ஸ்ரீதர் நாராயணன்

விரல் கணக்கு

ஸ்ரீதர் நாராயணன்

counting_with_fingers2

சின்னஞ்சிறு விரல்களை
விரித்து மடக்கி கணக்கிட்டு
அடுத்த செவ்வாய்க்கிழமை
தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டம்
என அறிவிக்கிறாள்.

சிரிக்கும் அவர்களையும்
சேர்த்துக்கொண்டு
ஊதிய பலூன்கள் ஓடி ஓடி வெடிக்கிறாள்.

பாலேடு வழியும் கேக்குகளை
விரலால் வழித்து நக்குகிறாள். (more…)

ஈனி மீனி மைனி

ஸ்ரீதர் நாராயணன்

eenie_minie

சட்டென நீட்டிய இடக்கையை
புறம்தட்டிவிட்டு
வலக்கையை இழுத்து
ஒருகவளம் சோற்றை வைக்கிறாள்,
அம்மா.

அடுத்த கவளத்திற்கு,

ஈனி மீனி மைனி மோ
கேட்ச் த மங்கி பை த டங்கி
என்று மிழற்றியபடி
இடக்கையில் வந்து நிறுத்திவிட்டு,

அம்மாவிற்கு என்றொரு அரைக்கண
புன்னகையை தந்துவிட்டு
சட்டென வலக்கையை நீட்டுகிறது.

என்றோ இடுப்பு எலும்பு நோக
உந்தித்தள்ளிய உயிர்விதையை
வாரியணைத்து மீண்டும்
வயிற்றில் இட்டுக்கொள்கிறாள்.

எந்த கணக்கு போட்டுத்தான்
என்னிடம் வந்தாயோடி

அப்பாவிற்கான கனவுகள்

– ஸ்ரீதர் நாராயணன் –

little_girl_sleeping

அவள் எப்போதும் உறங்கியதேயில்லை.
அப்பாவிற்கான கனவுகளைத்தான்
உருவாக்கிக் கொண்டிருக்கிறாள்.
எப்போதும்.

பெரிய இறக்கைகளோடு
பறக்கும் வீடு ஒன்று
அப்பாவின் முதுகு போல்
அவளை சுமந்து செல்கிறது எங்கும்

அவள் கனவில் வரும்
புத்தகங்கள் எல்லாம்
அப்பாவின் குரலில் கதைசொல்கின்றன.

குதித்தோடும் தோட்டத்து முயல்கள்
அப்பாவின் பற்களைக் காட்டி
சிரித்து செல்கின்றன.

அப்பாவின் விழிபுலத்தை நிறைத்தபடி
அலங்கார மேஜையின் கண்ணாடி
அவளைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது

அம்மா கூட
அப்பாவின் கரங்களோடுதான்
உணவு ஊட்டிவிடுகிறாள்.

கிளைகள்தோறும்
ஊஞ்சல்களை வீசி ஆடியபடி
கூடவே நடந்து வரும்
மரங்களின் காற்று
அப்பாவின் மூச்சு போல
அவளை ஆசுவாசமடைய வைக்கிறது.

அவள் கனவுகள் எதுவும்
கலைந்து போகாமலிருக்கும்
ஒரு கனவை
அவனும் எழுதி வைக்கிறான்.

கல் விழுங்கிய நாரை

ஸ்ரீதர் நாராயணன்
cranes

“காதலில் இருந்த இரண்டு நாரைகளில் ஒன்றை மட்டும் கொன்றுபோட்ட வேடனே! நீ நாசமாகப் போக”

கோபத்துடன் சீறியது நான்தானா என்று ஆச்சரியமாக இருந்தது. இது என் குரல்தானா? என்னாலே நம்பமுடியவில்லை. மனம் உருவாக்கும் சொற்களெல்லாம் உருக்கொண்டு வெளிவராமல் கரைந்து காணாமல் போய்க் வெகுகாலம் ஆகியிருந்தது. கடைசியாக எப்போது பேசுவதற்கு முயன்றேன் என்றே நினைவில்லை. இன்பத்தில் முயங்கிக் கொண்டிருந்த நாரை ஜோடியை மதிமயங்கி எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேனோ, அந்த அம்பு பறந்து வந்து தாக்கியதை முதலில் கவனிக்கவில்லை.

மரக்கிளையில் ஒரு நொடி தடுமாறிய நாரை சுற்றி சுழன்று கீழே ‘தட்’ என பாறைக்கு அப்பால் போய் விழுந்ததும், அற்புதமான கனவு கலைந்து போன அதிர்ச்சியில் விதிர்விதித்துப் போனேன். உடனே பாய்ந்துபோய் பாறைக்கு பின்னால் விழுந்த பறவையை இருகைகளாலும் பற்றி தூக்கிக் கொண்டு திரும்பிப்பார்த்தால். அங்கே அவன் நின்றுகொண்டிருந்தான். அவன் நிறத்தையும், ஆளையும் பார்த்தாலே தெரிகிறது வேடன் என்று. போதாக்குறைக்கு கையில் ஆளுயரத்துக்கு வில் வேறு.

நாரை அடிபட்டதைவிட அதன் மோனநிலை கலைந்துவிட்டதுதான் மிக துயரமாக இருந்தது. துயரெல்லாம் சினமாக அவன் மேல் குவிய கடுஞ்சொற்கள் உருவெடுத்து வெளிக்கொட்டிவிட்டது. (more…)

பாரின் ரிட்டர்ன் – ராண்டோ

(பிரபல மொழிபெயர்ப்பாளர் திரு கல்யாணராமன் அவர்களின் அவதானிப்பைத் தொடர்ந்து 26.11.2014 அன்று, சங்கப் பாடல் மற்றும் ஏ கே ராமானுஜன் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை இணைத்து இப்பதிவு திருத்தப்பட்டது)

ஏ கே ராமானுஜம் செய்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்புகள், இடைவெளிகளுக்கு முக்கியத்துவம் தருபவை, அவற்றின் உணர்வுச் செறிவில் மௌனத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால், மூல மொழியில் உள்ளதையும் மொழிபெயர்ப்பில் உள்ளதையும் ஒப்பிட்டு நோக்கும்போது, சில விடுபடல்கள் கேள்விக்குறியனவாகத் தெரிகின்றன, தமிழறியாத ஒருவர் ஆங்கிலச் சொற்களை மட்டுமே கொண்டு அடையக்கூடிய பொருள், தமிழில் உள்ளதற்கு இணையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு சோதனை முயற்சியாக, ஏ கே ராமானுஜனின் ஆங்கிலக் கவிதைகளை நெருக்கமாக ஒட்டி, அவர் மொழிபெயர்த்த சில சங்கப் பாடல்களின் தமிழாக்கம் இங்கு அளிக்கப்படுகிறது. சரி தவறுகளுக்கு அப்பால், ஏ கே ராமானுஜனின் மொழிபெயர்ப்பை மீண்டும் வாசிக்கச் செய்ததெனில், இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம்.

கௌவை யஞ்சிற் காம மெய்க்கும்
எள்ளற விடினே யுள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை யொசிய லற்றே
கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே.

Look, friend,
fear of scandal will, only thin out passion.
And if I should just give up my love
to end this dirty talk,
I will be left only with my shame.

My virgin self of which he partook
is now like a branch half broken
by an elephant,
bent, not yet fallen to the ground,
still attached to the mother tree 
by the fiber of its bark.

கேள், தோழி,
பழிச்சொல் பயம், காமத்தை குறைக்கத்தான் செய்கிறது.
என் காதலை விட்டுக் கொடுத்தாலாவது
இந்த இழிபேச்சை நிறுத்தலாம் என்றால்,
எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சும்.

அவன் கொண்ட என் பெண்மை
பெரும் களிற்றால்,
பாதி முறிந்த கிளைபோல
வளைந்து, ஆனால் மண்ணில் விழாது,
அதன் பட்டையின் நாரால்
இன்னமும் தாய்மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீதர் நாராயணன் (“Fear of Scandal” ) (more…)