சோறு – விஜய்குமார் சிறுகதை

ராமு வீட்டிற்குள் வரும்போது தாமோதரன் எட்டாவது தோசையை முடித்துக்கொண்டிருந்தார். அவரை ஓரப் பார்வையில் முறைத்துக்கொண்டே சமயலறைக்கு சென்று “எத்தனை?” என்று கமலாம்மாவை கேட்டான். “எண்ணுலயே கண்ணு”. “சுகரு இவ்வளவு வெச்சுக்கிட்டு..” என்று ராமு சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஹாலில் இருந்து ஒரு ஒழுக்க பவ்யத்தோடு எல்லோருக்கும் கேட்கும்படியாக “கமலா அந்த மாத்திரை டப்பாவை எடுத்துவா” என்று தாமோதரன் கத்தினார். கமலாம்மா களுக் என்று சிரிக்க ராமு கோபத்தை உதட்டில் அடக்கிக்கொண்டு “என்ன பாத்தாதான் இவருக்கு மாத்திரை நினைப்பு வரும்… சோறு மட்டும்…” என்று ஏதோ சொல்லவர கமலாம்மா “டேய்…” என்று ராமுவை அதட்டி அடக்கினாள்.

ஃபிரிட்ஜ் மேலுள்ள டப்பாவை எடுத்து வந்து இரவுக்கான மாத்திரைகளை மட்டும் தனியாக பிரித்து டீப்பாயில் வைத்தான். சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவிவிட்டு மாத்திரைகள் சரியாக இருக்கிறதா என்று கூட பார்க்காமல் அதை லாவகமாக விழுங்கிவிட்டு டப்பாவையும் தட்டையும் அப்படியே விட்டுவிட்டு தன் படுக்கை அறைக்கு செல்ல எழுந்தார். அவரது அலட்சியம் ராமுவுக்கு மேலும் எரிச்சலூட்டியது. டப்பாவில் உள்ள தீர்ந்துபோன அட்டைகளை பார்த்துவிட்டு, “மாத்திரை தீர்ந்தால் யாரும் சொல்ல மாடீங்களா?” என்று கத்தினான். “வாங்கிக்கலாம் வாங்கிக்கலாம்..” என்று தாமோதரனின் குரல் படுக்கை அறை இருளில் தேய்ந்து மறைந்தது. ஓரிரு வினாடிகள் அவர் சென்ற திசையையே பார்த்துவிட்டு ராமு பல்லை கடித்துக்கொண்டு தன் அம்மாவிடம் சென்றான். இவன் வரும் வேகத்திலேயே கமலாம்மா, “ உங்க ரெண்டு பேரு பிரச்சினையில் என்னை இழுக்காதீங்க..அவர்தான் இன்னைக்கு மாத்திரை ஒழுங்கா சாப்பிட்டுட்டாரே. அவரைத்தான் கொஞ்சம் சும்மா விடேண்டா..”

“உங்க ரெண்டுபேருக்கும் நான் சொன்னா ஏறவேயேறாதா? மாத்திர மருந்துகூட ஒழுங்கா எடுக்க தெரியாதா? உங்களுக்காகத்தான நான் வெளியூர் போய் வேலை தேடாம இங்கயே கெடச்ச வேலைய பாத்துகிட்டு இருக்கேன்.”

கமலாம்மா எதுவும் பேசமுடியாமல் நின்றாள்.

“சுகரு இவ்வளவு வெச்சுகிட்டு.. டாக்டர் அளவா சாப்பிடச் சொல்லுறாரு. ஆனா நாம ஃபுல் கட்டு கட்டிக்கிட்டு இருக்கோம்.”

“காலையில இருந்து பில்டிங்குல கெடையா நிக்குற மனுசண்டா. கொஞ்சமா சோறு போட்டா வகுத்துக்கு பத்துலங்கிறாரு. மனசு கேக்கமாட்டீங்குது”

ராமு ஆத்திரமும் கோபமுமாக தலையில் கை வைத்துக்கொண்டு அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்தவாறே, “முருகா… எப்பப்பாரு சோறு சோறு… சுகரப்பத்தி கவலையே இல்ல. இந்த சோறே அவர சாகடிக்கப்போகுது பாருங்க..”

கமலாம்மா கண்ணைக்கசக்க அதைப்பார்த்த ராமுவும் உதடுகளை பிதுக்கியவாறே தன் அறைக்கு விரைந்தான்.

2

அடுத்து வந்த சில நாட்களுக்கு ஒப்பீட்டளவில் குக்கர் வாசம் கம்மியாகவே அடித்தது. ராமுவும் அவன் பங்கிற்கு பச்சை காய்கறிகளை வாங்கி ஃபிரிட்ஜில் அடுக்கி இருந்தான். அம்மாவும் சப்பாத்தியாக உருட்டி தள்ளிக் கொண்டிருந்தாள். வீட்டில் சாப்பாட்டு ஒழுங்கு பீடித்து நிகழ்ந்து கொண்டிருந்தாலும் ராமுவுக்கு அப்பாவின் மேல் சந்தேகம். அப்பாவின் பைக் அந்த முக்கு மெஸ்ஸில் அடிக்கடி நின்று வந்தது. பொதுவாக சப்பாத்தியை பார்த்தால் முகம் சுளிக்கும் தாமோதரன், எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் அதை விழுங்கும் போதே தெரிந்தது, அவர் கும்பிக்கான சோற்றுப்பதம் வேறு எங்கோ பூர்த்தி செய்து கொண்டிருக்கிறார் என்று.

பொங்கல் பிரியரான சுப்பிரமணி மாமாவுடன் அப்பாவை சேர்த்துவைத்து முக்கு மெஸ் பக்கமாக பார்க்கும்போதே ராமுக்கு தெரிந்தது அவன் சந்தேகப்படுவது உண்மைதான் என்று. ஒளிந்து சாப்பிடும் பழக்கம் இந்த குடியானவனுக்கு எங்கிருந்துதான் வந்ததோ. இது ஒன்றும் வேலைக்காகாது என்று ராமு கோவமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவரை அங்கேயே கையும் களவுமாக பிடித்திருக்க வேண்டும். என்ன செய்வது; அப்பவாயிற்றே.

தன் ஆத்திர அலைகளை உருவேற்றி அப்பாவிற்க்காக காத்துக் கொண்டிருந்தான். சர்க்கரை அளவை காண்பிக்கும் கருவியை பக்கத்தில் வைத்துக்கொண்டான். “அவர் வந்ததும் நடு வீட்டிலேயே வைத்து சர்க்கரை அளவை சோதிக்க வேண்டும். எப்படியும் 350 தாண்டி இருக்கும். அங்கிருந்து பிரச்சனையும் சண்டையையும் மேல் எடுத்துச் செல்ல வேண்டும். இரண்டில் ஒன்று பார்த்துவிடவேண்டும். வாயைக் கட்டுப்படுத்தி மருந்து மாத்திரைகளை உட்கொண்டு உயிர் வாழ விரும்புகிறாரா அல்லது எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று தான் வீட்டை விட்டு வெளியேறுவதா? இப்படித்தான் இந்த சண்டையை கொண்டு போகவேண்டும். இது என்ன விளையாட்டா? சும்மா விடக்கூடாது.. ஆரோக்கிய விரயமும் ஊதாரித்தனம் தான்.”

தாமோதரன் வீடு வர நேரம் ஆகிக்கொண்டே போனது. ராமு தான் நடத்தவிருக்கும் குடும்ப அதகளத்தை தன் மனதில் நிகழ்த்தி பார்த்துக்கொண்டிருந்தான். அது தன் எண்ண திரையில் சினங்கொண்டு எழுவதாகவும்; முஷ்டியோங்கி அடிப்பதாகவும்; கண்ணீர்விட்டுக் கெஞ்சுவதாகவும்; உதாசீனஞ்செய்து வெளியேறுவதாகவும் ஓடிக்கொண்டிருந்தது. அப்பா என்று பாராமலும் சில கெட்ட வார்த்தைகள் வந்து விழுந்தது. “சோற்றுப் பண்டாரம்; எப்போதுமே சோத்துல தான் கண்ணு. கைய காலை முறிச்சு வீட்டுல போட்டாத்தான் கம்முனு கிடக்கும். என் வயசு பசங்க எல்லாம் அவனவன் வாழ்க்கையை பாத்துட்டு போறான், நான் இதுங்களுக்கு பின்னாடி திரிய வேண்டியதா இருக்கு. முருகா!… விட்டுட்டு போகவும் முடியல, சொன்னா கேட்கவும் மாட்டேங்குதுங்க.” ராமு தன் அகச் சண்டையில் களைத்துப் போயிருந்த சமயம் தாமோதரன் தன் முன் தள்ளிய வயிற்றின் மேல் வேட்டியை இறுக்கிக் கட்டியவாறு உள்ளே வந்தார். ராமுவைப் போலவே முக ஜாடை கை கால் வாக்கு. ஆனால் அவனைவிட குள்ளம், ஐந்து அடிக்கும் குறைவாகவே இருப்பார். சிறுங்கூட்டு உடம்பு. ராமுவோ கிட்டத்தட்ட ஆறு அடி உயரம். “எப்பப்பா வந்த?” என்று கேட்டவாறே தன் தோளில் சுமந்து வந்த பையை சுவரோரமாக வைத்துவிட்டு ஃபேன் ஸ்விட்சை போட்டுவிட்டு ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை இழுத்து அதனடியில் அப்பாடா என்று அமர்ந்தார். ராமு அவரது வலது கைவிரல்களை பார்த்தான் அது என்னை பிசுக்காக இருந்தது. “எங்க வெளியில சாப்பிட்டு வாராரோ?” ஏனோ அந்த களைத்த முகத்துடன் சண்டையிடும் திராணி சட்டென்று இவனுக்கு இல்லாமல் போனது. அம்மா உள்ளே இருந்து “சாப்பிடுறியாடா? எடுத்து வைக்கவா?” என்று கேட்டாள். “சாயந்திரம் தான் அந்த முக்கு மெஸ்ஸில சாப்பிட்டேன் மா” என்று சொல்லிவிட்டு எழுந்தான். தாமோதரன் திடுக்கிட்டு விழித்து அவனைப் பார்த்தார். ராமு அவரைப் பார்த்துக்கொண்டே தன் அறைக்குச் சென்றான்.

3

“பயப்பட ஒன்னும் இல்ல, மைல்டு அட்டாக் தான். அப்ஸர்வேஷன்ல இருக்காரு. சுகர் லெவல் வேற 400 இருக்கு. அத ஒரு ரெண்டு நாள்ல கண்ட்ரோலுக்கு கொண்டுவந்திட்டு அப்பறம் முடிவு எடுப்போம்” என்று டாகடர் சொன்னபோது அம்மா ராமுவைப் பார்த்தாள். அவன் கண்கள் ஈரப்பதம் ஏறியிருந்தது. அவன் உதடுகள் அழுகையால் பிதிங்கியுள்ளதா அல்லது கோவத்தால் வெறுவியுள்ளதா என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. டாக்டரின் தைரிய வார்த்தைகள் கமலாம்மாவிற்கு நம்பிக்கை தந்தபோதிலும் ராமுவின் இறுகிய அமைதி அவளை கலங்கடித்தது. இருவரும் ஐ சி யூ வார்டின் ஓரத்தில் வந்து அமர்ந்த போது ராமு களைத்திருந்தான். கமலாம்மா அழுது முடித்த அசுவாச உணர்விலிருந்தாலும் ராமு ஏதாவது சொல்வானா, அதற்க்கு நம் பதில் என்ன

என்ற யோசனை அவளை பீடித்திருந்தது. சிறிது நேரம் மெளனமாக நகர, ராமு ஒரு பெருமூச்சுடன் தலையில் கை வைத்தான். அவனது அங்க நகர்வுகளை கவனித்துக்கொண்டிருந்த கமலாம்மா அதையே அவனது சொற்களாக பாவித்து “அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது கண்ணு. அதான் சரியான நேரத்துக்கு ஹாஸ்பிடல் வந்திட்டமுல்ல. டாக்டர் தான் பயப்பட ஒன்னும் இல்லனு சொல்றாருல்ல.” என்று மறுமொழி உரைத்தாள்.

ராமு நிமிர்ந்து பார்த்தான். அவன் முகம் வீங்கியிருந்தது. பதிலேதும் கூறவிரும்பாமல், “நான் கொடுத்த பேக் எங்க? அதுக்குள்ள தான் இன்சூரன்ஸ் கார்டு, பணம் எல்லாம் இருக்கு”.

“இதோ இந்த கட்ட பைக்குள்ள தான் பத்திரமா வச்சிருக்கேன்”

ராமு அதை வாங்கி மடியில் வைத்துக்கொண்டு மறுதிசை நோக்கி முகம் திருப்பிக்கொண்டான்.

“ஏன்டா கண்ணு”

“ஏன்னா! என்னன்னு சொல்றது? நான் சொன்ன ரெண்டு பேர்ல யாரு கேக்குறீங்க?”

ராமு வெறுப்பாய் பேசியதே அவளிற்கு ஒரு திருப்த்தி தந்தது “நான் என்னடா பண்றது? உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல”.

“நான் சொன்ன மாதிரிதானே இப்போ நடந்தது. சோறு கமியா சாப்பிடுங்க, சீனி கமியா போட்டுக்கோங்க, வாக்கிங் போங்க. மாத்திரை மருந்து மறக்காதீங்க. படிச்சு படிச்சு சொன்னேன். யாருக்கும் அக்கறை இல்லை. சின்ன வயசுல கஷ்ட்டப்பட்டீங்க ரைட்டு, இன்னுமா படனும்? ஒடம்பைக்கூட கவனிக்காம? என் வயசுல நம்ம சொந்தபந்தத்தில இப்படி யாராச்சும் சீரழியிறாங்களா சொல்லுங்க?”என்று ராமு குரல் தாழ்த்தி தொண்டை நரம்புகள் புடைக்க கத்திக் கொண்டிருக்கும் போதே கமலாம்மா கண்ணீருடன் குறுக்கிட்டாள். “வேண்டாம்டா”.

“இப்படி கொஞ்சம் கொஞ்சமா போகுறதுக்கு, ஒரேயடியா போய்ட்டா இழுத்து எறிஞ்சுட்டு கம்முன்னு இருந்துக்கலாம்”

“டேய்!!……” என்று குரலை உயர்த்திய வேகத்திலேயே கண்ணீர் கசிந்தாள். “தப்பு தப்புன்னு சொல்லுடா”

அம்மாவின் அதிர்ந்த தெறிப்பு தம் முகத்தில் அறைய, ராமுவும் உடைந்து தேம்பினான். மனதிற்குள் “தப்பு தப்பு” என்று சொல்லிக்கொண்டான்.

4

பணம் கட்டிவிட்டு அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தபோது பசி வயிறு கிள்ளியது. அம்மாவின் வெறும் வயிற்று ஜீரணம் உறக்கவே பறையடித்தது. மீண்டும் எழுந்து சென்று காபி வாங்கி வந்து கொடுத்தான். அதை அம்மா மடக் மடக் என்று அருந்துவதைப் பார்த்து வயிற்றுக்காகவே வாழும் ஜீவன்கள் என்று மனதிற்குள் ஒரு ஒற்றை சிரிப்பு சிரித்துக்கொண்டான். அம்மா ஆசுவாசம் அடைந்தாள். சிறிது நேரம் சும்மா இருந்தனர்.

கமலாம்மா, “அந்த நர்ஸுகிட்ட உள்ள எப்போ போய் பாக்கலாம்னு கேட்டேன். கொஞ்ச நேரத்துல சொல்றேன்னு சொல்லிச்சு.”

“ஹ்ம்ம்”

“டெஸ்டு எல்லாம் எடுத்து எவ்ளோ நேரம் ஆகுது. வெறும் வயிறா இருப்பார். ஏதாச்சும் கொடுத்தாங்களோ இல்லையோ” என்றாள்

“ஐ சி யூல இருந்தாலும் சோறு மறக்காது” முக சலனமில்லாமல் ராமு சொன்னான்.

இம்முறை கமலாம்மாவிற்கு எரிச்சல் வந்தது. “இவன் ஒருத்தன்.. உனக்கு வேணுன்னா அது சாப்பாடா இருக்கலாம். எங்களுக்கெல்லாம் அது தாண்ட உசுரு. உனக்கெல்லாம் என்ன தெரியும். எத தொட்டாலும் சாப்பாட்ட வெச்சே திட்டுனா?” விழுந்தாள்.

ராமுவை மறுமொழியில்லாமல் ஆக்கியது. அதை உணர்ந்த அம்மா, தணிந்த குரலில் மீண்டும் ஆரம்பித்தாள். “முன்னமெல்லாம் இப்படி இல்லடா கண்ணு. அப்பெல்லாம் பஞ்சம். மூணு நாலு வருஷம் மலையில்லாம போய்டும். கெடச்சத சாப்பிட்டிக்கணும். எனக்கே நல்ல நியாபகம் இருக்கு. நான் சின்ன புள்ள. உங்க அப்பச்சி வெள்ளி காசையெல்லாம் வித்து இருக்காரு. விவசாயம் இல்லாதப்ப நானெல்லாம் நூல் கோக்க போயிருக்கேன். நாலு அனா தருவாங்க. உங்க அப்பா சின்ன வயசா இருக்கும்போது இன்னும் அதிக பஞ்சமாம். நானெல்லாம் அப்போ பொறக்கவே இல்ல. சொல்லுவாங்க. நானே கஷ்ட்டப் பட்டிருக்கேன். உங்க அப்பவெல்லாம் இன்னும் எவ்ளோ கஷ்ட்டப் பட்டரோ? உங்க அப்பாரு சின்ன வயசிலேயே செத்துபோய்ட்டாரு. உங்க ஆத்தாவும் அப்பாவும் தான் அப்போ. பாவம்டா!”

ராமு உம் கொட்டிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தான்.

அவனது உடற் திசை தன்னை நோக்கி திரும்பி அமர்ந்ததையும் அவனது ஆர்வம் காட்டும் உடல்மொழியை சந்தேகமாக பார்த்துவிட்டு என்ன என்பது போல் தலையசைத்து கேட்டாள்.

“அப்புறம் என்ன ஆச்சு”

ராமுவின் புதிய ஆர்வம் கமலாம்மாவின் ஞாபகங்களை நெருட அவன் எதை கேட்கிறான் என்பதையே யோசிக்காமல் அவள் தனக்குத் தானே சொல்லிக்கொள்வது போல் ஆரம்பித்தாள். “அப்பாவுக்கு உன்னோட அப்பத்தா தான் சாமி. அவ உடம்ப உறிஞ்சிதான் அப்பா உயிர் வளர்த்ததா சொல்லுவாரு. நீ என்னமோ அரிசிச்சோறு இருக்க இப்படி சொல்ற. அப்பாவுக்கு அந்த காலத்துல சோளச்சோறோ கம்மஞ்சோறோ கூட கிடையாது. காக்கஞ்சி அரைக்கஞ்சிதான். அப்பத்தா காக்கஞ்சி சாப்பிட்டதான் அப்பாவுக்கு அறைக்கஞ்சி கிடைக்கும். அப்பெல்லாம் கிணறு வெட்ட குளம் வெட்ட வாய்க்கால் வெட்ட சனங்களை கூட்டம் கூட்டமாக கூட்டிகிட்டு போவாங்கலாம். அப்போ அப்பா குழந்தை பையன். அப்பத்தா அப்பாவை தூக்கிகிட்டு கிணறு வெட்ட போய்விடுமாம். எந்தக் கோயிலிலும் பூசை இருக்காது. வயிறு காஞ்சா சாமி ஏது. யாரும் மாடு கண்ணு கூட வச்சுக்கல. பாதி சனம் பஞ்சம் பிழைக்க வெளியூர் போயிட்டாங்க. மீதி சனம் அப்படியே…” சட்டென்று கமலாம்மா நிறுத்திக்கொண்டாள். முந்தானையால் மூக்கை சிந்திக்கொண்டு உள்ளங்கைகளால் தன் ஈரப்பதமான கண்களை நீவிக் கொடுத்தாள். மூக்கை உறிஞ்சிக்கொண்டு கொஞ்சம் அசமந்த சிரிப்புடன், “நம்ம ஊருக்கு உடும்பூர்ன்னு ஏன் பேரு வந்ததுன்னு தெரியுமா? அந்த காலத்துல நிறைய உடும்பு இருந்துதாம். பஞ்சத்தில எல்லா உடும்பையும் அடிச்சு சாப்பிட்டுட்டாங்கலாம். இப்ப ஏதோ கோயமுத்தூர்ல பில்டிங்கு கான்ட்ராக்ட்டு அது இதுன்னு வசதி வாய்ப்பா இருக்கோம், ஆனாலும் இன்னும் நாங்க அந்த பழைய உடும்பூர்க்காரங்கதான்டா.”என்று சொல்லி சிரித்தாள். “எல்லாம் பழைய கதை” என்று நிறுத்திக் கொண்டாள். ராமு மனசு அடைத்துப் போனான். சொல்லா சொற்கள் அவனைச்சுற்றி வட்டம் அடித்தது.

5

ஒரு சுபதினத்தில் அறுவை சிகிச்சை எனும் அபய நிகழ்வு ஏகபோகமாக நடந்து முடிந்தது. தாமோதரனும் கமலாம்மாவும் புதுப் பொலிவுடனும் தைரியத்துடனும் இருப்பதைப் பார்ப்பதற்கு ராமுவுக்கு ஒரு ஓரத்தில் நிம்மதியை தந்தது. எனினும் விசாரிக்க வந்தவர்களிடம் இவர்கள் இருவரும் ஏதோ குடும்ப நிகழ்வின் களிப்புடன் நடந்துகொள்வது ராமுவுக்கு எரிச்சலாகவும் இருந்தது. அனேகமாக தாமோதரனை பார்க்க வந்த அனைத்து ஆண்களும் நெஞ்சு பிளக்கப்பட்டவர்கள்தான். அவர்கள் தம் சட்டைப் பொத்தானை கழட்டி மார்பு தழும்புகளை காட்டும்போது நெஞ்சுரம் மிக்க முழு வீரர்களாகவும், பத்திய சாப்பாடு மற்றும் மருந்து உட்கொள்ளும் சூத்திரத்தைச் சொல்லும்போது அரை வைத்தியர்களாகவும் காட்சி அளித்தார்கள். அதுவும் பொங்கல் பிரியரான சுப்பிரமணி மாமா பார்க்க வந்தபோது தாமோதரனுக்கு குஷி தாங்கவில்லை.

“என்னடா தாமோதரா! கடைசியில் நீயும் எங்க கிளப்பில் சேர்ந்துட்டியா?” என்ற சுப்பிரமணியிடம், “நெஞ்சு அடைப்பு எடுத்தாச்சுல, இனி ஒரு ஏழு எட்டு வருஷத்துக்கு கவலை இல்லை. என்ன!, ஒரு கடப்பாறையை தூக்கி நெஞ்சில் வைத்த மாதிரி ஒரு வளி, அவ்வளவுதான்.” என்று தாமோதரன் சொல்லி மெல்ல சிரித்தார். தலையிலடித்துக் கொண்டு வெளியேறிய ராமுவை யாரும் கவனித்ததாக தெரியவில்லை.

டிஸ்சார்ஜ் ஆகும் முன்னே உணவு நிபுணரை சந்திக்க வேண்டியிருந்தது. இப்படி மருத்துவரை சந்திக்கப் போகும்போது தாமோதரன் ஒரு பள்ளி மாணவனுக்கு உண்டான பாவனையை முகத்தில் ஏந்துவார். எல்லை மீறிய ஆனால் ஒழுக்க வளையத்துக்குள் வர விரும்புகிற ஒரு அப்பாவி மாணவனை அவரிடம் தரிசித்து விடலாம்.

அவர்கள் முறை வந்ததும் ராமுவை முன் விட்டு பின் தொடர்ந்தார் தாமோதரன். உள்ளே உணவு நிபுணராக ஒரு இளம் வயது பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்த உடன் மாணவன் மறைந்து ஒரு கௌரவமான தகப்பன் தோன்றினார். இப்படியான ரூப மாற்ற பாவனை ராமுவுக்கு தெரிந்ததே என்பதால் அவன் பெரிதாக ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் உள்ளே சென்றதிலிருந்து பொத்தானை அழுத்திய தானியங்கி போல் பலநாட்கள் சொல்லித் தேய்த்த பிரசங்கத்தை நடத்தத் தொடங்கினார் அந்த இளம் வயது உணவு நிபுணர். தாமோதரன் ஆமோத்தித்தும் மறுத்தும் பிரசங்கத்தை உள்வாங்கி கொண்டிருந்தார். எப்படியோ நல்லது நடந்தால் சரியென்று அந்த நிகழ்வின் போக்கை கவனித்துக் கொண்டிருந்தான்.

“புருஞ்சுதுங்களா சார். அதாவது மாவு சத்து கமிய எடுத்துக்கணும். அதுதான் க்ளுகோஸ் லெவல் கமிய வெச்சுருக்கும். எண்ணைப் பலகாரம் கூடவே கூடாது. காய்கறி எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம். சக்கரை மறந்தும் சாப்பிடக்கூடாது. அப்புறம் முக்கியமான விஷயம், மூணு வேளையும் ஃபுல்லா சாப்பிடாம பிரிச்சு பிரிச்சு சாப்பிடணும்.”

தாமோதரன், “சரியா போச்சு போங்க. நான் சாப்பிடறதே சோறு மட்டும்தான். அதையே வேண்டான எப்படீங்க மேடம். பிரிச்சு பிரிச்சுன்ன எப்படீங்க”

“கோட்டா வெச்சு சாப்பிடுங்க. மூணு வேளைக்கு பதிலா அஞ்சு வேளை ஆறு வேளைன்னு பிரிச்சுக்கணும். அதுக்குன்னு எல்லா வேளையும் ஃபுல் கட்டு கட்டக்கூடாது. எப்பயும் பாதி வயிறுதான். அப்போதான் க்ளுகோஸ் லெவல் கண்ட்ரோல்ல இருக்கும்.”

“அது சரி… கோட்டா வெச்சு….” என்று உடலை அசௌகரியமாக நெளித்து ஏமாற்றத்துடன் இழுத்து சொல்லும்போதே தெரிந்தது, ஏதோ சொல்லொக்கூடாத விஷயத்தை சொல்லிவிட்டார்கள் என்று.

“உங்க நல்லதுக்குதான் சார்.”

“ஆமா.. என் நல்லதுக்கு தான்”

ராமு, “அப்பா, உங்களை என்ன இப்போ சாப்பிடவே கூடாதுனா சொன்னாங்க.”

தாமோதரன் அமைதியானார்.

ராமு அந்த உணவு நிபுணரைப் பார்த்து தொடர்ந்தான். “இப்படித்தாங்க மேடம். எதுக்குமே சரி பட்டு வரமாட்டார். நாங்கெல்லாம் இவருக்கு பின்னாலயே சுத்தணும். கொஞ்சம் அசால்ட்டா விட்டாக்கூட ஏமாத்திருவாரு. சோறுன்னா அவ்ளோதான்.”

இவர்கள் பஞ்சாயத்திற்குள் வர பிரியம்மில்லாமல் அசௌகரியமாக தலையசைத்தது மேடம்.

தாமோதரனின் அமைதி பொறுக்காமல் ராமு மீண்டும். “அடுத்த மாசம் ஒரு ப்ராஜெக்ட் விஷயமா மூணு மாசம் நான் அமெரிக்கா போகணும். ஆனா இவரை நம்பி நான் எங்கயும் போக முடியல. நாங்க சொன்ன கேக்க மாட்டாரு மேடம். நீங்களே ஸ்ட்ரிட்ட சொல்லீருங்க.”

தாமோதரன் சரி என்பதுபோல் தலையசைத்தார். மேடம் மேலும் உணவு முறை சூதானத்தை தொடர்ந்தார். தாமோதரனுக்கு எல்லாம் கோட்டா கோட்டா என்றே காதில் விழுந்தது.

“அரை வயிறு கால் வயிறு காலமெல்லாம் முடிஞ்சுதுன்னு நெனெச்சேன். கோட்டா வெச்சுதான் மேடம் தூங்குனேன். கோட்டா வெச்சுதான் மேடம் வேலைக்குப் போனேன். கோட்டா வெச்சுதான் மேடம் கடன் அடைச்சது வீடு கட்டினது எல்லாம். கோட்டா வெச்சே சாப்பிட்டுக்கிறேன் இனிமேல்.” சிறிது இடைவேளை விட்டு மீண்டும் ஆரம்பித்தார். “ஆனா இவனுக்கு நான் எதையும் கோட்டா வெச்சு செஞ்சதில்ல, வேணுங்கிறத வாங்கிக் கொடுத்துடுவேன். சரி இந்த கோட்டவெல்லாம் என்னோட போகட்டும். என்ன பத்தி இனி கவலைப் படாம அமெரிக்கா போகச்சொல்லுங்க மேடம்.”

வீடு வரும் வரை கோட்டா கோட்டா என்றே முனகிக்கொண்டு வந்தார். தன்னை விசாரிக்க வருபர்களிடமும் கோட்டாவைப் பற்றியே பேசினார். சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வதால் எப்படியோ கோட்டாவுடன் சமரசம் செய்துகொண்டார் என்றே ராமுவிற்கு தோன்றியது. தவிர்த்தலைந்தது நிகழ்வேறி கடந்துசென்றதில் ஒருவித விடுதலையுணர்வை அடைந்தான். இதுநாள்வரை தன் முன் பாக்கெட்டில் ஒரு அரை செங்கல்லை சுமந்தலைந்தது போலிருந்தது. அது சட்டென்று இல்லாமலானதில் ஒரு உற்ச்சாகம். அதே உற்சாகத்தில் அமெரிக்கா செல்ல ஆயத்தமானான்.

6

“ஒழுங்கா மாத்திரை மருந்து சாப்பிடுங்க, டாக்டர்கிட்ட போங்க, கோட்டா வச்சு சாப்பிடுங்க” என்ற ராமுவின் வேண்டுதலிற்க்கு மறுமொழியாக “அப்பத்தா திதிக்கு ஊருக்கு திரும்பி வந்திடனும்” என்று கட்டளையிட்டு வழி அனுப்பிவைத்தனர்.

புதுப்பயணத்தின் பதட்டமோ குதூகலமோ இல்லாமலிருந்தது. விமானத்திற்குள்ளும் ஒரு புடிபடாத சோகமே தேங்கியிருந்தது. பயண நெடுகிலும் அப்பாவின் நினைவே. சிந்தனை முழுவதும் அவரது கோட்டா வைத்த வாழ்கையே ஆக்கிரமித்திருந்தது. தான் அவரை வைத சொற்கள் தனிச்சையாக ஒவ்வொன்றாக தன் எண்ணத்திரையில் நடந்தேறிக் கொண்டிருந்தது. “சோற்றுப்பண்டாரம், பஞ்சப்பராரி, காணாததைக் கண்ட நாய், காட்டு மனுசன்.” இதுவெல்லாம் தகப்பனை நோக்கி சொன்ன சொற்கள்தானா? ஆம், எல்லா வசைச்சொல்லிற்கும் அடியில் ஒரு மகனின் ஆன்மா. நீத்தார் சுமையை தந்தை சுமக்கிறார். தந்தையை மகன் சுமக்கிறான். கொஞ்சம் கனமாகத்தான் உள்ளது. “கோட்டா கோட்டா கோட்டா கோட்டா…..” அப்பாவின் சமீபத்திய உச்சாடனம் ராகமுவிற்கு கர்ம பலன் போல கடந்து வந்திருந்தது. ராமுவின் மனமும் அதன் போக்கில் உச்சாடனம் செய்துகொண்டிருந்தது. விமான பயணத்தின் இறுக்கமா அல்லது அலை அலையாய் அலைந்த மனம் சோர்ந்து தன்னையே நோக்கித் திரும்பிக்கொண்ட காரணமா அல்லது நீத்தார் விட்டுச்சென்ற வித்தா என்று தெரியவில்லை. ராமு “கோட்டா கோட்டா கோட்டா” என்றே உச்சரித்துக்கொண்டிருந்தான்.

“கோட்டா கோட்டா கோட்டா கோட்டா…”

இந்த உச்சாடனம் அந்தரவெளியில் அர்த்தம் பொதிந்ததாகவும், வாழ்வில் பொருத்திப் பார்க்கும்போது புடிபடாததாகவும் இருந்து ராமுவை ஆட்டுவித்துக்கொண்டிருந்தது. விமானம் தரை தொட்டதும் ஏன் என்று தெரியாமலேயே ராமு ஒரு சங்கற்பம் ஏற்றிருந்தான்.

வந்திறங்கி ஒரு வாரம் ஆகியிருந்தது. புதிய சங்கற்பத்திற்கு வலுசேர்த்தாற்போல் நாளொன்றுக்கு இருவேளை உணவுதான் அமைந்தது. புதிய நிலம் தந்த பரபரப்பும் அதன் அருகாமையற்ற சூழலும் அப்படி அமைத்து தந்தது.

தனக்கு முன் இரு பெரும் பணிகள் இருப்பதை உணர்ந்தே இருந்தான். ஒன்று திரளான வெள்ளையர்களுக்கு நிரல் கட்டுமான பயிற்சி அளிப்பது, மற்றொன்று தன் துருத்திய வயிற்றுக்கு ஒரு முடிவு கட்டுவது.

வந்ததிலிருந்து தன் வயிறு நெகிழ்ந்து கொஞ்சம் கரைந்திருந்தது. உணவில் திளைப்பது ஏனோ அதுவாகவே மட்டுப்பட்டிருந்தது. உணவை மேலும் கட்டுப்படுத்தினான். அதுவும் கட்டுக்குள் வந்தது. கட்டுக்குள் வந்ததாலேயே மேலும் அதை அடக்கினான்; ஆண்டான்; வருத்தினான்; வருந்தினான். எண்பது என்பது எழுபது ஆனது. அதனால் அது அவனிடம் தோற்று வந்தது. உடலின் பிரதேசத்தை மேலும் கைப்பற்ற அவன் மனக்கிடங்கில் புதிய ஆயுதங்கள் வைத்திருந்தான்.

பேலியோ டயட்.

எழுபது ஆனதும் உடலின் மேல் தனக்கு உள்ள அதிகாரத்தை ராமு உணர ஆரம்பித்திருந்தான் அதிகாரம் யாருக்குத்தான் பிடிக்காது.

பேலியோ டயட், இன்டர்மிட்டெண்ட் டயட் ஆக மாறியது. உணவுக்காக உடலைத் தனக்கு முன் மண்டியிட வைத்தான். தன் எல்லைக் கோடுகளை உள்ளிழுத்துக்கொண்ட உடல் முற்றிலும் பணிந்தது. அதிகாரம் மேலும் ஆக்ரோஷமாக செயல்பட்டது. இன்டர்மிட்டெண்ட் டயட் வாரியர் டயட் ஆக மாறியது.

உடல் அறுபதிஐந்தாக குறைந்திருந்தது. இப்போது அப்பனுக்கு புத்தி சொல்லும் யோக்கியதையை பெற்றிருந்தான். ஒல்லியாக அழகாக இருந்தான்.

ஒரு மேடு ஒரு பள்ளத்தை உருவாக்குவது போல, ஏனோ தன் மற்றொரு பணி பெரும் போராட்டமாகவே இருந்தது. அன்று குளிரூட்டப்பட்ட ஒரு அரங்கின் மேடையில் நின்று கொண்டு தன் முதுகுக்குப் பின்னால் உள்ள வெண்திரையில் படங்களையும் பாடங்களையும் காண்பித்து அந்த வெள்ளைத் திரளுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தான். இல்லையில்லை தன்னை விற்றுக் கொண்டிருந்தான். இலகுவாக வரும் கலை ஏனோ திக்கித் திணறியது. தன்னைத் தானே நொந்து கொண்டான். நொந்து கொள்ளும் தோறும் தொடைகள் நடுங்கின முகம் இறுகியது காது வெப்பமானது.

அந்த நாளின் முதல் பாதி முடிந்திருந்தபோதே ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை என்று உணர்ந்திருந்தான். எத்தனை திக்கல்கள், தடுமாற்றங்கள். இப்போது உணவு இடைவேளை தான். மீண்டும் மதிய வேளையில் இருந்து இந்த வெள்ளையர்களிடம் தன்னை நிகழ்த்திக் காட்ட வேண்டும். காலை அமர்விலேயே பல பேர்கள் நீர்யானை போல் வாயைத் திறந்து திறந்து மூடினர். ஒவ்வொரு முறையும் அவனுக்கும் அது தொற்றிக் கொண்டிருந்தது. மதிய அமர்வில் இன்னும்பல நீர்யானைகள் தோன்றும்.

மதிய உணவிற்கு டோக்கன் வாங்கும் வரிசை மிக நீண்டதாக இருந்தது. வெறுப்பாய் வந்து வரிசையில் நின்றான். வெள்ளையர்கள் ஸ்பானியர்கள் ஆசியர்கள் ஆப்பிரிக்கர்கள் என்று உலகத்தோர் அனைவரையும் ஆங்காங்கே கிள்ளி எடுத்து வரிசையில் போட்டதுபோல் பலதரப்பட்டவர்கள் நின்றிருந்தனர். ராமுவிற்கு தனது தடுமாற்றமே மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. அன்று ஏதோ உணவுத்திருவிழா போலும். அனைவரும் ஒருவித குதுகலத்துடன் இருந்தனர். தனக்குள் மூழ்கியிருந்த ராமு ஏதோ வாசனை பட்டு வெளி பிரக்ஞைக்கு வந்தான். வரிசையில் நின்றிருந்த ராமுவிற்கு எங்கிருந்தோ ஒரு நீத்தார் குரல் கேட்டு அடங்கியது. திடுமென முழு பிரக்ஞைக்கு வந்த ராமு சுற்றும் முற்றும் பார்த்தான். உணவுத் திருவிழா மிக கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.

நீத்தார் மூத்தார் நெட்டி முறித்து எழுந்தனர்.

தாய், மெக்சிகன், சைனீஸ், கான்டினெண்டல், மெடிட்டரேனியன், இண்டியன், இங்கிலீஷ் என்று இன்னும் என்னென்னவோ பதாகைகள் ஆங்காங்கே காணப்பட்டது. பதாகை கீழே புஃவே நடந்து கொண்டிருந்தது.

ராமுவின் மேல்மனம் அந்த வரிசையில் இருந்து விலக எத்தனித்தாலும் அவனை விலக விடாமல் ஒரு நீத்தார் பிடித்து வைத்திருந்தார். ராமு, “என்ன உணவுத்
திருவிழாவாக இருந்தால் என்ன ஒரு சூப் மட்டும் ஆர்டர் செய்ய வேண்டியதுதான். இப்போது இருக்கும் என் உடல் வடிவு எனக்கு பிடித்துள்ளது. உடல் வெல்லக்கூடாது. போராடு, மேலும் போராடு, போரிடு” என்று மனதை உறுதிப்படுத்தினான்.

பாதி வரிசை முடிந்தவுடன் பல வாசனைகளுக்கு மத்தியில் அந்த ஒன்று மட்டும் வடிகட்டி அவனுக்கு வந்து சேர்ந்தது. முகர்ந்து நான்கு மாதமெனும் ஆகியிருக்கும்.

பிரியாணி வாசனை.

மூக்கில் நனைந்து, உள்ளிறங்கி, உடல் நிறைந்து, அடியிலிருந்த நீத்தார் அனைவரையும் முறுக்கேற்றி, அணுக்களின் அனைத்து காலி இடங்களையும் கூட்டி மெழுகி தயார் செய்தது.

வரிசை நகர்ந்து கொண்டே வந்தது. ராமு சூப் ஆர்டர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அரை எண்ணமாக வெட்டுப்பட்டது. “சூப்…. சூப்…. சூப்….” என்று போராடி போரிட்டு மனதைக் கட்டாயப்படுத்தினான். “உடலை வெல்ல வேண்டும்.” “சூப்…. சூப்…. சூப்…. சூப்…. கோட்டா.. சூப்….” “யாரது நடுவில் கோட்டா என்றது.”

அடியிலிருந்து, “கோட்டா வைத்து சாப்பிட்டால் என்ன?” என்ற ஒரு குரல் மேலெழுந்தது. ஒரு நீத்தார் கண்ணடித்து களவாணித்தனமாகக் கேட்டார். “இல்லையில்லை சூப்…. சூப்…. சூப்….” என்று ராமு ஒற்றை ஆளாக நெஞ்சிலிருந்து போர்தொடுத்து கீழே இறங்கினான். மூத்தார் நீத்தார் தெய்வங்கள் தங்கள் அனைத்து படை அணிகளுடன் “சோறு…. சோறு…. சோறு….” என்று அடிவயிற்றிலிருந்து மேலெழுந்து வந்தனர்.

வரிசை நகர்ந்து கொண்டே வர அடியிலிருந்து தெய்வங்களும் நெஞ்சிலிருந்து ராமுவும் யாருக்கும் தெரியாமல் நடு வயிற்றில் ஒரு போர் நடத்திக் கொண்டிருந்தனர். வெறும் வயிற்றுச் சத்தம் வெளியே கேட்டது. ராமு தன் எல்லைகளை குறுக்கிக்கொள்ள விரும்பவில்லை. தெய்வங்களும் விடுவதாயில்லை. வரிசை முடிந்துவிட்டது. கவுண்ட்டருக்கு முன்னால் இருந்தான். இப்போது போர் முடிந்தே தீரவேண்டும். முழு உடலும் தெய்வங்களின் பிடியில் சிக்கிக்கொண்டாலும், தலையும் வாயும் இன்னும் தம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. கடைசி ஆயத்தம். இயந்திரத்தனமாகவேணும் சூப் என்று சொல்லிவிடவேண்டும்.

காது அடைத்தது, தொண்டை கம்மியது, தலை வியர்த்தது, சூப் என்று சொல்லவந்த தொண்டையை பற்றி, மேலேறி, நாவை வளைத்து, துருத்தி, திருத்தி ஒட்டுமொத்த நீத்தார் மூத்தார் தெய்வங்களும் படையென மேலெழுந்து ‘பிரியாணி’ என்ற சொல்லாக வெளியே வந்து விழுந்தனர். பணமும் டோக்கனும் கைமாறியது. பரிவர்த்தனை முடிந்தது. பிரியாணி கைக்கு வந்தது.

“சரி, இந்த முறை மட்டும் கோட்டா வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.”

முதல் கவளம் வழுக்கிக்கொண்டு உள்ளே சென்று அடிவயிற்றில் தொப்பென்று விழுந்தது. அனைத்து செல்களிலும் ஒரு ஆனந்த அலை அடித்தது. உடலின் அனைத்து இடங்களும் இன்னுமின்னும் என்று வாரி விழுங்கியது. பண்படாத தூய ஜீவனென லபக் லபக் என்று வாயில் போட்டுக் கொண்டிருந்தான். உடலின் அனைத்து அங்கமும் பூரணித்தது. அன்னமயகோசம் ஆனந்த நிலையை எய்தியது. ஒருவழியாக பிரியாணி அவனை தின்று தீர்த்தது. ஆழ் உடல் முன்னோர்கள் சமரசம் அடைந்து அடங்கினர்.

இனி போராட்டமோ போர்க்களமோ இல்லை. உலகம் தெளிவுற்று நிகழ்ந்தது.

பித்ரு தேவோ பவ.

அந்நாளில் முடிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். மதிய அமர்வு அவன் கைவசம் வந்தது. அமர்வின் ஆரம்பம் நகைச்சுவையாகவும் நடுவில் உச்சம் தொட்டும் முடிவில் கச்சிதம் செய்தும் ஒரு சங்கீதமென ஒழுகிச்சென்று முடித்தான். தன்னைத் திறம்பட விற்றான். தடுமாற்றமும் போராட்டமும் இல்லை.

சாமிக்கு படைத்த பின் சம்சாரிக்கு என்ன கவலை. அப்பாவையும் அப்பத்தாவையும் நினைத்துக்கொண்டான். அப்பத்தாவிற்கு அவள் நினைவு தினத்தன்று படையல் இடவேண்டும். அவள் திதியும் நெருங்கி வந்தது. ராமு ஊருக்குத் திரும்பும் நேரமும் நெருங்கி வந்தது.

அடுத்து வந்த நாட்களில் சங்கோஜமே இல்லாமல் சோற்றில் திளைத்தான். பின்பு தன்னை நெறிப்படுத்திக் கொண்டு மத்தியம பாதையை வகுத்துக் கொண்டான். கோட்டா வைத்து சோறு சாப்பிட்டான். விட்டுக்கொடுத்த எல்லைகளை உடல் சிரமம் ஏதும் இல்லாமல் மீண்டும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. கோட்டா வைத்து உண்ணும் மத்தியம பாதையில் உள்ளதால் இன்னும் அப்பனுக்கு புத்தி சொல்லும் அருகதை தன்னிடம் இருப்பதாக நினைத்துக்கொண்டு விமானம் ஏறினான்.

சந்தேகமே இல்லாமல் இப்பயணம் ஒரு யாத்திரை தான். ஆனால் நெஞ்சில் பலநூறு குழப்பங்கள் கேள்விகள். உடல் எப்படி வென்றது? உடலுக்கு என்று தனி மனம் உண்டா? அந்த மனம் என்பது நம் மூதாதையர் தானா? ஜெனிடிக்ஸ் தான் அவர்களா? அப்படி என்றால் உடல் என்பது என்னுடையதா அவர்களுடையதா? என்னுடையது என்றால் நான் ஏன் அதன் கட்டுப்பாட்டில்? பதில் அறியா கேள்விகளிடம் பணிவதைத் தவிர வேறு வழி என்ன.

முன்னோர்களிடமிருந்து ராமு திமிறி  எழுந்தான், விடுவித்து ஓடினான், சண்டையிட்டு தோற்றான், பணிந்து சரண் புகுந்தான். தன் பட்டினிப் பரம்பரையின் கடைசி கன்னியாக உருமாறினான். யாத்திரையின் முடிவில் தான் சிறுத்து சின்னவனாக உணர்ந்தான். இருப்பினும் அனைத்து கேள்விகளும் ஒற்றை கேள்வியாக உருண்டு நின்றது.

“புசித்த பின்னரும் பசி உயிர்ப்பதேன்”

மீண்டும் அந்தர வெளியில் அர்த்தம் பொதிந்ததாகவும் வாழ்வில் பொருத்திப் பார்க்கும்போது விளங்காததாகவும் இருந்தது. விமானம் தரை தொட்டது.

“எது எப்படியோ, அப்பாவிடம் பழைய கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கருணை காட்டினால் கட்டவிழ்த்து ஓடுவார். இடம் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பார். முன்னோர்களுக்கு பிரதிநிதியாக இருக்கும் முன்னவர். தந்தையர்களை தாங்கி நிற்கும் தந்தை தெய்வம்தான். இருந்தாலும்….”

“இன்று அப்பத்தாவிற்க்குப் படையல், ஆனால் விருந்து என்னவோ அவருக்குத்தான். பரவாயில்லை. கொஞ்சம் கண்டிப்பை நடித்துக்காட்ட வேண்டியதுதான். நாளையே இரத்தப்பரிசோதனை முதற்கொண்டு அனைத்தும் எடுத்து பார்த்துவிடவேண்டும்.” என்று பலவாறு நினைத்துக்கொண்டு வீட்டின் கேட்டை திறந்தான். அவனை வரவழைத்தது ஒரு வாசனை. ஆழ் உடல் முன்னோர்களை உலுக்கிய அதே வாசனை. சோற்று வாசனை. இப்போது மேல் நெஞ்சு ராமுவையும் உலுக்கியது. கோபம் வந்தது. மூச்சு சூடானது. சங்கிலித் தொடரின் கடைசி கன்னி மீண்டும் திமிறி  எழுந்தது. சுமந்து வந்த பையை வாசலிலேயே போட்டுவிட்டு விறுவிறுவென்று சென்று வீட்டின் கதவை படீரென்று திறந்தான்.

தாமோதரன் நடு ஹாலில் பெரிய வட்டலில் சோற்றை மலையென குவித்து வைத்து அதன் முன் யாகம் வளர்ப்பவர் போல அமர்ந்திருந்தார். அருகில் பெரிய திறந்த குக்கரில் சோறு ஆவி விட்டுக்கொண்டிருந்தது. ஓரமாக வைத்திருந்த அப்பத்தாவின் படத்திற்கு கீழ் வாழை இலையில் சோறு குவித்து படையல் வைத்திருந்தனர்.

தாமோதரன் சோறும் கையுமாக மாட்டிக்கொண்ட அதிர்ச்சியில் எழுந்து நின்றார்.

“எப்ப பாரு சோறு… சோறு… சோறு…” ராமு பல்லை வெருவி கத்தினான்.

ஏதோ சொல்ல வந்த தாமோதரன் வார்த்தை தடைபட்டு நின்றார்.

“பஞ்சத்துக்கு பொறந்த பரதேசி, இப்ப சோறு இல்லைன்னா செத்தா போவ?”

தந்தை அதிர்ந்தார். ஒரு பெரிய ஒற்றை மூச்சு வெளியே விட்டார். ஏந்தியிருந்த சோற்றுக் கையை கீழே போட்டார். சிறிதாக சிரித்து, “அந்தக் கோட்டா நம்ம குடும்பத்துக்கு ஏற்கனவே முடிஞ்சு போச்சு கண்ணு” என்று சொல்லிவிட்டு ராமுவை கடந்து வெளியே சென்றார்.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.