எழுத்து

உடலரசியல்

உஷாதீபன் 

                னைத்துப் பணியாளர்களும் வந்து சேரும் முன் கிளம்பி விட வேண்டும் என்று மனம் பரபரத்தது. அன்றைக்கென்று பலரும் சீக்கிரமே வருவது போல் தோன்றியது. மாடி அலுவலகத்திற்குச் செல்பவர்கள் சத்தமாய் படியில் ஏறிச் செல்வது தொந்தரவாக இருந்தது. எங்கு வந்தாலும் அமைதியில்லை. புற உலகின் சப்தங்கள் மனதை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கின்றன. அமைதியைக் குலைக்கின்றன. பாதுகாப்பான அமைதியும் தனிமையும் கிடைப்பதில்லை. மனித ரகசியங்கள் சுதந்திரமற்றவை. சிக்கலில் தவிப்பவை. அவைகளால் ஏற்படும் சிடுக்குகள் அநேகம். ச்சே…! நினைக்கும் வழி செயல்படுவதில்தான் எத்தனை சங்கடங்கள்? அமைதியில்லாத, ஆரவாரமான இந்த சர்வீஸே பிடிக்கவில்லை. எங்காவது ஏகாந்தமான இடத்தில் சென்று யார் கண்ணிலும் படாமல் இருந்துவிடமாட்டோமா என்றே மனம் ஏங்குகிறது.

பக்கத்துக் தகரக் கொட்டகை பொறியியல் ஆபீசில் தளவாட சாமான்களை எடுக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. எவர் கண்ணிலும் படும் முன் நழுவி விட வேண்டும். இன்னும் சிறிது நேரம் போனால் அதிகாரியே வந்துவிடக் கூடும். அவர் பார்வையில் படக் கூடாது. பிறகு விடுப்பு எடுத்துக் கிளம்புதல் ஆகாது.

வீட்டு ஞாபகமாகவே இருந்தது. இந்நேரம் வேலையெல்லாம் முடித்திருப்பாள். கிளம்பியிருப்பாள். பஸ்ஸைப் பிடிக்க ஒரு மணி நேரம் முன்னால் போனால்தானே டயத்துக்கு ஆபீஸ் போய்ச் சேர முடியும்? அல்லல் படட்டும். அப்போதுதான் புத்தி வரும்…! அருமை தெரியும்…! பின் எப்படித்தான் மடங்க வைப்பதாம்? புதிய புதிய வழிகளைக் கண்டு பிடிக்க வேண்டியதுதான். நான் இல்லாமல் எதுவும் ஆகாது என்ற நிலைக்குக் கடத்த வேண்டும். தவியாய்த் தவித்து வந்து விழ வேண்டும். எனக்கு அட்ஜஸ்ட் ஆகவில்லையென்றால் பிறகு அவள் எதற்கு? தொட்டதற்கெல்லாம் முறுக்கிக் கொள்ளுதல்….பெரிய இடம் கொள்ளா சொத்து பத்தோடு வந்து இறங்கியவள் மாதிரி? பேரழகி என்ற நினைப்பு. நீயெல்லாம் எனக்கு ஈடா? என்பதான அலட்சியம். படிப் படியா இறக்குறேன் எல்லாத்தையும். கறுவிக் கொண்டான்.

கேஷ் புக்கை எழுதி முடித்துவிடுவோம் என்று கிளம்பி வந்திருந்தான். அதுவே இப்போது தப்பாய்ப் போயிற்று. வரவு செலவுகள் மறந்து போகும். குறித்துக் கொள்ள சோம்பேறித்தனம். நினைவில் நிற்காமலா போய்விடும்? நிற்க மறுக்கிறது இப்போது. சமீபமாய்த்தான் இந்த மறதி வந்திருக்கிறது. கவனம் பூராவும் வேறொன்றில் குவிந்திருக்கிறது. அதில் சுய இன்பம் காண்கிறது. மனிதனுக்கு யதார்த்தத்தை விடக் கற்பனை உலகில் சஞ்சரிப்பதில் தனி இன்பம். அங்கு போட்டிக்கு ஆள் கிடையாது. எதிர்வினை இருப்பதில்லை. தவறாயின் சுட்டிக்காட்ட எதுவுமில்லை. யாருமில்லை. அந்த நினைப்பின் சுழிப்பில்தான் நடப்பு மறந்து போகிறது.

கொடுக்கல் வாங்கல்கள் நினைவில் வரிசை கட்டி நிற்கும்போதே பணப்பதிவேட்டினை எழுதி முடித்து விட வேண்டும். அப்போதுதான் நிம்மதி.  தாமதித்தால் தப்பு வந்து, அடித்தல் திருத்தல் என்று ஆகிவிடும். பணப்பதிவேட்டில் அப்படித் தவறுகள் நிகழ்வது சந்தேகத்தை ஏற்படுத்தும். கண்டனம் தெரிவிக்கப்படும். ஒரு சீனியர் நீங்க…இப்டியா கேஷ் புக் மெய்ன்டெயின் பண்றது? தலை குனிய வேண்டியிருக்கும்.  தேவையில்லாமல் அந்த மனச் சுமை எதற்கு? இதற்குத்தான் சற்றுத் தாமதமானாலும் தேவலை என்று முதல் நாளே  கேஷ் புக்கை எழுதி முடித்து விட்டுக் கிளம்புவது. அது நேற்று நடவாமல் போனது.  போதாக்குறைக்கு கேஷ் செஸ்டைப் பூட்டினோமா என்று வேறு ஒரு விபரீத சந்தேகம். உடம்பும் மனமும் பதற ஓடி வந்திருந்தான். எவனாவது சூறையாடியிருந்தா? அலுவலக வேலைகளைப் பொறுத்தவரை என்றுமே ஒரு நிதானம் உண்டுதான். அதுவும் கூட இப்போது தவற ஆரம்பித்திருக்கிறது. மனசும் எண்ணங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இப்படி அலைய விடக் கூடாது. அதனால் வரும் குழப்பங்கள் அநேகம். எதற்கு இந்தக் குரோதம்? இயலாமையால் எழுந்த வன்மமா?

சமீபத்தில்தான் இந்தத் தவறு அடிக்கடி நிகழ்கிறது. எந்த மனநிலை தன்னை அப்படி ஆட்கொள்ள வைக்கிறது, இதை மறக்க வைக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான். நினைப்பு பூராவும் வேறொன்றில்…லயித்திருக்கிறது. அதுவும் தெரியத்தான் செய்கிறது. ஆனால் அந்த இன்பம் தனி. அதற்கு ஈடே இல்லை. சௌந்தர்ய லோகம். றெக்கை கட்டிப் பறக்கும் லாவண்யம்…! தானாகவே தேடி வந்த சந்தோஷம். கையெட்டும் தூரத்தில். வலிய வந்து உள்ளங்கையில் தவழ்கிறது. மிதக்கிறது. அலை பாய்கிறது.

சார்….நேத்து கேஷ் பாக்ஸைப் பூட்டாமப் போயிட்டீங்க…! – வாட்ச்மேன் சம்புகன் சொன்னபோது…முதலில் அவன் மேல்தான் சந்தேகம். அடப்பாவி… பணத்தைச் சுருட்டிட்டுக் குடிக்கக் கிளம்பிடுவானே….! எனக்கு எதுவும் தெரியாதும்பானே…! – பெட்டியில் இருந்ததையெல்லாம் சரி  பார்க்க ஆரம்பித்தான். கூடவே அவனிடம் கேட்டான்…பவானி வந்திச்சா…கூட்டிப் பெருக்கி, தண்ணி எடுத்து வச்சாச்சா? அது எப்பயோ வந்திட்டுப் போயிடுச்சி சார்…. –சொல்லிவிட்டு விலகி விட்டான்.

அவனும் அதுவும் ஓடிப் பிடித்து விளையாடுவதாக ஒரு செய்தி காதுக்கு வந்திருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும். விபரீதமாகுமுன் தடுத்தாக வேண்டும். இதுக்குத்தான் வயசான ஆளுகளாப் பார்த்து வாட்ச்மேனாப் போடணும்ங்கிறது…! தோணத்தான் செய்கிறது. எந்த மனசு இன்னும் தடுக்காமல் தள்ளிப் போடுகிறது? கண்டிக்கவாவது வேண்டாமா? அட…வயசானவன் சரியா இருப்பான்ங்கிறது என்னய்யா நிச்சயம்? அந்தப் பிள்ளை வேறே பார்க்கிறதுக்கு கொஞ்சம் சோக்காத்தான் இருக்கு…வேலைக்கு வந்தா அத மட்டும் கண்ணும் கருத்துமாப் பார்த்திட்டு நகர வேண்டிதானே? அதென்ன அங்கிட்டும், இங்கிட்டும் திரும்பித் திரும்பிப் பார்வை? அதுவே சரியாத் தெரிலயே…! எதுகளத்தான் நம்ப முடியுது இந்தக் காலத்துல?

பணப் பத்திரங்களெல்லாம் சரியாகவே இருந்தன. வேறு சில பாண்டுகளும் அப்படியே இருந்தன. கணக்கில் வருவது, வராதது என்று இரண்டு கவர்களில் பணம் வைத்திருப்பது வழக்கம். அலுவலகம் வரும் வி.ஐபி.க்களை உபசரிப்பதற்கென்று அதிகாரியால் கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் தொகைதான் கணக்கில் வராதது. அதற்குக் கணக்கு எழுத வேண்டும் என்கிற அவசியமில்லை. இருக்கும் வரை செலவு செய்துவிட்டு,  தீர்ந்தது என்று சொன்னால் போதும். மீண்டும் வந்து சேரும். அது தனி அரசியல்.  அதில் எவ்வளவு இருந்தது என்று துல்லியமாய் மனதில் வைத்துக் கொண்டதில்லை. அதனாலேயே இப்போது அது குறைகிறதா என்பதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அதற்குக் கணக்கு வைக்காதிருப்பது யாருக்கும் தெரிய நியாயமில்லை. அதிலிருந்து பைசா தொட்டதுமில்லை. வெறும் காசா இன்பம்? அந்தக் காசை விட்டெறிந்தால்தான் இன்பம்…!

எல்லாம் சரியாயிருக்கில்லை சார்…? என்று வேறு கேட்டுக் கொள்கிறான். ம்….ம்… – என்று முனகியதோடு சரி….அது, உன் மீது எனக்கு முழு நம்பிக்கையில்லை என்பதைச் சொல்லாமல் சொல்வது. பணப்பெட்டியைப் பூட்டாமல் வெறுமே சாத்தியிருந்தாலும் பரவாயில்லை. யாரும் அருகில் வரப்போவதில்லை. அதில் சாவியைத் தொங்கவிட்டுப் போயிருந்தால்? வீட்டிற்குப் போய் சாவியைக் காணவில்லையே என்ற சந்தேகம் கூட எழவில்லையே? ஆபீஸ் பேக்கை திறந்தால்தானே தெரியப் போகிறது? காலையில் பார்த்து அதிர்ந்தபோதுதான்…அடித்துப் பிடித்து ஓடி வரப் பண்ணியது.

எங்க இவ்வளவு பரபரப்பா கிளம்பிட்டீங்க…!? – கோபமும் ஆத்திரமுமாகக் கேட்டாள்.

கேஷ் பாக்சைப் பூட்டாம வந்திட்டேண்டீ….! ஏகப்பட்ட டாக்குமென்ட்ஸ், பணம்லாம் இருக்கு அதுல…தொலைஞ்சேன் நானு…. – பறந்து வந்தாயிற்று. இன்னும் படபடப்பு தீரவில்லை.

எதாச்சும் ஒரு சாக்கு வேணுமே உங்களுக்கு…இன்னைக்கும் நா பஸ்ல போய் சாகணுமா? எல்லாம் என் தலைவிதி….உங்களக் கட்டிட்டு அழறதுக்கு…- அவள் பேசியது மேற்கொண்டு காதில் எதுவும் ஏறவில்லை. உடம்போடு பதறுகிறது. சர்வ நாடியும் ஒடுங்கிப் போனது.

ரு தவறினால் மனம்  தொடர்ந்து சிதைகிறது. சிந்தனை சிதறுகிறது. கவனம் பிசகுகிறது. கருத்து தவறுகிறது. ஆனால் அந்தத் தவறைத் தவிர்க்க முடியவில்லை. தவறு என்று தெரிகிறதுதான். ஆசை சப்புக்கொட்டிக் கொள்கிறது. புத்தியை மறைக்கிறது. ஒரே ருசி என்றும் நிலைப்பதில்லை. சுலபமாய்க் கிடைப்பதற்கும் என்றும் மதிப்பில்லைதான்.  எதையோ பழி வாங்கும் உக்ரம். யாரைக் கேவலப்படுத்த இது?  எதுவோ கிடைக்காத கோபத்தில், அல்லது கிடைத்துப் போதாத ஏக்கத்தில், வெறியில் இன்னொன்று சுலபமாகக் கிடைக்கும்போது அதை அனுபவிக்கத் துடிக்கும் வேகம். சுலபமாகக் கிடைப்பது எதுவும் நலம் விளைவிக்காதுதான். கேட்டுக்கு வழி வகுக்கும்தான். ஆனாலும் அதில்தான் ஈர்ப்பு ஏற்படுகிறது மனிதனுக்கு. அதனை நாடித்தான் மனம் தவிக்கிறது. நக்கித் தின்பதில்தான் இன்பம்….!

என்ன ஒரு பாவனை? என்ன ஒரு சிரிப்பு? நெளிந்தும், சுழித்தும், உதட்டைப் பிதுக்கியும், கடித்தும், மடித்தும், கண்களைச் சுருக்கியும், மயக்கியும், ஓரப்பார்வை பார்த்தும்….வீட்டுப் பெண்கள் இதையெல்லாம் செய்ய முடியுமா? ஒரு சினிமா நடிகை இதையெல்லாம் காட்டுகிறாளே என்று மனைவியிடம் கேட்க முடியுமா? அதே சினிமா நடிகை அவளது கணவனிடம் அப்படியிருக்க முடியுமா? தனிமையென்றாலும், அந்தரங்கமேதான் ஆனாலும் அந்த நெளிப்பும், வளைவும், சிமிட்டலும், சுழிப்பும் குடும்பப் பெண்ணுக்கு உகந்ததா? அல்லது இப்படியெல்லாம் செய்யேன்….என்றுதான் கேட்க ஏலுமா? நீங்க என்ன லூசா? என்று பதிலுக்குக் கேட்டால்? சினிமாவுல வர்றமாதிரி அத்தான்னு கூப்பிடச் சொல்வீங்க போல்ருக்கே…? கிறுக்கு…!

அவள நினைச்சிட்டுத்தான் உன்னை அணைக்கனும் போல்ருக்கு…..இப்டி உம்முனு இருந்தீன்னா? கொஞ்சமாச்சும் ஒரு சிணுங்கல், குலுங்கல், சிரிப்பு, சுளிப்பு,  தவிப்பு, பெருமூச்சு, வெட்கம், வேகம்….இதுல எதுவுமே கிடையாதா உன்கிட்டே? ஊடல்னா என்னன்னு தெரியுமா? அது காமத்திற்கு இன்பம்னு சொன்னதை அறிவாயா? வீட்டு வேலை செய்றமாதிரி, எல்லாம் முடிஞ்சு ராத்திரி படுக்கைல விழுந்தவுடனே நீட்டி நிமிர்ந்திற வேண்டிதானா? என்னவோ பண்ணிக்கோன்னு இப்டி மரக்கட்டை  மாதிரிக்  கிடந்தீன்னா?  தமிழ்ல முயங்குதல்னு ஒரு வார்த்தை உண்டு தெரியுமா? முயல் குட்டியான்னு கேட்டுறாத…! அதுக்கு என்ன அர்த்தம்…ம்? ரெண்டு பேரும் சேர்ந்து சொர்க்கத்துக்குப் போறது? அதெல்லாம் நீ என்னத்தக் கண்ட? ஆத்தக் கண்டயா, அழகரச் சேவிச்சியா?  எதாச்சும் இப்டிக் கேட்டா கிலோ என்ன விலைம்பே….அதானே உனக்குத் தெரிஞ்சது? அட…நான் படுத்தறதை ரசிக்கவாச்சும் தெரியுதா உனக்கு? கண்ண மூடிட்டுக் கிடந்தா? தூங்கிட்டியோன்னுல்ல நினைக்க வேண்டிர்க்கு…கொர்ர்ர்ன்னு குறட்டை வேறே…! பெண்களுக்கு மென்மை வேண்டாமா? இப்டியா ஆம்பிளை மாதிரி ஆக்டிவிட்டீஸ்?

.ஜவுளிக்கடை பொம்மையப் பார்க்கத்தான் முடியும்…அனுபவிக்க முடியுமா? அதுபோலதான் நீயும்…! அதாவது அலங்கரிச்சு நிற்கும்.  நீ? எப்பப்பாரு…விடியா மூஞ்சி மாதிரியே இருக்க? அந்த முகத்தக் கொஞ்சம் சோப்புப் போட்டுக் கழுவி, பளிச்சினு இருந்தாத்தான் என்ன? வேறே யாரும் நோக்க வேண்டாம். நா பார்க்க வேண்டாமா? முகர்ந்து பார்க்கைல உன்னோட வியர்வையையா நக்குறது? அதுக்கு ஒரு மணம் இருந்தாலும் பரவால்ல…பீரியட் டைம் மாதிரி வாடை வருது…வாமிட் வருது எனக்கு….உன் வியாதி ஏதும் எனக்கும் தொத்திரும் போல்ருக்கு…என்னா கிரகம்டா சாமி…! இப்டி ஒரு சேர்க்கைய எவன் கண்டு பிடிச்சான்? இயற்கை வகுத்தது இப்டித்தான் இருக்குமா?

 

ஒரு கோடு போட்டு…அதுலயே நடக்கணும்னு சொல்லி அங்க இங்க திரும்பக் கூடாதுன்னு கன்ட்ரோல்டா வளர்த்து ஆளாக்கி என்கிட்டக் கொண்டு வந்து விட்டுட்டாங்க உங்க வீட்ல….இப்ப நா…பட்டுக்கிட்டிருக்கேன்….கல்யாணம் பண்ணியாச்சுன்னா அடுத்தாப்ல குழந்தை பெத்துக்கணும்ங்கிறது வழி வழியா வந்திட்டிருக்கிற நடைமுறை…ஆனா அதுக்கு முன்னாடி கணவன் மனைவி ரெண்டு பேரும் சந்தோஷமாக் கொஞ்ச நாட்களை, ஒரு ரெண்டு வருஷத்தை… விட்டேத்தியா அனுபவிக்கிறதுன்னு ஒண்ணு இருக்கே….அது தெரியுமா? எதுக்காக அப்டிம்பே…! எல்லாம் என் தலையெழுத்து!  அதுக்கும் குழந்தைக்கும் சம்பந்தம் கிடையாதாக்கும்….நா சொல்றது புரியுதா? அப்டிக் கழியுற நாட்கள் கொஞ்சம் அசிங்கமாவும் கூட இருக்கும்…இருக்கத்தான் செய்யும்….ச்சீய்….இப்டியெல்லாமா ன்னு மொகத்தச் சுழிக்கக் கூடாது…எழுந்து ஓடக் கூடாது….தெரிஞ்சிதா? அதுலதான் சிலபேருக்கு சந்தோஷம்…வள்ளுவர் கூட ஒரு குறள்ல சொல்லியிருக்கார்…தெரியுமில்ல…செவ்வி தலைப்படுதல்னு… நீ என்னத்தப்படிச்சே…செவ்வீன்னா என்னன்னு கேட்பே…..படிச்சிட்டு….உவ்வே…..ன்னிருப்பே. அதானே  உங்க வீட்ல சொல்லிக் கொடுத்திருக்கிறது?

படுக்கையில் அவளோடு இப்படித்தான். அதில் ஆர்வம் இருப்பதாகவே தெரியவில்லை. மாதம் மூன்று நாட்கள் ஒதுங்குகிறாளே…! அதையாவது தெளிவாய்ப் புரிந்து கொண்டிருப்பாளா? இன்னிக்குதானே குளிச்சே….இன்னும் ஒரு வாரம் பத்து நாளைக்குப் பக்கத்துல வரப்படாது…தெரிஞ்சிதா…? நானும் நெருங்க மாட்டேன்… உறீம்….உன்கிட்டப் போய் சொல்றன் பாரு….செகன்ட் வீக்தான் உடம்பு பக்குவமா இருக்கும்….அதான் சரியான டைம்….எல்லாத்துக்குமே ஒரு முறை இருக்குடீ…ஒரு சிஸ்டம் இருக்கு….வகுத்து வச்சிருக்காங்க….எதெதுல சிஸ்டமா இருக்கணுமோ அததுல அப்டித்தான் இருந்தாகணும்…அதுலயும் பிசகுறபோதுதான்…தப்புத்தண்டா ஆயிடுது….நா சொல்றது புரியுதா? புரியலியா? ம்…ம்…ம்னு மண்டைய மண்டைய ஆட்டு….அதுவும் உங்க வீட்ல சொல்லிக் கொடுத்ததுதான்….இல்லன்னா இந்த ஆட்டு ஆட்டுவியா?

மனுஷன் தாங்க முடியாத ஒழுக்கத்துல இருந்தா அசடுன்னு ஆயிடும். இருக்க வேண்டிதான்…அவசியம்தான்…அதுக்காக எங்க எங்க…யார் யார்ட்ட…எப்ப…எப்போன்னு ஒரு கணக்கு இல்லியா? புருஷன்ட்டயே இந்த ஒதுங்கு ஒதுங்கினா? நா தொட்டாலே கூசுதுங்கிறே…அப்புறம் எதுக்குக் கல்யாணம் பண்ணினே? எங்கயும், எதிலயும் கை போட விடமாட்டேங்கிறே? உன் கூச்சத்தப் போக்கணும்னா மொத்தமா உடம்புல துணியில்லாமத்தான் ஆக்கணும்…அது நல்லாயிருக்குமா? குடும்பக் குத்து விளக்கு…! அது கூட ரெண்டு மனசும் சம்மதிச்சு நடக்கறதுதாண்டீ…. உனக்கு எங்க தெரியப் போகுது… அதெல்லாம்..? நீ ஒரு பாஷாண்டி..!..

நாளும் பொழுதும் அப்படியே விடிந்திருக்கின்றன. எப்பொழுது தூங்கினோம் என்று தெரியாமல் கண்ணயர்ந்திருக்கிறான். அவளுக்கு எதுவுமில்லை. பரப்பிரம்மம், ஜெகந்நாதம்….!.

உனக்கும் எனக்கும் ஒண்ணே ஒண்ணுதான் படு பொருத்தம். சொல்லட்டா… நா சங்கரன்…நீ சங்கரி….இது ஒண்ணுதான்….சுந்தரி…சௌந்தரி…நிரந்தரியே…..ன்னு இப்ப நீ ஆகிப் போனே….! விட்டு உதறவா முடியும்? கட்டி இழுத்திட்டுப் போய்த்தான் ஆகணும்…கரை சேருவோமோ இல்ல…கலத்துலயே மிதக்கப் போறாமோ…? யார் கண்டது?

எத்தனையோ நாட்கள் இப்படித்தான் கழிந்திருக்கின்றன. உங்களுக்கு வேறே வேலையே இல்லையா? காலைலர்ந்து வீட்டு வேலை, ஆபீஸ் வேலைன்னு ஓய்ஞ்சு வந்து விழுந்திருக்கேன்…சரசம் பண்ண வர்றீங்களாக்கும்….விண்ணு விண்ணூங்குது உங்களுக்கு…எனக்கானா அசந்து அண்ணாக்கத்து வருது….ஆபீஸ்ங்கிற எடத்துக்குப் போய் வெறுமே பெஞ்சைத் தேய்ச்சிட்டு வந்தா இப்டித்தான் இருக்கும்..என்னடா செய்வோம்னு…..மானேஜர்ங்கிற பேர்ல இருக்கிறவனையெல்லாம் விரட்டிக்கிட்டுத் திரிய வேண்டியது…உங்களுக்குன்னு அல்லாடட் ஒர்க் கிடையாது….பிறகென்ன கேட்கணுமா? உங்க சில்மிஷத்துக்கெல்லா நாந்தான் கிடைச்சனா? பேசாமப் போய்ப் படுங்க….சதா தொந்தரவு பண்ணிக்கிட்டு…..! நீங்க பக்கத்துல வந்தாலே எனக்கு உடம்பெல்லாம் பூரான் ஊர்ற மாதிரி இருக்கு…ஒரே வேர்வை நாத்தம்….!

அடிச் சண்டாளி…! நீ ரொம்ப மணக்கிறியோ..? உன் நாத்தம் பெரிசா…என் நாத்தம் பெரிசா?  உலகமே நாத்தந்தாண்டீ….மலக் குழிதான் இந்த உடம்பே…! சுமந்திட்டுத்தான திரியறோம்?  என்னத்தத் தெரிஞ்சு வச்சிருக்கே நீ…? ராத்திரி ஒரு வாய் அரிசியை வாய்ல  போட்டுட்டுத் தூங்கி எந்திரிச்சு…காலைல துப்பு…அதுல எது வாய் வச்சாலும் செத்துப் போயிரும்…மனுஷனே வெஷந்தான்…எல்லாத்தோடயும்தான் இந்த வாழ்க்கை…அதப் புரிஞ்சிக்கோ….!

என்ன தொந்தரவு செய்தேன் என்று இவள் இப்படிச் சலித்துக் கொள்கிறாள்? கட்டியணைப்பது கூட ஒரு குற்றமா? அது கூட இல்லாமல் எப்படி ஆசையை வெளிப்படுத்துவதாம்?  எப்படி ஆரம்பிப்பதாம்? ஆரம்பமே அதுதானே? அதற்கே இவள் இப்படிச் சலித்துக் கொள்கிறாள்? தாம்பத்ய உறவிலேயே  விருப்பம் இல்லையோ? அவள் வீட்டிலே யாரும் சொல்லிக் கொடுக்கவில்லையோ? இந்த உலகாயத அனுபவங்கள் எதுவும் கற்றுக் கொடுக்கவில்லையோ? ஓட்டை சினிமாவே ஆயிரம் கற்றுத் தருமே…இவளுக்கு அதுகூடவா இல்லாமல் போனது?

எண்ணங்கள் ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன. அதனூடேதான் அன்றாட நாட்களும் கழிந்து கொண்டிருக்கின்றன. சண்டையும், சச்சரவுமாய்….ஊடலும் கூடலுமாய் இருக்க வேண்டிய வாழ்க்கை அதற்கு நேர்மாறாய்…..நகை முரண் அல்லாது வேறென்ன?

ணியைப் பார்த்தான். பத்து நெருங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொருவராய் காம்பவுன்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். இவன் அலுவலகத்திற்கும், மாடி அலுவலகத்திற்கும் என்று சற்றுத் தாமதமாய்த்தான் வருவார்கள். நிர்வாகப் பிரிவு. அங்கே அதுதான் வழக்கமாய் இருந்தது. வருகைப் பதிவேட்டைப் பிரித்து விடுப்பு விண்ணப்பத்தை நுழைத்தான்.

சம்புகன்…லீவு லெட்டர் வச்சிருக்கேன்….இன்னைக்கு ஒரு நாள் நா லீவு…அன்புத்தாய் வந்ததும் சொல்லிடுங்க…உங்க பதிலி சாமியப்பன் வந்த பிறகு , நீங்க கிளம்புங்க…சரியா….? – சொல்லிவிட்டு  இவன் கிளம்பினான். அடுத்த இன்சார்ஜ் அன்புத்தாய். சீனியர் அஸிஸ்டென்ட். அதனிடம்தான் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். அதுவே சந்தேகக் கேஸ்…உடம்பு முடியாதது. என்று லீவு போடும் என்று சொல்லவே முடியாது. இப்படி ஆட்களை வைத்துக் கொண்டுதான் நிர்வாகம் பண்ண வேண்டியிருக்கிறது. ஒரு அவசர ஆத்திரத்திற்குத் தடங்கலின்றி லீவு போட முடிவதில்லை.. அன்புத்தாய் போலானவர்கள் அதைப்பற்றியெல்லாம் நினைப்பதில்லை. நினைச்சா லீவு….நினைச்சா ஆபீஸ்…அவர்கள் வசதிக்குத்தான் அலுவலகம். அலுவலக வசதிக்கு அவர்களில்லை.

மனதில் என்னவெல்லாமோ குரோதமாய்த் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. அடுத்தவர்களிடம் என்னடா தப்புக் கிடைக்கும் என்று அலைகிறது..காரணமில்லாமல் குற்றம் கண்டுபிடிக்க முனைகிறது. தான் தப்புச் செய்வதுபோல் மற்றவர்களும்தான் செய்கிறார்கள் என்று உறுதி செய்யத் துடிக்கிறது. தொட்டால் குத்தம்  என்று எதுவும் அகப்படாதா எனத் தேடுகிறது. எல்லோரும் சுதந்திரமாயும், சந்தோஷமாயும் இருப்பதாகவும், தான் மட்டும் எதிலும் தோல்வியையே சந்திப்பதாயும் குமுறுகிறது.

அட…குடும்ப வாழ்க்கையாவது சந்தோஷமாய் இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. எளிய, நடுத்தர வர்க்க மனிதர்களுக்குண்டான சின்னச் சின்னச் ஆசைகளும், சந்தோஷமுமே வீட்டில் மனைவியுடனும், குழந்தைகள் இருந்தால் அவைகளோடும் கொஞ்சி விளையாடி தங்கு தடையற்று அனுபவிப்பதுதான். குழந்தைக்கே வழியில்லை இன்னும்…அட…பொண்டாட்டியுடனாவது சந்தோஷமாய் நேரத்தைக் கழிக்கலாம் என்றால் அதற்குமா ஆயிரத்தெட்டு சுணக்கங்கள்? அவளே ஒரு தாங்க முடியாத நோக்காடாய் இருந்தால்? கழிவிரக்கம்…

வன் லீவு போட்டுவிட்டு வரப் போகிறான் என்பது அவளுக்குத் தெரியாது. காலையில் அவன் சீக்கிரமே கிளம்பி ஆபீஸ் வந்து விட்டதால் நிச்சயம் அவள் உறரிபரியாய்க் கிளம்பத்தான் செய்வாள். பஸ்ஸில் போயாக வேண்டுமே? அவள் கிளம்புவதற்கு முன் கண்டிப்பாக நளினி வரப்போவதில்லை. எத்தனை அழகான பெயர். வேலைக்காரிக்குப் பெயர் நளினி…! நளினி என்று பெயர் வைத்து வளர்ந்து பெரியவளாகி விட்டபின்தானே அவள் வேலைக்காரியானாள்…!  அதற்காக அவளிடம் அழகு தங்கக் கூடாதா? நளினம் நடனமாடக் கூடாதா? வேலைக்காரிகளிடம்தானே பெரும்பாலும் அழகு கொட்டிக் கிடக்கிறது? கேட்பாரற்று தன்னிச்சையாய் வளர்ந்து காடு போல…!

கொல்லைப்புற முற்றத்தில் பாத்திரங்கள் கிடக்கும் என்று அந்தப் பெண் சைடு வழியாகப் பின்புறம் வந்து, தேய்த்து அடுக்கிவிட்டுப் போய்விடும். சுள்ளென்ற வெய்யிலில் சில்வர் பாத்திரங்கள் காய்ந்து நெருப்புக் கனிந்ததுபோல் செவேலென்று  பளபளக்கும். மாலை வீடு வந்து அவைகளை எடுத்து உள்ளே அடுக்கும்போது,  எவ்வளவு ஆரோக்கியமா இருக்கு பாருங்க….என்பாள் சங்கரி. சுத்தம் சோறு போடும்…! பெரிய்ய்ய்ய தத்துவம் கிழிகிறது. சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்து என்ன செய்ய? மனசு அழுக்காகத்தானே கிடக்கிறது? எதைக் கொண்டு அதைச் சுத்தம் செய்வது? இந்த உடம்பே அழுக்கு…அழுக்குக்குள்தான் அழகும்…அழகு சிதையும்போது அழுக்கு. அது மறையும்போது அழகு. மீண்டும் அழுக்கு….மாறி…மாறி….சிதைந்து மறைந்து….மறைந்து சிதைந்து….

என்ன ஆரோக்கியமோ? ரொம்பத் தெரிந்த மாதிரி…! பகல் பூராவும் அத்தனை பாத்திரங்களும் வெளிப்பக்கம் கெடக்கு. யார் வர்றா, யார் போறாங்கிறதே தெரியாது. நாம பொழுதடைஞ்சு  வீடு வர்றோம்….எவனாவது ஆள் போக்குவரத்து இல்லைன்னு தெரிஞ்சு பாத்திரங்களை லவுட்டிட்டுப் போயிட்டான்னா? அந்தம்மாவே ஒருத்தனை அனுப்புதுன்னு வச்சிக்குவோம்…. நமக்குத் தெரியவா போகுது? அதுகிட்டக் கேட்க முடியுமா? யாரை எதுக்குன்னு நம்புறது? (என்னையே என்னால நம்ப முடியல்லயே…!)

ஆம்மா….இந்த ஓட்டைப் பாத்திரத்தை எடுத்திட்டுப் போய்த்தான்….கொழிச்சிடப் போறானாக்கும்…நீங்க ஒண்ணு….பஞ்சத்துக்கு அடிபட்டவன் கூடத் தொட மாட்டான்…..இப்பல்லாம் லம்ப்பா அடிக்கிறதுதான்….எத்தனை நியூஸ் பார்க்கிறோம்…?

அதுக்கில்லடீ நா சொல்றது…..ஒரு பொழுது தீர்த்தம் சாப்பிடுறதுக்கு ஆச்சுன்னு தூக்கிட்டுப் போகலாமுல்ல….? தண்ணியடிக்கிறவனுக்கு காசில்லேன்னா புத்தி அப்டித்தான் போகும்….அது தெரியுமா உனக்கு?  இன்னிக்கு அரசாங்கம் இலவசமாக் கொடுக்கிற காசே கூட அந்த வகைலதான போயிட்டிருக்கு…..எவன் ஒழுங்கா வீட்டுல கொண்டு போய்க் கொடுக்கிறான்? ஒரு சர்க்கிள் மாதிரி திரும்ப கவர்ன்மென்ட்கிட்டயே அந்தக் காசு வந்திடுதாக்கும்…..

அப்ப நீங்க இடைல வந்து பாத்திரங்களை உள்ளே எடுத்து வச்சிட்டு, வீட்டைப் பூட்டிட்டு, திரும்ப ஆபீஸ் போங்க….என்னால நடுவுலல்லாம் கிளம்பி வர முடியாது….உங்களுக்குத்தான் வண்டி இருக்குல்ல….

கேட்டால் இப்படிச் சொல்லிக் கொள்ளலாம். அவளே வழி சொல்லிக் கொடுத்திருக்கிறாள்.

திகச் சத்தமின்றி வண்டியை வராண்டாவில் ஏற்றி நிறுத்தினான். தான் இடைப்பட்ட நேரத்தில் வந்திருப்பது எவருக்கும் தெரியப் கூடாது. பக்கத்து, எதிர் வீடுகள் உள்பட…யார் எப்போ…வந்தா, போனா இவனுகளுக்கென்ன வந்தது? மெல்ல வீட்டைத் திறந்தான். திரையை இழுத்து விட்டான். எந்தப் பக்கத்துலயிருந்தாவது கண்ணு இந்தப் பக்கம் இருந்தா?அடுத்தவன் என்ன செய்றான்ங்கிறதுதானே இவனுகளுக்கு கவனமாயிருக்கு? உறாலைக் கடந்து அடுப்படியைத் தாண்டி பூட்டியிருந்த கொல்லை இரும்புக் கதவுப் பக்கம் போய்ப் பம்மியபோது, பாத்திரங்கள் தேய்படும் சத்தம் கேட்டது. வந்திருக்கிறாள். வேலை நடக்கிறது……

பூட்டியிருந்த கதவைத் திறந்தான். அவனைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது. அடர்ந்த கருங் கூந்தலை இழுத்துக் கட்டி செழிப்பான கொண்டையாய் முடிந்து அதில் வட்டமாய் மல்லிகைச் சரம்.. அகன்ற நெற்றியில் சற்றே பெரிய வட்டமாய்ப் பதிந்திருந்த குங்குமப் பொட்டு, அவள் முகத்திற்கு மிகுந்த சோபையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. பாத்திரம் தேய்க்க வர்றவளுக்கு எதுக்கு இம்புட்டு அலங்காரம்? எனக்காகத்தானா? ஆள வீழ்த்துறதுக்கான அஸ்திரமா? சரிய்ய்யான கைகாரியா இருப்பா போல்ருக்கு? தொடை வரை ஏற்றி விட்டிருந்த புடவையை இறக்காத நிலையிலேயே வெறித்து நோக்குவதைக் கண்டு அவளிடம் புன்னகை மலர்ந்தது. பார்த்தா பார்க்கட்டுமே…! என்ன கெட்டுப் போகுதாம்…!  எவ்வளவு தாராளம்?  காலை வெயிலில் பளபளக்கும் செழுமை. அகன்று பரந்திருக்கும் பிருஷ்டம்…! அப்டியே அலேக்காக உள்ளே தூக்கிட்டுப் போயிடுவமா…? பாவி…அநியாயம் பண்றாளே…?

இதுக்காகத்தான் வந்தீகளாக்கும்……நல்லாத்தான் ப்ளான் பண்றீக…..என்றவாறே தேய்த்துக் கழுவிய பாத்திரங்களை வாளியில் அடுக்கி உள்ளே எடுத்து வந்தாள். அதற்கு மேல் அவளே தாங்க மாட்டாள். எலித் தொல்லை ஜாஸ்தி என்று கவனமாய் எல்லா ஜன்னல்களையும் அடைத்துக் கொக்கி போட்டுப் போயிருந்தாள் சங்கரி. வெளியிலிருந்து எவருக்கும் ஒரு பொட்டுத் தெரியாது. தானாகவே அமைந்து விட்ட பாதுகாப்பான சூழல். வசதியான மறைவு. வாசல் கதவு மட்டும் பூட்ட வேண்டும்…..ஊறீம்….அது கூடாது…பூட்டினால்தான் சந்தேகம் வரும்…ஏதும் சத்தம் வருகிறதா என்பதில் மட்டும் கவனமிருந்தால் போதும்….எந்த மயக்கத்திலும் ஜாக்கிரதை தேவை….எதிலும் மனிதனுக்கு முழுச் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாதோ? ஏதேனும் தீய சக்திகள் தடை செய்ய சுற்றிலும் வட்டமிட்டுக் கொண்டேயிருக்குமோ?

கொஞ்சம் பாத்திரங்கள் இன்னும் தேய்ப்பதற்குக் கிடந்தன. அப்படி மீதி வைப்பதுதான் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. அந்த சூட்சுமம் அவளுக்குத் தெரியும். வாளியிலுள்ள பாத்திரங்களை மேடையில் அடுக்குவதுபோல் பாவனை செய்தாள். ஒரு மாதிரி மயக்கப் பார்வையோடு-(அந்தக் கண்ணுதான் என்ன வேலையெல்லாம் பண்ணுது?)  வழக்கமான அந்த ஓரத்தில் ஒதுங்கினாள். அவளுக்கும் வேண்டியிருக்கு போலிருக்கு…!. ஒரு புதுவகையான மணம் அவளிடம். அது என்றோ பிடித்துப் போனது. மூக்கிலேயே இருந்து கொண்டிருக்கிறது. அதுதான் எப்போ எப்போ என்று துடிக்கிறது. தொட்டு விடத் தொட்டுவிடத் தொடர்கிறது.

நளினீ…..உங்கிட்டத்தான் எவ்வளவு நளினம்….அடியே என் லட்டு…..என்றவாறே அவளை நெருங்கினான் சங்கரன்.

விரல் கூடப் படவில்லை. வாசல் கேட் திறக்கும் சத்தம். விடுவிடுவென்று கொல்லைப் பக்கம் அவள் பாய, இவன் வாயிலை நோக்கி ஓட…….வந்திட்டீங்களா…..எங்க வராமப் போயிடுவீங்களோன்னு வீடு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்னு  சொல்லிட்டு வந்தேன்….எதிர்பார்க்கலேல்ல…? என்றவாறே அவசரமாய் நுழைந்தாள் சங்கரி….! எதையோ நினைத்துக் கொண்டுதான் கிளம்பி வந்திருப்பாளோ? நல்ல வேளை பூட்டவில்லை. பூட்டியிருந்தால் சட்டென்று சந்தேகப்பட்டிருப்பாள்.

லீவு போட்டுட்டியா…..? பலே….. என்றான் சங்கரன். அவன் சந்தோஷம் அவனுக்கே செயற்கையாய் இருந்தது. என்றும் வராதவள் வந்தால்…?

அதான் சொல்லிட்டு வந்திருக்கேன்னு சொன்னனே…. எங்கிருந்து லீவு போடுறது…. நீங்கதான் திரும்பக் கொண்டு விடணும்……. நல்லதாப் போச்சு எனக்கு….. மத்தியான வேளைல பஸ்ஸே வராது…..

சொல்லியவாறே வேகமாய்க் கொல்லைப் பக்கம் நோக்கிப் போனவள்…..ஒரு நிமிடம் எதையோ நோக்கினாள். பிறகு கேட்டாள். என்னா கேள்விடா சாமி….!

அவர் வந்தப்புறம் நீ வந்தியா….இல்ல… முன்னமேயே வந்திட்டியா….? என்றாள் நளினியைப் பார்த்து. இதென்ன கேள்வி? எதிராளியை உலுக்குவதில் திறமைசாலி…….

ஏன்க்கா அப்டிக் கேட்குறீங்க…? – தலையைக் குனிந்தவாறே முனகினாள்  நளினி.

இல்ல…கொல்லைக்  கதவைத் திறந்து வச்சிருக்காரேன்னு தோணிச்சி….அதால கேட்டேன்…

அவள் முகம் இறுகிப் போயிற்று.

முன்னமயே வந்திட்டேன்க்கா….. என்றாள்.

உங்கள யாரு கொல்லைக் கதவைத் திறக்கச் சொன்னது? அவபாட்டுக்குத் தேய்ச்சு அடுக்கிட்டுப் போறா…! வெளியேறின பிறகு சாவகாசமா உள்ளே எடுத்து வச்சா ஆகாதா? சைடு வழியா வந்து சைடு வழியாவே போகட்டும்னுதானே கொல்லைல பாத்திரங்களைப் போட்டு வைக்கிறது? அப்படி என்ன அவசரம் உங்களுக்கு? வந்தா அமுக்கிட்டு உட்கார்ந்திருக்க மாட்டீங்களா? அவளென்ன பார்வை வேண்டிருக்கு?

சங்கரியின் சுளீரென்ற அந்தக் கேள்வியின் வித்தியாசமான, கொச்சையான  வார்த்தைப் பிரயோகத்தில் அப்படியே ஆடிப்போய் ஸ்தம்பித்து நின்றான் இவன்.

——————————————————-

 

 

 

உட்கார வேண்டும்

சீரா 

 

மும்பை பேருந்துகளில் வயோதிகர்களுக்கு இருக்கை கிடைக்குமென்றெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. வயோதிகன் என்று சொல்லுமளவிற்கு வயதொன்றும் ஆகவில்லை ஐம்பத்தேழுதான். ஆனால் ஜேப்படிக்காரர்கள் சமத்துவவாதிகள், நிற்பவர் வயோதிகர் இளைஞர் என்ற வஞ்சகம் பாராமல் சமர்த்தாக எடுத்துக்கொள்வார்கள். அதிலிருந்து தப்பிக்க வயோதிகன் போர்வைக்குள் மறைந்து இருக்கைத் தேட வேண்டியிருக்கிறது. சாலையின் இராக ஆரோகண அவரோகணதில் பேருந்து உருண்டுசெல்லும். ஓட்டுனரின் சாரீரத்திற்கு ஏற்றார்போல் இராகத்தின் வளைவு சுளிவுகள் கமகங்கள்; கானகாலம் என்றேதுமின்றி நித்தம் மாறும் இராகங்கள். மும்பை வீதிகளில் எல்லா வண்டிகளும் திரிஸ்தாயியில் சஞ்சரிக்கும் மோகனம் தான்.

கர்நாடக சங்கீதம் பரிச்சயமானது பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியில். வேறு வேலை கிடைக்கும் வரை அந்த வேலைதான் என்றாகிவிட்டது. பெரிதாக ஒன்றுமில்லை தேமே என்று கதவருகே நிற்க வேண்டும். கச்சேரி தொடங்கி ஒருமணிநேரம் கழித்துகூட வருவார்கள், வெடுக்கென்று கதவை திறப்பார்கள், இருக்கை இருக்கிறதா என்று இரண்டு நிமிஷம் நோட்டமிடுவார்கள். இந்தச் சந்தடியை பார்வையாளர்களால் சகிக்க முடியாது. அதனால் நான் கச்சேரி முடியும் வரை நிற்க வேண்டும், கதவை அரவமின்றி திறந்து இருக்கையைச் சுட்டிக்காட்ட வேண்டும். நிற்பதைத் தவிர வேறெதுவும் இல்லை.

நிற்க வேண்டும், நிற்க நிற்க தான் நிலத்தின் இசை கேட்க்கும். நிலம் தன்னுள் ஊன்றியவர்களுக்கு இசைத்துக் கொண்டே இருக்கிறது. நிலத்தின் மேல் நமது இசைக்கு மாறாய் கீழொரு இசை கிளரப்படுகிறது. மேலெழும் அதி தாரஸ்தாயி கீழே அனு மந்திர ஸ்தாயியாய் வீழ்கிறது, சம்பூர்ண சாதவம் சாதவ சம்பூர்ணமாய்  சுழல்கிறது. வீழ்தல், அங்கு எழுதல் என்பதே இல்லை வீழ்தல் மட்டும் தான். முந்தைய கணத்தைவிட இந்தக்கணம் ஆழமாக வீழ்ந்து முந்தைய வீழ்தலை எழுதலாய் காட்டும் மாயம். மேலெழும் காந்தாரத்திற்கு சிலிர்த்து நிசாதத்திற்கு அடங்கும்.பிரம்மாண்டமானவை அதற்குள் பொதிந்திருக்கும் மறுபக்கத்தை தன்னுள் ஒன்றாதவருக்கு காட்டுவதில்லை, தெய்வத்தைப் போல கடலைப் போல மலையைப் போல யானையைப் போல. நிலத்தின் இக்குறும்புகளும் அதனுள் ஊன்றியுள்ளவர்களுக்கே பிரத்யேகமானவை. சிலநாட்களில் மரங்களின் அசைவுகளெல்லாம் திருதமாய் பட்டது. கதவருகே நின்றுக்கொண்டு நிலத்தின் இசையில் சஞ்சரிப்பேன்.

மேலாளர் தெரிந்தவரென்பதால் இதைச்செய்யச் சொன்னார் மற்றபடி இது ஒரு வேலையில்லை கச்சேரிக்கான மேடையலங்காரங்களுக்கு உதவ வேண்டும்,நின்றுக்கொண்டே.

நிற்றலென்பது என் வாழ்வோடு பிணைந்தது. சிலநேரங்களில் யோசிக்கையில் நிற்றலைப் பிரித்துவிட்டால் என்னில் எதுவுமே மிஞ்சாது என்று தோன்றும். மும்பைக்கு வந்ததற்கு பின்பும் நிற்றல் தான் இருக்கிறது. ஊரில் கொட்டகையில் மகத்திற்கொரு அயல்நாட்டு படங்கள் வரும், அதில் வரும் முத்தாடல்களும் காட்சிகளும் நம்மூர் படங்களில் கிடையாது. ஆட்டத்திற்கு போகிற அவசரத்தில் கொம்பை ஆழமாக ஊணவில்லை, ஆள் வந்து பார்ப்பதற்குள் மாடு கால்வாசிக்கும் மேல் வயலுள் புகுந்துவிட்டது. இராத்திரி வீடுசேர்கையில் அப்பா ஏதும் பேசாமல் துணியை உருவி கம்பத்தில் கட்டினார்.

நின்றேன். அதுவரை நிலம் எனக்கு அவ்வளவு அணுக்கமில்லை. நிலம் நகராவின் துள்ளல்களோடு பொரிந்தது . நிலம் ஓயாது காலடிகளை முடிச்சிடுகிறது. நிலத்தில் அத்தகைய எண்ணில்லா நரம்புகள் புரையோடுகின்றன. ஒவ்வொரு காலடி மீட்டல்களுக்கும் அந்நரம்புகளின் அதிர்வுகள். நரம்புகள் அறுபடும்போது மீண்டும் புனரமைப்பு, ஓர் உயிரினம் வீழ மற்றொரு எழுதல், நிலம் அதன் நரம்புகளை மீட்ட உருவாக்கியதுதான் எல்லாம். தீராத மீட்டலுக்காக தோன்றியவர்கள் நாம். அன்றிரவு முழுக்க உலகின் அத்தனை உயிரினங்களின் மீட்டல்களும் என் காலடியில் ஒன்றியது. அதில் உள்ள லயத்தைப் பார்க்கையில், இந்நிலம்தான் உலகஉயிர்களின் ஒவ்வொரு காலடிகளையும் நகர்வுகளையும் நிர்ணயிக்கிறது. தன் லயத்திற்கேற்ப நம்மை இட்டுச்செல்கிறது. நிலம் பிரம்மம், அதில் ஒன்றி நிற்றலே மாதவம். அதில் ஒன்றி நமக்கான நரம்பை அறுத்துச்செல்வதே முக்தி. சகல நரம்புகளையும் துண்டித்து வானுறைதல்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
  தெய்வத்துள் வைக்கப் படும்.“

அனைத்து நரம்புகளும் பந்தாய் என் காலடியில் கிடக்க நான் சர்வப் பிரஞ்ஞனாக நின்றிருந்தேன். அக்கணத்தில் சர்வ உயிர்களையும் இட்டுச்செல்லும் விசை நான். கட்டைவிரல் கீறலில் மொத்த உலகமும் இயங்கும். அது ஓர் அகால நிஷ்டை. நடு சாமத்திற்கு மேல் நண்பன் வந்து கட்டை அவிழ்த்தான். சிறுமூட்டையுடன் அன்றிரவே வீட்டைவிட்டு ஓடினேன்.

எந்த நம்பிக்கையில் மும்பை வந்து சேர்ந்தேனென்று தெரியவில்லை. கடைசி ஐந்து ரூபாய் நோட்டுடன் வேலை தேடியலைந்தேன். மொழி தெரியாது. இறுதியில் கிடைத்தது பேச அவசியமில்லாத வேலை. நெடுஞ்சாலை உணவகத்திற்கு முன் நின்று கொடியாட்ட வேண்டும். அங்கு வேலை பார்த்த நாட்களிலெல்லாம் நான் உணர்ந்தது கால்களை மட்டும்தான். விரைவாக கடந்து செல்லும் வாகனங்களின் அதிர்வை நான் சுமந்து நிற்ப்பேன். மனிதர்கள் சாப்பிடும் நேரத்தில் நான் சாப்பிட சென்றுவிட்டால் அந்நேரத்தில் கொடியாட்ட முடியாது அதனால் அமனித நேரங்களில்தான் சாப்பாடு. சாப்பிடும் நேரத்தில் மட்டும்தான் என் முழுவுடலையும் உணர்வேன், சாப்பிட முடியாது ஊரிலிருந்து வரும்போது எடுத்துவந்த பணம் அக்கா கல்யாணத்திற்காக வைத்திருந்தது. மீண்டும் நிற்பேன் என் கால்களை மட்டுமே உணர்வதற்காக. அதன்பின் தான் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியில் வேலை.

இப்பொழுதும் கதவை திறக்கிற வேலைதான் ஒரு நட்சத்திர விடுதியில். அதேபோல் நின்றுகொண்டே. என் வாழ்நாளில் நான் உட்கார்ந்ததே இல்லை என்று கூட தோன்றும். விடுதியில் வேலை செய்யத் தொடங்கிய சிறிது நாட்களிலே நினைத்தாலும் உட்கார முடியாதபடி ஆனது. காலில் நரம்புகள் முடிச்சிட்டாற்போல் சுருண்டுகொண்டன, சிவப்பும் கருப்புமாய். அவற்றை பார்க்கும்பொழுதெல்லாம் அன்றிரவு என் காலுக்கடியில் உலக உயிர்களின் நரம்புகள் கிடந்ததுதான் நினைவிற்கு வரும். அன்று நான் ஊழி மூர்த்தி ஒரே கணத்தில் சகல நரம்புகளையும் அறுத்து வீசியிருக்கலாம், இப்பொழுது அதே நரம்புகள் என் கால்களில் சுருண்டுக் கிடக்கின்றன. வலியைத் தாங்கிக்கொண்டு நிற்கலாம் உட்கார்ந்தால் மீண்டும் நிற்க முடியாது. நிற்பேன் வயிற்றை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு.

பேருந்து, நிறுத்தத்திற்கருகில் வந்துவிட்டது இப்பொழுதே கதவருகில் நிற்கவேண்டும். காலை ஒன்பது மணியானாலும் அரசு அலுவலகத்தில் கூட்டம்தான். வரிசையில் நிற்க வேண்டும். நிற்றலே நானாகிவிட்டேன். பிறப்புவிகித அதிகரிப்பால் இறப்புவிகிதமும் அதிகரிக்கிறது. கல்லறைகளில் புதைக்க இடமில்லை, இடமிருக்கிறது ஆனால் மனிதனுக்கு அடையாளம் அவசியம். இறந்தபின்னும் அவனுக்கொரு அடையாளமாய் ஒரு கல்லறை. முதலில் தங்கள் குடும்பத்தினரை புதைத்த இடத்தின் மேலே தங்களது மற்றொரு குடும்பத்தினரை புதைக்கலாம். இப்பொழுது எந்த பிணத்திற்கு மேல் அதிக பிணம் இல்லையோ அங்குதான். ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த எலும்புக்கூடுகளுக்குத் தான் நான் மாலை போடுவேன் மெழுகுவர்த்தி ஏற்றுவேன் என்று புரட்சிக்கொடி தூக்கியதில், அரசு ஒரு புதுமை செய்தது. செங்குத்து கல்லறைகள். பிணங்களுக்கென்று சுவரெழுப்பி அதற்குள் அப்படியே செங்குத்தாக புதைத்துவிடுவது. இதற்கும் கடுமையான போட்டி. நான் என் வாழ்நாள் முழுதும் நின்றே கழித்துவிட்டேன். ஒரு சில சமயங்களில் கால்களை துண்டாக வெட்டிவிடலாம் என்று கூட தோன்றும். இப்பொழுதெல்லாம் நிலத்தில் நிற்கவே அருவருக்கிறது. ஒவ்வொரு காலடியிலும் நிலம் நம்மை உறிஞ்சுகிறது செத்தையாக்குகிறது. நம்மைக் கொண்டே தன்னை பெருகிக்கொள்கிறது. அதன் மலைகளும் பிரம்மாண்டங்களும் இறந்த உயிரினங்களின் பிம்பங்கள். அதன் நரம்புகள் அறுபடுவதேயில்லை, பல முடிச்சுகளுடன் சீரமைக்கப்படுகிறது.எவராலும் விடுவிக்க முடியாது பல முடிச்சுகளுடன் கூடிய சிக்கல். நமது காலடியில் அமுங்கும் நிலம்தான் இமயமாய் உயர்கிறது. நாமில்லையெனில் நிலத்தின் வளைவுகளும் மேடுகளும் குகைகளும் கிடையாது, அது வெறும் வசீகரமற்ற தட்டையான பரப்புதான். அதன் வசீகரத்தை விடுவதற்கு மனமில்லை. நமது காலடிச் சுவடுகள் அதற்கு தேவை. எல்லோரையும் நடக்கத் தூண்டுகிறது. சிறகுள்ள பறவைகளைக் கூட எப்படியோ வசீகரித்து தன்மேல் நடக்க வைக்கிறது. எப்பொழுது ஓர் உயிரினத்திற்கு நடக்கத் திராணியில்லையோ அப்பொழுதே அகற்றிவிடுகிறது.

இந்நிலத்தின் பகடையாய் நான் என் வாழ்நாள் முழுக்க உருண்டிருக்கிறேன். இந்நிலம் எனக்கு கொடுத்த ஒரே அடையாளம் நிற்றல். நான் இறந்தபிறகாவது அவ்வடையாளம் அழியவேண்டும். இதற்கு மேலும் என்னால் நிற்க முடியாது. எப்படியாவது யாரிடமாவது மன்றாடி இறந்தப் பின்னாவது நிற்காமல் இருக்க வேண்டும். வரிசை ஒரு வழியாக தேய்ந்து தேய்ந்து கரைந்தது.

“ தும்ஹால காய் ஹவே ஆஹே ? ( என்ன வேண்டும்? )  “

“ மலா பசாயாச்சே ஆஹே ஷாப். ( உட்கார வேண்டும் ) “

 

 

 

அழிவு

வைரவன் லெ ரா 

‘வானம் பிளந்து கடலாய் கொட்டும்
பூமி பிளந்து தாகம் தீர்க்கும்’

‘சதைகளால் பிணைக்கப்பட்ட பெரும்தொகுப்பு மேலும் கீழுமாய் ஒரே நேரவரிசையில் உடலை இறக்கி ஏற்றியது. ஆத்துமாக்கள் அவர்களின் நிழலாய் காலடியில் கிடந்தது. எவரின் விழித் திரைகளும் அதற்குரிய இடத்தில் இல்லை. அவர்கள் தீர்க்கமாக நம்பினார்கள். ஆண்குறிகள், பெண்களின் மார்புகள் அறுக்கப்பட்டும், யோனிகள் சிதைக்கப்பட்டும் இரத்தம் இறுகி காய்ந்த உயிருள்ள சவங்கள் அவர்கள். குழந்தைகளே இல்லை, முன்னரே அறியப்பட்டு பலியிடப்பட்டு இருப்பார்கள். ஒளியில்லா மாமிசப் பந்தின் அகம் போலவே, இருளடைந்த உலகம் அவர்களுக்காகவே வாய்க்கப்பட்டு இருந்தது, சாம்பலே உயர சூழ்ந்து இருந்தது. அகரமும் உகரமும் மட்டுமே உக்கிரமாக காற்றுவெளியில் நிறைந்து இருந்தது, இவ்வொலி அவர்களின் தொண்டையில் இருந்தும், கால் கீழ் இருந்த நிலத்தில் இருந்தும் பிறந்தது. தூரவெளியில் கொலை மிருகங்கள் நான்கு கால் சாதுக்களால் வேட்டையாடப்பட்டது. எல்லாமுமே நடந்தாக வேண்டும், அதுதான் இந்நிகழ்வின் தீர்ப்பு எனத் தீர்க்கமாக அவர்கள் நம்பினார்கள். இளையவன் ஒருவன் தூரமாய் இருந்தப்படி இதையெல்லாம் கூர்க்கல் கொண்டு பாரையிடுக்கில் வரைந்தப்படி இருந்தான்’

“புதிய ஏற்பாட்டுலயும் புதிய உலகம் இருக்கு, எழுதினது யோவான். அவரும் இயேசுவோட சீடர்னு சொல்றாங்க. விவிலியத்துல நிறைய இடத்துல யோவான் வராரு. ஆனா எல்லாரும் ஒரே ஆளுன்னு எங்கயும் தெளிவுகள் இல்ல. அது ஒரு சாது மாதிரி பொதுவான பேரா இருக்கலாம். விஷ்ணுவோட அவதாரத்துலயும் கல்கி இதுக்காகத்தான், கலியுகத்துல நடக்கும்னு அவங்களும் நம்புறாங்க. ஐரோப்பிய, கிரேக்க தொன்மங்கள் எல்லாமுமே புதிய உலகம் பற்றி பேசுது. இந்த குகை சிற்பங்கள் பாருங்க, சின்ன சின்ன கிறுக்கல்கள் மனிதர்களா இருப்பாங்க. எல்லாருமே மேல பார்க்கிறாங்க. வானம் கிழியிற மாதிரி கிறுக்கிருக்காங்க. அதோ அந்த பக்கம் மொத்தமா கிறுக்கல்கள் அழிவோட குறியீடு மாதிரி இருக்கு. மொத்தத்துல உலகம் முழுக்க அழிவு எல்லா மதத்துலயும் பேசப்பட்டு இருக்கு, குறிப்புகள் அவங்க புனித நூலுல தொகுத்து இருக்காங்க” ஜெயனின் பேச்சுக்களை ஆடம் வெறுமனே கேட்பது போன்ற முகப்பாவனையில் இருந்தாலும், வார்த்தைகள் உள்ளுக்குள் என்றோ கண்ட ஆவணப்படத்தின் காட்சிகளை நினைவுப்படுத்தியது.

“ஜெயன், நீங்க சொல்றத நா ஏத்துக்கிறேன். இயல்பாவே ஏதோ ஒரு கணத்துல பிறந்த எல்லா ஜீவராசியுமே அதுக்கான கர்மபலன் செய்யுது. மாத்தி செய்றது ஆறறிவு கர்வத்துல நாமதானே. இயற்கையின் கட்டுமானத்த சிதைக்கிறோம். இதுக்கு கடவுள் மேல பழி போடுறோம். இந்தியா வந்ததுமே இங்குள்ள தொன்மங்கள், பழங்குடி கதைகள் மேலதான் என்னோட ஈர்ப்பு எல்லாமுமே. உங்க கூட நிக்கிறதுக்கான காரணம் அதுதான். உலகம் முழுக்க இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்துல அழிவுக்கான நாளுன்னு அவங்களோட மூதாதையர் குறிப்பிட்ட நாட்களுல எவ்வளோ குழு தற்கொலைகள் நடந்ததன. தவறுகளுக்கு நாம இன்னும் பயப்படுறோம். அதோட வெளிப்பாடு குறிப்புகளா எழுதப்பட்டு ஒரு வித புனித நிலையை அடையும். கூடவே பல கிளைக் கதைகள் இயல்பாவே இணையும். பல நதிகள் கலக்கிற கடல் மாதிரி, கடல் எல்லாத்தையும் உள்வாங்கி சலனமில்லால் கரையில் இருந்து பார்க்கிறப்ப தோணும். உள்ள போனாத்தான் கடலோட தன்மை புரியும்”

“இயற்கையோட எல்லா உணர்ச்சிகளும் கடவுளா மாறுது. மழை, நெருப்பு, இடி, காற்று, வானம் பஞ்சபூதங்களும், கூடவே மனித உணர்ச்சிகளும் அன்பு, பேராசை, பொறாமை, இரக்கம், காமம் கடவுள்களா உருமாற்றம் அடையுது. புனித நூல்கள் உணர்ச்சிக்குவியலின் கூட்டு உருவம் தான். இறுதியாய் அறம், மனிதம் பேசப்படும். எல்லா இசமும் இதைத்தான் வேற வேற கருத்துகளா பதிவு செய்யுது” ஜெயன் சொல்லிக்கொண்டே பாறை ஒன்றில் ஏறி அமர்ந்தார். வயதுக்கான முதிர்ச்சியை விட அவரின் அணுகுமுறை இருந்தாலும், உடலளவில் மிகவும் வலுவானவராக இருக்கிறார் என ஆடம் யோசித்தான். அவனும் பாறைகளில் ஏறினான். “எத்தனையோ ஆதிக்குடிகளோட நேரடி உரையாடல் செஞ்சுருக்கேன். அவர்கள் தங்களுக்கான தவறுகளின் பிராயச்சித்தமா கடவுளுக்கு பலி குடுக்கிறாங்க. உணவுக்கான விலங்கை வேட்டையாடுறது, கூரை வேய மரத்தோட இலைகளை அறுக்கிறது. இலைகள் மரத்தோட கண்களுன்னு சொல்றவங்கல சந்திச்சு இருக்கேன். முக்கியமா பூமில இருக்கிற எல்லா உயிருக்கும் ஆன்மா இருக்குன்னு நம்புறாங்க. மாற்றம்ங்கிற பேர்ல நாம என்ன செய்யுறோம்.” ஆடம் பேசிக்கொண்டே ஜெயனை நோக்கினான். வெறுமனே கைகளை பிசைந்தப் படி, நுனிவானின் எல்லைகளை பார்த்தப் படி அமர்ந்திருந்தான்.

ஆடமின் கண்கள் தன்னிடம் மையம் கொண்டிருப்பதை உணர்ந்த ஜெயன் “இந்த குகை சிற்பங்கள் வரைஞ்சவங்க மனநிலை என்னவா இருக்கும். அவங்க என்ன பாத்திருப்பாங்க, நடந்தத வரைஞ்சாங்களா இல்ல நடக்க போறத வரைஞ்சாங்களா”. “சரி, இறங்குவோம். இருட்ட ஆரம்பிக்குது” ஆடம் எழுந்து நின்றான். செந்நிற கதிர்கள் விளையாட்டை முடித்து அதன் கூடு திரும்ப ஆரம்பித்தது. பாறைச் சறுக்கம் அவர்களின் பாதங்களைப் பற்றி நடக்கும்படி நிர்பந்தித்தது.

ஹவாயின் எரிமலை வெடிப்பை நேரில் காண அவர்கள் வந்திருந்தார்கள். வந்தவிடத்தில் இக்குகை சிற்பங்களை காண அவர்கள் தங்கியிருந்த அறையின் மேலாளர் கேட்டுக்கொண்ட படி சென்று வந்தார்கள். அவர் தன்னை லோனே என்று அறிமுகப்படுத்தி கொண்டார். வந்தவர்கள் எழுத்தாளர்கள் என்பதாலும், ஒருவர் இந்தியர் இன்னொருவர் ஜெர்மானியர் என்பதாலும் அவர்களோடு உரையாடலை விரும்பி அன்றைய இரவே விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார். ஜெயனும் ஆடமும் அறையில் அதிக நேரம் இருந்ததால் நேரமாகவே விருந்துக்கு சென்றார்கள். விடுதியில் அவருடைய அறையில் எல்லாமுமே தயாராகவே இருந்தது. விரும்பி வரவேற்றார்.

“உங்களை நான் மிகவும் மதிக்கிறேன். வந்ததற்கு நன்றி.” சிரித்த முகத்துடன் லோனே கூறினார். “எங்களுக்கும் மகிழ்ச்சிதான்” என்றனர் இருவரும். “கிலாயூயா எரிமலை பத்தி ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கோம். எங்க நிலத்தில எரிமலைகள் பற்றிய புரிதல் குறைவு. உங்களோட வாழ்வியல் எல்லாமுமே வியப்பா இருக்கு” தனக்கும் சேர்த்து ஆடம் பேசுவதை ஜெயன் கேட்டுக்கொண்டு இருந்தான். லோனே சிறுக் குழந்தை போல் தலையை ஆட்டியப் படி கேட்டப்படி இருந்தார். “இத்தீவு எரிமலைகளால் ஆனதே, எங்களுடைய கடவுள் பீலே இதை படைத்தாள். அவள் நெருப்பின் கடவுள். அவளின் ஆணைக்கு இணங்க நெருப்புக் குழம்புகள் கடலின் தணுப்பில் இறுகி நிலமாய் மாறி இத்தீவு கூட்டங்கள் உருவானதாய் நாங்கள் நம்புகிறோம். அவள் பூமி அன்னைக்கும், வானத்தின் அதிபதி தந்தைக்கும் பிறந்தவள். பலப்பாடல்கள் அவளின் கதைகளை பேசுகிறது. நாங்கள் அவளின் வாயிற்காப்பாளன் என நம்பப்படும் லோனா மாக்குவாவின் வழியினர், அவர்தான் எரிமலை குழம்பை வெளியே திறக்கிறார். அவளின் நெருப்பின் சூட்டால் உலகம் நிலைகுழைந்தது. இதனால் கடலின் கடவுள் நாமகவொகாகயின் பீலே உடன் சண்டையிட்டாள், இறுதியில் பீலே கொல்லப்பட்டாள். அவளின் ஆன்மா இறக்கவில்லை. அதுவே கிலாயூயா எரிமலையில் புதைந்துள்ளது. அவள் உக்கிரமாய் புகையிராள், அவளை நாங்கள் தணிக்கிறோம்.” லோனே சொல்லிமுடித்ததும். ஜெயனும் ஆடமும் மௌனமாய் அமர்ந்திருந்தனர். லோனே அவர்களுக்கு உணவைப் பரிமாற ஆரம்பித்தார்.

முதலில் அவர்களின் சாராயம், ஜெயன் வேண்டாம் என மறுத்துவிட்டான். ஆடம் ஒரு குவளையை எடுத்துக்கொண்டான். “ரொம்ப ராவா இருக்கு. ஒருவித புளிப்பு ருசி, எனக்கு பிடிச்சிருக்கு.”, “இது வேரில் இருந்து உருவாக்கப்படுகிறது” என்றார் லோனே. ஒரு அமெரிக்கன் மூக்கு அவருக்கு அல்ல, பெரிய மூக்கு, சிறிய கண்கள். தெற்க்காசியா நெற்றிவாக்கு. ஒட்டிய வயிறு, உயரமும் அவ்வளவு இல்லை. ஜெயன் அவரையே பார்த்தப்படி இருந்தான். “கிலாயூயா, நாளை நெருப்புக் குழம்பை கக்கலாம் என செய்தி வருகிறதே.” ஜெயன் உரையாடலை விரும்பினான். “ஆம், நாளை இருக்கலாம். எங்களுக்கு பழகி விட்டது. வியப்பெல்லாம் உங்களுக்குத்தான்” என்றார் லோனே. “நீங்கள் எழுதுகிறவர்கள், ஆகவே கேட்கிறேன். அமெரிக்காவை எப்படி பார்க்கிறீர்” பார்வையை குவித்தபடி கேட்டார் லோனே. “பிழைக்க தெரிந்த வியாபாரி” என்றான் ஆடம். ஜெயன் பற்கள் வெளித் தெரியாமல் உதட்டை இழுத்தபடி சிரித்தான்.

“எதிர்பார்த்தேன், நாங்கள் இங்கே நடிக்கிறோம். சம்பளம் நடிப்புக்கான கூலி” லோனேவும் சிரித்தார். ஆடமும் லோனேவும் மாற்றி மாற்றி குவளைகளை நிரப்பினர். “நீங்கள் அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி விட்டீர்கள் அல்லவா” லோனேவின் கேள்விக்கு, ஆடம் “ஆமா, எனக்கு கூட்டமா ஓரமா பாக்க விருப்பம் இல்லை. தனியா காட்டுல இருந்து பாக்கணும்”. லோனே தலையை அசைத்தார். ஆடம் மீண்டும் “உங்கள் கதைகளில் வருவதின் சாராம்சம் அனைத்து பழங்குடிகளின் கதைகளின் மையம் தான். ஒரு தெய்வம் அழிக்கும், ஒன்று காக்கும். இடையே நாம, இதனாலே இந்த பூமி உருவாக்கப்பட்டது” என்றான். ஜெயன் இருவரும் பேசுவதை கவனித்தப்படி மேஜையில் இருந்த அன்னாச்சி பழங்களை ருசித்தான். “உலகம் உருவானது, நாமும் உருவானோம். கூடவே மனிதனின் உணர்ச்சிகளும் பிறந்தது. இங்கே எது தெரியுமா காக்கும் கடவுள், அன்பு, அறம், கருணை இன்னும் இன்னும். அழிக்கும் கடவுள் முக்கியமாய் பேராசை. அதுவே போரை தோற்றுவிக்கிறது. நிலங்களை, நீரை, காற்றை சொந்தமாக்குகிறது. பீலே பேராசைப்பட்டாள், கடல் முழுக்க தன் குழம்பால் நிரப்பி, அவளுக்கென தனி உலகம் படைத்தாள். யோசியுங்கள் கடல் மறைந்து நிலமே இருந்தால் என்னவாகும், தோற்றுவிட்டாள். இருப்பினும் அவள் எங்கள் கடவுள். அவளின் இருப்பிடம் கிலாயூயா. அங்கே பூமிக்கு அடியில் இன்னும் தகிக்கிறாள்” லோனே பேசிக்கொண்டே அடுத்த குவளைக்கு சென்றார். ஆடம் நிறுத்திக் கொண்டான். பின் அவர் அளித்த உணவை உண்டனர். பின் விடைபெற்று அவர்கள் கிளம்பும் வேளையில் லோனே “நாளை மாலை தயாராய் இருங்கள்” என்றார்.

இரண்டாயிரத்து பதினெட்டு மே மாதம் மூன்றாம் தேதி கிலாயூயா நெருப்பு குழம்பை கக்கியது. வெகுதொலைவில் ஜெயனும், ஆடமும் நின்றுகொண்டிருந்தார்கள். வானுக்கும் பூமிக்கும் செம்பிழம்பு பாதையை அது உருவாக்கியது. வானம் இருண்டு அழிவின் நாளாக புனிதநூல்களில் எழுதிய வாக்கியத்தை உண்மையாக்குவது போலவிருந்தது. ஆடம் கூறினான் “இதெல்லாம் அறிவியல் தானே, ஹவாய் பசுபிக் பெருங்கடலுல ஆழ்கடல் தட்டுக்களுக்கும், டெக்டோனிக் அடுக்குகளும் நெருங்கி இருக்கிற இடங்களில் எரிமலை இருக்குது . இங்கேயெல்லாம் பாறைகள் பூமியின் உள்ளடுக்கில் சூட்டில் உருகி பாறைக்குழம்பாகி, பூமியின் மெல்லிய அடுக்கு ஓட்டு வெடிப்பில் ஏற்படும் துளை வழியே வெளியே வருது. உள்ளேயிருந்து பச்சை மண்டல வாயுக்களும் கூடவே வருது.”, ஜெயன் “பூமியின் உள்ளடுக்கு எவ்வளவு சூடாக இருக்கிறது இங்கே. இதன் மேலே ஒரு தட்டு, அதன் மேலே பல அடுக்கு. அதுக்கு மேலே மண், தாவரங்கள், விலங்குகள், கூடவே நாம. இயற்கை அத சமச்சீராய் வச்சுருக்கு.”,”என்னைக்காவது உலகம் அழிவை சந்திச்சு தானே ஆகணும். அழிவின் மத்தியில் நின்னு அதோட விளையாட்ட பாக்கணும் “ ஆடம் சொல்லிவிட்டு அமைதியானான். பெரும்சத்ததோடு பூமி அதிர, நின்றிருந்த இடம் மெலிதாய் குலுங்கியது. இன்னும் சாம்பல் சூழ, இருவரும் விடுதிக்கு திரும்பினர்.

ஏற்கனவே இருட்டிய இடத்தில் இன்னும் இருள் சூழ்ந்து கொண்டிருக்க, அறையின் கதவை யாரோ தட்ட ஆடம் கதவைத் திறந்தான். லோனே நின்றுக் கொண்டிருந்தார். “செல்லலாமா”, எனக்கேட்க, இருவரும் தயாராய் அங்கிருந்து அவரோடு சிறிய சிற்றுந்து ஒன்றில் கிளம்பினர். எங்குமே ஒளியில்லை, தூரத்தில் பிரகாசமாய் ஒளிர்ந்தப்படி அனல்கங்கு புகைந்தப்படி தெரிந்தது. மூவருமே பேசிக்கொள்ளாமல் இருந்தது, மேலும் அவ்விடத்தை மௌனமாக்கியது. மலைக்குன்றில் ஏறி, வானமே இறங்குவது போலவிருந்த பாதையில் வண்டி இறங்கியது. ஓரிடத்தில் மூவரும் இறங்கி சிறிது தூரம் நடந்தனர், “இது இன்னும் எத்தனை நாள் தொடரும்” கேட்டான் ஆடம். “ஆகலாம், சில வாரங்கள் கூட. நான் அறிந்து நான்கு வாரங்கள் மேலே கூட ஆனதுண்டு.” என்றார் லோனே. “நாம எங்கே போகிறோம்”, “எங்கள் வழிப்பாட்டை காண விருப்பமா?”, “நிச்சயமாக” என்றனர் இருவரும்.

ஏற்கனவே சிலர் குழுமியிருந்தனர். ஆடம், ஜெயன் போலவே சிலர் அக்குழுவில் இருந்து விலகி நின்றனர். லோனேவின் முகச் சாடையில் ஆண்களும், பெண்களும் முகம் முழுக்க வெண்மையும், சிவப்பும் கலந்த மையால் பூசி, ஆடைகள் இன்றி மார்பிலும், ஆண்குறியிலும், யோனியிலும் சிவப்பு மையால் பூசியிருந்தனர். தூரமாய் பூமியில் துளைப் போலவிருந்த இடத்தில் நெருப்பு புகைந்தப்படி இருந்தது. லோனே இருவரின் அருகில் வந்தார் “இது பீலேவிற்கான காணிக்கை. எங்கள் மூத்தோர் அழிவின் நேரங்களில் இதுப் போன்ற சமயங்களில் பிறப்பை தடுக்கும் உயிர் உறுப்புகளை அறுத்து காணிக்கை கொடுத்தனர். ஒரு வித நம்பிக்கை. எங்கே மனிதர்களின் எண்ணிக்கை பெருகி, எடை தாங்காமல் பீலே வெளி வருகிறாளா என்று பயந்து உயிர்பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறோம் என அவளுக்கு அறிவித்தனர். இப்போதெல்லாம் அதன் தொடக்கமாக மிருகத்தின் குருதியை பூசி சடங்கு செய்கின்றனர், உறுப்பு சிதைவெல்லாம் கிடையாது” என்றார். “நீங்கள்” என ஜெயன் கேட்க “எனக்கு நம்பிக்கையில்லை” என முடித்தார்.

தோலால் முடையப்பட்ட மத்தளம் ஒலிக்க, பால் வேறுபாட்டின்றி வட்டமாய் நெருப்பை சுற்றி அவர்கள் அமர்ந்தனர். வார்த்தைகள் இயைந்து ஒலி பிறழ்ந்தது அவர்களின் குரலின் வழி. இருவரும் உடல் சிலிர்த்து, காணும் காட்சிகளை மனதில் பதியவைத்தனர். இளம் பன்றியை அக்குழியில் இட்டனர். நேரம் ஆக ஆக ஒலி இன்னும் பிறழ்ந்தது. அவர்கள் மேலும் கீழுமாய் உடலை அசைத்தனர். நெருப்பு இன்னும் உக்கிரமாய் எரிவதை போல உணர்ந்தார்கள். மனிதர்கள் ஒருவரோடு இணைந்து நெருக்கமாய் ஒரே உருவம் போல் ஆனார்கள். நெருப்பின் நிழலில் பெரும் உருவம் போல கரும்புகை புகைந்தது. அக்கூட்டத்தின் மேலே வாரி அவர்களை உண்ண வரும் மாமிசப் பட்சி போல் அது நிழலாடியது. இசைக்கும் ஒலிக்கேர்ப்ப அசைவு அவர்களின் உடலால் நெய்யப்பட்டது. லோனே அருகிலே அமர்ந்திருந்தார் “இவர்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் தான், மரபின் நீட்சியாய் சடங்கை கழிக்கின்றனர். அழிவை தடுக்கும் பொருட்டு ஒரு சடங்கு. ஆனால் இதெல்லாம் இயற்கையின் நியதி தானே. இவர்களுக்கு ஒரு ஆசுவாசம் அவ்வளவே” என்றார்.

ஆடம் அவர்களை நோக்கி “எதுதான் பிரளயம் , புதிய உலகம் தான் எது” என்றான். “எதை கேட்கறீர்கள். அழிவு எனத் தனியாக ஏதும் இருக்கிறதா? புதிய உலகம் பாம்பு சட்டையை உரித்து விட்டு வருவது போல பிறக்குமா என்ன?” சிரித்துக்கொண்டே சொன்னார் லோனே. அவர்கள் சடங்கை முடித்து இருந்தார்கள். லோனே குழுவின் அருகில் சென்றார். “ஜெயன், புனித நூல்கள் சொல்ற அழிவு. சுனாமி, எரிமலை வெடிப்பு, பூகம்பம், புயல் மாதிரி இல்லையா?” கேள்வி மட்டுமே ஆடமிடம் இருந்தது. “அதெல்லாம் இயற்கை, தன்னை தானே மீள்ளுருவாக்கம் செய்ற உத்தியா இருக்கலாம் இல்லையா “. “அப்போ கலியுகம், விவிலியத்துல சொல்ற அப்போகலிப்ஸ் எல்லாமுமே”, “இயற்கையா உருவாகுமான்னு தெரியல. ஒருவேளை நீங்களும் நானும் அதற்கான முயற்சில இருக்கலாம் இல்லையா”.

பேசிக்கொண்டிருந்த இருவரையும் உணவருந்த லோனே அழைத்தார்.

அறியாமை

அனுஷா  

ஆர்ப்பரித்து கரைதொட முனையும்
வெண்பஞ்சு நுரைகளாய்
எத்தனை முறை நிகழ்ந்தும் அடங்காத பிடிவாதம்

இலக்கு எட்டப்பட்டதா
இல்லை பிரயத்தனமே இலக்கா
அளப்பரியா எல்லையினை ஆட்கொள்ளும் எத்தனிப்போ

முயற்சிப்பிழையா
அல்லது உருவகப்பிழையா
எதன் பிழை திருத்த இந்த தொடர்முனைப்பு

அலையெனும் வடிவினுள் உருவகித்துச் சிக்கிய
முழுநிறை பேராழியின் அறிவிலிப் போராட்டம்

———————————————————————

அடையாளப்படுத்தும் தனிமையின் பேருரைகள்

 

குறிஞ்சி மைந்தன்

 

தோலுரித்துப் போட்டச் சட்டையை
மீண்டும் கஞ்சி தேய்த்து ஊற வைத்துவிட்டு
பொழுது மறையும் நேரத்தைக் கணக்கிட்டு கொண்டே
கொடியில் உலர்த்திக் கொண்டிருந்தேன்.

மஞ்சள் வெய்யில் என் உடலை நனைத்தது
கொடியில் உலரவிட்ட என் ஆசைத்தோலும் கருக ஆரம்பித்தது.

நிர்வாணம் போர்த்திய உடையுடனே
உல்லாசப் பறவைப்போல்
காடுகளிலும் அடர்ந்த மரங்களிலும்
பயத்தை அப்பிருக்கும் பொந்துகளிலும்
நான் வாழ்வை வாழ்ந்து பார்க்கின்றேன்.

வெட்டுக்கிளிகள் சரசம் பண்ணுவதைப் பார்த்து
நான் என் மனைவியிடம் ஏமாந்துபோனதை
நினைத்து கண்ணீர் சிந்துகின்றேன்.

கண்ணைத் திறப்பதற்குப் பதிலாக,
விடியலைத் திறந்துவிட்டிருந்தேன்
நேற்று குகைப் பொந்தில் அலாதி வாழ்வை
வாழ்ந்துவிட்ட தருணத்தை எச்சில் விட்டுப் பார்க்கும்
ஒரு சிலந்தியின் பின்னலைப்போல் உணர்ந்து பார்க்கிறேன்.

எமது எழுத்துகளுக்கு வலி எடுக்கின்றன
குறைந்தது இரண்டொரு கவிதையாவது
அல்லது
நீலப்படம் பார்த்த மகிழ்வில்
என் படுக்கையில் படுத்துவிட்ட
ஓர் இளம்பெண்ணை நினைத்து, நினைத்து
காதலைக் குறித்த பேருடையாடலை
இப்பொழுதும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் என்னுடையை
பேச்சை, மொழியை, அடையாளத்தை
கேட்டுக் கொண்டிருக்கலாம்
அல்லது
கேட்காமலும் போகலாம்
நான் இன்னும்
இது குறித்தும்
இதனைக் குறித்தும் மட்டுமே
பேச ஆசைப்படுகின்றேன்.

தனிமை திட்டமிட்டுச் செய்த பெரு வலியுடன்
நானும் பெண்ணைக் குறித்த அதிகார மோகத்தை
கூடியமானளவு துடைத்தெரியப் பார்க்கின்றேன்.

இன்னும் சாத்தியப்பட்டுப்போக மறுக்கிறது
எனதான நெஞ்சுரம்.