பிறப்பு / குடும்பம் / படிப்பு / பணி பற்றி?
கோவை சிங்காநல்லூரில் 1984ல் பிறந்தேன். ஆபரேஷன் ப்ளூஸ்டாருக்கு இரண்டு மாதங்கள் பின்; இந்திரா காந்தி படுகொலைக்கு இரண்டு மாதங்கள் முன். நடுத்தர வர்க்கக் குடும்பம். தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்பு வழக்கில் பெல்லாரி சிறை சென்றவர். சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றிய என் தந்தைக்குப் பணிமாற்றல் வர, பள்ளிப்படிப்பு முழுக்க ஈரோட்டில். பின் சென்னை அண்ணா பல்கலை.யில் (கிண்டி பொறியியல் கல்லூரி) கணிப்பொறி இயல் படிப்பு. கடந்த பத்தாண்டுகளாக பெங்களூரில் மென்பொருள் தர உத்தரவாதப் பொறியாளர் பணி. காதல் திருமணம். இரண்டு ஆண் பிள்ளைகள்.
முதன் முதலாக எழுதிய கதை / கவிதை?
பள்ளி நாட்களில் பதின்மத்தின் தொடக்கத்தில் எழுத ஆரம்பித்தேன். வாரமலர் பாணி கவிதைகள். 1998 வாக்கில் ‘ப்ரியமுடன் கொலைகாரன்’ என்ற தலைப்பில் ராஜேஷ் குமார் பாதிப்பில் ஒரு நாவல் எழுதினேன். பின் 2001ல் குமுதம் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ என்ற முதல் சிறுகதையை எழுதினேன். இவை இரண்டையுமே இன்னும் பிரசுரிக்கவில்லை. கல்லூரிக் காலங்களில் நிறையக் கவிதைகள் – பெரும்பாலும் வைரமுத்து பாணி புதுக்கவிதைகள். ‘பரத்தை கூற்று’, ‘தேவதை புராணம்’, ‘காதல் அணுக்கள்’ என இதுவரை நான் எழுதியுள்ள கவிதைத் தொகுப்புகளின் ஆதி வடிவம் அந்நாட்களில் எழுதப்பெற்றவை தாம். 2007ல் குங்குமம் வாசகர் கவிதைத் திருவிழாவில் என் ‘ஒருத்தி நினைக்கையிலே…’ வைரமுத்துவால் முத்திரைக்கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அச்சுக்கண்ட என் முதல் எழுத்து அது.
சிறு வயதில் வாசித்தவை? வாசிப்பு படிக்கட்டு?
உத்தேசமாய் இரண்டாம் வகுப்பு படித்த நேரம். என் வீட்டில் குமுதம் வாங்குவார்கள். அதில் வந்த ‘ப்ளாண்டி’ மற்றும் ‘ஃப்ளாஷ் கார்டன்’ காமிக்ஸ் பக்கங்களில் தான் என் வாசிப்பு தொடங்கியது. ஈரோட்டில் நாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர் ‘தின மலர்’ வாங்குவார். வெள்ளியன்று இணைப்பாக வரும் சிறுவர் மலரை வாசிப்பதில் எனக்கும், எனக்குப் பல்லாண்டு மூத்த உரிமையாளர் மகனுக்கும் தகராறு வர, அதன் பொருட்டே என் வீட்டில் ‘தின மலர்’ வாங்கத் தொடங்கினர். அதுவும் வெள்ளியன்று மட்டும். தொடர்ந்து பிற நாளிதழ்களின் சிறுவர் இணைப்புகள் (‘தங்க மலர்’, லேசாய் ‘சிறுவர் மணி’) மற்றும் சிறுவர் இதழ்கள் (‘பூந்தளிர்’, ‘அம்புலி மாமா’) அறிமுகமாகின. அப்புறம் காமிக்ஸ் இதழ்கள் (‘ராணி காமிக்ஸ்’ அப்புறம் சில ‘லயன் காமிக்ஸ்’, ‘முத்து காமிக்ஸ்’) வாசித்தேன். பள்ளிக்கு காமிக்ஸ் எடுத்துப் போய் பிரச்சனையாகி உள்ளது.
இதற்கு அடுத்த கட்டமாய் நாளிதழ்களின் பிற இணைப்புகள் (‘வார மலர்’, ‘கதை மலர்’, ‘குடும்ப மலர்’, கொஞ்சம் ‘தினமணிக் கதிர்’), மாத நாவல்கள் (‘மாலைமதி’, ‘கண்மணி’, ‘ராணி முத்து’), ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல்கள் (உடன் சுபா, பிகேபி) வாசித்தேன். பிறகு பக்கத்து வீட்டுக்காரர் பைண்ட் பண்ணி வைத்திருந்த ‘பொன்னியின் செல்வன்’. கோடை விடுமுறையில் என் அத்தை கிருஷ்ணவேணி அலுவலக நூலகத்திலிருந்து லக்ஷ்மி, ரமணிச் சந்திரன், சாண்டில்யன் நாவல்களை எடுத்து வந்தார். ஒன்பதாம் வகுப்பில் என் தமிழாசிரியை தனலெட்சுமி பாலகுமாரனை அறிமுகம் செய்தார். அதே காலகட்டத்தில் சுஜாதாவும் அறிமுகமானார். இன்றளவும் சுஜாதா என் பேராதர்சம்.
பிறகு குமுதம் வெளியிட்ட தீபாவளிச் சிறப்பிதழ்களின் வழி தான் முதன் முதலாக நவீன இலக்கியப் பரிச்சயம். பதினொன்றாம் வகுப்பில் பள்ளி (ஈரோடு இந்து கல்வி நிலையம்) நூலகத்தில் வைரமுத்து உள்ளிட்ட நிறைய நூல்கள். அது முக்கியமான திறப்பு. பிறகு கல்லூரிக்காக சென்னை வந்ததும் கன்னிமரா நூலகமும், தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகமும் என்னைத் தத்தெடுத்துக் கொண்டன. கணிசமான நவீனப் படைப்பாளிகளை அங்கேதான் வாசித்தேன். ‘ஹிக்கின்பாதம்ஸ்’, ‘லேண்ட்மார்க்’, ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’, ‘எனி இந்தியன் புக்ஸ்’, சென்னை புத்தகக் காட்சிகள் என் புத்தக வேட்டைக்களங்களாயின. சுந்தர ராமசாமியும், ஜெயமோகனும் மிகப் பிடித்த எழுத்தாளர்கள் ஆகினர். வேலைக்குச் சேந்த கடந்த பத்தாண்டுகளில் என் வாசிப்பு கணிசமாய்க் குறைந்து விட்டது. எழுதவே நேரமிருப்பதில்லை என்பது முக்கியக் காரணம். இதைச் சொல்கையில் வருத்தமும் அவமானமும் ஒருசேர எழுகிறது.
எப்போது எழுத்தாளாராக உணர்ந்தீர்கள்?
பதின்மங்களின் தொடக்கத்தில் என நினைக்கிறேன். எனக்கு எழுத வேண்டும் என்ற ஆசையே ராஜேஷ் குமாரின் ‘எவரெஸ்ட் தொட்டு விடும் உயரம்தான்’ நாவலை வாசித்துத் தான் உண்டானது. அது அவரது சுயசரிதை நூல். தான் எழுதிய முதல் கதைகள், பிரசுரத்திற்குச் செய்த முயற்சிகள், பத்திரிக்கை ஆசிரியர்களுடனான அனுபவங்கள், குடும்பத்தாரின் எதிர்வினை என்பதை எல்லாம் ஒரு சுயமுன்னேற்றப் பாணியில் அதில் சொல்லி இருப்பார். பதினொன்றாம் வகுப்பில் ‘My Role Model’ எனக் கட்டுரை எழுதச் சொன்ன போது சுஜாதாவைத் தான் முன்மாதிரியாகக் குறிப்பிட்டு எழுதினேன். அவரைப் போல் சிறந்த பொறியாளனாகவும், தேர்ந்த எழுத்தாளனாகவும் வர வேண்டும் எனச் சொல்லி இருந்தேன். அப்போது யாஹூவில் என் முதல் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிய போது writercsk என்றே கொடுத்தேன். அதுவும் சுஜாதாவின் பாதிப்பில் தான். பின் Geocities-ல் ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கிய போதும், எனக்கான வலைதளத்தை உருவாக்கிய போதும், ட்விட்டர் கணக்குத் துவங்கிய போதும் அப்பெயரையே தொடர்ந்தேன். அந்தக் காலகட்டத்தில் நான் எழுத்தாளன் என்பதற்கான எந்த நிரூபணத்தையும் செய்யாத சமயத்தில் ‘ரைட்டர்’ என்ற அந்த முன்னொட்டு கடும் கேலிகளை உருவாக்கியது. இன்று ஓரளவுக்கு அதற்கான படைப்புகளை எழுதி விட்ட போதிலும் கூட அது தொடரவே செய்கிறது.
கவிதை, சிறுகதை, நாவல் என மூன்று வடிவங்களிலும் இயங்கி இருக்கிறீர்கள். எது தங்களுக்கான வடிவம் என எண்ணுகிறீர்கள்? எது சவாலான வடிவம்?
இவை போக அபுனைவு என்பதையும் நான்காவதாய் இதில் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கான வடிவம் எது என அறுதியிட்டுச் சொல்லும் காலம் இன்னும் வரவில்லை என நினைக்கிறேன். தொடர்ந்து எழுதினால் அடுத்த பத்தாண்டுகளில் தெரிய வரலாம். இதுவரையிலான எழுத்து அனுபவத்தில் சிறுகதையே எனக்குப் பிடித்த வடிவமாக இருக்கிறது. கவிதை, நாவல், அபுனைவை விடவும். ஒரே ஒரு நாவல் எழுதியுள்ள குறுகிய அனுபவத்தில் நாவல் வடிவம் என்பது சிறுகதை போல் சவாலாக எனக்குத் தோன்றவில்லை. நாவலுக்கு உழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம். அவ்வளவு தான்.
காந்தியை மையமாக கொண்டு ஒரு புனைவை எழுத வேண்டும் என்றொரு எண்ணம் உதித்தது எப்போது?
காந்தி பற்றிய முதல் சித்திரம் என் தாத்தாவின் வழியாகவே என்னை வந்தடைந்தது. எந்தவொரு இந்தியப் பள்ளி மாணவனையும் போல் பால்யத்தில் காந்தி என்பவர் மஹாத்மா என்பதில் தொடங்கி, பின் காந்தி போலியானவர், நேதாஜியே அசலான சுதந்திரப் போராளி என்று எண்ணும் பதின்மங்களைக் கடந்து தான் நானும் வந்தேன்.
பின் கமல் ஹாசனின் ‘ஹே ராம்’ திரைப்படம் ஒரு முக்கியமான திறப்பு. அதைத் தொடர்ந்து தான் காந்தியின் சுயசரிதையான ‘சத்திய சோதனை’ நூலை வாசித்தேன். 2009ல் என் முதல் நூல் ‘சந்திரயான்’ வெளியான பின் நான் எழுத விரும்பிய நூல் காந்தி கொலை வழக்கு பற்றியது. அதற்காக நிறைய நூல்களை வாசித்திருந்தேன். ஆனால் அம்முயற்சி கைகூடவில்லை. (பிற்பாடு என். சொக்கன் அதை எழுதினார்.)
அப்புறம் ‘காலச்சுவடு’, ‘தீராநதி’, ‘உயிர்மை’ முதலான இலக்கியச் சிற்றிதழ்களில் வந்த காந்தி குறித்த சில கட்டுரைகளும் விசாலமான பார்வையைப் பெற உதவின. இவை எல்லாவற்றுக்கும் மேல் ஜெயமோகன் காந்தி குறித்து தன் தளத்தில் செய்த தொடர் விவாதங்கள் (பிற்பாடு இவை ‘இன்றைய காந்தி’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டன). காந்தியை நான் முழுக்க மறுஅறிமுகம் செய்து கொண்டது அவற்றின் வழியாகவே.
காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஏற்கனவே நான் அரசல் புரசலாகக் கேள்வியுற்றிருந்தாலும் மேற்சொன்ன விவாதத்தில் இடம்பெற்ற ‘காந்தியும் காமமும்’ என்ற தலைப்பிலான நான்கு கட்டுரைகள் தாம் அது பற்றிய விரிந்த தகவல்களையும் கருத்துக்களையும் அளித்தன. அங்கே இந்நாவலுக்கான விதை முதலில் விழுந்தது. ஆனால் முளைத்துக் கிளைத்து விருட்சமாக சுமார் எட்டாண்டுகள் பிடித்திருக்கிறது.
ஒரு ஆராய்ச்சி அபுனைவு நூலாக இல்லாமல் புனைவாக எழுதியதற்கு ஏதேனும் தனித்த காரணங்கள் உண்டா ?
காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஓர் அபுனைவு நூல் எழுத முடியும். சிலர் ஆங்கிலத்தில் எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இவ்விஷயம் தொடர்பான விடுபடல்கள் ஒரு புனைவுக்குரிய சாத்தியத்தை அளிப்பதாகப்பட்டது. அதாவது இதில் ஒரு Drama இருந்தது. குறிப்பாக நாவலுக்குரிய கேன்வாஸ் இது எனத் தோன்றியது. புனைவு வடிவில் இதை எழுதக் கூடுதல் சுதந்திரமும் உண்டு என்பதை உணர்ந்தேன். கேத்ரின் க்ளமெண்ட் எழுதிய Edwina and Nehru ஓர் உதாரணம்.
என் முதல் நாவலை எழுத ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேலாக யோசித்து வந்தேன். இதை என் முதல் நாவலாகக் கொண்டால் நல்லது என்றும் எண்ணம் வந்தது. ஒரு கட்டத்தில் புத்தகக் காட்சிக்குள் நாவலை எழுத அவகாசம் இல்லை எனும் போது அபுனைவு நூலாக எழுதி விடலாமா என்று கூடத் தோன்றியிருக்கிறது. எழுத்தாளர் என். சொக்கன் தனிப்பேச்சில் இதை அபுனைவாக எழுதியிருக்க வேண்டும் என்று அங்கலாய்த்தார். நாவலாக வரவில்லை என்றால் அபுனைவாய் எழுதியிருப்பேன்.
இன்னும் சொல்லப் போனால் இஃது நாவல் என்றாலும் உள்ளடக்கத்தை வைத்துப் பார்க்கும் போது அபுனைவுக்கும் புனைவுக்கும் இடைப்பட்ட படைப்புதான் என்பேன்.
காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகள் குறித்து தற்காலத்தில் எழுதுவதற்கான தேவை என்ன? காந்தியை மையமாக கொண்ட களம் என்றாலும், குறிப்பாக பிரம்மச்சரிய பரிசோதனைகளை நாவலின் பின்புலமாக கொண்டு எழுதியதற்கு என்ன தூண்டுதல்?
லட்சக்கணக்கான பக்கங்கள் காந்தியைப் பற்றி எழுதப்பட்டு விட்டாலும் அவர்களில் பெரும்பாலானோர் காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகளை மழுப்பலாகவே கடந்து விடுகிறார்கள். எனில் அவர் மஹாத்மா என நம்புவோர் கூட இவ்விஷயத்தில் மட்டும் பிழை செய்திருக்கிறார் என நினைக்கிறார்கள் என்று தானே அர்த்தம்! இதன் இன்னொரு முனையில் அவர் பெண்களைப் பரிசோதனைப்பண்டமாகப் பயன்படுத்திய ஆணாதிக்கவாதி என்ற ரீதியில் அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தவர்களும் உண்டு. அதனால் தான் பழுப்பாய் நின்ற அந்த பகுதியை நெருங்கிப் பார்க்க ஆசைப்பட்டேன்.
இன்னொரு விஷயம்: ஆரம்பம் முதல் என் எழுத்துக்களில் காமம் என்ற அம்சம் தொடர்ந்து மையச் சரடாக அல்லது பிரதான இழைகளில் ஒன்றாக இருக்கிறது. தணிக்கைச் சிக்கல்கள் குறைந்த என் சமூக வலைதள எழுத்துக்களில் இது வெளிப்படையாகத் துலங்கும். ரமேஷ் வைத்யா கூட இது பற்றி, விடலைத்தனம் இன்னும் விடவில்லை, எனக் குறிப்பிட்டார். அதுவும் காரணம் என நினைக்கிறேன். மஹாத்மாவைப் பற்றி எழுத எடுத்தால் கூட காமம்தான் முன்னே வந்து நிற்கிறது!
இந்த நாவலை எழுதுவதற்கு உங்களுக்கு ஒன்றரை மாதம் தான் ஆனது என்பது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. எனினும் பின்புல தயாரிப்புக்கு எத்தனை காலம் ஆனது? என்னவிதமான நூல்களை வாசித்தீர்கள்? நாவலின் இறுதியில் நூற்பட்டியல் இருக்கிறது. அந்நூல்கள் உங்கள் புரிதலை எப்படி செம்மையாக்கியது?
பின்புலத் தயாரிப்புக்குக் கூடுதலாய் ஒரு மாதம் ஆகி இருக்கும். தொடர்ச்சியாக அல்லாமல் ஆறேழு மாதங்களாக அவ்வப்போது வாசித்துக் கொண்டிருந்தேன் – திட்டமிட்டு என்றில்லாமல் தொடர்புடைய நூல்கள் அறிமுகம் ஆகும் போதெல்லாம் அல்லது கிடைக்கும் போதெல்லாம். காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றிய கிர்ஜா குமாரின் இரண்டு நூல்கள், ஜாட் ஆடம்ஸின் ‘Gandhi: Naked Ambition’, மநுவின் டைரிகள் குறித்த ‘இந்தியா டுடே’ சிறப்பிதழ், காந்தியின் உதவியாளர் நிர்மல் போஸ் எழுதிய ‘My Days with Gandhi’ என்ற நூல் ஆகியன முக்கியமாய்ப் பயன்பட்டன. இன்னொரு விஷயம் இந்நூல்களில் என்னுடைய நாவலுக்கு அவசியப்படும் எனத் தோன்றிய பகுதிகளை மட்டுமே வாசித்தேன். அதனால் படிக்கும் நேரம் குறைந்தது.
சம்பவங்களின் கால வரிசை, இடம் மற்றும் பிற விவரங்களை இந்நூல்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. நாவல் அசல் வரலாற்றுக்கு அருகிலானது என்பதால் இது தேவைப்பட்டது. தவிர, பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றிய வெவ்வேறு கோணங்களை இவை எனக்கு அளித்தன. அவற்றின் அடிப்படையிலும், பொதுவான மானுட உளவியல் சார்ந்தும் காந்தி, மநு, மற்றும் பிறர் தரப்பு என்னவாயிருக்கும் என்பது பற்றிய புரிதலை வந்தடைந்தேன். அதுவே நூல்களின் முக்கியப் பங்களிப்பு.
நாவலுக்கு என்னவிதமான கவனம் கிட்டியது? விமர்சனங்கள் எத்தகையவை?
நாவலுக்குப் போதிய கவனம் கிட்டவில்லை என்ற மனக்குறை இருக்கிறது. ரமேஷ் வைத்யா புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய உரை ஒரு பரபரப்பான அறிமுகம். பா.ராகவன், சித்துராஜ் பொன்ராஜ் மற்றும் நீங்கள் ஃபேஸ்புக்கில் நாவல் பற்றிய சிறு குறிப்புகள் எழுதினீர்கள். சென்னை காந்தி கல்வி நிலைய சேர்மன் மோகன் நாவலைப் பாராட்டி மின்னஞ்சல் செய்திருந்தார். அபிலாஷ் ஒரு நல்ல விமர்சனக் கட்டுரை எழுதினார். இந்த 9 மாதங்களில் வந்த முதலும் கடைசியுமான கட்டுரை அதுவே. தமிழ்ச் சூழலில் இதுவே அதிகபட்சம் என்று திருப்திப்பட முகாந்திரமுண்டு என்றாலும் இந்நாவல் இன்னும் கொஞ்சம் கூடுதல் வாசக உரையாடலுக்குத் தகுதி பெற்றது என நம்புகிறேன். அதனால் அதைச் சந்தைப்படுத்தும் நோக்கில் சமீபத்தில் விமர்சனக் கட்டுரைப் போட்டி ஒன்றை நானே அறிவித்திருக்கிறேன். பார்க்கலாம்.
காந்தியை புரிந்து கொள்ள இந்நாவல் உதவுகிறது. ஆனால் அதைத் தாண்டி நாவலுக்கு என்றிருக்கும் எக்காலத்திற்கும் உரிய அறக் கேள்வியை நாவல் அடையவில்லை எனும் விமர்சனத்தைப் பற்றி? மேலும் காந்தியை இன்று ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறதா? குறிப்பாக பிரம்மச்சரிய தலம் சார்ந்து?
‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை நீண்ட சிறுகதையாகப் பார்ப்போரும் உண்டு. அதாவது நாவல் என்பதற்கான பல கோண தரிசனம் போதுமான அளவு திரளவில்லை என்ற பொருளில். இருக்கலாம். அதன் அபுனைவுத்தன்மை பற்றிக் கவலை வெளியிட்டோர் உண்டு. படைப்பின் தரம் பற்றிய விமர்சனங்களுக்கு – அது பாராட்டு என்றாலும் கூட – எழுத்தாளன் பதிலளிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். அது ஒரு சங்கடம். ஆனால் நான் விமர்சனங்கள் எவற்றையும் உதாசீனம் செய்வதில்லை. அவற்றைப் பொருட்படுத்திப் பரிசீலித்து எனக்குச் சரி எனத் தோன்றுவனவற்றை என் எதிர்காலப் படைப்புகளுக்கான உள்ளீடாகக் கொள்கிறேன். இதற்கும் அதைச் செய்ய வேண்டும்.
காந்தியம் இன்னும் காலாவதியாகவில்லை என நான் நம்புகிறேன். அதன் அவசியம் நிச்சயம் இருக்கிறது. குறிப்பாக அவரது அஹிம்சை என்ற போதனை. இன்றைய சகிப்பின்மை நிறைந்த சூழலில் காந்தி நம் நாட்டிற்கு தேவைப்படும் சிந்தாந்தவாதி. அதனால் அவரை மறுவாசிப்பு செய்ய வேண்டியது அவசியமானது. பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றி ஏன் பேச வேண்டி இருக்கிறது எனில் காந்தியின் பிழையான கருத்தாக்கங்களையும் நாம் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் தான் (அவரே போதித்த சத்தியம்). அதை மட்டும் கள்ளத்தனமாய்ப் பேசாது கடக்கும் ஒவ்வொரு முறையும் காந்தியை அவமதிக்கிறோம். முக்கால் நூற்றாண்டு முன் அவரே முற்போக்காக அது பற்றிப் பொதுவெளியில் பேச விரும்பினார். இன்று இத்தனை முன்னேறிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டு நாம் ஏன் தயங்க வேண்டும்?
‘மின் தமிழ்’ மின்னிதழ் பற்றி, அதன் நோக்கம் செயல்பாடுகள், செயல்திட்டங்கள்.
தமிழ் மின்னிதழ் தொடங்கிய போது இருந்த உத்வேகம் இப்போது இல்லை என்றே சொல்வேன். நான் மிக விரும்பும் எழுத்தாளர்களை விரிவான நேர்காணல்கள் செய்ய வேண்டும் என்பதுதான் இதழின் பிரதான நோக்கமாக இருந்தது. ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள் முருகன் என அது திருப்திகரமாகச் சாத்தியமானது. அடுத்து இணையத்தில் புதிய எழுத்துக்களுக்கான ஒரு களமாக அது இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் இன்றைய சமூக வலைதள யுகத்தில் அதற்கான தேவை இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்த இதழில் கிடைத்த அனுபவம் கொண்டு அப்படியான தளமேதும் இன்று தேவையில்லை என்பதாகப் புரிந்து கொள்கிறேன்.
தவிர, சொந்த வாழ்வியல் அழுத்தங்கள், என் எழுத்து வேலைகள் தாண்டி இதழுக்கு நேரம் ஒதுக்குவது சிரமமானதாக இருக்கிறது. அது முழுமையாய் என் இதழாகவே இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருப்பதால் ஆசிரியர் குழு ஒன்று வைத்துக் கொள்வதில் விருப்பமில்லை. அதனால் தான் காலாண்டிதழாகத் தொடங்கப்பட்ட தமிழ் இப்போது தேவைப்படும் நேரத்தில் மட்டும் வருகிறது. உதாரணமாய் அடுத்து வரப்போவது கலைஞர் சிறப்பிதழ். இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியாகக்கூடும்.
ஆதர்ச எழுத்தாளர் – தமிழ்/ பிற மொழி யார்?
ஏற்கனவே இந்நேர்காணலில் பிடித்த எழுத்தாளர்கள் என்பதாக ஆங்காங்கே சிலரைக் குறிப்பிட்டிருந்தேன். ஒரே ஒருவர் மட்டுமே சொல்ல வேண்டுமெனில் ஜெயமோகன். புனைவு மட்டுமின்றி மற்ற விஷயங்களிலும், தனி வாழ்விலும் கூட அவர் எனக்கு வழிகாட்டி. ஆங்கிலத்தில் நான் பெரும்பாலும் அபுனைவு தான் வாசித்திருக்கிறேன். அதுவும் குறைவான அளவில். அதனால் பிடித்த எழுத்தாளர் எனக் குறிப்பிட்டுச் சொல்லுதல் சரி வராது. ஆனாலும் அப்படி ஒருவரைச் சொல்ல விரும்புகிறேன். அவர் எழுத்தாளர் அல்ல; திரைப்பட இயக்குநர். கிறிஸ்டோஃபர் நோலன். அவரது திரைக்கதைகள் போலத்தான் என் புனைகதைகள் உள்ளன என எண்ணுவதுண்டு.
சமூக ஊடக பயன்பாடு படைப்பூக்கத்தை பாதிக்கிறதா? உங்கள் படைப்பிற்கு ஏதேனும் ஒரு வகையில் சமூக ஊடக செயல்பாடு பங்காற்றுகிறதா?
சமூக ஊடகங்களில் நான் இருக்க இரண்டு காரணங்கள்: சமகால விஷயங்களில் என் கருத்துக்களைப் பதிவு செய்தல், என் மற்ற எழுத்துக்களுக்களைச் சந்தைப்படுத்துதல். இதில் இரண்டாவது எவ்வளவு தூரம் சாத்தியப்படுகிறது என்பதில் குழப்பங்களுண்டு. இது போக தொடர்ச்சியாய் எழுதிப் பயிற்சியெடுக்கும் வாய்ப்பை சமூக வலைதளங்கள் வழங்குகின்றன. அதனால் மொழிக்கிடங்கு வனப்புறும் என நினைக்கிறேன். ஆனால் சரவணன் சந்திரன் சமீபத்தில் பேசிய போது சமூக வலைதளச் செயல்பாடுகளினால் என் பிரதானப் படைப்புகளில் மொழி சில இடங்களில் தொய்வுறுகிறது என்றார். நான் இன்னும் அதைத் தீவிரமாக ஆராயப் புகவில்லை. கவனிக்க வேண்டும். பொதுவாகவே சமூக வலைதளங்களில் நேர விரயம் அதிகம். அதன் பொருட்டு அதைக் குறைத்துக் கொள்வதே படைப்பாளிகளுக்கு நல்லது. அவற்றை விட்டுப் பூரணமாக வெளியேற வேண்டும் என்றில்லை; ஆனால் எதற்குப் பயன்படுத்துகிறோம், எவ்வளவு நேரம் இருக்கிறோம், பக்கவிளைவு என்ன என்பதில் ப்ரக்ஞைப்பூர்வமாக இருக்க வேண்டும்.
அடுத்து என்ன எழுத இருக்கிறீர்கள்?
எண்ணத்தில் உருவாகி இன்னும் எழுதப்படாமல் குறைந்தது பத்து சிறுகதைகள் உண்டு. பிற்காலச்சோழர் வரலாற்றை ஒட்டிய ஒரு த்ரில்லர் நாவலும், இன்றைய தேதியில் ஆக முக்கியமானதென நான் கருதும் ஒரு சமூகப் பிரச்சனை குறித்த ஒரு நாவலும் மனதில் இருக்கின்றன. நாத்திகத்தின் வரலாற்றை விரித்தெழுதும் திட்டமிருக்கிறது. இளையராஜாவின் வாழ்க்கையை வசன கவிதை நடையில் எழுத விரும்புகிறேன். கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’யைச் சுருக்கி எழுதி வருகிறேன் – மூன்றாண்டுகளில் முடிக்கத் திட்டம். ஆசைகள் ஆயிரம் இருந்தும் செயலாக்க நேரம் போதவில்லை.
இப்போது ஒரு நாவல் வேலையைத் தொடங்கி இருக்கிறேன். தலைப்பு ‘ஜெய் பீம்’. எல்லாம் சரியாக நடந்தால் வரும் சென்னைப் புத்தகக் காட்சிக்கு வெளியாகும்.
எதற்காக எழுதுகிறேன்? என்றொரு வினா எழுப்பினால் உங்கள் பதில்?
கலவி எதற்கு எனக் கேட்போமா? குழந்தைப்பேறு தான் காரணமா என்ன? அதைப் போல் எழுதுவது மகிழ்ச்சி தருகிறது என்பது தான் பிரதான காரணம். ஒவ்வொரு படைப்பை நிறைவு செய்கையிலும் ஒரு கணம் கடவுளைப் போல் உணர்கிறேன். சொற்களில் விவரிக்க இயலா ஒரு மனோஉச்சம் அது. அது போக எழுத்தானது வாழ்வதற்கான உந்து சக்தியாக இருக்கிறது. எப்படி எனச் சொல்கிறேன். ஒவ்வொரு மனிதனுமே மானுட குல முன்னேற்றத்துக்கு ஏதோ விதத்தில் உதவி செய்கிறான். ஒன்று மனித இனத்தின் நேரடி முன்னேற்றத்துக்கான பங்களிப்பு. மற்றது சமகாலச் சமூகத்துக்கு உதவி செய்வதன் மூலம் பங்களிப்பது. விவசாயம் செய்தல், அரசுப் பணி, மருத்துவர்கள், பொறியாளர்கள் எனப் பெரும்பாலான வேலைகள் இரண்டாம் வகையில் வரும். விஞ்ஞானிகள், சில கலைஞர்கள், தத்துவ ஞானிகள், குறிப்பிட்ட அரசியல் தலைவர்கள் போன்றவர்கள் முதல் வகை. எழுத்தாளர்களும் அதே வகை தான். அதனால் அது ஒரு மதிப்புமிக்க வேலை என நம்புகிறேன். வாழ்க்கை குறித்த சலிப்பு ஏற்படும் போதெல்லாம் இன்னும் மானுட குலத்துக்கு நான் செய்ய வேண்டிய பங்களிப்பு பாக்கி இருக்கிறது என்ற எண்ணம் எழுந்து வர எழுத்து காரணமாகிறது. எழுத்தால் வரும் பாராட்டு, புகழ், விருது, மரியாதை என்பதெல்லாம் பிற்பாடு தான்.
***