ருசி

நரோபா

அந்தப் பொட்டலம் என்னவோ அங்கேயேதான் கிடக்கிறது, சீந்துவாரில்லாமல்.

பட்டணத்து ரயில் நிலையங்கள் ஒரு பிரம்மாண்டமான உயிர்க் காடு. பலரும் தொலைந்துபோன, தொலைத்துக் கொண்ட காடு. எவரையும் கண்கொண்டு பார்க்க முடிவதில்லை, எப்போதும் எவரோ நம்மிடமிருந்து ஏதோ ஒன்றை அடித்துப் பிடுங்கி விடுவார்கள் என்ற அச்சம் நிலைகொண்டிருக்கும். பையை இறுகப் பற்றிக் கொண்டு ஊர் திரும்பக் காத்திருக்கிறேன்.

அத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிக்குவான் என எதிர்பார்க்கவில்லை. நேற்றிரவுதான் கிருஷ்ணமூர்த்தி அவனைப் பார்த்ததாக போனில் சொன்னான். காலையில் கிளம்பிவிட்டேன். ஆவேசமும் கோபமும் உள்ளூர நுரைத்துப் பொங்கின. இரவெல்லாம் நினைப்புகள், கற்பனைகள். அவனை விதவிதமாகச் சிறுமை செய்வது போல், அவமதிப்பது போல், பெரியமனுஷத்தனத்துடன் மன்னிப்பது போல், அவனிடம் கெஞ்சி இறைஞ்சுவது போல், குத்திக் கிழிப்பது போல், பளாரென்று அறைவது போல். உறக்கமின்றி லயித்துக் கிடந்தேன். அவனைக் கண்டதும் என்ன செய்வது என்பதை இனிதான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அவனைச் சந்தித்தாக வேண்டும். நானிருக்கிறேன், உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றாவது அவனுக்கு உணர்த்தியாக வேண்டும்.

கண்மூடி, கால் நீட்டி படுத்துக்கொண்டே கூர்ந்து கவனித்தேன். ஒன்றிரண்டு காலடித் தடங்களை கேட்க முடிந்தது. ரயில் காலியாகத்தான் கிடந்தது. எவரும் எழுப்ப மாட்டார்கள். அப்படி எழுப்பினாலும் அயர்ந்து உறங்குவதாக பாவனை செய்தால் போதும்.

கிருஷ்ணமூர்த்தி, அவன் வெள்ளையும் சொள்ளையுமாக இருந்ததாகத்தான் சொன்னான், ஏதோ ஒரு காரில்தான் வந்திறங்கினானாம். உஷ்ணம் தலைக்கேறியது. நரம்புகளும் தசைகளும் முறுக்கேறி அதிர்ந்து அதிர்ந்து அடங்கின. எத்தனை பேருடைய பணம்? எப்படி அவனால் நிம்மதியாக வாழ முடிகிறது? ஆனால் இம்முறை நான் ஏமாற மாட்டேன். ரயில் நகர்ந்தது. உடலின் அதிர்வுகளை எல்லாம் ரயில் சக்கரங்கள் வாங்கிக் கொண்டன. எப்போது உறங்கிப்போனேன் என்று தெரியவில்லை.

கண்விழித்தபோது எங்கோ ஒரு பெருநகர சந்தியில் விழித்தெழுவது போல் இரைச்சல். காலடியில் இருவர், எதிர் இருக்கையில் ஆணும் பெண்ணுமாக ஆறேழு பேர் இருக்கலாம், மேலே லக்கேஜ் கேரியரிலும் இருவர் அமர்ந்திருந்தார்கள். தொட்டு எழுப்பியவர் “சார், கொஞ்சம் இடம் கொடுத்தா இவுங்களும் உக்காருவாங்க” என்று எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டார். நிதானமாக எழுந்தமர்ந்தேன். ஒரு பெண், அவளுடைய சேலை தலைப்புடன் பின்னி நின்ற ஒரு சிறுமி, தோளில் பையுடன் முன்னவளைக் காட்டிலும் கொஞ்சம் உயரமான மற்றொரு சிறுமி என மூன்றுபேர் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பெண் சிகப்புச் சேலை கட்டியிருந்தாள். பெரியவள் சிகப்பு நிற பாவாடை சட்டையும், சின்னவள் வெளிறிய சிவப்பில் சுருக்கங்கள் மிகுந்த ஷிம்மியும் உடுத்தியிருந்தார்கள். உள் கழுத்தை ஒட்டி ஒரு சரடும், நீண்டு கீழிறங்கும் மற்றொரு சரடும் கொண்ட இரட்டை சர மணி மாலைகள் அவர்களின் கழுத்துகளில் ஊஞ்சலாடின. மூவரின் நெற்றியிலும் சந்தனக் கீறலும் குங்குமத் தெறிப்பும் ஒரேமாதிரி பளிச்சிட்டது. கருத்து மெலிந்த அவர்களின் உடல்வாகும் தாடையும்கூட ஒரே அச்சில் தானிருந்தன.

இடம் விட்டு விலகி அமர்ந்து ஜன்னலுக்கு வெளியே நோக்கினேன். ஆங்காங்கு கருந்தலையும் சிவத்த உடலும் கொண்ட மூட்டைப் பூச்சிகள் போல் சிவப்பு அங்கிகாரர்கள் ரயில் நிலையம் எங்கும் நிறைந்திருந்தனர். மூட்டைப் பூச்சி! அவன்தான் உதிரம் உறிஞ்சும் மூட்டைப் பூச்சி! எத்தனை பேர் உதிரத்தை ருசித்துக் கொழுத்திருப்பானோ? ஏதோ ஒன்று தலைக்குள் அழுத்தியது.

கொஞ்சம் எழுந்து நடந்தால் என்ன? வெளியே வெள்ளை பூசிய தகரத்தில் நீல எழுத்துகளில் திருச்சிராப்பள்ளி என்றிருந்தது. சாம்பல் வானத்தில் மெல்ல விடியலின் இளநீலம் படர்ந்தது. பசி வயிற்றினுள் அப்போதுதான் சன்னமாகச் சோம்பல் முறித்தது. இன்னும் ஐந்தாறு மணி நேரமாவது பயணிக்க வேண்டியிருக்கும். ஷிம்மி சிறுமிக்கு தலைவாரிவிட்டுக் கொண்டிருந்தாள் அந்தப்பெண். செம்பு நிறச் சாயை, குச்சி குச்சியான நீள மயிர் அவளுக்கு. தலை தோதிற்கு சுருட்டி வைத்திருந்த துண்டை அடையாளமாகக் கிடத்தி, பையைத் தூக்கி இருக்கையில் வைத்துவிட்டு நடந்தேன்.

எதிரே இருந்த தள்ளுவண்டி கடைகளை மேய்ந்து, காலை நாளிதழ் ஒன்றை வாங்கிக் கொண்டேன். ஒரு தண்ணீர் போத்தல் வாங்க வேண்டும். நடைமேடையில் இருந்த கடைக்குச் சென்றபோதுதான் அதனை கவனித்தேன்.

எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன! திருட்டுத்தனம் செய்தும்கூட சில ஆண்டுகள் இருக்கலாம். இஷ்டப்பட்டதை சாப்பிடக்கூட இப்பொழுதெல்லாம் முடியவில்லை. இதெல்லாம் ஒரு வாழ்வா? இன்று எவருக்கும் பதில் சொல்லவும், பதுக்கவும், பயப்படவும் வேண்டியதில்லை. ஒரேயொரு மாத்திரை கூடுதலாக விழுங்கினால் ஆகிறது. மீற வேண்டும் என்றான பின்னர் மின்னல் வேகத்தில் மனம் அதற்குரிய நியாய தர்க்கங்களை உருவாக்கிக் கொள்வதும் ஒரு வினோதம்தான். காற்றுபுகா பிளாஸ்டிக் அரணில் சிறைப்பட்ட மக்ரூன்களை வாங்கிக்கொண்டேன்.

அதன் வெண்பனி நிறமும், குழைவுகள் வளைந்து வளைந்து உச்சியில் முற்றும் கூம்பும், கணக்கற்ற உள்ளறைகள் கொண்ட ஒரு அரண்மனை போலிருக்கும் அதன் தேனடை குறுக்குவெட்டும், அடிபாகத்தில் உள்ள மென்மையும், பல்லுக்கடியில் கடிபடும்போது நெருடும் மொறுமொறுப்பும், வெண்ணெயும் முட்டையும் கலந்த அதன் ருசியும், மணமும், அது நாக்கில் வழுக்கிச் செல்லும்போது ஏற்படும் குறுகுறுப்பும், விட்டுச் செல்லும் தித்திப்பும், இடையிடையில் வசப்படும் முந்திரி ருசியும்!

மனம் கிடந்து துள்ளியது. நேற்றிரவிலிருந்து வியாபித்திருந்த கசப்பு எங்கோ மனதின் ஒரு மூலைக்குள் ஒடுங்கி கொண்டது ஆச்சரியம்தான். கவலையின்றி கழிந்த இளமைக்காலம் நினைவுக்கு வந்தது. பூரி பொட்டலம் ஒன்றும் தண்ணீர் போத்தலும் வாங்கிக் கொண்டு ரயிலேறினேன். இருக்கையை வேறொரு தொப்பிக்காரர் ஆக்கிரமித்திருந்தார். அருகில் வந்து முறைத்ததும் அரை மனதோடு எழுந்து “நீங்க வர்ற வரைக்கும்…” என்று முனகியபடியே அகன்றார். வாங்கி வந்ததை கைக்குள் அடக்கி பையுள் வைத்தேன்.

எதிர்சாரியில்கூட மூன்று செவ்வங்கிகள் தென்பட்டன. சிறுமிகள் நசநசத்துக் கொண்டிருந்தார்கள். இது பகல்நேர வண்டி என்பதால் ரயிலுக்குள் ஏதோ ஒன்றை கூவி விற்றுக் கொண்டேதானிருப்பார்கள். மினுங்கும் வண்ணத் தாள்களில் விதவிதமான ரொட்டிகளும், மிட்டாய்களும், பிளாஸ்டிக் போத்தல்களில் வண்ண வண்ண பானங்களும், எங்களை கடந்து சென்றுகொண்டே இருந்தன. சின்னவள் ஒவ்வொன்றையும் விழியகல பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொன்றாக கடந்து செல்லும்போது அவள் விழிகள் ஆவலுடன் அம்மாவின் கண்களைத் தொட்டு மீண்டன. அவள் கண்டுகொள்ளவில்லை. அல்லது அப்படி காட்டிக்கொள்ளவில்லை. பெரியவளுடன் எதையோ பேசிக் கொண்டிருந்தாள். சின்னவளின் பார்வை அவளைத் தொட்டு மீளும்போதெல்லாம் பெரியவளின் பார்வை கடந்து செல்லும் நொறுக்குத்தீனி கூடையை துளைத்து திரும்பும்.

பையிலிருந்த மக்ரூன் பொட்டலத்தை நோக்கினேன். நா ஊறியது. குழந்தைகள் வேறு பக்கம் திரும்பியிருந்தார்கள். மக்ரூன் பொட்டலத்தை பைக்குள் வைத்தே பிரிக்க முடியுமா என முயற்சித்தேன். காற்றடைபட்ட பிளாஸ்டிக் பை கைபட்டவுடன் சொடசொடவென்று ஒலியெழுப்பியது. எதிர்சாரியில் நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்தவர் இதழை இறக்கிவிட்டு என்னை ஒரு கணம் நோக்கினார். சின்னவள் கழுத்தை வெடுக்கென்று என் பக்கம் திருப்பினாள். சட்டென்று கைக்கு அகப்பட்ட பூரி பொட்டலத்தை எடுத்துப் பிரித்தேன். நமுத்துப் போன பூரிக் கிழங்கை எவரையும் கவனிக்காமல் கருமமே கண்ணாக சாப்பிடத் தொடங்கினேன்.

சகிக்க முடியாத அளவிற்கு எரிச்சலுடன் எழுந்து கைகழுவச் சென்றேன். பையை எடுத்துக்கொண்டு வந்து நுழைவாயிலுக்கு அருகில் பிரித்து உண்ணலாமா என்றொரு யோசனைகூட தோன்றியது. கழிவறைக்குள்? சீ…

இரண்டு வாயில்களிலும் மூன்று நான்கு இளைஞர்கள் நின்றிருந்தார்கள். இருவர் படியில் காலைத் தொங்கவிட்டப்படி அமர்ந்திருந்தார்கள். இருக்கைக்குத் திரும்பினேன். அதே தொப்பிக்காரர் அலுப்புடன் எழுந்து சென்றார். நாங்கள் எதையும் பேசிக்கொள்ளவில்லை. பையைத் தூக்கிக்கொண்டு படிக்குச் செல்லும் திட்டத்தை அப்படியே கைவிட்டேன். மனம் தவிக்கத் தொடங்கியது. இளம் பிராயத்து ஏமாற்றங்களும், தோல்விகளும் ஏக்கங்களும் ஒவ்வொன்றாய் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன. எல்லாவற்றிற்கும் மேல், அவன் நைச்சியமாக பேசி காசை லவட்டிக் கொண்டது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து தொலைத்தது.

சிறுமிகள் இருவரும் சோர்ந்து சாய்ந்திருந்தனர். பையிலிருந்து கடலையுருண்டையை எடுத்துக் கொடுத்தாள் அந்தப் பெண். கொஞ்சம் பிரகாசமடைந்து கடிக்கத் தொடங்கினார்கள். எப்படியும் இன்னும் ஒருமணி நேரத்தில் இறங்கி விடுவார்கள் என என்னையே சமாதானப்படுத்திக் கொண்டேன். எடுத்து தின்றுவிடலாம். என்ன வெண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டுமே. இல்லை, அற்பத்தனமாக இருக்கும். பகிர்ந்து கொண்டால்தான் என்ன? வாங்குவார்களோ மாட்டார்களோ? பிள்ளை பிடிப்பவன் என்று தப்பர்த்தம் பண்ணிக் கொண்டால்? ஒரு பேச்சுக்கு கேட்டுவிட்டு சாப்பிடலாம், தப்பில்லை. ஒருவேளை கைநீட்டி விட்டால்? இதுவரை கொடுத்ததெல்லாம் போதாதா? அவற்றை எப்போது திரும்ப பெறுவது?

மனம் இரண்டாகப் பிளந்து வாத பிரதிவாதங்களை மாறி மாறி வைத்துக்கொண்டிருந்தது. மனசெவியில் பஞ்சடைக்க முடிந்தால்தான் எத்தனை வசதியாக இருக்கும்? கண்ணயர முயன்றேன், ஆனால் உறக்கம் கைகூடவில்லை. அவனுடைய சிரித்த முகம் வேறு நினைவில் துலங்கி மேலும் மூர்க்கமடையச் செய்தது.

குழந்தைகள் உறங்கிப் போயின. சற்று நேரத்திற்கெல்லாம் ரயில் நின்றது. செவ்வங்கிக்காரர்கள் எல்லோரும் தடதடவென்று இறங்க ஆயத்தமானார்கள். அரைத்தூக்கத்தில் இருந்த சின்னவளை தூக்கிக் கொண்டு, பெரியவளை எழுப்பி நடத்திச் சென்றாள் அந்தப்பெண். எதிரிருக்கையிலும்கூட இருவர்தான் எஞ்சியிருந்தனர். முக்கால் பங்கு காலியாகிவிட்டது. அப்பெண்ணும் சிறுமிகளும் இறங்கி எதிர்திசையில் செல்வதைப் பார்த்தேன். மனம் ஆசுவாசமடைந்தது. எஞ்சியிருந்தது என்னவோ இரண்டு மூன்று வயசாளிகள்தான். ஒன்றும் பாதகமில்லை. பரவசத்தில் எச்சில் பெருக்கெடுக்க பையிலிருந்து மக்ரூன் பொட்டலத்தை நிதானமாக வெளியே எடுத்து பிரிக்கத் தொடங்கினேன். மூட்டைபூச்சிகள். நடைமேடை முழுவதும் செவ்வங்கிகளாலும், கருத்த தலைமயிர் புள்ளிகளாலும் நிறைந்திருந்ததைக் கண்டபோது அப்படித்தான் தோன்றியது. சற்றே பெருத்து வளர்ந்த பூச்சிகள்.

மெதுவாக ஒரேயொரு மக்ரூனை எடுத்து விண்டு கடித்து கண்மூடி எல்லாவற்றையும் மறந்து ருசிக்கத் தொடங்கினேன். இனிப்பேயான அற்புத உலகம். கனவுகளும் மரணங்களும்கூட இனிக்கும் உலகம்.

ஏதோ ஒன்று பின்புறம் வழியாக இருக்கையில் ஊர்வது போலிருந்தது. சட்டென்று விழித்தெழுந்தேன். “மன்னிச்சுக்குங்க” என்றபடி இருக்கையில் விட்டுச் சென்ற துண்டை இழுத்து சுருட்டிக் கொண்டாள் அந்த பெண். இடுப்பில் அமர்ந்திருந்த சின்னவள் என் கையிலிருந்த பொட்டலத்தையும் என்னையும் ஒருகணம் நோக்கினாள். அந்தப்பெண் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நானும்தான்.

இதோ இப்போது சென்னையில். இறங்கி அடுத்த ரயிலிலேயே ஊர் திரும்பக் காத்திருக்கிறேன்.

4 comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.