ருஷ்ய இலக்கிய காலகட்டங்கள் – எம்ஸ்வாம் கட்டுரை – கோக்குலஸ் இண்டிகா மொழிபெயர்ப்பு

எம்ஸ்வாம் 

நமக்கு அறிய வ்ந்த அளவில் ருஷ்ய இலக்கியம் 18 ஆம் நூற்றாண்டில் தோற்றம் கொண்டது. அந்த நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்ஜாவின், கரமஜின், என்ற இரு மகத்தான மனிதர்களின் தாக்கம் ருஷ்ய மொழியின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கியது. ஜெர்ஜாவின் ருஷ்யாவின் முதல் தேசீய கவி. கரமஜின் அந்நாட்டின் முதல் வரலாற்றாசிரியர். ருஷ்ய வரலாறு பற்றி இவர் விரிவாக எழுதிய பன்னிரெண்டு தொகுதிகள் இன்றும் அறிவுப்புல பாண்டித்தியம் மிக்க சான்றாவணமாய் பயன்படுகிறது.

இதற்கு முன் எழுதப்பட்டவற்றில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட இரண்டு காவிய கவிதைகள் இன்றும் வாசிக்கப்படுகின்றன: ‘தி கிரானிக்கிள் ஆஃப் கியஃப்’, மற்றும் ‘தி ஸ்டோரி ஆஃப் தி ரெய்ட் ஆஃப் பிரின்ஸ் ஐகோர்’. இதில் இரண்டாவதாய் குறிப்பிடப்பட்டுள்ள கவிதை மிகவும் நேசிக்கப்படுகிறது, வலுவான கலாச்சார தாக்கம் செலுத்தியிருக்கிறது. பண்டைய உலக காவியங்கள் பலவற்றைப் போலவே இதற்கும் தொலைந்து போய் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட வினோத தொன்மக் கதை உண்டு. அதுவும் ஒரு முறையல்ல, இரு முறை1!

ருஷ்ய இலக்கியம் வேரூன்றி முழுமையாய் மலர ஏன் பதினெட்டாம் நூற்றாண்டு வரை தாமதமானது என்ற கேள்வி மிகத் தீவிரமாக கல்விப்புலத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ருஷ்ய நிலப்பரப்பு ஐரோப்பாவை ஒட்டியிருப்பது உண்மைதான் என்றாலும் பதினேழாம் நூற்றாண்டிலும் பதினெட்டாம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவின் அறிவுச் சூழலிலும் இலக்கிய உலகிலும் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றங்கள் ருஷ்யாவைத் தொடவில்லை. கத்தோலிக்க, பிராட்டஸ்டாண்ட் சர்ச்கள் என ரோமன் சர்ச் பிரிவதற்கு காரணமாக இருந்த ரிஃபார்மேஷன் இயக்கம், பின் மறுமலர்ச்சி காலகட்டம், இவற்றைத் தொடர்ந்து ஐரோப்பிய கலைகளிலும் இலக்கியங்களிலும் நிகழ்ந்த மாற்றங்கள் எதுவும் ருஷ்யாவில் எதிரொலிக்கவில்லை. பதினொன்றாம் நூற்றாண்டு கிறித்தவ சமயத்தில் ஏற்பட்ட பெரும் பிளவு ஐரோப்பாவுக்கும் ருஷ்யாவுக்கும் இடையே ஒரு சுவரென நின்றதே இதற்கு காரணம் என்று வரலாற்றாய்வாளர்கள் சொல்கின்றனர். பின்னொரு பத்து நூற்றாண்டுகளுக்குப் பின், இருபதாம் நூற்றாண்டின் இரும்புத் திரை இந்தப் பிளவை மீண்டும் அரங்கேற்றியது.

ஆனால் இதற்கிடையே ஒரு குறுகிய காலம், சில நூற்றாண்டுகள், ஐரோப்பாவுக்கும் ருஷ்யாவுக்கும் இடையே மாபெரும் கலாச்சார, அறிவுப்புல ஒருங்கிணைப்பு ஏற்பட்டது. அண்மைக்காலமாய், சோவியத் யூனியன் சிதறிய பின் அவ்வப்போது முறிந்தாலும் தொடரும் உறவு போன்ற ஒன்று அது. அக்காலகட்டத்தில் மாமன்னன் பீட்டர் தி கிரேட் ருஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே நடைமுறைப்படுத்திய பரஸ்பர பரிமாற்றங்கள் அவருக்குப் பின் வந்த பேரரசிகள் எலிசபெத், காத்தரீன் (காத்தரீன் தி கிரேட்) இவர்களால் செவ்வனே பின்பற்றப்பட்டன. சுதந்திரக் காற்று வீசிய இந்த காலகட்டத்தில், அதிகாரத்தை அடிமட்டம் வரை பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையையும் அடிமை முறையை அழிக்கும் அவசியத்தையும் உணர்ந்த அரச பரம்பரை புத்தொளிக்காலச் சிந்தனைகள் பலவற்றையும் ருஷ்ய அரசவையில் ஊக்குவித்தது2.

சூழ்நிலை மாற்றங்களால் திடீரென்று துண்டிக்கப்பட்ட முற்போக்கு முயற்சிகள் பல வரலாறு நெடுக உண்டு. இம்முறை, பிரெஞ்சு புரட்சி வெடித்து, மிகவும் மாறுபட்டு இருந்திருக்கக்கூடிய ருஷ்ய வரலாற்றுப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. வழக்கம் போல், புரட்சிக்குப் பின், ஆழ நிறுவப்பட்ட எதேச்சாதிகார ஆட்சிக்கு திரும்பிய மன்னராட்சி நாட்டு நிலவரங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்தது.

காதரீனின் பேரன், ஜார் அலெக்சாண்டர் I, ஓரளவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்று நம்பினார். அவர் சீர்திருத்தங்களுக்கும் தயாராக இருந்தார். ஆனால், தொடர்ந்து நடந்த போர்கள், கொலை முயற்சிகள், சமூக மோதல்கள், அவர் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் காரணமாயின. அவரது பேரன், அலெக்சாண்டர் III – “ஜார் லிபரேட்டர்” என்று அழைக்கப்படுபவர்- ஆளும் காலத்தில்தான் கொத்தடிமைகள் விடுதலை பெற்றனர், கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், ருஷ்ய இலக்கியம் அதன் உச்ச சாத்தியங்களை அடையும் வகையில் முழுமையாய் மலர்ந்தது. இலக்கிய வெளிப்பாட்டுக்கு தேவையான சுதந்திரத்தை ஜார் மூன்றாம் அலெக்சாண்டர் பாதுகாத்தார். அவரது ஆட்சியில் எந்த தடையும் இல்லாமல் இலக்கியம் செழித்தது.

ஜெர்ஜாவின், புஷ்கின் என்று கவிதையில் பிரகாசமாய்த் துவங்கிய ருஷ்ய இலக்கியம், 1840 முதல் 1890 வரை, ஐம்பது ஆண்டுகளில், இதற்கு இணையான வேறொன்று உலகில் எங்கும் இல்லை என்னும்படி அசாதாரண ஒளி பாய்ச்சும் பாதையை உருவாக்கிக் கொண்டது. தாஸ்தாவெஸ்கி, துர்ஜனெவ், தால்ஸ்தாய், செகாவ், லேர்மெண்ட்டாஃப், ஆஃபனாசி ஃபெட், ப்ளோக் மற்றும் பல மகத்தான எழுத்தாளர்களின் இலக்கிய ஆக்கங்கள் மடை திறந்த வெள்ளமெனப் பாய்ந்த அக்காலகட்ட ருஷ்ய இலக்கியத்துக்கு இணையான இன்னொன்று உலக இலக்கியத்தில் எங்கும் இருக்கவில்லை. ஆனால் ருஷ்ய கவிதையைப் பொருத்தவரை அமைதி நிலவியது. ஒளி வெள்ளத்தை விட்டு பின்வாங்கி அது உரைநடைக்கு ஒத்து வாசித்தது. நல்ல வேளையாக, இந்த இடைவேளை நீடிக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டில் அது பிரமாதமான வகையில் உயிர்பெற்று, ஆண்களும் பெண்களுமாய், கவிச் சின்னங்கள் என்று சொல்லத்தக்க கவிஞர்கள் புதிய வகையில் தம்மை வெளிப்படுத்தக் கற்றுக்கொண்டதும், சிறந்த ருஷ்ய கவிதைகள் பிரவாகமெனப் பெருகின. இன்று இந்த ஆக்கங்கள் அழிவற்ற செம்படைப்புகளின் நிலையை எட்டிவிட்டன, உலகில் பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வாசிக்கப்படுகின்றன.

கவிதையும் இலக்கியமும் சமூக, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப இரு நூற்றாண்டுகள் அசாதாரண வகையில் ஏககாலத்தில் எதிர்வினையாற்றின. அந்தந்த காலகட்டத்தில் மேலோங்கியிருந்த தத்துவ உணர்வு கவிதை வடிவில் வெளிப்பாடு கண்டதன் அடிப்படையில் இரு நூற்றாண்டு ருஷ்ய வரலாறு, வெவ்வேறு இலக்கிய காலகட்டங்களாய் பகுக்கப்படுகின்றன:

  1. பொற்காலம் (1800-1835): புஷ்கின், மற்றும் அவரது ப்ளெய்யாட்டின் காலம். புத்தொளிக்காலத்தின் தாக்கத்துக்கு உட்பட்ட காலம், நியோகிளாஸிக்கிஸம் மற்றும் ரோமாண்டிக்கிஸம், இவ்விரண்டின் சிந்தனைகளை இணைத்துக் கொண்ட காலம்3.
  2. ரோமாண்டிக்கிஸ காலம் (1835-1845): லேர்மெண்ட்டாஃப்- இவரது கவிதைகள் பைரனிய தன்மை கொண்டவையாய் கருதப்படுகின்றன, ருஷ்யாவின் மிகச் சிறந்த ரொமாண்டிக் கவிஞர். இக்காலகட்டதில் அவரது தாக்கம் வலிமையானதாக இருந்தது.
  3. இயல்புவாதக் காலம் (1840-1890): இக்காலத்தில் ருஷ்ய நாவல் வளர்ச்சி கண்டது. துர்ஜனெவ், தாஸ்தாவெஸ்கி, தால்ஸ்தாய், இவர்களின் காலம்.

கவிதையின் ஆற்றல் குறைந்த இக்காலகட்டத்துக்குரிய கவிஞர் ஆஃபனாசி ஃபெட். கலைக்கு நோக்கம் உண்டு என்ற பெருவாரி மக்களின் நம்பிக்கையை அவர் நிராகரித்தார். மாறாய், கலை கலைக்காக மட்டுமே என்ற உணர்வை வெளிப்படுத்தினார். இயல்புவாதத்தை ஏற்காத எழுத்தாளர்கள் தம் கவிதைகளைக் கொண்டு சமூக, அரசியல் போராட்டங்களை எதிர்கொள்ள மறுத்தனர். இவர்கள் அனைவருமே சக்திவாய்ந்த விமரிசகர்களால் கண்டிக்கப்பட்டனர்4. சமகால பிரச்சினைகளை கவிதை வடிவில் வெளிப்படுத்த முடியாது என்று இந்த விமரிசகர்கள் கவிதை வடிவை நிராகரித்தனர். இதன் விளைவாய், 1860 ஆம் ஆண்டு வாக்கில், சமூக நோக்கத்துடன் கவிதை எழுதும் ‘குடிமைக் கவிஞர்கள்’ என்ற அணி ஒன்று உருவானது. சமூக மனசாட்சியை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இங்கிலாந்துக்கு டென்னிஸன், பிரௌனிங்க் போன்ற மாபெரும் கவிஞர்கள் இருந்தனர், பிரான்சுக்கு, போதலேர், வெர்லேன். ஆனால் இந்தக் கலை நோக்கின் காரணமாய் ருஷ்யாவில் இது போல் ஒருவரும் வளரவில்லை.5.

  1. வெள்ளிக்காலமும் சிம்பலிசமும் (1890-1912)- அரசின்மைவாதிகளின் அடுத்தடுத்த அரசியல் படுகொலைகளும் பிற்போக்கு இயக்கங்களும் அரச வம்சத்தினரும் பொதுவெளியினரும் முற்போக்கு சீர்திருத்தங்களில் கொண்டிருந்த ஆர்வத்தைக் குறைத்தன. தொடர்ந்து நிலவிய கொந்தளிப்புகள் பொது மனதில் இதைவிட அமைதியாய் இருந்த ஒரு பொற்காலத்தைக் குறித்த நினைவேக்கங்களைக் கிளர்த்தின. ‘கலை கலைக்காகவே,’ கவிதை தன் இழந்த இடத்தை மீண்டும் பிடித்துக் கொண்டது. இக்கால கவிஞர்கள் ஃபெட் மற்றும் டூட்செஃப் கவிதை வடிவை உயிர்ப்பித்தனர், தம் கவியிலக்கணத்தில் மீபொருண்மை நோக்கங்களைப் பின்பற்றினர். இக்காலகட்டத்தின் பிற்பகுதி சிம்பலிசக் காலம் என்று சுட்டப்படுகிறது. இதன் முன்னணி குரல்கள் இவான் புனின் மற்றும் அலெக்சாண்டர் ப்ளோக்குக்கு உரியவை.

இவ்விரு குழுக்களும் குடிமைக் கவிதையை நிராகரித்தன, முன்னிருந்த மாதிரிப் படிவங்களிலிருந்து தம் படைப்பூக்கத்தைப் பெற்றுக் கொண்டன. பிரெஞ்சு கவிஞர்களான பூதலேரும் வெர்லேனும் வீரியமிக்க புறத் தாக்கங்களாய் இருப்பினும்கூட, இப்புதிய வரிசை கவிஞர்கள் தம் மண் அனுபவத்தை அதே அளவு சார்ந்திருந்தனர். இந்த நூற்றாண்டின் எஞ்சிய கால ருஷ்ய கவிதையின் வடிவத்தை அண்மை சார்ந்த, உள்முகம் நோக்கிய, தன்விசாரத் தேடல் தீர்மானித்தது. தம் கவிதை அழகியலிலும் தத்துவப் பார்வையிலும் சடங்குத்தன்மை ஒரு கூறாக இருந்ததால் ஃபன்-டி-ஸிக்ள் கவிஞர்களிலிருந்து சிம்பலிஸ்ட் கவிஞர்கள் மாறுபட்டனர். இவர்களது நம்பிக்கை ஃபெட்டால் ஏற்கப்பட்ட ஷெல்லிங்கிய நேச்சுரோஃபிலாசயிலிருந்து நேரடியான கடவுள் நம்பிக்கையாய் மாறியது6.

இருபதாம் நூற்றாண்டு ருஷ்ய கவிதை உலகால் நேசிக்கப்பட்டது, போற்றப்பட்டது- அதன் முன்னோடி சிம்பலிஸ இயக்கம். இருவர் அதன் அடையாளமாக இருந்தனர். ஒருவர் கவிஞர், மற்றவர் தத்துவவியலாளர்: ஆஃபனாசி ஃபெட், விளாதிமிர் சொலொவியஃப். இவ்விருவரின் பாதிப்பும் இணைந்து புதிய வகை கவிதை உருவாகக் காரணமாயிற்று. அதன் அழகியல் ஃபெட்டால் வடிவமைக்கப்பட்டது, மேற்பரப்பின் இறையியல் சொலொவியஃப்பின் தாக்கம் கொண்டது.

கவிதை வடிவம் பழைய காலத்துக்கு திரும்பினாலும், சிம்பலிசம் குடிமைப் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்தது. அக்காலகட்டத்தின் அறிவுலக கொந்தளிப்பில் இந்த இயக்கத்துக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ஆனால் அதன் வடிவமும் அமைப்பும் உயர் ரசனைக்கு உரியவை, உயர்மட்ட மக்களுக்கு என்றே சொல்லிவிடக்கூடியவை. எனவே, ருஷ்ய புரட்சியின் நிழலில் கவிதை வடிவம் இருளடைந்தது. பல நூறாண்டு காலமாய் தொடர்ந்த மன்னராட்சி வியத்தகு விதத்தில் முறித்து வீசப்பட்டது. ஜார், நிக்கோலஸ் II- ரோமானவ்களில் இறுதியானவர்- அரசு துறக்க கட்டாயப்படுத்தப்பட்டார். அவரும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். அரச வம்சத்தில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. அரச பரம்பரை நிரந்தரமாய் முடிவுக்கு வந்தது. அடுத்தடுத்து தொடர்ந்த இந்தப் பேரழிவு நிகழ்வுகள் இன்னுமொரு பிற்போக்கு இலக்கிய எதிர்வினைக்கு தளம் அமைத்துத் தந்தன.

  1. நவீனத்துவ காலகட்டம் (1912-1925): இப்போது சிம்பலிஸம் நிராகரிக்கப்பட்டது. அந்த நிராகரிப்பு இரு குழுக்களின் கீழ் நடந்தது. இக்கால குழப்பத்துக்கு எதிர்வினையாய் ஒவ்வொருவரும் தனித்தனியாய் இதற்குத் தக்க அறிவுப்பூர்வமான எதிர்வினையாற்றினர். அக்மேயிஸ்ட்டுகள் என்று தம்மை அழைத்துக் கொண்ட மிதவாத குழு சிம்பலிஸ அழகியலை கடைபிடித்தது, ஆனால் இறையுணர்வுகளிலிருந்து விலகிக் கொண்டது. அதே நேரம், அவர்களுடன் இன்னும் புரட்சிகரமான குழுவும் தோன்றியது – ஃபியூச்சரிஸ்டுகள். இவர்களிருவரும் இணைந்து நவீனத்துவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்7.

ருஷ்ய கவிதை உலகின் உச்சத்தில் நான்கு மாபெரும் கவிஞர்கள் இருக்கிறார்கள்- மிக வசதியாக இரு பெண்கள், இரு ஆண்கள் என்று கணக்கிடப்படுகிறார்கள்; இரண்டு அக்மேயிஸ்ட்டுகள்- அன்னா அக்மடோவா, ஓஸிப் மாண்டல்ஸ்டாம்; இரண்டு ஃப்யூச்சரிஸ்ட்டுகள்- மரியா ஸ்வெத்யேவா, போரிஸ் பாஸ்டர்நாக். இவர்கள் போக, மாயகோவ்ஸ்கியும் க்யூமிலொவ்வும் இக்காலத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர்கள்; உண்மையில், புரட்சியின் கவிஞர் என்று மாயகோவ்ஸ்கி பரவலாக மதிக்கப்படுபவர்10.

இந்த கவிஞர்கள் குழுவின் இலக்கிய முயற்சிகள் வெவ்வேறு வகை கோட்பாடு, தத்துவ அணுகுமுறைகளின் போதம் பெற்றிருந்தன. சிம்பலிஸத்தின் மிஸ்டிகல் முகங்களை மட்டுமே அக்மேயிஸ்ட்டுகள் நிராகரித்தனர். ஃப்யூச்சரிஸ்ட்டுகள் அதைவிட புரட்சியாளர்களாக இருந்தனர். அவர்கள் மொத்தமாக அதன் தத்துவ அடித்தளங்களையும் மொழியையும் நிஜ உலகிலிருந்து ‘துண்டுபட்டது’ என அனைத்தையும் நிராகரித்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை, தம்மை வெளிப்படுத்தவும் சமூக அதிருப்திகளுக்கு குரல் கொடுக்கவும் கவிதை ஓர் ஊடகம். இதில் ஒரு சுவாரசியமான துணைக் குறிப்பு உண்டு. க்யூபிஸ்ட்டுகள் என்று அழைக்கப்பட்ட பல ஓவியர்களும் படைப்பூக்கம் குறித்து பொது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். இந்தக் குழுவினரும் இப்படிப்பட்ட நோக்கத்தால் ஃப்யூச்சரிஸ்ட்டுகளுடன் இணைந்து செயல்பட்டனர். இக்காரணத்தால் அவர்கள் க்யூபோ-ஃப்யூச்சரிஸ்ட்டுகள் என்றும் அழைக்கப்பட்டனர். சொற்களையும் சித்திரத்தையும் பயன்படுத்தி இவர்கள் யதார்த்தத்தை அனுபவமாய் வெளிப்படுத்த முயற்சி செய்தார்கள். அதற்காக, அவர்கள் மொழியையும் ஓவியத்தின் இலக்கண வடிவையும் திரிக்கவும் தயங்கவில்லை. தங்கள் கலையைக் கொண்டு கருத்தைத் தூண்ட, சிந்தனையை வளர்க்க இது உதவும் என்று நினைத்தார்கள் அவர்கள். ஓவியர்கள், சகால், கன்டின்ஸ்கி, காமன்ஸ்கி மற்றும் கவிஞர்கள் ஸ்வெத்யேவாவும் பாஸ்டர்நாக்கும் இக்குழுவின் முக்கிய உறுப்பினர்கள்.

நீண்ட காலம் இயங்கிய ‘யூனியன் ஆஃப் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ ஒரு ஜாரிஸ்ட் அமைப்பு என்று குற்றம் சுமத்தப்பட்டு புரட்சிக்குப் பின் ஓரங்கட்டப்பட்டது. அச்சங்கத்தின் உறுப்பினர்களாய் இருந்த கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களில் பெரும்பான்மையானவர்கள் புரட்சியையும் அதன் அத்துமீறல்களையும் கடுமையாய் எதிர்த்தார்கள். போல்ஷவிக்குகளை ஆதரித்த அவான்-காரட் குழு உறுப்பினர்களில் க்யூபோ-ஃப்யூச்சரிஸ்ட்டுக்களும் அடக்கம். அவர்கள் அரசில் பங்கேற்றார்கள். நுண்கலைத் துறை அவர்களுக்கு அளிக்கப்பட்டது. புதிதாய் நியமிக்கப்பட்ட கலை கமிஸார்கள் என்ற அளவில் அவர்களிடம், “நாடு முழுதும் கலைப் பள்ளிகள் துவக்குதல், அவற்றை ஒருங்கிணைத்தல், தேசத்தின் கலைவாழ்வு அனைத்தையும் நிர்வகித்தல்” என்ற பெரிய பொறுப்பு சேர்ந்தது8. குறிப்பிடத்தக்கதல்ல என்று சொல்ல முடியாத அளவு கோட்பாட்டு வேறுபாடுகள் இருந்தாலும்கூட, க்யூபோ-ப்யூச்சரிஸ்ட்டுகளும் அக்மேயிஸ்ட்டுகளும் நவீன ருஷ்ய செய்யுளின் வளர்ச்சியுற்ற ஒலிக்கு ஆஃபனாசி ஃபெட் ஒரு முன்னுதாரண தாக்கம் செலுத்தியிருக்கிறார் என்று ஒப்புக் கொண்டனர். குடிமைக் கவிதைக்கு எதிராகவும், கவிதை கலை நோக்கில் மட்டுமே எழுதப்பட வேண்டும் என்றும், உறுதியான நிலைப்பாடு கொண்டிருந்த ஃபெட்டின் கருத்துக்கள் – அந்த நிலை அவரைத் தனிமைப்படுத்தியது, துயரத்தில் ஆழ்த்தியது-, அவரது மரணத்துக்குப் பின் அவர்களின் போற்றுதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

  1. சோவியத் காலம் (1925-1955): நூறாண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் ஒரு வகை காக்டஸ் மலர் பார்ப்பதற்கு பிரமாதமாக இருக்கும், ஆனால் குறுகிய காலத்தில் வாடிவிடும். அது போன்றதே ருஷ்ய நாவல். புதிய ஆட்சியின் அடக்குமுறையில் அது தேயத் துவங்கியது. ருஷ்யாவில் உள்நாட்டு யுத்தம் முடிந்து 1920களில் போல்ஷவிக்குகள் அதிகாரத்தை ஆக்கிரமித்ததும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஐரோப்பாவுக்கு புலம் பெயர்ந்தனர். அவர்களில் சில தன்னிச்சையாய் வெளியேறினர். வேறு சிலர் நாடு கடத்தப்பட்டனர். எதிர்பார்த்திருக்கக்கூடிய வகையிலேயே இது ருஷ்ய இலக்கியத்தை பாதித்தது. ருஷ்யாவின் ஆட்சி எல்லைகளுக்குள்ளும் அதற்கு வெளியேயும் முரண்பட்ட விளைவுகள் ஏற்பட்டன.

நாவலின் இடத்தை கவிதை, சிறுகதை, குறுநாவல்கள் மற்றும் நாடகங்கள் கைப்பற்றின. உரைநடை எழுத்தாளர்கள் பலரும் மொழிபெயர்ப்பாளர்கள் ஆயினர். 1932ஆம் ஆண்டு, சோஷலிஸ்ட் ரியலிஸ பாணியில் மட்டுமே கவிதை எழுதப்பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் அரசு ஆணை பிறப்பித்தது. இப்போது இரண்டாம், அதன் பின், மூன்றாம் அலை புலம்பெயர்வு நடந்தது. உலக யுத்தத்தையொட்டிய காலத்தில் ருஷ்ய கவிஞர்களும் இலக்கியவாதிகளும் ‘சோவியத்’ மற்றும் ‘புலம் பெயர்ந்த’ அணியினராய் பிரிந்தனர். புலம் பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் பாரிசிலும் பெர்லினிலும் வசித்தனர். ஒவ்வொரு முறை புலம் பெயர்தல் நிகழும்போதும் இவர்களது எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்தது. பாரிசிலும் ப்ராஹாவிலும் விமரிசனப் பத்திரிக்கைகள் நிறுவப்பட்டன9.

இரு குழுவினரும் அரசு ஆதரவு நிலைப்பாட்டால் மாறுபட்டனர். அரசை எதிர்த்தவர்கள் என்று புலம் பெயர்ந்தவர்கள் பெருமை கொண்டனர். சோவியத்துக்கள் தம்மை தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொண்டனர், உள்ளிருந்தே எதேச்சாதிகாரத்தை எதிர்க்கும் பெருமை இவர்களுக்கு இருந்தது. அக்கால புலம் பெயர்ந்த முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராய் இருந்த அல்டனோவ் கூறியது இதை மிகச் சிறப்பாய் விவரிக்கிறது: “புலம் பெயர்தல் மிகப்பெரிய பாபம், ஆனால் அடிமைப்படுதல் அதை விடப் பெரியது.”

புலம் பெயர் எழுத்தாளர்களில் புகழ் பெற்றவர்கள் இவான் புனின் (1933ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்), நபகோவ், அல்டனோவ், பெண் கவிஞர் மரீனா ஸ்வெத்யேவா. சோவியத்துகளின் முன்னணியில், புரட்சியின் கவிஞர் மாயகோவ்ஸ்கியும்3. செர்ஜய் யெசனினும் இருந்தார்கள். இருவருமே இதயத்தின் ஆழத்தில் தனி மனித உரிமைகளை நேசித்தவர்கள், ஆனால் புரட்சியில் அதன் துவக்க நாட்களில் நம்பிக்கை கொண்டிருந்தனர். யெசனின் கொண்டிருந்த மயக்கம் வெகு சீக்கிரம் கலைந்தது, அவர் எதிர்க்கத் துவங்கினார். புரட்சியின் நம்பிக்கைகளுடன் தன் நம்பிக்கைகளை சமநிலைப்படுத்த அவர் மேற்கொண்ட போராட்டம் ஒரு பயங்கர முடிவுக்கு அவரைக் கொண்டு சென்றது- முப்பது வயதில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இது போல் விதிக்கு பலியாகக் கூடாது என்று விமரிசித்த மாயகோவ்ஸ்கியும் வெறும் ஐந்தே ஆண்டுகளில் அவரைப் போல் தற்கொலை செய்து கொண்டார்.

வறிய துவக்கங்கள் இருந்தாலும் புலம்பெயர் இலக்கியத்துக்கு அதன் கலை மற்றும் அறிவுச் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் தீவிரமும் இருந்தது. மாறாய், சோவியத் இலக்கியம், சோஷலிஸ்ட் ரியலிஸத்தின் ஆணைக்குப் பணிய போராட வேண்டியிருந்தது. இறுதியில் அது பணிந்து போனதாகவே கருதப்பட்டது. ஆனால் கூட அதன் அடிமைத் தளைகள் பல முகங்கள் கொண்டிருந்தாலும், அவர்களிலும் கணிசமான எண்ணிக்கையில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் இருந்தார்கள். வெரா பனோவா, ‘ஸ்விடானீ- தி மீட்டிங்’, எழுதியவர், அவர்களில் ஒருவர். அதே போல் அவர்கள் அனைவரிலும் மிகப் பிரபலமானவர், மிஹைல் ஷோலொகொவ், 1965ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்றவர், ‘அண்ட் கொயட் ஃப்ளோஸ் தி டான்,’ எழுதியவர்,அவர்களில் ஒருவர்.

  1. ஸ்டாலினுக்குப் பிந்தைய காலம், அல்லது குருஷ்சேவ் தளர்வு (1955- ): ஸ்டாலினுக்குப் பின், குருஷ்சேவ் காலத்தில் ஸ்டாலினியத்திலிருந்து மீண்ட புது அரசியலால் இலக்கிய வெளிப்பாடு மீதிருந்த கட்டுப்பாடுகள் ஒப்பீட்டளவில் தளர்த்தப்பட்டன. இளகும் பனியை நினைவூட்டும் ‘thaw’ என்ற பதத்தின் உருவமாய் (அக்மடோவா அளித்தது) புதிய, இளம் கவிஞர்கள், ஃப்யூச்சரிஸ்ட்டுகள், மற்றும் அக்மேயிஸ்ட்டுகள் இருந்தனர். இவர்களில் மிக முக்கியமானவர்கள், யெவ் ஜெனி யெவ்டுஷேன்கோ, வோஜ்னெசென்ஸ்கி, அக்மடூலினா, ஜோசப் ப்ராட்ஸ்கி (1987ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்றவர்). இக்காலகட்டம் பொதுமக்களிடம் கவிதையைக் கொண்டு சேர்த்தது. கவிதையில் இசைத்தன்மை கூடியது, பொது வாசிப்பு நிகழ்ச்சிகள் நடத்தினார்கள், சொந்தமாய் புத்தகம் வெளியிட்டார்கள், வாசிப்பின் ஒலி நாடாக்களுடன் படைப்புகளையும் (சமீஸ்டாட்) பகிர்ந்து கொண்டார்கள். வழக்கத்தில் இல்லாத, ஆனால் வெற்றிகரமான இந்த முயற்சிகள் இவர்களுக்கு ‘எஸ்ட்ராடா கவிஞர்கள்’ என்ற அடைமொழி பெற்றுத் தந்தன- மேடைக் கவிஞர்கள்.

இக்குழுவின் கவிஞர்கள் அதிகாரப்பூர்வ கவிஞர்கள் என்றும் அதிகாரபூர்வமற்ற கவிஞர்கள் என்றும் பிரித்து பேசப்படுகின்றனர். முன்னவர்களுக்கு அதிகாரத்தில் இருந்தவர்கள், அரசு கலாச்சாரத்துடன் தொடர்பு இருந்தது. பின்னவர்கள், அவர்களைவிட சுதந்திர குணம் கொண்டவர்கள், ருஷ்ய, புலம் பெயர் கவிஞர்கள் இவர்களில் அடக்கம். இக்காலகட்டத்தின் புகழ் பெற்ற பெயர்களை விடுத்தால் பிற கவிஞர்கள் குறித்து மிகக் குறைவாகவே அறியப்பட்டிருக்கிறது (சில சமயம், ருஷ்ய கவிதையின் வெண்கல காலம் என்று அழைக்கப்படும் காலகட்டம் இது). கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்த களங்கம், இரு குழுவினருக்கும் இடையே தெளிவான வேறுபாடு இல்லாதது, இது இரண்டும் இருட்டடிப்புக்கு காரணமாய் சொல்லப்படுகின்றன. அவர்களில் ஒருவர், ஜோசப் ப்ராட்ஸ்கி நோபல் பரிசு உரையில் அவர்கள் அளித்த பங்களிப்பை நினைவுகூர்ந்து வரலாற்றில் மறக்க முடியாத நிலையை உருவாக்கித் தந்தார். அதன் பின், பேரெஸ்த்ரொய்காவுக்குப் பின், இந்த காலகட்டம் மீது கல்விப்புலம் கொண்டுள்ள ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இலக்கிய காலங்கள் என்று நாம் இவ்வளவு கச்சிதமாக பிரித்துப் பேசுவது நடந்து முடிந்த பின் மேற்கொள்ளும் பார்வை, ஐரோப்பாவின் கிழக்கு மற்றும் மேற்கு பாதிகளில் உள்ள இலக்கியச் சிந்தனையில் ஏற்பட்ட திடீர் திருப்பங்களைப் புரிந்து கொள்ளும் முயற்சி. இது போல் கறாரான எந்த வரையறைக்கும் இந்தக் கவிஞர்களோ இயக்கங்களோ உட்படவில்லை. உண்மையில், இலக்கிய இயக்கங்கள் வளர்ந்தன, தேய்ந்தன, ஒருவரிடம் ஒருவர் கொண்டும் பெற்றும் கொண்டனர். கவிஞர்களும் அவ்வாறே. இருந்தாலும் இது போல் பரந்த பார்வையில் குழுக்களாக பிரித்து அறிந்து கொள்ளும்போது வரலாற்றின் கொந்தளிக்கும் பாதையில் கடந்து மறையும் இலக்கிய முயற்சிகளின் அசாதாரண எதிர்வினையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. கலைக்கும் அதன் நோக்கத்துக்கும், யதார்த்தத்துக்கும் இலட்சியவாதத்துக்கும், புறவயப்பட்ட பார்வைக்கும் படைப்பூக்கத்துக்கும் உள்ள முரண்பட்ட உறவை சமநிலைப்படுத்த உதவுகிறது.

II

நான் கவிதையை நேசிக்கிறேன். என் அப்பாவிடமிருந்து இதை பெற்றுக் கொண்டேன். நாங்கள் குழந்தைகளாய் இருந்தபோது, அவர் தனக்குப் பிடித்த கவிதைகளை உரக்க வாசிப்பார். ஓங்கி ஒலிக்கும் அவரது குரலும் சொற்களையும் பதங்களையும் அவர் நிதானமாக விளக்குவதும் எங்களை வசியப்படுத்தி வைத்திருக்கும். எங்களுக்கு வயது கூடியபோதும் இந்தப் பழக்கம் தொடர்ந்தது. பின்னர், நாங்களும் அவருடன் சேர்ந்து கொண்டோம். ஆனால் செறிவான மென்குரலில் ஏற்ற இறக்கத்துடன் உணர்ச்சிகரமாக அவர் வாசித்தது மிகவும் வசீகரமாக இருப்பதால் மெல்ல மெல்ல எங்கள் குரல்கள் அடங்கி அவர் வாசிப்பதை அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருப்போம். எங்கள் கவனம் அவர் சொல்வதில் இருக்கும், எங்கள் மனம் கவிதையில் லயித்திருக்கும். அவர் இது போல் கவிதை ஒப்பித்ததில் என் முதல் நினைவுகள் அவர் தன் தந்தையிடம் கற்ற கவிதைகளுக்கு கொண்டு செல்கின்றன- கூலரிட்ஜின் ‘ஏன்ஷியண்ட் மரைனர்’, அர்னால்டின் ‘தி ஃபோர்சேக்கன் மெர்மென்’. நாங்களே சுயமாய் வாசிக்கவும் இவற்றை உள்வாங்கிக் கொள்ளவும் மனனம் செய்யவும் பல ஆண்டுகள் ஆகும் என்பது ஒரு பெரிய விஷயமாய் இருக்கவில்லை. தன் தந்தையிடம் அவர் கற்ற முதல் கவிதைகள் இவை, எனவே ஒரு இனிய மரபின் முதல் கண்ணிகளாக இவற்றை அவர் எங்களுக்கு கைமாற்றித் தந்தார். சொற்களையும் மொழியையும் அவர் நேசித்தார். இந்தக் கவிதைகளை வாசித்து அவர் தன் நேசத்தை எங்கள் இதயத்தில் விதைத்தார். பின், அது வளரவும் கவனமாக உதவினார். முதலில் ஆசிரியராக, பின் நண்பராகவும் சகாவாகவும். இலக்கியமும் கவிதையும் ஒரு சரணாலயம் ஆகின. அவரது விரிந்த இதயத்துடனும் பரந்த, சுதந்திரமான மனதுடனும் நாங்கள் எப்போதும் இணைந்திருக்க அடைக்கலம் புகும் எல்லையற்ற வெளியாக கவிதைகள் ஆகின.

அவர் முன்னோக்கிக் கண்டு கவனமாக வளர்த்த இந்த நேசம் கடந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்த துயர்மிகு அனுபவங்களூடே நான் தொலைந்து போகாமல் என்னைக் காப்பாற்றிய மிதவையாக இருந்தது. கடந்த ஆண்டு, அதிலும் குறிப்பாக மிகவும் மோசமான கணமொன்றில், பழைய ருஷ்ய கவிதை தொகுப்பு ஒன்று கண்ணில் பட்டது11. மீண்டும் நான் ருஷ்யா மீதும் அதன் கவிதைகள் மீதும் காதல் வயப்பட்டேன். புத்தகத்தில் ஒவ்வொரு கவிஞர் பற்றியும் ஒரு சிறிய வாழ்க்கைக் குறிப்பும் அவர்கள் வாழ்க்கைச் சம்பவங்களின் துணுக்குகளும் இருந்தன. காதல், அரசியல் சதிகள்.

சிறிய இந்தக் கதைகளின் மறைவில் மகத்தான பிற கதைகள் ஒளிந்திருக்கின்றன என்ற உணர்வு, ருஷ்ய கவிதை மற்றும் இலக்கிய வளர்ச்சியை இன்னும் ஆழ அறியச் சொல்லி அழைப்பு விடுத்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளின் ருஷ்யாவில் இருப்பது போல் அரசியல் மாற்றத்தையும் அதற்கேற்ற வகையில் இலக்கிய எதிர்வினையையும் கச்சிதமாய் சித்தரிக்கும் கூட்டு நாகரீகக் கதைகளைக் காண்பது அரிது. எனவே இந்த இலக்கிய எதிர்வினைக்கு என்ன காரணம், அது எங்கிருந்து தன் சக்தியைப் பெற்றுக் கொள்கிறது, எனபதை அறிந்து கொள்ள காரணங்கள் இருக்கின்றன.

ஆதிகால தொடர்பு முறையாய் இருந்த கவிதை, பல அவதாரங்கள் எடுத்து, எளிய வடிவிலிருந்து சிக்கலான வடிவுக்கு வளர்ந்திருக்கிறது – உடனிசைதல், ஸ்வரம், சந்தம், தாளம்; சொல், சொற்றொடர், வாக்கியம் என்று எல்லா தளத்திலும் இசையிலும் மொழியிலும் சிக்கலானதாக மாறியிருக்கிறது. அங்கிருந்து உள்ளடுக்குகளில் பல்பொருள் கொள்ளும் தன்மை. ஒரு சொல்லின் உயர் தளங்களில் பொருள் உணர்வதால் எழும் புரிதல்- அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொள்ளுதல், கட்டுடைத்தல், திரித்துரைத்தல், மீமெய்-விரித்தல்.

இலக்கிய கலைகளில் கவிதை மட்டுமே, எதுகை மோனையையும் சந்தத்தையும் சொல் வரிசை கொண்டு ஒரு பின்னலாடையாய் நெய்து இசையின் அழகை மொழியுடன் பிணைக்கிறது இது கவிதைக்கு ரசவாத ஆற்றல் அளிக்கிறது – சாதாரண, அன்றாட சொற்களை உருமாற்றுகிறது, ஒரு மாயம் நிகழ்த்தி, புதிய, ஆழமான பிரக்ஞையை உருவாக்குகிறது. இவ்வகையில் வடிவமைக்கப்பட்ட சொற்றொடர் ஒன்று தன்னுள் மானுட அனுபவம் முழுமையையும் பொதித்து வைத்திருக்க முடியும். கவிதையாய் வாசித்தாலும் சரி பாடலாய் பாடினாலும் சரி, இசையும் மொழியும் இரண்டறக் கூடும்போது அது மனித இதயத்துக்கு நெருக்கமாகிறது. கலை வடிவாய் கவிதை நிலைத்திருக்க அதுவும் ஒரு காரணம்- கவிதையோ, பாடலோ, மனனம் செய்து வாய் வழி பகிர்ந்து கொள்வது எளிதாக இருக்கிறது.

தனிப்பட்ட அனுபவமாக இருந்தாலும் சரி, சமூகம் மற்றும் தேசீய வரலாற்றில் நிகழும் சமூக-அரசியல் மாற்றங்களின் மறைமுக தாக்கத்தின் வழியே வந்தாலும் சரி, கொந்தளிப்பான வாழ்க்கை-மாற்றங்கள் ஒவ்வொன்றும் கடந்து மானுட ஆன்மா மீண்டு எழுவதை உணர்த்த கவிதையே சிறந்த ஊடகமாய் இருப்பதில் வியப்பில்லை. இவ்வகையிலேயே, சர்வாதிகார அத்துமீறல்களின் எதிர்வினையாய், பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டு ருஷ்யாவின் எழுத்து மற்றும் வாய்மொழி வெளிப்பாட்டின் துருவ நட்சத்திரமாய் கவிதை விளங்குகிறது.

ருஷ்யாவிலும் ஐரோப்பியாவிலும் இந்த இலக்கிய இயக்கங்கள் இணைத்தன்மை வாய்ந்த அனுபவங்களாய் இருந்தபோதும், அவற்றின் எடுத்துரைப்பு கலாச்சார, பௌதீகச் சூழலின் தனித்தன்மை கொண்டு அமைகிறது. இருபதாம் நூற்றாண்டு ருஷ்ய கவிதையின் அசாதாரணத் தன்மை என்பது உலகையே கைப்பற்றிய புதுக்கவிதை இயக்கம் ருஷ்யாவைத் தொட முடியவில்லை என்பதுதான். இதற்கான காரணங்களும் அரசியல் சார்ந்தவை. புரட்சிக்குப் பின் ருஷ்ய கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஒடுக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்ட அளவு வேறெங்கும் நிகழவில்லை. அரசு அதிகாரத்துக்கு உடன்படாத வகையில் தொனிக்கும் ஒரு சொல் கூட அதன் எழுத்தாளருக்கு குலாக் செல்ல அழைப்பு விடுப்பதாக அமையக்கூடும். பல கவிஞர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள், அல்லது குலாக்கின் இருளில் சென்று மறைந்தார்கள். இந்த கதியைத் தவிர்க்கவும், தம் கலை சுதந்திரத்தை காப்பாற்றிக் கொள்ளவும் கவிதைகளை எழுதாமல் வாய்மொழியில் பேசுவதும் மனனம் செய்வதும் பாதுகாப்பு அளித்தது. மனனம் செய்ய வசதியாக வழக்கமான எதுகை மோனையுடன் எழுதினார்கள், அதற்கு புதுக்கவிதை சரியாக இருக்காது. சிறு குறிப்புகளை எழுதி கைமாற்றிக் கொண்டு அதில் உள்ள சொற்களை மனனம் செய்து காகிதத்தை சாம்பலாக்கும் சடங்குக்கு எழுத்தாளர் சுகோவ்ஸ்க்யா ‘கைகள், வத்திக் குச்சிகள், சாம்பல் ஓடுகள்,’ என்று பெயரிட்டார். வரலாற்றின் இந்த பயங்கர காலகட்டம் இன்று அவ்வாறே அறியப்படுகிறது.

யதார்த்த உண்மைக்கும் கைக்கெட்டும் தொலைவில் உள்ள, ஆனால் எட்டாத தூரத்தில் உள்ளது போல் தோன்றும் விழைவுகளுக்கும் உள்ள மிகப் பெரிய இடைவெளியை கவிதைகள் பிரதிபலிக்கின்றன. மானுட அனுபவத்தின் தனித்தன்மைகளை பொதுப் பதங்களில் வெளிப்படுத்தி, கலாச்சாரம், இடம், மற்றும் மொழியின் தடைகளைக் கடக்க ருஷ்ய கவிதை வழி செய்து கொடுத்தது. மொழியாக்கத்திலும்கூட ருஷ்ய கவிதைகள் உலக கவிதைகளின் உச்சத்தை மிக இயல்பாக நம் காலத்திலேயே தொட்டிருப்பது அவற்றின் மேதைமைக்குச் சான்று.

சான்றாவண நூல்கள் மற்றும் அடிக்குறிப்புகள்:

    1. 1காவியங்கள் கலாச்சாரத்தில் தம்மை நிறுவிக் கொள்ள மீட்சிக் கதைகள் உதவுகின்றன. தொலைந்து போன ‘தி ரெய்ட் ஆஃப் பிரின்ஸ் ஐகர்’ முதல் முறை கவுண்ட் ம்யூஸின்-புஷ்கினால் பதினேழாம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டது. புகழ் பெற்ற எழுத்தாளர் புஷ்கின் பெயர் கொண்ட இவர், பேர் பெற்ற நூலகர், வேர்ச்சொல் ஆய்வாளர், தாவரவியலாளர். நலிவடைந்து கொண்டிருந்த அரசக்குடியினர் இல்லம் ஒன்றில் இவர் கையெழுத்துப் பிரதியைக் கண்டெடுத்தார். அதை அவர்களிடமிருந்து வாங்கி, மறுபதிப்பு வெளிவரச் செய்தார். துரதிருஷ்டவசமாக, 1812 ஆம் ஆண்டின் மாஸ்கோ பெருநெருப்பில் அந்த நூலகமும் அதிலிருந்த அத்தனை புத்தகங்களோடு இந்த கைப்பிரதியும் எரிந்து சாம்பலானது. நல்ல வேளையாக, 1864ஆம் ஆண்டு முதலாம் காதரீன் வைத்திருந்த புத்தகங்களில் மற்றொரு பிரதி கிடைத்தது. அதன் அச்சுப் பிரதிகள்தான் இன்று நம் கையில் உள்ளன.
    2. 2வோல்டேர், டீடெரோ இருவரும் காதரீன் தி கிரேட் உடன் மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்தனர். பிரஞ்சு புரட்சியின் நீண்ட நிழலில் இவர்களின் கடிதப் போக்குவரத்துக்கள் வீண் போயின. கொத்தடிமை முறை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற கருத்தில் தனக்கு உடன்பாடு இருந்தாலும் ருஷ்ய சமூகத்தின் நிதர்சன உண்மைகள் அவை நிதானமாகவும் கட்டுப்படுத்தப்பட்ட வகையிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகின்றன என்று காதரீன் இரு தத்துவவாதிகளுக்கும் எழுதிய கடிதங்களில் வலியுறுத்தினார். டீடெரோ ருஷ்யா சென்றதும், அங்கு அவர் காதரீனுடனும் அவரது அரசவையினருடனும் உரையாடியது, ஹார்வர்ட் பல்கலை அச்சகம் பதிப்பித்த ராபர்ட் ஜாரெட்ஸ்கியின் ‘காதரீனும் டீடெரோவும்’ என்ற புத்தகத்தில் விவரிக்கப்படுகின்றது.
    3. 3கலைகளிலும் தத்துவத்திலும் பண்டைய காலச் செவ்வியலக்கியங்களை முன்னோடியாகவும் ஆதர்சமாகவும் கொண்ட இயக்கத்தின் பெயர் நியோ கிளாஸிக்கிஸம். ரோமாண்டிக்கிஸம் இதைத் தொடர்ந்தது. அதுவும் கடந்த கால நோக்கு கொண்டது, ஆனால் அது சற்றே அண்மைய காலம். ரொமாண்டிக்குகள் மத்திய காலங்களை முன்னோடியாயக் கொண்டனர். அண்டம், இயற்கை, மானுட உணர்ச்சிகள் புரிந்து கொள்ள முடியாதவை என்ற கருத்துக்களே அவற்றின் முக்கிய பார்வையாய் இருந்தன. இவையனைத்திலும் அவர்கள் பூரண அசல்த்தன்மையை எதிர்பார்த்தார்கள், அவை பின்பற்றத்தக்க மதிப்பு கொண்டவை என்று நினைத்தார்கள்.
    4. 81840களில் ருஷ்ய இலக்கிய விவகாரங்களில் விமரிசகர் விஸாரியோன் பெலின்ஸ்கி அசாதாரண தாக்கம் கொண்ட ஆளுமையாக இருந்தார். 2016ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழக பிரஸ் மறுபதிப்பான ‘தி எக்ஸ்ட்ரா-ஆர்டினரி டிகேட்’ என்ற பாவேல் அனன்கொவ் சுயசரிதையில் ருஷ்ய இலக்கியத்தின் மீது அவரது பாதிப்பும் தாக்கமும் விரிவாக விவரிக்கப்படுகின்றன.
    5. 5‘எ ஹிஸ்டரி ஆஃப் ருஷ்யன் பொயட்ரி’, எவலின் ப்ரிஸ்டல், ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி பிரஸ், 1991.
    6. 6ஷெல்லிங்— காண்ட் காலத்துக்குப் பின் ஜெர்மன் லட்சியவாதத்தை வரையறை செய்த மூன்று தத்துவவாதிகளில் ஒருவர். மற்ற இருவர்- ஹெகலும் ஃபிஷ்ட்டும்.
    7. 7‘தி சில்வர் ஏஜ்,’ சிபலான் ஃபாரஸ்டர் மற்றும் மார்த்தா கெல்லி, அகாடெமிக் ஸ்டடிஸ் பிரஸ், 2015
    8. 8‘ருஷ்யன் க் யூ போ –ஃப்யூச்சரிசம் 1910–1930, எ ஸ்டடி இன் அவான்-கார்டிசம்’, வஹான் டி. பாரூஷியான், டி க்ரூய்ட்டர் மூட்டோன், 1975
    9. 9‘கான்டெம்பரரி ஆனல்ஸ்’ பாரிசில் பதிப்பிக்கப்பட்டது, ‘தி வில் ஆஃப் ருஷ்யா’ பிராஹாவில் பதிப்பிக்கப்பட்டது.
    10. 10“போதும் அற்ப உண்மைகள்,/ கடந்த காலத்தை இதயங்களிலிருந்து அகற்றுங்கள்/ சாலைகள் நம் ஓவியத் தூரிகைகள் / சதுக்கங்கள் நம் வண்ணச் சாந்துகள்”~ விளாதிமிர் மாயக்கோவ்ஸ்கி. மேற்சுட்டிய 8. பக்கம்.119. பின்னொரு காலத்தில், புரட்சியைப் பாட தன் பாடலை தானே தொண்டையில் மிதித்துக் கொல்ல வேண்டியிருந்தது, என்றார் அவர்.
    11. 11‘தி பெங்குவின் புக் ஆஃப் ருஷ்யன் பொயட்ரி,’ தொகுப்பாசிரியர், ராபர்ட் சாண்ட்லர், போரிஸ் ட்ரால்யூக் மற்றும் பிறர், பெங்குவின் 2015

ஆங்கில மூலத்தை வாசிக்க

 

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.