எழுத்து

இனி – ஸ்ரீரஞ்சனி சிறுகதை

மழை இன்னும் விட்டபாடில்லை.

காரைவிட்டிறங்கியவனுக்குக் கண் கலங்கியது. இப்படியான ஒரு மழை நாளில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. ஆதிக்கு மழையில் நனைவது என்றால் மிகவும் பிடிக்கும். அன்று கொட்டும் மழையில் தெப்பமாக நனைந்தபடி, ஆதியும் அவனும் வெகு மகிழ்வாக ஆடிக்கொண்டிருந்தனர்.

“ஏ, உங்களுக்குக் கொஞ்சமெண்டாலும் அறிவிருக்கே? பிள்ளையை மழைக்கே வைச்சுக்கொண்டு ஆடுறியள், அவனுக்குக் காய்ச்சல் வரப்போகுது.”

ஆங்கில வகுப்பு முடிந்து அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்த கலா நெருமியபடி, ஆதியைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஆதியின் அலறல் உச்சஸ்தாயில் ஒலித்தது.

 

“சீ, பிள்ளைக்குப் போடுறதுக்கு ஓடிக்கொலோன்கூட இல்லை! போய்க் கெதியா ஒண்டு வாங்கிக்கொண்டு வாங்கோ பாப்பம்!”

வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தவனிடம், மாற்றுடைகளைக் கைகளில் திணித்தபடி இரைந்தாள்.

அவன் எதுவும் பேசாமல் மீளவும் வெளியேறினான். அவன் உடை மாற்றியபோது சொட்டிய ஈரத்தைப் புறுபுறுத்தபடி அவள் துடைக்கும் சத்தம் அவன் காதுகளை அடைத்தது.

கீரை சமைக்கும்போதோ அல்லது பலாப்பழம் போன்ற பழங்களை வெட்டும்போதோ, ஊரிலை எண்டால் இதுகளை ஆடு, மாடுகளுக்குப் போடலாம், இங்கை எல்லாம் வீணாய்ப்போகுது, என அலுத்துக் கொள்வாள். ஒரு தும்புத்தடிக்கு இவ்வளவு காசா, இதிலை எத்தினை பேர் அங்கை சாப்பிடலாமென மனம் குமுறுவாள். நாட்டைவிட்டு வந்த கவலை மட்டுமன்றி, கஷ்டப்பட்டு வளர்ந்ததன் ஆயாசமும்தான் இதென அவன் அவற்றை விளங்கிக்கொண்டான். அதிலிருக்கும் நியாயத்தையும் உணர்ந்துகொண்டான். அப்படியே அவள் கேட்ட ஓடிக்கொலோனை வாங்கிக்கொடுப்பதிலும் அவனுக்குப் பிரச்சினையிருக்கவில்லை. ஆனால் அகம்பாவத்துடன் அதைச் சொன்னதுதான் அவனின் மனதை இடைஞ்சல்படுத்தியது. திரும்பத்திரும்ப அவள் தன்னை மரியாதையில்லாமல் நடத்துறாள் என்பதில் அவனுக்குக் கவலையாகவும் அதை மேவிய ஆத்திரமாகவும் இருந்தது.

சொப்பேர்ஸ் றக் மார்ட்டில் அவள் சொன்ன ஓடிக்கொலோன் இருக்கவில்லை. அவன் வெறுங்கையுடன் திரும்பினான்.

“அங்கை இல்லையெண்டால் இன்னொரு இடத்துக்குப் போயிருக்கலாம்தானே!” எரிந்துவிழுந்தாள் அவள்.

“நல்ல வடிவாய் துடைச்சுப் போட்டுக் கெயர் டையரைப் பிடிச்சால் காய்ஞ்சிடும்தானே! வேணுமெண்டால் கொஞ்சம் சென்ரும் போடும், ஓடிக்கொலோன் செய்யிற வேலையை …” அவன் சொல்லிமுடிப்பதற்கு முன் அவள் மீளவும் சன்னதமாடினாள்.

அவன் ரீவியை ஓன் பண்ணிவிட்டு சோபாவில் அமர்ந்துகொண்டான்.

“நான் சொல்ற எதைத்தான் நீங்க செய்யிறியள்? ஒரு குழந்தைப் பிள்ளையெண்டும் பாக்காமல் உங்கடை சந்தோஷத்துக்காண்டி நீங்க போடுற …”

அவனுக்கு மிகுந்த கோபமும் எரிச்சலும் வந்தது. “வாய்க்கு வந்தபடி கதைச்சீரெண்டால் …” சுட்டுவிரலை ஆட்டியபடி அவளுக்கருகில் போனான்.

“எங்கை அடி பாப்பம்! ஒரு மிருகத்திட்டையிருந்து தப்பி இன்னொண்டிட்டை வந்திருக்கிறன்” அவள் பெரிதாய்க் கத்தினாள்.

“போடி”, என கையால் சைகைசெய்தபடி ரீவிக்கு முன்னால் நின்றவளைத் தள்ளிப்போட்டு, அவளின் கையிலிருந்த ரெமோட்டை அவன் பறிக்கமுயன்றான்.

அப்படிப் பறிக்க முயன்றபோது அந்த ரெமோட் பின்பக்கமாக இழுபட்டு அவளின் உதட்டைக் காயப்படுத்தியது.

“அசல் மிருகம். உங்களையெல்லாம் உள்ளுக்கை போடோணும்!”

“என்ரை நிம்மதியைக் கெடுக்கிறதுக்காண்டித்தானேடி வந்திருக்கிறாய்! தாராளமாகச் செய், ஏன் பாத்துக்கொண்டு நிக்கிறாய்? …” அவன் தள்ளிய வேகத்தில் அவள் கீழே விழுந்தாள்.

மிரண்டுபோன ஆதி மீளவும் அலற ஆரம்பித்தான். அவள் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனாள்.

சிறிது நேரத்தில் அவளைத் தாக்கிய குற்றத்துக்காக அவனைக் கைதுசெய்வதாக வீட்டில் பொலிஸ் வந்துநின்றது.

மூன்று மாதங்களின் பின் மேற்பார்வை செய்யப்படும் சந்திப்பு ஒன்றில் ஆதியைச் சந்திப்பதற்காக அவன் இன்று வந்திருக்கிறான். எதிர்பாராமல் வந்து கொட்டிய மழை அவனைச் சுணங்கச் செய்திருந்ததுடன் கொஞ்சம் நனைத்துமிருந்தது. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் அவன் பிடித்திருந்த குடை அங்குமிங்கும் ஆடியது. கைக்கடிகாரத்தைப் பார்த்தான். அது நான்கு மணி எனச் சொல்லி ஓய்ந்தது.

வேகமாக நடந்துசென்ற அவன் அந்தக் கட்டிடத்தின் அழைப்பு மணியை அவசரமாக அழுத்தினான். ஆதியுடனான ஒரு நிமிடம்கூட வீணாகிவிடக்கூடாதே என அவனின் மனம் பதகளித்தது.

அவனின் அழைப்புக்குப் பதிலளித்த பெண்ணிடம் தன் பெயரைச் சொன்னான். ஆதியை அழைத்து வருவதாகவும் உள்ளே வந்து குறித்ததொரு அறையில் காவலிருக்கும்படியும் கூறி அவள் அப்பால் சென்றாள்.

அவள் போட்டிருந்த குதிக்கால் உயர்ந்த செருப்பு தரையில் ஒலிப்பிய ஒலியைத் தவிர எந்தச் சத்தமும் அந்த இடத்தில் கேட்கவில்லை. காத்திருந்த அந்தக் கணங்கள் அவனுக்கு யுகங்களாகத் தெரிந்தன.

அந்த அறையில் வேறு சில ஆண்களும் அவனுடன் இருந்தனர். அவர்களின் கண்களிலும் கலக்கம் தெரிவதுபோல அவனுக்குத் தோன்றியது. ஒருவர் அவரது சாவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். மற்றவர் கையில்வைத்திருந்த விளையாட்டுக் காரை வருடிக்கொடுத்தபடி வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார். இன்னொருவர் போனில் மும்மரமாக இருந்தார். வேறொருவர் குறுக்கும்மறுக்குமாக நடந்துகொண்டிருந்தார்.

பத்து நிமிடங்களின் பின் திரும்பி வந்த அந்தப் பெண், ஆதி வரமாட்டேன் என அழுவதாகவும் அவன் ஆதியை இன்று பார்க்கமுடியாதென்றும் கூறி, ‘சொறி’ சொன்னாள். மனம் நிறைந்த எதிர்பார்ப்புடன் ஆதியைப் பார்க்கவந்திருந்த அவனுக்கு அந்தப் பதில் மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. என்ன சொல்வதெனப் புரியாமல் நின்றவனிடம், அடுத்தமுறை பிள்ளையைத் தயார்படுத்திக்கொண்டு வரும்படி அம்மாட்டைச் சொல்லியிருக்கிறம். திரும்பவும் வாற ஞாயிறு இதே நேரம் வாங்கோ என ஆங்கிலத்தில் சொன்னவள் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் அங்கிருந்து அகன்றாள்.

“மூண்டு மாதமாச் சந்தியாமலிருந்தவனை நேரில காட்டாமல் சும்மா வா எண்டு கூப்பிட்டால், ரண்டு வயதும் நிரம்பாத அந்தக் குழந்தை என்னெண்டு வருவான்?” தனக்குத் தானே சொன்னவன் காருக்குள் ஏறிக் கதவை அடித்துச் சாத்தினான்.

எந்தப் பயனுமற்ற அந்த ஐம்பது நிமிடப் பிரயாணத்தை மீளவும் வீட்டை நோக்கிச் செய்யவேண்டுமே என்ற எண்ணம் அவனுக்குள் மிகுந்த அலுப்பை உருவாக்கியது. பக்கத்திலிருந்த ‘பார்’க்குள் காரைத் திருப்பினான்.

கனடாவுக்கு வந்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன. வந்த கடன் அடைத்து, தங்கைச்சிக்கும் திருமணம் செய்துகொடுத்தபின் ஆயாசமாக மூச்செடுத்த காலம் அது.

“முப்பது தாண்டியிட்டுது, வயசானாப்போலை பிள்ளைப் பெத்தால் பிறகு பிள்ளையளோடை ஓடிவிளையாடுறதுக்கு உடலிலை தெம்பிராது தம்பி,” அம்மா ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தா.

அந்த வருடக் கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போனபோது, அவளின் படத்தைக் காட்டி, “இந்தப் பொம்பிளைப் பிள்ளையை எனக்கு நல்லாய்ப் பிடிச்சிருக்குத் தம்பி. வன்னியிலை நடந்த பிரச்சினைக்கே அம்பிட்டு தாய் செத்துப்போச்சாம். பெரிய பாவம். பதினாறு வயசிலிருந்தே வீட்டுப் பொறுப்பெல்லாம் அதுதான் பாக்குதாமெண்டு புரோக்கர் சொன்னார். … பிள்ளை நல்ல வடிவெல்லே!” மறுப்புச் சொல்லமுடியாத வகையில் கலியாணத்துக்கு அச்சாரமிட்டா அம்மா.

“அம்மா, இப்ப யார் பாவமெண்டு உங்களைக் கேட்கோணும் … ஆனா அதுக்குத்தான் நீங்க உசிரோடை இல்லையே!” குடி தலைக்கேற மனசு மறுகியது.

X X X

ஆதியைப் பார்க்கவென அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவன் வெளிக்கிட்டபோது, ஆதிக்கு பிடித்த சொக்களேற் கோடேட் ஸ்ரொபெரிகளையும், சொக்களேற் மில்க்கையும் மறக்காமல் வாங்கிக்கொண்டான். இந்த முறை அவனைப் பார்க்கக் கிடைக்கவேண்டுமென உலகத்திலுள்ள தெய்வங்களை எல்லாம் நினைத்து அவனின் மனம் மன்றாடியது. அடுக்கடுக்காகப் பலவகையான நேர்த்திகளையும் அந்தந்தத் தெய்வங்களுக்கு நெக்குருகச் சொல்லிக்கொண்டான்.

இருபது நிமிடம் முன்பாகவே அங்கே போய்விட்டான். காத்திருப்பு அறையில் அவன் உட்கார்ந்திருந்தபோது அவனின் மனம் இருப்புக்கொள்ளாமல் தவித்தது. முடிவில் அழுதபடி திமிறிக்கொண்டிருந்த ஆதியுடன் அவர்களை மேற்பார்வை செய்யவென நியமிக்கப்பட்டிருந்த பெண்ணான திரேசா வந்தாள்.

வந்தவழியால் மீளவும் ஓடிச்செல்ல முயன்ற ஆதியை அங்கு நிறுத்துவதற்கு திரேசா மிகப் பெரிய பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது. அவனருகே ஆதியைக் கொண்டுவருவதற்கு அந்தச் சொக்களேற் கோடேட் ஸ்ரொபெரிகளிடமோ அல்லது சொக்களேற் மில்க்கிடமோ எந்தவிதமான மந்திரசக்தியும் இருக்கவில்லை. அங்கிருந்த வெவ்வேறு வகையான விளையாட்டுப் பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து அவன் ஆதிக்கு விளையாட்டுக்காட்டினான். இருந்தும், அவனுக்குக் கிட்ட வரமாட்டேன் என ஆதி அடம்பிடித்தான்.

திரேசா அவர்களை நோட்டமிட்டபடி அவளின் கொப்பியில் ஏதோ எழுதிக்கொண்டே இருந்தாள். அவனுக்கு மிகச் சிரமமாக இருந்தது. கண்காணிக்கப்படாதிருந்தால், பலவந்தமாகக் கட்டியணைத்தோ அல்லது வேறு ஏதாவது செய்தோ முயன்றுபார்க்கலாம். இப்ப அவன் ஒன்றைச் செய்யப்போக அது தவறென்று திரேசா நினைத்தால் என்னவாகுமோ என அவனுக்குப் பயமாகவும் குழப்பமாகவும் இருந்தது. ஆதியுடன் அவன் கதைக்கும் ஒவ்வொரு சொல்லையும் அந்தத் தமிழ் மொழிபெயர்ப்பாளர் திரேசாவுக்கு மொழிபெயர்த்தபடி இருந்தார்.

அருகில் வேறு சில சிறுவர்கள் கார் ஓடியும், பந்தடித்தும் வெவ்வேறு விளையாட்டுக்களை அவர்களின் தந்தையருடன் விளையாடிக்கொண்டிருந்தனர். இப்படியே இருபது நிமிடங்கள் கடந்தன. ஆதி அழுதுகொண்டே இருப்பதால் அடுத்த ஞாயிறு மீளவும் முயற்சிக்கும்படி முடிவாகத் திரேசா சொன்னாள். ஆதிக்கென வாங்கிவந்தவற்றை கலாவிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்ட அவன் அங்கிருந்து வேதனையுடன் வெளியேறினான். ஆதியைக் கண்டது, அவனது ஆதங்கத்தை மேலும் கூட்டியிருந்தது. ஆசைதீர ஆதியைக் கட்டியணைக்கவோ, முத்தமிடவோ முடியாததால் அவனின் மனம் முழுவதும் வெறுமை படந்திருந்தது.

வேலையால் வீட்டுக்குச் செல்லும்போது ஓடிவந்து அவனைக் கட்டிக்கொள்ளும் ஆதி இப்படி மாறிப்போனான் என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அவனுடைய கதிரையில் எவரும் இருக்கவிடாமல், “அப்பா, அப்பா” என அது அப்பாவுடையது என மழலை பேசும் ஆதி, அவனது மார்பில் படுத்திருப்பதில் சுகம் காணும் ஆதி … அந்த ஆதியா இது, அவனுக்கு நெஞ்சடைத்தது.

ஆதி ஸ்ரோபெரியை விரும்பிச்சாப்பிட்டானா, என அவன் தங்கியிருந்த வீட்டுக்காரப் பெண் ஆர்வத்துடன் கேட்டபோது, அவனால் பதில் சொல்லமுடியவில்லை.

X X X

அடுத்த வாரம், ஆதியிடம் இருக்கும் அதே போன்ற தீயணைக்கும் வண்டி ஒன்றை வாங்கினான். அது ஓடும்போது உருவாக்கும் ஒலியும் ஒளியும் ஆதியின் கண்களை விரியச்செய்வதுண்டு. அத்துடன் ஆதிக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஒன்றையும் வாங்கிக்கொண்டான். அதிலுள்ள விலங்குகளை ஒவ்வொன்றாக அழுத்தும்போது அவை வெளியே எட்டிப்பார்த்து அவற்றுக்குரிய சத்தங்களை எழுப்புவதைப் பார்த்து ஆதி பிரமித்துப் போவது அவன் கண்களில் ஓடி மறைந்தது.

அன்று, ஆதி அவன் தீபாவளிக்கு வாங்கிக்கொடுத்திருந்த சிவப்பு நிற ரீசேட் அணிந்திருந்தான். அதன் முன்பக்கத்தில் இருந்த அந்தப் பெரியக் கறுப்பு நிறப் பூனைக்குட்டியின் படம் ஆதியை மிகவும் கவர்ந்திருந்தால் அதை ஆதி விரும்பிப் போடுவது வழக்கம்.

“ஹாய் ஆதிக் குட்டி, ரொசி சுகமா இருக்கா?”

அந்தப் பூனைக்குட்டியை வருடியபடி கேட்டவன், மியாயா மியாயா என மெலிதாய் ஒலி எழுப்பினான். ஆதியின் முகத்தில் சிறியதொரு புன்முறுவல் ஏற்பட்டது.

பின் அந்தப் புத்தகத்தை விரித்து அதிலிருந்த பூனையின் படத்தை அவன் அழுத்தியதுபோது, மெல்ல மெல்ல நகர்ந்து ஆதி அவனருகில் வந்தான். பின் பூனையை ஆதியே அழுத்தினான். அப்படி ஒன்றொன்றாக ஆதி அழுத்த அழுத்த அந்தந்த மிருகங்கள் எழுப்பும் ஒலியை அவனும் சேர்ந்து எழுப்பினான்.

பின்னர், “அப்பா அப்பா,” எனத் தன் மழலை மொழியால் கூறி அவனை அழுத்தும்படி அந்தப் புத்தகத்தை ஆதி சுட்டிக்காட்டியபோது அவனின் உடல் சில்லென்று குளிர்ந்துபோனது. ஆதி கேட்டபடி அவன் அந்தப் பூனையை அழுத்தியபோது ஆதி வந்து அவனின் மடியில் ஏறிக்கொண்டான். அவனுக்குக் கண் கசிந்தது. அவன் ஆதியை இறுகக் கட்டிக் கொண்டான்.

அதன்பின்பான சந்திப்புக்களின்போது ஆதி மீளவும் அவனுடன் நன்கு ஒட்டிக்கொண்டான். அந்த இரண்டு மணி நேரம் முடிந்துபோகும்போது அவனை விட்டுச்செல்ல மாட்டேன் என ஆதி அழ ஆரம்பித்தான். ஆதியை விட்டுப்பிரிவது அவனுக்கும் மிகுந்த கஷ்டமாக இருந்தது.

ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையின் விடிவுக்காகவும் அவன் காவல் இருந்தான்.

மேற்பார்வையில்லாத சந்திப்பாக மாற்றி தான் வதியும் வீட்டுக்கு ஆதியைக் கூட்டிச்செல்வதற்கு என்ன செய்யவேண்டுமென அவனின் வக்கீலுடன் அவன் கலந்தாலோசித்தான்.

X X X

பிணையில் அவன் விடுபட்ட ஓரிரு நாட்களின்பின் சிறுவர் பாதுகாப்பு நிலையத்திலிருந்து வரும் வழமையான அந்த அழைப்பு அவனுக்கும் வந்திருந்தது. அந்த உரையாடலின் முடிவில், நடந்ததுக்கு அவள் வருந்துவதாகவும், இப்பிடியெல்லாம் பிரிஞ்சிருக்க வேண்டிவருமெண்டு அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும், தனியவா பிள்ளை வளர்ப்பதை அவளால் கற்பனைசெய்துகூடப் பாக்கமுடியாமலிருக்கிறது என்றும், மீண்டும் சேர்ந்துவாழ அவள் விரும்புவதாகவும் கலா சொன்னதாகக் கூறிய அந்தப் பணியாளர், அவனுடைய திட்டம் என்னவென்று அவனிடம் கேட்டிருந்தார்.

இனியும் அவளுடன் சேர்ந்து வாழமுடியுமா என்பது அவனுக்குத் தெரியவில்லை. அதேநேரத்தில் வாரத்தில் இரண்டு நாளோ, மூன்று நாளோ மட்டும்தான் ஆதி அவனுடன் இருக்கலாம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அதை எப்படித் தாங்கிக்கொள்வதென்பதும் அவனுக்குப் புரியவில்லை. ஆதிக்காகவென அவன் அவளுடன் சேர்ந்து வாழப்போனால், மீண்டும் ஒரு தடவை இப்படி ஒன்று நடந்து – அதற்காக அவள் பொலிசை அழைத்தால், முதல் முறை என்பதால் இப்போது கிடைத்த மன்னிப்பு பிறகு கிடைக்கமாட்டாது என்ற யதார்த்தம் அவனுக்கு மிகுந்த கிலேசத்தைக் கொடுத்தது. மேலும் இப்படி இருவரும் முரண்பட்டிருந்தால் அது ஆதியின் மனதை எவ்வளவு பாதிக்கும் என்பதையும் அவன் கருத்தில் கொள்ளவேண்டியிருந்தது. அத்துடன் பொலிஸ் காவலில் இருந்ததில் அவனுக்கு மிகுந்த அவமானமாகவும் வேதனையாகவும் இருந்தது. அதனால் யோசிக்கவேண்டியிருப்பதாக அந்தப் பணியாளரிடம் அவன் அன்று கூறியிருந்தான்.

ஆனால், இன்னும்தான் அவனால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அவனுக்குத் தலை கிறுகிறுத்தது.

நிழலைத் தின்னும் பூனை – ஹரீஷ் கண்பத் சிறுகதை

பேருந்திலிருந்து இறங்கும் போதே லேசான குளிர் இருந்தது. பழகிய குளிர் தான். பழகிப் பல வருடங்கள் ஆகியிருந்தாலும் சட்டென்று உடல் கண்டு கொண்டு பழக்கப்பட்டு விடும் குளிர் . எப்போதும் வந்து இறங்கியதும் குளிருடன் சேர்த்துத் துளிர்க்கத் துவங்கும் அப்போதைய விடுமுறை நாட்களுக்கான சந்தோஷச் சுரப்பு மட்டும் இல்லை. பையைத் தோளில் சரியாக மாட்டிக் கொண்டு நடக்கத் துவங்கினேன்.

பிரதான சாலையிலிருந்து பிரியும் பாதையில் நுழைந்தவுடன் திடுக்கென்று பிரம்மாண்டமாய் முளைத்திருந்த புதுக் கல்லூரியின் கட்டிடம் கண்களைக் குத்தியது.கல்லூரியின் பெயர்ப்பலகையை இருளில் சற்றே சிரமப்பட்டுப் படித்தபடிக் கடந்தேன்.

முதல் நாள் இரவு ரம்யாவின் முறைப்புகளைச் சமாளித்து அலுவலக வேலையை வீட்டில் வந்தும் தொடர்ந்து கொண்டிருந்த போதே தலைவலி துவங்கி விட்டது. வேலையை முடித்து விட்டுப் பத்தரைக்குப் படுக்கும் போது தலைவலி உச்சத்தை அடைந்து விட்டிருந்தது. படுத்தவுடன் குழந்தை காலைத் தூக்கி மேலே போட்டது அந்த நொடியில் எரிச்சலைத் தந்தது. “ப்ச்” என்று பலமான உச்சுக் கொட்டலுடன் சற்றே வேகமாகக் குழந்தையின் காலைத் தட்டி விட்டதை ரம்யா பார்த்து விட்டாள்.

அவள் தூங்கவில்லை என்பதே அப்போது தான் தெரிந்தது. நெருப்பைப் போல் பார்வையை உமிழ்ந்தவளைச் சமாதானம் செய்ய வார்த்தைகளைத் தேடிச் சேர்க்கையில் தான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்து சேர்ந்தது.

துக்க வீடுகளுக்குப் போவது என்பது எப்போதுமே என் இயல்புக்கு ஒவ்வாததாய்த் தான் இருந்திருக்கிறது..அவ்வாறான இடங்களின் பெரும்பான்மை உரையாடல்களான துக்க விசாரிப்புகள் பொதுவாகவே அதிகபட்சம் மூன்று நான்கு கேள்விகளுக்குள் முடிந்து போகிறவை. சம்பந்தப்பட்டவர்கள் ஏற்கனவே பலப்பல முறைகள் சொல்லிச் சலித்த பதில்களையே மீண்டும் மீண்டும் சொல்ல வைப்பவை.

மாமாவின் துக்க வீடு எப்படி இருக்குமென்று மனதில் காட்சியாய்க் கொண்டு வர முயன்று தோற்றேன். மழுங்கலான சித்திரமாய் தீபராணியின் முகம் மட்டும் மேலெழுந்து வந்து நடை சற்றே வேகம் குறைந்தது.கூடவே மாமா வீட்டின் பின்புறமும் வேலியொட்டி இருந்த அந்தத் துவைக்கும் கல்லும் , வேலி தாண்டி சற்றே வளைந்து நீண்டு அடர் காட்டுக்குள் சென்று முடியும் ஒற்றையடிப் பாதையும் பனி படர்ந்த் கண்ணாடியில் சற்றே தெளிவுற்று மீண்டும் கலங்கும் பிம்பம் போல் நினைவில் நெருடின.

———

“என்னா தீப்சு… துக்கத்துக்கு போனவங்க நைட் வர மாட்டாங்க போல தெரியுது. இன்னிக்கு நைட் சாப்புட என்னா பண்ணலாம்? நான் வேணா டவுனுக்கு போய் புரோட்டா வாங்கிட்டு வரட்டுமா?”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். கிடைக்கிறதே கொஞ்ச நேரம். அதையும் வேஸ்ட் பண்ணிகிட்டு” என்று முணுமுணுத்தது என் காதில் விழுந்தாலும் “ என்னா தீப்சு? என்ன சொன்ன?” என்றேன். உடல் லேசாக அதிர்ந்து கொண்டிருந்தது.

“வீட்லயே மாவு இருக்குது தோச போட்டு சாப்டுக்கலாம்னு சொன்னேண்டா” என்று சத்தமாகச் சொன்னவள், வேறு பக்கம் திரும்பி “ எப்பப் பாத்தாலும் சாப்பாட்டுலயே கண்ணு” என்று முணுமுணுத்ததும் காதில் விழுந்தது.

அந்த இரவில் என்ன பேசினோம் எப்படி நேரத்தைத் தின்றோம் என்பது எதுவும் ஞாபகமிருக்கா விட்டாலும் அந்த இரவு மட்டும் நினைவில் என்றென்றைக்குமான தடமாய்ப் பதிந்து போனது.

———–

கோவில் தெப்பக்குளத்தைச் சுற்றிக் கொண்டு வலது முனை திரும்பும் போது சிறிய டீக்கடை ஒன்று திறந்திருந்தது கண்ணில் பட்டது. பேருந்தின் கடைசி இருக்கையில் மூட முடியாத ஜன்னல் ஒரு பக்கமும் மேலேயே சாய்ந்து விழுந்த முதியவர் மறுபக்கமுமென அமைந்ததால் பறிபோன தூக்கத்தின் விளைவாய்க் கண்ணோரங்களில் படர்ந்திருந்த எரிச்சலுக்குத் தேநீர் சற்றே இதமாய் இருக்குமென்று தோன்றியது.

கடைக்கு நடந்து ஒரு தேநீர் சொல்லி விட்டுச் சோம்பல் முறித்தேன்.. மேலும் இருவர் வந்து டீ சொல்லி விட்டு பென்ச்சில் அமர்ந்து கொண்டனர். துக்கத்தைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தனர். கையில் பையோடு நான் வந்திருப்பது கண்டு துக்க வீட்டுக்குப் போகிறேனென்பதைப் புரிந்து , கண்களால் அமைதியாய் ஆமோதித்து விட்டுப் பேச்சைத் தொடர்ந்தனர்.

——-

“கீழ போவல? எல்லாரும் போயிட்டாங்க.”

“நீ போவல”?

“நீயும் வாயேன் போவலாம்”

“நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன். கொசு அதிகமா இருக்கு. நீ கீழ போ தீப்சு”

“ஒனக்கு மட்டும் கொசு கடிக்காதா?”

முதன் முதலில் கல்லூரி இரண்டாமாண்டு முடிவில் ஊருக்கு வந்திருந்த போது தீபராணி என்னிடம் நடந்து கொண்ட விதத்தில் அதுவரை இல்லாத பல மாற்றங்கள் தென்பட்டதை உணர்ந்ததும் உடல் முழுவதும் எங்கெங்கோ குளிர்ந்தது நினைவில் நிரடியது.தீபராணி அப்போது கல்லூரி முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தாள்.

——

“சார் டீ” என்ற குரல் கலைத்தது. தேநீரின் வெப்பம் மட்டுமே அதைக் குடிக்கத் தூண்டுவதாய் இருந்தது.துக்க வீட்டுக்கு போகையில் தேநீர் குடிப்பது கூட ஏனோ வினோதக் குற்றவுணர்ச்சியாய் இருந்தது.

மெல்லக் குடித்து முடித்து விட்டுக் குளத்தின் இடது முனை நோக்கி நடக்கத் துவங்கினேன். இடது முனை தாண்டி வலப் பக்கம் பிரியும் சாலையில் இறங்கினால் இரு பக்கமும் அடர் மரங்கள் . அதைத் தாண்டினால் தான் ஊர் துவங்குமிடம் வரும்.அந்த இடத்தைக் கடக்கும் போது கறுப்புப் பட்டை இடப்பட்டு அதன் நடுவே மஞ்சள் வட்டத்தினுள் 19 என்று எழுதப்பட்ட கொன்றை மரத்தைக் கண்கள் தேடின.

——-

“என்னா தீப்சு பயங்கர ஜாலியா இருக்காப்ல இருக்கு?”

“அப்டியா தெரிது?” நான் சாதாரணமா தான் இருக்குறேன்”

“அய்ய. சும்மா சொல்லாத. உன்னை எனக்கு தெரியாது?”

“அது….”

“ந்தா… சும்மா சொல்லு”

“பிஜி சக்ஸஸ்புல்லா முடிச்சிருவேன்னு செம்ம நம்பிக்கையா இருக்கேண்டா”

“அதான் தெரியுமே… நீ தான் செரியான படிப்ஸாச்சே. அதுக்கெதுக்கு நீ இவ்ளோ உணர்ச்சிவசப்படுற?”

“கேம்பஸ்ல ப்ளேஸ்மெண்ட் கிடைச்சிருக்குடா”

சட்டென்று அமைதியானேன்.

“பாத்தியா. இதை சொன்னா உனக்கு கடுப்பாவும்னு தான் சொல்லல. “

“சேச்சே… அதெல்லாம் ஒண்ணுமில்ல.”

“சாரிடா” என்று கூறியபடி தோளில் கை வைத்தவள் சட்டென்று கையை உயர்த்தித் தலையைக் கோதினாள். அவள் கைகளிலிருந்த சீயக்காயும் அஸ்வினி தேங்காய் எண்ணெயும் கலந்த மணம் நாசியில் ஏறிக் கமறியது.

———

புரையேறிச் சட்டென்று தலையை உலுக்கி நிகழுக்கு வந்த போது அடர் தோப்பைத் தாண்டி வாய்க்கால் பாலத்தின் மீது நடந்து கொண்டிருந்தேன். எதிரில் யாரோ சைக்கிளில் வருவது தெரிந்தது. மாமா வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலிருப்பவர். அவர் பெயர் சரியாக ஞாபகமில்லை. ஆனால் அவர் சைக்கிளில் மேடேறி மூச்சு வாங்க வருவதைப் பார்க்கும் போது ஏனோ அவர் பெயர் சங்கரனாக இருக்கக் கூடுமென்று தோன்றியது.

என்னைப் பார்த்ததும் சைக்கிளிலிருந்து இறங்கினார். ” மணி மருமவன் தான நீயி?” என்றார் சந்தேகத்துடன்.ஆமாம் என்று தலையாட்டியவுடன் முகத்தில் துக்கம் தேங்க “ஹ்ம்ம்.. என்னவோ போ. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம். சரி நான் ஒரு வேலையாப் போயிட்டு இருக்கேன்” என்றவர் “போயிட்டு வந்துடறேன்” என்பதைக் கண்ணாலேயே சொல்லி விட்டுச் சைக்கிளை நகர்த்திக் கொண்டு போனார்.

————-

சென்னைக்கு வேலைக்காக வந்தவள், அலுவலகத் தோழிகளுடன் தனியாக வீடெடுத்துத் தங்கி விட்டாள். முதல் சில நாட்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தது, பின் படிப்படியாய்க் குறைந்து நின்று போனது ஒரு கட்டத்தில். தூரத்து ஊரில் இருந்த போது இருந்த நெருக்கமும் வாத்சல்யமும், நினைத்தவுடன் சென்று பார்க்கும் தொலைவில் சென்னையிலேயே இருந்தும் சிறுகச் சிறுகக் குறைந்து போய் கிட்டத் தட்ட நின்று போனது ஆச்சரியமாய் இருந்தது.

வாழ்க்கையின் அலைக்கழிப்புகளில் நீந்திப் போராடி இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள ஏதேதோ போராட்டங்கள் செய்து கொண்டிருந்த சமயத்தில் தீபராணியை வெகு நாட்கள் கழித்து ஒரு திருமணத்தில் சந்திக்க நேர்ந்தது..

“எப்படி இருக்கே தீப்சு”?

“நல்லாருக்கேண்டா. நீ எப்படி இருக்கே?”

“நல்லாருக்கேன்”

“பேசியே ரொம்ப நாளாச்சில்ல தீப்சு?”

“ஆமாடா. நீ இப்ப என்ன பண்ணிட்டு இருக்க?” என்று அவள் கேள்வியை முடிக்கும் முன் அவள் கைப்பேசி அழைத்தது. தொடுதிரையைப் பார்த்ததும் தானாய் முகத்தில் படர்ந்த புன்னகையைச் சட்டென்று மறைத்துக் கொண்டு கண்களாலேயே எனக்கு விடை கொடுத்து விட்டு நகர்ந்தாள்.அதற்கு மேல் நிகழாமல் அந்த உரையாடல் அங்கேயே முற்றுப் பெற்றது எனக்குக் குழப்பமாய் இருந்தது.

அதற்கு முன் வரை அவள் பேச்சிலிருந்த லேசான குறும்புத்தனம் காணாமல் போயிருந்தது. அவள் பார்வையிலிருந்த அன்னியோன்னியம் காணாமல் போயிருந்தது.ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி அவளிடம் புதிதாகத் தென்படத் துவங்கியிருந்த பக்குவமும் கண்ணியம் கலந்த கம்பீரமும் பிரமிப்பைக் கூட்டியது. கிளம்பும் போது அவளைத் தேடிப் பார்த்துக் காணாமல் சொல்லிக் கொள்ளாமலே தான் கிளம்பினேன்.

———–

மாமா வீட்டின் தெருவுக்குப் போகும் பிரதான சாலையிலிருந்த அந்தத் திரையரங்கம் எந்த வித மாறுதல்களுமற்று அப்படியே இருந்தது. இரும்புக்குருவி என்று தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பாவிடம் நானும் மாமாவிடம் தீபாவும் அவள் அக்காவும் அடம் பிடித்து, தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ராட்சதப் பட்டாம்பூச்சியொன்றைப் பற்றிய படத்தைத் தனியே போய்ப் பார்த்ததும், படம் முழுவதும் அருகில் அமர்ந்திருந்த தீபா, “அய்யோ… எவ்ளோஎ பெருசுல்ல அந்த பூச்சி? யப்பா எப்புடி அந்த பொண்ணு அது மேல உக்காந்து போவுதுல்ல?” என்று வெகு இயல்பாய்த் தொட்டுத் தொட்டுப் பேசியபடி இருந்ததும், படம் முடிந்து வீட்டுக்குப் போகையில் சுற்றிலும் தெரு நாய்கள் நின்று குரைக்க, என் பயத்தை வெளிக்காட்டாமல் தைரியமாய் அவர்களுக்காக நடித்ததும் கண் முன் வந்து போனது.

———-

“யேய் தீப்சு….எப்டி இருக்க?” சங்கடமாய்ப் புன்னகைத்தேன். அவளுக்கும் அதே சங்கடம் இருந்தது கண்களில் புலப்பட்டது. “ நல்லாருக்கேன். நீ எப்படி இருக்க?”

“நான் நல்லாருக்கேன்” என்றபடியே தீபராணியை ஒட்டி நின்றிருந்தவரை ஏறிட்டேன். புரிந்தவளாக , “ இது ப்ரதீப். என் கலீக்” என்று அறிமுகப்படுத்தினாள். அதைச் சொல்லும் போது அவள் கண்கள் மெல்லத் தாழ்ந்தன. சூழ்நிலையைச் சகஜமாக்கும் பொருட்டு ப்ரதீப்பைப் பார்த்து வலிந்து சிரித்து “ நான் தீபாவோட கஸின்”என்று கூறிவிட்டு “எந்த ஸ்க்ரீன்? என்றேன்

கையிலிருந்த மொபைலை எடுத்துப் பார்த்து “ஸ்க்ரீன் 5 “என்றதும் ஒரு ஆசுவாசப் பெருமூச்சு வெளிப்பட்டது. “எனக்கு ஸ்க்ரீன் 9. சரி தீபா. எனக்கு டைமாயிடுச்சு. அப்புறம் பார்ப்போம்” என்று நகர்ந்தேன்.

அதற்கு அடுத்து வந்த நாட்களில் காரணமே இல்லாமல் நண்பர்களிடம் சண்டை போட்டுக் கொண்டும் அம்மாவிடம் போனில் எரிந்து விழுந்து கொண்டும் ஏன் ஒரு விதமான சிடுசிடுப்பில் இருக்கிறேன் என்று புரியாமல் சுற்றிக் கொண்டிருந்தேன்.

———–

மாமா வீட்டுத் தெருவை அடைந்து விட்டிருந்தேன். தெரு முனையிலிருந்தே ஷாமியானாப் பந்தலும் வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலிகளும் தெரிந்தன. அங்கிருந்தே நான்  வருவதைப் பார்த்து விட்ட வயதான சிலர், அவர்கள் நினைக்கும் ஆள் தானா நான் என உறுதி செய்து கொள்ள , அருகில் செல்லும் வரை என்னையே உற்றுப் பார்ப்பது தெரிந்தது.

அந்தக் கூட்டத்தில் தெரிந்த உறவுக்கார முகம் ஏதேனும் தெரிகிறதா என்று தேடினேன். அப்பா இருப்பாரென்று நினைத்தேன். காணவில்லை. ஏதேனும் வேலையாய் இருப்பார். யோசனைகளோடு நடந்து வீட்டு வாசலை அடைந்தேன்.

ஏனோ உள்ளே போகாமல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். நான் அமர்வதற்காகவே காத்திருந்தது போல் , முகம் மட்டும் நினைவில் இருந்த, பெயர் நினைவிலில்லாத, சற்றே தூரத்து உறவினர்கள் இரண்டு பேர் வந்து  என்னருகில் அமர்ந்து கொண்டு பேச்சுக் கொடுக்கத் துவங்கினர்.

ஒரு வகையில் அது ஆசுவாசமாய் இருந்தது. உள்ளே போய் மாமாவை, தீபராணியைப் பார்ப்பதை இன்னும் சில மணித்துளிகள் தள்ளிப் போடும் பலவீனமான முயற்சி. ஆச்சரியமாய் என்னைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தது. என் வீட்டைப் பற்றியும் வேலையைப் பற்றியும் குழந்தையைப் பற்றியும் ரம்யாவைப் பற்றியும் நிஜமான அக்கறையுடன் விசாரித்துக் கொண்டிருந்தனர்.அப்பா சொல்லியிருக்கக் கூடும்.

உரையாடலின் நடுவே யதேச்சையாக விழுந்த தீபராணியின் பெயர் கவனத்துக்கு வந்ததும் மீண்டும் நினைவுகள் நழுவின. தீபராணி தன் காதலை வீட்டில் சொன்ன போது பெரும் பிரச்னை வெடித்தது. மாமாவும் அத்தையும் தினந்தோறும் சண்டை போட்டார்கள். அவள் கொஞ்சமும் மசியவில்லை. அவள் பிடித்த பிடியில் ஸ்திரமாக நின்றாள். கடைசியில் அத்தையும் மாமாவும் தான் இறங்கி வரும்படி ஆயிற்று.

“எப்படிடா இருக்கே?”

“நல்லா இருக்கேன் தீபா”

“எல்லாம் கேள்விபட்டிருப்பேன்னு நினைக்கிறேன்”

“கேள்விப்பட்டேன் தீபா. கங்கிராட்ஸ்.”

“நேர்ல வந்து கூப்பிடலையேன்னு நினைச்சுக்காத. இதையே பர்சனல் இன்வைட்டா எடுத்துக்கோ. கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடுடா” என்றாள்.

“கண்டிப்பா” என்றேன்.

போகவில்லை.தீபராணியின் திருமணத்துக்குப் பின் அவளுடனான தொடர்பு இன்னமுமே குறைந்து போனது.

வேலையிலும் தீபராணிக்குப் பின்னான சிறு சிறு ஈர்ப்புகளையும் தாண்டி, வீட்டில் பெண் பார்க்கச் சொல்லி அதற்கான முயற்சிகள் ஆரம்பமாகியிருந்த சமயம் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய் ஒரு நாள் தீபராணியிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.

“எப்படிடா இருக்கே? வேலையெல்லாம் எப்படி போகுது?பொண்ணு பாக்கறதா சொன்னாங்க அத்தை.  டிலே ஆகுதுன்னு கவலைப்பட்டுக்காதே.எல்லாம் நல்லபடியா நடக்கும்.”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல, ஐம் பைன். நீ எப்படி இருக்க தீபா? ஹஸ்பண்ட் எப்படி இருக்காரு?”

“எல்லாரும் நல்லாருக்கோம். அது சரி அதென்னடா தீபா தீபான்னு? தீப்ஸ்னு எப்போவும் போல கூப்பிடு”

இப்படியாக எங்களுக்கிடையேயான சம்பாஷனைகள் ஒரு மரியாதையான இடைவெளியில் மீண்டும் தொடர்ந்தன. ஆனால் எங்களுக்கிடையேயான உரையாடலில் சர்வ நிச்சயமாய் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். இடைக்காலங்களில் காணாமல் ஆகியிருந்த பால்யத்தின் பரிவும் வாத்சல்யமும் அக்கறையும் நிச்சயம் அவள் குரலில் கலந்திருந்தது. அதன் கூடவே அவளது கம்பீரமும் முதிர்ச்சியும் சேர்ந்து வேறு ஒரு பரிமாணத்தில் தீபா தெரிந்தாள்.

——

“சொல்லு தீப்சு எப்படி இருக்க? ப்ரதீப் எப்படி இருக்காரு?”

“எல்லாம் நல்லாருக்கோம். உன் பேஸ்புக் போஸ்ட் பாத்துட்டு தான் கால் பண்ணேன்.”

“எந்த போஸ்ட்டு?”

“பிக் பேங் தியரி தான் இருக்கறதுலயே சிறந்த ஷோன்னு போட்டு வெச்சிருக்க? போன வாட்டி நாம பேசும் போது ப்ரண்ட்ஸ் தான் பெஸ்ட்டுன்னு சொன்ன?”

“ரெண்டும் தான். காரணமிருக்கு.”

உரையாடல் டி வி நிகழ்ச்சிகளைப் பற்றித் தொடர்ந்து நட்பையும் நண்பர்களையும் பற்றிப் பேசி, ஊரைத் தொட்டு, தோப்புகள், வாய்க்கால்கள் என்று நீண்டு பால்ய நாட்களில் வந்து நின்று உறைந்து போன காலத்தைக் கண்ணாடி வழி பார்ப்பது போன்ற பிரமையைத் தந்தது.

———-

மின்விசிறிக் காற்றில் அலைந்தாடும் மயிர்த்துணுக்கு போல் அடி மனதின் ஏதோ ஒரு இழையில் சுழன்றபடி இருந்த இனம் புரியாத ஒரு ஏக்கம் ரம்யாவைப் பெண் பார்த்துச் சம்மதம் சொல்லி, நிச்சயத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட நாட்களில் அவளுடனான உரையாடல்களின் போது  இன்னும் வலுவாகி, திருமணத்தின் போது உச்சக்கட்டத்தை அடைந்து பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு உடல் சுகமில்லையோவெனப் பதறி விசாரிக்குமளவுக்குப் போனதும் சுதாரித்துக் கொண்டேன்.

———-

சட்டென்று தோளில் கை விழுந்ததும் நினைவிலிருந்து நிகழுக்கு வந்தேன். அப்பா நின்றிருந்தார். ” நீ எப்படா வந்த?” என்றார். கேட்கும் தொனியிலேயே “உள்ள வராம் இங்க என்ன பண்ணிட்டிருக்க” என்ற கேள்வி ஒலித்தது. கண்ணாலேயே உள்ளே போகுமாறு சைகை காட்டி விட்டு விலகிப் போனார்.

இதற்கு மேலும் தவிர்க்க முடியாது என்று  எழுந்தேன். வாசல் படிகளிலும் உறவினர் கூட்டம் நிறைந்திருந்தது. ‘ அந்தப் புள்ள தான் பாவம். அழுவறதுக்கு கூட நேரமில்லாம சுத்தி சுத்தி வேலை பாக்குது. ஒரு சொட்டுத் தண்ணியில்லையே கண்ணுல பாவம்.” என்று இரு பெண்கள் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. அவர்கள் தீபராணியைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அடி வயிறு லேசாகக் கலங்கியது. மெல்லப் படியேறி உள்ளே நுழையும் போதே லேசான அழுகைச் சத்தம் காற்றில் கலந்திருந்தது. இரவிலிருந்தே அழுது கொண்டிருப்பதால், அழுகையின் சப்தம் தணிந்து, விசும்பல்களும் பெருமூச்சுகளும் கூடச் சில கிசுகிச்சுப்பான உரையாடல்களும் கூடக் காதில் விழுந்தன.

மாமா குளிர் பெட்டிக்குள்  இருந்தார். குளிர் பெட்டியின் தலைமாட்டில் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. மின்விசிறி அணைக்கப் பட்டிருந்தது.அருகே அத்தையும் தீபராணியின் அக்காவும் அமர்ந்திருந்தனர்.

மாமாவின் முகத்தை ஓரிரு நொடிகள் பார்த்தவன், குற்ற உணார்ச்சி உந்தித் தள்ள சுற்றிலும் பார்த்து தீபராணியைத் தேடினேன். அவளைக் காணவில்லை. மீண்டும் மாமா முகத்தைப் பார்க்கத் துவங்கினேன்.

உள்ளறை வாசலில் சலனம் தெரியவே நிமிர்ந்து பார்த்தேன் தீபராணி நின்றிருந்தாள். வியர்வையில் குளித்திருந்தாள். இரவு முழுதும் தூங்காததால், கண்கள் களைப்புற்றுச் சிவந்திருந்தன. புறங்கையால் நெற்றியில் விழுந்த முடியை ஒதுக்கிக் கொண்டே மெல்லக் குளிர் பெட்டியின் அருகே வந்தவள், “வா” என்பது போல் என்னைப் பார்த்துத் தலையசைத்தாள்.

பதிலுக்கு லேசாகத் தலையசைத்தேன். சில நொடிகள் குனிந்து மாமாவின் முகத்தைப் பார்த்தவள் நிமிர்ந்தாள். கண்களில் நீர் நிறைந்திருந்தது. நாசி விடைத்துக் கொண்டிருந்தது.

மதகுகளைத் திறந்ததும் அடித்துச் சுழற்றும் அணை நீர் போல் சட்டென்று என் மேல் சாய்ந்தவள் பெருங்குரலெடுத்து அழத் துவங்கினாள். அவள் கண்ணீரும் எச்சிலும் சட்டையை நனைத்தன. உள்ளுக்குள் ஏதோ உடைந்து போக, மெல்லக் கைகளை உயர்த்தி, அவள் முதுகைச் சுற்றி அணைத்தேன். மெல்லத் தடவிக் கொடுத்தேன். சீயக்காயும் அஸ்வினி தேங்காயெண்ணெயின் மணமும் நினைவினின்றும் புகை போல் எழுந்து நாசியை ஆக்கிரமித்தது.

அவள் அழுகை நீடித்த நிமிடங்கள் நகராமல் நிற்பது போல் தோன்றியது மெல்ல மெல்ல என் கண்களிலும் நீர் நிறைந்து மறைத்தது.அழுகையின் வீரியம் சற்றே குறைந்தாற் போலிருந்தது. மெல்ல அவளை விலக்கினேன். கண்களோடு சேர்த்துக் கன்னங்களை அழுந்தத் துடைத்தேன். அவள் தலை மேல் மெல்லக் கை வைத்து அழுத்தினேன்.

பின்திரும்பிப்பார்க்காமல்வெளியேவந்தேன். சட்டை  முழுவதும்வியர்த்துநனைந்திருந்தது. அதில்தீபராணியின்வியர்வையும்இருந்தது. தேநீர்குடித்தால்தேவலாம்போலிருந்தது. மெல்லப் படியிறங்கிக் குளத்துத்திருப்பத்தின்தேநீர்க்கடையைநோக்கிநடக்கத்துவங்கினேன். தெருமுனையைத்திரும்பும்போதுயாரோபின்னாலிருந்துஅழைப்பதுபோல்இருந்தது. திரும்பிப்பார்க்கவில்லை.

நிழற்குடை – கமலதேவி சிறுகதை

வழியெங்கும் காய்ந்து கிடந்தது நிலம். மழைக்கான தவக்காலம் என அசையாமல் உயிரை பிடித்து நின்றன ஓரிரு நுணா மரங்கள். ஈரமில்லாத காற்று சுழன்று சுழன்று புழுதியை பறத்திக்கொண்டிருந்தது. ஒற்றைத்துளிக்கு ஏந்திய கரங்களென குறுசிறுத்த இலைகளை நீட்டி நின்றன புதர்கள்.

கரட்டு நிலம். வரும் ஓரிரு மழைகளை நம்பி வள்ளிக்கிழங்குகள் மட்டுமே பிழைக்கும். காடுகள் காய்ந்து வரப்புகள் சிதைந்து நிலம் விரிந்து கிடந்தது. கண்ணெட்டும் தொலைவு வரை வெற்றுநிலமாய் நீண்டு கிடந்தது.

இவற்றையெல்லாம் நோக்கி கண்களை சுழற்றிவிட்டு வறண்ட தளுகையாற்றை பார்த்தபடி சுவாதி அந்த சிறிய தடுப்பணையின் கரைமேட்டில் அமர்ந்திருந்தாள். நான்குமணிவெயில் கனன்றது. நிலையில்லாமல் தவித்த துப்பட்டாவை எடுத்து இடப்புறம் நின்ற புங்கையின் கிளையில் முடிச்சிட்டாள் . பத்துநிமிட நடை தொலைவில் இருந்த சின்னவர் வீடு பூட்டிக்கிடக்கிறது.

அவர் மகன் வீட்டிற்கே சென்றுவிட்டார். அவரிடம் உங்கள் நினைவு வந்தது ,பார்க்கவேண்டும் என்று தோன்றியது என்று தயங்காமல் சொல்லலாம். மனுசருக்குள்ள இதெல்லாம் இருக்கனும் தானே என்று சொல்லிவிட்டு நீ கூட கனவில வந்த என்பார். உன்னைமாதிரியே ஒரு பொண்ணை பஸ்ஸீல பாத்தேன். பாத்ததிலிருந்து நீ ஒரு எட்டு வந்துட்டு போனா பரவாயில்லை என்று நினைத்ததாக சொல்வார்.

“பொழுது எறங்கறதுக்குள்ள வந்திரனுங்கண்ணு…”என்று அம்மாச்சி சொல்லி சொல்லி அனுப்பினார். இங்கிருந்து இருபது நிமிட நடைதூரத்தில் இருக்கும் வயல்வீட்டின் களத்தில் காத்திருப்பார். ஒருபேச்சு ஒருசொல் ஒருசிரிப்பு ஒருபார்வை ஒருசிணுங்கலை கூட கண்களால் அள்ளி வைத்துக்கொள்வதைப்போல பார்ப்பார். துப்பட்டாவுடன் எழுந்து நடந்தாள்.

பாதையை பார்த்திருந்த அம்மாச்சி தொலைவில் இவளைக்கண்டதும் உள்ளே சென்று தேநீருடன் களத்திற்கு வந்தார். சேர்ந்து குடிக்க காத்திருப்பதை உணர்ந்து தாமதித்ததற்காக அவள் மனம் குன்றியது.

“என்ன கண்ணு மூஞ்சே சரியில்ல…”

“ஒண்ணுல்லமாச்சி…”

“பள்ளிக்கூடம் போனுமேன்னா…”

“இல்லம்மாச்சி…நான் என்ன சின்னப்பிள்ளையா…”

இரவு உணவிற்கு பின் களத்தில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்துக்கிடந்தாள். கயிற்றின் அழுத்தத்தை முதுகு உணர்ந்து கொண்டிருந்தது. அருகில் அம்மாச்சி பேசிக்கொண்டிருப்பதை உள்வாங்கி பதில்கள் சொன்னாள். நிலா வானத்தில் ஏறி பாதி தொலைவு வரும் வரை உறக்கம் வரவில்லை. மேகங்கள் நகர்வதை நிலா ஔிந்துகொள்வதை, மீண்டும் அசுரர்களின் சிங்கப்பல் என நீட்டிக்கொண்டு வெளிவருவதைப் பார்த்தபடியிருந்தாள்.

காலையில் சட்டென்று ஒரு துணுக்குறலில் விழிப்பு வந்துவிட்டது. கட்டிலில் கிடந்தபடி முகத்திலிருந்த போர்வையை விலக்கினாள். பச்சைமலைக்குன்றின் மேல் ஔி பரவிக்கொண்டிருந்தது. தலைக்குமேல் அசைந்து கொண்டிருந்த தென்னம்கிளைகளில் காக்கைகள் ஊஞ்சலாடி கரைந்து எழுந்து பறந்து கொண்டிருந்தன. படிகளில் அமர்ந்து கிழக்கை பார்த்துக்கொண்டிருந்த அம்மாச்சி எதை? யாரை? நினைத்துக் கொண்டிருக்கிறார். தாத்தாவையா? இல்லை எந்த நினைப்பும் அற்று சிவனே என்று இருத்தலா?

அசுர பொழுதுல ஒத்தையில வெட்டவெளிய இம்புட்டு நேரம் பாக்கக்கூடாது. பொழுது இறங்கறப்ப மனசு மிரண்டு நிக்கும்…இது மனுசரில்லாத மலையடிவாரம். பொம்பளப்பிள்ளை கைக்காலை கழுவிட்டு விளக்கு ஏத்தனும் என்று நேற்று அம்மாச்சி சொன்னது சரிதானா?

திடுக்கென்று எழுந்து போர்வையுடன் கட்டிலில் அமர்ந்தாள்.

“நெதானமா எந்திரி கண்ணு…அதுக்குள்ள என்ன பதஷ்ட்டம்…நாளைக்குதானே பள்ளிக்கூடம் போவனும்…”

அடுத்தநாள் அதிகாலையில் பேருந்துநிறுத்தம் வரை வந்த அம்மாச்சி எவ்வளவு மறைத்தும் அவர் முகம் சோர்வை, கலக்கத்தை காட்டியது. குன்றின் கீழேயே பாதை. திருச்சியிலிருந்து தம்மம்பட்டிக்கு செல்லும் மங்கம்மாள் காலத்து ராஜபாட்டை இது என்று மணிஅய்யா சொல்வார். இங்குதான் எங்காவது குன்று ஏறி இறங்கிக்கொண்டிருப்பார். அது அவரின் தினப்படி உடற்பயிற்சி.

ஊருக்குள்ளிலிருந்து நடந்து வந்து நின்ற அந்த அம்மாளின் மூன்றுசிவப்புக்கற்கள் பதித்த மூக்குத்தி புலரியின் முதல் ஔியில் மின்னியது. அவர் மூச்சிறைக்க அம்மாச்சியிடம், “இதுயாரு…உங்க பேத்தியாம்மா,” என்றார்.

அம்மாச்சி கண்களுக்கு மேல் கைகளைவைத்து உற்றுப்பார்த்து,“யாரு? காமாச்சியா…ஆமா எம்பேத்திதான்…படிக்குது…”என்றார்.

“ஊருக்குள்ளருந்து நடந்து வரதுக்கு அரைமணியாவுதும்மா…”

“அப்படி கல்லுல ஒக்காரும்மா,”

குன்றின் மடங்கலில் இருந்து சட்டென்று பேருந்து தெரிந்தது. பக்கவாட்டில் அம்மாச்சியை பிடித்துக்கொண்டு அடுத்த விடுமுறைக்கு வருவதாக கூறி பேருந்தேறினாள்.

கல்லூரியில் நுழைந்ததும் வீட்டிற்கு அழைத்து அம்மாவிடம் சொல்லியப்பின் விடுதிஅறைக்கு சென்றாள். சன்னலை திறந்ததும் காலை வெயில் சட்டென்று உள்ளே இறங்கியது. குறிப்பேடுகளை கைகளில் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள்.

“ஹாய்…சுவாதி..”என்று குதூகளிக்கும் குரலுடன் அனிதா ஓடிவந்தாள். இவள் முகத்தை பார்த்ததும் உதட்டை சுளித்தபடி உள்ளே சென்று புத்தகங்களை எடுத்து வருவதற்குள் இவள் கீழை தரைத்தளத்திற்கு வந்திருந்தாள்.

பொங்கலும் சாம்பாரும் வாயிற்கும் வயிற்றிற்கும் இடையில் சிக்கித்தவித்தது.

“சுவாதி..மாங்கா ஊறுகா வேணுமா?”

“பொங்கலுக்கா?”

“எதாச்சும் ருசிக்கு வேணுமில்ல…”என்றபடி ஊறுகாய் பாட்டிலை திறந்தாள்.

தட்டை கழுவி அடுக்கும் போது, தோளில் கைவைத்த அனிதாவை, சுவாதி பார்த்த பார்வையில் கையை எடுத்துக் கொண்டாள்.

பிள்ளைகள் வந்து சேர்ந்து கொண்டிருந்தார்கள். புல்வெளிக்கு பக்கத்தில் நிற்கும் போது கோமதி, “ என்னாச்சு சுவாதி?” என்று அனிதாவை பார்த்தாள்.

“காலேஜ்க்கு வெளிய இருக்கற ஏழு கன்னிமார்ல எவளோ ஒருத்தி உள்ள வந்துட்டா…” என்ற அனிதா முன்னால் சென்று நின்று கொண்டாள். கோமதி சிரித்தபடி திரும்பிநின்றாள்.

தோழிகள் அனைவரும் வந்தபிறகு கிளம்பினார்கள். வகுப்பறையில் ஒரே கும்மாளமாக இருந்தது. நிஷா பென்சின் மீது ஏறி நின்று கைகளை ஆட்டி சிரித்தாள். ஹபி கீழிருந்து அவளை பிடித்து இழுக்க முயற்சி செய்தாள். வகுப்பறை முழுவதும் அலைஅலையாக பேச்சு சிரிப்பு ஒலிகள். பக்கத்தில் பயோகெமிஸ்ட்ரி இதற்குமேல் அலையடித்துக்கொண்டிருந்தது.

பிள்ளைகளுடன் பேசிவிட்டு வந்த அனிதா பின் பெஞ்சிலிருந்து சுவாதியின் குதிரைவால் முடியை பிடித்து இழுத்தாள். இவள் திரும்பாமல் இருக்கவும் பின்புறமிருந்து தாவி கழுத்தை பிடித்தபடி சத்தமாக, “மேடம் இன்னிக்கு மௌனவிரதம்…”என்றாள். எப்பவுமே நடக்கறது தானே என்றபடி மொத்த வகுப்பறையும் ஒருகணம் அவளைப்பார்த்து, அடுத்தகணம் அலையென திரும்பி சத்தமிட்டது.

“ முதல்நாள் இந்த கேஸ்லாம் பேசாம இருக்கறது டிபார்ட்மெண்டோட டோட்டல் வைப்க்கு நல்லது,”என்ற ஹபி சுவாதியின் தோளில் கைப்போட்டு இழுத்தாள்.

“காற்று எத்தனை பாடுபட்டாலும் மரங்கள் அசைவதில்லை…”

ராஜீ முதல் வரிசையிலிருந்து திரும்பி,“சூப்பர்டா…எந்த சினிமா…”என்றாள்.

“அசைவெல்லாம் இலைகளுக்கே…” என்ற சுவாதியின் கன்னத்தை பிடித்து இழுத்துவிட்டு,“விரதம் வாப்பஸ். இந்த டைம் கிரெடிட் எனக்குதான்,” என்று பெஞ்சில் தட்டியபடி ஹபி அமர்ந்தாள்.

“சும்மா சீன் போடுதுங்க. மகளீர் தினத்துக்கு எழுதினது தானே. தமிழ் மேம் ‘வேரோட விழுந்திட்டா என்ன பண்ணுவீங்கன்னு’ ஒரு லுக்கு விட்டாங்க. செம இன்சல்ட். ரெண்டும் வாயத்திறக்கல,”என்று நிஷா சொன்னதும் வகுப்பறை சிரிப்புடன் மணி ஒலித்தது.

ஜெனிடிக்ஸ் வகுப்பில் விடுதி பரோட்டாவை வாயில் வைத்ததைப்போல அனைவரும் அமர்ந்திருந்தார்கள். டி.என்.ஏ கோடிங் நீண்டுகொண்டிருந்தது. ஊரில் கோவில் வேம்பினடியில் கருங்கல்லில் வடிக்கப்பட்ட பின்னலாய் நெளியும் இரட்டை நாகங்களை ஒத்த வடிவம். ஏன் இந்த இழைகள் ஒற்றையாக இருக்கக்கூடாது.

முன்பெல்லாம் மனமும் உடலும் என்று இரண்டாக தோன்றும். இப்போது அனைத்துமே உடல்தான். மனமென்ற ஒன்றைபற்றி வழுத்த ஐயம். உடல் வழுவாக இருந்தால் மனம் என்ற ஒன்றே தேவைப்படாதா? பேசாமல் உண்டு கழித்து வாழ்ந்து செத்துவிடலாம். இயற்கையின் எந்தவிதி மனதை உண்டாக்கியிருக்கும்?

சுவாதி…என்ற குரலோடு சுண்ணக்கட்டி பென்சில் விழுந்தது.

“ஹோம்சிக்கா…”

“சாரி மேம்,”

பின்னால் ஹபி, “மைண்ட்சிக் மேம்,” என்று மெதுவாக வாயில் கைவைத்தபடி சொன்னாள்.

மதியம் உணவுஇடைவேளைக்காக வகுப்பு கலைந்தது.

“அனி…நீ போ..பின்னாடியே வரேன்,”

“லன்ச் ஸ்கிப் பண்ணாத சுவாதி…மரியாதையா வா,”

உணவறையில் ஏகசத்தமாக இருந்தது. ஊர்க்கதைகள் விரிந்துகொண்டிருந்தன.

“எருமமாடு…சாப்பாட்டை எடுத்து வாயில வை. உன்னமாதிரி ஹோம் சிக்கரை நான் பாத்ததே இல்லை. வருசகணக்கா அதே மாதிரியேவா! சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட் மண்ணாங்கட்டியெல்லாம் எழுதி மார்க் வாங்கி என்ன யூஸ்,”

அனிதா பொறுமை இழந்து கொண்டிருந்தாள்.

சாயுங்காலம் விடுதி அறையில் படுத்திருந்தனர். தூரத்து ஊர்களில் இருந்து காலையில் எழுந்து கிளம்பி வந்ததன் களைப்பு. சுவாதி கண்களை விழித்து படுத்துக்கிடந்தாள்.

“தூக்கம் வரலயா?”

“ம்…”

“வீட்டுஞாபகமா…”

“தூங்கவிடாம பண்ணுன கோமதி…செருப்பு பறக்கும்,” என்றபடி சுதா திரும்பிப்படுத்தாள்.

“அவ டிப்ரஸ்ட்டா இருக்கால்ல…உனக்கு தூக்கம்தான் முக்கியமா போச்சா…”என்ற கோமதி இரும்புக்கட்டிலின் முனையில் அமர்ந்து பின்னலை அவிழ்த்துவிட்டாள்.

“ஆமா…ஒழுங்கா சாப்பிட்டா எல்லாம் சரியா நடக்கும்…” என்ற சுதாவின் குரல் கீழிறங்கியிருந்தது.

“அவபாட்டுக்கு இருந்தா…காலையில சரியாகிடுவா. தொல்லைப்பண்ணாதீங்க,” என்ற அன்பு தலையணை மீது அமர்ந்து சுவரில் சாய்ந்தாள்.

“நம்ம இப்பிடி இருந்தா இவ விடுவாளா…இந்நேரம் நை நைன்னு பக்கத்துல ஒக்காந்து உயிர எடுப்பா…”

“ஆமாமா…அவள நிறுத்தச்சொல்லு நாங்க நிறுத்தறோம்…” என்ற அனிதா சுவாதி படுத்திருந்த கட்டில் விளிம்பில் ஓடிவந்து அமர்ந்தாள்.

“ரொம்ப பழசு…புதுசா எதாச்சும்…”

“முன்னப்பின்ன தெரியாத அந்தப்பையனுக்காக கண்ணீர் விடற மனசிருக்கே…அதுல கொஞ்சம் நம்ம ஃப்ரண்டுக்காக…”

“என்ன ஒரு டைமிங்சென்ஸ்…இதோட நிறுத்தினா நல்லாருக்கும்…”

“காலையில ஜெனிடிக்ஸ் கிளாஸ் புரியலையா சுவாதி…”

“யாருக்குதான் புரியுது…பாத்துக்கலாம்…”

“இல்ல…வேறெதாச்சும் இன்ட்ரெட்ஸ்ட்டிங்கா இருக்கும் கேளு…”என்ற சுதா அனிதா அருகில் அமர்ந்து அவள் தோளில் கைப்போட்டாள்.

“டி.என்.ஏ வை பாத்தா கோவில்ல ரெட்டநாகம் இருக்குமே அதுமாதிரி தோணுச்சு…”

“அதானே பாத்தேன். எங்க கொண்டுபோய் டி.என்.ஏ வை சேத்திருக்கா பாரு. மண்டைய வலிக்காம என்ன பண்ணும்? உயிரோட இருந்தா வாட்சனும் க்ரீக்கும் அந்த கல்லுல மோதி செத்திருப்பாங்க,”

“அவங்களும் ரெண்டுபேர்…ஏன் ஒருத்தர் கண்டுபிடிக்கல,”

“ம்கூம்…ஒருத்தர் ஏன் கண்டுபிடிக்கல? எனக்கு வர ஆத்திரத்துக்கு…இது ஒரு கேள்வியா? நீ பண்ற டார்ச்சருக்கு எங்கசாமி உன்ன சும்மா விடாது பாத்துக்கோ,”

“இங்க பாரு சுவாதி…கண்டதை யோசிக்காத. லிங்க் பண்ணினா எல்லாம் லிங்க் ஆகறமாதிரியே இருக்கும். டீ வந்தப்பின்னாடி குடிச்சிட்டு வேலையப்பாரு…”

சுதா எழுந்து கீழே சென்றாள். தேநீர் கோப்பைகளுடன் வந்து சுரபி முன்னால் ஒரு கோப்பையை வைத்தாள். அவள் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு நாள்காட்டி பக்கம் சென்றாள்.

“அதானே பாத்தேன் …உனக்காக எப்படியெல்லாம் பயலாஜிக்கலா யோசிக்க வேண்டியிருக்கு. ஏய்…மரக்கழண்டவளே இன்னிக்கு உன்னோட தேதி…ஓடிப்போய் குளிச்சிட்டு ரெண்டு பாரதி கவிதை படி. கிச்சன்ல எதாச்சும் வாங்கிட்டு வரேன். வேலையமுடிச்சிட்டு தூங்கு. ரெண்டுநாள் முன்னவே உனக்கு மரகழண்டிருக்குமே…”

“ஜீசஸ்…”என்றபடி அன்பு படுத்தாள்.

“ரொம்ப பேசாத. நீயெல்லாம் முன்னாடி இருக்கவங்களை புலி மாதிரி கடிச்சு கொதறுவ. என்மாதிரி ஆளெல்லாம் அழுதே தீத்துடும். இது கொஞ்சம் திருகல்…” என்ற அனிதா தன் கட்டிலை நோக்கி சென்றாள்.

கோமதி,“இன்றைய தத்துவம் அனிதா …”என்றாள். தேநீரை குடித்துக்கொண்டிருந்தவர்கள் சிரித்தபடி சுவாதியை பார்த்தார்கள். அவள் புருவங்களை உயர்த்தி புன்னகைத்துவிட்டு வலிகளுடன் பிளாஸ்டிக் வாளியை எடுத்தாள்.

சிறிய மனிதரின் உலகம் – ஸிந்துஜா சிறுகதை

“இன்னிக்கி ராத்திரி சாப்பாட்டுக்கு வழி பண்ணிட்டே. தாங்க்ஸ்டா

சம்பத்” என்றான் முத்துமணி. “அதுவும் ஸ்பெஷல் மீல்ஸ்.”

“ஏதாச்சும் உளறாதே. உன் கைலே காசு இருந்தா என்னை செலவழிக்க விட்டிருப்பியா?” என்று கேட்டான் சம்பத். அவர்கள் கன்சர்ன்சில் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு  கெஸ்ட் ஹவுசுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அது ஆடன்வாலா சாலையில் இருக்கிறது. அவர்கள் நடந்து சென்ற  பண்டார்க்கர் சாலையில்  ஒன்பதரை மணிக்கு  அவ்வளவாக  நடமாட்டமில்லை. தினமும் வழக்கமாக நெடு நேரம் விழித்திருக்கும் சாலைகள்தாம் இங்கு. ஆனால் அன்று பிரபல உள்ளூர் அரசியல் கட்சி மாலை ஆறு மணி வரைக்கும் கடையடைப்பு என்று ஆர்ப்பாட்டம் செய்திருந்ததால் பலர் வெளியே வருவதை நிறுத்தி விட்டார்கள்..

கன்சர்ன்சில் கூட அன்று சாப்பாடு கிடைக்குமா என்று முத்துமணி சந்தேகப்பட்ட போது “நிச்சியம் இருக்கும். இன்னிக்கி வியாழக் கிழமை இல்லியா? ஆலு கறியும் ஆனியன் சாம்பாரும் சாப்பிட நம்மளை விட மராத்திக்காரங்க கூட்டம் ஜாஸ்தியா இருக்கும். வேணும்னா அவங்க பால் தாக்கரே கிட்டயேகூட போயி இன்னிக்கி கன்சர்ன்சை   திறந்து வச்சிருக்கணும்னு பெர்மிஷன் வாங்கிட்டு வந்துருவாங்க!” என்றான் சம்பத்.

முத்துமணி “அந்த வெங்கிட ரெட்டி வேணும்னே என் பில் எல்லாத்

தையும் செட்டில் பண்ணாம நிறுத்தி வச்சிருக்கான். அதுலேயே கிட்டத்தட்ட எழுநூறு ரூபா வரணும். அப்புறம் இந்த மாசம் சம்பளம் வர இன்னும் நாலு நாள் இருக்கே. அதுதான்  சோத்துக்கு லாட்டரி அடிக்கற லெவலுக்கு வந்தாச்சு” என்றான் முத்துமணி. “ஒரு நா இல்லாட்டா ஒரு நா அவனை ஆபீசுலேயே வச்சு செருப்பால அடிக்கப் போறேன்.”

“ஏய், கோபத்துலே என்னமாச்சும் பண்ணிறாதே. என்ன சொன்னாலும் அவன் பார்ட்னரோட சொந்தக்காரன். போறாததுக்கு ஆபீஸ் மானேஜர்

வேற. நீயும் அவன் டிராவல் ஏஜெண்டு கிட்டேர்ந்து கமிஷன் அடிக்கிறான்னு அன்னிக்கி அவன் காதுல விழற மாதிரி பேசியிருக்க வேண்டாம்” என்றான் சம்பத்.

“நான் சொன்னது உண்மைதானே?” என்றான் முத்துமணி.

“உண்மை சொன்னியா?” என்று சிரித்தான் சம்பத். “பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னது எவனோ சொன்னது  அந்தக் காலத்துக்கு சரி. இப்ப வெங்கிட ரெட்டி காலத்துலே உண்மை சொன்னா சோத்துக்கு லாட்டரி அடிக்க வேண்டியதுதான்.”

அவர்கள்இருவரும் ஒரேகம்பனியில்வேலைபார்த்தார்கள். தமிழர்கள்நடத்தும் ஆடிட்ஆபீஸ். முத்துமணி இன்டர்சி.எ. பாஸ்பண்ணி

விட்டான். சம்பத் ஃபைனலில் ஒரு குரூப் பாக்கி வைத்திருக்கிறான். முத்துமணிக்கு மதுரை சொந்த ஊர். சம்பத்துக்கு திருநாகேஸ்வரம்.

இரண்டு பேரும் தமிழ் நாட்டில் இருந்து பம்பாய்க்கு வந்திருந்ததால் கம்பனியின் கெஸ்ட் ஹவுசில் தங்கி இருந்தார்கள். ஆடன்வாலா சாலையில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தில் ஏழாவது மாடியில் ஃபிளாட் இருந்தது.

சம்பத் திடீரென்று முத்துமணியிடம் ” நான் வேணும்னா தனுஷ் கிட்ட சொல்லட்டா?” என்றான்.

“என்னன்னு?”

தனுஷ், உதவி மானேஜர். வெங்கிட ரெட்டியின் அசிஸ்டன்ட்.

“இந்த மாதிரி உனக்குப் பணக் கஷ்டம் இருக்கு. பாதி பில்லையானும்  செட்டில் பண்ணுன்னு ரெட்டி கிட்டே கேக்கச் சொல்றேன்” என்றான் சம்பத். தனுஷ் என்கிற தனுஷ்கோடியும் சம்பத்தும் ஊரில் ஒரே தெருக்காரர்கள். சம்பத்திடமிருந்து தனுஷ் அடிக்கடி கடன் வாங்குவான்.

“நான் கஷ்டப்படறதைக் கேட்டு ரெட்டி இன்னும் ஜாஸ்தி சந்தோஷப்

படுவான்” என்றான் முத்துமணி. “ஆனா உதவி செய்ய மாட்டான்.”

“எதுக்கும் நாளைக்கி ட்ரை பண்ணிப் பாக்கலாம்” என்றான் சம்பத்.

கிங் சர்க்கிளில் இருந்த ஆனந்த பவனை நோக்கி நடந்த முத்துமணி “ஒரு பீடா போட்டுட்டு போலாம்டா” என்றான் சம்பத்திடம்.

ஆனால் ஆனந்த பவனும் பீடாக் கடையும் மூடியிருந்தன.

“கடையடைப்பு எஃபக்ட்” என்றான் சம்பத்.

இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள். ஆடன்வாலா சாலையிலும் மருந்துக்குக் கூட ஆட்கள் நடமாட்டம் இல்லை. அவர்களின் கட்டிட

வாசலை அடைந்த போது முத்துமணி சம்பத்திடம் “நீ ரூமுக்குப் போ. நான் இப்படி ஒரு ரவுண்டு  அடிச்சிட்டு வரேன்” என்றான்.

“சரி. ஏற்கனவே மணி பத்தாகப் போகுது. சீக்கிரம் வந்திரு” என்று சம்பத் சொல்லி விட்டு கட்டிடத்துக்குள் நுழைந்தான்.  ‘பாவம் முத்துமணி. பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறான். போய்ப் படுத்தாலும் தூக்கம் வராது அவனுக்கு. அதுக்குத் தான் ஒரு ரவுண்டு நடக்கலாம் என்று போகிறான் போல ‘ என்று பரிதாபப்பட்டுக் கொண்டே சம்பத் சென்றான்.

முத்துமணி ஃபைவ் கார்டன்ஸ் நோக்கிச் செல்லும் நேர்ச் சாலையில் நடந்தான். தெரு விளக்குகளின் ஒளியில் அவனது நிழல் அவனிலிருந்து வெளிப்பட்டு நீண்டும்  பிறகு மீண்டும் அவனுக்குள்ளேயே அடைக்கலம் பெற விரும்புவது போலச்  சுருங்கியும் மாறி மாறி அவனுடன் வந்தன. இந்த நடனம் அவன் வாழ்க்கையை எதிரொலிக்கின்றதா? காற்றில் ஆடும் மர இலைகளின் சத்தம் தவிர வேறு ஒலி  எதுவும் அவனுக்குக் கேட்கவில்லை.

ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும் போல இருந்தது. சம்பத்திடம் கேட்டிருந்தால் வாங்கிக் கொடுத்திருப்பான்.  ஆனால் எவ்வளவு உதவிதான் அவனிடமிருந்து பெறுவது? ஏற்கனவே அவனிடமிருந்து இந்த  மாதத்தில்  முன்னூறு  ரூபாய் வரை கடன் வாங்கியாயிற்று. அது எல்லாம் தினசரிச் செலவுக்குத்தான். ஊருக்கு அனுப்ப வேண்டிய பணத்தையும் வெங்கிட ரெட்டி கெடுத்து விட்டான். அவனிடமிருந்து அவர்கள் எதுவும் பணம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அவனாகவே அவ்வப்போது சம்பளத்தில் மற்றும் பிரயாணப்படியில் மிச்சம் பிடிப்பது, ஆபீசில் கிடைக்கும்  போனஸ் பணம் என்று கையில் சேரும் பணத்தை ஊருக்கு அனுப்பி வைப்பான்.  மூன்று மாதங்களாக அதற்கும் கேடு காலம் வந்து விட்டது.

காலை எற்றி உதைத்துக்கொண்டே நடந்தான். பார்க்  அருகேவந்த போது அங்குஒளியைவிலக்கிஇருண்டிருந்த நிழல்களில்

ஒதுங்கிக் கிடந்த ஜோடிகளைப்  பார்த்தபடி சென்றான். முழுக் குடும்பமும் ஒற்றை அறை  வீட்டில் குடியிருக்கும் விதியுடன் வாழும் இளம் கணவர்களும் மனைவிகளும்  அவர்களின் கொஞ்சல்களையும் தாபத்தையும் வானமும், காற்றும்  செடி கொடிகளும் பார்த்தால் பார்த்து விட்டுப் போகட்டுமே என்று நினைத்தவர்களாய் நெருங்கிக் கிடந்தார்கள். ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில் என்னென்ன மாதிரியான கஷ்டங்கள் !

முத்துமணி வந்த வழியே திரும்பி நடந்து சென்றான். பணத்துக்கு ஏதாவது வழி செய்ய வேண்டும். நாளை சம்பத்தின் உதவியால் பணம் கிடைக்கும் என்று அவனுக்கு நம்பிக்கை இல்லை. வெங்கிட ரெட்டி கிராதகன். இத்தனை நேரத்துக்கு பார்ட்னரிடம் போய் என்ன கோள் மூட்டி வைத்திருக்கின்றானோ? அவன் காலில் போய் முத்துமணி  விழ

வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அதுவும் அவனது ஆபீஸ் சகாக்கள் ரெட்டியைச் சுற்றி இருக்கையில் !  நடக்காத காரியம். மாத சம்பளமாவது வருமா என்றால் அது வர இன்னும் நாலு நாள்கள்

இருக்கின்றன. நல்ல வேளையாக முப்பதாம் தேதி  விடுமுறை நாள் இல்லை.

முத்துமணி மறுபடியும் கிங் சர்க்கிள் வந்து ஸ்டேஷனை நோக்கி நடந்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை. அவன் நடந்து வரும் சத்தம் கேட்டு பிளாட்ஃபாரமில் படுத்திருந்த நாய் ஒன்று ‘விருட்’டென்று எழுந்து அவனைப் பார்த்து ஒரு தடவை குரைத்து விட்டு மறுபடியும் வாலைச் சுருட்டிக் கொண்டு படுத்துக் கொண்டது. அப்போது அந்த நாய்க்குச் சற்றுத் தள்ளியிருந்த சிறிய கடை முத்து

மணியின் கண்ணில் பட்டது. சாதாரண உயரம் இருப்பவன் கூடக்

குனிந்து செல்ல வேண்டிய அளவுக்கு இருந்த  கடையின் சிறிய கதவின் மேல் சாதாரணப் பூட்டு ஒன்று தொங்கிற்று.  மறுபடியும்முத்துமணியின் பார்வை சாலையின் முன்னும் பின்னும் அலைந்தது. பின்பு அவன் அந்தக் கதவை நெருங்கினான்.

&   &   &

சம்பத் குளித்து உடையணிந்து அலுவலகம் செல்லத் தயாரானான்.

அவனது கைக்கடிகாரம்  எட்டரை என்றது. அவன் முத்துமணி தயாராகி விட்டானா என்று பார்க்க அவன் அறைக்குச் சென்ற போது முத்துமணி ஒரு பையிலிருந்து இன்னொரு பைக்குப் புத்தகங்களை மாற்றிக் கொண்டிருந்தான்.

“இங்கிலிஷ் நாவல்களா? அட தமிழ் புஸ்தகங்களும் இருக்கே?” என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டான் சம்பத்.

“சொல்றேன், சொல்றேன்” என்று புத்தகங்கள் நிரம்பிய பையைக் கையில் எடுத்துக் கொண்டு காலியான பையைக் காலால் அறையின் மூலையில் தள்ளினான். சம்பத்தைப் பார்த்து “நான் ரெடி. கிளம்பலாமா?” என்று கேட்டான்.

அவர்கள் இருவரும் ஆனந்த பவனில் டிபன் சாப்பிட்டார்கள். சர்வர் பில்லைக் கொண்டு வந்ததும் சம்பத் பர்ஸை எடுக்கப் போனான். அவனைத் தடுத்து நிறுத்தி முத்துமணி ஒரு நூறு ரூபாய் நோட்டுத் தாளை எடுத்துக் கொடுத்தான். சம்பத் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தான். அவர்கள் ஓட்டலை விட்டு வெளியே வந்து கிங் சர்க்கிள் ஸ்டேஷனை நோக்கி நடந்தார்கள். மின்சார ரயிலில் விக்ட்டோரியா டெர்மினஸ்க்கு அரை மணியில் போய் விடலாம். அங்கிருந்து ஃபோர்ட்டில் இருக்கும் ஆபீசை அடையக் கால் மணி நேர நடை.

போகிற வழியில் சம்பத்தைப் பார்த்து முத்துமணி “இதுதான்” என்றான். அவன் பார்வை சென்ற வழியில் சம்பத்தின் பார்வையும் பாய்ந்தது. ஒரு சிறிய கடை பூட்டப்பட்டுக் கிடந்தது. அருகில் யாரும் இல்லை.

சம்பத் எதுவும் கேட்பதற்கு முன்னால் முத்துமணி “இந்தப் புஸ்தகங்கள் எல்லாம் இங்கேர்ந்துதான் எடுத்தது !” என்றான். “நூறு ரூபாயும் கூட.”

“என்னது?”

“ஆமா. நேத்து ராத்திரி  அக்கம் பக்கம் யாருமில்லேன்னு பூட்டை ஒடச்சு இந்தக் கடைக்குள்ள போனேன். இது புஸ்தகக் கடைன்னு முன்னாலேயே பாத்திருக்கேன். உள்ளே போயி செல்போன் டார்ச் அடிச்சுப் பாத்தேன். ஒரு டப்பால  இருந்த நூறு ரூபாயை எடுத்திட்டு வெளில வரலாம்னு இருந்தப்ப, யாராவது பாத்தா பதில் சொல்ல

ணுமேன்னு  நாலஞ்சு புஸ்தகத்தையும் கைல எடுத்துட்டு வந்திட்டேன்” என்றான் முத்துமணி.

சம்பத்துக்கு ஒரு நிமிஷம் வாய் எழவில்லை.

முத்துமணி தொடர்ந்து பேசினான்: “ராத்திரி ரூம்ல போய்ப் படுக்கைல விழுந்தப்ப உடனே தூங்க முடியலே. யோசிச்சு கிட்டே இருந்தேன்.  சும்மாவானும் நான் உன்கிட்ட நேத்தி ராத்திரி சொன்ன செருப்படியை நிஜமாக்கற  அளவுக்கு  ரெட்டி மேல இருந்த கோபம் வெறியா மாறிக்

கிட்டுஇருந்தப்பஇதைப்போய்செஞ்சிட்டேன். மொதல்லஎனக்குக்கொஞ்சம்கூடகுற்றஉணர்ச்சியேஇல்லாமஇருந்திச்சு. ஒரு  அயோக்கியத்தனத்தைஇன்னோருஅயோக்கியத்தனம்தான்எதுத்து

சாந்தி கொடுக்குமான்னு அப்புறமா ஷாக் ஆயிட்டேன்.  ஆனா தப்பு

செஞ்சது செஞ்சதுதானே?  யாரோ ஒரு ஏழை வயத்துல அடிச்சிட்டேன். இந்தப் புஸ்தகத்தையாவது கொண்டு போய்த் திரும்ப வச்சிரலாமான்னு இருந்திச்சு. ஆனா என்னோட போதாத காலம் அப்ப போய் நான் மாட்டிக்கிட்டா? சரி மண்ல ஊர்ற புழு மாதிரி ஆயுசுக்கும் இது என் மனசுல ஊர்ந்துக்கிட்டே என்னைச் சாகடிக்கட்டும்னு விட்டுட்டேன்.”

சம்பத்துக்கு முதலில் நண்பன் மீது ஏற்பட்ட கோபம் மறைந்து அவன் மேல் பரிதாபம் சுரந்தது.

“சரி, ஆனது ஆச்சு. இனிமே என்ன பண்ண முடியும்? வேற வேலையைக் கவனிப்போம்”என்று அவனது  இடது கையைத் தனது வலது கரத்தால் பற்றிக் கொண்டு சம்பத் மேலே தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான். அந்த ஆதரவை அழுத்தமாகப் பற்றிக் கொண்டது  போல் முத்துமணியும் உடன் சென்றான்.

அவர்கள் வி.டி. ஸ்டேஷனை அடைந்து அலுவலகத்தை நோக்கி டி.என். ரோடு வழியே நடந்தார்கள். வழியில் ஒரு பழைய புத்தகங்கள் விற்கும் கடை முன் நின்றான் முத்துமணி. கையிலிருந்த பையிலிருந்து புத்தகங்களை எடுத்துக் கடைக்காரனிடம் தந்தான். அவன் அவற்றைப் புரட்டிப் பார்த்து விட்டு “நாப்பது ரூபாய்” என்றான்.

“விளையாடாதே. ஒவ்வொரு புஸ்தகமும் நூறு ரூபாய்க்கு மேலே” என்றான் முத்துமணி.

“அது புது பொஸ்தகத்துக்கு.” என்ற கடைக்காரன். “இதை எடைக்குப் போட்டா இருபது ரூபா கூட தரமாட்டான்னு உனக்குத் தெரியாதா?” என்று சிரித்தான். “இங்கிலீசு போறதே கஸ்டம். தமிள  வச்சுக்கிட்டு இங்க தடுமாற வேண்டியதுதான்.”

கடைசியில் அவன் ஐம்பதுக்கு மேல் தர முடியாது என்றான். அதை வாங்கிக் கொண்டு இருவரும் நடந்தார்கள்.

“அந்தக் கடைக்காரனும் இந்த விலைக்குத்தான் வாங்கியிருப்பான், இல்லே?” என்றான் முத்துமணி.

“யாரு, கிங் சர்க்கிள் கடையா?” என்று சம்பத் கேட்டான். “ஆமா.அதுவும் அந்த ஏரியால இன்னும் குறைச்சுக்  கூட கேப்பான். ”

அவர்கள் அலுவலகத்தை அடையும் போது ஒன்பதேமுக்கால் ஆகி விட்டது. உள்ளே நுழைந்ததும் ரெட்டியின் மேஜையைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் நிற்பதை அவர்கள் கவனித்து அங்கே சென்றார்கள். ரெட்டி கண்ணில் படவில்லை. மாறாக தனுஷ் நின்று மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். சம்பத்தைப் பார்த்ததும் அவன் “சாரோட அப்பா நேத்தி இறந்துட்டாருன்னு நியூஸ் வந்து ராத்திரி கிளம்பிப் போயிருக்காரு” என்றான்.

சம்பத்தும் முத்துமணியும் தங்கள் வருத்தத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். ஒவ்வொருவராகச் சற்று நேரத்தில் கூட்டம் கலைந்தது. சம்பத் முத்துமணியைப் பார்த்து “ஒரு டீ அடிச்சிட்டு வரலாமா?” என்று கேட்டான். இருவரும் ஆபீசை ஒட்டி இருந்த சிறிய தெருவுக்குள் நுழைந்து டீக்கடையை அடைந்தார்கள்.

சம்பத் டீயைக் குடித்துக் கொண்டே முத்துமணியிடம் “நான் இப்ப தனுஷ் கிட்டயும் விஷயத்தை சொல்றேன். இப்ப அவன்தான் ஆபீஸ் இன் சார்ஜ். அவன் செஞ்சு குடுப்பான்” என்று உறுதியான குரலில் சொன்னான். முத்துமணிக்கும் நம்பிக்கை வந்து விட்டது. நண்பனை நன்றியுடன் பார்த்தான்.

அன்று மத்தியானம் லஞ்சுக்குப் போய் விட்டு வந்த போது தனுஷ் முத்துமணியைக் கூப்பிட்டு “உன் டி.ஏ. பில் எல்லாம் பாஸ் பண்ணிட்டேன். காஷியர் கிட்ட வாங்கிட்டுப் போ. ரெட்டி வர இன்னும் பதினஞ்சு நாளாகுமாம்” என்று சிரித்தான். கூடவே “சம்பத் சொன்னான் எல்லாத்தையும். நாளைக்கு அகமதாபாத் போயிட்டு வரியா? ஜி.என்.டெக்ஸ்டைல்ஸ்ல ஸ்டாக் ஆடிட்.. ஒரு வாரம் வெளியிலே

இருந்துட்டு வா ரெடீன்னா ஒரு டூர் புரோகிராம் கொடுத்திட்டு டூர் அட்வான்ஸ் வாங்கிட்டுப்  போ” என்றான்.

முத்துமணி மனதுக்குள் கணக்குப் போட்டான். இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கட் எடுத்துக் கொண்டு முதல் வகுப்பு சார்ஜைக் க்ளெய்ம் பண்ண ஆபீசில் அனுமதிப்பார்கள். தினசரி பேட்டாவிலும் ஒரு வாரத்துக்கு என்றால் நல்ல பணம் மிச்சமாகும். குறைந்தது எண்ணூறுலிருந்து ஆயிரம் வரை கையில் மிஞ்சும்  என்று மகிழ்ச்சியுடன் சம்பத்தைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொன்னான்.

“எல்லாம் உன்னாலதான்” என்றான் முத்துமணி.

“அப்ப இன்னிக்கி  டின்னர் நீதான் கொடுக்கிறே” என்று சம்பத் சிரித்தான்.

“டின்னர் என்ன? ஒரு பார்ட்டியும் வச்சுக்கலாம்” என்றான் முத்துமணி.

“உடனே செலவழிக்கக் கிளம்பிடுவியே. ஆயிரம் ஐநூறுன்னு கொஞ்ச நாள் பர்ஸ்லே  பணம் தூக்கம் போடட்டும். பார்ட்டி எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்” என்றான் சம்பத்.

அன்றுமாலைஇன்னும்கொஞ்சம்வேலைபாக்கிஇருப்பதால்சம்பத்முத்துமணியிடம்அவன்கிளம்பிப்போகலாம்என்றுசொன்னான். அப்போது ஆறரைமணி.மின்சாரரயிலைப்பிடித்துகிங்சர்க்கிள்வரும்போதுஏழரை. ஸ்டேஷனிலிருந்துவீட்டுக்குவரும்வழியில்புத்தகக்கடைகண்ணில்பட்டது. நோஞ்சலாகஒருஆசாமிபீடியைப்புகைத்துக்கொண்டுஉட்கார்ந்திருந்தான்.

கடைக்குமுன்போய்நின்றுஏழெட்டுப் புத்தகங்களைப்புரட்டிப்

பார்த்துக் கொண்டிருந்த முத்துமணி ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டான். கடைக்காரன் பின்னால்  சற்றுத் தள்ளியிருந்த ஸ்டூலில் தண்ணீர் பாட்டில் இருந்தது. முத்துமணி கடைக்காரனிடம் “மளா பாணி தே பாயி ” என்றான். அவன் சற்று அசுவாரசியமாகப் பின் பக்கம் திரும்பி ஸ்டூலில் இருந்த பாட்டிலை எட்டி எடுக்க முயன்றான்.

 

முத்துமணி அப்போது கால்சட்டையில் கையை விட்டு எதையோ எடுத்துக் கீழே போட்டான்.

கடைக்காரன் உட்கார்ந்தபடியே இன்னும் சற்றுப் பின்னால் நகர்ந்து கையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தான்.  முத்துமணி அதை வாங்கிக் குடித்து விட்டு “தன்யவாத” என்றான்.

பிறகு கையில் வைத்திருந்த புத்தகத்தைக் காட்டி “கிம்மத் காய் ஆஹே” என்று விலையைக் கேட்டான்.

கடைக்காரன் புத்தகத்தைப் பார்க்கக் கையை நீட்டினான்.முத்துமணி அவனிடம் புத்தகத்தை நீட்டிய போது அது கை தவறிக் கீழே விழுந்தது.

முத்துமணி அதை எடுக்கக் கீழே குனிந்தான். குனிந்தவன் “அட, இது என்ன?” என்றபடி கடைக்காரனைப் பார்த்தான்.

கடைக்காரன் முத்துமணியைப் பார்த்து “என்ன?” என்றான்.

முத்துமணி “நூறு ரூபா நோட்டு கீழே கிடக்கு” என்று கடைக்காரனிடம் கொடுத்தான்.

ஒரு ஊழியனின் மனசாட்சி – உஷாதீபன் சிறுகதை

மாறுதலில் உள்ளூருக்கு வந்த பின்புதான் தெரிந்தது, அந்த சங்கத்தின் முயற்சியினால்தான் இது நடந்திருக்கிறது என்று. இருந்த ஊரில் எந்த சங்கத்தைச் சார்ந்தவனாகவும் நான் இருந்ததில்லை. ஏதேனும் ஒன்றில் என்னைச் சேர்த்து விட வேண்டும் என்று முயன்றார்கள். நான் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டே வந்தேன். அது ஏதோ தப்பு செய்வதுபோலான உணர்வையே எனக்கு ஏற்படுத்திக் கொண்டிருந்தது. சங்கத்திற்கு சந்தா கொடுங்கள் என்று மாறி மாறி வந்து நிற்பார்கள். எதற்கு இத்தனை சங்கங்கள், மொத்தம் எத்தனை சங்கங்கள்தான் இருக்கின்றன என்பதே அப்போது எனது கேள்வியாக இருந்தது. முதலில் கிடைத்த வேலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். வரன்முறைக்கு ஒரு வருடம் முடிய வேண்டும். பிறகு தகுதிகாண் பருவம் நிறைவு செய்ய வேண்டும். அந்த இரண்டு ஆண்டுகளில் என் மேல் எந்தக் குற்றச் சாட்டும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன். எல்லாரும் அப்படித்தானே இருந்தாக வேண்டும்? பத்து மணிக்கான அலுவலகத்தில் ஒன்பதரைக்கே போனேன். மாலை ஐந்தே முக்காலுக்கு முடிந்த பின்பும் அரை மணி, ஒரு மணி கூட இருந்து வேலை செய்துவிட்டுத்தான் கிளம்பினேன். அலுவலக நேரத்தில் டீ குடிக்க என்று வளாகத்தை விட்டு வெளியே செல்வது எனக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தது. ஆபீஸ் பியூன் பாட்சா ஃபிளாஸ்க்கை எடுத்துக் கொண்டு போய் வாங்கி வந்ததை என் இருக்கையில் இருந்தமேனிக்கே குடித்துக் கொண்டேன். இன்னொரு பியூன் ரங்கசாமியும் போவது உண்டு. அவன் எட்டு டீக்கு ஆறுதான் வாங்குவான்…நிரவி எல்லோருக்கும் ஊற்றிக் கொடுத்து, தானும் குடித்து, அடுத்த ஒரு வேளைக்கும் அவனுக்கு டீ மிச்சம் வைத்துக் கொள்வான் என்று சொன்னார்கள். பாட்சாவிடம் அந்த வேலை இல்லை என்பது அவர் கொண்டு வந்து நீட்டிய டீயைப் பருகிய போதே தெரிந்தது. சமயத்தில் தண்ணீர் கலப்பதுண்டாம் ரங்கசாமி…பலே ஆள்தான் போலிருக்கிறது.!

இப்படி சின்னச் சின்னத் தப்புகளாய் பரவலாய், என் சிந்தைக்குப் பலவும் பட்டுக் கொண்டேயிருந்தன. எல்லோரும் ஆபீசுக்குத் தாமதமாகவே வந்தார்கள். பத்து மணி டயத்துக்கு பத்து நிமிஷம் கிரேஸ் டைம் இருந்தும் அதையும் தாண்டித்தான் நுழைந்தார்கள். பயங்கர டிராஃபிக் என்றும், ஒன்பதே காலுக்கே கிளம்பிட்டேன்…இப்பத்தான் வர முடிஞ்சிது என்றும், பஸ்ஸே கிடைக்கல என்றும், வழில டயர் பஞ்சராயிடுச்சி என்றும், ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியிருந்திச்சு என்றும் தாமதத்திற்கு என்னென்னவோ காரணத்தைச் சொன்னார்கள். இவர் மட்டும் எப்டி வர்றாரு…என்று மேலாளர் என்னைக் காட்டி ஏன் கேட்கவில்லை என்று தோன்றியது. பலரும் அடிக்கடி பர்மிஷன் போட்டார்கள். ஒரு மணி நேரம் தாமதமாக பதினோரு மணிக்கு வருவதற்குப் பதிலாக பன்னிரெண்டுக்கும், ஒன்றுக்கும், ஏன் மதியச் சாப்பாட்டை வீட்டிலேயே முடித்துக் கொண்டு கையை வீசியவாறே ஃப்ரீயாக ரெண்டு மணிக்கு மேலும் கூட வந்தார்கள். மேலாளர் சில நாட்கள் அவர்களிடம் பர்மிஷன் எழுதிக் கொடுங்க என்று கேட்டு வாங்கிக் கொண்டார். சில நாட்கள் முடிவு செய்யாது வைத்திருந்த வருகைப் பதிவேட்டை எடுத்து நீட்டி, போடுங்க….என்று கருணை செய்தார். அலுவலர் தலைமையகத்தில் இருக்கும் நாட்களில் ஒழுங்காய் பத்தடித்துப் பத்து நிமிஷத்திற்கு அவர் பார்வைக்குப் போனது வருகைப் பதிவேடு. மற்ற நாட்களில் திறந்த வாய் மூடாமல் கிடந்தது. மாதத்திற்கு மூன்று அனுமதி தாண்டினால் அரை நாள் விடுப்பு கட் என்பது வெறும் விதியாக மட்டுமே இருந்தது. இதுதான் இப்படி என்றால் கருவூலத்திற்குப் பட்டியல் சமர்ப்பிக்கப் போய்விட்டு வருவேன் என்று சொல்லிவிட்டுப் போன பியூன் மதியம் ரெண்டு மணிக்கு சாப்பாட்டு நேரத்திற்கு வருவதை யாரும் கேட்பதாய் இல்லை. பில் பிரசன்ட் பண்ணி, டோக்கன் வாங்குறதுக்கு எப்டியும் மணி ஒண்ணு, ஒன்றரை ஆயிடுது சார்…ரிஜிஸ்டர எடுத்துக் கொடுத்து நீயே பதிஞ்சிட்டு, டோக்கன் போட்டுக்கோங்கிறார் சார் அந்த அசிஸ்டென்ட்…பில் பாஸ் பண்ணத் தேடி வர்ற ஆளுகளப் பார்க்கிறதுக்கே அவருக்கு நேரம் சரியாயிருக்கு என்று மறுக்க முடியாத ஒரு வரவு உண்மையைச் சொல்லி, எல்லோர் வாயையும் அடைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது. அது கிடக்கட்டும், காலையில் அலுவலகம் வந்துதானே பட்டியலைக் கருவூலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும், ஏன் முதல் நாளே கொண்டு போய் வீட்டில் வைத்துக்கொள்கிறார்? பட்டியலும் பதிவேடும் ஏதேனும் டேமேஜ் ஆனால் அல்லது தொலைந்தால்…யார் பொறுப்பாவது? இந்தக் கேள்விக்கும் அங்கு பதில் இல்லாமல்தான் இருந்தது. பியூன் மேலாளருக்குப் பயப்படுகிறாரா என்பதே சந்தேகமாயிருந்தது. யாருக்கு யார் பயப்பட வேண்டும் அவரவர் வேலைகளை ஒழுங்காய், முறைப்படி செய்தால்? ஒருவேளை மேலாளர் இந்த பியூனுக்குப் பயப்படுகிறாரோ? அப்படியும் இருப்பதற்கான காரணங்கள் அங்கே கொட்டிக் கிடப்பதாய்த் தோன்றியது. அவருக்கும் அலுவலருக்குமான ரகசியங்கள் அங்கே நிறைய இருந்தன. அதற்காக அவர் எல்லாவற்றையும் சற்று அடக்கி வாசிப்பதாகவே எனக்குத் தோன்றியது. பாஸ் ஸ்டேட் லெவல் மீட்டிங் போறாருல்ல சார்…அதுக்கு டிக்கெட் போடப் போனேன் சார்…என்று சாவகாசமாய் வந்தவரை என்ன சொல்லிக் கண்டிப்பது? டிக்கெட் போட்டுட்டீங்களா? என்று சகஜமாய்த்தான் அவரால் கேட்க முடிந்தது. இம்மாதிரிப் பல வேடிக்கைகள் அங்கு உண்டு.

பொதுவாய்ச் சொன்னால் கடமை என்பது ரெண்டாம்பட்சமாய்த்தான். அந்த ரீதியில் அதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. எனவே அமைதி காக்க வேண்டியிருந்தது. ஆனால் மன ஒப்புதல் இல்லாமலேயே நாட்கள் இப்படி நகர்ந்து கொண்டேயிருக்கிறதே என்று தோன்றிக் கொண்டேயிருந்தது.

அலுவலக மேலாளரின் எதிர்பார்ப்புக்கும் அதிகமாகத்தான் நான் என் கடமையைச் செய்தேன். காரணம் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக நான்கு முறை தற்காலிகமாய் ஆறு மாதம், ஒரு வருடம் என்று நான் பணியில் அனுபவமடைந்திருந்தேன். என்னை விடக் கூடாது என்று அலுவலகத்தில் ஒவ்வொருவராய் லீவு போடச் சொல்லி அந்த இடத்தில் என்னைப் போட்டு என் பணியை நீட்டித்துக் கொண்டேயிருந்தார் அந்த போர்டின் சேர்மன். காரணம் எழுத்தர் பணியோடு, சுருக்கெழுத்தும் தெரிந்தவனாக நான் இருந்ததே அதற்குக் காரணம். அந்தத் தற்காலிகப் பணியிலேயே பலரின் பொறாமைக்கும், கோபத்திற்கும் ஆளானவன் நான். என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? வீட்டுக்குப் போகச் சொன்னா போறேன்…என்று சொல்லியே அங்கு ஓட்டிக் கொண்டிருந்தேன். என் அதீதமான கடமையுணர்ச்சி என்னைக் காலத்துக்கும் காப்பாற்றியது என்றுதான் சொல்லியாக வேண்டும். அது என் தந்தையிடமிருந்து நான் கற்றுக் கொண்டது. கக்கூஸ் கழுவுறதானாலும் கூட அதுக்கு முன்னாடிவரைக்கும் செய்தவங்கள விட நான் நல்லாச் செய்வேன்னு செய்து காட்டணும்…என்பார் என் தந்தை. அந்த ஈடுபாடு, அர்ப்பணிப்பு என்னிடமும் அப்படியே படிந்திருந்தது. எந்தவேலையையும் நான் கேவலமாக, கௌரவக் குறைவாக நினைத்ததில்லை. என் வேலையை மட்டும் சரியாய்ச் செய்தால் போதும் என்றும் இருந்ததில்லை. அலுவலகத்தில் எனக்குத் தெரியாத வேலை என்று எதுவும் இருக்கக் கூடாது என்றே இயங்கினேன். என்னைப் பொறுத்தவரை வேலைதான் எனக்கு முதல். மற்றவை பிறகுதான் என்பதில் நான் பிடிவாதமாய் இருந்தேன். ஊதுற சங்கை ஊதிக்கிட்டே இருப்போம்…என்பதுபோல் விடாமல் என்னிடம் வந்து சந்தாவுக்கு நின்று கொண்டேயிருந்தார்கள் சங்கத்தார். கொஞ்சம் கோபமாகவும், சத்தமாகவும் ஊதினார்கள் என்னிடம். முதல்ல சந்தா கொடுத்து, மெம்பர் ஆகுங்க தோழர்…பிறகு கூட்டத்துக்கெல்லாம் வரலாம் என்றார்கள். அந்தத் தோழர் என்ற வார்த்தை என்னவோ செய்தது என்னை. அவர்கள் என்னதான் பேசுகிறார்கள், செய்கிறார்கள் என்று அறிய ஆவலாய் இருந்தேன். அது மனதுக்கு ஒப்புதலாய் இருந்தால்தான் சந்தா கொடுப்பது என்பது என் எண்ணமாய் இருந்தது. சந்தாவக் கட்டி மெம்பர் ஆகிக்குங்க…அப்புறம் உங்களத் தொந்தரவு செய்ய மாட்டோம்…மாதாந்திரக் கூட்டங்களுக்கு நீங்க இஷ்டப்பட்டா வந்தாப் போதும் – இப்படி ஒரு சங்க நண்பர்கள் வந்து சொன்னார்கள். அவர்களுக்குத் தேவை போதுமான எண்ணிக்கையும், பணமும். நிர்வாகத்துக்கு எதிராகவே இரண்டு மூன்று சங்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது தெரிய வந்தது. ஆதரவாய் ஒன்று கூடக் கிடையாதா? என்கிற கேள்வியும் தோன்றியது. ஏன் இல்ல என்று ஒரு சங்கம் இயங்குவதையும் (அப்படித்தான் சொன்னார்கள்) தெரிவித்தார்கள். அரசாங்கம் தன் வழக்கமாய்ப் போட்ட உத்தரவுகளையெல்லாம் இவர்கள் சாதித்தது போல் சொல்லிக் கொண்டார்கள். ஏதோ இங்கிருந்தே விரலசைத்தால் அங்கு நடந்துவிடும் என்று காட்டிக் கொண்டார்கள். பொய்மைக்கு அஞ்சாத சமூகமாய் இருந்தது. இவர்களுக்குச் சரி என்று தோன்றும் சில அவர்களுக்கு ஏன் தப்பாய்த் தோன்றியது. அவர்களுக்குத் தப்பாய்த் தோன்றும் சில இவர்களுக்கு ஏன் சரி என்று தோன்றுகிறது? பணியாளர் நலன் என்று பொதுவாய் எதிர் கொண்டால் எதிர்த்துத்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் என்ன? தேவையைக் கேட்டு, தொடர்ந்து வற்புறுத்தி படிப்படியாகப் பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே? எதற்காக நிர்வாகத்தை எதிர்க்க வேண்டும்? பணியாளராய் இருந்து கொண்டு, அது தரும் சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு, அதையே எதிர்ப்பது என்பது சரியா? நிர்வாகம் திறம்படச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இவர்களெல்லாம் தங்கள் கடமையைச் செவ்வனே விடாது செய்து கொண்டிருப்பதுதானே நன்று? ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? வெகு காலமாக இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறதா? அரசு ஒரு பக்கம் இயங்கிக் கொண்டிருப்பதுபோல், இவையும் தொடர்ந்து இவ்வழியில் இயங்கிக் கொண்டிருக்கின்றனவா? வேலை செய்ய வந்தோமா, போராட வந்தோமா? – எத்தனையோ கேள்விகள் வட்டமிட்டுக் கொண்டேதான் இருந்தன. சிலவற்றிற்கு நேரடியாகவும், சிலவற்றிற்கு மழுப்பியும் சிலர் பதிலளித்துக் கொண்டுதான் இருந்தார்கள். எனக்குத்தான் சமாதானம் ஆகவில்லை. நோக்கம் ஒன்றாய் இருக்குமானால் எதற்கு இத்தனை பிரிவு? ஒன்றுமில்லாத ஓட்டைப் பதவிகளுக்கு எதற்கு இத்தனை போட்டி? வேலைக்கு வருவதற்கு முன் வேலை…வேலை என்று நாயாய் அலைகிறோம். கிடைத்த பின்னால் மெத்தனமா? பொத்திக் கொண்டு வேலை பார்க்க வேண்டாமா? இப்படியெல்லாம் இருக்கும் என்று நினைக்கவேயில்லை. தெரியவே தெரியாதே…? தற்காலிகப் பணியில் இருந்தபோது இதிலெல்லாம் கவனம் செலுத்தியதேயில்லை…யாரும் தொந்தரவும் செய்ததில்லை. வேலை…வேலை…வேலை….! அப்படியாகவே இப்போதும் ஏன் இருக்க முடியவில்லை? நிரந்தர வேலை கிடைத்திருக்கையில், குடியும் குடித்தனமுமாய் இருப்பதுபோல் பொறுப்பாய், நல்ல பிள்ளையாய் இயங்க வேண்டாமா? என்னெல்லாம் தொல்லை? எனக்குச் சள்ளையாய்த்தான் இருந்தது. சிவனே என்று வேலையைப் பார்த்தமா,போனமா என்று இல்லையே? அறுபது வயதுவரை இருக்கப் போகிறோம். இன்னும் என்னெல்லாம் விதிமுறைகளையும், வேலைகளையும் கற்க வேண்டும்…எந்தெந்தத் தேர்வு பாஸ் பண்ண வேண்டும்…அடுத்தடுத்து என்னென்ன பணி உயர்வு கிடைக்கும்…இவைகளில்தானே கவனமாய் இருத்தல் வேண்டும். இவர்கள் ஏன் இப்படி எதையெதையோ பிடித்துத் தொங்கிக் கொண்டு அலைகிறார்கள்? அதெல்லாம் தானே கிடைத்து விடும்…இவையெல்லாம்தான் போராடிப் பெற வேண்டியவை…கேட்கத் தவறினால் கை நழுவிப் போகக் கூடியவை என்று நினைக்கிறார்களோ? அதற்கும் போதிய முயற்சி இல்லையென்றால் இருக்குமிடத்தில் பசை ஒட்டியதுபோல் இருந்தாக வேண்டுமே…! எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் தொலைகிறது என்று எல்லாச் சங்கத்துக்கும் அவர்கள் கேட்கும் காசைக் கொடுத்துத் தொலைத்தேன் நான். நீங்க அதுல மெம்பரா இருக்கீங்களா? என்று கேட்டபோது ஆமாம் என்று தலையாட்ட அப்ப நன்கொடைன்னு போட்டுக்கிறோம் என்று சொன்னார்கள் ஒவ்வொருவரும். கடைசியில் பார்த்தால் அத்தனை ரசீதுகளிலும் நன்கொடை என்றே குறிப்பிட்டிருந்ததுதான் தமாஷ். பரவாயில்லை…ரசீதாவது கொடுக்கிறார்களே என்றிருந்தது. அடுத்தாற்போல் வந்து நின்றால்…இப்பத்தானே கொடுத்தேன் என்று சொல்லி எடுத்து நீட்டலாமே…! அது மெம்பர்ஷிப்புங்க…இது நடக்கப்போற மாநாட்டுக்கான நன்கொடைங்க…என்றார்கள். அதுலயும் நன்கொடைன்னுதானே டிக் பண்ணினீங்க…என்றேன். ஒரு கோடு போட்டு சந்தான்னு இருக்கும் பாருங்க…என்று எனக்கு விளக்கம் சொன்னார்கள். இவர்கள் காரியம் இவர்களுக்குத்தான் புரியும் என்றிருந்தது எனக்கு. ஆபீஸ் நேரத்தில் இப்படி வந்து நிற்பதற்கு யார் இவர்களுக்கு அனுமதி கொடுத்தது?. அவரவர் இருக்கை வேலைகளைச் செய்யாமல், சங்கம், வசூல் என்று கிளம்பி நகரத்தின் பல்வேறு அலுவலகங்களுக்கும் ஊர்வலம் வந்து கொண்டிருந்தார்கள் இவர்கள். என்னங்க…இப்ப வந்திருக்கீங்க…இன்னிக்கு ஒர்க்கிங் டேல்ல…? எங்களுக்கு ஸ்பெஷல் பர்மிஷன் உண்டுங்க தம்பி…அதெல்லாம் எதுக்குக் கேட்குறீங்க? சந்தாவ எடுங்க….என்றார்கள். அந்த பதிலே அது தப்பு என்று உணர்த்தியது எனக்கு. ஒன்றுமில்லாத, இவர்களாகவே அமைத்துக் கொண்ட, சங்கம் என்கிற அமைப்பிலுள்ள இவர்களுக்கே இவ்வளவு எடுத்தெறிந்த பேச்சு இருக்குமேயானால், அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள அலுவலர்களுக்கு எவ்வளவு இருக்கும்? ஆனால் அவர்கள் இவர்களை எதுவுமே கண்டு கொள்வதில்லையே, ஏன்? அங்கேதானே இருக்கிறது கோளாறு? அவர்களும் ஏதோவொரு விதத்தில் இவர்களுக்குப் பயப்படுகிறார்கள், அப்படித்தானே? சங்க வேலை பார்க்கன்னா லீவு போட்டுட்டுப் போங்க…பர்மிஷன்லாம் தர முடியாது… – ஒரு அதிகாரியும் சொல்லவில்லையே…! கோரிக்கைகளையும், போராட்டத்தையும் உங்களுக்கும் சேர்த்துத்தானே சார் செய்றோம்…பணபலன் கிடைச்சா எங்களுக்கு மட்டுமா? எங்களவிட டபுள் ட்ரிபுளா உங்களுக்குத்தானே உயருது…. சரி…சரி…காலா காலத்துல முடிச்சிட்டு வந்து சீட் வேலையைப் பாருங்க… என்னவோ இவர் சொன்னபடி அவர்கள் சீக்கிரம் வந்து ஆபீஸ் வேலையைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துவிடுவதைப் போல…அது அவருக்கும் தெரியாதா என்ன? அந்த அளவுக்குச் சொல்லி, தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வது அவர் வேலை. அட…போய்யா… என்று இவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஊர் சுற்றிவிட்டு மறுநாளைக்கு ஆபீஸ் வருவது இவர்கள் வேலை…இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தபோது வயிற்றெரிச்சலாய் இருந்தது எனக்கு. இவங்களையெல்லாம் யார்தான் கேட்பது? உனக்கேன்யா வயிற்றெரிச்சல்…நீதான் எல்லாத்தையும் தூக்கி நட்டமா நிறுத்தப் போறியா?-இந்தக் குரல் ஏதோவோர் மூலையிலிருந்து எனக்குக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் எல்லோரும் தங்கள் கடமையைச் சரியாய்ச் செய்த நேரம் போக இதையெல்லாம் பார்க்கலாமே…! என்றும் தோன்றிக் கொண்டேதானே இருக்கிறது? மதியம் இடைவேளை நேரத்தில் ஊழியர்களை அழைத்து, காம்பவுன்ட் வாசலுக்குக் கூட்டிச் சென்று கூடி நின்று கோஷம் போட்டார்கள். சாப்பாட்டுக்கான நேரம் அது. அவர்களை வலிய அப்படி அழைப்பது பலருக்கும் பிடிக்கவில்லைதான் எனினும், மறுக்க முடியாமல், வேறு வழியில்லையே என்று கடனுக்கு வந்து நின்றார்கள். பெண் பணியாளர்கள் எவருக்குமே இந்த நடவடிக்கை பிடிக்கவில்லைதான். ஆண் பணியாளர்கள் சிலரும் எதுக்கு வம்பு? என்று முனகிக் கொண்டேதான் வந்தார்கள். நகருக்கே பத்துப் பேர் இருந்து கொண்டு அத்தனை அலுவலகங்களையும் ஆட்டுவித்தார்கள். இப்படியாக ஒரு வாயில் கோஷத்தை நிறைவேற்றித்தான் ஆக வேண்டுமா? உங்களுக்காகத்தானே செய்றோம்…வாங்க…வாங்க…என்ற அதிகாரம் வேறு. விருப்பமில்லாமல் இப்படிப் பலரையும் வம்புக்கு அழைத்து நிறுத்தி, மனசில்லாமல் கோஷம் போட வைத்து, ஏதோ அவர்களுக்குப் பாடம் நடத்துவது போலவும், தங்கள் தியாகங்களைப் பறைசாற்றுவதுபோலவும், பணியாளர்களின் பசியறியாமல், மனசறியாமல், சுய விருப்பத்திற்கு மாறாக ஒருவகை மறைமுகமான வன்முறையைப் பிரயோகித்து அப்படி அழைத்து வந்து வேளை கெட்ட வேளையில் நிற்க வைப்பது கொஞ்சங்கூட நியாயமானதாக எனக்குத் தோன்றவில்லை. என் மாறுதல் விண்ணப்பம் பலமுறை நிராகரிக்கப்பட்டிருப்பதும், முதுநிலை வரிசைப்படி அடுத்தடுத்து வருவதற்காக, உரிய பதிவேட்டில் பதிவு செய்யப்படாமல் போனதிலேயும் மனசு உறுத்திக் கொண்டேயிருந்தது எனக்கு. இங்குள்ளோருக்கும் சென்னைத் தலைமையக அலுவலகத்தில் உள்ளோருக்கும் மிகவும் நெருக்கமான நடைமுறைகள் இருப்பதும், இவர்கள் சொல்வதை அவர்கள் அப்படியே நம்பி விடுவதும், அலுவலக நடைமுறைகளில் அதன் பாதிப்பு நிகழ்வதும்…தொடர்ந்து நடந்து கொண்டே வந்திருக்கிறது என்பதை நான் அறிந்து கொள்ளவே எனக்கு நான்கு வருடம் பிடித்தது. எனக்கு வேகம் பிறந்ததே ஐந்தாவது ஆண்டில்தான் என்பதை இங்கு நான் சொல்லித்தான் ஆக வேண்டும். அப்போதும் நான் எந்த சங்கத்தையும் சேராதவனாகவே இருந்தேன். அதுவே ஒரு பெரிய சாதனை என்றும் கொள்ளலாம். ஆனால் இதிலும் ஒரு தப்பு இருக்கத்தானே செய்கிறது என்பதை இங்கே நீங்கள் உணரக் கூடும். இருக்கும் சங்கமெல்லாம் வந்து வந்து காசு கேட்கும்போது, உறுப்பினர் என்ற பெயரிலல்லாமல், நன்கொடை என்கிற பெயரில் நானும் பணம் கொடுத்துக் கொண்டுதானே இருந்தேன். அவர்கள் யாரிடமிருந்தும் எந்த வம்பும் எனக்கு வேண்டாம் என்கிற சுயநலம்தானே அதுவும்? என் மனநிலைக்கும், நடவடிக்கைகளுக்கும்…நான் யாருக்கும் எந்தப் பைசாவும் தரணும்ங்கிற அவசியமில்லை…இந்த சங்கம் கிங்கம் என்பதெல்லாம் வெறும் அசிங்கம்…..என்றுதானே நான் கூறியிருக்க வேண்டும்? என்னால் முடியவில்லையே…! அப்படியிருந்தும் இந்த மாறுதல் விஷயத்தில் இவ்வளவு விளையாடியிருக்கிறார்களே…! பணிப்பொறுப்பு ஏற்று இரண்டாண்டுகளுக்குப் பின் மாறுதல் விண்ணப்பம் கொடுக்கலாம் என்று விதிமுறை இருக்கையில் (இதையும் மீறி வந்த ஆறு மாதத்திலேயே விண்ணப்பம் அளித்து, தங்கள் அரசியல் செல்வாக்கால் சொந்த ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டுபோன பிரகிருதிகள் அநேகம்) அதை முறைப்படி செய்திருந்த என் கேட்பு விண்ணப்பம் தக்க பதிவேட்டில் வரிசைக்கிரம முதுநிலை கருதிப் பதியப்படாமல், காணாமல் போக்கடிக்கப்பட்டிருக்கிறதே…! இந்த உள்குத்து வேலைகள் ஒரு வேளை தலைமைக்குத் தெரியாமலே போயிருந்தால்? மாநிலம் தழுவிய அவருக்கிருக்கும் தலைபோகும் பொறுப்பில் இப்படி சின்னச் சின்ன விஷயங்களையெல்லாமுமா பார்த்துக் கொண்டிருக்க முடியும்? பின் எதற்காக இத்தனை அதிகாரிகள், பணியாளர்கள்? அரசின் திட்டப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றுவதில் அவர் கவனமாய் இருப்பாரா…அல்லது இந்தச் சாதாரண விஷயத்திற்குப் போய் அலைக்கழிவாரா? ஆனாலும் இது சரியில்லை….நேரில் புறப்பட்டுப் போய் அவரைப் பார்த்து என் நிலையை எடுத்துச் சொன்னபிறகுதானே இது நடந்திருக்கிறது? என் அடுத்தடுத்த விண்ணப்பங்கள் வந்திருப்பதும், அலுவலக முத்திரை அதில் பதிக்கப்பட்டிருப்பதும், எண்ணிடப்பட்டிருப்பதும் எல்லாவற்றிற்கும் மீறி எந்த நடவடிக்கையும் இல்லாமல் முறையே பதிவேட்டில் பதியப்படாமல் விடுபட்டிருப்பதும், அவர் ஆய்வில் விரியும் என்று துளியும் நான் எதிர்பார்க்கவில்லைதான். மறைக்கத் தெரிந்த அவர்களுக்கு, அதிகாரம் கேட்டவுடன் டக்கென்று எடுத்துக் கொடுக்கவும் தெரிந்திருக்கிறதே…! கில்லாடிகள்தான்…!!! அப்பாடி…! அந்த ஒருவருக்காவது மனசாட்சி இருந்திருக்கிறதே…? நீ போங்க…இன்னும் ஒரு மாசத்துல உங்களுக்கு டிரான்ஸ்பர் வந்திடும்…. – இதுதான் அவர் என்னிடம் கடைசியாகச் சொன்னது. நிர்வாக நடைமுறைகள் எல்லாம் துல்லியமாகத்தான் வகுக்கப் பட்டிருக்கின்றன. இடையில் உள்ள எலிகளும், பெருச்சாளிகளும்தான் அதைக் கடித்துக் குதறி விடுகின்றன என்று புரிந்து கொண்டேன். இதோ..சொந்த ஊர் வந்துவிட்டேன்…ஆனால் இது என்ன? புதுத் தகவல்…!? வியப்பும் கேள்வியும் என்னைச் சுற்றி…! உங்களுக்கு முன்னாடி இருந்த நாகரத்தினம்ங்கிறவருக்குக் கொடுக்கப் போனபோதுதான், உங்க அப்ளிகேஷன் சென்னைலருந்து ரெக்கமன்ட் ஆகி வந்திச்சு…சீஃப் இன்ஜினியரே தன் கைப்பட எழுதிப் பரிந்துரை பண்ணியிருந்தாரு….அலாட்மென்ட் வந்த பெறவு என்ன செய்றது? அதுவும் பெரிசு கையெழுத்துப் போட்டிருக்கு? சிரித்துக் கொண்டே தொடர்ந்தார் அவர். அதனால எங்க சங்கத்தச் சேர்ந்த அவரை சமாதானம் பண்ணி நிறுத்தி வச்சிட்டு உங்களுக்குப் போட்டிருக்கோம். இந்த தடவை…! ..நாங்க நினைச்சிருந்தா அடுத்த லிஸ்ட்லதான் உங்களுக்கு டிரான்ஸ்பர் கிடைச்சிருக்கும். எங்க தோழர் பொறுத்துக்கிட்டாரு…உங்களுக்காக இப்பவும் அவர் தினமும் பஸ்ல இருநூறு கிலோமீட்டர் வெளியூர் போயிட்டு வந்திட்டிருக்காரு….அத மனசுல நினைங்க….அது போதும்…. ஆபீஸ் வேறு…சங்கம் வேறில்லையா? இவர், சங்கம்தான் ஆபீஸ் என்பதுபோல் பேசுகிறாரே…! தலைமைப் பொறியாளரின் உத்தரவையும் மீறி, உங்கள் டிரான்ஸ்பரை எங்களால் நிறுத்தியிருக்க முடியும் என்று மறைமுகமாய் மிரட்டுகிறாரோ? அவரின் பேச்சு அப்படித்தானே நினைக்க வைக்கும்? ஆழ வேரோடிப் போயிருக்கிறதே இந்த ஊடுருவல்? மூன்று வருடமாய்க் காணாமல் போயிருந்த என் விண்ணப்பத்தைப் பற்றிச் சொன்னால் ஏற்றுக் கொள்வாரா? அதிலும் ஒரு நியாயம் உண்டுதானே? இவரென்ன ஏற்றுக் கொள்வது, துறைத் தலைமையே ஒத்துக் கொண்டுதானே இது நடந்தேறியிருக்கிறது? பிறகென்ன அதை மீறிய நியாயம்? நினைத்துக் கொண்டே உள்ளூரில் என் அலுவலகப் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் நான். ஒரு வித்தியாசம் மட்டும் அங்கு என்னால் சமீபமாக கண்டுபிடிக்க முடிந்தது. அதுதான் அங்கு எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. அந்த அலுவலகம் எண்ணிக்கையில் அதிகமான பணியாளர்களுடன், மிகுந்த கட்டுப்பாட்டோடு நாள்தோறும் இயங்கியது. அமைதியாக இயங்கும் நூலகம் போல் இருந்தது. குனிந்த தலை நிமிராமல் வேலையில் கண்ணாய் இருந்தார்கள் எல்லோரும். அருகிருக்கையுடன் கூடப் பேச்சுக் கிடையாது. ராணுவக் கன்ட்ரோல் போல் உணர்ந்தேன். இத்தனை கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் நான் முன்பிருந்த வெளியூர் அலுவலகத்தில் கண்டதில்லை. என்னிடம் பேசிய அந்த சங்கத் தலைவர்தான் அந்த அத்தனை பெரிய அலுவலகத்திற்கும் மேலாளராக இயங்கினார். இருக்கையை விட்டு எழாமல் ஆணியடித்தாற்போல் எல்லோரும் இயங்கினார்கள். பத்து மணிக்கு முன்பாக அலுவலகமே நிரம்பி வழிந்தது. இரவிலும் கூடப் பலர் கணி விழித்து வேலை செய்தார்கள். கன்னியாகுமரி வரை ஜூரிக்ஸ்டிக் ஷன் அதற்கு இருந்தது. ஒரு நாள் கூட அலுவலக நேரத்தில் அங்கு யாரும் சங்கப் பணியை மேற்கொள்ளவில்லை. பணி என்ன, அந்தப் பேச்சே எழவில்லை. மாலை அலுவலக நேரத்திற்குப் பின்பே அருகிலுள்ள பூங்கா ஒன்றில் அந்தப் பணியாளர்கள் கூடினார்கள். பேசினார்கள். அலுவலக நிர்வாகம் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு அடையாளமாய் துறைத் தலைமையின் நற்சான்றிதழ் அந்த அலுவலகத்திற்கு வருடந் தவறாமல் வழங்கப்பட்டிருந்ததும், மாநிலத்திற்கே எடுத்துக்காட்டாய் அந்த அலுவலகம் திறம்பட இயங்கி வந்தது என்பதையும் கேள்விப்பட்டபோது, அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. சர்வீசுக்கு வந்து சில வருடங்கள் ஆகியிருந்தும், முதன் முதலாக முழுக்க முழுக்கக் கடமையும், கட்டுப்பாடும் உள்ள ஒரு அலுவலகத்தில் மன நிறைவோடு பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்ற உணர்வினை இப்பொழுதுதான் உணர ஆரம்பித்திருந்தேன் நான்.