அந்நாளின் இரண்டாம் விதியை நோக்கி
சாலையில் நடந்து கொண்டிருந்தேன்
திடீரென்று புதரிருந்து ஒரு உருவம்
அறைந்துவிடத் தூண்டும் ஒரு இளிப்பு
கைகளில் சங்கு சக்கிரம் கதை தாமரை
சில்லரையைத் தேடினேன்
‘நான் கடவுள்’ என்றது உருவம்
பாவமாக இருந்தது
‘நிஜமாகவே நான் கடவுள்தான்’
ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு
ஒரு பக்கமாக விலகி ஓடினேன்
’டேய்! நில்லு நில்லு’
ஹாண்ட் டிரில் கூட கையில் இல்லை
இவனெல்லாம் என்ன கடவுள்?
அதிகாரநந்தி
எப்படியோ

நான் கத்துகிறேன்
அங்கேயும் குரல் உயர்கிறது
நான் இன்னும் உயர்த்துகிறேன்
அங்கே என்னைவிட உயர்கிறது
உச்சஸ்தாயில் குரல் வடிவம் சிதைகிறது
குரல்கள் கலந்து இரைகின்றன
அக்கம்பக்க கதவுகள் திறந்து மூடுகின்றன
அறை முழுதும் சிதறிய வார்த்தைகள்
நடுவே நானும் அவரும்
ஒவ்வொரு வார்த்தையாக எடுத்துப் பார்க்கிறோம்
எதுவும் எங்களுடையதாக இல்லை.
ஒளிப்பட உதவி – Tatiana Iliina
கனி கானல்

உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்றார்கள்
நீ அவனைப் போலவே இருக்கிறாய் என்றார்கள்
என்னைப் பார்த்து அவனைப் பற்றிப் பேசினார்கள்
ரெண்டு பேருக்கும் ஒரே குணம் என்றார்கள்
ஒன்று போல் கோபம் என்றார்கள்
நன்றி கெட்டவர்கள் என்றார்கள்
நான் அவனில்லை என்று நம்பலாம்
நம்புவதெல்லாம் உண்மையுமில்லை
நிஜம் ஓரிரவில் வெளிப்படுவதில்லை
காலம் முன்னே போக
புன்னகைகள் வேலை செய்யாது போயின
நேர்ப்பார்வைகள் கூசின
கவலைப் பரிமாற்றங்கள் நின்று போயின
ஒருநாள்
ஒருவரில் ஒருவரைக் கண்டு கொண்டோம்.
ஒளிப்பட உதவி – Neal Small, 1stdibs
கலையாத மௌனம்
– அதிகாரநந்தி –

அந்தப் புறம் நான்
இந்தப் புறம் இவர்கள்
இடையே வளர்ந்து கொண்டே போகும் இந்த மெளனம்
சத்தியமான புன்னகை
பரிசு
அக்கறை கொண்ட கோபம்
இன்னும் எத்தனையோ காரியங்கள்
ஒவ்வொன்றுக்கும் பெயர் தேடுவது வீண்
மெளனம் மட்டும் உடைவதாயில்லை.
ஒளிப்பட உதவி – senso comune
காலவனம்
– அதிகாரநந்தி –

யாரையும் நம்பியில்லை இந்த வனம்
துளிர்விடுவதையும் நிறுத்துவதாயில்லை
அததற்கான காலம் வரும் வரை
எதையும் சாய்த்துவிடுவது நமக்குச் சுலபமில்லை
விருட்சத்திலிருந்து விழும்
இலையின் லாவகத்தோடே
கடந்துவிட்ட காலத்திலிருந்து
விடுபட முயல்கிறேன்
யார் இலை எது விருட்சம்?
எது இலை யார் விருட்சம்?