காளி பிரசாத்

ஆள்தலும் அளத்தலும் – காளிப்ரஸாத் சிறுகதை

நான் மீண்டும் மனதில் நிலை நிறுத்திக் கொண்டேன். அடையார் கேட்டிலிருந்து ரெண்டாவது ஸ்டாப். அங்கே ரோட்டோரமாக சிறிய கூண்டுக்குள் ஒரு நாகாத்தம்மன் கோயில் இருக்கும்.

குனிந்து ஜன்னலோரமாக பார்த்தேன்.

இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மனி ‘தள்ளிப்போப்பா.. என்னத்த இப்படி பார்க்கிற என்றாள்..’ வெறுப்பாக,

நான் பதறியடித்து பின்னால் வந்தேன் ‘ஸ்டாப்பிங் வந்துடுச்சான்னு பார்த்தேன்..’

வண்டி இரண்டாவது நிறுத்தத்தில் நின்றது. அவசரமாக அனைவரையும் தள்ளிக்கொண்டு இறங்கினேன். நடத்துனர் பார்த்த பார்வையில் ஒரு எரிச்சலும் கோபமும் இருந்தது

இறங்கிய பின்னர்தான் அந்த இடத்தில் கோயில் ஏதுமில்லை என்று தெரிந்தது. அருகில் இருந்த பெட்டிகடையில் விசாரிக்கச் சென்றேன். அவர் ரூபாயை எண்ணிக் கொண்டிருந்தார். நான் அழைத்ததைக் கேட்கவில்லை. எண்ணி முடித்ததும் தலை நிமிர்த்திப் பார்த்தார்..

‘இங்க ரோட்டோரமா ஒரு அம்மன் சந்நிதி மாதிரி சின்னதா இருக்குமே..’

’ஆமா… அதுக்கின்னா இப்ப ‘

’அங்க போகணும்… ’

‘அதுக்கின்னாத்துக்கு சிக்னல்ல வண்டி நிக்கிறப்போ எறங்கின.. ஒழுங்கா போய் ஸ்டாப்பிங்ல எறங்கிருக்கலாமே.. ‘

‘ஸ்டாப்பிங்னு நினைச்சு..’ என்றேன் மெல்ல. இந்த ஊரின் திக்கும் திசையும் புரியவில்லை. அந்த பக்கம் சாப்பாட்டு கடையில என்று கை நீட்டினால் அது இந்தப்பக்கம்ப்பா என்று திருத்துவார்கள். ஆறு மாசம் ஆச்சு இங்க வந்து. அலைந்து திரிந்தும் இது புரியவில்லை

’சரி.. நேரா போ.. ரைட்லயே வரும்..’

அந்த அம்மன் கோயில் இருந்தது. அதை ஒட்டி வலதுபுறம் இருந்த சாலையில் திரும்பி நடக்கத் துவங்கினேன். மேலும் ஒரு பெரும் கட்டம்.. உள்ளே சிறிய சிறிய கட்டங்கள். இதில் நான் எந்தக் கட்டத்தில் நிற்கிறேன். நீண்ட சாலை.. இருபுறமும் குறுக்காக செல்லும் பல சாலைகள்.. நகரம் பெரும் முடிவற்றுப் பெருகியிருந்தது. அவர் சொன்ன ஆவின் பூத்தை எங்கு தேடுவது.. நான் முன்னே நடந்தேன். எனக்கு ஒரு பெரும் ஆற்றாமை எழுந்தது. நான் ஏன் இங்கு வந்துகொண்டிருக்கிறேன்? எந்த நம்பிக்கையில் வருகிறேன்? அவரே இப்ப நேரில் வந்தால் கூட சும்மா பாத்துட்டு போலாம்னு வந்தேன்னுதான சொல்லப் போறோம். உண்மையில் நான் அதுக்குத்தான் வருகிறேனா?

அங்கு ஒரு லாண்டிரி கடைக்காரர் கடையை மூடும் தருணத்தில் இருந்தார். சூடமும் எடுத்து வைத்திருந்தார். அந்த தருணத்தில்தான் நான் அங்கு வழி கேட்டு வந்திருந்தேன்.

’அட்ரஸ் தெரியாம என்னத்துக்கு வந்து நிக்கிற இப்ப.. யாரு அவங்க.. சொந்தகாரரா.. என்னா ரோடு.. என்னா லேனு..? ஏதாவது தெரியுமா..?’

‘இல்லீங்க.. ஆவின் பூத்து நேரா போற ரோடுல நீல கலர் மாடி வீடு..’

‘நீல கலரு.. மாடி வீடா… மெட்ராஸில அட்ரஸ் ஏதுமில்லாமலா வந்து தேடுற.. எந்த ஊரு உனக்கு..’

நான் கடையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு ஆசுவாசம் எழுந்தது

ஆதனூர் அழகன் தானங்க இது…

கடைக்காரர் அந்த படத்தைப் பார்த்தார் ‘ஆமாப்பா.. எங்களுக்கு சுவாமிமலைதான். ஆனால் அப்பா காலத்துலயே மெட்ராஸ் வந்தாச்சுப்பா.. நீயும் கும்பகோணமா..’ என்றார்

‘இல்லைங்க.. பக்கத்துல ஒரு கிராமம்தான்.. திருவாரூர் போற வழியில.. ரொம்ப உள்ள போகனூஊம்..’

என்னையறியாமல் என் பேச்சில் இழுவை வந்திருந்தது. வட்டார மொழி.. ஏதோ ஊர்க்காரரிடம் பேசுவது போல..

‘ஆனால் இந்த ஊர்லாம் வரை தெரிஞ்சு வச்சிருக்கியேப்பா.. அங்க சொந்தகாரங்க இருக்காங்களா..’

‘இல்லீங்க.. எங்க ஊருல ஒரு கோவில் இருந்துச்சி.. பெருமாள் கோயிலு.. எங்க வீட்லதான் சாமிக்கு பூ கட்டித் தருவோம்..’

‘அந்த வேலைக்குத்தான் இந்த ஊருக்கும் போனியா..’

‘அது ஒரு ட்ரிப்பு.. எங்க ஊருக்கு ஒருவாட்டி ஒரு பெரிய சாமி ஒருத்தரு வந்தாரு.. மடாதிபதி அவரு.. அவருக்கு ரொம்ப வயசாயிடிச்சி.. அவரால கார்லேந்து கோயிலுக்கு கூட போக முடியல.. அதனால கூட வந்தவங்க சக்கரநாற்காலில வச்சி தள்ளிட்டுப் போனாங்க.. பாதையெல்லாம் நிறைய முள்ளு கல்லு இருந்ததால நாங்களும் அதை விலக்கிவிட இன்னொரு வண்டில கூட போனோம்.. அவங்களுக்கு சுத்து வட்டாரத்துல வழி காட்னது ஊரைச் சுத்திக் காட்டினது எல்லாம் நாந்தான். அப்ப ரெண்டுநாளு இவருதான் அவர் கூட வந்தாரு.. மெட்றாஸ் வீட்டுக்கு வழியும் அப்பதான் சொன்னாரு. அதான் இப்ப சும்மா பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்..’

அனைத்தும் முடிந்து ஊரை விட்டுக் கிளம்புகையில் அவர் என்னைக் கட்டிப்பிடித்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். எத்தனை லைக்கு பாத்தியா என்று காட்டினார். சென்னை வந்தா என்னை வந்து பாருடா என்றார். உண்மையில் அந்த ஒரு வார்த்தைக்குத்தான் நான் வருகிறேனா

‘ஒ.. சரி சரி.. அப்படித்தான் இந்த ஊருக்குப் போனியா’ என்றார் லாண்டரிகாரர்

‘ஆமாங்க.. அவங்களோடதான் இந்த கோயிலுக்குப் போனேன். அந்த ஊருக்குப் போனப்போ நான் வண்டில இருந்த மத்த பொருளெல்லாம் இறக்கி ஓரமா வச்சுகிட்டிருந்தேன். அப்பத்தான் தீவிட்டிக்கு எண்ணெய் விடற டப்பா உள்ள இருக்கு எடுத்துட்டு வான்னு என்கிட்ட கை காமிச்சாங்க.. நானும் அவசர அவசரமா போயி அத எடுத்து எண்ணெய் இருக்கான்னு பாத்திட்டு திரும்பறப்போ திக்குனு ஆயிடுச்சி…’

‘ஏம்பா.. என்னாச்சு..’

அந்தக் கணம் என்றுமே என் நினைவில் இருந்து மறையாது.. ஒரு கணத்திலேயே அது என்னவென்று புரிந்தது.. ஆனால் அந்த ஒரு கணத்துக்குள் அது ஆயிரம் வடிவம் காட்டியது. முதலில் ஊரின் மச்சு வீட்டு வாசலில் இருந்த கரும் திண்ணையின் நினைவு வந்தது. பின் ஊர்க்காவல் பெரியாச்சி அம்மனின் விரித்த சடை ஞாபகம் வந்தது. ஒரு பெரும் அங்காளம்.. அல்லது பெரும் பத்தாயம்.. ஒருநாள் இரவில் கண்ட கோரை ஆறு.. கார்மேகம்.. அல்லது காரிருள்.. அல்லது ஏதுமற்ற வெறுமை… அமாவாசை இரவு.. சூனியம்பாங்களே அது இதுதானா… நட்சத்திரங்களாய் கண்கள்.. எல்லாம் அறிந்தவன் போல புன்னகை..

‘என்ன தம்பி?’ என்றார் கடைக்காரர் ஏதும் சொல்லாமல் இருப்பது பார்த்து

‘இல்லீங்க.. என் ஊரு பக்கத்து சுத்து வட்டாரத்துல எல்லாம் வெங்கடேச பெருமாள்.. ராஜ கோபாலன்.. ராமருதான்.. நான் முதல் முதல்ல பார்த்த படுத்துகிட்டு இருந்த சாமி இதுதாங்க… முன்னாடியே காலெண்டர்ல பாத்திருக்கேன் ஆனாலும் பக்கத்துல பாத்தது அதாங்க முத தடவை.. ‘

’அதைப் பார்த்து ரொம்பத்தான் பயந்துட்ட போலிருக்கே..’ என்றபடி அந்த வீட்டுக்கு வழி சொன்னார்

நான் வெட்கமாக சிரித்த படி கிளம்பினேன்..

அதைக்கண்டபின் எனது மனம் அதன் மீதே பிடிகொண்டிருந்தது. வெறுமனே இருக்கையில் எதையாவது கிறுக்கினால்கூட அது இந்த வடிவமாகவே இருந்தது. நான் அப்படி பிரமை பிடித்தது போல இருந்ததைப் பார்த்து வீட்டார் கூட குழம்பியிருக்கின்றனர்

‘என்ன சாமி, இவன் இப்படி பைத்தியம் மாதிரி இருக்கான்.. நம்ம பெருமாள் தான் சாமி அங்கயும் இருக்கு’ என்று எங்கள் கோயில் பட்டரிடம் விசாரித்தார் அப்பா, நான் பூ கொடுக்க கோயிலுக்கு சென்றபோது..

‘இங்க நம்ம கோயில்ல கையால் அருள் பாளித்தபடி என்னை சரணடைன்னு இவன் நின்னுன்டிருக்கான். அங்க கைல எழுத்தாணியும் தலைக்கு மரக்காலும் வச்சு அவன் படுத்துண்டிருக்கான். இந்த கதை திருமங்கை ஆழ்வார் காலத்துல நடந்ததும்பா. திருமங்கை மன்னன் தன்கிட்ட வேலை பார்த்தவங்களுக்கு சம்பளம் போடனும்ங்கிறான். ஆனால் அவன்கிட்ட அவ்வளவு பணம் இல்ல. அப்ப வணிகன் வேஷத்துல வந்த பெருமாள் மரக்காபடி வச்சு கூலி அளந்தான்னு அவனைப் பத்தி சொல்றா. இவன் பாதுக்காகிறான். அவன் படியளக்கிறான். மத்தபடிக்கு எல்லா ஸ்வாமியும் ஒண்ணுதான். ஏதோ திடீர்னு பார்த்ததுல அந்த ரூபம் பையன் மனசுல பதிஞ்சிடுத்து போலிருக்கு’ என்றார் எங்கள் ஊர் வெங்கடேச பெருமாள் கோயில் பட்டர்

’எதாவது மந்திரிக்கணுமா.. வேணும்னா தாயத்து கூட ஏதாவது கட்டிறலாம் சாமி..’

‘மந்திரிக்கிறதுக்கு இவனுக்கு என்ன பேயா புடிச்சுண்டுருக்கு. பெருமாள்தான புடிச்சுண்டிருக்கார்.. ஏன் மந்திரிக்கணும்.. இது சின்ன பயம்தான். தானா போயிடும் ‘ என்றார் பட்டர்

நிச்சயமாக அது பயம் இல்லை. அது ஒரு திகைப்பு.. கருமையான மலைப்பாம்பு சுத்தி சுருண்டு கிடக்க அதுல ஒருத்தன் படுத்துக்கொண்டிருப்பதை திடீரெனக் கண்ட தருணம். கடத்தெரு எண்ணெய் கடை செட்டியாரு பெஞ்சுல படுத்துருக்கற மாதிரி சாவகாசமா கிடக்கிறான்.. அதுலயும் அவன் அழகன் வேற. அழகன்னுதான் பேருமே… கால் மாட்டில ரெண்டு பொண்டாட்டிங்க.. அவன் சிரிச்சுகிட்டு தலையில முட்டு கொடுத்துகிட்டு நம்மள பார்க்கிறான். எனக்கு அந்த உணர்விலிருந்து வெளியேற பல நாட்கள் பிடித்தன. இவர் அந்த கோயிலில் வைத்து தான் சென்னை வந்தால் வந்து பார்க்கச் சொன்னார். அந்த திகைப்பு நினைவுக்கு வரும்போதெல்லாம் இவர் நினைவும் வரும்.

அவர் வீட்டுக்கு வெளியே இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தேன்.

‘பரவாயில்லையே.. லைட்டா வழி சொன்னத வச்சுகிட்டு மெட்ராஸ்ல அட்ரஸ் கண்டு பிடிச்சுட்டியே..குட் குட்.. இங்க என்ன பண்ற’

‘படிச்சு முடிச்சுட்டேன்.. ஊர்ல இருந்த ஒருத்தரு கூட ரூம்ல தங்கியிருந்தேன்.. வேலை தேடி சுத்தினப்போ இந்த கேபிள் போடற கம்பெனிகாரங்க வேலைக்கு எடுத்தாங்க.. மூணுமாசமாச்சு.. தி.நகர்ல புது பில்டிங்.. நாயுடுஹால் எதிர்ல கட்டறாங்க.. ‘

‘கேபிள் வலிப்பியாடா நீ.. பூ தொடுக்குற கையாச்சே.. கத வுடறியா.. ‘ சிரித்தார் அவர்

‘நான் ஹெல்ப்பர் சார்.. சீனியர் இருக்காங்க… சுந்தர்ராஜன் நாகப்பன்னு ரெண்டு பேரு. அதுலயும் தோண்டுற வேலை தட்டுற வேலைதான் கொடுக்குறாங்க. வேலை கத்துகிட்ட மாதிரியும் இல்ல ‘

‘ம்.. டெய்லி.. ரூம்லேர்ந்து போயிட்டு வறியா.. ரூம் எங்க இருக்கு’

’இல்ல.. ரெண்டுமாசம் முன்னாடி அவரு திரும்ப ஊருக்கே போயிட்டாரு.. ரூம் காலியாயிடுச்சி.. எங்காளுங்க பில்டிங்ல கேபிள் கிடக்குற ரூம்லயே தங்கிக்க சொன்னாங்க.. கேபிளும் காணாம போகாம பாத்துகனும்.. இந்த மாசத்தோட இந்த வேலை முடிஞ்சிடும்… கேபிள் போட்டு வச்ச ரூம்ல தரை போடறாங்க.. அதனால இந்த ரூமையும் காலி பண்ணனும்.. ’

சற்று இடைவெளி விட்டு ‘வேற வேலையும் தேடனும்.. தங்க இடமும் பாக்கனும்.. எதுவும் கிடைக்காட்டி ஊருக்கு போயிட்டு அப்புறம்தான் வரணும்’ என்றேன். அதைச் சொல்வதற்குள் சாப்பாட்டுத் தட்டில் ஆணியால் கீறுவது போல ஒரு கூச்சம் எழுந்து அடங்கியது

‘ஓ சரி சரி..’

ஒரு பெண்மனி உள்ளிருந்து தலையில் அடித்துக் கொண்டு என்ன என்று கேட்டது அவர் பின்னால் இருந்த ஜன்னல் கண்ணாடியில் பிரதிபலித்தது. அவர் உள்ளே எட்டிப் பார்த்தபடி ‘காபி சாப்பிடறியாப்பா’ என்றார்

‘வேணாம் சார்.. தண்ணி மட்டும் குடுங்க’

தண்ணீர் கொடுத்ததும், ‘இங்க வந்ததும் உங்க ஞாபகம் வந்தது. தெரிஞ்சவங்க வேற யாரும் இல்லை.. அதான் சும்மா பாத்துட்டு போலாம்னுதான் வந்தேன்..’ என்றேன் தயக்கமாக சிரித்தபடி

‘சரிப்பா.. நீ வந்தது ரொம்ப சந்தோஷம்’ என்று எழுந்தார். இந்தா என்றார் கையை நீட்டியபடி. அநிச்சையாக நான் கையை நீட்டவும் அவர் கையை விடுவிக்கவும் அது என் கையில் வந்து விழுந்தது. ஒரு சிறிய கிஃப்ட் பாக்ஸ்

என் நம்பரைக் கொடுத்திருந்திருக்கலாம். அல்லது அவர் நம்பரைக் கேட்டு வாங்கியிருந்திருக்கலாம். சில உதவிகளை நேரில் கேட்பதை விட மெசேஜில் கேட்பது எளிது. பல சங்கடங்களைத் தவிர்க்கலாம். ஆனாலும் ஒன்றும் நடந்திருக்காது என்றே எனக்குத் தோன்றியது. அவர் என்னை வீட்டிற்குள்ளே கூட சேர்க்கவில்லை. வாசலோடு பேசி திருப்பி அனுப்பிவிட்டார். நான் என் கையில் இருந்த சிறிய பெட்டியைப் பார்த்தேன். ஏன் அங்கு போய் நின்றேன் என்று கூச்சமாக இருந்தது. அதை ஜன்னல் வழியாக விசிறி அடிக்கலாமா என்றும் தோன்றியது.

மீண்டும் பாண்டி பஜாருக்கு வந்து சேர்ந்தேன். இந்த முறை கண்டக்டர் பதினேழு ரூபாய் வாங்கிக் கொண்டார். போகும்போது ஒன்பது ரூபாய்தான் கொடுத்தேன். வெள்ளை போர்டு என்று நினைத்து ஏறியிருக்கிறேன். வந்த இத்தனை நாளில் அந்த கணக்கும் பிடிபடவே இல்லை. பெட்டிக் கடையில் இரண்டு வாழைப்பழங்கள் வாங்கி உண்டேன். இன்னும் மூன்று நாட்களில் சம்பளம் வரும்வரை சமாளிக்க வேண்டும். அதன் பின் இங்கு வேறு வேலை இல்லை. வேறு வேலை கிடைக்கவில்லையெனில் சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஊருக்குப் போக வேண்டியதுதான். ஊரில் போய் என்ன செய்வது. அது பெரும் கேள்வி. அதை இப்பொழுது யோசிக்க வேண்டாம். கட்டிடத்தை நோக்கி மெல்ல நடக்கத் துவங்கினேன். நாளை இந்த கேபிள் வேலை முடிந்து விட்டால் அப்புறம் அனைத்தையும் எடுத்து வைக்கும் வேலைதான்.

–X–

கட்டிடத்தை அடைந்த போது இரவு பத்து மணியாகியிருந்தது. என் சீனியர்கள் இருவரையும் கேபிள் வேலை நடந்த இடத்தில் காணவில்லை. நான் தங்கியிருந்த, எங்கள் கேபிள்களை வைத்திருந்த அறையை நோக்கிச் சென்றேன். அங்கே ஒரு முனகல் சப்தம் கேட்டது..

உள்ளே சென்று பார்த்தபோது அடிக்கடி பஸ்டாண்டில் பார்த்திருந்த அந்தப் பெண் அங்கே சுருண்டு கிடந்த அந்தக் கருமையான தடித்த கேபிள் ரோல் மீது படுத்திருப்பதைக் கண்டேன்.

நான் திடுக்கிட்டவனாய் திரும்ப வந்து வெளியே அமர்ந்து கொண்டேன். ஒரு கணம் என்றாலும் தெளிவாக இருந்தது

அவள் அங்கு ஆடையின்றிப் படுத்திருந்தாள். அவள் கால்மாட்டில் சுந்தர்ராஜன் அமர்ந்திருந்தான். அவள் தலைமாட்டில் கழுத்துக்கு மேலே நாகப்பன் அமர்ந்திருந்தான். அவள் என் டூல்ஸ் பையைத்தான் சுருட்டி தலைமாட்டில் வைத்திருந்தாள். மங்கலாக விளக்கு எரிந்தாலும் முழுக் கருமையாய் அவளே அறைமுவதும் வியாபித்திருந்தாள்.

சிறிது நேரத்தில் ஓசைகள் அடங்கின. வெளியே வந்த நாகப்பன் என்னைக் கண்டு சற்று அதிர்ந்தான். பின் உள்ளே சென்றான். சற்றுக் கழித்து நானும் உள்ளே சென்ற போது, அவள் ஆடை அணிந்து ஓரமாக கால் மடக்கி அமர்ந்து கொண்டிருந்தாள். நாகப்பனும் சுந்தர்ராஜனும் பழங்களையும் முறுக்கையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நான் வந்ததோ கண்டதோ அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை

’ஐய.. எத்தன வாட்டி கேக்கறது.. இன்னொரு எரநூறு ரூவா கொடு.. .. நான் என்னா சும்மாவா கேக்கிறேன்’ என்றாள் அவள்

சுந்தர் ராஜன் எழுந்து அவள் அருகில் சென்றான்.. ‘இன்னா உனக்கு.. அதான் சீக்கிரம் வேலைய முஷ்ட்டு அனுப்பறோம்ல.. என்னாத்துக்கு பணம்…’ கன்னத்தில் பளாரென ஒரு அடி வைத்தான். ஆனால் முகத்தில் சிரிப்புதான் இருந்தது

‘இந்தா.. அடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத… அட் எ டைமுல ரெண்டுபேரும் பாய்ஞ்சுட்டு.. என்னா ஓவரா பண்றீங்கோ..’ என்றாள். அவள் முகத்திலும் கோபம் இல்லை ஆனால் கடுமை இருந்தது

சுந்தர்ராஜன் என்னைப் பார்த்து திரும்பினான்.. ‘டேய்.. உன் கைலை எவ்ளோடா இருக்கு.. எடுத்து எறிடா இந்த தெவ்டியா மூஞ்சிலா’

’இப்ப எங்கைல ஐம்பது ரூபாய்தான் இருக்கு..’

‘டேய்.. இத வச்சுக்கடி.. மீதி அப்புறமா வாங்க்க’

‘அப்புறம்னா.. வூட்டாண்ட வரவா.. சொல்ட்டுப்போறியா பொண்டாட்டிட்ட..’

‘யேய்.. வோத்தா.. வூட்டாண்ட வர்ற வேலைலாம் வச்சுக்காத.. ஏற்கனவே இப்படி வூட்டுக்கு வந்ததுக்கு நீ என்னா வாங்கிக்கினன்னு நினவு இருக்கா’ சிரித்தபடியே கன்னத்தில் இன்னொரு அடி வைத்தான். அதுவும் பளீரென்று விழுந்தது..

‘சரி வுடு.. அதையும் பாத்துருவோம்.. நீ தான் சூரப்புலியாச்சே..’

‘ரோதனையாப் போச்சுப்பா… டேய்.. அது இன்னாடா கைல பாக்ஸு.’

‘எனக்குத் தெரிஞ்சவரு ஒருத்தரு கொடுத்தாரு… கிஃப்ட்டு பாக்ஸு’

அதைப் பிரித்தேன். அதில் ஒரு மரக்கால் இருந்தது. நான் அதிர்ந்தவனாய் அதையே பார்த்திருந்தேன்

‘இது மரக்காபடிண்ணா… நெல்லு அளப்பாங்கல்ல அது.. அதையே சின்ன சொப்பு சாமான் மாதிரி வெள்ளில பண்ணி கல்லு பதிச்சிருக்கு.’

‘எவ்ளோ பெறும்..’

‘ஐநூறுன்னு பாக்ஸ்லயே வெல போட்ருக்குண்ணா..’

‘யப்பா சாமி நல்ல நேரத்துல வந்தடா.. அத்த கொடு.. இந்தாடி இத வச்சுக்க.. கேட்டேல்ல ஐநூறு ரூபாயாம்.. நான் நாளைக்கு வந்து மீட்டுக்கிறேன்.. நானே போறவழீல தெருமொனேல டிராப் பண்றேன் வா. ‘

‘ஐநூறுன்னா சொல்ற.. உன்னைய நம்பலாமா’ அவள் என்னைப் பார்த்து சிரித்தாள்.

அவர்கள் மூவரும் ஏற்கனவே வைத்திருந்த பாட்டில் மதுவை ஊற்றி சோடாவைக் கலக்கிக் குடித்தனர்.

நான் சுந்தர்ராஜனிடம் சென்றேன்..

‘நான் ஊருக்குப் போறேன்ணா.. ’ என்றேன் அந்த பாக்ஸைப் பார்த்தபடி

‘ஏன் என்னாச்சு.. ஏதுனா ந்யூஸா..’ என்றான் அவன் என்னைப் பார்த்து குழப்பமாக

‘இல்ல இந்த கேபிள் வேலை முடிஞ்சிருச்சின்னாங்க.. கம்பெனிகாரங்க…. எனக்கு இங்க ரூமும் இல்ல.. வேலையும் இல்ல.. அதான்..’

‘கேபிளீங் வேலை முடிஞ்சா அதோட போச்சா.. மத்த ஒயரிங்லாம் யாரு போடறது.. காண்டிராக்ட்டு காரங்க மாறினாலும் வொர்க்கருங்க நாமதான் இங்க. என்னா புரியுதா.. தோ பாரு.. எங்களுக்கெல்லாம் வூடு வாசல்னு இருக்கு.. அதனால பில்டிங் வேல முடியறவரை நீ இங்கதான்… நாளேலேர்ந்து ஃப்ஸ்ட் ப்ளோர் ரூம்ல தங்கிக்க.. ஒயர்லாம் வரும்.. பாத்துக்க என்னா? சாவிய வச்சுக்க கைல’

அவள் அவனுடன் பைக்கில் ஏறிச் சென்றாள். போவதற்கு முன் என்னிடம் ‘ நான் இத பத்திரமா வச்சுப்பேன். ஒண்ணியும் கவலைப் படாத. அண்ணன் சொன்னா சொன்னாமாரியே மீட்டுக் கொண்டு வந்து உன்னாண்ட கொடுத்திரும்’ என்றாள்

’அது இனிம எனக்கு தேவையில்லைங்க… நீங்களே வச்சுகங்க!’ என்றேன் நான் சிரித்தபடி

பின் என் அறைக்கு வந்து ஓரமாக படுத்துக் கொண்டேன். மெல்ல கண்களை மூடிக்கொண்டேன். இந்த இடம் பாண்டிபஜார். நான் பஸ்ல போன இடம் கிழக்கே இருக்கு. மேக்க நான் முன்னாடி தங்கியிருந்த ரூமு.. தெக்க இருப்பது என் ஊரு.. வடக்க என்ன இருக்குன்னு பாத்துடனும்.. என்று நினைத்துக் கொண்டேன். எப்பொழுது உறங்கினேன் என்று நினைவில்லை

கூண்டுக்குள் பெண்கள் – விலாஸ் சாரங் தொகுப்பு குறித்து காளிப்ரஸாத்

கூண்டுக்குள் பெண்கள் – விலாஸ் சாரங் ( தமிழில்:- ஆனந்த் ஸ்ரீநிவாசன்)

ஆங்கில/ மராத்திய எழுத்தாளரான விலாஸ் சாங் எழுதிய ”த தம்மா மேன்” ( தமிழில்: தம்மம் தந்தவன் ) நாவல் வழியாகவே அவரை முதன் முதலில் அணுகுகிறேன். புத்தரின் வாழ்வைத் தத்துவ ரீதியிலாகவோ, போதனைகள் வழியாகவோ அணுகும் முறை உண்டு. ஆனால் இவர் அந்த நாவலில் புத்தரை அவரது அலைச்சல்களைக் கொண்டே அவதானித்தவர். புத்தரின் போதனைகள் அத்தனை இருந்தாலும் அவர் அந்த ”த தம்மா மேன்” நாவலில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ஒரு போதனை குறிப்பிடத்தக்கது.

 

சகோதரா! நீ உனக்குள் ஒரு தீவை உருவாக்கிக் கொண்டு அங்கேயே இருப்பாயாக! உனக்கு உன்னைத் தவிர வேறு யாரிடமும் அடைக்கலம் கோராதே! யாருக்கும் புகலிடமும் அளிக்காதே! உன் தீவாக தம்மத்தை எண்ணிக்கொண்டு அதற்குள் மட்டுமே வாழ்ந்து வா! ’ என்பதாகும் அது

 

அவரது சிறுகதை தொகுப்பான கூண்டுக்குள் பெண்கள் தொகுப்பைப் படிக்கும் போது, அந்த வரிகளை அடைய அவர் மேற்கொண்ட சோதனைகளோ இந்த கதைகள் எல்லாமே என்று எனக்குத் தோன்றியது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நிலப்பகுதிகளில் இருந்தும் இவர்  இத்தனை ஆண்டுகளாக் எழுதிய கதைகளின் நாயகர்/நாயகிகள் அனைவருமே வேறு வேறு வகைகளில் தனித்தலையும் புத்தர்களாகவே இருப்பது எனக்கு அப்படித் தோன்றச் செய்தது. 

தமிழக எழுத்தாளர்களில்  கி.ராஜநாராயணன் வரிசை இலக்கியவாதிகளை கதை சொல்லிகள் என்றும் அசோகமித்திரன் வகை இலக்கியவாதிகளை ”கதை எழுதுபவர்கள்” என்றும் விமர்சகர் பார்வையில் எழுத்தாளர் ஜெயமோகன் பிரிக்கின்றார் (இலக்கிய முன்னோடிகள்).  விலாஸ் சாரங் -ன் இந்த தொகுப்பைப் படித்தவரையில் அவர் இவ்விரண்டில் அசோகமித்திரன் வழியில் வருபவர் என்பதை அவர் எழுத்தில் வெளிப்படும் வெறுமை, அங்கதம் இவ்விரண்டையும் வைத்து எளிதாக சொல்லிவிடமுடியும். இவரைத் தமிழின் நவீனத்துவ எழுத்தாளர்களில் இணை வைத்துப் புரிந்து கொள்ளலாம்

 

உதாரணமாக, அசோகமித்திரனனின் ”தப்ப முடியாது” என்கிற சிறுகதையை சொல்லலாம்.  குழந்தைக்கு வைத்தியம் பார்க்க ஒரு குடிசைவாழ் பெண்மனி சேர்த்து வைத்திருந்த பணத்தை அவளது குடிகார  கணவன் எடுத்துக்கொண்டு குடிக்கக் கிளம்புகிறான். அதைத் திரும்பப் பெறக் கத்திக் கூப்பாடு போட்டுக்கொடு வரும் அவனது மனைவியை அடித்துப் போட்டுவிட்டுக் கிளம்புகிறான் அவன். அதை அங்கு ஓரமாக திருட்டு தம் அடிக்க வந்த அந்தக் கதையின் நாயகன் பார்த்துக் கொண்டிருக்கிறான். இரவு படுக்கையில் அவன் அந்த சம்பவத்தைப்பற்றி சிந்தித்தித்துக் கொண்டே இருப்பான். ”பாவி இப்படி பண்ணிடானே அந்தக் குழந்தை என்னவாகும்” என்று அவன் யோசிப்பான்.. அப்படியே அந்த எண்ணம் வளர்ந்து ’அருகில் இருந்த நான் அவனை அதட்டியிருந்தால் அவன் போயிருப்பான்’ என்று தன் மீது அவன் கோபம் திரும்பும். அப்போது அவன் இன்னொரு மனம் அவனிடம் ’நீ இன்றும் தப்பு செய்யவில்லை.. விருப்பு வெறுப்பு இன்றி அதைப் பார்த்துக் கொண்டிருந்தாய்..அதை தத்வமஸி என்று உபநிடதம் சொல்கிறது’ என்று ஆசுவாசப்படுத்தும். அப்போது அந்த முந்தைய மனம் மீண்டும், ‘நீ என்ன கிழித்தாய்! இப்படில்லாம் சொல்லி உன் கோழைத்தனத்தை மூடிக் கொள்ளாதே’ என்று குத்திக் காட்டும்.. அவன் அப்படியே உறங்கிப் போவான். அந்தக் கதை இப்படி முடியும்..” அப்படியே யோசித்தபடி நான் தூங்கி விட்டேன்.. மறுநாள் காலை நான் எழுந்து பார்த்தேன்.. எல்லாம் சரியாக இருந்தது..” என்று. அசோக மித்திரன் கதைகளில் வரும் ’நான்’ மிக முக்கியமானது. விலாஸ் சாரங் கதைகளும் இதேபோல துவங்கி ‘நான்’ என்றே தன்னிலையில் எழுதப்பட்டு செல்வதையும் ஒருவித அங்கதத்தில் முடிவதையும் ஒப்பிட்டுக் காண முடிகிறது. ஒரு அபத்த சூழ்நிலையை தத்துவார்த்தமார்க்கும் முயற்சியும் ஒரு அரிய சூழலை அபத்தமாக்கும் முயற்சியும் இவர் எழுத்தில் தென்படுகின்றன.  உதாரணமாக, தன் நண்பனின் தாயின் பிணத்தை எரிக்கையில் அதில் குளிர்காயும் ஒரு தருணம். மற்றொன்று இதில் வரும் ஈக்கள் கதையில் அவர் ஒவ்வொரு ஈயாக எப்படி தப்பவிட்டு எப்படி கொன்று அதை சித்ரவதை செய்து பாடாய் படுத்துகிறார் என்று சொல்லிவந்து அதை இறுதியில் ‘ நான் இப்பொழுது சுய இன்பம் செய்வதில்லை என்று சொல்லி முடிப்பது. புத்தரின் சிலையை எரித்து ஒரு துறவி குளிர்காயும் அந்த புகழ்பெற்ற ஜென்கதையை நாம் இங்கு நினைத்துப் பார்க்கலாம்

 

கிட்டத்தட்ட இந்த சிந்தனையையே பலவிதங்களில் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார் விலாஸ் சாரங். அவருக்கு இந்தியப் புராணங்களின் மீது ஒரு பெரும் பயிற்சி இருக்கிறது. அதே நேரத்தில் அதை ஒரு நவீனத்துவனின் நோக்கில் காணும் பார்வையும் இருக்கிறது. 

 

இந்திரனின் ஆயிரம் கண்கள் என்கிற தொன்மத்தை அவர் எடுத்துக் கொள்கிறார். அவர், அந்த இந்திரனிடமிருந்து வரும் மணத்தை  அழிவின்மையின் மணமாக மாற்றுகிறார். இந்திரன் ரிஷி பத்தினிகளொடு அவர்கள் அறியாமல் உறவு கொண்டவர். அவன் இந்திரன் என்பதைப் பத்தினிகள் உணர்ந்ததே இல்லை. ஆனால் சிகப்பு விளக்குப் பகுதியில் விபச்சாரியாக இருக்கும் சம்பா அவனின் முதற்தொடுகையிலேயே ’நீங்க இந்திரன்தானே’ என்று கேட்கிறாள். இந்திரன் அவளுக்கு ஆயிரம் கண்களை அளிக்கிறான். அவளது பார்வையைக் காணமுடியாத ஆண்களும் பெண்களும் தங்கள் பார்வையைத் திருப்பிக் கொள்கின்றனர். அவளை எதிர்கொள்ள அவர்களால் முடியவில்லை.  தன் உண்மையைப் சாதாரணப் பெண்களின் பார்வையிலிருந்து மறைத்து ஒரு பிம்பத்தை கட்டியெழுப்பி விடலாம். ஆனால் ஒரு விபச்சாரிப் பெண்ணிடம் ஒருவன் பீற்றிக் கொள்ள முடியுமா என்ன? அந்தக் கதையின் முடிவில் மக்கள் அவளைத் தெய்வமாக்கி தசரா விழாவில் அவளை துதிக்க ஆரம்பிக்கிறார்கள். இதுவே அவர் தன் அங்கதத்தை வெளிப்படுத்தும் இடமாக இருக்கிறது. இதேபோல ஓம்லிங்கம், தெய்வங்களின் புரட்சி, கஸ்தூரிமான் என்று இவர் சில தொன்மங்களைக் கையாளும் கதைகளிலும் இவ்விதமான நவீனத்துவரின் பார்வையை நாம் காணமுடிகிறது

அந்த நவீனம் என்பது அவர் தன் எழுத்துக்களைக் கையாண்ட முறை என்றும் சொல்லலாம். அதைக் கொண்டு அவர் மரபையோ தொன்மத்தையோ நிராகரிக்கவும் இல்லை. அதை தற்காலத்துடன் பொருத்துகிறார். அதிகநாள் மும்பையில் நிலை கொண்டிருந்தாலும் அவர், அவர் தன் பணி நிமித்தமாக பல தேசங்களில் வாழ்ந்திருக்கிறார். அவரது படைப்புகள் உளகளாவிய ஆங்கிய பத்திரிக்கைகளில்தன வந்திருக்கின்றன. சொல்லப்போனால்,  அவர் பிற்காலத்தில் மராத்தியில் எழுதிய படைப்புகளுமே அவர் முதலில் ஆங்கிலத்தில் சொற்றொடர்களை அமைத்துப் பின் அதை மராத்திக்கு மாற்றியவைகள் தான். இதுபோல பல உலகின் பல தேசங்களில் வசித்த எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களை எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் அந்த தேசத்தின் பெயர் சொல்லியே எழுதியிருக்கிறார்கள். ஒருபக்கம் அ.முத்துலிங்கம் ஒவ்வொரு நாட்டின் மனிதர்களின் உன்னதத்தை அறியாமையை எழுதியிருக்கிறார். மற்றொரு பக்கத்தில் சென்ற வருடம் சிறுகதை தொகுப்பு வெளியிட்டிருக்கும் எழுத்தாளர் சிவா கிருஷ்ண முர்த்தி அவர்கள் ஒவ்வொரு நாட்டு மக்களின் உள்ளார்ந்த கீழ்மையை எழுதியிருக்கிறார். அந்த இரு எல்லைகளையும் வைத்துப் பார்க்கையில் விலாஸ் சாரங் தன் கதைகளில் தான் பணிபுரிந்த நாடுகளின் பெயரை அரிதாகவே குறிப்பிடுகிறார். சில கதைகளை வைத்து நாம் யூகிக்க முடிந்தாலும் அதை அவர் சொல்லாததன் காரணம் அவர் தனிப்பட்ட மனிதன் குறித்துதான் எழுதுகிறார் என்பது மட்டுமே. அவர் மொழி தேசம் என்று மனிதர்களை பிரித்துக் காட்டுகையில் அவர்களின் பின்புலம் தேவையற்ற குழப்பங்களை எற்படுத்தி கதையை திசை திருப்பிவிடும் என்று கூட கருதியிருக்கலாம். எந்த தேசமானாலும் அவர் கதாபாத்திரங்கள் ஒரு அறையில், ஒரு வீட்டில், ஒரு வாடகை குடியிருக்கில், ஒரு டார்மென்ரியில் இருக்கும் மனிதர்களே. கூண்டுக்குள் இருக்கும் பெண்களே அவரது கதை மாந்தர்கள். 

 

அவர்கள் தனக்குள்ளே ஆழ்ந்தவர்களாக இருக்கிறார்கள். இண்ட்ரோவெர்ட் என்று சொல்வோம் இல்லையா அப்படி.  அவர்கள் அதிகம் மற்றவர்களிடம் வெளிப்படுவதில்லை. அவர்கள் ஒருவித சுயஆய்வு செய்கிறார்கள். ’வரலாறு தன் பக்கம்’ என்று சொல்லிக் கொண்டு அவர்கள் தனித்து இருக்கிறார்கள். அப்பொழுது அங்கு உலகியலுடனோ அரசியலுடனோ  ஒரு தத்துவத்துடனோ அவர்கள் மோதிக் கொள்கிறார்கள். அல்லது குறைந்த பட்சம் அவர்கள் வெளித்தள்ளிய கருத்துக்களே பல்லியாக மீண்டும் அவருக்குள் திரும்புகின்றன. அவரது சிறுகதைகள் அந்த தருணத்தில்தான் நிகழ்கின்றன. விலாஸ்சாரங் அடிப்படையில் ஒரு கவிஞர் என்பதும் அவரது இந்த உள்ளொடுங்கிய கதைத் தனைக்கு காரணமாக இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. மரபு எழுத்துகளுக்கு உரை எழுதுவது பண்பாடு. நவீன எழுத்துக்கள் ஒவ்வொரு வாசகனுக்கும் அந்தரங்கமானவை. ஆகவேதான், இவர் ஒரு நவீன எழுத்தாளர் என்பதாலேயே அவரது கதைகளுக்கு உரை எழுதுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது. அவரது மற்ற பரிணாமங்கள் குறித்தும் பார்க்கலாம்

 

விலாஸ் சாரங் என்கிற ஒரு கவிஞன் வெளிப்படும் தருணம் அவரது கதைகளில் மிக முக்கியமானதாக விளங்குகின்றன. கவிஞர்கள் கதைகள் எழுதும்போது அந்த அனுபவம் சில வரிகளில் நமக்கும் வந்துவிடும். யூமாவாசுகியின் ரத்த உறவு நாவலில் சுவீட் கடையின் பெயரை அந்தச் சிறுவன் மைக்கில் சொல்லும் தருணம்.. வேட்டை என்கிற சிறுகதையில் அவர் அந்த வாழை மரங்களை வெட்டும் தருணம்.. பிரான்ஸிஸ் கிருபா, கன்னி நாவலில் “ சிலுவையே! நீ உணர்ந்தது மீட்பரின் இறப்பையா அல்லது உயிர்ப்பையா “ என்று கேட்கும் தருணங்களில் இதை எழுதுபவன் நாவலாசிரியன் அல்ல கவிஞன் என்று நாம் உணர்வது நிகழும். எழுத்தாளர்களின் அபூர்வ வரிகள் இவ்வகையில் எழுந்து வரும். ”முகிலில் வாழ்கிறது அணையா நெருப்பு” என்று துவங்கும் ஜெயமோகனின் வெண்முகில் நகரம் நினைவுக்கு வருகிறது. ( உண்மையில் இந்த இடத்தில் விலாஸ் சாரங் இருந்தால் ஒரு பிராக்கெட்டில்(!) இந்த பேச்சாளர் இதையெல்லாம் படித்திருக்கிறார் என்று ஒரு ஆச்சரியக் குறியும் போடுவார் என்பதை நான் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். இடையூறுக்கு மன்னிக்கவும்.. )

 

ஆம் கவிதை வரிகள் பற்றி மீண்டும் வருவோம்.. சில கவித்துவ வரிகள் இவரது சிறுகதைகளில் வெளிப்படுகின்றன. இவரது ஒரு வரி எனக்கு தேவதச்சனை நினைவூட்டியது..

துணி துவைத்துக் கொண்டிருந்தேன். காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்.

தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்.. காதில் விழுகிறது.. குருவிகள் போய்விட்ட நிசப்தம்.

அடுத்த துணி எடுத்தேன்.. காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகளின் சப்தம்

 

இது தேவதச்சனின் கவிதை

 

மேற்கண்ட கவிதையை என்னைத் தேடச் செய்தது..விலாஸ் சரங்கின் வரலாற்றின் முடிவு என்கிற கதை. இந்தக் கதையைப் பற்றி முதலில் குறிப்பிடவேண்டும். இந்தக் கதையே இந்தத் தொகுப்பின் சிறந்த கதையாகவே எனக்குப் பட்டது. காரணம் அவரை எவ்வாறெல்லாம் நாம் பகுக்கலாமோ அல்லது அவர் தன்னை தொகுப்பின் கதைகளை ஐந்தாகப் பிரிப்பதன் மூலம் (வேட்கைச் சூழல், கடலோர நகரம், சிற்றுயிர்கள், நிவானத்தின் தரிசனம் குலாக்கின் நிழல் ) அவர் தன்னை எப்படிப் பகுத்துக் கொள்கிறாரோ அந்த அனைத்திற்கும் பொதுவான கதை அது. அதை எந்த பிரிவில் வைத்தலும் அதனுடன் ஒன்றியிருக்கும். 

 

முன்பு சொன்ன தேவதச்சன் கவிதைக்கு வருவோம்.. அந்தக் கதையில் ஒரு கதாபாத்திரம் ஒவ்வொரு வரலாற்று இடத்திற்கும் போய் அங்கு இருக்கும் நிசப்தத்தைப் பதிவு செய்கிறது. அந்தக் கதை முழுக்கவே உள்ளொடுங்கியவனை சந்திக்க  அவரது மாணவன் வருவதைப் பற்றியது.. அதில் ஒரு வரி,

”‘தனித்திருப்பவன் தன் ஷூவை உள்வெளியாக அணிகிறான். மற்றவன் எதிர்பார்க்காதபடி என்றோ ஒருநாள் கையில் துப்பாக்கியுடன் வருகிறான். யாருடைய காலடிகள் பின்னோக்கிப் பதிகின்றன?’ என்று ஒரு எழுதுறார். வேறொரு கதையில் ‘என் காலணியின் நாடாக்களின் நிலைமை  விவாதத்திற்கானது அல்ல.. நானும் அதைக் கோரவில்லை..’ என்று ஒரு வரி.. அவரது மொழிக் கச்சிதத்திற்கு அவர் ஒரு கவிஞர் என்பதும் முக்கியமான காரணம். என்று தோன்றுகிறது. அந்த கச்சிதத்தையும் அங்கதத்தையும் மொழிபெயர்ப்பில் அப்படியே கொண்டு வந்திருக்கும் ஸ்ரீநிவாசன் அவர்களின் மொழிபெயர்ப்பும் முக்கியமாக இந்த இடத்தில் குறிப்பிடப் படவேண்டும்

 

முன்பே சொன்னது போல அவருக்கு இந்திய தத்துவங்களையும் தொன்மங்களையும் எழுதுவதில் மிகவும் விருப்பம் இருக்கிறது. அவரது ’த தம்மா மேன்’ புத்தகம் முழுதுமே இது குறித்த பார்வையையும் அதில் தன் கருத்தை அதைச் சார்ந்தும் எதிர்த்தும் எழுதியிருக்கிறார். நேராகவோ அங்கதமாகவோ அந்தக் கருத்துக்கள் வெளிப்படும்

 

சாவுமரம் கதையில் வரும் பாபா சிரசாசனம் செய்யும்போது, தன் ஆசிரமத்தில் இருக்கும் மண்டையோட்டு மரம் வானில் வேர் கொண்டு புவியில் கிளைபரப்பும்  தலைகீழ் மரமாக காண்பார். இதை பல இடங்களில் எழுத்தாளர் ஜெயமோகன் தன் படைப்புகளிலும் உரைகளிலும் குறிப்பிட்டிருக்கிறார். அது ஞானிகள் நமக்கு அளித்த கொடை. வானில் வேர்கொண்டு மண்ணில் கிளைபரப்பி  விரிந்திருக்கும் நம் மரபு அளிக்கும் ஞானத்தின் குறியீடு. இந்த மரம் என்னும் குறியீட்டை விலாஸ் சாரங் அவர்களும் பல இடங்களில் கையாளுவார். ’த தம்மாமேன்’ முழுக்கவே மரங்களை வைத்து கொண்டு செல்வார். ஆனால் அதையே இங்கு பகடியாக குறிப்பிடுகிறார். அப்படி எழுந்து வந்த ஞானம் இப்பொழுது தன் ஓவியங்களின் வழியாக விபூதி  கொட்டும் பாபாவிடம் வந்து நிற்பதன் அபத்தம் அது. 

 

இதைத் தாண்டி இதுல் இருக்கும் அரசியல் கதைகள். இந்திய வல்லூறு வின் வாக்கு மூலம் கதை அவர் முன்பே எழுதியிருந்தாலும் சமீபத்தில்தான் அந்த சைவ அசைவ உணவு விவாதமானது என்பது நினைவுக்கு வந்து. வேறொரு கதையில் இந்தியாவில் இராணுவ ஆட்சி வரும் என்பது அவருக்கு ஒரு  கனவில் தோன்றுகிறது. அதேநேரம், அவரது மற்ற கதைகளை விடவும் அவரது இந்த கதைகள் நாம் அறிந்த முடிவை நோக்கி நம்மை இட்டுச் செல்வதும் நாம் படித்த கதையையே மீண்டும் படிக்கும் எண்ணத்தை உண்டாக்குகின்றன. 

  மற்றும் ஒரு குறிப்பிடத் தக்க ஒன்று குரூர அழகியல். அந்த பீபத்ஸம் என்பதும் கூட வெறும் அதிர்ச்ச்சிக்காக அவரால் பயன் படுத்தப்படவில்லை

 தேவதேவன் தன் கவிதை ஒன்றில் சொல்வார்:         

’கடலோரம் வெளிக்கிருந்து /கால்கழுவி எழுந்த பின்புதான் /கடலும் வானமும் தன் ஆகிருதி காட்டிற்று’ ஆம்.. அத்தனை பிரம்மாண்டம்தான் என்றாலும் அவனவனுக்கு அவனவன் அவசரங்கள் அவஸ்தைகள் முக்கியம்.  அதில் முக்கிக் கொண்டிருப்பவனிடம் சென்று ஒரு ஆகாயத்தின் கடலின் அழகைப் பேசுவதைத்தான் அவர் தன் அந்தக் கதைகளில் சுட்டுகிறார். உலகியல் பிரச்சனைகளில் திளைத்துக் கொண்டு இருப்பவனிடம் கவித்துவத்தைக் காட்டிக் கொண்டு இருக்கும் ஒரு அபத்தம் உண்டு.  அதைத்தான் விலாஸ் சாரங் கும் பகடி செய்கிறார்.  ஒரு விதத்தில் அது அவரையே அவர் சுயபகடி செய்து கொள்வதாக வெளிப்படுகின்றன. அதனால்தான் அவர் தன் கதைகளை பெரும்பாலும் தன்னிலையில் எழுதுகிறாரோ என்றும் தோன்றுகிறது 

 

இந்த தொகுப்பைப் படித்ததும், அவர் கதைகளில் வெளிப்படும் ’இடம் /காலமற்ற தன்மையும்,’ ’கவித்துவமும்,’ ’பீபத்ஸம் எனப்படும் குரூர அழகியலும்தான்’ அவரது தனித்தன்மையாக நம் நினைவில் நிற்கின்றன. அந்த தருணங்களில்தான் அவரது  எழுத்துக்கள் உச்சம் பெறுவதும் நிகழ்கிறது . நாம் நம் அலுவலகத்தில் வேறு தேசத்தின் நேரத்தில் ஆழ்ந்து வேலை செய்திருக்கலாம். சில நேரங்களில் நம் வாசிப்பில் கால நேரம் பார்க்காமல் ஆழ்ந்திருக்கலாம். அதன்பின் நிகழ்காலத்திற்கு மீள்கையில் யதார்த்தத்த்தைக் கண்டு திகைத்து நிற்கும் ஒரு கணநேரத் தருணம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.  தன் கதைகளில் இவ்வாறு காலமும் தூரமும் வைத்து  விளையாடும் விலாஸ் சாரங்-ன் கதைகள் நமக்கும் அத்தகைய ஒரு திகைப்பைத்தான் அளிக்கின்றன

 

ஸ்ரீஜீ – காளிப்ரஸாத் சிறுகதை

ஸ்ரீமந்நாராயணன் தன் பஜாஜ் எம்.எய்ட்டியின் ஹார்னை விடாமல் அடித்தபடி இருந்தார். பரிதவிப்புடன் கழுத்தைத் தூக்கிப் பார்த்தபடியே இருந்தார். அவருக்கு இரு பக்கத்திலும் இருந்த பைக்காரர்கள் அடித்த ஹார்ன் ஒலியில் இது கேட்கவே இல்லை. இருந்தாலும் விடாமல் அவர் அடித்துக் கொண்டுதான் இருந்தார். அதுவும் தொண்டை கட்டிப்போன ஆட்டுக்குட்டி போல பரிதாபக் குரல் எழுப்பியது. தொலைவில் இரு கல்லூரிப் பேருந்துகள் யூடர்ன் அடித்துக் கொண்டிருந்தன. சாலையின் இருபுறங்களிலும் வண்டிகள் நின்றன. எக்குத்தாப்பாக எதிரில் இருந்து வந்த கார் இடையில் சிக்கி நிற்க ரசாபாசம் ஆகியிருந்தது. போலீஸ்காரரைப் பார்த்த அந்த பஸ் ட்ரைவர் கையை உயர்த்தி வணக்கம் சொல்லித் திருப்பிக் கொண்டிருந்தான்.

புடுங்கி.. இதே நம்ம வண்டின்னா ஓரங்கட்டி நிக்க வச்சிருப்பான்..’ என்றார் அருகில் நின்றவர்

ஸ்ரீமந்நாராயணன் முகத்தைக் திருப்பிக் கொண்டு எதிர் திசையில் பார்த்தார். இப்பொழுது சமூகம் குறித்து கவலைப்படும் நிலையில் அவர் இல்லை. போயும் போயும் இன்னைக்கா இப்படி ஆகனும் என்று அவர் படபடத்துக் கொண்டிருந்தார். மெல்ல வழி சீரானது.

அவசர அவசரமாக சென்று வண்டியை நிறுத்தி தன் அலுவலகத்திற்கு விரைந்தார். அலுவலகம் போய் மீட்டிங் ரூமுக்குள் நுழைந்து காலியான இருக்கையில் அமர்ந்தபடி சட்டை மேல் பட்டனைக் கழட்டி விட்டுக் கொண்டு, கைக்குட்டையை எடுத்து கழுத்து முகம் எல்லாம் துடைத்துக் கொண்டார். முன்மண்டையில் பாதிவரை இருந்த வழுக்கையையும் மெல்ல துடைத்தார். பின் தன் புகார் புத்தகத்தைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு சுவர்க் கடிகாரத்தில் மணி என்ன என்று பார்த்தார். பத்து இருபத்தைந்து ஆகியிருந்தது

டி.ஜி.எம் அவரைக் கவனித்தாற்போல தெரியவில்லை. எப்படியும் தன்னுடைய பிரிவின் பிரச்சனைகளைப் பற்றி பேசியிருப்பார்கள். நோட்டுப் புத்தகத்தை விரித்து வைத்து, சென்ற வாரம் விவாதித்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார். டி.ஜி.எம் இப்பொழுது உணவகத்தின் ஒப்பந்தம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

தட்டுல சாப்பாட்ட வைக்கிறப்போ ஒரு மரியாத இல்லை.. டங் குனு கரண்டியால தட்டுறானுங்க.. சாம்பார் கேட்டா இந்தப் பக்கம் போனைப் பார்த்துகிட்டு காரக்குழம்பை எடுத்து ஊத்தறானுங்க.. ஏதோ அன்னதானத்துல பரிமாறமாதிரில்ல கொட்றானுங்க.. அவங்க ஹிந்தி பேசறதும் புரியல.. ’ என்றார் அலுவலகஉணவக அமைப்பின் உறுப்பினர்

இந்த வாட்டி சின்னப் பசங்க வேணாம்னு சொல்லிட்டு கொஞ்சம் பெரியவங்களா போடச் சொல்லி கண்டிராக்டர்ட்ட சொல்லலாம் சார். அவங்கன்னா கொஞ்சம் பொறுமையா பார்த்து செய்வாங்க” என்றார் கேண்டின் மேற்பார்வையாளர்

பொறுமையான்னா எப்படி நம்ம நாராயணன் சார் மீட்டிங்க்கு வர மாதிரியா? ‘என்றார் டி.ஜி.எம்

கேண்டீன்காரர் தர்மசங்கடமாக ஸ்ரீமந்நாராயணனைப் பார்த்தார்

அவங்கிட்டயே கொஞ்சம் பார்த்து பரிமாற சொல்லுங்க.. இல்லாட்டி வேற பசங்கள மாத்துங்கஎப்படீன்னாலும் பசங்கதான் சரி. வேகமா வேலையை முடிப்பாங்க.. அதை மாத்தி வச்சா லன்ச் டைமை ரெண்டுமணி நேரமாக்கனும்.. என்ன சார்?’ என்றார் ஸ்ரீமந்நாராயணனைப் பார்த்து

அவரோ இன்னும் அஞ்சு வருஷத்துல உனக்கும் என் வயசுதாண்டா என்ற அர்த்தததில் டிஜிஎம்ஐப் பார்த்தபடி இருந்தார்

சாரி.. நல்ல ட்ராஃபிக்ரெண்டு காலேஜ் பஸ்ஸு..’

கவுந்துடிச்சா’

ஸ்ரீமந்நாராயணன் அமைதியாக இருந்தார்

ஜஸ்ட் மெய்ன்டெய்ன் டென்! காரணம்லாம் சொல்ல வேண்டாம்..இந்த வாட்டி ரமேஷை வச்சுப் பேசிட்டோம்.. தேங்ஸ்.. வில் ஜாய்ன் எகெய்ன் நெக்ஸ்ட் வீக்’

எல்லோரும் கலைந்தனர்

ண்டி நிறுத்தத்தில் இருக்கும் காவலன் மீட்டிங் ரூம் வெளியே நின்று கொண்டிருந்தான்

என்ன?’ என்றார் டி.ஜி.எம்

சாரோட பைக்க அவசரத்துல கார் பார்க்கிங்ல வச்சுட்டாரு.. மாத்தி வைக்கனும்’

இதோ வறேன்.. ‘ கிட்டத் தட்ட ஓடினார் ஸ்ரீமந்நாராயணன்

பைக்! ‘ என்று டி.ஜி.எம் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

அஞ்சாத நிருபர் வீரபத்திரன்..” என்று ஒருமுறை ஆட்கள் முன் அழைத்திருக்கிறார்..

கரடுமுரடான சாலையிலும் கட்டுறுதியான சவாரி..பஜாஜ் எமெய்ட்டி

ஸ்ரீமந்நாராயணனுக்கு ஆற்றாமையாக பொங்கி வந்தது

இருபத்தைந்து வருடங்கள் முன் இது சிறிய தொழிற்பேட்டையாக இருந்த போதிலிருந்து ஒவ்வொரு சின்ன கம்பெனி வரும்போதும் அதற்கு மின்சார கம்பி செல்லும் பாதைமுதல் கழிவு நீர் செல்லும் பாதைவரை பார்த்துச் செய்தவன். பதினைந்து வருடங்கள் முன்பு இந்தப் பகுதி சிறப்பு பொருளாதார மண்டலமாக ஆன பின்னும் சாலை விரிவாக்கம் முதல் அதன் ஓரமாக அனைத்து வித கேபிள் செல்லும் குழாயைப் பதிப்பதிலும் இறங்கி வேலை செய்தவன். அப்பொழுதெல்லாம் என்னவொரு மரியாதை இருந்தது. தன்னுடைய பழைய டிஜிஎம் களை நினைத்துக் கொண்டார். ஸ்ரீ என்று அழைத்தவர்களும் ஸ்ரீ சார் என்று அழைத்தவர்களும் ஓய்வு பெற்று சென்றுவிட்டனர். இப்பொழுது அனைத்து நிறுவனங்களும் நிலைபெற்று இந்த தொழில்முனைவோர் கூட்டமைப்பு நிறுவனமும் நிதானத்துடன் செல்கிறது. இப்படி சரியான நிலைக்கு வந்த பின் வந்த இந்த புது டிஜிஎம் முன் அவமானப்பட்டு நிற்க வேண்டியிருக்கிறது.

வயது ஆவது ஒரு குறையா என்ன? இன்றும் உட்கார்ந்த இடத்திலிருந்து எந்த கம்பேனி லைன் எங்க போகுதுன்னு சொல்ல முடியும். இதோ மேல போற ஏசி டக்ட் எங்க போய் எப்படி திரும்பும்னு சொல்லவா

எக்ஸல், பவர்பாயிண்ட்,ஆக்ஸஸ், ப்சண்டேஷன் புரொஜெக்டர்னு படம் காமிச்சே ரமேஷ் டிஜிஎம்மைக் கவுத்துட்டான்.. கூட குமாரும் ஆனந்தும் கூட அவனோட சேர்ந்துகிட்டானுங்க.. ’

அவர்களை நினைத்து முகத்தைச் சுளித்துக் கொண்டார். “பயிற்சி தொழிலாளர்களாக இருந்தவர்களை பணிநிரந்தரம் செய்த நன்றி கூட இல்லை. அதுவரை ஜி ஜி ன்னு கூப்டுகிட்டு என்னையே சுத்தி வந்தானுங்க.. இப்ப புரொஃபஷனல்லேந்து கன்ஃபார்ம் ஆக அவன் பின்னாடி சுத்தறானுங்க..’

சின்னப் பையனா எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்யறது சரிதான். ஆனால், வயசானப்புறமும் ஏன் இப்படி அல்லாடுறீங்க.. உடம்பு ஒத்துழைக்க வேணாமா.. இனிம வேலையை குறைச்சுக்கோங்க” என்று மனைவி கேட்டு ஒருவருடம் ஆகவில்லை

எந்த நேரத்துல அப்படிச் சொன்னியோ மகராசி.. சுத்தி இருந்த தேவதை எதுவோ ‘சரி’ ந்னு சொல்லிடுச்சு போலிருக்கு..’ என்று நேற்று கூட சாப்பிடும்போது அங்கலாய்த்துக் கொண்டார்

அப்பா.. எல்லா வேலையும் நம்ம தலையில இருக்குங்கிறது மேல இருக்கறவங்களுக்கு உறுத்திக்கிட்டுதானிருக்கும்…அதனால புதுசா வந்தவங்க ஏற்கனவே வருஷக்கணக்கா இருக்கறவங்களைத் தட்டி வைக்கப் பார்ப்பாங்க..’

அப்ப, நம்ம கிட்ட ஒண்ணுமே இல்லங்கிறது உறுத்தாதா.. நீ போயி, டிகிரி எப்ப முடிக்கப் போறோம்.. என்ன வேலைக்குப் போகலாம்னு மட்டும் யோசி’ மகனிடம் பொரிந்தார்

டிஜிஎம் கூட பிரச்சனையில்லை. எனக்குத்தான் அவரு பாஸ். அவருக்கு அவரிடம் வேலைசெய்யும் பலரில் நானும் ஒருத்தன். என்னையே பார்த்துக்கிட்டு இருப்பது அவரோட வேலையில்லை. ஆனால் கூடவே இருக்கும் ரமேஷ் இருந்த சமயத்தில் நல்லா விளையாடறான். அவனோட கூட அந்த புதுப்பசங்களும் சேர்ந்து அவன் சொல்றதைதான் கேட்குறாங்க.. நேத்துவரை சார் சார் ந்னு என்னையே சுத்திக்கிட்டு இருந்தாங்க’

போதும் சாப்பிடுங்க.. நூறுவாட்டி ஆச்சு.. இன்னும் இதையே எத்தனை வாட்டித்தான் சொல்லுவீங்க.. முன்னாடி கொஞ்சம் சம்பளம் வாங்கிக்கிட்டு ராப்பகலா உழைச்சீங்க.. இத்தனை வருஷத்துல கொஞ்சம் கொஞ்சமா ஏறி இப்ப கொஞ்சம் நல்லா சம்பளம் வருது.. அதுக்கு இணயா முன்னைவிட நிறையா வேலை செய்யலைன்னு பதட்டப்படறீங்க..அனா ஒட்டுமுத்தமா பார்த்தா எல்லா கணக்கும் சரியாத்தான் இருக்கும்..’

பார்க்கிங் பகுதிக்கு வந்திருந்தார் ஸ்ரீமந்நாராயணன்

ஆனால் முன்னெப்போதும் விட ஏன் ரமேஷ் ஆர்வமா இருக்கான்? ஏதேதோ காரணம் சொல்லி சீக்கிறம் வீட்டுக்குப் போறவன், கொஞ்ச மாசமா பத்து மணிநேரம் ஆபீஸ்ல இருக்கான். டிஜிஎம் போன அப்புறம்தான் போறான். டெய்லி ரிப்போர்ட் முதல் சப்ளை வரை அனைத்தையும் கவனமா அவன் வழியாவே போவது போல பார்த்துக்கிறான். இதில் ரமேஷுக்கு வேறு ஒரு கணக்கும் கண்டிப்பா இருக்கனும். எப்படியும் எனக்குத் தெரியாமப் போயிடுமா என்ன? தான் பொருட்கள் வாங்கிய இடங்களில் இப்பொழுது அவன் வாங்குவது இல்லை. புதிதாக வேறு ஒருவர் சப்ளை செய்ய வர ஆரம்பிச்சுட்டார். கொஞ்சம் கொஞ்சமா தன் கையொப்பம் இல்லாமலேயே பொருட்கள் வாங்கப்படுது. இப்போது இங்கே தான் இல்லாமல் கூட எல்லாம் நடந்துடும்.

பார்க்கிங்கில் இருந்த காவலன் மொபைல் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அருகில் இருந்த அலுவலக உதவியாளனுடன் ஏதோ விவாதம். அவன் இளமையாக இருந்தான். ஸ்ரீமந்நாராயணன் அவர்களைக் கடந்து போய் வண்டியை நகர்த்தி வைத்து திரும்ப வரும் வரை அவர்கள் இவரைக் கண்டும் போனிலேயே மூழ்கியிருந்தனர்.

அந்த வண்டிய கொஞ்சம் நகத்தனும் வறியா..’

அவர்களில் இளமையாக இருந்த அலுவலக உதவியாளன், வேண்டாவெறுப்பாக எழுந்து வந்தான்

சார்.. மில்லியன்னா எவ்வளவு சார்.. ஒரு கோடிதான.. இவன் பத்தாயிரம் கிறான்..’

ஏண்டா என்ன ஆச்சு..’

இங்க பாருங்க சார்.. அழகுராணியோட வீடியோ பக்கம்சீக்கிரம் ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்துடுவாங்க.. மில்லியன்னாஒரு கோடிதான சார்”

அவனை சற்று எரிச்சலாகப் பார்த்தார் ஸ்ரீமந்நாராயணன். சின்னப்பையன்.. பொம்பள ஆடற வீடியோவைக் காட்டறான். அதுவே, தனக்கு கீழ் பொறுப்பில் இருக்கும் ரமேஷ் வந்தால் இவர்கள் போனை ஒளித்துக் கொள்வார்கள். ஆணையிடுங்க சார் என்று காத்து நிற்பார்கள்.. ஆனால் நம்மகிட்ட அந்த பொம்பள ஆடறதையேக் கொண்டுவந்து காட்டறான். எப்படியோ குமாரும் ஆனந்தும் மாதிரி இவனுங்க கூட கண்டுபுடிச்சுடறாங்க. யார் எப்போது முக்கியம்னு. தான் ஒருமுறை கூட அவர்களைச் சொடக்கு போட்டு அழைத்ததில்லை. ஆனால் அந்த எண்ணனும் மரியாதையும் இவர்களுக்கும் இல்லை.. ஆனால் அப்படி அழைப்பவர்கள் முன் போய் பணிந்து விடுகிறார்கள் சல்லிப்பசங்க..

ரமேஷ் எப்போதிலிருந்து சொடக்கு போட ஆரம்பித்தான்..

நாராயணன், நாளைக்கு 4ம் குறுக்கு சந்துல ஒரு டக்ட் தோண்டனும்.. எப்பன்னு நான் டைம் உங்களுக்கு டெக்ஸ்ட் பண்றேன்..’ என்றார் டிஜிஎம்

டெஸ்டா..என்ன டெஸ்ட் பண்ண போறீங்க சார்.. சாயில் டெஸ்டா.. ஏற்கனவே அதான் மொத்த ஏரியாக்குமே பண்ணியாச்சே சார்..” என்றார் ஸ்ரீமந்நாராயணன் அப்பாவியாக

அவர்கள் ஏன் அப்படிச் சிரித்தனர்? ஒருவேளை டிஜிஎம் தன்னை விட்டு ரமேஷை அழைக்க ஆரம்பித்ததும் அதற்குப் பின்னால்தானோ. அவர்களது உரையாடல்களுக்குள் தனக்கு இடமில்லை. அதற்குப் பின் சில நாட்களில் அவர்கள் இருவரும் ஒன்றாகவே உணவருந்த கூடச் செல்லத் துவங்கி விட்டனர். அவங்க நல்ல நண்பர்களாகவே இருந்துட்டுப் போகட்டும்.. நூறு வயசுக்கும் இளமையாவே இருக்கட்டும்.. ஆனால் அதற்காக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன்னை அவமானப்படுத்தும் அளவு இவர்கள் எப்படித் துணியலாம்? ஏதோ முட்டாளை எதிர் கொள்வது போன்ற எள்ளல்.. அலட்சியம்..

தள்ளிக்கொண்டு வந்த வண்டியைப் பார்க்கிங்கில் சரியான இடத்தில் நிறுத்தினார்

–X—

தற்கு அடுத்தவாரத்தில்தான், கேண்டீனில் வைத்து அவரிடம் ’ஃபோர்த் ப்ளாக்லேர்ந்து நைன்த் வரைக்கும் ஒரு டனல் போடறோம்.. இதான் எஸ்டிமேட்…’ என்றான் ரமேஷ்

போட்ரலாமே .. ஒரு வாரத்துல ப்ளான் போட்டு கொண்டுவறேன்.. ஆறாவது ப்ளாக்ல ஏற்கனவே..’

எல்லாம் டிஜிஎம் கிட்ட கொடுத்து அவர் அனுமதி எல்லாம் கொடுத்துட்டார்லேபர்களை குமாரும் ஆனந்தும் ஏற்பாடு பண்றாங்க.. ‘

நான் இன்னும் ப்ளானைப் பார்க்கலை ரமேஷ்..’

சரி.. கொண்டுவந்து காட்றேன்..’

நான் அப்ரூவல் பண்ணனுமே..’

என்னையே பார்க்கச் சொல்லி டிஜிஎம் அப்ரூவல் பண்றேன்னு சொன்னாரு.. நான் ப்ளானை சீட்ல கொண்டுவந்து காட்றேன்.. ’ கிளம்பிச் சென்றான் ரமேஷ்.

வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஸ்ரீமந்நராயணன்

நீங்க போனால் கம்பேனிக்குப் பெரிய பிரச்சனையா? ஒண்ணும் இல்லையே.. செய்த வரைக்கும் உழைச்சாச்சு.. அதுக்கேத்த ஊதியம்னு இல்லைன்னாலும் சம்பளம்னு ஒண்ணு கொடுத்துட்டாங்க.. முன்னாடி இண்டஸ்ட்ரீஸ் வந்துகிட்டு இருந்துச்சு..இது ஓடிக்கிட்டு இருந்தது.. இப்ப எல்லாம் நிலையா நிக்குது.. நமக்கு இப்போ மெய்ண்டனென்ஸ் மட்டும்தான்அதான் அவனுங்க ஆணவம் தலைக்கேறிப் போச்சு.. உழைச்சவங்களை எல்லாம் உதச்சுப் பார்த்து விளையாடறாங்க’ என்று கேண்டீன் மேற்பார்வையாளர் ஒருநாள் கூறினார். என்னா ஆனாலும் மனுசன் சாப்ட்டுத்தான ஆகணும். அவருக்குப் பிரச்சனையில்லை. அடித்துப் பேசலாம்

ஸ்ரீ.. நீ இப்ப இருக்கிற இடத்திலேயே இரு.. வேற எங்கேயும் மாறவேணாம்.. எனக்குமே இங்க சூழ்நிலை சரியில்லை.. உன்னை ஒண்ணும் வேலை இல்லைன்னு சொல்லி அனுப்பலையே.. கொஞ்சநாள் ஜாலியா இருமய்யா..’ என்றார் இங்கிருந்து சென்ற சமீர் பாய்

மரியாதை இல்லய்யா இங்க.. வேலைய விட்டு வீட்டுலயும் இருக்க முடியாது.. ஒருத்தன் என் வண்டிய வச்சு என்னைக் கிண்டல் பண்றான்யா.. இன்னொருத்தன் கேண்டீன்ல வச்சு புது வேலை ஆரம்பிக்கறதப் பத்தி சொல்றான்.. இவனுக்குத் தெரியுமா.. எங்க எப்படி ரூட்டு போகுதுன்னு.. அசிங்கப்பட்டு வறதுக்குள்ள நாமளே கிளம்பிடனும்.. எனக்கும் பசங்க படிக்கணும்.. அவங்களுக்கு கல்யாணம் பண்ணனும்.. வேலை போச்சுன்னு சும்மா உட்கார முடியாது.. கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துகிட்டு இருக்கேன்.. இவனுங்க கிட்ட அசிங்கப் படறத விட, விட்டு கிளம்பிடனும்யா. ஏதாவது வேலை இருந்தா சொல்லுய்யா’ என்று கத்தினார் ஸ்ரீமந்நாராயணன்

சும்மா கத விடாத ஸ்ரீ.. எல்லாம் ஆனா மட்டும் நீரு சும்மா உட்கார்ந்திடுவீரா.. சுத்தியலத் தட்டாம இருந்தா உமக்குத்தான் கை நடுங்குமே.. நல்ல போன் வாங்கி படம் பாருய்யா.. வாட்சப்பு, யூட்யூபு, டிக்டாக்கு ஏதாவது தெரியுமாய்யா உனக்கு. எடுத்துபாரு யாரு கேட்கப் போறா..’ சிரித்தார் சமீர் பாய்

ஆமா.. இங்க இருக்கிற மரியாதைக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்…மயிறு” கோபமாக போனை வைத்தார் ஸ்ரீமந்நாராயணன்

–X–

கேபிள் டனல் வேலை முடிஞ்சிருச்சின்னு சொன்னேன்.. நாளைக்கு நம்ம வேலையைப் பார்க்க ஆடிட்டர் வறாரு.. ஃபோர்த் ட்டூ நைன்த் ப்ளாக் வரை போட்ட டனல்தான் காட்டப் போறோம். ரமேஷ்.. எல்லாம் ரெடியா இருக்கா..” என்றார் டிஜிஎம் போனில் ரமேஷை அழைத்தபடி

ஸ்ரீமன்நாராயணன் பத்துமணிக்கே மீட்டிங் க்கு வந்திருந்தார்

முகர்ஜிதான் ஆடிட்டர். கேபிள் தரத்தை எல்லாம் ரொம்ப நோண்டுவான்னு சொன்னாங்க. எல்லாம் நம்ம ஸ்டாண்டர்ட் படி நல்ல ஒர்க் தான?’

ஒண்ணும் பிரச்சனையில்லை சார்.. நேத்தோட எல்லாம் தயார்” என்றான் ரமேஷ் மறுமுனையில்

சரி.. நான் நாராயணன் கிட்ட சொல்லிடறேன்.. ஆடிட்டிங்ல அவரை உங்களுக்கு ஹெல்ப்புக்கு வச்சுக்கங்க.’

நாராயணன்.. ஆடிட்டிங் முடியற வரை ரமேஷ்க்கு ஒத்தாசையா இருங்க..’

தலையசைத்தார்.

அவருக்கு என்ன வேணுமோ செய்யுங்க.. கொஞ்சம் வேகமா இருக்கனும்..’

மீட்டிங் முடிந்து கிளம்பிச் சென்றனர். போகும் வழியில் இருந்த முற்றத்தில் அலுவலக உதவியாளன் அமர்ந்திருந்தான். டிஜிஎம்மைப் பார்த்து ஒளித்து வைத்த போனை எடுத்து மீண்டும் பார்க்க ஆரம்பித்தான்.. பின்னால் வந்த ஸ்ரீமந்நாராயணன் அவனைக் கடந்து வெளியே சென்று டீ வாங்கிக் குடித்தார். போனை எடுத்தார்..

என்னயா ஸ்ரீ.. புது போனு வாங்கிட்டீரா..நாலு நல்ல போட்டோ இருக்கு வாட்சப்புல அனுப்பலாமா…” என்றார் சமீர்பாய் எடுத்த எடுப்பிலேயே

யோவ் நான் சொன்னது என்னய்யா ஆச்சு. மறைமலைநகர் ஸ்ரீபெரும்புதூர் எங்கயாச்சும் வேலை இருந்தாலும் சொல்லுய்யா.. இங்க நடக்குறது தெரியாம விளையாடாத.. இங்க என்னைய அவனுக்கு அசிஸ்டென்டா போடறன்யா…’

மொத்தக் கதையும் சொல்லிமுடித்தார்..

..முகர்ஜியா.. சுபாஷ் சந்திர போஸ்னு நெனப்பு அவனுக்கு… அஞ்சு வருஷம் கழிச்சு திரும்ப வறானா.. அப்ப உனக்கு மூணாவது டைமு.. அவன்லாம் வருமான வரித்துறைக்கு போக வேண்டியவன்யா.. ரொம்பவும் துருவுவானே அவன்ட்டயா திரும்ப உன்னை விடறாங்க..”

ஆமாம்.. போஜாருயா அவனோட.. அவன் எங்கே போய் எப்படி நோண்டுவான்னு யாருக்குமே தெரியாது.. எல்லோரும்போல கேபிளோட தரம், இரும்புக் கம்பின்னு பாக்க மாட்டான். திடீரென நடுவில் ஒரு இடத்தில் இருந்து ஆரம்பிப்பான். ஸ்டாக்கைப் பார்ப்பான். அதிலிருந்த பழைய பொருளை எங்காவது போட்டோமா என்று நோண்டுவான்.. ஓரமா வைத்திருக்கும் உடைசல்களையும் கணக்கு கேட்பான். சாவடிப்பான்.. இன்னும் ஞாபகம் இருக்கா உனக்கு..”

ஆமாம் ஆமாம்.. மொத ஆடிட்டிங்கில அவனோட குடைச்சலைத் தாங்காமஅடுத்த ஆடிட்டிங்கிற்கு அவன் வறதுக்குள்ள ஓரமாக கிடந்த பழைய கேபிள் எல்லாத்தையும் அள்ளிகிட்டுப் போயி கண்காணாத தெருவில் ஓரமாக வீசிட்டு வந்தோமேகூடவே கண்கிரீட் மூடிங்களையும் போட்டுட்டு வந்தோம்.. நீயும் நானும்தான தூக்கிட்டுப் போனோம்… சுனாமி வந்தப்போ வெள்ளம் வந்தப்போக்கூட அப்படி ஓடலைய்யா நானு…’

வெள்ளத்தை வுடு.. சாதாரண மழைக்கே முட்டிக்கல் வரைக்கும்ல நிக்குமே இங்க.. ப்லேகிரவுண்டுல போஸ்ட்டு ஷாக் அடிச்சு ரெண்டு மாடு செத்து போச்சுன்னு ஓவர் நைட்ல அத்தனையையும் சரி பண்ணோமே.. மாடு செத்த விஷயமே கூட நம்ம ஆபீஸ்ல ஒருத்தனுக்கும் தெரியலையே..”

அப்பல்லாம் எவன் எங்க வத்தி வைப்பான்னு கத்தி வைப்பான்னு தெரியும்.. அதுக்கு முன்னாலயே நாம் போய் நின்னோம்.. இப்பா சலிச்சுப் போச்சுயா.. அந்த ஆட்டத்த ஆடறவன பாத்தாலும் சலிப்பு வருது…சும்மா வுடுங்கடா நான் பாட்டுக்கு என் வேலைய பார்த்துட்டுப் போய்ட்டே இருக்கேன்…’

சர்தான்.. அங்க தெருவுல இருக்குற லைட்லேந்து தள்ளுவண்டி நிக்கிற ப்ளாட்ஃபார்ம் வரைக்கும் நம்ம பாத்து பண்ணதுய்யா.. இன்னைக்கு அங்க டீ விக்கிறவனுக்குத் தெரியுமா இதெல்லாம்… சரி..அதவிடு டீக்கடை வச்சிருந்தாளே அவ பேரு என்னய்யா.. நல்ல பேரு திடீர்னு மறந்துபோச்சு..”

நீ அவ பேர மறந்துட்டியா.. நான் நம்பணுமா..”

பேரு மட்டும்தான்யா மறந்துடுச்சி.. மத்த எல்லாம் ஞாபகம் இருக்கு…சரி நம்ம விஷயத்துக்கு வா.. முகர்ஜீக்கு அப்புறம் எவனாவது வந்தானா…”

ஆமாம்.. அதுக்கப்புறம் வேற ஒருத்தன் வந்தான்.. அவன் நாம் சொன்னத கேட்பான்.. போயிருவான்.. இப்ப முகர்ஜி திரும்ப வாறான்.. இந்த வாட்டி இவனுங்க என்ன பண்ணி வச்சிருக்காங்கன்னு தெரியலையே..”

உன்னைதான் அவனுங்க இந்த வேலையப்ப சேர்க்கவே இல்லையே.. அதனால இத லைட்டாவுடு.. என்ன ஆனாலும் இது உன் பிரச்சனையே இல்லையே..”

சரிதான்… ஆனால் அந்த டீம்ல நானும் இருக்கேன்யா.. இவனுங்க எப்ப நம்ம தலைய உருட்டலாம்னுதான் இருக்கானுங்க.. அதுவும் கொஞ்சம் பயமாவும் இருக்கு..”

முகர்ஜிக்கு ஒரு இடத்துல சந்தேகம்னு வந்தாதானே நோண்ட ஆரம்பிப்பான்.. அப்படி வராம பாத்துக்கஆரம்பத்துல அப்படி ஏதும் சந்தேகம் வரலைன்னா அவனும் போய்ட்டே இருப்பான். அதான அவன் கேரக்டரு.. அவ்வளவுதான…”

அவ்வளவுதான்.. ”

ஸ்ரீமந்நாராயணன் வீட்டிற்குப் போகும் வழியில் அந்தத் தெரு வழியாகச் சென்றார். பழைய பொருட்கள் போட்டு வைத்த ஒதுக்குப்புறமான காலியிடம் புதர்மண்டிப் போய் ஏழாவது ப்ளாக் அருகே கிடந்தது. அந்தத் தெரு மட்டுமே முட்டுச்சந்து என்பதால் பெரிதாக போக்குவரத்தும் இருக்காது. மறுபக்கம் குடியிருப்புப் பகுதிதான். ஆகவே அங்கு கண்காணிப்பும் இல்லை. லேபர்கள் அங்குதான் குடிப்பதற்கு ஒதுங்குவர். வேறுசிலவும் நிகழ்வதாக சொல்லப்படுவதுண்டு. அந்தப் பழைய கான்கிரீட் மூடிகள் இன்னும் அங்கேயே இருந்தன. மணல்மூடிப் போய்க் கிடந்தைப் பார்த்தார்.. கேபிள்களையெல்லாம் அப்பவே தூக்கிட்டுப் போயிருப்பானுங்க.. இங்க எதுவுமே காசுதான். கான்கிரீட் மூடிக்கு பெரிய மதிப்பு கிடையாது.. புசுசே நூறு ரூபாய்தான் இருக்கும்.. அதான் வுட்டுட்டுப் போயிட்டானுங்க..” என்று எண்ணியபடி ஓரமாகக் கிடந்த ஒரு கம்பியை எடுத்துக் குத்திப் பார்த்தார். இருட்டில் சலசலப்பு இருந்தது. பாம்பா பல்லியா அல்லது ஆளா என்று கூட தெரியவில்லை. மூத்திரம் பெய்ய வந்தவர் போல திரும்பிச் சென்றார். அதிகாலையில் வந்தால் இங்கு நடமாட்டமும் இருக்காது. பயமும் இல்லை. யாராவது இருந்தாலும் தெரிந்துவிடும்.

ஸ்ரீமந்நாராயணன் மறுநாள் அதிகாலையில் வந்தார். ஓரளவு வெளிச்சம் இருந்தது. அங்கிருந்த முறுக்குக் கம்பியைக் கொண்டு அந்த கான்கிரீட் மூடியை நெம்பினார். நாலாவது குத்தில் பெயர்ந்து வந்தது.. இரண்டாவது மூடியையும் நெம்பித் தள்ளினார். ஏதோ ஒரு சப்தம் கேட்டது. அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தார். மரத்தின் மீதிருந்த பறவைகள் பறந்து சென்றன. அவருக்கு ஆசுவாசமாக இருந்தது. அக்கம்பக்கம் யாரும் இருக்கிறார்களா என்று மீண்டும் சுற்றிவரப் பார்த்தார். அருகிலிருந்த குடியிருப்புப் பகுதியின் மாடியில் ஒரு பெண்மனி இவருக்கு பின்புறத்தைக் காட்டியபடி சேலையை உதறிக் கொண்டிருந்தாள். சற்று ஒளிந்து கொண்டு அவள் போகும்வரைக் காத்திருந்தார் ஸ்ரீமந்நாராயனன். பின் மெல்ல அந்த கான்கிரீட் மூடிகளை புது டனலின் வாயிலில் வைத்து மூடியவர் ஏற்கனவே இருந்த இரும்பு மூடிகளை தூக்கிச் சென்று அருகில் இருந்த சாக்கடைக்குள் பொத்தெனப் போட்டார்

–X–

டிஜிஎம் ரமேஷை பார்த்த பார்வையில் கனல் எரிந்தது. ரமேஷ் குமாரையும், குமாரும் ஆனந்தும் ஒருவரை ஒருவரும் பார்த்துக் கொண்டனர். ஆள் இல்லாத இடத்தில்தான் முகர்ஜி முதலில் பார்ப்பான் என்ற அவரது கணிப்பு சரியாகியிருந்தது.

எட்டாயிரம் கணக்கு காட்டின ரெண்டி இரும்பு மூடிக்கு பதிலா நூறு ரூபாய் கான்கிரீட் மூடி போட்டிருக்கீங்க.. வாங்க அப்படியே மொத்தமா தோண்டிப் பாத்துடலாம்…’

ஸ்ரீமந்நாராயணன் அமைதியாக பார்த்தபடியிருந்தார். நடுவில் உள்ள கேபிள்களிலும் கம்பிகளிலும் தானடா எப்படியும் உங்க கைவரிசைய காட்டிருப்பீங்க. அதனால்தான வேலை முடியும்வரை என்னை அண்டவும் வுடல.

மொத்த ஸ்டாக்கையும் பார்க்கனுமேயார் அப்ரூவல் பண்ணியது?’

டிஜிஎம் அமைதியாக நின்றார்

இனி தாம் இறங்க வேண்டிய இடம்.

முகர்ஜி.. அந்த ரோட்டுக்கு அந்தப் பக்கம் மக்கள் வாழற குடியிருப்பு இருக்கு.. அங்க இருந்து பசங்க ஏறிக் குதிச்சு வந்து இப்படி தூக்கிட்டுப் போய் பழைய இரும்பு கடையில பாதி விலைக்கு வித்துட்டு அந்தக் காசுல தண்ணி அடிப்பாங்க.. அது ஒரு முட்டு சந்து.. பக்கத்துல வெறும் காலி இடம்தான் இருக்கு. அதான் வசதியாப் போச்சு.. இதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்.. மத்த ஆறு தெருவுலயும் இந்தப் பிரச்சனை இல்லை. நல்ல மூடிதான் இருக்கு.. நீங்களே வந்து பாருங்க..’

ஆனா.. இப்படி வசதியான காரணம் இருக்கிற இடத்துலதான் கம்பேனி காரங்களும் கைவரிசை காட்டுவாங்க ஸ்ரீஜீ… நான் இப்ப தோண்டிப் பார்த்தே ஆகணும்”

ஆனால், அங்க மூடி ஜிஐ மூடி தான் போட்டேன்.. அதை லேபரோ இல்லாட்டி இவனுங்க யாராவதோதான் எடுத்திருக்கனும்..சொல்லுங்கடா என்றான்” என்றான் ரமேஷ் குமாரையும் ஆனந்தையும் பார்த்து ஆவேசமாய்

அவர்கள் கண்களில் தெரிவது மிரட்சியா கோபமா என்று பார்த்தார் ஸ்ரீமந்நாராயணன்.

நாங்க லேபரைக் கூப்பிட்டு வந்தோம்.. எங்களால எப்படிப் பண்ண முடியும் ஜீ.. எங்களுக்கு கொடுத்த பொருளைப் பொருத்தினோம். அவ்ளோதான் ஸ்ரீஜீ’ என்றனர் குமாரும் ஆனந்தும்’ ஸ்ரீமந் நாராயணைப் பார்த்து

உங்களுக்குக் கொடுத்த பொருள்னா என்ன அர்த்தம்?” என்றார் டிஜிஎம்

ஆர்டருக்கும் பொருளுக்கும் சரிபார்த்துதான் வாங்குனீங்க..’

ஆனந்தும் குமாரும் ரமேஷைப் பார்த்தனர்

ரமேஷ் தலை கவிழ்ந்து நின்றான். அவனைத் துருவிக் கேட்டதில் தரமற்ற பொருளை வாங்கிப் போட்டுக் கமிஷன் அடித்ததை ஒப்புக் கொண்டான். பின் மெல்ல விசும்பினான்.. அப்புறம் அழத் துவங்கினான். டிஜிஎம் நம்பிக்கையை மோசம் செய்து விட்டேன் என்று கதறினான்.

ஆனா சத்தியமா அந்த மூடி இரும்புதான் போட்டேன்ங்க..”

செண்டிமெண்ட் வேணாம் ஜீ.. அதை உங்க ஹெச் ஆர் பாத்துப்பாங்க. ’

சார்.. நீங்க ரெண்டுநாள்ல நீங்க வேலையை சரியா முடிங்க.. நான் பில்லை அப்ரூவ் பண்றேன்..’ என்று இறங்கி வந்தார் முகர்ஜீ

டிஜிஎம் முகத்தில் ஒரு ஆசுவாசம் ஏற்பட்டது.

நீங்க கொஞ்சம் இதைப் பார்க்க முடியுமா ஸ்ரீஜீ’

துறு துறுவென ஓடிச் சென்று வேலையைச் முடித்தார் ஸ்ரீமந்நாராயணன். அவர் பேசியதில் பொருட்களை அதே சப்ளையரே மாற்றிக் கொடுத்தான். நீண்டநாள் கழித்து வேலை செய்யும் ஆர்வமும் ஏற்கனவே முகர்ஜியை இருமுறை சமாளித்திருந்த அனுபவமும் அவருக்குக் கைகொடுத்தன.

ஸ்ரீஜீ..குட் வொர்க்.. உங்க எக்ஸ்பீரியன்ஸ் நல்லா ஹெல்ப் பண்ணிச்சு.. தேங்ஸ்.. நம்ம ரெபுடேஷன காப்பாத்திட்டீங்க ” ஏன்றார் டிஜிஎம் மகிழ்ச்சியுடன்..

ஆனால் ரமேஷ் இப்படி நம்பிக்கை துரோகம் பண்ணுவான்னு எதிர்பார்க்கலை ஸ்ரீஜீ… நான் அவனை ரொம்ப நம்பிட்டேன்.. போற இடத்துலயாவது அவன் ஒழுங்கா இருக்கட்டும் ”

அவருடன் பேசிக்கொண்டே அவர் இருக்கை வரை வந்தவர் அங்கு அவருக்கு மீண்டும் ஒருமுறை கைகொடுத்துவிட்டுக் கிளம்பிச் சென்றார். ஸ்ரீமந்நாராயணன் தன் இருக்கையில் அமர்ந்து நிமிர்ந்து பார்த்தார். ஓரமாக நின்று மொபைல் பார்த்துக் கொண்டிருந்த அந்த அலுவலக உதவியாள இளைஞன் மொபைலை ஒளித்துக் கொண்டான். அசடு வழிந்தான்

என்னடா? ம்..’ ஒரு சொடக்குப் போட்டார்

அவன் ஓடி வந்து நின்றான்.. அவன் கையிலிருந்த மொபைலைப் பற்றிக் கொண்டு’ என்னடா.. எப்படி இருக்கா உன் அழகுராணி..அந்த ஒரு மில்லியன் வந்துடுச்சா.. ம்…”

ஆமா சார்.. ஆமா சார்..” என்று நெளிந்தவன்.. டிஜிஎம் தண்ணீர் கேட்பதைக் கண்டு அவரை நோக்கி பதறி ஓடினான்..

டேய் மொபைல் இந்தாடா..’ என்று வாயெடுத்தவர்.. அதில் அந்த அழகுராணி வீடியோவைக் கண்டார். திகைத்தார். மெல்ல இரு விரல்களால் அதை அகலமாக்கினார்

அதில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்த அழகுராணி ‘சலக்கு சலக்கு சேலை..அதைக் கட்டிக்கத்தானே’ என்று இடுப்பை நெளித்து ஆடிக்கொண்டிருக்க, அவளுக்குப் பின்னால் தொலைவில், லில்லிபுட் உயரத்தில் இருந்த ஸ்ரீமந்நாராயணா மங்க்கி தொப்பி அணிந்துகொண்டு இருப்புக் கம்பியால் தரையில் மண்ணுக்குள் பதிந்து போயிருந்த கான்கிரீட் மூடியை நெம்பிக் கொண்டிருந்தார்

பூதம் – காளி பிரசாத் சிறுகதை

காளி பிரசாத்

ஆம்புலன்ஸ் என்றால் பெரிய வண்டியாக இல்லை. சிறிய ஆம்னிவண்டிதான். ஆனால் வேகமாக போனது. அதன் பின்னாலேயே அந்த நீல நிற பைக்கும் சென்றது. அதைத் தொடர்ந்து இன்னும் சில இருசக்கர வாகனங்கள். ஒதுங்கி நின்ற இருசக்கர வண்டியோட்டிகளும் ஆம்புலன்ஸ் கடக்கும்போது அந்த சங்கிலியில் இணைந்து கொண்டனர். இருபுறமும் வண்டிகள் நிற்க, சிறப்பு தரிசன சீட்டு வாங்கிய வரிசையாக ஆம்புலன்ஸ் பின்னால் அவர்கள் சென்றுகொண்டிருந்தனர். முதலிடத்தை நீல நிற வண்டிக்காரன் விடுவதாய் இல்லை. அதை பிடிக்க ஒரு பெண்ணும் இன்னொரு வெள்ளை சட்டைக்காரனும் முயன்றார்கள். அதற்குள் இன்னொரு வண்டிக்காரன் குறுக்கே இடிப்பதுபோல் வர, நீலகண்டன் தன் உள்ளங்கைகளால் கண்களை மூடிக்கொண்டார். ஆண்டவன்தான் காக்கணும் என்று நினைத்தார். உடனே, கந்த சஷ்டி கவசத்தில் அவருக்குத் தெரிந்த அந்த நாலு வரிகள் ஞாபகம் வந்து முணுமுணுத்தார். பின் இயல்பாக எடுப்பதுபோல கைகளை விலக்கிப் பார்த்தார். கந்தன் காப்பாற்றியிருந்தது போலத்தான் இருந்தது. தான் மிகவும் பதட்டப்பட்டதை நினைத்து வெட்கப்பட்டவராக கைபேசியை எடுத்துப் பார்ப்பது போல தன்னை யாராவது பார்த்தார்களா என நோக்கினார். அர்னால்டு பார்த்திருப்பான் என்று தோன்றியது. அர்னால்டு பேருந்தை சற்று நகர்த்தி நிறுத்தி இவரைப் பார்த்து சிரித்தான்.

“ஒண்ணியும்ஆவல. ஆச்சுன்னா இன்னும் ட்ராஃபிக் ஆயிருக்கும்.”

“இந்த நெரிசலுக்கே அரையவராவது ஆவும்…”

இன்றும் அலுவலகத்திற்கு பத்து நிமிடங்களாவது தாமதமாகத்தான் போகப் போகிறார். அலுவலக வாழ்க்கையில் கடந்த ஆறு மாதங்கள்போல அவர் தாமதமாக போனதே இல்லை. எல்லாம் கிண்டி தலைமை அலுவலகத்திற்கு மாறிய பிறகுதான். இன்னும் ஆறு மாதங்கள்தான். அப்புறம் அவர் நினைக்கும்போது கிளம்பலாம் அல்லது கிளம்பாமலும் இருக்கலாம். எல்லாம் அவர் இஷ்டம்தான். அதுவரையில் இந்த மாநகரப் பேருந்தும் மாதப் பயணச்சீட்டும் அர்னால்டும் தணிகைவேலும் மாறப் போவதில்லை.

அலுவலகம் சற்று கும்மாளமாக இருந்தது. நாகராஜு இனிப்பு கொண்டு வந்திருந்தான். ஓங்கோலிலிருந்து சென்னைக்கு புது வீடு மாறியபின் இன்றுதான் வருகிறான்.

“ஸ்கூலுக்கு அனுப்பிட்டு அவளுக்கு போகவர வழியும் சொல்லிக் கொடுத்தாச்சு சார். நீங்க மட்டும் இல்லாட்டி பாஷையும் இடமும் தெரியாம ரொம்ப அலைஞ்சிருப்பேன் சார். இப்படி டக்குனு முடிச்சு கொடுத்துட்டீங்க” சமாளித்தாலும் அவன் குரல் சற்று இடறியது.

“ரொம்ப சந்தோஷம்ப்பா…” பதிலுக்கு இவரும் ஆங்கிலத்தில் சொல்லி தோளில் தட்டிக் கொடுத்தார்.

பின் செருமியபடிக்கே லட்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டபோது கைபேசி சிணுங்கியது. லட்டுத்தூள் தொண்டையிலே சிக்கி புரையேறியது. ‘அந்த சனியன் பிடிச்ச கொரங்கு எதாவது பண்ணிருப்பானா? அல்லது காலையில் பேசின விஷயந்தானா?’ இரண்டு பூதங்களில் எந்த பூதம் என தெரியவில்லை.

காலையில் காலண்டரைக் கிழித்து வியாழக்கிழமை குருவுக்கு நல்லெண்ணை விளக்கு ஏற்ற வேண்டுமென்று நினைத்தபோது அகிலா சமையற்கட்டிலிருந்தபடியே கூறினாள் “இன்னைக்கு எப்படியும் போயி நைச்சியமா பேசிட்டுவாங்க… ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிடாதீங்க… இல்லாட்டி கிருஷ்ணமூர்த்திய கூப்புட்டு போங்க.. வேணும்னா மாப்பிள்ளைய வர சொல்லி பிரியாகிட்ட சொல்லவா? சாயங்காலம் எத்தன மணிக்குன்னு சொல்லுங்க. அவருக்கு இப்பவே சொன்னாத்தான் கிளம்பி வர சரியா இருக்கும்.. நான் வேணும்னா கேட்டு சொல்லவா…?”

”இன்னைக்கு வியாழக்கிழமையா இருக்கு கோயிலுக்குப் போகணுமே.. வேணும்னா நாளைக்குப் போறேன்”

“கோயில் கெடக்கு, மொதல்ல இதை பாருங்க.. நாளைக்கு சரிபடாது. சனி ஞாயிறுன்னு எங்கயாவது கிளம்பிடுவாங்க”

இன்று எப்படியும் குருவுக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டும் என்று நீலகண்டன் மீண்டும் நினைத்துக் கொண்டார். பல வருடங்களாக அவர் வியாழனன்று கோவிலுக்குப் போவது வழக்கம். அது ஏன் தடைபடவேண்டும்.

“ஆங்… சொல்லும்மா.”

“ஆபீஸ் போயாச்சா? ஆபீஸ்ல கேக்கிறேன்னீங்களே.. என்ன சொன்னாங்க? எத்தினி மணிக்கு கிளம்பணும்?”

“சாயங்காலம் நானே போயிட்டு வரேன்… யாரும் வர வேணாம்.”

“ஆமாம்… என்னன்னாலும் உங்க தம்பி. நீங்க பேசுறதுதான் சரின்னு மாப்பிள்ளைகூட சொன்னாராம். ஏன் விடாம இருமுறீங்க?”

”பொறயேறிக்கிச்சும்மா. தொண்டைல சிக்கிடுச்சி. நான் அப்புறம் பேசறேன்.”

பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்தது அது. அப்பாவிற்குப் பின், பாகம் பிரிக்கையில் அந்த ஓட்டு வீடும் நாற்பது பவுன் நகையும் மிஞ்சின. வீடு வெங்கடேஸ்வரனுக்கும் நகை நீலகண்டனுக்கும் என வாய்மொழி முடிவாக உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. நீலகண்டனுக்கு நகையைப் போட வயசுக்கு வந்த பெண் இருப்பதும் கம்பெனி க்வார்ட்டர்சில் வீடு இருப்பதும் காரணமானது. வீடில்லாமல் இருப்பதால் அந்த வீட்டில் வெங்கடேஸ்வரன் இருப்பதாகவும் ஒருமித்த கருத்தாகக் கூறி, முடித்து வைத்தார்கள். இது எப்படியோ அனைவரின் உள்ளத்திலும் ஏற்கனவே பதிய வைக்கப்பட்டிருந்தது. அடுத்த ஐந்து வருடங்களில் நடந்த கல்யாணத்தில் நாற்பது பவுனும் திருகு குறையாமல் அப்படியே பிரியாவுடன் சென்றன.

அதன்பின் க்வார்ட்டர்சில் இரண்டுமுறை வேறு ப்ளாக்குகள் மாறி நாலு வருடங்கள் முன்பு இந்த இரு படுக்கை அறைகள், ஒரு ஹால், சமையலறை மற்றும் கொல்லையும் இருக்கும் தரை தளத்திற்கு வந்திருக்கிறார்கள். வாசலில் பெரிய வேப்பமரம் உண்டு. மாலை அதனடியில் நாற்காலி போட்டு அமர்ந்தால் காற்று அள்ளிக்கொண்டு போகும். வீட்டுக்குள் அமைதி, கொல்லையில் பசுமை, வெளியே வேப்பமரக்காற்று என்று சொர்க்கமாக இருந்தது.

ஐந்து மாதங்களுக்கு முன் ஆஞ்சநேயலு குடும்பம் மாடிக்கு வந்தது. அவர்களின் தினப்படிசாதனைகளானவை முறையே, வீட்டிற்குள் குழந்தைகளுடன் கிரிக்கெட் ஆடுவது அல்லது டான்ஸ் ஆடுவது, கொல்லையில் குப்பையைக் கொட்டுவது மற்றும் அவர்கள் காரை வேப்ப மரத்தடியில் நிறுத்துவது. பலமுறை மறைமுகமாகவும் ரெட்டியின் மனைவியை வைத்தும் சொல்லிப் பார்த்தாள் அகிலா. ஆனால் சற்று குறைந்ததே தவிர நிற்கவில்லை. ஒருமுறை காரை நிறுத்துவதற்கு முன்பே நாற்காலியை போட்டுவைத்தாள். அன்று மாலை, நமஸ்காரம் ஒதினா, என்று அன்புடன் அழைத்து நாற்காலியை கொடுத்துவிட்டுச் சென்றான். அக்கணம் முதல் அவன். சனியன் பிடிச்சகொரங்கு, என அகிலாவால் அழைக்கப்படலானான். நாளாக நாளாக அகிலாவால் இருக்கவே முடியாதென ஆனது.

“இவ்ளோ டார்ச்சரா பண்ணுவான்? நீங்க ஆபீஸ்ல ஒரு கம்ப்ளைண்ட்கொடுங்க.”

“அவன் என்னவிட சீனியர் போஸ்ட். கம்ப்ளைண்ட் கொடுத்தாலும் ஆறு மாசம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகத்தான் சொல்லுவங்க.”

ஆறு மாசம் கழித்து ஓய்வு பெற்றதன் பின்னும் ஒரு வருடத்திற்கு அந்த வீட்டை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு வருஷம்லாம் முடியாதுங்க உடனே வேற வீடு பாருங்க, என அகிலம் நச்சரிக்கத் துவங்கியபோதுதான் இந்த அடுத்த பூதம் கிளம்பியது.

அன்று மேசை மீது இருந்த போளியை ஒரு விள்ளல் எடுத்து சாப்பிடும்போது அகிலாச மையற்கட்டிலிருந்து வந்தாள். “என்ன பிரச்சனையிருந்தாலும் சரி… ஏதாவது சாப்பிட இருந்தா எடுத்து அப்படியே சாப்பிட வேண்டியது… யாரு கொடுத்தா என்ன ஒண்ணும் தேவையில்லை.”

“யாழு கொழுத்தா?” இன்னும் அவர் முழுங்கவும் இல்லை. கொல்லைப்பக்கம் வரும் எலிக்கு வாங்கியதாய் இருக்குமோ…?

“எல்லாம் உங்க கொல்ட்டி தம்பிதான். நல்லா சிரிச்சு ஈஈ-னு போளி சாப்ட்டு அப்புறம் ஒண்ணுஞ் சொல்லாத ஏமாளி அண்ணனா இருக்கத்தானே பொறப்பே உங்களுக்கு…”

“இப்ப இத துப்பணும்ங்கிறியா திங்கணும்ங்கிறியா?”

“திண்ணுங்க.. ஒரு போளியக் கொடுத்தா ஈசியா காரை நிறுத்திக்கலாம்னு தெரிஞ்சிருக்கு… நாலு வளையலக் கொடுத்தா சொந்த வீட்டையே எழுதி கொடுப்பீங்க.. எழுதிதான் ஒட்டிருக்கே.. இது என்ன கேவலம், ஆறுமாசம்தானே? அவனவன் கோடீஸ்வரனாவான்… நீங்க பிச்சையெடுங்க”

தட்டை விசிறியடித்தார். வாயில் இருந்ததை நடு வீட்டில் துப்பிவிட்டு வெளியேறினார்.

அன்று மாலை பிரியா மாப்பிள்ளை குழந்தையுடன் வந்திருந்தாள். “தாத்தா வா” என அழைத்ததால் நாலு கிண்டர்ஜாயுடன் வீட்டுக்கு திரும்பினார்.

“நம்ம பூர்வீக வீட்ட சித்தப்பா ப்ளாட் போட்டு விக்கப் போறாராம்… நாலு வீடு, அதுல ஒண்ணு அவருக்கு. அப்புறம் ஒரு கோடி ரூவா பணமுமாம்.”

ஒரு ஈ நீலகண்டனின் வாயில் புகுந்து காது வழியே வெளியே வந்தது.

“ஒரு கோடியா…? எப்படி?”

“எப்படின்னா? அந்த நிலத்தோட மதிப்பு இப்ப அந்தளவு இருக்கு. நல்லா ஆறு லட்சம் ரூவா நகைய கொடுத்துட்டு ஏமாத்திட்டாரு உங்க தம்பி.”

“சும்மா இரு. இப்ப ஏதோ ஏறியிருக்கும்.. அன்னைக்கு இவ கல்யாணத்துக்கு அததான் போட்டோம் மறக்காதே. அப்பா அம்மா வைத்தியம் காரியம் எல்லாம் முடிஞ்சு ஒண்ணும் இல்லாதப்போ அத வச்சுத்தான் கல்யாணம் பண்ணினோம். கல்யாணத்துக்கும் அவன்தான் முன்னால நின்னான்… எவ்ளோ பண்ணான்…!”

“என்ன பண்ணாரு? நெக்லசோட பாக்கிறப்போ அப்படியே அம்மா மாதிரி இருக்குன்னு அழுது, நகைய கொடுத்தத எல்லார் முன்னாடியும் சொல்லிக் காட்ற மாதிரி பண்ணாரு.”

“மாமா, நீங்களோ அத்தையோ அப்பவே ஒரு வார்த்த சொல்லிருக்கலாம்.. நான் வீட்ட வாங்கிட்டு நகைய கொடுக்க சொல்லிருப்பேன். நிலம்லாம் இப்போ எந்த ரேஞ்சிலயோ ஏறிக்கிட்டிருக்கு. நீங்க போட்ட நகை கூட இப்போ பாதிக்குத்தான் எடுப்பான் தெரியுமா? கெடீயெம் கூட இல்ல அந்த நகைங்க…”

‘அன்னைக்கு உங்க அம்மா நாப்பதுதான்னு கண்டிப்பா சொன்னப்போ நீங்க இதெல்லாம் சொல்லிருந்திருக்கலாமே மாப்ளே…? என் பொண்ணு இடுப்பத்தானே பாத்துக்கிட்டிருந்தீங்க…?’ நீலகண்டனால் கேட்க முடியாது. மாப்பிள்ளை மகேஸ்வரன் மாதிரி என்பது அகிலாவின் பெருமிதம். பிரியாவும் தாட்சாயணியாக மாறலாம்.

“நாங்க வேணும்னா நகைய அப்படியே தறோம். புதுசா பாகம் பிரிங்க. இல்லாட்டி கேஸ் போடலாம்…”

முழங்கையில் இடித்துக்கொண்டதுபோல வலித்தது நீலகண்டனுக்கு.

“தம்பி மேல அண்ணன் கேஸ் போடறதா?”

“இல்ல, அந்த ஃப்ளாட்ல ஒரு வீட்ட உங்களுக்கு கொடுக்க சொல்லுங்க…”

“இப்ப தங்கம் வெல ஏறி நெலம் வெல ஏறாம இருந்தா நீ பாதி நகைய தருவியா? உன் சம்மதத்தோடவும் பேசி கொடுத்ததுதானே?”

“இதுதான் உங்க தம்பி சாமர்த்தியம். என்ன இருந்தாலும் நீங்க ஒரு குமாஸ்தா. அவரு வியாபாரி. எத சொல்லி எத கொடுத்து எத வாங்கணும்னு அவருக்கு நல்லா தெரியும்… இல்லாட்டி இப்படி கார்ல்லாம் வாங்க முடியுமா?”

நாளடைவில் அப்படியே சொந்தங்களுக்குள் பேசி வெங்கடேஸ்வரன் காது வரை விஷயம் போனாலும் இதுவரை இருவரும் அதுபற்றி பேசிக் கொள்ளவில்லை. அகிலாவிற்கு ஆதரவாக பலர் ஃபோன் செய்து ஒரு கோடி என்பது ஸ்மார்ட் சிட்டி வந்ததும் நாலு கோடியாகும் என்று தெரிவித்தார்கள். வீட்டு வாசலில் பஸ்ஸும் மாடியில் மெட்ரோவும் கொல்லையில் ஸ்கூலும் வரும் என்றார்கள்.

‘எங்கோ வரும் ஸ்மார்ட்சிட்டினால கையில் தரப்போகும் ஒருகோடி எப்படி நாலு கோடியாகும்? இங்கே கிரிக்கெட் சத்தத்துலேயே தூங்க முடியல. ட்ரெயின்லாம் வந்தா அத்தனை சத்தத்தில் எப்படி வாழமுடியும்?’ என யோசித்தார்.

“ஒரு கோடில்லாம் கிடைக்காது. அடையாரே அந்தளவுதான் போகும். இந்த ரேட்டெல்லாம் சும்மா அடிச்சு விடறதுதான். வியாபார தந்திரம். கைக்கு வரும்வரை நிச்சயம் இல்லை” என்று கிருஷ்ணமூர்த்தி ஒருநாள் கேண்டீனில் சொன்னார்.

“எப்படியிருந்தாலும் ஒரு ஃப்ளாட்டாவது எழுதி வாங்கிடுப்பா” என்றாள் பிரியா.

“ஒன்றரை வருசம் கழிச்சு எப்படியும் வேற வீடதான் பாக்கணும். நைச்சியமா பேசி வாங்குங்க. உங்களுக்கு என்ன தெரியும்…? ஒண்ணு முழுங்குவீங்க, இல்ல தூக்கிப் போட்டு உடைப்பீங்க.”

நீலகண்டன் தள்ளித் தள்ளி போட்டு வந்தார். அகிலாவால் முடியவில்லை. தினம் கேட்டவள் இன்று நாளுக்கு மூன்று முறை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள். இன்றுதான் வெங்கடேஸ்வரனை நேரில் பார்த்து கேட்டு வரலாம் என கிளம்பினார்.

“நீங்க வச்சா குடுமி எடுத்தா மொட்டை கேஸு. நைச்சியமா பேசச் சொல்லி மாப்ள சொன்னாராம்.”

‘நைச்சியமாக எப்படி பேசுவது. நைச்சியம்ங்கிரவன் யாரு? லிட்டர் எவ்வளவு? டின்ல தருவானா தூக்கு எடுத்துகிட்டுப் போணுமா?’

தம்பியிடம் போய் என்னவென்று கேட்பது? தன் ஐஸிலும் மிட்டாயிலும் பாதியைக் கொடுத்து பழக்கமிருக்கிறது. எதையும் கேட்டு பழக்கமில்லை. அண்ணி அவல் கொடுத்தான்னு சொல்லி கொடுத்தா புரிஞ்சிட்டு கொடுத்திருவானோ? அல்லது அவன் மகனின் குழந்தையை மடியில கொடுத்தா அதோட சிரிப்புக்கு உயிரையே கொடுப்பேனே? இந்த வீடெல்லாம் எந்த மூலைக்கு?

பர்மிஷன் போட்டுவிட்டு இப்படி ரோட்டில் நின்று யோசிப்பதைவிட ஏதாவது ஒரு கோயிலுக்குப் போகலாம் என்று முடிவெடுத்தார். இன்று வியாழன் வேறு. குருவுக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றவேண்டும். அவர் ஏரியாவில் பாடல் பெற்ற ஸ்தலமே உண்டு. அது அவர் எப்போதும் போகும் கோயில். இன்று போவதற்குள் நடை சாத்திவிடுவார்கள். இந்த மாநகரத்தில் வேறு எந்த கோவிலுக்குப் போவது? கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோயில் போய் திரும்பி வந்து பேசி பின் கிளம்பிப் போவது கடினம். அப்போது அவருக்கு தம்பி வீட்டிற்குப் போகும் வழியில் இருந்த கைலாசநாதர் கோயில் ஞாபகம் வந்தது. இரண்டு ஸ்டாப்பிங் தள்ளி காந்தி நகரில் இறங்கினால் நடந்து போய்விடலாம். பிரியா கைக்குழந்தையாக இருந்தபோது தூக்கிக்கொண்டு சென்றது. இருபது வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சிறிய கோயில். போகிற வழியில் அங்கு போய்விட்டு போகலாம் என முடிவு செய்தார்.

இந்த டேங்குக்கு எதிரில் அவர் கடைசியாக கண்ட சின்ன சிவன் கோயில் இல்லை. முன்பு சின்ன கோபுரம் கிழக்குப் பக்கம் இருந்தது. இப்போது இன்னொன்று மேற்கு நோக்கி இருந்தாலும் பெரிய கோபுரமாய் இருந்தது.

வாசலிலேயே குருவிற்கு ஒரு நல்லெண்ணெய் விளக்கும், சிவனுக்கு சங்குப்பூ மாலையும் வாங்கிக் கொண்டார்.

“அந்த கேட்டு வழியா போனீங்கன்னா நவகிரகம் வந்துடும்” என்றாள் பூக்காரி.

கோயில் நன்றாக விஸ்தரிக்கப்பட்டிருந்தது. முன்பு அந்தப் பக்கம் சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் காலி மைதானம் இருந்தது. இப்போது அதையெல்லாம் எடுத்து கோவிலை அதுவரை நீட்டித்து கட்டியிருக்கிறார்கள். நவக்ரஹ வாயிலிலேயே கூட்டம் இருந்தது. நெருக்கி உள்ளே போய் குருவிற்கு முன்னால் இருந்த அரசமரத்தடியில் விளக்கை ஏற்றி வைத்து நின்றிருந்தார்.

“அர்ச்சகர் வரலையா?”

“சந்நிதில சாமிக்கு அலங்காரம் பண்ண ஒத்தாசையா இருக்காப்ல… வந்துடுவாரு”

திடீரென கூட்டம் எழுந்தது, “சாயி சரணம் பாபா சரணம் சரணம்” என்ற கோஷம் உச்சஸ்தாயியில் கேட்டது. சாய் ஆரத்தி பாக்கலாம் வாங்க என ஒருவர் அழைக்க, கூட்டம் மொத்தம் அங்கு முன்னேறியது.
சிறிது நேரத்துக்குப்பின் அவர்களில் இருந்து குருக்கள் பிதுங்கி வெளியே வந்தார். நீலகண்டன் குருவுக்கு அர்ச்சனை செய்தார்.

“ஈஸ்வரனுக்கும் அர்ச்சனை செய்யனும்”

குருக்கள் கையை வலது பக்கம் நீட்டி ”அங்க போங்கோ, வேற குருக்கள் இருப்பார். அப்புறம் ஹனுமார் பல்லக்குத் தொட்டில்ல விளக்க ஏத்தாதீங்கோ. விளக்கேத்தற இடம் அந்தண்ட இருக்கு”

மரத்தடியில் இருந்தது பல்லக்கு என அப்போதுதான் புரிந்தது

சிவன் சன்னதிக்கு நடக்கும் வழியில் நீலகண்டன் ஒவ்வொன்றாக பார்த்தார். இப்போது சிவன் கோயில் மாத்திரம் இல்லை. அருள்மிகு ஸ்ரீ அலர்மேல்மங்கா சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி / ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஸ்வாமி கோயில் என பெயர் கொண்டிருந்தது. போகும் வழியில் அனுமாரும் அவருக்கு நேராக கருப்பண்ணசாமியும் இருந்தார்கள்.

“சாமி… அனுமார்க்கு நேரா ராமர்தானே இருப்பாரு…?”

“இவர் பஞ்சமுக ஹனுமார் ஸ்வாமி. ராமர் சைடுல இருக்கார் பாருங்கோ. பஞ்சமுகத்துல குதிரை முகம் அவரைப் பார்த்த மாதிரியே இருக்கும். இந்தியாவிலேயே இங்கதான் இந்த விசேஷம். ஹயக்ரீவ முகம் ராமரை பாக்கறத சேவிச்சா கல்வியும் ஒழுக்கமும் செல்வமும் சேரும். இன்னைக்கு வியாழக்கிழமை வேற. இன்னும் கொஞ்ச நேரத்துல சுதர்சனர், அனுமார், பாபா சந்நிதில கூட்டம் தாங்காது.”

“நேர்த்தியா கட்டிருக்காங்களே, தொழிற்சாலை இயந்திரங்களை மாதிரி வரிசையா அடுக்கடுக்கா””

“டைல்ஸெல்லாம் தேச்சு அலம்பிருக்கா. பாத்து நடங்கோ.”

நீலகண்டன் ஒவ்வொரு சன்னதியாக நின்று கைகூப்பி சென்றார். முருகன், ஐயப்பன், விநாயகர், சரஸ்வதி, கருமாரியம்மன் சன்னதிகளைத் தாண்டி வெங்கடேஸ்வர பெருமாள் சன்னதியை சுற்றி வந்தார். சுதர்சனரையும் அவரை அடிப்பிரதட்சணம் செய்பவர்களையும் சேர்த்து சிலர் அவசர பிரதட்சணம் செய்து கொண்டிருந்தார்கள்.

கைலாசநாதர் பழைய இடத்தில் லிங்கரூபியாக இருந்தார். அம்பாளும் பழைய இடத்திலேயே இருந்தாள். இருவரின் உற்சவ மூர்த்திகளும் சிவன் சந்நிதியின் பக்கவாட்டில் இருந்தனர். குருக்கள் அலங்காரம் செய்து கொண்டிருந்தார். நீலகண்டன் மட்டும்தான் அப்போது அங்கிருந்தார்.

“அமைதியான நல்ல தரிசனம்”

நீலகண்டன் அளித்த சங்குப்பூ மாலை ஈஸ்வரனின் கழுத்தைச் சுற்றி நீலமாக ஒளிர்ந்தது.

அப்போது பெருமாள் சந்நிதி பட்டர் அவசரமாக வந்து அங்கிருந்த பெரிய ரோஜாப்பூ மாலையை எடுத்துக் கொண்டார்.

“மஹேஷா, ட்ரஸ்டி வறார், இந்த மாலையை பெருமாளுக்கு எடுத்துண்டு போறேன். இந்த தாமரையையும்.”

குருக்கள் அலங்காரத்திலிருந்து திரும்பாமல் தலையசைத்தார்.

“இந்தா ஹனுமார் ப்ரசாதம். அப்படியே வாய்ல போட்டுண்டு தா.. நான் கிளம்பணும்.”குருக்கள் பஞ்சாமிர்த கரண்டியை அண்ணாத்தி வாயில் போட்டுக் கொண்டார்.

பட்டர் கிளம்பிச் சென்று, அலங்காரமும் ஆனதும் தீபாராதனை துவங்கியது.

“நம: பார்வதீ பதயே ஹரஹர மஹாதேவா…”

உமையும் ஈஸ்வரனும் ஜொலித்தார்கள். சங்குப்பூ நீல உறை போல ஈஸ்வரனின் கழுத்தை சுற்றியிருந்தது. உதட்டின் மேல் ஒரு துளி தேன் இருந்தது. தீபஒளியில் இருவரையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் நீலகண்டன்

“நல்லா இருக்கு, நம்ம எடத்த அவன் எடுத்துக்கிட்டான்… அங்க மரத்தடியில் கொரங்கன் வண்டிய நிறுத்திருக்கான். ரோஜாப்பூவையும் தாமரையையும் அவன் எடுத்துட்டு உங்க கழுத்த சுத்தி வெறும் நீலத்த விட்டு வச்சிருக்கான்.. அதக் கேக்காம பஞ்சாமிர்தம் தின்னிட்டிருக்கீங்க…” என்று கடுகடுத்தாள் அகிலாண்டேஸ்வரி அம்மை.

“திங்கட்டுமா துப்பட்டுமா சொல்லு” என்றது நீலகண்ட சிவம்.