Author: பதாகை

ரஷ்ய மொழிக் கவிதைகள் – லியோனிட் மார்டினோ – தமிழில் தி.இரா.மீனா

மூலம் : லியோனிட் மார்டினோ [ Leonid Martynov 1905—1980 ]

ஆங்கிலம் : பீட்டர் டெம்ஸ்ட்

தமிழில் : தி.இரா.மீனா

 

என்னுடைய பழைய வரிகள்

என் பழைய வரிகளை

அவர்கள் இன்று எழுதும் கவிதைகளில்

அடையாளம் காண்கிறேன்.

அதில் அதிசயம் எதுவுமில்லை:

அன்றொரு நாள் நான் பாடியதை அவர்கள் கேட்டனர்.

அவர்கள் குரல்கள் என்னோடு இணைகின்றன.

அது நாங்கள் ஒத்த குரலில் பாடுவதாகத் தெரிகிறது.

எது எனக்கு ஆச்சர்யமெனில்

என்னிடம் இப்போது இளமையில்லை

அந்த உத்வேகமில்லை,

என் பேச்சின் நிதானத்தை நான் உணர்கிறேன்,

இருப்பினும் நினைவுகள் மனதில் ஓடுகின்றன

அவர்கள் என்னை முன்னோக்கிச் செல்கின்றனர்.

நான் சுவாசிப்பதற்கு முன்பே

அவர்கள் கறுப்பு வெள்ளையில் அதை வெளிப்படுத்துகின்றனர்.

நேற்றிரவில் என் கனவில் வந்தவற்றை

அவர்கள் வைகறையில் ஒலிபரப்புகின்றனர்.

 

தலைப்பிள்ளைச் சொத்துரிமை

ஏழைகள் நினைக்கின்றனர்

நாம் பணக்காரர்களென்று :

இங்குதான் ஒவ்வொரு தேவதைக் கதையும் உண்மையாகிறது,

ஏதாவது வேண்டும் என்பதே உங்களுக்குத் தோன்றாது–

குவியல்களின் சாவி உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பணக்காரர்கள் நினைக்கின்றனர்

நாம் ஏழைகளென்று,

வறுமை கடந்தகாலச் சரித்திரமாய் இருந்த போதும் ;

வாழ்க்கை நமக்கு எப்படியான வெகுமதியைத் தந்திருக்கிறதென்று

அவர்களுக்குத் தெரியாது.

அவை வெற்றியின் மூலம் நாம் உருவாக்கியிருக்கின்றவை..

ஆனால் பணக்காரர்களுமில்லை பிச்சைக்காரர்களுமில்லை

நாம் !

இதுவரையில் இருந்திராதவர் போன்ற மனிதர்கள் நாங்கள்.

அதனால் நேற்றைய அடையாளங்கள் இன்று பார்ப்பதற்கு வெறுமையாய்,

நீங்கள் இப்போது எங்கள் மேல் அதைப் பொருத்த வேண்டாம்.

துல்லியமான என் கருத்து இதுதான்:

எங்கள் செயல்களுக்கு நீங்கள் கொடுத்தது

பொருத்தமற்ற, பக்குவமில்லாத அடையாளங்கள்.

பணக்காரர்கள் அல்லது ஏழைகளுடன்

எங்களுக்கு எதுவும் பொதுவானதல்ல…

இங்கு இது தலைப்பிள்ளைச் சொத்துரிமை வகைதான்!

 

எதிரொலி

அன்பே என்ன விந்தை !

எப்போது நான் உன்னுடன் பேசினாலும்

நான் சொல்வது மீண்டும் எதிரொலிக்கிறது

அக்கம் பக்கத்தினரும் கேட்கின்றனர்!

அருகிலோ

மிகத் தொலைவிலோ

மக்கள் எங்கிருந்தாலும்,

என் வார்த்தைகள் வேகமாப் பறக்கின்றன.

எனினும் , நமது சந்தோஷமும் துக்கமும்

எதிரொலித்துக் கொண்டிருப்பது

கொடுமையான விஷயமில்லை என்றுதான் நினைக்கிறேன்

உலகெங்கிலும் நடந்து கொண்டிருப்பதை நம்மால் கேட்கமுடிகிறது.

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது அப்படியான ஒரு சகாப்தத்தில் தான்!

————–

நன்றி :

Leonid Martynov A Book of Poems, Progress Publishers, Moscow

Old line of mine

Old line of mine

I recognize

In verse they write today.

There ‘s nothing strange in this;

They heard me sing the other day .

Their voices merge with mine

It seems we almost sing as one.

But this is what surprises me;

Now I am not young

And highly spirited,

I find I speak more quietly,

Yet thoughts that have just crossed my mind

They voice ahead of me.

They have put them down in black and white

Before my breath I have drawn.

The dreams that came to me last night

They are broadcasting at dawn.

Primogeniture

Poor people reckon

That we are wealthy:

Here every fairytale wish comes true,

You will not be left in want of anything –

The keys of plenty have been handed to you.

Rich people reckon

That we are paupers,

Even though pauperism is past history ;

They have no idea how this life rewards us

Which we have built up through our victories.

But neither rich men nor beggars

Are we !

We are people the like of whom never existed.

So yesterday ‘ s labels ,it ‘ s plain to see,

You ‘d better not pin to our clothes now,for this

Precisely my point :

We have feature which

Render your labels absurd and premature.

We have nothing in common with poor or rich…

Here it is a case of primogeniture!

Echo

How strange, dear! Whenever

I am talking to you,

What I say re—echoes

And neighbours hear too !

Whether nearby

Or at a great distance

My words quickly fly.

Yet it is not,I suppose,

Such a terrible thing

That our joys and our woes

Should be echoing.

Round the world we can hear what is happening.

Such is an era we are living in !

—————————————————

துரித வாழ்வும், கிளை தாவுதலும் – இடபம் நாவல் வாசிப்பு அனுபவம் – சௌந்தர் கட்டுரை

தொடர்ந்து இணையத்திலும், கிண்டிலிலும், படித்துக்கொண்டிருந்ததன் சலிப்பு, மறைய. ஒரு அச்சுப்பிரதி படிக்க தோன்றியது. அவ்வகையில் சமீபத்தில் படித்த புத்தகம் பா .கண்மணி அவர்கள் எழுதிய ”இடபம் ” நாவல்.

இந்த நாவல் பெங்களூரு பின்னணியில் நடைபெறும் ஒரு பெண்ணின், வாழ்வும் ,சலிப்பும், தற்காலிக விடுதலைகளும் என ஒரு எளிய கதை. எனினும் சொல்லப்பட்ட களம், பொதுவாக யாரும் தொடாத, பங்குச்சந்தை எனும் கடலில் நீந்தும் அன்றாடம் காய்ச்சிகளுக்கான அல்லாடல்.

ஒரு சமநிலையான மனிதனுக்கு, ஒரு நாளில் பன்னிரண்டாயிரம் முறையும், சற்று வாழ்வியல் பிரச்சனைகள் சூழ்ந்த மனிதனுக்கு, நாற்பத்தி இரண்டாயிரம், முறையும் எண்ணங்கள் வருவதாக நவீன உளவியல் சொல்கிறது . யோசிக்கையில் , இத்தனை ஆயிரம் எண்ணங்கள் கொண்ட மனம் , நிதானமாக ,மெதுவாக என எதையாவது ”உணர்ந்து” இருக்குமா? என்பதே சந்தேகம் தான் . மேலும் இந்த நூற்றாண்டின் மனித மனம் என்பது ”துரிதம் ” [ SPEED /QUICK/FAST ] என்கிற கட்டுமானத்தில் கட்டப்பட்டுள்ளது.

எண்பதுகளில் ஒருவர், மும்பையில் இருக்கும் நண்பர் ஒருவருக்கு கடிதம் எழுதுகிறார் எனில் , அதை எழுதும் பொழுதே , அதற்கான பதில் கிடைக்க ,இருபது நாள் ஆகும் என்கிற பிரக்ஞயை, கொண்டிருந்தார் .எனவே அடுத்த நாள் அவருடைய மனம் எந்த பரபரப்பையும் அடைவதில்லை. ஆனால் இன்று, அனுப்பிய குறுஞ்செய்தி மறுமுனையில் , திறக்கப்பட்டு விட்டது. என்கிற ”டபுள் டிக் ” சமிக்கை வந்தவுடனேயே , மனம் பதில் தேடி பரபரக்கிறது.

இந்த நாவலின் மனிதர்கள் அனைவரும் இந்த ” துரிதம் ” எனும் சரட்டில் கட்டப்பட்டு கதை முழுவதும் அலைகிறார்கள் . அதில் ஒருத்தி தான் நாயகி . உத்தேசமான நாற்பது வயதை நெருங்கிய முதிர்கன்னி. தனியாக வீடெடுத்து தங்கி, பொங்கி , தின்று வாழும், முற்போக்கான , அல்லது சுதந்திரமான என்கிற ” தான்”எனும் உலகில் வாழ்பவள் .முற்போக்கு , சுயசிந்தனை என தனது வாழ்வை நினைத்தது போல அமைத்துக்கொண்டதால், மகிழ்ச்சிக்கு பதிலாக , கசப்பை, புகாரை , குறைகளை மட்டுமே காணும் பூதக்கண்ணாடி யை எப்போதும் மாட்டிக்கொண்டு திரிபவள். எனவே பண்டிகைகள் கசக்கிறது. குழந்தைகள் எரிச்சலை தருகிறார்கள் , அடுத்தவர் கொண்டாட்டம் ”குறையுள்ளது” என குத்திக்காட்ட முடிகிறது. எனினும் இந்த ஒட்டுமொத்த தீமைகளால் ஆன உலகை ”சுய சம்பாத்தியம்” எனும் பணத்தால் வென்று மேலேறிட முடியும் என்கிற மாபெரும் நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் அவளால் தள்ள முடிகிறது.
அப்படி நாட்களை தள்ளிச்செல்வது அவ்வளவு ஒன்றும் எளிதல்ல என்பதால் , சற்று குடியும் அதற்கான நியாயங்களை , சிலப்பல உடல் சார்ந்த மீறல்களை, பணத்தை கையாடல் செய்வது வரை அனைத்தையும் அவ்வப்போது நியாயம் கற்பித்துக்கொண்டே செல்ல முடிகிறது .
‘ஒழுக்கமற்ற வாழ்வில் ஒருபோதும் மனநிறைவும் நிம்மதியும் சாத்தியமில்லை”- என்பது உலக இலக்கிய ஜாம்பவானின் வரிகள். எத்தனை உன்னதமானவை. என்பதை இந்த நாயகியின் அல்லது இன்றைய சிறிய அளவிலேனும் ஒழுக்கமற்ற ஒருவருடைய வாழ்வை, அவர்கள் அடிக்கடி சென்று சேரும் இருளை, காணும்போது புரிந்துகொள்ள முடிகிறது.

பங்குச்சந்தை பற்றிய அவதானிப்புகள் , வர்ணனைகள் , உள்ளூற நடக்கும் வர்த்தக விளையாட்டுகள் என அனைத்தும் , ஒருவரை இந்த துறை நோக்கி இலகுவாக இழுக்கும், மிகக்கச்சிதமானவை. பங்குச்சந்தையின் சாதக பாதகங்கள் மிகவிரிவாக, அதே நேரத்தில் அடிப்படைகள் ஒரு சாமானியருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டிருப்பது,
பா .கண்மணியின் பங்கு சந்தை சார்ந்த அறிவுப்பரப்புக்கு ஒரு சான்று. அல்லது அதற்கான மெனக்கெடல் நாவல் முழுவதும் தெரிகிறது . மிக அளவாக எழுதியிருப்பது தான் அதன் தனித்தன்மையும். ”புட் ஆப்ஷன்” – ”கால் ஆப்ஷன்” போன்ற பங்கு வர்த்தக செயல்பாடுகள் குறித்து இன்னும் சிலபக்கங்கள் கூடுதலாக எழுதி இருந்தால் கூட, இது ஒரு ”அள்ள அள்ள பணம் ” எனும் புத்தகம் போல மாறியிருக்கும்.

கதை நாயகி ”பணம் ” எனும் ஒற்றை புள்ளி நோக்கி ஒவ்வொரு நாளும் பாய்ந்தும், மாய்ந்தும், ஓடியும் , சாடியும், திரியும் ஒரு யட்சி. ஒருநாள் அவள் அதை வென்று விடுகிறாள். அன்றுமுதல் அவள் வேறு மனுஷி, புது வீடு ,புது வாழ்வு என அனைத்தையும், அடைந்துவிட்ட திருப்தியில், அடுத்த நாள் முதல் அவள் நடவடிக்கையில் ரசனையில் ,கண்டடைவது என்னவோ மேலும் குற்றமும் , குறையும் , எரிச்சலும், சலிப்பும் உள்ள அன்றாடத்தைத்தான்.
நமது ஆழ்மனதின் மீது மரபிற்கு எவ்வளவு பெரிய ஆளுமை உள்ளது என்பதற்கு. பெரும் செல்வம் , பணம் போன்ற விஷயங்களை சித்தர் பாடல்கள் முதல் மரபு இலக்கியம் வரை எப்படி விலக்கி வைக்கின்றன என்பதற்கு குபேரனின் உருவம் அவன் பயம் என பல்வேறு படிமங்களை சொல்லலாம் .
நாயகியின்” கனவு காட்சிகள்” மூலம் மிகச்சரியாக இந்த இடத்தை சென்று தொட்டிருப்பது மேலும் ஒரு சிறப்பு , நாயகி நாள்முழுவதும் லட்சங்களில் , கோடிகளில் பணமதிப்பை , கைபேசி திரையிலும் , கணினி திரையிலும் , வீட்டிற்கு வந்து தொலைக்காட்சியிலும், பார்த்தவண்ணம் இருக்கிறாள் . அவளுக்கு ஒருபோதும் பணமோ , செல்வமோ கனவில் வருவதில்லை , இருண்ட குகையும் , சுருள் சுருளென இறங்கிச்செல்லும் கிணறும் , நாகமும் என,
இருள் கவிழும் கனவுகள். அதை வெல்லவே மேலும் அவளுக்கு ”பக்கார்டியும்” , குறுகிய கால உறவும் தேவையாய் இருக்கிறது. இதை வெற்றி பெற்ற ஒரு பெண்ணின் கதை என்று எடுத்துக்கொள்ளலாம் . அந்த நாணயத்தின் பின் பக்கமோ, மொத்த வாழ்வின் மீதும் கொண்ட சலிப்பு,ஒவ்வாமை , வெறுப்பு என்கிற களிம்பு பூசிய செல்லாக்காசு.

எழுபதுகளின் பின்பகுதியில் , எண்பதுகளிலும் பிறந்து திருமணம் செய்து விவாகரத்து பெற்று,வேறு வாழ்க்கை அமைத்துக்கொண்டு , அல்லது திக்கி திணறி வாழ்ந்து கொண்டிருக்கும், ஒரு மாபெரும் திரளுக்கு முன்னால், இந்த இரண்டில் எந்த திசையிலும் செல்லாமல் நின்று கொண்டிருக்கிறாள் நாயகி. ”திருமணமே சுத்த பொய்” , ”கொடுமையான வாழ்க்கை” , என ஆயிரம் காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லும் நாயகிக்க்கும். அல்லது புரட்சிகர சிந்தனை கொண்டோருக்கும் , இரண்டு வாழ்விலும் இல்லாமல் முட்டுச்சந்தில் நிற்போருக்கும் தெரியவில்லை , மனித திரளுக்கு, ”திருமணம்” தவிர வேறு நல்ல திட்டமும், சாத்தியமும் இப்போதைக்கு இல்லை. என. இருப்பதாக நம்பி அலைந்து திரிபவள் இந்த நாயகி.
பங்கு சந்தையில் ”இடபம்” {bull market} என்பது ஏறுமுகம் என்றும் ”கரடி”{ bear market} எனும் உருவகம் இறங்கு முகம் என்பதும் நாம் அறிந்தது.

இந்த நாவல், வாழ்வில் கரடியாக, ஒவ்வொரு இழப்பாக சந்தித்துக்கொண்டிருக்கும் நாயகியின் ஒரேயொரு ”இடபம்” எனும் ஏறுமுகம் குறித்து சொல்லும் இன்றைய மனிதரின் கதை . வெவ்வேறு இழப்புகளுக்கு மத்தியில் ஒரே ஒரு காளைத்துள்ளல்.

இடபம்
எதிர் வெளியீடு – http://www.ethirveliyedu.in
விலை 220ரூபாய்

எஞ்சி நிற்பது – ராதாகிருஷ்ணன் சிறுகதை

இரவில் பாதியில் மட்டும் விழிப்பு வந்துவிட கூடாது, விழித்தால் பின் மீதி உறக்கத்தை மறந்து விட வேண்டியதுதான், இப்போது அப்படி பாதியில் எழுந்தவன் உறக்கம் வராமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன், பெரிய கடன்களோ, கடமைகளோ இல்லை, அதை பற்றியெல்லாம் எண்ணி வருந்த கூடிய ஆளும் நானில்லை, ஆனாலும் மனம் எப்போதும் நிலைகொள்ளாமல் தவித்தபடிதான் இருக்கிறது, அதிகாலை பெரும்பாலும் எப்போதும் பயத்துடன்தான் எழுந்திருப்பேன், பிறகு சற்று நேரத்திற்கெல்லாம் அவை வெற்று பயங்கள் என்பது மனம் புரிந்துகொண்டு சமநிலை அடையும், நடுஇரவு விழிப்பில் இந்த சிக்கல் எல்லாம் இல்லை, தூக்கம் வராமல் மனம் எதையாவது தேடி துழாவும், பிறகு சற்றுநேரத்திற்கெல்லாம் அந்த துழாவலை போனில் நிகழ்த்துவேன், இணைய வெளியில் எதையாவது படிக்க தேடி கொண்டிருப்பேன், ஆனால் எந்த ஒன்றிலும் மனம் நுழையாமல் தேடல் மட்டும் நிகழ்ந்து கொண்டிருக்கும், எதை தேடுகிறேன் என்று எண்ணியெல்லாம் தேடுவதில்லை, வெறுமனே மேய்வது, அவ்வளவுதான், அப்படி தேடிக்கொண்டிருக்கும் போதுதான் எதேச்சையாக நானும் ரவியும் ஊட்டியில் நின்று தற்புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்தேன், என் தோளில் கைபோட்டு சிரித்து கொண்டிருந்தான், இன்றில்லை அவன்.

நான் அவன் எல்லாம் ஒரே வீதிதான், அவனை முதன் முதலில் பார்த்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது, குண்டு உடலுடன் வெண்மை நிறத்தில் ஒருவன்” வேணாம் மா” என்று சொல்லி போய் கொண்டிருந்தான், பின்னாடியே அவன் அம்மா உணவு தட்டுடன் “சாப்பிடு சாமி ” என்று கெஞ்சிக்கொண்டு வந்துகொண்டிருந்தாள், நான் அப்போது தெருவில் பிளாஸ்டிக் பந்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தேன், என் மற்ற நண்பர்களுடன், எல்லோரும் கிரிக்கெட்டை விட்டு அவனையே பார்த்து கொண்டிருந்தோம், ஏனெனில் அவன் எங்கள் வயதில் இருந்தான், ஆனால் அந்த அம்மா அவனை குட்டி பிள்ளையை சாப்பிட கெஞ்சும் அம்மா போல அவனிடம் நடந்து கொண்டிருந்தாள், வசதியான குடும்பம் போல என அப்போது அவர்களை எண்ணிக்கொண்டேன்.

சில நாட்களிலேயே எங்கள் கிரிக்கெட் குழுவில் வந்து இணைந்து கொண்டான், பந்து தொலையத்தொலைய புது பந்து அவன் காசிலேயே வாங்கி கொடுப்பான், அது இல்லாமல் எல்லோருக்கும் எப்போதும் தின்பண்டம் வாங்கி கொடுத்தான், விரைவிலேயே எங்கள் குழுவில் விசேஷ உரிமையாளன் ஆனான், முதலில் இறங்கி பேட்டிங் செய்ய வைத்தோம், பந்து வீச கொடுத்தோம், அவனும் உற்சாகமாக தன்னை ஈடுபடுத்தி கொண்டான், இப்போதும் அவனது கிரிக்கெட் ஷாட்கள் மனதில் அப்படியே இருக்கின்றன, அழகாக பந்தை கவர் ட்ரைவ் செய்வான், தூக்கி அடிக்கும் வெறியே இருக்காது, தட்டிவிட்டு அழகாக விளையாடுவான்.

பிறகு எங்கள் நண்பர்கள் குழுவில் முக்கியமானவன் ஆனான், அம்மா அப்பா அவன் என அவன் குடும்பத்தில் மூன்று பேர்தான், மலையாள குடும்பம், அவன் அப்பா அம்மா காதல் திருமணம் செய்தவர்கள் என்பதால் உறவினர்கள் கூட உறவேதும் இல்லை, எப்போதும் அவன் எங்களோடையே சுற்றுவான், பணம் நிறைய வைத்திருப்பான், படத்திற்க்கெல்லாம் அவன் காசுதான் எப்போதும்.

எங்கள் பள்ளிக்காலங்களில்தான் கோவை தொடர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் மற்றும் அதையொட்டிய கலவரங்கள்எல்லாம் நிகழ்ந்தது, அதுவும் நாங்கள் இருந்த பகுதியில்தான் உச்சமாக நிகழ்ந்தது, அதன் துவக்கம் இப்போதும் அப்படியே ஞாபகம் இருக்கிறது, தெருவில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தோம், முதல் குண்டு வெடித்ததை கேட்டு ரவிதான் சொன்னான், எனக்கு அது சரியாக கேட்க வில்லை, பின்பு அடுத்தடுத்து குண்டு வெடித்த சத்தங்கள் ஒவ்வொன்றாக மெலிதாக கேட்டன, எங்கோ தூரத்தில் பட்டாசு வைக்கிறார்கள் என்று நாங்கள் எண்ணிக்கொண்டோம், சில நிமிடங்கள் கடந்து போயிருக்கும், தெருவில் பரபரப்பு உருவாகி வருவதை உணர்ந்தேன், ஆனாலும் அப்போதும் விளையாடி கொண்டுதான் இருந்தோம், அப்போது ஒருவர் காதில் கைவைத்தபடி அலறிக்கொண்டு தெருவிற்கு உள்ளே ஓடிவந்து கொண்டிருந்தார், காது பகுதியில் தோல் சிதறி ரத்தம் வந்து கொண்டிருந்தது , ரத்தம் சொட்ட சொட்ட உள்ளே ஓடிக்கொண்டிருந்தார், அவரை தொடர்ந்து நிறைய பேர் சத்ததுடன் உள்ளே உள்ளே ஓடி வந்து கொண்டிருந்தனர், ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்தது அப்போதுதான் உணர தொடங்கினோம், வந்து கொண்டிருந்தவர்கள் எங்களை பார்த்து வீட்டுக்கு ஓடுங்கடா என்றனர், ரவி “என்னாச்சு ணா ” என்று வந்து கொண்டிருப்பவர்களின் ஒருவரிடம் கேட்டான், அவர் ” நிறைய இடங்களில் குண்டு வெடிச்சிருக்கு, கலவரம், வீட்டுக்கு ஓடுங்க ” என்று சொல்லி ஓட்டமாக போய் கொண்டிருந்தார், அதை கேட்க நாங்கள் தெரித்து வீட்டுக்கு ஓடினோம், அப்போது ஒருபக்க ரத்த காயங்களுடன் இருந்த ஒருவரை இருவர் தாங்கி பிடித்து கொண்டு கூட்டிக்கொண்டு சென்று கொண்டிருப்பதை பார்த்தேன், இப்போது யோசிக்கும் போது உணர்கிறேன் , நாங்கள் எல்லாம் அந்நேரம் பயந்து கொண்டு கொண்டிருந்த போது ரவி முகத்தில் மட்டும் புதிதாக சூழலை கண்டுகொண்டிருந்த ஆர்வம் இருந்ததை, ஆம் அவன் எங்களில் கொஞ்சம் வித்யாசமானவன், கறிக்கடையில் கோழியை கொல்வதை, அது சத்தம் போட்டு அலறுவதை, ட்ரம்மிற்க்குள் இறக்கைகள் அடித்து அலறி கொண்டிருப்பதை உற்சாகமாக வேடிக்கை பார்த்து கொண்டிருப்பான், முடிவில் “பாவம்டா” என்பான். எங்கள் குழுவே ஒருவரை மாறி ஒருவர் புறணி பேசி கொண்டிருப்போம், ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லி கொண்டிருப்போம், ரவி யாரை பற்றியும் புகார் சொன்னதே இல்லை, மற்றவர்களை பற்றி சொல்லும்போது சிரித்து கொண்டு கேட்டு கொண்டிருப்பான், அவ்வளவுதான்.

கோவை கலவரம் என்னுள் இரண்டு விளைவுகளை உருவாக்கி இருந்தது, ஒன்று பயம், இன்னொன்று மத துவேசம், பயத்தை உணர்ந்தது ஒரு நிகழ்வின் மூலம், வெடிகுண்டுகள் வெடித்து ஒரு மூன்று மாதம் போயிருக்கும் , அப்போது நிகழ்ந்த சம்பவம் அது, அப்போதும் ரவி கூடதான் இருந்தேன், ரவிக்கு ஊசி போட வேண்டி ஒரு கிளினிக்கிற்குள் இருந்தோம், சட்டென்று மக்கள் தெறித்து ஓட ஆரம்பித்தனர், கடைகளின் ஷட்டர்கள் வேகமாக அடைத்து கொண்டிருந்தனர், நாங்கள் இருந்த கிளினிக் ஷட்டர் வேகமாக அடைக்கப்பட்டது, நாங்கள் உள்ளே இருந்தோம், மக்கள் ஓடியதும், ஷட்டர்கள் அடைக்கப்பட்ட வேகமும், உள்ளே மாட்டிக்கொண்ட நிலையும் என்னுள் கடுமையான பதட்டத்தை உருவாக்கி விட்டது, நடுங்கி கொண்டிருந்தேன், ரவிதான் “ஒன்னும் இல்லைடா வீட்டுக்கு போயிடலாம்” என்று தைரிய படுத்தினான், ஷட்டர் சாத்தியவனிடம் “நாங்க வெளிய போயிக்கறோம் “என்று சொன்னான், ஷட்டர் சாத்தியனின் முகத்திலும் பதட்டம் அப்பியிருந்தது, “கலவரம் போல இருக்கு” என்றான், கொஞ்ச நேரம் போனது, ஷட்டர் சாத்தியவர் கொஞ்சம் திறந்து வெளியே என்ன நடக்கிறது என்று பார்த்தார், வெளியே ஆட்கள் அற்று அமைதியாக இருந்தது, பிறகு கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஏதோ புரளியால் மக்கள் பயந்து ஓடி இருக்கிறார்கள், எல்லோரும் கலவரம் என்று எண்ணிவிட்டனர் என்று தெரிந்தது, நாங்கள் வெளியே வந்த போது எல்லா கடைகளும் திறந்து கொண்டிருந்தார்கள், எல்லோரும் வேடிக்கையை கண்டது போல பேசி கொண்டிருந்தாலும் ஒவ்வொருவர் முகத்திலும் பயம் இருந்தது, சைக்கிள் எடுத்து கிளம்பினோம், ரவி ” எல்லோரும் எப்படி ஓடினாங்க இல்ல ” என்றான் சிரித்த படி, எனக்கு எப்போது வீட்டிற்கு போவோம் என்றிருந்தது. அந்த நிகழ்விற்கு பிறகு இப்போதும் ஒரு நால்வர் சேர்ந்து ஓடினால் அந்த பயம் மீண்டெழுவதை உணர்வேன், இவ்வளவு ஆண்டுகள் கழித்தும். ஆனால் ரவியை இவையெல்லாம் ஒன்றுமே செய்யவில்லை, எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் இயல்புதான் அவனில் இருந்தது.

பத்தாவது வரை இப்படியே ஒன்றாகத்தான் எப்போதும் சுற்றி கொண்டிருந்தோம், பிறகு அவனுக்கு படிப்பில் நாட்டமில்லாமலாகி அப்பாவின் ஹோட்டல் தொழிலில் இறங்கினான், பிறகு எங்கள் சந்திப்புகள் இரவு நேரங்கள் மற்றும் ஞாயிறு கிழமைகள் என்றானது. பெரும்பாலும் அவன் அதிகம் பேசமாட்டான், நாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பான், அஜித் பக்தன், எங்களில் முதலில் பைக் எடுத்து அவன்தான், அவன் பைக்கில்தான் நாங்கள் எல்லாம் பைக் ஓட்ட கற்று கொண்டோம், வண்டியை கீழேபோட்டு எடுத்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டான், சிரிப்பான், அவனது சோடாபுட்டி கண் கண்ணாடிக்குள் இருக்கும் கண்களுக்குள்ளும் அந்த சிரிப்பு தெரியும், இப்போதும் அவனை நினைக்கும் போது அந்த சிரிப்புதான் முதலில் ஞாபகத்திற்கு வரும்.

நாங்கள் பெட் மேட்ச் விளையாடுவோம் ஞாயிறு கிழமைகளில், ஒருபக்கம் தூண் மாதிரி அவுட் ஆகாமல் நின்று கொண்டிருப்பான், காலேஜ் காலத்தில் கார்க் பந்தில் விளையாடும் அளவிற்கு வளர்ந்து விட்டோம், எங்களிடம் பாதுகாப்பு கவசங்கள் எல்லாம் இருக்காது, அதிக பட்சம் இரண்டு கால் பேடுகள், ஆளுக்கு ஒரு காலில் கட்டி விளையாடுவோம், கிட்னி பேடு கூட இருக்காது, ஆனால் இறங்கி சாத்துவோம், பந்து வீசும்போது வெறியுடன் போடுவோம், நான் எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளன், முதல் ஓவர் எனக்குதான், ஸ்டம்ப் அல்ல, பேட் பிடிப்பவனின் மண்டைதான் என் இலக்காக இருக்கும், விக்கெட் வீழ்த்துவதை விட பயமுறுவதைத்தான் அதிகம் விரும்புவேன், ரவி மட்டும்தான் என் பந்தை அனாசயமாக விளையாடுபவன், பந்தை வெறுமனே தட்டுவான், அது உருண்டுகொண்டே எல்லையை நோக்கி போய்க்கொண்டிருக்கும், அஜித் தவிர அவனுக்கு மற்றொரு பிரிய கடவுள் உண்டு, அது சச்சின். சச்சின் அவுட் ஆனால் கொஞ்ச நேரத்திற்கு துக்க வீட்டில் இருப்பவனை போல இருப்பான்.

அவனுக்கும் எனக்கும் மட்டுமான இன்னொரு நெருக்கம் என்பது யாருக்கும் தெரியாமல் பலான படம் போடும் தியேட்டருக்கு செல்வது, அப்போதும் அவன்தான் செலவு செய்வான், நாளைக்கு போவது என்றால் முந்திய இரவே பேசிவிடுவோம், நான் மதியமுடன் காலேஜ் விட்டு வந்து விடுவேன், சரியாக பூமார்க்கெட் பஸ் ஸ்டாப் வந்துவிடுவேன், அவன் வந்து அழைத்து சென்றுவிடுவான், நேராக இரண்டு ஸ்டாப் தள்ளி இருக்கும் சண்முகா தியேட்டர் சென்று விடுவோம், எப்படியும் 20 படங்கள் மேல் பார்த்திருப்போம், கில்மா என்ற படம்தான் எங்களுக்கு ஜாக்பாட் என்று சொல்லவேண்டும், அந்த படம் இடையே 5 பிட் ஓட்டினார்கள். இந்த அனுபவங்கள் வழியாகத்தான் சகிலா எனக்கு பிடித்த ஒருவர் ஆனார்கள், அலட்டலே அவர் உடலிலோ முகத்திலோ இருக்காது, முற்றிலும் அமைதியான பெண்மணி, உறவு காட்சியில் மட்டும் முகத்தில் உணர்ச்சிகள் காட்டுவார்கள், அதும் படம் எடுக்கும் ஆட்களுக்காகத்தான் அது இருக்கும், இப்போது வரை தோன்றினாலும் தேடி சகிலா படங்களை பார்ப்பேன், எப்போதாவது, சின்னபையன்களிடம் மட்டும் கொஞ்சம் தாராள அனுமதி அளிப்பாள், என் நோக்கில் அவள் தேவதை, பேரன்னை, பெருமுலையம்மை !

ஒருமுறை கொஞ்சம் தாமதாக தியேட்டருக்குள் சென்றோம், வாசலில் டிக்கெட் முடிந்துவிட்டது, ப்ளாக்கில் உண்டு வேண்டுமா என்று ஒருவன் வந்துக்கேட்டான், இலக்கை அடைய என்னவேண்டுமானாலும் செய்யும் மனநிலையில் இருவரும் இருந்ததால் அவன் சொன்ன விலைக்கு வாங்கி உள்ளே சென்றோம், உள்ளே போன பிறகுதான் தெரிந்தது கூட்டமே இல்லை, டிக்கெட் கவுண்டர் காத்தாடுகிறது என்று, திரும்பி வந்து அவனிடம் கேட்டால் அவன் எங்களை மிரட்டினான், பதிலுக்கு அவனிடம் பேசும்போதுதான் தெரிந்தது, அங்கு வேலை செய்யும் ஆட்கள், கேன்டீனில் இருப்பவர்கள் எல்லாம் ஒரே கும்பல் என்று, மேலும் பேசி அடி வாங்க மனமில்லாமல் உள்ளே சென்று அமர்ந்தோம், அன்று எங்களுக்கு நேரம் சரியில்லை போல, காட்சிகளில் உச்சக்காட்சிக்கு சரியாக முந்திய காட்சியில் கட் செய்து அடுத்த காட்சிக்கு தாவினார்கள், இப்படியே நாலைந்து முறை போனது, கடைசிவரை அல்வா கொடுக்கும் காதலியை போல ஒன்றும் காட்டாமல் ஏமாற்றி விட்டார்கள், போதாத குறைக்கு பக்கத்தில் இருந்த ஒரு வயதான ஆள் என் தொடைக்கு கையை கொண்டுவந்து கொண்டே இருந்தான், இரண்டுமூன்றுமுறை சொல்லியும் அவன் கேட்காது அவனது அம்மாவை நல்ல வார்த்தையில் திட்டிய பிறகுதான் தள்ளிப்போய் அவன் உட்கார்ந்தான், ஆனால் அப்போதும் அவன் அந்த புன்சிரிப்பை கைவிட வில்லை, அவனைமாதிரி ஆட்களுக்கு எல்லாம் பெரும்பாலும் குடும்பம் இருக்காது, இருந்தாலும் அந்த குடும்பத்தில் அவன் ஒப்புக்குதான் இருப்பான், இது மாதிரி தியேட்டர்கள், பொது கழிப்பிடங்கள், பஸ் இருக்கைகள்தான் அவர்களது விருப்ப வாழிடம், நிறைய இப்படியான ஆட்களை பார்த்து விட்டேன்.

நண்பன் ரவியை பற்றி சொல்ல எண்ணி எங்கெங்கோ போய்விட்டேன், எங்கள் குழுமத்தில் அவனுக்குத்தான் முதலில் திருமணம் நிகழ்ந்தது, ஆர்ப்பாட்டமாக எல்லோர் கண்ணும் படும்படி நிகழ்ந்த திருமணம் அது, அவன் அம்மா அன்று வாய்கொள்ளாத சிரிப்புடன், மிக மகிழ்வாக மண்டபத்தில் எல்லோரையும் உபசரித்து, வரவேற்று கொண்டிருந்தாள், நண்பர்கள் எல்லாம் ஆட்டம் பாட்டம் என அமர்க்கள படுத்தினோம், நான் மூன்று பீர்கள் குடித்தேன், எல்லாம் அவன் மொய் பணம்தான், நான்காவது பீர்க்கு அவனிடம் செனறு நின்றபோது முறைத்து பணம் தர மறுத்து விட்டான், புதுமணப்பெண் என்னைப்பார்த்து பயந்தது ஞாபகம் வருகிறது, மிக நல்ல பெண், உண்மையிலேயே தெய்வம் அவனுக்கு தந்த பரிசு அவள், அவனை போன்றே மென்மையான பேசும் குணம், அதே அடக்கமான சிரிப்பு, கிட்டதட்ட அவனது வெண்மை நிறமே அவளும் கொண்டிருந்தாள், அவன் உயரம் கொண்டிருந்தாள், ஆனால் உடல் ஒல்லி, இவன் குண்டு, அந்த திருமணத்தில் இரத்த சிவப்பு பட்டு சீலை உடுத்தி இருந்தாள், அவள் நிறத்திற்கு சற்றும் உறுத்தாமல் மிக பொருத்தமாக இருந்தது, இன்னொரு வித்யாசம் இவன் வட்ட முகம் கொண்டவன், குண்டு கன்னங்கள், மீசை எப்போதும் இருக்காது, அவள் நீள முகம் கொண்டிருந்தாள், நெற்றி ஏறியிருந்தது, மூக்குத்தி அவளுக்கு பெரிய அழகை உருவாக்கி கொடுத்தது என்று தோன்றியது.

காலேஜ் முடிந்ததும் எனக்கு வேலை திருப்பூரில் அமைய மாதம் ஒரு முறை என கோவை வந்து போனேன், கோவைக்கும் திருப்பூருக்கும் இடையே உள்ள தொலைவு 55கிலோ மீட்டர்தான், ஆனால் பாழாய்ப்போன திருப்பூர் வேலைநேர வாழ்க்கை என்பது 12 மணிநேரம், எல்லா கம்பெனிகளும் 12மணிநேரம் இயங்கும், திருப்பூரில் குடி அதிகம் இருப்பதற்கு, குடும்பங்கள் சிதைவதற்கு இந்த 12 மணிநேர வேலை நேரம் முக்கிய காரணம், வேலை முடிந்தால் தூங்க மட்டுமே தோன்றும், இருநாளைக்கு, சிலசமயம் மூன்று நாளைக்கு ஒருமுறை குளிப்பேன், வேலை பிரஷர் ஆளை கொள்ளும், ஞாயிறு அன்று தூங்க மட்டுமே தோன்றும், எனவே நான்கு வாரங்களுக்கு ஒருமுறைதான் வீட்டிற்கு வருவேன், வந்தது தெரிந்தால் ரவி வீட்டிற்கு வருவான், சேர்ந்து tea கடை போவோம், பிறகு நம்பர்கள் கூடி பேசுவோம், அவனுக்கு குழந்தை பிறப்பது தள்ளி போவது அவனது குடும்பத்திற்குள் நிரந்தரமான ஒரு துக்கத்தை கொடுத்துக்கொண்டிருந்தை அவன் பேச்சுக்களில் அப்போது உணர்ந்தேன், பிறகு அவனை சந்திக்கும் போதெல்லாம் அவனுக்கு துக்கம் அதிகமாவது தெரிந்தது, அவன் தந்தை உடல்நலம் சீர்கெட்டு ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாக இருந்தார், ஒருமுறை அவன் வீட்டிற்கே சென்று அவரை பார்த்தேன், என்னை யாரையோ பார்ப்பது போல பார்த்தார், என்னை மட்டுமல்ல அவனையும் கூட அப்படிதான் பார்த்தார், அணுகினார்.

பிறகு ஒரு அதிகாலை வேலையில் அவனிடம் இருந்து போன் வந்தது, அப்பா தவறி விட்டதாக, நான் என் ஓனர் வீட்டிற்கு சென்று 5000அட்வான்ஸ் வாங்கி வேகமாக போய் பஸ் பிடித்து கோவை வந்து அவன் கூடவே இருந்தேன், எனக்கு அப்போது உருவான அதிர்ச்சி அவன் அம்மாவை பார்த்தபோதுதான், ஆளே வேறொரு பெண்மணி போல இருந்தார்கள், அவரிடம் எப்போதும் இருந்த அந்த களையான முகம் காணாமல் போயிருந்தது, கழுத்தில் நகைகளே காணோம், அவன் மனைவி கழுத்தில் கூட ஒன்றுமில்லாததை கவனித்தேன், அப்பா அடக்கம் முடிந்து இரண்டு நாள் நான் மற்றும் நண்பர்கள் அவன் கூடவே இருந்தோம், ஆஸ்பத்திரி செலவு அவனை கடனாளிஆக்கி இருந்தது, பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று அவனை சமாதானப்படுத்தி திருப்பூர் கிளம்பினேன், ரவி பற்றி ஞாபகம் வரும்போதெல்லாம் அவனை அழைத்து பேசுவேன். பிறகு ஒரு மாதம் கூட ஆகி இருந்திருக்காது, நடு இரவில் அழைத்தேன், அம்மா ஆஸ்பத்திரியில் என்றான், அடித்துபிடித்து கிளம்பி போய் பார்த்தேன், அவன் அம்மா பிழைப்பது கஷ்டம் என்றார்கள், உள்ளே போய் பார்த்தேன், கண்கள் மூடியபடி படுத்திருந்தார்கள், வெறும் எலும்பின் மீது தோல் போர்த்தியது போல உடல் இருந்தது, கண்கள் எல்லாம் உள்ளே போயிருந்தது, மூச்சு விடுவது உடல் அசைவில் தெரிந்தது, அவனை முதலில் பார்த்தபோதுதான் அவன் அம்மாவையும் முதலில் பார்த்தேன், அவன் மீது சற்று பொறாமையாக அப்போது தோன்றியது, “இவ்வளவு பாசமான அம்மாவா” என்று. மாலை 5மணி இருக்கும், இறந்து விட்டார்கள் என்று அறிவித்தார்கள், ரவி துக்கம் கொண்டிருந்தானே தவிர அழவில்லை, அது கொஞ்சம் ஆச்சிரியம் அளித்தது, ஆனால் உடலை குழியில் இறக்கும் போது சட்டெனெ வெடித்து அழ தொடங்கினான், நாங்கள் அவனை பிடித்து கொண்டோம், நீண்ட நேரம் நிற்காமல் அழுதான், நாங்கள் மாறிமாறி அவனை கட்டிக்கொண்டு சமாதானம் செய்வித்தோம், பிறகு அவனை தாங்கி பிடித்தவாறு சடங்குகளை செய்யவைத்தோம், இரவு அவனோடு உறங்கினேன், காலையில் எழுந்தபோது அவன் சன்னலை நோக்கி வெறித்தபடி அமர்ந்திருந்ததை பார்த்தேன், “அம்மா நம்ம மனசுல எப்பவும் இருப்பா ” என்று சொன்னேன், அவனில் சலனம் எதுவும் இல்லை, சிறிது நேரம் போக அவன் கண்களில் இருந்து நீர் கொட்டுவது தெரிந்தது, அருகே போய் அமர்ந்துகொண்டு ” அம்மா நம்மளை விட்டு போக மாட்டாங்க ” என்றேன். அவன் பதிலேதும் சொல்ல வில்லை. பிறகு இரண்டுநாள் அவன் கூடவே இருந்த பிறகு திருப்பூர் கிளம்பி சென்றேன்,

அவனிடம் தினமும் பேசிக்கொண்டிருந்தேன், பிறகு அது குறைந்து வேலை அழுத்தம் என்னை இழுத்து கொண்டது, கோவை வரும்பொழுது போய் பார்ப்பேன், அடிக்கடி விடுமுறை காரணமாக அவன் ஹோட்டல் தொழில் பாதிக்க பட்டிருந்தது, “வீட்டை விற்றால்தான் கடனை எல்லாம் அடைக்க முடியும் ” என்றான், ” எதையும் பொறுமையா முடிவெடு “என்று சொன்னேன், பிறகு சிறுவயது ஞாபகங்களை பேசி கொண்டிருந்தோம், அவன் ” நான் பேசாம தொடர்ந்து படிச்சுருக்கலாம்டா, எனக்கு இந்த ஹோட்டல் விட்டா வேற எதுவுமே தெரியாது ” என்று வருந்தினான், நான் என் வேலை பற்றி புலம்பினேன், ஆனாலும் தனியாக பனியன் கம்பெனி வைக்கும் என் ஆசையை சொன்னேன், அவன் ” அப்ப என்னை வேலைக்கு சேர்த்திக்குவியா, எனக்கு இந்த ஹோட்டல் தொழில் வேணாம்டா ” என்றான்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு உள்ளாக ஹோட்டலை மூடி விட்டான், வீடும் விற்றுவிட்டான், கடன் பெரும்பாலும் அடைத்து விட்டதாகவும் மீதி பணம்தில் போகியத்தில் ஒரு வீடு பிடித்து அதில் இருப்பதாகவும் போனில் சொன்னான். விடுமுறையில் அவன் வீட்டுக்கு போனேன், ஆச்சிரியமாக பிரகாசமாக இருந்தான், அவன் மனைவியும் உற்சாகமாக இருந்தாள், குழந்தை பெறுவதற்கு மருத்துவம் பார்த்து கொண்டிருப்பதாக சொன்னான், மதியம் அவன் வீட்டில்தான் சாப்பிட்டேன், அவள் மனைவி “அண்ணா சாப்பிடுங்கண்ணா” என்று சொல்லி மூன்று ஆள் அளவு சாப்பாட்டை என்னை உண்ண வைத்து விட்டாள் , அவனும் நன்றாக சாப்பிட்டான், அங்கேயே மத்திய தூக்கம் போட்டு என் வீட்டிற்கு இரவுதான் கிளம்பினேன். பிறகு மூன்று நான்கு மாதங்கள் வேலை அதிகம் காரணமாக கோவை வரவில்லை, ஆனாலும் ரவியிடம் அடிக்கடி பேசுவேன், என் திருப்பூர் நண்பர்கள் எல்லோருக்கும் ரவியை தெரியும், என் எந்த ஒரு பேச்சிலும் ரவியின் பெயர் வராமல் இருக்காது.

மதியம் இருக்கும், என் அம்மா கூப்பிட்டாள், “உடனே கிளம்பி வா’ என்றாள், ஏன் என்றதற்கு ” ரவிக்கு ஆக்சிடன்ட், பொன்னும் கூட இருந்திருக்கா, இரண்டுபேரும் ஆஸ்பத்திரில, கிளம்பி வா ” என்றாள், எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து விட்டேன், நான் எப்போதும் கும்பிடும் சின்ன மாரியாத்தாவிடம் “இரண்டு பேருக்கும் ஒன்னும் ஆக கூடாது “என்று வேண்டி கொண்டேன், பிறகு வரிசையாக நண்பர்கள் கூப்பிட்ட படி இருந்தார்கள், ஓனர் கார் ஏற்பாடு செய்துகொடுத்து அனுப்பினார், ஆபத்திரி போவதற்குள் இருவரும் இறந்த செய்தி வந்து விட்டது, பைக் காரில் மோதியதில் இருவருக்கும் பலத்த அடி, இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்க வில்லை.

போஸ்ட் மார்ட்டம் செய்த பிறகு உடலை கொடுத்தார்கள், பெண்ணின் உறவினர்கள் நிறையபேர் வந்திருந்தனர், ரவி சார்பாக நண்பர்கள் நாங்கள் 50-60 இருந்தோம், நான் முன்னிறு சடங்குகள் செய்ய, அவனது குடும்ப வழக்கப்படி அடக்கம் செய்தோம்.

ஒருவாரம் தொடர்ந்து வேலைக்கு போகாமல் குடித்து கொண்டிருந்தேன், என்நேரமும், அவனது திடீர் இறப்பு கொடுத்த அதிர்ச்சி, அது கடந்து இப்போதும் இந்த இரவும் தூங்க விடாமல் செய்யும் எண்ணம் என்பது, அவன், அவன் குடும்பம், மனைவி, அம்மா, தந்தை என்பது இப்போது என் ஞாபத்தில் மட்டும் இருப்பவர்கள், ஒரு குடும்பம் முற்றிலும் மண்ணில் இல்லாமல் மறைந்து விட்டது, நான் மற்றும் என் மற்ற நண்பர்கள் குடும்பம் சகிதமாக வாழ்த்துக்கொண்டிருக்க ஒரு குடும்பம் மட்டும் சற்றென்று இல்லாமல் ஆவதன் பின்னிருக்கும் மர்மம் இப்போதும் அப்படியே என்னில் புரிந்து கொள்ளமுடியாத விஷயமாக இருக்கிறது, விதி என்றும் கடவுளின் எண்ணம் என்றும் எண்ணிக்கொண்டால் கடந்து விட முடியும் என்று நினைக்கிறேன். அல்லது நம்மை மீறிய விஷயங்களும் உண்டு என்பதை இதன் வழியாகவே வலுவாக உணர்ந்தேன். நான் மற்றும் என் நண்பர்கள் ஞாபகத்தில் அவர்கள் இப்போது வாழ்கிறார்கள், இந்த ஞாபகம் மட்டும்தான் மீதி எஞ்சி நிற்கிறது, நாங்கள் போன பிறகு அதுவும் இல்லாமலாகி முற்றிலும் அவன் குடும்பம் வாழ்ந்ததே மறைந்து அழிந்து விடும் என்று தோன்றுகிறது.

என்னஒன்று எந்த குண்டு வெண்சிறுவர்களை பார்த்தாலும் ரவியை பார்ப்பதை போல தோன்றும், அதும் அந்த சிறுவர்களிடம் விளையாட்டு இயல்பும் சிரிப்பும் மலர்ந்த முகமும் இருந்தால் அது ரவியேதான், ரவியை கண்ட குதூகலத்துடன் அச்சிறுவர்களை அணுகுவேன்.

கடவுளின் கண் – ஜிஃப்ரி ஹாஸன் கவிதை

கடவுளைப் போல்
எங்கிலும் எல்லா
இரகசியங்களையும்
உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன
கமெராக்கள்.
கடவுளின் கண்களே
கமெராவாக உருமாறிவிட்டதாக
மனிதன் பதட்டமுறுகிறான்

குற்றங்களை பரகசியப்படுத்தும்
கருவியை கடவுள் நாகரீகம் கருதித்தான்
படைக்காமல் விட்டிருக்க வேண்டும்,
சிரமத்தைப் பாராமல் அவர் தன்
வெற்றுக் கண்களால்
இமைப்பொழுதும் சோராமல்
அசிங்கம் பிடித்த மனிதனை
பரிதாபத்தோடு மிக நிதானமாக
அவதானித்தபடி இருக்கிறார்
ஏனெனில், மனித குலத்துக்கான
மேன்முறையீடுகளற்ற
கடைசித் தீர்ப்பை
அவர்தான் வழங்க இருக்கிறார்

இனி,
நன்மை தீமைகளைப் பதிவுசெய்யும்
வானதூதர்கள்
தோள்களில் உட்காரந்து கொண்டு
கைவலிக்க எழுத வேண்டியதில்லை
கருமப் பதிவேடுகளை முறையாகப்
பேணத் தேவையுமில்லை.
இறுதி விசாரணையின் போது
இனி கை செய்ததை கை பேச வேண்டியதில்லை
கால் செய்ததை கால் பேச வேண்டியதில்லை
கண் பார்த்ததை கண் பேச வேண்டியதில்லை
காதுகள் கேட்டதை காதுகள் பேச வேண்டியதில்லை
ஒரு கமெராவுக்குள் அடங்கி இருக்கிறது
மனிதனின் வாழ்வும் விதியும்.

அது மனிதனை மிக நெருங்கி
அவனது எல்லா அந்தரங்கங்களையும்
பரகசியங்களையும்
பதிவுசெய்யும் கடவுளின் கண்.

நல்லவையெல்லாம் – கா.சிவா சிறுகதை

ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கிய கனகா பிரதான சாலையைக் கடந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் நெரிசலான தெரு வழியாக திருநின்றவூர் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தாள். அடர் சிவப்பு வண்ண சுரிதாரும் வெளிர் சிவப்பில் பேன்ட்டும் அணிந்திருந்தவள் தோளில் கருப்பு தோல் பையை மாட்டியிருந்தாள். ஒரு கிளிப் மட்டும் மாட்டி விரித்து விடப்பட்ட கூந்தலின் மையத்தில் மல்லிகை இரு பகுதியாக தொங்கியது.

தெருவிலிருந்து நிலையத்தைப் பிரித்தபடி கிடந்த தண்டவாளத்தில், பெரிய பெட்டகங்களையும் நிலக்கரியையும் தாங்கியபடி  சரக்கு ரெயில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. தண்டவாளத்தைக் கடப்பதற்கான மேம்பாலம் நிலையத்தின் நடுவில் உள்ளது. இவளுக்கு முதல் பெட்டியில் ஏறி இறங்குவதுதான் வசதியென்பதால் மேம்பாலத்திற்குச் செல்லாமல் பெட்டிகளை இணைத்திருக்கும் கொக்கிகளுக்கு அடியில் குனிந்தமர்ந்து நகர்ந்து தண்டவாளங்களையும் சரக்கு ரெயிலையும் கடந்து நிலைய நடைமேடையை அடைந்தாள். அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் துரித வண்டி கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் வந்து கொண்டிருந்தது.

கனகா தமிழக அரசின் முக்கிய அலுவலகத்தில் மூன்றாம் நிலை அதிகாரியாகப் பணியாற்றுகிறாள். பத்தாவது படிக்கும் போது இவள் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார். அப்பாவின் ஓய்வூதியத்தை மட்டும் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வாடகை கொடுத்து எட்டாவது படிக்கும் தம்பியுடனும் அம்மாவுடனும் வாழ்வை எதிர் கொண்டாள். அப்பாவின் நண்பர் நீலகண்டன் வழிகாட்டியபடி அம்மாவுடன் அப்பா பணியாற்றிய அலுவலகத்திற்கு சென்றாள். இவர்கள் சென்றபோது அலுவலகம் சற்று நேரம் நிசப்தமடைந்தது. பேசியபடி பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் எழுந்துவந்து நலம் விசாரித்தார்கள். இவர்கள் உயர் அதிகாரியை சந்தித்து, கனகாவிற்கு கருணையடிப்படையில் பணி வழங்கக் கோரும் மனுவைக் கொடுத்தார்கள். அப்பாவின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, மனு தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுப்பதாக சம்பிரதாயமாகக் கூறினார்.
அம்மா, வீட்டிற்கு வந்தவுடனேயே அங்கிருந்த  ஒவ்வொருவரைப் பற்றியும் கூற ஆரம்பித்தார்.

“மூலையில கண்ணாடி போட்டுக்கிட்டு நின்னானே அவன் நரி மாதிரி. தன் தேவைக்காக சதி செய்யவும் தயங்க மாட்டான்”

“இடது பக்கம் வழுக்கை தலையோட இருந்தானே, அவன் உதவறேன்னு சொல்வான், ஆனா எதுவும் செய்யமாட்டான்”

“மஞ்சள் சுடிதார் போட்ட அந்த ஒல்லிப் பொண்ணு சிரிப்புலேயே ஒரு போலித்தனம் தெரியிது”

“கூடவே வந்தானே… வெள்ளையா சின்னப் பையன், அவன் பார்வையெல்லாம் ஒன் உடம்பு மேலேயே இருந்துச்சு”

என்று தனித்தனியாக குறிப்பிட்டு அவர்கள் எம்மாதிரியான தவறான குணத்தோடு இருக்கிறார்கள் என்று தானாகவே யூகித்து, அவர்களிடம் எப்படி எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் விளக்கினார். அம்மா கூறியதை முதலில்  புறந்தள்ளிய கனகா மனுவின் மீதான நடவடிக்கையை அறிய அடுத்தடுத்த முறை அலுவலகத்திற்கு செல்லும் போது அம்மா கூறியபடிதான் உள்ளதோ என எண்ண ஆரம்பித்தாள். அந்த ஒல்லிப் பெண்ணின் புன்னகை போலியானதாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றி அவள் மேல் ஒரு ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. அரச மரத்திலிருந்து உதிரும் மெல்லிய சிறு விதைகள், கான்கிரீட் கட்டடங்களையே தகர்ப்பது போல அம்மாவின் சொல்லும் செயலும் கனகாவின் உள்ளத்தில் பதிந்து, அவளை, யாரையும் நம்பாதவளாகவும் உணர்வுரீதியாக யாருடனும் பழக முடியாதவளாகவும் ஆக்கியது.

அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று அதிகாரிகளைப் பார்த்ததால் கருணை அடிப்படையிலான பணியை பனிரெண்டாவது முடித்தவுடனேயே பெற்றாள். பட்டம் பெறாவிட்டால் பதவியுயர்வு கிடைக்காது  என்பதற்காக,  வேலையில் சேர்ந்தபிறகு தொலைதூரக் கல்வி மூலம் பட்டம் பெற்றாள்.

அப்பாவின் அலுவலகத்திலேயே பணிக்கு சேர்ந்ததால், உடன் பணியாற்றுபவர்கள் சில மாதங்கள் இவள் அப்பாவின் மேலிருந்த மரியாதையில் இவளிடம் அன்பாகப் பழகினார்கள்.  எல்லாவற்றிலும்  குறை கண்டுபிடித்து வசைபாடிய படி இருக்கும் அம்மாவின் குணத்தினால்தான் அப்பா இறந்தார் என்று இவளுக்கு அவ்வப்போது தோன்றும். அவ்வாறு தோன்றும்போது மட்டும் அம்மாவைப் போல நடந்துகொள்ளக் கூடாது என உறுதி கொள்வாள். மரண வீடுகளுக்கு செல்லும்போது வாழ்க்கையைப் பற்றி தெளிவு வந்து புதியதாக வாழவேண்டும் என உறுதி கொள்வதும், வெளியே வந்தவுடன் பழைய வாழ்க்கையையே தொடர்வதையும் போல எடுத்த முடிவை சிறிது நேரத்திலேயே மறந்துவிடுவாள். அம்மாவைப் போல யாரையும் வசைபாட மாட்டாள். ஆனால் ஒருவரைப் பார்க்கும்போது அவரின்  குறைகள் மட்டுமே இவளுக்கு பிரதானமாகப் பெரியதாகத் தெரியும்.

கனகா பணியில் சேர்ந்த ஒரு மாதத்தில் அதே பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த துர்காவை பணியிடை நீக்கம் செய்தார்கள். குறிப்பிட்ட தேதிக்குள் செய்ய வேண்டிய பணியை அவள் முடிக்கவில்லை என்று காரணம் சொன்னார்கள். ஆறு மாதம் அலையவிட்டபின் மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டாலும் ஒரு வயது மகனுடன் அவள் பட்ட பாடுகளை நேரில் பார்த்த கனகாவின் மனதிற்குள் இவள் அறிவை மீறிய ஒரு எச்சரிக்கை உணர்வு தோன்றி வலுப்பெற்றது. வேலையில்லா விட்டால் தனது குடும்ப நிலைமை மிக மோசமாகும் என்பதை எண்ணி  மனதின் ஒரு மூலையில் பதட்டம் ஒரு சிவப்பு விளக்காக எப்போதும் அணையாமல்  மின்னிக் கொண்டேயிருந்தது.  இவளின் பணி மீது ஏதாவது பிழை சொன்னால் சற்றும் தயங்காமல், எந்த குற்றவுணர்வில்லாமல் அடுத்தவரை கை காட்டிவிட பழகிக் கொண்டாள். நன்றாக பழகுபவர்களாக இருந்தாலும் தாட்சண்யம் பார்க்க மாட்டாள். தான் மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என எப்போதாவது குறுகுறுக்கும் மனசாட்சியை சமாதானப்படுத்துவாள்.

*******-

மின்தொடர் வண்டி வந்து நடைமேடையில் நின்றது. மகளிர் பெட்டி தனியாக இருந்தபோதும் கனகா முதல் பெட்டியிலேயே ஏறினாள். சென்னை சென்ட்ரலில் இறங்கியவுடன் வெளியே செல்வதற்கு இதுதான் வசதி. ஆண்களைப் பார்த்து நெளியாமல் குறுகாமல் செல்லும் இவளின் உடல்மொழி ஆண்களை வழிவிட வைத்தது. கிடைத்த இடைவெளியில் நுழைந்து, சாய்ந்துகொள்ள வாகான ஒரு இடம் பார்த்து நின்றுகொண்டாள்.

கனகா, நேற்று பெற்றோர் சந்திப்புக்காக எட்டாவது படிக்கும் பையனின் பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்ததால் அலுவலகம் செல்லவில்லை. வீட்டிலிருக்கும்போது, அழைப்பு வந்தால் பேசுவதைத் தவிர அலைபேசியை கையிலெடுக்க நேரமிருக்காது. அலைபேசியை எடுத்து புலனத்தைத் திறந்தாள். அலுவலகக் குழு பதிவுகளை முதலில் நோக்கினாள். அதில் பகிரப்பட்டிருந்த ஓர் ஆணையினைப் பார்த்தவுடன் நீண்ட நாளாக எண்ணிக் கொண்டிருந்த காஷ்மீருக்கு சென்று பனி மலைகளைக் கண்டது போன்ற பெருமகிழ்ச்சி மனதில் தோன்றியது. இவளால்  வெறுக்கப்பட்டு “ஏழரை” என்று பெயர் சூட்டப்பட்ட, அலுவலகத்தின் உயரதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த கண்டிப்பான உயரதிகாரி இவளது  அலுவலகத்தில் பதவியேற்று ஒன்றரை ஆண்டாகிறது. அலுவலகத்தின் செயல்பாடுகளை நோக்கிய பிறகு,  இந்த அலுவலகத்தின் கீழ் செயல்படும் நிறுவனத் தலைவர்களுடன் மாதம் இரண்டு கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்த ஆரம்பித்தார். எப்போதும் பார்க்கும் பணியைவிட கூடுதலாக,  கூட்டத்திற்காக கோப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைத் தொகுத்து, கலந்து கொண்டவர்களுக்கு அனுப்புவது, அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பது என பணிச்சுமை அதிகரித்தது. ஒரே மாதிரியான பணிக்கு பழகியிருந்த கனகா, இந்தக் கூடுதல் பணியால் மிகுந்த மனச்சோர்வை அடைந்தாள்.

இவள் வாழ்வில் மறக்கவே முடியாத ஒரு கூட்டம், நேற்று நிகழ்ந்ததுபோல இப்போதும்  நினைவில் நின்றது. அகலமான நீண்ட மேசைக்கு அந்தப் பக்கம், மாடத்தில் வீற்றிருக்கும் மன்னர் போல இந்த உயரதிகாரி அமர்ந்திருக்க, மற்றவர்களெல்லாம் இந்தப்பக்கம் வணங்கியபடி தரையில் நிற்கும் குடிமக்களைப் போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்தார்கள். உள்ளே செல்லும்போதே அதிகாரியின் முகம் கடுத்து சிவந்திருந்ததை கனகா கவனித்தாள். அவருக்கு யாரால் என்ன மனவருத்தமோ. இவளால் ஆவதென்ன.  நடந்துகொண்டிருக்கும் பணிகளின் தற்போதய நிலையைப்பற்றி வந்தவர்களிடம் அதிகாரி  கேட்டபோது,  கடந்த கூட்டத்தின் போது இருந்த நிலையையே இப்போதும் கூறினார்கள். மேலும் முகம் சிவந்த “ஏழரை” திரும்பி இவளை நோக்கியது. இவள்  சற்று குறுகியபடி எழுந்து  நின்றாள். “தினமும் வந்து  ஏசியில தூங்குறீங்களா. இதயெல்லாம் கேக்கமாட்டீங்களா” என்று தொடங்கி எந்த வேலையும் பார்ப்பதில்லை, எதற்கும் பிரயோசனமில்லை எனத் தொடர்ந்து வசையாய்  பொழிந்தார். அனைவரின் முன் குறுகி நின்றவளின் கால்கள் கோபத்தாலும் அவமானத்தாலும் லேசாக நடுங்கின. கண்கள் கலங்கி முகம் சிவந்து வீங்கியது. ஆனால் திட்டி முடித்தபோது, கருமேகம் பொழிந்தபின் வெண்முகிலாவதைப் போல ஏழரையின் முகத்திலிருந்த கடுப்பு மறைந்து இயல்பான தோற்றத்திற்கு வந்திருந்தது. ஆனால் கடுப்பு குடியேறிய முகத்துடன் மன்னிப்புக் கேட்டபடி அமர்ந்தாள் கனகா.

பணிக்கு சேர்ந்து பதினைந்தாண்டுகளில் இம்மாதிரி வசை வாங்கியது இதுதான் முதல்முறை. சாதாரணமாக இவளை கேள்வி கேட்டால், இயல்பாக அடுத்தவரை கைகாட்டி வசையை அவர் பக்கம் திருப்பிவிடுவாள். இந்த விசயத்தில் அவ்வாறு செய்ய முடியவில்லை. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்தாள். மறுநாள் சென்று தன்னை வேறு அலுவலகத்திற்கு மாற்றுமாறு கோரிக்கைக் கடிதம் எழுதி அவரின் தனிச்செயலரிடம் கொடுத்தாள்.  போன வாரம் விசாரித்தபோதும்   அதை ஏற்பதாகவோ மறுப்பதாகவோ எதுவும் எழுதப்படாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக  ஏழரையின் மேசையிலேயே இருப்பதாகவே பதில் கிடைத்தது.

********

ரயில், மேம்பாலத்தினுள் நுழைந்து அம்பத்தூர் நிலையத்தில் நின்றது. செல்வம் தென்படுகிறாரா என்ற ஆர்வத்தோடு, ஏறுபவர்களையும் நடைமேடையில் நின்றவர்களையும் பார்த்தாள். எப்போதுமே ஆவடியிலிருந்து புறப்படும் ரெயிலில் முன்னதாகவே சென்றுவிடுவார் என்று அறிந்தபோதும் ஏனோ எதிர்பார்க்கத் தோன்றியது.

செல்வம், ஆறு மாதங்களுக்கு முன் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கனகாவின் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கனகா செய்த பணியை நாற்பது வயதில் இவர் செய்யத் தொடங்கினார். ஊரிலுள்ள எல்லா வேலைகளையும் ஒன்று மாற்றி ஒன்றாகப் பார்த்துவிட்டு கடைசி இரண்டு வருடங்கள் விற்பனையாளராகப் பணி புரிந்துவிட்டு, ஏதோவொரு உத்வேகத்தில் தேர்வெழுதி அரசுப் பணிக்கு வந்திருக்கிறார்.

பணியில் சேர்ந்த அன்று செல்வத்தைப் பார்த்த கனகாவிற்கு ஒருவித சலிப்பும் ஒவ்வாமையும் ஏற்பட்டது. இந்த வயதில் இருப்பவர் எப்படி உதவியாளர் பணியை செய்வார், இத்தனை வருடங்களாக ஒரு நிலையான வேலையை அமைத்துக் கொள்ள இவருக்குத்  திறனில்லையே என்பது போன்ற எண்ணங்கள் தோன்றியது.

செல்வம் பணியில் சேர்ந்த ஒருவாரத்தில் கனகாவிற்கு ஒருபடி மேல் பதவியில் இருக்கும் அம்மையார் இவளை அழைத்து அவசர கடிதம் ஒன்றிற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என வினவினார். இவள் சற்றும் யோசிக்காமல் செல்வம்தான் கடிதத்தை என்னிடம் தெரிவிக்காமலேயே எனது மேசையில் வைத்துவிட்டார் என்று அவர்மேல் பழிசுமத்தினாள். ஒரு கணம் அதிர்ந்து திகைத்த செல்வம் செய்யாத தவறுக்கு மன்னிப்புக் கேட்டு இனிமேல் இவ்வாறு நடக்காதென கூறினார்.
கனகாவிற்கே அவர் முகத்தைப் பார்த்தபோது முதல்முறையாக  பாவமாக இருந்தது. இவளே, மறந்துவிட்டேன், இப்போதே நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம். பெரிய தவறேதுமில்லை. ஆனால் வேலையில் சேர்ந்தபோது உண்டான,  பயத்தினாலும்  அச்சத்தினாலும் அடுத்தவர் மேல் பழியைப் போடும் பழக்கம் பதவி உயர்ந்த பிறகும் இவளிடமிருந்து மறையவேவில்லை.

அரசு அலுவகத்தில் எப்போதும் நிலவும் ஊமை அமைதி செல்வம் வந்தவுடன் குலைந்தது. இத்தனை வருடங்கள் வெளியே எப்படி இருந்தாரோ அதேபோல அலுவலகத்திலும் இருந்தார். இயல்பாகவே, செல்வம் பேசும் போது  சத்தம் அதிகமாகக் கேட்கும். இவர் பேசுவது  பிறருக்கும் கேட்குமென்பதால், அதில் ரகசியமோ அடுத்தவரைப் பற்றிய புரணியோ இருக்காது. மெல்லிய கேலியோடு பேசினாலும் புன்னகையோடு பேசுவதால் யாரும் மனம் புண்படுவதில்லை. இத்தனை வருடங்கள் வெளியே பணிபுரிந்துள்ளதால்,  வேலையைப் பற்றி உடலிலோ மனதிலோ அச்சத்தின் சாயல் தென்படவில்லை. பெரியவர்கள் மட்டும் உலவும் மந்தமான வீட்டில்   குறும்புக் குழந்தையொன்று நுழைந்ததைப்போல,  சோம்பலும் அலுப்பும் படர்ந்திருந்த அலுவலகம், செல்வம் வந்தபிறகு புதிதாக ஒளி கொண்டதாக கனகாவிற்கு தோன்றியது.

சில வாரங்களில் கனகாவிற்கு, செல்வம் மேலிருந்த சலிப்பு மாறி ஒருவித ஈர்ப்பு உண்டானது. பள்ளிப் படிப்பை முடித்தவுடனேயே அரசுப் பணியெனும் இருட்குகைக்குள் நுழைந்தவள் சந்தித்த மனிதர்கள் அனைவரும் சம்பிரதாயமாகவே பழகினார்கள். அலுவலகத் தோழமையும் எப்போது காட்டிக் கொடுப்பார்களோ என்ற எச்சரிக்கையுடன், பிணைப்பில்லாமல்தான் இருந்தது. தன் பதவியையும் சம்பளத்தையும் கருதி மணந்து கொண்ட கணவனிடமும் பெரிதாக இணக்கம் இல்லாமல் மெல்லிய விலகல் இருந்தது.

கச்சிதமான உடற்கட்டுடன் பார்க்க அழகாக இருக்கும் தன்னிடம் பேசுவது போலவே ஒல்லிப்பிச்சானாய் பல்லி போல தோற்றமளிக்கும் தட்டச்சு செய்யும் பெண்ணிடமும், அகன்ற நெற்றியில் பெரிய குங்குமம் வைத்த அலுவலக தூய்மைப்பணி புரியும் நடுத்தர வயதுப் பெண்ணிடமும் எல்லா ஆண்களிடமும் செல்வம் பேசிப் பழகியது கனகாவிற்கு ஆச்சர்யமளித்தது.
செல்வத்தை அழைத்த கனகா  “எப்படி எல்லோரையும் ஒரே மாதிரி பாக்கறீங்க” எனக் கேட்டாள்.
சற்று யோசித்தவரின் முகபாவனை, சொல்ல வேண்டியதை  தனக்குள்ளேயே தொகுத்துக் கொள்வதுபோலத் தோன்றியது. “நான் விற்பனையாளர் பணிக்குச் சென்றபோது, வாடிக்கையாளர்களை வேறுபடுத்திப் பார்க்காமல், அவங்களோட கண்களை பார்த்து   ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தனித்துவ மனசக் கவர்கிற மாதிரி பேசக் கத்துக்கிட்டேன்” என்றார்.

“வர்றவங்க ஏதாவது குறை சொல்லிட்டு பொருள வாங்காம போறப்ப உங்களுக்கு கோபம் வராதா”
“கோபம் வெறுப்பு எல்லாந்தான் வரும். ஆனா,  ஒண்ணும் செய்யமுடியாதுல்ல. அதனால, அதை அப்படியே சிரிப்பாலேயே மறச்சுக்கிட்டு அடுத்த ஆளப் பாக்க வேண்டியதுதான்” என்று சலிப்போடு உதட்டைச் சுழித்துக் கூறியபோது அவரின் கண்ணில் கூர்மையான மின்னலொன்று  தோன்றி மறைந்தது.

செல்வம் அவரின் குடும்பப் புகைப்படத்தை ஒரு நாள் காட்டினார். இரண்டு பிள்ளைகளுடன் நின்றிருந்த அவரின் மனைவியின் முகம் நிறைவில் மலர்ந்திருந்தது. மற்றவர்களின் பிழைகளை மட்டுமே கருதுவது போலவே, தன்னிடம் இல்லாததை மட்டுமே  எண்ணிக்கொண்டிருக்கும் தன்னால், அந்தப் பெண்போல நிறைவாகப் புன்னகைக்க  எப்போதுமே முடியாது எனப் புரிந்தபோது, பெரிய ஏக்கம் கனகாவின்  மனதை அழுத்தியது.

 

கீழ், மேல் பதவி என்று பாராமல், அனைவரையும் மனிதர் என்று மட்டும் பார்த்து பழகும் செல்வம் இவளுக்கு அதிசயப் பிறவியாகத் தெரிந்தார்.  எந்த எதிர்பார்ப்புமின்றி சாலையோரச் கள்ளிச் செடியில் பூத்திருக்கும் நீல மலர் போலவும், யாராகயிருந்தாலும் தன் சிறிய மென்மையான வாலை ஆட்டியபடி வந்து கால் பாதங்களில் மூக்கால் உரசும் நாய்க்குட்டியைப் போலவும்  திரிந்த செல்வத்தை பார்த்துக் கொண்டிருப்பதே இவளுக்கு பெரும் மகிழ்ச்சியளித்தது. மாதத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை எடுப்பவள் இப்போதெல்லாம் மிகவும் அவசியம் என்றால் தவிர விடுப்பு எடுப்பதில்லை.

எப்போதாவது உயர் அதிகாரியிடம் கொடுத்த கடிதம் நினைவுக்கு வந்தால்,  வேறிடத்திற்கு மாறுவதற்கு அனுமதி அளித்துவிடுவாரோ என்று சற்று பதட்டம் ஏற்படும். எதுவும் எழுதவில்லை என உயரதிகாரியின் தனிச்செயலர்  கூறும் போது ஏற்படும் மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல் உள்ளுக்குள் துள்ளியபடி வெளியேறுவாள்.

. ********

மின்தொடர் வண்டி  சென்னை சென்ட்ரலில் நின்றவுடன் வேகமாக இறங்கி, முகத்தில் மோதும் எதிர்வெயிலை தாங்கியபடி செல்லும் மனிதப் பிரவாகத்தோடு கலந்து வழிந்து வெளியேறினாள்.  அங்கிருந்து பேருந்தேறி அவள் பணிபுரியும் உயர்ந்த கட்டடத்தை அடைந்தாள். பெரும் வெறுப்பளித்த உயரதிகாரி மாறிப் போய்விட்டார். மனதிற்குள் அமைதியை நிறைக்கும்   செல்வம் பணியாற்றும் இடத்திலேயே அவரைப் பார்த்தபடியே தொடர்ந்து இருக்கலாம் என்பது வாழ்வில் இதுவரை அடையாத பெரும் கிளர்ச்சியை மனதில் ஏற்படுத்தியது.

அலுவலகத்திற்குள் சென்று வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்து சுற்றிலும் நோக்கினாள்.  செல்வத்தின் இருக்கை காலியாக இருந்தது சற்று ஏமாற்றம் அளித்தது. திரும்பி வாயிலைப் பார்த்தபோது மலர்ந்த முகத்துடன்  செல்வம், இவளை நோக்கி வருவது தெரிந்தது. அவர் கையில் ஒரு கோப்பு இருந்தது.

“மேடம், அன்னிக்கி சொன்னீங்கல்ல, மாறுதல் வேணும்னு கடிதம் கொடுத்திருக்கேன், இன்னும் கையெழுத்தாகலைனு” என்று செல்வம் கேட்டதற்கு “ஆமாம், அதற்கென்ன அவரைத்தான் மாற்றிவிட்டார்களே” என்றாள் கனகா.

“நேற்று சாயங்காலம் உயரதிகாரி மாறப்போறாருன்னு செய்தி கெடச்சவுடனே உங்க ஞாபகம் வந்துச்சு. அவரு அறைக்குப் போயி அவரோட தனிச்செயலர்கிட்ட சொன்னேன். அவரும் உள்ளே போய் உங்க மனுவை ஏத்துக்கறதா கையெழுத்து வாங்கிட்டாரு. நீங்க நெனச்ச மாதிரியே வேற எடத்துக்குப் போகலாம்” என்று செல்வம் கூறியதை முழுதாக உள்வாங்காமல், அவரின் விழிகளில் மகிழ்ச்சியுடன் தெறித்த “நினைத்ததை எப்படி முடித்தேன் பார்த்தாயா” என்று கேட்கும்படியான இறுமாப்பை திகைப்புடன்  நோக்கினாள்