாள்வரை பார்த்த பார்வைக்கும் இன்று பார்க்கும் பார்வைக்கும் வேறுபாடு இருப்பதை இருவருமே உணர்ந்தனர்.

நான்கைந்து நாள்கள் கழித்து சொக்கலிங்கம் ஒரு நாள் சேதுராமனின் வீட்டிற்கு வந்தார். “பையனுக்கு அப்பா விருத்தாசலத்துல பெரிய மளிகைக்கடை வச்சிருக்காரு. அது தவிர ரெண்டு கடைங்க கட்டி வாடகைக்கு உட்டிருக்காங்க; பையனுக்குப் படிப்பு ஏறல. அதால அவனையும் கடையிலயே ஒக்கார வச்சுக்கிட்டாரு. இவன்தான் பெரியவன். அடுத்தவன் காலேசுலப் படிச்சுக்கிட்டிருக்கான். ரெண்டு பொண்ணுங்களையும் ஒண்ணு மாயவரத்துல, இன்னொண்ணு பாண்டிச்சேரியிலக் கட்டிக்கொடுத்துட்டாங்க”

சொக்கலிங்கம் கூறிக் கொண்டே போக, “நான் முன்ன சொன்னதெல்லாம் சொல்லிட்டயா?” ”சொல்லிட்டேங்க; அதுக்கும் ஒத்துக்கிட்டாங்க” கேட்டுக்கொண்டிருந்த அம்சவேணிக்கும் சேதுராமனுக்கும் இந்த இடம் முடிந்து விடும் என்னும் நம்பிக்கை ஏற்பட்டது. ”என்னா சொல்ற? முத்தா வரச் சொல்லலாமா?” என்று சேதுராமன் கேட்டார். “பாப்பாவை ஏங்கக் கேட்டுக்கிட்டு; இந்த ரெண்டு மூணு தடவையா அதக் கேட்டுக்கிட்டா சொன்னீங்க? என்றார் சொக்கலிங்கம். ‘ரெண்டு மூணா? ஏழெட்டு இருக்கும்? என்று கூறவில்லை. மனத்தில் நினைத்துக் கொண்டாள் முத்தாபாய். மாப்பிள்ளையே பெண்பார்க்க விருத்தாசலத்திலிருந்து காரை ஓட்டிக் கொண்டு வந்தான். அவனுடைய அப்பா, அம்மா, அக்கா, அக்கா கணவர் என்று அனைவரும் காரிலேயே வர, சொக்கலிங்கம் மட்டும் முன்கூட்டியே வந்து காத்திருந்தார். அனைவர் முன்னாலும் குனிந்த தலை நிமிராமல் வந்து உட்கார்ந்து விட்டுப் போனாள் முத்தாபாய்.

அவர்கள் சென்றபிறகு “ஏண்டி மாப்பிள்ளையை சரியா பாத்தியாடி?” என்றாள் அம்சவேணி. “பாத்தேம்மா” “இல்லியே, நீ குனிஞ்ச தலையை நிமிரவில்லையே” “இல்லம்மா; பாத்தேன்” என்று சொன்னாள் முத்தாபாய். “இந்த எடம் முடிஞ்சுடும்னு நெனக்கறேன். மாப்பிள்ளை ராஜாவாட்டம் இருக்காண்டி” என்றாள் அம்சவேணி. ”அதற்கு ராணியைத்தானே பார்க்கவேண்டும்” என் நினைத்துக் கொண்டாள் முத்தாபாய். சென்றவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.

சேதுராமனும் அம்சவேணியும் கவலைப் பட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு நாள் சொக்கலிங்கம் வந்தார். அப்பொழுதுதான் அலுவலகத்திலிருந்து வந்திருந்தாள் முத்தாபாய். இன்னும் காத்திருக்கும் இடத்திற்குச்செல்லவில்லை. “சொல்லு சொக்கு; நல்ல சேதிதான? என்னா சொன்னாங்க?” என்றார் சேதுராமன். அம்சவேணியும் முத்தாபாயும் கூர்ந்து கேட்டனர்.

“நல்ல சேதிதாங்க; ஆனா பவுனுதான் கூட அஞ்சு சேத்துக் கேக்கறாங்க” ”ஏம்பா நம்ம நெலைக்குப் பத்தே அதிகம்பா. இன்னும் கூட அஞ்சுன்னா? இப்ப விக்கற வெலைக்கு ரெண்டு லட்சம் ஆகுமே” சேதுராமன் அம்சவேணி முகங்களில் கவலை மேகங்கள் குடிகொண்டன. முத்தாபாய் இறுகிப் போய் நின்றுகொண்டிருந்தாள். “அதுக்கும் அவங்களே வழி ஒண்ணு சொன்னாங்க” ”என்னாவாம்?” “அவங்களுக்குத் தெரிஞ்ச ஒறவுக்காரரு ஒருத்தர் இருக்காராம். அவருக்கு இந்த ஊட்டை ரெண்டுலட்சரூபாய்க்குப் போக்கியம் போடலான்னு சொல்றாங்க”

”அப்பறம் அதை மூக்க என்னா வழி? கல்யாணத்துக்கப்பறம் சீர் செனத்தின்னு எல்லாம் வந்திடுமே” என்றார் சேதுராமன். “இதெல்லாம் மொதல்லயே சொல்லக்கூடாதா அவங்க? சரி. ம்….இதுவும் தட்டிப் போச்சா. கெடக்கட்டும்; அவ தலையெழுத்து” என்று வருத்தமுடன் சொல்லிக்கொண்டே போனார் அம்சவேணி. முத்தாபாயும் வெளியே சென்று காத்திருக்கிறாள்.

நான்கைந்து நாள்கள் கடந்தன. சேதுராமன் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்தவர் வீட்டு வாசலில் முத்தாபாயைக் காணாமல் திகைத்தார்.

புத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை

மெல்லிய தூறலாக ஆரம்பித்த மழை இன்னும் வலுத்துப் பெய்யத் தொடங்கியது. பக்கத்தில் எங்கோ இடி விழுந்த மாதிரி இருந்தது. அந்த அலுவலகக் கட்டிடத்தின் முன்னால் நின்றிருந்த தென்னை மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு தென்னம்பாளை காற்றில் ஆடிக் கீழே விழுந்தது. முற்றம் முழுதும் பன்னீர்ப்பூக்களும் பூவரசம்பூக்களும் இரைந்து கிடந்தன. முகப்பில் இருந்த மின்விளக்கைச் சுற்றிலும் ஈசல்கள் மொய்த்தன. வரவேற்பறையின் சன்னல் வழியே நீண்ட இழுப்புகளாகப் புகை விட்டுக் கொண்டிருந்தான் கெவின். அவனது சட்டை வியர்வையில் நனைந்திருந்தது. அடுத்த அறைக்குச் செல்லும் வழியில் தொங்கிய திரைச்சீலையைப் பிடித்துக் கை விரலில் சுற்றிக்கொண்டு அவனைப் பின்புறத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மேக்டலீன்.

ஊளைக்காற்றுடன் தாண்டவமாடி ஓர் உச்சத்தை அடைந்த மழை மெதுவாக அமைதியடைந்தது. அதற்குள் மூன்று நான்கு சிகரெட்டுகள் முடிந்துவிட்டன. இருவரிடையே வேண்டா விருந்தாளியாக ஒரு நீண்ட மௌனம். கலைந்திருந்த கூந்தலைப் பின்னிக்கொண்டே, “என்னக் கொண்டு வடசேரி பஸ் ஸ்டாண்ட்டுல விடுவியா கெவின்?” என்று கேட்டாள் மேக்டலீன். எப்போதும் மாறாப் புன்னகை அப்போதும் அவளது முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது.

திரும்பிப் பார்க்காமல், “ம்ம்..ஃபைவ் மினிட்ஸ்.” என்றான் கெவின். உள்ளே சென்று பைக் சாவியை எடுத்துக் கொண்டு வந்தான். போனை எடுத்துப் பார்த்தபோது பதினைந்து மிஸ்டு கால்கள்..லிசாவும் அம்மாவும் அழைத்திருந்தார்கள்.

மழையீரத்தில் பைக் கிளம்ப மறுக்க சலித்துக்கொண்டு பலமாக மிதித்தான் கெவின். அலுவலக வாசலில் நின்று முகத்தில் விழும் கற்றைமுடியை ஊதியவாறு அவனை ஒரு கிண்டல் தொனியில் பார்த்தாள் மேக்டலீன்.

வண்டி ஒருவாறாகக் கிளம்ப, துள்ளிச்சென்று பின்னால் ஏறிக்கொண்டாள். ஏதும் பேசாமல் வழக்கத்தை விட மிக வேகமாக ஓட்டினான் கெவின்.

“கெவின், மழநேரம்லா, மெதுவாப் போ…ஸ்கிட் ஆகிறாம…”

“ம்…”

வண்டி வேகம் குறையாமல் தொடர்ந்து செல்ல, மீண்டும் மழை தூற ஆரம்பித்தது.

“கெவின், மழ பலத்துப் பெய்யப் போகு…எங்கயாம் நிறுத்து..மழ நல்லா விட்டப்பொறவு போவம்..”

கெவின் அடுத்திருந்த கல்லடி சர்ச் வாசலில் வண்டியை நிறுத்த, துள்ளியிறங்கி ஓடினாள் மேக்டலீன். அவளது முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல் எதையோ யோசித்தவனாக வந்து நின்றான். அங்கு வேறு யாரும் இல்லை. சர்ச் முகப்பிலிருந்த மின்விளக்கு விட்டு விட்டு எரிந்தது. கெவின் மழை பெய்வதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மேக்டலீன் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

“ஏன் ஏதும் பேசமாட்ற?” என்று அவனது கையைப் பிடித்தாள்.

“நா ப்ரே பண்ணனும்…நீ?” என்றவாறு அவளது கையைத் தவிர்த்தான்.

“இல்ல..நீ போய்ட்டு வா…நா இங்க நிக்கேன்…” என்றவாறு மழையில் கைநீட்டி நின்றாள்.

பதற்றமாக முழங்காலிட்டு நின்று கண்களை மூடினான் கெவின்.

“சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுமுள்ள பிதாவே…” என்று ஆரம்பித்ததும் மேக்டலீனுடனான சந்திப்புகள் மனதில் வந்து நிற்க, ஜெபம் நின்றது. மனதைத் தடை செய்யாமல் அதன்வழி விட்டான்.

‘மேக்டி அவ மாமனாருக்கு ப்ளட் கொடுக்க என்ன கூப்புட்ட சமயமே எனக்கு ஒரு மாதி தோணிச்சி. ப்ளட் பேங்க்ல அவளுக்குத் தெரியாத ஆளே கெடையாது. பொறவு எதுக்கு மெனெக்கெட்டு என்னக் கால் பண்ணிக் கூப்புடணும்? அவ மாப்ளயும், அத்தயும் என்ன கால்ல விழாத கொறயா தாங்கு தாங்குன்னு தாங்குனாங்க… நா நெனச்சிருந்தா வேறெதாம் எடத்துல ப்ளட் அரேஞ்ஜ் பண்ணி குடுத்துருக்கலாம்..ஆனா, நா அப்டி செய்யலல்லா..அப்ப எனக்கும் அந்த சந்தர்ப்பம் தேவைன்னதாலத்தான நா போயிருக்கேன்.’

“தப்பிப்போன ஆடுகளைப் போல உம்முடைய வழிகளை விட்டு அலைந்து போனோம்…”

‘அவ கவர்ன்மென்ட் வேலக்கிப் போனதுக்கு நாந்தான் காரணம்னு அவ ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னா..எனக்கு ஷாக்காயிட்டு…எதுக்கு இவ இப்பிடிப் பொய் சொல்லுகான்னு நா கொழம்பிட்டேன்..’

“எங்கள் இருதயத்தின் விருப்பங்களுக்கும் யோசனைகளுக்கும் மிகவும் இணங்கி நடந்தோம்..”

‘மொத தடவ எனக்க ஆஃபீசுக்கு வந்தப்பயே ஏதோ ரொம்ப நாள் பழகுன ஃபிரெண்ட் மாதி பேசுனா..என்னதான் நா கமிட்டெடா இருந்தாலும் அப்பிடி ஒரு பொண்ணு, அவ்ளோ அழகான பொண்ணு வலிஞ்சு வந்து பேசும்போ நா பெரிய உத்தமன் மாதி நடிக்க முடியாதுல்லா..நா அப்பிடி படம் வைக்க ஆளும் இல்ல..அவ பாக்கதுக்கு காலேஜ் முடிச்ச பொண்ணு மாதிதா இருந்தா..பொறவு பேசும்போ என்ன விட ஏழு வயசு பெரியவ, கல்யாணம் கழிஞ்சி ஒரு பிள்ள இருக்குன்னு சொன்னா..என்ன கொமைக்கான்னுதான் நெனச்சேன்..ஆனா ஃபேமிலி ஃபோட்டோவ காணிச்சா…என்னால அப்பவும் நம்ப முடியல..அன்னிக்கி ஆரம்பிச்ச ஃபோன்தான்…டெய்லி கால் பண்ண ஆரம்பிச்சா..மொதல்ல ஃபார்மலா பேச ஆரம்பிச்சா…பொறவு கொஞ்ச கொஞ்சமா என்ட்ட ஃப்ளர்ட் பண்ற மாதிரி பேசுனா..எனக்கும் அவ பேசுறது, அவ நடக்கிறது, அவ அழகு எல்லாமே புடிச்சனால நானும் கம்பெனி கொடுத்தேன்..’

“உமது பரிசுத்த கற்பனைகளுக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்தோம். செய்யத்தக்கவைகளைச் செய்யாமல் செய்யத்தகாதவைகளைச் செய்துவந்தோம்..”

‘அப்ப கம்பெனி குடுத்தவனுக்கு இப்ப என்ன மயித்துக்கு கில்ட்டி ஃபீலிங்ன்னு கேக்கேன்..தாயளி நீ யோக்கியன்னா அப்பவே அவட்ட, எனக்கு லவ்வர் இருக்கா, எனக்க அத்த மவதான்..எங்கிட்ட இப்படிப் பேசாதன்னு சொல்லி கட் பண்ணிருக்கணும்லா…செரி, அத விடு…அவ மாப்ள வீக்கெண்ட்ல மட்டுந்தா ஊருல இருப்பாருன்னுத் தெரிஞ்சும் அவ அன்னிக்கிக் கூப்புட்ட ஒடனே ஓடித்தானல போன?..இத்தனைக்கும் அவ யாரும் இல்லன்னு சொல்லி வேற கூப்புடுகா..அப்பிடி என்ன டே அவசரம் அவளுக்கு? மெடிசின் வேணும்னா வாங்கிக் கொடுக்க வேற ஆளே கெடைக்காதா? நீ எப்படான்னுதானல இருந்த? அதான் கூப்புட்ட ஒடன ஓடிட்ட..ஆனா அவளும் செரியான ஆளுதாம் பாத்துக்க..ஒடம்பு செரியில்லன்னு சொன்னா..வீட்டுக்குப் போயிப் பாத்தா அப்பத்தான் குளிச்சி முடிச்சி பட்டுப்பொடவ கெட்டி ஒக்காந்துருக்கா..நீயும் நல்ல சான்ஸ்னு நெனச்சிருப்ப ராஸ்கல்..செரி, போனது தான் போன, சட்டுன்னு மெடிசின குடுத்துட்டுப் பொறப்பட வேண்டியதான? பெரிய மயிரு மாதி ‘ஒரு காபி கூட தர மாட்டீங்களா’ன்னு நீ தான கேட்ட? நீ காபி மட்டுமா கேட்ட?..அஃபிசியல் ட்ரெஸ்லயே பாத்துட்டு இப்ப சாரீல பாக்கும்போ அநியாயத்துக்கு அழகா இருக்கீங்கன்னு நீ தான ஆரம்பிச்ச? ஒனக்கு நல்லாவே தெரியும்ல, அன்னிக்கி என்ன நடக்கும்னு..அவளுக்கும் அப்ப அப்டிதான தோணிருக்கும்..அதான், நீ பொறப்படும்போ வந்து கெட்டிப்புடிச்சா..நல்ல வேள, அப்ப லிசா கால் பண்ணா….இல்லன்னா நீ துணிஞ்சிருப்ப டே..பெரிய யோக்கியன் மாதி வேஷம் போடாத..’

“எங்களுக்குச் சுகமேயில்லை. ஆனாலும், ஆண்டவரே, தேவரீர், எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மனிதருக்கு அருளிச்செய்த வாக்குதத்தங்களின் படியே நிர்பாக்கியமுள்ள குற்றவாளியாகிய எங்களுக்கு இரங்கும்..”

‘அவளுக்கு ஒரு பொம்பளப் பிள்ள இருக்குல்லா ல, அதக்கூடவா நீ யோசிக்கல? நாளக்கி ஒம் பொண்டாட்டி வேறொருத்தங் கூடப் போனா ஒனக்கு எப்பிடி இருக்கும்? அவ ஹஸ்பண்ட் எவ்ளோ டீசன்டான மனுசன்? உன்ட்ட எவ்ளோ மரியாதயா பேசுனாரு? நீ ஒரு நிமிஷம் அந்தாள நெனச்சுப் பாத்தியால? செரி, அதயும் வுடு..அவ லவ் மேரேஜ் தான பண்ணிருக்கா? பொறவு என்ன மயித்துக்கு ஒனட்ட வந்தா? நீ நெனச்சது செரிதாம்ல..இவ பிட்ச் தான்…அவளுக்க நடையும் ஆட்டலும்…இன்னிக்கி எப்பிடி ஒன்ன மயக்குனா பாத்தியா? பிட்ச்..பிட்ச்..அவ ஒவ்வொரு ஸ்டெப்பும் பிட்ச் மாதிதான ல இருந்து…ஆனா இன்னிக்கி எல்லாஞ் செஞ்சிட்டு கடைசில எதுக்கு கண்ணீர் வுட்டான்னு தெரிலய? பெரிய பத்தினி மாதி…சப்புன்னு அறஞ்சிருக்கணும் நீ, என்ன மயித்துக்கு அழுகன்னு…அந்த சென்டிமென்ட்ல நீ வுழுந்துருவன்னு நெனச்சிருப்பா…அப்பிடியே தேவப்படும்போ ஒன்ன யூஸ் பண்ணலாம்னு ப்ளான் போட்ருப்பா..’

“தப்பிதங்களை அறிக்கையிடுகிற எங்கள் மேல் பொறுமையாயிரும்.”

‘செரி, அவதான் அப்பிடி..நீயாவது ஒழுங்கு மயிரா அவாய்ட் பண்ணிருக்கலாம்லா? ஃபோன்ல அவ கேக்கும்போதே, இல்ல, வேற வேல இருக்குன்னு சொல்லிருக்க வேண்டியதான? ஆறு மணிக்கு மேல ஆபீஸ்ல ஒனக்கு என்ன வேல? மழ வரமாறி இருக்குன்னு சொல்லி அவாய்ட் பண்ணிருக்க வேண்டியதான?’

“பாவத்தினிமித்தம் துக்கப்படுகிற எங்களைச் சீர்படுத்தும்.”

‘எடைல என்னமோ சொன்னாள, ம்ம் … கெவின், நீ ஒரு கொழந்த மாதின்னு…மயிரு…அவ ரொம்ப நாளா இதுக்கு ப்ளான் பண்ணிருப்பா மக்கா…இல்லன்னா இப்பிடி ஒன்ன மடக்க முடியுமா?…ஆனா, அவளவிட நீதாம்ல பெரிய கள்ளன்..அவ பிட்ச்னா நீ யாருல? அவ ஹஸ்பண்ட்க்கு பண்ணது துரோகம்னா நீ லிசாவுக்குப் பண்ணதுக்குப் பேரென்னல ராஸ்கல்? அந்தப் பிள்ள ஒன்னதான் கெட்டுவேன்னு மருந்தடிச்சால்லா, அதெப்பிடி ல மறந்த நீ? அப்பிடி ஒனக்கு எடுப்பெடுக்குமா ல, தொட்டி?’

“மிகவும் இரக்கமுள்ள பிதாவே, உம்முடைய பரிசுத்த நாமத்துக்கு மகிமையுண்டாகும்படி, நாங்கள் இனி தேவபக்தியும் நீதியும் தெளிந்த புத்தியும்….”

‘ஒண்ணுமே தெரியாத மாதி மூஞ்சிய வச்சிட்டு எப்பிடித்தான் நிக்காளோ? நீ மட்டும் அவட்ட இப்ப பேச்சுக் கொடுத்தன்னு வையி, தொலஞ்ச கேட்டியா..இன்னியோட போட்டும்…நல்ல மாட்டுக்கு ஒரு சூடு….ஒரு பாடம்னு நெனச்சுக்க பாத்துக்க… இல்ல, யாருக்கும் தெரியாம மேனேஜ் பண்ண முடியும்னுல்லாம் நெனைக்காத..பேப்பர்ல எவ்ளோ கத வருகு டெய்லி..இது அத மாதிதான் போயி முடியும்..சொன்னா கேளு..ஒனக்கு வயசிருக்கு..லைஃப்ல பாக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு பாத்துக்க..ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் ஒங்க அம்மாவ நெனச்சுப் பாத்தியால நீ….தொட்டி…நாளக்கி விசயம் வெளிய தெரிஞ்சா ஒங்கம்மா தாங்குவாளா சொல்லு..தொங்கிர மாட்டாளா?..நீ செஞ்ச காரியத்துக்கு நீ தாம்ல தொங்கணும் ராஸ்கல்.. கடைசியா சொல்லுகேன், நடந்தது நடந்தாச்சு, ஒழுங்கு மரியாதயா இவள இன்னயோட விட்டேன்னா பொழச்ச…இல்லன்னா, ஒந் தலையெழுத்து..தெருவுந் திண்ணையுமா நிக்கப்போற, எழுதி வச்சுக்கோ..’

“நாங்கள் இனி தேவபக்தியும் நீதியும் தெளிந்த புத்தியும் உள்ளவர்களாக நடந்து வர இயேசு கிறிஸ்துவினிமித்தம் எங்களுக்குக் கிருபை செய்தருளும். ஆமென்.”

….

வெளியே வந்தவன், மேக்டலீனின் அருகே சென்று அமைதியாக நின்றான்.

“என்ன கெவின்? கன்ஃபெஷன் குடுத்தியோ?” என்று புன்னகைத்தாள்.

அவன் முகத்தில் எரிச்சலோடு ஏதும் சொல்லாமல் நின்றான்.

“கெவின்..என்னத் தேவிடியான்னு தான நெனச்ச?”

“என்ன…என்ன பேசுக மேக்டி…இல்ல…இல்ல” என்று வேகமாகத் தலையை ஆட்டினான். ஏதாவது பேசிவிடக் கூடாதென தன்னைக் கட்டுப்படுத்தி நின்றான்.

“கெவின், நா ஒண்ணும் தேவிடியா இல்ல கெவின்…..” தீர்க்கமாக அவனைப் பார்த்துச் சொன்னாள் மேக்டலீன். அவளது பாதிமுகம் மட்டும் வெளிச்சத்தில் தெரிந்தது.

அவளது போன் அடிக்க, எடுத்து, “ம்ம்..கிருஷ்ணா…நா இப்ப வந்துருவேன்…” என்று சொன்னாள். பின், சில நிமிடங்கள் ஏதும் பேசாமல் ஃபோனில் காதை வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தாள். இடையிடையே முகத்தைத் திருப்பிக் கண்களைத் துடைத்தாள்.

“கெவின், கெளம்பலாம்.” என்றாள்.

“மழ அடிச்சு பெய்யில்லா மேக்டி…கொஞ்சம் வெயிட் பண்ணலாம்..” என்று அவள் முகத்தைப் பார்த்தான் கெவின்.

“இல்ல, வா.. போலாம்” என்றவள் பைக் அருகே சென்றாள். கெவின் வண்டியை எடுத்தான், அவள் மெதுவாக ஏறி உட்கார்ந்தாள். மழையில் நனைந்த அவளது முகத்தில் ஒரு புன்னகை தோன்றி நீடித்தது. மழை இருவரையும் பாரபட்சமின்றி முழுக்க நனைத்தது.

மேக்டலீன் மேல் விழுந்து வழிந்த மழைத்துளிகளோடு அவளது எண்ணங்களும் சேர்ந்துகொண்டன.

‘கெவின் எங்க மாமனாருக்கு ப்ளட் கொடுக்க கண்டிப்பா வருவான்னு எனக்குத் தெரிஞ்சிச்சி. நா கூப்புட்டா அவனால நோ சொல்ல முடியாது..அவனுக்கு எம்மேல ஒரு ஈர்ப்பு..அது அவன் என்ன மீட் பண்ண மொத நாள்லயே எனக்குத் தெரிஞ்சு போச்சு.. ஆனா, நா அவன அதுக்கு முன்னாடி ரொம்ப தடவ பாத்துருக்கேன்..கேஸ் விசயமா ஜி.ஹெச்சுக்கு அப்பப்போ வருவான்..அவன் பேஷண்ட்ஸ்ட்ட நடந்துக்கிட்ட விதம், அவங்க மேல காட்டுன அக்கற, எப்பவுமே அவனச் சுத்தி இருந்த ஒரு கலகலப்பு எல்லாஞ் சேந்து எனக்குள்ள என்னெல்லாமோ செஞ்சிட்டு..அப்ப நா இருந்த நெலம அப்பிடி..

அவன வீட்டுக்கு வர வச்சி கெட்டிப் புடிச்சப்பக்கூட எனக்கு சொகமால்லாம் இல்ல..அப்ப நா முழு மனசா அதச் செய்யல..சொல்லப் போனா ஒடம்பு கூசிச்சு..கிருஷ்ணா மேல இருந்த கோவந்தான் மனசுல வந்துட்டே இருந்து..என்ன லவ் பண்ணித்தான கல்யாணம் பண்ணுனான், அதுக்காக வீட்டுல எவ்ளோ சண்ட போட்டான்? அத்த, மாமாக்கு என்ன ஏத்துக்க மனசேயில்ல..கிருஷ்ணா ஒத்தக்கால்ல நின்னதாலதான் சம்மதிச்சாங்க….நா நெனச்சிருந்தா கிருஷ்ணாவ கூட்டிட்டுத் தனியா போயிருக்கலாம்லா? ஆனா, அவனுக்கு அப்பா அம்மான்னா உயிருங்கறதாலத்தான எல்லாத்தயும் தாங்கிக்கிட்டு இருந்தேன்..அவன் முன்னாடி ‘மக்களே, மக்களே’ன்னு பேசிட்டு, அவன் இல்லாதப்ப என்னப் படுத்துன பாடு…ஒரு நாளாவது நான் செஞ்ச எதயாம் நல்லாருக்குன்னு சொல்லிருக்காங்களா? எதுக்கெடுத்தாலும் கொற. குத்திக் குத்திப் பேசுனா?…தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொன்னாக்கூட நான் பொறுமையா இருந்தேன்லா? நா நெனச்சா சொகமா வீட்ல இருந்து கால் மேல கால் போட்டு சாப்பிட்டுட்டு இருந்துருக்கலாம், ஆனா, அவங்களுக்காகத்தான கஷ்டப்பட்டு கவர்ன்மென்ட் வேலக்கி ஏறுனேன்..அவங்க ட்ரீட்மென்ட்க்கு கிருஷ்ணா எஞ் சம்பளத்த வச்சித்தான சமாளிக்கான்..ஒரு மூச்சு வீட்டு வேல, பொறவு ஆஃபீஸ், பின்ன சாய்ங்காலம் மறுபடியும் வீட்டு வேல, எல்லாத்தயும் அவனுக்க அந்த உண்மையான அரவணைப்புக்காகத்தான செஞ்சேன்..பொண்டாட்டியா அவனுக்கு என்ன கொற வச்சேன்? ஒடம்புக்கு முடியலன்னா கூட மறுத்தது கெடையாத..ஆனா, அவனால எப்பிடி எனக்குத் துரோகஞ் செய்ய முடிஞ்சு?

அந்த ஃபோன் கால் மட்டும் வரலன்னா என் லைஃப் எப்பிடி சந்தோசமா இருந்துருக்கும்! மொதல்ல நா நம்பல..சே, சே.. எவனோ வேண்டாதவன் பண்ணுக வேலன்னுதான் நெனச்சேன்..ஆனா, நானே என் கண்ணால அந்த மெஸேஜ், வீடியோல்லாம் பாத்தப் பொறவு எப்பிடித் தாங்க முடியும்?

எங்கம்மாவும் அப்பாவும் என்ன எப்பிடில்லாம் வளத்தாங்க? கால தரைல பட விட மாட்டாங்களே..எல்லாமே நா நெனச்ச மாறிதா நடக்கும்..பெரிய பிள்ளையா ஆனப்பொறவுதான் என்ன அவங்க தத்தெடுத்து வளக்க விசயமே எனக்குத் தெரிஞ்சிச்சி..ஆனாலும், எப்பவுமே நாந்தான அவங்க செல்லப் பிள்ள? மாத்தாம்பிள்ளைன்னு ஒரு நாள் கூட பாத்துருப்பாங்களா? எங்கக்காவ விட என்ன எப்பவும் ஒரு படி மேல வச்சித்தான பாத்தாங்க.

நான் கேரளால வேல பாத்துப் போயிருக்கக் கூடாதோ? அப்பதான் அப்பா செத்தது.. என்னால இப்பவும் அந்த நாள மறக்க முடில. எம் ஃபோட்டோவ நெஞ்சுல கெட்டிப்புடிச்சிட்டே தூங்குனவரு அப்பிடியே போய்ட்டாரு..நா வந்து பாக்கேன், அவருக்க மேல எம் ஃபோட்டோ அப்பிடியே இருக்கு..எங்கக்கா சொல்லிச் சொல்லி அழுதா ‘ஒன்னப் பாக்காமப் போய்ட்டாரே அப்பா’ன்னு.

அப்பா போன எடத்த நெரப்ப வந்தவந்தான் கிருஷ்ணான்னு எனக்கு அடிக்கடி தோணும்.. எங்க ஆஃபீஸ்ல வந்து வேலக்கிச் சேந்தான். நா சோகமா இருக்கதப் பாத்து வலிய வலிய வந்து அவனே பேச ட்ரை பண்ணான்.. நா மொதல்ல அவாய்ட் பண்ணேன்..போகப்போக அவனப் புடிச்சிட்டு..ரொம்ப நல்ல மனுசனாத் தெரிஞ்சான்..இப்ப நெனச்சா கொமட்டிட்டு வருகு..அப்பிடி லவ் பண்ணவன் இப்ப எப்பிடி இப்பிடி ஆயிட்டான்? அந்த மலையாளத்தா கிட்ட கொஞ்சும்போ எம் மூஞ்சி அவன் கண்ணு முன்னாடி வந்துருக்கும்லா? எப்பிடில்லாம் போட்டோ எடுத்துருக்கான்..புடிக்காமலா எடுத்துருப்பான்? நான் தூங்குன பொறவு அவளுக்கு என்ன வீடியோ கால் வேண்டிக் கெடக்கு? ஒருநாள் எம் மூஞ்சிக்கிட்ட வந்து நான் தூங்கிட்டனான்னு பாத்துட்டு ஃபோன எடுத்துட்டு வெளிய போனான்..அன்னிக்கே நான் செத்துருக்கணும்.

அவன எப்பிடியெல்லாம் லவ் பண்ணேன்..எவ்ளோ பியூரா இருந்தேன்?

ஆனா, கெவின் இன்னிக்கி எல்லாம் முடிஞ்சப் பொறவு கடசீல ஒரு பார்வ பாத்தான்லா? அது தான் கொஞ்சம் கஷ்டமாய்ட்டு..அதுக்கு என்ன அர்த்தம்னு நல்லாவே தெரிஞ்சி..அவங்கூட இருந்த பத்து நிமிஷமும் வேணும்னே கிருஷ்ணாவ திரும்பத் திரும்ப நெனச்சேன்..என்ன அறியாமலே கண்ணீர் வந்துட்டு…அதோட எல்லாம் முடிஞ்சி..

செரி..எல்லாத்தயும் விடுட்டி, ஒம் பிள்ளைக்க மொகம் கூடவா ஒம் மூஞ்சிக்க முன்ன வரல்ல? அவ நாளக்கி வளந்து ஒனட்ட வந்து கேட்டா நீ நாக்கப் புடுங்கிட்டு சாவணும்லாட்டி? அவளுக்கு ஒலகம் தெரிஞ்சப்பொறவு எல்லாம் அவளுக்குப் புரியும்..அவ எம்பிள்ளல்லா, என் வீம்பு அவளுக்கும் இருக்கும்லா?

கெவின கெட்டிக்கப்போறவள நெனச்சா கொஞ்சம் சங்கடமாருக்கு…அவளுக்குத் தெரிஞ்சா இப்ப நா இருக்க மாதிதான அவளும் இருப்பா? ஆனா, நா என்னதா பண்ணுவேன்? நா ஒண்ணும் கடவுள் இல்லல்லா? செரி, நாளக்கி கிருஷ்ணா நாலு பொம்பளய கூடப் போவான்..நீயும் அப்பிடி ஊர் மேயப் போயிருவியாட்டி? அப்ப நீ தேவிடியாதானட்டி?

நா எதுக்கு அதச் செய்யணும்? நா கிருஷ்ணா கூடத்தா இருப்பேன்..ஆனா, ஒவ்வொரு நாளும் மனசுல சொல்லுவேன்..நீ எனக்க பாசத்த மிஸ் பண்ணிட்டடான்னு.

கெவின் பாவம்…’

…..

மேக்டலீனுக்காக நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா. அவளிடம் ஃபோனில் பேசிவிட்டு, சாரலின் இதத்தில் சுற்றி நடப்பதை வேடிக்கை பார்த்தான். காட்சிகளின் ஊடாக எண்ணங்கள் மிதந்து வந்தன.

‘இன்னிக்கி மேகி கிட்ட மனசு விட்டு எல்லாத்தயும் பேசிரணும்…கொஞ்ச நாளா அவ சரியில்ல…நல்லா வாடிப் போய்ட்டா….இப்ப ஃபோன்ல கூட செரியா பேசலயே! நல்ல பெருமாள் டெக்ஸ்டைல்ஸ்க்கு போய்ட்டு டின்னர் போலான்னு சொல்லுகேன்…ஒண்ணும் பதில் சொல்லல…ஒரு வேள நா செய்றதெல்லாம் தெரிஞ்சாலும் தெரிஞ்சிருக்கும்…பரவால்ல…அவளுக்குத் தெரியணும்…தெரியாட்டாலும் இன்னிக்கி தெரிஞ்சிரும்…எனக்கே நெறைய கொழப்பமாத்தான் இருக்கு…சில விசயங்கள் ஏன் நடக்கு, நாம ஏன் அப்படிச் செய்யோம்ன்னுலாம் யோசிக்க முடியல…நம்மயும் மீறி நடந்திருகு…

மேகிய மொத தடவ பாத்தப்ப நா எப்பிடி ஃபீல் பண்ணனோ அதே ஃபீல் எப்ப கண்ண மூடுனாலும் எனக்கு வந்துருகு..யாரு வந்தாலும் போனாலும் அவ எம் மனசுல அதே எடத்துல அப்டியே தான இருக்கா…நா என்ன தப்பு செஞ்சாலும் அவள விட்ற மாட்டேன்..இந்த லைஃப்ல கடைசி வர அவதான்.

இன்னிக்கி என்னெல்லாமோ தோணுகு…எதோ தப்பான ரூட்ல ரொம்ப தூரம் வந்துட்ட மாதிரி…எல்லாத்தயும் விட்டுட்டு அவ கிட்ட ஓடிப் போணும்… என் தப்பெல்லாம் அவகிட்ட சொல்லி மன்னிப்பு கேக்கணும்…அவ மட்டும் என்ன மன்னிச்சிட்டான்னா போதும்…இனி என்ன பண்ணப் போறேன், இதுலருந்து எப்பிடி வெளிய வருவேன்னுல்லாம் புரியல…ஆனா, அவ நெருப்பு மாதிரில்லா? அவ பக்கத்துல நின்னா, அவ கையப் பிடிச்சிக்கிட்டா, நா செரி ஆயிருவம்லா?

இதெல்லாம் வெளிய சொல்ல முடியாம அவ எவ்ளோ புழுங்கிருப்பா? அவளுக்கு எப்பிடி ஆறுதல் சொல்லன்னு எனக்குத் தெரில, அதுக்கு அருகதையும் இப்ப எனக்கு இல்ல…ஆனா, புதுசா தொடங்கணும்னு தோணுகு..இந்த ஆனிவெர்ஸரி எங்களுக்குப் புதுசா இருக்கட்டும்…’

….

வடசேரி பேருந்து நிலையம் அருகில் வந்ததும், “கெவின், கொஞ்சம் ஸ்டாப் பண்ணு.” என்றாள் மேக்டலீன். இறங்கிப் போய் சாலையோரம் இருந்த பூக்கடையில் இரண்டு பந்து மல்லிகைச் சரம் வாங்கினாள். ஒன்றை அவளது தோள்பையில் வைத்துவிட்டு ஒன்றைக் கெவினிடம் நீட்டினாள்.

“இந்தா கெவின், இது லிசாவுக்கு…”

கிருஷ்ணா அவர்களைப் பார்த்துக் கையசைத்து நடந்து வந்துகொண்டிருந்தான்.

பொறி – ராம்பிரசாத் சிறுகதை

வார இறுதிகளில் மலையேற்றம் செல்வது வழக்கம். இந்த முறை சேர்ந்தார்ப்போல் நான்கு நாட்கள் விடுமுறை வந்ததால் கார் எடுத்துக்கொண்டு தொலைவிலிருந்த ஒரு மலைப்பகுதிக்கு வந்திருந்தேன். இந்த மலைப்பகுதியைத் தேர்வு செய்யக் காரணம் இருந்தது. இந்த மலைப்பகுதியில் வாழ் நாளை நீட்டிக்கும் மூலிகைகள் கிடைப்பதாக பேச்சு வெகு நாட்களாக நிலவிக்கொண்டிருக்கிறது. எனக்கு அந்த ஐடியா பிடித்திருக்கிறது. சாவே இல்லை. வாழ்ந்துகொண்டே இருக்கலாம். எத்தனை வசீகரமான ஐடியா?அப்படி ஒன்று கிடைத்தால் வரம் தான். பூமி போல் ஒரு கிரகத்தை, எல்லையில்லா பிரபஞ்சத்தை ரசிக்க அனுபவிக்க ஒரு மனித ஆயுள் எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்? இந்த மலைப்பகுதிக்கு நான் வருவது இதுவே முதல் முறை. காரை நிறுத்திவிட்டு என் தோள்ப்பையை எடுத்துக்கொண்டு உற்சாகமாக மலையை ஒட்டிய வனத்துள் நுழைந்தேன். சற்று நேரம் வனத்துள் ஊடுறுவினேன். சீரான நடை.

சற்று தொலைவில் ஒரு சிறு கூட்டம். நடுவே ஆறடி நீளம், இரண்டடி அகலத்தில் ஒரு குழி. ஒரு பிணத்தைப் புதைத்துக்கொண்டிருந்தார்கள். நான் அருகே செல்லவில்லை. என் கேமராவின் கண்களால் கொஞ்சம் அருகே சென்று அந்தப் பிணத்தின் முகத்தைப் பார்த்தேன். பெண் பிணம். தூங்குவது போலவே தோற்றம் தந்து மனதைப் பிசைந்தது. அந்தப் பெண் அழகாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

குழி பிறகு மூடப்பட்டது. மலர்கள் தூவப்பட்டன. சிறு கூட்டம் கலைந்தது.

ஒரு உயிரின் மதிப்பு உண்மையில் என்ன? நடந்து செல்கையில் ஆயிரம் கோடி நுண்ணுயிர்களைக் கொல்கிறேன். அவைகள் உயிர்கள் என்றால் உயிரின் மதிப்பு உண்மையில் என்னவாக இருக்க வேண்டும்? ஒன்றுமில்லாமல் இருக்க வேண்டுமா? நுண்ணுயிர்கள் என்பதால் அவைகளின் உயிர்களுக்கு மதிப்பில்லையா? ஏன் இல்லை? அவைகளுக்கு மனிதர்கள் போல் நீளமான வாழ்க்கையும், மனமும் இல்லை என்பதாலா? நமக்கு ஒரு நுண்ணுயிரின் வாழ்க்கை குறித்து என்ன தெரியும்? புழுவின் உயிரை விட, நத்தையின் உயிர் மதிப்பு மிக்கதா? கேள்விகள் என்னைச் சூழ்ந்தன.

மலைப்பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்த போது ஒரு அழகான நீர்வீழ்ச்சியை காண நேர்ந்து, கண நேர உற்சாகத்தில், நீரில் குதித்து, கரையேறி சுற்றும்முற்றும் பார்த்தேன். பார்த்தபடியே நடந்தேன். எங்கும் மரங்கள், செடிகள், கொடிகள். தங்களுக்குள் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் ஒன்றையொன்று மிஞ்சிவிடும் முனைப்பில் தாறுமாறாக குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்து கிடந்தது. சிலவற்றின் அதீத வளர்ச்சியில், சில சிறிய தாவரங்கள் வளர வழியின்றி துவண்டு விழுந்துகிடந்தன. அவைகளை நசுக்கித்தான் அவற்றைவிடப் பெரிய தாவரங்கள் வளர்ந்து கிடந்தன.

வெறும் காடு மட்டும்தானா இங்கேஎன்று எண்ணிக்கொண்டிருக்கையிலேயே தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அந்த குடிசையின் உச்சந்தலையிலிருந்து புகை மேலெழும்பியது. அது பரந்த ஆகாயத்தின் எல்லையற்ற பரப்பில் மெல்ல தேய்வுற்று ஒன்றுமில்லாமல் போனது.

நான் மெல்ல முன்னகர்ந்தேன். ஒரு மரத்தின் கிளையொன்றில் மறைந்திருந்தபடி ஒருவன் கீழே தவ்வினான். அவன் தவ்விய இடத்தில் ஒரு பெண் நடந்து போய்க்கொண்டிருந்தாள். அவள் மீது அவன் விழ, இருவரும் நிலத்தில் உருண்டார்கள். அவள் திமிர அவன் அவளை இறுகக் கட்டி அணைத்தான். அவள் கைகளை, இறுகப்பற்றிக்கொண்டான். அவள் தன் உடலை உதறினாள். ஆயினும் அவனின் பிடியிலிருந்து அவளால் தன்னை மீட்டுக்கொள்ள முடியவில்லை என்பதை நான் கவனித்தேன். அந்தப் பெண்ணை உற்று கவனித்ததில், அவள் அந்த பிணத்தின் முக ஜாடையை நூறு சதம் கொண்டிருப்பதை உணர்ந்து சற்றே அதிர்ந்தேன்.

எனக்கு அந்த இருவரின் செயல்களில் விபரீதத்தைவிடவும், விகல்பத்தின் பங்கு அதிகமாக இருப்பதாகப்பட, ஒரு பெண்ணின் இளஞ்சூட்டு உடல் ஒரு ஆணை என்னவெல்லாம் செய்யும் என்பது குறித்து நான் அறிந்திருந்ததன் விளைவாக, ஒரு அணிச்சை செயலாக, நான் அவனிடமிருந்து அவளை மீட்கும் பொருட்டு அவர்களை நோக்கி ஓடினேன். அவன் முகத்தில் ஒரு குத்து விட நான் முயல, அவன் அதை முன்பே கணித்திருக்க வேண்டும். அவன் போக்கு காட்டியதில் என் முஷ்டி நிலத்திலிருந்த பாறையொன்றில் மோதி வலித்தது. அவனின் முக அமைப்பே தடிமனாக இருந்தது. அவன் என் இடுப்பின் கீழ் தன் காலால் வைத்து எத்த, நான் நிலைதடுமாறி விழுந்தேன். கண்கள் இருளடைந்தன. ஆபத்திலிருக்கும் ஒரு அழகான பெண்ணைக் காப்பாற்றக்கூட திராணியற்ற நானெல்லாம் என்ன விதமான………………………………………………………………………

நான் எழுந்தபோது, அவனும் அவளும் அங்கே இல்லை. சற்று நேரத்துக்குப் பிறகு அவள் அந்த குடிசைக்குள்ளிருந்து அழுதபடி வெளியே ஓடினாள். அவள் பின்னால் மிக மெதுவாக அவளையே பார்த்தபடி அவன் குடிசையை விட்டு வெளியே வந்தான். அவன் கையில் ஒரு புத்தகம் இருந்தது. அவன் முகத்தில் லேசான களைப்பு தெரிந்தது. இடையை மறைக்கும் ஒரு அங்கி மட்டுமே அணிந்திருந்தான். அந்த அங்கியைப் பற்றிச் சொல்ல வேண்டும். வானவில்லின் அத்தனை நிறங்களும் அந்த அங்கியில் இருந்தது. அவன் உடலெங்கும் அவளின் நகக்கீரல்கள். உள்ளே என்ன நடந்திருக்குமென்று என்னால் ஊகிக்க முடிந்தது. நான் மயங்கியிருக்கக் கூடாது.

அவன் என்னைப் பார்த்தான். எனக்கு அடிவயிற்றில் ஏதோ செய்தது. அவனின் எத்தலை என் உடலென்னும் மாபெரும் நினைவடுக்கு இன்னும் மறக்கவில்லை போலும். அவன் என்னை அண்டினான்.

உன் பெயர் என்ன?” என்றான்.

நீலன்என்றேன்.

மணிக்கட்டைப் பார்த்துவிட்டு, என் பெயர் எழுதி, பக்கத்தில் 5:02 என்று குறித்துக்கொண்டான்.

சாத்தியமே இல்லைஎன்றேன் தீர்மானமில்லாமல்.

அவன் என்னைக் கேள்வியாய் ஏறிட்டான்.

அவள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டதை நான் என் கண்களால் பார்த்தேன். பிறகெப்படி இங்கே?” என்றேன்.

அவன் என்னை ஏறிட்டான். அவனின் கண்கள் இமைக்கவில்லை. கூர்மையான பார்வையால் என் கண்களை ஊடுறுவிப் பார்த்தான்.

எனக்கு ஒரு உதவியாளன் தேவைப்படவில்லை என்றால் இந்நேரம் நீ……………” அவன் அந்த வாக்கியத்தை முடிக்காமலேயே கடந்து போனான். அவன் திரும்பத்திரும்ப என் அகங்காரத்தை சீண்டுவதாய்த் தோன்றியது. மயங்கக் கூடாத நேரத்தில் மயங்கிவிட்டபிறகு கோபம் எதற்காகும்?

எனக்கு பசித்தது. அவன் உதைத்ததில் இன்னமும் வலித்தது. வயிற்றின் அமிலம் உடலை இன்னும் இன்னும் பலவீனப்படுத்தியது. அவன் குறிப்பறிந்தது போல், ஒரு களிமண்ணாலான தட்டில் பொறித்த முட்டைகளுடனும், வதக்கப்பட்ட கீரையுடனும் வந்தான்.

விருந்தோம்பல். அதுவும், ஒரு பெண்ணிடம் தன் பலத்தை காட்டியவனிடம்.

இந்த இயற்கையின் வினோதத்திற்கு அளவே இல்லையா என்று தோன்றியது. அவனது விருந்தோம்பலை மறுப்பதா ஏற்பதா என்பது ஊர்ஜிதமாக இல்லாமல் இருந்தது.

நீ புதியவன். ஆனால் அவள் புதியவள் இல்லை.” என்று துவங்கினான்.

என்ன சொல்ல வருகிறாய் நீஎன்பதாக நான் அவனை ஏறிட்டேன்.

இதுகாறும் நான் தனியாக இந்தப் பிரதேசத்தைக் கையாண்டுகொண்டிருந்தேன். ஆனால், உன் வருகை, என்னால் அதிகபட்சமாகக் கையாளக்கூடிய எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது. எனக்கு ஒரு உதவியாளன் வேண்டும். அது நீயாக இருக்கலாம் ஆனால், நீ விரும்பினால் மட்டும் தான்என்றான் தொடர்ந்து.

நான் ஏதும் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்தேன்.

நீ என்னுடன் சேர விரும்பவில்லை எனில், உன்னை அவளாக்கி அவளை நீயாக்கிவிடுவது தான் எனக்கிருக்கும் ஒரே வழிஎன்றான்.

எனக்கு சுத்தமாக எதுவும் புரியவில்லை. கொஞ்சம் தெளிவாகச் சொல்என்றேன் கெஞ்சும் குரலில்.

கேள். இந்தப்பிரதேசத்தில் காலம் ஒரு பொறியாக இருக்கிறது. துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்துவிடும். நீ பார்த்தது உண்மை தான். அவள் சில மணி நேரம் முன்பு மரணித்தாள். ஆனால், காலம் அவள் இந்த பிரதேசத்தில் காலடி எடுத்து வைத்த கணத்திற்கே மீண்டதில், அவள் மீண்டுவிட்டாள். இனி மறுபடி மரணிப்பாளா தெரியாது

அவன் ஏதோ உளறுகிறான் என்றே தோன்றியது எனக்கு. ஒரு சைக்கோவை சந்தித்துவிட்டேன் என்று என் உள்ளுணர்வு சொன்னது. காட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். என் அட்ரினலின் விழித்துக்கொண்டது. இரண்டு முறை விக்கினேன். அவன் தண்ணீர் எடுத்து வர குடிசைக்குள் சென்றான். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி நான் காட்டுக்குள் ஓடினேன். அவன் என்னைப் பின்தொடர்ந்து வரவில்லை. ஏன்?

நான் ஒடிக்கொண்டே இருந்தேன். எப்படியாவது மலையின் விளிம்பை நெருங்கி என் காரை அடைந்துவிட்டால் திரும்பிக் கூட பாராமல் வீட்டுக்கு திரும்பிவிட வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தேன். ஆனால் எவ்வளவோ ஓடியும் மலையின் விளிம்பே தெரியவில்லை. சில சிறு குன்றுகளைக் கடந்தேன். ஒரு குளத்தை அடைந்தேன். உண்மையிலேயே தாகம் எடுத்தது. குளத்தில் தெளிவான நீர் இருந்த பகுதியில் உள்ளங்கையால் நீரள்ளி அருந்தினேன். அவ்வளவு தான் நினைவிருந்தது. சற்றைக்கெல்லாம் என் கண்கள் இருளடைந்தன.

நான் கண்விழித்தபோது எவ்வித சேதாரமும் இல்லாமல் அதே இடத்தில் முழுமையாகக் கிடந்தேன். ஆறொன்று என் பாதையில் வந்தது. உடலெங்கும் அதுகாறும் இருந்த களைப்பும் வியர்வையும் அப்பிக்கிடக்க, உடலைச் சுத்தம் செய்யும் எண்ணத்தில் ஆற்றில் இறங்கினேன். கால் வழுக்கி இடறி விழுந்து நீருக்குள் சில நொடிகள் தொலைந்து, என்னை நானே மீட்டெடுத்து ஆற்றின் மறுபக்கம் கரை ஏறியபோது அந்தக் கரையை அதற்கு முன்பும் எங்கோ பார்த்த நினைவிருந்தது.

தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அந்த குடிசையின் தலையிலிருந்து புகை!

அருகிலிருந்த மரத்தின் கிளையொன்றில் மறைந்திருந்தபடி ஒருவன் கீழே தவ்வினான். அவன் தவ்விய இடத்தில் ஒரு பெண் நடந்து போய்க்கொண்டிருந்தாள். அவள் மீது அவன் விழ, இருவரும் நிலத்தில் உருண்டார்கள். நான் முன்பு கண்ட காட்சிகளையே திரும்பவும் காண நேர்வது என்ன வினோதம்?

நான் இம்முறை அவளை மீட்கும் பொருட்டு அவனிடம் மல்லுக்கு நிற்கவில்லை. திமிறும் அவளை தன் இருகைகளாலும் தூக்கித் தோளில் ஏந்திக்கொண்டு குடிசைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டான். சற்று நேரத்துக்குப் பிறகு அவள் கண்ணீருடன் அந்த குடிசையை விட்டு வெளியேறி ஓடினாள். பின்னாலேயே அவன் வெளியே வந்தான். என்னைப் பார்த்தான்.

மாலை மணி ஐந்தாகிவிட்டதுஎன்றான்.

எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. முதலில் அவள் யார்? அவளின் பிணத்தை மண்ணில் இட்டு மூடினார்கள். அவள் உயிருடன் எப்படி எழுந்து வந்தாள்? அவளுக்கு அந்த குடிசையில் அந்த பலவந்தம் முதல் முறை நடந்துவிட்ட பிறகும், மீண்டும் அதே இடத்திற்கு அவள் ஏன் வந்தாள்? மீண்டும் அவன் அவளை ஆக்ரமிக்க அவளே ஏன் வழி செய்தாள்? தான் பலவந்தப்படும் ஒரு வாய்ப்பை அவளே ஏன் அவனுக்கு வழங்குகிறாள்?

உன்னை உடல் வலுவால் வெல்ல எனக்குத் திராணி இல்லை. ஆனால் இது பாவம். ஒரு பெண்ணை நீ இப்படியெல்லாம்….. ” என்னால் அதற்கு மேல் அதை விவரிக்க முடிந்திருக்கவில்லை..

கேள். என்னாலும் இதைத் தனி ஆளாக இனியும் தொடர்ந்து செய்ய இயலாது. உதவிக்கு ஒரு ஆள் தேவை. நீ வருகிறாய் எனில், உன்னை அவளாக்க வேண்டியதில்லை

அவள் யார்? பேயா? அவள் இறக்கவில்லை என்றால் அவள் பிணம் மண்ணுக்குள் புதைந்ததை நான் என் கண்ணால் பார்த்தேன். அது எப்படி?”

அவள் இறந்தது உண்மை

இறந்தவள் மீண்டு வந்தாளா? பிணங்களை உயிர்ப்பிக்கிறாயா? அல்லது அவள் இரட்டையர்களில் ஒருத்தியா?”

இரண்டுமே இல்லை. நீ இங்கு வந்தது இரண்டாவது முறை. அதை கவனித்தாயா?”

நான் ஆமோதிப்பாய் தலையசைத்தேன்.

நீ இன்னும் பல ஆயிரம் முறை இங்கே வரப்போகிறாய். அது தெரியுமா?”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அது எப்படி சாத்தியம்? அப்படியானால் நான் என் வீடு திரும்பப்போவதில்லையா?

என்ன உளறுகிறாய்?”

ஆம். காலம் இங்கே ஒரு பொறியாக இருக்கிறது. அதாவது டைம் ட்ராப். யார் இதை இங்கு இப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை. இங்கே பலர் சிக்குண்டு இருக்கிறார்கள். அந்தப் பெண்ணும் அப்படிச் சிக்கியவள் தான். இதிலிருந்து மீண்டு வெளியே செல்ல வாய்ப்பிருக்கிறது என்று சிலர் துவக்கத்தில் நம்பினார்கள். அவர்கள் இந்தப் பிரதேசத்தின் விளிம்புகளில் எங்கேனும் வெளியேறும் நுழைவாயில் இருக்கிறதா என்று சோதிக்கவும் செய்தார்கள். ஆனால் இதைச்சொல்லும் இக்கணம் வரை ஒருவர் கூட வெளியேறியதில்லை. வெளிச்செல்ல வாய்ப்பில்லை என்று தெரிந்த பிறகு தான் நான் இதைச் செய்கிறேன்.”

எதை?”

அவர்களின் நினைவுகளை அழிப்பது

என்ன?”

ஆம். நீ பலவற்றை கவனிக்கவில்லை என்று ஊகிக்கிறேன். வெளியே செல்ல வழியில்லை. திரும்பத்திரும்ப நடக்கும் ஒரே விதமான நிகழ்வுகள். நீ சற்று யோசித்துப்பார். ஏற்கனவே நடந்த ஒன்று திரும்பத்திரும்ப கோடி முறை உனக்கு நடந்தால், உன் மன நிலை எப்படி இருக்கும்? ஒரு நாளின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்துவது எது? சுவாரஸ்யம். அது இல்லையெனில் என்னாகும்? அவளுக்கு இறப்பே இல்லை. இங்கிருக்கும் யாரும் முதுமையடையப்போவதுமில்லை. “

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதனால் தான் மண்ணுள் புதையுண்டவள் உயிருடன் மீண்டாளா? அவனிடம் மீண்டும் மீண்டும் சிக்குகிறாளா?

ஆனால், ஏன் நினைவுகளை அழிக்க வேண்டும்?”

நீ ஒரு கண்காட்சிக்கு செல்கிறாய். கண்காட்சியின் முடிவில், மீண்டும் கண்காட்சியை முதலிலிருந்து பார்க்கச்சொன்னால், உன்னால் அந்த கண்காட்சியை எத்தனை முறை ரசிக்க முடியும்?”

இரண்டு மூன்று முறைக்கு மேல் சலித்துவிடும்

அதுதான் இங்கும். காலப்பொறியானது இந்தப் பிரதேசத்தில் சிக்குண்டவர்களை மீண்டும் மீண்டும் பார்த்ததையே பார்க்கவும், கடந்ததையே கடக்கவும் நிர்பந்தப்படுத்துகிறது. இதிலிருந்து மீள இரண்டே வழி தான்

என்ன அது?”

ஒவ்வொரு முறை காலப்பொறி மீள்கையிலும், அதை அப்போதுதான் முதன்முதலில் எதிர்கொள்வதாக பாசாங்கு செய்வது. அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல, இந்த பிரதேசத்தில் சிக்குண்ட அனைவருக்கும் நான் தருவது இதைத்தான். ஒவ்வொரு முறை கண்காட்சி முடிந்து மீண்டும் துவங்குகையிலும், அதுகாறும் பார்த்ததையெல்லாம் மறக்கச்செய்துவிட்டால், அந்தக் கண்காட்சி புதியதாக சுவாரஸ்யம் கூட்டுவதாகத்தானே அமையும்?”

நான் ஆமோதிப்பாய்த் தலையசைத்தேன்.

அப்படிச் செய்வதால், அவளுக்கு இந்தப் பிரதேசத்தின் மீட்சியற்ற செக்குமாட்டுத்தனம் செக்குமாட்டுத்தனமாகவே தெரியாது. அவளைப்பொருத்தவரை, இந்தக் கண்காட்சியை அவள் பார்ப்பது ஒரு முறை தான். தான், முதல் முறையாகத்தான் இந்தக் கண்காட்சியைப் பார்க்கிறோம் என்கிற எண்ணத்தில் அவள் ஒவ்வொருமுறையும் இந்தக் கண்காட்சியை ஒவ்வொரு விதமாய்ப் பார்க்க நான் வழி செய்கிறேன். “

சரி. புரிகிறது. அது என்ன இரண்டாவது வழி?”

இந்தக் கண்காட்சியின் அழகில் தொலைந்து விடுவது. அதைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன். அவள் போன்ற எண்ணற்றவர்களை இவ்விதம் கண்காட்சியில் தொலைய வைப்பதே எனது கண்காட்சி ஆகிவிடுகிறது. இவர்களை மேலாண்மை செய்வதிலேயே என் காலம் சுவாரஸ்யமாய்க் கழிகிறது. ஒவ்வொருமுறை அவர்கள் அவர்களுக்கான கண்காட்சிகளை ஒவ்வொரு விதமாக எதிர்கொள்வதை வேடிக்கை பார்ப்பதில், எனக்கு சுவாரஸ்யம் கூடுகிறது. அவள் போல் இப்பிரதேசத்தில் சிக்குண்டவர்கள் ஒவ்வொருவரும் எப்போது இந்த பிரதேசத்தில் நுழைந்தார்கள் என்பதை நான் குறித்து வைத்திருக்கிறேன். அந்த நேரம் வருகையில், அவர்களின் நினைவுகளை நான் அழித்துவிடுகிறேன். இதன் மூலம் காலப்பொறியின் அந்த இழையில் இந்தக் காடு அவர்களுக்கு புதியதாகிவிடும். ஆனால், காட்டுக்கு அவர்கள் புதியவர்களல்ல

அவன் சொன்னதைக் கேட்க எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. காலப்பொறி அதாவது டைம் ட்ராப் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவெல்லாம் அறிபுனை கிறுக்கர்களின் அதீத கற்பனை என்றே நினைத்திருந்தேன். நிஜமாகவே அப்படி ஒன்றில் நானே சிக்கிக்கொள்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

எல்லாம் சரி. ஆனால், நீ இந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேற ஏன் முயற்சிக்கவில்லை? இப்படி இந்தக் காட்டில் காலப்பொறியில் சிக்குண்டு உன் அசலான வாழ்வை வாழமுடியாமல் இருப்பது குறித்து உனக்கு வருத்தமில்லையா?” என்றேன் நான்.

அசலான வாழ்க்கை என்றால் என்ன? பூமியில் மானுட வாழ்வைச் சொல்கிறாயா?” என்றான் அவன்.

நான் என்ன பதிலுரைப்பது என்று தெரியாமல் ஆமோதிப்பாய்த் தலையசைத்தபடி அவனையே உற்றுப்பார்த்திருந்தேன்.

உண்மையில் நீ குறிக்கும் அந்த அசலான வாழ்வும் கூட ஒரு வகைக் காலப்பொறிதான் என்பதை உணர உனக்கு இன்னும் என்னவெல்லாம் தேவைப்படும்? என்ன இருந்தால் நீ அதைப் புரிந்துகொள்வாய்? பிறந்து, வளர்ந்து, அடுத்தவனுக்கு ஏதோவோர் வகையில் பயன்பட்டு, அதன் மூலம் பொருள் ஈட்டி, பிள்ளை குட்டி பெற்று, அவர்கள் வளர துணை நிற்பதிலேயே இளமையை வீணாக்கி, முதுமை அடைந்து, இறந்து, மீண்டும் பிறந்து, வளர்ந்து………. பிறப்பை, இந்த பிரதேசத்துள் நுழைவதாயும், இறப்பை காலப்பொறியின் இறுதிக்கட்டமென்றும் எடுத்துக்கொண்டால் மானுட வாழ்வும் இந்தப் பிரதேச வாழ்வும் ஒன்று தான். மானுட வாழ்விலும் நீ இதையே தான் நிகழ்த்துகிறாய். அறுபது வருட வாழ்வை, வெவ்வேறு செயல்பாடுகளால் இட்டு நிரப்பிக்கொள்கிறாய். சிரமேற்கொண்டு உனக்கு நெருக்கமான அர்த்தங்களைக் கொண்டு நிரப்பிக்கொள்ள முயல்கிறாய். அதன் மூலம், வாழ்வனுபவத்தை சுவாரஸ்யமாக்க முயல்கிறாய். அல்லது அடுத்தவர்களை மேலாண்மை செய்வதிலேயே உன் காலத்தை இட்டு நிரப்பிக்கொள்ள முயல்கிறாய். இவையெல்லாவற்றின் நோக்கம் தான் என்ன? காலம் கடத்துவது. அதுமட்டும் தான் நோக்கம். அதையே இந்தக் காட்டுக்குள் மேற்கொள்வதில் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது? ” என்றான் அவன்.

அவன் சொன்ன எதையும் மறுக்க என்னிடம் எவ்வித வலுவான வாதமும் இல்லை என்பதே என்னை பலவீனப்படுத்துவதாக இருந்தது.

வாழ்க்கை என்று எதை நாம் குறிக்கிறோம்? சில மணி நேரங்களே உயிர் வாழும் உருவத்தில் மிகச்சிறியதான பூச்சிகளுக்கு வாழ்வனுபவம் என்னவாக இருக்கிறது? அவ்வாழ்வனுபவத்தில் ஏன் மனித இனம் தேடும் அர்த்தங்கள் இருப்பதில்லை? மேற்கொள்ளும் பயணங்கள் இருப்பதில்லை? ஆனால் அது குறித்தெல்லாம் அந்தப் பூச்சிகள் அலட்டிக்கொள்வதும் இல்லை. இந்த பிரதேசத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட ஒரு தேனீ, தான் பல்லாயிரம் தேனீக்களின் வாழ்வுகளைவாழ்ந்து முடித்த பின்னும் வாழ்ந்துகொண்டிருப்பதை உணர்ந்திருக்குமா?

அதன் பார்வையில், தான் சற்று முன் பூவிலிருந்து எடுத்த மகரந்தத்தை ஏற்கனவே பல்லாயிரம் முறை எடுத்தாகிவிட்டது என்பதை அறியுமா? இவை எதையும் அறியாமல்தான், இவை எதையும் பொருட்படுத்தாமல்தான் தேனியானது இந்தப் பிரதேசத்தில் தன் வாழ்வை வாழ்ந்து முடிக்கிறது. முடிக்கும் தருவாயில் மீண்டும் பிறக்கிறது. அதன் நினைவுகளை அவன் அழிப்பதில்லை. ஏன்? அதன் நினைவுகள் அதற்கு ஒரு பொருட்டே இல்லை. அந்த நினைவுகள், அதன் வாழ்வின் மையமாக இருப்பதில்லை.

நினைவுகள்! ஞாபகங்கள்!

மனிதர்களின் நினைவடுக்கு என்பது தொடர்ச்சியாக, படிப்படியாக, ஒவ்வொரு புள்ளியாகச் சேர்த்து இணைக்கப்பட்ட ஒரு நேர்கோடு. மொழியின் மூலமாக, ஓலைச்சுவடிகளின் வாயிலாக, காகிதங்களின் வாயிலாக, கல்வெட்டுக்களின் வாயிலாக பரிணாம வளர்ச்சி கண்டுவிட்ட ஒரு வெறும் கருவி. அந்தக் கருவியுடன் மனித இனம் தோன்றிடவில்லை. துவக்கத்தில், தேனீயைப்போலத்தான் மனிதனும் தோன்றியிருக்கிறான் என்னும்போது மிகவும் தற்செயலாக, ஒரு வெறும் பக்கவிளைவாகத் தோன்றிவிட்ட, பரிணாம வளர்ச்சி கண்டுவிட்ட ஒரு கருவிக்கு சரியான விலை என்னவாக இருக்க முடியும்? ஒரு விரலின் வீக்கத்திற்காய், ஒரு முழு உடலையும் வீங்க வைப்பதென்பது என்ன விதமான விளைவுகளை உருவாக்கவல்லது?

இப்போது இந்தப் பிரதேசத்தில் நுழைந்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக யாரேனும் இந்தப் பிரதேசத்தில் நுழைந்தபடியே இருக்கிறார்கள். அவர்களை நான் தனியனாகக் கையாள்வது சிரமமாக இருக்கிறது. என்னதான் இது, காலப்பொறியானாலும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், என்னால் எத்தனை பேரைக் கையாள முடியுமென்று ஒரு வரையறை இருக்கிறதல்லவா? அதை நான் எப்படி மீற முடியும்? அதனால் இப்போது எனக்கு உதவி தேவைப்படுகிறது. நீ எந்த வழி செல்ல இருக்கிறாய்? மேலாண்மை செய்து காலம் கடத்த விரும்புகிறாயா? அல்லது, ஒவ்வொருமுறையும் இந்த பிரதேசத்தை புதிதாகப் பார்த்தே காலத்தை கடத்த விரும்புகிறாயா?” என்றான் அவன்.

ஐயோ கடவுளே! இப்படி ஒரு இக்கட்டில் வந்து சிக்குவேன் என்று கனவிலும் நினைத்திடவில்லைஎன்றேன் நான் சோர்வு தழுவிய குரலில்.

யார் கண்டது? அந்தக் கடவுளே கூட இப்படியொரு இக்கட்டில் சிக்கிக்கொண்டவன் தானோ என்னவோஎன்றான் அவன்.

நான் மேலாண்மையின் மூலம் காலம் கடத்துகிறேன்என்றேன்.

சபாஷ்.. இன்றிலிருந்து நீ என் உதவியாளன். வா ..என்னுடன்என்றுவிட்டு அவன் என்னை குடிசைக்குள் அழைத்துப்போனான். அணிவதற்கு சில மேலாடைகள் தந்தான். அவைகளிலும் வானவில்லின் அத்தனை நிறங்களும் இருந்தன.

அங்கு வைத்து எப்படி பின் மண்டையின் ஓரிடத்தில் தாக்கி சமீபத்திய நினைவுகளை அழிப்பது என்று கற்றுக்கொடுத்தான். அதையும் மீறி எவரேனும் எதையேனும் நினைவு வைத்திருப்பின் அதை கனவென்றோ‘, ‘அதீதக் கற்பனையென்றோசொல்லி மூளைச்சலவை செய்யவும் அவனிடம் பயிற்சி பெற்றேன். பிறகு அவன் வைத்திருந்த புத்தகத்தை என்னிடம் நீட்டினான். அதில் அந்த பிரதேசத்திலிருக்கும் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்கப்பட்ட இடமும், நேரமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறிது சிறிதாக அந்தப் பிரதேசத்தின் ஒழுங்கு எனக்குப் பழக்கமாகிப்போன ஒரு நாளில் அவன் எதிர்பாராத நேரத்தில் அவனது பின் மண்டையில் ஓங்கி அடித்தேன். அவன் மயங்கி விழுந்தான். நினைவு திரும்பும் போது அவனும் இந்த பிரதேசத்திற்கு புதியவனாகிவிடுவான். அவன் மீது அவன் எனக்களித்த வானவில்லின் அத்தனை நிறங்களும் கூடிய ஆடையை வீசினேன். ஓரினச்சேர்க்கையாளர்களின் குறியீடு எனக்கெதற்கு. நான் தேடியது வாழ் நாளை நீட்டித்துக்கொள்ள ஒரு தீர்வை.

நான் அருகாமையிலிருந்த அந்த மரத்தின் கிளையில் ஏறி அமர்ந்து கொண்டேன். அவள் வரக் காத்திருந்தேன்.

என் மூளையில் திட்டம் தெளிவாக இருந்தது. காலப்பொறிக்குள் இனி நோயும் இல்லை, முதுமையும் இல்லை, மரணமும் இல்லை. உடன் ஒரு பெண் இருப்பின் எத்தனை அழகாய் இருக்கும்? இந்தப் பிரதேசம் காலத்தைத் திகட்டத்திகட்ட வழங்க இருக்கிறது. தர்க்க ரீதியாய்ப் பார்க்கின் இத்தனை நீளமான காலத்தைக் கடத்தத் தேவையான அனுபவத்தை, ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவரைக் காட்டிலும், வெவ்வேறு பாலினத்தைப் சேர்ந்த இருவரால் பெறவே அதிகப்படியான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இது உண்மையில்லை என்று எப்படிக்கருத இயலும்? பூமியில் முதன் முதலாய் உதித்தது பெண் இனம். பின் அதுதான் ஆண் இனமென்று ஒன்று உருவாகக் காரணமாகவும் இருந்தது. முற்றிலும் ஒரே பாலினம் நீண்ட நெடுங்காலத்திற்கு சாத்தியமெனில், ஆண் இனம் என்ற ஒன்றே உருவாகியிருக்க வேண்டியதில்லையே.

அவள் வருவாள். அவள் மீது நான் தாவி ஆட்கொள்வேன். அவள் நினைவுகளை நான் அழிக்கப்போவதில்லை. அவள் நினைவுகளை மட்டும் நான் அழிக்கவே போவதில்லை.

நாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்

1. இலக்கியத்தில் நுழைந்தது எப்படி?

சிறுவயதிலே வாசிப்பதற்கான ஊக்கம் கொண்டிருந்தேன். சூழ்நிலையும் அமைந்தது.
அம்மா கதைகள் சொல்லித் தீரும்போது புதியவை வாசித்ததும் சொல்கிறேன், அதுவரைக்கும் காத்திரு என்பாள். அப்போது ஏன் காத்திருப்பது நாமே படித்து அம்மாவுக்கும் கதை சொல்வோம் என்று தோன்றும். அப்படி எழுத்துக்கூட்டி சிறுவர் இதழ்கள் வாசிக்கத் தொடங்கினேன்.

அதன் பிறகு இரண்டு அரசு நூலகங்கள் எனக்கு தங்களது புத்தகங்களால் இலக்கியத்தை அறிமுகப்படுத்தி உதவியிருக்கின்றன. வீட்டில் வாசிக்கிற பழக்கம் இருந்தமையால் என் வாசிப்புக்கு ஆதரவு இருந்தது.

எழுதவேண்டும் என்கிற ஆசை கழுகைப்போல பறக்க வேண்டும் ஆசைப்படக்கூடிய வயதிலேயே ஏற்பட்டுவிட்டது. சிறு கவிதைகளையே எழுதித் தொடங்கினேன்.

இணையம் குறிப்பாக முகநூல் எனக்கு இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளை அறிமுகம் செய்து கொள்வதற்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பதற்கும் உதவியது. மனிதர்களின் மேன்மை கீழ்மைகள் குறித்துப் புரிந்து கொள்ளும் களமாக அதற்கும் மேலாக என்னைச் சுற்றி நடப்பவற்றை தெரிந்து கொள்வதற்கு அதுவே உதவுகிறது.

அப்படியே சாத்தியப்பட்ட போது இலக்கியக் கூட்டங்களுக்கு போகத் தொடங்கினேன்.

2. வாசிக்கும் போது என்ன கற்று கொள்கின்றீர்கள்? அது உங்கள் எழுத்துக்கு எப்படி உதவுகிறது?

எனக்கு எதையேனும் ஒரு படைப்பிலிருந்து கற்றுக் கொண்டேனா என்கிற கேள்வி இதுவரை வந்ததில்லை. எனக்கு ஒவ்வொரு நூலும் ஒரு அனுபவமாகவே அமைகிறது. அதன் அனுபவத்தில் திளைத்திருக்கிறேன். அதற்கு என்னை ஒப்புக் கொடுக்கிறேன். ஆவேசம் வந்தது போலப் பக்கங்களைப் புரட்டி வாசித்துத் தள்ளுகிறவன் அல்ல நான். எனக்கு ஒவ்வொரு பக்கமும் அதன் வார்த்தைகளும் முக்கியம். அதற்கான நேரம் எடுத்தே நான் வாசிக்கிறேன்.

பெரும்பாலும் வாசிக்கும்போது எந்த சிந்தனையும் வருவதில்லை. தேவையானால் முடித்ததும் ஒரு பேப்பரும் பேனாவுமாக உட்கார்ந்து சிந்திப்பதும் குறிப்பு எழுதிக் கொள்வதும் உண்டு.  ஆனால், அவை பிறருக்காக எழுதப்படுவதில்லை. எனவே கூறுமுறையைப் பற்றிய கவலை வேண்டாம். ஒருங்கிணைப்புக்கான அவசியம் இல்லை.

ஒரு கட்டுரை எழுதவேண்டும் அல்லது ஒரு எழுத்தாளனாக நான் பிறரிடம் கூறுவதற்காக சிந்திக்கிறேன் எனும் கட்டம் வரும்போது இது சிக்கல். எனவே அதற்காக மீண்டும் புறவயமாக கூற்றுகளையும் சிந்தனைகளையும் தொகுக்கும் பணியைச் செய்கிறேன். அது என் இயல்புக்கு மிகப்பெரிய பளு. ஆனால் பிடித்திருக்கிறது.

அந்த வகையில் புனைவு எழுதுவதை நான் மிகவும் விரும்புகிறேன். என்னையறியாமல் அதில் ஒருங்கிணைவு உருவாவதும் உணர்வுகள் முயங்கி வெறொன்றாக மாறுவதும் நடக்க வேண்டும். அதற்காக நான் ஒரு கதையை எழுதும் முன்னர் தயாராகி இருக்கவேண்டும். கதை தயாராக வேண்டும். அதற்காக என்ன செய்கிறேன் என்பது மட்டுமே என் கையில் இருக்கிறது. அப்படியே எழுதி முடிக்கிறேனா என்பது முழுமையாக என்னிடத்தில் இல்லை. அதற்கான முயற்சியை செய்ய வேண்டியது. அது மட்டுமே என்னால் ஆகும்.

3. உங்கள் புனைவு உலகினை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இதுவரை இவற்றைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்று திட்டமிட்டதில்லை. அந்தந்த தருணங்களில் எனக்கு எதை எழுதுவதற்கான உந்துதல் பிறக்கிறதோ, அதையே எழுதினேன். அப்படியே கதைகளை முழுமையாக உருவாக்கிக் கொண்டும் எழுதியதில்லை.

ஆனால் தொகுப்புக்காக எல்லாவற்றையும் மீண்டும் படித்தபோது, கண்டு கொள்ளப்படாதவர்களை அல்லது பொதுவான மனநிலைகளிலிருந்து விலகிய குழந்தைமையையே எழுதியிருக்கிறேன் என்று புரிகிறது.

என் வாழ்கையின் அனுபவங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன் என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படி எழுதக்கூடாது என்கிற தெளிவு எனக்கு சில வருடங்களாகவே உண்டு. சில கதைகளில் என் போன்ற சாயல் கொண்ட பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறேன், அதற்காக அது என்னுடைய அனுபவம் ஆகிவிடாது.  மேலும் என் எழுத்து அவசர வாசிப்புக்கானது அல்ல.

பொருள் மயக்கம் அழகியலாக மட்டும் இல்லாது குறைபாடாக ஆகிற இடத்தில் வாசிப்பில் இடறும். அப்படி இடறாமல் வாசிக்கப் பழகினால் எல்லாமே நல்லவையே. மொழிச் சீர்மையும் கருத்துரைத்தலும் அணிகளும் மட்டுமே இலக்கியம் என்று கருதியது எப்படி மொழிக்கு தீமையாக அமைந்ததோ, அப்படியே மொழியைக் கண்டு கொள்ளாமல் இலக்கியம் படைப்பதும். அதை மனதில் வைத்துதான் என்னை மேம்படுத்திக் கொள்கிறேன்.

4. புனைவாக்கத்தை தவர வேறு ஏதேனும் எழுதும் விரும்பம் உள்ளதா? அப்படி எழுத ஆசைபட்டால் என்ன எழுதுவீர்கள்?
தொடர்ந்து விமர்சனக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளது. ஆனால் அதற்கான நேரம் இது கிடையாது. இப்போதைக்கு புனைவு எழுத்தாளனாக என்னை மேம்படுத்திக் கொள்வதிலேயே கவனம் எல்லாம்.

5. உங்கள் சிறுகதைகளுக்கு நீங்கள் யாரை முன்னோடியாக நினைக்கின்றீர்கள் ஏன்?

புதுமைப்பித்தன் மற்றும் அசோகமித்திரன். என்னுடைய குறைந்த வாசிப்பில் இதில் பஷீரையும் சேர்க்க முடியும். புதுமைப்பித்தனைப் பொறுத்தவரை அவர் எழுதிய வகைமைகள் மட்டுமல்லாது நேரடித் தன்மையும் கூர்மையான மொழியும் அங்கதமும் எவருக்கும் ஆதர்சமாக அமையும். அசோகமித்திரன் முற்றிலும் வேறுபட்டவர். அங்கதம் அமைதியுடன் வெளிப்படும் எழுத்து அசோகமித்திரனுடையது. எத்தனை தீவிரமான விஷயத்தையும் எளிய விஷயமாக எழுதிச் சென்றுவிடுவார்.

ஏன் பஷீரைக் குறிப்பிடுகிறேன் எனில்,  இவர்கள் இருவரின் இயல்புகளும் இடத்திற்கேற்ப செயல்பட்டு எதற்கும் பொறுப்பேற்காத ஒருவரின் மனநிலையும் சேர்ந்தால் அதுவே பஷீரின் இயல்பு என்று தோன்றுகிறது. இந்த மொத்த வாழ்கையின் பொருளின்மையை இருண்மையை சொல்லிக் கொண்டே செல்வது. அதே நேரம் அவ்வப்போது ஒளி இதுதான் என்று காட்டிவிடுவது. அந்த ஒளிக்காகவே பஷீரை எனக்குப் பிடித்திருக்கிறது.

இவர்கள் என்னை அதிகமாக பாதிக்கிறார்கள்.

6. எழுத்தைத் தவிர வேறு எந்த கலைவடிவில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்? உதாரணத்துக்கு ஓவியம்/புகைப்படம் அதில் ஏதேனும் முயன்று இருக்கின்றீர்களா? அதற்கும் எழுதுவதற்கு என்ன வித்தியாசம்? அது என்ன மாதிரியான அனுபவங்களை தருகிறது?

அவ்வப்போது பயணம் செய்கிறேன். எண்ணூறு ரூபாய் சீனக் கைபேசி ஒன்றை வைத்திருந்த காலம் முதல் இன்று வரை செல்கிற இடங்களையும் நிகழ்வுகளையும் புகைப்படங்கள் எடுக்கிறேன். அவற்றில் நல்ல புகைப்படங்களாக அமைந்துவிடுபவை நிறையவே உண்டு.

பெரும்பாலும் போகும் இடங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் ஒன்றிரண்டு புகைப்படங்கள் தவிர்த்து பொதுவெளியில் பகிர்வதில்லை. என்னிடம் புகைப்படங்களை அப்படியே சேமிப்பதற்கான வாய்ப்பு இல்லாதிருந்ததால் நல்ல கைபேசியில் எடுத்தாலுமே அளவில் குறைத்து மேகச் சேமிப்பக சேவைகளில் சேமித்திருக்கிறேன். கடந்த நான்கு வருடங்களில் மட்டும் நிராகரித்து அழித்தவை போக ஏறக்குறைய மூவாயிரம் புகைப்படங்கள் உண்டு.

எனக்கு தற்படம் எடுப்பதில் ஆர்வமில்லை. புகைப்படங்களுக்கு சிரிக்கவும் வராது. அதே என் நல்ல புகைப்படங்கள் இதுவரை சிலவே என்னிடம் உள்ளது. அவைகூட தேறாது என்று புத்தகத்தின் பின்னட்டைக்காக ஜீவ கரிகாலன் சில நாட்கள் தேடியும் காத்திருந்தும் இறுதியில் புகைப்படம் இல்லாமலேயே கொண்டு வந்தார். மற்றபடி, நாற்பதோ ஐம்பதோ ஆயிரங்கள் செலவு செய்து காமிரா வாங்கி எடுத்துக் கொண்டு அலைவதல் ஆர்வமில்லை.

7. பிறர் எழுத்தை வாசிப்பதற்கும் உங்கள் எழுத்தை நீங்கள் வாசிப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? இரண்டிலும் இயக்கும் மனநிலையில் அதிக சவாலானது எது?

எழுதுவது தொடர்பான எண்ணங்கள் இல்லாமல் என்னால்  எவரை வாசிக்க முடிகிறது என்று யோசிக்கிறேன். வெகு சிலரின் சில படைப்புகளை மட்டுமே அப்படி ஒரு தடங்கலுடன், அதிலிருக்கிற தவறுகளை உணர்ந்தபடி வாசிக்கிறேன். அதை நான் எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்று அப்போது மட்டுமே சிந்திக்கிறேன்.

அது தவிர, வாசிக்கையில் நான் ஒரு சராசரி வாசகன் மட்டுமே.

8. உங்கள் பயண அனுபவங்கள் எப்படிப்பட்டது? ஏதேனும் படைப்பின் உள்ளாக்கத்தின் தேவை பொருட்டு பயணித்தது உண்டா?

அப்படி பயணம் கோரும்படி இன்னும் எதுவும் எழுதவில்லை.

ஆனால், நிறைய இடங்களுக்கு பயணிக்க வேண்டும் என்று தீராத ஆர்வம். கடந்த மூன்று வருடங்களாக வருடம் ஒருமுறையாவது ஒருவாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு பயணிக்கிறேன்.

ஒரு வருடத்துக்கு முன்னர் ஹைதராபாத்தும், இந்த முறை கொல்கத்தாவும் சென்று ஒன்றரை இரண்டு மாதம் தங்கி வேலை செய்தபடியே வார இறுதியில் சுற்றிப் பார்த்தேன். அலுவலகத்தில் அதற்கான சுதந்திரம் தருகிறார்கள். இப்போது டெல்லி போயிருக்க வேண்டியது, கொரோனா காரணமாக எல்லா முன்பதிவுகளையும் ரத்து செய்துவிட்டு திரும்பியிருக்கிறேன்.

என் மனதை வெளியுலகம் நோக்கித் திருப்புவதும் புரிதல்களை உண்டாக்கிக் கொள்வதும் பயணம் மூலமாக மட்டுமே.

Vagabond என்கிற சொல் பயணிக்கிறவரை குறிப்பது. ஒன்றும் இல்லாமல் நீங்கள் எங்கும் பயணிக்கலாம். உண்பதும் உறங்குவதும் என உங்களின் தேவை எத்தனை சிறியது, அதை மட்டும் நிறைவேற்றிக் கொள்வது எங்கு போனாலும் சாத்தியம் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர்களின் கதைகள் என்னை ஏங்க வைத்திருக்கின்றன.

முழு vagabond ஆக இல்லாவிட்டாலும் நினைத்தபோது கிளம்பிப் போகிறவர்கள் இங்கும் இருக்கிறார்கள், என்ன நம்மால் முடியாது. எனக்கு ஒரு தினம் முன்னதாகவாவது அலுவலகத்தில் விடுமுறை சொல்ல வேண்டும், அந்த நேரம் கையிருப்பில் ஏதாவது இருக்கவும் வேண்டும். எனவே தனியாகச செல்வதே எனக்கு நல்லது, முடிந்தவரை பயணிக்கிறேன்.

9. உங்கள் முதல் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது அது சார்ந்த அனுபவத்தை பகிர முடியுமா?

வெகு நாளைய கனவு. இப்போது வந்ததற்கும் நான் மட்டுமே காரணம் அல்ல.

எழுதிய வரிசையிலேயே தொகுப்பில் கொடுத்திருக்கிறேன். எந்த வகையில் மாற்றத்துக்கு என் எழுத்து உட்பட்டு வந்திருக்கிறது என்பதற்கான பதிவாகவும் அது இருக்கட்டும் என்கிற எண்ணம்.

அதன் வடிவமைப்பிலிருந்து அச்சு வரை எனக்கு நிறைவளிக்கிறதா என்று பார்த்துப் பார்த்து ஜீவ கரிகாலன் வெளியிடிருக்கிறார்.

அடுத்து என்னை இன்னும் மேம்படுத்திக் கொள்வதற்காக உழன்று கொண்டிருக்கிறேன்.

10. இளம் வயது சுவாரஸிய அனுபவங்கள் பற்றிச் செல்லுங்கள்? அவை உங்கள் எழுத்தில் எங்கேனும் இடம் பிடித்திருக்கிறா?

அப்படி நிறைய இருக்கலாம். நினைவில் எப்போதும் வைத்திருப்பதில்லை.

வெகு சில நிகழ்வுகளை மட்டும் கதைகளில் பயன்படுத்தியிருக்கிறேன்.

11. உங்கள் படைப்பினை நீங்கள் எப்படி உருவாக்குகின்றீர்கள், ஒரே அமர்வில் அது முடியுமா, நீங்கள் அதை எப்படியெல்லாம் செழுமையாக்குகின்றீர்கள்?

சில கதைகள் ஏதாவது நிகழ்வோ செய்தியோ என்னை பாதிப்பதால், ஒரு கால இடைவெளிக்குப் பின்னர் எழுதப்பட்டவை. சில கதைகள் கனவில் வந்தவை. ஆனால், எழுதியது கனவில் வந்ததிலிருந்து முற்றிலும வெறொன்றாக இருப்பதும் உண்டு.

முன்னர் கையால் எழுதி பின்னர் தட்டச்சு செய்யும் போது மேம்படுத்திக் கொண்டிருந்தேன். அதை சிறிது காலத்துக்குப் பிறகு வாசித்து, இடறலாக ஏதாவது தோன்றினால் திருத்திப் பகிர்வது. இப்போது அதே முறையில் கணினியில் நேரடியாக எழுதுகிறேன்.

ஒரே அமர்வில் இதுவரை எழுதியதில்லை. குறைந்தது மூன்று நான்கு அமர்வுகள். உட்கார்ந்தால் குறைந்தது இருபத்தைந்து நிமிடம் தொடர்ந்து எழுத வேண்டும் என்று ஒலிப்பான் வைத்துக் கொள்வேன். அப்படி சில தினங்கள் தொடர்ந்து எழுதியே ஒரு கதையை முடிக்க முடியும். அப்படி நேரம் குறித்துக் கொள்ளாது அமர்ந்தால் பல காரணங்களால் பயமும் கவனச் சிதறலும் ஏற்படுகிறது.

ஒரு நாள் எழுதிவிட்டு மறுநாள் தொடரும்போது ஏற்கெனவே எழுதியவற்றை வாசித்து எழுதிய போது என்ன மனநிலையில் இருந்தேன் என்று யோசிப்பேன். அதன் பிறகு தொடர்ந்து சிந்தித்தபடியே நேரம் வைத்துக் கொண்டு ஒன்றிரண்டு வாக்கியங்கள் எழுதி அழிப்பேன். எப்படியோ ஒரு தொடர்ச்சி உருவாகிவிடும்.

12. இலக்கியத்தின் அடிப்படையாக இருப்பது எது?

நல்ல கேள்வி. ஆனால் பதில் சொல்லும் அளவு நான் முதிரவில்லை.

13. உங்கள் படைப்புகளுக்கு வரும் எதிர்வினை என்னவிதமான் உளவியல் சிக்கல்களை உங்களுக்கு ஏற்படுத்தும்?

எந்த முறையான விமர்சனத்தையும் ஆக்கப்பூர்வமான மனநிலையிலேயே எதிர்கொள்கிறேன்.

சிறு வயதிலிருந்தே எனக்கு என்ன தெரியாது என்பதையும், என் தகுதி என்ன என்பதையும் எனக்குள்ளாக வகுத்துக் கொள்வது என் வழக்கம். எனவே  எங்கும் எதற்கும் சமீப காலம் வரை சுருங்கிப் போனதில்லை. எனக்குப் பிடித்ததை செய்கிறேன். ஒவ்வொரு தினமும் சற்றேனும் என்னை மேம்படுத்திக் கொள்கிறேன். அதற்காக திறந்த மனதுடனேயே வாழ்கிறேன்.

அதே நேரம் தூக்கிப் பிடிக்கப் படுவதாலேயே எவரையும் கிழித்துத் தொங்கவிடமுடிகிற தன்னம்பிக்கை விமர்சகர்களின் அருட்கரங்களை அஞ்சாமை பேதைமை.

15. எழுத்தின் மூலம் வாசிப்பின் மூலம் எதை கண்டடைய விரும்புகின்றீர்கள்?

என்னை. என் நிறைவை.

15. எழுதவதற்கு மொழியின் மீதான கவனம் , ஆளுமை முக்கியமானதா? அதை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் என்னென்ன?

என் மூத்தவர்கள் சொன்னது – தொடக்க காலத்தில் எழுதிக் கடப்பதன் வழியே இன்னும் படைப்பூக்கம் கொள்ள முடியும் என்று. அதற்கு முயல்கிறேன். ஆனால் ஒன்று புரிகிறது, கட்டுரை எழுதுவது வேறு ஏதாவது – something to be presented – என்கிற வகையில் எழுதும் போது கொஞ்சமே எழுத முடிகிறது. இந்த பதிலை நான் தட்டச்சு செய்யும் நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக எடுத்துக் கொள்கிறேன்.

எனவே எழுத்துப் பயிற்சி என்று வரும்போது எதையாவது எழுதித் தள்ளியபடி இருக்கலாம். அதை பிறர் நலன் கருதியாவது என்னிடமே வைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது கதையாகவே கனிந்திருப்பதாக தோன்றினால், ஒருவேளை திருத்தம் செய்த பிறகு பிரசுரிக்கலாம். இப்படியே நான் உணர்கிறேன்.

இலக்கிய வாசிப்பு எழுத்து என்று இருக்கும்போது மொழியறிவுக்கு என்று நேரம் ஒதுக்குதல் சிரமம் என்றே உணர்கிறேன். எழுத்தாளனாக இருந்தாலும் தனித்தன்மைக்கு காரணமாக இருக்கக்கூடிய வேறு ஆர்வங்களும் ஒருவருக்கு இருக்கலாம். ஆனால் மொழியாளுமை அவசியமானதாக இருக்கிறது. குறிப்பாக, மரபாக நாம் மொழியை கற்றிருக்காத போது. அதற்கான அவதானிப்புகளை மட்டுமே இப்போது கொண்டிருக்கிறேன்.

16. சங்க இலக்கியம் பக்தி இலக்கியத்தின் மீதான உங்கள் ஆர்வம் எவ்விதமானது? அது உங்களை படைப்புகளை பாதித்திருக்கிறதா?

இந்த மொழியின் சொத்து என்கிற வகையில் அதை தூர இருந்து அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொள்கிறேன். சங்க இலக்கியத்தைக் காட்டிலும் பக்தி இலக்கியத்தை இன்னும் நெருங்கிப் போகிறேன். ஆனால் அவற்றில் ஊறித் திளைப்பவனில்லை. அத்தனை புலமை இல்லை. கொஞ்சமே கொஞ்சம் வாசிக்கிறவன்.

கவிதைகள் எழுதிய காலத்தில் சில காதல் கவிதைகளை பக்தி இலக்கிய தாக்கத்தில் எழுதியிருக்கிறேன். ஆனால், பிறகு கீதாஞ்சலி படித்ததும் நவீன பக்திக் கவிதைகளின் வயது நூறு என்று புரிந்தது. அதன் தென்னிந்திய வேர்களை அப்போதே என்னால் உணர முடியாவிட்டாலும் பின்னர் அந்த புரிதலை வந்தடைந்தேன்.

அப்படிப் பார்த்தால், என் மனநிலைக்கே இவற்றின் தாக்கம் ஏதோவொரு வகையில் காரணமாக இருக்கலாம்.

17. உங்களது படைப்பில் உங்களுக்கு மிகவும் கவர்ந்த படைப்பை பற்றி சொல்ல முடியுமா?

எழுதியவற்றை விடவும் எழுதி முழுமையடையாதவற்றிலேயே என்னைக் கவர்ந்த கருக்கள் நிறைய ஒளிந்திருக்கின்றன. அவற்றையும் அதனினும் சிறந்தவற்றையும் எழுத வேண்டும் என்கிற விழைவிலேயே இன்னும் எழுத முனைகிறேன்.

எழுதி வெளியானவற்றில் அட்டை, கூப்பன், சுவருக்கு அப்பால் எனக்கு மிகவும் நிறைவளித்தவை.

18. யாருடைய படைப்பை பார்த்தது அடடா இது நான் எழுதியிருக்க வேண்டிய கருவல்லவா என்று நினைத்துண்டா அல்லது யாருடைய படைப்பை பார்த்தாவது இந்த லைன் நான் எழுதியிருந்தால் எவ்வளவு சிறப்பாக எழுதியிருப்பேன் என்று நினைத்தது உண்டா?

இதுவரை இப்படி நினைத்ததில்லை.

19.உங்கள் படைப்புலகத்தின் ஆதார மனநிலை என்ன?

ஒவ்வொன்றிலும் எனக்கு ஏதேனும் கண்டடையவோ, வேறு விளக்கம் சொல்லவோ, கேள்வியோ இருக்கிறதா?

20. உங்கள் பெரும்பாலான கதைகளில் பால்யம் மாறாத சிறுவனோ (அ) இளைஞனோ பணியிடத்திலோ, பிற இடத்திலோ சதா பயந்தலைவது போல சித்தரிக்கப்பட்டிருப்பது ஏதேச்சையானதா ?

அப்படி பயப்படாதவர்களும் என் கதைகளில் உண்டு. ஏனோ, அப்படியானவர்களை அதிகம் எழுதியிருக்கிறேன். என்னுடைய இயல்பு காரணமாக இருக்கலாம். அல்லது, இப்படியானவர்களை இலக்கியத்தில் நான் அதிகம் வாசித்திருக்காதது காரணமாக இருக்கலாம்.

ஒரு கதாபாத்திரத்தின் எல்லா இயல்புகளையும் இலக்கியம் ஆராயப் புகுகிறது. குறிப்பாக, தீமைகளையும் அழுக்குகளையும். அதன் மூலமே எல்லாவற்றையும் ஆராய முடிகிறது. உண்மைக்கு நெருக்கமாக அது மட்டுமே நிற்குமா என்கிற கேள்வி எனக்கு உண்டு.

அவன் என்ன அவ்வளவு யோக்கியனா என்று ஒருவரின் நல்லியல்பை அனுபவப்படும்போது நம் மனதின் ஏதோ ஒரு ஓரம் நினைக்கிறது, குறிப்பாக நம் ஆணவம் சீண்டப்படும்போது. உடனே சுவர் மறைவில் அவன் என்ன செய்யக்கூடும் என்று ஊகிக்கிறோம். அவன் சிந்தனை எப்படி இருக்கும் என்று அதற்கு ஒரு வக்கிரத்தை கோணலை கற்பிக்கிறோம். அதுவே இயல்பாக நம்மை உணர வைக்கிறது.

அப்படி இல்லாதவன் ஒருவன் என்றால் நாம் நம்ப மறுக்கிறோம். அவன் கோணல்கள் இல்லாதவன் இல்லை, அதை மீறி வெறொன்றே அவன் இயல்பாக வெளிப்படுகிறது. அதை என்ன என்று புரிந்து கொள்ள முயல்கிறேன். அதை குழந்தைமை என்று சுருக்கலாம். அதன் நுண்ணிய வேறுபாடுகளை என்னால் எழுதமுடியுமா என்று பார்க்கிறேன்.

21. உங்களது ஒன்று மேற்பட்ட கதையில் ரயில் நிலையத்தில் கழிக்கும் இரவின் பதிவுகள் வருகின்றன. அது வீட்டு விட்டு வெளியேறி குடும்பத்தின் பொருட்டோ(என் வீடு) அல்லது வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் குடும்ப தலைவன் பொருட்டோ(பவித்ரா) இரவை கழிக்க உங்கள் கதாபாத்திரங்கள் ரயில் நிலையங்களை தேர்தெடுக்க ஏதேனும் பிரத்தியோக காரணம் உண்டா?

இந்த கேள்வியை மின்னஞ்சல் வந்ததும் படித்தபோது கயா ரயில் நிலையத்தின் காத்திருப்பு அறையில் இருந்தேன்.
சுவரோரம் திண்ணை போன்ற அமைப்பை தவிர, அது பெரிய அறை மட்டுமே. சுமார் நூறு குடும்பங்கள் சேலையோ போர்வையோ போர்த்தி உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு சில வசதியான குடும்பங்களும் உண்டு. ஒரு புத்த பிக்குக் குழு. அவர்களுடன் வந்த ஒருவர், சைக்கிளில் தூரம் பயணித்துப் போகிறவர் போலிருக்கிறது. கேரியரில் கட்டப்பட்ட மூட்டையுடன் சைக்கிளையும் கொண்டுவந்து ஒரு மூலையில் நிறுத்திவிட்டு அருகிலேயே கொசுவலை போர்த்திக் கொண்டு படுத்திருக்கிறார்.

இவர்களை என் சிறுவயதிலிருந்து நான் பார்க்கிறேன். அவர்களில் ஒருவனாக காதாபாத்திரம் அமையும் போது என்னால் என்ன செய்ய முடியும்? பவித்ரா கதையில் வரும் கணவன் அந்த இரவு உறங்க முடியும் என்று நினைக்கிறீர்களா? விடியும்வரை எங்காவது சென்று அமர வேண்டும். அப்போது ரயில் நிலையத்திலிருந்து வந்தவர் அங்கேயே திரும்பிப் போகிறார்.  மேலும் அவர் அதிகம் பயணிக்கிறவர்.

22. கூப்பன் சிறுகதையில் கதையில் கார்த்தியும், ரகுவும் மிக இயல்பான சிறுவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு சிறு வயதிலேயே வீட்டுக்கு சம்பாதித்து தர வேண்டிய கட்டாயமிருக்கின்றன. அது அவர்களுக்கு வேறு விதமான ஆவேசத்தையோ, திமிரையோ, சலிப்பையோ அல்லது எந்த விதமான எதிர்மறை உணர்வுகளையுமோ தருவதில்லையா அந்த உணர்வுகளை நீங்கள் ஏன் பதிவு செய்யவில்லை.

எனக்கு தெரிந்த ஒருவர் எட்டாம் வகுப்போடு வேலைக்குப் போகத் தொடங்கினார். அவர் நின்றதால், அவருடைய நண்பரும் பள்ளிக்கு போக விரும்பவில்லை. அவர்களைப் பார்த்து இன்னும் சிலர் நின்றார்கள். வேலைக்குச் சேர்ந்தார்கள். மேலும் சிலரின் பெற்றோர் அவர்களைக் காட்டி ‘பார் எப்படி குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குப் போகிறார்கள், பார்’ என்றார்கள்.  இங்கே பள்ளிக்குப் போவது இயல்பானதா இல்லை வேலைக்குப் போவதா? அந்த வட்டாரத்தில் எது இயல்போ, பெரும்பான்மையோ அதை நாம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அது அந்த சூழலில் கொண்டாட்டமாக ஆகிவிடுகிறது.

அப்படி இல்லாதவர்களும் இருப்பார்கள். ஏன் கார்த்தியும் ரகுவுமே முற்றிலும் எதிரெதிரானவர்கள். உதாரணமாக அப்படி ஆவேசம், திமிர், சலிப்பு சற்றேனும் அதே கதையில் வெளிப்படுகிறது. அதை விவரித்துச் சென்றுவிடுகிறேன், வளர்க்கவில்லை அவ்வளவே.

23. சுவருக்கு அப்பால் சிறுகதை நீங்கள் எழுதிய கதைகளில் மிக அடர்த்தியான கதை. இந்த கதைக்கான களம் எப்படி உருவானது. அதில் மிருதங்கம் வாசிக்கும் நுட்பங்களை பற்றிய குறிப்புகளை அனுபவித்து எழுதியிருப்பீகள் உங்கள் இசையின் மீதான ஆர்வம் சார்ந்து கொஞ்சம் சொல்லுங்கள்.

குருகுலக் கல்வி என்ற பெயரில் எப்படி குழந்தைகள் வதைக்கப் படுகிறார்கள் என்று செய்திகளில் வாசித்ததே அக்கதைக்கான ஊக்கம். எனக்கும் அப்படியான கல்வி மேல் ஆர்வம் இருந்தது. ஒரு நல்ல ஆசிரியரின் குருவின் மாணவனாக இருந்து கற்க வேண்டும் என்பது இப்போது வரைக்கும் இருக்கும் என் கனவு. ஆனால், அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.

அது தொடர்பான என் புரிதலையே அந்தக் கதையை எழுதி அடைந்தேன்.

எனக்கு மிருதங்கம் கற்றுக் கொள்ள சிறு வயதிலிருந்தே ஆசை. ஆனால் சுற்றுவட்டாரத்தில் எங்கும் அதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. இசையறிவு ஒன்றும் கிடையாது. அவ்வப்போது செவ்வியல் இசையும் பிற பொழுதெல்லாம் வேறு எந்த நல்ல இசைத் தொகுப்பையும் கேட்பேன், அவ்வளவே. இளையராஜாவை எல்லாவற்றுக்கும் மேலாக ரசிப்பவன், குறிப்பாக அவரது ஆல்பங்கள்.

24. சுவருக்கு அப்பால் சிறுகதையில் கதைசொல்லியும் மற்றொரு கதாபாத்திரம் கிருஷ்ணதாஸ் இருவருமே தனது வயதுக்கும் அனுபவத்துக்கும் பொருத்தமில்லாத நபர்களுடனேயே நட்புடன் இருப்பது போல ஒரு பதிவு இருக்கிறது உதாரணத்துக்கு கிட்டத்தட்ட பதின்வயதை கடந்த கதைசொல்லிக்கும், கிருஷ்ணதாஸ், பிரபு, ஹரி இவர்களுடன் உருவாகும் உலகம் விஷயம் விசித்திரமான, இதன் பின்னால் இயங்கும் உளவியல் என்னவென்று நினைத்து நீங்கள் இப்படியொரு அமைத்தீர்கள்?

அதில் கதைசொல்லி தேடலும் கேள்விகளும் கொண்ட ஒருவன். அவனுக்கு குழந்தைகளோடு இருப்பதில் ஏதோ நிறைவு கிடைக்கிறது. வேறு எவருடனும் ஒட்ட முடியவில்லை என்று நினைக்கிறேன். கிருஷ்ணதாஸ் தானே ஒரு குழந்தை போன்றவர், சிந்திக்கும் திறனற்றவர் என்பதாக கீழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பவர். அவரிடம் நெருங்கிப் போவது ஒரு சிறுவனே தவிர, அவர் கிடையாது. அவரை தவிர்ப்பவர்களிலும் சிறுவர்கள் உண்டு. இதையெல்லாம் ஏன் எதற்கு என, கதைசொல்லி கவனிக்கிறான்.

இவர்களின் நட்பு, நிகழ்வுகள் மற்றும் ஏற்படும் புரிதல்களால் கதைசொல்லி என்ன கண்டடைகிறான் என்பதே கதை.

25. நோக்கு கதையில் எதற்காக இத்தனை கதாபாத்திரங்கள். கதையின் கரு வலுவானது ஆனால் சொல்முறையை நீங்கள் ஏன் இவ்வளவு சிக்கலாக்கினீர்கள்? உங்களுடைய பெரும்பாலான கதையின் வாசகர் அதிகம் கவனம் செலுத்தி வாசிக்கும்படி அமைத்திருப்பது ஒரு உத்தியா?

தொடக்க காலக் கதை அது. அந்தக் கதைக்குள் சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்ல முயன்றதால் அப்படி இருக்கலாம்.

என்னுடைய எழுத்து ஏன் அப்படி கவனமான வாசிப்பு கோருகிறது என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. பொழுது போக்காகவும் கவனக்குறைவாகவும் வாசிப்பதற்கு முடியாது என்பதே என்னுடைய புரிதல். வேண்டுமென்றோ மொழியைச் சிக்கலாக்கவோ, திருகவோ நான் செய்வதில்லை. அதே போல பெரிய குறைபாடுகள் என் மொழிப் பயன்பாட்டில் இல்லை என்று நம்புகிறேன், அறியாது இருப்பவற்றையும் மேம்படுத்திக் கொள்ள பார்த்தபடியே இருக்கிறேன்.

மேலும் பெரும்பாலான இலக்கியப் படைப்புகள் கவனம் செலுத்தி வாசிக்க வேண்டியவை அல்லவா?

26. அட்டை என்ற கதையின் மையம் அடையாள அட்டை ஒரு அந்தஸ்து என்பது போன்ற உளவியலா, அது மட்டுமில்லை என்ற பதிவுகளும் இருக்கின்றன. இந்த கதை சார்ந்த அதன் உள்ளடக்குகளை பேச முடியுமா?

அந்த வாழ்கையில் ஒரு தருணத்தை அந்தக் கதையில் சொல்லியிருக்கிறேன். மையப் பாத்திரத்தின் ஏங்கங்களையும் நினைவுகளையும். அது தவிர பிற வாசகனுக்கான தனிப்பட்ட அனுபவமாகவே இருக்கட்டும்.

27. கோதை மங்கலம் கதை சொல்லி தற்கால உடல் அடையாளம், பள்ளி பருவத்து விபரங்கள் இரண்டிலுமே கதைசொல்லி தான் மிக சாதாரணமானவன் தன்னை யாருக்கும் பிடிக்க வாய்ப்பில்லை என்றொரு உளவியல் இயங்கிக் கொண்டிருக்க என்ன காரணம்?

அவன் அப்படியானவன் என்பதைத் தவிர வேறு காரணம் ஒன்றுமில்லை.

28. உங்கள் கதைகளில் கதைமாந்தர்கள் கிளைகதை சொல்பவர்களாக அமைகின்றார்கள். உதாரணத்துக்கு சகடம் கதையில் வரும் சிறுவன் தனது யோகா பயிற்சிகள் சார்ந்த விபரணைகள், எரியில் வரும் சிறுவன் வண்டி வேடிக்கையின் வரும் கடவுளர் சார்ந்த வர்ணனைகள். இவை கதைக்குள் உள்ளடுக்குகளை ஏற்படுத்த உத்தி போல நீங்கள் பயன்படுத்தியிருகின்றீர்களா?

அது கதையின் ஒரு பகுதி, தேவை என்ற புரிதலால் தனக்கான இடம் கொண்டிருக்கிறது.

29. பவித்ரா  கதையில் பெண் குழந்தைக்கு தனது தாயிடம் உண்டாகும் மனசிக்கலை பேசியிருக்கின்றீர்கள். அதை தொடராமல் அதனை உறவு சிக்கலாக மாற்றியமைத்தற்கு காரணமெதுவும் உண்டா?

அப்படியான ஒரு சம்பவம் உடனே ஆழ்மனதில் சிக்கலாக மாறாது. அது ஒரு தொடக்கம். எனவே இருவருக்கும் பொதுவான ஒரு அதிர்ச்சியாக, என்ன செய்வது என்று சிந்திக்க வைப்பதாக அது இருக்கிறது. இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. காலப்போக்கிலேயே அது சிக்கலான ஒன்றாக மாறும். அந்த தருணத்தையே கதை விவரிக்கிறது.

விழிப்புறக்கம் – பானுமதி சிறுகதை

லிபரலைசேஷன், குளோபலைசேஷன், பிரை வடை சேஷன் என்ற சேஷன் கள் ஆதிக்கம் புரிந்து கொண்டிருந்த 92 இல் நம் கதாநாயகன் பாலசங்கரனுக்கு 24 வயது. அன்று எழுந்திருக்கும் போதே மனது பரபரவென்று இருந்தது பாலசங்கரனுக்கு. பின்புற வேப்ப மரத்திலிருந்து குயில் ஒன்று விட்டுவிட்டு கூவிக்கொண்டிருந்த மலர்ந்தும் மலராத பொழுது. அபூர்வமான செண்பக மலரின் வாசம் எங்கிருந்தோ வீசிக் கொண்டிருந்தது. தரையில் வெள்ளை வேட்டியை விரித்து பவழ மல்லி மலரை வழக்கம் போல பங்கஜம் மாமி சேகரித்துக் கொண்டிருந்தார். இளங்காலையின் அமைதியில் அவர் பாடிக் கொண்டிருக்கும் ‘கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா’ என்ற பாடல், தென்றலின் வருடல் போல செவிகளில் எட்டி உட்புகுந்தது. மொட்டை மாடியில் நின்று பார்த்த பாலசங்கரனுக்கு நீலத் தண்டிலிருந்து இள மஞ்சள் பூவெனக் கிளம்பும் சூரியன் சொல்ல முடியாத சந்தோஷத்தை அளித்தான். இன்னமும் பிடிவாதமாக வானில் தென்பட்ட நிலா அவனை புன்னகைக்க வைத்தது. எதிர் வரிசையில் நின்ற சிறு மரக் கூட்டங்களிலிருந்து பறவைகள் உற்சாகமாகத் தங்கள் சிறகுகளை விரித்துப் பறந்து நான்கு புறத்திலும் பார்த்தன. அடக்கமாக ஆரம்பித்து ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டே ஜிவ்வென்று பறந்து செல்லமணி நாடார் கடையின் முன் சிதறியிருந்த தானியங்களைக் கொரித்தன. காக்கைகள் அரிசி மணிகளைக் கொத்தினால், குருவிகள் பயிறு வகைகளைக் கை பார்த்தன. தென்னை மரத்திலிருந்து வெகு வேகமாக இறங்கி வந்த அணில் குஞ்சு பாதியாய்க்கிடந்த கொய்யாவை முன்னங் கால்களால் பற்றி பற்களைப் பதித்து ருசி பார்த்தது. அதன் ஒய்யார வாலைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது. கறவை மாடுகள், கன்றுகளின் வாசமாவது வருகிறதா எனப் பார்த்துக் கொண்டே மடி கனக்க, மணி ஒலிக்க நடந்து கொண்டிருந்தன. கோயில் யானை குளிக்கப் போகிறது போலிருக்கிறது. அதன் நடையின் விரைவும், உலகையே வென்றவனைப் போல் அதன் மீதிருந்த பாகனும் ‘உலகம் இன்பமயம்’ என்று சொல்லின.

“காலங்காத்தால மேக்கையும் கெழக்கையும் பாத்துண்டு நின்னா எப்படி வேலயாகும்? ஒரு கீத்துக் காய்கூட இல்ல; போய் வாங்கிண்டு வாங்கோ சீக்ரமா, அப்றம் ஆஃபீசுக்கு நேரமாச்சுன்னு பறப்பேள்; என்னது, இப்ப வந்திருக்காதா? தட்டி கழிச்சுடுங்கோ எல்லாத்தையும்; என்னது, காஃபி குடிச்சுட்டுப் போறேளா, டிக்காஷன் இன்னும் இறங்கல, லொட்டு லொட்டுன்னு தட்டித்தட்டி கைதான் சுட்றது; காய் வெளைஞ்சான் சந்தேலேந்து மணி மணியா இப்ப வந்திருக்கும்; போய்டு வாங்கோ. நல்ல ஸ்டராங்க் காஃபி போட்டுத் தரேன் நீங்க வந்தோன்ன.”

இப்போதைக்கு காஃபி கிடைக்காது என்றான பிறகு அவனுக்கும் வேற வழியில்லை. நடேசய்யர் கடையில் ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் காஃபி கிடைக்கும் என்று சுப்புணி சொல்லியிருந்தாலும் பால சங்கரனுக்கு வெளியில் எதையும் சாப்பிடும் பழக்கமில்லை. அவன் வயிறு அப்படிப்பட்டது, தாகத்திற்குத் தண்ணீர் கூட வெளியில் குடிக்க முடியாது அவனால். வீட்டில் அவன் மனைவியையும் சேர்த்து ஐந்து பேர் இருக்கிறார்கள். அவன் மாமனார், மாமியார், அவனுடைய சின்ன மாமனார், சின்ன மாமியார். அவனுக்கு அவர்கள் தான் சீதனம். சும்மா, சொல்லக்கூடாது, அத்தனைக் கிழத்திற்கும் பயங்கர சொத்தும் அதிலிருந்து வருமானமும் வருகிறது. இவனது மனைவி அவர்கள் குடும்பங்களின் ஒரே வாரிசு. பெண் பார்க்கப் போகும் போதே அவன் மாமனார் சொல்லிவிட்டார்-‘என் தம்பிக்குக் கொழந்தேளில்லை. எனக்கும் லல்லி ஒரே பொண்ணு; அதுவும் காலம் தப்பிப் பொறந்தவ. இப்ப எம் பொண்டாட்டிக்கு கொஞ்சமாத்தான் வேல செய்ய முடியும்; எங்க தம்பி ஆம்படையா எல்லாரையும் பாத்துப்போ, எல்லாமும் செய்வோ; கூடி வாழ்ந்தா கோடி நன்ம, என்ன சொல்றேள்? எல்லாரும் உங்களோட தான் வந்திருக்கணும்; எங்களால இனி குடும்பத்தையெல்லாம் தனியா நடத்த முடியாது. சொத்து சுகமெல்லாம் உங்களுக்குத்தான், மாப்ள..’

அவன் அப்பா ‘பொண்ணத் தானடா பாத்துருக்கோம். நிச்சயமா பண்ணிட்டோம்? இது நடமுற இல்லடா; வேணாம்னு சொல்லிடு.’ என்றார். அவன் சொல்லவில்லை, அவள் அழகு அப்படி, அவளுடன் வரும் பணம் அப்படி. குடும்பக் கவலைகள் அற்று அக்கடாவென்று இருக்கலாம் என நினைத்தான்.

நடைபாதைக் கடைகள் திறந்தாகிவிட்டன. பச்சைப்சேலென்று கீரையும், மினுமினுவென்று வயலட் கத்திரியும், பிஞ்சு வெண்டையும், முற்றாத அவரையும், கொத்தவரங்காயும், நீள் புடலையும், கைகளை விட நீளமான முருங்கையும், தளதளத் தக்காளியும், பச்சைத் தாள்களுடன் முள்ளங்கியும், அசுர வளர்ச்சியில்லாத பச்சை மிளகாயும், பசும் குறு மிளகுக் கொத்தும், வாடாத கொத்தமல்லியும் கூவிக் கூவி அழைத்தன. மஞ்சள், சந்தனம், குங்குமம், கோல மாவு, தாமரை, ரோஜா, மல்லி, கதம்பம் என்று ஒவ்வொன்றின் முன்பும் சில பேர் நின்றிருந்தனர். கோயிலில் ஓதுவார் இந்தத் திருக்காட்சியைக் காணாமல் போகலாமா நீ என்ற சம்பந்தர் பதிகத்தை மனமுருகிப் பாடிக்கொண்டிருப்பது அந்தக் கம்பீரக் கோயிலின் ஞான விளக்காகப் பிரகாசித்தது. இசையும், இறையும், தமிழும் என்னவொரு ஒத்திசைவு என்று மனம் அந்தப் பதிகத்தைத் தானும் வாங்கிப் பாடியது.

‘மட்டிட்ட புன்னையம் கானல் மட மயிலைக்

கட்டிடட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு

அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்’

காய்களை வாங்கிக் கொண்டான்- இதில் எந்தக் கிழம் (!) கயாவில் எந்தக் காயை விட்டுவிட்டது என்பதை நினைவில் கொள்வது அவனுக்கு லத்தீனை விடக் கடினம். அவன் சாப்பாட்டில் வெண்டை, முருங்கை,(சில நாட்களில் மட்டும்) கேரட் நிச்சயம் உண்டு; என்ன ஒன்று, அவை மட்டும்தான் உண்டு. வாங்கிக் கொண்டு திரும்பும் போது தள்ளு வண்டியில் அதைப் பார்த்தான். இளம் பெண்கள் அணியும் மெல்லிய ரோஸ் வண்ண தாவணி நிறம், அதைப் போலவே ஒளிபுகும் எழில், தலைப் பகுதியில் சீரான சிறு வெண் முழி சிலவற்றில், ஒட்டிப் பிறந்த பெண்கள் போல ஒரே அளவில், குவியலில், அவைகளின் உடன் பிறந்த செவ்வொளியில் சாய்வாகக் கதிர் பட்டு மின்னும் அழகோ சொல்லி மாளாது. ‘என்னையும் வாங்கேன்’ என்று அவை கெஞ்சின, கொஞ்சின; வாங்கி விட்டான் துணிந்து. அவளை எப்படியாவது சமாதானம் செய்து இன்று அரைத்துவிட்ட வெங்காய சாம்பார் செய்யச் சொல்ல வேண்டும். நினைக்கையிலேயே நாவில் நீர் ஊறியது. சுப்புணி செய்யும் கேலி நினைவில் வந்து ரோஷம் வந்தது. ‘அப்பா, சங்கரா, உனக்கு ஜன்மத்ல இல்லாத பலதுல வெங்காய சாம்பாரும் ஒண்ணு. மொறு மொறுன்னு ரவா தோசைல பொடிப் பொடியா ஆனியன் தூவி ராயர் மெஸ்ஸுல கொடுப்பா பாரு, அதெல்லாம் நள பாகம்ன்னா; பாவம்டா நீ, வெளில சாப்ட மாட்டேங்க்ற.’

உண்மைதான் என்று நினைத்தான் அவன். திரும்புகையில் வெயில் சற்று ஏறிவிட்டது. குரல்களென ஒலித்தவை கூட்டுக் கத்தலெனக் கேட்டது. குளித்து வந்த யானை அது அத்தனை விரைவில் முடிந்ததை எண்ணி தளர் நடையில் வந்தது. உலா முடிந்த ஏக்கத்தில் மாடுகள், வயிறு நிறையாத சோர்வில் கன்றுகள், அணில் பிள்ளையைக் காணோம், உரத்த குரலில் பங்கஜம் மாமியின் கணவர் குளிப்பதற்கு வென்னீர் கேட்டு கத்திக் கொண்டிருந்தார். செல்லமுத்து நாடார் கடையில் விளக்குமாறைப் பார்த்தவுடன் அத்தனைப் பட்சிகளும் பறந்து போயிருந்தன. அவனை சோர்வு அப்பிக் கொண்டது.

“இப்ப யாராவது வெங்காயம் வாங்குவாளா? மாளய பக்ஷம் இல்லையா? அப்புறம் சுந்தர காண்ட பாராயணம், நவராத்திரில நம்மாத்ல உண்டே? கலசம் வேற வைச்சுன்னா தேவி பூஜை? காசக் கரியாக்கறேள்.”

‘நீ முதல்ல காஃபி கொடு, அப்றமா எனக்கு அர்ச்சன செய்யலாம்; வெங்காய சாம்பார் சாப்ட என் வீட்ல எனக்கு உரிமையில்ல, நீங்க சாப்பிடாட்டி என்ன, எனக்கு மட்டுமாவது பண்ணேன்.”

அவள் பதிலே சொல்லவில்லை. அன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியவுடன் வெங்காயக்கூடை காலியாக இருப்பதைப் பார்த்தான். கோபம் தலைக்கேறியது. ஒரு மாதத்திற்குத் தேவையில்லையென்பதால் அது மொத்தமாக வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் போய்விட்டது என்று அவள் சொன்ன போது அவனுக்கு அவமானமாகக் கூட இருந்தது. அவன் அன்று மதியம் தான் சுப்புணியிடம் கேட்டு அரைத்துவிட்ட சாம்பார், வெங்காய வத்தக்கொழம்பு, வெங்காய கொத்ஸு, வெங்காய பக்கோடா போன்றவற்றின் சமையல் குறிப்புகளை சிரத்தையாக எழுதி வந்திருந்தான். அவள் அருகில் சென்றான்- “நா ஒரு நா செத்துப் போவேன். அப்போ, சாஸ்திரிகளுக்கு வெங்காய தானம் மட்டும் பண்ணிடு; இல்லேன்னா, பேயா உன்னப் புடிச்சுடுவேன்.” அவன் கோபம் அவ்வளவுதான் .காதுகளைப் பொத்திக்கொண்டு ‘ராம, ராம, சாயறக்ஷல பேசற பேச்சைப் பார்.’ என்றாள்.

இதுகளெல்லாம் என்ன ஜென்மம் என்று ஆற்றாமையாக வந்தது அவனுக்கு. பசிக்கு மட்டுமே சாப்பிடும் ஜந்துக்கள், ருசி தெரியுமா இதுகளுக்கு. தன் இள வயதில் இறந்து போன அம்மா நினைவில், அவனுக்கு கண்களில் தன்னிரக்கத்தால் நீர் வந்தது. ஏழு வயதில் ஒன்றும் சாப்பிடாமல் அடம் பிடித்ததும், அம்மா அவன் கேட்டான் என்பதற்காகவே கையளவு உளுந்தை அம்மியில் அரைத்து வடை தட்டித் தந்ததும் இரவு முழுதும் அவனை அரற்ற வைத்தன.

அவனுக்கு ஐம்பது வயது (சரி, 52)ஆகிவிட்டது இப்போது. இரட்டையராகப் பிறந்த பெண் குழந்தைகள்; அவர்கள் தாத்தா, பாட்டிகளின் வளர்ப்பு, வார்ப்பு. அவன் வைப்புத் தொகை இழந்த வேட்பாளன். பதினெட்டு வயதில் மாமனார் அன்ட் கோ அவர்களுக்குக் கல்யாணமும் செய்து வைத்து விட்டார்கள்- ‘மாலையும் கழுத்துமா அவாளப் பாக்க வேண்டாமோ?’ என்ற டயலாக் வேறு. இந்த வாழ்வில் எல்லாம் அவனுக்குக் கிடைத்திருப்பதாக ஊரும், உறவும் சொல்லும் போதெல்லாம் அவன் உள்ளூரக் குமைவான். கேவலம் ஒரு வெங்காய சாம்பார் அவனுக்குக் கிடைக்கவில்லை, வயிற்றுக் கோளாறைச் சரி செய்யவும் முடியவில்லை, அதனால் துணிந்து வெளியிலும் சாப்பிட முடியவில்லை; என்னத்தைக் கொடுத்து வைத்திருக்கிறோம் எனத் தனியே நொந்து கொள்வான்.

அன்று வேலை பார்க்கும் இடத்தில் சிறு வாக்குவாதம். அவன் மூடே மாறிவிட்டது. ஏற்றாற் போல் ஸ்கூட்டரும் எத்தனை உதைத்தும் கிளம்பவில்லை. அவனது மெக்கானிக் ‘நாளைக்குத்தான்’ என்று சொல்லிவிட்டார். பேருந்தில் வழிந்த கூட்டத்தைப் பார்த்த அவனுக்கு அதில் ஏறும் துணிச்சல் வரவில்லை. நடந்து போகத் தீர்மானித்தான். தனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?வீடு, அலுவலகம்,கட்டிய மனைவி, பெற்ற குழந்தைகள், மனம் சரியாக இல்லாத நாள் பார்த்து மக்கர் செய்யும் ஸ்கூட்டர், பன்னிரண்டு வருஷப் பழக்கத்தைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக பதிலளித்த மெக்கானிக்,அனுசரணை யா, கேலி யா எனப் புரியாத விதத்தில் பேசும் சுப்புணி. என்ன வாழ்க்கை உன் வாழ்க்கை என்று தன்னையே அவன் நொந்து கொண்டான்.

எப்போதாவது அவனுக்கு வரும் கோபம் போல வானம் திடீரென்று இருண்டது. சட சடவென்று பெரும் துளிகள் மேனியை அறைந்தன. மனிதர்கள் ஓடி கடை வாயில்களிலும், வீட்டுச் சார்புகளிலும் நின்று கொண்டனர். அவன் ஓடிச் சென்று நின்ற இடத்தில் ஒருவர் மேடையில் அமர்ந்து உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். நாற்காலிகள் காலியாக இருக்கவே அவன் சென்று அமர்ந்து கொண்டான்.

“வாசன இருக்கே, அது தான் நல்லதுக்கும், கெட்டதுக்கும் காரணம். நல்ல வாசன இருக்கே அது புண்யம் தரும், ஆனா, பொறப்லேந்து விடுதலயில்ல;கெட்ட வாசன, அதுவும் பொறப்லேந்து வெட்டி விட்றாது, ஈனமா நடக்க வச்சுடும். இன்னிக்கு மாரியே அன்னைக்கும் பேய் மழ. ஊழி முதல்வன் உருவம் போல மெய் கருத்து வானத்தையும், பூமியையும் மஹா சரடால அவன் நெய்யறான். இப்பத்த மாரி அப்ப வசதி கடையாது பாருங்கோ, ஊரே இருளோன்னு கிடக்கு. தக்ஷ நாகம் மாரி மின்னல் நெளிஞ்சு ஆட்றது. பீமனும், துரியோதனனும் கதையால அடிச்சுக்கற மாரி இடியான இடி. காளி ஊழிக்கூத்து ஆட்றா. அப்பப் பாருங்கோ, மச்சுல படுத்துண்டு இதையே பயமா, ஆர்வமா பாத்துண்டு ஒரு பொண்ணு. ரத்னாவளி, ரத்னாவளின்னு பேரு. அசட்டுத்தனமா அவர் ஏதும் பண்ணாதிருக்கணுமேன்னு அவ நெனைச்ச அடுத்த நொடி தடார்ன்னு ஒரு சத்தம். மாடி வரண்டாவுல ஒத்தன் குதிச்சுட்டான்; தக்ஷ மின்னல்ல தன் ஆத்துக்காரர்ன்னு அவளுக்குத் தெரிஞ்சுடுத்து. அது மட்டுமல்ல, அவர் இந்தக் கொட்ற மழல யமுனா ஆத்து வெள்ளத்ல நீந்தி தோட்ட மரத்ல தொங்கற ஏதோ ஒன்னப் புடிச்சுண்டு இப்படிக் குதிச்சிருக்கார்ன்னு தெரியறது.

மரத்ல ஏது கயிறுன்னு யோசிக்கறப்பவே ஜகஜ்ஜோதியா மின்னல் .ஒரு தடிமனான பாம்பு தொங்கிண்டிருந்தத பாத்தா ரத்னாவளி. ‘எங்கிட்ட இருக்ற மோகத்ல நூத்ல ஒரு பங்கு ராமர் கிட்ட இருந்தாத் தேறுவேளேன்னு அழுதா. சொன்னா,

“காம எஷ க்ரோத எஷ ரஜோகுண சமுத்பவ:

மஹாக்ஷணோ மஹா பாப்மா வித்யேனமிக வைரினம்.”

“ராம் போலா, கரும்புகை தீயைச் சூழும்; தூசியோ கண்ணாடிய மூடும். வாசனை மனுஷ மனசக் கெடுக்கும்”

அதுதான் அவருக்கான மந்த்ர உபதேசம். அவ கால்ல அப்படியே விழுந்தார். அப்றம் சன்யாசியாகி ‘ராம் சரித மானஸ்’ என்ற மஹா நூல எழுதின துளசிதாசரானார்.’

பால சங்கரனுக்கு ஒரு அதிர்வு ஏற்பட்டது. அரங்கில் ஆட்கள் கலைய ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு விளக்காய் காவலாளி அணைத்துவர இவனுக்கு ஒவ்வொரு தீபமாய் ஒளி விட்டது. அருகில் வந்த அவர் ‘கிளம்பும் நேரம், சார்’ என்றார். வெளியில் வானம் கொட்டி முடித்து வைரங்கள் சிதறிக் கிடக்க பெரும் நெசவெனக் காட்சிப்பட்டது. இருளும், ஒளியுமாக கோயில் கோபுரம் உயர்ந்து நின்றிருந்தது.’ஓம்’ என்பது ‘ஆம்’ எனக் கேட்டது.அதே நேரம் தெருவோரக் கடைகளில் மழைக்கு இதமாக எண்ணெயில் பொரித்த மசால் வடை யும் பக்கோடாவும் அவன் நாசியை துளைத்தது.