தேஜூசிவன்
குறையொன்றுமில்லை மறைமூர்த்திக் கண்ணா…
மொபைல் பாடியது.
“என்ன ராம், எப்டி இருக்கே?”
“அது இருக்கட்டும் ரகு. அந்தப் பையன் ஃபோனை எடுக்கவே மாட்டேங்குறான்.”
“எந்தப் பையன்?”
“கிறிஸ்டோஃபர்.”
“ஓ.. உனக்கு விஷயம் தெரியாதா?’
“என்ன?”
“அவன் அப்பா திடீர்னு தீ பிடிச்சு எரிஞ்சுட்டார்.”
“வாட்?”
“ஆமாம். முந்தா நாள் நைட். எப்டின்னே தெரில.”
“என்னாச்சு அவருக்கு?”
”எய்ட்டி பெர்செண்ட் பர்ன். நேத்தைக்கு நைட் இறந்துட்டார்.”
”ஓ… மை காட்”.
“என்ன ராம்?”
“அவன உடனே இங்க வரச் சொல்லணுமே.”
“ இப்ப எப்டி அவனால உடனே வர முடியும். அப்படி என்ன உயிர் போற அவசரம்?”
“உயிரு போறதுக்குள்ற வரச் சொல்.”
“என்ன உளர்றே?”
“ஆமாம். எல்லாத்துக்கும் நீ தான் காரணம்.”
”புரியல ராம், என்ன விஷயம்?”
“அவன் ஒரு புத்தகம் என்கிட்ட கொடுத்தானே.”
“ம்… எதோ உலோகத் தகடுல செய்யப் பட்ட புத்தகம். அவனோட அப்பா எங்கிருந்தோ எடுத்துட்டு வந்ததா சொன்னான். ஏதோ புரியாத எழுத்துக்கள் இருந்ததுன்னு கேட்டான். ”
“அந்த புத்தகம் ஒரு மரணப் புத்தகம்.”
“என்ன சொல்றே?”
“ஆமாம்.. அது பாளி மொழியில் எழுதப்பட்ட புத்தகம்.”
“பாலி?”
“நோ. பாளி. ”
“சரி. உன்னால படிக்க முடிஞ்சுதா? அப்டி என்ன எழுதியிருந்தது அதுல?”
“ 29ம் புத்தர் அவதரிப்பார். அவர் விரல் பட்டதும் இந்தப் புத்தகம் ஒளிர்ந்து உயிர் பெற்று எழும்னு இருந்தது.”
“என்ன?”
“நமக்கெல்லாம் தெரிஞ்ச சித்தார்த்தன் என்கிற கெளதம புத்தர் 28வது புத்தர்.”
“ஓ.”
“சரி இருக்கட்டும். அதுக்கு இப்ப என்ன?”
“மத்தவங்க கை பட்டா அவர்கள் ஐந்து நாட்களுக்குள் இறந்து விடுவார்கள். இன்று அந்த புத்தகத்தை நான் வாங்கி ரெண்டாவது நாள்.”
“அப்ப கிறிஸ்டோஃபரோட அப்பா…”
“ஆமாம். ”
“சே… சே… இது ஒரு கோயின்சிடெண்ஸ்.”
“இல்ல… எனக்கு அப்டி தோணலை. அடுத்து கிறிஸ்டோஃபர்.”
“உடனே அந்த புக்கை தூக்கி குப்பைத் தொட்டில வீசியெறி…”
“அப்பவே எறிஞ்சுட்டேன். சரி, எதுக்கும் அவன்கிட்ட பேசிப் பாரு.”
“வை. அவன் கிட்ட பேசிட்டு சொல்றேன்.”
ரிங் போய்க்கொண்டே இருந்தது.
“கிறிஸ்டோஃபர்.”
“யார் சார் நீங்க?”
“ரகுராமன். .. நீங்க?”
”அவனோட அண்ணன். உங்களுக்கு விஷயம் தெரியாதா?”
“தெரியும். அவரோட அப்பா இறந்துட்டாருன்னு கேள்விப்பட்டேன்.”
“அது நேத்தைக்கு. இன்னைக்கு கிரிஸ்டோஃபரும் போய்ட்டான். மாஸிவ் அட்டாக்.”
ரகுராமனுக்கு பயத்தில் நடுங்கியது.
வனரோஜா அவனைக் கை நீட்டி அழைத்தாள்.
மாரி முறைத்துக் கொண்டே வந்தான்.
“இன்னைக்கு திங்கக்கிழமை. லோடு நெறய இருக்கும். என்னால இத தள்ள முடியலை. இன்னைக்கு என்கூட வாயேன்.”
“இந்த குப்பை வண்டி நாறும். நா வர்ல.”
“நீ ஒழுங்கா காசு கொடுத்தா நான் ஏன் இதப் புடிச்சு தள்றேன்.”
“ஒழுங்கா காசு கொடுத்துட்டா நீ உடனே பத்து மாசத்துல புள்ளய பெத்துக் கொடுத்துடுவியாக்கும்..”
சட்டென உடைந்து அழுதாள்.
“சரி.. சரி.. ஒண்ணும் சொல்லலை. கவலப் படாதே. நம்ப கருப்பன் நம்பள கை விடமாட்டான். கொடு நான் தள்றேன் ரோஜா.”
ஆற்றில் இருகரை தொட்டு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.
“இந்தக் கரைல எப்டி தினமும் இந்த வண்டியைத் தள்ளிட்டு போறே ரோஜா?”
“என்ன பண்றது. நல்ல ரோட்டோட போனா சுத்திட்டு போவணும். இது குறுக்கு வழி.”
குப்பைக் கிடங்கில் நாற்றமடிக்கும் சிறு சிறு குன்றுகள்.
”என்னா இந்த வண்டியைத் தள்ளவே முடியல.”
”நல்லா தம் கட்டி தள்ளு. நேத்து மழை பெஞ்சுதுல்ல அதான்.”
வண்டியைச் சாய்க்கும் போது அது சரிந்து விழுந்தது.
வனரோஜா குனிந்து எடுத்தாள்.
கம்பியில் கோர்க்கப் பட்ட உலோகத் தகடுகள்.
“என்னய்யா இது?”
வாங்கிப் பார்த்தான்.
“புத்தகம் மாதிரி இருக்கு.”
‘ஆமாம். யாராச்சும் தகரத்துல புத்தகம் செய்வாங்களா?”
“அடி லூசு. இது தகரமில்லே. வேற ஏதோ ஒண்ணு. நம்ப பாய் கிட்ட கொடுத்தா சொல்வார்.”
“சரி எடுத்துக்கோ. ஒனக்கு குடிக்க காசு கிடச்சுடுச்சு.”
திரெளபதி அம்மன் படித்துறை அருகில் வரும் போது ஏதோ சப்தம் கேட்டது.
வனரோஜா அவன் கை தொட்டாள்.
“தே… என்னமோ சப்தம் கேக்குதுல்ல…”
நின்றார்கள்.
“ஆமா.”
தேடினார்கள்.
மெலிதான குழந்தை அழுகுரல்.
அவள் தடதடவென படிக்கட்டுகளில் இறங்கினாள்.
தண்ணீரைத் தொட்டுக் கொண்டிருந்த படிக்கட்டில் ஒரு பிரம்புக் கூடை.
அதில் அந்தக் குழந்தை கால்களை உதைத்துக் கொண்டிருந்தது.
“அடிபாதகத்தி.”
அவள் கூவினாள்.
அவன் அவள் வாய் பொத்தினான்.
குழந்தையை அள்ளித் தூக்கினாள்.
அவன் அதட்டினான்.
”ஏய்.. என்னாது? கீழ போடு..”
“புள்ள..”
“தொடாத.. யாருதோ இது.தெரிஞ்சா நமக்கு பிரச்னையாய்டும்.”
“வேண்டான்னு தானே இத இங்க போட்டுருக்கா பாவி. நம்ப எடுத்துக்குவோம்.”
ஏய், என்னா?”
“கூவாத. நம்ப கருப்பன் சாமி கொடுத்தது.”
“வேண்டாம் ரோஜா. வம்பாய்டும்.. “
“அட இத பாரு. எப்டி சிரிக்குது.. யாராவது வந்து கேட்டா கொடுத்துடுவோம்.”
”ஆமா.. போலீசு வந்து தான் கேக்கும்.”
“யோவ். இத நாம வச்சுக்குவோம்.”
மாரி சுற்று முற்றும் பார்த்தான்.
யாருமில்லை.
“கிட்டக்க வா. மறச்சுட்டு போய்டலாம்.”
குழந்தையுடன் அருகில் வந்தாள்.
நெருங்கும் போது குழந்தையின் கை அந்தப் புத்தகத்தின் மீது பட்டது.
வானில் ஓர் இடி.
தீப்பிடித்தது போல் அந்தப் புத்தகம் ஒளிர ஆரம்பித்தது.
”ரோஜா இங்க பாரு.”
பயத்தில் கண்கள் விரிந்தன.
குழந்தை அவர்களைப் பார்த்து மெலிதாகச் சிரித்தது.
“அத… அத… ஆத்துல தூக்கி எறி.”
கை உயர்த்தி அந்தப் புத்தகத்தை தூக்கி எறிந்தான்.
மிகச் சரியாக ஆற்றின் மையத்தில் விழுந்து ப்ளக் எனும் சப்தத்துடன் மூழ்க ஆரம்பித்தது.
“வா ஓடிடலாம்.”
வலதுபுறத் தோளில் குழந்தையை மாற்றிக் கொண்டாள்.
அவர்கள் வேகமாக ஓட ஆரம்பித்தார்கள்.
குழந்தை அவள் பின்னங்கழுத்தின் வழியாக நீரோட்டத்தைப் பார்த்துக் கொண்டே வந்தது.
ஆற்றின் மையத்தில் சின்னதாக ஒரு சுழல் மேலெழும்பியது.
நீரிலிருந்து அந்தப் புத்தகம் சரேலென வெளி கிளம்பியது.
அதன் இரு உலோகப் பக்கங்களும் இரு சிறகுகளென விரிந்தன. விர்ர்ரெனும் சப்தத்துடன் அந்தப் புத்தகம் மேலுயர்ந்தது.
லேசாக காற்றிலாடி ஓர் அறுந்த பட்டம் போல் அவர்களைப் பின் தொடர ஆரம்பித்தது.