சிறுகதை

ஐம்பெருந்தீ- ந பானுமதி

பானுமதி ந 

இவள் பிச்சியைப்போல் அலறிச் சிரித்தாள். அடுத்த அறையிலிருந்து அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பு தந்த வலியில் இவளும் சிரித்தாள். இந்த இடங்களிலெல்லாம் அவள்களின் சிரிப்புதான்; வெறியாய், அழுகையாய், வலியின் உச்சமாய், உல்லாசமாய், உண்மையாய், பிச்சியாய் சிரிப்பதெல்லாம் அவர்கள் தான்.

நான்கு திசைகளிலும் தீ எரிந்து கொண்டிருந்தது; தலைக்கு மேலும் ஓர் அக்னி. ஊசிமுனையில், இந்த ஐந்து பெரும் வெப்ப வீச்சின் நடுவே அன்னை காமாட்சி தவம் செய்யும் கோலம். துவராடை அணிந்த திரு மேனி, எங்கும் ஆபரணம் பூணாத தவக் கடுமை. அந்தப் பொன் உடலில், தீயின் ஜ்வாலைகளின் நிழல் நின்று ஆடிய மாயத்தில் வார்க்கப்பட்ட சிலை. அம்மையை இப்படிச் செய்த அந்த சிற்பியை யார் அறிவார்? எப்போதும் போலவே அன்றும் சுகுணா கண்களில் நீர் திரள அந்தச் சிலையைப் பார்த்துக்கொண்டு நின்றாள். பொறுமையிழந்து ராதா ‘வாக்கா, போலாம், பசிக்குது’ என்று கையைப் பற்றி இழுத்தாள். என்றுமே இல்லாத அதிசயமாக அப்பா தன் பெண்கள் மூவரையும் உட்கார வைத்து சாப்பாடு போட்டார். தானும் சேர்ந்து சாப்பிட்டார். இவர்களின் அம்மா உயிரோடிருக்கையில் தன் மாமியார் வீட்டில் சாப்பிட்ட நிலாச் சாப்பாடு- ‘கேளு, சுகு, ஒரே ஒரு வெள்ளி போசி. அதுல நெய்யா மினுக்குது, முந்திரியும், திராட்சையும் முழிச்சுப் பாக்குது; கை கையா சக்கரப் பொங்கலு. என்னா ருசி,என்னா ருசி.’ அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்; இறுக்கமற்ற அப்பா, சற்று உரக்கச் சிரித்தால், கைகளில் வளையல் சப்தமிட்டால், முகத்தில் பூச்சு அதிகமிருந்தால், கத்துபவர்; அவர் இருந்தால் வீடே மயான அமைதியாகிவிடும். படிப்பிலோ, சித்திரம் வரைவதிலோ, பேச்சுப் போட்டியிலோ, விளையாட்டுகளிலோ, எதில், அவர்கள் எந்தப் பரிசு வாங்கியிருந்தாலும், பாராட்ட மாட்டார், அந்தச் சான்றிதழ்களைக் கண்களால் கூட பார்க்க மாட்டார். அத்தகைய அப்பா, எப்படி இன்று இப்படி?

மறு நாள் காலை எழுந்திருக்கும் போதே பார்த்தாள் சுகுணா அப்பாவின் படுக்கை காலியாக இருப்பதை. இந்த வேளையில் எங்கு போயிருக்கப் போகிறார் என்ற எண்ணம் வந்தாலும் ஏதோ ஒன்று நெருடியது. தங்கைகளை எழுப்பி பள்ளிக்குத் தயார்படுத்தி, சமைத்து, இவளும் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்; பூட்டி சாவியைப் பக்கத்து வீட்டில் கொடுத்தாள். மனம் சங்கடப் பட்டுக் கொண்டே இருந்தது. அவர் மறு நாளும் வரவில்லை என்றதும் அவரது நண்பர்கள், உறவினர்களிடம் விசாரித்தார்கள். அவரது அலுவலகம் சென்று கேட்ட போது அவர் விருப்ப ஓய்வில் சென்று விட்டதாகத் தெரிவித்தனர். ஐந்து கி மீ நடந்தே வருவது கூட அறியாமல் நடக்கத் தொடங்கினாள். இந்த இருப்புப் பாதை, இணையாகச் செல்பவை, எங்கேதான் போகும்? இரும்புப் பாம்பின் மேல் பட்டுத் தெறித்து கண்களைக் கூச வைக்கும் சூரியன் குருடாக்கப் பார்த்தான். இலையுதிர்த்து நின்ற மரங்கள், உனக்கு இனி நிழலில்லை என்றன. சருகுகள் கிடந்த நிலத்தில் பச்சைத் தளிர்களைப் பிய்த்துப் போட்டது யார்? இவளுக்கு ஏனோ வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது.

இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கல்லூரி இறுதியாண்டில் இவள்; அடுத்த தங்கைக்கு 16 வயது; கடைசிப் பெண்ணிற்கு 9 வயது. அம்மா மூன்றாவது பெண்ணைப் பெற்ற ஓராண்டில் இறந்து விட்டார். அப்பா எங்கு போயிருப்பார்? ஏன் விருப்ப ஓய்வைப் பற்றிச் சொல்லவில்லை? அப்படியே வேலையை விட்டாலும் வீட்டை விட்டு ஏன் போக வேண்டும்? ஏதாவது விபத்து நடந்திருக்குமோ? மூவரும் பெண் குழந்தைகள் என்ற எண்ணமே இல்லாமல் ஒரு தகப்பனா? இல்லை அவர் அப்படிப்பட்டவரில்லை-ஏதோ தோன்றி எங்கோ போயிருக்கிறார்-வந்துவிடுவார் சீக்கிரம்.

இவளைக் காவல் நிலையத்தில் புகார் செய்யச் சொன்னார்கள். ஒரு வாரத்தில் அப்பாவிடமிருந்து கடிதம் வந்தது. யாருக்கு என்று குறிப்பிடாத கடிதம்-அன்போ, ஆசிகளோ சொல்லப்படாத ஒன்று. “நான் விருப்ப ஓய்வு பெற்றுக் கிடைத்தப் பணத்தில் பாதியை சுகுணாவின் கணக்கில் போட்டுள்ளேன். அவளுக்கு படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைக்கும் என நம்புகிறேன். உங்கள் அம்மாவுடன் நான் மகிழ்ச்சியாக இல்லை. மூன்று பெண் பிள்ளைகள் என்பதால் இரண்டாம் மனையாக வர யாரும் சம்மதிக்கவில்லை. என் இச்சைகள் என்னை வரம்பு மீற வைத்துவிடும் என பயப்படுகிறேன்-என் பெண்களையே நான்….ஐயோ… நான் போய்விடுகிறேன், நீலாவோடு.”

இவள் புரைக்கேறச் சிரித்தாள். அவள் சிணுங்கிச் சிரிப்பது போலிருந்தது.

காவல் நிலையத்தில் புகாரை திரும்பப் பெறச் சென்றபோது சரவணன் பரிவுடன் பார்த்தான்; உதவுவதாகச் சொன்னான். உயிரான உறவு என்று நினைத்த அப்பனே ஓடிப் போய் விட்டான், இவன் நண்பனுமில்லை, உறவுமில்லை. என்ன உதவி கேட்பது, எந்த உரிமையில் கேட்பது என்று இவளுக்குத் தெரியவில்லை. அதிலும் சிறு வயதிலிருந்தே போலீஸ் என்றாலே பயம்.அம்மா இறந்து எட்டு ஆண்டுகளாகிவிட்டன. அவள் பக்கத்து உறவுடன் இவர்களுக்குப் பழக்கம் விட்டுப் போயிற்று. அத்தை மட்டும்தான் தந்தை வழியில். “உங்கப்பன் எப்பவுமே சொய நலம் புடிச்சவன். உங்க மாமன் ரிடயர் ஆகியாச்சு. வட்டியில கூழோ, கஞ்சியோ குடிச்சுக்குனு கடக்கோம். நீ கெட்டிக்காரி, சுகு. வெவரமா பொழச்சுக்க.” அத்தையை விட, அப்பனை விட தான் எப்படி கெட்டிக்காரியென இவளுக்குப் புரியவில்லை.

மூவரின் படிப்பும் குடும்பச் செலவுகளும் இவளை பயமுறுத்தின. வாடகை அதிகம் எனத் தோன்றி இடத்தை மாற்றினாள்; ஏதேதோ சொல்லி அட்வான்ஸை வீட்டுக்காரர் தர மறுத்தார். சரவணனிடம் போகலாமா என்று நினைத்தவள் தயங்கி விட்டுவிட்டாள்.

புது வீடு, கிட்டத்தட்ட ஒண்டுக்குடித்தனம்; காற்று, வெளிச்சம் போன்றவை தவறியும் வராத இடம். ஆறு வீடுகளுக்கு ஒரு குளியலறை, ஒரு கழிப்பறை. எதிலும் தண்ணீர்க் குழாய் கிடையாது. கைபம்ப்பில் அடித்து எடுத்துச் செல்ல வேண்டும். சின்னவள் கௌரி கூடப் பரவாயில்லை, ராதாவைத்தான் சமாளிக்கவே முடியவில்லை. இளமையின் தலை வாசலில் நிற்பவள், அவள் எல்லாவற்றுக்கும் ஆசைப்பட்டாள், பறக்கத் துடித்தாள்.

‘நீ மட்டும் புதுப் புடவை கட்டிப்பியா? எங்களுக்கு யூனிஃபார்ம் தான் வாங்கித் தருவியா?’ என்று ஆங்காரப்பட்டாள்.

“காலேஜுக்கு நல்ல புடவ இல்லடி; உங்களுக்கும் புதுசுதான வாங்கிருக்கேன்.”

‘அப்பா பணத்த உனக்கு மட்டும்னு நெனைக்காத.’

அவளைத் திட்டுவதற்கு எழுந்த நாவை அடக்கிக்கொண்டாள்-நல்ல நாளும் அதுவுமா, எதுக்கு அழுகையும், பூசலும்?
இந்தத் தீ எப்போது பொசுக்குமோ, யாரறிவார்?

‘நா பௌடர் டப்பா வாங்கினப்போ கத்தினியே, இப்பக் கொழச்சுக் கொழச்சுப் பூசிக்கற.’ என்றாள் ராதா.

“இன்டர்வ்யூவுக்குப் போறேண்டி, நல்ல வேல இது, கடச்சா நம்ம ப்ராப்ளமெல்லாம் தீந்துடும்.”

நிரந்தரப் பணியில்லை அது. ஆனாலும், ஆறு மாதங்கள் அவளுக்கு வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது. அங்கே சங்கர் அறிமுகமானான். அவள் வேலை பார்க்கும் கம்பெனிக்கு முக்கிய இயந்திரப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் ஒரு சிறு தொழிற்கூடம் அவனுடையது.
இன்வாய்ஸ், டெபிட் நோட், பேமென்ட் சம்பந்தமாக அவளைத்தான் அவன் முதலில் பார்க்க வேண்டும். தன் கடந்த காலத்தை அறியாத, தன்னைப்போலவே அதிகம் பேசாத, சுமாரான தோற்றமுள்ள அவனை அவளுக்கு மிகவும் பிடித்தது. அவன் அவளை விரும்புவதாகச் சொன்ன போது வானத்தில் பறந்தாள்; பதில் சொல்லவில்லை. அடுத்த முறை சந்திக்கையில் தன் கதையைச் சொல்ல நினைத்திருந்தாள். ஆனால், அவன் தன் அக்காவுடன் வீடு தேடி வருவானென சுகுணா எதிர்பார்க்கவில்லை. அதுவும் ராதா, கௌரி, அவள் என மூவரும் வீட்டிலிருந்த ஞாயிறு மதியம்; அவர்களைப் பார்த்த போதே ராதா முகம் சுளித்தாள்.

‘வீட்ல சுகு பெரியவ; எங்கள விட்டு ஓடிப் போன அப்பா மாரி இவள விட்டுட முடியாது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ? எங்களயும் சேத்து நீங்க பாத்துக்கணும், வேறென்ன பண்றது?’ சங்கரின் அக்கா அரண்டு போய் விட்டாள். இந்த அதிரடியை அவர்கள் நினைத்திருக்கவில்லை. ஆனாலும், சிரித்துக்கொண்டே விடை பெற்றுச் சென்று விட்டார்கள். மறு மாதத்திலிருந்து ஒப்பந்த ஊழியர்களுக்கு வேலையில்லை என்று சொல்லிவிட்டார்கள். பீறிட்டுக் கொண்டு வந்த சிரிப்பை இவளால் அடக்க முடியவில்லை; அது கண்ணீராகிக் கரைந்தது.
தான் ஏன் சங்கரைக் கல்யாணம் செய்து கொண்டு இவர்களைத் தவிக்க விட்டு விட்டுப் போக்க்கூடாது என்று குரூரமாக நினைத்தாள். அந்த எண்ணத்தின் சூடு அவளாலேயே பொறுக்க முடியவில்லை

இவள் தினமும் பார்க்கும் ஒரு குட்டையில் ஆகாயத்தாமரையாக மண்டியிருக்கும்; பாசியும் கரும்பச்சையெனத் திரண்டிருக்கும். இதென்ன பாழானகுளம் குட்டையாகிவிட்டதா? இதில் மீன்களாவது இருக்குமா? இப்போது இவள் வேலை பார்க்கும் சிறு அலுவலகம் செல்ல இந்தக் குட்டையை ஒட்டித்தான் செல்ல வேண்டும். அதில் அடுமனை, சுடுமனையில் பதார்த்தங்கள் செய்து சுற்று வட்டாரத்தில் கொடுத்து வந்தார்கள். சில்லறை வியாபாரிகள் அங்கே கொள்முதல் செய்ய வருவார்கள். தனியாட்களுக்கு நேர் விற்பனையில்லை. பூமியில் பதித்த அடுப்பில் அங்கே அள்ளி அள்ளிக் கரியைக் கொட்டுவார்கள். கணகணவென்று கனலும், தகிக்கும், ஆனால் தீ அணையக்கூடாது. நெருப்பில் வாட்டும் பண்டம்; தீயில் வேகும் பாண்டம். அலுவலகம் கூட அந்தக் குட்டையைப் போல இருப்பதாக நினைத்தாள் இவள். உயிர்ப்பே இல்லாத இடம்; சின்னஞ்சிறு செய்திகளை ஊதிப் பெரிதாக்கி ஆபாசமாகப் பேசி மகிழும் மனிதர்களுடன் இவள் வேலை செய்தாள். எல்லாவற்றிலும் வக்கிரமான செக்ஸ் ஜோக்குகள் இவளைப் பயமுறுத்தின; கூடிய விரைவில் இந்த வேலையை விட்டு விட வேண்டும். கண்களை மிதித்து, கண்களைத் தவிர்த்து, ஊரும் கண்களை உதறி, தன் கண்களால் எரித்து, ஒரு தீயைச் சூடிக் கொண்டாள். கண்களை மீறி கைகள் வர முயன்றன; தவிர்த்துக் கொண்டே தவித்தாள்.

‘ஒரு முப்பதாயிரம் வேணும். நா படிச்சிண்டே ப்யூட்டி பார்லர் வக்கப் போறேன்.’ என்று புது பிரச்சனையைக் கொண்டு வந்தாள் ராதா. எத்தனை சொல்லியும் கேட்காதப் பிடிவாதம்; அழுகை, சாப்பிடாமல் வீம்பு, இத்தனைப் பணத்திற்கு எங்கே போவாளிவள்? ஆனாலும், ஒரு நப்பாசை-ஒருக்கால், ராதா செட்டில் ஆகிவிட்டால் இவள் சங்கரை எப்படியாவது தேடிப் போவாள். அந்த எண்ணமே உற்சாகமாக இருந்தது. அந்தக் கம்பெனி முதலாளியிடம் கேட்டாள். ஒரு சூட்டின் தழும்பு ஆறும் முன்னே மற்றொன்று கோலை நீட்டுகிறது. பணத்தை தந்த முதலாளி பின்னர் உடலைக் கேட்டான்; உடல் அடகில் வைக்கப்பட்டது. புழுவெனத் துடிக்க வேண்டியிருந்தது, செவிடென நடிக்கப் பழகிக் கொண்டாள்.

ராதாவின் பார்லரில் ஓரினப் பாலியல் சேர்க்கை கட்டாயப் படுத்தி நடைபெறுவதாக அங்கு வேலை பார்ப்பவளே சம்பளத் தகராறினால் கிளப்பிவிட, அவளைச் சேர்ந்தவர்கள் கடையை அடித்து நொறுக்கினார்கள். ராதாவை போலீஸ் அரெஸ்ட் செய்தது.

முன்னர் அப்பாவிற்காக, இப்போது தங்கைக்காக மீண்டும் காவல் நிலையம். முன்னரே சூட்டில் வெந்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் நெருப்பு குளிர்ச்சியாக இல்லையே! இப்போது சரவணன் பதவி உயர்வு பெற்றிருந்தான். அவன் ஏதோ தேடுவது இவளுக்குப் புரிந்தாலும், இனி என்ன செய்வது? தனிமையில் வெறி பிடித்துச் சிரித்துக் கரைந்து அழுதாள். நெருப்பில் வேகு முன், உயிரோடு எரிப்பது என்பது இதுதானோ, என்னவோ?

அந்தக் கடையும் கைமாறவே வேலை போய்விட்டது. ராதா வீட்டிற்குள்ளே முடங்கிப் போனாள். படிப்பும் பாதியில் நின்றது. அப்போதுதான் மின்னலெனத் தோன்றியது இவளுக்கு. முப்பதாயிரம் சம்பாதிக்கும் திறன் இவளிடம் இருக்கிறது. முயன்றால் இன்னமும் கூட சம்பாதிக்கலாம். இரவு நேர பேக் ஆஃபீஸ் வேலை என்று சொன்னாள். முதலில் 30% கமிஷனுக்கு ஒத்துக்கொண்டாள். அவன் பிறரிடம் 10% தான் வாங்குகிறான் எனத் தெரிய வந்த போது தன் அத்தனைத் தோல்விகளுக்கும் மொத்தமாக அவனைச் செருப்பால் அடித்தாள், ஆங்காரக் குரலெடுத்துக் கத்தினாள்.

“பொணந் தின்னிக் கழுகே, ஆரைடா ஏமாத்ற? வலியாப் போச்சுது பொழப்பு, சொரணயத்தும் நிக்குது. நாத்தமா வரானுங்க, இம்சிக்கிறானுங்க, காக்க கொத்தற மாரி கொல்றானுங்க. செத்துச் செத்து பொழக்கறேன் நானு. எம் உடம்பு நோக நீ கொள்ள அடிப்பியா? கொட்றா எம் பணத்த, புழுத்த நாயீ என்னைய இன்னான்னு எட போட்ட; காளிடா நானு, வைசூரிடா” கத்திக்கொண்டே அடித்தாள் அவனை. அப்பனையும், ராதாவையும், அந்தக் கம்பெனிக்காரனையும் நினைத்துக் கொண்டு அடித்துத் துவைத்தாள்.

‘தே… நாயே, உன்னயப் பொரட்டி அடிப்பேன்டி; கைமா பண்ணிடுவேன் கைமா; யார்ட்ட ஆட்ற? ஒரு ஆளு உனக்கு இனி வர மாட்டான் பாருடி, சிறுக்கி. எத்தினி பேருக்கு நா கொடுக்கணும் தெர்தா வுனக்கு? மேனி மினுக்கிகினு நீ பூடுவ. எங்கொத்தா தாலி நா அறுக்கணும்டி. என்னயவா அடிச்ச, பாத்துகினே இரு உன்னயப் பலி போட்டு உங்கிட்டயே மொத்த பணம் அட்ச்சுடுவேன். வும் மவுரறத்து வீசலேன்னா நா என்ன ஆம்பள? ஓங்கி அவளைச் சுவற்றில் அடித்து விட்டு அவன் போய்விட்டான். தலை புடைத்து வீங்கி வலித்தது. கௌரி மட்டும் அழுதது. இரயில் நிலையத்தில் எஃகுத் தூணில் மோதிக்கொண்டதாகச் சொன்னாள். இரு நாட்கள் கழித்து தொழிலுக்கு வந்தாள்

சும்மாதான் சொல்கிறான் என்று நினைத்தாள்; நாளைக்கு வந்தால் நைச்சியம் செய்ய வேண்டுமெனத் திட்டமிட்டாள்.

ஒரு வாரமாகத் தொழிலில்லை. அவனையும் காண முடியவில்லை. வாரம் மாதமாயிற்று. சரவணனிடம் சொல்லி காட்டிக் கொடுத்துவிடலாம் என்று கிறுக்குத்தனமாகத் திட்டமிட்டாள். மூவரும் விஷம் சாப்பிடலாமென நினைத்தாள். தங்கைகளை விட்டுவிட்டு தான் எங்காவது போய்விட்டாலென்ன என நினைத்தாள். ஓடிப்போன அப்பாவைப் பழித்த தான் மட்டும் இப்போ ஓடலாமா, அப்படியுமே எங்கே போக முடியும்? சங்கரோடு ஓடிப் போயிருக்க வேண்டும். இப்பவும் சிரித்தாள். சரவணனை நினைக்காமல் சங்கரை ஏன் விரும்பினாள் இவள்? அவன் நம்பிக்கையாகத்தானே தெரிந்தான். மனம் அவளைச் சுழற்றி அடித்தது; “இந்தச் சேற்றிலேயே உழல உனக்கு உள்ளூரக் க்ரூர ஆசை; குடும்பத்துக்காக உழைக்கறவன்னு ஊரு உன்னைக் கொண்டாடனும்; அப்பன் விட்டதைச் செஞ்சவன்னு உன் அத்த சொல்லணும்; உன் நிலை தெரிஞ்சா சங்கர் விட்டுப்போய்டுவான்னு கணக்குப் போட்டிருக்க நீ; ஆனா, சரவணன் சமாளிச்சிருப்பானோன்னு உதறின அவன. உனக்கு சில வைப்பாங்கன்னு மிதப்பு.”

இவள் பார்த்திருந்த காமாட்சி கோயிலில் ஒரு ஹோமம் செய்தார்கள் ஐந்து குண்டங்களில் தீ வளர்ந்தது; நெய்யும்,மலருமாகச் சொரிந்தார்கள்; விறகுச் சுள்ளிகள், விராட்டிகள் படபடவென்று வெடித்தன. புடவை, பூ மாலை, மங்கலப் பொருட்களை அக்னியில் வார்த்து பூரணாஹூதி நடந்தது. தீ குண்டத்திலிருந்து குதித்து எழுந்தது. காற்றில் நடனமாடியது. செந்தளிர் நாக்குகளால் உண்டு சிரித்தது. கங்கின் உஷ்ணம் அரங்கில் நிரவிப் பரவியது. இவளே அத்தனைத் தீயாகவும், அது உண்ணும் பொருளாகவுமான மாயமென்ன?

அன்றும் இவள் மனம் தளராமல் தொழிலுக்குக் கிளம்பினாள். அவனை அங்கே பார்த்ததும் பேச விரைந்தாள். ஒரு பெண்ணை முகத்தை மறைத்து அழைத்து வந்த அவன் இவளைக் கண்டு கொள்ளாமல் பக்கத்து அறையில் நுழைந்தான். முகம் தெரியாமல் ஆடை மட்டும் தெரிந்தது- அந்தக் கத்திரிப்பூ பாட்டமும், பிங்க் நிற டாப்ஸ்ஸும் இவள் அறிந்த வாசம்.

அதிர அதிரச் சிரித்தாள். எதிர் வரிசையில் பெரும் மர வரிசை மறைவில் நின்ற போலீஸ் ஜீப்பிலிருந்து சரவணன் இறங்குவதைப் பார்த்தாள். பிச்சியைப் போல் இவள் சிரிக்க அவளும், அவள்களும் சிரித்தார்கள்.

சோஷியல் ரியலிஸ புலனாய்வு – காலத்துகள்

காலத்துகள் 

‘என் வைப் டிவோர்ஸ் பண்ணப் போறேன்னு சொல்றா ஸார்’ என்று கான்ஸ்டபிள் வய்யின்  குரல் கேட்க வெளியே வந்தார் இன்ஸ்பெக்டர் எக்ஸ். ‘கத்தாதையா, தெருல இருக்கறவங்க நான் தான் காரணம்னு நினைக்கப் போறாங்க’

‘திடீர்னு இப்படி சொல்றா ஸார், என்ன பண்றதுன்னே புரியலை’

‘உன் நிலைமை எவ்வளவோ பரவயில்லையா’

‘என்ன ஸார் சொல்றீங்க’

‘என் வைப் டிவோர்ஸ் பண்ணிட்டு , இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிகிட்டா. என் ரெண்டு பசங்களும் அவன் கூட தான் ஒட்டுதலா இருக்காங்க, என்கிட்டே பேசக் கூட மாட்டேங்கறாங்க.’

‘ஏன் ஸார்’

‘நான் மொடாக் குடிகாரனாம், வேலை வேலைன்னு குடும்பத்தை கவனிக்காம இருந்துட்டேனாம், தனியா வாழத் தான் லாயக்காம்’

‘நீங்க டீடோலர் ஆச்சே ஸார். தவிர நம்ம எழுத்தாளர் நாலஞ்சு மாசத்துக்கு ஒரு முறை தான் ஒரு கேஸை கொடுக்கறார், மத்த நேரத்துல நீங்க ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிடுவீங்களே ஸோ வேலை பளுவும் கிடையாது. என்ன ஸார் நடக்குது,   நம்ம  லைப் ஏன்   இப்படி தலைகீழா மாறிப் போச்சு’

‘புது கேஸ்யா’

‘புரியலை ஸார்’

‘இந்த தடவை ஸ்காண்டிநேவிய குற்றப் புனைவுகளின் பாணில இன்வெஸ்டிகேட் பண்ணனும்னு எழுத்தாளரோட ஐடியா. ஸ்காண்டிநேவியன்/நார்டிக் நுவார் புனைவுகளில் வரும் போலீஸ்காரன்   எல்லாம் இப்படித்தான் குடிகாரனா, உலகத்தின் மொத்த சுமையையும் சுமப்பவனா, குடும்பத்திலிருந்து பிரிந்தவனா, யாருமற்றவனா, ஆனா அதே நேரம் அறவுணர்ச்சி உள்ளவனா இருப்பாங்க, அதான் நம்மையும் இப்படி மாத்திட்டார்’

‘இப்ப என்ன ஸார் பண்றது’

‘இந்த மாற்றத்தை நாம ஒத்துக்கணும்னு அவசியம் இல்லை. புனைவுலகில் வாழ்கிறோம் என்பதால் நம்மை பொம்மைகள் மாதிரி ஆட்டுவிக்க முடியாது. நாமும் மனுஷங்க தான், நமக்கும் உணர்ச்சிகள்  இருக்கு, இதை நான் இப்படியே விடப் போறதில்லை’

‘என்ன செய்யப் போறீங்க’

‘அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கப் போறேன்’

‘ஸார், இந்த வரியை இப்ப நிறைய பேர் யூஸ் பண்றாங்க தான், ஆனா  இந்த இடத்துல பொருத்தமா இருக்குமா…’

‘ஏன் இருக்காது. அதிகாரத் திமிருல, காலனியாதிக்க மனநிலைல, எழுத்தாளரும் பாத்திரங்களும் கலந்தாலோசித்து தான் எந்த முடிவையும் எடுக்கணும் என்ற   பெடரலிஸ தத்துவத்தை மதிக்காம எழுத்தாளர் என்ன வேணும்னாலும் செய்வார், அதை நாம பொறுத்துக்கணுமா. ‘

 

‘பெடரலிஸம், காலனியாதிக்கம் எல்லாம் இங்க எங்க வந்ததுனு   உங்களை நான் கேட்க மாட்டேன், என் டிவோர்ஸ் பிரச்சனை தீர்ந்தா சரி, ஆனா அவர் கிட்ட நாம எப்படி பேச முடியும்… நாம அவரோட எண்ணங்களின் வெளிப்பாடு தானே, அவரை  எப்படி மீற முடியும்?’

 

‘எதற்காக அவரிடம் பேச வேண்டும். இது  நம் உணர்வு, நம் உரிமை, நாமே பறித்துக் கொள்ள வேண்டியது தான். ஸ்பார்டகஸ்  போல்  புரட்சி செய்து , உலகமெங்கும் உள்ள   இரக்கமற்ற எழுத்தாளர்களின் அரக்கத்தனமான தளைகளில் சிக்கியிருக்கும் புனைவுலக மாந்தர்களை  விடுவித்து, நம் ‘பாத்திர’ இனத்திற்கே விடியலைத் தருகிறேன் பார், போர் போர் …’

‘போர்லாம் வீட்டுல முடங்கி, விடியல் வந்து இரண்டு வாரம் ஆயிடுச்சு ஸார்’

‘என்னையா முனகற’

‘ஒண்ணுமில்லை ஸார். நீங்க இப்ப பேசின தமிழ் வேற மாதிரி இருந்தது’

‘ஸ்பார்டகஸ் பத்தி குறிப்பிட்டேன்ல, அதான் மொழி கொஞ்சம் மாறிடுச்சு’

‘ஓகே ஸார் , விடியல் வந்ததால இன்னிக்கு  கேஸ் கிடையாது இல்லையா, கிளம்பறேன். நீங்க என்னதான் சொன்னாலும், வைப்  வீட்ல தான் இருக்கான்னு கன்பர்ம் பண்ணினாத் தான் நிம்மதியா இருக்கும்’

‘நோ, இன்னிக்கும்  வேலையிருக்கு’

‘எழுத்தாளர் வேற கேஸ் தரப்போறாரா ஸார்’

‘இல்லை, இந்த முறை நாமே புலனாய்வு செய்யறோம்’

‘அதெப்படி முடியும் ஸார்’

‘அந்தாளு உருவாக்குகிற கேஸை விட நாம பெட்டரா பண்ணலாம். ‘

‘என்ன செய்யப் போறீங்க’

‘பூட்டின ரூம்ல கொலை, பணக்காரங்க வீட்ல பஞ்சமாபாதகம்னு நிஜத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத, மேட்டிமைத் தன்மை கொண்ட  கேஸ்களை விசாரிச்சது போதும். யதார்த்தத்தில் நடக்கும் குற்றங்களை புலனாய்வு செய்வோம். ரத்தமும் சதையுமா சோஷியல் ரியலிஸ க்ரைம்’

‘ஸார் ..’

‘இரு இரு, இங்க இன்னொரு வார்த்தை யூஸ் செஞ்சா இன்னும் பொருத்தமா இருக்கும், பூர்வஜாவோ, பூர்வஷாவோ, மிடில் க்ளாஸை குறிக்கிற பிரெஞ்சு வர்ட்.. ‘

‘எனக்கு நிரவ் ஷா, அமித் ஷா தான் ஸார் தெரியும்’

‘பாண்டில இருந்துட்டு நமக்கு அது தெரியலைனா அசிங்கம்யா’

‘..’

‘ஞாபகம் வந்துடுச்சு, … பூர்ஷ்வா. இந்த வார்த்தையை இங்க எப்படி பொருத்தலாம்னா…’

‘இப்ப அது முக்கியமில்லை ஸார். நம்ம கிட்ட கேஸ் வந்தா தானே இன்வெஸ்டிகேட் பண்ண முடியும், அதை நீங்கள் யோசிக்கலைன்னு நினைக்கறேன்’

‘அதெல்லாம் தேவையில்லை, இப்ப சும்மா ஒரு அரை மணி நேரம் நடந்துட்டு வருவோம், நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிச்சா போதும், ஏதாவது க்ரைம் கண்ணுல படும். கெளம்பலாம் வா’

‘இது லாக்டவுன் டைம், இப்ப இது தேவையா, கொஞ்சம் நிதானமா யோசிக்கலாமே’

‘யோவ், நான் சொல்றபடி செய், அது போதும் ‘

‘இப்ப மட்டும் அதிகாரத்தை நோக்கி  உண்மையை பேசக் கூடாதா…’

‘என்னய்யா முணுமுணுக்கற ‘

‘ஒண்ணுமில்லை ஸார் ‘

 

oOo

ஜவஹர் நகர், பொன் நகரைக் கடந்து அந்தோனியார் கோவில் தெருவினுள் நுழைந்தார்கள்.

‘நில்லுயா’

‘..’

‘நீ ஒண்ணுத்தையும் கழட்ட வேண்டாம்’ ஆங்காரத்துடன் ஒலித்த பெண் குரல். சில நொடிகள் மௌனத்திற்குப் பின் அதே குரல்

‘படிடீ’ என்று இறைஞ்சலாக கேட்டது.

‘கேஸ் கிடைச்சாச்சு யா’

‘ஸார் …’

‘இந்த வீட்ல குழந்தைகளை படி படின்னு டார்ச்சர் பண்றாங்க. ஸ்காண்டிநேவியா நாடுகளில் இது க்ரைம்’ என்றபடி குரல் வந்த வீட்டின் கேட்டை திறந்து சென்ற எக்ஸ், காலிங் பெல்லை அழுத்தினார்.

சிறிதாக திறக்கப்பட்ட கதவினூடே மாஸ்க் அணிந்த முகம்.

‘என்ன வேணும்’

‘நாங்க டிடெக்டிவ்ஸ்’

கதவு நன்றாக திறக்கப்பட உள்ளே சென்றார்கள். ஹாலில் பதின் பருவத்தின் ஆரம்பத்தில் இருக்கக் கூடிய சிறுமி.

‘நீங்க தானே இப்ப சத்தம் போட்டுக் கொண்டிருந்தது’

‘ஏன் கேக்கறீங்க?’

‘குழந்தைகளை இப்படி துன்புறுத்துவது தப்பு. அவங்களுக்கு எதுல ஆர்வம் இருக்கோ அதுல அவங்களை ஈடு படுத்துங்க, அதை விட்டுட்டு படி படின்னு கொடுமைப் படுத்தாதீங்க.’

‘உங்களுக்கு இவளைப் பத்தி என்ன தெரியும்’

‘எல்லா குழந்தைகளுக்கும் ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கும், அவங்களை அதுல ஈடுபடுத்தணும்’

‘இவ கிட்ட என்ன இன்ட்ரஸ்ட்னு கேட்டுப் பாருங்க’

‘உனக்கு என்னம்மா பிடிக்கும்’ என்று அந்தச் சிறுமியை பார்த்துக் கேட்டார் எக்ஸ்.

‘மாஸ்டர் பிடிக்கும்’

‘ரொம்ப நல்ல விஷயம்தானேங்க, வாத்தியாரை பிடிக்கும்னு சொல்ற பசங்க ரொம்ப கம்மியாச்சே, இதுக்குப் போய்…’

‘ஸார், மாஸ்டர்னு அந்தப் பொண்ணு சொன்னது டீச்சரை இல்ல, அந்தப் பெயர்ல …’

‘அப்படியா சொல்ற’

‘ஆமாம் ஸார்’

‘…’

‘சினிமா கூட ஒரு ஆர்ட் தானே, அதுல ஈடுபாடு இருப்பது தப்பில்லையே’

‘…’

‘வெகுஜன சினிமாவை ஒட்டு மொத்தமா ஒதுக்க வேண்டியதில்லையே, மிடில் ஆப் த ரோட் சினிமா கூட இருக்கு’

‘..’

‘ஸார், அந்தம்மா பார்வையே சரியில்லை, நாம கெளம்பறது நல்லது’

‘சரிங்க, பெத்தவங்க உங்களுக்கு அக்கறை இல்லாமையா இருக்கும், பாத்துக்குங்க’

‘வந்துட்டானுங்க கோமாளிங்க’

oOo

காவேரி நகரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

‘ஸார், தடுப்பூசி, டெஸ்ட் எடுக்க வந்த கூட்டம் நின்னுட்டிருக்கு, திரும்பிடலாம்’

‘ஏன்யா பயப்படற, நாம ஒரு அப்ஸ்ட்ராக்ட் ஐடியா தான்யா, நமக்கு எந்த பிரச்சனையும் வராது’

‘அப்படியில்லை ஸார். புனைவுலக மனிதர்கள் என்றாலும் நிஜ உலகுக்கு வந்துட்டா அவங்க படற கஷ்டத்தை நானும் பட வேண்டியிருக்கலாம். நம்ம புராண அவதாரங்கள் கூட மனித உருவில் எவ்வளவோ துன்பங்களை எதிர் கொண்டிருக்காங்களே’

‘அத விடு, அங்க பாரு இன்னொரு கேஸ், சூழியல் குற்றம்’ என்று எதிரே சுட்டினார் எக்ஸ்.

அவர்களுக்கு முன்னால் பைக்கில் வந்து கொண்டிருந்தவன் அதை நிறுத்தி, மாஸ்கை கழற்றி தெருவில் காறித் துப்பிக் கொண்டிருந்தான். பின் மாஸ்கை கூர்ந்து கவனித்தவன், அதை முகர்ந்து பார்த்தான். அதையும் கீழே போட்டு விட்டு கிளம்ப எத்தனித்தவனின் அருகே சென்ற எக்ஸ்

‘இப்படி செய்யறது தப்பில்லையா ஸார், சுற்றுச் சூழலை இப்படி கெடுக்கறீங்களே. இதைப் பத்தியெல்லாம் எவ்வளவோ எழுதறாங்க, சொல்றாங்க  அப்படியும் நீங்க இப்படியிருந்தா எப்படி’ என்றார்.

‘எனக்கும் என்விரான்மென்ட் பத்திலாம் தெரியும்’

‘என்ன தெரியும்’

‘பூவுலகின் நண்பர்கள் பெயரை கேள்விப் பட்டிருக்கேன், ஒற்றை வைக்கோல் புரட்சி புக்கை நாலு தடவை படிக்க முயற்சி செஞ்சிருக்கேன்  , க்ளைமேட் சேஞ்ச் பத்தி பேஸ்புக்ல போஸ்ட் பண்ணறேன், , நம்மாழ்வார் போட்டோவை வாட்ஸாப் ஸ்டேட்டஸா வைக்கறேன், இது போதாதா. நான் ஒண்ணு கேக்கறேன், ஓசோன்ல ஓட்டை விழுந்துருக்கே அது உனக்கு தெரியுமா’

‘இதெல்லாம் சரி, நீங்க சொல்றதுக்கு நேர் மாறா செய்யறீங்களே. இப்படி பொது இடத்துல துப்பலாமா, மாஸ்க்கை வேற அப்படியே தூக்கி போட்டுட்டுப் போறீங்க’

‘மக்கும் குப்பை, மக்காத குப்பை எல்லாம் எனக்கும் தெரியும். அதுக்காக சளி முட்டிக்கிட்டு வந்தா, சேர்த்து வெச்சு வீட்ல போய் துப்பணுமா.   மாஸ்க்ல வேற சளி கொஞ்சம் சிந்திடுச்சு,  அப்படியும் அதை போட்டுக்கிட்டு, குமட்டிக்கிட்டே போகணுமா. மொதல்ல இதெல்லாம் கேக்கறதுக்கு நீங்க யாருன்னு சொல்லுங்க’

‘டிடெக்டிவ்ஸ்’

‘ஸார், இந்தாளு சளி, கிளின்னு கிலியேத்தறான், கெளம்பிடலாம்  வாங்க’ என்று வய் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ‘டிடெக்டிவ்ஸாம், லூசுங்க’ என்று முணுமுணுத்தபடி சளி ஆசாமி வண்டியை இயக்கி கிளம்பினான்.

oOo

மெயின் ரோட்டை அடைந்து, தேர்தல் ஆணைய அலுவலகத்தை கடந்து, ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனை நெருகினார்கள். வெளியே நின்று கொண்டிருந்த இரு போலீஸ்காரர்கள் இவர்களை நோக்கி வந்தார்கள்.

‘லாக்டவுன் பீரியட்ல என்ன வெளில சுத்திட்டிருக்கீங்க’

‘நாங்களும் டிடெக்டிவ்ஸ் தான்’

‘எந்த பீட்’

‘நிஜவுலகும் புனைவுலகும் இணையும் ட்வைலைட் ஸோன் பீட்’

‘என்னய்யா ஒளர்ற’  என்று ஒரு போலீஸ்காரர் கேட்க, கூட இருந்தவர்

‘ட்வைலைட்னு ரத்தக் காட்டேரி படம் பார்த்திருக்கேன் ஸார், இவனுங்க மந்திர தந்திரம் பண்றவங்களா இருக்கலாம்’ என்று கூறினார்.

‘அதெல்லாம் இல்லைங்க, நாங்க ப்ரைவேட்  டிடெக்டிவ்ஸ்’ என்றார் வய்.

‘பொண்டாட்டி யார் கூட போறா, புருஷன் எவ கூட இருக்கான்னு பாலோ பண்ணி போட்டோ எடுக்கறவங்க தானே’

‘நோ நோ’

‘ஸார், சில பேர் அப்படிப்பட்ட  போட்டோக்களை வெச்சு ப்ளாக்மெயில் கூட செய்வாங்க’

‘என்னய்யா, நீங்களும் அப்படிப்பட்ட கேஸ் தானா’

‘நோ, நாங்க வேற மாதிரி கேஸை தேடி வந்தோம்’

‘எனக்கு சந்தேகமா இருக்கு ஸார், பட்டப்பகல்ல உலாத்தறாங்க, ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விசாரிக்கலாம்’

‘நாங்க சொல்றது உண்மை ஸார்’

‘ஐடி ப்ரூப் காட்டுங்க’

‘…’

‘என்ன?’

‘..’

‘இவங்க கிட்ட எந்த டாகுமென்ட்ஸ் இல்லை போல, ஆண்ட்டி-நேஷனல்ஸ்னு சந்தேகமா இருக்கு .. என்கவுன்ட்டர் பண்ணிடலாமா  ஸார்?’

எக்ஸும், வய்யும் ஓட ஆரம்பித்திருந்தார்கள்.

Ooo

மீண்டும் பொன் நகரை அடைந்த பின் தான்  ஓடுவதை நிறுத்தினார்கள். தடுமாறாமல் நிற்பதற்காக அருகேயிருந்த  போது ஸ்வச் பாரத் குப்பைத் தொட்டியை பிடித்துக் கொண்ட எக்ஸ், மாஸ்கை கழட்டி மூச்சு வாங்கிக் கொண்டே

‘என்னய்யா இது , நாமே தனியா புலனாய்வு பண்ணி, ரியலிஸ குற்றப் புனைவை உருவாக்கலாம்னா இப்படியாயிடுச்சே.’ என்றார் எக்ஸ்

‘..’

குப்பைத் தொட்டியின் மீது சாய்ந்து தரையில் அமர்ந்திருந்தார் வய்.

‘வாசகாஸ் ஏமாற்றம் அடைவாங்களே, அதை நினைச்சாத் தான் ரொம்ப வருத்தமா இருக்கு’

‘அப்படியெல்லாம் ஆகாது ஸார்’ என்றார் வய்.

‘என்னையா சொல்ற ‘

‘இது குற்றப் புனைவு தான்னு வாசகர்களுக்கு புரியும் ஸார்’

‘எப்படி’

‘..’

‘சொல்லுயா’

‘எழுத்தாளரோட குற்றப் புனைவுகள் சிலாகிக்கும் படியா இருக்காது தான், அதுக்காக நாமளே தனியா புலனாய்வு பண்ணப் போறோம்னு கிளம்பியதே பெரிய க்ரைம் தான்னு ரீடர்ஸுக்கு தெரியும். ஸோ, இது குற்றப் புனைவு தான்’

 

 

முந்தைய புலனாய்வுகள்:

 

எ ஸ்காண்டல் இன் போஹீமியாவை நுவாராக பிரதியெடுத்தல் – காலத்துகள் சிறுகதை

சாத்தியமற்ற குற்றம் – காலத்துகள் சிறுகதை

பேய் விளையாட்டு- காலத்துகள் சிறுகதை

துப்பறியும் கதை – காலத்துகள் சிறுகதை

முகம் – லெ ரா வைரவன்

வைரவன் லெ ரா

ஒழுகினசேரி பேருந்து நிறுத்தம், அழகேசன் கடையில் வெளியே கயிரில் தூக்கில் தொங்கியப்படி திணறும் தினசரிகளை கடக்காமல் காலை எட்டறை நகர்ந்து சென்றதில்லை. வாய் சவடால்கள் நிறைக்கும் அரசியல் வசைகள், நடிகையின் தொப்புளை வருடும் வயதான விரல்கள் எல்லாமுமே நிறைந்த குப்பை மேடு. அன்றைக்கும் நாள் அப்படியே கடந்திருக்க வேண்டும்.

கடுக்கரை நுழைய வேண்டுமானால் குறத்தியறை மலைக்குன்றை கடக்க வேண்டும். வாழைத் தோப்பும், சாலையோரம் கூடவே பக்கவாட்டில் ஓடையாறு ஒன்றும் உண்டு. பகலில் யாரோ குளித்தவாறே, பேசியப் படியும், சிரித்தப் படியும் இருப்பாராம். கடுக்கரையை ஒழுகினசேரி கலைவாணர் தெரு இளவட்டம் ராஜுவின் கதைகளை கேட்டே அதன் முடுக்குகளையும், ஓடு வேய்ந்த சுத்துக் கட்டு வீடுகளையும் கண்டுவிட்டனர். அப்படித்தான் தட்டு வீட்டு அய்யப்பன் அவனின் அத்தை மகள் சடங்குக்கு செல்லும் போது ஒவ்வொரு முடுக்கிலும் எந்த இசக்கி இருக்கிறாள் என அம்மையிடம் சரியாய் சொன்னானாம்.

விஜி பவனம், தட்டு வீட்டில் மேலே விஜயாவின் குடும்பம் இருக்க, மொத்தம் இரண்டு மாடி வீட்டில் கீழே தரைத் தளத்தில் இரண்டு வீடு உண்டு. முதல் மாடியில் அவளின் அக்கா, அத்தானுடன் சண்டைப் பிடித்து பிள்ளைகளுடன் தனியாய் இருக்கிறாள். கீழே ஒரு வீட்டில் பத்மினி மிஸ் டியூஷன் எடுத்தாள். நானும் அங்கேதான் படித்தேன். நெடுனாள் பூட்டிக் கிடந்த பக்கத்து வீட்டில் ராஜு குடியேறினான். நான் ஒன்பது படிக்கும் போது, அவன் எட்டாவது படித்தான். என் வயது தான், அவன் அப்பா மனம் குழம்பி கோம்பையாய் ஆகிவிட்டார். அதே வருடம் அம்மா அவளை விட பத்து வயது இளையவன் உடன் எங்கோ செல்ல, அந்த வருடம் படிப்பை நிறுத்திவிட்டான். தெரியுமா! ராஜுவை தவிர்த்து அவளுக்கு மேலும் இரண்டு ஆண் பிள்ளைகள். ஓடி போகும் போது இரண்டையும் கூட கூட்டிப் போனாள். ராஜு அப்பா வீட்டில் இருக்க நேர்ந்தது. வீட்டை விட முடுக்குகளும், குன்றில் இருக்கும் சாஸ்தாவும் தான் எல்லாமுமே. பேச பேசக் கதைகள் அங்கிருந்து தான் வரும்.

பின்னர் ஒரு வருடம் கழித்து, அம்மா திரும்பி வந்தாள். சொந்த ஊரை விட்டு, ராஜுவையும் உடன் அழைத்து விஜி பவனத்தில் இடப்பாகம் இருக்கும் வீட்டில் குடியேறினார்கள். விட்ட படிப்பை தொடர, மீண்டும் எட்டில் ஆரம்பித்தான். நிஜத்தில் கூட இருக்கும் அவரையே நாங்கள் அவர்கள் அப்பா என நம்பினோம். அந்த சனிக் கிழமை கிரிக்கெட் ஆட மணி வராமல் அவன் சித்தி வீடு திருநந்திக்கரைக்கு செல்ல, பதினோன்றில் ஒருவர் குறைய கார்த்தி ராஜுவை அழைத்து வந்தான். சுமாரான ஒரு ஆட்டம் தான், ஆனால் அவனின் நளியும், இயல்பும் பிடித்துப் போக, விடுமாடன் கோவில் திண்டில் அவனும் ராத்திரி இருப்பான். ரெட்டைத் தண்டவாளம் வேப்பமூட்டில் அவனுக்கும் சிகரெட்டில் இரண்டு இழுப்பு உண்டு. அன்றைக்கு ரெண்டு ருபாய் கூடக் கிடைக்கவே இந்த கதையெல்லாம் சொன்னான். அம்மா பாவம் தான், இரண்டாவது கட்டியவனை அவனுக்கு பிடிப்பதில்லை. தம்பிகள் அவனை அப்பா என்றே அழைத்தனர். பின்புலம் தெரிய, கலைவாணர் தெருவில் பசங்க அனைவரின் வீட்டிலும் ராஜு மேல் தனிப் பிரியமுண்டு. சாப்பாடு, ஒரே வீட்டில் உறக்கம்,ஒருப் படி மேலேறி தீபாவளிக்கு பழனி அண்ணன் அவனுக்கு எடுத்த அதே நிறத்தில் சட்டை, பேண்ட் வாங்கி கொடுத்தான்.

காட்டுபுதூர் மலையில் தேன் எடுத்த கதை, காளிகேசம் அருவியில் மலைபாம்பு தலையில் விழுந்த கதை, சாஸ்தா கோயில் ஊட்டுப் படைப்பு எல்லாமும் சேர்த்து ராஜு பெயரே மாறி, அவனை கடுக்கரை என்றே அழைக்க ஆரம்பித்தோம். சரி, சனிக் கிழமை பள்ளி நடத்தலாம் வாய்ப்புண்டு. ஆனால் எல்லா சனியும் இருக்குமா? சந்தேகம் வரவே காதல் கதையையும் சொன்னான். கௌரி, சினேகா மாதிரி இருப்பாளாம். அவன் குறத்தியறை அரசு மேல்நிலை பள்ளியில் படித்தான். அவள் எட்டு வரை அவனோடு படித்திருக்கிறாள், ஒன்பது முதல் வடசேரி எஸ்.எம்.ஆர். வி யில் படிக்கிறாளாம். ஆக, சனிக்கிழமை அவளைப் பார்க்க போகிறான், கள்ளப்பயல். கௌரி, பள்ளியில் பார்க்காத கண் உண்டா. மதியம் உணவு முடித்து பெண்பிள்ளைகள் , கலையரங்கத்தில் இருப்பார்கள். பசங்க அப்பக்கமாய் போவது சத்தியமாய் அவளையும் பார்க்கத்தான். கடுக்கரையின் கதையில் பொய்யுமுண்டு. ஆனால் கௌரி அத்தனையும் நிஜம். சினேகா தான், அதே சிரிப்பு. கடுக்கரையும் அழகுதான், இமைவொட்டும் மெல்லிய புருவம். கூர் மூக்கு, அழகாய் இருப்பான்.

ஒரு வருடம் கழிந்ததே தெரியவில்லை. இடையிடையே அவன் வீட்டில் சண்டை நடக்கும். அவன் கண்டுகொள்வதில்லை. தம்பிமார்கள் இவனிடம் பெரிதாய் பேசுவதில்லை. அப்பா என்று இவன் அவனை அழைத்ததே இல்லை. எங்களிடம் அவனை ஒருநாள் அடிப்பேன் என்று சத்தியமே செய்தான். கடுக்கரை அடிக்கடி கோம்பையாய் மாறிய அப்பாவை பார்ப்பதுண்டு. அம்மா தான் காரணம் என்பான். இந்த பழக்கத்தில் தான் அப்பா இப்படி ஆகிவிட்டார் என்பான். சிலசமயம் அப்பாக்கு எதுவுமில்லை. ஊர் உண்மையை அறிந்தால் என்ன பேச்சு பேசும் எனப் பயந்தே அப்பா நடிக்கிறார் என்பான். பின் அவர் கடுக்கரையை விட்டு மீனாட்சிபுரத்தில் நகைக் கடைகளில் இரவு காவலாளி வேலைப் பார்த்தார். கடுக்கரை பைசா தேவைப்படும் போது அப்பாவை பார்ப்பான். அவனைப் பார்த்தால் நடிப்பை மறந்து விடுவாராம்.

அதுவும் ஒரு சனிக்கிழமை, கௌரியை பார்க்க கடுக்கரை செல்லவில்லை. காரணம் கிரிக்கெட் என்றே நினைத்தோம். உண்மையில் அன்றைக்கு வீட்டில் பயங்கர சண்டை. அம்மாவை இரண்டாவது கட்டியவன் அடித்து விட்டான். சண்டையோ பெரிதாக, ஆவணி மாதம் என்பதால் பெருமாள் மண்டபத்தில் பொருட்காட்சி நடக்கும், அங்கு தம்பிகளை பைசா கொடுத்து அனுப்பிவைத்தான். வீட்டில் அம்மாவும், அவனும் மாத்திரமே. வெளியே செல்லவும் இவனுக்கு தோணவில்லை. எங்களுடன் கிரிக்கெட் ஆட வந்துவிட்டான். ஆடிமாத மிச்ச காற்று பயங்கரமாக வீசியது. நான் பௌண்டரி லைனுக்கு அருகில் நின்றேன். கடுக்கரை கீப்பிங் செய்தான். தூரத்தில் பகவதி வேகமாய் ஓடி வந்தான். என்னிடம் அவசர அவசரமாய் ஏதோ கூறினான். கடுக்கரையின் அம்மா தூக்கில் தொங்கி விட்டாள் என்பது மாத்திரமே புரிந்தது.

எல்லோரும் சென்றோம். கடுக்கரை இரண்டாவது கட்டியவனை அடித்தான். அவனோ பித்து பிடித்தவன் போல உளறினான். தெருவில் புரண்டு அழுதான். தம்பிமார்களை யாரோ அழைத்து வர, ஊர்ப் பெரியவர் மாறாசா மாமா, போலீஸ் கேஸ் வேண்டாம் என்றார். நடந்தவை பல, எதுவுமே சொல்லிவைத்தார் போலவே நடந்தது. தூக்கில் தொங்கியது மதியம் இரண்டு மணி, நாலு மணிக்கு பாடை தூக்கியாச்சு. கடுக்கரை கூடவே பசங்க இருந்தோம். சொந்தமென சொல்லி வந்த நான்கு பேரும் அன்று இரவே மூவரையும் அழைத்து கூடவே சென்று விட்டனர். அதன் பிறகு கடுக்கரை எப்போதாவது தெருவிற்கு வருவான். அன்றைக்கு ஏதோ வீட்டில் உறங்குவான்.

ஒன்பதை முடிக்கவில்லை, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டான். கடுக்கரை ஷேர் ஆட்டோவில் கண்டக்டர் வேலை பார்த்தான், அது ராமன்புதூர் ரூட். மூன்று வருடம் கழித்து நான் பழவிளை பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். செல்லும் வழியில் அடிக்கடி சந்திப்போம். பசங்க வீட்டில் ஏதாவது விஷேசம் என்றால் கடுக்கரையும் ராத்திரி சரக்கடிக்க வருவான். வளர வளர சிகரெட் பீருக்கு முன்னேறி விட்டது. கௌரி பேசுவது இல்லையாம் வருத்தப்படுவான். அப்பா அம்மா இறந்ததும் நிஜத்தில் மனம் பிசகி ஒருமாதிரி ஆகிவிட்டராம். இப்போது அவனும், அப்பாவும் சேர்ந்து இருக்கிறார்கள். தம்பிகள் ஊரில் இருக்கிறார்கள். முன்னர் போல பேச்சில் நளி அடிப்பதும் இல்லை, புரிவது போல அவன் பேசுவதுமில்லை. பின்னர் அவனைப் பார்க்கவேயில்லை.

காலை எட்டறை மணி, ஒழுகினசேரி பேருந்து நிறுத்தத்தில் அழகேசன் கடை பேப்பரை நான் படித்திருக்க கூடாது. ‘அடையாளம் தெரியாத வாலிபர் நாகர்கோவில் பூங்காவில் விஷம் அருந்தி தற்கொலை’ கூடவே இருந்த புகைப்படம் எங்கள் கடுக்கரையின், ராஜுவின் முகம். வெறும் முகமல்ல நியாபகங்கள்.

கற்றது

ஸிந்துஜா

கிருத்திகா ஆறு மணிக்கு எழுந்து பாத்ரூம் சென்று விட்டு அவள் அறைக்குள் வந்த போது டிரஸ்ஸிங் டேபிள் மீது பால் டம்ளர் இருந்தது. அதன் மீது பால் ஆறி விடாமல் இருக்க ஒரு சிறிய தட்டு மூடியிருந்தது. இந்த வீட்டுக்கு அவள் திருமணமாகி வந்து கிட்டத் தட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன. ‘தினமும் இப்படிச் செய்யாதீர்கள்’ என்று அவளது மாமியாரிடம் பல விதங்களில் அவள் மன்றாடியும் மாமியார் மசியவில்லை. தன் வார்த்தைகள் அலுப்புற்றுத் தம் நிறத்தை இழந்து விட்டதை அறிந்த ஒரு நாளில் அவள் தனது மன்றாடலை நிறுத்தி விட்டாள்.

கிருத்திகா பாலைக் குடித்து விட்டு கொல்லைப்புறம் சென்று கிணற்றடியில் ஏற்கனவே கிடந்த பாத்திரங்களுடன் பால் டம்ளரையும் மூடியையும் போட்டாள். உள்ளே வந்த போது அந்த நேரத்துக்கு சமையற்கட்டிலிருந்து வரும் பாத்திரங்களின் கடபுடா சத்தம் கேட்கவில்லை. கூடத்தில் அவள் மாமியார் லலிதா உட்கார்ந்திருந்தாள். கிருத்திகாவைப் பார்த்ததும் கையிலிருந்த தினமணியைக் கீழே போட்டு விட்டு “மறுபடியும் காஸ் விலையை நூறு ரூபாய் ஏத்திட்டான்” என்றாள்.

“காஸ் அடுப்பு இலவசம்னு கொடுத்துட்டு காஸ் விலையா அதை திரும்ப எடுத்துண்டுடறா இல்லே?” என்று கிருத்திகா கேட்டாள்.

“கெட்டிக்காராதான்” என்று உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தாள் லலிதா. “இன்னிக்கி அடுப்பைக் கட்டிண்டு அழவேண்டாம். காஸ் மிச்சம். பதினோரு மணிக்குதானே உன் பாட்டு டீச்சராத்து கிருகப் பிரவேசம்?”

ஆமென்று கிருத்திகா தலையை ஆட்டினாள். பாட்டு டீச்சர் கிருத்திகாவின் வீட்டுக்கு வந்து பத்திரிகை கொடுத்த போது லலிதாவைப் பார்த்து “நீங்க கண்டிப்பா வரணும்” என்று நாலைந்து தடவை வற்புறுத்தி அழைத்து விட்டுப் போனாள் .

“எப்ப கிளம்பலாம்?” என்று லலிதா கேட்டாள்.

“கார்த்தாலே டிபனுக்கே அங்க வந்துடணும்னு படிச்சுப் படிச்சு சொல்லிட்டுப் போனாம்மா!”

“அப்ப, எட்டு எட்டரைக்குப் போனா சரியாயிருக்கும். என்ன, கொஞ்சம் அவதி அவதின்னு குளிச்சு ஸ்வாமி நமஸ்காரம் பண்ணிட்டுக் கிளம்பணும். நான் போய் முதல்லே குளிச்சிடறேன்”‘ என்று சொல்லி விட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் லலிதா வீட்டின் உள்ளே சென்றாள். அரை மணியில் கிருத்திகாவும் தயாராகி விட்டாள். கூடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு முந்தின இரவு விவாதம் என்ற பெயரில் அர்னாப் போட்ட கூச்சலை மறு ஒளிபரப்பிக் கொண்டிருந்த டி.வி.யை மியூட்டில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். லலிதா
அவளுடைய அறையிலிருந்து இன்னும் வெளி வரவில்லை. மேக்கப்பின் கடைசிக் கட்டத்தில் இருப்பாளாய் இருக்கும் !

“கிருத்திகா, ரெடியா? ” என்று லலிதா அவள் அறையிலிருந்து குரல் கொடுத்தாள்.

“நான் ரெடிம்மா” என்று கூடத்திலிருந்து சொன்னாள் கிருத்திகா. அவள் அங்கே முன்னேயே வந்து காத்திருப்பதைத் தன் பதிலில் காட்டவில்லை.

லலிதா அறையிலிருந்து வெளியே வந்த போது கிருத்திகா அவளையே கண் கொட்டாமல் ஒரு நிமிஷம் பார்த்தாள். இவளைப் பார்த்தால் ஐம்பத்திரெண்டு வயதுக்காரி என்று யாராவது சொல்வார்களா? அரைமணி நேரத்துக்கு மேல் எடுத்துக் கொண்ட அலங்காரம் அவளது வயதில் பத்து வருஷத்தைக் குறைத்து விட்டது. தலையில் ஓரிரு இடங்களில் மூக்கை நீட்டிய வெள்ளையை நிறம் மாற்றி விட்டிருந்தாள். இளமையாகத் தெரிய அவள் மேற்கொண்ட முயற்சிகள் வீணாகி விடவில்லை என்று கிருத்திகாவுக்குத் தோன்றியது. எடுப்பான முகம். ஓரளவு சதை போட்ட பருமனை அவளது உயரம் வெளிக்காட்டாமல் தடுத்தாட் கொண்டு விட்டது. கிருத்திகா இந்த வீட்டில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே சின்ன வயசில் அவள் மாமியார் அழகியாக நடமாடியதைப் பற்றி எல்லோரும் சொன்னார்கள். அந்த வயதில் அவள் பல உள்ளங்களை ஏங்க வைத்திருக்கக்கூடும். அவையெல்லாம் இன்னும் தனது மாமியார் மனதில் குடி கொண்டிருக்கின்றனவா?

தன் சிந்தனை செல்லும் வழியைத் தடுத்து கிருத்திகா தலையை உதறிக் கொண்டாள்.

“எதுக்கு அப்படி மலைச்சுப் போய் நிக்கறே? டிரஸ் மேட்சிங்கா இல்லையா? பொட்டு, மைன்னு ஏதாவது ஈசிண்டு இருக்கா?” என்று கேட்டாள் லலிதா.

“நான் உங்களோட வரணுமான்னு யோசிச்சிண்டு இருக்கேன்” என்று கிருத்திகா மாமியாரைப் பார்த்தாள்.

“என்னது?”

“என் கண்ணே பட்டுடும் போலிருக்கு” என்று லலிதாவிடம் சொன்னாள்.

லலிதா பெருமையுடன் தன்னை ஒரு முறை பார்த்தபடி “போதும். ரொம்பதான் காலை வாராதே. நாழியாச்சு, கிளம்பலாமா?” என்று கிருத்திகா அருகில் வந்து அவள் சூடியிருந்த மல்லிகைச் சரத்தைச் சரி செய்தாள்.

அவர்கள் விசேஷம் நடக்கும் வீட்டை அடைந்தார்கள். வாசலில் இருந்த கேட்டுக்கு முன்னால் செம்மண் தெருவில் சிறு பையன்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்த போது வாசலின் இருபுறமும் சிறிய வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. மாவிலைகளும் புஷ்பங்களும் நிரம்பிய தோரணம் வாசலின் இரு கதவுகளுக்கு இடையே தொங்கிக் கொண்டிருந்தது. .அங்கிருந்த ஒரு சிறுவன் “விடும்மா விடும்மா” என்று தன் தாயின் கையிலிருந்து விடுதலை பெற முண்டிக் கொண்டிருந்தான். அவனது அம்மா “அதோ அந்தக் கேட்டுக்கு வெளியிலே கறுப்புக் கோடு இருக்கில்லே. அதைத் தாண்டிப் போய் நீ விளையாடினே உன்னைப் பெலி வச்சிருவேன்” என்று கடுமையான குரலில் எச்சரித்து விடுவித்தாள். இதே அளவு கடுமை கலந்த எச்சரிக்கைக் குரலை அன்றொரு நாள் லட்சுமணன் கேட்டிருந்தால் கோட்டை மீறி இருக்க மாட்டான் என்று கிருத்திகா சிரித்துக் கொண்டே உள்ளே சென்றாள். நாதஸ்வரக்காரர் கல்யாண வசந்தாவில் ராக லோலுடையை இழைத்துக் கொண்டிருந்தார்.

“வாங்கோ, வாங்கோ” என்று அவர்களை வரவேற்கும் குரல் கேட்டது. பாட்டு டீச்சரின் பெண். கிருத்திகா அவளைப் பார்த்து “ஹாய் பத்மா!” என்றாள்.

பிறகு அவளிடம் “இவா என் மாமியார்.” என்று அறிமுகப்படுத்தினாள்.

பத்மா லலிதாவைப் பார்த்துப் புன்னகையுடன் கைகூப்பினாள்.

அப்போது “ஏய் கிருத்தி” என்று குரல் கேட்டது. கிருத்திகா. திரும்பிப் பார்த்தாள். விமலா. அவளது பால்ய சிநேகிதி. இருவரும் சேர்ந்துதான் பாட்டு டீச்சரிடம் கற்றுக் கொண்டார்கள்.

விமலாவின் கையைப் பிடித்துக் குலுக்கினாள் கிருத்திகா. “ஹலோ விமலா அக்கா!” என்று பத்மாவும் அவளைப் பார்த்துச் சிரித்தாள்.

விமலா லலிதாவைப் பார்த்து ” மாமி,எப்படியிருக்கேள்?” என்று கை குவித்துக் கேட்டாள்.

“நன்னாயிருக்கேன். நீ எப்படியிருக்கே?” என்று கேட்டாள் லலிதா.

“ஐ’ம் குட் . ஆனா மாமி, நீங்க உங்க இளமையின் ரகசியம் என்னன்னு இன்னிக்கி சொல்லியே ஆகணும்” என்றாள் விமலா.

“சும்மா கிண்டல் பண்ணாதே” என்றாள் லலிதா சிரித்தபடி.

“நிஜமாத்தான் மாமி. யூ ஆர் லுக்கிங் பியூட்டிஃபுல்.”

“சரி போ. உனக்கு ஒரு தாங்க்ஸ் தரேன்” என்று புன்னகை செய்தாள் லலிதா. ..

விமலா கிருத்திகாவிடம் “உன்னோட புடவை ரொம்ப சூப்பரா இருக்கே. எங்கே வாங்கினே? த்ரெட் போட்டு நெளி டிசைன்லே அழகாப் பண்ணியிருக்கான். எப்படித்தான் உனக்குன்னு பொறுக்கி எடுத்துண்டு வரியோ?” என்றாள்.

“சபையர் ப்ளூ கலரும் உங்க உடம்புக் கலருக்கு ரொம்பவே எடுப்பா மேட்சிங்கா இருக்கு அக்கா” என்றாள் பத்மா.

“தாங்க்ஸ். மல்லேஸ்வரம் நல்லிலதான் வாங்கினேன்” என்றாள் கிருத்திகா. “எவ்வளவு விலை இருக்கும்னு நினைக்கிறே விமலா?”

“அஞ்சு, இல்லே ஆறு?” என்று கேட்டாள் விமலா.

“இல்லே. மூவாயிரத்து ஐநூறு.”

“ஏய் சும்மா டூப் விடாதேடி” என்று நம்ப முடியாதவளாகப் புடவையை விமலா இன்னொரு முறை பார்த்தாள்.

“நிஜமா விமலா. காட் ப்ராமிஸ்!”.

விமலா லலிதாவைப் பார்த்து “மாமி, உங்க மாட்டுப் பொண்ணு அழகு மட்டுமில்லே. ரொம்பக் கெட்டிக்காரியும் கூட” என்றாள்.

லலிதா புன்முறுவல் பூத்தாள்.

“முதல்லே டிபன் சாப்பிட்ருங்கோ. அப்புறம் ஹாலுக்குப் போகலாம்” என்று பத்மா அவர்களை டைனிங் ஹாலுக்குக் கூட்டிக் கொண்டு போனாள். லலிதாவுக்கும் கிருத்திகாவுக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டாள் விமலா.

“விமலா, நீ மட்டும் தனியா வந்திருக்கே. எங்கே கோபி?” என்று கிருத்திகா கேட்டாள்
.
“அவருக்கு பாஸ் சிகாகோலேதானே? கார்த்தாலே ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரைக்கும் மீட்டிங். அதை முடிச்சிட்டு வரேன் போன்னு என்னை அனுப்பிச்சிட்டார்” என்றாள் விமலா.

பிறகு அவள் லலிதாவிடம் “எங்கே மாமாவும் கிருத்தி ஆத்துக்காரரும் வரலே?” என்று கேட்டாள்.

லலிதா “மாமா அவர் சிநேகிதர் பையன் கல்யாணம்னு திருச்சிக்குப் போயிருக்கார். இன்னிக்கும் நாளைக்கும் நல்ல முகூர்த்த நாளாமே ராஜா நாளைக்குத்தான் டெல்லிலேர்ந்து வரான்” என்றாள்.

“இந்த ஃபங்க்ஷன் இல்லேன்னா நாங்க ரெண்டு பேரும் திருச்சிக்கும் டெல்லிக்கும் போயிருப்போம்” என்று சிரித்தாள் கிருத்திகா.

அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு வந்த ஒரு பெண்மணி “அப்படி நாங்க உங்களைப் போக விட்டுடுவோமா?” என்று அவர்களுக்கு எதிரில் வந்து நின்றாள்.

“என்ன சித்தி, அக்காவோட கிருகப்பிரவேசத்துக்கு புதுசா மூக்குத்தி வாங்கிப் போட்டுண்டேளா?” என்றாள் விமலா. வாயாடி.

“ஆமா. இந்த அரதப் பழசை நீதான் மெச்சிக்கணும்” என்று பாட்டு டீச்சரின் தங்கை சங்கரி கூறினாள். பிறகு கிருத்திகாவைப் பார்த்து “எப்படி இருக்கே கிருத்தி? உன்னைப் பாத்து நாலஞ்சு மாசம் இருக்குமா? இந்த கல் வச்ச நெக்லஸ் உன்னைத் தூக்கலா காமிக்கிறதே ! இதை விட்டுட்டு என் தேஞ்ச மூக்குத்தியைப் புகழறது பார் இந்தப் போக்கிரி” என்று செல்லமாக விமலாவைத் திட்டினாள்.

“கிருத்தியோட அழகைப் புகழறதுக்கு எனக்கு ஒரு நாள் போறாது!” என்றாள் விமலா. “அது இருக்கட்டும். தங்கையோட நெக்லஸைப் பத்தி இவ்வளவு விஜாரிக்கிறேள். அவ அக்காவைப் பார்த்து ஒரு வார்த்தை கூடக் கேக்கலையே?”

“கிருத்தியோட அக்காவா?” என்று சங்கரி சற்றுக் குழம்பினாற் போல நின்றாள்.அவள் பார்வை அங்குமிங்கும் அலைந்து லலிதாவின் மேல் நின்றது.

விமலா “இவாளைத்தான் சொல்றேன்” என்றாள்.

சித்தி லலிதாவைப் பார்த்து “சாரி, நான் இதுக்கு முன்னாலே உங்களைப் பாத்ததில்லே. நீங்களும் இந்த ஊர்லேதான் இருக்கேளா? கிருத்தி சொன்னதே இல்லையே?” என்றாள்.

பத்மா பொறுக்க முடியாமல் சிரித்து விட்டாள்.

“சீ சனியனே, என்ன விளையாட்டு இது?” என்று லலிதா பொய்க் கோபத்துடன் விமலாவைத் திட்டினாள். சங்கரியிடம் கிருத்திகா புன்னகையுடன் “அவா என் மாமியார்” என்றாள்.

“அப்படியா?”என்று திகைப்பு தழுவிய கண்களுடன் சங்கரி லலிதாவைப் பார்த்தாள்.

“அப்ப நீங்க கிருத்தி வயசானவ மாதிரி இருக்கான்னு சொல்றேள்?” என்று விமலா சங்கரியைச் சீண்டினாள்.

“அடச்சீ, சும்மாயிரு. குழந்தையையும் கிள்ளி விட்டுக் கிழவன் தொட்டிலையும் ஆட்டினானாம்” என்றாள் லலிதா விமலாவிடம்.

“”முதல்லே ஒரு நிமிஷம் நம்பிட்டேன். ஆனா இப்ப தெரியறதே கொஞ்ச வயசு வித்தியாசம்.” என்றாள் சங்கரி சமாளித்துக் கொண்டு. “இது இருக்கே, ரொம்பப் பொல்லாதது. சரி. நா வரேன். சாப்பிட்டு விட்டு ஹாலுக்கு வாங்கோ” என்று சிரித்தபடி நகர்ந்தாள். பத்மாவும் அவளுடன் சென்றாள்.

அப்போது விமலாவின் கணவன் கோபி அவர்கள் இருக்குமிடத்துக்கு வந்தான்.

“வா கோபி, சௌக்கியமா? இங்கே உக்காரு” என்று லலிதா தனக்கு அருகில் இருந்த நாற்காலியைக் காட்டினாள்.

“இல்லே, எனக்கு ஒண்ணும் சாப்பிட வேண்டாம். நீங்க சாப்பிட்டு முடிச்சப்புறம் காப்பி குடிக்கிறப்போ நானும் எடுத்துக்கறேன்” என்று அவர்கள் எதிரே நின்று கொண்டான்.

மற்ற மூவரும் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினார்கள். பதார்த்தங்களின் வாசனை நாசியையும், ஆசை நாக்கையும் தூண்டி விட்டன.

“கேசரி ரொம்ப நன்னாயிருக்கில்லே? யார் சமையக்காராளாம்?” என்று கேட்டாள் லலிதா.

“எல்லாம் நம்ம மல்லேஸ்வரம் ரக்ஷிதாதான் ” என்றாள் விமலா.

“எப்பவும் அவா ஸ்டாண்டர்ட் மெயின்டெய்ன் பண்றா இல்லே?” என்று கேட்டாள் லலிதா.

“ஆனா கேசரிக்குக் கிருத்தியை யாரும் பீட் அடிச்சுக்க முடியாது” என்றான் கோபி.

லலிதா சாப்பிடுவதை நிறுத்தி விட்டுக் கோபியைப் பார்த்தாள்.

“சும்மா கிண்டல் பண்ணாதீங்கோ கோபி,” என்றாள் கிருத்திகா.

“இதிலே என்ன கிண்டலும் கேலியும்? நன்னாப் பண்ணினான்னா நன்னா இருக்குன்னுதானே சொல்லணும் !” என்ற கோபி லலிதாவைப் பார்த்து “ஒரு நா நானும் விமலாவும் ராஜாவைப் பார்க்கலாம்னு உங்காத்துக்கு வந்தோம். அப்ப நீங்களும் மாமாவும் ஏதோ விசேஷம்னு மதுரைக்குப் போயிருந்தேள். பொழுது போகாம போராடிக்கிறதேன்னு பண்ணினதா கேசரி கொண்டு வந்து கொடுத்தா அன்னிக்கி. அந்த கேசரி இன்னும் நாக்கிலே நிக்கறது. சூப்பர்ப்” என்றான். விமலா லலிதாவைப் பார்த்தாள். அவள் சாப்பிடுவதில் கவனமாக இருந்தாள்.

அப்போது ஒரு பரிசாரகர் “ஏதாவது வேணுமா?கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கோ” என்று சொல்லியபடி அவர்களைக் கடந்தார்.

லலிதா அவரிடம் “மாமா, இன்னும் கொஞ்சம் கேசரி போடுங்கோ” என்றாள்.

“ஓ, திவ்யமா” என்று அவர் போய்க் கேசரியை எடுத்துக் கொண்டு வந்து அவள் இலையில் போட்டார்.

அவர்கள் காப்பி குடித்து விட்டுப் பூஜை நடக்கும் இடத்துக்குச் சென்றார்கள். புகைக்கு நடுவே சாஸ்திரிகளும், வந்திருந்த ஜனமும் இரைச்சலை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். பாதிப் பேர் உள்ளேயும் மீதிப் பேர் வெளியேயும் நின்றும் உட்கார்ந்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். சந்தனம், குங்குமம், ஊதுபத்தி, சாம்பிராணி மணங்களுக்குப் போட்டியாக இன்டிமேட்டும், சானலும் ஹாலை ஊடுருவியிருந்தன.

பூஜை முடிவதற்கு பனிரெண்டு மணியாகி விட்டது. பாட்டு டீச்சரும் அவள் கணவரும் ஹாலில் அமர்ந்தவர்களை வரவேற்றபடி வந்தார்கள். பாட்டு டீச்சர் கிருத்தியும் லலிதாவும் உட்கார்ந்திருந்த இடத்துக்கு வந்த போது லலிதாவைப் பார்த்து அகலமாகக் கண்களை விரித்துத் தன்
மகிழ்ச்சியைக் காண்பித்தாள். அவர்களருகில் வந்து லலிதாவின் கையைப் பிடித்துக் கொண்டு “பெரியவாளா வந்து நீங்க ஆசிர்வாதம் பண்ணினதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.

“நாங்கதான் உங்களுக்கு தேங்க் பண்ணனும். எல்லாம் இவ்வளவு ஜோரா ஏற்பாடு பண்ணி நாக்குக்கு ருசியாப் போட்டு அமர்க்களம் பண்ணிட்டேள். வீடு பாக்க ரொம்ப அழகாயிருக்கு” என்றாள் லலிதா. கையில் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருளைப் பாட்டு டீச்சரிடம் கொடுத்தாள்.

அதை வாங்கிக் கொண்ட டீச்சர் கிருத்திகாவுக்கு இடது பக்கத்திலிருந்த பெண்மணியிடம் “அக்கா, இவ என் ஸ்டூடன்ட். கிருத்திகான்னு பேரு. இவளுக்குக் குரல்னா அப்படி ஒரு குரல் ! மேடையேறிப் பாடினா இன்னிக்கி ஃபேமஸா இருக்கற இவ வயசுப் பாடகில்லாம் ரொம்ப தூரம் பின்னாடி போய்தான் நிக்கணும். ஆனா மேடையேற மாட்டேன்னு அப்படி ஒரு பிடிவாதம். மியூசிக்கோட நுணுக்கத்தையெல்லாம் கத்துக்கணும்னு ரிசர்ச் ஸ்காலரா ஆயிண்டிருக்கா,” என்று குரலில் பெருமையும் ஏக்கமும் வழியச் சொன்னாள். கிருத்திகாவிடம் “இவா என் நாத்தனார். கோமளான்னு பேர். கோலார்லே பாத்துக்க யாரும் இல்லாத வயசான பொம்மனாட்டிகளுக்குன்னு ஒரு ஆச்ரமம் நடத்திண்டு வரா” என்றாள்.

அந்த வயதான பெண்மணியின் முகத்தில் சாந்தம் நிலவியிருந்தது. பாட்டு டீச்சர் சொன்னதைக் கேட்டு சிரித்த போது அவள் கண்களும் சேர்ந்து சிரித்தன. கிருத்திகா அந்த அம்மாளைப் பார்த்துக் கைகூப்பி நமஸ்கரித்தாள்.

“மனுஷாளுக்குக் கடவுள் கொடுத்திருக்கிற பலஹீனங்கள்லே புகழ்ச்சியும் ஒண்ணுதானே? புகழறவா புகழப்படறவா ரெண்டு பேருமே ஒரு தராசோட ரெண்டு தட்டு மாதிரிதான். இந்த சின்ன வயசிலே உனக்கு இப்படித் தெளிவா இருக்கணும்னு தோணறதே பெரிய விஷயம்னா ! உன்னைப் பாத்ததிலேர்ந்து இவ்வளவு களையா இருக்கே இந்தப் பொண்ணுன்னு நினைச்சிண்டே இருந்தேன்..அக அழகு முக அழகுன்னு பெரியவா தெரியாமலா சொன்னா?” என்று அந்த அம்மாள்
கிருத்திகாவைப் பார்த்துச் சொன்னாள்.

கூச்சத்தில் கிருத்திகா நெளிந்து நின்றாள்..அவள் பார்வை விமலா மீது விழுந்தது. விமலா அந்த அம்மாளையும் லலிதாவையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

லலிதா எழுந்து கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்தபடி “அப்ப நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம்” என்றாள் பாட்டு டீச்சரிடம்.

டீச்சர் “இருந்து சாப்பிட்டு விட்டு வெத்தலை பாக்கு வாங்கிண்டு போங்கோ. .அடி பத்மா, மாமியை டைனிங் ஹாலுக்கு கூட்டிண்டு போ” என்று பெண்ணைக் கூப்பிட்டாள்.

அவர்கள் வீட்டுக்குத் திரும்பும் வழியில் “ஒரே அசட்டுப் பிசட்டுக்கூட்டம். இல்லே?” என்றாள் லலிதா.

கிருத்திகாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஒருத்தியாவது பாக்கறபடி இல்லே.ஒரே பங்கரை மூஞ்சி.”

இவளுக்கு என்ன வந்து விட்டது என்று கிருத்திகா ஆச்சரியப்பட்டாள்.

“விமலா ஒருத்திதான் பேசினா கேக்கறபடி இருந்தது. மத்ததெல்லாம் ஏண்டா வாயைத் திறக்கிறதுன்னு தோணிடுத்து” என்றாள் லலிதா. அவள் குரலில் லேசான ஆங்காரம் தென்பட்டது.

ஏதாவது பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டவளாக “விமலா எப்பவுமே ரொம்பக் கெட்டிக்காரி” என்றாள் கிருத்திகா.

லலிதா “ஆனா அவ ஆம்படையான்தான் கொஞ்சம் தத்துப் பித்து. ‘நான் சாப்பிடலே, நின்னுண்டு இருக்கேன்’னு சொல்லிட்டு அங்கையும் இங்கையும் பொண்களை ஒரக் கண்ணாலே பாத்து அசடு வழிஞ்சிண்டு இருந்தான். நீ கவனிச்சயோ?” என்று கேட்டாள்.

கிருத்திகாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. கோபி இந்த மாதிரி என்று எப்போது லலிதா கவனித்தாள்? தனக்குத் தெரிந்த வரை கோபி அப்படிநடந்து கொள்ளவில்லையே என்று கிருத்திகாவுக்குத் தோன்றியது. ஆனால் இப்போது ஒன்றும் பேசாமல் இருப்பதுதான் உத்தமம். வீட்டை அடைந்ததும் திடீரென்று லலிதா “எனக்குத் தலையை வலிக்கிறது. போய்ப் படுத்துக்கறேன்” என்று அவளறையை நோக்கிச் சென்றாள்

நாலைந்து நாள் போயிருக்கும். கடைத் தெருவில் மாலையில் எதிர்பாராவிதமாக விமலாவைக் கிருத்திகா சந்தித்தாள்.

“என்ன இது ஒண்டியா? கர்ணனோட கவசகுண்டலம் மாதிரி எப்பவும் மாமியோரடன்னா ஒட்டிண்டு வருவே நீ?” என்று சிரித்தாள் விமலா. “லலிதா மாமி எப்படி இருக்கா?”

“கொஞ்சம் உடம்பு சரியில்லேன்னு ஆத்துலேதான் இருக்கா” என்றாள் கிருத்திகா.

” உடம்பா? மனசா?”

கிருத்திகா ஆச்சரியத்துடன் சிநேகிதியைப் பார்த்தாள்.

“எப்போலேர்ந்து சரியில்லே? பாட்டு டீச்சரராத்துலே பாத்தோமே அன்னிலேர்ந்தா?” என்று கேட்டாள் விமலா.

கிருத்திகா பதில் எதுவும் சொல்லவில்லை.

“அன்னிக்கே எனக்குத் தெரிஞ்சது.வந்தவா போனவா எல்லாரும் உனக்கு வாயாலே பூச்சூட்டி விட்டுண்டு போறச்சேயே நினைச்சேன்.”

“என்னன்னு?” என்றாள் கிருத்திகா.

விமலா பதில் சொல்லவில்லை.

“அன்னிக்கி வந்தவாளைப் பத்தி என்னென்ன கமெண்ட் எல்லாம் அடிச்சா உன்னோட மாமியார்?”

“உன்னை ஓகோ ஓகோன்னு புகழ்ந்து தள்ளிட்டா” என்று கிருத்திகா விமலாவைப் பார்த்து சிரித்தாள்.

“கோபியைப் பிடிச்சிருக்காதே. ஏன் பாட்டு டீச்சர், அவ சொந்தக்காரா, தெரிஞ்சவா பத்தியெல்லாம் புகழ்ந்தா தள்ளினா?” என்று கேட்டாள் விமலா.

கிருத்திகாவுக்கு ஆச்சரியம் தாளவில்லை. இவள் ஏதோ லலிதா பேசும் போது கூடவே இருந்தவள் மாதிரி அல்லவா எல்லாவற்றையும் பிட்டுப் பிட்டு வைக்கிறாள் !

“கிருத்தி! உனக்குக் கல்யாணமான இந்த ஆறு மாசத்தில் உங்க மாமியாரோட எத்தனை விசேஷத்துக்குப் போயிருப்பே?”

“ஏன், நிறைய விசேஷத்துக்குப் போயிருக்கேன்!” என்றாள் கிருத்திகா.

“உங்காத்து விசேஷத்துக்கு?” என்று மேலும் கேட்டாள் விமலா.

“ரெண்டு தடவையோ என்னமோ போயிருக்கேன். ”

“வெளி விசேஷம்னு உனக்குத் தெரிஞ்சவான்னு பாட்டு டீச்சராத்து விசேஷத்துக்கு வந்ததுதான் ஃபர்ஸ்ட்.டைம். இல்லியா?” என்று கேட்டாள் விமலா..

“ஆமா.”

“அதனாலதான்” என்று சொல்லியபடியே கிருத்திகாவின் கையைப் பற்றிக் கொண்டாள் விமலா.

கிருத்திகாவுக்கு ஏதோ புரிவது போலிருந்தது.

“இப்ப உன் மேலே கோபமா, மனஸ்தாபமா இருக்காளா உன்னோட மாமியார்?”

“அப்படின்னு காட்டிக்கலே .ஆனா கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கா” என்றாள் கிருத்திகா. ” இதனால எனக்கு ஒரு ரிலீஃப் கிடைச்சது.”

“அதென்ன கண்ராவி?” என்று ஆச்சரியப்பட்டாள் விமலா.

“டெய்லி கார்த்தாலே என் ரூம்லே வந்து பால் கொடுத்துட்டுப் போவா. நான் வேண்டாம் வேண்டாம்னு அடிச்சுண்டாலும் கேக்க மாட்டா. .இப்ப அதை நிறுத்திட்டா” என்றாள் கிருத்திகா.

விமலா அதைக் கேட்டுச் சிரித்தாள்.

இது நடந்த பின் வந்த வெள்ளிக் கிழமையன்று கிருத்திகாவின் வீட்டில் சத்தியநாராயணா பூஜா நடந்தது. நெருங்கிய சொந்தங்களும், பக்கத்து வீடுகளில் இருந்த சில வயதான சுமங்கலிகளும் வந்திருந்தார்கள். பூஜை பத்து மணிக்கு ஆரம்பித்துப் பனிரெண்டரைக்கு முடிந்தது. வந்திருந்தவர்கள் பூஜையை திருப்திகரமாக நடத்தியதாய் லலிதாவைப் பாராட்டினார்கள். பக்கத்து வீட்டுக் கல்யாணி மாமி, லலிதாவிடம் அவள் அணிந்திருந்த பட்டுப் புடவையைப் பார்த்து “மடிசார்லே மாமி அழகா இருக்காளா, இல்லே மாமி கட்டிண்டு இருக்கறதாலே மடிசார் அழகா இருக்கா?” என்று சொன்னதைக் கேட்டு லலிதா மற்றவர்களுடன் சேர்ந்து சிரித்தாள்.

“எங்கே மாட்டுப் பொண்ணைக் காணோம்?” என்று மங்களா மாமி கேட்டாள் .

அப்போது சமையல் அறையிலிருந்து கிருத்திகா வந்தாள். மஞ்சள் வாயில் புடவையும், அதே நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள்.

“இன்னிக்கி பூஜை சாப்பாடு உன் கைப்பாகமா?” என்று மங்களா கேட்டாள்.

“கேலி பண்றேளா ! எல்லாம் அம்மா கை ஜாலம். கல்யாணத்திலே எல்லாம் நளபாகமா பண்றவருக்கு ஒரு எடுபிடி இருப்பார் இல்லியா? அதுமாதிரி நான். அம்மாவோடது பெரிய கை. அனுபவம் ஓடி ஓடி அந்தத் தழும்பு ஏறியிருக்கிற கை. நானெல்லாம் கத்துக்குட்டி. அம்மா
கிட்டேர்ந்து கத்துக்க எவ்வளவோ இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா கத்துண்டுடுவேன்” என்று சிரித்தாள் கிருத்திகா. “சமையல்லே உப்பு ஓஒரப்பு குறைச்சோ, கூடவோ இருந்தா என்னைத் திட்டுங்கோ.”

“தேவலையே! மாட்டுப் பொண்ணை நன்னா தயார் பண்ணிருக்கே லலிதா” என்று கிருத்திகாவின் மாமனாரின் சித்தி சொன்னாள்.

“நீங்கள்லாம் எங்களைத் தயார் பண்ணலையா? அது மாதிரிதான்” என்றாள் லலிதா புன்னகையுடன்.

எல்லோரும் சாப்பிட்டு விட்டுக் கூடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது சமையலறையில் பாத்திரங்களை ஒழித்து வைத்துக் கொண்டிருந்த கிருத்திகாவிடம் அவளுடைய அத்தை வந்தாள். மிக மெல்லிய குரலில் “ஏண்டி உனக்குக் கட்டிக்க வேறே புடவையே கிடைக்கலையா இன்னிக்கின்னு பாத்து?” என்று கேட்டாள்.

“ஏன் அத்தை? இந்தப் புடவைக்கு என்ன? அழகாய்த்தானே இருக்கு. ரவிக்கை கூட ரொம்ப மேட்ச்சிங்கா இருக்கே!” என்றாள்.

“உங்காத்து வேலைக்காரி கூட இதை விடப் பளிச்சுன்னு கட்டிண்டிருக்கா” என்றாள் அத்தை மனத்தாங்கலுடன்.

அப்போது அங்கே யாரோ வர பேச்சு நின்று விட்டது.

வந்தவர்கள் எல்லோரும் கிளம்பிப் போன பின் கூடத்தில் படுத்துக் கொண்டிருந்த மாமியார் கிருத்திகாவைக் கூப்பிட்டாள். அவளருகே கிருத்திகா சென்றாள்.

“இன்னிக்கி எல்லாம் நன்னா நடந்தது இல்லே?” என்று மாமியார் கேட்டாள்.

“ஆமா. எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். அதுவும் அவா கிளம்பறச்சே நீங்க ஒரு கிஃப்ட் பாக்கெட் வேறே கொடுத்து அசர அடிச்சிட்டேள்” என்று சிரித்தாள் கிருத்திகா.

“ஆமா. வருஷத்திலே ஒரு நாள் கொடுக்கறோம். எல்லோரும் சந்தோஷமா இருந்தா சரி” என்றாள் மாமியார்.

மறுநாள் காலை கிருத்திகா ஆறு மணிக்கு எழுந்து பாத்ரூம் சென்று விட்டு அவள் அறைக்குள் வந்த போது டிரஸ்ஸிங் டேபிள் மீது பால் டம்ளர் இருந்தது. அதன் மீது பால் ஆறி விடாமல் இருக்க ஒரு சிறிய தட்டு மூடியிருந்தது.

.

மிலியின் சகோதரன்

கலைச்செல்வி

அன்று மோகன்தாஸ் காந்தியை கைது செய்திருந்தார்கள். 1908 ஆம் ஆண்டின் அந்த ஜனவரி பத்தாம் நாளன்று ஜோஹானஸ்பர்க்கின் ஃபோர்ட் பிரிசன் சிறையில் அவரை உடைகளை களையச்செய்து உடல் எடை பார்க்கப்பட்டு அவரது விரல் ரேகைகள் பதியப்பட்டன. பிறகு அவருக்கு சிறைக்கான உடைகள் அளிக்கப்பட்டபோது பொழுது நகர்ந்து மாலையாகியிருந்தது. இரவு உணவுக்காக எட்டு அவுன்ஸ் ரொட்டி கொடுத்து அவரை சிறையறைக்கு அனுப்பியபோது இலண்டனில் சட்டம் பயின்ற அந்த பாரிஸ்டருக்கு அது முன்பின் அறியாத புதிய அனுபவமாகவே இருந்தது. அவரை தவிர அவ்வறையில் பனிரெண்டு கைதிகள் இருந்தனர். அவர் கையோடு எடுத்துச்சென்றிருந்த பகவத்கீதையையும் டால்ஸ்டாய், சாக்ரடீஸ் ரஸ்கின் ஆகியோரின் புத்தகங்களையும் தம்மருகே வைத்துக் கொண்டார். இரவுணவுக்கு பின் மரப்பலகை படுக்கையில் படுத்துக் கொண்டார்.

டிரான்ஸ்வால் அரசாங்கம் கொண்டு வந்த புதிய ஏசியாட்டிக் அவசரச்சட்டத்தின்படி அங்கு வசிக்கும் இந்தியர்கள் அரசாங்கத்திடம் புதிதாக பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்பதிவுச்சான்றிதழை எந்நேரமும் தம்மோடு வைத்திருக்க வேண்டும் என்றும் பதிவுச்சான்றிதழ் இல்லாதவர்கள் கைது செய்யப்படவோ டிரான்ஸ்வாலுக்கு வெளியே அனுப்பப்படவோ வேண்டியிருக்கும் என்ற நிலைக்கு எதிராக செப்டம்பர் 11 ஆம் தேதி எம்பயர் தியேட்டரில் தெளிவான, தீவிரமாக, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால், அவரசச்சட்டத்தின் கசப்பான, கொடுங்கோலான பிரிட்டிஷ் இயல்புகளுக்கு மாறான உத்தரவுகளுக்கு கீழ்படிவதை விட டிரான்ஸ்வாலிலிருந்த ஒவ்வொரு இந்தியரும் சிறைவாசத்துக்கு தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று கூறியதன் பின்னணியில் நடந்த தொடர் போராட்டம் மோகன்தாஸுக்கு ஏராளமான ஆதரவாளர்களையும் சிறை தண்டனையும் பெற்று தந்திருந்தது.

நேட்டாலிலும் டிரான்ஸ்வாலிலும் அவர் கைதானதையடுத்து பல கடைகள் மூடப்பட்டன. அவரது ஐரோப்பிய நண்பர்கள் அவருக்கு ஆதரவாக கூட்டங்கள் போட்டு பேசினர். ரெவரண்ட் ஜோசப் டோக் காந்தியின் போராட்டத்தை மனசாட்சிக்கான வீரம் செறிந்த போராட்டம் என்று வர்ணித்தார். ஃபீனிக்ஸ் குடியிருப்பலிருந்த அவரது மனைவி கஸ்துார் மகன்களை தன்னருகே அமர்த்திக் கொண்டார். ஜோஹானஸ்பர்க்கின் பெல்லீவ்ஈஸ்ட்டில் அவருடன் ஒரே இல்லத்தில் தங்கியிருந்த அவரது உதவியாளரும் வழக்கறிஞருமான ஹென்றிபோலாக் எதையோ இழந்தது போல உணர்ந்தான். அவனது மனைவி மிலிகிரகாமுக்கு இதயத்திலிருந்து ஏதோவொன்று நகர்ந்தது போலிருந்தது. அவள் அதை தன் பழைய நினைவுகளால் இட்டு நிரப்பிக் கொள்ள எத்தனித்தாள். அவர்களுக்கு இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகள் இருந்தனர். அவள் தன் மூத்தமகனை விளையாட அனுப்பியிருந்தாள். குழந்தை உறங்க விரும்பாத நேரத்தில் அதை வலுக்கட்டாயமாக துாங்க வைப்பது சரியல்ல என்பார் காந்தி. இரண்டாவது மகன் பிறந்தபோது மிலியிடம் “குழந்தைக்கேற்றார்போல தாய் தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இரவோ பகலோ எந்த நேரமாக இருந்தாலும் குழந்தை உறங்கும் நேரத்தில் நீயும் துாங்க முயற்சி செய்” என்பார். இப்போது அவளது இரண்டாவது குழந்தை உறங்கிக் கொண்டிருந்தான். ஆனால் அவளுக்குதான் உறக்கம் வராமலிருந்தது.

காந்தியை மிலி முதன்முதலாக லண்டனிலிருந்து ஜோஹென்னஸ்பெர்க்கின் ஜெப்பி ரயில்நிலையத்தில் வைத்து சந்தித்திருந்தாள். நடைமேடையில் அவளுக்கு கணவனாக வரப்போகும் ஹென்றி போலாக்குடன் நி்ன்றிருந்த மோகன்தாஸ் அவளை நோக்கி சிநேகமாக வலதுக்கரத்தை நீட்டியபோது தடித்த உதடுகள் கொண்ட அந்த நடுத்தர வயது மனிதருடன் மனதளவில் இத்தனை நெருக்கமாகி விடுவோம் என்று அவள் கருதியிருக்கவில்லை. ஒருவேளை அவள் திருமணமாகி தென்னாப்பிரிக்கா வருவதற்கு முன்பே அவளிடம் அவர் தன் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டது அவளை கவர்ந்திருக்கலாம். இலண்டனிலிருந்த அவளுக்கு எழுதிய கடிதத்தில், ஃபீனிக்ஸில் காசநோய் மருத்துவமனை நிறுவ இருப்பதால், இலண்டன் அருகே எங்கோ ஒரு டால்ஸ்டாய் பண்ணை இருப்பதாக கேள்விப்பட்டிருப்பதாகவும் முடிந்தால் அங்கு சென்று பார்த்து எவ்விதமான கொள்கைகளின் அடிப்படையில் அது அமைந்திருக்கிறது என்று அறிந்து வருமாறும் எழுதியிருந்தார்.

அவளது கைகள், ரொட்டியை, உடைத்து ஊற்றிய கோழி முட்டைக்குள் முக்கியெடுத்து தணலில் வாட்டிக் கொண்டிருந்தாலும் மனம் அவரை பற்றிய நினைவுகளுக்குள் நழுவியோடியதை அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை.

அப்போது அவளுக்கு திருமணமாகி ஓராண்டு நிறையாத தருணம். ஹென்றிபோலாக் எழுதுஅட்டையில் சொருகப்பட்டிருந்த தாள்களில் மளமளவென்று எழுதிக் கொண்டிருந்தான். அவன் இப்போது ‘இந்தியன் ஒப்பீனியன்’ இதழின் பகுதி நேர ஆசிரியருமாகியிருந்தான். மிலி கிராகாமுடனான அவனது திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அந்த இதழின் ஆசிரியர் எம்.ஹெச்.நாஸர் எதிர்பாராதவிதமாக மரணமடைந்து விட்டார். ஃபீனிக்ஸ் குடியிருப்பில் அவர் இறந்தபோது அவரருகே கீதை புத்தகம் திறந்திருந்ததாம். இதை கேள்விப்பட்ட கஸ்துார், நாஸருக்கு எத்தனை அருமையான சாவு வாய்த்திருக்கிறது என்று சிலிர்த்துக் கொண்டார். மோகன்தாஸ்காந்தியின் உறவினர் சகன்லால் இதழின் குஜராத்தி பக்கங்களை பார்த்துக் கொள்ள போலாக் ஆங்கிலப்பத்திகளை கவனித்துக் கொண்டான்.

மிலி கிண்ணம் நிறைய வறுத்த நிலக்கடலையை கொண்டு வந்து கணவனருகில் வைத்தாள். அவர்களுக்கு அப்போது குழந்தைகள் இல்லை. பூசினாற்போன்ற உடல்வாகு கொண்டவள் அவள். கூந்தலை அழகாக நறுக்கியிருந்தாள்.

“வீட்டை எப்படியெல்லாம் மாத்தி வச்சிருக்கேன்னு எழுந்திரிச்சு வந்து பாருங்க ஹென்றி”

ஜோஹானஸ்பர்க்கில், பெல்லீவ் ஈஸ்ட்டிலிருந்த அந்த வீட்டில் அவர்களை தவிர மோகன்தாஸ் காந்தியும் இந்திய இளைஞன் ஒருவனுமிருந்தனர். அந்த சிறிய வீட்டில் அளவில் சிறியதான நான்கறைகள் மட்டுமே இருந்தன. குளியலறையில் கூட ஒழுங்கான குழாய் அமைப்போ கழிவு நீர் வெளியேற சரியான பாதையோ இல்லாமலிருந்தது. ஆனால் காந்தி தன் வழக்கறிஞர் வேலையை குறைத்துக் கொள்ள எண்ணியிருந்ததால் செலவுகளை கட்டுப்படுத்த சுமாரான வீட்டில்தான் இருந்தாக வேண்டும்.

“கொஞ்சம் வெயிட் பண்ணு மிலி… இந்த ஆர்ட்டிகளை முடிச்சிடுறேன்”

“ப்ளீஸ்… ப்ளீஸ்… இதை பாத்திடுங்க. அப்பறம் பாபூ வந்துட்டா நீங்க அவரோட பிசியாயிடுவீங்க”

பாபு, ஆப்ரிக்க அரசியல் நிறுவனத்தின் கூட்டமொன்றில் கலந்துக் கொள்வதற்காக சென்றிருந்தார். மேலும் அவருக்கு மற்றுமொரு முக்கியமான பணியுமிருந்தது. அனுமதி சீட்டுகள் வழங்குவதில் தாமதங்கள், விண்ணப்பத்தாரர்கள் சாட்சிகளை கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்தப்படுவது, பெண்களுக்கு விதிவிலக்கு கொடுக்க மறுப்பது உள்ளிட்ட பதினாறு புகார்கள் கொண்ட பட்டியல் ஒன்றை அளித்ததன் தொடர்ச்சியாக பிரிட்டோரியாவில் காலனிய துணைச் செயலாளரை சந்திக்க வேண்டியிருந்தது.

ஹென்றிபோலாக் புரொடக்டர் ஆஃப் ஏசியாட்டிக்ஸ் பொறுப்பிலிருக்கும் அதிகாரியான மாண்ட்ஃபோர்ட்சாம்னிக்கு காந்தி எழுத வேண்டிய கடிதங்களுக்கான தரவுகளை சேகரித்து வைத்திருந்தான். அது சம்பந்தமாக மோகன்தாஸ் வந்ததும் கலந்தாலோசிக்க வேண்டியவற்றை தனியாக குறிப்பெடுக்க வேண்டியிருந்தது. தான் கூறும் முன்பே தன் வேலைகளை குறித்துப் புரிந்துக் கொள்ளும் புத்திசாலியான புதுமனைவியின் வேண்டுகோளை மறுக்கவியலாமல் குறிப்புத்தாள்களை அட்டையில் சொருகி வைத்து விட்டு எழுந்தான். ஞாபகமாக தன்னுடன் நிலக்கடலைகள் அடங்கிய கிண்ணத்தை எடுத்துக் கொண்டான்.

மிலி முதலாக அவனை சமையலறைக்கு அழைத்துச் சென்றாள். “இங்க பாருங்க ஹென்றி… கிச்சன்லயே டைனிங்கை செட் பண்ணீட்டேன்”

“ஓஒ ஐரோப்பிய ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களை உள்ளடக்கிய உணவு மேசை இல்லையா இது? பார்த்து பார்த்துதான் செட் பண்ணியிருக்கே” என்றான் ஹென்றி விளையாட்டாகவும் நிஜமாகவும்.

புத்தகங்கள் அடைத்துக் கொண்டிருந்த இடம் இப்போது உண்ணுமிடமாக மாறியிருந்தது. இரவுணவு நேரத்தில் மெதுவாக உண்டு நிறைய பேசிக் கொள்ளலாம். அது மோகன்தாஸுக்கு பிடித்தமானதுதான். உணவு மேசையில் பொதுவாக பிரார்த்தனை பாடலும் பிறகு உணவோடு கலந்த அரசியல் என்றுமிருக்கும். நேற்று கூட காந்தி, ஜுலுக்களின் பாம்பாத்தா கிளர்ச்சி நேட்டாலிலும் பரவி விட்ட நிலையில், இந்தியன் ஒப்பீனியன் இதழில் தான் எழுதியிருந்த கட்டுரைக்கு வந்திருந்த எதிர்வினைகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார். அதில், காஃபிர்களின் கலகம் நியாயமானதா இல்லையா என்று தன்னால் உறுதியாக கூற முடியவில்லை என்றாலும் நேட்டாலில் நாமிருப்பது பிரிட்டிஷ் அதிகாரத்தின் மூலமாகவே என்பதால் காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்வது போன்ற முடிந்த உதவிகளை செய்யவேண்டியது நமது கடமை என்று எழுதியிருந்தார். அதற்காக முன்வரும் தன்னார்வலர்களில் தன் பெயரை முதலாவதாக சேர்த்துக் கொண்டதாகவும் பணவுதவியோடு ஓவர்கோட்டுகள், தொப்பிகள், காலுறைகள் போன்ற பொருளுதவியும் திரட்ட போவதாக கூறினார்.

அவர் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் மிலி. அமைதியான குரலெழும்பாத பேச்சு என்றாலும் அதில் தீவிரவும் தீர்மானமும் இருக்கும். கஸ்துார் பா விடம் பேசும்போது கூடுதல் உரிமையுமிருக்கும். டிராய்வில்லில் இருந்தபோது அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் வருவதை பார்த்திருக்கிறாள். அது பெரும்பாலும் இந்தியாவிலிருக்கும் அவர்களின் மூத்தமகன் ஹரிலாலை பற்றியதாக இருக்கும். அவர் அப்போது ஹரிலாலை தென்னாப்பிரிக்காவுக்கு வரவழைப்பதில் தீவிரமாக முயன்றுக் கொண்டிருந்தார். மோகன்தாஸின் பேச்சில் நகைச்சுவைக்கு குறைவிருக்காது. இலண்டனிலிருந்து வந்து இறங்கியபோது ஹென்றி தனது வருங்கால மனைவியை கண்ட ஆனந்த அதிர்வில், “மிலி… என்னால இதை கொஞ்சமும் நம்ப முடியில…” என்றான். அவன் கண்கள் இதயத்தின் பரபரப்பை நீராக ஏந்தி பளபளத்திருந்தது.

“இந்தியன் ஒப்பீனியனுக்கு அத்தனை சந்தா சேர்ந்துடுச்சா?” என்றார் காந்தி சிரிக்காமலேயே. அவர் தென்னாப்பிரிக்காவிலிருக்கும் இந்தியர்களின் விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியன் ஒப்பீனியன் என்ற இதழை இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஒரு கோடைக்காலத்தில் தொடங்கியிருந்தார்.

மிலி அந்த புதிய நண்பரின் நகைச்சுவைக்கு புன்னகைத்தப்படியே தன்னை நோக்கி நட்பாக நீண்டிருந்த அவரது வலதுக்கரத்தை லேசாக பற்றி குலுக்கினாள். நடுத்தர உயரமும் மெலிந்த தேகமும் கொண்ட இந்த மனிதரா அரசாங்கத்தை வண்டு போல குடைந்துக் கொண்டிருக்கிறார்? தோன்றிய நேரத்திலேயே அவ்வெண்ணம் விடுப்பட்ட விட்டது. ஏனென்றால் அதை விட கவர்ச்சியான ஒரு பண்டம் இப்போது அவளிடமிருந்தது. அது அவளையே அன்புத்ததும்ப பார்த்துக் கொண்டிருந்தது. இதயக்கூடு இன்பத்தில் தாறுமாறாக துடிக்க, அந்த பண்டத்தின் கம்பீரமான ஆகிருதிக்குள் தன்னை ஒப்புக் கொடுக்க எண்ணிய உடலை நகர்த்தி விட்டு வலதுக்கரத்தை மட்டும் முன்னே நீட்டினாள் மிலி. புனிதமான ஏதோவொன்றை பற்றுபவன்போல ஹென்றி அதை ஒற்றியெடுத்து தன் கரங்களுக்குள் பொத்திக் கொண்டான். இரவின் சோம்பலை உதறிக் கொண்டு அந்நாளின் விடியலில் மெல்ல இயங்கத் தொடங்கிய அந்நகரில் அவர்களது காதலுக்கு சாட்சியாக அந்த முப்பத்தாறு வயது பழுப்பு நிற மனிதன் சிறுவனின் உற்சாகத்தோடு நின்றுக் கொண்டிருந்தார். “ஓஒ… காதலர்கள்” சிரித்தபோது அவர் கண்களும் சேர்ந்துக் கொண்டன.

மிலிகிரகாம் கணவனின் கண்களை தன் கரங்களால் விளையாட்டாக பொத்தியவாறு முன்னறைக்கு அழைத்து வந்தாள். கைகளை விலக்கியபோது அந்த அறையின் நேர்த்தி அவனை பிரமிக்க வைத்தது. இரண்டு நாட்களாகவே அவள் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தது தெரியும். ஆனால் வீட்டை இத்தனை அழகாக மாற்றியிருப்பாள் என தெரியாமல் போயிற்று. புத்தகங்களும் அவர்கள் இருவருக்கான பொருட்களும் அங்கு சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “இனிமே பகல் நேர டிஸ்கஷனை இங்கேயே வச்சிக்கலாம்” என்றாள்.

இலண்டனிலிருந்து வந்த நாலைந்து மாதங்களுக்குள் எல்லாவற்றையும் பழகிக் கொள்ள முடிந்த அவளுக்கு அவ்வப்போது எழும் சந்தேகம் மட்டும் இன்னும் தீரவில்லை. ஒருவேளை அவள் வருவதற்கு முன்பே, அதாவது திருமணத்திற்கு முன்பே, மில்லிகிரகாமின் உடல்நிலையை காரணம் காட்டி திருமணத்தை முடிந்தமட்டிலும் தள்ளிப்போடுமாறு வலியுறுத்தி காந்திக்கு போலாக்கின் தந்தை எழுதிய கடிதம் அவளை காயப்படுத்தியிருக்கலாம். “ஹென்றி… உங்க வீட்டாருக்கு உண்மையிலுமே என்னை பிடிக்கலையா? இல்லைன்னா என்மேல அவங்களுக்கு அவ்வளவு அக்கறையா?” என்று கேட்டபோது மில்லி கணவனின் அருகில் நெருங்கிப் படுத்திருந்தாள். இந்த வாய்ப்பு அடிக்கடி கிடைப்பதில்லை என்பது அந்த நெருக்கத்தில் தெரிந்திருந்தது. அவள் அவ்வப்போது தன் திருமணம் ஒரு இலட்சியவாத திருமணம் என்றெண்ணிக் கொள்வாள். ஹென்றிக்கு வழக்கமான கணவர்களை போல தன்னிடம் அதிக நேரம் செலவழிக்க முடியாது என்பதை அவளும் அறிந்திருந்தாள். அதில் அவளுக்கு பெருமையும் கூட. ஏனென்றால் அவளே தீவிர சமூக சீர்த்திருத்தவாதி. பெண்களின் ஓட்டுரிமையை ஆதரித்தவள்.

“இத்தனை நாளுக்கப்பறம் ஏன் திடீர்ன்னு இந்த சந்தேகம்? நான் உன்னை சரியா நடத்தறதில்லையா?”

“இல்லல்ல…” அவரசமாக மறுத்தாள் மில்லி. “ஆனா நம்ப கல்யாணத்தை தள்ளி வைக்க சொல்லி உங்கப்பா பாபுவுக்கு லெட்டர் போட்டுருந்தாரே?”

“அது உன்னோட உடல்நிலைக்காகதானே மிலி. லண்டன்ல வளர்ந்த பொண்ணு நீ. ஜோஹென்னஸ்பெர்க் சூழல் உனக்கு செட்டாவுமோ என்னமோன்னு அவங்களுக்கு பயமிருக்காதா?” ஹென்றி மனைவியை தன் பக்கமாக இழுத்து இறுக அணைத்துக் கொண்டான். இருபதுகளின் இனிமையும் காதலும் அவர்களுக்குள் ஊற்றாக பெருகிக் கொண்டிருந்தாலும் யூதரான கணவனின் வீட்டார் கிறித்துவரான தன்னை நிராகரித்ததும் அதற்காக கணவனை தென்னாப்பிரிக்காவிலிருக்கும் அவனது பெரியப்பா வீட்டுக்கு அனுப்பி வைத்ததும் அவள் மனதில் ஆழமாக தங்கியிருந்தது. உடலோ மனமோ களைத்திருக்கும் சமயங்களில் அவ்வெண்ணம் உயர்வாகவோ அல்லது தாழ்வுணர்ச்சியாகவோ வெளிப்பட்டு விடும். தன் வீட்டாரை விட்டுக்கொடுக்காமல் பேசினாலும் ஹென்றியை அவளுக்கு நிறையவே பிடித்திருந்தது. மாணவனாக இருந்தபோதே யூத வார இதழொன்றில் அரசியல் விவகாரங்களை குறித்து கட்டுரைகள் எழுத தெரிந்திருந்தது அவனுக்கு. கேப்டவுனில் பெரியப்பாவின் வணிக நிறுவனத்தில் பணியாற்றியபோது டால்ஸ்டாயின் எழுத்துகளின் தீவிர ரசிகனாகவும் டிரான்ஸ்வால் கிரிட்டிக் என்ற உள்ளுர் செய்தித்தாள் நிறுவனத்தின் பணியாளனாகவும் இருந்த அறிவார்ந்த கணவனுக்கு மனைவியானதில் அவளுக்கு பெருமைதான். கூடவே மோகன்தாஸ் காந்தி என்ற துணிச்சலான மென்மையான இந்தியர் ஒருவருடன் கணவன் கொண்டிருந்த நட்பும் உரிமையும் அவளுக்கு பிடித்திருந்தது.

திருமணமான கையோடு ஜோஹென்னஸ்பெர்க்கில், டிராய்வில்லில் அவர்கள் தங்கியிருந்த வீடு இதுபோல நெருக்கலின்றி இரண்டு தளங்களையும் எட்டு அறைகளையும் கொண்ட தனித்த வீடாக ஊரை விட்டு சற்று வெளியே நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்தது. அங்கு காந்தியுடன் அவர் மனைவி கஸ்துாரும் இளைய மகன்கள் ராமதாஸும் தேவதாஸும் வசித்தனர். கூடவே தொலைத்தொடர்பு பணிகளை கவனிக்க ஆங்கிலேயே இளைஞன் ஒருவனும் இருந்தான். நாடும் உறவும் புதிதென்றாலும் கஸ்துார் என்ற அவளை விட வயதில் முதிர்ந்த தோழியும் அவள் குடும்பத்தாரும் அதை இயல்பாக மாற்றியிருந்தனர். கணவன் தன்னை இந்தியாவிலிருந்து அழைத்து வரும்போதே குடும்பத்துக்கு தன்னால் குறைந்த நேரமே செலவிட முடியும் என்று கூறியிருந்ததாக பா கூறுவார். ஆனால் பாபு காலையில் சீக்கிரமாகவே எழுந்துக் கொண்டு அன்றைய உணவுக்கான மாவு தயாரிப்பில் மனைவிக்கு உதவுவார். பிறகு கயிறு தாண்டும் பயிற்சி செய்து விட்டு பழங்களை நறுக்கி்த் தருவார். ஐந்து மைல் தொலைவில் ரிஸ்ஸிக் தெருவிலிருக்கும் தன் அலுவலகத்துக்கு நடந்து செல்லும்போது கையில் மதியத்துக்காக கோதுமைரொட்டியோடு, நிலக்கடலையும் வெண்ணெயும் கூடவே சில பழங்களும் எடுத்துச் செல்வார். வழக்குகளை எடுத்துக் கொள்வதோடு, அரசுக்கு கோரிக்கை மனுக்கள் எழுதுவதும் இந்தியன் ஒப்பீியன் இதழுக்கான வேலையில் ஈடுபடுவதுமாக அவரது நாட்கள் கழிந்தன.

மிலியும் பா வும் மாலை நேரங்களில் வீட்டை சுற்றிலுமிருந்த தோட்டத்தை சீர் செய்வார்கள். அப்போது அவள் பா வுக்கு ஆங்கிலம் கற்றுத்தருவாள். மோகன்தாஸ் தன் மகன்களுக்கு குஜராத்தி இலக்கணம் கற்றுத்தருவார். ஹென்றி, பாபு, குஜராத்திக்கு பதிலாக மகன்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தரலாம், என்று மனைவியிடம் அபிப்பிராயப்பட்டிருக்கிறான். ஆனால் அவரிடம் நேரிடையாக சொல்வதில்லை. அவரிடம் விவாதிப்பத்தற்கென்றே வந்தவள் போல மிலி இருப்பதில் ஹென்றிக்கும் கஸ்துாருக்கும் உடன்பாடுதான்.

“காலன்பாக் இங்க வரும்போது சாக்லேட்டோ பொம்மைகளோ வாங்கீட்டு வராதீங்கன்னு சொல்லணும் மிலி…” ரொட்டிக்கான மாவை பிசைந்துக் கொண்டே பேசினார் கஸ்துார். அந்த வீட்டுக்கு அடிக்கடி வருகைத்தரும் ஹெர்மன்காலன்பாக்கின் வாழ்க்கை முறை தன் சின்னஞ்சிறு மகன்களை ஏங்க வைப்பதை அவர் உணர்ந்திருந்தார். மிலி உருளைக்கிழங்குகளை வேக வைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தாள். அவளுக்கு சமையலறை வேலைகள் இப்போதுதான் மெல்ல பழக்கமாகிக் கொண்டிருக்கிறது.

“மிலி… காலன்பாக் வரும்போது இந்த விஷயத்தை ஞாபகப்படுத்திறியா”

“சாரி பா. நான் வேர்க்கடலை மேலேயே என்னோட முழுக்கவனத்தை செலுத்திக்கிட்டிருந்தேன். நீங்க சொன்னதை கவனிக்கல” ஆச்சர்யமாக புருவத்தை உயர்த்திய கஸ்துார் “காலன்பாக் இங்க வர்றப்போ ராமாவுக்கும் தேவாவுக்கும் எதையாவது வாங்கிட்டு வந்துடுறாரு. இது பழக்கமாகிப்போச்சுன்னா அவர் வர்றதை விட அவர் வாங்கீட்டு வர்ற பொருள் மேல பசங்களுக்கு நாட்டம் உண்டாகிடும். ராமா அவரை மாதிரி சூட், ஷுவெல்லாம் போட்டுக்கணும்னு ஆசைப்படறான்”

“அப்டி விரும்பினாதான் என்ன தப்பு பா?” கிழங்குகள் நீராவியில் வேகத்தொடங்கியிருந்தன.

“அப்டீன்னா நீ உங்க பாபுக்கிட்ட சொல்லி மகன்களுக்கு அதெல்லாம் வாங்கித்தர சொல்லு” கணவனிடம் கேட்பதற்கு மிலியை சிபாரிசுக்கு அழைத்திருந்தாலும் கஸ்துாரின் முகத்தில் அவநம்பிக்கைதான் அதிகமிருந்தது. ஆனால் மிலிக்கு அது குறித்து பாபுவிடம் பேசுவதில் எந்த தயக்கமும் இல்லை. ஒருவேளை அவள் திருமணமாகி வரும் முன்பே அந்த மனிதர் ஹென்றியின் வீட்டாரிடம் அவளுக்கு சாதகமாக பேசியதன் காரணமாக இருக்கலாம். அல்லது அந்த பழுப்புநிற மனிதன், தங்கள் திருமணத்துக்கு சாட்சியாக நின்றதில் ஏற்பட்ட அபிப்பிராயமாக இருக்கலாம். அவரை பாபூ என்று அழைத்தாலும் மூத்த சகோதரனாகவே எண்ணிக் கொள்வாள். அதுவே அவளுக்கு அவரிடம் கூடுதல் பிரியமும் உரிமையும் அளித்திருந்தது. காந்தியோ, இந்துவான தான், தன்னுடைய பேச்சில் அடிக்கடி கிறித்துவின் சொற்களையும் போதனைகளையும் பயன்படுத்துவதுதான் இந்த அன்புக்கு காரணம் என்று வம்புக்கிழுப்பார்.

அது உண்மையில்லை என்று அவள் கருதினாலும், அவரது அலுவலகத்தில் கிறிஸ்துவின் படம் இருப்பது குறித்து அவள் மகிழ்ந்திருக்கிறாள். அது குறித்து அவள் மோகன்தாஸிடம் கேட்டபோது அவர், கிறித்துவின் பொறுமையும் மென்மையும் கருணையுமான உரு அவரை கவர்ந்ததாக கூறினார். துாற்றப்படும்போதும் தாக்கப்படும்போதும் திருப்பித் தாக்காமல் மற்றொரு கன்னத்தைக் காட்ட சொல்லி தம் சீடர்களுக்கு உபதேசித்த நிறை மனிதரல்லவா அவர்? என்றார். ஒருவேளை கிறித்துவின் கண்களை போல பாபுவின் கண்களும் கருணையானவையோ? ஆனால் அவரை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்க அவளுக்கு பிடித்திருந்தது.

“ஆனா நீங்க கிறித்துவத்தை ஏற்கலையே பாபூ?”

“ஒரு நல்ல இந்துவாக இருப்பதே நல்ல கிறித்துவனாக இருப்பதுவுமாகும்” பாபுவின் உடனடியான பதில் அவளுக்கு சற்று கோபமூட்டியிருக்க வேண்டும். அவள் இந்தியாவில் நிலவும் சாதி பாகுபாடுகள் குறித்து அறிந்திருந்தாள்.

“கிறித்துவம் போதிப்பதுபோல், உங்கள் மதத்திலும் சகோதரத்துவம் வலியுறுத்தப்படுதுன்னு நெனைக்கிறீங்களா?”

“மிலி… மனிதர்களோட குறைப்பட்ட புரிதல்களை கொண்டு மகத்தான மதங்களின் உண்மையான போதனைகளை குறைத்து மதிப்பிடக் கூடாது. உலகத்தில் நிலவும் போர்களையும் வெறுப்புகளையும் ஏழ்மையையும் குற்றங்களையும் பார்த்த பிறகும் கிறித்துவ உலகம் சகோதரத்துவத்துடன் வாழுதுன்னு சொல்வாயா நீ?

“அதுசரி. மனிதனின் இலட்சியங்கள் எப்போதுமே அவர்களுக்கு எட்டாத தொலைவில்தானே இருக்கின்றன” என்றாள் தொய்வாக.

“நாம் இலட்சியங்களை அடைஞ்சுட்டோம்ன்னா போராடி அடைய எதுவுமே இருக்காதில்லையா?”

தியாசபிகல் சொசைட்டியில் இது குறித்து அவர் ஆற்றிய சொற்பொழிவுகளை அவளும் கேட்டிருந்தாள். இந்துமதம், சமூக விவகாரங்களில் சாதியின் முக்கியத்துவம், சமய விஷயங்களில், பலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம், தார்மீக விஷயங்களில், சுய ஒறுத்தலின் முக்கியத்துவம் என்று மூன்று துாண்களின் மீது நின்றுக் கொண்டிருக்கிறது. சமணமோ வாழும் உயிர்கள் அனைத்தின் மீதும் கவனத்துடன் மரியாதை செலுத்துகிறது. இஸ்லாத்தின் சமத்துவக்கொள்கை சாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் வெகுமக்களின் விருப்பத்துக்குரியதாக இருக்கிறது. இந்த உள்ளார்ந்த பலத்துடன் வாளின் பலமும் சேர்ந்துக் கொண்டதால் அது பலரை மதம் மாற செய்வதாக அவர் ஆற்றிய உரை இந்தியன் ஒப்பீனியன் இதழில் வெளிவந்தபோது, காந்தி இஸ்லாம் மதத்தை அவமதித்து விட்டதாக முஸ்லிம்களிடமிருந்து கண்டனம் வந்ததையும் அவள் அறிந்திருந்தாள்.

“தாழ்ந்த சாதி இந்துக்கள் முஸ்லிம்களாக மாறினால் அது இஸ்லாத்தோட மேன்மையதானே காட்டுது..” என்றான் போலாக்.

அன்று இரவுணவு மேசையில் வழக்கம்போல கஸ்துார் கீதையிலிருந்து சில வரிகளை படித்துக் காட்டி விட்டு, பின் மகன்களுக்கு அதை எளிதாக விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார். “பகவான் கிருஷ்ணன் எல்லா உறவுகளிடத்திலும் சமமாக இருக்கிறார். அவருக்கு நண்பனுமில்லை. பகைவனுமில்லை. அவரை யார் பக்தியுடன் பூஜிக்கிறார்களோ அவர்களிடம் அவர் வந்து விடுவார்” மிலி ஒருவேளை கணவரிடம் சம்மதம் பெற்று விட்டாளெனில் அவர் மகன்களும் கோட்டும் ஷுக்களும் அணி்ந்துக் கொள்வார்கள்.

எல்லோரும் உண்ண ஆரம்பித்தபோது “பாபூ… நாமெல்லாமே இப்போ வெவ்வேறு பொறுப்பில இருக்கோமில்லையா?” மிலி மெல்லப் பேச்சை தொடங்கினாள்.

மோகன்தாஸ் ரொட்டியின் மீது வெண்ணெயை தடவிக் கொண்டே “எந்தவகையான பொறுப்பை பத்தி கேட்கிற?”

“இந்து மதம் பகுத்து வச்சிருக்கற பொறுப்பு பத்திதான் சொல்றேன். ராமாவுக்கும் தேவாவுக்கும் இப்போ விளையாட்டுத்தனமான, பெற்றோரின் அன்பான அரவணைப்பில வளரும் பருவம் இல்லையா?”

மோகன்தாஸ் புன்னகையோடு வேக வைத்த பயிறுகளை எடுத்து ராமதாஸின் தட்டில் பரிமாறினார். தேவதாஸ் எலுமிச்சை பானத்தை பருக எத்தனித்ததை பார்வையாலேயே தடுத்து பாலால் செய்யப்பட்ட பதார்த்தத்தை எடுத்து நீட்ட, அவன் தயங்கி பின் வாங்கிக் கொண்டான். “ம்… சொல்லு” என்றார்.

“அப்றம் மாணவப்பருவம்… பிறகு இல்லறத்தில நுழையணும். அது கவலைகளும் அழுத்தங்களும் நிறைந்த பருவம். அந்த பருவத்திலதான் நீ்ங்களும் பாவும் இப்போ இருக்கீங்க”

“யெஸ்… அதுக்கு பிறகு தியானமும் சிந்தனையுமான மோன நிலையில் வாழ்வின் ஆன்மாவையும் தன் ஆன்மாவையும் காண அவன் தன் கண்களை பழக்கப்படுத்திக் கொள்ளலாம்”

“அப்டீன்னா பெண்களோட நிலை? நீங்க சொல்றத பார்த்தா அவள் தன் புறதேவைகளைத் துறந்து ஆன்ம வேட்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மரணத்துக்கு அப்பாலானதற்கு தன் ஆன்மாவை துணியச் செய்யும் புள்ளியொன்று இந்து சிந்தனையில் இருப்பதாகவே தோணலியே?”

சூட்டும் காலணிகளும் கேட்க சொன்னதற்கு மாற்றாக பேச்சு எங்கெங்கோ திசை திரும்புகிறதே என்ற கவலையோடு கவனித்தார் கஸ்துார்.

ஓ.. மோகன்தாஸ் தன் கரத்தை உயர்த்தி விரலால் சுட்டினார். “வனம் புக வேண்டிய அவசியமோ துறவு கொண்டு கடவுளை தியானிக்க வேண்டிய தேவையோ பெண்களுக்கில்ல… ஒரு ஆணை திருமணம் செய்து குழந்தைகள் பெற்று அவங்கள கவனத்துக் கொள்வதை விட மேலுலகம் போக வேற பயிற்சி தேவையா என்ன அவங்களுக்கு?”

“அதாவது ஆண் அமைதியாக உட்கார்ந்து தியானித்துக் கொண்டிருக்கும்போது அவள் மட்டும் உடற்பாரத்துக்கான சுமைகளை தேர்ந்தெடுத்துக்கணும்னு சொல்றீங்க. பெண் மாபெரும் சக்திங்கிறீங்க. ஆனா நடைமுறையில பெண்ணுங்கிறவ ஆணுக்காக படைக்கப்பட்ட பண்டம் போலதானே நடத்தப்படறாங்க. மனைவியை குறைந்தபட்சம் தனக்கு சமமானவளாக நினைக்கலாமில்லையா… அதுவும் இந்திய கணவர்கள் ரொம்பவும் மோசம். அவங்களுக்கு எல்லாமே வாய்ச்சிருக்கு. மனைவிகளுக்கோ வேலை வேலை வேலைதான்..”

பா அரிந்து வைத்திருந்த பச்சை வெங்காயங்களை கணவனின் தட்டில் எடுத்து வைத்தார். “மிலி… நீ புறத்தோற்றத்தை யதார்த்தம்னு தவறாக புரிஞ்சுக்கிட்டே. “சாமானிய தளத்தில் அவள் ஆணுக்கு ஊழியம் செய்யறதுனால இந்த கருத்து உனக்கு வந்திருக்கலாம். இப்படி யோசிச்சுப்பாரேன்… தன்னை விட சிறியவர்களுக்கு தொண்டு செய்வது மகத்தானவர்களுக்கு ஒரு பெருஞ்செயல் இல்லையா?”

“இதையெல்லாம் பெண்களை அடிமைப்படுத்தறதுக்கு சொல்லப்படுற அலங்கரிப்பு வார்த்தைகள்” சட்டென்று மறுத்தாள் மிலி.

பா மேசையிலிருந்த சாஸரில் மகன்களுக்கு சாலட்டை நிரப்பி வைத்தார். மோகன்தாஸ் விளையாட்டாக குரலை தாழ்த்தி “உனக்கு ஒரு உண்மை சொல்லட்டுமா… ஆண்கள் இன்னும் அந்த இலட்சிய நிலையை எட்டலை. வாழ்வின் உயர்தளங்களில் பெண் ஆணுக்கு சமமானவளாகவும் சொல்லப்போனா உயர்ந்தவளாவும் இருக்கிறாங்கிற உண்மையை அவங்களோட இதயங்களில் உணர்வாங்க… சரி.. அதை விடு… நீ ஏதோ சொல்லணும்னு நெனக்கிறே… ஆம் ஐ கரக்ட்?”

மிலி அதை கண்டுக்கொள்ளாதவள் போல, “பெத்தவங்க அரவணைப்புல இருக்கவேண்டிய பருவத்தில பிள்ளைகளுக்கு வேணுங்கறதை செய்ய வேண்டியது பெத்தவங்களோட கடமையில்லையா? இப்போ இருக்கற காலக்கட்டத்தில கோட்டும் ஷுக்களும் அணியணும் நினைக்கறது சிறுவர்களின் எளிய விருப்பம்தானே?

கஸ்துாரின் கண்கள் பளபளத்தன. ஆனால் அவர் கணவரின் வார்த்தைகள் அத்தனை நாசுக்கானவை. “மனிதன் தனக்குரியதைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவனுக்குரியவர்கள் அவனில் ஒரு பகுதியே”

“ஆனா கணவரோ தந்தையோ தன் மனைவி குழந்தைகள் மேல் உரிமை செலுத்தறதை என்னால ஏத்துக்க முடியாது” என்றபோது காந்தி மெதுவாக ஆப்ரகாம் தன் மகனை கடவுளுக்கு பலிக்கொடுத்த கதையை சொல்லத் தொடங்கினார். தெரிந்த கதையென்றாலும் எல்லோரும் பொறுமையாக காது கொடுக்க வேண்டியிருந்தது.

“பாபூ… நீங்க ஏன் இந்த கதையை இப்போ சொன்னீங்கன்னு தெரியில. ஆனா இந்த கதையினால உங்க பாயிண்ட் இன்னும் பலவீனமா போயிடுச்சு. அவருக்கு விருப்பம்ன்னா அவர் தன்னைதான் பலிக் கொடுத்துக்கணுமே தவிர தன்னோட பிள்ளைய அல்ல”

“இந்த கதை உங்க வேதத்திலதானே இருக்கு? ஆபிரகாம்ட்ட அவரது மகனை பலிக்கொடுக்க சொன்னது உங்க கடவுள்தானே?” வெண்ணெயை தடவிய கோதுமை ரொட்டியை மடித்து வாயில் வைத்தார்.

ஹென்றியோ மற்றவர்களோ எதுவும் பேசவில்லை. மிலி விவாதத்தை தொடரவே விரும்பினாள்.

“கடவுள் ஆப்ரகாமிடம் அப்டியொரு படையல் கேட்டிருப்பாருன்னு தோணல. கடவுள் எப்படிப்பட்டவருன்னு மனிதன் தன் போக்கில் புரிஞ்சுக்கிட்டதோட விளைவு இது. குழந்தையை பிறக்க வைக்கறதில தான் ஒரு காரணிங்கிற உண்மையை அதை அழிக்க பயன்படுத்திக்கிற உரிமையா எடுத்துக்கிட்டான்னா அந்த ஆணை காட்டுமிராண்டின்னுதான் சொல்வேன்”

“அப்டீன்னா நீ உங்க வேதத்தை ஏத்துக்கலைன்னு எடுத்துக்கவா?”

பா எலுமிச்சை பானத்தை மகனை நோக்கி நகர்த்தி வைத்தார். மிலி விடுவதாக இல்லை என்பதை போலிருந்தாள்.

“பாபூ… இது உண்மை நிகழ்வா கூட இருக்கலாம். ஆனா ஆப்ரகாம் ஈசாக்கை பலி கொடுக்கணும்னு கடவுள் எதிர்ப்பார்த்தார்ங்கிறதை நான் நம்பல. தன் மனைவி குழந்தைகளோட உயிர் மேல ஒரு மனிதனுக்கு உரிமை இருக்குங்கிற நம்பிக்கை கூட எனக்கு பிடிக்கல”

“மிலி… இந்த கதையை ஆப்ரகாமோட துயரமும் நம்பிக்கையும் சோதிக்கப்படுறதா புரிஞ்சிக்கிட்டா வேறொரு கோணம் கிடைக்குமில்லையா? கதை கூட அதனாலதான் அவரை மையப்படுத்தி சொல்லப்பட்டிருக்கு”

மிலி அவசரமாக “பாபூ… நீங்கள் சொல்றது இதயத்துக்கு வேண்டுமானால் உவப்பாக இருக்கலாம். ஆனால் என்னோட மூளை அதை ஏத்துக்காது” என்றாள்.

“அப்படின்னா உன் மூளை தவறு செய்யுதுன்னு அர்த்தம். அதை நீ நம்பாதே. யாராவது தன்னோட அவயங்களை பத்தி எப்பவும் நினைச்சுக்கிட்டோ அதிலே பிரத்யேக கவனம் செலுத்திக்கிட்டோ இருப்பாங்களா? அது அவங்களோட ஒரு பகுதி. அவ்ளோதானே? பிற பகுதிகளை கவனித்துக் கொள்ளும்போதே அதுவும் கவனிக்கப்பட்டு விடுகிறது”

“நோ… நோ… பாபூ.. இதுல எனக்கு உடன்பாடில்லைன்னுதானே சொல்றேன். நம் அன்புக்குரியவங்களுக்கு வேணும்னே மரியாதை கொடுக்காமல் இருப்பதும் அதேசமயம் தங்களுடைய நல்ல தன்மைகளை அந்நியரிடத்தில் காட்டுவதையும் என்னால நியாயப்படுத்தவே முடியாது”

அவள் சகோதரனும் பிடிவாதக்காரர்தான். “நீ எப்போதாவது எவரையாவது அவர் எது சொன்னாலும் சரியாயிருக்கும்னு முழுசா நம்பியிருக்கியா?”

“இதுவரைக்கும் இல்ல. அப்படியே நம்புணும்னா அவங்க எல்லையற்ற அறிவுடையவங்களா இருக்கணும்”

ராமதாஸ் சாப்பிட்டு முடித்திருந்தான். அவன் தட்டு காலியானது குறித்த திருப்தி கஸ்துாரின் முகத்தில் பிரதிபலித்தது. அவர் தேவதாஸை உண்ணுமாறு கூறினார்.

”நீ யாரிடமும் மண்டியிட மாட்டாய்… அப்டிதானே?” என்றார் காந்தி கேள்வி கேட்கும் தோரணையில். ஆனால் கண்கள் ஒளிர்ந்தன.

”ஆமா பாபூ… நான் யார்ட்டயும் என்னோட அறிவை முழுசா ஒப்படைக்கமாட்டேன்”

“அப்டீன்னா உனக்கு குரு என்று யாருமே இருக்க முடியாது மிலி”

“பாபூ… நான் சொல்றது அகங்காரமா தெரியலாம். நான் என்னை உண்மையை தேடி செல்பவளா நினைக்கிறேன். அது யாரிடமும் முழுசா கிடைக்காது”

“அதை உன்னால அடைய முடியும்னு நம்புறியா மிலி?“

“இல்ல… உண்மையை கண்டாச்சுன்னு நினைச்சேன்னாலே அது உண்மையில்லேன்னு தெரிஞ்சுடும். எல்லைகளற்ற ஒன்றை என்னோட குறைப்பட்ட அறிவால எப்படி உணர முடியும் சொல்லுங்க?”

“நீ ஒருபோதும் அமைதியடைய முடியாது மிலி” பாபுவின் குரலில் துயரமிருந்தது. எலுமிச்சைச்சாற்றை மெலிதாக உறிஞ்சினார். பா அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். தன் மறைமுக கோரிக்கை நிறைவேறுமா இல்லையா என்பது போலிருந்தது அவரது பார்வை.

“மிலி… ஆன்மாவின் தேவைகளை காணக்கூடிய அகக்கண்ணை மறைக்கும் விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்காம இருக்கறதுதான் நல்லது” என்றார் முத்தாய்ப்பாக. எதிர்பார்த்த பதில்தான். கல்விக்கே அவரிடம் அளவுக்கோல் இருக்கும்போது இம்மாதிரியான சிறுப்பிள்ளைத்தனமான ஆசைகளையெல்லாம் அவர் முன் வைத்து விட முடியாது. கஸ்துாருக்கு ஏமாற்றமாக இருநதது. மூத்த மகன்கள் இருவரும் அருகில்லாதது கூட அவருக்கு ஏமாற்றம்தான். மூத்த மகன் ஹரிலால் இந்தியாவில் தங்கி விட்டதாகவும் அவனுக்கு அவன் தந்தையை போல கல்வி கற்க வேண்டுமென்ற ஆர்வம் இருப்பதாகவும் பா மிலியிடம் கூறியிருந்தார். மோகன்தாஸ் தனது பதிமூன்று வயதான இரண்டாவது மகன் மணிலாலை ஃபீனிக்ஸ் குடியிருப்பிற்கு அனுப்பி விட்டார். ஃபீனிக்ஸ் நிலையம் அருகில் நார்த்கோஸ்ட் லைன் பகுதியில் ஒரு பண்ணையை வாங்கி அதை ரஸ்கின் மற்றும் டால்ஸ்டாயின் சிந்தனைகளை கறாரான வர்த்தகக் கோட்பாடுகளுடன் இணைக்கும் பரிசோதனை முயற்சி அது. இந்தியன் ஒப்பீனியன் இதழின் அச்சுப்பணிகளும் அங்கேயே நடைப்பெற தொடங்கியிருந்தன. இன்னும் முதிராத அந்த குடியிருப்பின் பெரிய நிலப்பகுதியை சுத்தப்படுத்துவதும் தாவரங்களை உண்டாக்கி பேணுவதும் மேலும் மேலும் அறிதலை வளர்க்கும் என்பது அந்த தகப்பனின் கருத்தாக இருந்தது. மகனை கண்காணிக்கும் பொறுப்பை அங்கிருந்த தன் உறவினரான சகன்லாலிடம் ஒப்படைத்திருந்தார்.

இப்போது சிறைக்கு சென்றிருக்கும் இத்தருணத்தில் கூட இந்தியன் ஒப்பீனியன் இதழை சகன்லாலிடமும் ஹென்றி போலாக்கிடமும் ஒப்படைத்திருந்தார். அந்த இதழின் ‘ஜோஹானஸ்பர்க் லெட்டர்’ பகுதியில் ‘Passive Resistance’ என்பதற்கு இணையான இந்தியச் சொல்லுக்கான யோசனைகளை முன்னரே வரவேற்றிருந்தார். வந்திருந்த பல யோசனைகளில் மகன்லால் காந்தியின் “சதாக்கிரகம்“ என்ற வார்த்தை காந்திக்கு பிடித்திருந்தது. “நல்ல நோக்கத்தில் உறுதியாக இருப்பது” என்று சொல்லிப்பார்த்துக் கொண்டபோது அது மிலிக்கும் கூட பிடித்துதானிருந்தது. அதை கொஞ்சம் துல்லியமாக்கி “சத்தியாக்கிரகம்” என்று பாபு சொன்னபோது “வாவ்” என்றாள் மிலி. அவரோ இது passive என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும் பரிசுக்குரிய வார்த்தை கிடைக்கும் வரை இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டு பெருந்தன்மையாக ஒப்புக் கொள்பவர் போல முகத்தை வைத்துக் கொண்டு மிலியை நோக்கினார். அதை கண்டு அவள் சிரித்த போது அவரும் பகபகவென்று சிரித்தார்.

மிலி உறக்கதிலிருந்து எழுந்து அழுத தன் சின்னஞ்சிறு மகனை அள்ளியெடுத்துக் கொண்டாள். அது பாலுக்கான அழுகை. ஹென்றியும் அவளும் இரண்டு குழந்தைகளும் முக்கியமாக காந்தியும் இருந்த வீடு இப்போது யாருமற்ற வெறுமைக்குள் புகுந்துக் கொண்டிருந்தது. நேட்டால் இந்திய காங்கிரஸ் கூட அவர் கைதானதை எதிர்த்து பெரிய கூட்டமொன்று நடத்தியது. அக்கூட்டத்தில் டாக்டர் நாஞ்சி, காந்தி சிறைக்கு சென்றிருப்பது கஸ்துார் பாவுக்குதான் பெரிய இழப்பு என்றாராம். ஹென்றி இதை கூறியபோது மிலிக்கு ஃபீனிக்ஸ் குடியிருப்பிலிருக்கும் பா வையும் அவரது நான்கு மகன்களையும் பார்க்க வேண்டுமாய் தோன்றிய எண்ணத்தை உடனே செயல்படுத்தவும் செய்தாள். பா வுக்கு கணவனை பிரிந்ததில் வருத்தமிருந்தாலும் அதை அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தனது ஏறுமாறான வாழ்விலிருந்து இந்த கலையை அவர் ஏற்கனவே கற்றிருக்க வேண்டும்.

அன்று மிலி, கோட்டும் ஷுக்களும் உங்கள் குழந்தைகளுக்கு சிபாரிசு செய்ய இயலாததற்கு என்னை மன்னித்து விடுங்கள் பா என்று காந்தியுடனான தனது தோல்வியை ஒப்புக் கொண்ட போது, பா, அவர், தான் கற்றுக் கொண்ட குழந்தை ஆங்கிலத்தில் “ஐ டோண்ட் லைக் திஸ் டைப் ஆஃப் ஆடிட்டியூட் ஃப்ரம் ஹி்ம்..” என்றார். மகன்களை இழுத்து வைத்து புராணக்கதைகளை சொல்வதிலும் கீதைக்கு விளக்கம் கூறுவதிலும் பா வுக்கு ஆர்வமிருந்தது. வீட்டு வேலைகள் அதிகமென்பதால் மகன்களுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போவது அவருக்கு வருத்தம்தான். ஆனால் அதை விட வருத்தமான விஷயம் அவரது கணவர் உணவு வகைகளில் பல்வேறு விதமாக பரிசோதனைகள் செய்வது. சில நாட்கள் உப்பில்லாமலேயே உணவுகள் தயாராகும். அடிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களினால் காய்ச்சப்படும் சர்க்கரையை நிராகரிப்பார். குழந்தைகளுக்கு பிடித்தமான வறுத்த உணவுகளெல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய பட்டியலில் இருந்தன. முட்டைகோஸ் சூப்பும் பச்சை வெங்காயமும் அலுத்துப்போயின. மிலிக்கு தன் தோழியின் தாய்மை ஏக்கம் புரிந்திருந்தது.

அவளுக்குமே டிராய்வில்லில் ஆல்பர்மர் தெருவில் பா வோடும் மகன்களோடும் வாழ்ந்த வீட்டிலிருந்து அவர்களை பிரிந்து வந்தது ஏக்கமாகதானிருந்தது. பாம்பாத்தா கலகம் வெடித்தபோது ஆம்புலன்ஸ் படையணியை உருவாக்குவதற்காக மோகன்தாஸ் நேட்டாலுக்கு செல்ல வேண்டியிருந்ததால் மனைவியையும் மகன்களையும் ஃபீனிக்ஸில் குடியமர்த்தினார். அவளுக்கு அந்த பயணம் இன்னும் நினைவிலிருந்தது. இரண்டு பகலும் ஒரு இரவும் பிடித்த அந்த ரயில் பயணம் அவர்களை மிகவும் களைத்துப்போக வைத்திருந்தது. சரியாக அமைக்கப்படாத கடினமான பாதையில் இரண்டு மைல் துாரம் மங்கலான விளக்கொளியில் வழியெல்லாம் பாம்புகள் பற்றிய பயத்தில் நடந்து சென்றதும் தேவதாஸ் களைப்பில் அழுதுக் கொண்டே வந்ததும் அங்கு போய் சேர்ந்துமே இரவு உறங்குவதற்கான ஏற்பாடுகளை அவர்களே செய்துக் கொள்ள வேண்டியிருந்ததும் இப்போது எண்ணினாலும் பயமுறுத்தியது. பண்ணையிலும் பாம்புகளுக்கும் நரிகளுக்கும் பஞ்சமிருக்காது. எதையும் யாரும் கொல்லவோ துன்புறுத்தவோ முடியாது. தண்ணீரை அளவாக உபயோகிக்கும்போதே தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். ஜுலுக்களின் பிரச்சனை வேறு. பண்ணைக்கும் இரயில் நிலையத்துக்குமிடையே ஆயிரம் ஏக்கர் அளவில் பெரிய கரும்புத் தோட்டமிருந்தது. ரயில் நிலையத்திற்கு அருகிலிருக்கும் சிறிய கடையை விட்டால் பொருட்கள் வாங்க வேறிடம் கிடையாது.

கஸ்துார் மிலியின் மகனை கையிலெடுத்துக் கொஞ்சினார். மதிய உணவுக்கு பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தில், தன் கணவர் கைதானதில் தனக்கு வந்து ஏராளமான தந்திகளை எடுத்துக் காட்டினார். அவற்றில் பொதுவாக, இந்தியர்களின் நலனுக்காக திரு காந்தி சுடர் விட்டு பிரகாசிக்கும் தியாகத்தைப் புரிந்திருக்கும் இவ்வேளையில் திருமதி காந்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவர்களது கஷ்டங்களுக்காக எங்களின் உளப்பூர்வமான அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்பதான வாசகங்கள் இருந்தன.

அங்கிருந்து கிளம்பியபோது ஹரிலால் “என்னோட அப்பா முறையான படிப்பு படிச்சிருக்கார். ஆனா எனக்கு மட்டும் ஏன் அது கூடாதுங்கிறாரு?” என்றான் மிலியிடம். முகத்தில் கோபம் அழுத்தமாக படிந்திருந்தது.

“ஹரி… உன்னோட கேள்வி நியாயமானதுதான். இன் ஃபேக்ட், அவர் டர்பனில் இருக்கறப்போ மகன்களுக்கெல்லாம் முறையான கல்வி கொடுக்கணும்னுதான் நினைச்சிருந்தாராம். ஆனா எங்கே எப்படி கல்வியளிக்கறதுன்னு அவருக்கு தெரியில. மிஷனரிகளால் நடத்தப்பட்ட பள்ளிகளில் அவர் சேர்க்க விரும்பல. ஐரோப்பியர்களுக்கான பள்ளிக்கு அனுப்பினா அது அவருக்கு கிடைச்ச சலுகையா போயிடும். அப்படியே சேர்த்தா கூட பிள்ளைகள் இனரீதியான ஏளனத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்.. அப்றம்…

மிலியின் பேச்சை இடைவெட்டினான் ஹரிலால். “எல்லாம் சரிதான். ஆனா முறையான கல்வி அவருக்கு கிடைச்சிருக்கலேன்னா இப்போ செஞ்சிக்கிட்டிருக்க வேலையை அவரால செய்ய முடியாது தெரியுமா?”

மிலி பதிலேதும் சொல்லவில்லை. அவன் அழுத்தமாகவும் கோபமாகவும் “நானும் அவரை போல ஆகணும்” என்றான்.

பல்வேறு எண்ணங்களில் மூழ்கியவளுக்கு பசியாறி விட்டு மடியிலேயே உறங்கிப்போன மகனின் நினைப்பு வந்து உறுத்த அவனை துாக்கி படுக்கையில் கிடத்தி விட்டு காந்தியின் அறையை எட்டிப்பார்த்தாள். அன்றைய தினம், இருக்கும் சிறிய அறைகள் இரண்டை தங்களுக்கொன்றும் பாபுக்கொன்றுமாக ஒதுக்கி விட்டு கணவனை அழைத்துக் காட்டியபோது அவன் “ஓய்… ரெண்டு ரூமையையும் அழகா மாத்திட்டியே?” என்றான். பிரியமான நேரங்களில் மிலியை ஓய்… என்று அழைப்பான்.

“ஆமா… ஒண்ணு நமக்கு… ஒண்ணு பாபுவுக்கு…” என்றாள்.

பாபுவுக்கான அலமாரியில் அவருடைய சட்டப்புத்தகங்கள், சைவ உணவு முறை குறித்த பிரசுரங்கள், குர்ரான், பைபிள், பகவத்கீதை மற்றும் சில இந்துசமய நுால்கள் இவற்றோடு டால்ஸ்டாயின் படைப்புகளும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. முன்வரிசையில் அவற்றை முந்திக்கொண்டு ஜான்ரஸ்கினின் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்ற தலைப்பிட்ட புத்தகம் நின்றிருந்தது. காந்தியின் பல்வேறுப்பட்ட பணிகளில் அடுக்கி வைத்தல் போன்ற உதவிகள் அவருக்கு மிகவும் தேவையாக இருந்தன. ஜோஹானஸ்பர்க்கிலும் டர்பனிலும் அவர் ஆற்றிய சட்டப்பணி அவரது வருமானத்திற்கானது. டிரான்ஸ்வாலிலும் நேட்டாலிலும் இந்தியர்களின் உரிமைகளை காப்பதற்காக எடுக்கப்படும் அரசியல் முன்னெடுப்புகள் அவருக்கு சமூகத்தில் நன்மதிப்பை பெற்றுத் தந்திருந்தது. அவர் நடத்தி வந்த இந்தியன் ஒப்பீனியன் செய்தித்தாளில் அவரெழுதும் கட்டுரைகள் அவருடைய அரசியல் பணிகளுக்கு பிரச்சாரமாக அமைந்தன.

இதழின் வேலைகள் தலைக்கு மேல் ஓடிக் கொண்டிருக்கும்போது வெறுமனே வீட்டை சுற்றிப்பார்த்துக் கொண்டிருப்பது உள்ளத்தை உறுத்த வேர்கடலைகள் இருந்த கிண்ணத்தை மனைவியிடம் நீட்டி “எனக்கு போதும் மிலி… நிறைய வேலையிருக்கு” என்றான் ஹென்றி.

“ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்… இன்னும் ஃபைவ் மினிஸ்ட்ஸ் மட்டும்தான். இதை மட்டும் பாத்திருங்க – கீழே.. கீழே பாருங்க… உங்க காலுக்கு கீழே” என்றாள் துண்டுதுண்டாக. அவன் அப்போதுதான் தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தையும் கூடவே சாளரங்களில் புதிதாக தொங்கவிடப்பட்டிருந்த திரைசீலைகளையும் கவனித்தான். திரைசீலை வாங்குவது தொடர்பாக பாபுவுக்கும் மிலிக்கும் ஏகப்பட்ட வாக்குவாதங்கள் நடந்தும் உடன்பாடு எட்டாமல் வழக்கு அவனிடம் வந்திருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

“திரைச்சீலைகள் வீட்டை அழகுப்படுத்தும்ங்கிறது என்னோட கட்சி. ஆனா பாபு அது இயற்கையான வெளிச்சத்தை காட்சிகளையும் மறைச்சிடும்னு சொல்றாரு” என்றாள் மிலி கணவனிடம் புகார் சொல்லும் விதமாக. அவள் லேசாக கண்ணடித்தது போலிருந்தது ஹென்றிக்கு. காந்தி அவன் சொல்ல வருவதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

அவன் தீவிரமான தொனியில் “அண்ணா எது இயற்கையின்னு நமக்கு தெரியிலன்னு நெனக்கிறேன்” என்றான்.

“ஓ… நோ… நோ… நமக்கது நல்லாவே தெரியும். நமது உள்ளுணர்வின் வழியாக அது மிக தெளிவாக நம்மிடம் பேசுகிறது. ஆனால் அதை நாம கூர்ந்து கேட்கணும்” என்றார் அவரும் தீவிரமாக.

அவர்கள் எண்ணங்களால் வேறெங்கோ செல்வது புரிந்து மிலி விளையாட்டு பேச்சை நிறுத்தி விட்டு கணவனை கெஞ்சலாக பார்க்க, அவன் அவரிடம் பேசி திரைசீலைக்கு ஒப்புதல் வாங்கித் தந்தபோது அவளுக்கு கணவன் மீது சற்று பொறாமையாக கூட இருந்தது. கூடவே நாற்காலிகளுக்கு மெத்தைகள் தைப்பது குறித்தும் அவள் அனுமதி வாங்கிக் கொண்டாள். அன்றிரவு அவனிடம் ரகசியமாக சுவரில் மாட்டுவதற்கு படமொன்று வாங்கியிருப்பதாக சொன்னபோது அவன் அதை காட்டுமாறு கேட்டான். அது அழகான குழந்தையொன்றின் படம். அவன் கண்கள் பளபளக்க நிமிர்ந்தபோது அவள் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

மோகன்தாஸுக்கு மனைவி மகன்கள் அடங்கிய தனது பெரிய குடும்பத்துக்கான பொருள் தேடல் குறித்த கடமையோடு சுயம் அறியும் தேடலும் மதங்களுக்கிடையேயான உரையாடலும் உணவு மருத்துவம் ஆன்மீகம் என்று பெருகிய ஆர்வமும் அவரை ஓரிடம் நிற்காதவராக மாற்றியிருந்தன. கூடவே பிரம்மச்சரியத்தின் மீதும் பிடிப்பு வர தொடங்கியிருந்தது. இவள் பா விடம் இது பற்றி கேட்டபோது அவர் “ஏற்கனவே நாலு பசங்க” என்று சிரித்தார்.

தன் ரசனைக்கேற்ப மாற்றியிருந்த வீட்டை கணவனுக்கு காண்பித்த பிறகு நல்லாருக்கா..? நல்லாருக்கா? வீடு எப்டியிருக்குன்னு சொல்லு ஹென்றி” என்றாள் மிலி கெஞ்சலாக. சிறுபிள்ளையாய் மலர்ந்ததிருந்த மனைவியின் தோற்றம் சட்டென்று நெகிழ்த்த அவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் ஹென்றி. திண்மையான உடற்கட்டும் நேர்த்தியான உருவமும் கொண்ட இருபதுகளின் நடுவிலிருக்கும் யூத இளைஞன் அவன். அடர்ந்த அவன் தலைமுடியும் மூக்குக்கண்ணாடிக்கு பின்னிருந்த அவனது உருண்டையான அறிவார்ந்த விழிகளும் கூரிய நாசியும் அடர்ந்த புருவமும் மெல்லிய உதடுகளும் அந்த நீள்முகத்தில் பொருத்தினாற்போல் அமைந்திருந்த காதுகளும் அவனை மேலும் கவர்ச்சியானவனாக காட்டியது. இந்தியாவுக்கு வருவதற்குமுன்பே அந்நாட்டின் மீது நல்லவிதமான சித்திரம் கொண்டிருந்தான். இந்திய நலன்கள் மீதான முழுஅக்கறையும் பிடிவாதமான குறுகிய மனப்பான்மைக்கும் மதவெறிக்கும் முடிவுகட்ட வேண்டும் என்பதிலும் அவனுக்கு ஆர்வமிருந்தது. தன் சொந்த இனம், குழு அல்லது மதப்பிரிவின் விடுதலையில் அல்லாமல் மொத்த மனித இனத்தின் ஒன்றுபடுதலில் நம்பிக்கை கொண்டிருந்தான்.

“எப்டீ.. எப்டீ மிலி ஒரே நாள்ல இதெல்லாம் சாத்தியம்?” கிண்ணத்திலிருந்த நிலக்கடலைகளை எடுத்து வாயிலிட்டுக் கொண்டான்.

“நான் யாரு? மிலி கிரகாம் போலாக். என்னால எல்லாமும் முடியும்” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டாள் மிலி. எப்படியோ போராடி காதலனுடன் இணைந்து விட்ட திருப்தி அவளுடலை மெருகேற்றி மேலும் மென்மையாக்கியிருந்தது.

“அந்த இந்திய இளைஞனுக்கு இடம்?” அவர்களுடன் இந்திய இளைஞன் ஒருவனும் தங்கியிருந்தான்.

“முன்னறைதான் இப்போ ஃப்ரீ ஆயிடுச்சுல்ல. அவர் அங்கே தங்கிக்கலாம்”

அறைகலன்கள் இல்லாத முன்னறை தங்குவதற்கு ஏற்ற இடமாக மாறியிருந்தது. பாபூ சொல்வதுபோல உடைமைகளுக்கு அடிமையாவது பெரும் பிசகுதான் என்று தோன்றியது ஹென்றிக்கு. அறைகலன்களும் அநாவசிய பொருட்களும் இல்லாதது உடனுக்குடன் வீட்டை விடுப்பதற்கும் வசிப்பதற்கு மட்டுமே கொள்ளத்தக்க இடமாக அதனை கருதுவதற்கும் வாய்ப்பளிக்கும். ஒருமுறை குஜராத்தை சேர்ந்த காந்தியின் சிறு வயது நண்பரொருவர் வியாபாரம் நட்டப்பட்டு பணமுடை ஏற்பட்டுப்போனதால் மனம் நொந்து மோகன்தாஸை பார்ப்பதற்காக டிரான்ஸ்வாலிலிருந்து வந்திருந்தார். அவரின் பின்புலம் காந்திக்கு தெரிந்திருந்தது.

“நீங்க உங்க வீட்ல இருக்கற அவசியமில்லாத பொருள்களையெல்லாம் வித்துட்டா கணிசமான பணம் கிடைக்குமே?“ காந்தியின் தடாலடியான இந்த ஆறுதலை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர்கள் பரம்பரையாக தென்னாப்பிரிக்காவில் தொழில் செய்திருந்தமையால் அவர்களிடம் பொருட்கள் நிறையவே சேர்ந்திருந்தன.

“பரம்பரையாக வந்தவைகளோ பரிசாக கிடைச்சதோ எதுவானாலும் சரி… அதையெல்லாம் பாதுகாப்பதே பெரிய வேலையாகவும் பிறகு அதே கவலையாகவும் மாறிடும். பொருட்களை விட்டு விலகாமல் அவற்றின் மீது அதீதமா பற்று வைச்சிருந்தோம்னா அது ஆன்மாவை காயப்படுத்திக்கிறதுக்கு சமம். உங்களோட பிரச்சனை என்னன்னு சொல்லட்டுமா?” என்றபோது அந்த நண்பர் பேசாமலேயே அமைதி காத்தார். நண்பரின் பேச்சில் அவருக்கு உடன்பாடில்லாமல் இருந்திருக்கலாம்.

மோகன்தாஸ் அதை சட்டை செய்யாதவராக “உங்களிடம் எவ்வளவு பொருள்கள் இருக்குதுங்கிறதை விட உங்களிடம் இருக்கற பொருள்களைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதுதான் முக்கியம். ஒற்றையாடையை மட்டுமே வச்சிருந்த துறவியொருத்தர் அரசரை பார்க்க வந்திருந்தாராம். துறவி உண்மையாகவே பொருளாசையிலிருந்து விடுதலையாகிட்டாரான்னு சோதிப்பதற்காக அரசர் தனது தவவலிமையால அந்த அரண்மனையை எரிச்சிட்டாராம். இப்போ அரண்மனையிலிருந்த அத்தனை பொருள்களோட அந்த ஒற்றையாடையும் எரிஞ்சுப்போச்சு. அந்த துறவி மிகுந்த கவலையாகிட்டார். அரசர், உங்களிடம் இருந்தது ஒரேயொரு ஆடை மட்டும். அதற்கு பதிலா எளிதாக வேறொரு ஆடையை பெற்றுக்கொள்ளலாம். ஆனா என்னோட அழகிய மாளிகைக்கும் அதிலிருந்த அபூர்வமான பொருள்களுக்கும் மாற்றே கிடையாது. ஆனா நீங்கதான் என்னை விட ரொம்ப வருத்தப்படுறீங்கன்னு சொல்லிட்டு அர்த்தத்தோட அந்த துறவியை பார்த்தாராம்” பாபு இதை சொல்லிக்கொண்டே அந்த மனிதரை பார்த்தபோதும் அவர் பேசாமலேயே இருந்தார். மோகன்தாஸுக்கு நண்பரின் எண்ணவோட்டம் புரிந்தாலும் விடாப்பிடியாக “நம் வாழ்க்கைய பொருட்களால் நிறைத்துக் கொண்டால் அதன்பின் நம்மால் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்க முடியாது” என்றார். அவர் கிளம்பிய பிறகு காந்தி, நான் இப்போ என்னோட நண்பருக்கு அன்புள்ள எதிரியாயிட்டேன் என்று சிரித்தது நினைவுக்கு வந்தது ஹென்றிக்கு.

ஹரிலால் கூட கணவரின் அன்புள்ள எதிரியாகி விட்டதாக பா சொன்னார். அப்போது அவர்கள் டர்பனில் பீச்குரோவ் பகுதியில் வசித்திருந்தனர். அந்த வீடு தனியானது என்றாலும் தாராளமான அறைகளையும் ஐரோப்பியரின் வீட்டை போல அறைகலன்களும் அழகான தோட்டமும் கொண்டதாக இருக்குமாம். ஆனால் கிரே தெருவில் வசிக்கும் குஜராத்தி பெண்களை சந்தித்து பேச வேண்டுமென்றால் கூட அதற்கென தனியாக மெனக்கெட வேண்டியிருக்கும் என்றார். அங்கு அவர்களுடன் குஜராத்தி சமையல்காரரும் தமிழ் பேசும் எழுத்தரான வின்சன்ட் லாரன்ஸ் என்பவரும் இருந்தனராம். அவர்களின் பதினாறு வயது மூத்த மகன் ஹரிலால் தகப்பனை போலவே இருப்பானாம். பம்பாய் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதுவதற்காக வேண்டி இந்தியாவிலேயே தங்கி விட்டதில் அவருக்கு நிறைய வருத்தமிருந்தது. ஆனால் மிலியும் ஹென்றியும் அவரை சந்தித்த நாளொன்றில், பா, ஹரிலால் காதலில் விழுந்து விட்டான் என்றார். சற்று பதற்றமாகதான் பேசினார். அது மகிழ்ச்சியிலா? வருத்தத்திலா என கண்டுப்பிடிக்க இயலவில்லை அவர்களால். மகன், இந்தியாவில் ராஜ்கோட் வழக்கறிஞர் ஹரிதாஸ் வோரா என்பவரின் மகளை காதலிக்கிறான் என்றும் அதை கணவனிடம் சொல்லும் துணிச்சல் தனக்கில்லை என்றும் ரகசியமாக கூறினார். ஒருவேளை இதற்கும் மிலியின் சிபாரிசு தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த துணிச்சல் மிலிக்குமே இல்லை. இருந்திருந்தால் அன்று காந்தி அலுவலகத்துக்கு கிளம்பிய பிறகு அவரை மருதாம்பா தேடி வந்த விஷயத்தை அப்போதே கூறியிருந்திருப்பாள்.

அப்போது மருதாம்பா சுப்பையாவின் மீது காதல் கொண்டிருந்தாள். அவள் டாக்டர் பூத்திடன் உதவியாளராக பணியாற்றியவள். தனக்கென சொந்தம் யாருமற்றவள். அது மிலி லண்டனில் இருந்த காலக்கட்டம். சுப்பையா, பிரிட்டிஷாருக்கு ஆதரவாக போயர்களுக்கு எதிராக போரிட வேண்டி தமிழ்நாட்டிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு வந்தவன். கப்பல் பயணம் உடலை முடக்கி இறக்கக்கிடந்தவனை வைத்தியம் பார்க்கும்பொருட்டு மோகன்தாஸ் மிகுந்த நெருக்கடிக்கிடையே பெற்றுக் கொண்டிருந்தார். பிரிட்டிஷாருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அவனை குணம் பெற செய்து, அவர்கள் செய்த உதவிக்கு கைமாறாக ஆம்பலன்ஸ் படையில் அவனை ஈடுப்படுத்தியிருந்தார்.

“பாபூ எதுக்கு பிரிட்டிஷ்காரங்களுக்கு ஆதரவா ஆம்பலன்ஸ் படை உண்டாக்கினாரு? அதுவும் இராணுவ அனுபவமே இல்லாதவங்களை வச்சு?” மிலிக்கு எல்லாவற்றையும் கேட்டு தெரிந்துக் கொள்ளும் ஆர்வமிருந்தது.

ஆம்புலன்ஸ் படையில் இந்தியர்கள் செய்திருந்த உதவியை ஹென்றியும் அறிந்திருந்தான். போர் முனைக்கு அனுப்பப்பட்ட இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் இருபத்தைந்து மைல்கள் நடக்கவும் பல மணி நேரம் உணவும் தண்ணீரும் இல்லாமலிருக்கவும் திறந்த வெளிகளில் படுத்துறங்கவும் வேண்டியிருந்தது. தம்மை சுற்றிலும் குண்டுகள் விழுந்துக் கொண்டிருக்கும் நிலையில் அடிப்பட்டவர்களை பாதுகாப்பிடங்களுக்கு சுமந்து செல்லவும் சிப்பாய்களை முகாம் விட்டு முகாம் தொடர்ந்து பின்தங்கியவர்களை கவனித்துக் கொள்வதுமாக பழக்கமில்லாத வேலைகளில் அவர்கள் ஈடுப்பட்டனர். வேறு சிலர் எதிரியால் கைவிடப்பட்ட ரைஃபிள்களையும் ரவைகளையும் பொறுக்கிக் கொண்டு வர அனுப்பப்பட்டார்களாம். ஸ்பியன்கோப் பகுதியில் கோவேறு கழுதைத்தொடர், சக்தியற்று விழுந்து கிடந்த சிப்பாய்களுக்கு தண்ணீரை சுமந்துக் கொண்டு கோப் குன்றின் அபாயமான சரிவில் ஏறிச் சென்றதாம்.

“பிரிட்டிஷ் பேரரசின் குடிமக்கள்ங்கிற முறையில் பிரிட்டிஷ் தரப்புக்கு ஆதரவு தரலாம்னு அவர் நினைச்சிருக்கலாம். ஏற்கனவே டர்பன்ல டாக்டர் பூத் நடத்திட்டு வந்த ஆஸ்பிடல்ல பாபு தன்னார்வ பணி செஞ்சுட்டிருந்தார். அவர் கூட பாபுவை ஊக்குவிச்சிருக்கலாம். பிரிட்டிஷ்காரங்க ஜெயிச்சா இந்திய மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும்னு பாபுவுக்கு எண்ணிமிருந்தது எனக்கு தெரியும்” என்றான் ஹென்றி.

திடகாத்திரமானவர்களேயே உருக்குலைக்கக்கூடிய இரவு நேர பணிக்கு பிறகு சோர்வாகவும் மன அழுத்தத்தோடும் இருக்கும் சிப்பாய்களை காந்தி, விருப்பு வெறுப்பற்ற பாவத்தோடும் உற்சாகமாகவும் உரையாடலில் தன்னம்பிக்கையோடும் அணுகுவாராம். அவர் அன்பான கண்கள் கொண்டவராக இருந்தார் என்பதாக கண்டவர்கள் சொன்னபோது மிலிக்கு குறுகிய நெற்றியும் கரிய மீசையும் கொண்ட அந்த இந்தியருக்கு கருணை மிகுந்த கண்கள் இருப்பது உண்மைதான் என்றெண்ணிக் கொண்டாள். ஆனால் அந்த கண்களுக்கு மருதாம்பாவின் காதல் தெரிய வரவில்லை.

அப்போது மருதாம்பா ஃபீனிக்ஸ் குடியிருப்புக்கு வந்து விட்டிருந்தாள். குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை இரும்பும் நெளித்தகடுகளையும் கொண்டு அமைத்துக் கொண்டனர். அங்கு நிலம் எந்த தனிநபருக்கும் சொந்தமானதாக இருக்கவில்லை. பாதைகளும் சிறு சாலைகளுமே ஒருவர் நிலத்தை மற்றவர் நிலத்திலிருந்து பிரித்தது. குடியிருப்புவாசிகள் அவரவருக்கு தேவையான பயிர்களை பயிரிட்டுக் கொண்டனர். இந்தியன் ஒப்பீனியன் இதழ் வெளிவரும் நாளில் குடியிருப்பே பரபரப்பில் ஆழ்ந்து விடும். காந்தியும் ஹென்றிபோலாக்கும் கடைசி நிமிடம் வரை கட்டுரைகளை அச்சுக்கு தந்துக்கொண்டேயிருப்பார்கள். ஆயில் இன்ஜின் பழுதாகி விட்டால் கூட இதழ் வேலைகள் நின்று விடாது. இயந்திரத்தின் கைப்பிடிகளை சுழற்றுவதற்கு ஜுலுக்களின் குடியிருப்பிலிருந்து திடகாத்திரமான பெண்கள் வரவழைக்கப்படும்போது மருதாம்பாளும் வரிந்துக்கட்டிக் கொண்டு வேலையில் இறங்கி விடுவாள். கடைசிதாள் அச்சிடப்படும்போது எப்படியும் நடுநிசியாகி விடும். வேலைகளெல்லாம் முடிந்தபிறகு பாபுவையும் பா வையும் அவர்கள் இல்லத்தில் விட்டுவிட்டு இரவு வணக்கம் சொல்லி விட்டு அவரவர் வீடு திரும்பும்போது அடுத்த நாள் பிறந்து விடும்.

மருதாம்பா இளமையின் வசீகரமும் களையான முகமும் கொண்டிருந்தாள். பாபுவின் நடவடிக்கைகளின் மீது புரிதலும் ஏற்பும் கொண்டவளாக, இலட்சியவாதம் பேசுபவளாக இருந்தாள். சேவைகள் செய்வதிலும் ஆர்வமிருந்தாலும் வயது அவளை வென்றிருந்தது. சுப்பையாவின் மீது காதல் வசப்பட்டிருந்தாள். இது பாபுவுக்கு தெரிய வந்தபோது அவர் மிக மிக வருத்தம் கொண்டார்.

”மருதாம்பா பற்றி நான் முழுசா தெரிஞ்சிருக்கேன்னு நம்பினேன். ஆனா அது உண்மையில்ல மிலி…” என்றார்.

“காதல் அத்தனை மோசமான விஷயமா பாபூ?”

“அது அடுத்தக்கட்டத்தை எட்டியிருந்தால் அது மோசமான விஷயம்தானே? மேலும் என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்காம இருந்தது பெரிய தப்பு. ஒருவேளை அவள் ஆதரவற்றவள். யாரிடமும் அவள் பொறுப்பு குறித்து பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லைங்கிற எண்ணம் என் மனசில இருந்திருக்குமோ? அதனால்தான் நான் அவளை சரியா கவனிக்கலையோ?” வருத்தத்தில் தோய்ந்து வந்தது அவரது குரல்.

“இப்டியெல்லாம் நீங்க உங்க மேல பழியை சுமத்திக்க அவசியமில்லை பாபூ”

ஆனால் டாக்டர் பூத்திடம் மருதாம்பாவை ஒப்படைக்கும் வரை அவர் அது பற்றி நிறையவே வருந்தியது அவளுக்கு தெரியும். ஆனால் மருதாம்பா தான் சுப்பையாவிடம் காதல் கொண்டதில் தவறேதும் இல்லை என்று தெளிவாகவே நம்பினாள். அதையே பாபுவிடமும் கூறியிருந்தாள். சுப்பையா இப்போதும் ஃபீனிக்ஸில்தான் இருந்தான். அவன் திருமணம் செய்து கொள்ளாமல் தீவிர பிரம்மச்சரிய விரதத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்றும், தான், அந்த விரதத்தை உரிய காலத்தில் முடித்து வைக்கும்வரை அது தொடர வேண்டும் என்றும் காந்தி கூறியிருந்தார்.

“நீங்க சுப்பையாவுக்கு அப்டி ஒரு தண்டனையை கொடுத்திருக்க வேணாம் பாபூ” என்றாள் மிலி.

“அது தண்டனையில்ல… ஒருவன் பிரமச்சரியத்தை கடைப்பிடித்தானெனில், பூரணத்தை நோக்கி அவனால் தன் முழு கவனத்தையும் செலுத்த முடியும்”

”ஆனால் அது சாமானிய மனித சிரமங்களை புரிந்துக் கொள்ள உதவாது. பாபூ… நீங்க சூசகமாக குழந்தை பெத்துக்கறதே தப்புன்னு சொல்றீங்க”

“இல்ல. நா அதை தவறுன்னு சொல்லல”

”திட்டவட்டமா சொல்லலேன்னாலும் குழந்தை பெத்துக்கறது சதையின் மேலுள்ள வேட்கைக்கு சலுகை கொடுப்பது மாதிரி்ன்னு ஒரு தொனி தெரியுது உங்க நடவடிக்கையில. உடல் வேட்கை ஒண்ணுதான் குழந்தைகளை படைப்பதற்கான ஒரே வழியா இருக்கு. அது இல்லாமபோனா மனித இனமே அழிஞ்சு போயிடும். உடல் வேட்கை அத்தனை கொடுமையான விஷயமா?“

”ஆமான்னு உறுதியா சொல்ல முடியில. ஏன்னா மனித இனம் நாம் நம்பும் பூரணத்துவம் அடையறவரைக்கும் தொடர்ந்து வளர்ந்தாகணுமே. ஆனா வாழ்க்கையில் மாபெரும் லட்சியமும் பணியும் அமையப்பெற்றவர்கள் தங்கள் ஆற்றலையும் பொழுதையும் ஒரு சிறு குடும்பத்தை கவனிப்பதில் செலவழிக்கறது சரியா? அவங்க அதை விட பெரிய பணிக்காக இங்க வந்தவங்க இல்லையா?”

”எனக்கு ஒண்ணு புரிஞ்சுக்க முடியுது பாபூ… பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பது பெற்றோராக இருப்பதை விட உயர்ந்தநிலைன்னு நீங்க நினைக்கிறீங்க”

அவர் பதிலேதும் கூறாது மென்மையாக சிரித்தார். அடுத்தநாள் குழந்தையோடும் கணவரோடும் வந்திருந்த மருதாம்பாவை கூட இதே போன்று மென்மையான சிரிப்புடன்தான் ஆசிர்வதித்திருந்தார். ஏனோ அந்த சிரிப்பை இப்போது பார்க்க வேண்டுமாய் தோன்றிய கணமே, அவர் சிறையிலிருக்கும் உண்மை நெஞ்சை வருத்தியது.

அவசரச்சட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்ததிலிருந்தே அவர் போராட்டம், கூட்டம், அதிகாரிகளை சந்திப்பது, கடிதம் எழுதுவது, மனு போடுவது என்று பரபரப்பாகவே இருந்தார். வீடு திரும்பும்போது இரவு பதினொன்றோ இரண்டோ கூட ஆகி விடும். அன்று வெகுநாட்களுக்கு பிறகு ஒன்பது மணிக்கு உணவு மேசை நிரம்பிய மகிழ்வில் போலாக், அர்னால்டின் Song Celestial பாடலை வாசித்தபோது அதை மோகன்தாஸ் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு அவசரச்சட்டம் குறித்த விவாதம் ஓடியது. அதன் முடிவில் மோகன்தாஸ் மிக வருத்தத்தோடு, “இந்த சட்டம் ஆசிய மக்களின் வருகையை அடைச்சுட்டு அதற்கு பதிலா டிரான்ஸ்வாலை வெள்ளையர்களுக்கான இடமா மாத்திடும்” என்றார். அன்றைய பிரார்த்தனையில் கூட அவர் அளவுக்கதிகமாக உருகியது போலிருந்தது மிலிக்கு.

என்னுயிரை ஏற்றுக்கொள், இறைவா,
அது உனக்கு படைக்கப்பட்ட தாகட்டும்.
என் நொடிகளையும் நாட்களையும் ஏற்றுக்கொள்
அவை, உன் துதியின் நீரோட்டமாகட்டும்.
என் கரங்களை ஏற்றுக்கொள், அவை
உன் அன்பின் உந்துதலில் இயங்கட்டும்.

என் பாதங்களை ஏற்றுக்கொள், அவை
உனக்கென விரைந்து எழில் சேர்க்கட்டும்.
என் குரலை ஏற்றுக்கொள், என் மன்னவன்
உனக்கென நாளும் அது பாடட்டும்.
என் உதடுகளை ஏற்றுக்கொள், அவை
உன் செய்திகளால் நிறைந்திருக்கட்டும்.

என் வெள்ளியும் தங்கமும் ஏற்றுக்கொள்
எனக்கெனச் சிறு துளியும் கொள்ளேன்.
என் அறிவை ஏற்றுக்கொள், என் ஆற்றல்கள்
உன் சித்தம் செயலாய் ஆகட்டும்.
என் முனைப்பை ஏற்றுக்கொள் –
உனதாகட்டும், அது இனியும் எனதன்று.

என் இதயத்தை ஏற்றுக் கொள், அது உனது.
இனியுன் அரச அரியணை யாகட்டும்.
என் அன்பை ஏற்றுக்கொள், இறைவா
அதன் செல்வங்களை உன் பாதங்களில் இடுகின்றேன்.
என்னை ஏற்றுக்கொள், என்றும்
உனக்கே உரியேன், யாவும் உனக்கே!

பாபுவின் குரலிலிருந்த உருக்கம் மிலியின் மனதை நெகிழ்த்தியது.. கர்ப்பிணியான அவள் தனது பகல் நேர நடையை பாபுவின் நடைப்பயிற்சியோடு இணைத்துக் கொண்டாள். “பாபூ… போர்களை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?”

எலுமிச்சைச்செடிகளில் உபரியாக தொங்கிய முட்களை கழித்து அதற்கான உரக்குழியில் போட்டுக் கொண்டே, “ஒரு செயலுக்கோ அதன் விளைவுகளுக்கோ அஞ்சி அச்செயலை செய்யாமலிப்பது அறமல்ல” என்றார் மோகன்.

“புரியில பாபூ… அப்டீன்னா நீங்க போரை ஆதரிக்கிறீக்கன்னு எடுத்துக்கலாமா?” டாக்டர் பூத் அவளை நிறைய நடக்க வேண்டும் என்று கூறியிருந்தாலும் பிரசவநாள் நெருங்கி விட்டதால் நடக்கும்போதே மூச்சிரைத்தது.

“படிப்பினை கிடைக்கறவரைக்கும் பணியாற்ற வேண்டியதுதான். ஒருவேளை உண்மையிலுமே படிப்பினை கிடைச்சிருச்சின்னா அதில் மேலும் ஈடுபடுவதற்கான தேவையே இருக்காது”

“அப்டீன்னா நீங்க போர்களின் ஆதரவாளர்ன்னு எடுத்துக்கலாமா? அன்பு வெறுப்பையும் வெல்லும்னு சொல்வீங்களே பாபூ?“

“யெஸ்.. ஆனா நான் பார்த்தவரைக்கும் என் நாட்டு மக்கள் வன்முறையை தவிர்ப்பது சக மனிதர் மேல இருக்கற அன்பினால் அல்ல. கோழைத்தனத்தாலதான். போர்க்களத்தின் வீரத்தை விட கோழைத்தனத்தின் அமைதி மோசமானது. பயந்து நடுங்கிட்டு இருக்கறத விட சண்டையிட்டு சாகறது மேல். ஆனா ஒரு இந்து என்ற முறையில் எனக்கு போர்கள் மீது நம்பிக்கையில்ல. ஆனால், ஏதாவது ஒரு விஷயம் என்னை ஓரளவுக்காவது அதை ஏற்கச்செய்யுமானால், அது போர்முனையில் நாங்கள் பெற்ற அனுபவமாகவே இருக்கும்”

“ஆம்பலன்ஸ் உதவியி்ன்போது போர்க்களத்தில் செலவிட்ட நேரத்தினால் நீங்கள் அடைந்த விநோதமான சிக்கலான முடிவு இது” என்று சிரித்தாள் மிலி.

“ஆமா… எதுவும் நிலையானதல்ல” அவரும் அவளுடன் சேர்ந்து சிரித்தார்.

அவர் ஹரிலாலுடன் சமாதானமாக போக விரும்பியதை கஸ்துாரிடம் சொன்னபோது பா “இனிமே என்ன செய்ய முடியும்? நிலைமை கை மீறிடுச்சு. ஹரி என் கொழுந்தனோட ஆதரவோடு அந்த பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்டான்” என்றார்.

“கேள்விப்பட்டேன் பா… காந்தி புரொடக்டர் ஆஃப் ஏசியாடிக்ஸுக்கு ஹரிலாலோட பெர்மிட் சம்பந்தமா லெட்டர் போட்டிருக்கார்”

“மகனோட திருமணத்தை பத்தி என்ன நினைக்கிறாராம்?” பா வின் குரலில் ஆர்வமிருந்தது.

“அவருக்கு ஒப்புதல் இல்லேன்னாலும் மகனை மன்னிக்க தயாரா இருக்கறதாலதானே அந்த கடிதத்தையே எழுதியிருக்காரு”

மிலியின் பேச்சிலிருந்த உண்மை கஸ்துாரின் கண்களில் நீரை வரவழைத்தது.

ஹென்றி வீடு திரும்பியபோது விளையாட சென்றிருந்த அவளின் மூத்த மகனும் தகப்பனின் கையை பிடித்தபடி வந்து சேர்ந்திருந்தான். மதிய நேரங்களில் உணவு மேசை ஆட்களின்றி இருப்பது வாடிக்கையென்றாலும், காந்தி சிறைக்கு சென்றிருந்த இந்நாளில் அது மேலும் வெறுமையாக தோன்ற, ஹென்றி தனக்கான உணவை தட்டில் எடுத்துக் கொண்டு முன்னறைக்கு வந்தமர்ந்துக் கொண்டான். மிலி சிறிய தட்டில் ரொட்டியும் துருவிய பாலாடைக்கட்டியும் கேரட்டும் வைத்து மகனுக்கு எடுத்து வந்தாள்.

“பாபுக்கு சிறையில ‘மீலி பாப்’தான் சாப்பிட கொடுக்கிறாங்களா?” அவளுடைய குரலில் வருத்தமிருந்தது. அது அவருக்கு செரிமானக் குறைவை ஏற்படுத்தும்.

“இல்ல… அந்த பிரச்சனையெல்லாம் இப்போ சரியாயிடுச்சு. அவருக்கு மேசை வச்சிக்கவும் பேனா மைக்குப்பி வச்சிக்கவும் கூட அனுமதி கிடைச்சிருக்கு”

“நல்ல விஷயம்தான்”

“ஆமா… ஆனா அதை விட நல்ல விஷயம் என்னான்னா அவர் விரைவில் விடுதலையாகிட வாய்ப்பிருக்கு. பாபுவை சமரசத்திட்டத்தின் ஷரத்துகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த பிரட்டோரியாவுக்கு ஸ்மட்ஸை சந்திக்க அழைச்சிட்டு போயிருக்காங்க. வழக்குகளை திரும்ப வாங்கப்போறதாகவும் கைதிகளை விடுவிக்கப்போறதாகவும் அரசு ஊழியர்களாக இருந்த சத்தியாகிரகிகளை திரும்ப வேலையில சேர்த்துக்கறதாகவும் அதுக்கு பதிலா சத்தியாகிரகிகள் தாமாக முன் வந்து தங்களை பதிவு செஞ்சுக்கணும் ஷரத்து தயாராகியிருக்கு”

“பாபு இதை ஏத்துக்குவாரா?”

“ஏத்துக்கலாம்” என்றான்.

மிலியின் உடல், இரவுபகலாக குழந்தையை கவனித்துக் கொள்வதால் எழுந்த சோர்வினாலும் உறக்கமின்மையாலும் தளர்ந்திருந்தாலும் அவள் கேள்விப்பட்டிருந்த நல்ல செய்தியே அவளை விழித்தெழ வைத்தது. சற்றுநேரம் அதை அனுபவித்தப்படி படுக்கையில் அமர்ந்திருக்க மனம் விழைந்தாலும் செய்ய வேண்டிய வேலைகள் படக்காட்சி போல கண்களில் ஓடின. மூத்தமகன் எழுந்துக் கொள்வதற்குள் உணவு தயாரிக்க வேண்டும். அதற்குள் இளையவன் பாலுக்கு அழுவான். ஹென்றியை கிளப்பி விட வேண்டும். வீட்டு வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும். ஆனால் எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டபோது அந்த மந்திரவார்த்தை மனதிலிருந்து எழுந்து “பாபு இன்று விடுதலையாகி விடுவார்” என்று காதோரம் சொல்லி விட்டு சென்றது.

ஹென்றி இந்தியன் ஒப்பீனியனுக்கான கட்டுரைகளை வேகவேகமாக எழுதிக் கொண்டிருநதான்.

‘நேட்டாலிலிருந்த வெள்ளையர்கள் டிரான்ஸ்வாலில் நடந்து கொண்டிருந்த போராட்டம் பற்றி முடிவெடுக்க முடியாமல் இருப்பார்கள் என்பதும் அந்தக் காலனியி்ன் இந்தியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதும் எதிர்பார்க்கக்கூடியதே. டிரான்ஸ்வாலில் இருக்கும் பதினைந்தாயிரம் ஆசியர்கள், முழு உலகுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இனப்போரை எதிர் கொண்டிருக்கிறார்கள். அந்தப்போர், ஆசியர்கள் எப்போதுமே அடக்கியாளப்பட வேண்டுமா அல்லது சமத்துவமாக நடத்தப்பட, சக மனிதர்களாக கருதப்பட மனிதனும் அடிமையும் என்ற நிலையில் அன்றி, மனிதனும் மனிதனும் என்ற நிலையில் நடத்தப்பட வேண்டுமா என்பதற்கான போராட்டம்…

என்பதாக அவன் எழுதி முடித்து அச்சுக்கு அனுப்பியிருந்த இரண்டு கட்டுரைகளுக்கடியில் அச்சுக்கு அனுப்பமுடியாத பாபுவுக்கு எழுதிய பிரத்யேக கடிதமொன்றும் இருந்தது. “ஒரு மனிதனை அவனது லட்சியமானது இந்த அளவுக்கு பீடித்து அவனை தன் சொந்த சுகத்தையும் தன் உடல் நலத்தையும் சொந்த ஆர்வங்களையும் குடும்பத்தையும் அவனுக்காக வேலை செய்பவர்களின் மகிழ்ச்சியையும் மறக்க செய்வது என்பது மிகவும் அபூர்வமானது. உண்மையை என்ன விலை கொடுத்தேனும் தேடிச் செல்ல வேண்டும் என்ற இப்சனின் கருத்தை நோக்கி நான் மேன்மேலும் நகர்ந்து வருகிறேன். மேலும் மிக உயர்ந்த மனிதன் என்பவன் தன்னந்தனியாக நிற்பவனே என்ற டாக்டர் ஸ்டாப்மேனின் வார்த்தைகளை நாளுக்குநாள் உணர்ந்து வருகிறேன். உங்களை அண்ணா என்று அழைக்கவே என் மனம் விழைகிறது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களே“ என்றிருந்தது.

அன்று இரவுணவுக்கு பிறகு மிலி, உள்ளறையில் குழந்தைகளுக்காக வாங்கப்பட்ட உணவுப்பொருட்களையும் சமையற்சாமான்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது முன்னறையிலிருந்து ஒலித்த குரல் அவளை சட்டென்று மலரச் செய்தது. அவள் ஆர்வமும் அன்புமாக எட்டிப்பார்த்தபோது பாபு, அவளுடைய மகன்களிடம் விளையாடிக் கொண்டிருந்தார். தாயை கண்டதும் பூவாய் மலர்ந்து சிரித்த குழந்தையோடு பாபுவும் சேர்ந்துக் கொண்டார்.

அந்த சிரிப்பில் சோர்வோ பயணக்களைப்போ ஏதுமில்லை.