எஸ். சுரேஷ்

மகத்

– – எஸ். சுரேஷ்-

மலையை விட்டு மலை
மலையை விட்டு மலை
என்று
நெளிந்து நெளிந்து
நெளிந்துச் செல்கிறது சாலை
கீழே சலசல சலவென்று
ஓயாமல் ஓடும் சட்லெஜ் நதியைத் தொட்டு
ஈரத்தை உள்வாங்கி என்னிடம்
விட்டுச் செல்கிறது
காற்று

முன்னால் நிற்கிறது
ஸ்ரீகண்ட மகாதேவ் சிகரம்
தூரத்தில் கின்னர் கைலாஷ் பர்வதம்
வலது பக்கத்தில் சராஹன்
அதற்குப் பின்னால் ஹத்து
வானைத் தொடும் சிகரங்கள்
சிகரங்கள் சிகரங்கள்
எங்கு திரும்பினும் பனி படர்ந்த சிகரங்கள்

பரந்த நீல வானத்தில் ஒரு விண்மீன்
இரண்டு
மூன்று
என்று மெதுவாக வானம் முழுவதும் விண்மீன்கள்

பிரம்மாண்டமான இந்த ஹிமலாய
மலைத் தொடரும் ஒரு சிறு துளிதான்
இந்த மஹாபிரபஞ்சத்தில் –

நடுநாயகமாக நான்.

கவியின்கண் – 3 “உயவுநோய் அறியாது”

– எஸ். சுரேஷ்-

உயவுநோய் அறியாது

முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே.

ஔவை, குறுந்தொகை, 28 (more…)

மனிதன்

பத்ரா காட்டினுள் ஓடும் 
நதியின் கரையில் 
பக்கத்தில் ஒரு புலி வந்து உட்கார்ந்தது 
 
இரத்தக் கறையாக இருந்த அதன் வாயை பார்த்துவிட்டு 
“என்ன சாப்பிட்டாய்?
 வாயைச் சற்று திற”
 
அகலமாய் திறந்த வாயினுள் 
பார்த்தேன் 
 
முயல்கள், மான்கள், காட்டெருமைகள், குரங்கு,
மயில்கள், காட்டுப் பன்றிகள்.
 
“நிறைய விழுங்கி இருக்கிறாய்”
 
“பசிக்கும் பொழுது தின்றுதானே ஆகவேண்டும்.
உன் வாயைத் திற”
 
வாயினுள் எட்டி பார்த்துவிட்டு 
என்னை பீதியுடன் பார்த்தது 
 
சோகமாக தலையை ஆட்டிக்கொண்டு 
காட்டினுள் புலி 
 
மெதுவாக மறைந்தது 
                                                        – எஸ். சுரேஷ்

காதலர் தினம்

எதிரே, பார்க் பெஞ்சில் இருக்கும் பையன்
அவளை நோக்கிச் சாய்கிறான்
காத்திருக்கிறாள் அவள்
 
உதடுகள் சந்திக்க
 
கண் அகலாமல் பார்க்கிறார்
அவள் முகம் விலகி மறைவதை
உதடு பிரியாமல் அவள்
மெல்லச் சிரித்துக் கொள்வதை
 
மகிழ்ச்சியைத் தணிக்கும்
குற்றவுணர்வு
 
அந்தி வெயிலின் ஒளியில் 
களைத்த தன் கண்களை
மூடிக் கொள்கிறார் முதியவர்

மணநாள் இரவின்
நிலை கொள்ளாத் தவிப்பு
தொடுகையில்
அதிரும் அவள் உடல்
மெல்ல அவிழ்ந்த சேலை

படர்கையில் கூடிய
மல்லிகை மணம்
                               – எஸ். சுரேஷ்

நகரம்

கையில் தேநீர் கோப்பையுடன்
நான் பால்கனியில் நின்று
பார்க்கும் பொழுது

கீழே
பாம்பை போல் நெளியும் பாதையையும்
புகை கக்கி செல்லும் வாகனங்களையும்
மரங்களும் மலர்களும்
மறைக்கின்றன

சற்று நேரத்தில்
என்னையும் தன்னுள்
இழுத்துக் கொள்ளும்
இந்த நகரம்

சட்டென்று திரும்பி
ஒலிக்காத கைபேசியை
உற்று பார்க்கிறேன்​

என்னுள் இருக்கிறது
நகரம்