சிறுகதை

ஆனந்த யாழ்

பானுமதி ந 

 

சில வார்த்தைகள், எப்போதோ கேட்டவை, ஏன் நம்முடன் பயணிக்கின்றன என பிரமீளா அதிசயித்தாள். ஊதுவத்தியின் புகை காற்றில் வளைந்து எழுந்து தோடியெனக் கமழ்வது போல, ஒரு யாழின் மீட்டலென, உள் நரம்புக்குள் உட்புகுந்து, அதுவாகவே ஆவதான ஒரு வார்த்தை. இராகமாக, சோகமாக, ஆச்சர்யமாக, ஆனந்தமாக தனக்கே உரித்தான பொருள் மயக்கம் தரும் அதை ஏன் அவள் நினைத்துக் கொண்டே இருக்கிறாள்? குழந்தைகளின் பருவங்கள் பற்றி அவளது ஆசிரியை எத்தனைப் பாடல்கள் வகுப்பிலும், தனியாகவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால், செங்கீரை ஏன் அப்படிப் பதிந்தது?

சரவணன் எட்டு மாதங்களில் மெதுவாகப் புரண்டான்; ஆனால், எழ முடியவில்லை. தவழடா, என் கண்ணே, ஒரு கால் ஊன்றி, மற்றொன்றை மடக்கி, நீ செங்கீரை ஆடமாட்டாயா என்று எப்படி ஏங்கினாள் அவள்.

“கொஞ்சிடு கிண்கிணி பொன்னரை ஞாணுடன்
கூடிய திர்ந்து மசைந்தாடக்
கோதறு தண்டை சிலம்பு கிடந்திசை
கொண்டு புரண்டு புரண்டாடச்
சிஞ்சித இன்னொலி யுங்குதலைச் சொலுஞ்
சிந்திட ஆடுக செங்கீரை
செந்தமிழ் சேர் பொருனைத்துறை தங்கிய
சேவல ஆடுக செங்கீரை”

வரிவரியாய் மனதினுள் முகிழ்த்தப் பாடல். கருவில் இருந்த போதே அவள் அவனுக்குச் சொல்லித் தந்த பாடல்.

ஐந்து வயதில் அவன் இரண்டு வயதுக் குழந்தையாய், மாதம் இருமுறை குருதி ஏற்றும் மருத்துவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனைக் காப்பதற்காகவேப் பிறந்த கார்த்திகேயன் வளர்வதற்கு அவள் காத்திருக்கிறாள்.

சரவணனின் விநோத சத்தம் கேட்டு அவள் சமையலறையிலிருந்து ஓடி வந்தாள். கார்த்தி அவளை ஏமாற்றவில்லை. புரண்டு, நிமிர்ந்து, வலக்காலை மடக்கி, இடக்காலை ஊன்றி அவன் செங்கீரை ஆடினான். ‘ஏலும் மறைப் பொருளே, ஆடுக செங்கீரை’ என்று பித்தியைப் போலப் பாடினாள். இரு குழந்தைகளையும் வாரி அணைத்துக் கொண்டாள்.

கார்த்திகேயனைக் கருவுற்றது அவள் நினைவிலாடியது. சரவணன் செந்நிற இரத்த அணுக்கள் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தை. குடும்பத்தில் உள்ளவர்களின் எலும்பு மஜ்ஜை குழந்தைக்கு ஒத்துவரவில்லை. இரத்தம் ஏற்றி ஏற்றியே வாழும் ஒரு மழலை. இந்த ஐந்து வயதிற்குள் நூறு முறையேனும் சரவணனுக்கு இரத்தம் கொடுக்கப்பட்டுவிட்டது. சரவணன் நாளுக்கு நாள் சோர்ந்து வந்தான்.

“மிஸ்டர். சுப்ரமண்யன், இப்டியே செஞ்சுண்டிருக்க முடியாது யு நோ,  பேபி ஃபுல்லா இம்ப்ரூவாவான்னு, ஐ மீன், இந்த மெதட்ல தோணல.  ஒன்னு செய்லாம். உங்களுக்கு இன்னொரு குழந்தை பொறக்கணும். ஆனா, ஐ வி எஃப் லதான் செய்யணும். அவனுக்கு ஹீமோக்ளோபின் ரொம்பக் கொறைவாயிருக்கு. அவன் கண்டிஷன ‘தலசீமியா மேஜர்’ன்னு சொல்வோம். அவனோட திசுவோட ஒத்துப் போற ‘போன் மேரோ’ வேணும். அப்பத்தான் அவன் உடம்பு தானே சரி செஞ்சுக்கும்.”

‘டாக்டர், நீங்க சொல்றது சுத்தமாப் புரியல. எதுக்கு ஐ வி எஃப் ? இன்னொரு கொழந்தைன்னு நெனைக்கவே பயமாயிருக்கு.’

“சேவியர் சிப்ளிங்’ அப்படின்னு பேரு இதுக்கு. அதே அம்மா, அப்பா, அதே கரு வளர்ற முறதான். ஆனா, லுகோசைட் இஸ்யூ இருக்கில்லியா? சரி சரி பயமுறுத்தல. அவன் டிஷ்யுவுக்கு சேர்ற மாரி இருக்கான்னு பாத்து அந்தக் கருவை வளக்கணும். முதல்ல ஐ வி எஃப் ல, கருவ சோதிச்சுட்டு, எது சரவணனுக்கு ஒத்து வருதோ அத மட்டும் உங்க மனைவியோட கருப்பைல வைப்போம். அது வளந்து, பொறந்து, பத்து கிலோவாவது வெய்ட்டுக்கு வரணும். அப்போ அதோட எலும்பு மஜ்ஜைலேந்து ஒரு பகுதி எடுத்து இவன் உடம்புல சேத்துடுவோம்.”

‘அப்ப, இவனுக்காகப் பொறக்கப் போற கொழந்தயோட நெல?’

“அது சேஃப்பா இருக்கும், அதைக் கொன்னு இத வாழ வைக்க மாட்டோம். மெடிகல் சைன்ஸ் அப்படியெல்லாமில்ல.”

‘டாக்டர், அந்தக் கொழந்த ஒருக்கால் பொண்ணா பொறந்துட்டா?’

“அது எதுவா வேணா இருக்கலாம். அது ப்ராபளமே இல்ல.”

இருவது முறை இன்வெர்டோ செய்தார்கள். இருவத்தியோரில் கார்த்தி மிகச் சரியாகப் பொருந்தி அவள் கருப்பையில்           நுழைந்தான். இன்று செங்கீரையும் ஆடிவிட்டான். தளதளவென்று வளர்கிறான்; கொழுவிய பால் சதையில் கொள்ளை கொள்கிறான்; அவன் இன்னும் சில மாதங்களில் பத்து கிலோ எடையைத் தாண்டி விடுவான். சரவணனும், கார்த்திகேயனும் ஒருவரல்லவா? ஆனந்த யாழின் இசையை ஒலிக்கும் கூட்டின் இந்த இரு பறவைகளும்.

 

கிருஷ்ணனுக்குப் புரியும்

மீனாட்சி பாலகணேஷ்

மழை வரப்போவதற்கு அறிகுறிகள் தெரிந்தன. அரண்மனை நந்தவனத்து மரத்தடியில் அமர்ந்து தான் செய்துகொண்டிருந்த கைவேலையை கிருஷ்ணா (திரௌபதி) மளமளவென முடித்து எடுத்துக்கொண்டாள். அதனை பத்திரமாக ஒரு பட்டுத்துணியில் சுற்றிவைத்தாள். மேலே நிமிர்ந்து ஆகாயத்தைப்பார்த்தாள். கூட்டங்களாகக் கருமேகங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவளுடைய எண்ணங்களும் நீர்கொண்ட மேகங்கள்போல் கனத்து எங்கேயோ விரைந்தன. அதற்குள் பணிப்பெண் நந்தினி ஓடோடி வந்து, “அம்மா, ரதம் தயாராகி விட்டது. தாங்கள் சொன்னவாறே பழக்கூடைகளையும், பலகாரப் பாத்திரங்களையும் அதில் வைத்து விட்டோம்,” என்றாள். மெல்ல எழுந்த கிருஷ்ணா ரதத்தை நோக்கி நடந்தாள். குதிரைகளைத் தட்டிக் கொடுத்தபடி தயாராக இருந்த ரதசாரதி, அரசியைக்கண்டதும் பணிந்து வணங்கினான்.

“பரிமளா, நான் இரண்டுபேரும்தான் தங்களுடன் வருகிறோம் தேவி,” என்றாள் நந்தினி. “போதும், இந்தப் பால்பாயசப் பாத்திரம் சிந்தாமல் கூடையைப் பிடித்துக்கொள்,” என்றபடி ரதத்தில் ஏறிக்கொண்டாள் திரௌபதி.

பட்டத்தரசி திரௌபதியின் அலங்காரத்தைக் கண்டு பணிப்பெண்கள் அர்த்தபுஷ்டியோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இத்தனை கஷ்டங்களையும் சகித்துக்கொண்டு சாதித்த பெருமிதம் அவள் முகத்தில் பிரகாசித்தது. வாடிவதங்காமல் மினுமினுத்த தேகம். யாகத்தீயிலிருந்து உதித்த கரியதேகமானாலும் (கிருஷ்ணா) அழகிற்கும் கட்டமைப்பிற்கும் சிறிதும் பங்கமின்றி, இளமையில் பல அரசர்களின் கனவாக, அடைய விரும்பிய பொக்கிஷமாக இருந்தவள்; இன்றும் இருப்பவள். அழகான கருங்கூந்தலை அருமையான கொண்டையாகப் புனைந்து அதில் அலட்சியமாகச் சுற்றிவைத்த முத்துச்சரம்; பொன்போன்ற சில சண்பகமலர்கள். தாமரை வண்ணக் கச்சும் அதேநிறத்தில் புடைவையும். மிகக்குறைவான ஆபரணங்கள். இந்த வயதிலும் அரசி எப்படி அழகில் ஜ்வலிக்கிறாள் என்று இவர்கள் மயங்கினார்கள்.

ரதத்தைவிட விரைவாக அவளுடைய எண்ணங்கள் சிறகடித்தன. இவள் கொண்டுவருவதனைக்கண்டு கிருஷ்ணன் என்ன சொல்லுவான் என்று எண்ணியபோது முகத்தில் ஒரு புன்னகை விரிந்தது. அப்படி என்ன கொண்டு செல்கிறாள் இந்தப் பாஞ்சாலி?

கிருஷ்ணன் கேட்கப்போகும் கேள்வி அவளுக்கு ஏற்கெனவே தெரியும். “இத்தனை நாட்களாக இல்லாத இந்த வழக்கம் இப்போது ஏன் யக்ஞசேனி?”

அவள் சொல்லப்போகும் பதில்???

ஆம், ‘இத்தனை நாட்களாக இல்லாத இந்த வழக்கம் இப்போது ஏன் யக்ஞசேனி?’ தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள் அவள், யக்ஞசேனி!

விடை அவள் மட்டுமே அறிந்தது!

கிருஷ்ணனுக்கும் தெரிந்திருக்கலாம். அவன் அறியாததும் ஒன்றுண்டா?

*******

மிகுந்த தலைவலியுடன் தனதறையில் படுத்துக்கொண்டிருந்தாள் திரௌபதி; பணிப்பெண் நந்தினிதான் எதையெதையோ தடவி அவள் நெற்றிப்பொட்டினைத் தேய்த்துவிட்டபடி இருந்தாள். அரசி உறங்கிவிட்டாள் என்று எழுந்து மற்ற பணிப்பெண்களுடன் நந்தவனத்துக்குப் போய்விட்டாள். கிழவியொருத்தி மட்டும் அந்த அறைவாயிலில் காவலுக்கு உட்கார்ந்திருந்தவள் தானும் தூங்கி விழுந்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்திலேயே எழுந்துவிட்ட திரௌபதிக்கு நந்தவனத்தில் காற்றாட உலவிவிட்டுவந்தால் நன்றாக இருக்குமே எனத்தோன்ற அதை உடனே செயல்படுத்தினாள். மலர்களின் பலவித மணங்களை ஆழ்ந்து சுவாசித்தவாறு மெல்ல நடந்தவளை மல்லிகைப்புதர்களின் பின்பு அமர்ந்து ரகசியம் பேசிக்கொண்டிருந்த பெண்களின் குரல் தடுத்து நிறுத்தியது!

“பரிமளா, எப்படித்தான் மகாராணி ஐந்து கணவர்களை சமாளிக்கிறார்களோ தெரியவில்லை. என் கணவர் ஒருவரை சமாளிப்பதற்கே எனக்கு முடியவில்லை,” என்று நகைத்தாள் நந்தினி.

“அதுதான் அவ்வப்போது துவாரகைக்குப்போய் அவர்களுக்கு இஷ்டமான கிருஷ்ணராஜாவை சந்தித்துவிட்டு வருகிறார்களே! இங்க ஐந்தோட அவரும் ஒன்று, ஆறு!” என்று கூசாமல் கூறி வாயைமூடிக்கொண்டு சிரித்தாள் அடுத்தவள்.

“ஆமாம், அங்கேயும் அவருக்கு ஆயிரக்கணக்கானபேர் ராணிகள். ஆனாலும் இவர்களுக்கு என்று ஒரு தனியிடம் இருக்கும்போல….” என்று சொல்லி எல்லாரும் பெரிதாக சப்தம் எழாமல் சிரித்தனர்.

பெரிதாகப் பொங்கிய கோபத்தையும், அதன் அடிநாதமான துயரத்தையும் அடக்கிக்கொண்டாள் திரௌபதி. அவள் பகிரங்கமாக சபையில் கேட்காத பழிச்சொற்களா? ஆனால்,அவளுடைய உயிர் நண்பனை, கிருஷ்ணனை எடைபோட உலகம் எவ்வாறு துணிந்தது?  ‘நேற்றுப்பிறந்த சின்னப்பெண்கள், வாழ்வை இன்னும் என்னைப்போல் எதிர் கொள்ளவில்லை; மேலெழுந்தவாரியாகப் பார்ப்பதனை வைத்துத் தங்கள் அரசியையும்  கிருஷ்ணனையும் எடைபோடுகிறார்கள்; பைத்தியங்கள்.’ தான் வந்த சுவடே தெரியாமல் நகர்ந்தாள் அவள்.

அப்போது எழுந்ததொரு எண்ணம் விரைவில் கிருஷ்ணனைப் போலவே விசுவரூபம் எடுத்தது. அதற்கேற்றாற்போல அந்தத் திருநாளும் வந்தது.

கடவுள் மனிதனாகப் பிறந்தால், மனித தர்மங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். நரம்பில்லாத மனித நாக்குகளிலும்கூடப் புரண்டெழ வேண்டும் என்பதுதான் மனிதர்கள் வாழும் இந்த உலகின் நியதியோ?

‘கிருஷ்ணா! என் ஆத்ம சினேகிதனே! புன்மை மிகுந்த இந்த உலகத்தோர், உன்னை ‘ஸ்த்ரீலோலன்’ என எண்ணிக்கொள்ள விடமாட்டேன். ஏதாவது செய்து உன் அன்பின், நட்பின் புனிதத்தைப் பறைசாற்றுவேன் இந்த உலகுக்கு.’

*****

குதிரைகள் மனோவேகம், வாயுவேகத்தில் விரைய, பழைய நாட்களின் நிகழ்வுகளை உள்ளம் ஒன்றொன்றாக அசைபோட்டது.

*****

திரௌபதியின் ஸ்வயம்வரம் அறிவிக்கப்பட்டு விட்டது. தோழி சௌதாமினி மூலம் கிருஷ்ணனுக்குச் செய்தி அனுப்பினாள் திரௌபதி. அவனோ நேரிலேயே வந்துவிட்டான்! ஸ்வயம்வரத்திற்கு அல்ல! தான் ஸ்வயம்வரத்தில் பங்கேற்க இயலாததையும், அவளை மணமுடிக்க இயலாததனையும் சொல்லத்தான் வந்திருக்கிறான்.

ஆயிரமாயிரம் மனைவியர்கள் அவனுக்கு. அவர்களுள் ஒருத்தியாக இருக்க திரௌபதி விரும்பவில்லைதான். இருப்பினும் ருக்மிணி, சத்யபாமா போன்றவர்களுக்குத் தனி இடங்கள் அவன் உள்ளத்திலும் அரண்மனையிலும் இருக்கவில்லையா? அதேபோல் தனக்கும் ஒரு இடமளித்துத் தன்னையும் அவன் மனையாளாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என விரும்பினாள் அவள். கிருஷ்ணனிடம் யார்தான் காதல் வயப்படவில்லை?

கடந்த இரு நாழிகைகளாக அவளுக்கும் கிருஷ்ணனுக்கும் வாக்குவாதம் தொடர்ந்தபடி இருக்கிறது. சேடிப்பெண்கள் பட்டாடைகளையும் பூஷணங்களையும் அணிவித்து அவளைத் தயார்செய்து ஸ்வயம்வர மண்டபத்திற்கு அழைத்துச்செல்லக் காத்து அறையின் வெளியே அவர்கள் பேச்சு காதுக்கு எட்டாத தூரத்தில் நிற்கிறார்கள்.

“பாஞ்சாலி! இத்தனை சொல்லியும் புரியவில்லையா உனக்கு?” மௌனத்திலாழ்ந்து தலைகவிழ்ந்து சிந்தனையில் மூழ்கியிருக்கும் அவளிடம் கேட்டான் கிருஷ்ணன்.

கவிழ்ந்த தலையை ‘வெடுக்’கென்று நிமிர்த்தி, திரௌபதி கிருஷ்ணனை ஏறெடுத்து நோக்கினாள்: அவளுடைய கரிய பெரிய விழிகளில் சோகமும் ஆற்றாமையும் ததும்பி வழிந்தது. “கிருஷ்ணா! என்னிடமும் நீ விளையாடுகிறாயா? எத்தனை நாட்களாக நான் உறக்கமின்றி, உன்னையே எண்ணியபடி ஏங்கித் தவித்திருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா? இன்றா, நேற்றா? குழந்தைப் பருவத்திலிருந்து நான் செய்து கொள்ளும் அலங்காரங்களும், பூஜைகளும், இன்னபிறவும் உனக்காகவே என உணர்ந்திருக்கிறாயா?” ஆத்திரத்துடன் அவனிடம் சீறினாள் அவள்.

அவளுடைய ஆத்திரத்தைக் கண்டு ‘கலகல’வெனச் சிரித்தான் கிருஷ்ணன்.

“யக்ஞசேனி! (திரௌபதியின் மற்றொரு பெயர். யாகத்தீயிலிருந்து வெளிவந்தவளாதலால் இப்பெயர் அமைந்தது) உன் உள்ளத்தை நானறிவேன். நீ எனக்காக ஏங்குவதையும் நான் அறிவேன். ஆனால் …………. இதனைக் கேள்.

“உனது பிறப்பிற்கு ஒரு காரணம் உண்டு. திரௌபதி எனும் பெண்ணால் மட்டுமே க்ஷத்திரியர்களின் அதர்மப் போக்கைக் கண்டித்துத் தர்மத்தை நிலைநிறுத்த இயலும் என்பது  முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டதொன்று. ஒரு பெண், தனது அசாதாரணமான மனோபலத்தால் மட்டுமே இதையெல்லாம் சாதித்தாள் என்பதை உலகத்தோர் உணர்ந்துகொள்ள வேண்டும். எதிர்கால க்ஷத்திரியச் சந்ததியினர் இந்தப் பூவுலகில் தர்மத்தை நிலைநிறுத்த, பெண்ணான நீ ஒருத்தி மட்டுமே துணையிருப்பாய்! அதற்காக எனது அம்சமான ஒருவனை நீ ஸ்வயம்வரத்தில் கணவனாக அடைவாய்!” என்றான் கிருஷ்ணன்.

“யார்? யாரவன் கிருஷ்ணா? உன்னைவிட உயர்ந்தவன் என உன் வாயாலேயே நீ கூறும் அவன் யார்?” கிருஷ்ணனை விட உயர்ந்தவன் இன்னொருவனும் உண்டா எனும் கோபத்திலும் கிருஷ்ணன் கூறும் செய்திகளாலும் நிராசையில் கண்களில் நீர் படலம் கட்டியது அவளுக்கு! ஆனால் அது புனலெடுத்து ஓட அவள் அனுமதிக்கவில்லை!

“ஐந்து பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனனே அவன்! இந்திரனின் அம்சமாக விளங்கும் அவன் உனது வாழ்க்கைத் துணைவனாவான். எனது ஆத்மாவின் ஒரு பகுதி அவனிடம் இருக்கிறது. நானே அவன். அவன் என்னில் அடக்கம். அவன் மகா வீரபுருஷன்; ஆணழகன்; நீ அவனுடன் இணைந்து தர்மத்தை நிலைநாட்டுவாய். நீ இல்லாவிட்டால் அர்ஜுனனும் மற்ற நான்கு பாண்டவர்களும் தர்மத்தைவிட்டு விலகி விடுவார்கள்; இது உலக நன்மைக்காக உனக்காக விதிக்கப்பட்ட கடமை, உனது பிறப்பின் அர்த்தம்,” என்றான் அனைத்தும் அறிந்த பரந்தாமன்.

கைகளை மார்பின் குறுக்காகக் கட்டிக்கொண்டு அவன் நின்ற கோலம் அவள் கண்களை, உள்ளத்தை, சிந்தையை நிறைத்தது. சில கணங்கள் கண்களை இறுக மூடி, அதனை அப்படியே இதயத்தில் அழியாததொரு சித்திரமாகப் பதித்துக் கொண்டாள் அவள். கண்ணீரை அணைபோட்ட கண்களுடன் அவன் கூறுவதையும் கேட்டுக்கொண்டாள் திரௌபதி!

“கிருஷ்ணே! என் அருமைத் தோழியே! உனக்கும் எனக்கும் இடையிலான இந்த உறவு பந்தங்களுக்கும் சொந்தங்களுக்கும் அப்பாற்பட்டது. என்னிடம் அன்பு கொள்வது எவருக்குமே மிகவும் எளிது! ருக்மிணி, பாமா, அனைத்து கோபிகைகள், எனது பதினாறாயிரம் மனைவியர் அனைவருமே என்னிடம் எல்லையற்ற, தீராத அன்பு பூண்டவர்கள். ஆனாலும் ருக்மிணி, சத்யபாமா ஆகிய எட்டு அரசிகள் தவிர மற்ற அனைவருமே என்னை மனதால் மட்டுமே காதலனாக, கணவனாக வரித்துக் கொண்டவர்கள்.

“உன்னுடனான எனது இந்த பந்தம் அழிவற்றது. நான் என்றுமே உனது உயிர் நண்பன், உயிர்த்தோழன், நீயும் எனது உயிர்த்தோழி, உனது அன்பை நான் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டுவிட்டேன் கிருஷ்ணே!” என்றான் கிருஷ்ணன். தானும் அவளும் இணைக்கப்பட்ட பந்தத்தை அவளுக்கு உணர்த்த வேண்டுமென்றே அவளை அப்பெயரால் அழைத்தான். (யாகத்தீயினால் கருநிறம் கொண்ட மேனியளாக உதித்தவளை கிருஷ்ணை என்றும் அழைத்தனர்).

கேட்ட அவள் இதயம் சிலிர்த்தது. உடல் புல்லரித்து நடுநடுங்கியது; கண்களில் வழிந்த துயரம் இப்போது துடைக்கப்பட்டு சிலிர்ப்பாகப் பெருகி ஓடியது. “கிருஷ்ணா! என் ஆத்மநண்பனே! என் இதய தெய்வமே! நீ எனது சிந்தையில் துணையாக இடம் பெற்று விட்டாய், என்னை என்றென்றும் காத்து வழிநடத்துவாயா?” கைகளைக் கூப்பி அஞ்சலி செய்தாள் திரௌபதி. அவன் கால்களில் விழுந்து நமஸ்கரித்தாள்.

“கட்டாயமாக, கிருஷ்ணே! நான் உன்னருகே இல்லாவிட்டாலும் எந்த நிலைமையிலும் என்னை நீ நினைத்தால் நான் அங்கிருப்பேன்; உனக்கு உதவுவேன்,” என வாஞ்சையுடன் அவள் தலையை வருடினான் கிருஷ்ணன்.

“வா, சீக்கிரம்; ஸ்வயம்வர மண்டபத்தில் உன் தரிசனத்துக்காக எல்லாரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நானும் அங்கு செல்ல வேண்டும்!” என்று அன்போடு புன்னகைத்தான் அந்த மாயக்கிருஷ்ணன்.

அன்று, அவனுடைய அச்சொற்களை வேதவாக்காக ஏற்ற பாஞ்சாலி அதனை என்றுமே மறக்கவில்லை!

*****

ஆண் – பெண் நட்பென்பது காதலாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை என்பதனை நிரூபிப்பது திரௌபதி – கிருஷ்ணனின் நட்பு. உடுக்கை இழந்தவன் கைபோல, பரஸ்பரம் ஒருவர் மனதை, தேவையை மற்றவர் அறிந்து, உதவிக்கொண்டு மலருக்குள்ளே பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் மணம்போல சுகந்தம் வீசிய நட்பு அது. எத்தனை எத்தனை சம்பவங்கள்!

அர்ஜுனனை ஸ்வயம்வரத்தில் மணந்த திரௌபதி அவனுடன் வீட்டை அடைந்ததும்தான் ஐந்து பாண்டவர்களின் மனைவியாகவும் தான் வாழவேண்டிய நிலைமையை உணர்ந்து திகைக்கிறாள். உலகியலின் இயற்கைக்கு அப்பாற்பட்டதல்லவா இது? பின்பு கிருஷ்ணன் முன்பு தன்னிடம் கூறியதனை நினைவிலிருத்திக்கொண்டு அவ்வாழ்க்கையைத் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு கடமையாகவே ஏற்றுக் கொள்கிறாள்.

பஞ்சபாண்டவர்களின் பத்தினியாக, அரசியாக வாழ்ந்த காலத்தில், பாண்டவர்கள் புது அரண்மனை நிர்மாணித்து, அதில் குடிபுகும் விழாவைக் கோலாகலமாக நடத்தினார்கள். துரியோதனாதிகளும் அழைக்கப் பட்டிருந்தனர். கிருஷ்ணனும் தன் மனைவியரோடு வந்திருந்தான். மதிய விருந்திற்கு முன்பு அனைவரும் ஜலக்கிரீடை செய்து நீராடி மகிழ்ந்தனர். விருந்திற்கு இலை போடப்பட்டதும் ஒருவர் ஒருவராக அனைவருமே குளத்தைவிட்டு வெளியே வந்து உலர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு உணவுண்ணச் செல்லலாயினர். கிருஷ்ணன் மட்டும் நீரிலேயே துளைந்து கொண்டிருந்தான்.

“என்ன கிருஷ்ணா! யமுனையில் விளையாடிய நாட்களின் நினைவில் வெளியேவர மனமில்லையா?” எனக் கேலி செய்தவண்ணம் வந்தாள் திரௌபதி. பட்டத்தரசியான அவள் அன்று அழகான வேலைப்பாடமைந்த பட்டாடைகளை உடுத்துக்கொண்டு, நவரத்தின ஆபரணங்கள் ஜொலிக்க, இளமையின் பொலிவில் அழகின் சிகரமாக ஒளிர்ந்தாள். அவளைக் கண்ணுற்ற கிருஷ்ணனின் இதயம் பல உணர்ச்சிக் கலவைகளில் கணநேரம் கொந்தளித்தது. அவளை எதிர்நோக்கியிருக்கும் அனைத்துத் துயரங்களும் சவால்களும் அவன் மட்டுமே அறிந்ததொன்றல்லவோ?

ஆனால், புன்னகை ஒன்றையே மறுமொழியாக வழங்கினான் கிருஷ்ணன். அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள் திரௌபதி. அது போலிப்புன்னகை; ஒரு இக்கட்டான நிலைமையைச் சமாளிக்க விளைந்தது எனக் கணப்பொழுதில் இனம் கண்டு கொண்டுவிட்டாள் அவள். விஷயம் இதுதான். கிருஷ்ணனின் அரைத்துணி விலகி நீரோடு எங்கோ சென்றுவிட்டது. எவ்வாறு நீரிலிருந்து வெளிவருவது? அதனால் என்ன செய்வது என்று எண்ணியவண்ணம் தடுமாறிக் கொண்டிருந்தான் அவன்.

அவன் முகத்தைப் பார்த்த உடனேயே புரிந்து கொண்டுவிட்டாள் பாஞ்சாலி. ஒரே நொடிதான்; சிந்திக்கவேயில்லை! தனது உயர்ந்த பட்டாடையின் தலைப்புப் பகுதியைச் ‘சரக்’கெனக் கிழித்து நீரில் கிருஷ்ணனின் பக்கம் வீசி எறிந்தாள். அதனை அரையாடையாக உடுத்துக்கொண்டு நீரிலிருந்து எழுந்து வந்தான் கிருஷ்ணன்.

திரௌபதியும், “அண்ணா! சீக்கிரம் வேறு உடை உடுத்திக்கொண்டு விருந்துக்கு வாருங்கள்,” என்றுவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் சென்றுவிட்டாள். கிருஷ்ணனின் பார்வை அவளுடைய கிழிக்கப்பட்ட அழகான புடவைத்தலைப்பைப் பார்த்து நெகிழ்ந்தது. உள்ளமோ அந்த அன்பின் ஆழத்தில் சென்று அமிழ்ந்து சிலிர்த்தது.

அந்த ஆழ்ந்த அன்பின் பிரதிபலிப்பே அவள் பின்னொருநாள் சபையில் துகிலுரியப்பட்டபோது  எல்லையில்லாமல் வளர்ந்த அவளுடைய துகிலாகப் பெருகியதோ?!

நாடிழந்து, வீடிழந்து, எல்லாமிழந்து பாண்டவர்கள் வனவாசத்திற்காகப் புறப்பட்டபோது நடுவில் ஒரு இரவு வேளையில் மரத்தடியில் தங்கி இளைப்பாறி உறங்கவேண்டி நேர்ந்தது. அரசகுமாரியான திரௌபதிக்குக் காட்டின் கட்டாந்தரையில் உறங்க வேண்டிய கட்டாயம். ஐந்து கணவன்மார்களும் ஆழ்ந்த நித்திரையில்!! யாராவது ஒருவர் அவளுடைய நிலைமையை எண்ணிப்பார்த்தார்களா? பெண்ணுக்குத்தான் பதிவிரதா தர்மமா? மனைவியைக் காப்பதும் அவள் சுகதுக்கங்களில் பங்குகொள்வதும் கணவனுக்கு இல்லையா? ஒன்றுக்கு ஐந்தாக இருக்கிறார்களே! ஒருத்தர் கூடவா இப்படி மனைவி பற்றிய பிரக்ஞை இல்லாமல் இருப்பர்? உடன் வந்த துணையான கிருஷ்ணன் மட்டுமே விழித்திருந்தான்!

“என்ன பாஞ்சாலி! உறக்கம் வரவில்லையா? ஹம்சதூளிகா மஞ்சம் இல்லையா?” எனக் குறும்பாக வினவியபடி அவளருகே வந்தமர்ந்தான் கிருஷ்ணன். “விளையாடாதே கிருஷ்ணா! எனக்கு இதெல்லாம் பழகச் சில நாட்களாகும் என்று உனக்குத் தெரியாதா?” என்று பொய்க்கோபம் காட்டியவளிடம், “இதோ, எனது புஜத்தை உன் தலையணையாக எண்ணிக்கொண்டு இப்போது நிம்மதியாக உறங்கு,” என வாஞ்சையுடன் தன் கரத்தைத் தலையணையாக்கி அரசகுமாரியான அவளை உறங்க வைத்த பாசப்பிணைப்பல்லவா அந்த நட்பு! ஆனால் அவளுடைய ஐந்து கணவர்களும் அந்த நிகழ்ச்சியை ஒரு பொருட்டாகவே கருதவில்லையே! கிருஷ்ணனிடம் அவர்களுக்கு இருந்த அசாத்திய நம்பிக்கையா அல்லது பாஞ்சாலிமீது கொண்ட நம்பிக்கையா? இரண்டும்தான் என இப்போது தோன்றியது அவளுக்கு.

வனத்தில் வாழும் பஞ்சபாண்டவர்கள் பசியில் வாடாதிருக்க சூரிய பகவான் ஒரு அட்சய பாத்திரத்தைக் கொடுத்திருந்தார். ஐந்து பாண்டவர்கள் சாப்பிட்டு, பாஞ்சாலியும் உண்டுமுடித்தபின் அன்றைய பொழுதுக்கு அதிலிருந்து மேலும் உணவைப்பெற முடியாது.

ஒருநாள்….. கோபத்திற்கும் அது தொடர்பான சாபங்களுக்கும் பெயர்பெற்ற துர்வாச முனிவர் தனது பரிவாரங்களுடன் பாண்டவர்களைக் காண வந்தார். அனைவருக்கும் விருந்தளிக்க வேண்டுமே! அனைவருக்கும் உணவளித்து, திரௌபதியும் உண்டுமுடித்து பாத்திரத்தைக் கழுவிக் கவிழ்த்தாயிற்று. பின்னால் அன்று அட்சய பாத்திரத்திலிருந்து திரும்பவும் உணவைப் பெற இயலாது. பெருங்குழப்பத்திலாழ்ந்த பாஞ்சாலி, “கிருஷ்ணா, என் உயிர்த்தோழா, நான் என்ன செய்வேன்?” எனப் பிரலாபிக்கிறாள். எதேச்சையாக வந்ததுபோல அவள்முன் தோன்றிய அப்பரந்தாமன், “அட்சய பாத்திரத்தைக் கொண்டுவா,” எனக் கேட்கிறான். அதில் ஒரேயொரு சோற்றுப்பருக்கை ஒட்டிக் கொண்டிருக்கின்றது. சர்வவியாபியான அவன் அதனை எடுத்து உண்கிறான். இப்போது அவன் வயிறு மட்டுமல்ல; அனைத்துயிர்களின் வயிறும் நிரம்பி விடுகிறது. நீராடச்சென்ற துர்வாசர் தமது பரிவாரங்களுடன் வந்தவழியே சென்று விடுகிறார். விருந்திற்காகப் பாண்டவர்களின் குடிலுக்குத் திரும்ப வரவே இல்லை!

அவன் தெய்வமாக இருக்கலாம்; அது அவளுக்குத் தெரிந்தோ தெரியாமலோ இருந்திருக்கலாம். தனக்குத் துன்பம் வந்தபோதெல்லாம் தன் உயிர்த்தோழனான அவனைத்தான் அணுகினாள் அவள்; வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் வந்த இடர்களையும் துயரங்களையும் கிருஷ்ணனின் தோழமை தந்த தைரியத்தால்தான், ‘அவன் இருக்கிறான்,’ எனும் எண்ணம் ஒன்றைப் பற்றிக்கொண்டுதான் அவளால் கடக்க இயன்றது.

ஆனால் இதன் உச்சகட்ட நிரூபணம் அவளைத் துச்சாதனன் துகிலுரிந்தபோதுதான் உலகத்திற்கும் தெரிந்தது. சூதாடிய தருமபுத்திரன், நாடிழந்து, மனையிழந்து, மனைவியையுமிழந்து, சபையில் அந்த மனைவி அலங்கோலமாகக் கேவலப்படுத்தப் படுவதனையும் பார்த்துக்கொண்டு கையாலாகாதவனாக அமர்ந்திருக்கிறான். சபையில் பீஷ்மர் முதலான பெரியோர்கள், அரசர்கள், தனது ஐந்து கணவர்கள் என அனைவரையும் பார்த்து நியாயம் கேட்டுக் கதறினாளே திரௌபதி. தனக்கொரு அநீதி இழைக்கப்படும்போது தனக்கு வேண்டிய உறவினர்களை உதவிக்கு அழைப்பது எனும் பதற்றச் செயல் அது! ஒருவரும் ஒன்றும் உதவாத நிலையில், “கோவிந்தா! பரந்தாமா,” எனத்தன் உயிர்த்தோழனை உதவிக்கழைத்துக் கண்மூடிப் பிரார்த்திக்கிறாள்; கணப்பொழுதில் துகில் கணக்கின்றி வளர்ந்துகொண்டே செல்கின்றது. பீஷ்மர், விதுரர் ஆகியோர் உண்மையுணர்ந்து திகைக்கின்றனர். என்ன உண்மை? பரந்தாமன் அருள், அருகாமை, தோழமை அவளுக்குப் பூரணமாக இருக்கிறது  என்பது நிரூபணமாகிறது.

திரௌபதியை ‘சூதில் எடுத்த விலைமகள்’, ‘ஐவர்கூட்டு மனைவி’, ‘ஆடி விலைப்பட்ட தாதி’, ‘அடிமைச்சி’, ‘சீரிய மகளல்லள்’, ‘ஐவரைக் கலந்த தேவி’, என்றெல்லாம் இழித்துப்பேசியது துரியோதனனின் கூட்டம். கர்ணன் அவளை இழிவுபடுத்த அவள் துகிலைக் களையச் சொன்னான். இன்னும் என்னென்னவோ பேசினார்கள். யாருக்காக அவள் இவையனைத்தையும் பொறுத்துக் கொண்டாள்? தன் கணவர்களுக்காகவா? இல்லவேயில்லை! கிருஷ்ணன் அவளிடம் அன்று சொன்னனே, “உன் ஒருத்தியால் மட்டுமே க்ஷத்திரிய தர்மம் நிலைநிறுத்தப்படும்,” என்று. அவளால் மட்டுமே நடக்கவேண்டிய மாபெரும் செயலை, அவள் எப்படிச் செய்து முடிப்பாள் என்று விதியானது வேடிக்கை பார்த்துநிற்க, கிருஷ்ணன் எனும் உயிர்த்தோழமை தந்த தைரியத்தால் மட்டுமே அவள் அனைத்தையும் சாதித்து முடித்தாள் அல்லவோ! அவள் வரையில் அவள் பிறப்பும், திருமணமும், பட்ட துன்பங்களும், சகித்துக்கொண்ட அவமரியாதைகளும் அவள் செய்யவேண்டிய சாதனைக்கான படிக்கற்கள்.

தடங்கல்கள் ஏற்பட்டபோது தடுமாறினாளே தவிர, அவற்றைக் கடக்க கிருஷ்ணனின் தோழமை அவளுக்குக் கைகொடுத்தது.

இப்போது அவள் இந்திரப்பிரஸ்தத்தின் பட்டத்தரசி. குருக்ஷேத்திரப்போர் முடிந்து மெல்லமெல்ல நாட்டில் அமைதி தவழ ஆரம்பித்திருந்தது. பற்பல காரணங்களால், பாஞ்சாலியின் உள்ளம் அனவரதமும் அலைபாய்ந்தது; கொந்தளித்தது. இன்னும் அவ்வப்போது ஓடோடிச்சென்று துவாரகையில் கிருஷ்ணனைச் சந்தித்து அறிவுரை பெற்று வருவதில் தவறவில்லை. அவனது நட்பே அவளை இன்னும் உயிரோடும் வைத்திருக்கிறது.

*****

திரௌபதியின் ரதம் துவாரகையை அடைந்து விட்டது. துவாரகை அரசன் கிருஷ்ணனின் மாளிகை முகப்பில் நின்றது. ருக்மிணியும் பாமாவும் உப்பரிகையிலிருந்து அவள் வருகையைக் கண்டுவிட்டு ஓடோடி வருகிறார்கள். “வாருங்கள் அக்கா,” என ஆசையாக அணைத்துக் கொள்கிறாள் பாமா. “பிரயாணம் சௌகரியமாக இருந்ததா பாஞ்சாலி?” என அன்போடு அவள் கூந்தலை வருடியபடி கேட்ட ருக்மிணி அவளுடைய கம்பீரமான அழகைக் கண்களால் ஆசைதீரப் பருகினாள்.

“வா, கிருஷ்ணே! என்ன திடீர் விஜயம்?” எனக் குறும்புப் புன்னகையோடு வரவேற்றான் எல்லாம் அறிந்த பரந்தாமன். மெல்ல அசைந்துகொண்டிருந்ததொரு ஊஞ்சலில் அமர்ந்து கொண்டிருந்தான். வழக்கம்போல திரௌபதியின் நெஞ்சம் ஆனந்தத்தால் நிரம்பித் தளும்பியது. அவனைக் கண்டதும் உள்ளம் அடைந்த ஆசுவாசத்தில் முகம் விகசித்தது. “கிருஷ்ணா அண்ணா! நீ சௌக்கியமா?” என்று அன்புததும்பக் கேட்டவள், பின்னால் பணிப்பெண்கள் கொண்டுவந்த பழக்கூடைகளையும், பலகாரப் பாத்திரங்களையும் ஒரு பக்கமாக வைக்கச் சொன்னாள். வைத்தவர்கள் தங்கள் அரசியின் அடுத்த கட்டளைக்காக ஒருபுறமாக ஒதுங்கி நின்றனர்.

தானே பால்பாயசம் இருந்த வெள்ளிச் செம்பை எடுத்து, பாயசத்தை வெள்ளிக்கிண்ணத்தில் நிரப்பினாள் பாஞ்சாலி. ஊஞ்சலில் கிருஷ்ணன் அருகே வைத்தாள். தனது இடையில் செருகியிருந்த சின்ன பட்டுப்பையை எடுத்தாள்.

அதற்குள் ஒன்றும் பெரிதாக இல்லைதான். ஆனால் அவள்வரையில் அவள் தன்னுடைய ஆத்மநண்பனுக்காகக் கொண்டுவந்திருந்த காப்பு- ரட்சை அதற்குள் இருந்தது! பத்திரமாக வைத்திருந்த தனது கிழிந்த (கிழிக்கப்பட்ட எனலாமா?) பட்டுப்புடவையின் சரிகை இழைகளை கவனமாகப் பிரித்தெடுத்து அவற்றை முறுக்கி ஒரு அழகிய பின்னலாகப்பின்னி, இடையிடையே அழகான நல்முத்துக்களைச் சேர்த்துச் செய்த ஒரு ‘ராக்கி’ – ரட்சை, காப்பு – என்றெல்லாம் சொல்வார்கள். இத்தனை ஆண்டுகள் நட்பில் இப்போதுதான் முதல்முறையாக தன் நண்பன் கிருஷ்ணனுக்குக் (ரக்ஷாபந்தன்) காப்பு அணிவிக்கப் போகிறாள் அவள்!

ருக்மிணி, சத்யபாமையின் கண்கள் ஆச்சரியத்தில் பெரிதாக விரிந்தன. கிருஷ்ணன் ‘அறி’முறுவல்  பூத்தபடி அவள் செய்கைகளை நோக்கினான். தன்னிச்சையாகக் கையை நீட்டினான்.

“என் ஆத்ம நண்பனுக்கு, என்றென்றும் நீண்ட ஆயுள், சந்தோஷம் எல்லாம் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.” அவன் கையில் அழகான அந்த ரட்சையைக் கட்டினாள். கூடவே இருந்த சிமிழிலிருந்து சந்தனம், குங்குமத்தை அவன் நெற்றியில் திலகமாக அணிவித்தாள். பாயசக் கிண்ணத்தை எடுத்துக் கையில் கொடுத்துப் பருகச் சொன்னாள். “உனக்காக நானே தயாரித்தது கிருஷ்ணா, நன்றாக இருக்கிறதா?” என்று கேட்டபோது அவளுக்குத் தொண்டையை அடைத்தது. காலில் விழுந்து நமஸ்கரித்தாள். “என்னை ஆசிர்வதிப்பாய் கிருஷ்ணா,” என வேண்டினாள்.

“என்ன பாஞ்சாலி இது? புதியதாக இந்த வழக்கம்?” என்ற ருக்மிணியிடம் கிருஷ்ணன் பொருள்பொதிந்த பார்வையைப் பரிமாறிக் கொண்டான்.

“கிருஷ்ணா, உனக்குப் புரியும் அல்லவா?” என்று மெல்லக் கேட்டாள் திரௌபதி. கிருஷ்ணனுடைய முகத்தில் எப்போதும் போலப் புன்னகை தவழ்ந்தது.

oooOOOooo

 

 

 

 

ஆலமரம்

கார்த்திக் கிருபாகரன்

ஆத்தோரம் ஆலமரம் பல ஆண்டா வளர்ந்த மரம்!
ஓங்கி வளர்ந்து தழைத்து தொங்கும் விழுதுகள் நிறைந்த மரம்!
நீடித்த வெயில் அடிக்கயில் நிழல் தந்து காத்த மரம்!
பல புயல் வந்த போதும் களங்காம நின்ற மரம்!
பதினெட்டு பட்டி பஞ்சாயத்துக்கள் நடந்த மரம்!
பலரோட நினைவுகளை சுமந்து நிற்கிற மரம்!

இப்படி சொல்லிகிட்டே போனாலும்,மூன்று நாட்களா பெய்யுற மழை.மிகப் பெரிய சூறாவளி கரை கடந்து போயிருக்கு.அதனால் ‘எப்புடியும் ஆலமரம் சாஞ்சிருக்கும்னு’ ஊருக்குள்ள பேசிக்கிறதை கேட்குறப்ப வேம்பனுக்கு மனசு கவலையாவே இருந்தது.

சூறாவளி வந்து பல வீடு,கூரை,நிலம்,தோப்பு எல்லாம் சேதரமாகிருக்கு.ஆனாலும் அந்த ஊர் மக்களுக்கு ‘ஆலமரத்துக்கு என்னாச்சுகிற’ மனநிலை தான் இருந்தது.

இந்த ஆலமரத்தை வேரோட எடுக்க பல வருஷமா,பல பேர் முயற்சி பண்ணிட்டுதான் இருக்காங்க.அதில் ஐந்து வருஷத்துக்கு முன் ஆளும் கட்சி நான்கு வழி சாலை திட்டத்தை கொண்டு வந்தாங்க.ஊர் சுடலமுத்து எதிர்கட்சி எம்எல்ஏ வா இருந்தார்.
ஊர் மக்களோட சேர்ந்து கடுமையா போராடி ஆலமரத்தை வெட்ட விடாம பண்ணினார்.சாலை திட்டமும் வேறு காரணமா கிடப்பில் போயிடுச்சு. ஆனால் இப்ப ஆளும் கட்சி எம்எல்ஏவாகிட்டார்.
ஆலமரத்தை ஓட்டியே இருக்குற தொடக்கபள்ளிய மேல்நிலை பள்ளிய மாற்ற, 300 வருட பழமையான ஆலமரமத்தை அடியோட வெட்டி பள்ளிகூடம் கட்ட போறத சுடலமுத்து முடிவு பண்ணிருக்கார்.

இந்த செய்தி அந்த ஊர் மக்களுக்கு வருத்தமா இருந்தது. இந்த விஷயத்தால் ஊரில் பஞ்சாயத்து கூடினாங்க.

“ஆனா பள்ளி கொடம் தானே வர போகுது.புள்ளங்க படிப்பு தானே முக்கியம்னு” கிராம மக்கள் நிறைய பேர் மனசை தேத்திக்கிட்டாங்க.ஆனா சில பேரால அது மாதிரி மனசை தேத்திக்க முடியலை. ஏன்னா! இந்த ஆலமரத்தில் தான் எத்தனை எத்தனை பஞ்சாயத்து,தகராறு, சண்டை, கல்யாணம், காதுகுத்துன்னு சகலமும் நடந்து வந்துச்சு.

அந்த பஞ்சாயத்து கூட்டத்தில் வேம்பனும்,அவனோட நண்பர் கூட்டமும் கூட இருந்தாங்க.
பெரியவங்களிலிருந்து சின்னவங்க வரைக்கும் அந்த மரத்துகாக பஞ்சாயத்தில் கூடியிருந்தாங்க.

“அட நீ வேற வம்பு பண்ணாதீங்க.மரந்தானே! ஊருக்கு நல்லதுக்கு இழக்குறோம்ன்னு” சமாதானபடுத்தினார் ஊர் பஞ்சாயத்து தலைவர்.

“அய்யா,இந்த ஆலமரத்துனால தான் நம்ம ஊருக்கு ஆலமரத்துபட்டின்னு பேரு வந்துச்சு. இந்த ஆலமரத்தோட பெருமைய மத்த ஊர்காரர்களுக்கு சொல்லி பெருமைப்பட்டுக்குவோம்.இப்ப நம்ம ஊர் வரலாற்று சின்னத்தையே அழிக்கிற மாதிரி இருக்கு” என்று புரட்சியாளர் செந்தமிழ் வருத்தப்பட்டார்.

அந்த கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவர்களுக்கு செந்தமிழனின் பேச்சு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.மரத்துகாக பேசுறாருன்னு உறுதுணையா இந்த சிறுவர்களும் இருந்தாங்க.
ஏன்னா! பள்ளி முடிந்தவுடன் மாலையில் அந்த ஆல மரத்தின் விழுதுகளை பிடித்து நீண்ட நேரம் விளையாடி விட்டு, அதன்பின் தான் வீட்டிற்கு செல்வார்கள்.விடுமுறை நாட்களும் அந்த ஆலமரத்தடியில் தான் விளையாடுவார்கள்.

பஞ்சாயத்து தலைவருக்கும், செந்தமிழுக்குமான பேச்சு நீண்டு கொண்டே சென்றது முடிவில் “எம்எல்ஏ நம்ம ஊருக்கு நல்லதுதான் பண்ணுறாரு.பெரிய பள்ளிகூடம் நம்ம ஊருக்கு வர கூடாதுன்னு சொல்லாத” என்றார் தலைவர்.

“நான் பெரிய பள்ளி கொடம் வேணாம்னு சொல்லல.அத இப்ப இருக்குற தொடக்கபள்ளிக்கு பின்னால இருக்குற தரிசு இடத்துல கட்ட சொல்லி அரசாங்கத்துகிட்ட பேசுங்க.நல்லது பண்ணாறங்கன்னு நினைச்சு நம்ம வரலாற்றையும்,நினைவா இருக்குற மரத்தை அழிக்கிறத நான் அனுமதிக்கமாட்டேன்.நான் மட்டுமில்ல நம்ம ஊர் மக்களும் பொறுத்துகிட்டு பேசாம இருக்கமாட்டாங்க” என ஆவேசமாக செந்தமிழ் பேசினார்.
ஏதோ நடிகர் சினிமாவில் வசனம் பேசுறத பார்த்து ரசிக்கிற மாதிரி எல்லா சிறுவர்களும்,பெரியவர்களும் செந்தமிழ் பேசுவதை ரசித்தார்கள்.

“ஆமாப்பா,நம்ம தமிழ் சொல்லுறதுல ஒன்னும் தப்பில்லையே! நாம வளந்த மரம் அது” என்றார் ராசு மாமா.

“என் வயசு ஆளுக படிச்சது கூட ஆலமரத்தடியில் தான். அந்த காலத்துல டீச்சர் ஆலமரத்து அடியில் தான் எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தாங்க. அதெல்லாம் மறக்க முடியுமா!” என பல் இல்லாத பொக்கை வாயில் சிரத்தபடி நினைவை பகிர்ந்தார் வேலு தாத்தா.

“நம்ம ஊர் மக்கள் கருத்த தலைவர் அய்யா ஏத்துகனும்.நம்ம ஊர் ஓட்டுதானே அவர் எம்எல்ஏ ஆகிருக்காரு.நாம சொன்னா, செய்யமாட்டாரா!” என கூட்டத்தில் பாதி மக்கள் கூச்சலிட்டனர்.

“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆலமரத்த வெட்டகூடாதுன்னு போராடின எம்எல்ஏ.இப்ப ஏன் வெட்ட நினைக்கனும்.தொடக்கபள்ளி பின்னாடி இருக்குற தரிசு நிலத்த தனக்கு சொந்தமாக்க எதுவும் திட்டம் போடுறாரோ?” என்று விலங்கமான கேள்வியா கூட்டத்தில் செந்தமிழ் கேட்கவும்.எல்லாரும் அமைதியாகி யோசிச்சாங்க.

அதுவரை அமைதியா இருந்த தலைவர் எழுந்து,”எம்எல்ஏ என்ன திட்டம் பண்ணுறாருன்னு தெரியல. நான் தப்பு பண்ணிட்டேன். புள்ளைங்க படிப்புக்காகன்னு இப்படி நெனச்சேன். ஆனா நம்ம நினைவு அது. வெட்டகூடாது. வெட்டவும் உட மாட்டேன். என் புத்தியில படுற மாதிரி சொன்னீங்க. கண்டிப்பா நான் எம்எல்ஏ கிட்ட பேசுறேன் அந்த மரத்தை வெட்டாம பின்னாடி பக்கம் ஸ்கூல் கட்ட ஏற்பாடு பண்றேன்” என்றார் தலைவர்.

“நல்ல முடிவா எடுங்கன்னு” சொல்லி கூட்டம் கலைய ஆரம்பிச்சது.

செந்தமிழை பார்த்து மணி, “அண்ணே,மரத்த வெட்டமாட்டாங்கள்ல” என்றான்.

சிரித்தபடி நின்றார் செந்தமிழ்.

“அண்னே, எதாவது சொல்லுனே!” என்றான் சாமி.

“தம்பி, பஞ்சாயத்து தலைவர் எதிர்கட்சி.எம்எல்ஏ ஆளுங்கட்சி. அவங்க திட்டத்துக்கு இவங்க எதிர்பாங்க.அதனால மரத்த வெட்ட வாய்ப்பு கம்மிதான்”

“அப்போ,தலைவர் ஆளுங்கட்சி ஆகிட்டா?”

“இதே திட்டத்துக்காக மரத்த வெட்டுவாங்க”

குழப்பமா,” என்னனே,இது” என்றான் மணி.

“அதான் அரசியல்ப்பா”

வாயை பொத்திக்கொட்டு நமட்டு சிரிப்பு சிரித்து,”அண்ணே,நீ அரசியலுக்கு வந்து,தலைவராகி,இத தடுக்கலாம்ல”என்றான் வேம்பன்.

“நம்ம தாத்தா,அப்பா எல்லாம் 60 வருஷமா,மாத்தி,மாத்தி ஓட்டு போட்டு இவகிட்ட நாட்ட குடுத்திட்டாங்க.புதுசா,வந்து என்ன சொன்னாலும்,இவுகளுக்கு புரியாது.பட்டு திருந்தட்டும்” என்று சொல்லிவிட்டு செந்தமிழ் கிளம்பினார்.

பொழுது சாயும் நேரம் சிறுவர் கூட்டம் ஆலமரத்தடியில் கூடியது.

“மரத்த வெட்டாம இருக்க ஏதாவது செய்யணும்” என்று சிறுவர் கூட்டம் யோசிக்க ஆரம்பிச்சது.

“நாம செஞ்ச சின்ன புள்ளைங்க இதுல தலையிடாதீங்கன்னு நம்மள கொட்டி உட்கார வப்பாங்க. அதுக்காக நம்ம மரத்தை வெட்ட முடியுமா ?, நாம விளையாடுற மரம். இந்த மரத்தை எப்படியாவது காப்பாத்தணும் ஏதாவது வழி இருந்தா சொல்லுங்கன்னு” ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு யோசனை சொல்ல ஆரம்பிச்சாங்க. இருட்டவும் ஆரம்பிச்சது. அப்ப அங்கிருந்த வேலு தாத்தாக்கிட்ட யோசனை கேட்டாங்க.

பொக்க வாயில சிரித்தபடியே, “அந்த காலத்துல, நிறைய மரம் நட்டாங்க.அப்பறம், சில பேரு மரத்த வெட்ட ஆரம்பிச்சு,அதையே வியாபாரம் பண்ணாங்க. அப்போ, மரத்த காப்பாத்த,நாங்கெல்லாம் புள்ளையார் சிலை,சூலம்,மஞ்ச துணின்னு மரத்துல கட்டி விடுவோம்.சாமி இருக்குற மரம்னு யாரும் வெட்ட மாட்டாங்க. பயபுடுவாங்க.இப்புடிதான் மரத்த காப்பாத்தினோம்” என்றார்.

அப்போ வேம்புக்கு ஒரு யோசனை தோணுச்சு. “டே,எனக்கு ஒரு யோசனை தோணுது. நாம எல்லாரும் அய்யனார் கோயிலுக்கு போலாம் வாங்க” அப்படின்னு சொல்லி அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து அய்யனார் கோயிலுக்கு வந்தாங்க. சுத்தி முத்தி பாத்தாங்க யாருமே இல்லை. அய்யனார் சாமிகிட்ட வேண்டிக்கிட்டு. அங்க இருக்க ஒரு அரிவாளை பிடுங்குனான் வேம்பு.அந்த அரிவாளை தூக்க முடியாம தூக்கிட்டு நின்னான். எல்லாருக்கும் பயம் வர ஆரம்பிச்சது. “டேய் எதுக்குடா அரிவாள புடுங்குனன்னு” பயந்தான் மணி. “எல்லாம் ஒரு காரணமாத்தான்” அப்படின்னு சொல்லிட்டு, அத தூக்கிட்டு ஆலமரத்துக்கு வந்து, சுத்திமுத்தி பார்த்து ஆலமரத்து கீழ குத்தி வச்சான்.மஞ்ச துணி எடுத்து மரத்துல கட்டி விட்டான்.வேம்பு செய்றது மத்தவங்களுக்கு புரிந்தது.

எல்லாம் முடிச்சு,”டேய் யார் எது கேட்டாலும் எதுவும் தெரியாத மாதிரியே இருங்க” என்றான் வேம்பன்.

“அரிவாள குத்துனா,யாரும் எதுவும் பண்ணமாட்டங்களா ?”

“செய்யமாட்டாங்க.வேலு தாத்தா சொன்ன மாதிரி சாமி மரம்னு வெட்ட மாட்டாங்க.சாமி ஊர காப்பாத்துற மாதிரி,மரத்தையும் காப்பாத்தும்” என்றான் வேம்பன்.

“எப்படியோ,மரத்த காப்பாத்திடலாம்னு” நினைச்சு எல்லா சிறுவர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டு அரிவாளை கும்புட்டு,அங்கிருந்து கிளம்புனாங்க.

இரவு பொழுதிலே தென்மேற்கு பருவமழை சூறாவளியாய் சுழன்று வந்தது. பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்தது. சூறாவளி சுழன்று அடித்தது.மூன்று நாட்கள் தொடர்ந்தது.வீட்டை விட்டு வெளி வரமுடியாத சூழல் நிலவியது.ஆனால் ‘ஆலமரம் சாய போகுதுன்னு” பேச்சு ஊருக்குள்ள உலாவுச்சு.

“அம்மா ஆலமரம் சாஞ்சிருமா ?” என்றான் வேம்பன்.

“25 வருஷத்துக்கு முன்ன இப்புடிதான் சூறாவளி வந்து,மரத்த சாய்க்க பாத்துச்சு. ஆனா சாயல. அதுமாதிரி இப்பவும் சாயாது” என்றாள்.

ஆனால் இன்று உலா வரும் செய்தி பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

சூறாவளி வேகத்தால் தாக்குப் பிடிக்க முடியாத இந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. கிராமங்களில் ஆற்று நீர் உட்புகுந்து, பல வீடுகளும் சேதமானது.

“ஆலமரம் விழுந்துருச்சு” என்ற தகவல் ஊர்முழுக்க பரவியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊரே ஓடிவந்தது. கீழே விழுந்து கிடந்த மரத்தை கட்டிக் கொண்டு மக்கள் அழுதனர். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வகையில் ஆலமரம் பல நிகழ்வுகளை தந்ததை நினைத்து நினைத்து கதறினர். வேம்பன்,மணி என சிறுவர்கள் கூட்டம் நிலைக்குலைந்து கண்ணீர் வடித்தார்கள். ஊன்றி வைத்த அய்யனார் அரிவாள் சரிந்து கிடந்த இடத்தில் மண்டி போட்டு “மரத்த ஏன் காப்பாத்தலன்னு” அழுதான் மணி.

சிகரெட்

அழகியசிங்கர்

மார்ச்சு மாதத்திலிருந்துதான் சாம்பசிவன் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தான். அதற்கு முன் அவனுக்கு அந்தப் பழக்கமில்லை. அவன் பார்த்த வேலையிலிருந்து பிப்ரவரி மாதம் பணிமூப்பு அடைந்திருந்தான்.

மார்ச்சு மாதம் அவன் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவனுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் போலிருந்தது. அதற்குக் காரணம் இருக்கிறது.

அவன் பணிமூப்பு அடைந்ததால் இனிமேல் அடுத்த நாளிலிருந்து வேலைக்குப் போக வேண்டாமென்று நினைப்பு அவனுக்குப் பிடிக்கவில்லை.

காலையில் பரபரப்பாக அலுவலகம் போவதற்குக் கிளம்பிப்போக வேண்டாமென்று நினைக்கும்போது அவனுக்கு என்னமோ மாதிரி இருந்தது.

எதையோ பறிகொடுத்த நிலைக்குப் போனதாக நினைத்தான்.

அப்போதுதான் அவன் நடராஜனைக் கவனிக்க ஆரம்பித்தான்.

காலையில் ஒரு சிகரெட் பிடிக்காமலிருக்க நடராஜனால் முடியாது. நடராஜனும் அவனும் தினமும் நடைப்பயிற்சி செய்வார்கள்.

நடக்கும்போது ஒரு இடத்திலிருந்த பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கிப் பிடிப்பான். சிகரெட்டுக்கு கணக்கு வைத்திருந்தான் நடராஜன் .அன்றிலிருந்து தற்செயலாக நடராஜனுடன் சாம்பசிவனும் அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்.

அன்று மார்ச்சு ஒன்றாம் தேதி.
அன்றிலிருந்து அவனால் அதை விட முடியவில்லை. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு இருந்த பழக்கம் பாக்கெட் பாக்கெட்டாக தொடர்கிறது.

இது என்னடா சனி ஏன் விடமுடியவில்லை என்று அவனையே அவன் நொந்து கொண்டான்.

அவன் சிகரெட் பிடிக்கிற நாளிலிருந்து அவள் மனைவிக்குப் பிடிக்கவில்லை.

திருமணம் ஆகி 30 வருடம் ஆகிறது. ஆனால் ஒரு குறை இரண்டு பேருக்கும் குழந்தை பிறக்கவில்லை. அந்த ஆத்திரமே அவனுக்கு அதிகமாகத் தெரியும்.

மனைவியின் இயலாமையா அவனுடைய இயலாமையா?

இப்போது சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது எப்படி?

சாம்பசிவனுக்குக் குழப்பமாகவே இருந்தது. சிகரெட் பிடிக்க ஆரம்பித்து அவனுக்கு ஒரு வருடம் அனுபவம் கிடைத்து விட்டது. பென்சன் பணத்தில் பெரும்பகுதி சிகரெட் சிகரெட் சிகரெட்.

ஒருநாள் அவன் தூக்கத்தில் அவன் சிகரெட்பிடித்துக் கொண்டிருக்கும்போது அவன் படுத்திருக்கும் படுக்கையெல்லாம் எரிந்து போவதுபோல் கனவு. அவன் திடுக்கிட்டு விழித்தான்.

அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த மனைவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

அன்று நடைப்பயிற்சியின் போது வழக்கமாக நடராஜனுடன் அந்த முனைக் கடையில் சிகரெட் வாங்கும் போது சாம்பசிவன் சிகரெட் வேண்டாமென்று மறுத்து விட்டான். நடராஜனுக்கு ஆச்சரியம்.

வீட்டிற்கு வரும்போதும் அவன் சிகரெட் வாங்கவில்லை. அவன் மனைவிக்கும் ஆச்சரியம். அவன் எப்போதும் சாப்பிடும்போது சிகரெட் பிடிப்பது வழக்கம்.

அதுமாதிரி அவன் செய்யவில்லை என்பதால் ஏன் சிகரெட் பிடிக்கவில்லை என்று மனைவி கேட்டாள்.

அவன் பதில் சொல்லவில்லை.

அன்று முழுவதும் அவன் கலக்கத்துடன் இருந்தான். இரவு நேரம் தூங்கும்போது; அவன் சிகரெட் பிடிக்கவில்லை.

அவன் எதாவது புத்தகம் படிக்கும்போதுதான் சிகரெட் பிடித்துக்
கொண்டிருப்பான்.

அன்று புத்தகம் படித்தும் சிகரெட் பிடிக்கவில்லை.

அடுத்தநாள் காலை எழுந்தவுடன் அவன் சிகரெட்டை நாடிப் போனான்.

 

பக்கோடா

வேல்விழி மோகன்

பல்லைக் குத்திக்கொண்டிருந்த வம்சி ஆடுகளை ஒரு கவனிப்பு கவனித்தார். மலையோரம் சற்று சரிவாக அந்த ஆடுகள் புற்களை மேய்ந்துக்கொண்டிருந்தது. கீழே சற்று தள்ளி சிறிய ஓடை. தண்ணீர் குறைந்து மேலாக்க ஓடிக்கொண்டிருந்தது. வேப்ப மரத்தடியில் அருணா தனியாக கல்லாட்டம் ஆடிக்கொண்டிருந்தாள்.

இரண்டு ஆடுகள் ஒன்றுக்கொன்று முட்டிக்கொண்டிருந்தன. சந்தைக்கு போகும் வண்டிகள் பாலத்தின் திருப்பத்தில் சத்தம் போட்டுப் போனது. ஒரு பக்கம் கனிந்து வரிசையாக இருக்கும் மாந்தோப்புகள். நடுநடுவே அகல வயல்களில் மாடுகள் தென்பட்டது… அவ்வபோது கேட்கும் மலையாடுகளின் சத்தம். வெயில் உரைத்து கன்னத்தில் சுட்டது. தலைக்கு துண்டு கட்டியிருந்தாலும் தலை வழியாக சூடு உடலில் பரவி தண்ணீர் தேவைப்பட்டுக் கொண்டேயிருந்தது.

“பாப்பா. “ என்றார். கைகளில் சொரிந்துக்கொண்டார். கொஞ்சம் ஒதுங்கி இவரைப் பார்த்த ஆட்டைப் பார்த்து. “போடா செல்லம். அந்தாப்ல போ. புல்லு மேயறதைப் பாரு. என்கிட்ட என்ன சோலி. ?”

அது அருகில் வந்துப் படுத்துக்க கொண்டது. கொஞ்சம் தடவிக் கொடுத்தார்.  “உன்னைய இந்த வாரம் வித்திருவேன். “ என்றவர் “பாப்பா” என்றார் மறுபடியும்.

;என்னத் தாத்தா. ?;” அருணா  திரும்பிப் பார்க்காமல் “தாத்தா. எங்க அந்தண்ணனைக் காணோம்.? “ என்றாள்.

“பக்கோடாவா.? வருவான். எங்கிட்டாவது தின்னுக்கிட்டிருப்பான். இல்லன்னா வேல செஞ்சுக்கிட்டிருப்பான். கொஞ்சம் தண்ணி வேணும் பாப்பா. “

“இதா வந்தர்றேன். “ அருணா தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தாள்.  அவளுக்கு இந்தக் கல்லாட்டம் புடிக்கும். முதலில் வீட்டருகே கீதா. ராசு. தம்பிப் பய இவர்களோடு விளையாடுவாள். தாத்தா கூட வரும்போது அவரே விளையாடுவார். ஆனால் தாத்தா விளையாடுவது இவளுக்கு பிடிக்கவில்லை. “நீ எனக்கு உட்டுத்தர்றே தாத்தா. போ. இனிமே நானே விளையாடிக்கறேன். “

வெயில். மழை என்றெல்லாம் இல்லை. கல்லாட்டம். ஒன்னு. ரண்டு. மூணு. “தாத்தா. இங்கன பாரு . எல்லாக் கல்லையும் புடுச்சுட்டேன். “

தனியாக விளையாடுவது பழகிவிட்டது. ஏதாவது ஒரு மரத்தடியில் கற்களோடு பேசியபடி இரண்டு காலையும் விரித்தபடி விளையாடுவாள். அப்படியே தூங்கி விடுவாள். ஒன்பது வயதிருக்கலாம். நான்காவது படிக்கிறாள். நன்றாக வாசிப்பாள். சுலோச்சனா டீச்சரைப் பிடிக்கும். கோயிந்து பெட்டிக்கடையில் கமர்கட்டு பிடிக்கும். பெரிய வீட்டு நாய் பிடிக்கும். அப்பா அம்மாவைக் கொஞ்சினால் பிடிக்கும். பள்ளிக்கூடத்தை விட்டு முதலில் ஓடிவருவது பிடிக்கும். முக்கியமாக அந்த பக்கோடாவைப் பிடிக்கும்.

“அண்ணே. உங்கப்பேரு பக்கோடாதானா…?”

“உகும்,, கம்சன்”

“கம்சனா.?”

“ஆமா. கம்சன். எனக்கு கம்சன் கத தெரியும். ஆனா கம்சனை எனக்குப் புடிக்கும். “

“நீ ஏன் படிக்கல.?”

“எங்கப்பா சின்ன வயசுலேயே செத்துட்டார். எங்கம்மா என்னைய வேலைக்கு அனுப்புச்சுட்டாங்க. ;

“இங்கெல்லாம் எங்கப் பாத்தாலும் நீதான் இருக்க.”

“எனக்கு ஆட்டுப் பாழையெல்லாம் தெரியும். மனசுக்குள்ள என்ன நினைக்குதுன்னு தெரியும். அதை கசாப்புக்கு அனுப்பறது எனக்குப் புடிக்காது. ஆட்டுக்கு நம்மை புடிச்சுடுச்சுன்னா நம்மளோடப் பேசும். நம்ம மடியில வந்து படுத்துக்கும். “

அவன் அப்படித்தான் நடந்துக்கொள்வான். திடீரென்று கனைப்பான். ஆடு நின்று அவனைக் கவனிக்கும். அது அவளுக்குப் பிடித்திருந்தது. எங்கு மேய்க்க வேண்டும். எங்கு மேய்க்கக் கூடாது என்றெல்லாம் தெரிந்து வைத்திருந்தான். முதுகில் ஒரு பையை தொங்க வைத்திருப்பான்.

“அதுல என்ன இருக்குது.?”

“தண்ணி. கம்பங்கஞ்சி. ஊறுகா. அப்புறம் சிவாஜி பாட்டுப் புத்தகம்.”

“சிவாஜியா.?”

“இல்ல பாப்பா. சிவாஜி கணேசன். எனக்கு கம்சன புடிக்குமுன்னு சொன்னேன் இல்லையா… அதே மாதிரி சிவாஜியையும் புடிக்கும். சிவாஜி பாடுன எல்லாப் பாட்டும் எனக்குப் புடிக்கும். சட்டி சுட்டதடா. கை விட்டதடா. “

கல்லாட்டம் அதன் பிறகு அவனைப் பிடித்திருந்தது அவளுக்கு. தாத்தாவுடன் எப்போதாவது கூட வருகிறவள் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வருவாள்.

“சிவாஜி மாதிரி நடுச்சுக் காட்டுட்டா.?”

“அதெல்லாம் தெரியுமா உனக்கு.?”

“அவரு நடிகருத் திலகமில்ல. “ கொஞ்சம் தள்ளி நின்றுக்கொண்டு நடந்துக் காட்டினான். “என்ன செஞ்ச?” என்றாள்

“இப்படித்தான் நடப்பாரு சிவாஜி”

“ஏதாவது பேசிக் காட்டு”

“உகும். அதெல்லாம் தெரியாது. ஆனா நடக்கத் தெரியும். திருவிளையாடல்ல இப்படித்தான் நடப்பாரு.”

அஙளுக்கு அவன் கூட இருந்தால் நேரம் போவது தெரியாது. கல்லாட்டம் கற்றுக் கொடுத்தாள். அவனுக்கு அது பிடிபடவில்லை. “எனக்கு விளையாட்டுன்னா ஜில்லிதான் புடிக்கும் .” என்றான்.

“ஜில்லி இல்லை. கில்லி. “

“சரி வச்சுக்கோ. அப்புறம் பம்பரம். உனக்கு கோலி விளையாடத் தெரியுமா.?”

“உகும்.”

“கத்துத் தர்றேன். எங்கப்பாதான் கத்துக் கொடுத்தாரு. அவரு நல்லா வெளையாடுவாரு. தெருவுல சிரிப்பாங்க.,,. எங்கப்பா என்னைய ஈஸியா ஜெயிப்பாரு. எங்கம்மா சிரிப்பாங்க. “

வம்சி திரும்ப பேத்தியைப் பார்த்தார். அவள் சுவாரஸ்யமாக கல்லாட்டத்தில்  இருந்தாள். சிரித்தபடி எழுந்து அவளருகில் சென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு அருகில் மரத்தின் கிளையில் மாட்டியிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்கும்போது.”தாத்தா. என்னப்பா இன்னும் அண்ணனைக் காணோம்.? “ என்றாள்.

“அதான் தெரியலையேம்மா.”

“தாத்தா. அங்கப் பாரு.”

ஒரு மேட்டில் பக்கோடா தெரிந்தான். முதுகில் பையெலெலாம் இல்லை… தள்ளாடுவது தெரிந்தது. நான்கடிகள் வைத்து கொஞ்சம் சரிந்து கீழே விழுந்தான்.

0000

பக்கோடா மூக்கிலிருந்து ரத்தம். கைகளில் சிராய்ப்புகள். “அச்சுட்டாங்க. அச்சுட்டாங்க. “ என்றான். சட்டையெல்லாம் கிழிந்திருந்தது.அருணா “அண்ணா. அண்ணா. “ என்று அழுதாள்.

வம்சி கிழிந்திருந்த அவன் சட்டையை கழட்டினார். இரத்தத்தை துடைத்தார்.  கண்கள் கிறங்கி வெயிலுக்கு திறக்க முடியாமல் இறுக்கமாக மூடியபடி “அச்சுட்டாங்க. பெருசு.” என்றான்.

“நாசாமா போனவங்க. அவங்க நல்லாவே இருக்கமாட்டாங்க.”

பெரியவர்.”யாரு பாப்பா.?”

“அவங்கதான். இவனை அடுச்சவங்க. தாத்தா. தூக்கு. தூக்கு. மரத்துக்கிட்ட போய்டலாம். “

பக்கோடா.”பாப்பா. நான் உன்னதான் பாக்க வந்தேன். அச்சுட்டாங்க.”

அருணா அவன் கால்களை புடித்துக்கொண்டாள். வம்சி அவனை தூக்கிக்கொண்டு மரத்திடம் நகர்ந்தார்.ஒரு கருப்பாடு திரும்பிப் பார்த்து “மே. மே. “ என்றது.

“அது என்னை விசாரிக்குது.”

பெரியவர்.”சும்மா இர்றா. என்னடா ஆச்சுது.?.”

“அச்சுட்டாங்க.”

“அதான்டா. என்ன ஆச்சுது.?”

““கஞ்சித்தண்ணி இல்லன்னுட்டாங்க. ஆட்டை பத்திட்டு போமாட்டேன்னு சொல்லிட்டேன். அந்த தடியன் இருக்கான் பாரு . “

“யாரு. அவம் மகனா.?”

“இல்ல. எப்பப் பாரு திண்ணைல உக்காந்திட்டு தின்னுக்கிட்டு இருப்பானே. அந்த பெரிசு நாய்.”

“ஓ. துண்டுக்காரா.?”

“ஆமாமா. ஓடிவந்து என்னைய புடிச்சு கீழ தள்ளி மூக்கு மேல குத்திட்டான். என் சட்டைய கிழிச்சு  .” உதடுகளை கோணிக்கொண்டான். இன்னொரு ஆடு பக்கத்தில் வந்தது. அருணா அவன் கால்களை தடவினாள். “தாத்தா. அவனுங்கள விடாத தாத்தா. போய் சண்டப் போடு தாத்தா. “

“அப்புடி செய்ய முடியாது. “ தாத்தா அவனை கீழே கிடத்தினார். சட்டையை நனைத்து அவன் மூக்கைத் துடைத்தார். இவன் கண்களைத் திறந்து வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். சலிப்பாக இருந்தது. களைப்பாக இருந்தது.  “பெருசு. ஏதாவது வச்சிருக்கியா.?” என்றவன் அருகிலிருந்த ஆட்டை “ஏ. போ. “ என்றான்.

அருணா .”களியும் வெண்டக்கா கொழம்பும். தாத்தா . எடு. எடு.”

“வேணாம்  . எனக்கு கஞ்சித் தண்ணி வேணும்.”

பெருசு “கஞ்சிக்கு செத்த பயம்மா இவன்.”

“தாத்தா. எல்லாத்தையும் குச்சுட்டியா.?”

“கொஞ்சமா இருக்கும். எடும்மா அந்த பாட்டலை. “ அடியில் கொஞ்சம் கம்பங்கஞ்சி இருந்தது. சரிவாக சரிந்து உறிஞ்சுக் குடிக்கும்போது. “எங்கப்பா இருந்தா. ம். அவனுங்கள. “ என்று உறுமினான்.

அருணா அழுதாள். அவன் அவளை முழுமையாகப் பார்த்து “ஏய். அழாத. அழாத. ஆனாப் பெருசு. அங்க இருக்கனுவங்கெல்லாம் வேடிக்க பாத்தானுங்க பெருசு. எனக்கு அதெல்லாம் கூட இல்ல. எவனோ ஒருத்தன் எங்கம்மாவ தப்பாப் பேசினான் பெருசு. கத்தி எடுத்து ஒரு கீறு கீறனும்னு தோணுச்சு. “

பெரியவர்.” அடக்கி வாசி. அவனுங்கெல்லாம் சரியில்லை. நம்மள மாதிரி சொந்தமா ஆடு வளக்கறதுக்கு பாரு. “

“எங்க போறது சொந்த ஆட்டுக்கு.?”

அருணா. “தாத்தா. ரண்டு ஆட்டைக் கொடுத்துடு. “

“கொடுத்துடலாம். ஒரு குட்டிய தர்றேன். பத்திட்டு வளக்கறதுக்குப் பாரு. பொட்டக் குட்டி.வளந்து குட்டிப் போடும்போது எனக்கு ஒன்ன திருப்பித் தந்துடு.”

பக்கத்தில் ஆளரவம் கேட்டது. பக்கோடாவின் கூட்டாளி தலைக்கு உருமா கட்டிக்கொண்டு அகலக் கால் வைத்து வந்தான். முகத்தில் இறுக்கமாக கிட்ட வந்ததும் “பஞ்சாயத்துக்கு வரச்சொல்றாங்க. உங்கம்மாவை பஞ்சாயத்துல நிக்க வச்சுட்டாங்க. வாடா போலாம். “

0000

சுமார் பத்து நபர்கள் இருந்தார்கள்… இரண்டு. மூன்று பெண்கள். எதிர்க் கடையில் பத்து. பதினைந்து நபர்கள். பக்கோடாவின் அம்மா ஒரு ஓரமாக தனியாக குந்தியிருந்தாள். ஒரு மூலையிலிருந்த தென்னை மரத்திலிருந்து குயில் கத்தியது. பக்கோடா வேகவேகமாக வந்தவன் அம்மாவின் அருகில் போய் உட்கார்ந்துக் கொண்டான்.

துண்டுக்காரர் “பய நம்ம புள்ளதான். இன்னிக்கு என்னவோ புத்தி சரியில்ல. “ என்று சிரித்தார்.

“தூக்கிப் போட்டு மிதிச்சா சரியாப்போடும்.” என்றான் ஒருத்தன். இரண்டுப் பெரியவர்கள் “ஏண்டா. வேல செய்யற எடத்துல இப்படியா நடந்துக்கவ.;?”

இவன் அம்மா.”எம் பையன உட்டுருங்க. அறியாத புள்ள.”

“தடிமாடு மாதிரி இருந்துக்கிட்டு.”

“இருந்துட்டுப் போகட்டும். கஞ்சிதானே கேட்டான். அதுக்கு இப்படியா.?”

“அப்படித்தான். ஏ. இங்கப்பாரு. எனக்கு இவன் இல்லன்னா வேற ஒருத்தன். எப்படி பங்கஜம்.?” என்றது துண்டு.

“உக்கும். “ என்றாள் ஒருத்தி.

ஒரு பெருசு. “ஏம்பா. நம்ம பையப்பா. அப்பா. இல்லாதவன். வுட்டுடுங்க. இனிமேல இந்த மாதிரி செய்யாத தம்பி. “

“கஞ்சியாலதானே இந்தப் பிரச்சினை. ஒரு வருஷமா இருக்கான். ஏதாவது எடக்கு மடக்கு நடந்திருக்குதா.?”

துண்டு “அட. வாரத்துக்கு ஒரு நாளு இப்புடித்தான் நடக்கும். பயபுள்ளய சமாளிச்சு அனுப்புவோம். இன்னிக்கு ஆட்டைய பத்திட்டு போகமாட்டேன்னு போயே போயிட்டான்.
“என்னடா சொல்ற.?” என்றது ஒரு பெரிசு.

வம்சி இடையில் புகுந்தார். “ஆடு பத்திட்டு போகாதது தப்புதான். அவனுக்கு கஞ்சி கொடுக்காததும் தப்புதான். இன்னிக்கு ஆயிருச்சு. நாளையிலிருந்து இந்த மாதிரி வேணாம். என்னடா சொல்ற ?”

அருணா தாத்தாவின் மடியில் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு கூனிக்குறுகி உட்கார்ந்திருந்த பக்கோடாவின் அம்மாவைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. மெலிந்து. கண்கள் உள்வாங்கி. ஒரு பக்கம் புடவை கிழிந்திருந்தது. தரையில் கோடு போட்டுக்கொண்டிருந்தாள். இடுப்பில் வெத்தலைப் பை. தலைமுடி கலைந்து வெள்ளை முடிகள் காற்றில் ஆடியது. கைகளில் தளர்ச்சி தெரிந்து சுருக்கங்களை கோடுகளாக காட்டியது

டீக்கடையிலிருந்து ஒருத்தன் கத்தினான். “அவன் ஆடுங்களைப் பத்தலைன்னா அவங்கம்மா இனிமே பத்திட்டுப் போட்டும். “

துண்டு “ஆமாமா. “ என்று பல்லைக் காட்டியது.

பக்கோடா திரும்ப குரல் விட்டான்.”ஏன். உங்கம்மாவை அனுப்பு ஆடுங்களை பத்தறதுக்கு. “

“என்னடா சொன்ன. ?” கடையிலிருந்து இரண்டுப் பேர் ஓடி வந்தார்கள். வம்சி சட்டென்று எழுந்து “ஏம்பா. இருங்க. இருங்க.”

அருணா பயந்துப்போய் தாத்தாவைக் கட்டிக்கொள்ள துண்டு “என்ன தைரியம் இருந்தா அவங்கம்மாவைப் பத்திப் பேசுவ.?.”

“அப்புடின்னா உங்கம்மாவை அனுப்பு.” ஓடிவந்த இரண்டுப் பேரில் ஒருத்தன் நேராக பக்கோடா மீது விழப்போய் சரிந்து வேறுப் பக்கம் முட்டிக்கொண்டான்… பக்கோடா அம்மா.”டேய். ஓடிர்றா. ஓடிர்றா. “என்று அவனை அனைத்துக்கொள்ள அவன் திமிறி விடுபட்டு இன்னொருத்தனின் கால்களைப் பார்த்து உதைத்தான்.

துண்டுக்காரர் தன்னுடைய பெரிய மகனிடம் “போய் சாத்துடா அவன. உங்கம்மாவ பத்திப் பேசறான். வெக்கமில்லாம பாத்துக்கிட்டு.”

பக்கோடா அம்மாவைத் தள்ளிக்கொண்டு “தாத்தா. கூட்டிக்கிட்டு போங்க எங்கம்மாவ.” என்றவன் சட்டைக்குள்ளிருந்து கத்தியை உருவினான். நீளமாக கருத்துப்போய் கூர் நீட்டிக்கொண்டிருந்தது. “வாங்கடா. ஆம்பளையா இருந்தா வாங்கடா டேய்.ய்.”

அருணாவுக்கு சிரிப்பு வந்தது. கிட்டே நெருங்கியவர்கள் தயங்க. பக்கோடாவின் கூட்டாளி இன்னும் இரண்டு பேருடன் வந்தான். “கிட்ட வந்தாங்கன்னா தலய சீவிடு பக்கோடா. “

அருணா கலகலவென்று சிரித்தாள். கத்தியை ஓங்கி தனியே அம்மாவின் கைகளை பிடித்துக்கொண்டு “வாங்கடா. “ என்றவனை பார்த்து தரையில் குதித்து ஆடினாள். வம்சி அவளைத் தூக்கிக்கொண்டு “சும்மாரு. சும்மாரு. ஏம்மா. வா இப்படி.” பக்கோடாவின் அம்மாவை தள்ளிக்கொண்டு வெளியேறினார். அவள் “எம் பையன் அவங்க அப்பா மாதிரியே. ஊரே பயந்துச்சுள்ள. “

பக்கோடா கத்தியை இறக்கவில்லை. துண்டு “டேய். புடிங்கடா அவன.”

பக்கோடா சுற்றிலும் திரும்பி “வாங்கடா. வாங்கடா. “

“எம்மாந் தைரியம்.”

“வாங்கடா டேய். இன்னிக்கு வெட்டிட்டுதாண்டா போகப்போறேன்.”

அருணா திரும்பிப் பார்த்தாள். கிட்டே வந்த ஒருத்தனின் இடதுக் கையை பார்த்து பக்கோடாவின் கத்தி இறங்கியது தெரிந்தது.

0000

வெயில் நெற்றியில் வியர்வையை வரவழைத்தது. புங்க மரத்தின் இலைகள் ஆடாமல் வெறுமனே இருந்தது. நிழல் சற்றுத் தள்ளி ஒரு சரிவாக விழுந்திருக்க நான்கைந்து ஆடுகள் திடீரென்று ஒன்றுக்கொன்று முட்டிக்கொண்டது. அந்த மலையின் சரிவில் பச்சைப்புற்களுக்கு நடுவே ஆடுகளின் தலைகள் தென்பட்டது.  ஒற்றையாக அங்கங்கே பனை மரங்கள். உச்சியில் இருந்த கோயிலின் வெளிப்புறம் ஒரு மாடு கத்தியது.  அருணா தாத்தாவின் மடியில் படுத்துக்கொண்டு கற்களை உருட்டிக்கொண்டிருந்தாள்.

“தாத்தா. அண்ணா எப்ப வரும்.?”

வம்சி  வெறுமையாக அருகிலிருந்த ஆட்டின் கால்களைப் பார்த்தவாறு.”வந்திடுவான். “

“மூணு நாள் ஆச்சுது தாத்தா.”

“அவன் ஒருத்தன வெட்டிட்டான் இல்லையா. போலிஸ் தேடுது. எங்கையோ ஓடிட்டான். “

“பாவம் அவன். “

“அவங்கம்மா கூடத்தான். “

“தாத்தா. அண்ணா வந்திருமா. ?”

“வருவான்.  ஆனா போலிஸ் வுடாது. அவனய பத்தி இனிமே பேசாத பாப்பா. அவன் சரியில்லை. கத்திய தூக்கிட்டான். அப்படி செஞ்சிருக்கக் கூடாது. “

அருணா சிரித்தாள். “தாத்தா. அண்ணனுக்கு தைரியம் அதிகம்,, எம்புட்டு தைரியம். கூட்டமே அப்படியே பயந்துருச்சு. ஒருத்தன் வெளிய ஓடிட்டான். பாத்தியா தாத்தா. பயம். யாரைத் தாத்தா அண்ணன் வெட்டினது.?”

“அந்த துண்டுக்காரர் பையனை. வுடமாட்டாங்க. பெரிய எடம் அது.  ஆனா காயத்தோட போயிடுச்சு. இல்லன்னா கொல கேஸாயிருக்கும். நீ எழுந்திரு. வெயில் அதிகமாயிருக்குது. தள்ளி உக்காருவோம். “

ஆடுகள் சட்டென்று ஒரு பக்கமாக தலையை திருப்பியது. இரண்டு ஆடுகள் ஒரு மாதிரி கனைத்தது. ஒரு பக்கமாக வேல மரங்கள் அடர்ந்த காட்டு வழியாக ஒன்று நடந்துப் போய் நின்று எங்கேயோ பார்த்தது. கூடவே இன்னும் இரண்டு ஆடுகள் சேர்ந்தது. வம்சி அவளை சற்று தள்ளி ஒரு கோணியின் மீது படுக்கவைத்துவிட்டு “வர்றேன். இரு. “ என்று நகர்ந்தார். வேல மரங்களை ஒட்டி ஏரி. தண்ணீர் இல்லை. ஆனால் அடர்ந்து வேல மரங்களின் இலையுதிர்வில் இடுக்குகளாக காட்சியளித்தது.  நடுநடுவே ஆங்காங்கே தென்பட்ட வெறுமையில் மாடுகள் நின்றுக்கொண்டிருந்தன. குட்டையும் நெட்டையுமான மரங்களுக்கு நடுவே ஒற்றையடிப் பாதைகள் பிரிவதும் சேர்வதுமாக இருந்தது. ஆடுகள் நிமிர்ந்துப் பார்ப்பதைத் தவிர்த்து மறுபடியும் மேய ஆரம்பித்தது. தூரத்தே கைகளில் குச்சிகளோடு ஒன்றிரண்டு நபர்கள் தெரிந்தார்கள். உச்சியில் அந்த கோவிலருகே யாறோ வந்துப் போன மாதிரி தோன்றியது. உற்றுப் பார்த்தார். அவர் பார்க்கும்போதே அவருடன் இருந்த இரண்டு ஆடுகளும் அவ்வாறேப் பார்த்தது. அங்கிருந்து சற்றுத் தள்ளி ஒன்றிரண்டு மாடுகள் இருந்தன. கோவிலின் அருகே சிறியதாக தெரிந்த வேப்பமரத்தின் உச்சியில் இலைகள் ஆடுவது தெரிந்தது.

அவர் நகர்ந்து அருணாவிடம் வந்தார். அவள் “என்னத் தாத்தா.?” என்றாள்.

அவன் இங்கதான் காட்டுக்குள்ளதான் இருக்கான் போல. எமகாதகப் பய.” என்றார்.

“அண்ணனா.?”

“ஆமா.”

“இருக்காது தாத்தா. அண்ணன் எங்கோ போய்டுச்சி. பாவம். சாப்பாட்டுக்கெல்லாம் என்ன செய்யுதோ.  “

“வூட்டுக்கு போனப் பெறகு அவங்கம்மாவ போய் பாத்துடலாம்.  கொஞ்சம் கம்பும்.சோளமும் கொடுத்துட்டு வரலாம்.. “

“சரி தாத்தா. “

“இரு. என்னவோ சத்தம் கேக்குது. “ எழுந்து சற்று நடந்து ஒரு பனைமரத்தின் பின்னாடிப் போனார். உதட்டில் ஒரு புன்னகை தோன்றியது. திரும்ப வந்து “அந்த கோணிய கொடு. அப்படியே தண்ணியும்.”

“என்னத் தாத்தா.?”

“குட்டிப் போட்டிருக்குது. ரண்டு கெண்டி. ஒன்னு பொட்ட. “

“பொட்ட குட்டியா.?”

“ஆமா. பொட்ட.”

“அய். பொட்டக்குட்டி. பொட்டக்குட்டி…அண்ணனுக்கு அது.” அருணா தாத்தாவின் கால்களை கட்டிக்கொண்டு சிரித்தாள்.   சற்று தூரத்திலிருந்து அந்த குட்டிகளின் கலவையான “மே…. மே. மே… “ சத்தம் கேட்டது.

0000