இங்கிருப்பவையெல்லாம்
இங்கிருந்தே தோன்றின
உன்னைப்போல
இச்சையால் உன் கவிச்சி நாடி
நல்லெச்சில் உதிர
பாதச்சுவடுகளை நுகரும் கருநாசி
என்னுடையதாக இருக்கட்டும்
பாய்ந்தோடி தேடிச்சலித்து
காற்றில் நீ இருந்த இருப்பை
சுயஅறிதல் கொண்டு
விரும்பிச் சுமப்பேன்
ஊரெல்லாம்
நீ நீங்கியபின்
உனதென்றாயிற்று
உருவெல்லாம்
உன் மறைவால்
உன்னெழிலாயிற்று
ஒவ்வொன்றை அறியும் தோறும்
ஒவ்வொன்றிலும்
இருக்கிறாய்
இருக்கக் காண்கிறேன்
இருப்பதான நாதமீட்டலில்
சுழன்றாடி தன்னிலை இழக்கிறேன்
சிந்தை தனில் பற்றித்துடிக்கும்
தீச்சுடர் நீ
ஆடா நின்ற அச்சுடரின்
ஒளிப்பிம்பம் உனது
உன் மூச்சே
சுடரின் வெம்மை
சுடர்களின் மது
நீ