வேல்விழி மோகன்
காலையில் எழுந்து கோலம் போட முயன்றபோது அவளுடைய மாமனார் அந்த நான்கு மணி வாக்கில் எங்கேயோ கிளம்பியவர் “சுத்தமாயிட்டு போடு” என்றார். அவர் அந்த சந்தில் போகும்போது சில அடிகள் தூரம் நடந்து திரும்பிப் பார்த்து போனார். கீர்த்தி அந்த இடத்தை விட்டு எழுந்து சற்று நேரம் நின்றிருந்தாள். வீடுகளின் முகப்பில் இன்னும் தெரியும் இருட்டு. ஒரு மின்கம்பம் வெளிச்சத்தை இழந்து மங்கியபடி வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. ஒரு காகம் கத்தியபடி அந்த தென்னை மரத்தில் படபடத்தது. தெரு முனையில் அந்த பெட்டிக்கடைக்கு முன்பு தண்ணீர் தெளிக்கும் பாட்டி தெரிந்தாள்.
மாமனார் மறுபடியும் திரும்பி பார்த்தார். இவள் அந்த இடத்தை விட்டு அகன்று வெளியில் அந்த பொந்தில் கோலமாவு டப்பாவை வைத்துவிட்டு குறுகலான அந்த வீட்டின் இடதுபுறம் வளைந்து கொஞ்சம் நடந்து கதவை திறந்து உள்ளே நுழைந்து உள்ளறையில் கட்டிலை நெருங்கி படுத்துக்கொண்டபோது அவன் குறட்டை விட்டுக்கொண்டிருந்தான்.
கதகதப்பாக இருந்த அந்த இடத்தில் கட்டிலுக்கு சற்று மேற்புரத்தில் மூடியிருந்த சன்னலிலிருந்து தப்பித்து உள்ளே வந்த காற்று சில்லென்று இருந்தது. அவளுடைய பார்வை அந்த சன்னலை கூர்ந்து கவனித்தது. நடுவில் ஒரு ஓட்டை. சின்னதாக. வெளியில் இருட்டாக இருந்ததால் அவளுக்கு அது சரியாக தெரியவில்லை. ஆனால் ஓட்டை இருக்கிறது. அவன் மீது சாய்ந்தபடி அதை தடவிப் பார்த்தபோது “ஆமா” என்று முனகிக்கொண்டாள்.
அவன் அவளுடைய கனத்துக்கு சட்டென்று குறட்டையை நிறுத்தி, “ஏன் இன்னும் கோயில் பாட்டு போடாம இருக்காங்க.?” என்று சற்று வளைந்து கொடுத்ததில் அவளுடைய உடல் பாரம் முழுமையாக அவன் மீது சாய்ந்தது.
“தூங்குங்க” என்றவள் அவன் செய்யும் பின்புற சேஷ்டை பிடிக்காமல் ”நானும் தூங்கனும். தூக்கமா வருது. கோலம் போட்டுடலாமுன்னு போனா உங்கப்பா முறைச்சுட்டு போறாரு. எங்க வீட்ல நான்தான் போடுவேன். விடிகாலைல. குளிச்சுட்டு போடுன்னு எங்கப்பா சொன்னதில்லை,” என்றவளை அந்த கிச்சான் என்கிற கிருஷ்ணன் கண்டுக்கொள்ளாமல் “சுகமா இருக்குது,” என்றான்.
“எதுக்கு?”
“இந்த பாரம். மெத்துன்னு”
“சன்னல்ல ஓட்ட இருக்குது. அடைக்கனும். முதலிரவு முடுஞ்சதுன்னு அலட்சியமா இருக்காதீங்க. இது நம்மளோட அந்தரங்கம். அந்த ஓட்டைய பாக்கும்போது பகீருன்னு ஆயிடுச்சு. உங்களுக்கு தெரியாதா.?”
“நானு கவனிக்கலை,” திரும்பிப் பார்த்து, ”துணி வச்சுடலாம்,” என்றவனின் கைகளில் தூக்கம் போய் ஒரு ஆரம்பம் தெரிந்தது. அவள் சட்டென்று விடுபட்டு கட்டிலை விட்டிறங்க, ”இரு, இரு,” என்பதற்குள் வெளியே வந்து மூலையில் இருந்த குளியலறைக்கு போனாள். உள்ளே விளக்கு வெளிச்சம். இவளுடைய காலடி மணியோசை கேட்டு உள்ளிருந்து மாமியாரின் குரல் வந்தது.
“இதா வந்துடறேன்”
கொஞ்ச நேரம் கதவருகே வந்து நின்றாள். உள்ளிருந்து அவன், ”வந்திடு கீத்து. இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சுடும்”
உள்ளே வேகமாக நுழைந்து ஆனால் கிட்டே போகாமல் “ஸ்ஸ். உங்கம்மா இருக்காங்க அங்க. மெதுவா”
“நீ வா. தூக்கம் போயிடுச்சு”
“எனக்கு வலி. அங்க பாருங்க ரத்தம் இன்னும் காயலை. நைட்டு பயந்துப் போயிட்டேன். எனக்கென்னவோ உடம்பை வருத்திக்கிட்டோமுன்னுதான் தோணுச்சு. ஆரம்பிக்கறப்ப சுகமா இருந்தது. முடியும்போது இது தேவையான்னு ஆயிடுச்சு. நீங்க புசுபுசுன்னு மூச்சு விடறீங்க. கீத்து கீத்துன்னு உளர்றீங்க. அப்பறம் அப்படியே மேல படுத்து அமுத்தறீங்க யானை அழுத்தற மாதிரி. எனக்கு என்னன்னு புரியலை. தொடையெல்லாம் மரத்துப்போச்சு. ம். ஏதோ சடங்கு முடிஞ்ச மாதிரிதான் இருந்தது.” பாத்ரூம் கதவை திறக்கும் சத்தம் கேட்டு, ”உங்கம்மா வெளியே வர்றாங்க. நான் போயிட்டு வந்திடறேன்”
அவன் ஏமாற்றமுடன் ”பகல்ல தனியா ஒதுங்க முடியாது,” என்று கெஞ்சுவது போல கேட்கும்போது இவள் வெளியே வந்துவிட்டிருந்தாள். மாமியார் அங்கிருந்து அகலாமல் சிரித்தபடி, ”தண்ணி கொஞ்சமா இருக்கும். அஞ்சு மணிக்கு மேலதான் வரும். பாத்துக்க,” என்று நகர இவள் உள்ளே போனதும் மல நாற்றம் வந்தது. மறுபடியும் வெளியே வந்து நின்றாள். இப்போதைக்கு மூத்தா போகவேண்டும். அப்பறம் டூ பாத்ரூம். குளியல்? அது பிறகு. முதலில் அதை முடித்து ”கீத்து” என்றோரு குரல். அவள் திரும்பிப் பார்த்தாள். கிச்சான்தான். ”வா. ப்ளீஸ்” ஏறக்குறைய அழுவது போலத்தான் கேட்டான். அவளுக்கு ஏனோ பரிதாபமாக இருந்தது. தன்னுடைய உடல் அதற்கு தயாராக இல்லை என்பதை உணர்ந்ததும் அவளுக்கு குழப்பமாக தோன்றி, ”இருங்க பாத்ரூம் போயிட்டு வந்திடறேன்,” என்று உள்ளே நுழைந்து கொண்டாள்.
அந்த தொட்டியில் பாதிக்கு கீழே தண்ணீர் இருந்தது. ஒரு மூலையில் விழுந்திருந்த புடவைகள். கொடியில் பழைய லுங்கி. ஒரு பிரா. ஒரு வேட்டி. ஒரு ஜட்டி. ஒரு குட்டி சட்டை. அந்த கைக்குழந்தையின் ஞாபகம் வந்தது. கீழே விழுந்து கிடந்த பிளாஸ்டிக் ஜக்கு. இடது ஓரம் ஆய் போகும் இடம். அதன் மீது கைப்பிடி இல்லாத பிளாஸ்டிக் வாளி. மீண்டும் லேசாக மல நாற்றம். டெட்டால் மாதிரி ஏதாவது இருக்கின்றதா என பார்த்தாள். இந்தப் பக்கம் ஒரு சின்ன இடைவெளியில் ரின் சோப்பு. பாதி கரைந்த ஹமாம். பேஸ்ட். நான்கைந்து மஞ்சள் துண்டுகள். இரண்டு பிரஷ். அந்த குளியல் சோப்பை எடுத்து ஜக்கில் தண்ணீரில் கொஞ்சம் கசக்கி அந்த இடத்தில் ஊற்றி விட்டாள். ஏதோ ஒரு பூவின் வாசனை வந்தது. கொஞ்சம் தெம்பாகி அவள் தயாராகும்போது கதவு லேசாக தட்டி கிச்சான் “முடுச்சுட்டியா? சீக்கரம்,” என்றான்.
0000
எல்லாமே நாற்றமடிப்பதாக தோன்றியது கீர்த்திக்கு. அந்த மல நாற்றம். கிச்சானின் எச்சில் வாசனை. அந்த ரத்த வாசனை. குளியலறையில் அந்த பழைய லுங்கி வாசனை. கோலம் போடுமிடத்தில் மாமனார் திரும்பிப் பார்த்தபோது உணர்ந்த பீடீ வாசனை. ‘என்ன யோசனை.?” என்றான் கிச்சான்.
ஏதுமில்லை என்பது போல தலையாட்டினாள். பேசுவது இப்போதைக்கு வேண்டாம் என்பது போல வெறுமனே புன்னகைத்தாள். அவன் குளித்து தயாராகி நெற்றியில் சந்தன பொட்டு வைத்து அண்ணனிடம், “எங்க பாப்பா?” என்றான்.
“இன்னும் தூங்குது”
இவளிடம், ”பாப்பாவுக்கு நான்னா இஷ்டம். நான் வீட்ல இருந்தா என்னோடதான் எப்பவும் இருக்கும்”
“சொல்லியிருக்கீங்க,” என்றபோது அவன் அவளுடைய கைகளை அழுத்தினான். எதற்கு என்று தெரியவில்லை. அந்த அறையில் அவர்களை தவிர அவனுடைய அண்ணன். பாட்டி. பக்கத்து வீட்டு பெரியவர் இருந்தார்கள். அந்த பெரியவர் ஏதும் பேசாமல் அவளைப் பார்த்து அவ்வபோது சிரித்து தரையை பார்த்துக் கொண்டிருந்தார்.
“அது என் மாமா,” என்று பெரியவரை பார்த்து சொன்னவன் சட்டென்று அவளுடைய கன்னத்தை தடவி, ”ஏதோ தூசி” என்றான். ”காபி மட்டும் சாப்பிட்டு அக்கா வீட்டுக்கு கெளம்பிடலாம்”
பாட்டி எதையோ மென்று கொண்டிருந்தவள் வாயை துடைத்துக் கொண்டு, “பாத்துப் போப்பா வண்டியில. போம்போது கோயிலுக்கு போயிட்டு போயிடு”
“சரி பாட்டி”
“உங்கப்பன் பொண்ணு குளிக்காம வந்து கோலம் போட்றதுக்கு வாசல்ல நிக்குதுன்னு உங்கம்மாக்கிட்ட சொல்றான்,” அவளிடம் கண்களை திருப்பி, ”தண்ணி பிரச்சனைதான். குளிக்காம அந்த ரூம விட்டு வராத. உங்கண்ணி பாத்துக்குவா கோலம் போட்றதை,” என்றபோது கீர்த்தி காதில் விழாத மாதிரி “எவ்வளவு நேரத்துக்கு கெளம்பறது”“ என்றாள் கிச்சானிடம்.
“இதோ. இப்ப”
“ஒரு டெட்டால் வாங்கனும். எனக்கு குறிஞ்சு சோப்பு காதில கெடைக்கும். வாங்கனும். அப்படியே மரக்கடைல ஜன்னல் ஓட்டைய அடைக்கறதுக்கு ஏதாவது பசை கேட்டுக்கலாம். நான் காலைல சாப்பிட மாட்டேன். உங்கக்கா நிறைய வெரைட்டியா செஞ்சுரப் போறாங்க. சொல்லிடுங்க அவங்களுக்கு போன் பண்ணி”
“அக்கா கோச்சுக்கும். சும்மா இலைய நனைச்சுட்டு வந்திடலாம். இதெல்லாம் ஒரு வழக்கம். எங்கக்கா வீட்டுக்காரு எங்கண்ணன் மாதிரியே.” அவனுடைய அண்ணனை பார்த்து, ”எங்கண்ணனும் அப்படிதான். நான் சாப்பிட்டேனான்னு அண்ணிக்கிட்ட கேட்டுத்தான் சாப்பிடுவாரு. இல்லைன்னா என்னைய திட்டுவாரு. அவரு திட்டும்போது நீ பாக்கனுமே।” கசகசவென்று சிரித்து, ”திட்டும்போது மட்டும் தெலுங்குல திட்டுவாரு. தெலுங்கு கொஞ்சம் தெரியும். ஒசூர்லதானே வேல செய்யறாரு. எனக்கு ஒன்னும் புரியாது. தலையாட்டி கேட்டுக்குவேன். இல்லண்ணா,” என்றபோது அண்ணன் இவளைப் பார்த்து சிரித்து, ”நான் இனிமே திட்ட மாட்டேன். குடும்பம் ஆயிடுச்சு”
“திட்டுங்கண்ணே. பழைய மாதிரியே இருங்க”
“உங்கண்ணி கோவிச்சுக்கும்”
“ஏன்?”
“நைட்டே சொல்லிருச்சு. அதிகமா உரிமை எடுத்துக்காதீங்கன்னு”
“ஏன் அப்படி.?”
“குடும்பம் ஆச்சுன்னா அப்படித்தான். முழு உரிமையும் மனைவிக்கே”
“யாருண்ணா சொன்னது.?”
“இந்த சமூகம்”
“அதை விடுங்க. நீங்க எப்பவும் எனக்கு பழைய அண்ணன்தான்,” என்றபோது அண்ணனின் மனைவி காபி தட்டுடன் உள்ளே நுழைய, “அண்ணியும்தான்,” என்றான். அப்போதெல்லாம் ஒரு கையால் கீர்த்தியின் விரல்களை தொட்டு தொட்டு எடுத்தான். அந்த பெரியவர் அதைப் பார்த்து சிரித்தபடி தரையை பார்த்துக் கொண்டிருந்தார்.
காபி நன்றாக இருந்தது. அண்ணி போகும்போது அண்ணன் ஏதோ சைகை செய்வதை கவனித்து கிச்சான் சிரித்தான். அவளுக்கு மேலே மின்விசிறி வேகமாக சுற்றுவதாக தோன்றியது. நிமிர்ந்து பார்த்தவுடன் கிச்சான், ”பத்தலையா வேகம்?” என்றபோது அவளுடைய அண்ணன் எழுந்து இன்னும் வேகம் வைத்தான்.
“இல்ல. கொஞ்சம் குறைக்கனும்”
“ஒ. அப்படியா. எங்க வீட்ல இதுலேதான் இருக்கும் எப்பவும். நீங்க வரும்போது குறைச்சுக்கோங்க,” என்று குறைத்தான். உள் அறையிலிருந்து அவளுடைய மாமனார் கவனிப்பதை இப்போதுதான் கவனித்தாள். காபி குடிப்பதில் கவனமாக இருந்தாலும் அவ்வபோது ஓரக்கண்ணால் மாமனாரை பார்த்தவாறு இருந்தாள். அந்த பாட்டி அங்கிருந்து எழுந்து போனபோது “அப்பாடா” என்றிருந்தது. மாமனார் உள்ளே வந்து ஒரு ஓரத்தில் நிற்க அண்ணன் எழுந்து சமையலறை பக்கம் போனான். கிச்சான் எழுந்து நின்று கொண்டான். அவள் காபி டம்ளரை சரியாக பிடித்து நிதானமாக எழும்போது. “உக்காரும்மா. உக்காரும்மா” என்று மாமனார் வேகமாக சொன்ன மாதிரியிருந்தது.
கிச்சான் உட்காரவில்லை. ஆனால் அவள் உட்கார்ந்தாள். அவன் அவளை கீறினான் நின்றபடியே கன்னத்தில். அவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் கீழே குனிந்து அசட்டு சிரிப்புடன், ”அப்பா. அப்பா” என்றான். அப்பா ஏதும் கவனிக்காதது போல அண்ணன் இருந்த சேரில் உட்கார்ந்து, “என்னா பெருசு. பொண்ண பாக்கறதுக்கு வந்தியா?”
“ஆமா. கல்யாணத்துக்கு வரலை இல்ல?”
“எங்க போயிட்டே?”
“மக வீட்டுக்கு. ராயக்கோட்டைக்கு. அங்க போனாக்க அங்க இன்னொரு கல்யாணத்துக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. இப்பதான் வந்தேன். நேரா இப்படியே வந்துட்டேன்”
“சந்தோசம்”
“ஜோடிப் பொருத்தம் நல்லாயிருக்குப்பா”
“நல்லாயிருந்தா சரி,” என்று இவளை பார்க்க அப்போதுதான் தயங்கி உட்கார்ந்த கிச்சான், “வாழ்த்து சொல்றாரு அப்பா,” என்று இளித்தான்.
அவள் அவன் காதருகில், ”பாத்ரூம் போயிட்டு வந்திடறேன். உடனே கெளம்பலாம்”
“ஏன் அவசரம்?” கிசுகிசுப்பாக.
“தூக்கமா வருது”
0000
அவனுடைய அக்கா வீடு உள்ளூரிலேயே காமராசர் நகர் தாண்டி இருந்தது. அந்த காலை நேரத்தில் அந்த பாதையில் தள்ளு வண்டிகள் மட்டும் வருவதும் போவதுமாக இருந்தன. பெரும்பாலும் பழ வண்டிகள். முக்கியமாக வாழைப்பழம். ”இங்க வாழப்பழ மண்டிங்க அதிகம்,” என்றான் அவன். அவள் காற்றில் தன்னுடைய முடியை அவ்வப்போது சரி செய்துகொண்டு படபடக்கும் அந்த பச்சை நிற சேலையை அணைத்துப் பிடித்திருந்தாள். தர்பூசணி கடைகள் வரிசையாக. புளிய மரங்கள். தண்ணீர் எடுக்கும் பெண்கள். ஒரு மீன் கடையில் சுறுசுறுப்பாக இருந்த வியாபாரம். ஒரு மேடு வந்தபோது அவளுக்கு தொடையில் வலியெடுத்தது. ”அது நடந்திருக்கக் கூடாது,” என்று முனகிக் கொண்டாள்.
அவன் பைக்கின் நான்காவது கியரை முறுக்கி, ”என்னா சொன்னே?” என்றான். அவள் பதில் சொல்லாமல் திடீரென்று தெரிந்த செம்மண் பூமியை ரசித்தாள். மண்ணை ஒட்டி தண்ணீர் கட்டி ஈரமாக இருந்தது. நான்கைந்து காகங்கள் உட்கார்ந்து. உட்கார்ந்து எழுந்து பூச்சிகளை பிடித்துக் கொண்டிருந்தன. பிறகு ஒரு பள்ளிக்கூடம். அந்த இடத்தில் வேகமாக திருப்ப “மெல்லமா போங்க “ என்றாள்.
“பயமா?”
“வலிக்குது”
“புரியல”
“ஒன்னுமில்லை. பாருங்க. அங்க ஒரு புங்க மரம் தெரியுது பாருங்க. அங்க நிறுத்துங்க,” என்றாள். அவன் அங்கு நிறுத்தி, “எதுக்கு?” என்றான். அவள் இறங்கிக்கொண்டு மரத்தடியில் ஒதுங்கி எதிரில் அந்த தாபா உணவகத்தை வேடிக்கை பார்த்தாள். அவன் வண்டியை அவளிடம் இறங்காமல் தள்ளி “ஏன்?” என்றான்.
“கொஞ்ச நேரம் இருப்போம்”
அவனும் அந்த தாபா உணவகத்தை கவனித்தான். பஞ்சாபி தாபா என்று இந்தியிலும் எழுதி உள்ளே பச்சை வலைக்குள் செடிகள் நட்டு பலகையில் பீங்கான் தட்டில் சிக்கன் கிரேவியோடு சுக்கா ரொட்டி நான்கை நிறுத்தி வைத்திருந்தார்கள். வெறுமனே திறந்திருந்த பெரிய வாசல் வழியே ஒருத்தன் மிதிவண்டியில் தக்காளி கூடையை உள்ளே தள்ளிக்கொண்டு போக உட்புறம் நீளமான ஓலைப்பந்தலுக்கு கீழே கட்டில்களும் சேர்களும் சும்மா இருந்தது. ”பதினோரு மணிக்கு மேலதான் ரொட்டி தட்ட ஆரம்பிப்பாங்க,” என்றவன் கிளம்பலாம் என்பது போல நியூட்ரலில் முறுக்க அவள் புன்னகைத்து, “ஒரு நிமிசம்,” என்று அந்த மரத்தோரம் ஒரு கல்லின் மீது உட்கார்ந்தாள்.
“உடம்புக்கு ஏதாவது?”
“ரோட்ல போற வர்றவங்களை வேடிக்கை பாக்கனும். இந்த ரோடு அமைதியா இருக்குது. அங்க பாருங்க ஒரு குடிசை. தனியா. ஒரு சின்ன பொண்ணு தண்ணி பைப்ல விளையாடிட்டு. இந்தப்பக்கம் ரண்டு பக்கமும் வறண்டுப்போயி. ஏன்னு தெரியல. தண்ணி இல்லாத ஏரியா போல. ஆனா அங்கங்க சோளம் போட்டிருக்காங்க. சில எடத்துல கடலைக்காய். பாக்கறதுக்கு வறட்சியா இருந்தாலும் ஏதோ ஒரு அழகு”
“கூட்டிக்கிட்டு வர்றேன் அடிக்கடி”
“உங்கக்கா வீட்டுக்கு வேணாம். சும்மா வந்துட்டு போவோம். கிருஷ்ணகிரிய பத்தி அதிகமா தெரியாது. கேள்விப்பட்டிருக்கேன். இப்ப கொஞ்சம் புரியுது. சுத்திலும் கிராமங்க. அப்படி இருந்தா புடிக்கும்”
“எனக்கும்தான். போவோமா?”
“எவ்வளவு நேரம் இருக்கனும் அங்க?”
“நேரமெல்லாம் இல்ல. இன்னிக்கு அனுப்ப மாட்டாங்க. நாளைக்கு கெளம்பி வந்துடலாம்”
“ஓ. அப்படியா?”
“ஆமா. உங்க வீட்டுக்கு போனாலும் அப்படித்தான். சொந்தக்காரங்க விடமாட்டாங்க. போலாமா?” அவன் வண்டியை முறுக்குவதை கவனித்து முகத்தில் சலிப்பு காட்டினாள். அவன், “என்னா செல்லம்?” என்று வார்த்தையை வழியவிட்டான். பக்கத்தில் வந்து அவன் காதருகில், “உடம்புக்கு முடியல. சொன்னேன் இல்லையா தூக்கம் வருதுன்னு. காலைல வேற நீங்க எம்மேல…” நிறுத்தி, “உங்கக்கா வீட்ல தனியா ரூமு இருக்குமா?”
“எதுக்கு? அதை விடு. எம்மேலன்னு எதுவோ சொன்னியே?”
அவள் அமைதியாக பின்னாடி உக்கார முயல அவன் வண்டியை அணைத்து இறங்காமல், “மொதல்ல அதுக்கு பதில் சொல்லு”
“ஒன்னுமில்லை”
“சரி இறங்கு,” அவன் அவளை இறக்க வைப்பது போல வண்டியை சாய்த்து அவனும் இறங்கினான். இரண்டு பேர் வண்டியில் ஏதோ சிரித்தபடி இவர்களை பார்த்துக்கொண்டே போனார்கள்.
“என்னவோ சொல்ல வந்தியே?”
“மேல படுத்து அமுத்திட்டீங்க. யானை மாதிரி” என்றதும் அவன் “அப்படியா?” என்று யோசித்து, “காலைல இருந்து என்னைய ரண்டு முறை சொல்லிட்டே. யானை மாதிரின்னு”
“அவ்வளவு கனம். நான்தான் வேணாமுன்னு சொன்னேனில்ல. நீங்க கேட்டீங்களா?”
“இப்ப நான் என்ன பண்ணனும்?”
“என்னைய தூங்க வையுங்க. இன்னிக்கு எதுவும் வேணாம். அடிச்சுப் போட்ட மாதிரி இருக்குது. போம்போது டெட்டால்… அப்பறம் குறிஞ்சு சோப்பு. ம்.ம். அப்பறம் இன்னொன்னு. ஆங். அந்த ஓட்டைக்கு பசை”
“சரி. உக்காரு.” அவன் முகம் இறுக்கமாக இருந்தது. கிளம்பும்போது திடீரென சாதுவாக சிரித்துக் கொண்டான். பிறகு கியரை முடுக்கி வேகம் காட்டி பிறகு நிதானமாக குறைத்து மெதுவாக போனான். ஒரு டிராக்டர் கடந்தபோது பின்னாடியிருந்த பெண்கள் சிரித்தார்கள். அவர்களிடமிருந்து ஏதோ ரட்டை அர்த்த வார்த்தை வந்தது.
“என்ன சொல்லறாங்க.?”
“தெரியல”
“உங்களுக்கு தெரியும். நீங்க மறைக்கறீங்க”
“தெரியல. நான் அதையெல்லாம் கவனிக்கலை. பொம்பளைங்க ஒன்னா சேர்ந்தா இப்படி ஏதாவது பேசுவாங்க. அவங்களுக்குதான் கெட்ட வார்த்தைங்க அதிகமா தெரியும். ஆம்பளைங்களை விட”
“எனக்கு ஏதும் தெரியாது”
“நான் உன்னைய சொல்லலை” கரும்புத் தோட்டம் தாண்டி இடதுபுறம் பிரிந்து கருவேல மரங்களை கடந்து ஒரு மண் ரோடில் பிரிந்து அந்த ஒற்றையாக இருந்த வீட்டருகே நிறுத்தினான்.
உள்ளிருந்து கலகலப்பாக வந்த அக்கா, “வாங்க. வாங்க,” என்றாள். அவளுடைய வீட்டுக்காரன் அவளிடம் புன்னகைத்து விட்டு, “ஏன்யா இவ்வளவு நேரம்?” என்று அவனிடம் கடுகடுக்க, அவன், “அங்க லேட் பண்ணிட்டாங்க”
“சூடா இருக்குது பாரு சாப்பாடு. உனக்கு புடுச்ச இட்லி. சிக்கன் கொழம்பு. அப்பறம் சேமியா பாயாசம்”
“நல்ல சாப்பாடு. உனக்கும் புடிக்குமில்ல” என்றவன் அவளிடம் கேட்டிருக்க கூடாது என்பது போல முகத்தை திருப்பிக்கொண்டு “இட்லி யாருக்குதான் மாமா புடிக்காது?”
“சரி. இப்படி வாங்க” மாமா மாடிக்கு கூட்டிக்கொண்டு போனார். கூடவே அந்த பையன். இவளைப் பார்த்து புன்னகைத்து ““ஆண்டி. நல்லா இருக்கீங்களா?”
“ஓ. பொண்ணு பாக்கறப்போ கூட வந்திருந்த இல்ல”
“ஆமா ஆண்டி” என்றவன் “மாமா. கிரிக்கெட்டு பேட்டு வாங்கி தர்றேன்னு சொன்னிங்களே”
“நாளைக்கு வாங்கிடலாம். எங்க அக்கா?”
“கீழ இருக்குது. வரும்”
“நீங்க ரெடியாயிட்டு கீழ வாங்க. நட்றா போலாம்” என்று பையனை தள்ளிக்கொண்டு அவர் கிளம்ப இவன் பக்கத்து அறைக்கு போய் பார்த்துவிட்டு வந்து, ”அது பெட்ரூம். ஆனா பாய்தான் இருக்குது. சாப்பிட்டு வந்து படுத்து தூங்கலாம். நான் கொஞ்சம் வெளியில போயிட்டு வர்றேன்”
“சீக்கரம் வந்துடுவீங்களா?”
“தெரியல,” கிட்டே வந்து, ”என்னைய பத்தி யோசனை பண்ணாதே. நீ நல்லா தூங்கு,” கீழே போக இருந்தவன் திரும்பிப் பார்த்து, “நீ சொன்ன மாதிரி இன்னைக்கு ஏதும் கிடையாது”
0000
அக்கா அவனைப் பார்த்து “உம் பொண்டாட்டி சரியா சாப்பிடலை,,” என்றாள். மாமா பெரிய பெண்ணை அறிமுகப்படுத்தி, “இது கல்யாணத்துக்கு முன்னாடி உங்க போட்டோவை பாத்ததோட சரி. ரொம்ப புடுச்சுப் போச்சு உங்கள”
கீர்த்தி அந்த பெண்ணை பார்த்து சிரித்து “பிளஸ் டூவா?”
“இல்லை. பிளஸ் ஒன். கார்ப்பரேஷன் ஸ்கூல்ல”
அந்த பையன், ”எங்கக்காவுக்குக்கூட கிரிக்கெட்டுன்னா ரொம்ப புடிக்கும். மாமா பேட்டு வாங்கி கொடுத்தா நாங்க ரண்டு பேருதான் விளையாடுவோம்”
கிச்சான், “ஒரு பேட்டுதானேடா சொன்ன.?”
பையன் சிணுங்கிக்கொண்டு, ”மாமா. ம்ம். அவளுக்கும் ஒன்னு,” என்று இழுக்க, கீர்த்தி, ”வாங்கிக் கொடுத்துடலாம் இன்னொன்னு” என்றாள்.
அக்கா, “உம் பொண்டாட்டி சரியா சாப்பிடலடா,” என்றாள் மறுபடியும். கிச்சான் நிமிர்ந்து பார்த்து, ”நீயே சொல்லுக்கா”
“ஏம்மா?” என்றாள் கீர்த்தியை பார்த்து.
“ரண்டு இட்லிதான் சாப்பிட்டேன்”
“அதுக்குதான் சொல்றேன். சிக்கனும் ரண்டே பீஸு. நாட்டு கோழிதான். தாராளமா சாப்புடலாம்”
“முடியலை“ என்று நெளிந்தபோது அக்கா புருசனை பார்த்தாள். இரண்டு பேரும் ஏதோ கண்ணால் பேசிக் கொண்டார்கள். அவர் இவனிடம், ”மதியமும் இப்படி சாப்புட்டா மீதியாகறத அக்கம் பக்கத்தலதான் கூப்பிட்டு சாப்பிட வைக்கனும்”
“நான் சாப்படறேனே மாமா. ஏழு இட்லி. சிக்கன் அரை கிலோ சாப்பிட்டிருப்பேன். இன்னமும் சாப்பிடுவேன். யானை மாதிரி,” என்றபோது அந்த பையன் “மாமான்னா பீமா,” என்றான்.
“அப்படி போடு. பலசாலின்னு சொல்லறான். உனக்கு பேட்டு நாளைக்கே வாங்கி தர்றேன்டா”
“நாளைக்குதான்னு ஏற்கனவே சொன்னீங்க.” மீண்டும் ஒரு சிரிப்பு எழுந்து அடங்கும்போது கிச்சான், “அக்கா. கொஞ்சம் வெளியில போயிட்டு வந்திடறேன். ஒரு மணி நேரத்துல வந்திடுவேன்,” மனைவியைக் காட்டி, ”இவங்க ரெஸ்ட் எடுக்கட்டும் மேல”
“மதியமாவது நல்லா சாப்புட சொல்லிட்டு போ”
கீர்த்தி நிமிராமல் வாயை மூடிக்கொண்டு சிரித்தாள். இரண்டு பேரும் கையை கழுவிக்கொண்டு இரண்டு நிமிடங்கள் கீழே இருந்துவிட்டு மாடியேறும்போது, “நான் அக்காக்கிட்ட பேசிட்டு வர்றேன். நீ போ,” என்று கீழே இறங்கியவனை திரும்பி பார்த்துவிட்டு அறையை திறந்து அந்த பெட்ரூமுக்கு போய் அங்கிருந்த பாயை விரித்து போட்டு, “அப்பாடா,” என்று படுத்தபோது கண்கள் தானாக மூடிக்கொண்டது. ஓரிரு நிமிடங்கள் கழித்து அவனுடைய பைக் .கீழே புறப்படும்போது அவள் தூங்கிவிட்டிருந்தாள.
0000
அவர்கள் வீட்டுக்கு வருவதற்கு இரவு பத்து மணியாகிவிட்டது. கிச்சான் ஏழு மணிக்குதான் அக்கா வீட்டுக்கு வந்தான். வந்தவுடன் நேராக அக்காவிடம் சென்று கண்களால் மன்னிப்பு கேட்டான். அவள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு, “உம் மாமா உம்மேல ரொம்ப கோவமா இருக்காரு”
“அக்கா. போன எடத்துல கொஞ்சம் லேட்டாயிருச்சு”
“அதுக்கு எங்க வீட்டுக்கு எதுக்கு வந்த? எத்தனை முன்ற போன் பண்ணறது. கடைசில அவங்களை மட்டும் சாப்பிட வையுங்க. நான் லேட்டாகும் வர்றதுக்குன்னு சொல்ற“
“மன்னிச்சுருக்கா”
“அந்தப் பொண்ணு பாவம். .தனியா எம்பொண்ணோடதான் உக்காந்து மதியம் சாப்பிட்டது. ரண்டு வாய் கூட சாப்பிடலை. முகமெல்லாம் வாடிப்போய் பளிச்சுன்னு சாப்பிட்டு கையை கழுவாம கோழி கொத்தற மாதிரி கொத்திட்டு எழுந்திருச்சு”
“அதுக்கும் நான்தான் காரணம். அவங்களையும் மன்னிக்கனும்”
அக்கா அவனை அருகில் அழைத்து, “ஒரு வித்தியாசம் கவனிச்சேன்”
“என்னக்கா?”
“நீ அவ. இவன்னு சொல்லறதில்லை. அவங்க. இவங்கன்னு பொண்டாட்டியை சொல்லும்போது சந்தோஷமா இருக்குது”
“அப்படியா?” அவன் விழித்தான். அக்கா “சரி. சரி. போய் கூட்டியா கீர்த்தியை. சாப்பிட்டு கெளம்புவீங்க”
“கெளம்பறதா?”
“ஆமா. அப்பா உங்களை அனுப்ப சொல்றாரு”
“ஏனாம்?”
“காலையிலையே அஞ்சு மணிக்கு கோயிலுக்கு போகனுமாம். பூசைக்கு ஏற்பாடு பண்ணியிருக்காறாம். இங்க இருந்தா லேட்டாயிடுமுன்னு சொன்னாரு”
“ஆமா. ஆமா. பாட்டி கூட சொன்னது போம்போது கோயிலுக்கு போங்கன்னு. நாங்கதான் மறந்துட்டோம்”
அவர்கள் சாப்பிட்டு கிளம்பி இருட்டில் மரங்களுக்கு இடையில் பயணப்படுவது சுகமாக இருந்தது. கீர்த்தியிடமிருந்து மரிக்கொழுந்து வாசனை. குண்டும் குழியுமாக இருந்த பாதையிலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்துபோது எதிரில் கடந்துபோன வண்டிகள். மௌனமாக நிற்கும் மரங்கள். ஒரு கத்தரி செடி தோட்டத்தை கடக்கும்போது நிறுத்தப்பட்டிருந்த பொம்மை. மூடத் தயாராகும் வழியோர கடைகள். ஆங்காங்கே திண்ணைகளில் தெரியும் சிறுசு. பெருசு கூட்டம். செங்கல் நிரப்பி கடந்துபோன ஒரு லாரி. எங்கேயோ ஜேசுதாஸ் குரல், ”நீ பாதி. நான் பாதி”
அவள் “சொல்லாம கொள்ளாம மதியம் திடீருன்னு கெளம்பிட்டீங்க?”
“சொன்னேனே”
“அது சும்மான்னு நெனைச்சேன். என்கூட விளையாடறீங்கன்னு”
“இல்லை. நெசமாத்தான்”
“இல்லை. உங்களுக்கு வெளியில ஒரு வேலையும் இல்லை. அது சும்மா. இன்னைக்கு ஏதும் இல்லைன்னு சொன்னதுக்கு இதுதான் அர்த்தமா? அதைத்தவிர வேற வேல இல்லையா நமக்கு? பேசலாம். தூங்கலாம். டிவி பாக்கலாம். ஏதாவது பக்கத்துல மரத்தடிக்கு போயி உக்காரலாம். எனக்கு மட்டும்தான் அசதியா? உங்களுக்கு இல்லையா? எங்கேயோ பிரண்டு வீட்டுக்கோ சினிமாவுக்கோ போயிட்டு அப்பறம் வேற எங்கேயோ சுத்திட்டு வர்றீங்க. எனக்கு தந்த பதில் இதுதான் நீங்க”
“எல்லாம் யூகம், ” லேசாக சிரித்தான். அவள் பட்டென்று, ”சிரிக்காதீங்க. உங்க சிரிப்பு பயமா இருக்குது. காலைல தமாசுக்குதான் யானைன்னு திருப்பி சொன்னேன். உங்களுக்கு வலிச்சுருந்தா மன்னிப்பு கேட்டுக்கறேன். அதுக்கு அப்புறம்தானே அவங்க இவங்கன்னு வார்த்தை வந்தது. அதுக்குதான் உங்க சிரிப்பு பயமா இருக்குதுன்னு சொன்னேன்”
“பொண்டாட்டிய வாங்க, போங்கன்னு ஏன் சொல்லக்கூடாது?”
“சொல்லலாம். அது ஆம்பளைக்கு மட்டும் சொந்தமா என்ன?”
“அதானே”
“ஆனா அது புதுசா இருக்கு எனக்கு. கிண்டல் அடிக்கற மாதிரி. தொடர்ந்து சொல்லுவீங்களா?”
அமைதியாக இருந்தான். ஒரு ஆள் குடித்துவிட்டு லுங்கியில்லாமல் கீழே விழுந்து கிடந்தான். அந்த பேருந்து நிலையத்தில் ஒரு நகர பேருந்து காத்திருப்பில் இருந்தது. சினிமா போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தான் ஒருத்தன். நான்கு பெண்கள் வேகமாக குறுக்கே நடந்து போனார்கள். வரிசையாக மின்விளக்குகள் மஞ்சள் நிறத்தில் கடந்தது.
இப்போது சிரித்தான். அவள் மௌனமாக இருந்தாள். அவன் சிரித்து முடித்தவுடன், “பரவாயில்லை. உங்க இயல்பு அது. வச்சுக்கோங்க. உங்க அக்கா மதியம் சாப்பிடும்போது எதையெல்லாமோ பேசிட்டு கோலம் போட தெரியுமான்னு திடீருன்னு கேட்டாங்க. தெரியும்னு சொன்னேன். அப்ப எனக்கு புரியல. ஆனா நிதானமா யோசிச்சப்போ அவங்க என்னவோ சொல்ல வர்றாங்கன்னு தோணுது”
“என்னா?”
“உங்க பாட்டி சொன்னாங்க இல்ல. முகத்துக்கு நேரா. கோலத்தை பத்தி. உங்கப்பா கோலம் விஷயத்தை மக வீட்டு வரைக்கும் கொண்டு போயிருக்காரு. உங்க பாட்டி சொன்னது காதுல விழுந்ததா இல்லையா உங்களுக்கு?”
“ஏதும் சொல்லலையே அவங்க”
“அப்ப நீங்க கவனிக்கலை”
“இல்லை”
“இதுக்கு வழக்கம் போல சிரிச்சிருக்கலாம். என்னைய பத்திதானே பேசறாங்க. உங்களுக்கு உறைக்கலையா?”
“ஏன் உறைக்கனும்? அவங்க சொன்னதுல நியாயம் இருக்கலாம்”
“அப்ப உங்களுக்கு அவங்க சொன்னது தெரியும்”
தயங்கி, “தெரியும். அதையெல்லாம் கண்டுக்கக் கூடாது. பெரியவங்க அப்படித்தான்”
“அப்ப ஏன் கவனிக்கலைன்னு சொன்னீங்க?”
“அது சின்ன விஷயம். எதுக்கு பெருசு பண்ணனுமுன்னுதான்” அவன் இந்த முறை சிரிக்கவில்லை. அவள் கண்களை இருட்டில் துடைத்துக் கொண்டாள். ஒரு மௌனம் உறைத்தபடி வண்டி மட்டும் சத்தம் போட்டபடி நகர்ந்தது. டெட்டால். சோப்பு. அந்த பசை ஞாபகம் வந்தது. ஒரு துணி வைத்துதான் அடைக்க வேண்டும். ஏனோ அம்மா அப்பா நினைவு வந்தது. அப்பாதான் சொல்லுவார், ”பொண்ணோட உடம்பை தீட்டு அது இதுன்னு குறி வச்சுதான் பேசுவாங்க. அதுக்கு பின்னாடி அதிகார புத்தியும் சேடிஸ்ட் புத்தியும் இருக்குது. ஆம்பளைங்க உடம்ப அப்படி பாக்க மாட்டானுங்க. இல்லன்னா எல்லா கெட்ட பழக்கமும் இருக்கற ஒருத்தனை சாமிக்கு மாலை போட்டுட்டான்னு முட்டாள்தனமா கும்புட முடியுமா?” ன்னு சொல்லுவார்.
அவன் படுக்கும்போது “காலைல நாலு மணிக்கு ரெடியாகனும்”
“கோலம் போடறதுக்கா?”
“சொன்னேனே. கோயிலுக்கும் சேத்து”
“கோலம் போடனமுன்னா நான் குளிக்கனும். குளிச்சா நீங்க விடமாட்டீங்க. மறுபடியும் குளிக்க முடியுமா? உங்க பாட்டி சொன்ன மாதிரி தண்ணி பிரச்சனை இருக்குது. என்ன செய்யட்டும்?”
அவன் யோசித்தான். ”அண்ணி செய்யறாங்களே?”
“அவங்க வேற. நான் வேற”
“அப்படின்னா நீதான் சொல்லனும்”
“கோலம் போடற வேலைய நான் செய்ய மாட்டேன். நானாதான் காலைல ஆரம்பிச்சேன். நானா அதை முடிச்சுக்கறேன். சுத்தமா இருக்கனுமுன்னா மொதல்ல உங்கப்பன பீடி நாத்தத்தோட பேச வேணாமுன்னு சொல்லிடுங்க. நீங்க சொல்லலைன்னா நேரம் வரும்போது நானே சொல்லிடுவேன். காலைல ஆறு மணிக்குதான் எழுந்திருப்பேன். சாமி எங்கேயும் போயிடாது. எப்படி வசதி?” என்று கேட்டவள் அவன் பதில் சொல்ல யோசித்து ஏதோ வாயை திறக்கும்போது, ”காலைல உங்க வண்டி கெளம்பறப்போ கண்ணை மூடிட்டேன். அப்பறம் என்னடா நம்ம வண்டி சத்தம் மாதிரி இருக்குதேன்னு திடீருன்னு முழிப்பு வந்திருச்சு. பாத்தா நீங்க இல்ல. அப்பறம் தூக்கம் வரலை. இனிமேதான் தூங்கனும்,” என்றாள் அர்த்தம் பொதிந்த கண்களுடன்.
“புரிஞ்சது,” என்று அவன் சொன்னபோது அவள் அந்த சன்னல் ஓட்டையை அடைப்பது பற்றி யோசித்து கொண்டிருந்தாள்.
எழுத்தாளரின் மூன்று கதைகளையும் (பதாகையில் வெளியாகி இருக்கிற) வாசித்தேன். சம்பவங்களை துல்லியமாக விவரிப்பது, கதை மாந்தர்களை நுட்பமாக காட்டுவது (“சொல்லாமல்!”), கதைக் கருக்களை விரிவுபடுத்தும் விதம்- நிச்சயம் தமிழில் குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதுவார் என்று நம்பிக்கை வருகிறது. மனமார்ந்த வாழ்த்துகள்!
எழுத்தாளரின் மூன்று கதைகளையும் (பதாகையில் வெளியாகி இருக்கிற) வாசித்தேன். சம்பவங்களை துல்லியமாக விவரிப்பது, கதை மாந்தர்களை நுட்பமாக காட்டுவது (“சொல்லாமல்!”), கதைக் கருக்களை விரிவுபடுத்தும் விதம்- நிச்சயம் தமிழில் குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதுவார் என்று நம்பிக்கை வருகிறது. மனமார்ந்த வாழ்த்துகள்!