ஆப்பிள் பாக்ஸ்

லட்சுமிஹர்

ராம் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை முடித்து விட்டு கையில் வைத்திருக்கும் ஆப்பிள் பாக்சை செட்டின் ஒரு பக்க மூலையில் போட்டு உட்கார்ந்தான். எப்போதும் போல மனதிற்குள் நினைத்துக் கொண்டான், இதுதான் லாஸ்ட் படம், அசிஸ்டன்ட்டா இனி பண்ணக்கூடாதென.

ஷாட் முடிந்து லைட் சேஞ்சிங் போய்க் கொண்டு இருந்தது. செட் கொஞ்சம் பரபரப்பு இல்லாமல்தான் இயங்கிக் கொண்டிருந்தது. ராம் என்ற ராமகிருஷ்ணன் இங்கு வேலை செய்வது பணத்துக்காக மட்டும்தான் என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

இவனுடன் பதிமூணு வருடத்திற்கு முன் வந்தவர்கள் யாரும் இப்போது சினிமாவில் இல்லை. மாறன் மட்டும் புரொடக்சன் ஆபீஸ் இன்ச்சார்ஜ் ஆக மாறிவிட்டான். ராம் தான் இன்னும் டைரக்டர் ஆசையை பிடித்து வைத்திருக்கிறான். அவனுக்கு பின்னால் வந்தவர்கள் கூட படம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள், அடிக்கடி யூட்யூபில் அவர்களின் பேட்டியைப் பார்ப்பான். அப்போது நமக்கு தான் எதுவும் அமைவது இல்லையா, இல்லை அதற்கான தகுதி நமக்கு இல்லையா என்று நினைத்துக் கொள்வான்.

இது வரை இரண்டு படங்கள் ஆரம்பித்து சொல்லிவைத்தார் போல பாதியிலேயே நின்றாகிவிட்டது. இன்னும் ஒரு முறை நடந்தால் ஜென்மத்திற்கும் படம் பண்ணும் வாய்ப்பு வராது. ராசி இல்லாத மூஞ்சியாகி விடும். படம் நின்ற கொஞ்ச நாள் அதன் பாதிப்பில் இருந்து விட்டு பின் பழைய நிலைக்கே திரும்பிவிடுவதே வழக்கம்.

இப்போதெல்லாம் டீ கடை பக்கம் போவதையும் குறைத்துக் கொண்டு விட்டான் ராமகிருஷ்ணன், எப்ப படம், என்ற பேச்சு மாறி, இங்க வேல இருக்கு, போறியா, என்ற வார்த்தைகள் மேலும் தன் திறமையை கேள்விக் கேட்கவே வைத்தது. ராமகிருஷ்ணனும் போய் இருக்கிறான், அன்றய பேட்டா வேணுமே என்று. காசை வாங்கிக் கையில் வைத்திருக்கும்போது தோன்றும், இங்கு இடை நிலையே கிடையாது ஏழை, பணக்காரன் அவ்ளோதான். மரியாதையும் அதைப் பொறுத்தே. சில நேரம் புலம்புவதை நிறுத்தவே சினிமா தெருக்களை தாண்டி வந்து நண்பன் விடுதியில் தங்கி இருந்தான் ராமகிருஷ்ணன்.

இன்றைக்கு பேட்டா வந்தவுடன் தனக்கு தேவையானவற்றை வாங்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தான். ஷாட் ரெடி ஆக இன்னும் லேட் ஆவது போலத் தோன்றியது. சாமி அண்ணன் அருகில் வந்து பக்கத்தில் இருந்த செட் தூணை இழுத்து போட்டு கொஞ்சம் தாவுவது போல ஏறி உட்கார்ந்து கொண்டார்.

“ராமு டீக்கடை பக்கமே ஆள காணமே,” என்றார் சாமி அண்ணன், ராமு ஒரு சின்ன சிரிப்பை மட்டும் பதிலாகச் சொல்லி நிறுத்திக் கொண்டான்.

ராமு என்ற அழைப்பு அப்பாவின் குரலை ஞாபகப்படுத்திவிடுகிறது. சாமி அண்ணன்தான் இப்படி கூப்பிடுவார், மற்றவர்களுக்கு ராம் இல்லை ராமகிருஷ்ணன்தான். சாமி அண்ணன்தான் கடந்த வருடங்களில் ராமுக்கு உதவியாக இருந்து வருகிறார். காஸ்ட்யூம் இன்ச்சார்ஜ் ஆக உள்ள சாமி அண்ணன் கொஞ்சம் களைப்பாகத் தான் தெரிந்தார் . தலை முழுவதும் நரையில் நனைந்து இருந்தது. இப்போதும் கையில் துணியோடுதான் இருக்கிறார். ராமகிருஷ்ணனுக்கு அடிக்கடி தோணும், சாமி அண்ணன் குள்ளமாக இருப்பதால் பல தடவை ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் கையில் வைத்திருக்கும் காஸ்ட்யூமுக்குள்ளாகவே மறைந்து விடுகிறார் என்று.

அவருடனான ஒவ்வொரு சந்திப்பும் முடியும்போது எப்போதும் சொல்லும் வார்த்தை “உன் படத்துக்கு நான்தான காஸ்ட்யூம் டிசைனர்,’ என்பது.

ராமகிருஷ்ணன் ஏதோ ஒரு சிந்தனையில் இருந்து விட்டான். இப்போதுதான் நினைப்பு வந்தது போல சடாலென சாமி அண்ணனிடம் திரும்பி, “அண்னே காலு எப்படி இருக்கு,” என்றான். மூன்று மாதம் முன் ஸ்டுடியோவில் நடந்த விபத்தில் சாமி அண்ணனும் இருந்தார். சாமி அண்ணன் சிரித்துக் கொண்டே காலை நீட்டினார். அது கொஞ்சம் குலைந்து போனது போல இருந்தது, ஒரு வெள்ளை கட்டுடன்.

“இப்போ பரவலாயாணா ” என்றான்.

“பரவால ராமு,” என்றார் காலை மடக்கிக் கொண்டு.

” செலவுக்கு ஏதோ கொடுத்தாங்களா,” என்றான் தயக்கத்தோடு.

“உசுரு இருக்கே” என்று மட்டும் நிறுத்திக் கொண்டார்.

ராம் புரிந்தது போல, உசுரு இருக்கே, என முனங்கிக் கொண்டான். சாமி மனதிற்குள் சில விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அதை ராமுவிடம் கேட்க பல நாட்களாக எண்ணி கொண்டிருந்தார். அது அவனுக்கு சிரமத்தை கொடுத்து விடக் கூடாது என்பதும் அவர் மனதில் ஒரு சேர அடித்துக்கொண்டது . கையில் வைத்திருந்த துணிகள் மேல் பட்டிருந்த தூசியை துடைத்துக் கொண்டார்.

சாமி, ராமகிருஷ்ணனைப் பார்த்து, “எதுல உட்கார்ந்து இருக்க” என்றார்.

ராமு, “என்ன தெரியாத மாதிரி கேக்குறீங்க ஆப்பிள் பாக்ஸ்ணே…”

பதிலுக்கு சாமி சலித்துக் கொள்வது போல, “அது தெரியாமயா.. ஆனா இவ்ளோ பெரிசா முட்டி வரைக்கும் இருக்கும் போலத் தெரியுதே”

ராமு அவரின் சந்தேகத்தைப் போக்குவது போல அருகில் வந்து, “ஹீரோயின் எப்படி இருக்கு?” என்றான் சிரித்துக் கொண்டே.

“தெரியும் டா நீ கேப்பனு ”

“என்ன அப்பறோம் நாங்களா துணி தச்சு கொடுக்குறோம் நீங்கதான் பண்ணுறீங்க ” என்றான்.

சின்ன சிரிப்புடன், “சொல்லுவடா இவ்ளோ நேரம் மூஞ்சி தொங்கி போய் கெடந்துச்சு எதுக்கு அப்படி இருந்துச்சுனு தெரியல, இப்போ என்னா தோணுச்சுனு இப்படி கேக்குற?” என சத்தமாகச் சொல்லி விட்டார். அருகில் இருந்த லைட் மேன் அவர்களைப் பார்க்க இருவரும் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாடை விதித்துக் கொண்டனர் .

“டேய் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம எதையோ பேசிட்டு இருக்க?” என்றார் சாமி.

“இதுவும் முக்கியம்தான்,” என்றான். சாமி அவனை அடிப்பது போலக் கையை உயர்த்தி ராம் அருகில் போனார், அதிலிருந்து விலகிக் கொண்டான் சிரிப்புடன் .

“ஆமாடா, அப்படியே நல்ல பொண்ண பாத்துக்கிட்டே வா முடிச்சர்லாம்,” என்றார் சாமி .

“இந்த வயசுலயும் ஆசைய பாரு”

“அட கேன பயலே உனக்கு சொன்னேன்டா” . ராமகிருஷ்ணன் சிரித்து அதை மழுப்பி விட்டான். ஏதோ சில கவலைகள் சிலருடன் இருக்கையில் தொலைந்து போவது உண்மைதான். அதை உணரும் போது தான் தெரிகிறது.

எங்கோ செட்டின் கூட்டத்திலிருந்து வந்த ஒருவன் சாமி அண்ணனிடம் அதிகார தொனியில், “உங்களையே எங்கெல்லாம் தேடுறது இங்க வந்து மூலையில உட்கார்ந்து இருக்கீங்க?” என்றான். கண்டிப்பாக அவன் ஹீரோயின் அசிஸ்டன்ட் ஆகதான் இருக்க வேண்டும் . மீண்டும் தொடர்ந்தவன் “அங்க மேடம்க்கு டிரஸ் கம்பர்டபுளா இல்லேனு சொல்லுறாங்க,” என்று சொல்லிவிட்டு மூச்சு வாங்கிக் கொண்டே ” மேடம் வெயிட் பண்றாங்க ”

” சாமி… மொத நாளே பிரச்னை எப்படி வருமோ… ஒவ்வொரு ட்ரெஸ்ஸுக்கும் ஒவ்வொரு சைஸ் தைக்கனும்னா எங்க போறது” எனப் புலம்பிக் கொண்டே சாமி அண்ணன் அவன் பின்னால் போனார். பார்த்துக் கொண்டே இருந்த ராமகிருஷ்ணன் முகத்தில் மீண்டும் கவலை தொற்றிக் கொண்டது. அவருக்கு கம்பர்டபுளா இருக்கானு இங்க யாரும் கேட்க போறதும் இல்ல, அத எதிர்பாக்குறது இங்க நம்ம தப்புதான் என்று புலம்பிய மனதிற்கு மூளை பதிலளித்தது . அவன் பின்னால் நடக்க முடியாமல் காலை தத்திக் கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தார் அவர் .

“பேட்டா பாய்ஸ்,” என்று அன்று யூனிட் மேனேஜர் சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது, இப்படி தரக்குறைவாக நடத்துவது புதிதா, இல்லைதான், ஆனால் எப்போதும் போல அன்றும் ஒன்னும் பண்ண முடியவில்லை என்பது இப்படித்தான் எதுவும் பண்ணாமல் ஆகிவிடுவோமோ என்ற எண்ணம் பயத்தைக் கொடுத்தது . கனவுத் தொழிலாம்! சை!

“கரெக்ட்தான… பேட்டா பாய் தான நம் ” என்று மனதைத் தேத்திக் கொண்டான். இது வரை 6 படங்களுக்கு மேல் கோடைரக்டர் ஆக வேலை பார்த்தும், இப்போது காசுக்காக புது யூனிட் உடன் அசிஸ்டன்ட் ஆக இன்னொரு படம். இதை எப்போதுதான் நிறுத்துவது என்று தெரியவில்லை. ஒரு வழியாக கனவையெல்லாம் விட்டுவிட்டு ஊரு பக்கம் போய் வேறு பொழப்பு பாக்கலாம் என்று தோன்றும், அப்படி பல முறை பஸ் ஏறி இருக்கிறான் ஆனால் இறங்கியதில்லை. அப்பயணம் கோடம்பாக்கத்திலேயே வந்து முடியும் .

சாமி அண்ணன் நடக்கையில் கொஞ்சம் நின்று நின்று இளைப்பாறி ஹீரோயின் அறைக்குள் மறைந்து போய்விட்டார்.

” ஷாட் ரெடி ஆகி விட்டதா” என்பது போல நினைப்பை ஒருமுகப்படுத்தினான் ராமகிருஷ்ணன். விக்கி தன் பக்கத்தில் நின்று இருப்பதை அப்போததான் கவனித்தான் ராமகிருஷ்ணன். இந்த படத்தில் டைரக்சன் யூனிட்டில் வேலை செய்யும் அனைவர்க்கும் ராமக்ரிஷ்ணனை தவிர்த்து இதுவே முதல் படம். அதனால் கொஞ்சம் பதட்டம் இருக்கும் அவர்களுக்கு .

அருகில் நிற்கும் விக்கிதான் முதல் அசிஸ்டன்ட் இப்படத்துக்கு. படப்பிடிப்பு ஆரம்பத்தில் சீன் டைரக்சன் பேப்பர் ராமகிருஷ்ணன் தான் மேற்பார்வை செய்துகொண்டிருந்தான், சீனியர் என்ற முறையில். சில நேரங்கள் மனதிற்குள் நினைத்துக் கொள்வான், சீனின் அமைப்பு தப்பாகப் போகிறது, சொல்ல வேண்டும் என்று, ஆனால் இது நம்ம படம் இல்லை அமைதியாக இரு என்று பலமுறை இருந்தும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் சொல்லி விட, அந்த புது பட இயக்குனர் “இது ஏன் படம் நகருயா” என்று சொல்லி விட, சீன் பேப்பரை விக்கி இடம் கொடுத்து விட்டு பின்னால் நின்று கொண்டான் ராம். அங்கிருந்து அப்படியே ஓடி விடலாம் போல தோன்றிய எண்ணத்தை மாற்றிக்கொண்டான் மனதில் பணத்திற்கு என்ன செய்வது என்பது மட்டுமே 24 பிரேமுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

அவசரப்பட்டு விட்டோம் என்று தான் தோன்றியது ராமுக்கு. சிறிது நேரம் ஷூட்டிங் கூட்டத்தில் இருந்து தள்ளி போய் விட்டு வந்தான். அப்போது லைட் மேன் அண்ணன்களுள் ஒருவர், “சரியாதான் சொன்னிங்க தம்பி,” என சொல்ல, ராமின் மனம், ‘சினிமா கொஞ்சம் நமக்கு தெரியும் போல’ என்ற நிம்மதியில் படபடத்தது. ஒரு சக கலைஞனின் பாராட்டு ராமகிருஷ்ணனுக்கு அன்றைய நிகழ்வை மறக்க வைத்தது என்று தான் சொல்லவேண்டும். ஆனால் பணம் அன்று இரவு எந்த தப்பும் என் மேல் இல்லை என்றாலும் தன்னை விட அனுபவத்திலும், வயதிலும் குறைந்த இளம் டைரக்டர் சார் இடம் மன்னிப்பு கேட்கவும் வைத்தது. “நான் செஞ்சது தப்புதான் சார், இனி அப்படி நடக்காது,” என்று சொல்லிவிட்டு பேட்டாவை வாங்கி வந்தான் ராமகிருஷ்ணன். ” மயிராச்சு பணமா மன்னானு தூக்கி எறிஞ்சுட்டு வர இது சினிமாவா, வாழ்க்க, அதுவும் நான் சினிமா எடுக்க போறவன்,” என்று மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அதற்குப் பிறகு ஷூட்டிங்கில் பின் இருந்து மட்டுமே செயல்பட முடிவெடுத்து விட்டான். எல்லாரையும் தப்பாவும் சொல்லமுடியாது. அந்த ஹீரோயினுக்கு எத்தனை பிரச்சனையோ… அந்த டைரக்டர் எத்தனை பிரச்சனையோ…? இப்படி நினைத்து மனதை தேத்திக் கொண்டாலும் ஆறுதல் ஆகவில்லை.

விக்கி தனக்கு இருந்த சில கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். தூரத்தில் அதே லைட் மேன் அண்ணன் அன்பு சிரிப்புடன் தொடர்பு கொண்டார். செட்டில் அனைவரும் கூடத் தொடங்கினர். அடுத்த ஷாட்டிற்கான லைட்டிங் முடிந்து விட்டது.

ஷாட் ரெடி ஆகவிருக்கும் பரபரப்பு அங்குத் தொற்றிக் கொண்டது என்றுதான் சொல்லவேண்டும். ஹீரோயினுக்கு ட்ரெஸ்ஸை கம்பர்டபுளாக மாற்றி விட்டு ஷூட்டிங் நடக்கப் போவதை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பது போல ஒரு செவூரில் சாய்ந்து நின்று கொண்டார் சாமி. அனைவரும் ஹீரோவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர் என்று கொஞ்சம் தாமதமாகவே புரிந்து கொண்டார் அவர் .

கூட்டத்தில் ஒருவனாக தெரியும் ராமகிருஷ்ணனை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டார். தான் கும்பிடும் தெய்வத்திடம் வேண்டியும் கொண்டார். “இவனுக்கு எப்படியோ நல்லது நடந்துறணும். எவனோல வரான் ஜெய்க்குறான், ஆனா எல்லா திறமையும் இருந்து ஒண்ணுமே கிடைக்காம இருக்குறது கஷ்டம், எல்லாம் நேரத்துல கிடைக்கனும் இல்ல நம்ம எடுத்துக்கனும், ஏதோ ஒரு வழிய அவனுக்கு காட்டி விடு முருகா,” என சொல்லி முடிக்கும் போதுதான் ராமகிருஷ்ணன் கையில் வைத்திருக்கும் ஆப்பிள் பாக்ஸ் ஞாபகம் வந்தது.

பாவிப் பையன் நம்ம அப்போ கேட்டதுக்கு ஒன்னும் சொல்லாம விட்டுட்டானே எதுக்கு முட்டி சைசுக்கு என்பது போல நினைக்கையில் அவரின் பார்வையை நம்ப முடியவில்லை. பிரோடுசெர்தான் ஹீரோ என்பது சாமிக்கு ஏற்கனவே தெரிந்தே இருந்தது, ஆனால் செட்டில் மற்றவர்கள் மும்முரமாக இதை பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தனர் என்று இப்போது தான் புரிந்தது. ஆமாம் அது ஹீரோவின் உயரம் பற்றிய பேச்சு என இப்போது தான் புரிந்தது சாமிக்கு.

ஷாட் ரெடி ஆனது. விக்கி சீனை ஹீரோவிடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தான். ஹீரோயின் தன்னுடைய காஸ்ட்டுமில் நன்றாக இருப்பது போலப் பட்டது சாமிக்கு.

சைலன்ஸ், சைலன்ஸ், என டைரக்டர் கத்த அமைதியாக இருந்த செட்டில் எதிரொலித்து கொண்டிருந்தது.

கேமரா யூனிட்.. பிரேம இன்னும் ஹீரோயினுக்கு ஹெட் பின்னாடி மிட் ஷாட் வைங்க கொஞ்ச லெப்ட்ல பிக்ஸ் பண்ணிகோங்க ..” சீட்டில் இருந்து ஓடிச் சென்று டைரக்டர் ஹீரோவிடம், சார் பிரேம் பாத்துரலாம், என சொல்லிவிட்டு வந்து உட்கார்ந்தார்.

ஹீரோ வந்து நிற்க ராமகிருஷ்ணன் தயாராக வைத்திருந்த ஆப்பிள் பாக்ஸை காமெராமேன் மார்க் பண்ணியிருந்த இடத்தில் போட்டான். ஹீரோ அதன் மேல் ஏறி நின்று கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட வசனத்தை நினைவு படுத்திக் கொண்டிருந்தார்.

“சார் கொஞ்சம் லெப்ட்… ஆன் போதும் சார் ஓகே…”

“கேமரா.. . “

“ரோலிங்…. ‘

“ஆக்சன் …’

ஆப்பிள் பாக்ஸை ஷாட் முடிந்து எடுக்கக் காத்திருக்கும் ராமகிருஷ்ணனை இதற்கு மேல் பார்க்க முடியாதது போல சாமி அங்கிருந்து வேகமாக நடக்கத் தொடங்கினார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.