நந்தி – காஸ்மிக் தூசி கவிதை

ஆலகால விடம் அருந்தி
அம்மை மடியில்
மயங்கிக் கிடக்கையில்,
காத்திருக்கும்
பக்தர்களின் வரிசைக்கு
காவல்,

தசைச்செழிப்பு புடைத்தெழும்ப
எந்நேரமும் எழுந்துவிடும்
ஆயத்தமாய்
பிரகதீஸ்வரர் முன்
வீற்றிருக்கும் நந்தி.

கயிலாயத்துள் நுழையும்
பக்தகோடிக்கு ஜருகண்டி.
அத்துமீறினால்
விஷ்ணுவே ஆனாலும்
விபரீதம்.
வெறும் மூச்சுக்காற்று போதும்
கருட பகவானை
தடுமாறி விழவைக்க.

உயிர் பிச்சைக்கு
அந்த சிவபெருமானே வந்து
சொன்னால்தான் ஆச்சு.

அவதார அதிகார கைலாச
சிறிய பெரிய, மற்றும்
சாதாரண நந்திகள் மத்தியில்
ஓரமாய் எங்கோ
உடனுறைகிறார்,
சிவபெருமான்.

காலத்தில் உறைந்த
கறுப்பு உலோகம்
விலாப்புறங்கள் சிலிர்த்து
திமில் சரிய
முன்னங்கால் உயர்த்தி

கொம்பசைத்து வாலைச்சுழற்றி
கழுத்துப்பட்டையின் மணி ஒலிக்க
எந்நேரமும்
எழுந்துவிடக்கூடும்.

என்றாலும்,
நந்திகள்
ஏன் எப்போதும்
அமைதியாக
அமர்ந்திருக்கின்றன?

பிரதோஷ நேரங்களில்
எண்ணற்ற நந்திகளுள்
ஏதோ ஒன்றை
தற்செயலாய் தெரிவுசெய்து
அதன் சிரசின்மேல்

தன் ஏழுதாண்டவங்களுள் ஏதாவது ஒன்றை
இடக்கால் வீசி
ஆவேசமாய் நடனமிடுகிறார்
சிவபெருமான்.

நடனம் முடியும்வரை
மூச்சைப்பிடித்தபடி
ஈட்டி முனை வேய்ந்த வேலிக்குள்
விழிபிதுங்க
அசையாமல்
அமர்ந்திருப்பதைத் தவிர
வேறு வழியில்லை.

நந்தி
இம்மி அசைந்தாலும்
போதும்.
அவரின்
அடவு
தப்பிவிடும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.