Author: பதாகை

ஏசுவடியான் – வைரவன் லெ.ரா சிறுகதை

நகரின் மையத்தில் இப்படி ஒரு காடா? இல்லை பொறுங்கள்! காட்டில் தான் நகரம் இருக்கிறது. பெரிய கல்தூண்கள் கொண்டு எழுப்பப்பட்ட தேவாலயம். எதிரேயே பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி. சுற்றிலும் சோலைகள், அங்கே ஒரு அசோக மரம், ஒன்றல்ல பல. அதன் மூடிலே கல் பெஞ்சில் ஏசுவடியான் அமர்ந்திருக்க, அருகிலே திரேசம்மாள் மண்டியிட்டு ஜெபித்தபடி இருந்தாள். ‘சர்வவல்லமை படைத்த பரமமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே… ‘ தேவாலய ஒலிபெருக்கி சப்தங்களை பரப்பிக்கொண்டிருந்தது. பின் பல குரல்கள் ஒரே அலைவரிசையில் ‘ஆஆஆ ஆ ஆமேமேமேமேன்’ என்றது. ‘திரேசா, சம்மணம் போடு. ஆண்டவரு மன்னிப்பாரு. ராவுல காலு உலையினு என்கிட்டே சொல்லப்பிடாது’. திரேஸ் எதுவும் கூறாமல் கண்களால் ஏசுவடியானை நோக்கியபடி, ஒரு கையால் மண்ணை ஊன்றி கால்களை மடக்கி சிறுபிள்ளை போல அமர்ந்தாள். ‘கானா ஊரில், ஒரு கல்யாண வீட்டிலே, நம் தேவகுமாரன்…’ பாஸ்டர் ஞானசேகரன் தேவாலயத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

“நம்ம வீட்டுலயும் அற்புதம் நடந்துச்சு தெரியுமாட்டி திரேசி. ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். ” ஏசுவடியான் கொப்பளித்த சிரிப்பை மீண்டும் உள்ளே தள்ளியபடி கூறினார். நக்கலான நாக்குமடிப்பு அவளுக்கு வெட்கத்தை கொடுத்தது. சுருக்கங்கள் சிவந்தது. நீலகண்டப் பிள்ளை தேவசகாயம் ஆகாவிட்டால், ஏசுவடியான் உண்டா? இல்லை பக்கத்தில் சப்பணங்கால் போட்டு அமர்ந்திருக்கும் திரேசம்மாள் மணமுடித்து, வாழ்ந்து அனுபவித்து, கர்த்தரின் பாதத்தில் இந்த கல்கோயில் ஆலயத்தில் அசோகமரத்தின் காற்றைத்தான் சுவீகரிக்க முடியுமா? எப்படியோ, இதென்ன புராணக்கதையா? ஏசுவடியான் திரேசம்மாள் கதை.

குமாரகோயில் சமீபம், மேலாங்கோடு போகும் வழி. அக்கா தங்கச்சிமாரின் கோயில் இங்கேதான். கருக்கள் நேரம் அங்கே போக ஆண்கள் உண்டா? போத்தி செல்கிறாறே, அவருக்கு குல மாடன் துணையுண்டு. நீலகண்டன் போவான், சிறுவனாய் மாங்காய் எடுக்க போவதுண்டு. மாங்காய் எடுக்க போய், சிலச் சமயம் புளியம்பழமும் கைநிறைத்து வருவதுண்டு. விசாலாட்சியம்மாள் கஞ்சிக்கு, மாங்காயை உப்பில் ஊறப்போட்ட துண்டையும், புளியை கரைத்து கொஞ்சம் காய்ந்த வத்தலும், கருவேப்பிலை, கடுகுயிட்டு தாளித்து புளித்தண்ணியுமாய் கொடுப்பாள். வயிறுக்கு கஞ்சி போதும், கஞ்சிக்கு அரிசி வேண்டும். எப்பேர்ப்பட்ட குடும்பம், குமாரக்கோயிலின் முன்வாசல் விரியும் நேர்ச் சாலையில் கிணத்தடி கொண்ட வீடு நீலகண்டனின் அய்யா ஆறுமுகம் பிள்ளையின் வீடு. ஆறுமுகம், கட்டியவள் விசாலாட்சியம்மாள், மகன் நீலகண்டப்பிள்ளை, மொத்தமாய் மூவர். கூடவே உடன்பிறந்தார் என மொத்தக்குடும்பமாய் தலைதலைமுறையாய் நெற்புரை நிறையும் மூட்டைகளோடு, வீட்டின் பின்னே வெண்ணிப்பறை முட்ட தேங்காயையும் கொண்ட வீடு. சொத்து சுகம் இருக்க ஒருத்தி பற்றாமல், எங்கெல்லாமோ குடித்து சல்லாபித்து நோயோடு வந்தான் ஆறுமுகம். ஆறுமுகம் உடன்பிறந்தார் ஆறு, நான்கு ஆம்பிள்ளையாள், ரெண்டு பொம்பளையாள். நோயோடு வந்தவனின் சொத்து ஐந்தாய் பிரிய, மேலாங்கோடு பிரியும் சந்திப்பில் ஓரமாய் கால்சென்ட் பங்கில் ஓலைக்குடிசை உதயம் ஆயிச்சு. வந்தவர்கள் ஆறுமாதம் தாண்டும் முன்னே மூவரின் எண்ணிக்கை ரெண்டாய் ஆனது. ஆறுமுகம் பரலோகப்பதவி அடைந்தான். பின்னே கஞ்சிக்கு அரிசி, தம்பிமாரின் கருணையால் அவ்வப்போது வரும். பண்டிகைக்கு காய்கறி கொஞ்சம் கருணை மீறி கிடைக்கும். யார் கை தடுக்கிறதோ.

நீலகண்டன் அங்குள்ள பள்ளிக்கு பின்னால் புளியம்பழம் பறிக்க போய், நல்லவேளை கீழே விழுந்தான். கீழே விழுவது நல்லவேளையா? அன்னம்மாள் கண்ணில் அவன் பட, வாஞ்சையோடு தலையை தடவிக்கொடுத்து அவன் கதையை கேட்டாள். பெரிய கதையா? எல்லோரும் அறிந்த குடிகார மகனின் கதை. ‘படிக்க வெய்க்கேன் படிப்பியாடா’, ‘பள்ளிக்கூடம் போலாமா? அப்டினா படிப்பேன்’. விசாலாட்சியும் சரியென்றாள். படித்தான், நீலகண்டன் தேவசகாயம் ஆனான். கிறிஸ்துவன் ஆனான், யார் சொல்லியும் அல்ல. சித்தப்பா ஒன்றுக்கு நான்காய் இருந்தும், கால்வயிறு மாத்திரமே நிறையும், படிப்பும் ஆகாரமும் கிடைக்க, கூடவே மெசியாவின் கதையும், பழைய ஏற்பாடும் படிக்க, அவன் தேவசகாயம் ஆனான். கிடைத்த கணக்காளர் வேலையில் உடும்புப்பிடி. அற்புதம்மாள் அவனோடு படித்தவள். அம்மையின், அய்யாவின் பெயர் தெரியாதவள். சர்வம் சந்தோசம், கல்யாணம். ஏசுவடியான் பிறந்தான், ஒரே மகன். சகாயம் சொல்வார் ‘நீ யேசுக்க மவன்லா. அதானாக்கும் உனக்கு ஏசுவடியான்னு பேரு’.

‘தேவனாலே கூடாத காரியம் எதுவுமில்லை’

ஏசுவடியான் எதிலும் தனி, படிப்பிலும் முன்னே, விளையாட்டிலும் முன்னே, கூட்டுக்காரன் சொல்லுவான் அவனிடம் ‘நீ வலிய காரியமாக்கும். ஊரெல்லாம் சுத்தி, மாங்கா களவாண்டாலும். ராவு முழிச்சு படிக்க’. ரவி வாத்தியார் சிலநேரம் சொல்வதுண்டு ‘கலப்புக்கு பிறந்த பிள்ளைக்கு விஷேஷ மூளைலா. விளைச்சல் அதிகம்’. இது பாராட்டா, வசவா, ஏசுவடியானுக்கு என்ன தெரியும். வளர்ந்த பிராயத்தில் தெரிந்தது ரவி வாத்தியாரின் வார்த்தைகள் நளியென்று. அவனும் வாத்தியார் ஆனான், குமாரக்கோயில் ஆறுமுகம் பிள்ளையின் வழி, புத்தளம் தோப்பு வீட்டில் விஸ்தாரித்தது. வந்த குடும்பம் ஆறுமுகம் எனும் பேரோடு நின்றது. ஏசுவடியான் கைகளில் விவிலியம் ஏந்தாத இரவில்லை. அப்பாவின் முன்னே காலை, மாலை ஜெபம்.

‘என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்’.

இதற்கிடையே எதிர்த்த வீட்டு சுதாகரனின் மகள் திரேசியின் குட்டிக்கோரா பவுடர் வாசம், அத்தோடு அவளின் வியர்வை மணம் அவனை அலைக்கழித்தது. ‘என்ன ஐசுவரியம் நிறைஞ்ச முகம். அருளு உண்டு அவள கட்டினா. சிலப்பம் அவள பாக்கையில நிலவு காலைல வந்துட்டோனு தோணும்.’ அவனின் கவிதை இரவுகள், கூட்டுக்காரனின் கதறல் புத்தளம் தோப்பு தாண்டி மணக்குடி கடலில் கலக்கும். இதெல்லாம் சுதாகரன் அறியாமல் போகுமா? ஈத்தாமொழி தேங்காய் வியாபாரி. வாத்தியார் வீட்டு சம்பந்தம். என்ன கேள்வி கிடக்கிறது? ஆகட்டும் பார்க்கலாம் என்பது போல நடந்தது புத்தளம் திருச்சபையில் பங்குத்தந்தை லாசரஸ் தலைமையில் ‘இம்மையிலும் மறுமையிலும், சுகத்திலும் துக்கத்திலும், உனக்கு நானாய், எனக்கு நீயாய் இருவருக்கும் சம்மதம்’ சுபமங்களம்.

ஏசுவடியானுக்கு சிறுவயதில் அப்பாவை கண்டாலே நடுக்கம், கருக்கள் நேரம் கையில் புத்தகம் இல்லையேல், அப்பனின் கையில் பிரம்பிருக்கும். இதற்காகவே கோட்டார் வீதி போய் பிரம்பு வாங்கிவந்தார். அதன் விலை இரண்டு ருபாய், போய் வரச்செலவு நான்கு ருபாய். புளியம்பழம் பறித்த கையில் புத்தகங்கள் கொடுக்க இவனுக்கு அன்னம்மாள் தேவையில்லை. அப்பன் இருக்கிறானே! கூடவே ஞாயிறு இறைச்சியும். வாரம் மூன்று நாள் நெய்மீனோ, சாளையோ, நெத்திலியோ, பாறத்துண்டமோ குழம்பில் கொதிக்கும். இப்படியிருக்க படிக்க வேண்டாமா? பிரம்படியின் வினையல்லவோ இவனும் பிரம்பை கையில் எடுத்தான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

கல்யாணம் நடக்கும், அத்துணை கனவுகளும் கிறக்கங்களும் பெண்ணுடலை முதல் தடவை கண்டதும், மனம் காமவிடுதலை அடையும். பின் காணக்காண லயிப்பும் குறையும், இயக்கமும் இயந்திரம் போல வாரம் ஒருமுறை முறைவைத்து நடந்தாக வேண்டும். ஏனோ! காதல் கசக்கும். வாழ்ந்தாக வேண்டுமே. எங்கும், இன்னார் முன்னிலையில் ஆண்டவரையும் சேர்த்துதான், நடந்த திருமணம் வாழும் போது கேட்பார் நாதியில்லை. ஏசுவடியான், திரேசி அப்படியில்லை. குட்டிக்கோரா மணம் புத்தளம் தோப்பு வீடு நிரம்பும். ஏசுவடியான் தெங்கின் மூடில் இருந்தபடி நோக்கிய பார்வையெல்லாம் அறியாதவளா திரேசம்மாள். பெண்டிருக்கே உள்ள வெட்கம் ததும்பி அவளும் கண்டிருக்காளே, எதிர்த்த வீட்டு வாத்தியாரை. புத்தளம் திருச்சபையில் லாசரஸிற்கு விருப்பமானவன். கையில் மைக் பிடித்து பாடும் பாடல்கள், தமிழ் வாத்தியார் அவனாய் வரியெழுதி பாடுவான்.

‘கொல்கொதா மலையும் அழுதிருக்கும்,

எத்தனையோ சிலுவை

ஏந்திய மார்பு இது.

உன் இரத்தம் பட்டதும்,

என் பாவம் கரைந்தது’.

குருத்தோலை நாளில் லாசரஸ் பின்னே இவனே செல்வான். எங்கே நடக்கிறேனோ, அங்கெல்லாம் முன்னே உன் பாதச்சுவடு வேண்டும். திரேசம்மாள் அப்படித்தான். அவன் ‘என் பவுனே’ என்பான், பதிலுக்கு அவள் ‘நீரு என் வைரம்’ என்பாள். புத்தளம் ஊரில் எங்கு கல்யாணமோ, லாசரஸ் அடுத்து, பத்திரிகை வாத்தியார் வீட்டுக்குத்தான். அவரும் சும்மா இல்லை, கொடுப்பதில் கர்ணனின் பக்கத்து வீட்டுக்காரர். புத்தளம், தெங்கம்புதூர் யாராய் இருந்தால் என்ன, படிப்பிற்கு இல்லை என சொல்லாதவர். பின்னே, அன்னம்மாள் படிப்பை கொடுத்த நீலகண்டன் (எ) தேவசகாயத்தின் புதல்வனாயிற்றே.

பறக்கை பள்ளிக்கூடத்திற்கு வாத்தியார் பஜாஜ் செட்டாக்கில் செல்வார். தமிழ் வகுப்பில் பிடித்தும், பிடிக்காதுதுமாய் சரிபாதி கூட்டம் இவரின் குரலில், பாடத்திட்டத்தில் உண்டோ இல்லையோ இப்பாடலை கடக்காமல் படிப்பை முடித்திருக்க முடியுமா? “கம்பராமாயணத்தில் ஆரண்யகாண்டத்தில், மாரீசன் அழகிய புள்ளிமானா மாறி சீதைய அழகில மயக்கி, ராமனை ‘சாமி, இம்மானை மனையாளுக்கு பிடித்து தர கேட்க, ராமன் அதை பிடிக்க போறான், மாரீசன் கள்ளன், அவன் அய்யனின் குரலில் ‘அய்யோ சீதை’ எனக்கூக்குரலிட” இங்கே அய்யோ என ஏசுவடியான் அடிவயிற்றில் இருந்து குரலெடுத்து ராமனாய் போல அவனும் மாற, பின் வழக்கமான பாடலோடு சீதையின் துயரத்திற்கு வருவான். “சீதை பாடுகிறாள்

“பிடித்து நல்கு, இவ் உழை”

என, பேதையேன்

முடித்தனென், முதல் வாழ்வு’

என, மொய் அழல்

கொடிப் படிந்தது என, நெடுங்

கோள் அரா

இடிக்கு உடைந்தது என,

புரண்டு ஏங்கினாள். இங்க உழைனா என்ன, உழை னா மான், அழகான மானை பிடித்து நல்கு, எனக்காக நீரே பிடிச்சு தாரும் என் சுவாமி. இப்படி சொல்லிட்டேனே, எனக்கு புத்தியில்லயா, மண்டைக்கு வழியில்லாத பொம்பளையாய்ட்டேனே. முடிஞ்சிட்டு என் வாழ்க்கை. மொய் அழல், அழல்னா நெருப்பு. கொடி படிந்தது. நெருப்பு கொடிய பிடிச்சி எரிச்சது போல, நெடுங்கோள் அரா. அரானா பாம்பு. இப்போ தெரியாடே, நாம அரணைணு சொல்லுகேமே. அரா எங்க இருந்து வந்திருக்கு. அரா பாம்பு, அரணை பாம்பு மாறி இருக்க இன்னொன்னு. கம்பன பாத்தியிலா மக்ளே. எப்படி பாடுகான்.காட்டுக்கு நடுவுல நிக்கிற சீத கொடி, பாம்பு, நெருப்பு அதான் காட்டுத்தீ, எல்லாமே காட்டுல உள்ளதே பாட்டுல வருகு. உவமைக்கு எங்கேயுமே போகல. காட்டுக்குள்ள சொல்ல தேடுகான். சொல்லு எத்தனையோ சொல்லு, நாம பேசுறது கொஞ்சம். கம்பன் அத்தனை சொல்ல உபயோகப்படுத்துகான். மக்ளே, நம்ம கன்யாரி தமிழு. கண்டவன் சொல்லுகானு, பேசாம போய்டாதீங்க. பேசுனாதான் மொழி நிக்கும். புரிஞ்சா, நீங்க எல்லாரும் படிக்கிற பிள்ளைகளு நம்ம மொழிய பேசணும். கம்பன், யாரு. அவன படிங்க. நானும் இன்னைக்கும் வீட்டுல போய் புத்தகத்த எடுக்கேன். மறந்திர கூடாதுலா. பைபிளும் ஒன்னு, கம்பராமாயணமும் ஒன்னு. சொல்லணும்.” இங்கே எதை மீறியோ வெப்ராளப்படுவான். பின் நிதானமாய் “உங்கள்ள தமிழ் மேலே படிக்கணும் நினைப்பு உள்ளவன் கம்பன கட்டாயம் படிக்கணும். கொடுங்கோள், கோளு அப்படினா என்ன, மனசுலாச்சா. உருண்டையா தடி கணக்கா. கொடுன்னு ஒரு சொல்லு இங்கே உபயோகப் படுத்திருக்கான். கொடுன்னா கொடுமையான தடி கணக்கா பாம்பு. மலைபாம்புன்னு நினக்கேன். இடிக்கு உடைந்தது, நல்ல சத்தமா கேக்கிற இடிக்கு பயந்து கட்ட மாறி கிடக்காம். அதே மாறி புரண்டு புரண்டு வருத்தபடுகா” சொல்லி முடிக்கும் போது கம்பனாய் நிற்பான். ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்கள் வியந்து நிற்பார்கள். அப்படி ஒரு விளக்கம் கொடுப்பான். பத்தாம் வகுப்பில் முதல் பெஞ்சில் இருக்கும் ஜோசப், கம்பனில் மயங்கி புத்தளத்திற்கு சைக்கிளில் செல்வான் ஏசுவடியான் வீட்டிற்கு கம்பராமாயணம் கேட்க. கம்பனின் வரியா, இல்லை ஏசுவடியானின் விளக்கமா.அவனே அறிவான் உண்மையை.

முத்தாய் இரண்டு ஆண்பிள்ளைகள். ஜெபநேசன், மரியநேசன். கான்வென்டில் படிப்பு, படிப்பிற்கும் குறைவில்லை. ஜோசப் வருவதில் அவர் பிள்ளைகளுக்கு மனக்குறை உண்டு “அப்பா, நல்ல கொஞ்சுகீங்க அவன. எங்கள படிச்சியா, இல்லையானு மட்டும் கேக்கீங்க”. “மக்கா உங்களுக்குத்தான் எல்லாம், கம்பன பாடினா, லயிக்கணும். ரெண்டு பேரும் கேக்க மாட்டுக்கீங்க. நாள் முழுக்க வீடியோ கேம் தான்”. “போப்பா, கம்பன் கிம்பண்ணு. நீங்க அவனையே கொஞ்சுங்க”. “ஏண்டே உங்கள நான் கொஞ்சலையா, நீங்க கேட்டீங்க, வீடியோ கேம் வீட்டுல இருக்கு. அவனுக்கு கம்பன பிடிச்சிருக்கு. நல்ல பய. நல்லா வருவான்” என்றார் மக்கமாரை தூக்கியபடி ஏசுவடியான்.

மூத்தவன் இன்ஜினியர் ஆனான், இளையவன் அவன் பங்கிற்கு டாக்டர். மக்கமாரின் கல்யாணம் புத்தளம் தோப்பு வீடு முழுக்க கோலாகலம். பந்தலும், மின்விளக்கு அலங்காரமும், மனம் நிறைந்த பந்தியுமாய், வந்தவரின், வாழ்த்தியவரின் மனதில் என்றுமுண்டு. இரண்டு மருமகளும் காரோடு வந்தார்கள். பவுசும் அதிகம், மருமகள் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை, மணாளனை மயக்குவதில். மயங்கினாள், ஆகவே மயக்குகிறாள். பெயரனும், பெயர்த்தியும் எடுத்தாச்சு. திரேஸ், ஏசுவடியான் உறங்கவும் சொல்ல ஆரம்பிப்பாள் “அத்தைனு மரியாதைய கேக்கனா. வயசுக்கு கொடுக்கணும். டாக்டரும், இன்ஜினியரும் பேசுகானுகளா. ஏங்க நீங்க எதுக்கு. உங்கள மதிக்காளா”. “எட்டி நாம அப்பனுக்கும், அம்மைக்கும் வயசு காலத்துலயும் பயந்தோம். செல்லம் கொடுத்து வளத்தோம். எங்க அப்பா குரலுக்கு நா நடுங்குவேன். இப்போ உள்ள பிள்ளைகளுக்கு வேல அதிகம். கோபமும் அதிகம். நாம பிராயத்துல பண்ணாதுதா. அவனுக என் குரலுக்கு பயப்படுகானுக. அவனுக மரியாதை போதாதா. கிடட்டி சும்மா. என் பவுனு. கோவத்துல கூட கண்ணம் சிவக்கே. வயசு ஆயி எனக்கு பல்லு அங்கயிங்க ஆடுகு. நீ குமரு மாரில இருக்க. அத்தை என்ன இந்த வயசுல நம்மல விட அழகா இருக்கேன்னு புகைச்சலா இருக்கும்” என்றபடி சிரித்தார். திரேசுக்கு தெரியும் அவரின் மனக்குறை இருந்தும் தன்னை சமாதானப்படுத்தும் ஏசுவடியானின் காலை மெதுவாய் பிடித்துக்கொடுத்தாள் “இப்போ காலு உளைச்சலு இருக்கா”. “அதுபாட்டுக்கு காலுல மட்டும் இருக்கு, நல்லவேளை மேலே ஏறி முதுகு, கழுத்துனு வரல” மீண்டும் அதே சிரிப்பு. இப்போது திரேசின் முகத்திலும்.

கிடைக்கும் பென்சன் பணத்திற்கு குறைவில்லை, நேரத்திற்கு தேவாலயம். பெயரன், பெயர்த்தியோடு கொஞ்சம் விளையாட்டு. அப்புறம் பைபிள், சிலநேரம் கம்பராமாயணம். மீதிநேரம் எல்லாமுமே மொத்தமாய் திரேசம்மாள் ‘என் பவுனு திரேஸ்’. ஜோசப் எப்போதாவது இவ்வழியே வந்தால் வாத்தியாரை காணமால் போன நாளில்லை . வந்தால் கம்பனின் மணம் புத்தளத்தில் கூடி வீசும். காலம் நகரும், அதானே அதன் வேலை. பென்சன் பணம் மாத்திரம் போதவில்லை, நேரம் நிறைய இருக்கிறது, வீட்டிலேயே இருப்பதால், அடுத்தவனின் கஷ்டமும் இந்த கிழவனின் கண்களில் படுகிறதே. மக்கமார் கொடுப்பது கொஞ்சம்தான், சாப்பாட்டிற்கு குறைவில்லை. சொத்து எல்லாம் அவரவர் பெயரிலே பதிச்சாச்சு, அவரவர் பாடு. புத்தளம் தாண்டியும் மணக்குடி போகும் வழியில் மணக்காவிளையிலும் தோப்பும், வீடும் உண்டு. புத்தளம் திருச்சபையில் முதல் குடும்பம், சொத்துள்ளவன் ஆள்கிறான். இதெல்லாம் இருந்தும் பணமும், தங்கமும், இன்னும் இன்னும் என்கிறதே. பாவம் ஏசுவடியான் செல்லம் கொடுத்து வளர்த்த பிள்ளைகள். கொஞ்சம் கஷ்டத்தையும் பழக்கியிருக்கலாம். அண்ணனுக்கும் தம்பிக்கும் கொடுக்கும் கையில்லை. அவர்களை சொல்லி குற்றமில்லை, பழக்கமில்லை. எல்லாம் கிடைத்தது, புத்தளம் தோப்பு வீட்டில் கிடைக்காததா! தாத்தா தேவசகாயம் சேர்த்த சொத்து, அப்பா ஏசுவடியான் தயவால் வளர்ந்தது. கேட்டதும் கிடைக்கும், கேட்காததும் கிடைக்கும் ஜெபநேசன், மரியநேசன் வாழ்த்தப்பட்டவர்கள். கம்பனை கையில் எடுக்கும் போதெல்லாம் மருமகள்கள் கேட்பார்கள் “எதுக்கு மாமா, இந்த புக். இது சாத்தான் கதை. எங்க சபையிலே சொன்னாங்க. இந்து கடவுள் எல்லாம் சாத்தான். எங்க அப்பா, மாடன் கோயிலை பாத்தாலே ஓடிறணும்னு சொல்லிருக்கு. நீங்க இந்த எழவ நடுவீட்டுல படிக்கீங்க”. “மக்கா, படிச்ச பிள்ளைகளு நீங்க. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எப்பவும் உண்டு. ஆனா, இதெல்லாம் இலக்கியம். கடவுள் எல்லாருக்கும் உண்டு. நமக்கு ஆண்டவரு மாதிரி, அவங்களுக்கு ராமரு. ஆனா கம்பராமாயணம் தமிழ் தெரிஞ்ச எல்லாரும் படிக்கணும். நீங்க சொல்லுங்க. உங்களுக்கும் சொல்லி தாரேன். நா தமிழ் வாத்தியாருமா”. ஆண்டவர் என்ன பாவம் செய்தார், அவர் இருந்தால் சொல்லியிருப்பார், இப்போது ஏசுவடியான் மருமகள்களை திருத்த யாராயிருக்கிறார். “உங்க அப்பா கண்ட புக்லாம் வீட்டுல கத்தி பாடுகாரு. கர்த்தரு இருக்க வீட்டுல சாத்தானை கூட்டுகாரு”. விதியோ என்னவோ டாக்டருக்கும், இன்ஜினியருக்கும் வேலை கொஞ்சம் கரைய, கட்டியவளின் வாக்கு ராத்திரி கூட, மனம் கனமேறியது. தவிர்த்து அப்பனின் கொடுக்கும் குணமும்.

‘எங்கள் அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர், எங்கள் சத்துருக்கள் எங்களை பரியாசம் பண்ணுகிறார்கள்’.

விளைவு, அப்பனை கேள்வி கேட்கும் பிள்ளைகள் “அப்பா, நீங்க கொடுக்கது தப்பு சொல்லல. இருக்கத கொடுப்போம். நம்ம சொத்தை அழிக்காண்டாம். சும்மா கிடங்க வீட்டுல. எம்பொண்டாட்டி தங்கம் போல தாங்குகாளே. மதிக்காண்டாம். அவளும் படிச்சவத்தான்’ என்றான் மரியநேசன். “தம்பி சொல்லத்துல என்ன தப்பு. நமக்கு அப்புறம் மத்தவங்களுக்கு. எம்மாமியார் வீட்டுல கேக்கா, தூக்கி தூக்கி அடுத்தவனுக்கு கொடுத்தா, உமக்கு என்ன கடைசில. உங்க அப்பனுக்கு…இல்லப்பா, வேண்டாம். உங்க மரியாதை கெடவேண்டாம். வீட்டுல இருங்க. வருஷம் ஒருவாட்டி வேளாங்கன்னி போங்க. யாரு வேண்டாம்னு சொன்னா. போதும். இருக்க சொத்தை காப்பாத்திக்கிடனும், அதான் புத்திசாலித்தனம். அம்மைக்கு எதுக்கு எடுத்தாலும் கோவம். அவளுக்கு மண்டைக்கு வழியில்ல” இது ஜெபநேசன். பொறுத்தவரை பேசவைத்தது கடைசி சொல். “ஏம்ப்பா, எம்பிள்ளைகள் பேசுகு. எத்தனை நாளாச்சு உங்க குரல கேட்டு. எம்பொண்டாட்டிக்கு மண்டைக்கு சரியில்லையா? லேய் பிள்ளைகளுக்குன்னு வாழுகா. பவுனுல அவ. அழுக்கில்ல அவ மனசுல. உங்க வழப்பு சரியில்ல. தப்பு நான்தான். போறோம். எங்கயோ போறோம். ஒருத்தனும் வரக்கூடாது, பின்னாடி. எட்டி நீ உள்ளத சொன்ன. நான்தான் கிறுக்கு. பிள்ளைகளு அப்படி இப்படின்னு சொல்லிட்டேன். கிடைக்கத எடு, எம்பணத்துல வாங்குனது மாத்திரம். நடட்டி. சகாயம் பிள்ளை நா. என்ன எழவு தெரியும் அவனுகளுக்கு, நான் தப்பு” வெளியிறங்கி நடக்கும் வரை யாரும் தடுக்கவில்லை. பழைய திருச்சபை தந்தை லாசரஸ் வெட்டூர்ணிமடம் அருகே இல்லம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். ஏசுவடியான் ஓரிருமுறை சென்றிருக்கிறார். அங்கே சென்றார்கள். நிம்மதி.

அங்கே கம்பன் மீண்டும் பிறந்தான். ஞாயிறு கல்கோயில் தேவாலயத்தில் உள்ளே கொஞ்ச நேரம். மீதி திரேசுடன் இந்த அசோகமரத்தின் நிழலில் கொஞ்சம் பேச்சு, நிறைய சிரிப்பு. “நம்ம வீட்டுல தேவகுமாரன் வந்தாரோ என்னவோ, திராட்சை ரசம் வெட்டூர்ணிமடத்துல கிடைக்கு, இதுவும் அதிசயம் தானே. எத்தனை நாளாச்சு கம்பன பாடி. அதிசயம்” என்றார் ஏசுவடியான் கல்பெஞ்சில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து. “எப்பா, கர்த்தரே. நீரு ஊமையாட்டும்ன்னு நினச்சுட்டேன். அந்த வீட்டுல இருக்க வர. என்னமா பாடுகீறு. அதே தொண்டை. உழை, அரா ன்னு. எனக்கு நிம்மதிய கொடுத்த ஆண்டவரே”. இதற்கிடையே தேவாலயத்தில் இருந்து ஆட்கள் வெளியே வர, ஒருவர் நேர்த்தியான உடையில் இவர்களை நோக்கி வர. இருவரும் புரியாமல் அவரையே நோக்கினர் “சார், என்ன ஓர்மை உண்டா. நா ஜோசப், கம்பராமாயணம் படிக்க உங்க வீட்டுக்கு சின்னதுலே வந்தேனே”. “ஜோசப் இருக்கு, ஓர்மை இருக்கு. வீட்டுல எல்லாம் சுகமா.”, வழக்கமான உபசரிப்பு எல்லாம் முடிந்து திரேஸின் வாயால் முழுக்கதையையும் கேட்டு ஜோசப் அதிர்ந்தான் “சார், என் வீட்டுக்கு வாங்க நான் பிள்ளை போல பாத்துக்கிடுகேன்”.கண்கலங்கியிருக்கிறதா ஆம்? நிறைந்திருக்கிறது. “அதுலாம் வேண்டாம். நல்லாயிருக்க, கர்த்தருக்க கிருபையில உனக்கு குறையில்லை. முடிஞ்சா வெட்டூர்ணிமடம் எங்க ஹோமுக்கு வா. முடிஞ்சத அங்க செய். எனக்கு அது போதும்”. விடைபெற்று ஜோசப் நகர்ந்தான், உள்ளுக்குள் ஒரே எண்ணம் நாளை அந்த ஹோமுக்கு செல்லவேண்டும். அவர் கேட்டதை செய்ய வேண்டும். சட்டென நின்றான், அவரை நோக்கி ஓடினான் “சார், எனக்கு ரெண்டு பிள்ளைகளு. உங்க ஹோமுக்கு அனுப்புகேன். கம்பராமாயணம் சொல்லி கொடுப்பீங்களா”. “அதுக்கென்ன அனுப்பு கம்பன பாட புண்ணியம் வேண்டும்”. சுருக்கங்கள் சிவந்த அதே புன்னகையோடு தன் பவுனைப் பார்த்தாள் திரேசம்மாள்.

டால்ஸ்டாயின் மற்றொரு முகம் – பாவண்ணன் கட்டுரை

நான் எழுத நினைத்த காந்திய ஆளுமைகளின் வரிசையில் ஆக்கூர் அனந்தாச்சாரியும் ஒருவர். அவரைப்பற்றிய தகவல்களுக்காக ஓராண்டாகத் தேடிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல நான் சந்திக்கும் அனைவரிடமும் அவரைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லிவைத்தேன். ஒருநாள் என் சென்னை நண்பரொருவர் ஆக்கூரார் எழுதிய சுயசரிதையை தன் இளம்வயதில் படித்திருப்பதாகவும் அந்தப் புத்தகம் சமீபத்திய வெள்ளத்தில் நனைந்து கிழிந்துவிட்டதாகவும் சொன்னார். ஆனால் புத்தகத்தின் பெயரோ, அதில் படித்த தகவல்களோ எதுவுமே அவருக்கு நினைவிலில்லை.

அவருடைய சுயசரிதை தமிழில் வெளிவந்திருக்கிறது என்னும் உறுதியான தகவலே என்னுடைய தேடலின் வேகத்தை இன்னும் அதிகமாக்கியது. மற்றொரு நண்பர் வழியாக அந்தச் சுயசரிதையின் பெயர் ‘அரசியல் நினைவு அலைகள்’ என்பதும் அது அறுபதுகளில் தினமணி சுடரில் தொடராக வெளிவந்தது என்பதும் தெரியவந்தது. இன்னொரு நண்பர் அந்தப் புத்தகத்தை கோவையைச் சேர்ந்த மெர்க்குரி புத்தகநிலையம் வெளியிட்டதாக தன் நினைவிலிருந்து சொன்னார். கிட்டத்தட்ட அந்தப் புத்தகத்தை நெருங்கிவிட்டதாகவே எனக்குத் தோன்றியது. கடைசியில் சர்வோதயம் பேசுகிறது இதழின் ஆசிரியரான திரு.நடராஜன் காந்திய அருங்காட்சியக நூலகத்திலிருந்து அப்புத்தகத்தை எனக்காகத் தேடி எடுத்து அனுப்பிவைத்தார்.

ஒரே அமர்வில் அந்தச் சுயசரிதையைப் படித்துமுடித்தேன். தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்த பிறகே ஆக்கூர் அனந்தாச்சாரி அந்தத் தொடரை எழுதியிருக்கிறார். உயிர் பிரிவதற்கு முன்னால் தொடரின் இறுதி அத்தியாயத்தை எழுதிமுடித்துவிட வேண்டும் என்று பதற்றமுடன் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அவர் அஞ்சியபடியே விதி அவரை மரணத்தில் தள்ளிவிட்டது. தொடரில் எழுதிய பகுதிகள் நூல்வடிவம் பெறும் முன்பேயே அவர் மறைந்துவிட்டார்.

அந்த நூலின் வழியாக ஆக்கூர் அனந்தாச்சாரியார் மேலும் சில நூல்களை எழுதியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக டால்ஸ்டாய் சரிதம். அத்தகவல் எனக்கு ஆர்வமூட்டியது. மீண்டும் திரு.நடராஜன் அவர்களைத் தொடர்புகொண்டு அப்புத்தகத்தைப் பெற்று படித்துமுடித்தேன். திரு.வி.க முன்னுரையோடு அப்புத்தகம் 1934இல் வெளிவந்தது. டால்ஸ்டாய் பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் புத்தகம் இது. ஏறத்தாழ 85 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும் கூட அந்தப் புத்தகம் தன் முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

வழக்கமாக பிறப்பு முதல் இறப்புவரை வரிசையாக வாழ்க்கை நிகழ்ச்சிகளை அடுக்கிச் சொல்லும் விதத்தில் டால்ஸ்டாய் வாழ்க்கையை ஆக்கூரார் எழுதவில்லை. மாறாக, டால்ஸ்டாய் இந்த உலகத்துக்கு ஏன் முக்கியமானவர் என்னும் கேள்வியை முன்வைத்து, அதற்கான பதிலாக தான் தெரிந்துவைத்திருக்கும் தகவல்களைத் தொகுத்து இந்த 92 பக்க நூலை அவர் எழுதியிருக்கிறார். அதுவே இந்த நூலுக்குச் சிறப்பு சேர்க்கிறது. காந்தியடிகளை ஈர்த்த மிகமுக்கியமான உலக ஆளுமை டால்ஸ்டாய். காந்திய நினைவுகளுடன் டால்ஸ்டாயை அணுகும்போது ஆக்கூரார் சில புதிய வெளிச்சங்களைக் கண்டறிகிறார். பல புத்தகங்களைத் தேடிப் படித்து, தகவல்களைத் தேடித் தொகுத்துவைத்துக்கொண்டு இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஆக்கூரார்.

இரண்டு வயதில் தாயையும் ஆறு வயதில் தந்தையையும் இழந்து அத்தையின் பராமரிப்பில் வளர்ந்தவர் டால்ஸ்டாய். கல்லூரியில் சட்டப்படிப்பைப் படித்துவிட்டு தேர்வெழுதாமலேயே ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். ராணுவத்தில் சேர்ந்தாலும், யுத்தகளத்தில் நிகழும் மரணங்களை நேரில் கண்டு மனம் சோர்ந்து, வெகுவிரைவில் அங்கிருந்து வெளியேறிவிடுகிறார். நெப்போலியன் உருவாக்கிய போரினால் விளைந்த அழிவுகளையும் மரணங்களையும் பற்றி நேரடி அனுபவங்களை முன்வைத்து ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டார். அது ஒரே சமயத்தில் அவருக்கு பாராட்டுகளையும் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொடுத்தது.

அப்போது நாட்டில் நிலவி வந்த கல்விமுறையை டால்ஸ்டாய் வெறுத்தார். விளையாட்டுக்கும் படைப்பூக்கத்துக்கும் இடமில்லாத கல்விமுறையால் பயனில்லை என்று நீண்ட விளக்கங்களுடன் பல கட்டுரைகளை எழுதினார். பிறகு அவரே ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்து, அவரே ஆசிரியராகவும் இருந்து நடத்திக் காட்டினார். அந்தப் பள்ளியில் குழந்தைகள் புத்தகங்களையும் நோட்டுகளையும் கொண்டுவர வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு நாளும் விளையாட்டுகளுடன்தான் பள்ளி தொடங்குகிறது. அதற்குப் பிறகு ஆசிரியரே எல்லோருக்கும் தேவையான புத்தகங்களோடு வகுப்பறைக்கு வந்து ஆளுக்கொன்றை எடுத்துக் கொடுப்பார். அப்புறம் பாடங்கள் கதையைப்போல சொல்லப்படும். விளையாட்டில் காட்டிய உற்சாகத்தைப் போலவே பிள்ளைகள் பாடத்திலும் உற்சாகத்தைச் செலுத்துவார்கள். தினமும் நான்கு பாடங்கள் நடக்கும். இறுதியாக புத்தகங்களையெல்லாம் ஆசிரியரே திரும்ப வாங்கிக்கொள்வார். மீண்டும் விளையாட்டு தொடங்கிவிடும். பிள்ளைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களையும் கதைப்புத்தகங்களையும் டால்ஸ்டாயே எழுதினார். ஏறத்தாழ ஒன்பதாயிரம் பேர் வசித்த அவருடைய மாவட்டத்தில் பல இடையூறுகளுக்கிடையில் 21 பள்ளிகளை உருவாக்கி வெற்றிகரமான முறையில் நடத்திவந்தார் டால்ஸ்டாய். டால்ஸ்டாயின் பிள்ளைகளும் இதே பள்ளியில் படித்து, வளர்ந்தபின்பு இதே பள்ளியில் வேலை செய்தனர்.

ஒருமுறை டால்ஸ்டாய் வீட்டில் இல்லாத சமயத்தில் காவல்துறையினர் நுழைந்து சோதனையிட்டனர். கடப்பாரையினால் தரையை இடித்துத் தகர்த்தனர். பெட்டிப்பேழைகளை உடைத்தனர். கடிதங்களையும் நாட்குறிப்புகளையும் கைப்பற்றிக் கிழித்து வீசினர். டால்ஸ்டாய் பற்றியும் அவருடைய பள்ளி பற்றியும் தவறான எண்ணத்தை பொதுமக்கள் மனத்தில் விதைக்கவேண்டும் என நினைத்து செயல்பட்டனர். இறுதியாக வீட்டிலிருந்தவர்களை மிரட்டிவிட்டுச் சென்றது காவல்துறை. வீட்டுக்குத் திரும்பிவந்த டால்ஸ்டாய் நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்து அரசருக்கு விரிவாக ஒரு கடிதமெழுதி, நீதிமன்றத்தை நாடி நியாயம் கேட்கப்போவதாக தெரிவித்தார். கடிதத்தைப் படித்த அரசர் உடனடியாக டால்ஸ்டாய்க்கு வருத்தம் தெரிவித்து பதில் எழுதி கவர்னர் வழியாக அனுப்பிவைத்தார். அந்தப் பதிலால் தற்காலிகமாக தன் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டார் டால்ஸ்டாய்.

அவர் மீது கொண்ட சினம் தணியாத காவல்துறை அவரை எப்படியாவது ஒரு வழக்கில் சிக்கவைத்து சிறையில் தள்ள தக்க தருணத்துக்காகக் காத்திருந்தது. ஒருநாள் டால்ஸ்டாய்க்குச் சொந்தமான பண்ணையைச் சேர்ந்த காளையொன்று ஒருவரை தன் கொம்பால் குத்திக் கொன்றுவிட்டது. டால்ஸ்டாயின் பராமரிப்புமுறை சரியில்லாததாலேயே இந்த மரணம் நிகழ்ந்தது என அவர் மீது வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்துக்கு இழுத்தது காவல்துறை. ஏராளமான குறுக்கு விசாரணைகள். அவமதிப்புகள். நல்ல வேளையாக குற்றத்தை நிரூபிக்க முடியாததால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

ஒரு மருத்துவரின் மகளான சோபியாவை 1862இல் டால்ஸ்டாய் மணந்துகொண்டார். அப்போது அவருக்கு 34 வயது. சோபியாவின் வயது 18. இருவருக்கும் பதின்மூன்று குழந்தைகள் பிறந்தனர். சிறுவயதிலேயே ஐந்து குழந்தைகள் மரணமடைந்துவிட, எட்டு பேர் மட்டுமே எஞ்சினர்.

ஒரு பிரபுவுக்குரிய வசதிகள் இருந்தாலும் டால்ஸ்டாய் எளிய வாழ்க்கையையே எப்போதும் விரும்பினார். அவர் மனம் எளிய உணவையும் எளிய உடைகளையும் மட்டுமே நாடியது. குடியானவர்களுடன் நெருங்கிப் பழகினார். பயணத்தின்போது மூன்றாவது வகுப்பிலேயே பயணம் செய்வது அவர் வழக்கம். தினமும் எட்டு மைல்கள் தொலைவு நடக்கும் பழக்கமும் அவருக்கு இருந்தது. இளமைக்காலத்தில் புலால் உண்பவராகவும் புகை பிடிப்பவராகவும் வேட்டையாடுவதில் விருப்பம் உள்ளவராக இருந்தாலும், பிற்காலத்தில் அப்பழக்கங்களை அவர் துறந்துவிட்டார். தொடக்கத்தில் தேவாலயத்துக்கே செல்வதில்லை என எடுத்த சபதத்தை விலக்கி தினமும் மாலை வேளையில் தேவாலயத்துக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார். உலகில் எவருமே தமக்கு பகைவர்கள் இருக்கக்கூடாது என அவர் மனம் விரும்பியது. ஆகவே, பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு சண்டையிட்டு அன்றுமுதல் பேசாமல் இருந்த துர்கனேவ் என்னும் நண்பருக்கு கடிதம் எழுதி வரவழைத்து நட்பைப் புதுப்பித்துக்கொண்டார்.

ஒருநாள் அவருடைய பண்ணையில் ஒரு வேலைக்காரன் பொய் சொல்லி அவரிடம் அகப்பட்டுக்கொள்கிறான். பொய்யை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் அவன் மீது சினம் கொள்கிறார். அவனுக்கு சாட்டையடி கொடுக்குமாறு கட்டளையிட்டு விடுகிறார். அவன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் மனம் மாறிவிடுகிறது. அவன் மீது இரக்கம் கொள்கிறார். உடனடியாக தண்டனையை நிறுத்துமாறு வேறொரு ஆளிடம் சொல்லி அனுப்புகிறார். ஆனால் அதற்குள் தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடுகிறது. அதைக் கேட்டு துயரத்தில் ஆழ்ந்துவிடும் டால்ஸ்டாய் அவனை வரவழைத்து அவனிடம் மன்னிப்பு கேட்கிறார். அவனுக்கு அரை பவுன் பரிசாக கொடுத்தனுப்புகிறார்.

தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்மை ஏற்படும் விதத்தில் உயர்தட்டைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் ஒன்றாகத் திரட்டி பாடுபடத் தூண்டினார் டால்ஸ்டாய். அது நல்ல பலனைக் கொடுத்தது. எண்ணற்றோர் தத்தம் பகுதிகளில் தொழிலாளிகளுக்காக அல்லும்பகலும் உழைத்து அரசாங்கத்தின் சீற்றத்துக்கு ஆளாயினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. சிலர் நாடு கடத்தப்பட்டனர். சிலர் தூக்குதண்டனைக்கு ஆளானார்கள். அதன் பிறகே டால்ஸ்டாய் ஊட்டிய புத்துணர்ச்சி மக்களிடையில் தீயெனப் பரவியது. சீற்றத்தில் பொங்கியெழுந்த மக்கள் கூட்டம் வன்முறையில் இறங்குவதை அவர் விரும்பவில்லை. அவ்வழி தவறானது என்று வற்புறுத்தினார். அகிம்சை வழியில் சமதர்மக் கொள்கையைப் பரப்பவேண்டுமென அவர் விரும்பினார். கொல்லாமை, பிறர் மனை கயவாமை, ஆணையிடாமை, தீங்கு செய்யாமை, பகைவரிடம் வெறுப்பு கொள்ளாமை என்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவர் வாழ்க்கை நடத்தி வந்தார். 1880 வாக்கில் அவர் நாடறிந்த ஞானியாக உயர்ந்துவிட்டார்.

1881இல் பீட்டர்ஸ்பர்க்கில் ஜார் மன்னரின் தந்தையான இரண்டாவது அலெக்ஸாந்தரை யாரோ கொலை செய்துவிட்டனர். அது தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யபட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை அறிந்ததும் டால்ஸ்டாய் ஜார் அரசருக்குக் கடிதமெழுதினார். கொலை செய்யும் வன்முறை வழியை தான் ஆதரிக்கவில்லை என்றும் புரட்சிக்காரர்களை தூக்கிலிட்டு அவர்கள் எண்ணிக்கையை குறைப்பதால் மட்டும் புரட்சியை அடக்கிவிடமுடியாது என்றும் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார் டால்ஸ்டாய். ஆனால் புரட்சிக்காரர்களை தூக்கிலிட்ட பிறகே அக்கடிதத்துக்கு ஜார் மன்னர் பதில் எழுதினார்.

அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை டால்ஸ்டாய் முன்னெடுப்பதை அறிந்த அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று அரசரிடம் கேட்டுக்கொண்டனர். அரசரோ டால்ஸ்டாயை எக்காரணத்தை முன்னிட்டும் கைது செய்யக் கூடாது என்றும் தேவையின்றி அவரைக் கைது செய்து அவரை பெரிய வீரராக உருமாற்றிவிடக்கூடாது என்றும் கறாரான குரலில் தெரிவித்தார்.

திடீரென நாடெங்கும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் தவித்தனர். பட்டினியில் உயிர்துறந்தனர். உடனே ஏழைக்குடியானவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உணவு வழங்கும் பொருட்டு 246 உணவுக்கூடங்களை உருவாக்க டால்ஸ்டாய் ஏற்பாடு செய்தார். அவருடைய குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருமே பஞ்ச நிவாரண வேலையில் ஈடுபட்டனர்.

1900 முதல் அடிக்கடி பொதுமக்கள் கைது செய்யப்படுவதும் காரணமின்றி தண்டிக்கப்படுவதும் நடைபெறத் தொடங்கியது. ‘இன்னும் அமைதியாக இருக்கவேண்டுமா?’ என்ற தலைப்பில் 1908இல் டால்ஸ்டாய் ஒரு விரிவான கட்டுரையை எழுதினார். அரசாங்கத்தின் கட்டளையை மீறி சில பத்திரிகைகள் இக்கட்டுரையை முழு அளவிலும் சில பத்திரிகைகள் அரைகுறையாகவும் வெளியிட்டன. பல பத்திரிகையாசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்டிலுள்ள எந்த அமைப்பும் சங்கமும் பள்ளியும் நகரசபையும் டால்ஸ்டாயிடம் எவ்விதமான மரியாதையையும் காட்டக் கூடாது என்று அரசு வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் டால்ஸ்டாய் மனம் தளராது தொடர்ச்சியாக அரசருக்கு சர்வாதிகாரத்தினாலும் கிறித்துவ வைதிகத்தாலும் நாட்டுக்கு ஒருபயனும் விளையாது என்பதை பலமுறை தம் கடிதங்கள் வழியாக தெரிவித்துக்கொண்டே இருந்தார்.

பாமர மக்கள் வாழுமிடத்தில் தாமும் வாழ விரும்பி, அத்தகைய இடம் எங்காகிலும் வாடகைக்குக் கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்ள அவர் இறுதிக்காலத்தில் அலைந்தார். அது தொடர்பாக ரோஸ்டோலோன் என்னும் இடத்துக்குச் செல்ல 6.11.1910 அன்று ரயிலில் தன் மகளுடன் புறப்பட்டார். அப்போது அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. காய்ச்சல் காரணமாக உடல் அனலாகக் கொதித்தது. அவருடைய பெட்டியில் பயணம் செய்த ஒரு மருத்துவர் அவரை பரிசோதனை செய்துவிட்டு, அவர் பயணத்தைத் தொடர்வது நல்லதல்ல என்று சொல்லி அடுத்து வந்த அஸ்டாபோவா என்னும் கிராமத்து நிலையத்தில் இறக்கிவிட்டார். ஸ்டேஷன் மாஸ்டர் உதவியுடன் மருத்துவர் வரவழைக்கப்பட்டார். டால்ஸ்டாயின் மகள் தன் தமையனுக்கு தந்தி அனுப்பினாள். அடுத்த நாள் காலையில் டால்ஸ்டாயின் மனைவியும் அவர் மகனும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் இருவரும் சந்திக்க வாய்ப்பில்லாமலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது.

டால்ஸ்டாய் இறந்ததும் அவருடைய ஏராளமான சொத்தின் பெரும்பகுதி அவர் எழுதிவைத்த உயிலின்படி குடியானவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அவருடைய குடும்பத்தினருக்கு வீடும் சில ஏக்கர் நிலங்களும் மட்டுமே எஞ்சின. ரஷ்யாவில் பொதுவுடைமைக் கிளர்ச்சி தொடங்கிய சமயத்தில் டால்ஸ்டாயின் வேலைக்காரர்கள் அவருடைய வீட்டையும் குடும்பத்தினரையும் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றிக் கொடுத்தனர். இன்று அவருடைய வீடு பொருட்காட்சியகமாக இருந்து வருகிறது. அவருடைய படிப்பறை அவர் விட்டுச்சென்ற நிலையிலேயே பாதுகாக்கப்பட்டுவருகிறது. அவருடைய புத்தக அடுக்கில் புத்தரின் வாழ்க்கை வரலாறும் காந்தியடிகள் பற்றி எழுதப்பட்ட ஒரு நூலும் இருக்கின்றன.

வைதிகக் கிறித்துவமதத்தின் விளைவுகளையும் தேவாலயத்தின் நடவடிக்கைகளையும் டால்ஸ்டாய் தன் இறுதிக்காலம் வரை தொடர்ந்து விமர்சித்து கட்டுரைகள் எழுதிவந்தார். அதன் பொருட்டு, அவரைக் கொல்லப் போவதாக பல அச்சுறுத்துல் கடிதங்கள் வந்தபோது கூட டால்ஸ்டாய் தம் விமர்சனங்களை நிறுத்தவில்லை. இதனால் வெறுப்படைந்த தலைமை மதகுரு 22.02.1901 அன்று அவரை மதத்திலிருந்து விலக்கி வைக்கும் ஆணையைப் பிறப்பித்தார். கிட்டத்தட்ட அதே சமயத்தில்தான் அவர் உலகத்தலைவர்கள் அனைவரோடும் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். இந்தியாவில் உள்ள சில முக்கிய சங்கங்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. சென்னை தாம்ஸன் அச்சுக்கூட்த்திலிருந்து வெளிவந்த ஆர்யா பத்திரிகைக்கு அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவந்தார். அவர் எழுதிய ‘இந்தியனின் கடமை’ கட்டுரை துண்டுப்பிரசுரமாக அக்காலத்தில் வெளியிடப்பட்டு அக்காலத்தில் எண்ணற்றோரால் வாசிக்கப்பட்டது.

காந்தியடிகள் அப்போது தென்னாப்பிரிக்காவில் வசித்துவந்தார். அப்போதே அவர் டால்ஸ்டாயின் செயல்பாடுகளை அறிந்துவைத்திருந்தார். கடிதங்கள் வழியாக இருவரும் உரையாடி கருத்துகளைப் பரிமாற்றிக்கொண்டனர். டால்ஸ்டாயின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட காந்தியடிகள் 1904இல் டர்பனுக்கு அருகில் பீனிக்ஸில் உருவாக்கிய ஆசிரமத்துக்கு டால்ஸ்டாய் பண்ணை என்றே பெயர் சூட்டினார். டால்ஸ்டாய் இறக்கும் வரை காந்தியடிகள் அவருடன் கடிதத் தொடர்பில் இருந்தார். தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய அகிம்சை வழியிலான சத்தியாகிரகப் போரின் புதுமையால் ஈர்க்கப்பட்டிருந்தார் டால்ஸ்டாய். உலக வரலாற்றிலேயே சிறந்ததொரு போர்முறை என சத்தியாகிரக வழிமுறையை அவர் மனம்திறந்து பாராட்டினார்.

ஆக்கூரார் எழுதியிருப்பது டால்ஸ்டாயின் சுயசரிதை மட்டுமல்ல. காந்தியப்பார்வையில் டால்ஸ்டாயின் வாழ்க்கையை மதிப்பிட்டு நமக்கு எந்த அளவுக்கு நெருக்கமானவராக அவர் இருக்கிறார் என்பதைக் கண்டு நிறுவும் ஒரு முயற்சி என்றே சொல்லவேண்டும். காந்தியடிகளின் மதிப்பில் உயர்ந்த ஒருவரை நம் மக்களுக்கு உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற அவருடைய வேட்கை வணக்கத்துக்குரியது. இன்றளவும் கூட டால்ஸ்டாயின் இலக்கியமுகம் மட்டுமே மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டுவரும் சூழலில் எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் முன்னேற்றம் சார்ந்த டால்ஸ்டாயின் போர்முகத்தை அறிமுகப்படுத்தியிருக்கும் ஆக்கூர் அனந்தாச்சாரியாரின் முயற்சி போறுதலுக்குரியது.

கடல் – கமலதேவி சிறுகதை

அப்பொழுதுதான் நேர்க்காணல் முடிந்திருந்தது. பணிநியமன ஆணையை பெற்றுக்கொண்ட நித்யா திருச்சி சையதுமிர்சா அரசினர் பள்ளி மைதான மரநிழலில் நின்றாள்.மறுபடி மறுபடி கோட்டைப்பட்டினம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை என்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.இப்படி ஒரு ஊர் இருக்கா? கோட்டை இருக்குமோ?

பட்டினம், பாக்கம் என்ற சொல் கடற்கரை நகரை குறிக்கும் என்று தேர்வுக்கு படித்தது நினைவில் எழுந்தது.கடற்கரை ஊரா என்று மனதிற்குள் தூக்கி வாரிப்போட்டது.அந்த நேரத்திலும் பொன்னியின் செல்வனின் கோடியக்கரை மனதில் வந்து தொலைத்தது.இன்னும் ஒரு மதிப்பெண் எடுத்திருந்தால் திருச்சிக்குள் எங்காவது நுழைந்திருக்கலாம்.

லலிதா எரிச்சலாக முகத்தை சுருக்கியபடி வந்து அருகில் நின்றாள்.

“நித்யா…எனக்கு அத்தானி ங்கற ஊர்.மணல்மேல்குடி தாலுக்கா.இதெல்லாம் எங்க இருக்கோ.அத்தான்..அத்தான்னு பழைய பட டயலாக் மாதிரி இருக்கு,”

புடவையை சரி செய்தபடி நித்யா சிரித்தாள்.இருவரின் அப்பாக்களும் பேசி சிரித்தபடி உற்சாகமாக வந்தார்கள்.

“புதுக்கோட்டை தானே சார் பாத்துக்கலாங்க..இந்த காலத்து பிள்ளைங்க எங்கெங்கியோ வேலைக்கு போவுதுங்க…”

“கூகுள் மேப்ல பாக்கலாமா பாப்பா…”

பிள்ளைகள் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

“என்னதுக்கு முகத்த தூக்கி வச்சிருக்கீங்க.சின்ன வயசுல அரசாங்க உத்தியோகம் கெடக்கறதே பெரிசு…கல்யாணத்துக்கு முன்னயே வேல…கொடுத்து வச்ச பிள்ளைங்க,”என்று ஏக்கமாக லலிதாஅப்பா அதட்டினார்.

அறந்தாங்கி கஸ்தூரிபாய் விடுதியிலிருந்து கிளம்பினால் கோட்டைப்பட்டினத்திற்கு இரண்டுமணிநேரத்திற்கும் மேலாகிறது.வழியில் உஷாவுக்கு அம்பலவாணனேந்தல், சுபாவுக்கு காரணியானேந்தல் என்ற ஊர்களில் இறங்க வேண்டும்.அவர்கள் முதலில் ஊர் பெயரை மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது.

வேலையில் சேர்ந்த முதல் நாள் இரவுஉணவு நேரத்தில் லலிதா நித்யாவிடம், “எனக்காச்சும் பரவாயில்ல…நீ தான் பாவம்…”என்றாள்.

புதுசா இன்னும் என்ன இருக்கோ என்று நித்யா முகம் சோர்ந்தது.அன்று கோட்டைப்பட்டின பெண்கள் பள்ளியில் வேலைக்கு சேர்ந்திருந்த கோகிலா, “நித்யா என்ன பாவம்….”என்றாள்.

“எதாச்சும் மீட்டிங்ன்னா…பேங்க் வேலைன்னா மணமேல்குடிக்குதான் நீங்க வரனும் தெரியுமா? இந்தியன் பேங்க்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனுமாமே எனக்கு ஸ்கூல்ல இருந்து பக்கம்,”

“நாங்க ரெண்டு பேரும் இருக்கமில்ல..சேர்ந்து வந்துருவோம்..”

தேனீ,தென்காசி,திருச்சி என்று வேவ்வேறு இடங்களில் இருந்து வந்த இவர்கள் இணைந்துகொண்டு மணல்மேல்குடியில், புதுக்கோட்டையில் அலுவலக வேலைகளை முடிக்க இரண்டுநாட்களானது.கோட்டப்பட்டினத்திலிருந்து மணல்மேல்குடி வழியெங்கும் கடல் உடன் வந்தது.உப்பளங்கள் கண்ணாடிகளாய் மின்னும் பாதைகள்.

அதில் வேலை செய்துவிட்டு பேருந்தேறும் பெண்களின் கால்களை முதல்முறைக்கு மேல் பார்ப்பதற்கு பதைத்தது.பள்ளியின் முதல்தளத்தில் நின்றால் தெரியும் தனித்த ஆள்அரவமற்ற கடற்கரையும், கருத்தக்கடலும், தொடுவானமும் எங்கேயோ வந்து விட்டதைப்போன்ற ஒரு படபடப்பை தருகிறது.

ஐந்தாம்நாள் வகுப்பறையில் நின்ற நித்யாவுக்கு சலிப்பாக இருந்தது.கோகிலாவுக்கு போல பெண்கள் பள்ளியிலாவது கிடைத்திருக்கலாம் இந்தப்பள்ளிக்கூடத்துல ஒருப்பய மதிக்க மாட்டிங்கிறான்.மொழி உச்சரிப்பு சிக்கல் வேறு.மணியடித்தால் டீச்சருக்கு முன்னாடி ஓடிப்போயிடறானுங்க.மதியத்திற்கு மேல் மீன்பிடிக்க கடற்கரைக்கு தப்பிவிடுகிறார்கள்.கட்டுப்பாடான பள்ளிகளில் படித்துவிட்டு இங்கு வந்து பட வேண்டியிருக்கிறது.

ஒரு வாரமாக ,எங்கிருக்கிறோம் ,என்ன சாப்பாடு ,என்னநினைப்பு, என்ன செய்கிறாம் என்றே தெரியாத ஒரு மனகுழப்பம்.வண்ணங்களை விசிறியடித்த ஓவியப்பலகையின் வழிதல்கள் என திக்கு தெரியாது பணிசார்ந்து இழுத்த இடம் அறியாது சென்றுகொண்டிருந்தார்கள்.இதுவரை வீடு, கல்லூரி விடுதி, பக்கத்து ஊர் தனியார்பள்ளி வேலை தவிர பெரிதாக இடமாற்றமில்லாத வாழ்க்கை.வாரஇறுதியில் ஊருக்கு சென்றுவிடலாம் என்ற நினைப்பைத்தவிர நித்யாவிற்கு எதுவும் இல்லை.உறக்கத்தில் திடீரென்று விழிப்பு வந்தால் மறுபடி உறங்கமுடியவில்லை.இரண்டுவாரங்கள் எத்தனையோ மாதங்கள் போல நகர்ந்தது.

வெள்ளிக்கிழமை சாயுங்காலம் தலைமையாசிரியர் புதிதாக வேலைக்கு சேர்ந்த கணித ஆங்கில இயற்பியல் ஆசிரியர் மூவரையும் சனிக்கிழமை வகுப்பு வைத்து பாடம் எடுக்க சொன்னார்.அதை நினைத்துக்கொண்டே சாலை கடக்கும் போது மதீனா டீச்சர் பதறிய குரலில் அழைத்து இழுத்தார்.

“நித்யா டீச்சர்..இது ஈஸ்ட் கோஸ்ட் ரோடு அடிச்சு போட்டுட்டு போயிட்டேயிருப்பாங்க…ரொம்ப கவனமா இருக்கனும்,”

“தேங்ஸ் டீச்சர்..”

“இந்தவாரம் ஊருக்கு போலான்னு நெனச்சீங்களா?”

“ம்…”

“சம்பளத்த நெனங்க.எல்லாம் மறந்துடும்…”என்று அவள் கையைப்பிடித்து சாலையைக் கடந்தார்.

உஷாவும் சுபாவும் ஊருக்கு கிளம்பியிருந்தார்கள்.லலிதாவும் கோகிலாவும் கிட்டதட்ட அழும் நிலையிலிருந்தார்கள்.நித்யா குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.ஆளுக்கொரு சமாதானம் சொல்லிக்கொண்டு இரவு உணவிற்கு பிறகு தொலைக்காட்சித்தொடர் பார்க்கத்தொடங்கினார்கள்.நித்யாவின் அலைபேசி அழைத்தது.

“நித்யா…நல்லாருக்கியா..”

தொண்டையை செறுமிக்கொண்டாள்.

“என்னாச்சு…”

“ஊருக்கு வரலான்னு நெனச்சேன்…”

“அங்க போனதுலருந்து சரியாவே பேசமாட்டிக்கிற..”

ஜனனிஅக்கா விடமாட்டாள்.அவள் பேச்சில் என்னத்தையோ வைத்திருக்கிறாள்.அவள் நெருங்கி பேசும் அனைவரும் உணரும் ஒன்று அது.

“ ஒன்னுமில்ல ஜனனி..”

“ஸ்கூல் போற வழியில புதுசா என்ன பாக்கற…நம்ம ஊர்ப்பக்கம் இல்லாதது…”

“வழியில தாமரைக்குளங்க நிறைய இருக்கு…கடற்கரை மணல்… மீன்வாடை…”

“குறிஞ்சியிலருந்து நெய்தலுக்கு போயிட்ட…நீ கலக்கு நித்யா…எனக்குதான் இங்க பதில் சொல்லமுடியல,”

ஒருவீட்டில் ஒரே தேர்வில் இருவரில் ஒருவருக்கு வேலைக்கிடைப்பது எத்தனை சங்கடம்.புன்னகைத்தே சமாளிப்பாள்.இத்தனை நாள் அவள்பக்கத்தை நினைக்கவேயில்லை.

“ச்…எனக்குதான் ரெண்டு மார்க்குல போயிடுச்சு…கடற்கரையில பள்ளிக்கூடம்..நீ லக்கி நித்தி,”என்று அக்கா பேசிக்கொண்டேயிருந்தாள்.

நித்யா காலையில் பேருந்திலிருந்து இறங்கியதும் நிமிர்ந்து சற்று தொலைவிலிருந்த பள்ளிக்கட்டிடங்கள் இரண்டையும் பார்த்தாள்.கடற்கரையில் நின்று கடற்கரையையே மைதானமாகக்கொண்ட பெரிய பள்ளிக்கூடம்.பழையக்கட்டிடம் சற்று தள்ளி நிற்கிறது.குனிந்து இளம்பச்சை நிற பருத்தி புடவையை சற்று தூக்கிப்பிடித்தபடி மைதான மணலில் நடந்தாள்.

பத்துநிமிடம் நடக்க வேண்டும்.நடந்து வரும் போதே வீசும் கடற்காற்றை உடல் தனித்து உணர்கிறது.உப்புக்காற்றுக்கென ஒரு கனமான தொடுகை. செருப்புகளுக்குள் புகுந்த மென்மணலின் நறநறப்பு பாதங்களை கூசச்செய்தது.உடலை உலுக்கிக்கொண்டாள்.முதல்தளத்தின் வகுப்பறையில் பயல்களின் ஆரவாரம்.

முதல்தளத்தின் நடைபாதை தூணருகே நின்றாள்.ஆமாம்…சங்ககாலத்து கடல்.’கடலினும் பெரிது எமக்கு அவருடை நட்பே …’என்று பனிரெண்டாம் வகுப்பில் படித்த வரி ஜனனி குரலில் கேட்டது.கடலை பார்த்து பார்த்து காத்திருந்த காத்திருப்பின் சொல்.இரங்கலும் இரங்கலின் நிமித்தமும்.அவள் சொல்லிய போது உணரவில்லை. இத்தனை பெரிய கடலை நேரடியாக பார்த்துக்கொண்டு நிற்கும் போது அப்படி யாரிடமாவது சொல்ல இந்தவாழ்வில் வாய்ப்பு கிடைக்குமா? என்று தோன்றியது.உடனே புன்னகை எழுந்தது.இங்கு வந்து மனம் கனியும் முதல் புன்னகை.சட்டென்று அலைபேசியில் தற்படம் எடுத்தாள்.

வெண்மணலாய் விரிந்து பரந்த அரவமில்லா கடற்கரையில் மீன்கள், களத்தில் காயும் நெல்மணிகளெனக் காய்கின்றன.காற்றின் சுழற்றலில் அடிவயிறு கலங்கி குமட்டலெடுத்து அவள் கண்கள் நிறைந்தன.

வெண்மணல் பரப்பு.தாழைபுதர் ஒன்று தெரிகிறது. மினுமினுக்கும் பரப்பென அலைகள் இல்லாத கடல் முடிவிலி வரை நீண்டு கிடக்கிறது.செபாஸ்டீன் சார் அன்று இதை பெண்கடல் என்று சொன்னார்.

சங்கால பெண்மனம் இன்றுவரை உறைந்து நிற்கிறதா? அன்றிருந்த புன்னை இன்றில்லை. அதன்அடியில் நிற்கும் தலைவி கண்களுக்குத் தெரியவில்லை.அவள்தான் மீன் உலர்த்தியிருக்கிறாளா? வலைகள் சிறு சிறு குன்றென குவிந்து கிடக்கின்றன.அதற்கு அப்பால் இருக்கக்கூடும்.அந்த அழகான மசூதிக்குப் பின்னால் இருக்கும் மீன்பிடிதளத்தில் காத்திருக்கக்கூடும்.தலைவிதொலைத்த புன்னங்காய் இங்கு தங்கையென வளரவில்லையா?

“என்ன டீச்சர் அப்படியே நிக்கறீங்க? “

நித்யா தடுமாறி தூணில் சாய்ந்து திரும்பி, “குட்மானிங் டீச்சர்,”என்றாள்.

“இந்த ஊரு ஒத்துக்கிச்சு போலயே..”என்றபடி பையன்களை அழைத்தார்.

நித்யா பதில் சொல்லாமல் விழிகள் விரித்து சிரித்தாள்.ஜனனியின் கிறுக்குத்தனமான பேச்சு இன்று எரிச்சலாக இல்லை.பேசிப்பேசி என்னையும் கிறுக்காகிட்டாளா!

மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.வெயில் பொழிந்து கொண்டிருந்தது.கண்கள் கூசி நிறைந்தது.கானல் பறக்கும் வெளியில் ஒருவர் வலையை தூக்கிக்கொண்டு நடந்து சென்றார்.

வாட்ஸ்ஆப்பில் ஜனனிக்கு புன்னகைக்கும் தற்படத்தை அனுப்பினாள்.உடனே ஒரு பொம்மை புன்னகை வந்தது .என்ன? என்ற கேள்வியுடன்.சகோதரியாக புன்னைமரம் நின்ற சங்ககாலத்தில் சொல்லமுடியாததை, இன்றுமட்டும் இவளிடம் எப்படி சொல்லமுடியும்? மீண்டும் ஒரு புன்னகையை அனுப்பினாள்.

ஆசிரியரை பார்ப்பதற்கான எந்த மரியாதையும் இன்றி ஒருவன் வகுப்பறைக்குள் ஓடினான்.

டிசிப்ளின் ஒபீடியன்ஸ் எல்லாம் நம்ம ஸ்டூடண்டா இருக்கும்போது சரிதான்.ஆனா ஒரு டீச்சரா அது தெரியாத குழந்தைகளுக்குத்தானே நீ வேணும்.அதுவும் பாசம் தேவைப்படற குழந்தைகளா இருக்கும்.உப்பள வேலையில அம்மாக்களுக்கு பாசத்துக்கு நேரம் குறைவா இருக்கலாம் என்று நேற்று ஜனனி சொல்லியது நினைவிற்கு வந்தது.

வகுப்பறைக்குள் நுழைந்த பையனின் முதுகில்தட்டி நகர்ந்த நித்யா, “ டீச்சர் கிளாஸ்ரூமுக்கு வந்தா எழுந்து குட்மானிங் சொல்லனும்…போகும்போது தேங்க்யூ சொல்லனும்..” என்றபடி மேசைக்கருகில் சென்றாள். பையன்கள் தயக்கத்துடன் எழுந்து நின்றார்கள்.

A12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை

A12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும்

சென்ற ஆகஸ்ட் மாத மத்தியில், சேர்த்து வைத்திருந்த சில குட்டி வேலைகளைச் செய்ய வீட்டிற்கு ப்ளம்பர் வந்திருந்தார். கடைசியாக அவரைப் பார்த்தது ஒரு வருடம் முன்னர். அழுக்கு உடையுடன் கொரோனா முகமூடிக்குள் அசைந்த அவரது தாடையை ஊகித்தவாறு, “பார்த்து ஒரு வருடமிருக்கும், இருந்தும் உங்கள் புன்னகை இன்னும் நினைவிருக்கிறது” என்ற சொல்ல நினைத்து, “அதே புன்னகை!“ என்று மட்டும் சொன்னேன்.

அவர் தாடையை நன்கு அசைத்தவாறே, ”ஆனால் அப்போது நாம் சந்தித்த உலகம் வேறு; அந்த உலகத்தில், யாரையாவது சந்திக்கும்போது கைகுலுக்கும் வழக்கமிருந்தது,” என்றார்.

ஆம், இரு உலகங்களுக்கு இடையில் கைகுலுக்க முடியாத அழுத்தமான கோடு இன்றிருக்கிறது.

கோட்டிற்கு இந்தப்பக்க உலகில் கட்டாயத்தின் பேரில் நிறைய வழக்கங்களை எதிர் கொள்ள வேண்டியாகிறது. அதே சமயம் நேர்மறை பழக்கங்களும் இல்லாமல் இல்லை.

ஆகஸ்ட் மாதத்திலிருந்து, நான் வாழும் லண்டனிற்கு கிழக்கில் முப்பது மைல்கள் தள்ளி இருக்கும் இந்த நகரத்தில் வசிக்கும் இந்திய நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிள் பயணங்கள் ஆரம்பித்திருக்கிறேன்.

உண்மையில் அவர்கள் கடந்த ஒரு வருடமாகவே குழுவாக ஒவ்வொரு சனிக்கிழமை காலைதோறும் பயணங்கள் மேற்கொண்டு வருகிறார்கள், நான் சமீபத்தில்தான் சேர்ந்திருக்கிறேன்.

நாங்கள் ஆங்காங்கே குழு குழுவாகச் சேர்ந்து கொண்டு நகரத்திற்கு வெளியே அமைந்திருக்கும் ஒரு பெரிய நீர் தேக்கத்தை (Hanningfield) ஒரு சுற்று வருவோம். தோராயமாக முப்பது மைல்கள். சில சமயங்களில் சில நண்பர்கள் இன்னொரு சுற்றும் சென்று வருவதுண்டு.

நான் வீட்டிலிருந்து காலை 7 மணிக்கு கிளம்பி The Endeavour எனும் பப்பிற்கு வெளியே காத்திருக்கும் ஓரிரு நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு நகரத்தின் இன்னொரு மூலைக்கு சைக்கிளை விட்டு, நான்கு மைல்கள் தொலைவில் Blue Lion எனும் பப்பில் காத்திருக்கும் மற்ற குழு நண்பர்களுடன் இணைந்து கொண்ட பின் நகரத்திற்கு வெளியே செல்லும் ஒற்றைப் பாதையில் சீராகச் செல்வோம். பின்னர் The Three Compasses எனும் பப்பிற்கு வரும்போது எட்டு அல்லது பத்து மைல்கள் கடந்திருப்போம். அதன் பின் The Old windmill …இப்படியாக சிறு கிராமங்களை தொட்டுச் செல்லும் வழியெங்கும் மதுபான விடுதிகளே எங்களது மைல்கற்கள்.

இப்படியாக காலை 7 மணி வாக்கில் அவரவர் இருப்பிடங்களிலிருந்து ஓரிருவராக சேர்ந்து கொண்டு ஆரம்பிக்கும் பயணம் மெல்ல நகரத்தை விட்டு வெளியே ஒற்றை கிராம பாதையை நோக்கி நகரும். வழியில் ஓரிடத்தில் A12 எனும் மோட்டார் பாதையை நாங்கள் ஓர் குறுகிய பாலத்தின் வழியாக கடப்போம். பாலத்தின் அடியில்,இரு வழிப்பாதைகள் கொண்ட மோட்டார் சாலை. இம்மாதிரியான A சாலைகளில் விரைந்து கொண்டிருக்கும் வாகனங்களின் சராசரி வேகம் 70 மைல்கள்.

கிராம ஒற்றை வரிசைப் பாதையில், சுற்றிலும் வேனிற்கால வண்டுகளையும் பூச்சிகளின் ரீங்காரங்களையும் மட்டும் கேட்டபடி சைக்கிளை மிதித்துக்கொண்டு போகையில் இந்த மோட்டார் பாதையின் இரைச்சல் தூர அருவிச்சத்தம் போல் மெல்லியதாய் கேட்க ஆரம்பிக்கும். மோட்டார் பாதையை நெருங்க நெருங்க அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் இரைச்சல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும். அருவி கண்களில் படாது. ஆனால் அருகில் பெரும் உற்சாக அருவியை உணர முடியும். திடுமென ஒரு திருப்பத்தில் சிறு பாலத்தைக் கடக்கும்போது A12 எனும் அருவி நமக்கு கீழே உற்சாகமாக கண்களில் படும்.

பாலத்தைக் கடந்து போகையில் அருவியின் இரைச்சல் மெல்ல மெல்ல தேய்ந்து தூரத்து இடி போல் மறைந்துவிடும்

பின் ஒடுங்கி குழைந்து வயல்களின் நடுவில் பெரிய அளவு வரப்பு போன்ற பாதையில் எங்கள் பயணம் போகும்.

வாழ்க்கை மாதிரி இந்தப் பாதையும். சீராக ஒரே நேர் நிலையில் இருப்பதில்லை. போய்க் கொண்டிருக்கும்போது திடீரென சரசரவென இறக்கம் இறங்கும். மிதிக்கத் தேவையில்லாமல் ஆகஸ்ட் காலை தாராள வெயிலும் காற்றும் முகத்தில் உற்சாகமாக அடிக்க ஆசுவாசமாக பக்கவாட்டில் பார்க்க ஆரம்பிக்கும்போது இறக்கம் சட்டென வலது புறத்தில் திரும்பும். திரும்பும் இடத்தில் கள்ளமாக இருக்கும் சிறு கற்களை கவனமாக கவனித்து தவிர்த்து திரும்பினால் பாதை பெரும் மேடாக நம் முன் நின்று சிரிக்கும். கியர்களை மாற்றி, வேகம் குறைந்து மூச்சிறைத்து மேட்டிற்கு பழகிக்கொண்டிருக்கும்போது மறுபடியும் இறக்கம் சிரித்துக்கொண்டே எதிர்படும்.

மேடுகள் நினைவிருப்பது போல் இறக்கங்கள் நினைவிலிருப்பதில்லை.

ஆகஸ்ட் இறுதி வாரங்களில் அறுவடை முடிந்திருந்த வயல்களில் நடுவில் மொத்தமாக குவித்து சுருட்டப்பட்ட வைக்கோற் பொதிகள் அமைதியாக அமர்ந்திருந்தன. பொதிகள் எனில் சாலை போடும் இயந்திரங்களின் உருளை அளவிற்கு சுருட்டப்பட்ட பொதிகள். பின் வந்த வாரங்களில் அவை வயல்களிலிருந்து அகற்றப்பட்டு பாதையோரத்தில் இருக்கும் பண்ணை முற்றங்களில் குவித்து வைக்கப்பட்டிருப்பதை கண்டேன்.

 


ஒரு L வடிவ பாதை திருப்பத்தில் கருப்பு பெர்ரிகள் கொத்து கொத்தாக காலை ஒளியில் மிளிர்ந்து கொண்டிருந்ததைக் கண்டேன். சைக்கிளை உடனே நிறுத்த முடியாது, திரும்ப வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என எண்ணிக்கொண்டே திரும்பினால் கருப்பு பெர்ரிகளும் மஞ்சள் நிற பெர்ரிகள் மீண்டும் தென்பட்டன…மீண்டும்…

மொத்தப் பாதை முழுவதும் இருமருங்கிலும் பெர்ரிச்செடிகள் ஏராளமாக வந்து கொண்டிருந்தன.

சில வருடங்களுக்கு முன் ஸ்காட்லாந்தில் ஒரு மலையேறு பயணத்தில் வழிகாட்டி, பிரிட்டன் காட்டுப் பகுதியில் காணக்கூடிய பெர்ரிச்செடிகளில் ஏழுவகை மனிதர் உண்ணக்கூடியவை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பாதையில் அந்த வகையான பெர்ரிகள் ஏராளமாக தென்பட்டன. நீல நிற பில்பெர்ரிகள், மஞ்சள் நிற பெர்ரிகள் (Rowan), சிவப்பு பெர்ரிகள் (Cloudberry, Crowberry, Cranberry) போன்ற பல வகையான பெர்ரிகள் தென்பட்டாலும் கருப்பு பெர்ரிகள் பொதுவாக சுவை மிகுந்தவை. இருபது மைல்கள் கொண்ட பாதையில் எங்கு சைக்கிளை நிறுத்தினாலும் கைக்கெட்டும் தூரத்தில், முட்களோடு இப்பெர்ரிகள் முது வேனிற்காலத்தில் ஆரவாரித்தன.

 


நானும் சக நண்பரும் ஓரிரு நிமிடங்களில் பெரிய பீங்கான் குப்பியில் நிரப்பிவிடக்கூடிய அளவிற்கு கருப்பு பெர்ரிகளைப் பறித்துவிட்டோம். பின்னர் செப்டம்பர் வாரங்களிலும் நிறைய பறிக்கக் கிடைத்தது.

திரும்ப வீட்டிற்கு வந்து நன்கு கழுவி விட்டு அவ்வப்போது கொறிக்க வைத்துக் கொள்வேன்.

இந்தியாவில் வாழும்போது பனம் பழம் அல்லது இலந்தை அல்லது வேறு பழங்கள் பறித்து தின்னல் போன்ற கிராம வாழ்க்கைக்கான அனுபவம் அமையவில்லை. மேட்டில் சைக்கிளை மிதிக்கையில், வழியெங்கும் பெர்ரிகளைப் பார்த்துக்கொண்டே வருகையில் அவற்றை நினைத்துக்கொண்டே வந்தேன்.

ஆனால், வழியில் பண்ணைகளை கடக்கும்போது ஓரிரு முறை சேவல்கள் கூவும் ஒலி கேட்டோம், குதூகளித்தோம்!

வழியில் அவ்வப்போது பெரும் பண்ணை வீடுகள் படும். பெயர்களும் வித்தியாசமாக இருக்கும். இல்லாவிட்டாலும் நானே வித்தியாசப்படுத்திக் கொள்வேன்.  ESK house எனும் எசக்கியின் இல்லம் எனக்கு ஓர் குறிப்பிட்ட மைல்கல்.

நீர்த்தேக்கத்தை (402  ஹெக்டர் பரப்பளவு) சுற்றி வரும் பாதையில் ஓரிடத்தில் நீர் தேக்கத்தின் கரையில் எதிர்படும் பாலத்தில் பயணத்தை நிறுத்தி இளைப்பாறுவது வழக்கம். ஒரு முறை வாழைப்பழத்தை உரித்துக்கொண்டே பாலத்தை ஒட்டிய கம்பிகள் வைத்த சுவற்றின் நானும் இன்னொரு நண்பரும் சாய்ந்து கொண்டு நீர்த்தேக்கத்தைப் பார்த்தோம். கரையின் ஓரத்தில் வரிசையாக அமர்ந்திருந்த கருப்பு கழுத்து வாத்துகள் சப்தங்கள் எழுப்பிக்கொண்டே ஒரு சேரப் பறந்து நீர்த்தேக்கத்தினுள் சென்று மீண்டும் அமர்ந்தன. ஓர் நீள கறுத்த மணி மாலை உரத்த சப்தங்களுடன் பறந்து போவதைப் போன்று இருந்தது.

அவைகளுக்கு எதிரே இன்னும் சற்று உயரத்தில் பெரு கொக்குகள் பெரும் V வடிவில் சப்தத்துடன் பறந்து கடந்து சென்றன

சட்டென சென்ற சனிக்கிழமை விஷ்ணுபுர நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த தியோடர் பாஸ்கரன் அவர்களின் இணைய வழி உரையாடல் நினைவிற்கு வந்தது.

தியடோர் பாஸ்கரன் சந்திப்பு

இயற்கையைப் பற்றி, கவனித்தலைப் பற்றி எழுத எப்படி ஆர்வம் ஏற்பட்டது எனும் கேள்விக்கு, 1967, ஒரு டிசம்பர் அதிகாலை 5:30 மணியளவில் திருச்சிக்கு அருகிலுள்ள ஓர் ஏரியில் பறவைகளைக் காண அமர்ந்திருந்த போது பனி மூட்டத்தினுள் பெரு வாத்துக்கூட்டம் (Bar headed goose) ஒன்று சப்தங்களுடன் வந்தமர்ந்த தருணம் அபார அனுபவமாக இருந்தது என்றும் அதைப் பற்றி எழுதிய அனுபவமே தனக்கு மேலும் எழுத தூண்டுதலாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பெரு வாத்துகள் வானில் மிக அதிக உயரங்களில் பறக்கக்கூடியவை – 7,000 மீட்டர்களுக்கும் மேல் (23,000ft) உயரத்தில் காணப்பட்ட ஆவணங்கள் இருக்கின்றன.

டென்சிங், எட்மண்ட் ஹிலாரி குழுவின் ஒருவரான ஜார்ஜ், இப்பறவைகள் எவரெஸ்ட் சிகரத்தின் மேல் பறந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

ஓர்அதிகாலையில் ஏரியின் அருகில் இப்பெரும் வாத்துகளை கண்ட சந்தர்ப்பம் எத்தகைய அபார மனக்கிளர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதை ஓரளவிற்கு உணர முடிந்தது.

இந்த கருப்பு கழுத்து வாத்துகளுடன் வேறு ஏராளமான வாத்துகளும் கொக்குகளும் சிறு குருவிகளும், மேக்பைகளும் நீர் த்தேக்கப் பரப்பில் உலவிக்கொண்டும் பறந்துகொண்டும் இருந்தன. அவைகளுக்கேயான தனி பிரபஞ்ச உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன.

கறுப்பு கழுத்து வாத்து என நான் குறிப்பிட்டிருந்தாலும் அவை வாத்து என்பதற்கான என் மனபிம்பத்திலிருந்து சற்று மாறுபட்டிருந்தன. மொபைல் போன் காமிரா கண்களின் வழி கவனித்தபோது அவற்றின் சிறு கண்கள் மோதிரத்தில் பொதிந்த பவழங்கள் போலிருந்தன – வீட்டிற்கு திரும்ப வந்து இணையத்தில் தேடியபோது அவை black necked Grebe எனப்படும் வாத்து வகை என அறிந்தேன்.

கொஞ்சம் ஆர்வம் கொண்டு கவனித்தாலே போதும், நம்மால் இது போல் நம்முடன் இருக்கும் ஆனால் நாம் உணரா இன்னொரு உலகை சற்றேயாயினும் கண்டுகொள்ள இயலும். காலின் இல்போர்ட் எனும் ஆங்கிலேய வனப் பாதுகாவலர் கானுறை வாழ்க்கையைப் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்-

இயற்கையை/கானுலகை கவனிக்கும் வழக்கம் உங்களை நிதானப்படுத்தும்; ஆச்சரியப்படுத்தும், வாழ்க்கை எனும் இப்பெரிய விஷயத்தை உங்களுக்கு அடையாளம் காட்டும், உங்களின் சிறிய, ஆனால் மிக முக்கிய பங்கைப் பற்றி யோசிக்கவைக்கும், என்று.

நம் இலக்கியங்களில் இயற்கையைப் பற்றிய விலங்குகள் பறவைகள் பற்றிய சித்திரங்கள் திகைக்க வைக்கும் அளவிற்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இளம் வயதில், பொம்மைத் துப்பாக்கியைக் கொண்டு சுட்ட குருவியின் கழுத்து வித்தியாசமாக, மஞ்சளாக இருப்பதைக் கவனித்து அதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து வாழ்க்கையே பறவையியலாக மாறிப்போன சலீம் அலியின் கதையை நாம் அறிவோம்.

நம் அனைவருக்கும் ஒரே வழி இல்லைதான். ஆனால் அனைவரின் வழியெங்கும் பல வகையான பெர்ரிகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஏதாவது ஒரு தருணத்தில், திருப்பத்தில் கவனித்துவிட்டால் போதும்…

***

இப்படியாப்பட்ட ஓர் சனிக்கிழமை மதியத்தில் பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து போனில் தகவல் வந்தது. எங்கள் வீட்டு தோட்டத்திலிருந்து செடிகள் அவரது தோட்டத்தில் படருகின்றன. வெட்டுவதில் ஆட்சேபணை உண்டா என்று கேட்டு. இல்லை என்று சொல்லிவிட்டேன். மாலை அவர் ஒரு தகவலும் படமும் அனுப்பியிருந்தார். “உங்கள் தோட்டத்திலிருந்து கரும் பெர்ரி செடிகளும் எங்களது தோட்டத்தில் படர்ந்திருக்கின்றன. அருமையான சுவை..!”

லூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்

லூயி க்ளூக்கின் எழுத்தை தான் எந்த அளவு நேசிக்கிறேன் என்பதை ஐரிஷ் கவிஞர் ஈவன் போலாண்ட் 2008 ஆம் ஆண்டு, ஸ்டான்ஃபோர்டில் என்னிடம் சொன்னார். அவர் தனது அலுவலறை புத்தக அடுக்கிலிருந்து க்ளூக்கின் கவிதை நூல்கள் சிலவற்றை எடுத்து எனக்குத் தந்தார்.

அன்று இரவு நான் அவரது கவிதை ஒன்றின் முதல் வரிகளை வாசித்தேன்:

“நீ உயிர்த்திருக்க நான் துயில்கிறேன்.
இது இவ்வளவு எளிய விஷயம்.
கனவுகள் அவையளவில் ஒன்றுமில்லை.
அவை நீ கைக்கொண்டாளும் நோய்மை,
அதற்கு மேல் ஒன்றுமில்லை.”

“ஒரு துக்க கனவு,” என்பது கவிதையின் தலைப்பு. மிக ஆழமான அந்தரங்க உணர்வும் வித்தியாசமான வகையில் உச்சத்துக்கு உயர்ந்ததும் தொன்மத்தன்மை கொண்டதுமானதன் கலவை, அதன் கச்சிதமாய்ச் செதுக்கப்பட்ட, காயப்பட்ட தொனி என்னைத் திகைக்கச் செய்தது.

எமிலி டிக்கின்சன் பற்றிய கட்டுரை ஒன்றில் க்ளூக் எழுதினார்: “தனிமனித அதிகாரத்தைத் துறக்காமல் ஒற்றை வாசகரிடத்தில் இந்த அளவு நம்பிக்கை வைப்பதில் இவ்வளவு வெற்றி காணும் படைப்புத் திரளொன்றை நினைத்துப் பார்ப்பதும் கடினம்.” டிஎஸ் எலியட் கவிதை குறித்து க்ளூக்கின் அவதானிப்பு: “நுண்ணுணர்வு கொண்ட வாசகர்களில் பலர் எதிர்க்குரல் எழுப்புவது குறித்த என் ரசனையைப் பகிர்ந்து கொள்ளாதவர்களாய் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.” கவிஞர் ஜார்ஜ் ஓப்பன் குறித்து எழுதும்போது க்ளூக், “வெற்றிடத்தின் மேதை; கட்டுப்படுத்திக் கொள்ளுதல், பக்க அணிமை, நுட்பங்கள், இவற்றைக் கையாள்வதில் வெற்றி கொண்டவர்,” என்று விவரித்தார்.

க்ளூக்கின் எழுத்து குறித்தும் இதை எல்லாம் சொல்லி விடலாம். அவரது கவிதைகள் நெறிப்படுத்தப்பட்டவை, மிக அதிக அளவில் ஆற்றல் கூட்டப்பட்டவை, கட்டுப்படுத்தப்பட்டவை என்றாலும் தம்மை வெளிப்படுத்திக் கொள்பவை; எதிர்க்குரல் எழப்புவது குறித்து அச்சமற்றவை என்றபோதும் ஒருவேளை அது குறித்த பீதி கொண்டும் இருக்கக்கூடும். “நிறைவடையாதவற்றின் ஆற்றல் பூட்டிக் கொள்வது,” குறித்து அவர் விவரித்திருக்கிறார், படைக்கப்பட்ட அந்த முழுமையான ஒன்று, அதே வேளை தன்னில் நிறைவடையாது நிற்பதன் சக்திகரமான இருப்பை இழக்காதிருப்பது: “பூரண வடிவம் பெற்றது போல் தோன்றும் கவிதைகளை நான் வெறுக்கிறேன், அவை மிக இறுக்கமாய் பூட்டப்பட்டிருக்கின்றன; தீர்மானமான முடிபினுள் மந்தையில் ஒன்றெனச் செலுத்தப்படுவதை வெறுக்கிறேன்.”

அவரது கவிதைகள் ஏதுமற்ற வெளியைத் திறந்து கொடுக்கின்றன. அவரது கவிதைகளின் ஒலிகள் துவக்கத்தில் தம் சந்தங்களிலிருந்து தயக்கத்துடன் வெளிப்படுகின்றன, பின்னர் தீரத்துடன், சில சமயம் சினந்து. உண்மை உரைக்கத் துணியும்போது எத்தகைய தொனியைக் கைக்கொள்ள வேண்டும் என்பதனை க்ளூக் அறிந்திருக்கிறார். மெய்ம்மையில் மிகக் குறைவே சொல்லுக்குரியது என்ற நாசகர, அதே சமயம், ஆற்றல் சேர்க்கும் பிரக்ஞை கொண்டவர் அவர், அதன்பின் குரலெழுப்பும் முயற்சியில் இருள் சக்தி எத்தனை வெளிப்படுகிறது என்பதையும் அவர் அறிவார். அவரது கவிதைகளில் தொனி நிறுத்தி வைக்கப்படுகிறது, வெளிப்பட அனுமதிக்கப்படுகிறது. அவரது ஆக்கங்கள் குரல் நிறைந்தவை, கடினமான பின்விளைவை, அல்லது, ஆன்மாவின் வடிவத்தை, கண்டறியவே அவர் புறப்பட்டது போல, பெரும்பாலும் இக்குரல் அடங்கி ஒலிக்கிறது, தாழ்குரலில் பேசுகிறது.

க்ளூக்கின் மாபெரும் திறமை குறித்தும் அவரது குரலின் தீரம் குறித்தும் உணர்த்தும் அவரது கவிதையொன்று உண்டென்றால், அது அவரது ‘தி வைல்ட் ஐரிஸ்’ தொகுப்பின் முதல் கவிதைதான். அது இப்படி துவங்குகிறது:

“என் வாதைகளின் முடிவில்
கதவொன்றிருந்தது.”

இந்தப் படிமம் தனக்குள் பல ஆண்டுகள் இருந்ததென அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன், அதற்குரிய இடத்தை அவர் பின்னரே கண்டு கொண்டார். அந்தப் புத்தகத்தில் உள்ள கவிதை வரிசையில், க்ளூக் சுத்திகரிக்கப்பட்ட மொழியில் இயற்கையைப் பின் தொடர்கிறார், அவரது குரல் இரக்கத்தாலும் அதிசய உணர்வாலும் நிறைந்திருக்கும் அதே சமயம் ஆற்றல் மற்றும் உழைப்பின் உணர்வும் கொண்டுள்ளது. இவ்வுலகம் வேதனை மற்றும் அதிசய உணர்வுகளுக்கு இடையே நிககும் போராட்டம் என்ற சித்திரத்தை அவரது கவிதைகளில் நாம் காண்கிறோம். இதன் பயனாகவே அவரது கவிதைகள் உருவம் பெற்றன என்ற எண்ணமும் எழுகிறது, துல்லியமான, ஆனால் அதே சமயம் உணர்த்து தன்மை கொண்ட சொற்களுக்கும், ஒலிநயம் மிக்க, ஆனால் அதே சமயம் பூச்சுக்களற்ற நேரடித்தன்மை கொண்ட சொற்றொடர்களுக்கும் க்ளூக்கின் கற்பனையினுள் நிகழ்ந்த போராட்டத்தின் விளைவுகள் என்று தோன்றுகிறது.

வாழும் கவிஞர்களில் வேறு எவரது குரலிலும் இத்தனை உயிர்ப்புத்தன்மை கொண்ட உள்நீரோட்டமும் இவ்வளவு கட்டுப்படுத்தப்பட்ட சந்தங்களும் இருந்தபோதும் இந்த அளவு தம்மை வெளிக்காட்டிக் கொள்ளும், அவசர உந்துதல்கள் கொண்ட ஆக்கங்கள் இருக்குமென்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

நன்றி: The Guardian