சரவணன் அபி

ஒற்றைச் செருப்பு – சரவணன் அபி கவிதை

இருபுற சாலையின்
ஒருபுற பாதையில்
ஒரேபுறமாக
அடித்து செல்லப்படுமந்த
ஒற்றைச் செருப்பு
திரும்பிச்செல்லவோ
எதிர்ப்புறம் விரையவோ
இணையுடன் சேரவோ
எதற்கும் இயலாத
எதற்கும் உதவாத
எதற்கும் மசிகிற
எதிர்ப்பேதும் இல்லாத
இல்லாத
இருப்பு

பெருகாத கோப்பைகள் – சரவணன் அபி கவிதைகள்

பருகப்படாமல் காத்திருக்கின்றன
புகையும் இரு தேநீர் கோப்பைகள்
சரிந்திறங்கும் மாலைவெயிலில்
சருகுபோல் அலைகிறது தேநீர் வாசம்
இருபுறமும்
இருவேறுதிசைகள் நோக்கி
எதையோ காத்து நின்ற
எண்ணங்கள்
ஒன்றையொன்று நோக்கக்
குவிந்துவிட்டால்
பருகப்பட்டு விடலாம்
காத்திருக்கும் இக்கோப்பைகள்

என்னை நிறைத்துக்கொள்ளும்
ஒரு கோப்பை
ஏதென்று
அறியாதிருந்தது ஒரு  காலம்
எதற்கென்று
அலைபாய்ந்தது இன்னொரு காலம்
நிறைக்கமுடியாது
நிறைந்துவழிவதாய்
நினைவிலழியும்
ஈதொரு முடியாக்காலம்

 

புலன் – சரவணன் அபி கவிதை

வலது கையில்லை
வலது காலில்லை
இழுபடும் நடை
மெதுமெதுவே குறைந்து
படுக்கைவசம்
சன்னலருகே பின்னொளியில்
அசைவற்ற சித்திரம்போல்
உணர்வின்றி துவளும் கரத்தைத்
எப்போதும் தாங்கும் இடக்கை
அருகமரும்
என்தலை கோதவே
தன் பிடிதளரும்
எனைப்பிரிந்து
இத்தனை வருடம் கழிந்தும்
உடல் ஒருபுறம் இழுபட
கனிந்த முகமும்
கலங்கிய விழிகளும்
சாலையில் காணுந்தோறும்
அவளையன்றி
வேறாரும் காணேன்
வேறொன்றும் உணரேன்

​காத்திருத்தல் – சரவணன் அபி கவிதை

சுருக்கங்கள் நிறைந்த கரங்கள்
வித்வம் நிறைந்தவை
புகைத்துக் கொண்டிருக்கின்றன
காலை நடைபயிலும் கால்கள்
சந்தைவந்த சிறார்
முகர்ந்தலையும் குட்டிநாய்கள்​​
நடுவே இரு நாற்காலிகளில்
ஒன்றில் அக்கரங்களின் தலைவன்
இன்னொன்றில்
நசுங்கிய ஆயினும் அழகிய குவளை
அருகில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது
வாழ்வைப்போல் அதிர்வுதளர்ந்த
தந்திகள் துவளினும்
எதை வேண்டுமென்றாலும்
இசைக்கக் காத்திருக்கும்
கிதார்

​சுழல் – சரவணன் அபி கவிதை

சிறுவிதை
கடித்தெறிந்த கனித்தோல்
கிளையுதிர்ந்த இலை
கனியா பிஞ்சும் பூவும் ​​
அடித்தளம் சுற்றிலும்
உயிரோட்டம்
நில்லாது நடந்தேறும்
நாடகம்
உணவும் உணவின் உணவும்
உண்ணவும் உண்ணப்படவும்
அத்தனைக் களி
எதுவுமில்லை தன்னிரக்கம்
எதிலுமில்லை முயற்றின்மை
பேருரு தாழ்ந்து தாள் சேரும்
எதுவும் ஆவதுமில்லை வீண்