கவிதை

நகரம் கவிதைகள்- 1 அழுக்காக இருக்கிறதா

பாடல்(அழுக்காக இருக்கிறதா)

–ஃப்ராங்க் ஓ ஹாரா

அழுக்காக இருக்கிறதா
அழுக்காக தெரிகிறதா
அதைப் பற்றிதான் நினைப்பீர்கள் நீங்கள் நகரத்தில்

அழுக்குப்போல தோன்றுகிறதா
அதை பற்றிதான் நினைப்பீர்கள் நீங்கள் நகரத்தில்
சுவாசிக்க மறுப்பதில்லைதானே, நீங்கள்.

யாரோ தீய குணத்துடன் வருகிறார்
வசீகரமாகத் தோன்றுகிறார். நிஜமாகவா. ஆமாம், மிகவும்
அவர் வசீகரமாகயிருக்கிறார், தீய குணத்துடன் இருப்பதால். அப்படியா. ஆமாம்

அதைப் பற்றிதான் நினைப்பீர்கள் நீங்கள் நகரத்தில்
பாசி-படராத மூளையைக் கோதி பாருங்கள்
அது ஒரு எண்ணமல்ல அது கரித்துகள்

ஒருவர்மீதிருந்து நிறைய அழுக்கை அகற்றினால்
அவர் குணத்தின் கேடு குறைகிறதா. இல்லை. அது தொடர்ந்து வளர்கிறது
சுவாசிக்க மறுப்பதில்லைதானே, நீங்கள்.

சந்திப்புள்ளிகளே இல்லாத இந்த கவிதையில் அழுத்தமான ஒரு தாளம் இருக்கிறது. அது நம் எண்ணங்களுடன் இயைகிறது. பெருநகரம் என்பது தொடர்ந்து விரிந்துகொண்டே இருப்பது. அது புழுதியைக் கிளப்பியவாறு இடிந்துகொண்டும் எழுந்துகொண்டும் இருப்பது. நகரத்தின் காற்றுடன் புழுதி கலந்திருக்கிறது.

முதன்முதலில் நகரத்தை எதிர்கொள்ளும் மனம், அதன் அழுக்குகளுடனே மோதுகிறது. நகரம் அதன் தன்னிச்சையான இயக்கத்தினுள் நம்மை இழுத்துக்கொள்ளும்வரை. தெருவோரங்களிலெல்லாம் அப்பட்டமான அழுக்கு குவியல்கள். அவற்றின் நடுவிலேயே வாழும் மனிதர்கள். மூர்க்கமாக இல்லாவிட்டால் நகரில் பிழைக்க முடியாது. ஒருவர் எத்தனைக்கெத்தனை மூர்க்கமாக இருக்கிறாரோ அத்தனைக்கத்தனை சாமர்த்தியமாக இருக்கிறார். பிளாட்பாரக் கடைக்காரர்களிலிருந்து வீட்டு உரிமையாளர், பேருந்து நடத்துனர் என எல்லோரும் சாமர்த்தியமாக இருக்கிறார்கள். அவர்களது அந்த கள்ளத்தனமான சாமர்த்தியம்தான் எத்தனை வசீகரமாக இருக்கிறது. நகரத்தின் குடியுரிமை வேண்டுமென்றால், இந்த சாமர்த்தியத்துடன் போட்டியிடத்தான் வேண்டும். இந்த தெளிவிற்குப் பின், உங்கள் நினைப்பு உங்களது அல்ல. ஒரு நகரவாசியினுடையது. நகரம் உங்கள்மீதும் புழுதியை போர்த்தி, உங்களைத் தனதாக்கிக்கொண்டுவிடுகிறது. இனி, புழுதி என்பது கண்ணிற்கு புலப்படுவது அல்ல. அது உங்கள் சுவாசத்துடனே கலந்திருப்பது. அழுக்கற்றவை என நகரத்தில் எதுவும் இல்லை என்றே நம்ப தொடங்குவீர்கள்.

இக்கவிதையில், ஓ ஹாரா, நகர நெரிசலின் தனிமையில் இருக்கும் தனது வாசகரிடம் மிக மெதுவாக பேசுகிறார். தினமும் பேருந்துகளிலும் இரயில்களிலும் சில மணி நேரங்களாவது பயணிக்கும் வாசகரிடம், அவர் கடந்து சென்றுகொண்டிருக்கும் நகரவெளியைப் பற்றி, அப்பயணத்தின் அசைவமைதியுடன் சொல்கிறார். அந்த கடைசி கேள்வியின் இறுதி நிறுத்தத்தில், ஒரு கணம் நாம் மீண்டும் நகரிலிருந்து அன்னியப்பட்டு மீள்கிறோம்.

மூலக்கவிதை : http://www.frankohara.org/fohaudio05/song.html

கவிதைகள் வேண்டி…

-அதிகாரநந்தி – 

எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை
அந்தப் பூனையைக் கூட
இன்று காணவில்லை

ஒன்றிரண்டு கரப்பான்பூச்சிகள்
சுற்றிக் கொண்டிருக்கின்றன
இவற்றை வைத்து கவிதை எழுத முடியும்?

துவைக்கும் இயந்திரம் கத்துகிறது
முறுக்கிப் பிழியப்பட்ட துணிகள்
ஒன்றை இழுத்தால் மொத்தமும் வருகிறது

சிக்கல்
வாழ்க்கை
நான்
மற்றவர்கள்

சில சமயங்களில் இப்படித்தான்
ஆகிறது

காய்ந்த சருகு

– எஸ். சுரேஷ் –

““Our world, like a charnel-house, lies strewn with the detritus of dead epochs.” – Le Corbusier, Urbanisme

கிணற்றில் எட்டிப் பார்க்கிறேன்
நீல ஆகாசம்
பளிச்சென்ற சூரியன்
உள்ளிருந்து எட்டி பார்க்கும் என் பிம்பம்

ஏதோ தண்ணீரில் விழுகிறது

வானம், சூரியன், பிம்பம் கலைந்து
ஒன்றாகின்றன மெல்ல மெல்ல

ஆட்டம் தணிந்து பிரிகின்றன

ஒரு காய்ந்த சருகு, மெல்ல
ஆடிக்கொண்டு ஆடிக்கொண்டு
கண்ணை மறைத்து அமர்கிறது

நீல வானம்
தகிக்கும் சூரியன்
பாசி படிந்த பழைய கிணறு
என்னைத் தழுவிச்செல்லும்

சில்லென்ற காற்று
ஒலி எழுப்பும் பறவைகள்

இந்தக் கதை குழந்தைகளுக்கு மட்டும்

– எஸ். சுரேஷ்-

கடும் வெயில்
தாகம்
தொண்டை வற்றியிருந்தது

நடந்து அந்த கிணற்றை அடைந்தேன்
கயிறும் இல்லை வாளியும் இல்லை
கீழே பளபளக்கும் குளிர் நீர்

“ஆஆஆஆ” என்று நீரை பார்த்து கத்தினேன்

கிணற்றுக்கருகில் உட்கார்ந்திருந்த காக்கை
பீதியுடன் அங்கிருந்து பறந்தது
சற்று நேரம் கழித்து வாயில் ஒரு கல்லுடன் வந்து
மறுபடியும் கிணற்றுச் சுவர் மேல் உட்கார்ந்து

கல்லை தண்ணீரில் போட்டுவிட்டு
என்னை பார்த்து புருவத்தை உயர்த்தியது

விசாரம்

நில்லாது தொடர்ந்து
கொண்டேயிருக்கின்றன
கேள்விகள்

மெளனம் நிலைத்துவிடக் கூடாதென்ற
அதீத சிரத்தையுடன்
இடைவெளியின்றி
ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று
 
எந்த பதிலையும் எதிர்பாராது
எந்த சமாதானத்தையும்
லட்சியம் செய்யாது
 
தேய்ந்து போன குழாயிலிருந்து
சொட்டிக் கொண்டேயிருக்கும்
நீரைப் போல்
 
ஆதியில்லை
அந்தம் இல்லை
இலக்குகளும் இல்லை

நீர் வற்றிய குழாய்களுக்கு
என்ன மிச்சமிருக்கும்?
                                            – அதிகாரநந்தி