இலைகள் விழுந்து சருகாவதிலும் சருகாகி காற்றில் வீழ்வதிலும் நியதிகள் எங்கும் மீறப்படாதபோது கதிர்க்கற்றைகள் நிறம் தேய்ந்து சுடர் அடங்கி அணைந்தாலும் ஒற்றை விளக்கின் திரியிழுத்து இருளின் கருமையில் இணைந்தாலும் புலரியின் பொலிவு குறைபடாதபோது சொற்களின் குறைவில் பிறந்தாலும் மிகுசொல் சேர்ந்து நிறைந்தாலும் கவிகளின் வீச்சு கறைபடாதபோது அலை வீசி ஆர்ப்பரித்து கரை தாண்டி சென்றாலும் கால்தடவி கலம்தாங்கி கட்டுக்குள் நின்றாலும் ஆழியின் அற்புதம் புரிபடாதபோது அனைத்தும் ருசிக்க அனைத்தும் புரிய அனைத்திலும் இழுபட அனைத்திலும் இழிபட நான் காத்திருப்பதில் தவறென்ன?
சரவணன் அபி
பறவை கவிதைகள் மூன்று – சரவணன் அபி
1. புள்ளெலாம் நடை செல்லும் பாதையில் ஒரு புறா தத்தித் தத்தி நடந்ததன் கால்களிலொன்றிலொரு காயம் இடதிலிருந்து வலம் வலதிலிருந்து இடம் கழுத்தைச் சொடுக்கி கால்கள் நொண்டி தரையை ஏனது அளக்கிறது மணிக்கண்களின் வேதனையை ஊரறியத் தந்து விட்டு நொண்டும் கால்களின்கீழ் நகர்ந்தோடும் இரையையும் காணாது மீண்டும் இடதும் வலதும் எப்படி உணர்த்துவேன் இருவருக்குமான சிறகுகளின் தரிசனத்தை ---------------------------------------- 2. இன்னொரு செய்தி இன்று காலை ஒரு பறவை இறந்தது புல்லின் செய்தியை காற்றில் தொகுத்து முடிக்காமல் துடித்துக் கொண்டிருந்த அதன் அலகுகளில் மிச்சமிருந்தது அழகிய பனித்துளி நீவப்படாத சிறகுகளில் மொழியிறந்த அந்தரங்கம் எப்படி பரிமாறும் நாளை மற்றுமொரு இறப்பின் செய்தி --------------------------------- 3. புதிய பண் மஞ்சள் வெட்டிவைத்த மேகக்கூட்டங்களினின்று பொன்னிற சிறகுகளசைத்து மிதந்து திரிந்த அந்த அபூர்வப் பறவை புதியதொரு பண்ணிசைத்துக் கொண்டே சிறகசைப்பை நிறுத்திக் கொண்டது ஏன் கனவே போல் காற்றினூடாக தன் அசையாச் சிறகுடன் மண்ணை விரும்பி வேகத்துடன் வீழ்வதை நான் கண்டேன் கம்பீரத்துடன் ஒயிலாய் அசையும் அதன் பொன்னிறச் சிறகுகளை கீழ்நின்று தாங்கிய காதல் கரைந்து போயின் வேறென்ன செய்யும் அது
திணை மயக்கம்
நாட்காட்டியில் தாள்கள் கிழியும் சத்தம்
நொடிகள் கழியும் சத்தம்
யன்னலின் வெளியே
நிறம் மாறி மாறித் தோன்றும்
இரவின் வெக்கையும்
பகலின் மழைஈரமும்
வாழ்வு என்பதும்
நகர்தல் என்பதும்
அர்த்தமற்ற ஒலிக்குறிப்புகள்
சருகாகவும் தளிராகவும்
மிக மென்மையாக
மிக மிக அமைதியாக
உதிர்த்துக் கொண்டிருக்கிறது
காலம்
திறந்தே கிடந்தும்
யாரும் நுழையா
இக்கதவுகள்
திங்களொரு முறை
தோன்றும் மகனோ மகளோ
வருவது கூட
அசையா கதவுகளின்
மன்றாடலின் பேரில்
அசையா நாற்காலி அஃறிணை
அசையா கட்டில் அஃறிணை
அவற்றினூடே
உயிர்ப்புடனொரு
நாட்காட்டியும் கடிகாரமும்
ஒற்றைப் பூ
மகிழ மரத்தினின்று
பூக்கள் உதிர்வது போல்
கிரணங்கள்
அறைக்குள்
பெய்து கொண்டிருக்கின்றன
மௌனம் காத்திருந்த
நம்மிருவரிடயே
இசை பேசிக் கொண்டிருந்தது
மெல்லிய
ஆவிபுகையும்
தேநீர்க்கோப்பையை
உறிஞ்சிவிட்டு
என்னைப் பார்க்கிறாய்
புலர்வெயிலின்
இளவெம்மையுடன்
மெதுமெதுவே
மஞ்சள் மாறும்
அறையின் பரிமாணங்களை
ஹரி பிரசாதின் குழலிசை
நிறைக்கிறது
தோடி ராகந்தானே
என வினவுகிறேன்
தலையசைக்கிறாய்
செவிமடல் பொதிந்த
அணிகள் ஆடுகின்றன
வர்ணங்களை வாரியிறைத்தபடி
என்னுள்ளும்
பொன்னிழைகளாய் மின்னும்
காதோர குழற்கற்றைகளை
ஒதுக்கிவிட
தவிக்கும் என் விரல்களின்
தகிப்பை
ஏன் மறைக்க வேண்டும்
என எண்ணுகிறேன்
உன் இதழில் இருந்து
முறுவலொன்று
நழுவிச் சிந்துகிறது
வெளியே
வெட்கமின்றி
பூக்கள்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன
நானும் நானும்
உணர்வின் வெளிப்பாடு
இயலாமல் ஆகிவிட்டவன்
சுயம் என்னவாகும்
உணர்தல் இயலும் அதை
உரைத்தல் இயலாதான இது
சுயமற்றவொரு சடப்பொருள் என
சூழ்ந்து நின்று விவாதிப்பதை நான்
விழியசைவின்றி கண்டும்
உடல் நகர்வின்றி கேட்டும்
கொண்டிருப்பதை
எப்படி உணர்த்துவேன்
நினைவுக் கோளங்களில்
பளிச்சிடும்
வெளிச்சத் துணுக்குகளில்
உங்களைப் போல் நானும்
அவ்வப்போது
விதிக்கப்பட்டவோர் ஒழுங்குடன்
நடந்து கொள்வதாக
நீங்கள் மகிழ்வது புரிகிறது
எனினும்
எனக்கும் உங்களுக்கும்
என்ன வேறுபாடு
என்னை உங்களைப் போலாக்கும்
தவிப்பெதற்கு
வலிகளில் எது பெரியது
என்றுதான்
நீங்களெல்லாம் பேசியும்
நான் பேசாமலும்
ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்
விட்டுவிடுங்கள்
நானும் நீயும் ஊடாடுவதின் மூலம்
நாமும் அவர்களும்
ஒன்றெனக் காட்ட முயலும்
இந்தச் சமன்பாடு
எனக்குப் பிடிக்கவில்லை