Author: பதாகை

அன்பும் அறனும் உடைத்தாயின்- செந்தில்குமார் சிறுகதை

டோக்கியோவிலிருந்து நான்கரை மணி நேர பயணத்தில் மட்சுமோத்தோ வந்தடைந்தாகிவிட்டது. இடையில், இரண்டு முறை ஹைவே பார்க்கிங்கில் நிறுத்தி தேனீர் அருந்தியிருந்தேன். மட்சுமோத்தாவிலிருந்து தக்காயமா மலைக்கு செல்லும் வழியில் விரைந்துக்கொண்டிருந்தது கார். இரு பக்கமும் மலை சரிவில் மேப்பிள் மரங்களின் இலைகள் பழுத்து சிவப்பு நிறமாக மாறத்தொடங்கியிருந்தது. நவம்பர் மாதத்திற்க்கான குளிர், பசுமையான மலையில் ஏறத்தொடங்கியவுடன் இன்னும் அதிகமானது. காரின் வெப்பமூட்டும் கருவியில் இன்னும் வெப்பத்தை ஏற்றினேன்.

டோக்கியோவிலிருந்து கிளம்பும்போது எந்த திட்டமும் இல்லை. திருமணம் போன்ற பந்தங்கள் இல்லாது இருப்பதின் வசதிகள் இவை. ஆனால், இப்போதெல்லாம் தனிமை அலுத்துபோனதாய் ஒரு உணர்வு. மட்சுமோத்தோவின் அழகு கவனத்தை கலைத்தது. விடிகாலை பெய்த மலையில் மரக்கிளைகள் எங்கும் நனைந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது. இங்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. சென்றமுறை வந்தபோது சிவா கூட வந்திருந்தார்.

சிவாவை எங்கே முதலில் சந்தித்தோம்? தோக்கியோ அருகே இருக்கும் சிம்பாசி ரயில் நிலையத்தில், ஒரு திங்களன்று காலை, விபத்தால் ரயில்கள் நின்றுபோய் அலுவலகத்திற்க்கு தாமதமாக வருவதாக செய்தி அனுப்பியபடி நின்றபோது அருகில் வந்தார்.

நீங்க தமிழா?

பெரும்பாலும், இப்படி விசாரிப்புகள் வருவதில்லையே!. கையில் வைத்திருந்த கரையும் நிழல்கள் புத்தகம் ஞாபகத்தில் வந்து, புன்னகைத்தேன்.

என் பெயர் சிவநேசன். மலேசியாவிலிருந்து வந்திருக்கேன். இங்கே வந்து இரண்டு மாசமாயிடுச்சு இன்னும் ஒரு மணி நேரம் டிராவல் செஞ்சு ஆபிசுக்கு போகணும். என்ன இப்படி திடீர்ன்னு ட்ரெயன் நின்னுடுச்சு?

ஓ இர்ண்டு மாசமா இப்படி நடக்கலையா?

இல்லையே? ஏன்?

இல்லை. யாரோ ஒரு நபர், ட்ரெய்ன் முன் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டார். இனி, பாடி எடுத்து முடிக்கிற வரைக்கும் ட்ரெய்ன் போகாது.

ஏன், இப்படி செஞ்சுகிட்டாரு? கேட்டபின் அந்த கேள்வி என்னிடம் கேட்பதின் அபத்தம் புரிந்து, புன்னகைத்தார்.

வாங்கண்ணே கோப்பி சாப்பிடலாம், என்றார் இருவரும் அருகிலிருந்த காபி ஷாப்புக்குள் நுழைந்தோம். வசதியான ஒரு மூலையில் இடம் கிடைத்தவுடன், அவரே இருவருக்கும் கப்புசீனோ வாங்கி வந்தார்.

திங்கள்கிழமையே இப்படி ஆயிடுச்சே?

பெரும்பாலும் திங்கள்கிழமைகளில்தான் இப்படி விழுவார்கள். போன வெள்ளி மாலை வேலை இழந்திருக்ககூடும். இன்று காலை, வீட்டிலிருந்து எப்போதும் போல் அலுவலகத்துக்கு கிளம்பி, ஸ்டேசன் வந்தவுடன், செல்லுமிடம் ஒரு பெரிய கேள்வியாக முன்நிற்க, ரயில் முன் பாய்ந்துவிடுவார்கள்.

ஆனால், இது ஆயிரக்கணக்கான நபர்களுக்கு இப்போ பிரச்சினையாயிடுச்சே அண்ணே?

ஏதோ, சமூகத்தை முடிந்த வகையில் பழிவாங்கிட்ட திருப்தி அவருக்கு கிட்டும்தானே.

புன்னகைத்தார், சிவநேசன். ஆனா ஒரு வேலை போனால் என்ன ஆகிவிடபோகிறது? இதற்க்கெல்லாம் தற்கொலைதான் தீர்வா? என்ன முட்டாள்தனம் இது?

இல்லை ஒரு வேலை போனதால் தற்கொலை இல்லை. ஏதோ ஒரு வகையில் நாம் இந்த சமூகத்துக்கு பொருந்தவில்லை என்று நினைக்கிறார்கள். அதுதான் அவர்களை இந்த முடிவுக்கு துரத்துகிறது. தவிர, தங்களுடைய எஜமானை காப்பாற்ற முடியாமல் தோல்வியைத் தழுவிய சாமுராய்கள் வயிற்றை கிழித்துக்கொண்டு உயிர் இழக்கும் அராகிரி போன்ற உதாரணங்களும் இவங்க வரலாற்றில் இருக்கு.

சிவா, தொடர்ந்தார். எனக்கு என்னவோ, நம்மளை மாதிரி ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை வர்றதில்லைன்னு தோணுது. நம்மாள ஆனதை செஞ்சோம், அப்படியும் விழுந்துட்டோமா? அது தலைவிதி என்று போட்டுட்டு வாழ்க்கையை தொடர முடியும். இங்கே எல்லாத்துக்கும் நாமதான், நாம மட்டும் தான் காரணம்ன்னு நெனைக்கிறாங்க இல்லீங்களா?

இருக்கலாம் என்றேன் மையமாக.

சிவநேசன் மலேசியாவில் வாழும் நான்காம் தலைமுறை தமிழர். அவருடைய முன்னோர்கள் நாகப்பட்டினம் அருகே இருந்து மலேசியா சென்றவர்கள். சிவாவிற்கு வரலாறு குறித்து இருந்த ஆர்வம் என்னை நெருக்கமாக உணர செய்தது.

வாரவிடுமுறைகளில் சந்தித்தோம். சிவா ஒரு கைத்தேர்ந்த சமையல்காரர்.
வெள்ளி இரவுகளில் சாப்பிட அழைப்பார். செல்வதற்க்கு முன்பே சமையலை முடித்திருப்பார். மதுவுடன் அமருவோம். சிவா நிறைய குடிப்பதில்லை. இரண்டு ரவுண்டுகள் போனவுடன், பாடத் தொடங்கிவிடுவார். பெரும்பாலும் ராஜாவின் சோக பாடல்கள். சிலவேளைகளில் கண்ணீல் நீர் வழியுமளவிற்க்கு அந்த பாட்டின் சோகத்தில் ஆழ்ந்துவிடுவார். பொதுவாக, நல்ல உரையாடல்காரர். அவர் வளர்ந்த கம்பம், கள்ளுக்கடைகள், சண்டைகள் என உரையாடல் நீளும் இரவுகளில் அங்கேயே உறங்கிவிடுவேன். அதிகாலையிலே எழுந்து, குளித்து, பட்டையாக விபூதி பூசி, ”கற்பனை என்றாலும் கற்சிலையென்றாலும்” பாடலை உரக்க ஒலிக்க வைப்பதுதான் அவருடைய ஒரே பிரச்சினை.

அப்படி ஒருநாள் இரவு குடித்திருக்கும்போது, கேட்டார்.

ஏண்ணே, நீங்க இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலை?

ஷோபா நினைவில் எழுந்தாள். ஊரில் ஒரு காதல் இருந்துச்சு. பிறகு அது பிரியுறமாதிரி ஆயிடுச்சு. இனி இங்கேயே பார்த்துடலாம்ன்னு இருக்கேன்.

அட, ஜப்பானிய காதலி உண்டா? அதான் அண்ணே இவ்வளவு நல்லா இந்த மொழி பேசுறீங்க என்று சிரித்தார் சிவா
உண்மையில் ஷோபாவிற்கு பின் இந்த ஏழு வருட தோக்கியோ வாழ்க்கையில் ஏறக்குறைய காதல் போல் சில உறவுகள். எதுவும் நிலைக்கவில்லை. பீத்தோவனின் ஐந்தாம் சிம்பெனி, யமாசாக்கி விஸ்கி, நாவல்கள் என விடுமுறை நாட்கள் முடிவுபெறும். சிலவேளைகளில் இலக்கில்லாத பயணங்கள். நெருங்கிய நண்பர்களின் குடும்ப வாழ்க்கை எதுவும் உற்சாகமூட்டுவதாய் இல்லை. தனியாக வாழ பயந்து திருமணம் செய்துக்கொண்டு, பின்பு அப்படி செய்துக்கொண்டதாலயே வெளி இழந்து, அதிலிருந்து விடுவித்துக்கொள்ள துடிக்கும் நபர்கள் கலவரத்தைதான் ஏற்படுத்தினார்கள்.

”கவர் பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக்கொண்டே
ஆப்பதினை அசைத்திட்ட குரங்கதனைப் போலே”

கதைதான்.

அந்த வருட விடுமுறைக்கு மலேசியாவிலிருந்து அவரது குடும்பம் வந்திருந்தது. ஒரு நாள் சாப்பிட கூப்பிட்டிருந்தார். சிவாவின் மனைவி, நீல நிற ஜீன்ஸ் , மேலே வெள்ளை டாப்ஸ் போட்டிருந்தார். கழுத்தை சுற்றி மப்ளர் போல் போட்டிருந்த சால். வெளியே வந்து, வாங்கண்ணா என்றார். ப்ரியாவின் கண்கள் பெரியவை. சுருள் கேசம், அழகான சிரிப்பு. மலேசியாவின் வங்கி ஒன்றில் பணிபுரிவதாக ஏற்கனவே சிவா சொல்லியிருந்தார். ப்ரியா, ஒவ்வொரு வார்த்தைக்கும் புன்னகைத்தார். சிவாவின் மகன் அரவிந்த் ஓடிவந்து அம்மாவின் காலை பற்றிக்கொண்டு நின்றான். அம்மாவை போலவே லட்சணம். சமையல் சிவா செய்தது போலவே சுவை.

குடும்பம் அங்கிருந்த இரண்டு வாரமும் சிவா விடுமுறையெடுத்து ஊர் சுற்றி காண்பித்தார். இருந்த ஒரே நண்பரும் குடும்பத்தோடு ஐக்கியமாகிவிட , அந்த விடுமுறையில் நான் மட்டும் தனியாக சுற்றிக்கொண்டிருந்தேன்.

சிவாவின் மனைவியும், பிள்ளையும் ஊருக்கு திரும்புவதற்கு முதல் நாள், நான் ஒரு இந்திய உணவகத்திற்கு அழைத்திருந்தேன். இருவரும் ஒரே நிறத்தில் உடையணிந்து வந்தனர். ப்ரியாவின் கைகளை கோர்த்துபிடித்திருந்த சிவா, திருமணமாகி ஏழெட்டு வருடங்களுக்கு பிறகும், தனது காதலியை பிரிவதைபோன்ற பரிதவிப்பில் இருந்தார்.

என்ன சிவநேசன், விட்டா நீங்களும் ப்ரியாவோட ப்ளைட் ஏறிடுவீங்க போல இருக்கே?

வெட்கத்துடன் சிரித்தார் சிவா.

”அண்ணா, நீங்களும் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்குங்க. அப்புறம் தெரியும்” என்றார் ப்ரியா.

பிறகு சில மாதங்கள் கழித்து அலுவலகத்தில் இருக்கும்போது, எண் இல்லாது ஒரு அயல் நாட்டு போன் கால் வந்தது. எடுத்தவுடன்,

”அண்ணா, அண்ணா நான் ப்ரியா பேசுகிறேன் “ என்றார். குரலில் தெரிந்த பதட்டம் என்னையும் தொற்றிக்கொண்டது.

சொல்லுங்க, ப்ரியா.. என்ன விஷயம்?

அழத் தொடங்கினார். தயவு செய்து அழாதீங்க. என்னாச்சுன்னு சொல்லுங்க

”அண்ணா, அவருடைய அலுவலகத்திலிருந்து போன் வந்தது. அவர் விபத்தில் செத்துட்டதா சொல்லிட்டு கட் செஞ்சுட்டாங்க. அவருடைய அலுவலக நண்பர்கள் யாரும் போன் எடுக்க மாட்டேங்குறாங்க. இங்குள்ள அலுவலகத்தில் கேட்டால் ஹெச் ஆர் யாரிடமும் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள் என்கிறார்கள். எனக்கு ஒன்னுமே புரியலைண்ணா” என்றார் கேவி அழுதபடி.

நடுக்கத்துடன் அலுவலகத்தில் விடுமுறை சொல்லிவிட்டு உடனடியாக அவர் இருந்த வீட்டுக்கு சென்றேன். வீடு பூட்டீயிருந்தது. எத்தனையோ முறை சென்ற வீடு, அன்றைக்கு புதிதாக துக்கவீட்டுக்கு உரித்தான சவக்களை பூசியிருந்தது. வீட்டு வாசல் முழுவதும் உள்ளே வர கூடாது என்கிற மஞ்சள் நிற டேப் போட்டு சுற்றி வைத்திருந்தார்கள், காவல்துறையினர். வீட்டின் அருகே நின்று மூடியிருந்த சன்னலை உற்று நோக்கினேன். நிலவும், மலரும் பாடுது என்று கண்களை மூடி லயித்து பாடும் சிவநேசன் மனதில் தோன்றினார். பால்கனியில் காய்ந்த அவரது சாரம் காற்றிலாடியது. அருகிலிருக்கும் யாரையும் தெரியாது. இந்த ஊரில் வேறு எப்படியும் தகவல்கள் சேகரிக்க முடியாது. அருகிலிருக்கும் வீட்டுக்கார்களோ, தெருவில் இருப்பவர்களோ யாரும் பேச மறுப்பார்கள்.

அவரது அலுவலகம் குத்துமதிப்பாக தெரியும். ஆனால் அங்கு சென்ற போது எதுவுமே சொல்ல மறுத்தார்கள். அவரது உறவினர்களிடம் மட்டும்தான் பேசுவோம் என்றார்கள். திரும்ப நடந்தபோது, ப்ரியா போன் செய்தார். ”அண்ணா, அவர் ட்ரெய்ன்லே விழுந்துட்டாராம் அண்ணா”..என்றார். திடுக்கிட்டேன்.

இணையத்தில் தேடியதில், சிம்பாசி ரயில் நிலையம் அருகே, இந்தியர் ஒருவர் ரயில் முன் பாய்ந்த தகவல் தெரியவந்தது. நண்பர்களிடம் விசாரித்தால், அது சிவாதான். நாங்கள் இருவரும் முதன்முதலாக சந்தித்த அதே சிம்பாசி ரயில் நிலையத்துக்கு அருகேதான் சிவநேசன் ரயில் முன் பாய்ந்துள்ளார். ஏன் இப்படி செய்தார்? வேலையில் எதுவும் சிக்கலா? வேறு என்ன குழப்பம் என்று எதுவும் புரியவில்லை. அதற்குள் பலமுறை ப்ரியா போன் செய்தபடியே இருந்தார். பாடி ரீசிவ் செய்ய அங்கே வருவதாக இருந்தால் ஏற்பாடு செய்கிறோம். இல்லையென்றால், நாங்களே மலேசியா அனுப்பிவிடுகிறோம் என்று சொன்னதாக கூறினார். தைரியமாக இருங்கள். என்னாலான வகையில் எல்லா உதவிகளையும் செய்கிறேன் என்றேன். மலேசிய தூதரகம் மூலம் மூன்று நாட்கள் கழித்து சிவநேசன் மலேசியாவுக்கு அனுப்பபட்டார்.

என்ன நிகழ்ந்தது? ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்? அரவிந்த என்ன ஆவான்? இப்படி எந்தகேள்விக்கும் விடையில்லை. இரவு தூக்கத்தில் சிவா சோகமாக ”இதயம் ஒரு கோவில்” பாடினார். கூடவே ப்ரியாவின் பெரிய கண்கள். திடீரென்று விழிப்பு வந்து எழுந்தமர்ந்தேன். தண்ணீர் குடித்து வந்து தூக்கம் பிடிக்காமல் கணிப்பொறியை துளாவினேன். முகநூலில் சிவநேசனின் பக்கம் கண்ணில் பட்டது. முதல் பக்கத்தில் சிவநேசனின் கைகளை பிடித்துக்கொண்டு ப்ரியா நின்றிருந்தார். இறுதியாக சிவ நேசனின் முகநூல் நடவடிக்கைகள் தெரிந்தன. சிவாவின் கடைசி நாளில் ”ஒரு உண்மை சொல்லவேண்டும்” என்கிற ஒரு முக நூல் ஐடியின் நட்பு அழைப்புக்கு செவி சாய்த்திருந்தார்.

தக்காயாமாவின் உச்சிபகுதிக்கு வந்துவிட்டதை, தனித்திருந்த வீடுகள் ஞாபகபடுத்தின. காரின் வேகத்தை மட்டுப்படுத்தினேன். வலதுபக்கம் கார்கள் நிறுத்துவதற்கான இடமிருந்தது. அங்கு காரை நிறுத்திவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்தேன். எனக்கு நேர் எதிரே இருந்த பழைய மரவீடு கவனம் ஈர்த்தது. தோட்டத்தில் வளர்ந்திருந்த ஜப்பானிய ககி மரத்திலிருந்து ககி பழங்களை ஏணியில் ஏறி பறித்துக்கொண்டிருந்தார் ஒரு முதியவர். முதியவருக்கு எப்படியும் எண்பது வயதிருக்கும். காக்கி நிற சட்டையும் பழுப்பு நிற பேண்டும் அணிந்திருந்தார். பேண்ட் உடன் இணைத்த நாடா சட்டை மேல் குறுக்காக இணைந்திருந்தது. ஏணியை பிடித்துக்கொண்டிருந்த அவரது மனைவி, கிழவர் சொன்ன ஏதோ ஒரு ஹாஸ்யத்துக்கு, ஒரு கையை இடுப்பில் ஊன்றியபடி ரசித்து சிரித்தார்.

சக்குராப் பூக்கள் உடைத்த முட்டை – சிவசக்திவேல் சிறுகதை

காலையில் இருந்த தெம்பு நிறையவே குறைந்து போயிருந்தது. “இன்னுமா லைன்ல நிக்கிறீங்க“. வீட்ல இருந்து போன். “நகரவே இல்லப்பா. அங்கே தான் இன்னும் நிக்கேன். ” என்று சொல்லி மீண்டும் ஒருமுறை கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். எத்தனையோ முறை பார்த்தாகிவிட்டது. “இன்னுமாப்பாஎன்று சொல்லி ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகிற சத்தத்துடன் சிரித்தாள். அவளுடைய டிரேட் மார்க் சிரிப்பு.

வீட்டுக்கு வந்து கத்தரிக்காய் குருமா வச்சி மாவு பிசைஞ்சு பூரிக்கு உருட்டி போட்டு எடுத்துருக்கு. இன்னுமா நகரல“.

ஆமாம்மா. மெது மெதுவா ஊர்ந்து போகுது

த்து மணிக்கு ஆரம்பிச்சுடுவாங்க. இது இண்டியன் ஃபங்ஷன் கிடயாது. சீக்கிரம் கிளம்புங்க என்று மறுபடி மறுபடிச் சொல்லி காலையில் வீட்டை விட்டுக் கிளப்பினேன். தூரமொன்றும் அதிகம் இல்லை. எதிர் வீட்டின் கொல்லைப்புறம் வழியாகச் சென்று பின்னால் இருக்கும் வேலிக்காட்டைக் கடந்தால் வரும் திடலில் தான் விழா நடக்கிறது. காரில் சென்றால் சுற்று வழி. ஒரு மைல் தூரம் இருக்கும். வண்டியை நிறுத்தி நடக்கவேண்டிய தூரமும் அதிகம்.

எதிர் வீட்டுக்காரர் ராதுல் கட்டுமானத் தொழில் நடத்துபவர். வேலிக்காட்டுக்குள் வழியாக நடந்து செல்ல வசதியாக மரக்கட்டைகளால் பாதை போட்டிருக்கிறார். பாதையின் வலதுபுறம் குளமொன்று உள்ளது. இடது புறம் தான் அந்தக்காடு. குடியிருப்பின் சில குழந்தைகள் சைக்கிளில் வந்து வண்டியை ராதுல் வீட்டில் நிறுத்திவிட்டு இந்த வழியாகத்தான் திடலைத் தாண்டி பள்ளிக்கு நடந்து செல்வார்கள்.

எனக்குத் தெரிந்தவர்கள் நான் இங்கு புதிதாய் குடியேறியபோது ராதுலின் இந்தப் பாதையைப் பற்றி சிலாகித்தனர். கைக்காசை இப்படி யார் செலவழிப்பார்கள்? காசு கொடுத்து அந்தரங்கம் வாங்கும் அமெரிக்காவில் கைக்காசைக் கொடுத்து அந்தரங்கத்தையும் பறிகொடுக்க என்ன தேவை இருக்கிறது? கொல்லையை ஒட்டிய குளத்தை பார்த்தபடியிருக்கும் ஒய்யாரமான பால்கனியை கட்டிய அவரால் ஒரு வேலி போட முடியாதா என்ன?

நாங்களும் ராதுலின் வீடு வழியாகத்தான் இன்று வந்தடைந்தோம். இத்திடல் இன்று வழமைக்கு மாறான உயிர்ப்புடன் தெரிகிறது. விழா ஏற்கனவே ஆரம்பித்து களை கட்டியிருந்தது. நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும்போது எங்களைத் தவிர பக்கத்தில் ஒரு குழு கால்பந்து விளையாடும். இவர்களைத் தவிர ஒன்றிரண்டு பேர் தனியாகவே நாயுடனோ நடந்து கொண்டிருப்பர். எப்பொழுதாவது திடல் பராமரிப்பாளர் வந்து மேற்பார்வை பார்த்துச் செல்வார். பெண்களையோ குழந்தைகளையோ சிறுவர்களையோ பார்க்கமுடியாது. ஆனால் இன்று கிரிக்கெட் திடல் முழுவதும் மக்கட்பெருவெளி. குடும்பம் குடும்பங்களாக மக்கள் அங்கும் இங்கும் நகர்ந்துகொண்டிருந்தனர். எங்கும் பூத்த முகங்கள். ஆரவாரங்கள் மிகுந்து இருந்தது.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கவுன்டி ஏற்பாடு செய்திருந்த முட்டைவேட்டைப் பெருநாள். கால்பந்துத்திடலில் வயதுவாரியாக பிரிக்கப்பட்டிருந்த வேலிகளுக்குள் வண்ண முட்டைகள் சீரற்று பரப்பப்பட்டிருந்தது. எங்கள் வீட்டு சிறுசு எச்சகச்சம் எச்சகச்சம்என்று பிரமிப்பைக் காட்டியது. எல்லைக்குக் கட்டியிருந்த வேலியைத் தொட்டு உள்ளே நுழைவதும் வெளியே வருவதுமாக இருந்தாள். வேலிக்குள் தன்னார்வலர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.

அரை மணி நேர இடைவெளியில் ஒவ்வொன்றாகத் திறந்துவிடுவதாக அறிவித்திருந்தனர். “ஏங்க, இன்னும் நேரம் இருக்குல. அதுக்குள்ள ஒரு ரவுண்டு சுத்திட்டு வந்துடலாம்ன்னு சொல்லி முதலில் நான் நிற்கும் இதே இடத்திற்குத் தான் வந்தோம்.

அப்போதும் இதே போல இங்கு பெரிய வரிசையாக மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். என்ன இங்கே நடக்கிறது என்று தெரிந்துகொள்ள கூட்டத்தை நோக்கி நடந்தோம். அருகே சென்றவுடன் ஒருவர் பலூன் ஊதி குழந்தைகளுக்கு ஊதிக்கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அவரைச் சுற்றி குழந்தைகள் கூட்டம் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தன. ஒரு சிறுவன் கையில் காற்றடைத்த வாளுடன் எங்களை வேகமாகக் கடந்து சென்றான்.

வரிசையில் நிற்கலாம் என்று வரிசையின் கடைசி வரை மெதுவாக நடந்ததும் டாட், இட்ஸ் எ பிக் க்யூ. கன் வீ கோ டூ ஃபேஸ் பெயிண்டிங்என்று எங்கள் வீட்டு பெருசிடமிருந்து ஒரு யோசனை வர அங்கிருந்து நகர்ந்தோம்.

அப்பாஆஆஆ. நல்லாயிருக்கா!” என்று துச்சலை முகத்தில் வரைந்த வண்ணத்துப் பூச்சியைக் காட்டி உற்சாகத்துடன் கேட்க சூப்பரா இருக்கும்மாஎன்று சொன்னேன். அவள் இன்னும் முழுநேரப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கவில்லை.

ஒரு தடவை முட்டைகளைப் பொறுக்கிவந்த பின்பும் பலூன்காரரைச் சென்று பார்த்தோம். அப்போதும் வரிசை குறைந்தமாதிரி தெரியவில்லை. எங்கள் வீட்டு குழந்தைகளின் சாப்பாடுத்தட்டு மாதிரி. ஒரு மணிநேரம் கழித்து வந்து பார்த்தாலும் சாப்பாடு குறைந்திருக்காது.

குழந்தைகள் ஆட்டைத் தடவிக்கொடுத்து பின் கண்ணாடிக்குள் சுருண்டிருந்த பாம்பிற்கு கை காட்டி ஹாய் ஹலோசொல்லிவிட்டு சிறிது நேரம் சறுக்குமரம் விளையாடினர். தீயணைப்பு வண்டியைச் சுற்றிப் பார்த்தனர். பின்னர் கொஞ்ச நேரம் சாகச வளையம் சுற்றல். விதுரன் நிறுத்தாமல் சுற்றும்பொழுது பக்கத்தில் நின்ற சிறுமி வளையத்தைத் தட்டிவிட்டு சிரித்தது. அவன் மீண்டும் தொடர்ந்தான். பின்னர் அறிவிப்பு கேட்டு முட்டை எடுக்க கூட்டமாய் விரைந்து சென்றனர்.

துச்சலை ஹாலோவீனுக்கு வாங்கிய பூசணிக்காயாய் வடிவிலான பிளாஸ்டிக் வாளியைக் கொண்டு வந்திருந்தாள். மூத்த பையனோ தலையணை உறையைக் கொண்டுவந்திருந்தான். அந்த வாளியிலும் தலையணை உறையிலும் நிறைய முட்டைகள் அள்ளி வந்தனர். “யொம்ப யொம்ப எக்ப்பாஎன்ற உற்சாகத்துடன். தூவப்பட்ட எல்லா முட்டைகளும் எடுக்கப்பட்டிருந்தன.

மணிகளை அள்ளி வைத்து தைத்த பை ஒன்றைக் குறிபார்த்து சிறிது தூரத்தில் சாய்த்து வைத்திருக்கும் பலகையில் உள்ள ஏதாவது ஒரு துவாரத்திற்குள் எறியவேண்டும். குடும்பத்தில் எல்லோரும் முயன்றோம். “அம்மா..நீ மட்டும் தான் வின்னர். உனக்கு ஒரு சர்ப்ரைஸ்என்று சிறுசு சேகரித்து வந்த முட்டைகளில் ஒன்றை எடுத்து நீட்டினாள். அம்மாவோ திடலில் ஒலித்துக் கொண்டிருந்த துள்ளல் இசைக்கு ஏற்றவாறு உடலை அசைத்து சில நடன அசைவுகளைச் செய்து பரிசை வாங்கினாள்.

இதைச் சாக்காக வைத்து முட்டைகளை கொட்டி கடைவிரித்து உடைக்க ஆரம்பித்துவிட்டனர். வழக்கம்போல் குப்பைக்குச் செல்லும் தரத்திலேயே வண்ண மிட்டாய்கள் இருந்தன. இரண்டு முறை கண்ணே மணியேவிற்கு மசியாமல் குரல் சற்று உயர்ந்த பின்னர்தான் முட்டைகள் வாளிக்குள் சென்றது.

கடைசியாக மீண்டும் பலுன் வரிசைக்கு வந்தோம். இன்னும் அதே நீளமான வரிசை. கடைசியாக போய் சேர்ந்துகொண்டோம். பெரிசு நண்பர்களுடன் விளையாடச் சென்றான். சிறிது நேரம் கழித்து ஏப்பா. இவ தூங்குற மாதிரி இருக்கா. இவள கூட்டுட்டு போய் நான் போய் சமச்சுட்டு இருக்கேன். நீங்க முடிச்சுட்டு வாங்கஎன்றுச் சொல்லி மனைவியும் கிளம்பிவிட்டாள். “ எனக்கு பட்டர்பிளைப்பா “ என்று சிறுசு சொல்லிவிட்டு டாட்டா காண்பித்தாள் .

வரிசையில் எனக்கு முன் நின்றிருந்த வயதான அமெரிக்கப் பெண்மணி தன் பேரனைக் கூப்பிட்டு வந்திருப்பார் போலும். அவனும் விளையாடிவிட்டு தண்ணீர் குடிக்க, நொறுக்குத் தீனி சாப்பிட என வந்து வந்து சென்றுகொண்டிருந்தான். “பாட்டி, நான் முடிவை மாத்திட்டேன். எனக்கு ரோபோ வேணும்என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

வானம் கூராப்பு போட்டிருந்தது. இதை வைத்து இந்தப் பெண்மணியிடம் ஏதாவது பேச ஆரம்பிக்கலாம் என்றெண்ணி மனதில் வார்த்தைகளை கோர்த்துக்கொண்டிருக்கும்போது பாட்டி என்னிடம் திரும்பி ஏதாவது சிம்பிளா பண்ணிக் கொடுத்தா வரிசை வேகமாக் குறையும்என்றாள். நானும் ஆமா.. குழந்தைங்க என்ன கேட்டாலும் பண்ணிக்கொடுக்குறார் போலஎன்று தொடர்ந்தேன். பாட்டிக்கு முன்னாலிருந்து ஒரு குரல் ஏதாவது பம்ப் வச்சி பண்ணலாம்லா. வாயை வச்சு எவ்ளோ ஊதுவாரு?. “.

எனக்குப் பின்னால் ஒரு தமிழ்க் குடும்பம் வந்து இணைந்தது. அந்தக் கணவர் தொலைபேசியில் இடத்தைப் போய்ப் பாருங்க முதல்ல. இவ்ளோ கொடுத்து அங்க வாங்கறதுக்கு போருர்ல ஓரளவுக்கு கம்மியா பாக்கலாம். இவன் யான விலை சொல்றான்“. கொஞ்சம் சத்தமாகவேப் பேசிக்கொண்டிருந்தார். “ஓ நீங்க தமிழா? ” என்று பேச்சுக் கொடுக்கலாம். ஆனால் ஏதோ தடுத்துக்கொண்டிருந்தது.

அப்பா!! ஐ நீட் டு கோ டு தி ரெஸ்ட் ரூம் என்று என் பையன் விதுரன் ஓடி வந்தான்.

கொஞ்சம் பார்த்துக்கிடுறீங்களா! வந்துடறேன் என்று பின்னால் திரும்பி அந்தப் பெண்மணியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினோம். வரும்போது ஒரு சிறு புன்னகையைக் காண்பித்து வரிசையில் இணைந்துகொண்டேன். “அப்பா , ஐ நீட் ஸ்வார்ட் “ என்று அவன் தேர்வை மூன்றாவது முறை சொல்லிவிட்டுச் சென்றான் .

சிறு நாய்க்குட்டி, உயரமான ஆரஞ்சு நிற ஒட்டகச்சிவிங்கி, நீண்ட காதுகள் உள்ள முயல், நீண்ட வாலுள்ள குரங்கு, தும்பி, வண்ணத்துப் பூச்சி, குதிரை என திடல் முழுக்க அவரது மூச்சுக்காற்று பல அவதாரங்கள் எடுத்து ஓடிக் களைத்திருந்தது. அந்த ஜீவன்களை நோக்கி குறிவைத்தபடியே இருந்த வேடனின் துப்பாக்கி வெடித்துச் சிதறியது. வாளேந்திய வீரர்கள் இந்த வேடனின் அழுகையை பொருட்படுத்தாது தீவிரமாக வாட்சண்டை புரிந்து கொண்டிருந்தனர். அந்த மூச்சு யாதுமாகி எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தது.

இப்போது நான் காத்து நிற்கும் இதே இடத்தில்தான் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் இரண்டு மணிநேரத்திற்கு மேல் நின்று விக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருப்பேன். என் இடதுபுறம் விக்கெட்டுகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் தெரிகிறது. கிரிக்கெட் விளையாடாத ஊரில் கிரிக்கெட் பிட்ச். குஜராத்கார்கள் விளையாடுவதற்காக கவுன்டியிடம் காசு கொடுத்து மண்ணும் கொடுத்து செய்தது. இரு திடல்களுக்கும் மத்தியில் உள்ள சிறிய குடோனில் மண் மூடைகள் அடுக்கி வைத்திருப்பர். பராமரிப்பாளரிடம் கேட்டு மண் வாங்கி கொட்டி இந்தப் பிட்சை பலமுறை சமன்செய்திருக்கிறோம்.

கே நானும் அப்ப கிளம்பி வரேன். இவளும் தூங்காம நசநசத்துட்டு இருக்காஎன்று மறுமுனையில் தொலைபேசியில் பேசியவள் மீண்டும் திடலுக்கு வந்தாள். அப்போதைவிட வரிசை நீண்டும் தடித்தும் இருந்திருந்தது. முப்பது வருட வீட்டுக்கடனில் ஐந்து வருடம் தவணை ஒழுங்காகக் கட்டியும் கடன் சுமை குறையாமல் இருப்பது மாதிரி வரிசையும் குறையவில்லை. அவளோ வந்தவுடன் வரிசையில் பின்னால் நிற்கும் ஒரு நட்புடன் நின்று கதையளக்க ஆரம்பித்திருந்தாள். கையில் கட்டியிருந்த ஆப்பிள் கடிகாரத்தை பலமுறை பார்த்தாச்சு. கடிகார முட்கள் மட்டுமே நகருகின்றன.

அஞ்சு டாலருக்கு இருபது பலூன் கிடைக்கும். ஆனால் இது மாதிரி விதவிதமா குழந்தைகள் கேட்கிறமாதிரி நம்மால் செய்ய முடியுமா என்ன? ஒரு பலுன்ல செய்ய முடியுற உருவங்கள்தான் செய்வேன் என்று இவரு சொல்லலாம். அஞ்சு பலுன் வரை வச்சு ஒரு வண்டு பண்றாரு. வாங்கிட்டு போற குழந்தைங்க முகத்த பார்க்கனுமே. அதுக்காகத்தான் அவர் இப்படி மினக்கெடுறாரோ.

திடலில் ஒலித்திருந்த பாடல் நிறுத்தப்பட்டு இன்னும் 15 நிமிடங்களில் விழா நிறைவடைகிறது.” என்று அறிவிப்பு வந்தது. மீண்டும் ஒரு துள்ளல் பாடல். அவரிடம் சென்று பலூன் வாங்கும்போது இரண்டு வார்த்தைகள் பாராட்டி கண்டிப்பாக பேசியாக வேண்டும். இதை மாதிரி மனிதர்களைப் பார்ப்பது அரிது. இப்படி வேலையாய் இருக்கும் அவரிடம் ரொம்ப நேரம் பேச முடியாது. நம்ம பாராட்டு கண்டிப்பாக அவருக்கு ஊக்கமாக இருக்கும்.

ஜனனித்த சில நொடிகளில் ஒரு ஆரஞ்சு நிற ஒட்டகச்சிவிங்கி மரணித்திருந்தது. அற்ப ஆயூள். நான்கு வயதுக் குழந்தைக்கு நேரக்கூடாத துயரம். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பதை சொல்லிப் புரிய வைக்க முடியாத வயது.

அந்த அம்மாவிற்கோ குழந்தை அழுபவதைவிட அவர்களை நோக்கியுள்ள கண்களின் கூர்மைதான் தர்மசங்கடமாக இருந்தது. குழந்தை கீழே உட்கார்ந்து காலை உதைத்து உதைத்து அழுகிறது. சில நிமிடங்களில் பலூன்காரரே ஓடி வந்து இன்னொரு சிவிங்கி கொடுத்துவிட்டு நிற்காமல் ஓடிவிட்டார். இந்த முறை அவளுக்கு கிடைத்தது மஞ்சள் வண்ணச் சிவிங்கி .

சரியாக ஒரு மணிக்கு நன்றி அறிவிக்கப்பட்டு விழா அதிகாரப்பூர்வமாக முடிக்கப்பட்டிருந்தது. ஒலிப்பெருக்கிகளும் அந்தப் பாட்டுப்பெட்டியையும் அதே பகுதியில் இருந்த பாம்புப் பெட்டியையும் அகற்றிக்கொண்டிருந்தனர்.

எனக்குப் பின்னால் இருந்தவர் அப்பொழுதும் தொலைபேசியில் தான் இருந்தார். அவர் இன்னும் நில பரிவர்த்தனை செய்துகொண்டிருந்தார். மனைவியிடம் கிளம்பலாம் என்ற தொனியில் கையைக் காண்பித்து குடும்பத்தைக் கிளப்பிக் கொண்டுசென்றார்.

ஆடு, கோழிகள் இருந்த அந்த பண்ணையும் வண்டியில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. சறுக்கு மரத்திலிருந்து காற்று புடுங்கிவிடப்பட்டது. இன்னும் கொஞ்ச மக்கள் முகப்பூச்சு நிலையத்தில் காத்திருந்தனர்.

கோல்ஃப் வண்டியைப் போன்ற வண்டியில் வந்து இறங்கியவர் பலுன்காரரிடம் ஏதோ பேசினார். பலூன்காரர் பதில் சொன்னவுடன் வண்டியில் வந்தவர் பக்கத்தில் உள்ள நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த கூடாரத்தை அகற்ற ஆரம்பித்துவிட்டார். முகப்பூச்சு நிலையத்தின் கூடாரமும் அகற்றப்பட்டது. ஆனால் அங்கு இன்னும் முகப்பூச்சு நடக்கிறது. அந்த சிறிய வரிசை இன்னும் காத்திருந்தது.

முடிவுக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. எனக்கு பின்னால் இரண்டு ஆட்கள் தள்ளி வரிசையில் இருந்த ஒருவர் குழந்தையிடம் நேரமாயிடுச்சு கண்மணி!. கிளம்பலாம்என்றார். குழந்தையோ அடம்பிடிக்க அப்பா மீண்டும் மீண்டும் சொல்ல குழந்தை சமாதானம் அடைந்ததோ இல்லையோ அரை மனதுடன் கிளம்பியது.

பெண்மணி ஒருவர் பலூன்காரரைப் பார்த்து திரும்பி வந்து கொண்டிருந்தாள்.

எப்போ முடிப்பீங்களாம்

அவர் இந்த வரிசை முடியுற வரை ன்னு சொன்னாரு

கிளம்ப ஆயத்தமான சிலரை இந்த பெண்மணிகளின் உரையாடல் தடுத்து நிறுத்தி இருக்கக்கூடும். பலூன்காரர் நின்றிருந்த கூடாரமும் அகற்றப்பட்டுவிட்டன. பலூன் காரர் கூடாரம் இழந்ததை பொருட்படுத்தாது தொடர்ந்து ஊதுகிறார். திருகுகிறார். முடிச்சிடுகிறார். முகப்பூச்சு வரிசையும் முடிந்துவிட்டது. பலூன்காரர் மட்டும் தான் இன்னும் வேலை செய்கிறார்.

வானவில் ஒன்றைக் கையிலேந்தி வந்தக் குழந்தை ரெயின்போ ரெயின்போ என்று தாவி ஓடி வந்தது. மேகத்தோடு கூடிய வானவில். குறைந்த பட்சம் ஐந்து வண்ணங்கள் இருக்கும். மற்ற எல்லாரும் கிளம்பிய பின்பும் இவருடைய நேர்த்தி குறையவில்லை. கட்டாயம் இது சமரசமற்ற அன்பின் வெளிப்பாடு தான். பொலிந்த முகத்திற்காக இதைச் செய்கிறார் என்றால் வாங்கிச் சென்ற குழந்தைகளுடன் ஓடி விளையாடும் வாய்ப்பும் இல்லையே. அதிகபட்சம் இரண்டு வார்த்தைகள் பேசுகிறார். பொலிவை விதைக்க மட்டுமே செய்கிறார் என்று சொல்லலாம்.

நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால் கவுண்டி காசு ஒன்றும் அதிகமாகத் தருவதில்லை. பின்னர் என்ன தான் ஆதாயம்? தண்ணீராக வியர்வை ஊற்றெடுக்கிறது. அவர் போட்டிருந்த வெள்ளைச் சட்டை தொப்பலாயிருந்தது. அலுவலகத்தில் ஐந்து மணிக்கு சரியாகக் கிளம்பும் ராப் பிரேசன் மனதில் வந்து போனார். அவரிடம் தான் கடமை உணர்ச்சி இல்லையா? சரியாக ஒரு மணிக்கு கூடாரத்தை கழற்ற வந்தாரே அவரிடம்தான் கடமை உணர்ச்சி இல்லையா? பலுன்காரர் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று யோசிக்காமல் அவர் நின்றுகொண்டிருந்த கூடாரத்தை அகற்றியதால் அவர் கருணையற்றவர் என்று சொல்லமுடியுமா?

துக்காகவா இவ்ளோ நேரம் நின்னோம்என்று எனக்கு முன்னால் வரிசையில் நின்றிருந்த பாட்டி கேட்க பையன் இது அம்மாவுக்கு கிப்ட்என்று சொல்லி அவளுடன் வேகமாக நடந்தான். பெவிலியனில் உட்கார்ந்திருந்தபோது நான் கேட்ட உரையாடல். அவர்கள் கடந்து செல்லும்போது காதில் விழுந்தது. அவனது கையில் பிங்க் நிற இதயம். கொஞ்சம் எளிதான டிசைன் தான்.

வரிசையில் நின்றிருந்த போது பசி காதை அடைத்தது. பேச்சொலிகள் தெளிவற்றுக் கேட்டது. காலையில் சாப்பிட்டது. வயிறு உள்ளிழுத்து நடுக்கம் கொடுத்தது. வெடுக் வெடுக்கென்று துடித்தது. கால் உளைச்சல் ஒருபுறம். பின்னால் தோழமையுடன் பேசிக்கொண்டிருந்த மனைவி இன்னும் திரும்பவில்லை. பொறுமையை இழந்து கோபம் நுழைய ஆரம்பித்திருந்தது. அவளை வரச் சொல்ல கையை அசைத்துப் பார்த்தேன். பேச்சின் ஜோர் அவளை மூழ்கடித்திருந்தது. “பாருஎன்று உரத்த குரலெழுப்பினேன். வேகமாக திரும்பி வருந்தாள். கோபத்தை வெளிக்காட்டாமல் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதை மீறி முகம் சுருங்கியது. வார்த்தையில் சீற்றம் இருந்தது. பசி வந்துவிட்டால் அது தான் பாஸ் . அது நினைக்கிறது தான் நடக்கும் .

என்னால முடியலப்பா. நீ கொஞ்சம் நிக்கிறீயா. நான் கொஞ்சம் உட்காரப்போறேன்

சாரிப்பா. ரேணு பேசிட்டே இருந்தாங்க “.

பெவிலியன் வரும் வழியில் பலூன்காரர் அருகே சிறிது நேரம் நின்றேன் . அவரைச் சுற்றிலும் குழந்தைகள். மீன் ஒன்று செய்து கொண்டிருந்தார். சிறிது ஊதி, பின் வாயிலிருந்து எடுத்து ஒரு திருவு திருவிக் கொண்டிருந்தார். மீண்டும் ஊதல் மீண்டும் திருகல். கடைசியில் மஞ்சள் நிற மீன் ஒன்று உருவாயிருந்தது. கொடுக்கும்போது ஏதோ நகைச்சுவை சொல்லியிருப்பார் போலும். சிரிப்பொலிகள் அலையடித்து நின்றது.

பெவிலியனில் ரேணுவின் வீட்டுக்காரர் ரிஷி அமர்ந்து கையில் தொலைபேசியின் திரையை உற்று பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து கொண்டேன்.

ண்ணத்துப்பூச்சி, வாள் சகிதம் மனைவி குழந்தைகளுடன் பெவிலியன் வந்தார். “அவருக்கு ரெண்டு டாலர் கொடுத்தேன்பா . சரி கிளம்புவோமா

அப்பா! பட்டர்ஃபிளை ஃபேஸ், பட்டர்ஃபிளை பலூன். மேட்சிங் மேட்சிங்

சூப்பர் குட்டி.. அழகா இருக்குது. வீட்டுக்கு கிளம்புவோமா

மேட்சிங் மேட்சிங் “

ராதுல் வீட்டுப் பாதை வழியில் நடந்து கொண்டிருந்தோம். மழையிலும் வெயிலிலும் கட்டைகள் கிடந்து சிதிலமடைந்து கிடந்தது. பேச்சரவம் கேட்டு புதர்களுக்குள் மேய்ந்து கொண்டிருந்த மான் குடும்பம் ஒன்று கலைந்து ஓடியது. விதுரன் காற்றோடு வாட்சண்டையிட்டுக்கொண்டே வந்தான்.

விதுரப்பா! பாத்தீயா.. அங்கிள் ஃபெஸ்டிவல் முடிஞ்ச பிறவும் பலூன் ஊதுறதப் பாத்தல. அதுதான்டா அன்பு. அங்கிளுக்கு குழந்தைகள ரொம்ப புடிச்சிருக்கு. அதனால தான் வீட்டுக்கு போகாம இன்னும் அங்கே இருக்காரு. டையர்ட் ஆனாலும் ஊதறத நிப்பாட்டல. அதுதான் பாசம். தேங்க்யூ சொன்னியா? “

ராதுல் வீட்டு உப்பரிகை அதன் முன் விரிந்திருந்த குளத்துடன் அந்தரமாய் இருந்ததை எங்களின் குதூகலம் கலைத்திருக்கும்.

பொலிவு இன்னும் குறையவில்லை. பூரியைச் சாப்பிடும்போது அருகில் வண்ணத்துப்பூச்சி. அதற்கும் பூரி ஊட்டப்படுகிறது. துச்சலை வாசிக்கும் கதையைக் கேட்கிறது. அவளுடன் சமையலறையில் ஒத்தாசை செய்கிறது. கொல்லையில் ஒன்றாக ஊஞ்சல் ஆடுகிறார்கள். “துச் கூட கடைக்கு வறீயாஎன்று ஷாப்பிங் வண்டியில் ஏற்றி வைத்து வீட்டுக்குள்ளேயே சுற்றி வருவாள். இரவில் ஒரே படுக்கையில் தூக்கம். நாட்கள் ஆக ஆக பிரிவுத் துயரம் ஏதும் வராதபடி மெதுமெதுவாகக் காற்றிறங்கியது. நெடு நாட்கள் அந்த ரப்பர் துண்டு குப்பைத்தொட்டி செல்லாமல் கிடந்தது.

நெகிழ்ச்சி தந்த போதை குறைய நாட்கள் பிடித்தது. அலுவலகத்தில் நண்பர்களிடம் , பிறந்தநாள் சந்திப்பில், தமிழ்ப்பள்ளியின் வராண்டாவில், வாலிபால் விளையாட்டு முடிவில் என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பலூன்காரர் பற்றி பேசினேன். பேசப் பேச நெகிழ்வு மங்கி நகைச்சுவையாக மாறியது. வெளியே நகைச்சுவையாகப் பேசினாலும் ஏதோ ஒரு கண்ணி தப்பியுள்ளது போல உள்ளுணர்வு. எங்கோ சுதி பிசகியுள்ளது போன்ற உறுத்தல்.

ரு உறக்கமற்ற பின்னிரவில் தான் அது நடந்தது. ஏதேதோ நினைவுகள் வந்து போனது. தண்ணீர் குடிக்க எழுந்தவன் சன்னல் அருகே நின்று கொல்லையைப் பார்த்தேன். சக்குரா மரம் பூக்களை முழுவதும் கொட்டியிருந்தது. தரையில் கிடந்த பூவிதழ்களும் நிலா வெளிச்சத்தை அவதானித்துக்கொண்டிருந்தன. என் நினைவுகள் மீண்டும் அந்தத் திடலில்.

பலூன்காரரும் நீண்ட வரிசையும். கூடாரம் இல்லை. மெதுவாக வரிசை நகர்கிறது. வரிசையில் நின்று கொண்டிருந்த ஆப்பிள் கடிகாரம் கட்டிய அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். மனம் அமைதியை இழந்திருந்தது. வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். சலூன் கடையில் எதிரெதிரே வைக்கப்பட்ட கண்ணாடிகளுக்கு இடையே மாட்டியது போன்ற அவதி. உருவத்திற்குள் உருவம். உருவத்திற்குள் உருவம். முடிவில்லாத நான்கள். எந்த என்னைப் பார்ப்பது, எந்த என்னுடைய குரலைக் கேட்பது என்று தெரியாத குழப்பம். கடைசியாக ஒரு உருவத்தின் குரலில் சம்மதம் அடைந்தேன். அதை அவனிடம் சொல்லவேண்டியதுதான்.

அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூப்பிட்டுப் பார்த்தேன். உதாசீனப்படுத்தினான். கையை அசைத்து அவன் கவனத்தை ஈர்க்க முயன்றேன். என்னை நோக்கி பார்த்த அந்த நொடியில் என் கையின் மணிக்கட்டை காண்பித்து நேரமாகிவிட்டது என்பதுபோல் சைகை காண்பித்தேன். அவனோ கூட்டத்தைக் கை காட்டிக் காண்பித்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். நான் காத்திருந்தது தான் மிச்சம். அதன்பிறகு அவன் என்னைப் பார்ப்பதையே தவிர்த்தான். வரிசையில் இருந்து வெளிவரவேயில்லை.

சிவப்பு பணம் நாவல் குறித்து கற்பக சுந்தரம் கட்டுரை

வெள்ளை பணம், கருப்பு பணம் என வகைப்படுத்தப்பட்ட பணமானது சிவப்பு பணம் என்று 2016ல் இருந்து மேலும் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது என சொல்கிறார் புத்தக ஆசிரியர் பாலகுமாரன். மத்திய தொலைதொடர்பு துறையில் பொறியியலாளராக வேலை பார்க்கும் நாவல் ஆசிரியர் 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு எழுத வந்த மிக முக்கியமான எழுத்தாளர் ஆவார். அவரின் கிண்டில் புத்தகமான சிவப்பு பணம் எனும் நாவலானது 2016ஆம் ஆண்டு இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஒரு மத்திய அரசு எதிர்ப்பு பணக்காரர் மற்றும் மூன்று நண்பர்கள், 10 கோடி ரூபாய் பணம் இவற்றை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அபாரமான எழுத்து நடையுடன் மிக வேகமாக த்ரில்லர் வகையில் பயணிக்கும் நாவலானது எடுத்து கொண்ட கதையில், மூன்று நண்பர்கள் இணைந்து பத்து கோடி மதிப்புள்ள ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை புதிய நோட்டுகளாக மாற்றுவது எனும் மிக சிறிய களத்தில் மிக வேகமாக பயணித்திருக்கிறது. மதுரையில் நடக்கும் கதையானது மூன்று நண்பர்களில் ஒருவர் காய்கறி மண்டியும் ஒருவர் அவருக்கு உதவியாகவும் மூன்றாம் நண்பர் கிரூபா ஒரு பலசரக்கு கடையில் வேலை பார்க்கிறார். இவர்களில் காய்கறி மண்டி வைத்துள்ள மணிக்கு கொடைக்கானல் முதலாளி ஒருவருடன் தொடர்பு இருக்கிறது. அவரிடமிருந்து வந்த பத்து கோடி ரூபாயை புதிய நோட்டாக மாற்றி அவரிடம் சென்று சேர்த்தால் கொடுக்கப்படும் கமிசன் தொகையில் தனது மண்டிக்கு அருகில் இருக்கும் ஒரு மண்டியை குத்தகைக்கு எடுத்து நண்பர்களுடன் இணைந்து நடத்த வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார். அவர் நடத்தும் மண்டியில் அவருடன் உதவியாக இருக்கும் அவரின் நண்பர் சரவணன் மற்றும் ஒரு கடையில் பணியாளாக வேலை செய்யும் அவரின் நண்பர் கிருபா என மூன்று பள்ளி கால நண்பர்களும் இணைந்து பணத்தினை புதிய் நோட்டுகளாக மாற்ற முடிவு செய்கின்றனர். மணி தனது ஆரம்ப கால கட்டத்தில் காய்கறி கடையில் பணியாளாக இருந்த சமயங்களில் அவருக்கு ஆதரவு அளித்த அவரின் கொடைக்கானல் முதலாளிக்கு நன்றிகடனாக இந்த பணம் மாற்றம் விவகாரத்தை கையில் எடுக்கிறார். கொடைக்கானல் முதலாளி பல ஹெக்டர் நிலப்பரப்புகளை சொந்தமாக கொண்ட மாநிலம் முழுவதும் பலருக்கு வேலை கொடுக்கும் பெரும் பணக்காரராக இருக்கிறார். கொடைக்கானல் மலையில் விளையும் பாதி காய்கறிகள் இவரின் மலைத்தோட்டத்தில் விளைந்ததாக இருக்கின்றன. இவரின் அசுரத்தனமான பணப்பலத்தை பற்றி கேள்விப்பட்ட மத்திய அமைச்சர் ஒருவர் இவரின் வீட்டிற்கு சென்று அவர்களின் கட்சியில் இணைந்து விட சொல்கிறார், அதற்கு ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு நாங்கள் நன்கொடை கொடுக்கிறோம் ஆனால் எந்த கட்சியிலும் இணைய விருப்பம் இல்லை என்று முதலாளி கூறிவிடுகிறார். அதன் பின் தனது அதிகார மற்றும் பண பலத்தினால் இந்தியாவில் நடைபெற போகும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் அவர் தனது பணத்தினை மாற்றி கொடுக்கு அவரின் நம்பிக்கையான ஏழு பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் இந்த பணியினை ஒப்படைக்கிறார். பணத்தினை மாற்றி கொடுத்தால் வரப்போகும் ஒரு கோடி கமிசனுக்கும் முதலாளி மீதான விசுவாசத்திற்காகவும் இந்த பணியினை எடுக்கும் மணிக்கு அவரின் நண்பர்கள் துணை இருக்கிறார்கள். கொடைக்கானல் மலையில் இருந்து உருளை கிழங்கு மூடைகளுடன் மூடையாக வந்த பத்து கோடி பணத்தினை தனது மண்டியில் காய்கறிகளுடன் சேர்த்து வைத்து விட்டு சரியான நேரத்திற்காக காத்திருந்தனர். மத்திய அரசும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்து விட அதன் பிறகு நடைபெறும் நிகழ்வுகள் தான் நாவலின் உயிர்.

ஒரு அதிகார முடிவானது இந்தியாவின் கடைகோடி கிராமத்து மனிதர்கள் வரை நிகழ்த்தும் தாக்கத்தை நாவல் பதிவு செய்துள்ளது. நமது பக்கத்து வீட்டில் நடைபெறும் கதை போன்ற எழுத்து நடையினால் நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட முடிகிறது. கொடைக்கானல் முதலாளியின் பணம் பலரிடம் சென்று விட்டதை அறிந்து கொள்ளும் மத்திய அரசு செய்யும் நடவடிக்கைகள் அதிலிருந்து மூன்று நண்பர்களும் தப்பிக்கும் முறைகள் மிக எளிமையாக எந்த சாகசமும் இன்றி இருப்பதால் பணத்துடன் நாமும் பயணிப்பது போல் இருக்கிறது. தைரியமாக முடிவு எடுக்கும் மணி, சாப்பாடு மட்டுமே குறியாக கொண்ட சரவணன், திறமையாக யோசிக்கும் கிருபா என மூன்று பேரின் கூட்டணி கதைக்கு கச்சிதமாக பொருந்துகிறது. கதையின் இடையில் வரும் சில கதாப்பாத்திரங்கள் நாவலை மேலும் பலப்படுத்துகின்றன.

கிரூபாவின் யோசனையால் பணத்தை பதுக்கி வைக்க குமுதாவின் உதவியை நாடும் பொழுது குமுதாவின் கணவரின் மரணம், மாமியாரின் நோய், குமுதாவின் சமையல் பொருட்கள் தயாரிப்பு தொழில் ஆகியவை நமக்கு பகிரப்படுவதுடன் இணைந்து மூன்று மணமாகதவர்களின் காமத்தின் வறட்சியை விரவி கொடுத்திருக்கிறார். குமுதா மற்றும் மூன்று நண்பர்களின் அத்தியாயம் ஒரு தனி சிறுகதைக்கான அத்தனை அம்சங்களையும் பெற்றிருக்கின்றன. மணி மற்றும் குமுதா இருவரும் சந்தித்து கொள்வதாக அந்த நாவலில் ஒரு நிகழ்வே சொல்லப்பட்டிருந்தாலும் அந்த நிகழ்வுக்குள் அவர்கள் இருவரின் கண் பரிமாற்றங்கள் இருவரும் தனியாக இருக்கும் நேரத்திற்கு பின் மணியிடமிருந்து வந்த மிளகாய்பொடி வாசனையை நம்மையும் உணர வைக்கிறார்.

மற்றொரு கதாப்பாத்திரமான வங்கி மேலாளரின் அதிகார மெத்தனம், பணத்திற்காக அதிகாரத்தின் வளைவு சுளிவுகள் என அத்தனை பண்புகளையும் தனக்குள் இயல்பாக கொண்ட அவர் பணத்தினை 2 கோடி கமிசனுடன் மாற்றி கொடுக்கிறார். பணத்தினை மாற்ற வேண்டிய கடினமான பணியானது இவரினால் எளிதாக மாறுகிறது. கதையை பொறுத்தவைரை யார் வில்லன்? யார் ஹீரோ? என்ற எந்த வகைக்குள்ளும் எந்த நபரையும் ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை. மூன்று நண்பர்கள், முதலாளி, மத்திய அரசு, வங்கி மேலாளர் என அனைவரும் ஏதோ ஒரே கட்டத்தில் ஒருவருக்கு நல்லவராகவும் வேறொருவருக்கு கெட்டவர்களுமாகவே இருக்கிறார்கள், இந்த கதை இயல்பானது என சொல்வதற்கு முக்கிய காரணமே இந்த காரணத்திற்காகத்தான். அந்த வகையில், ஒரு படைப்பை மற்றொரு படைப்புடன் தொடர்புப்படுத்துவதும் கோட்பாட்டுகளுடன் சுருக்குவதும் ஒரு படைப்பை எழுத்தாளர்களை கொண்டு நேர்த்தியான படைப்பாக கட்டமைப்பதும் இந்த நாவலின் வழியாக மீண்டும் கண்டிக்கப்பட்டிருக்கிறது. ஒரு இலக்கியம் அந்த காலக்கட்டத்தின் ஆவணமாக இருக்க வேண்டும் என்ற நெறியை பின்பற்றி ஆனால் எந்த இலக்கிற்குள்ளும் சிக்காமல் தனது கதையில் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்திருக்கிறது நாவல். எழுத்தாளரும் தனது நாவலுக்கான களப்பணியை கதையின் ஓட்டத்தில் இயல்பாகவே கதையுடன் இணையவிட்டிருக்கிறார்.

மேலும் கதையில் வரும் ஒரு பொமேரியன் நாயும் இரண்டு சிப்பிப்பாறை நாய்களும் கதைக்குள் அழகானவை. வங்கி மேலாளரின் வீட்டில் இருக்கும் பொமேரியன் தனது பணக்காரத்தனத்துடனும் கொடைக்கானல் மலை ஏறும் கழுதைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதுகாப்பாக செல்லும் சிப்பிப்பாறை நாய்களும் தனக்கே உரிய பண்புகளுடன் இருக்கின்றன. கொடைக்கானல் மலைக்கு சாலை போக்குவரத்தில் பணத்தினை கொண்டு செல்ல முடியாமல் மலைக்கு ஏலக்காய் சுமை தூக்கும் கழுதைகளின் வழியாக பணத்தினை கொண்டு செல்ல மணியின் நண்பர் முன்வருகிறார். மொத்த கதையிலுமே இந்த அத்தியாயத்தை இன்னும் விரிவாக கொடுத்திருக்க வேண்டும் என ஏங்க வைத்திருக்கிறார் எழுத்தாளர். அதுவும் அந்த சிப்பிப்பாறை நாய்களின் வீரமும் அன்பும் அந்த மூன்று நபர்களை தாண்டி நம் மனதில் இடம் பெறுகின்றன. சிப்பிப்பாறை நாய்கள் மற்றும் புலிக்கிடையேயான மலையில் நடக்கும் சண்டையானது நமக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. பொதுவெளியில் நமக்கு புகுத்தப்படும் நாயை விட புலி வலிமையானது என்ற கருத்தாக்கம் இயற்கையானது எந்த உயிரும் மற்ற உயிருக்கு முன் வலிமையானது இல்லை என்பதை நமக்கு நாவலின் வழியாக உணர்த்துகின்றன. சிப்பிபாறையுடன் மோதி புலி அருவியுடன் அடித்து சென்று விடும் பொழுது நாமும் பெருமூச்சு விடுகிறோம்.

நாவலின் கதையானது மிக சுருக்கமானது தான் ஆனால் நாவலை வாசிக்கும் பொழுது ஏற்படும் உணர்வெழுச்சியானது எழுத்தால் உணர்த்த முடியாததாக இருக்கிறது. அதுவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகான தனது இறுதி சடங்குக்காக சேர்த்து வைத்திருக்கும் செல்லாத ஐநூறு ரூபாய் நோட்டுகளை கொண்ட அந்த கிராமத்து பாட்டி நமக்கு வங்கி முன் கண்ணீரும் பதட்டத்துடன் நின்ற கோடானுகோடி மனிதர்களின் ஒற்றை சாட்சியாக நிற்கிறார். இறந்தே போன அந்த பாட்டி பண மதிப்பிழப்பினால் இறந்த ஐந்து வயது குழந்தை முதல் அறுபது வயது முதியவர் வரை அத்தனை பேரையும் நமக்கு நியாபகமூட்டுகின்றன. ஒரு நாவலின் வெற்றி என்பது இதில் தான் அடங்கி இருப்பதாக கருதுகிறேன். அந்த வகையில் வாழ்வில் மறக்க இயலாத படைப்பாக ‘சிவப்பு பணம்’ நாவலை அங்கீகரிக்கிறேன்.

மனிதர்களின் வக்கிரங்கள், பணத்தின் அகோர வளர்ச்சி, மனித உணர்வுகளின் மழுங்கடிப்பு தன்மைகள் ஆகியவை இந்த கால மனிதர்களின் வாழ்வியலின் அடையாளங்களாக மாறி போயின என்பதன் நிகழ்கால ஆவணமாக இந்த நாவல் திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாவல் முழுவதும் வரும் காய்கறி மண்டி வாசனை, நாய்களின் வாசனை, குமுதாவின் வீட்டு வாசனை, என நறுமணங்களை எழுத்தின் வழியாக கடத்துவதன் மூலமாகவே நாவல் தரமானதாக உருவாகி இருக்கிறது.

மொத்தத்தில் ‘சிவப்பு பணம்’ நாவலானது தீவீரமான வாசிப்பவர்களை விட வாசிப்பை நேசிக்கும் அத்தனை மனிதர்களுக்கும் சிறந்த வாசிப்பனுபவத்தை தரும் என்று கருதுகிறேன். தனது கதையின் பயணத்திலிருந்து வாசகர்களை திசை திருப்பாமல் பல நுணுக்கங்களை நாவல் முழுவதும் செழுத்தி இருக்கிறார் எழுத்தாளர். கொஞ்சமான கதாப்பாத்திரங்களின் வழியாக சிறந்த கதையினை தந்திருக்கிறார். இது சரி இது தவறு என்ற மனித மனங்களின் அத்தனை அடிப்படையான குண நலன்களையும் கேள்விக்குள்ளாக்கும் கதையானது பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமில்லாமல் என்னை போன்ற அதை வேடிக்கை பார்த்த நபர்களுக்கும் கதையின் வழியாக அதன் வலியை கடத்தி இருக்கிறது கதை. எப்பொழுதும் பசியுடனே இருக்கும் எப்பொழுதும் சாப்பிட்டு கொண்டே இருக்கும் சரவணன் கதாப்பாத்திரம் இன்னும் உடல் ரீதியான மனப்பான்மையை மாற்றவில்லை. குண்டாக இருப்பவர்கள் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள் என்ற கற்பிதமும் அவர்கள் கேலிக்குரியவர்களாகவும் இருப்பது கதையில் நெருடுகிறது. தேடி தேடி கண்டுபிடிக்கும் குறைகளை தவிர்த்து பார்த்தால் கதையானது தனது நிலையில் எந்த தர்க்க மாறுபாடுமின்றி உண்மையாக இருந்திருக்கிறது என்பதை வாசகனால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நாவலானது கொடைக்கானல் முதலாளி கொடுத்திருக்கும் அடுத்த 100 கோடி ரூபாயை அந்த மூன்று நண்பர்களும் எப்படி மாற்றி தரப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பை நமக்குள் தூண்டுகிறது.

சோறு – விஜய்குமார் சிறுகதை

ராமு வீட்டிற்குள் வரும்போது தாமோதரன் எட்டாவது தோசையை முடித்துக்கொண்டிருந்தார். அவரை ஓரப் பார்வையில் முறைத்துக்கொண்டே சமயலறைக்கு சென்று “எத்தனை?” என்று கமலாம்மாவை கேட்டான். “எண்ணுலயே கண்ணு”. “சுகரு இவ்வளவு வெச்சுக்கிட்டு..” என்று ராமு சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஹாலில் இருந்து ஒரு ஒழுக்க பவ்யத்தோடு எல்லோருக்கும் கேட்கும்படியாக “கமலா அந்த மாத்திரை டப்பாவை எடுத்துவா” என்று தாமோதரன் கத்தினார். கமலாம்மா களுக் என்று சிரிக்க ராமு கோபத்தை உதட்டில் அடக்கிக்கொண்டு “என்ன பாத்தாதான் இவருக்கு மாத்திரை நினைப்பு வரும்… சோறு மட்டும்…” என்று ஏதோ சொல்லவர கமலாம்மா “டேய்…” என்று ராமுவை அதட்டி அடக்கினாள்.

ஃபிரிட்ஜ் மேலுள்ள டப்பாவை எடுத்து வந்து இரவுக்கான மாத்திரைகளை மட்டும் தனியாக பிரித்து டீப்பாயில் வைத்தான். சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவிவிட்டு மாத்திரைகள் சரியாக இருக்கிறதா என்று கூட பார்க்காமல் அதை லாவகமாக விழுங்கிவிட்டு டப்பாவையும் தட்டையும் அப்படியே விட்டுவிட்டு தன் படுக்கை அறைக்கு செல்ல எழுந்தார். அவரது அலட்சியம் ராமுவுக்கு மேலும் எரிச்சலூட்டியது. டப்பாவில் உள்ள தீர்ந்துபோன அட்டைகளை பார்த்துவிட்டு, “மாத்திரை தீர்ந்தால் யாரும் சொல்ல மாடீங்களா?” என்று கத்தினான். “வாங்கிக்கலாம் வாங்கிக்கலாம்..” என்று தாமோதரனின் குரல் படுக்கை அறை இருளில் தேய்ந்து மறைந்தது. ஓரிரு வினாடிகள் அவர் சென்ற திசையையே பார்த்துவிட்டு ராமு பல்லை கடித்துக்கொண்டு தன் அம்மாவிடம் சென்றான். இவன் வரும் வேகத்திலேயே கமலாம்மா, “ உங்க ரெண்டு பேரு பிரச்சினையில் என்னை இழுக்காதீங்க..அவர்தான் இன்னைக்கு மாத்திரை ஒழுங்கா சாப்பிட்டுட்டாரே. அவரைத்தான் கொஞ்சம் சும்மா விடேண்டா..”

“உங்க ரெண்டுபேருக்கும் நான் சொன்னா ஏறவேயேறாதா? மாத்திர மருந்துகூட ஒழுங்கா எடுக்க தெரியாதா? உங்களுக்காகத்தான நான் வெளியூர் போய் வேலை தேடாம இங்கயே கெடச்ச வேலைய பாத்துகிட்டு இருக்கேன்.”

கமலாம்மா எதுவும் பேசமுடியாமல் நின்றாள்.

“சுகரு இவ்வளவு வெச்சுகிட்டு.. டாக்டர் அளவா சாப்பிடச் சொல்லுறாரு. ஆனா நாம ஃபுல் கட்டு கட்டிக்கிட்டு இருக்கோம்.”

“காலையில இருந்து பில்டிங்குல கெடையா நிக்குற மனுசண்டா. கொஞ்சமா சோறு போட்டா வகுத்துக்கு பத்துலங்கிறாரு. மனசு கேக்கமாட்டீங்குது”

ராமு ஆத்திரமும் கோபமுமாக தலையில் கை வைத்துக்கொண்டு அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்தவாறே, “முருகா… எப்பப்பாரு சோறு சோறு… சுகரப்பத்தி கவலையே இல்ல. இந்த சோறே அவர சாகடிக்கப்போகுது பாருங்க..”

கமலாம்மா கண்ணைக்கசக்க அதைப்பார்த்த ராமுவும் உதடுகளை பிதுக்கியவாறே தன் அறைக்கு விரைந்தான்.

2

அடுத்து வந்த சில நாட்களுக்கு ஒப்பீட்டளவில் குக்கர் வாசம் கம்மியாகவே அடித்தது. ராமுவும் அவன் பங்கிற்கு பச்சை காய்கறிகளை வாங்கி ஃபிரிட்ஜில் அடுக்கி இருந்தான். அம்மாவும் சப்பாத்தியாக உருட்டி தள்ளிக் கொண்டிருந்தாள். வீட்டில் சாப்பாட்டு ஒழுங்கு பீடித்து நிகழ்ந்து கொண்டிருந்தாலும் ராமுவுக்கு அப்பாவின் மேல் சந்தேகம். அப்பாவின் பைக் அந்த முக்கு மெஸ்ஸில் அடிக்கடி நின்று வந்தது. பொதுவாக சப்பாத்தியை பார்த்தால் முகம் சுளிக்கும் தாமோதரன், எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் அதை விழுங்கும் போதே தெரிந்தது, அவர் கும்பிக்கான சோற்றுப்பதம் வேறு எங்கோ பூர்த்தி செய்து கொண்டிருக்கிறார் என்று.

பொங்கல் பிரியரான சுப்பிரமணி மாமாவுடன் அப்பாவை சேர்த்துவைத்து முக்கு மெஸ் பக்கமாக பார்க்கும்போதே ராமுக்கு தெரிந்தது அவன் சந்தேகப்படுவது உண்மைதான் என்று. ஒளிந்து சாப்பிடும் பழக்கம் இந்த குடியானவனுக்கு எங்கிருந்துதான் வந்ததோ. இது ஒன்றும் வேலைக்காகாது என்று ராமு கோவமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவரை அங்கேயே கையும் களவுமாக பிடித்திருக்க வேண்டும். என்ன செய்வது; அப்பவாயிற்றே.

தன் ஆத்திர அலைகளை உருவேற்றி அப்பாவிற்க்காக காத்துக் கொண்டிருந்தான். சர்க்கரை அளவை காண்பிக்கும் கருவியை பக்கத்தில் வைத்துக்கொண்டான். “அவர் வந்ததும் நடு வீட்டிலேயே வைத்து சர்க்கரை அளவை சோதிக்க வேண்டும். எப்படியும் 350 தாண்டி இருக்கும். அங்கிருந்து பிரச்சனையும் சண்டையையும் மேல் எடுத்துச் செல்ல வேண்டும். இரண்டில் ஒன்று பார்த்துவிடவேண்டும். வாயைக் கட்டுப்படுத்தி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு உயிர் வாழ விரும்புகிறாரா அல்லது எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று தான் வீட்டை விட்டு வெளியேறுவதா? இப்படித்தான் இந்த சண்டையை கொண்டு போகவேண்டும். இது என்ன விளையாட்டா? சும்மா விடக்கூடாது.. ஆரோக்கிய விரயமும் ஊதாரித்தனம் தான்.”

தாமோதரன் வீடு வர நேரம் ஆகிக்கொண்டே போனது. ராமு தான் நடத்தவிருக்கும் குடும்ப அதகளத்தை தன் மனதில் நிகழ்த்தி பார்த்துக்கொண்டிருந்தான். அது தன் எண்ண திரையில் சினங்கொண்டு எழுவதாகவும்; முஷ்டியோங்கி அடிப்பதாகவும்; கண்ணீர்விட்டுக் கெஞ்சுவதாகவும்; உதாசீனஞ்செய்து வெளியேறுவதாகவும் ஓடிக்கொண்டிருந்தது. அப்பா என்று பாராமலும் சில கெட்ட வார்த்தைகள் வந்து விழுந்தது. “சோற்றுப் பண்டாரம்; எப்போதுமே சோத்துல தான் கண்ணு. கைய காலை முறிச்சு வீட்டுல போட்டாத்தான் கம்முனு கிடக்கும். என் வயசு பசங்க எல்லாம் அவனவன் வாழ்க்கையை பாத்துட்டு போறான், நான் இதுங்களுக்கு பின்னாடி திரிய வேண்டியதா இருக்கு. முருகா!… விட்டுட்டு போகவும் முடியல, சொன்னா கேட்கவும் மாட்டேங்குதுங்க.” ராமு தன் அகச் சண்டையில் களைத்துப் போயிருந்த சமயம் தாமோதரன் தன் முன் தள்ளிய வயிற்றின் மேல் வேட்டியை இறுக்கிக் கட்டியவாறு உள்ளே வந்தார். ராமுவைப் போலவே முக ஜாடை கை கால் வாக்கு. ஆனால் அவனைவிட குள்ளம், ஐந்து அடிக்கும் குறைவாகவே இருப்பார். சிறுங்கூட்டு உடம்பு. ராமுவோ கிட்டத்தட்ட ஆறு அடி உயரம். “எப்பப்பா வந்த?” என்று கேட்டவாறே தன் தோளில் சுமந்து வந்த பையை சுவரோரமாக வைத்துவிட்டு ஃபேன் ஸ்விட்சை போட்டுவிட்டு ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை இழுத்து அதனடியில் அப்பாடா என்று அமர்ந்தார். ராமு அவரது வலது கைவிரல்களை பார்த்தான் அது என்னை பிசுக்காக இருந்தது. “எங்க வெளியில சாப்பிட்டு வாராரோ?” ஏனோ அந்த களைத்த முகத்துடன் சண்டையிடும் திராணி சட்டென்று இவனுக்கு இல்லாமல் போனது. அம்மா உள்ளே இருந்து “சாப்பிடுறியாடா? எடுத்து வைக்கவா?” என்று கேட்டாள். “சாயந்திரம் தான் அந்த முக்கு மெஸ்ஸில சாப்பிட்டேன் மா” என்று சொல்லிவிட்டு எழுந்தான். தாமோதரன் திடுக்கிட்டு விழித்து அவனைப் பார்த்தார். ராமு அவரைப் பார்த்துக்கொண்டே தன் அறைக்குச் சென்றான்.

3

“பயப்பட ஒன்னும் இல்ல, மைல்டு அட்டாக் தான். அப்ஸர்வேஷன்ல இருக்காரு. சுகர் லெவல் வேற 400 இருக்கு. அத ஒரு ரெண்டு நாள்ல கண்ட்ரோலுக்கு கொண்டுவந்திட்டு அப்பறம் முடிவு எடுப்போம்” என்று டாகடர் சொன்னபோது அம்மா ராமுவைப் பார்த்தாள். அவன் கண்கள் ஈரப்பதம் ஏறியிருந்தது. அவன் உதடுகள் அழுகையால் பிதிங்கியுள்ளதா அல்லது கோவத்தால் வெறுவியுள்ளதா என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. டாக்டரின் தைரிய வார்த்தைகள் கமலாம்மாவிற்கு நம்பிக்கை தந்தபோதிலும் ராமுவின் இறுகிய அமைதி அவளை கலங்கடித்தது. இருவரும் ஐ சி யூ வார்டின் ஓரத்தில் வந்து அமர்ந்த போது ராமு களைத்திருந்தான். கமலாம்மா அழுது முடித்த அசுவாச உணர்விலிருந்தாலும் ராமு ஏதாவது சொல்வானா, அதற்க்கு நம் பதில் என்ன

என்ற யோசனை அவளை பீடித்திருந்தது. சிறிது நேரம் மெளனமாக நகர, ராமு ஒரு பெருமூச்சுடன் தலையில் கை வைத்தான். அவனது அங்க நகர்வுகளை கவனித்துக்கொண்டிருந்த கமலாம்மா அதையே அவனது சொற்களாக பாவித்து “அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது கண்ணு. அதான் சரியான நேரத்துக்கு ஹாஸ்பிடல் வந்திட்டமுல்ல. டாக்டர் தான் பயப்பட ஒன்னும் இல்லனு சொல்றாருல்ல.” என்று மறுமொழி உரைத்தாள்.

ராமு நிமிர்ந்து பார்த்தான். அவன் முகம் வீங்கியிருந்தது. பதிலேதும் கூறவிரும்பாமல், “நான் கொடுத்த பேக் எங்க? அதுக்குள்ள தான் இன்சூரன்ஸ் கார்டு, பணம் எல்லாம் இருக்கு”.

“இதோ இந்த கட்ட பைக்குள்ள தான் பத்திரமா வச்சிருக்கேன்”

ராமு அதை வாங்கி மடியில் வைத்துக்கொண்டு மறுதிசை நோக்கி முகம் திருப்பிக்கொண்டான்.

“ஏன்டா கண்ணு”

“ஏன்னா! என்னன்னு சொல்றது? நான் சொன்ன ரெண்டு பேர்ல யாரு கேக்குறீங்க?”

ராமு வெறுப்பாய் பேசியதே அவளிற்கு ஒரு திருப்த்தி தந்தது “நான் என்னடா பண்றது? உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல”.

“நான் சொன்ன மாதிரிதானே இப்போ நடந்தது. சோறு கமியா சாப்பிடுங்க, சீனி கமியா போட்டுக்கோங்க, வாக்கிங் போங்க. மாத்திரை மருந்து மறக்காதீங்க. படிச்சு படிச்சு சொன்னேன். யாருக்கும் அக்கறை இல்லை. சின்ன வயசுல கஷ்ட்டப்பட்டீங்க ரைட்டு, இன்னுமா படனும்? ஒடம்பைக்கூட கவனிக்காம? என் வயசுல நம்ம சொந்தபந்தத்தில இப்படி யாராச்சும் சீரழியிறாங்களா சொல்லுங்க?”என்று ராமு குரல் தாழ்த்தி தொண்டை நரம்புகள் புடைக்க கத்திக் கொண்டிருக்கும் போதே கமலாம்மா கண்ணீருடன் குறுக்கிட்டாள். “வேண்டாம்டா”.

“இப்படி கொஞ்சம் கொஞ்சமா போகுறதுக்கு, ஒரேயடியா போய்ட்டா இழுத்து எறிஞ்சுட்டு கம்முன்னு இருந்துக்கலாம்”

“டேய்!!……” என்று குரலை உயர்த்திய வேகத்திலேயே கண்ணீர் கசிந்தாள். “தப்பு தப்புன்னு சொல்லுடா”

அம்மாவின் அதிர்ந்த தெறிப்பு தம் முகத்தில் அறைய, ராமுவும் உடைந்து தேம்பினான். மனதிற்குள் “தப்பு தப்பு” என்று சொல்லிக்கொண்டான்.

4

பணம் கட்டிவிட்டு அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தபோது பசி வயிறு கிள்ளியது. அம்மாவின் வெறும் வயிற்று ஜீரணம் உறக்கவே பறையடித்தது. மீண்டும் எழுந்து சென்று காபி வாங்கி வந்து கொடுத்தான். அதை அம்மா மடக் மடக் என்று அருந்துவதைப் பார்த்து வயிற்றுக்காகவே வாழும் ஜீவன்கள் என்று மனதிற்குள் ஒரு ஒற்றை சிரிப்பு சிரித்துக்கொண்டான். அம்மா ஆசுவாசம் அடைந்தாள். சிறிது நேரம் சும்மா இருந்தனர்.

கமலாம்மா, “அந்த நர்ஸுகிட்ட உள்ள எப்போ போய் பாக்கலாம்னு கேட்டேன். கொஞ்ச நேரத்துல சொல்றேன்னு சொல்லிச்சு.”

“ஹ்ம்ம்”

“டெஸ்டு எல்லாம் எடுத்து எவ்ளோ நேரம் ஆகுது. வெறும் வயிறா இருப்பார். ஏதாச்சும் கொடுத்தாங்களோ இல்லையோ” என்றாள்

“ஐ சி யூல இருந்தாலும் சோறு மறக்காது” முக சலனமில்லாமல் ராமு சொன்னான்.

இம்முறை கமலாம்மாவிற்கு எரிச்சல் வந்தது. “இவன் ஒருத்தன்.. உனக்கு வேணுன்னா அது சாப்பாடா இருக்கலாம். எங்களுக்கெல்லாம் அது தாண்ட உசுரு. உனக்கெல்லாம் என்ன தெரியும். எத தொட்டாலும் சாப்பாட்ட வெச்சே திட்டுனா?” விழுந்தாள்.

ராமுவை மறுமொழியில்லாமல் ஆக்கியது. அதை உணர்ந்த அம்மா, தணிந்த குரலில் மீண்டும் ஆரம்பித்தாள். “முன்னமெல்லாம் இப்படி இல்லடா கண்ணு. அப்பெல்லாம் பஞ்சம். மூணு நாலு வருஷம் மலையில்லாம போய்டும். கெடச்சத சாப்பிட்டிக்கணும். எனக்கே நல்ல நியாபகம் இருக்கு. நான் சின்ன புள்ள. உங்க அப்பச்சி வெள்ளி காசையெல்லாம் வித்து இருக்காரு. விவசாயம் இல்லாதப்ப நானெல்லாம் நூல் கோக்க போயிருக்கேன். நாலு அனா தருவாங்க. உங்க அப்பா சின்ன வயசா இருக்கும்போது இன்னும் அதிக பஞ்சமாம். நானெல்லாம் அப்போ பொறக்கவே இல்ல. சொல்லுவாங்க. நானே கஷ்ட்டப் பட்டிருக்கேன். உங்க அப்பவெல்லாம் இன்னும் எவ்ளோ கஷ்ட்டப் பட்டரோ? உங்க அப்பாரு சின்ன வயசிலேயே செத்துபோய்ட்டாரு. உங்க ஆத்தாவும் அப்பாவும் தான் அப்போ. பாவம்டா!”

ராமு உம் கொட்டிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தான்.

அவனது உடற் திசை தன்னை நோக்கி திரும்பி அமர்ந்ததையும் அவனது ஆர்வம் காட்டும் உடல்மொழியை சந்தேகமாக பார்த்துவிட்டு என்ன என்பது போல் தலையசைத்து கேட்டாள்.

“அப்புறம் என்ன ஆச்சு”

ராமுவின் புதிய ஆர்வம் கமலாம்மாவின் ஞாபகங்களை நெருட அவன் எதை கேட்கிறான் என்பதையே யோசிக்காமல் அவள் தனக்குத் தானே சொல்லிக்கொள்வது போல் ஆரம்பித்தாள். “அப்பாவுக்கு உன்னோட அப்பத்தா தான் சாமி. அவ உடம்ப உறிஞ்சிதான் அப்பா உயிர் வளர்த்ததா சொல்லுவாரு. நீ என்னமோ அரிசிச்சோறு இருக்க இப்படி சொல்ற. அப்பாவுக்கு அந்த காலத்துல சோளச்சோறோ கம்மஞ்சோறோ கூட கிடையாது. காக்கஞ்சி அரைக்கஞ்சிதான். அப்பத்தா காக்கஞ்சி சாப்பிட்டதான் அப்பாவுக்கு அறைக்கஞ்சி கிடைக்கும். அப்பெல்லாம் கிணறு வெட்ட குளம் வெட்ட வாய்க்கால் வெட்ட சனங்களை கூட்டம் கூட்டமாக கூட்டிகிட்டு போவாங்கலாம். அப்போ அப்பா குழந்தை பையன். அப்பத்தா அப்பாவை தூக்கிகிட்டு கிணறு வெட்ட போய்விடுமாம். எந்தக் கோயிலிலும் பூசை இருக்காது. வயிறு காஞ்சா சாமி ஏது. யாரும் மாடு கண்ணு கூட வச்சுக்கல. பாதி சனம் பஞ்சம் பிழைக்க வெளியூர் போயிட்டாங்க. மீதி சனம் அப்படியே…” சட்டென்று கமலாம்மா நிறுத்திக்கொண்டாள். முந்தானையால் மூக்கை சிந்திக்கொண்டு உள்ளங்கைகளால் தன் ஈரப்பதமான கண்களை நீவிக் கொடுத்தாள். மூக்கை உறிஞ்சிக்கொண்டு கொஞ்சம் அசமந்த சிரிப்புடன், “நம்ம ஊருக்கு உடும்பூர்ன்னு ஏன் பேரு வந்ததுன்னு தெரியுமா? அந்த காலத்துல நிறைய உடும்பு இருந்துதாம். பஞ்சத்தில எல்லா உடும்பையும் அடிச்சு சாப்பிட்டுட்டாங்கலாம். இப்ப ஏதோ கோயமுத்தூர்ல பில்டிங்கு கான்ட்ராக்ட்டு அது இதுன்னு வசதி வாய்ப்பா இருக்கோம், ஆனாலும் இன்னும் நாங்க அந்த பழைய உடும்பூர்க்காரங்கதான்டா.”என்று சொல்லி சிரித்தாள். “எல்லாம் பழைய கதை” என்று நிறுத்திக் கொண்டாள். ராமு மனசு அடைத்துப் போனான். சொல்லா சொற்கள் அவனைச்சுற்றி வட்டம் அடித்தது.

5

ஒரு சுபதினத்தில் அறுவை சிகிச்சை எனும் அபய நிகழ்வு ஏகபோகமாக நடந்து முடிந்தது. தாமோதரனும் கமலாம்மாவும் புதுப் பொலிவுடனும் தைரியத்துடனும் இருப்பதைப் பார்ப்பதற்கு ராமுவுக்கு ஒரு ஓரத்தில் நிம்மதியை தந்தது. எனினும் விசாரிக்க வந்தவர்களிடம் இவர்கள் இருவரும் ஏதோ குடும்ப நிகழ்வின் களிப்புடன் நடந்துகொள்வது ராமுவுக்கு எரிச்சலாகவும் இருந்தது. அனேகமாக தாமோதரனை பார்க்க வந்த அனைத்து ஆண்களும் நெஞ்சு பிளக்கப்பட்டவர்கள்தான். அவர்கள் தம் சட்டைப் பொத்தானை கழட்டி மார்பு தழும்புகளை காட்டும்போது நெஞ்சுரம் மிக்க முழு வீரர்களாகவும், பத்திய சாப்பாடு மற்றும் மருந்து உட்கொள்ளும் சூத்திரத்தைச் சொல்லும்போது அரை வைத்தியர்களாகவும் காட்சி அளித்தார்கள். அதுவும் பொங்கல் பிரியரான சுப்பிரமணி மாமா பார்க்க வந்தபோது தாமோதரனுக்கு குஷி தாங்கவில்லை.

“என்னடா தாமோதரா! கடைசியில் நீயும் எங்க கிளப்பில் சேர்ந்துட்டியா?” என்ற சுப்பிரமணியிடம், “நெஞ்சு அடைப்பு எடுத்தாச்சுல, இனி ஒரு ஏழு எட்டு வருஷத்துக்கு கவலை இல்லை. என்ன!, ஒரு கடப்பாறையை தூக்கி நெஞ்சில் வைத்த மாதிரி ஒரு வளி, அவ்வளவுதான்.” என்று தாமோதரன் சொல்லி மெல்ல சிரித்தார். தலையிலடித்துக் கொண்டு வெளியேறிய ராமுவை யாரும் கவனித்ததாக தெரியவில்லை.

டிஸ்சார்ஜ் ஆகும் முன்னே உணவு நிபுணரை சந்திக்க வேண்டியிருந்தது. இப்படி மருத்துவரை சந்திக்கப் போகும்போது தாமோதரன் ஒரு பள்ளி மாணவனுக்கு உண்டான பாவனையை முகத்தில் ஏந்துவார். எல்லை மீறிய ஆனால் ஒழுக்க வளையத்துக்குள் வர விரும்புகிற ஒரு அப்பாவி மாணவனை அவரிடம் தரிசித்து விடலாம்.

அவர்கள் முறை வந்ததும் ராமுவை முன் விட்டு பின் தொடர்ந்தார் தாமோதரன். உள்ளே உணவு நிபுணராக ஒரு இளம் வயது பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்த உடன் மாணவன் மறைந்து ஒரு கௌரவமான தகப்பன் தோன்றினார். இப்படியான ரூப மாற்ற பாவனை ராமுவுக்கு தெரிந்ததே என்பதால் அவன் பெரிதாக ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் உள்ளே சென்றதிலிருந்து பொத்தானை அழுத்திய தானியங்கி போல் பலநாட்கள் சொல்லித் தேய்த்த பிரசங்கத்தை நடத்தத் தொடங்கினார் அந்த இளம் வயது உணவு நிபுணர். தாமோதரன் ஆமோத்தித்தும் மறுத்தும் பிரசங்கத்தை உள்வாங்கி கொண்டிருந்தார். எப்படியோ நல்லது நடந்தால் சரியென்று அந்த நிகழ்வின் போக்கை கவனித்துக் கொண்டிருந்தான்.

“புருஞ்சுதுங்களா சார். அதாவது மாவு சத்து கமிய எடுத்துக்கணும். அதுதான் க்ளுகோஸ் லெவல் கமிய வெச்சுருக்கும். எண்ணைப் பலகாரம் கூடவே கூடாது. காய்கறி எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம். சக்கரை மறந்தும் சாப்பிடக்கூடாது. அப்புறம் முக்கியமான விஷயம், மூணு வேளையும் ஃபுல்லா சாப்பிடாம பிரிச்சு பிரிச்சு சாப்பிடணும்.”

தாமோதரன், “சரியா போச்சு போங்க. நான் சாப்பிடறதே சோறு மட்டும்தான். அதையே வேண்டான எப்படீங்க மேடம். பிரிச்சு பிரிச்சுன்ன எப்படீங்க”

“கோட்டா வெச்சு சாப்பிடுங்க. மூணு வேளைக்கு பதிலா அஞ்சு வேளை ஆறு வேளைன்னு பிரிச்சுக்கணும். அதுக்குன்னு எல்லா வேளையும் ஃபுல் கட்டு கட்டக்கூடாது. எப்பயும் பாதி வயிறுதான். அப்போதான் க்ளுகோஸ் லெவல் கண்ட்ரோல்ல இருக்கும்.”

“அது சரி… கோட்டா வெச்சு….” என்று உடலை அசௌகரியமாக நெளித்து ஏமாற்றத்துடன் இழுத்து சொல்லும்போதே தெரிந்தது, ஏதோ சொல்லொக்கூடாத விஷயத்தை சொல்லிவிட்டார்கள் என்று.

“உங்க நல்லதுக்குதான் சார்.”

“ஆமா.. என் நல்லதுக்கு தான்”

ராமு, “அப்பா, உங்களை என்ன இப்போ சாப்பிடவே கூடாதுனா சொன்னாங்க.”

தாமோதரன் அமைதியானார்.

ராமு அந்த உணவு நிபுணரைப் பார்த்து தொடர்ந்தான். “இப்படித்தாங்க மேடம். எதுக்குமே சரி பட்டு வரமாட்டார். நாங்கெல்லாம் இவருக்கு பின்னாலயே சுத்தணும். கொஞ்சம் அசால்ட்டா விட்டாக்கூட ஏமாத்திருவாரு. சோறுன்னா அவ்ளோதான்.”

இவர்கள் பஞ்சாயத்திற்குள் வர பிரியம்மில்லாமல் அசௌகரியமாக தலையசைத்தது மேடம்.

தாமோதரனின் அமைதி பொறுக்காமல் ராமு மீண்டும். “அடுத்த மாசம் ஒரு ப்ராஜெக்ட் விஷயமா மூணு மாசம் நான் அமெரிக்கா போகணும். ஆனா இவரை நம்பி நான் எங்கயும் போக முடியல. நாங்க சொன்ன கேக்க மாட்டாரு மேடம். நீங்களே ஸ்ட்ரிட்ட சொல்லீருங்க.”

தாமோதரன் சரி என்பதுபோல் தலையசைத்தார். மேடம் மேலும் உணவு முறை சூதானத்தை தொடர்ந்தார். தாமோதரனுக்கு எல்லாம் கோட்டா கோட்டா என்றே காதில் விழுந்தது.

“அரை வயிறு கால் வயிறு காலமெல்லாம் முடிஞ்சுதுன்னு நெனெச்சேன். கோட்டா வெச்சுதான் மேடம் தூங்குனேன். கோட்டா வெச்சுதான் மேடம் வேலைக்குப் போனேன். கோட்டா வெச்சுதான் மேடம் கடன் அடைச்சது வீடு கட்டினது எல்லாம். கோட்டா வெச்சே சாப்பிட்டுக்கிறேன் இனிமேல்.” சிறிது இடைவேளை விட்டு மீண்டும் ஆரம்பித்தார். “ஆனா இவனுக்கு நான் எதையும் கோட்டா வெச்சு செஞ்சதில்ல, வேணுங்கிறத வாங்கிக் கொடுத்துடுவேன். சரி இந்த கோட்டவெல்லாம் என்னோட போகட்டும். என்ன பத்தி இனி கவலைப் படாம அமெரிக்கா போகச்சொல்லுங்க மேடம்.”

வீடு வரும் வரை கோட்டா கோட்டா என்றே முனகிக்கொண்டு வந்தார். தன்னை விசாரிக்க வருபர்களிடமும் கோட்டாவைப் பற்றியே பேசினார். சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வதால் எப்படியோ கோட்டாவுடன் சமரசம் செய்துகொண்டார் என்றே ராமுவிற்கு தோன்றியது. தவிர்த்தலைந்தது நிகழ்வேறி கடந்துசென்றதில் ஒருவித விடுதலையுணர்வை அடைந்தான். இதுநாள்வரை தன் முன் பாக்கெட்டில் ஒரு அரை செங்கல்லை சுமந்தலைந்தது போலிருந்தது. அது சட்டென்று இல்லாமலானதில் ஒரு உற்ச்சாகம். அதே உற்சாகத்தில் அமெரிக்கா செல்ல ஆயத்தமானான்.

6

“ஒழுங்கா மாத்திரை மருந்து சாப்பிடுங்க, டாக்டர்கிட்ட போங்க, கோட்டா வச்சு சாப்பிடுங்க” என்ற ராமுவின் வேண்டுதலிற்க்கு மறுமொழியாக “அப்பத்தா திதிக்கு ஊருக்கு திரும்பி வந்திடனும்” என்று கட்டளையிட்டு வழி அனுப்பிவைத்தனர்.

புதுப்பயணத்தின் பதட்டமோ குதூகலமோ இல்லாமலிருந்தது. விமானத்திற்குள்ளும் ஒரு புடிபடாத சோகமே தேங்கியிருந்தது. பயண நெடுகிலும் அப்பாவின் நினைவே. சிந்தனை முழுவதும் அவரது கோட்டா வைத்த வாழ்கையே ஆக்கிரமித்திருந்தது. தான் அவரை வைத சொற்கள் தனிச்சையாக ஒவ்வொன்றாக தன் எண்ணத்திரையில் நடந்தேறிக் கொண்டிருந்தது. “சோற்றுப்பண்டாரம், பஞ்சப்பராரி, காணாததைக் கண்ட நாய், காட்டு மனுசன்.” இதுவெல்லாம் தகப்பனை நோக்கி சொன்ன சொற்கள்தானா? ஆம், எல்லா வசைச்சொல்லிற்கும் அடியில் ஒரு மகனின் ஆன்மா. நீத்தார் சுமையை தந்தை சுமக்கிறார். தந்தையை மகன் சுமக்கிறான். கொஞ்சம் கனமாகத்தான் உள்ளது. “கோட்டா கோட்டா கோட்டா கோட்டா…..” அப்பாவின் சமீபத்திய உச்சாடனம் ராகமுவிற்கு கர்ம பலன் போல கடந்து வந்திருந்தது. ராமுவின் மனமும் அதன் போக்கில் உச்சாடனம் செய்துகொண்டிருந்தது. விமான பயணத்தின் இறுக்கமா அல்லது அலை அலையாய் அலைந்த மனம் சோர்ந்து தன்னையே நோக்கித் திரும்பிக்கொண்ட காரணமா அல்லது நீத்தார் விட்டுச்சென்ற வித்தா என்று தெரியவில்லை. ராமு “கோட்டா கோட்டா கோட்டா” என்றே உச்சரித்துக்கொண்டிருந்தான்.

“கோட்டா கோட்டா கோட்டா கோட்டா…”

இந்த உச்சாடனம் அந்தரவெளியில் அர்த்தம் பொதிந்ததாகவும், வாழ்வில் பொருத்திப் பார்க்கும்போது புடிபடாததாகவும் இருந்து ராமுவை ஆட்டுவித்துக்கொண்டிருந்தது. விமானம் தரை தொட்டதும் ஏன் என்று தெரியாமலேயே ராமு ஒரு சங்கற்பம் ஏற்றிருந்தான்.

வந்திறங்கி ஒரு வாரம் ஆகியிருந்தது. புதிய சங்கற்பத்திற்கு வலுசேர்த்தாற்போல் நாளொன்றுக்கு இருவேளை உணவுதான் அமைந்தது. புதிய நிலம் தந்த பரபரப்பும் அதன் அருகாமையற்ற சூழலும் அப்படி அமைத்து தந்தது.

தனக்கு முன் இரு பெரும் பணிகள் இருப்பதை உணர்ந்தே இருந்தான். ஒன்று திரளான வெள்ளையர்களுக்கு நிரல் கட்டுமான பயிற்சி அளிப்பது, மற்றொன்று தன் துருத்திய வயிற்றுக்கு ஒரு முடிவு கட்டுவது.

வந்ததிலிருந்து தன் வயிறு நெகிழ்ந்து கொஞ்சம் கரைந்திருந்தது. உணவில் திளைப்பது ஏனோ அதுவாகவே மட்டுப்பட்டிருந்தது. உணவை மேலும் கட்டுப்படுத்தினான். அதுவும் கட்டுக்குள் வந்தது. கட்டுக்குள் வந்ததாலேயே மேலும் அதை அடக்கினான்; ஆண்டான்; வருத்தினான்; வருந்தினான். எண்பது என்பது எழுபது ஆனது. அதனால் அது அவனிடம் தோற்று வந்தது. உடலின் பிரதேசத்தை மேலும் கைப்பற்ற அவன் மனக்கிடங்கில் புதிய ஆயுதங்கள் வைத்திருந்தான்.

பேலியோ டயட்.

எழுபது ஆனதும் உடலின் மேல் தனக்கு உள்ள அதிகாரத்தை ராமு உணர ஆரம்பித்திருந்தான் அதிகாரம் யாருக்குத்தான் பிடிக்காது.

பேலியோ டயட், இன்டர்மிட்டெண்ட் டயட் ஆக மாறியது. உணவுக்காக உடலைத் தனக்கு முன் மண்டியிட வைத்தான். தன் எல்லைக் கோடுகளை உள்ளிழுத்துக்கொண்ட உடல் முற்றிலும் பணிந்தது. அதிகாரம் மேலும் ஆக்ரோஷமாக செயல்பட்டது. இன்டர்மிட்டெண்ட் டயட் வாரியர் டயட் ஆக மாறியது.

உடல் அறுபதிஐந்தாக குறைந்திருந்தது. இப்போது அப்பனுக்கு புத்தி சொல்லும் யோக்கியதையை பெற்றிருந்தான். ஒல்லியாக அழகாக இருந்தான்.

ஒரு மேடு ஒரு பள்ளத்தை உருவாக்குவது போல, ஏனோ தன் மற்றொரு பணி பெரும் போராட்டமாகவே இருந்தது. அன்று குளிரூட்டப்பட்ட ஒரு அரங்கின் மேடையில் நின்று கொண்டு தன் முதுகுக்குப் பின்னால் உள்ள வெண்திரையில் படங்களையும் பாடங்களையும் காண்பித்து அந்த வெள்ளைத் திரளுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தான். இல்லையில்லை தன்னை விற்றுக் கொண்டிருந்தான். இலகுவாக வரும் கலை ஏனோ திக்கித் திணறியது. தன்னைத் தானே நொந்து கொண்டான். நொந்து கொள்ளும் தோறும் தொடைகள் நடுங்கின முகம் இறுகியது காது வெப்பமானது.

அந்த நாளின் முதல் பாதி முடிந்திருந்தபோதே ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை என்று உணர்ந்திருந்தான். எத்தனை திக்கல்கள், தடுமாற்றங்கள். இப்போது உணவு இடைவேளை தான். மீண்டும் மதிய வேளையில் இருந்து இந்த வெள்ளையர்களிடம் தன்னை நிகழ்த்திக் காட்ட வேண்டும். காலை அமர்விலேயே பல பேர்கள் நீர்யானை போல் வாயைத் திறந்து திறந்து மூடினர். ஒவ்வொரு முறையும் அவனுக்கும் அது தொற்றிக் கொண்டிருந்தது. மதிய அமர்வில் இன்னும்பல நீர்யானைகள் தோன்றும்.

மதிய உணவிற்கு டோக்கன் வாங்கும் வரிசை மிக நீண்டதாக இருந்தது. வெறுப்பாய் வந்து வரிசையில் நின்றான். வெள்ளையர்கள் ஸ்பானியர்கள் ஆசியர்கள் ஆப்பிரிக்கர்கள் என்று உலகத்தோர் அனைவரையும் ஆங்காங்கே கிள்ளி எடுத்து வரிசையில் போட்டதுபோல் பலதரப்பட்டவர்கள் நின்றிருந்தனர். ராமுவிற்கு தனது தடுமாற்றமே மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. அன்று ஏதோ உணவுத்திருவிழா போலும். அனைவரும் ஒருவித குதுகலத்துடன் இருந்தனர். தனக்குள் மூழ்கியிருந்த ராமு ஏதோ வாசனை பட்டு வெளி பிரக்ஞைக்கு வந்தான். வரிசையில் நின்றிருந்த ராமுவிற்கு எங்கிருந்தோ ஒரு நீத்தார் குரல் கேட்டு அடங்கியது. திடுமென முழு பிரக்ஞைக்கு வந்த ராமு சுற்றும் முற்றும் பார்த்தான். உணவுத் திருவிழா மிக கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.

நீத்தார் மூத்தார் நெட்டி முறித்து எழுந்தனர்.

தாய், மெக்சிகன், சைனீஸ், கான்டினெண்டல், மெடிட்டரேனியன், இண்டியன், இங்கிலீஷ் என்று இன்னும் என்னென்னவோ பதாகைகள் ஆங்காங்கே காணப்பட்டது. பதாகை கீழே புஃவே நடந்து கொண்டிருந்தது.

ராமுவின் மேல்மனம் அந்த வரிசையில் இருந்து விலக எத்தனித்தாலும் அவனை விலக விடாமல் ஒரு நீத்தார் பிடித்து வைத்திருந்தார். ராமு, “என்ன உணவுத்
திருவிழாவாக இருந்தால் என்ன ஒரு சூப் மட்டும் ஆர்டர் செய்ய வேண்டியதுதான். இப்போது இருக்கும் என் உடல் வடிவு எனக்கு பிடித்துள்ளது. உடல் வெல்லக்கூடாது. போராடு, மேலும் போராடு, போரிடு” என்று மனதை உறுதிப்படுத்தினான்.

பாதி வரிசை முடிந்தவுடன் பல வாசனைகளுக்கு மத்தியில் அந்த ஒன்று மட்டும் வடிகட்டி அவனுக்கு வந்து சேர்ந்தது. முகர்ந்து நான்கு மாதமெனும் ஆகியிருக்கும்.

பிரியாணி வாசனை.

மூக்கில் நனைந்து, உள்ளிறங்கி, உடல் நிறைந்து, அடியிலிருந்த நீத்தார் அனைவரையும் முறுக்கேற்றி, அணுக்களின் அனைத்து காலி இடங்களையும் கூட்டி மெழுகி தயார் செய்தது.

வரிசை நகர்ந்து கொண்டே வந்தது. ராமு சூப் ஆர்டர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அரை எண்ணமாக வெட்டுப்பட்டது. “சூப்…. சூப்…. சூப்….” என்று போராடி போரிட்டு மனதைக் கட்டாயப்படுத்தினான். “உடலை வெல்ல வேண்டும்.” “சூப்…. சூப்…. சூப்…. சூப்…. கோட்டா.. சூப்….” “யாரது நடுவில் கோட்டா என்றது.”

அடியிலிருந்து, “கோட்டா வைத்து சாப்பிட்டால் என்ன?” என்ற ஒரு குரல் மேலெழுந்தது. ஒரு நீத்தார் கண்ணடித்து களவாணித்தனமாகக் கேட்டார். “இல்லையில்லை சூப்…. சூப்…. சூப்….” என்று ராமு ஒற்றை ஆளாக நெஞ்சிலிருந்து போர்தொடுத்து கீழே இறங்கினான். மூத்தார் நீத்தார் தெய்வங்கள் தங்கள் அனைத்து படை அணிகளுடன் “சோறு…. சோறு…. சோறு….” என்று அடிவயிற்றிலிருந்து மேலெழுந்து வந்தனர்.

வரிசை நகர்ந்து கொண்டே வர அடியிலிருந்து தெய்வங்களும் நெஞ்சிலிருந்து ராமுவும் யாருக்கும் தெரியாமல் நடு வயிற்றில் ஒரு போர் நடத்திக் கொண்டிருந்தனர். வெறும் வயிற்றுச் சத்தம் வெளியே கேட்டது. ராமு தன் எல்லைகளை குறுக்கிக்கொள்ள விரும்பவில்லை. தெய்வங்களும் விடுவதாயில்லை. வரிசை முடிந்துவிட்டது. கவுண்ட்டருக்கு முன்னால் இருந்தான். இப்போது போர் முடிந்தே தீரவேண்டும். முழு உடலும் தெய்வங்களின் பிடியில் சிக்கிக்கொண்டாலும், தலையும் வாயும் இன்னும் தம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. கடைசி ஆயத்தம். இயந்திரத்தனமாகவேணும் சூப் என்று சொல்லிவிடவேண்டும்.

காது அடைத்தது, தொண்டை கம்மியது, தலை வியர்த்தது, சூப் என்று சொல்லவந்த தொண்டையை பற்றி, மேலேறி, நாவை வளைத்து, துருத்தி, திருத்தி ஒட்டுமொத்த நீத்தார் மூத்தார் தெய்வங்களும் படையென மேலெழுந்து ‘பிரியாணி’ என்ற சொல்லாக வெளியே வந்து விழுந்தனர். பணமும் டோக்கனும் கைமாறியது. பரிவர்த்தனை முடிந்தது. பிரியாணி கைக்கு வந்தது.

“சரி, இந்த முறை மட்டும் கோட்டா வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.”

முதல் கவளம் வழுக்கிக்கொண்டு உள்ளே சென்று அடிவயிற்றில் தொப்பென்று விழுந்தது. அனைத்து செல்களிலும் ஒரு ஆனந்த அலை அடித்தது. உடலின் அனைத்து இடங்களும் இன்னுமின்னும் என்று வாரி விழுங்கியது. பண்படாத தூய ஜீவனென லபக் லபக் என்று வாயில் போட்டுக் கொண்டிருந்தான். உடலின் அனைத்து அங்கமும் பூரணித்தது. அன்னமயகோசம் ஆனந்த நிலையை எய்தியது. ஒருவழியாக பிரியாணி அவனை தின்று தீர்த்தது. ஆழ் உடல் முன்னோர்கள் சமரசம் அடைந்து அடங்கினர்.

இனி போராட்டமோ போர்க்களமோ இல்லை. உலகம் தெளிவுற்று நிகழ்ந்தது.

பித்ரு தேவோ பவ.

அந்நாளில் முடிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். மதிய அமர்வு அவன் கைவசம் வந்தது. அமர்வின் ஆரம்பம் நகைச்சுவையாகவும் நடுவில் உச்சம் தொட்டும் முடிவில் கச்சிதம் செய்தும் ஒரு சங்கீதமென ஒழுகிச்சென்று முடித்தான். தன்னைத் திறம்பட விற்றான். தடுமாற்றமும் போராட்டமும் இல்லை.

சாமிக்கு படைத்த பின் சம்சாரிக்கு என்ன கவலை. அப்பாவையும் அப்பத்தாவையும் நினைத்துக்கொண்டான். அப்பத்தாவிற்கு அவள் நினைவு தினத்தன்று படையல் இடவேண்டும். அவள் திதியும் நெருங்கி வந்தது. ராமு ஊருக்குத் திரும்பும் நேரமும் நெருங்கி வந்தது.

அடுத்து வந்த நாட்களில் சங்கோஜமே இல்லாமல் சோற்றில் திளைத்தான். பின்பு தன்னை நெறிப்படுத்திக் கொண்டு மத்தியம பாதையை வகுத்துக் கொண்டான். கோட்டா வைத்து சோறு சாப்பிட்டான். விட்டுக்கொடுத்த எல்லைகளை உடல் சிரமம் ஏதும் இல்லாமல் மீண்டும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. கோட்டா வைத்து உண்ணும் மத்தியம பாதையில் உள்ளதால் இன்னும் அப்பனுக்கு புத்தி சொல்லும் அருகதை தன்னிடம் இருப்பதாக நினைத்துக்கொண்டு விமானம் ஏறினான்.

சந்தேகமே இல்லாமல் இப்பயணம் ஒரு யாத்திரை தான். ஆனால் நெஞ்சில் பலநூறு குழப்பங்கள் கேள்விகள். உடல் எப்படி வென்றது? உடலுக்கு என்று தனி மனம் உண்டா? அந்த மனம் என்பது நம் மூதாதையர் தானா? ஜெனிடிக்ஸ் தான் அவர்களா? அப்படி என்றால் உடல் என்பது என்னுடையதா அவர்களுடையதா? என்னுடையது என்றால் நான் ஏன் அதன் கட்டுப்பாட்டில்? பதில் அறியா கேள்விகளிடம் பணிவதைத் தவிர வேறு வழி என்ன.

முன்னோர்களிடமிருந்து ராமு திமிறி  எழுந்தான், விடுவித்து ஓடினான், சண்டையிட்டு தோற்றான், பணிந்து சரண் புகுந்தான். தன் பட்டினிப் பரம்பரையின் கடைசி கன்னியாக உருமாறினான். யாத்திரையின் முடிவில் தான் சிறுத்து சின்னவனாக உணர்ந்தான். இருப்பினும் அனைத்து கேள்விகளும் ஒற்றை கேள்வியாக உருண்டு நின்றது.

“புசித்த பின்னரும் பசி உயிர்ப்பதேன்”

மீண்டும் அந்தர வெளியில் அர்த்தம் பொதிந்ததாகவும் வாழ்வில் பொருத்திப் பார்க்கும்போது விளங்காததாகவும் இருந்தது. விமானம் தரை தொட்டது.

“எது எப்படியோ, அப்பாவிடம் பழைய கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கருணை காட்டினால் கட்டவிழ்த்து ஓடுவார். இடம் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பார். முன்னோர்களுக்கு பிரதிநிதியாக இருக்கும் முன்னவர். தந்தையர்களை தாங்கி நிற்கும் தந்தை தெய்வம்தான். இருந்தாலும்….”

“இன்று அப்பத்தாவிற்க்குப் படையல், ஆனால் விருந்து என்னவோ அவருக்குத்தான். பரவாயில்லை. கொஞ்சம் கண்டிப்பை நடித்துக்காட்ட வேண்டியதுதான். நாளையே இரத்தப்பரிசோதனை முதற்கொண்டு அனைத்தும் எடுத்து பார்த்துவிடவேண்டும்.” என்று பலவாறு நினைத்துக்கொண்டு வீட்டின் கேட்டை திறந்தான். அவனை வரவழைத்தது ஒரு வாசனை. ஆழ் உடல் முன்னோர்களை உலுக்கிய அதே வாசனை. சோற்று வாசனை. இப்போது மேல் நெஞ்சு ராமுவையும் உலுக்கியது. கோபம் வந்தது. மூச்சு சூடானது. சங்கிலித் தொடரின் கடைசி கன்னி மீண்டும் திமிறி  எழுந்தது. சுமந்து வந்த பையை வாசலிலேயே போட்டுவிட்டு விறுவிறுவென்று சென்று வீட்டின் கதவை படீரென்று திறந்தான்.

தாமோதரன் நடு ஹாலில் பெரிய வட்டலில் சோற்றை மலையென குவித்து வைத்து அதன் முன் யாகம் வளர்ப்பவர் போல அமர்ந்திருந்தார். அருகில் பெரிய திறந்த குக்கரில் சோறு ஆவி விட்டுக்கொண்டிருந்தது. ஓரமாக வைத்திருந்த அப்பத்தாவின் படத்திற்கு கீழ் வாழை இலையில் சோறு குவித்து படையல் வைத்திருந்தனர்.

தாமோதரன் சோறும் கையுமாக மாட்டிக்கொண்ட அதிர்ச்சியில் எழுந்து நின்றார்.

“எப்ப பாரு சோறு… சோறு… சோறு…” ராமு பல்லை வெருவி கத்தினான்.

ஏதோ சொல்ல வந்த தாமோதரன் வார்த்தை தடைபட்டு நின்றார்.

“பஞ்சத்துக்கு பொறந்த பரதேசி, இப்ப சோறு இல்லைன்னா செத்தா போவ?”

தந்தை அதிர்ந்தார். ஒரு பெரிய ஒற்றை மூச்சு வெளியே விட்டார். ஏந்தியிருந்த சோற்றுக் கையை கீழே போட்டார். சிறிதாக சிரித்து, “அந்தக் கோட்டா நம்ம குடும்பத்துக்கு ஏற்கனவே முடிஞ்சு போச்சு கண்ணு” என்று சொல்லிவிட்டு ராமுவை கடந்து வெளியே சென்றார்.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி – பானுமதி கட்டுரை

 ‘ஆம். .  அவர்களுடன் தொடர்பு கொண்டோம். பல முறை நடந்த, கவனமிக்க,  நம்பகமான உரையாடல்கள். முடிவில் அவர்களை வரவேற்கத் தீர்மானித்து அவர்களின் விண் ஊர்தியை எங்கள்ரேடியோ ஹட்டின்வாயிலில் இறங்கச் செய்தோம். ஆவல்.. எதிர்பார்ப்புகளோடு வெளியே செல்கையில், எதிர்பாராத  ஒன்று நடந்தது; அவர்கள் மிகச் சிறு வடிவினர்மிகச் சிறிய ஓடம்கவனிக்கப் பட முடியாமல், வாயிலில், புற்தரையில் எங்கள் கால்களாலேயே நசுக்கப்பட்டு இறந்த விபரீதம். . ’ஹெச் ஜி வெல்ஸ் எழுதிய சிறுகதையின் சுருக்கம் இது

இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. ’வேற்றுக்கிரக வாசிகள் நம் இருப்பிடத்தின் அருகாமையில் இருந்தாலும் நாம் அவர்களையோ, அவர்கள் நம்மையோ உணர முடிகிறதா?

(பொது ஆண்டு 1037இல் வாழ்ந்த தத்துவஞானியான அபூ அலி ஸினா ஒரு கருத்தைச்  சொன்னார்பறக்கும் மனிதன் ஒருவனைக் கடவுள் படைக்கிறார்அவன் கண்கள் போன்ற எந்த இந்திரியங்களும் இயங்காத நிலையிலும்அவன் தன் உடல் என ஒன்றை உணராத போதிலும் தன்னை அறிவான்இருத்தலின் சாறாக; இதை இக்கட்டுரையை முழுவதும் படித்த பின்னர் பொருத்திப்பார்க்க முடியும்அத்தகைய ஒரு வேற்றுக்கிரக வாசியை நாம் அடையாளம்தான் காண முடியுமா? தொடர்பு சாத்தியமா? https://www. the-tls. co. uk/articles/avicenna-leading-sage-footnotes-plato/)

2017-ல் ஆஸ்ட்ரேலியாவின் பார்க்கஸ் தொலைநோக்கி அதுவரை கேட்டிராத ஒரு ஒலியை பதிவு செய்தது; அது வேற்றுக்கிரக உயிரினத்திடமிருந்து வந்திருக்கலாம் என ஒரே பரபரப்புகடைசியில், அங்கே பணிபுரிந்த வானவியலாளர்கள் அவசரப்பட்டுத் திறந்த மைக்ரோ உலையின் ஓசை அது; மின்காந்தப் புலங்களின் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் அங்கே செயல் பாட்டில் உள்ளன; ஆனால் போதுமான அளவிலில்லை!!

கணிசமான தடயங்கள் இதுவரை இல்லை. ஆனால்ஏன் நாம் வேற்றுக்கிரக உயிரினங்களைப் பற்றி ஆர்வப்படுகிறோம்?அது நம் பூவுலக வாழ்க்கைக்கு எவ்விதத்தில் உதவும்?

குதிரைகளுக்குத் தம் கடவுளின் உரு பற்றிய கற்பனை வந்தால் அது குதிரை வடிவில் தானிருக்கும்,கிரேக்க தத்துவவியலாளர் க்ஸெனஃபானிஸ்,  2500 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது இதுவேற்றுக்கிரக உயிரினங்களைத் தேடுவதில் நாமும் அதைப் போன்றவர்கள்தான். ஏனெனில் நாம் நம்மைப் போன்றவரைத்தானே தேட முடியும்?

நீரின்றி அமையாது இவ்வுலகு.என்கிறோம். ஆம், அது பூமிக்குப் பொருந்தும். ஆனால்,  விண் வெளியின் கிரகங்களிலும் நீர்  இருப்பதோஇருந்ததோ , உயிரிகளின் ஆதாரம் என நினைப்போமானால் அது ஒரு வகை அறிவீனமேஇருப்பினும் இன்று எங்காவது அப்படித் தண்ணீர் இருப்பதாக அறியப்பட்டவுடன் நம் அண்டத்தின் புனித துலாக் கோல் நடுங்கி ஆர்ப்பரிக்கும்செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதும்இருந்திருக்கக்கூடும் என்பதும் அங்கே இருந்திருக்கக்கூடிய உயிரினங்களைப் பற்றிய அறிவைத் தரும் என்று நம்புவது, ஒரு கிரகத்தில் பாதரசமிருந்தால் அங்கே வெப்பமானி இருக்கும் என நினைப்பதைப் போல்

நமக்கும் வான்வெளிக்கும் இருக்கும் உள்ள உறவை,  ‘நாசாஅனுப்பும் ஏவுகணைகளும், அவை தரும் செய்திகளும் பயமுறுத்துகின்றன. ஒருசவசவகிரகம் என்றே பூமியை எண்ணினேன். ஜூலை 15,  2015-ல்ந்யூ ஹொரைஸன்ப்ளுடோவைப்பற்றி சொன்ன பிறகு என் எண்ணமே மாறிவிட்டதுமிகப் பெரும் பனி மலைகளுக்கிடையே மைனஸ்230  டிகிரியில் உறைந்துள்ள நைட்ரஜனும் மீதேனும் ப்ளுடோவில் உள்ளதாம். தப்பிப் பிழைத்த பூமிதான் என்னவொரு ஆறுதல்!

வான்வெளியில் என்னென்ன நடை பெறுகிறது எனப் பார்க்கத்தான் நாசா ஏவுகணைகளை அனுப்புகிறது. ஆனாலும் இன்னொரு நோக்கம் உண்டுஅது வான் வெளியில் அறிவு ஜீவிகளைத் தேடுதல். (Searching for Extraterrestial Intelligence-SETI) ரஷ்யக் கோடீஸ்வரரான யூரி மில்னர் வானிலிருந்து வரும் சமிக்ஞைகளை அறிய கோடி கோடியாய் செலவழிக்கிறார். வானின் அறிவு ஜீவிகள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளவோ மற்ற சிலவற்றுடன் தொடர்பு கொள்ளாவோஏன் நம்மிடம் கூடத் தொடர்பு கொள்ளவோ ஏற்படுத்தும் வானொலியின் மூலம் அவர்களை அறிந்துவிடலாம் என்பதும் திட்டம்

உங்களுக்குப் புரிந்தது  அல்லவா? ஆனால்எனக்குப் புரியவில்லைநம்மைப் போலவே வேற்றுக்கிரக உயிரினங்களும் வான் அலைகள் மூலம் தொடர்பு கொள்ளும் என்பதே எனக்கு வினோதமாக இருக்கிறது. இந்த சாத்தியம்தான் எதன் அடிப்படையில் ஏற்பட்டது

நம்முடைய பூமியிலேயே இணைப் பரிணாம வளர்ச்சி நடைபெறுகிறதே! மீள மீளக்கண்கள்கண்டு பிடிக்கப்படுகின்றனவே. ஆனால்வான் ஒலிகள்? வெளியின் மற்றொரு இடத்திலிருந்து?உலகின் ஜீவராசியாக நிலை பெறுவதற்கு ஒற்றைச் செல் உயிரினம் எத்தனை எத்தனை முறை தன் வால் நெளிவுகளைச் சேற்றில் சுழட்டிக் கொண்டது? தோலைப் பதப்படுத்த ஏதுவாகக் கூரான அந்தக்கல்லை நாம் வடிவமைக்கும் முன்னர் எத்தனையெத்தனை யத்தனங்கள்?இதே மாதிரி தொடர்புக்கு என்று வானொலியை எப்படியெல்லாம் கொண்டு வந்திருப்போம்?வேறெங்கும் இதைப்போலவே நடை பெறும் சாத்தியக்கூறுகள் எவ்வளவு? ஆனாலும்வானில்  தேடுவதை நம்மால் நிறுத்த முடியவில்லை

கார்லைல் சொன்னர்: ‘இரவின் விண்மீன் வானம். அதில் நாம் வாழ முடிந்தால் அதைப் போல துன்பமும்முட்டாள்தனமும் வேறில்லை; இல்லையெனில் வானம் ஒரு பயனற்ற வெளி!’அகிலம் முழுவதும் மனிதர்களுக்கான இடம் என அவர் நினைத்தார். மனிதனுக்குப் பயனற்ற வெளி இருந்தென்ன போயென்ன என்பது அவர் எண்ணம்

இது நமக்கு மிக அன்னியமான சிந்தனை. அகிலம் நமது வெளியல்லஉலகம் நம்முடையதாக இருக்கலாம்; ஆனால், விட்டுக் கிளம்புகையில் நாம் எங்குமே இல்லை. அதாவது, நாம் எங்கும் போக முடியாதுநாம் அனுப்பிய மிக வேகமான(மணிக்கு 2, 52, 000 கி. மீ வேகத்தில் பயணிக்கும்)ஹீலியோஸ்-2   நம் அண்டையிலுள்ள ‘Proxima Centauri ‘யை அடைய 16000 ஆண்டுகள் ஆகும்!

இன்னொன்றுநம்முடைய சூர்ய எல்லை என்பது கொஞ்சம் நெகிழ்வுத்தன்மை கொண்டது1977-ல் வாயேஜர் திட்டம் தொடங்கியது. 2010-ல் நாசா தான் அனுப்பியவாயேஜர்விண்கலம் பற்றி 2013 வரை மூச்சே விடவில்லை. (சல்ஃபர்) கந்தக ஊற்றுக்களைப் பொழியும் எரிமலைகள் குரு கிரகத்தில் இருப்பதை அது படமெடுத்து அனுப்பியது; நெப்ட்யூனின் நிலவானட்ரைடனில்அதி உஷ்ணமான 13 கெல்வின்களில் எரிச் சீற்றப் பந்து விளையாடல்கள்!

(வாயேஜர் 1-ன் வானத்தில் சூர்யன் அவ்வளவு பிரகாசத்துடன் இல்லை. இப்போது இருக்கும் தொலைவின் அடிப்படையில் பூமியில் காணப்படுவதை விட 20, 000 மடங்கு குறைந்த பிரகாசம். Quora Answers-Tony Fredericks, None Astrophysics, Univ of California dt Dec8, 2019. வாயேஜர் -2லும் அதே நிலைதான். )

ஜே பி. எஸ் ஹால்டேன் சொன்னார், ‘அகிலம் நாம் நினைப்பதைக் காட்டிலும் வினோதமானது; அது மட்டுமல்ல நாம் கற்பனை செய்ய இயலா  வினோதங்களைக் கொண்டது.

உதாரணத்திற்கு இதைப் பார்ப்போம்பூமியிலிருந்து 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தள்ளியிருக்கும் ‘MH 87 விண்மீன்கருந்துளையைச் சமீபத்தில் படம் பிடித்தார்களல்லவா?அதன் எடையை அறிவீர்களா? நம் சூரியனைப் போல் 6. 5 பில்லியன்!அம்மாடி, அங்கே இருப்பவை பற்றி எண்ணவும் தான் கூடுமோ?

‘க்ராவிடி’ திரைப்படத்தில், நான் வெளியை வெறுக்கிறேன்என்று சாண்ட்ரா புல்லக், காரணமில்லாமல் கூவவில்லை. அதன் சுற்றுப்புறச் சூழல்கள் அப்படிவசதியில்லாததுபெரும் அபாயங்களும் அச்சமூட்டும் அழுத்தங்களும் கொண்டது. வெற்றிடத்தின் இடைவிடாத அழுத்தம் உடலைச் சூழ்ந்த, ஒலியற்ற, இருண்ட இடம். 

திரும்பவும்வாயேஜரைப்பார்ப்போம். நம்முடைய சூரிய அமைப்பினைத் தாண்டி பயணிக்கையில் அது எரிகற்களையோவிண்கற்களையோதூமகேதுக்களையோ எதிர் கொள்ள நேரிடாது; வெற்றிடத்தில் பயணிப்பதால் சேதாரமும் இல்லை. அதன் அமைப்பு எத்தகைய கதிர்வீச்சுகளுக்கு உள்ளாகும் என எனக்குத் தெரியாது. ஒரு பொருளாக அது மில்லியன் ஆண்டுகள் பயணிக்கக்கூடும். நம் இனமே அழிந்த பிறகு கூட அது பயணிக்கும் என்பதும் ஒரு அதிர்ச்சி தரும் சாத்தியக்கூறல்லவா? அறியமுடியா கல்லறையிலிருந்து ஒரு வணக்கம். வானைக் கண்டுபிடிக்கத் தொடங்கிய அதன் பயணம் விண்வெளியில் வீசியெறியப்பட்ட குடுவையில் அடைத்த செய்தி போல என நினைக்கிறேன். அங்கே இருப்பவருக்கு நம்மைப் பற்றிச் சொல்ல அதில் ஏராளமான செய்திகள் உள்ளன; இது என்னைப் பொறுத்தவரை அறியாமையேநாம் உணர்ந்து கொள்வது போல், அறிந்து கொள்வது போல்சிந்திப்பது போல் அங்கிருப்பவரும் இருப்பார்கள் என்ற அனுமானம் எவ்வகையில் ஏற்புடையது?அவர்கள் பார்ப்பார்கள்கேட்பார்கள் என்பதெல்லாம் அதிக பட்சம். ஆனால் வாயேஜர் தன்னை ஒரு வினோதமான வஸ்து என்று காட்டிக்கொள்ள முடியும்; இதைப் பாறைகளிலிருந்து வடிவமைக்க முடியாது; வாயேஜர் உங்களை ஆட்கொள்ளும் ஒரு வீட்டுப்பாடம்நாம்ஒளிஎனச் சொல்வது உங்களுக்குப் பொருள்படாது;  ‘காமாகதிர்கள்; இருந்தும் வாயேஜர் வசீகரிக்கும்

ஆமாம்காமாக் கதிரியக்கங்களை மனித இனம் மட்டுமேயா அறிந்திருக்கும்?இந்தத் தத்துவக் கேள்விக்கு விடை எனக்குபெரும்பாலும்உங்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை. நம்மை வாயேஜரில் அனுப்பாதவரை கவலை ஏன்?

டேனியல் டென்னெட் தன் சமீபத்திய நூலில் கேட்கிறார்வானின் தொலைதூர கிரகத்தில், அதன் கடற்கரையோரங்களில் நீங்கள் மட்டியிலா அல்லது மட்டிக் கட்டிகளிலா(சிப்பிகளை வெயிலில் வாட்டித் தின்னப் பயன்படுத்தும் பாறைக்கற்கள்) உயிரினத்தைத் தேடுவீர்கள்?’ இந்தக்கேள்வி மொத்தமாக அனைத்து அனுமானங்களையும் அசைக்கிறது; வாயேஜரில்  இரண்டும் உள்ளதால் அறிவியலாளர்கள் எதைப் பொறுத்து அறிய முற்படுவார்கள்?

நாம் வேற்றுக்கிரக உயிரிகளைச் சந்திப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர்களுடன் இலாபகரமான பரிவர்த்தனைகள் இயல்பவையா?நாம் பரிணாம வளர்ச்சி, மறுமலர்ச்சிசங்கீதம் போன்றவற்றை நம்முடைய நாய்டால்பின் போன்ற செல்லப் பிராணிகளுக்கோநம் நெருங்கிய உறவினரானசிம்பன்சிகளுக்கோ சொல்லியிருக்கிறோமா? பயனற்றதுதான்; ஆனால், அவை நம் அருகாமையில்நாம் தேடுபவையோ வெகு தொலைவில்நாம் வானிலே தேடும் அந்த நட்பு, விரும்பும் இனிய நட்பு, கைகூடாமலே போகலாம்நம் இருவரிடையே சொல்லிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது என்பதுதானே முக்கியம்

தன்னைத்தானே பெருக்கிக்கொள்ளும் பெரிய மூலக்கூறுகளின் அடிப்படையில் மற்ற உயிரிகளைத் தேடுவது சரிதானா?நாம் காணப்போவதில்லைஎத்தனையோ  சரியான வாத மறுப்புகள் இருந்தும் அதை அறியும் ஆவல் ஏன் உள்ளது?நாம் தேடுவதுதான் என்ன?

கண்டுபிடித்துவிட்டோம் என் வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின்விளைவுகள் என்ன? நமக்கு ஒரு மீளுறுதி கிடைக்கும். என்னது அது?வாழ்க்கை ஒரு தற்செயல் நிகழ்வு என்பதை அது  மீளுறுதிப்படுத்தும்

ஒரு உதாரணம் சொல்கிறேன்உருளை வயலில் நீங்கள் அறுவடை செய்கையில் திறமையாகச் செதுக்கப்பட்டசர்ச்சில்வடிவில் ஒரு கிழங்கைப் பார்க்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். பலப்பல பேச்சுக்களுக்குப் பிறகு அதற்கு சர்ச்சிலைப் போன்ற தோற்றம் இருக்கிறது என நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். இது வினோதமானதுநடக்க இயலாதது, முட்டாள் தனமும் கூட; இப்படி ஒன்று எப்படி நடக்கும்?உயிரினங்கள் உலகில் தோன்றியதைப் போன்ற வித்தியாசம் இது

பொறுங்கள்ஒரு உருளை அப்படியிருந்தால் இந்த நினைப்பெல்லாம் சரிஒரு அல்காரிதத்தை எழுதி, அதன் படி க்ரிஸ்பர் சி எஸ் உபயோகித்து டி என் ஏவில் மாற்றம் செய்தால் 173 உருளைகளை சர்ச்சில் வடிவிலும்அளவிலும் அறுவடை செய்யலாமே?

வேறெங்கோ இருக்கும் உயிர்களைக் கண்டறிதல் மூலம்உயிரிகள் என்பது ஒன்றும் அப்படி தற்செயலல்லஎன நிறுவலாமே! பொருட்களின் நெசவில் பொதிந்துள்ள  சாத்தியக்கூறுகளுள்ள இதுகாலம் வரும்போது வெளிவரலாம்

ஐயோபுதுக் கவலை ஒன்று ஏற்படுகிறதே! அந்த மற்றொரு கிரகத்தில்நுண்ணுயிரிவரைதான் பரிணாம வளர்ச்சி  ஏற்படுள்ளது என்றால் நாம் டென்னெட்டின்மட்டியைப் பார்க்கலாம்அது பாதி மீளுறுதியைத்தான் அளிக்கும்; ஏனெனில்மட்டிப்பாறைகள் வரை வந்துவிட்டோமே!

பாக்டீரியாக்களோ அல்லது வேறு வித உயிரினமோ பற்றிய சிந்தனைகள்அறிதல்கள்நம் தனித்தன்மையான மதிப்பற்ற கவலைகளுக்குள் நம்மை ஆழ்த்திவிடும். நுண்ணுயிரிலிருந்து பிறந்த மிருகம் நாம். எப்படி இப்படி பரிணாமம் அடைந்தோம் என தலை சுற்ற வைக்கும் குழப்பங்களுக்குள் அனாவசியமாகச் சிக்குகிறோம். தன் இக்கட்டான சூழலில் மற்றொரு கிரக வாசியும் இருப்பதில் ஆதரவு தேடும் இந்த மனிதனை என்ன சொல்ல? ஒரு அம்பினையோசக்கரத்தையோ, நகையையோ, சித்திரத்தையோ  பார்த்து நாம் அடையும் அனுபவம் போல வியர்த்தமான ஒரு ஆறுதலைத்தேடுகிறோம்கிரேக்கச் சிந்தனையாளர் க்ஸெனஃபானிஸ் சிரிப்பது கேட்கிறதா?

நம்மைச் சுற்றிலும் உள்ளவற்றைப் பற்றிய குறைந்த விழிப்புணர்வுதான் நம்மை வேறெதையோ தேடச் செய்கிறதுகொல்லைத் துளசிக்கு வீர்யம் குறைவு!! நாம் அறியக்கூடும் என நான் நினைக்கவில்லை

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே! இருக்கும் இடம் எதுவானாலும், நினைக்கும் இடம் பெரிது

ஆங்கில மூலம்: பெர்ட் கைஸர்; தமிழாக்கம்: பானுமதி ந. 

***

[மூலம்:https://www. threepennyreview. com/samples/keizer_w20. html

டச்சு நாட்டவரும், தத்துவவாதியும்முதியோர் நல மருத்துவருமான Bert Kaizer மானுட தர்ம விதி முறைகள் சார்ந்த நூல்களை நேஷனல் பதிப்பகத்துக்காக எழுதி வருகிறார். ’சாவைச் சுற்றி அகர வரிசையில் ஒரு பயணம்என்பது அவரது சமீபத்திய ஆங்கில மொழியாக்கம் செய்யப்படவுள்ள நூல். (From Ashes to Zombies.) ]