சிவகுமார்
பழுத்தோலை
குருத்தோலைக்கு
உயிர்(வளி) தந்து
உயிர்ப்பித்து
உதிர்கின்றது
முதிர் புன்னகையுடன்
பேரிடர் காலத்தில்
புகலிடமாகின்றன
கோவில்கள், தேவாலயங்கள்,
மசூதிகள்
அடைக்கலம் அளித்தவர்களின்
முகங்களில் பூத்திருக்கும் சமயமற்ற
சகோதரத்துவப் புன்னகை
இரத்த சம்பந்தங்களின்
அறுவை சிகிச்சைக்கு
இரத்தத்திற்கு அல்லாடுகையில்
இரத்த சம்பந்தமே
இல்லாதவர் உவந்தளிக்கும்
இரத்தத்தில் பூத்திருக்கும்
மரணிக்காத
மனிதப் புன்னகை
இன்னா செய்தாரை அவர் நாண
நன்னயம் செய்வதில்
மறைந்திருக்கும்
வெற்றிப் புன்னகை
ஈருருளியில் விரைகையில்
அண்ணா! சைட் ஸ்டாண்ட்
என எச்சரிக்கும்
முகமறியா
நலன் விரும்பியை
நினைத்து மனதில் பூக்கும்
முகவரியற்ற
நன்றிப் புன்னகை
குழந்தைகளை
பாலூட்டி சோறூட்டி
சீராட்டி வளர்த்து
ஆளாக்கி
சமுதாயவீதியில் கம்பீரமாக
உலவுவதை வாசற்படியில்
நின்று இரசிக்கும்
அன்னைகளிடம் தஞ்சமடைந்திருக்கின்றன
முகவரியற்ற
தியாகப் புன்னகைகள்
கலி முற்றினும்
எத்தனையோ
முகவரியற்ற புன்னகைகளால் தான்
இன்றும் நிற்காமல்
சுற்றிக் கொண்டிருக்கிறது
பூமி
கொஞ்சம் கண்துஞ்சி ஓய்வெடுக்கிறார்
சாமி