கவிதை

இரவின் குரல்

ஜிஃப்ரி ஹாஸன்

இரவுகள் தூங்கிக் கொண்டிருந்தன
நினைவுகள் பிளந்து கொண்டு
தன்போக்கில் அலைந்தன
தூங்கும் இரவுகளிடம்
முறையிடல்களை முன்வைத்த
மனிதர்களை நான் கண்டேன்
பாஷைகளற்ற மௌனம்
சூழ்வதையும் பின் கலைவதையும்
ஒவ்வொரு முறையிடலுக்குப் பின்னும்
கேட்கிறேன்
ஓய்விலிருக்கும் ஒவ்வொன்றும்
தனக்கென்றொரு தவத்தை
தனக்கென்றொரு வரத்தை
தானே கண்டடைகின்றன
கையளிக்க எதுவுமற்ற
வரண்ட இரவுகள் இவை
அதனிடம் எதையும் எதிர்பார்த்திருப்பதன்
அர்த்தமின்மையை உணரும் தருணம்
ஒரு பேருறக்கத்தினுள்
நான் என்னை ஒப்புக் கொடுக்கிறேன்
பாஷைகளற்ற மௌனம்
என்னை மீண்டும் சூழ்ந்து கொள்கிறது

ஒரு குருட்டு நட்சத்திரத்தை தானும்
விட்டு வைக்காத வரண்ட இரவுகள்
மௌனமாய் உறைந்திருந்தன
எனது ஆன்மாவின் அங்கலாய்ப்பை
எனது தனிமைத் தவத்தை
பேயுரு கொண்டு கலைக்கிறேன்
இரவுகள் துயில் கலைந்து
வனத்தின் ஆழத்துள் சென்று மறைகின்றன
இந்த நூற்றாண்டின் இரவுகள் இயங்குவதற்காகவும்
பகல்கள் உறங்குவதற்காகவும் என காலத்தை
மாற்றியமைக்கும் வெறியுடன்
தூங்கும் இரவுகளை பேயுரு கொண்டு
கலைக்கிறேன்

காமத்துப்பூ

ஆகி

மேற்கின்
வெண்கற்பிதம்
கப்பலேறி வந்து
கிழக்கின் கருங்கற்பிதத்தின்
மேல் படர்ந்து, முன்னும் பின்னும்
நிகழ்ந்த ஊடுருவலின் அரைகுறை ஊடுருவலில்
ரத்தங்கசிந்து, இனிமை கசந்து
மென்மொட்டுகள் மலர்ந்து
மெட்டிற்கிணங்காது
சாம்பற்பூக்கள்
அசைந்தன

இயற்கையின் கவிதை

சரவணன் அபி

haiku1

அவ்வப்போது
நிலவின் ரசிகர்களுக்கு
ஓய்வளிக்கும் முகில்கள்

– மட்சுவோ பாஷோ
haiku2

மேற்கின் காற்றில் எறியுண்டு
கிழக்கில் சேர்கின்றன
உதிர்ந்த இலைகள்

– யோசா புஸோன்

haiku3

என் வாழ்வு –
இன்னும் எவ்வளவு மீதம்?
இது குறுகிய இரவு

– மசஓகா ஷிகி

haiku4

குளிர்காலக் காடெங்கும்
உதிர்ப்பதற்கு இலைகளின்றி
கடுஞ்சினத்துடன் ஓலமிடும் காற்று

– நட்சுமே சோசெகி

haiku5

இந்தப் பாதையில்
யாரும் பயணிப்பதில்லை என்னைத் தவிர,
இந்த இலையுதிர்கால மாலையில்

– மட்சுவோ பாஷோ

haiku6

இலையுதிர்காலத்தின் முதற்காலை
நான் பார்க்கும் கண்ணாடி
என் தந்தையின் முகத்தைக் காட்டுகிறது

– முரகாமி கிஜோ

haiku7

விளக்கு அணைந்ததும்
சன்னல் சட்டகத்தினுள்
நுழைகின்றன குளிர் விண்மீன்கள்

– நட்சுமே சோசெகி

புலம்பல் 16:1-7

ஆகி

சிலதடவை தாமதமாய் வந்திருக்கிறேன்
எத்தனையோ தடவை கிறிஸ்துமஸ் அன்று
தேவாலயத்திற்கு போகாமல் இருந்திருக்கிறேன்
இத்தனைத் தாமதமாய் எவரும் வந்து பார்த்ததில்லை
இங்கே கலவரம் ஏதும் என்றனர்
ஆராதனை முடிந்து பதினைந்து நிமிடம் கடந்து
லத்தியோடு இருசக்கர வாகனத்தில்
வந்த காவல் நிலையக்காரர்கள்
ஆராதனைக்கு வரவில்லையாம்
இம்மானுவேல் ஆலயம் எங்கே என்றனர்
வந்ததும் வராததுமாகச் சென்றனர்
கிறிஸ்துமசுக்கு நான்
ப்ளம் கேக் உண்ணாவிரதம்
எழுதப்பட்ட திருமறையில்
ஏசு ஏசினார்
பிரம்மன் பிரம்பெடுத்தார்
என்று எழுதப்பட்டிராவிடினும்
பொருட்படுத்த தேவையில்லாததை
பொருட்படுத்துவர்
அரசியலாடுவர்
நித்யகிருபையை
நித்யநேசத்தை
எதிரெதிர் கூட்டத்தினர்
கழுவிலேற்றுவர்
படையலிடுவர்
அசனம் வைப்பர்
புதுவருடத்திற்கு நான்
ப்ளம் கேக் தவிர்த்து
வேறேதும் உண்ணாவிரதம்

நான் இரையானேன்

– பெ விஜயராகவன்-

சின்னஞ் சிறிய சிறுத்தையது
கன்னங் கரிய உடல் கொண்டு
பதுங்கிப் பாயும் இரை மீது
நகங்களின் கூரோ நடுங்க வைப்பது
குத்தி கிழித்து குடலுருவ வல்லது
தின்று தீர்த்த பின்னாலும்
தீராப்பசி அதன் கண்களில்
மாம்ச ருசி மயக்கம் கொள்ள
மறு இரைக்கு அலைக்கழிப்பு
இரை தேடும் அதன் கண்களில்
பெரு விருந்தாய் நான் விழ
வேறென்ன வேண்டமென
கூர் காட்டும் பல்லினிடைய
உண்ட மாம்சத்தின் உதிரி மிச்சங்கள்
இமைக்காது இரை நோக்கும்
அதன் கண்ணிணூடே
குவிந்தும் விரிந்தும்
ஓர் கரும்பாழ் வழித்தடம்
தடம் பற்றி உள் நுழைந்தே
யுகம் யுகமாய் ஒரு பயணம்
பெரும்பயணம்
கால்கள் சலித்து களைத்து ஓய
கண்டேன் அங்கொரு ஆதியின்
பெருங்காடு
காடு கொள்ள கரும்பூனைகள்
பெரும்பூனைகள்
நான் இரையானேன்
சிறு எலியென