இவான் கார்த்திக்
ஏழு கழுதைகளின் வயதை அம்மா அடிக்கடி ஞாபகப்படுத்தினாலும் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்து கொள்ள மனம் ஒப்பவில்லை. காரணங்கள் பல இருந்தாலும் அதனை நான் அம்மாவிடம் சொல்லியதில்லை. இருக்கட்டும் இருக்கட்டும் என்று அம்மாவும் சொல்லி சொல்லி பிறகு மறந்து போனாள். நடக்காமல் இருந்தது என்னமோ நல்ல விசயம் என்றே இன்று வரை படுகிறது. அப்படி யோசிக்கும்போது என்னை மற்றவர் கல்யாணத்திற்கு அழைப்பது அநியாயம் என்பதை என் அம்மா கொஞ்சமாவது புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
முன்பு நடந்த நினைவுகள் கண் முன் திரை கட்டி ஆடுகின்றன. இரவு முடிய இன்னும் நேரம் குறைவாகவே உள்ளது. காரணம் கண்டுபிடித்து எல்லாவற்றையும் தவிர்த்து விட வேண்டும். என் உடம்புக்கு எதுவும் வராதென்று அம்மாவுக்கு தெரியும். காரணம் வேண்டும். சித்திமார்களும் அத்தைமார்களும் வரிசை கட்டி வந்து விசாரிப்பார்கள் பதில் சொல்வது பேரும்பாடு இதில் நான் திரும்ப கேள்விகள் வேறு கேட்க வேண்டும். பேப்பரில் எழுதி வைத்து மனப்பாடம் செய்தும் கைவராத கலை. ஆண்கள் கைகொடுத்து சிரிக்கும்போது ஏன் என் முகம் இறுகி கண்கள் திறந்து முறைப்பதைப்போல மாறிவிடுகிறது. அப்பா இருந்திருந்தால் அவரை கோர்த்து விட்டிருக்கலாம். அவர் செத்துப்போய் மாதா மாதம் நம்மை கொல்கிறார்.
தினமும் ஒர் அழைப்பாவது என் வீட்டிற்கு வந்து கழுத்தை பிடிக்கிறது. இதில் பண்டிகை ஆப்பர் போல சில நாட்கள் இரண்டும் அழைப்புகள். இன்னும் உச்சம் ஒரே நேரத்தில் இரு அழைப்புகள் வந்து மொய் எழுத வற்புறுத்தி “கண்டிப்பாக வந்துரணும்” என்பதை அழுத்தி சொல்லி பிரச்சனையை கிளப்பிவிட்டு செல்கின்றனர்.
முன்பெல்லாம் அம்மா அப்பா சேர்ந்து சென்றனர். அப்பா பரலோகம் போய் சேர்ந்த பின் என்னை தனியாக அனுப்புகிறாள். தனியாக மண்டபத்திற்கு சென்று அங்கிருக்கும் ஏதோவொரு பிளாஸ்டிக் சேரை கண்டுபிடித்து முற்றிலும் தெரியாத முகம் இரு பக்கமும் அமர நடுவில் இடம் பார்த்து அமர்வதற்குள் உடல் வியர்த்து கொதித்துவிடும். ஒரே நிம்மதி சுவற்றில் மாட்டி வைத்திருக்கும் சுழலும் மின்விசிறி மட்டுமே. வியர்வையை குளிர்வாக்கி கொஞ்சம் நிதானமடையச் செய்யும்.
நிற்பதை நடப்பதை ஓடுவதை தின்பதை தூக்கி எறிவதையெல்லாம் துரத்திப் பிடிக்க முயலும் புகைப்படக்கார்கள் கண்கள் என்மேல் விழாமல் இடுக்கினுள் சுவர் ஓட்டையினுள் பதுங்கிக்கொள்ளும் பாம்பைப்போல ஒளிந்து கொண்டிருக்க தலைமேல் தூக்கிய லைட் மூலம் வெளிச்சம் காட்டி குறைந்த பட்சம் என் சொட்டைத் தலையையாவது படம் பிடித்து சாதனை புரியும் அவர்களை என்னதான் செய்வது. சோற்றை என் வாய்க்குள் புகுந்து படம் பிடிக்கவும் அவர்கள் தயங்கியதில்லை.
குடும்பம் குடும்பமாய் வந்து நிற்பவர்கள் மெல்ல என்னருகில் அமர்ந்து வணக்கம் வைப்பர். வாய் திறந்து பேச ஆரம்பிக்கும் இவர்கள் என் அந்தரங்கத்தை குதறாமல் எழுந்து செல்வதில்லை. கஷ்டகாலத்திற்கு என்னாலும் எதும் செய்ய முடியாது குழைந்து சிரித்து பதில் சொல்லி முடிக்கும் முன் என் கண்கள் மடை திறந்துவிடும். பாவிகள் அதைக் கண்டும் குதறலை நிப்பாட்டுவதில்லை. குடும்பம் அமைத்து ஓர் நிலைக்கு வருவதென்பது அவர்களுக்கு அமைந்தால் ஊருக்கும் அமைந்தே தீர வேண்டும் கட்டயமில்லையே.
நிதானமாக பந்தி நேரத்திற்கு வரும் ஒண்ணுவிட்ட ரெண்டுவிட்ட இருவத்தினாலுவிட்ட அக்காக்கள் அண்ணன்கள் தம்பிகள் தங்களை அறிமுகப்படுத்தி “நான் யாருன்னு தெரியுதா?” எனும் போது குடல் பிதுங்கி வெளிவரும் அளவுக்கு யோசிக்க வேண்டியள்ளது. மற்றவர்கள் “ஆமா…அப்ப சொகமா இருக்கியா?” என்று தொடரும் கணம் நான் பேந்த பேந்த முழித்திருப்பேன். அவர்களும் “வாறேன் அண்ணெ, தம்பி” என்று சொல்லி ஓடிவிட்டால் பாக்கியம். இல்லையெனில் சர்வம் நாசந்தான். இதில் “அப்பா சொகமா,” என்று என்னிடம் கேட்பவரின் வாயில் நாலு குத்து விடாமல் வாய் பிளந்து பார்த்து அப்படியே விட்டுவிடுதலும் நல்லதே.
தூரத்தில் கைகழுவுமிடத்தில் இருக்கும் பெரிய மைனி வாயில் குதப்பிய வெற்றிலையை அங்கே எங்கோவோர் மூலையில் துப்பிவிட்டு ஓட்டமும் நடையுமாக என்னிடம் வரும்போதே சுதாரித்து ஓடிவிட்டால் நல்லது. இல்லையேல் கை வசம் இருக்கும் ஓடாத சரக்கை என் தலையில் கட்டிவிடும் திட்டத்தில் என் அருகில் “பிள்ளெ சொகமா…” என்று ஆரம்பித்து தோவாள, வள்ளியூர், ஒழுகினசேரி, தாழாக்குடி, வீரணமங்கலம் என்று ஊர்சுற்றி பெண்கள் பெயர் விலாசம் அவள் அப்பன் தாதன் முப்பாட்டன் நாஞ்சிலுக்கே வந்த கதை வரை அளந்து வைத்து கிளம்பும் முன் நாலாவது பந்தி முடிந்துவிடும்.
பந்திக்கு முந்த வேண்டுந்தான் ஆனால் அதற்காக உட்கார்ந்திருப்பவரின் இலைக்கு பின்னால் காத்திருப்பவர் பருப்பு பாயாசமும் மோரும் கேட்பது உச்சபட்சம். சிலர் நம் இலையில் கைவைக்கவும் வாய்ப்பிருக்கிறது.
கன்னியாரி கடலில் சுனாமி வந்து ஊரை விழுங்கும் போது நம்மவர் ஒருத்தர் “அது செரி பிள்ளே, புரிசேரி வரல்லையே… வச்சிருக்கானா… இல்ல விளம்புத அணஞ்ச பெருமாளே மடக்கு மடக்குன்னு எடுத்து குடிச்சிட்டானா?”
என்று பினாத்தும் போதேகவளங்கள் தொண்டையை அடைத்து சுனாமிக்குள் முங்கியது போல மூச்சு முட்டியதும் அதை சரிசெய்ய தண்ணீர் தேடி அலைந்ததும் சுனாமியை விட சுவாரஸ்யமானது.
துவட்டலும், அவியலும், கிச்சடி, எரிசேரி, பச்சடி, மாங்காய் என முன்பே விளம்பி வைக்கப்பட்ட பந்திக்கு, கதவு திறக்காமல் அடைத்து கிடக்கும்போது வரும் வாசனையை மனத்தில் ஏத்திக்கொண்டே கையில் ஜெம்பர் துணியுடன் பழிகிடையாய் வரிசையில் நிற்க வேண்டும். ஜிங்கு சாங் ஜிங்கு சாங் என்று வண்ணம் படமெடுக்கும் விளக்கு வெளிச்சத்தில் பளபளக்கும். முண்டித் தள்ளி நெரித்து மேடைக்கேறி மாப்பிள்ளையின் மூக்கில் உறுமா துணி கட்டி இறங்கி திறுநீரையும் அவன் கண்களில் போட்டு வாழ்த்திவிட்டு முதலில் இறங்கும் பெரிசுகள் “பஸ்ட் நம்மதான , நம்க்கில்லாத மரியாதையா?” என்று தற்பெருமை அடிக்கும்போது மேடையில் நான் மட்டும் கருப்பு துணியை கட்ட என்னை அடிக்கவே வந்து விட்டனர். “விடப்பா கிறுக்கன் தெரியாம செஞ்சுட்டான்” என்று பின் பாட்டுக்கள் வேறு. அப்போது மயங்கி விழுந்த என்னைத் தூக்கி நிறுத்த முடியாமல் மேடையில் பின்னாலிருந்த மணமக்களின் சோபாவிலேயே படுக்க வைத்தனர். பெண்கள் சிரிப்பதும் தட்டி எழுப்ப முயன்றதும் தண்ணீருக்குள் கத்துவது போல கேட்டும் எழும்ப முடியாமல் கிடந்தேன். வெட்கக்கேடு.
இந்த ஆபாசங்கள் நிறைந்து கிடந்தாலும் கல்யாணங்களுக்கு நான் செல்வதிலும் ஓர் அந்தரஙக காரணமுண்டு. மணப்பெண்கள், மாப்பிள்ளைகள் அந்த சடங்கு நாடகங்கள் அனைத்தையும் நானும் அந்த கணங்களில் நடித்துவிடுகிறேன். நான் உடுத்தியிருக்கும் சட்டை வேட்டியை கழற்றி பட்டணிந்து, பொடி செய்ன் முதல் உருட்டு செய்ன் வரை கால் கொலுசு முதல் காது ஜிமிக்கி வரை வளைய வரும் ஒட்டியாணமென அனைத்தும் பொன்னாக ஜொலிக்க கழுத்தில் தாலி தொங்க நிற்க வேண்டும். பயப்பட்ட இத்தனை காரணங்கள் நிறைந்திருந்தாலும் போய்ப் பார்க்க இந்த ஒரு காரணம் இருக்கத்தான் செய்கறது.
விடிந்து விட்டது நாளை மறைந்து இன்றாகிவிட்டது. இன்று இரண்டு அழைப்புகள் காலை ஒன்றிற்கும் சாயங்காலம் ஒன்றிற்கும் செல்ல வேண்டும். சட்டை வேட்டியை நேற்றே தேய்த்து வைத்தாயிற்று.