Author: பதாகை

முகவரியற்ற புன்னகை

சிவகுமார்

பழுத்தோலை
குருத்தோலைக்கு
உயிர்(வளி) தந்து
உயிர்ப்பித்து
உதிர்கின்றது
முதிர் புன்னகையுடன்

பேரிடர் காலத்தில்
புகலிடமாகின்றன
கோவில்கள், தேவாலயங்கள்,
மசூதிகள்
அடைக்கலம் அளித்தவர்களின்
முகங்களில் பூத்திருக்கும் சமயமற்ற
சகோதரத்துவப் புன்னகை

இரத்த சம்பந்தங்களின்
அறுவை சிகிச்சைக்கு
இரத்தத்திற்கு அல்லாடுகையில்
இரத்த சம்பந்தமே
இல்லாதவர் உவந்தளிக்கும்
இரத்தத்தில் பூத்திருக்கும்
மரணிக்காத
மனிதப் புன்னகை

இன்னா செய்தாரை அவர் நாண
நன்னயம் செய்வதில்
மறைந்திருக்கும்
வெற்றிப் புன்னகை

ஈருருளியில் விரைகையில்
அண்ணா! சைட் ஸ்டாண்ட்
என எச்சரிக்கும்
முகமறியா
நலன் விரும்பியை
நினைத்து மனதில் பூக்கும்
முகவரியற்ற
நன்றிப் புன்னகை

குழந்தைகளை
பாலூட்டி சோறூட்டி
சீராட்டி வளர்த்து
ஆளாக்கி
சமுதாயவீதியில் கம்பீரமாக
உலவுவதை வாசற்படியில்
நின்று இரசிக்கும்
அன்னைகளிடம் தஞ்சமடைந்திருக்கின்றன
முகவரியற்ற
தியாகப் புன்னகைகள்

கலி முற்றினும்
எத்தனையோ
முகவரியற்ற புன்னகைகளால் தான்
இன்றும் நிற்காமல்
சுற்றிக் கொண்டிருக்கிறது
பூமி
கொஞ்சம் கண்துஞ்சி ஓய்வெடுக்கிறார்
சாமி

பித்து வெடிப்புக் கோட்பாடு

இரா. கவியரசு 

மிகப்பிரம்மாண்டமான
மஞ்சள் மலரின் இதழ்கள்
விரிந்து பரவும் திசையெங்கும்
சூம்பியிருக்கும் குட்டிச் சூரியர்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள்

மருத்துவமனையில் நிற்கும் என்னிடம்
நலம் விசாரிக்கும் விதைப்பாளன்
சமன்குலையும் தராசுத் தட்டுகளை
இறைச்சிக் கடையில்
பார்த்தாயா என்கிறான்

கல்லீரலில் ததும்பும் மஞ்சளைத்தான்
மாபெரும் மலருக்கு பூசியதாகச் சொல்லும் வான்கோ
தாமதமாகவே மருத்துவர் வருவார் என கூட்டத்தைப் பார்த்து விசிலடிக்கிறான்

விதைகள் வெடிக்கும் முன்பே
கொத்திச் செல்லும் பறவைகள்
பித்தை வெடிக்க விடாதீர்கள்
விதைப்புக் காலத்தில் நிறமொழுகுவது
நிலத்துக்கு நல்லதல்ல என்கின்றன

“டோக்கன் நம்பர் 24 ” அழைக்கிறது

மலர்களை மலர்களாகப் பாருங்களேன்
அதில் உங்களுக்கென்ன பிரச்சினை
அதீத காமத்தில் நிறங்களாக உளறுவது கலைக்கு நல்லதல்ல என்கிறார்

மாத்திரைகளுடன் வெளியே வந்தால்
இதோ பாருங்கள் மொக்குகள்
குழந்தைகள் சூடியவுடன்
சப்தமிடாமல் வெடிப்பவை
துய்ய வெள்ளையெனக்
குதூகலிக்கும் தலைவி
மஞ்சளைப் பூசிக்கொள்வது
ஆண்களுக்கு நல்லதல்ல என்கிறாள்

மொட்டை மாடியில் நின்று பார்க்கிறேன்
தூரிகையால் குழி தோண்டும் வான்கோ
“தீவிரமாக இறங்குகிறேன்
பாதியில் காப்பாற்றிவிடாதே !”
அழியாத மலரின் நறுமணமே வாழ்வென்கிறான்

தீராத இடைஞ்சல்களுக்கிடையே
இளஞ்சிவப்பாகவே
சிரித்துக் கொண்டிருக்கும்
கிருஸ்துமஸ் விண்மீன்
மஞ்சளை அவிழ்த்துப்
பிரவாகமாக்குங்கள் தந்தையே !
பிடித்த கவிதையை
பாடாதிருப்பது
உயிருக்கு நல்லதல்ல என்கிறது.

Vincent van Gogh, Public domain, via Wikimedia Commons

நிறைய கதவுகள் உடைய அறையில்

முருகன் சுந்தரபாண்டியன் 

நிறைய கதவுகள் உடைய அறையில்
எழ முடியாது இருக்கிறேன்
மாற்று இல்லா பொருளாகி
எது கிடத்துகிறது என்னை?

ஒவ்வொரு வாசல் வழியாகவும்

நுழைந்து பார்த்ததும்
நுழைந்ததும்
ஞாபகத்தில் புகைப்படங்களாக
ஏன் தெரிகிறது

அறையில்
ஏன் காற்று குறைகிறது
எல்லாவற்றுக்கும்
ஒரு சன்னலை செய்பவன்
எங்கு தொலைந்தான்

காணாத அறையை கண்டது போல
பாய்ந்த கால்கள்
எங்கு தேங்கி நிற்கின்றன

திறந்த கண்களை மூடி
மூடிய கண்களை திறந்து
விழுந்தமர்கிறேன்
ஒரு இலையை போல

எல்லாவற்றுக்குமான
வெளியை சுவாசிக்கிறேன்
என் இதயத்தை
மெதுவாக முத்தமிடுகிறேன்

எனக்கு தெரிந்தவரைக்கும் சொல்கிறேன்
பல நேரங்களில்
அசைந்து கொண்டிருப்பது நாய் வாலல்ல, ஒளி தான்.

நினைவுகள்

சிவகுமார்

பதறிப் போய்
சிதறிக் கிடக்கும்
என் ஆகச் சிறந்த
நினைவுகளை
பொறுக்குகிறேன்
தரையோடு தரையாக
என்னை
அரைத்துவிட்டுச்
செல்கிறது
நிகழ்காலப்
பெருவாகனம்

என்றும் எம் மக்கள்

ஹேமந்த் குமார் 

இவ்வுலகை இரசிக்கப்
பிறந்தவன் நான்
என் உலகில் கலவரங்கள்
ஒழிவதற்கே – நான்
மானுடம் பாடி மகிழ்கிறேன்

நீ ஆணா பெண்ணா
அவசியமில்லை
உன் சாதியும் மதமும்
அடையாளமில்லை

நீ ஏழையா பணக்காரனா
பாகுபாடில்லை
உன் மொழியும் நாடும்
பிரிவுகளில்லை

நீ மனிதனா மிருகமா
யோசிக்கவில்லை
உன் நிறமும் குணமும்
இணைந்தவையில்லை

நீயும் நானும்
ஒன்றெனக் கண்டேன்
வயிறும் பசியும்
இருக்கும் எவரும்
எம் மக்கள் என்றெண்ணம்
கொண்டேன்