– ஸ்ரீதர் நாராயணன் –
“காதலில் இருந்த இரண்டு நாரைகளில் ஒன்றை மட்டும் கொன்றுபோட்ட வேடனே! நீ நாசமாகப் போக”
கோபத்துடன் சீறியது நான்தானா என்று ஆச்சரியமாக இருந்தது. இது என் குரல்தானா? என்னாலே நம்பமுடியவில்லை. மனம் உருவாக்கும் சொற்களெல்லாம் உருக்கொண்டு வெளிவராமல் கரைந்து காணாமல் போய்க் வெகுகாலம் ஆகியிருந்தது. கடைசியாக எப்போது பேசுவதற்கு முயன்றேன் என்றே நினைவில்லை. இன்பத்தில் முயங்கிக் கொண்டிருந்த நாரை ஜோடியை மதிமயங்கி எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேனோ, அந்த அம்பு பறந்து வந்து தாக்கியதை முதலில் கவனிக்கவில்லை.
மரக்கிளையில் ஒரு நொடி தடுமாறிய நாரை சுற்றி சுழன்று கீழே ‘தட்’ என பாறைக்கு அப்பால் போய் விழுந்ததும், அற்புதமான கனவு கலைந்து போன அதிர்ச்சியில் விதிர்விதித்துப் போனேன். உடனே பாய்ந்துபோய் பாறைக்கு பின்னால் விழுந்த பறவையை இருகைகளாலும் பற்றி தூக்கிக் கொண்டு திரும்பிப்பார்த்தால். அங்கே அவன் நின்றுகொண்டிருந்தான். அவன் நிறத்தையும், ஆளையும் பார்த்தாலே தெரிகிறது வேடன் என்று. போதாக்குறைக்கு கையில் ஆளுயரத்துக்கு வில் வேறு.
நாரை அடிபட்டதைவிட அதன் மோனநிலை கலைந்துவிட்டதுதான் மிக துயரமாக இருந்தது. துயரெல்லாம் சினமாக அவன் மேல் குவிய கடுஞ்சொற்கள் உருவெடுத்து வெளிக்கொட்டிவிட்டது.
அவனைப் பார்த்தால் நல்ல ஆகிருதியான அமைப்பான உடலுடன் திடமாக இருந்தான். நீளமான கைகள். தோற்றத்தில் பெரும் வித்தியாசம் ஏதும் இல்லையென்றாலும், இனிமையான, ரம்மியமான ஏதோ ஒன்று அவன் மேல் என் கண்களை இழுத்துப் பிடித்து நிற்க வைத்தது. அவன் தோற்றமும் தோரணையும் மட்டுமல்ல, அவனை நோக்கி நிந்தனையாக நான் சொன்ன மொழியும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு காலமாக அடைகாத்து வந்த மொழி இப்படியா சினத்தின் வெளிப்பாடாக, சாபமாக அமைய வேண்டும். நான் சொன்னதையே மீண்டும் மனதிற்குள் சொல்லிப் பார்க்கிறேன்.
இப்போது என்ன கொடுமை நிகழ்ந்துவிட்டது என்று இவன் மேல் இவ்வளவு கோபம்? வேட்டை தர்மத்திற்கு புறம்பாக என்ன செய்து விட்டான் இவன்? அவனுடைய உணவுத்தேவைக்கு ஒரு பறவையை கொன்றது எப்படி சாபமிடும் செயலாகும். எல்லா உயிர்களுக்கும் விதிக்கப்பட்ட ஆதார தர்மம் இரண்டுதானே. உயிர்த்தலுக்கான உணவு வேண்டுதல் மற்றும் சந்ததி பெருக்கத்திற்கான காதல் வேண்டுதல். இதில் எப்படி நான் பேதம் பார்த்து மதியிழந்து போனேன்.
அதற்குள் அவனே என்னருகே வந்தான். அடிபட்ட பறவையை என் கையிலிருந்து பெற்று, அப்படியே கன்னத்தோடு வைத்து கவனமாக கேட்டான். சற்று சாந்தமடைந்தவனாக, நிமிர்ந்து மரத்தையும், வானத்தையும் சுற்றிமுற்றி பார்த்தான். அவன் கருத்த முகத்தில் பெருமளவு கருணை வழிய, சற்று கவலைக்குறிகளும் தோன்றின.
“மன்னிக்க வேண்டும். உங்களைப் போல நானும் இந்த நாரைகளின் மோனநிலையை பார்த்து பரவசமாக நின்றிருந்தேன். நான் அனுமானித்தை விட தென்திசைக்காற்று சற்று வலுவாக இருந்திருக்க வேண்டும். திசைமானியாக மரத்தில் குத்தப்பட்டிருந்த அம்பை காற்று பிடுங்கி வீசியெறிய, நாரையின் கழுத்தை உராய்ந்தபடி சென்றுவிட்டது” அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் முனையில் வண்ணம் தீட்டப்பட்ட சிறிய குச்சி கீழே கிடந்தது.
“நல்லவேளை காயம் ஆழமாக இல்லை. கீழே விழுந்த அதிர்ச்சியில் மயங்கியிருக்கிறது. விழித்தெழுந்ததும் பறக்கத் தயாராகிவிடும்… ஆனால்… நீங்கள் பெருங்குரலில் கத்தியபடி பாய்ந்து வந்ததால், இதன் இணைப்பறவை பறந்து போய்விட்டது.”
கவலை கூடிய முகத்தோடு அண்ணாந்து பார்த்தவன்….
“இரண்டும் இந்த கிளையில்தான் இருந்தன” அவன் அந்த மரத்தை ஆராய்ந்தபடி பார்த்தான். மீண்டும் என்னை திரும்பிப் பார்த்து
“உங்களுக்கு தெரிந்திருக்குமா என நான் அறியேன். இந்த காட்டில் இருக்கும் பல உயிரினங்களும் எல்லாம் ‘ஒரு ஜோடி’ இனங்கள்தான். துணையில்லாமல் உயிர்வாழாது. நாரைகள், வல்லூறுகள், முள்ளம்பன்றிகள், பொன்நிறத்து குள்ள மான்கள், ஏன் நாங்களும் கூட அப்படித்தான். முழு வாழ்க்கைக்கும் ஒரே துணை. ஒரே துணை மட்டுமே. துணையின்றி ஒருபோதும் உயிர்வாழ மாட்டோம். ‘ என்றவன் தொடர்ந்து,
“இந்த நாரை கீழே விழுந்ததும், இதன் இணை வந்து பார்ப்பதற்கு முன்னால் நீங்கள் பாய்ந்து தூக்கிவிட்டீர்கள். தன் துணை வேட்டையாடப்பட்டது என்று அது நினைத்திருக்கக் கூடும். அதுதான் கவலையாக இருக்கிறது”
மேல்திசையைப் பார்த்து சற்று ஆசுவாசமடைந்தவனாக…
“இவை பகலெல்லாம் சேர்ந்தே இருக்கும். இரவு மட்டும்தான் துணையில்லாமல் தனித்து இருக்கும். இப்போது அந்திப் பொழுதாகிவிட்டதால் நல்லதாகப் போயிற்று. இல்லையென்றால் ஜோடிப் பறவை, பெரிய கல்லை விழுங்கிவிட்டு, உயரே பறந்து சென்று, இறக்கைகளை மூடிக்கொண்டு அப்படியே கீழே விழுந்து தன்னைத்தானே மாய்த்துக் கொண்டுவிடும்” என்றான்.
கையிலிருந்த நாரையை ஆதுரமாக தடவிக்கொண்டே ‘இதன் அம்பு காயத்திற்கு கொஞ்சம் கற்றாழைச் சாறு இருந்தால் போதும். இது பிழைத்துக் கொண்டுவிடும்.”
அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சன்னமான வீளை ஒலிக்கு அப்புறம் ‘தட்’ என பாறைக்கு அப்பால் ஏதோ விழும் ஓசை கேட்டது.
‘ஆ!’ என்று அலறியபடி அவன் ஓட, நானும் வலுவைத் திரட்டிக்கொண்டு பின்னாலேயே ஓடி எட்டிப் பார்த்தேன். பாறைக்கு அப்புறத்தில் இருந்த புல்வெளியில் இன்னொரு நாரை கிடந்தது. பாய்ந்து எடுத்தவன்,
‘தன் ஜோடியைத் தேடி இதுவும் பயணத்தை தொடங்கிவிட்டது’
பறவையின் வயிற்றை லேசாக அழுத்திப் பார்த்தான்.
‘கனமான கல்லாக விழுங்கிவிட்டது. இனி உணவெடுக்காமல், பறக்க முயலாமல் அப்படியே உயிரை விட்டுவிட எத்தனிக்கும்’ என்றான் கவலைதோய்ந்த பரபரப்பான குரலில்.
பெரிய மணிவாழை இலைகளில் நாரைகள் இரண்டையும் அணைப்பாக கட்டி எடுத்துக் கொண்டவன்,
‘கல் விழுங்கிய நாரைக்கு துணையின் உயிர்துடிப்பு கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அடிபட்ட நாரையின் காயத்தை குணமாக்க கற்றாழைச் சாறு தடவ வேண்டும்.’ என்று என்னைப் பார்த்து சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்த நிலையில், திடீரென உந்தப்பட்டவனாக அவன் பின்னால் நடக்க ஆரம்பித்தேன்.
‘குதிரையை தொலைத்து விட்டீரோ’ திரும்பிப் பார்க்காமலே கேட்டான். திகைப்பாக இருந்தது. நாடு நகரம் ஆள் படை எல்லாம் துறந்து பரதேசியாக திரியத் தொடங்கி எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டிருந்தன. இதென்ன கேள்வி இப்போது. என்னை திரும்பிப் பார்த்தவன்,
“நீங்களும் இந்த கல் விழுங்கிய நாரையைப் போல சொல் விழுங்கியாகி வீட்டீர்களோ? இந்தக் காட்டில் என்ன கிடைக்கும் என்று வந்தீர்கள்?”
நான் அவனை நெருங்கி சேரும்வரை காத்திருந்தவன், மீண்டும் நடக்கத் தொடங்கினான்.
“அடிபட்ட நாரையை வருத்தத்தோடு நோக்கியதில் இருந்து நீர் வேட்டைத் தொழில் செய்பவரில்லை எனப் புரிந்து கொண்டேன். குதிகாலை அழுத்தி நடக்கும் தோரணையில் குதிரை சவாரி பழகியவர் என்று தெரிகிறது. விழுந்த பறவையை சொந்தம் கொண்டாடாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்தால் வழிபறிக் கொள்ளையர் போலவும் தெரியவில்லை. இவை உயிர்பிழைக்குமா என்று பார்க்க பின்தொடர்கிறீர்கள் எனப் புரிகிறது. நாட்டை விட்டு துரத்தப்பட்டு காட்டில் சுற்றியலையும் பரதேசி என்று நினைக்கிறேன் சரியா. எங்கிருந்து வருகிறீர்கள்? வடக்கிலிருந்தா? சாகேத பட்டினம்… கோசலை? அல்லது சிரவஸ்தி… அயோத்தி…” என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே வந்தான்.
நான் பதிலேதும் சொல்லும் மனநிலையில் இல்லை. இப்படியான கேள்விகளை தவிர்க்கத்தான் முழு பரதேசியாக உருமாற்றிக் கொண்டு அலைகிறேன். இவன் இவ்வளவு நெருக்கமாக வருவான் என்று எதிர்பார்க்கவில்லை.
“சரி விடுங்கள். கொஞ்சம் விரைந்து நடந்தால், இருள் சூழும் முன்னர், நதிக்கரைக்கு போய்விடலாம். கல்லை விழுங்கிய கிரௌஞ்சம்தான் எனக்கு கவலையளிக்கிறது. நீரும், நெருப்பும், காற்றும் சூழ் சுற்றுபுறத்தால் தூண்டப்பெற்று மீண்டு வரவேண்டும். இல்லையென்றால் அடிபட்ட பறவை குணமானாலும் உயிர்பிழைக்காது. சீக்கிரம்” என்றான்.
அவன் உயரத்திற்கு இருக்கிறது அவன் வைத்திருக்கும் வில். வில்லின் நடுவில் அலங்கார கொம்பு பதிக்கப்பட்டிருக்கிறது. ஏதும் குழுவிற்கு தலைவனோ?
காடு முழுவதும் நீள வேர்களோடு மரங்கள் அடார்ந்திருக்க, தடுமாறாமல் நடப்பது மிகவும் கடினமாக இருந்தது. அவன் மிகவும் பழகியவனாக பயணித்தான். திருப்பங்கள், சந்திகள் என்று பல இடங்களில் அடையாளத்திற்கு அம்புகள் குத்தப்பட்டு இருந்தன. பெரும்பாலும் ஒரே மாதிரியான வண்ணம்தீட்டப்பட்ட குச்சிகள்தான். வெகுகாலமாக இந்த காட்டில் வசிக்கிறவனாக இருக்கும்.
சிற்றலைகளின் நீர் சிதறல்களோடு புரண்டு நிதானமாக ஓடிக் கொண்டிருக்கிற நதியை அடையும்போது நன்கு இருட்டிவிட்டது. நில்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கும் நதியைப் பார்க்க பார்க்க உற்சாகம் ஊற்றெடுக்க தொடங்கியது. எங்கே ஓடுகிறது இது? இன்னும் கீழே… கீழே… எங்கோ ஓடி சமுத்திரனின் மடியைத் தேடிக் கரைந்து போவதற்கு என்ன இப்படி ஒரு குதியோட்டம்? நதியில் எட்டிப் பார்த்தால் நட்சத்திரங்களோடு வானம் நீரில் தளதளக்கிறது. அதோ வானில் ஏழு முனிவர்களும் கூட்டமாக புறப்பட்டு விட்டார்கள். புலஹர் கிருதரைப் பார்த்து புன்னகைக்கிறார். தட்சனின் மகள்களான பொறுமையையும், தன்மையையும் மணந்த சகலைகளாம் அவர்கள். அப்படியே கண்களை வடக்கில் ஓட்டினால் துருவன் எழுந்துவிட்டானே. அது என்ன நீல நிறத்தில் பளபளக்கிறது? கண்ணைக் கூர்ந்து இன்னும் துழாவி பார்த்தால் அது நதியில் தெரியும் நட்சத்திர பிம்பமில்லை. நீல நிறத்தில் ஒளிரும் கல். ஆங்காங்கே நிறைய நீலக்கற்கள் தென்படுகின்றன. இருளின் உருவகமான நீளா தேவியின் புன்னகையைப் போல மின்னி மறைகின்றன.
கரையோரமாக பறவைகளை வைத்தவன், நதியைப் பார்த்து புன்னைக்கிறான்.
“இன்றைக்கு புதியதாக பிறந்தவள் போல் இருக்கிறாள் பார். ஒருமுறை பார்ப்பது போல் மறுமுறை இருப்பதில்லை. இன்றைக்கு என்ன அற்புதங்கள் வைத்திருக்கிறாளோ…”
நெருப்பை உண்டாக்கி, அதன் சூட்டில் இளக்கப்பட்ட கற்றாழை இலைகளின் சாறால் அடிபட்ட நாரையின் காயத்திற்கு மருந்திட்டான். அதன் அலகைத் சற்று திறந்து வாயோடு வைத்து ஊதினான்.
‘மஞ்சளும் நெல்லியும் கலந்த சாறு. காயத்தை உள்ளிருந்து ஆற்றும். எல்லாவற்றையும் விட… ‘ நதியை சுட்டிக் காட்டி ‘இவளுடைய நீர் போதும். நீரால் ஆகாத குணம் என்று எதுவும் இல்லை.’ என்றான்.
கல் விழுங்கிய நாரை பற்றி அவன் அதிகம் கவலைகொள்ளவில்லை. என் பதட்டத்தால்தான் அது இந்தமுடிவை தேடிக் கொண்டது என்ற குற்றவுணர்ச்சி மனதை அறுத்துக் கொண்டிருந்தது.
‘கல்லை விழுங்குவது பறவைகளுக்கு புதிதில்லை. அதன் வயிற்றுக்கு கடினமான தழைகளை ஜீரணிக்க சிறிய கற்களை நாடுவது வழக்கம்தான்.’ பக்கத்தில் கிடந்த கல் விழுங்கிய நாரையை சுட்டிக் காட்டி ‘தன் இணை தனக்காக காத்திருக்கிறது என்ற எண்ணம் மேலோங்கினால் போதும். தன்னை மாய்த்துக்கொள்ள விழுங்கிய பெரிய கல்லையும் வெளியேற்றிவிட்டு துணையைத்தேடி புறப்பட்டு விடும்’ என்று சிரித்தான்.
இவ்வளவு காலம் பரதேசியாக சுற்றித்திரிந்த போது, சொற்களின் சித்ரவதையை தவிர்க்கவே ஆளரவமில்லாத காடுகளில் உறைந்திருந்தேன். ஆனால், இன்று இவனுடைய பேச்சை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும்போதும் எனக்கு பதிலுரைக்க வாய் வரவில்லை. வியப்பாக இருந்தது.
‘மனமென்னும் புற்றுக்குள் ஆழப் புதைந்து விட்டீர்கள். அதனால்தான் சொற்கள் உள்ளேயே உறைந்து விடுகின்றன. இவளைப் பாருங்கள். இறுகிக் கிடக்கும் பாறைகளையெல்லாம் உருட்டித்தள்ளிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறாள். என் மனைவி எப்போதும் சொல்வாள். நதி ஒவ்வொரு கணத்திற்கும் ஒரு புதுவடிவை எடுத்துக் கொள்கிறது.’ அவன் பார்வை இப்போது ஆழத்தில் எதையோ தேடுவது போல் நதியை ஊடுருவிச் சென்று கொண்டிருந்தது.
என்னைத் திரும்பிப் பார்த்தவன், ‘இனி நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை‘ என்று சொல்லிவிட்டு புறப்பட்டான்.
மூடிய கண்களுடன் தனக்குள் ஆழ்ந்து கிடக்கும் நாரையைப் பார்த்தால் மிகவும் கலக்கமாக இருந்தது. இது மட்டும் உயிரை விட்டுவிட்டால், குணமடைந்து வரும் மற்றொரு நாரையும் தன் உயிரை தக்க வைத்துக் கொள்ளாது. அதன் இறப்பால் நான் வேடனுக்கு இட்ட சாபமும் பலித்து, அவனும், அவனைத் தொடர்ந்து அவன் துணையும் உயிரை விட்டுவிடுவார்கள்.
மனதில் ஊறி கரைந்து போன பல கோடி சொற்களின் எச்சமாக மிஞ்சியது இவைதானா? காதல் துணையை பிரித்த பாவத்திற்கு காரணமான இந்த கடுஞ்சொற்களை எப்படி மீட்டு எடுப்பது…
நான் சொன்ன சொற்களை மீண்டும் கோத்துப் பார்க்கத் தொடங்குகிறேன். புற்றைக் கீறி, ஒளி பாய்ச்சது போல அந்த சொற்கள் பெரும் வெள்ளமாக உருப்பெறுகின்றன. அத்தனை காலமும் சேமித்து இருந்த சொற்களில் இணை ஜோடி பற்றிய பெரும்கதை ஒன்று பிறக்கிறது. இந்தக் கதையால் தூண்டப்பட்டு கல் விழுங்கிய நாரை தன் காதலை நோக்கி மனம் திரும்பி என் சொல்லின் கறையை போக்க வேண்டும். ஆழப்புதைந்து இருக்கும் சொற்கள் பீறிட்டு கிளம்புகின்றன. இந்த நாரைகள் போல பல இணை ஜோடிகளால் இந்தக் கதை பிரபஞ்சம் முழுவதும் பெரும் காப்பியமாகப் பரவப்போகிறது. இந்த ஆறைப் போல ஒவ்வொரு முறையும் புதிய பிறப்பெடுக்கும் காவியமாக திகழப்போகிறது.
இம்முறை நிந்தனையாக அல்லாது வந்தனையாக தொடங்குகிறேன்.
“காதலில் இருந்த இரண்டு நாரைகளில் ஒன்றை மட்டும் பிரிய வைத்த திருவுறையும் உளம் கொண்டவனே!…”
மேலே உள்ள கதையை படித்து ரசித்து மகிழ்ந்தேன்
நன்றி 🙂
Asirvathangal. Kathai Valmikiyai ninaivupaduthukirathu. Narai pilaithatha endru mami ketkiral.
Thanks Mama. Its a rehash of the same Valmiki Story, but with a surreal tinge.
வால்மீகி ராமாயணம் இதே போன்று தான் துவங்கும் – க்ரௌஞ்ச பக்ஷி…
இது அதே கதைதான். கிரௌஞ்சம் என்றால் நாரை. சபித்தல், வாழ்த்துதல் மாறுவதை குறிப்பிடவே இந்த புனைவு எழுதினேன். வாசித்தமைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் நன்றி 🙂
கனக்கவைக்கும் கதை..
வாசித்தமைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.
ராமாயணத்துக்கு முந்தைய காதை.