Author: பதாகை

சிதிலம் – ஸிந்துஜா சிறுகதை

ஞாயிற்றுக்கிழமையன்றுதான் காலை ஐந்து மணிக்கே முழிப்பு வந்து தொலைக்கும் என்று பத்து படுக்கையில் புரண்டான். வலது கை தன்னிச்சையாகத் தலையணைக்கருகே சென்று கைபேசியை எடுத்தது. பிரித்துப் பார்த்தான். உங்கள் பாஸ்வேர்டை யாருக்கும்

சொல்லாதீர்கள் என்று வங்கியில் பணமில்லாதவனுக்கு வரும்

செய்தி, மல்லேஸ்வரம்ஆஸ்திகசமாஜநன்கொடைவேண்டுதல், றுநாள் திங்கட்கிழமை ஷேர் மார்க்கெட்டில் என்னென்ன ஷேர் வாங்கினால் அடிபடாமல் தப்பிக்கலாம் என்னும் ஹேஷ்யம், சிவசுவின்செய்தி, இத்தாலியில் புது வருஷம் கொண்டாடப் போவதென்றால் டூர்செலவில் நாற்பது சதவிகிதம் கழிவு என்று ஜன்பத்துக்குப் போகவேண்டிய, ஆனால் தப்பாக  வந்து விட்ட போஸ்டர், சுப்புணி குரூப்பிலிருந்து மஹாலக்ஷ்மிபடம்,…எல்லாம் குபேரன் சம்பந்தப்பட்ட விஷயங்கள்!

பத்துசிவசுவின்செய்தியைப்பிரித்துப்படித்தான். ‘காலை பதினோருமணிக்குவருகிறேன்’ என்றது.  பத்துவெறுப்புடன்கண்களை மூடிக்கொண்டான். ஐந்து மாதங்களுக்கு முன்பு பத்து சிவசுவிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கினான். இரண்டு மாதத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக. ஆனால் மறு மாதம் ஐயாயிரம் கொடுத்ததுதான். அதற்குப்பின் என்னென்னவோ செலவுகள் என்று தள்ளிக்கொண்டே போயிற்று. சிவசுவும் இரண்டு மாதங்களை விட்டுவிட்டு மூன்றாவது மாதம் முடியும் வரைகாத்திருந்தான். அதன் பிறகு பத்துவிடம் பணம்திருப்பிக் கொடுப்பதைப் பற்றி இரண்டு தடவை நினைவுறுத்தினான். ஒவ்வொரு தடவையும் பத்து சிவசுவிடம்அடுத்த மாதம் திருப்பிக்கொடுத்துவிடுவதாகக் கெஞ்ச வேண்டியிருந்தது. ஆனால் போன மாதம் சிவசு வீட்டுக்குவந்துவிட்டான்.

பத்துவுக்கு சிவசு  தூரத்து உறவு. தூரம் என்றால் ரொம்ப தூரம் ! மூன்று தலைமுறைகளாக சிவசுவின் குடும்பம் லூதியானாவில் இருந்ததால் மட்டுமில்லை, உறவு மடிப்புகளின் உள்ளே புகுந்து வெகு தூரம் பிரயாணம் செய்த பின்பே  கண்டு பிடிக்க முடிந்த சொந்தமாகவும்  இருந்தது. ஒரு வருஷம் முன்பு சிவசுவின் பாட்டி ஒரு கல்யாணத் துக்காக பெங்களூர் வந்தாள். அவள் சென்னையில் அவளது அண்ணாவுடன் இருந்தாள். தொல் பொருள் ஆராய்ச்சி நிலையத்தில் வேலை பார்த்தவளைப் போல பத்துவின் குடும்பத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இடையே உள்ள சொந்தத்தைத் தோண்டிக் கண்டு பிடித்து விட்டாள். பத்து மல்லேஸ்வரத்திலும் சிவசு தேவனஹள்ளியிலும் குடித்தனம் இருந்ததால் (32 கிலோமீட்டர்) கடந்த ஒரு வருஷத்தில் ஒரே ஒரு முறை சிவசுவின் வீட்டில் நடந்த சத்யநாராயணா பூஜைக்குப் பத்துவும்அலமேலுவும்சென்றுவிட்டுவந்தார்கள். அதற்கடுத்தாற்போலசிவசுஇவர்கள்வீட்டுக்குவந்ததுசென்றமாதம்தான்.

அவன் அன்று வந்த போது மாலை ஐந்தரை இருக்கும். அன்றும் ஞாயிற்றுக்கிழமைதான். பணம் கேட்க வீட்டிற்கே வந்து விட்டானே என்று இருந்தது பத்துவுக்கு. வந்தவனை இருவரும் வரவேற்றார்கள்.

“ஏன், தங்கம்மாவையும் அழைச்சுண்டு வந்திருக்கலாமே?” என்றாள் அலமேலு.

“அவளுக்கு சன் டிவியிலே சினிமா பாக்காட்ட தலை வெடிச்சிடும். வரலேன்னுட்டா.”

“என்ன படமாம்?” என்று கேட்டாள் அலமேலு.

“என்னவோ வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்னு சொன்னா” என்றான் சிவசு.

“ஓ, அதைப் பார்த்தா எனக்குத் தலை வெடிச்சிடும்” என்றான் பத்து.

சிவசு பத்துவைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்.

அவன் வந்த கால்மணியில் அலமேலு காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள்.”ஐயையோ ! இதெல்லாம் எதுக்கு?” என்றபடி மறுத்தான். அலமேலு ஒரு டீபாயை அவனுக்கு முன்னால்  கொண்டு வந்து போட்டு அதன் மேல் டவரா டம்ளரை வைத்தாள்.

அவன் குடித்து விட்டு “ஆஹா, காப்பி பிரமாதம். ஆத்துலேயே வறுத்துப் பொடி பண்ணிணதா? இந்த மாதிரி ஒரிஜினல் காப்பி குடிச்சு ரொம்ப வருஷமாச்சு” என்றான்.

பத்து “தங்கம்மா காதுக்கு எட்டற மாதிரி சொல்லி வைக்காதே” என்று சிரித்தான்.

அலமேலு சிவசுவிடம் “இல்லே. இங்க கோத்தாஸ்னு காப்பி பவுடர் கடை பெரிசா வச்சிருக்கான். காப்பி ரொம்ப நன்னா இருக்கில்லே?”என்று கேட்டபடி உள்ளே சென்று ஒரு பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.

“என்னது இது?”

“கோத்தாஸ் அரைக் கிலோ பாக்கெட். எப்பவும் நான் ஸ்டாக் கையிலே வச்சிண்டிருப்பேன். நீ யூஸ் பண்ணிப் பாரேன்.”

சிவசு திகைப்புடன் அவளைப்  பார்த்தான்.

பிறகு பத்துவைப் பார்த்து “என் ஃப்ரெண்டு புது வீடு வாங்கி கிரகப்

பிரவேசத்துக்கு வாடான்னான். போன மாசம் மெட்றாஸ் போனேன். அப்ப நாராயண மாமாவாத்திலேதான் தங்கினேன். ரெண்டு மூணு நாள் அங்கே இருந்தப்போ ஒரு நாள் உங்க கல்யாணப் போட்டோ கொஞ்சம் இருந்ததுன்னு மாமா காமிச்சார்” என்றான்.

“ஐயோ ! சகிக்கப் போறாம இருந்திருப்பமே!” என்று சிரித்தாள் அலமேலு.

“ஆமா” என்றான் சிவசு.

“என்னது?” அலமேலு திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

“நீதன்னடக்கத்துக்குகோயில்கட்டிண்டிருக்கிறவமாதிரிபேசினா, நானும்பொய்சொல்லித்தானேஆகணும்” என்றுசிரித்தான்சிவசு.

அலமேலு வெட்கத்துடன் சிரித்தாள்.

“வாஸ்தவத்திலே நீ போட்டோலே விட நேர்லே அழகாயிருக்கே!” என்றான்சிவசு. பிறகுபத்துவின்பக்கம்திரும்பி”இப்பநான்பொய்சொன்னேன்னுநீநினைச்சாநான்அதைத்தடுக்கப்போறதில்லே” என்றான்.

அலமேலு”உனக்குரொம்பப்பொல்லாத்தனம்” என்றாள்.

பிறகு சிவசுவிடம் “இப்பதானே முதல் தடவை நீ இந்தாத்துக்கு வந்திருக்கே. சுத்திப் பாரேன்” என்றாள் அலமேலு. பத்து எழுந்து சிவசுவைக் கூட்டிக் கொண்டு போனான். ஒவ்வொரு அறையையும் சிவசு விசாலமாகப் பார்த்தான். கதவுகளை பிடித்துப் பார்த்தான். தேக்கா என்று கேட்டான். ஜன்னல் பெயிண்டுகளைத் தடவியும் லேசாக சுரண்டியும் பார்த்தான். மொசைக் தரையில் காலைத் தேய்த்து இழுத்து நடந்தான். மாடியில் இருந்த பாத்ரூமில் தண்ணீர் வேகமாக வருகின்றதா என்று குழாயைத் திருகினான் .பாத்ரூமில் வைத்திருந்த டியோடிரண்ட் பாட்டில்களைத் திறந்து முகர்ந்து பார்த்தான்.

மறுபடியும் ஹாலுக்கு வந்து உட்கார்ந்து கொண்டார்கள். அலமேலு அவனிடம் “வீடு எப்படி இருக்கு?” என்று கேட்டாள்.

“இது சொந்த வீடா?” என்று கேட்டான் சிவசு.

“இன்னும் அதுக்குப் பிராப்தம் வரலையே” என்றாள் அலமேலு.

“எவ்வளவு வாடகை கொடுக்கறேள்?”

பத்து “இது கம்பனிலே கொடுத்திருக்கா. சொந்தமும் இல்லாம வாடகையும் இல்லாம திரிசங்கு சொர்க்கம்” என்றான்.

“அப்படீன்னா நிச்சயம் நீ சீக்கிரம் ஒரு வீடு வாங்கப் பாரு” என்றான் சிவசு. “எங்கப்பா ரயில்வேலே இருந்தார்னு உனக்குத் தெரியுமே. கார்டா இருந்தார். மாத்தல் ஆகிப் போற இடமெல்லாம் ரயில்வேக்காரன் குவார்ட்டர்ஸ் கொடுத்தான். ‘இவ்வளவு பெரிய வீடு கொடுக்கறான். நீ எதுக்கு சொந்த வீடுன்னு அலையணும்?’னு எங்க தாத்தா, அப்பாவுக்கு அப்பா, அவரைக் கரைச்சு வீடே வாங்க விடலை. ஐம்பத்தெட்டு வயசுக்கு ரிட்டையர் ஆயாச்சு, ஆத்துக்குப் போன்னு  சொன்னப்பதான் வீட்டுக்கு அலைஞ்சு திரியற கஷ்டமே அப்பாவுக்குத் தெரிஞ்சது. கடனோ உடனோ வாங்கி ஒரு வீடு வாங்கப் பாரு” என்றான் சிவசு.

“பணம் இல்லாம எப்பிடி ? வெறுங் கைலே முழம் போடற மாதிரி?” என்றாள் அலமேலு.

“கையிலே கேஷ் வச்சிண்டுதான் வீடு கட்டணும்னா மேனகை விச்வா

மித்ரரைக் கல்யாணம் பண்ணிக்கிறப்பதான்” என்று சிவசு பத்துவைப் பார்த்தான். “பேங்குலே பதினஞ்சு பர்சன்ட் மார்ஜின் மணி கேப்பான். பி.எஃ ப் இருக்கில்லே? ஒரு லோனைப் போடு. எல்லைசி பாலிசி இருக்கா?அலமேலு நகைல்லாம் இருக்கும். அதெல்லாம் செக்யூரிட்டின்னு காமி. இன்னும் இருபது இருபத்தி அஞ்சு வருஷ சர்வீஸ் இருக்கில்லே உனக்கு? ஏன் கொடுக்கமாட்டான் பேங்க் லோன்?” என்றான் சிவசு.

அலமேலு அவனைப் பிரமிப்புடன் பார்ப்பதைப் பார்த்தான் பத்து.

“கேரண்ட்டார் கேப்பான். நான் கையெழுத்து போடறேன் போ” என்றான் சிவசு.

விட்டால்கழுத்தைப்பிடித்துத்தள்ளிபேங்க்வாசலில்கொண்டுபோய்நிறுத்திவிடுவான்போலிருந்தது. கூடவே’நம்நல்லதுக்குத்தானேசொல்கிறான்’ என்கிறநன்றிஉணர்ச்சியும்பத்துவுக்குள்எழுந்தது.

“எனக்கு எப்பவுமே என்ன பயம்னா கடனை வாங்கிட்டு எப்பிடி திரும்பக் கட்டறதுன்னுதான். ஒரு ஆள் சம்பளத்தில் எப்படிச் சமாளிக்க முடியும்?” என்றான் பத்து.

“வீடு கட்டி முடிக்கிற வரைக்கும் கடன் கொடுப்பான். அது வரைக்கும் நீ பணம் திரும்பக் கட்ட ஆரமிக்க வேண்டாமே. கட்டின வீட்டை

வாடகைக்கு விட்டா அது முக்காவாசி இன்ஸ்டால்மென்டைக் கவர் பண்ணிடும்” என்றான் சிவசு. “இல்லேன்னா கட்டின வீடா பாத்து வாங்கிடு . உடனே வாடகைக்கு விட்டுறலாம்.”

“ரெடி ரெக்கனர் மாதிரின்னா எல்லாத்துக்கும் ஆன்சர் வச்சிருக்கே !” என்றாள் அலமேலு.

” நீ அடுத்த வருஷம் இந்த நாளைக்கு சொந்த வீடு வாங்கிடனும்” என்று சிவசு சிரித்தான். பிறகு சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்து விட்டு “ஓ, ஏழரை ஆயிடுத்தா? நான் கிளம்பறேன். ரெண்டு பஸ் பிடிச்சு ஆத்துக்குப் போய் சேர்ரப்போ அந்த புல்லு மண்ணு படமெல்லாம் பாத்துட்டு தங்கம்மா ஏதானும் சாப்பிடப் பண்ணி வச்சிருப்பா” என்று எழுந்தான்.

“நன்னாயிருக்கு. இவ்வளவு தூரம் வந்துட்டு சாப்பிடற வேளையிலே கிளம்பிப் போறதாவது. இன்னிக்கி அடைக்கு அரைச்சு வச்சிருக்கேன். நாலு வாத்துப் போடறேன்.முதல் தடவை வந்ததுக்குப் பாயசம் வச்சு சாப்பாடு போடணும். அடுத்த தடவை தங்கம்மாவோட வரச்சே ஜமாய்ச்சுறலாம்” என்றாள் அலமேலு.

அவள் குரலில் இருந்த கண்டிப்பும், அன்பும் சிவசுவை எழ விடாமல் அடித்தன. அடை சாப்பிடும் போது சிவசு “எனக்கு சின்ன வயசிலிருந்தே அடைன்னா ரொம்ப இஷ்டம். எங்கம்மா எங்களுக்கெல்லாம் எது சாப்பிடக் கொடுத்தாலும் ஒரு திட்டம் வச்சிருப்பா. மூணு வயசுக்கு மேலதான் குழந்தைக்கு அடை. அதுவும் அரை அடைதான் ! அஞ்சு வயசாகறப்போ ஒரு அடை. அடுத்த பிரமோஷன் ஹைஸ்கூல்ல சேர்ரப்போ. ஒண்ணரை  நான் ரெண்டு அடை சாப்பிடறப்போ ஒம்பதாங் க்ளாஸ் படிச்சிண்டிருந்தேன். அப்போ எங்கம்மாட்ட சொல்லுவேன், நான் பெரியவனானதும் குறைஞ்சது பத்து அடையாவது சாப்பிடு

வேன்னு. அப்பிடி சாப்பிட்டேன்னா ரயில்வே லைன் தாண்டி இருக்கற வயக்காட்டுலே போயி பீச்சி அடிச்சிண்டிருக்க வேண்டியதுதான்னு சிரிப்பா” என்றான்.

அலமேலுவால்சிரிப்பைஅடக்கமுடியவில்லை.

“இப்ப எவ்வளவு அடை வெளுத்துக் கட்டறே?” என்று பத்து சிரித்தான்.

“ரெண்டுதான் !” என்றான் சிவசு.

சாப்பிட்டுவிட்டுசிவசுகிளம்பிச்சென்றான்.அவன்போனதற்குப்  பிறகுகணவனும்மனைவியும்அவனைப்பற்றி, அவன்மனைவி, அம்மாபற்றி, வீடுவாங்குவதுபற்றிஎல்லாம்பேசினார்கள்.

“உன் உபசாரத்திலே அவன் மயங்கிட்டான்” என்றான் பத்து.

அலமேலு “அவன்தான் பேசிப் பேசி நம்மளை மயக்கிட்டான்” என்று சிரித்தாள். “ரொம்பக் கெட்டிக்காரனாயிருக்கான் இல்லே?”

பத்து பதிலளிக்காமல் அவளை பார்த்தான்.

சிவசு பணம் பற்றிப் பேசாமல் சென்றது பத்துவிற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அலமேலுவின் பேச்சும் உபசரிப்பும் அவனைப் பணம் பற்றிப் பேசாமல் தடுத்திருக்க வேண்டும் என்று பத்து நினைத்தான்.

பத்து கடைசியில் எட்டுமணிக்குத்தான் படுக்கையிலிருந்து எழுந்தான்.

பல் தேய்த்துக் காப்பி குடித்து விட்டு பேப்பரை மேய்ந்தபின்  பாத்ரூமுக்குச் சென்றான். அவன் குளியலை முடித்து விட்டு, பூஜை அறைக்குள் சென்று சாமியைக் கும்பிட்டு விட்டு ஹாலுக்கு வந்தான். அலமேலு டைனிங் டேபிளில் காலை உணவை வைத்துக் கொண்டிருந்தாள். பூரி. இருவரும் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்.

“பூரி சூப்பரா இருக்கு” என்றான் பத்து. அலமேலு சிரித்தபடி அவனைப் பார்த்தாள். “ஆலுவுக்குப் பதிலா சோளே போட்டு பண்ணிட்டியே. ரொம்ப டேஸ்டியா இருக்கு” என்றான்.

“இன்னும் ரெண்டு பூரி போட்டுக்கோங்கோ” என்று எடுத்துப் போட்டாள்.

“போறும், போறும். பத்து மணிக்கு ஆபீசுக்குப் போகணும்” என்றான்.

“ஆபீஸா? இன்னிக்கி எங்கையும் போகப் போறதில்லே. நன்னா ரெஸ்ட் எடுக்கணும்னு நேத்தி ராத்திரி சொன்னேளே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் அலமேலு.

“செவ்வாக்கிழமை போர்டு மீட்டிங்காம். இன்னிக்கி பத்து பத்தரைக்கு வந்துடு. கொஞ்சம் ஸ்டேட்மெண்ட்ஸ், ரிப்போர்ட்ஸ்லாம் பண்ணனும்னு டைரக்டர் மெஸேஜ் அனுப்பிச்சிருக்கான்” என்றான் சிவசு குரலில் அலுப்புடன்.

“அட ராமா ! இப்பதான் பாதி சமையலை நான் முடிச்சேன்” என்றாள் அலமேலு.

“ம், சொல்ல மறந்துட்டேனே. இன்னிக்கி சிவசு வரேன்னுருக்கான். பதினோரு மணி வாக்கிலே” என்ற பத்து சற்று யோசித்து விட்டு “அவன் வந்தா நான் அவசர வேலையா ஆபீஸுக்குப் போக வேண்டியதாயிடுத்துன்னு சொல்றியா? உன் சமையலும் வேஸ்டாப் போக வேண்டாம். அவனை இங்கேயே சாப்பிடச் சொல்லிடேன்”

என்றான் பத்து.

“எத்தனைமணிக்குத்திரும்பிவருவேள்?”

“சொல்ல முடியாது. ராத்திரி வரைக்கும் இழுத்தடிக்காம விட்டான்னா சரி” என்றான் பத்து.

பத்துமணிக்குஅவன்வீட்டைவீட்டுக்கிளம்பினான். ஆபீசைஅடையும்போதுபத்தரைமணிஆகியிருந்தது. வாசலில்நின்றவாச்சுமேன்அவனைப்பார்த்துசல்யூட்அடித்தான்.

“இதுவரைக்கும் உங்க டிபார்ட்மெண்டு ஆளுங்க யாரும் வரலே சார்” என்றான்.

பத்து அவனுக்கு எதுவும் பதில் அளிக்காமல் தலையை அசைத்து விட்டு லிஃப்டை நோக்கிச் சென்றான்.அவனைச் சுற்றி மௌனம் இரைச்ச

லிட்டது.

அவன் ஏழாவது மாடியில் இருக்கும் தன் அறைக்குச் சென்றான். ஏ ஸி யைப் போட்டு விட்டு மேஜை மீதிருந்த கம்ப்யூட்டரைத் தட்டினான்.இந்த வருஷத்தில் மீதமிருக்கும் மூன்று மாதத்தில் எவ்வளவு இன்கம்டாக்ஸ் பிடித்தம் இருக்கும் என்று பார்த்தான்.நிறைய இருந்தது. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. ஏப்ரல் முதல் நவம்பர் டிசம்பர் வரை கொஞ்சமாகப் பிடித்து சற்று அதிகமாகக் கைக்கு வரும் பணத்தின் ஆனந்தம் எல்லாவற்றையும் சூறைக் காற்றைப் போல் அடித்துத் தள்ளி விடும் கடைசி மூன்று மாதங்களை நினைத்தால் அவனுக்கு வெறுப்பாக இருந்தது. மேஜையில் இருந்த கோப்புகளைப் படித்துப் பார்த்து விட்டுக் கையெழுத்திட்டான்.

ஒருமணிநேரம்போயிருக்கும். இண்டர்காமில்பெல்அடித்தது. அட, அவனைப்போல்வேறுயாரோஅலுவலகத்துக்குவந்திருக்கிறார்களா? ஆச்சரியத்துடன்போனைஎடுத்தான்.

“ஹலோ பாஸ் !” என்று மறுமுனையில் இருந்து தேவுவின் குரல் கேட்டது. கம்பனி செகரட்டரி. இவனுக்கு என்ன ஞாயிற்றுக் கிழமை ஆபீஸ் வேலை?

“ஹலோ தேவு !” .

“இப்பதான் வந்தேன். வாச்சுமேன் சொன்னான், நீ வந்திருக்கிறதா. ஃப்ரீயா? அங்க வரட்டா?”

“வா, வா” என்றான் பத்து.

 

அடுத்த நாலு கட்டிடங்களில் இருப்பவர்களின் நாசிகளைத் தீண்டும் அளவுக்குப் பெர்ஃப்யூம் வாசனையுடன் தேவு உள்ளே வந்தான்.

“அக்கவுண்ட்ஸ் எல்லாம் முடிஞ்சு போன வாரம் போர்டு மீட்டிங் ஏஜிஎம் எல்லாம் ஆயாச்சே. எதுக்கு இன்னிக்கி இங்கே டேரா போட்டிருக்கே?” என்று சிரித்தான் தேவு.

“கொஞ்சம் பெர்சனல் ஒர்க், கொஞ்சம் ஃபைல் கிளியரன்ஸ்னு வந்தேன். ஆனா உனக்கு என்ன இங்க வேலை?” என்றான் பத்து.

“போன வாரம் போர்டு மீட்டிங் ஆச்சில்லே. அடுத்த போர்டு மீட்டிங்குக்கு இன்னும் தாராளமா மூணு மாசம் இருக்கு. ஆனா இந்த யூனியன் கேட்ட பே ரிவிஷனை போர்டு அப்ரூவ் பண்ணிதை அர்ஜன்ட்டா  மினிட்ஸ் போட்டுக் கொடுக்கணுமாம். அதான் இன்னிக்கி அதை முடிச்சிடலாம்னு வந்தேன்” என்றான்.

அப்போது வாச்சுமேன் கதவைத் திறந்து கொண்டு வந்து இருவருக்கும் காப்பி கொடுத்தான்.

“நான்தான் சந்திரிகாலேந்து வாங்கிட்டு வரச் சொன்னேன்” என்றான் தேவு.

காப்பியை அருந்திக் கொண்டே இருவரும் ஆபீஸ் பாலிடிக்ஸில் கொஞ்ச நேரம் ஆழ்ந்தார்கள்.

“சரி, நான் என் வேலையை பாக்கப் போறேன்” என்று தேவு எழுந்தான். கதவருகில் சென்றவன் “லஞ்ச் எங்கே? வீட்டுக்குப் போறியா?” என்று கேட்டான்.

“நீஎன்னபண்ணறதாஇருக்கே?” என்றுகேட்டான்பத்து.

” நீ வீட்டுக்குப் போகலேன்னா நாம ரெண்டு பேரும்  வெளியே போய் சாப்பிடலாம்.”

பத்து சரியென்று தலையை அசைத்தான்.

“இன்னிக்கிக் கம்பனி செலவிலேதான் சாப்பாடு. வின்சர் மேனர் போகலாம்” என்று சிரித்துக் கொண்டே தேவு வெளியே சென்றான்.

அவர்கள் இரண்டு மணி சுமாருக்கு ஹோட்டலை அடைந்தார்கள். விடுமுறை தினமென்rறாலும் கூட்டம் இல்லை. தொற்று நோய் தொற்றி விடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு காரணமாக இருக்கலாம். ஆர்டரை வாங்கிக் கொண்டு போக அரைமணி ஆகியது. கேட்டவற்றைக் கொண்டு வர இன்னொரு அரைமணி ஆயிற்று. நேரம் பொன்னானது என்னும் வாசகத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் என்று நிர்வாகம் நினைத்து விட்டது போலிருக்கிறது. அவர்கள் சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது மணி நாலு. இருவரும் வீட்டுக்குப் போக ஓலாவுக்குப் போன் செய்தார்கள்.

அவனை நாலரை மணிக்கு வீட்டில் பார்த்து அலமேலு ஆச்சரியம் அடைந்தாள். “அட, சீக்கிரம் ரிலீஸ் பண்ணிட்டாளே” என்று கண்களை அகல விரித்து அவனிடம் சொன்னாள்.

“ஏதோ ஜெயில்லேர்ந்து வரவன்கிட்டே பேசற மாதிரின்னா இருக்கு” என்றான் பத்து.

“நானும் இப்பதான் ஆத்துக்குள்ளே நுழைஞ்சேன்.”

“எங்கே போயிருந்தே? சிவசு வரலியா?”

“சிவசுவோடதான் வெளியிலே போயிட்டு அந்தப் பக்கம் சிவசு போக நான் இந்தப்பக்கம் வந்தேன்” என்றாள் அலமேலு.

அவன் பதில் எதுவும் அளிக்காது அவளைப் பார்த்தான்.

“சிவசு வந்ததும் நீங்க இல்லைன்னு சொன்னேன். ‘அப்ப  நீ எதுக்காக அடுப்பைக் கட்டிண்டிண்டு அழறே? ஒரு சேஞ்சுக்கு வெளியிலே போய் சாப்பிடலாம். நீ வின்சர் மேனருக்குப் போயிருக்கியா? இல்லாட்டா வெஸ்ட் என்ட் போகலாம்’னான். நான்தான் ‘சும்மா கிட , காசுக்குப் பிடிச்ச கேடு. இன்னிக்கி பீன்ஸ் பருப்பு உசிலியும் வெத்தக் குழம்பும் பண்ணிருக்கேன்னேன். சாப்பிட்டு விட்டு ரொம்ப சந்தோஷம் அவனுக்கு. நன்னா இருக்கு, வாசனையா இருக்குன்னு மாஞ்சு போயிட்டான். அதுக்கப்புறம் நாட்டு மருந்து சாமான்லாம் கொஞ்சம் வாங்கணும்னான். சரின்னு கிளம்பி எய்ட்த் கிராஸ் இந்தியன் டிரக் ஸ்டோருக்குக்  கூட்டிண்டு போனேன்.  சுண்டக்கா வத்தல், மணத்தக்காளி வத்தல்ன்னு ஆரமிச்சு பனங்கருப்பட்டி, மிளகு, பெருஞ்சீரகம்  சித்தரத்தை தூள்,  திப்பிலி, அதிமதுரத் துண்டு, சுக்குன்னு எல்லாத்தையும் வாங்கிப் போட்டுண்டான். நான் இருக்கற இடத்திலே இந்த மாதிரி சாமான் ஒண்ணும் கிடைக்கிறதில்லேன்னான்.”

“சிவசுவோட அசிஸ்டன்ட்டா ஆயிட்டேன்னு சொல்லு” என்றான் பத்து.

அவள் அவனைப் பாத்து “ஒரு சிநேகிதம் சொந்தம்னா இதெல்லாம் கூடப் பண்ண மாட்டமா?” என்றாள் அலமேலு சற்றுத் தாங்கலான குரலில்.

அவளைச் சமாதானப்படுத்துவது போல “என்கிட்டே இதெல்லாம் வாங்கணும்டான்னு சொல்லிருந்தான்னா முழிச்சிருப்பேன். நீதான் வெட்டிண்டு வான்னா கட்டிண்டு வரவளாச்சே” என்றான் பத்து.

“அப்புறம்’உன்னைஇத்தனைசிரமப்படுத்தியாச்சு. வா, உனக்குஒருஐஸ்க்ரீம்வாங்கித்தரேன்’னான். பதினாறாம் கிராஸ்லேஇருக்கற

நேச்சுரல்ஸ் போனோம். பக்கத்திலேயிருக்கற காலேஜ்லேந்து பாய்ஸும் கேர்ள்ஸுமா பசங்க கூட்டம் நெரிஞ்சுண்டு நின்னது. ஒருத்தர் மேலே ஒருத்தர் இடிச்சிண்டு போய் வாங்கறதுக்குள்ளே உன்னைப் பாரு என்னைப் பாருன்னு ஆயிடுத்து” என்று சிரித்தாள் அலமேலு.

“நீ எதுக்கு இடிச்சிண்டு போய் நிக்கணும்? கடை வாசல்லே நீ நின்னா அவன் போய் வாங்கிண்டு வரான்” என்றான் பத்து.

“எனக்கும் அங்கே உள்ளே என்னென்ன வெரைட்டி வச்சிருக்கான்னு பாக்க ஆசை. டென்டெர் கோகனட் ஐஸ்க்ரீம்னு ஒண்ணு போட்டு விக்கறான் பாருங்கோ. அதுக்கு அப்படி ஒரு டிமாண்ட். ஆளுக்கு ரெண்டு வாங்கிண்டு வந்து சாப்பிட்டோம். என்னமா இளநி வாசனை வரதுங்கறேள் ! நீங்க இல்லையேன்னு நான் கூடச் சொன்னேன்.  சரி அடுத்த வாரம் பத்துவையும் கூட்டிண்டு இங்க வரலாம்னான் சிவசு.”

“அடுத்த வாரமா?” என்றான் பத்து.

“ஆமா. அடுத்த ஞாயித்துக் கிழமை நீங்க எதாவது வெளி வேலை வச்சுக்க வேண்டாம்” என்ற அலமேலு “சரி, நான் காப்பி போட்டுண்டு வரேன்” என்று சமையலறையை நோக்கி நடந்தாள்.

அடுத்த வாரம் நாள்கள் சில சமயம் பறந்தும் சில சமயம் நகர்ந்தும்

சென்றன. சனிக்கிழமை பத்து ஆபிசிலிருந்து சிவசுக்குப் போன் செய்தான்.

“ஹலோ சிவசு, எப்படியிருக்கே? லாஸ்ட் சண்டே உன்னை மிஸ் பண்ணிட்டேன். ஸாரி. பிடுங்கல் ஆபீஸா ஆயிடுத்து. இப்பகூடப் பாரு நாளைக்கு ஞாயத்துக் கிழமை  ஏர்போர்ட்டுக்குப் போயி எங்க டைரக்டரை அழைச்சுண்டு ஆபீசுக்குக் கூட்டிண்டு வரணும். ஆமா. அவர் கல்கத்தாலேர்ந்து வரார். ஃபிளைட்  பனிரெண்டரைக்கு வரது. உன் வீடு ஏர்போர்ட் கிட்டதானே? நான் ஏர்போர்ட் போறதுக்கு முன்னாலே உன்னை வந்து பாத்துட்டுப் போறேன். உன் கிட்ட வாங்கின பணத்தில்

ஐயாயிரம்பாக்கிஇருக்கில்லியா? ரொம்பத் தள்ளிப்போயிடுத்து. நாளைக்குவரச்சேபணத்தையும் எடுத்துண்டுவரேன். நீயும்சரியான

நேரத்திலே ஹெல்ப் பண்ணினே. ரொம்ப தேங்க்ஸ். நாளைக்குப் பாக்கலாமா? வச்சிடறேன்” என்று சொல்லி விட்டுப் போனைக் கீழே வைத்தான்.

 

அப்போது அறைக் கதவைத் திறந்து கொண்டு பியூன் உள்ளே வந்தான்.

“சார், டைரக்டரு உங்களை பே ரிவிஷன் பைலை எடுத்துக்கிட்டு வரச் சொல்றாரு” என்றான்.

நந்தி – காஸ்மிக் தூசி கவிதை

ஆலகால விடம் அருந்தி
அம்மை மடியில்
மயங்கிக் கிடக்கையில்,
காத்திருக்கும்
பக்தர்களின் வரிசைக்கு
காவல்,

தசைச்செழிப்பு புடைத்தெழும்ப
எந்நேரமும் எழுந்துவிடும்
ஆயத்தமாய்
பிரகதீஸ்வரர் முன்
வீற்றிருக்கும் நந்தி.

கயிலாயத்துள் நுழையும்
பக்தகோடிக்கு ஜருகண்டி.
அத்துமீறினால்
விஷ்ணுவே ஆனாலும்
விபரீதம்.
வெறும் மூச்சுக்காற்று போதும்
கருட பகவானை
தடுமாறி விழவைக்க.

உயிர் பிச்சைக்கு
அந்த சிவபெருமானே வந்து
சொன்னால்தான் ஆச்சு.

அவதார அதிகார கைலாச
சிறிய பெரிய, மற்றும்
சாதாரண நந்திகள் மத்தியில்
ஓரமாய் எங்கோ
உடனுறைகிறார்,
சிவபெருமான்.

காலத்தில் உறைந்த
கறுப்பு உலோகம்
விலாப்புறங்கள் சிலிர்த்து
திமில் சரிய
முன்னங்கால் உயர்த்தி

கொம்பசைத்து வாலைச்சுழற்றி
கழுத்துப்பட்டையின் மணி ஒலிக்க
எந்நேரமும்
எழுந்துவிடக்கூடும்.

என்றாலும்,
நந்திகள்
ஏன் எப்போதும்
அமைதியாக
அமர்ந்திருக்கின்றன?

பிரதோஷ நேரங்களில்
எண்ணற்ற நந்திகளுள்
ஏதோ ஒன்றை
தற்செயலாய் தெரிவுசெய்து
அதன் சிரசின்மேல்

தன் ஏழுதாண்டவங்களுள் ஏதாவது ஒன்றை
இடக்கால் வீசி
ஆவேசமாய் நடனமிடுகிறார்
சிவபெருமான்.

நடனம் முடியும்வரை
மூச்சைப்பிடித்தபடி
ஈட்டி முனை வேய்ந்த வேலிக்குள்
விழிபிதுங்க
அசையாமல்
அமர்ந்திருப்பதைத் தவிர
வேறு வழியில்லை.

நந்தி
இம்மி அசைந்தாலும்
போதும்.
அவரின்
அடவு
தப்பிவிடும்

ஒலிக்காத உடல் – இரா.கவியரசு கவிதைகள்

விழுகின்ற நீரின் ஒலிகளால்
வரைகின்றான் குளிக்கும் உடலை
பெரிதாக விரியும் பறவை
துளியாக ஒடுங்கும்போது
கண் மட்டுமே துடிக்கிறது
இரவில்
அமைதியாகத் ததும்பும்
கடலின் உள்ளே
தூங்காத நீரோட்டங்கள்
வரைந்து கொண்டே இருக்கின்றன
காணாத உடலை
அப்போதும்
கண் மட்டுமே துடிக்கிறது
குளித்து விட்டு வரும் உடலுக்காக
காத்திருக்கின்றன ஆடைகள்
ஒலியை உறிஞ்சும்
பூட்டிய அறைக்கு வெளியே
உடலும் உடையும் பொருந்துவது
கசிகிறது அரூபமாக
நெஞ்சுச் சூட்டில் கொளுத்துபவன்
கற்பூரமாக்கி வாய்க்குள் அதக்குகிறான்
உள்ளே எரிகின்றன
ஒலிக்காத உடலும்
பிய்த்தெறியப்படும் ஆடைகளும்

இனி – ஸ்ரீரஞ்சனி சிறுகதை

மழை இன்னும் விட்டபாடில்லை.

காரைவிட்டிறங்கியவனுக்குக் கண் கலங்கியது. இப்படியான ஒரு மழை நாளில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. ஆதிக்கு மழையில் நனைவது என்றால் மிகவும் பிடிக்கும். அன்று கொட்டும் மழையில் தெப்பமாக நனைந்தபடி, ஆதியும் அவனும் வெகு மகிழ்வாக ஆடிக்கொண்டிருந்தனர்.

“ஏ, உங்களுக்குக் கொஞ்சமெண்டாலும் அறிவிருக்கே? பிள்ளையை மழைக்கே வைச்சுக்கொண்டு ஆடுறியள், அவனுக்குக் காய்ச்சல் வரப்போகுது.”

ஆங்கில வகுப்பு முடிந்து அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்த கலா நெருமியபடி, ஆதியைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஆதியின் அலறல் உச்சஸ்தாயில் ஒலித்தது.

 

“சீ, பிள்ளைக்குப் போடுறதுக்கு ஓடிக்கொலோன்கூட இல்லை! போய்க் கெதியா ஒண்டு வாங்கிக்கொண்டு வாங்கோ பாப்பம்!”

வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தவனிடம், மாற்றுடைகளைக் கைகளில் திணித்தபடி இரைந்தாள்.

அவன் எதுவும் பேசாமல் மீளவும் வெளியேறினான். அவன் உடை மாற்றியபோது சொட்டிய ஈரத்தைப் புறுபுறுத்தபடி அவள் துடைக்கும் சத்தம் அவன் காதுகளை அடைத்தது.

கீரை சமைக்கும்போதோ அல்லது பலாப்பழம் போன்ற பழங்களை வெட்டும்போதோ, ஊரிலை எண்டால் இதுகளை ஆடு, மாடுகளுக்குப் போடலாம், இங்கை எல்லாம் வீணாய்ப்போகுது, என அலுத்துக் கொள்வாள். ஒரு தும்புத்தடிக்கு இவ்வளவு காசா, இதிலை எத்தினை பேர் அங்கை சாப்பிடலாமென மனம் குமுறுவாள். நாட்டைவிட்டு வந்த கவலை மட்டுமன்றி, கஷ்டப்பட்டு வளர்ந்ததன் ஆயாசமும்தான் இதென அவன் அவற்றை விளங்கிக்கொண்டான். அதிலிருக்கும் நியாயத்தையும் உணர்ந்துகொண்டான். அப்படியே அவள் கேட்ட ஓடிக்கொலோனை வாங்கிக்கொடுப்பதிலும் அவனுக்குப் பிரச்சினையிருக்கவில்லை. ஆனால் அகம்பாவத்துடன் அதைச் சொன்னதுதான் அவனின் மனதை இடைஞ்சல்படுத்தியது. திரும்பத்திரும்ப அவள் தன்னை மரியாதையில்லாமல் நடத்துறாள் என்பதில் அவனுக்குக் கவலையாகவும் அதை மேவிய ஆத்திரமாகவும் இருந்தது.

சொப்பேர்ஸ் றக் மார்ட்டில் அவள் சொன்ன ஓடிக்கொலோன் இருக்கவில்லை. அவன் வெறுங்கையுடன் திரும்பினான்.

“அங்கை இல்லையெண்டால் இன்னொரு இடத்துக்குப் போயிருக்கலாம்தானே!” எரிந்துவிழுந்தாள் அவள்.

“நல்ல வடிவாய் துடைச்சுப் போட்டுக் கெயர் டையரைப் பிடிச்சால் காய்ஞ்சிடும்தானே! வேணுமெண்டால் கொஞ்சம் சென்ரும் போடும், ஓடிக்கொலோன் செய்யிற வேலையை …” அவன் சொல்லிமுடிப்பதற்கு முன் அவள் மீளவும் சன்னதமாடினாள்.

அவன் ரீவியை ஓன் பண்ணிவிட்டு சோபாவில் அமர்ந்துகொண்டான்.

“நான் சொல்ற எதைத்தான் நீங்க செய்யிறியள்? ஒரு குழந்தைப் பிள்ளையெண்டும் பாக்காமல் உங்கடை சந்தோஷத்துக்காண்டி நீங்க போடுற …”

அவனுக்கு மிகுந்த கோபமும் எரிச்சலும் வந்தது. “வாய்க்கு வந்தபடி கதைச்சீரெண்டால் …” சுட்டுவிரலை ஆட்டியபடி அவளுக்கருகில் போனான்.

“எங்கை அடி பாப்பம்! ஒரு மிருகத்திட்டையிருந்து தப்பி இன்னொண்டிட்டை வந்திருக்கிறன்” அவள் பெரிதாய்க் கத்தினாள்.

“போடி”, என கையால் சைகைசெய்தபடி ரீவிக்கு முன்னால் நின்றவளைத் தள்ளிப்போட்டு, அவளின் கையிலிருந்த ரெமோட்டை அவன் பறிக்கமுயன்றான்.

அப்படிப் பறிக்க முயன்றபோது அந்த ரெமோட் பின்பக்கமாக இழுபட்டு அவளின் உதட்டைக் காயப்படுத்தியது.

“அசல் மிருகம். உங்களையெல்லாம் உள்ளுக்கை போடோணும்!”

“என்ரை நிம்மதியைக் கெடுக்கிறதுக்காண்டித்தானேடி வந்திருக்கிறாய்! தாராளமாகச் செய், ஏன் பாத்துக்கொண்டு நிக்கிறாய்? …” அவன் தள்ளிய வேகத்தில் அவள் கீழே விழுந்தாள்.

மிரண்டுபோன ஆதி மீளவும் அலற ஆரம்பித்தான். அவள் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனாள்.

சிறிது நேரத்தில் அவளைத் தாக்கிய குற்றத்துக்காக அவனைக் கைதுசெய்வதாக வீட்டில் பொலிஸ் வந்துநின்றது.

மூன்று மாதங்களின் பின் மேற்பார்வை செய்யப்படும் சந்திப்பு ஒன்றில் ஆதியைச் சந்திப்பதற்காக அவன் இன்று வந்திருக்கிறான். எதிர்பாராமல் வந்து கொட்டிய மழை அவனைச் சுணங்கச் செய்திருந்ததுடன் கொஞ்சம் நனைத்துமிருந்தது. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் அவன் பிடித்திருந்த குடை அங்குமிங்கும் ஆடியது. கைக்கடிகாரத்தைப் பார்த்தான். அது நான்கு மணி எனச் சொல்லி ஓய்ந்தது.

வேகமாக நடந்துசென்ற அவன் அந்தக் கட்டிடத்தின் அழைப்பு மணியை அவசரமாக அழுத்தினான். ஆதியுடனான ஒரு நிமிடம்கூட வீணாகிவிடக்கூடாதே என அவனின் மனம் பதகளித்தது.

அவனின் அழைப்புக்குப் பதிலளித்த பெண்ணிடம் தன் பெயரைச் சொன்னான். ஆதியை அழைத்து வருவதாகவும் உள்ளே வந்து குறித்ததொரு அறையில் காவலிருக்கும்படியும் கூறி அவள் அப்பால் சென்றாள்.

அவள் போட்டிருந்த குதிக்கால் உயர்ந்த செருப்பு தரையில் ஒலிப்பிய ஒலியைத் தவிர எந்தச் சத்தமும் அந்த இடத்தில் கேட்கவில்லை. காத்திருந்த அந்தக் கணங்கள் அவனுக்கு யுகங்களாகத் தெரிந்தன.

அந்த அறையில் வேறு சில ஆண்களும் அவனுடன் இருந்தனர். அவர்களின் கண்களிலும் கலக்கம் தெரிவதுபோல அவனுக்குத் தோன்றியது. ஒருவர் அவரது சாவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். மற்றவர் கையில்வைத்திருந்த விளையாட்டுக் காரை வருடிக்கொடுத்தபடி வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார். இன்னொருவர் போனில் மும்மரமாக இருந்தார். வேறொருவர் குறுக்கும்மறுக்குமாக நடந்துகொண்டிருந்தார்.

பத்து நிமிடங்களின் பின் திரும்பி வந்த அந்தப் பெண், ஆதி வரமாட்டேன் என அழுவதாகவும் அவன் ஆதியை இன்று பார்க்கமுடியாதென்றும் கூறி, ‘சொறி’ சொன்னாள். மனம் நிறைந்த எதிர்பார்ப்புடன் ஆதியைப் பார்க்கவந்திருந்த அவனுக்கு அந்தப் பதில் மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. என்ன சொல்வதெனப் புரியாமல் நின்றவனிடம், அடுத்தமுறை பிள்ளையைத் தயார்படுத்திக்கொண்டு வரும்படி அம்மாட்டைச் சொல்லியிருக்கிறம். திரும்பவும் வாற ஞாயிறு இதே நேரம் வாங்கோ என ஆங்கிலத்தில் சொன்னவள் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் அங்கிருந்து அகன்றாள்.

“மூண்டு மாதமாச் சந்தியாமலிருந்தவனை நேரில காட்டாமல் சும்மா வா எண்டு கூப்பிட்டால், ரண்டு வயதும் நிரம்பாத அந்தக் குழந்தை என்னெண்டு வருவான்?” தனக்குத் தானே சொன்னவன் காருக்குள் ஏறிக் கதவை அடித்துச் சாத்தினான்.

எந்தப் பயனுமற்ற அந்த ஐம்பது நிமிடப் பிரயாணத்தை மீளவும் வீட்டை நோக்கிச் செய்யவேண்டுமே என்ற எண்ணம் அவனுக்குள் மிகுந்த அலுப்பை உருவாக்கியது. பக்கத்திலிருந்த ‘பார்’க்குள் காரைத் திருப்பினான்.

கனடாவுக்கு வந்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன. வந்த கடன் அடைத்து, தங்கைச்சிக்கும் திருமணம் செய்துகொடுத்தபின் ஆயாசமாக மூச்செடுத்த காலம் அது.

“முப்பது தாண்டியிட்டுது, வயசானாப்போலை பிள்ளைப் பெத்தால் பிறகு பிள்ளையளோடை ஓடிவிளையாடுறதுக்கு உடலிலை தெம்பிராது தம்பி,” அம்மா ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தா.

அந்த வருடக் கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போனபோது, அவளின் படத்தைக் காட்டி, “இந்தப் பொம்பிளைப் பிள்ளையை எனக்கு நல்லாய்ப் பிடிச்சிருக்குத் தம்பி. வன்னியிலை நடந்த பிரச்சினைக்கே அம்பிட்டு தாய் செத்துப்போச்சாம். பெரிய பாவம். பதினாறு வயசிலிருந்தே வீட்டுப் பொறுப்பெல்லாம் அதுதான் பாக்குதாமெண்டு புரோக்கர் சொன்னார். … பிள்ளை நல்ல வடிவெல்லே!” மறுப்புச் சொல்லமுடியாத வகையில் கலியாணத்துக்கு அச்சாரமிட்டா அம்மா.

“அம்மா, இப்ப யார் பாவமெண்டு உங்களைக் கேட்கோணும் … ஆனா அதுக்குத்தான் நீங்க உசிரோடை இல்லையே!” குடி தலைக்கேற மனசு மறுகியது.

X X X

ஆதியைப் பார்க்கவென அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவன் வெளிக்கிட்டபோது, ஆதிக்கு பிடித்த சொக்களேற் கோடேட் ஸ்ரொபெரிகளையும், சொக்களேற் மில்க்கையும் மறக்காமல் வாங்கிக்கொண்டான். இந்த முறை அவனைப் பார்க்கக் கிடைக்கவேண்டுமென உலகத்திலுள்ள தெய்வங்களை எல்லாம் நினைத்து அவனின் மனம் மன்றாடியது. அடுக்கடுக்காகப் பலவகையான நேர்த்திகளையும் அந்தந்தத் தெய்வங்களுக்கு நெக்குருகச் சொல்லிக்கொண்டான்.

இருபது நிமிடம் முன்பாகவே அங்கே போய்விட்டான். காத்திருப்பு அறையில் அவன் உட்கார்ந்திருந்தபோது அவனின் மனம் இருப்புக்கொள்ளாமல் தவித்தது. முடிவில் அழுதபடி திமிறிக்கொண்டிருந்த ஆதியுடன் அவர்களை மேற்பார்வை செய்யவென நியமிக்கப்பட்டிருந்த பெண்ணான திரேசா வந்தாள்.

வந்தவழியால் மீளவும் ஓடிச்செல்ல முயன்ற ஆதியை அங்கு நிறுத்துவதற்கு திரேசா மிகப் பெரிய பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது. அவனருகே ஆதியைக் கொண்டுவருவதற்கு அந்தச் சொக்களேற் கோடேட் ஸ்ரொபெரிகளிடமோ அல்லது சொக்களேற் மில்க்கிடமோ எந்தவிதமான மந்திரசக்தியும் இருக்கவில்லை. அங்கிருந்த வெவ்வேறு வகையான விளையாட்டுப் பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து அவன் ஆதிக்கு விளையாட்டுக்காட்டினான். இருந்தும், அவனுக்குக் கிட்ட வரமாட்டேன் என ஆதி அடம்பிடித்தான்.

திரேசா அவர்களை நோட்டமிட்டபடி அவளின் கொப்பியில் ஏதோ எழுதிக்கொண்டே இருந்தாள். அவனுக்கு மிகச் சிரமமாக இருந்தது. கண்காணிக்கப்படாதிருந்தால், பலவந்தமாகக் கட்டியணைத்தோ அல்லது வேறு ஏதாவது செய்தோ முயன்றுபார்க்கலாம். இப்ப அவன் ஒன்றைச் செய்யப்போக அது தவறென்று திரேசா நினைத்தால் என்னவாகுமோ என அவனுக்குப் பயமாகவும் குழப்பமாகவும் இருந்தது. ஆதியுடன் அவன் கதைக்கும் ஒவ்வொரு சொல்லையும் அந்தத் தமிழ் மொழிபெயர்ப்பாளர் திரேசாவுக்கு மொழிபெயர்த்தபடி இருந்தார்.

அருகில் வேறு சில சிறுவர்கள் கார் ஓடியும், பந்தடித்தும் வெவ்வேறு விளையாட்டுக்களை அவர்களின் தந்தையருடன் விளையாடிக்கொண்டிருந்தனர். இப்படியே இருபது நிமிடங்கள் கடந்தன. ஆதி அழுதுகொண்டே இருப்பதால் அடுத்த ஞாயிறு மீளவும் முயற்சிக்கும்படி முடிவாகத் திரேசா சொன்னாள். ஆதிக்கென வாங்கிவந்தவற்றை கலாவிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்ட அவன் அங்கிருந்து வேதனையுடன் வெளியேறினான். ஆதியைக் கண்டது, அவனது ஆதங்கத்தை மேலும் கூட்டியிருந்தது. ஆசைதீர ஆதியைக் கட்டியணைக்கவோ, முத்தமிடவோ முடியாததால் அவனின் மனம் முழுவதும் வெறுமை படந்திருந்தது.

வேலையால் வீட்டுக்குச் செல்லும்போது ஓடிவந்து அவனைக் கட்டிக்கொள்ளும் ஆதி இப்படி மாறிப்போனான் என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அவனுடைய கதிரையில் எவரும் இருக்கவிடாமல், “அப்பா, அப்பா” என அது அப்பாவுடையது என மழலை பேசும் ஆதி, அவனது மார்பில் படுத்திருப்பதில் சுகம் காணும் ஆதி … அந்த ஆதியா இது, அவனுக்கு நெஞ்சடைத்தது.

ஆதி ஸ்ரோபெரியை விரும்பிச்சாப்பிட்டானா, என அவன் தங்கியிருந்த வீட்டுக்காரப் பெண் ஆர்வத்துடன் கேட்டபோது, அவனால் பதில் சொல்லமுடியவில்லை.

X X X

அடுத்த வாரம், ஆதியிடம் இருக்கும் அதே போன்ற தீயணைக்கும் வண்டி ஒன்றை வாங்கினான். அது ஓடும்போது உருவாக்கும் ஒலியும் ஒளியும் ஆதியின் கண்களை விரியச்செய்வதுண்டு. அத்துடன் ஆதிக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஒன்றையும் வாங்கிக்கொண்டான். அதிலுள்ள விலங்குகளை ஒவ்வொன்றாக அழுத்தும்போது அவை வெளியே எட்டிப்பார்த்து அவற்றுக்குரிய சத்தங்களை எழுப்புவதைப் பார்த்து ஆதி பிரமித்துப் போவது அவன் கண்களில் ஓடி மறைந்தது.

அன்று, ஆதி அவன் தீபாவளிக்கு வாங்கிக்கொடுத்திருந்த சிவப்பு நிற ரீசேட் அணிந்திருந்தான். அதன் முன்பக்கத்தில் இருந்த அந்தப் பெரியக் கறுப்பு நிறப் பூனைக்குட்டியின் படம் ஆதியை மிகவும் கவர்ந்திருந்தால் அதை ஆதி விரும்பிப் போடுவது வழக்கம்.

“ஹாய் ஆதிக் குட்டி, ரொசி சுகமா இருக்கா?”

அந்தப் பூனைக்குட்டியை வருடியபடி கேட்டவன், மியாயா மியாயா என மெலிதாய் ஒலி எழுப்பினான். ஆதியின் முகத்தில் சிறியதொரு புன்முறுவல் ஏற்பட்டது.

பின் அந்தப் புத்தகத்தை விரித்து அதிலிருந்த பூனையின் படத்தை அவன் அழுத்தியதுபோது, மெல்ல மெல்ல நகர்ந்து ஆதி அவனருகில் வந்தான். பின் பூனையை ஆதியே அழுத்தினான். அப்படி ஒன்றொன்றாக ஆதி அழுத்த அழுத்த அந்தந்த மிருகங்கள் எழுப்பும் ஒலியை அவனும் சேர்ந்து எழுப்பினான்.

பின்னர், “அப்பா அப்பா,” எனத் தன் மழலை மொழியால் கூறி அவனை அழுத்தும்படி அந்தப் புத்தகத்தை ஆதி சுட்டிக்காட்டியபோது அவனின் உடல் சில்லென்று குளிர்ந்துபோனது. ஆதி கேட்டபடி அவன் அந்தப் பூனையை அழுத்தியபோது ஆதி வந்து அவனின் மடியில் ஏறிக்கொண்டான். அவனுக்குக் கண் கசிந்தது. அவன் ஆதியை இறுகக் கட்டிக் கொண்டான்.

அதன்பின்பான சந்திப்புக்களின்போது ஆதி மீளவும் அவனுடன் நன்கு ஒட்டிக்கொண்டான். அந்த இரண்டு மணி நேரம் முடிந்துபோகும்போது அவனை விட்டுச்செல்ல மாட்டேன் என ஆதி அழ ஆரம்பித்தான். ஆதியை விட்டுப்பிரிவது அவனுக்கும் மிகுந்த கஷ்டமாக இருந்தது.

ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையின் விடிவுக்காகவும் அவன் காவல் இருந்தான்.

மேற்பார்வையில்லாத சந்திப்பாக மாற்றி தான் வதியும் வீட்டுக்கு ஆதியைக் கூட்டிச்செல்வதற்கு என்ன செய்யவேண்டுமென அவனின் வக்கீலுடன் அவன் கலந்தாலோசித்தான்.

X X X

பிணையில் அவன் விடுபட்ட ஓரிரு நாட்களின்பின் சிறுவர் பாதுகாப்பு நிலையத்திலிருந்து வரும் வழமையான அந்த அழைப்பு அவனுக்கும் வந்திருந்தது. அந்த உரையாடலின் முடிவில், நடந்ததுக்கு அவள் வருந்துவதாகவும், இப்பிடியெல்லாம் பிரிஞ்சிருக்க வேண்டிவருமெண்டு அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும், தனியவா பிள்ளை வளர்ப்பதை அவளால் கற்பனைசெய்துகூடப் பாக்கமுடியாமலிருக்கிறது என்றும், மீண்டும் சேர்ந்துவாழ அவள் விரும்புவதாகவும் கலா சொன்னதாகக் கூறிய அந்தப் பணியாளர், அவனுடைய திட்டம் என்னவென்று அவனிடம் கேட்டிருந்தார்.

இனியும் அவளுடன் சேர்ந்து வாழமுடியுமா என்பது அவனுக்குத் தெரியவில்லை. அதேநேரத்தில் வாரத்தில் இரண்டு நாளோ, மூன்று நாளோ மட்டும்தான் ஆதி அவனுடன் இருக்கலாம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அதை எப்படித் தாங்கிக்கொள்வதென்பதும் அவனுக்குப் புரியவில்லை. ஆதிக்காகவென அவன் அவளுடன் சேர்ந்து வாழப்போனால், மீண்டும் ஒரு தடவை இப்படி ஒன்று நடந்து – அதற்காக அவள் பொலிசை அழைத்தால், முதல் முறை என்பதால் இப்போது கிடைத்த மன்னிப்பு பிறகு கிடைக்கமாட்டாது என்ற யதார்த்தம் அவனுக்கு மிகுந்த கிலேசத்தைக் கொடுத்தது. மேலும் இப்படி இருவரும் முரண்பட்டிருந்தால் அது ஆதியின் மனதை எவ்வளவு பாதிக்கும் என்பதையும் அவன் கருத்தில் கொள்ளவேண்டியிருந்தது. அத்துடன் பொலிஸ் காவலில் இருந்ததில் அவனுக்கு மிகுந்த அவமானமாகவும் வேதனையாகவும் இருந்தது. அதனால் யோசிக்கவேண்டியிருப்பதாக அந்தப் பணியாளரிடம் அவன் அன்று கூறியிருந்தான்.

ஆனால், இன்னும்தான் அவனால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அவனுக்குத் தலை கிறுகிறுத்தது.

உரையாட வரும் எந்திர இரவு, கடலில் கலக்கும் கவிதை – நந்தாகுமாரன் கவிதைகள்

உரையாட வரும் எந்திர இரவு

கண்ணுக்குச் சிக்கிய நட்சத்திரங்களிடம்
நலம் விசாரித்தபடி நகர்கிறது நிலவு
நகர்ந்து கொண்டேயிருக்கிறது

இரவின் தூரத்தைக் கடக்க
மின்விசிறிகளின் சிறகுகள் பறக்கின்றன
பறந்து கொண்டேயிருக்கின்றன

வௌவால்கள் திட்டமிடும் பாதையில் தான்
இப்போது பூமி சுழல்கிறது
சுழன்று கொண்டேயிருக்கிறது

ஜாமத்தின் பிரதிகளில்
ஆதியிரவைத் தேடி அலைகிறது
விழிப்பின் அஸ்தமனம்
அலைந்து கொண்டேயிருக்கிறது

தூக்கத்தின் தளத்தில் நுழைந்ததும்
விளம்பரக் கனவுகள் தாண்டி
உரையாட வரும் எந்திர இரவு
இதைத் தான் நாள்தோறும் சொல்கிறது
சொல்லிக் கொண்டேயிருக்கிறது

தூக்கம் விட்டதோ
விடியல் தொட்டதோ

பவழமல்லிகள் உதிர்கின்றன
உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன

அணில்கள் கீச்சிடுகின்றன
கீச்சிட்டுக் கொண்டேயிருக்கின்றன

மாங்குயில் கூவுகிறது
கூவிக் கொண்டேயிருக்கிறது

 

கடலில் கலக்கும் கவிதை

வெறும் புல்லின்
சிறு கையின்
பனிக்கோளத்தில் இந்தப்
பெறும் பூங்காவின்
பேருலகை அடக்கி
பெரும்பாறாங்கற்களையும்
துளி உளி கொண்டு
உருமாற்றி
காணி நிலத்தில் நடக்கும்
ஜோடிக் குதிரைகளுக்கு
காதலையும் காலை உணவையும் அளித்து
வெந்து தணிந்த நாட்டில்
ஒரு குடம் குளிர் மழைக் காற்றை
நிதம் முகம் முழுவதும் ஊற்றி
அவமானப்படுத்தப்பட்ட இடத்திலேயே
அனுமதிக்கப் பணித்து
அன்பு புரிந்து
அதிகாலையில் பறவைகளை எழுப்பி
எமக்காகப் பாட வைத்து
என் இடது காதில் துடிக்கும்
கடலின் இதயத்தை
புல்லாங்குழலின் குழிகளில்
இசையாக்கிப் புதைத்து
அடர்ந்த காடுகளில்
இன்னும் பல கோடி நூற்றாண்டுகளுக்கான
இசையை உலவ விட்டு
என் வலது காதில் ஊளையிடும்
காமத்தின் கோரப் பற்களை
ஒரு ஆப்பிளுக்குள்
அடக்கம் செய்து
பறந்து போய் மரக்கிளையில் அமரும்
ஆட்டுக்குட்டிகளைப் பிரசவித்து
பிறகு
இந்தக் கவிதை
போய்க் கலக்கிறது
தன் கடலில்