ராமன் பட்டாச்சாரியார் தாடியை மழித்து ஒரு மூன்று வாரங்கள் ஆகிறது. அவரை எப்போது பார்த்தாலும் நன்கு தாடியை மழித்து தலைமுடியில் டை அடித்து வகுடு எடுத்து வாரி நெற்றியில் தென்கலையார் திருநாமமும் ஸ்ரீசூர்ணமும் இட்டுக்கொண்டு இருப்பார். கோவிலுக்கு வருபவர்களுக்கே ஸ்ரீனிவாச பெருமாளை சேவிப்பதா இல்லை பட்டாச்சாரியாரை சேவிப்பதா என்ற குழப்பம் வருமென்றால் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். அவர் தாடியை மழிக்காமல் சோகத்தில் இருக்கிறார் என்பதற்கு பல காரணம்.
அவர் மகன் இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னைக்கு வேலை பார்க்கச் சென்று இரண்டு மாதங்கள் ஆகிறது. வீட்டில் ஓடித் திரியும் ஸ்ரீலக்ஷ்மியும் சமஸ்கிருதத்தில் எம். ஏ. படிக்க சென்னை சென்று மூன்று மாதமாகிறது. முதல் வாரம் வந்தபோது இருந்தது நான்காவது வாரம் வந்த ரகுநந்தனின் தலையில் காணோம். அவன் உச்சித் தலையில் இருந்து நீண்டு வளர்ந்திருந்த பின்சிகையை கிராப் பண்ணிவிட்டான். காலையில் பெருமாள் திருமஞ்சனத்துக்கும் நைவேத்யத்துக்கும் பால் தரும் மதுஸ்ரீயைப் பராமரிப்பதற்கு ஆளில்லாமல் அங்கிருந்து தொழுவத்திற்கு சிவசங்கரன் இழுத்துச் சென்றதும் கோவில் வாசலில் வாட்ச்மேனாக இருந்த சுப்பையா காச நோயால் இறந்த துக்கம்கூட இருக்கலாம்.
காலையில் குளித்து முடித்து ஏழு மணிக்கெல்லாம் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய கோவில் கதவைத் திறந்து கொண்டு ஆஜராகும் ராமன் பட்டாச்சாரியார் ஏனோ முகில்வண்ணனிடம் முற்றிலுமாக அதனை விட்டுக் கொடுத்து கோவில் பின்புறத்தில் இருக்கும் தெப்பக்குளத்தைப் பார்த்தபடி நரை கூடிய தலைமுடி காற்றில் அசைந்தாடியபடி உட்கார்ந்திருக்கையில் அம்மங்கார் பில்டர் காபி சொம்பைக் கொண்டு வந்து தரையில் “டொக்” என வைத்ததும் அதில் இருந்து வந்த காபியின் மணம் அவர் அம்மங்காரிடம் அதனைக் கேட்கச் செய்தது.
“முகிலன் வந்தாச்சா?”
“இன்னும் வரலை. வேணும்னா போன் செஞ்சு பாக்கிறேன்”
ராமன் பட்டாச்சாரியார், தமிழ் பண்டிதர். அந்தக் கோவிலில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கைங்கர்யம் செய்து கொண்டு இருக்கிறார். காலை மாலை தவிர்த்த தருணங்களில் ஓர் அரசு பள்ளியில் தமிழாசிரியர். அந்தக் கோவில் மூலவர் திருவேங்கடமுடையார் எனப்படும் ஸ்ரீநிவாச பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி கூடிய வரதராஜ பெருமாள். மிகவும் சின்ன கோவிலாய்த்தான் இருந்தது. உற்சவர், மூலவர் தவிர்த்து ஓரத்தில் சிறிய திருவடி எனும் அனுமனும், மூலவருக்கு சன்னதிக்கு முன் பெரிய திருவடி எனும் கருடனும் மட்டும்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். கருடன் எண்ணையில் ஊறியிருப்பார் என்றால் அனுமன் வெண்ணையிலும் செந்தூரத்திலும். அனுமன் சன்னதிக்கு மேல் அமைந்திருக்கும் வேலைப்பாடுகளில் “ஸ்ரீ ராம ஜெயம்” எழுதப்பட்ட காகிதச் சுருள் தோரணங்களும், அதன்கூடவே நூலாம்படை பந்தல்களும் படர்ந்து இருக்கும். இதைத் தவிர உற்சவர் கோவிலுக்குள் பெருமாள் சுற்றி வர ஒரு சின்ன தோளுக்கினியான் எனப்படும் சப்பர பல்லாக்கும் பூஜை பாத்திரங்களும் சொம்புகளும் நிறைந்திருக்கும். கோவிலுக்குள் நுழைகையில் இருக்கும் நடையின் வலது பக்க அறையில்தான் பெருமாளுக்கு தளிகை நடக்கும் மடப்பள்ளி. விசேஷ நாளென்றால் புளியோதரை மணம் கோவில் பிரகாரம் எங்கும் வீசும்.
கோவில் உடமையாளார் திரு. வேணு நாயக்கருக்கு பிசினெஸ் ஓகோ என்று போனது தான் போனது கோவிலுக்கு கோலியனூரில் இருந்து ஆசாரியர் பட்டறையில் இருந்து கருட அனுமந்த வாகனங்கள் வந்திறங்கின. வாகனங்கள் வந்திறங்கிய உற்சாகத்தில் உற்சவம் நடத்தும் உத்வேகம் கூடியது. பத்து நாள் ப்ரஹ்மோற்சவம் என முடிவானதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கூடியது. பத்துநாள் உற்சவத்துக்கு இரு வாகனத்தில் பெருமாள் ஏளுவது இரண்டு ஆண்டுகளில் பட்டருக்கும் பக்தருக்குமே அலுத்து விட்டதால் உடனே அடுத்து நாகர், சந்த்ர பிரபை, சூரிய பிரபை, வெட்டுங்குதிரை, யானை, அன்ன பக்ஷி வாகனம் வந்திறங்கின. வாகனத்தில் வரதராஜரையே ஏளப்பாடு செய்யவேண்டாமே என்று தான் அடுத்த இரு வருடத்திலேயே ராதே கிருஷ்ண விகிரஹமும், சீதா லக்ஷ்மண ஆஞ்சநேய சமேத ராமர் விகிரஹங்கள் திண்டிவனத்தில் வார்த்தெடுக்கப்பட்டு வந்திறங்கின. அதன் பின் தான் சில சமயங்களில் அனுமந்த வாகனத்தில் ராமர் ஏள ஆரம்பித்தார்.
சொம்பு நிறைய காபி குடிப்பது தான் ராமன் பட்டாச்சார்யாருக்கு வழக்கம். முன்பெல்லாம் ஏழு மணிக்கே நடை திறந்து பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தபின் ஆபிசுக்கு போக வேண்டும் என்பதால் காலை ஐந்து மணிக்கே எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு முதலில் வீட்டு பெருமாளுக்கு பூஜை, பின் கோவில் பெருமாளுக்கு திருமஞ்சனம் முடித்து அலங்காரம் செய்து தளிகை நைவேத்தியம் முடிந்தபின் வேலைக்குச் சென்று விடுவார். ரகுநந்தன் படித்துக் கொண்டு இருக்கும்போது வீட்டு பூஜையை சில நேரங்களில் பார்ப்பதும் அவ்வப்போது கோவில் பூஜைக்கு கீழ்சாந்தியாய் வேலை செய்வதுமாக இருப்பான். இப்போது அவனும் இல்லை. முகிலனோ சைக்கிளில் தூரத்தில் இருந்து வரவேண்டும். காபி சொம்பை அடுக்களையில் வைத்து விட்டு ஹாலில் டிவி முன் வந்து அமர்ந்தார். ஹாலில் சுவரில் பெருமாள் படங்கள், கிருஷ்ணர் படங்கள், ராமர் படங்கள், தசாவதாரங்கள், தனி அவதார படங்கள், வைஷ்ணவ ஆசார்யர்கள் படங்கள், திவ்ய தேச மூலவ உற்சவ மூர்த்திகள், ஆழ்வார், வைணவ பெரியார்கள் படங்கள் என பிரேம் செய்து மாட்டப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாய்ப் பார்த்து வந்த ராமர் பட்டாச்சாரியாருக்கு ராதே கிருஷ்ணர், கிருஷ்ணர் சத்யபாமா, காளிங்க கிருஷ்ணர், நவநீத கிருஷ்ணர், புன்னைமர கிருஷ்ணர் எனத் தென்பட்டது. கூடவே ராமர் பட்டாபிஷேக படமும்.
குழந்தை கிருஷ்ணர், தேரோட்டி கிருஷ்ணர், ராதே கிருஷ்ணர் அனைவரும் கடவுள் என இருந்ந்தாலும் ஏனோ ராமர்களில் ராஜாராமனே கடவுள் என வணங்கப்படுவதாய் தோன்றியது. எதிரில் இருந்த ஸ்டூலில் இருந்த ரிமோட்டை அழுத்தியதும் சினிமா பக்தி பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு அலைவரிசையாய் மாற்றும்போது சில ஸ்வாமியார்களின் அருளாசிகள் ஓடிக்கொண்டு இருந்தன. திடீர் என்று ஒரு சானலில் “பால கனக மய” என்ற தியாகராஜர் பாடல் ஓடிக்கொண்டு இருந்தது.
அது சினிமா பாடல். கீழே சாகர சங்கமம் என்று படத்துடைய பெயர் போடப்பட்டிருந்தது. தெலுங்கு சேனல். மேடையில் ஒரு பெண் நன்கு பரத நாட்டியம் ஆடிக்கொண்டு இருந்தாள் . ஓரத்தில் ஒரு பெண் நல்ல கமகத்துடன் பாடுவதாய் பாவனை செய்தாள். பல்லவி முடிந்து சிட்டை ஸ்வரங்கள் வீணையிலும் வயலினிலும் ஒலித்துக்கொண்டு இருந்தது. இறுதியில் மிருதங்கம் வாசிப்பவர் முத்தாய்ப்பு வைத்து முடித்தார். இடையில் சிட்டை ஸ்வரம் முடிந்து “ரா… ரா…” என்று அனுபல்லவி ஆரம்பித்தபோது காட்சிகள் மேடைக்கும் சமயலறைக்கும் மாறியதும் மஞ்சு பார்கவியும் கமலஹாசனும் அபிநயம் பிடித்தபடி இருந்தபின் “தேவாதி தேவா ரா.. ரா.. மஹானுபாவா” என்று வரிக்கு கோதண்டம் ஏந்திய ராமரை கமலஹாசன் அபிநயம் பிடித்தபோது அப்படியே ராமரை பார்ப்பது போல் இருந்தது. முகத்தில் மீசை மட்டும் கொஞ்சம் இடித்தது. ஆனால் ராமர் க்ஷத்ரிய தெய்வம் என்பதால் அவருக்கு மீசை உண்டு என்று அவருடைய ராமபக்தி தர்க்கம் செய்தது. பாடல் முழுவதும் முடிந்தபின்னும் பாடலை முணுமுணுத்தபடி அங்கவஸ்திரத்தையும், நூல் துண்டையும் தோளில் போட்டுக் கொண்டு கிணத்தடிக்கு குளிக்கச் சென்றார்.
அந்த கோவிலில் ஒரு மாதத்துக்கு முன்புதான் ப்ரஹ்மோற்சவம் முடிந்தது. பொதுவாய் ஒவ்வொரு முறையும் அவர்தான் ஆஸ்தான அத்யந்த பட்டர். ஆனால் அந்த வருடம் முழுக்க ஏதோ ஒரு வகை துக்கம் அவருள். பெருமாள் தெருவில் உலா வந்தபோதுகூட கோஷ்டியில் இல்லாது கோவில் வந்திருந்த பக்த நண்பர்களுடன் அரசியல் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் ஏழாம் நாளன்று வேடுபறி உற்சவம் நடந்தபோது பெருமாளின் கால் தண்டையை திருமங்கை ஆழ்வார் பறித்த காட்சி அரங்கேறியபோது கோஷ்டியுடன் சேர்ந்து,
“வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடியுய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெளிந்து
நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்”
என்று பாசுரம் பாடி கண்ணீர் மல்கினார்.
அன்று அதற்காகவே ஒரு நாள் லீவு போட்டுவிட்டு தலையில் டை அடித்து நெற்றியில் திருநாமம் இட்டுக் கொண்டு அவருடைய மஞ்சப்பையில் திவ்ய பிரபந்த புத்தகங்களும், வேத மந்திர மஞ்சரிகளும் எடுத்துக் வைத்துக் கொண்டு செல்போனில் வரும் அழைப்புக்கும், கோவில் வாசலில் வரவிருக்கும் காருக்கும் காத்திருந்தார். அழைப்பு வந்த ஐந்தே நிமிடத்தில் வாசலில் வந்து நின்ற காரில் இருந்து ஹார்ன் சத்தம் வந்தது. காரின் முன் சீட்டில் ட்ரைவர் மாரிமுத்துவும், முகில்வண்ணனும் இருந்தனர். பின் சீட்டில் அமர்ந்த ராமன் பட்டாச்சாரியார் அலுப்பில் கண் அசந்து எழும்பியது திண்டிவனத்தில்தான். காரை விட்டு இறங்கியபின் மேலே ஒரு போர்டில் நீல வண்ண எழுத்துருவில் “திருமுருகன்” என்று எழுதப்பட்டிருந்தது. கீழே “பொற்கொல்லர்” என்றும் எழுதப்பட்டிருந்தது.
அந்த இடத்துக்குள் செல்ல ஆரம்பித்தபோது உள்ளிருந்து அனல் அடிக்க ஆரம்பித்தது. திருமுருகனும் அவருடைய சகாக்களும் சேர்ந்து கொண்டு அந்த பொன்னொளிர் திரவியத்தை மோல்டுகளில் ஊற்றியபோது விராட புருஷனின் அவய லக்ஷணங்களை விவரிக்கும் மந்திரங்கள் ஓதப்பெற்றது. அன்றிலிருந்து ஏழாம் நாள்தான் சீதா, லக்ஷ்மண, ஆஞ்சநேயர் சமேதராய் கோவிலுக்கு வந்திறங்கினர். வந்திறங்கிய நாள் முதலாய் ஒவ்வொரு மாசம் வரும் புனர்பூச நட்சத்திரமன்று ராமருக்கு திருமஞ்சனமும் சிறிய தளியலும் எப்படியாவது நடந்தேறியது. கோவிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டு வரும் பக்தரை ராமருக்கு செய்ய வைத்து விடுவார். ராமநவமி அன்று பானகமும், நீர்மோரும் அண்டாவில் செய்து பக்தகோடிகளுக்கு தருவார். வரதராஜ பெருமாளுக்கே பொன்னில் ஆபரணம் இல்லை என்றாலும் ராமர் விக்ரஹத்துக்கு பொன்னால் ஆன ஆரம் ஒன்றை வாங்கித்தர வேணு நாயக்கரிடம் வேண்டினார்.
ராமரும் அவருக்கும் நித்யம் அருள் புரிந்தார். ஒவ்வொன்றும் அருளினார். ஒவ்வொரு புனர்பூச நட்சத்திரத்துக்கும் எப்படியாவது ஒரு உபயதாரரை ஏற்பாடு செய்து பட்டாச்சாரியாருக்கு செலவில்லாமல் பார்த்து கொண்டார். அந்த பொன்னால் ஆன ஆரத்தை ராம விக்ரஹத்துக்கு போட்டு பார்த்து அகம் மகிழ்ந்தார் பட்டாச்சாரியார்.
அதன் பின் ஒரு நாள் காலை ஏழு மணிக்கு நடை திறந்து கர்ப்பகிரஹத்துக்கு முன் இருக்கும் சிறு முகப்பில் கண்ணதாசன் எழுதி எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த கிருஷ்ண கானங்களை ஸ்டீரியோவில் ஒலிக்கச்செய்து வால்யூம் திருகை மெல்ல திருகும்போது கோவில் கோபுரத்தில் இருந்த இரு ஒலிபெருக்கிகளில், “கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்,” என்று பாடல் ஒலிப்பது கொஞ்சம் அவருக்கும் கேட்டபோது பக்கவாட்டில் இருந்த சன்னதியின் க்ரில் கதவைச் சேர்த்து பிடித்திருக்கும் பூட்டு எண்ணெய் வழிந்து கொண்டு திறந்தே இருந்ததைப் பார்த்து பதறினார்.
2.
ஸ்டூலில் இருந்த செல்போனில் அழைப்பு.
சற்று நேரத்தில் வாசலில் கார் வந்து நின்றது. காரில் மாரிமுத்துவும், முகில்வண்ணனும் வேணு நாயக்கரும் இருந்தனர்.
“கொஞ்சம் தெருமுக்குல இருக்குற பூக்கடைல வண்டிய நிறுத்துங்கோளேன்” என்றபடி காரில் ஏறினார் .
கடையில் இருந்த முண்டாசு கிழவர் பேத்தி கட்டி வைத்திருந்த பூப்பந்தினை ஒரு நீல கலர் ரப்பர் ஷீட்டை விரித்து அதில் அவ்வப்போது தண்ணீரை தெளித்து இருந்ததால் நீர்த் துளிகள் அதில் எஞ்சி இருந்தன.
பட்டாச்சாரியாரை பார்த்து மிகவும் சகஜமாக ஆள்காட்டி விரலை நீட்டி ஒன்றா என்றும் அடுத்த நடு விரலையும் நீட்டி இரண்டா என்றும் கேட்டார் காரில் இருந்து மோதிர விரலையும் சேர்த்து நீட்டி மூன்று என்று பதில் வந்தது. எதிரில் இருந்த பூப்பந்தில் மூன்று முறை முழத்தை அளந்து பக்கத்தில் இருந்த வாழை இலையை மடித்து ஓரத்தில் இருந்த வெள்ளை நூல் கண்டில் இருந்து நூல் இழுத்து அதை சுற்றி நீட்டி , “பதிவு உண்டா சாமி?” என்று கேட்டார்
“உண்டு”
கடையின் மேலிருந்து ஒரு வாழைக்குலையில் இருந்து தனியாக ஒரு வாழைப் பழ சீப்பை பிரித்து அதில் இருந்து இரண்டு பழத்தையும், வெற்றிலையும் களி பாக்கையும் சேர்த்து நீட்டினார் கிழவர் .
கார் உடனே கிளம்பி பஸ் ஸ்டாண்டின் எதிரில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் வந்து நின்றது.
அறைக்குள் நுழைந்த உடனே வேணு நாயக்கரும், ராமன் பட்டாச்சாரியாரும் இன்ஸ்பெக்டர் முன் அமர்ந்தனர்.
ராமன் பட்டாச்சாரியாரின் நெற்றியில் இருந்த நாமத்தை பார்த்துவிட்டு “சாமிக்கு சொந்தூரு ஏது?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.
அவருடைய காக்கிச் சட்டையில் இருந்த வெள்ளை நிற பிளாஸ்டிக்கில் “ஏ. அல்போன்ஸ்” என்ற பெயரைப் படித்து அவருடைய நீண்ட மீசையில் இருந்த ஓரிரு வெள்ளை முடியையும் பார்த்து விட்டு, “திருநெல்வேலி பக்கத்துல ஸ்ரீவைகுண்டம்”
“ஸ்ரிவேண்டமா…. நமக்கு நாசரேத்தில்லா”
ஓரமாய் இருந்த அறைக்கு இருவரையும் கூட்டிக் கொண்டு சென்றார். அவருடைய ராமர், லக்ஷ்மணர், சீதை அனுமன் தென்பட்டதில் அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதுக்கு மேலாக இன்னும் துக்கம் தான் மூண்டது.
லக்ஷ்மணருடைய கோதண்டமும் அதை ஊன்றி இருந்த கையும் முழுவதுமாக உருக்கப்பட்டிருந்தது. ராமருடைய பீடம் வெல்டால் அறுக்கப்பட்டிருந்ததால் சரியாக பெஞ்சில் நிறுவ முடியாமல் சுவரில் சாய்க்கப்பட்டிருந்தது. சீதையும், அனுமனும் மட்டுமே களவாண்டபோது இருந்த அதே உருவில் இருந்தனர்.
கண்ணீர் நிறைந்த முகத்துடன் அல்போன்சை பார்த்தபோது, “சாமி நம்மால மீட்க முடிஞ்சது இம்புட்டுதான். பழங்காலத்து ஐம்பொன் சிலைகள்தான் முழுசா கிடைக்கும். புதுசல்லாம் திருடுறதே ஐம்பொனுல்ல இருக்கிற தங்கத்தையும், வெள்ளியையும் உருக்கி எடுக்குறதுக்குதான”
எதுவும் பேசாமல் மஞ்சப்பையில் இருந்து பூ ஆரத்தில் எடுத்து சில கண்ணிகளை அறுத்து சிலைகளின் கழுத்தில் போட்டு, வெற்றிலை தாம்பூலத்தையும் கதலி பழத்தையும் பெஞ்சில் இட்டு நைவேத்தியம் செய்து விட்டு,
“ஆபதாம் அப ஹர்த்தாரம் தாதாரம் சர்வ சம்பதாம்
லோகாபி ராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஆர்த்தானம் ஆர்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதி நாஷனம்
த்விஷதாம் கால தண்டந்தம் ராமச்சந்திரம் நமாம்யஹம் ”
என்று ஸ்லோகத்தை முணுமுணுத்தார் பட்டாச்சாரியார்.