கிருத்திகா ஆறு மணிக்கு எழுந்து பாத்ரூம் சென்று விட்டு அவள் அறைக்குள் வந்த போது டிரஸ்ஸிங் டேபிள் மீது பால் டம்ளர் இருந்தது. அதன் மீது பால் ஆறி விடாமல் இருக்க ஒரு சிறிய தட்டு மூடியிருந்தது. இந்த வீட்டுக்கு அவள் திருமணமாகி வந்து கிட்டத் தட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன. ‘தினமும் இப்படிச் செய்யாதீர்கள்’ என்று அவளது மாமியாரிடம் பல விதங்களில் அவள் மன்றாடியும் மாமியார் மசியவில்லை. தன் வார்த்தைகள் அலுப்புற்றுத் தம் நிறத்தை இழந்து விட்டதை அறிந்த ஒரு நாளில் அவள் தனது மன்றாடலை நிறுத்தி விட்டாள்.
கிருத்திகா பாலைக் குடித்து விட்டு கொல்லைப்புறம் சென்று கிணற்றடியில் ஏற்கனவே கிடந்த பாத்திரங்களுடன் பால் டம்ளரையும் மூடியையும் போட்டாள். உள்ளே வந்த போது அந்த நேரத்துக்கு சமையற்கட்டிலிருந்து வரும் பாத்திரங்களின் கடபுடா சத்தம் கேட்கவில்லை. கூடத்தில் அவள் மாமியார் லலிதா உட்கார்ந்திருந்தாள். கிருத்திகாவைப் பார்த்ததும் கையிலிருந்த தினமணியைக் கீழே போட்டு விட்டு “மறுபடியும் காஸ் விலையை நூறு ரூபாய் ஏத்திட்டான்” என்றாள்.
“காஸ் அடுப்பு இலவசம்னு கொடுத்துட்டு காஸ் விலையா அதை திரும்ப எடுத்துண்டுடறா இல்லே?” என்று கிருத்திகா கேட்டாள்.
“கெட்டிக்காராதான்” என்று உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தாள் லலிதா. “இன்னிக்கி அடுப்பைக் கட்டிண்டு அழவேண்டாம். காஸ் மிச்சம். பதினோரு மணிக்குதானே உன் பாட்டு டீச்சராத்து கிருகப் பிரவேசம்?”
ஆமென்று கிருத்திகா தலையை ஆட்டினாள். பாட்டு டீச்சர் கிருத்திகாவின் வீட்டுக்கு வந்து பத்திரிகை கொடுத்த போது லலிதாவைப் பார்த்து “நீங்க கண்டிப்பா வரணும்” என்று நாலைந்து தடவை வற்புறுத்தி அழைத்து விட்டுப் போனாள் .
“எப்ப கிளம்பலாம்?” என்று லலிதா கேட்டாள்.
“கார்த்தாலே டிபனுக்கே அங்க வந்துடணும்னு படிச்சுப் படிச்சு சொல்லிட்டுப் போனாம்மா!”
“அப்ப, எட்டு எட்டரைக்குப் போனா சரியாயிருக்கும். என்ன, கொஞ்சம் அவதி அவதின்னு குளிச்சு ஸ்வாமி நமஸ்காரம் பண்ணிட்டுக் கிளம்பணும். நான் போய் முதல்லே குளிச்சிடறேன்”‘ என்று சொல்லி விட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் லலிதா வீட்டின் உள்ளே சென்றாள். அரை மணியில் கிருத்திகாவும் தயாராகி விட்டாள். கூடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு முந்தின இரவு விவாதம் என்ற பெயரில் அர்னாப் போட்ட கூச்சலை மறு ஒளிபரப்பிக் கொண்டிருந்த டி.வி.யை மியூட்டில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். லலிதா
அவளுடைய அறையிலிருந்து இன்னும் வெளி வரவில்லை. மேக்கப்பின் கடைசிக் கட்டத்தில் இருப்பாளாய் இருக்கும் !
“கிருத்திகா, ரெடியா? ” என்று லலிதா அவள் அறையிலிருந்து குரல் கொடுத்தாள்.
“நான் ரெடிம்மா” என்று கூடத்திலிருந்து சொன்னாள் கிருத்திகா. அவள் அங்கே முன்னேயே வந்து காத்திருப்பதைத் தன் பதிலில் காட்டவில்லை.
லலிதா அறையிலிருந்து வெளியே வந்த போது கிருத்திகா அவளையே கண் கொட்டாமல் ஒரு நிமிஷம் பார்த்தாள். இவளைப் பார்த்தால் ஐம்பத்திரெண்டு வயதுக்காரி என்று யாராவது சொல்வார்களா? அரைமணி நேரத்துக்கு மேல் எடுத்துக் கொண்ட அலங்காரம் அவளது வயதில் பத்து வருஷத்தைக் குறைத்து விட்டது. தலையில் ஓரிரு இடங்களில் மூக்கை நீட்டிய வெள்ளையை நிறம் மாற்றி விட்டிருந்தாள். இளமையாகத் தெரிய அவள் மேற்கொண்ட முயற்சிகள் வீணாகி விடவில்லை என்று கிருத்திகாவுக்குத் தோன்றியது. எடுப்பான முகம். ஓரளவு சதை போட்ட பருமனை அவளது உயரம் வெளிக்காட்டாமல் தடுத்தாட் கொண்டு விட்டது. கிருத்திகா இந்த வீட்டில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே சின்ன வயசில் அவள் மாமியார் அழகியாக நடமாடியதைப் பற்றி எல்லோரும் சொன்னார்கள். அந்த வயதில் அவள் பல உள்ளங்களை ஏங்க வைத்திருக்கக்கூடும். அவையெல்லாம் இன்னும் தனது மாமியார் மனதில் குடி கொண்டிருக்கின்றனவா?
தன் சிந்தனை செல்லும் வழியைத் தடுத்து கிருத்திகா தலையை உதறிக் கொண்டாள்.
“எதுக்கு அப்படி மலைச்சுப் போய் நிக்கறே? டிரஸ் மேட்சிங்கா இல்லையா? பொட்டு, மைன்னு ஏதாவது ஈசிண்டு இருக்கா?” என்று கேட்டாள் லலிதா.
“நான் உங்களோட வரணுமான்னு யோசிச்சிண்டு இருக்கேன்” என்று கிருத்திகா மாமியாரைப் பார்த்தாள்.
“என்னது?”
“என் கண்ணே பட்டுடும் போலிருக்கு” என்று லலிதாவிடம் சொன்னாள்.
லலிதா பெருமையுடன் தன்னை ஒரு முறை பார்த்தபடி “போதும். ரொம்பதான் காலை வாராதே. நாழியாச்சு, கிளம்பலாமா?” என்று கிருத்திகா அருகில் வந்து அவள் சூடியிருந்த மல்லிகைச் சரத்தைச் சரி செய்தாள்.
அவர்கள் விசேஷம் நடக்கும் வீட்டை அடைந்தார்கள். வாசலில் இருந்த கேட்டுக்கு முன்னால் செம்மண் தெருவில் சிறு பையன்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்த போது வாசலின் இருபுறமும் சிறிய வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. மாவிலைகளும் புஷ்பங்களும் நிரம்பிய தோரணம் வாசலின் இரு கதவுகளுக்கு இடையே தொங்கிக் கொண்டிருந்தது. .அங்கிருந்த ஒரு சிறுவன் “விடும்மா விடும்மா” என்று தன் தாயின் கையிலிருந்து விடுதலை பெற முண்டிக் கொண்டிருந்தான். அவனது அம்மா “அதோ அந்தக் கேட்டுக்கு வெளியிலே கறுப்புக் கோடு இருக்கில்லே. அதைத் தாண்டிப் போய் நீ விளையாடினே உன்னைப் பெலி வச்சிருவேன்” என்று கடுமையான குரலில் எச்சரித்து விடுவித்தாள். இதே அளவு கடுமை கலந்த எச்சரிக்கைக் குரலை அன்றொரு நாள் லட்சுமணன் கேட்டிருந்தால் கோட்டை மீறி இருக்க மாட்டான் என்று கிருத்திகா சிரித்துக் கொண்டே உள்ளே சென்றாள். நாதஸ்வரக்காரர் கல்யாண வசந்தாவில் ராக லோலுடையை இழைத்துக் கொண்டிருந்தார்.
“வாங்கோ, வாங்கோ” என்று அவர்களை வரவேற்கும் குரல் கேட்டது. பாட்டு டீச்சரின் பெண். கிருத்திகா அவளைப் பார்த்து “ஹாய் பத்மா!” என்றாள்.
பிறகு அவளிடம் “இவா என் மாமியார்.” என்று அறிமுகப்படுத்தினாள்.
பத்மா லலிதாவைப் பார்த்துப் புன்னகையுடன் கைகூப்பினாள்.
அப்போது “ஏய் கிருத்தி” என்று குரல் கேட்டது. கிருத்திகா. திரும்பிப் பார்த்தாள். விமலா. அவளது பால்ய சிநேகிதி. இருவரும் சேர்ந்துதான் பாட்டு டீச்சரிடம் கற்றுக் கொண்டார்கள்.
விமலாவின் கையைப் பிடித்துக் குலுக்கினாள் கிருத்திகா. “ஹலோ விமலா அக்கா!” என்று பத்மாவும் அவளைப் பார்த்துச் சிரித்தாள்.
விமலா லலிதாவைப் பார்த்து ” மாமி,எப்படியிருக்கேள்?” என்று கை குவித்துக் கேட்டாள்.
“நன்னாயிருக்கேன். நீ எப்படியிருக்கே?” என்று கேட்டாள் லலிதா.
“ஐ’ம் குட் . ஆனா மாமி, நீங்க உங்க இளமையின் ரகசியம் என்னன்னு இன்னிக்கி சொல்லியே ஆகணும்” என்றாள் விமலா.
“சும்மா கிண்டல் பண்ணாதே” என்றாள் லலிதா சிரித்தபடி.
“நிஜமாத்தான் மாமி. யூ ஆர் லுக்கிங் பியூட்டிஃபுல்.”
“சரி போ. உனக்கு ஒரு தாங்க்ஸ் தரேன்” என்று புன்னகை செய்தாள் லலிதா. ..
விமலா கிருத்திகாவிடம் “உன்னோட புடவை ரொம்ப சூப்பரா இருக்கே. எங்கே வாங்கினே? த்ரெட் போட்டு நெளி டிசைன்லே அழகாப் பண்ணியிருக்கான். எப்படித்தான் உனக்குன்னு பொறுக்கி எடுத்துண்டு வரியோ?” என்றாள்.
“சபையர் ப்ளூ கலரும் உங்க உடம்புக் கலருக்கு ரொம்பவே எடுப்பா மேட்சிங்கா இருக்கு அக்கா” என்றாள் பத்மா.
“தாங்க்ஸ். மல்லேஸ்வரம் நல்லிலதான் வாங்கினேன்” என்றாள் கிருத்திகா. “எவ்வளவு விலை இருக்கும்னு நினைக்கிறே விமலா?”
“அஞ்சு, இல்லே ஆறு?” என்று கேட்டாள் விமலா.
“இல்லே. மூவாயிரத்து ஐநூறு.”
“ஏய் சும்மா டூப் விடாதேடி” என்று நம்ப முடியாதவளாகப் புடவையை விமலா இன்னொரு முறை பார்த்தாள்.
“நிஜமா விமலா. காட் ப்ராமிஸ்!”.
விமலா லலிதாவைப் பார்த்து “மாமி, உங்க மாட்டுப் பொண்ணு அழகு மட்டுமில்லே. ரொம்பக் கெட்டிக்காரியும் கூட” என்றாள்.
லலிதா புன்முறுவல் பூத்தாள்.
“முதல்லே டிபன் சாப்பிட்ருங்கோ. அப்புறம் ஹாலுக்குப் போகலாம்” என்று பத்மா அவர்களை டைனிங் ஹாலுக்குக் கூட்டிக் கொண்டு போனாள். லலிதாவுக்கும் கிருத்திகாவுக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டாள் விமலா.
“விமலா, நீ மட்டும் தனியா வந்திருக்கே. எங்கே கோபி?” என்று கிருத்திகா கேட்டாள்
.
“அவருக்கு பாஸ் சிகாகோலேதானே? கார்த்தாலே ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரைக்கும் மீட்டிங். அதை முடிச்சிட்டு வரேன் போன்னு என்னை அனுப்பிச்சிட்டார்” என்றாள் விமலா.
பிறகு அவள் லலிதாவிடம் “எங்கே மாமாவும் கிருத்தி ஆத்துக்காரரும் வரலே?” என்று கேட்டாள்.
லலிதா “மாமா அவர் சிநேகிதர் பையன் கல்யாணம்னு திருச்சிக்குப் போயிருக்கார். இன்னிக்கும் நாளைக்கும் நல்ல முகூர்த்த நாளாமே ராஜா நாளைக்குத்தான் டெல்லிலேர்ந்து வரான்” என்றாள்.
“இந்த ஃபங்க்ஷன் இல்லேன்னா நாங்க ரெண்டு பேரும் திருச்சிக்கும் டெல்லிக்கும் போயிருப்போம்” என்று சிரித்தாள் கிருத்திகா.
அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு வந்த ஒரு பெண்மணி “அப்படி நாங்க உங்களைப் போக விட்டுடுவோமா?” என்று அவர்களுக்கு எதிரில் வந்து நின்றாள்.
“என்ன சித்தி, அக்காவோட கிருகப்பிரவேசத்துக்கு புதுசா மூக்குத்தி வாங்கிப் போட்டுண்டேளா?” என்றாள் விமலா. வாயாடி.
“ஆமா. இந்த அரதப் பழசை நீதான் மெச்சிக்கணும்” என்று பாட்டு டீச்சரின் தங்கை சங்கரி கூறினாள். பிறகு கிருத்திகாவைப் பார்த்து “எப்படி இருக்கே கிருத்தி? உன்னைப் பாத்து நாலஞ்சு மாசம் இருக்குமா? இந்த கல் வச்ச நெக்லஸ் உன்னைத் தூக்கலா காமிக்கிறதே ! இதை விட்டுட்டு என் தேஞ்ச மூக்குத்தியைப் புகழறது பார் இந்தப் போக்கிரி” என்று செல்லமாக விமலாவைத் திட்டினாள்.
“கிருத்தியோட அழகைப் புகழறதுக்கு எனக்கு ஒரு நாள் போறாது!” என்றாள் விமலா. “அது இருக்கட்டும். தங்கையோட நெக்லஸைப் பத்தி இவ்வளவு விஜாரிக்கிறேள். அவ அக்காவைப் பார்த்து ஒரு வார்த்தை கூடக் கேக்கலையே?”
“கிருத்தியோட அக்காவா?” என்று சங்கரி சற்றுக் குழம்பினாற் போல நின்றாள்.அவள் பார்வை அங்குமிங்கும் அலைந்து லலிதாவின் மேல் நின்றது.
விமலா “இவாளைத்தான் சொல்றேன்” என்றாள்.
சித்தி லலிதாவைப் பார்த்து “சாரி, நான் இதுக்கு முன்னாலே உங்களைப் பாத்ததில்லே. நீங்களும் இந்த ஊர்லேதான் இருக்கேளா? கிருத்தி சொன்னதே இல்லையே?” என்றாள்.
பத்மா பொறுக்க முடியாமல் சிரித்து விட்டாள்.
“சீ சனியனே, என்ன விளையாட்டு இது?” என்று லலிதா பொய்க் கோபத்துடன் விமலாவைத் திட்டினாள். சங்கரியிடம் கிருத்திகா புன்னகையுடன் “அவா என் மாமியார்” என்றாள்.
“அப்படியா?”என்று திகைப்பு தழுவிய கண்களுடன் சங்கரி லலிதாவைப் பார்த்தாள்.
“அப்ப நீங்க கிருத்தி வயசானவ மாதிரி இருக்கான்னு சொல்றேள்?” என்று விமலா சங்கரியைச் சீண்டினாள்.
“அடச்சீ, சும்மாயிரு. குழந்தையையும் கிள்ளி விட்டுக் கிழவன் தொட்டிலையும் ஆட்டினானாம்” என்றாள் லலிதா விமலாவிடம்.
“”முதல்லே ஒரு நிமிஷம் நம்பிட்டேன். ஆனா இப்ப தெரியறதே கொஞ்ச வயசு வித்தியாசம்.” என்றாள் சங்கரி சமாளித்துக் கொண்டு. “இது இருக்கே, ரொம்பப் பொல்லாதது. சரி. நா வரேன். சாப்பிட்டு விட்டு ஹாலுக்கு வாங்கோ” என்று சிரித்தபடி நகர்ந்தாள். பத்மாவும் அவளுடன் சென்றாள்.
அப்போது விமலாவின் கணவன் கோபி அவர்கள் இருக்குமிடத்துக்கு வந்தான்.
“வா கோபி, சௌக்கியமா? இங்கே உக்காரு” என்று லலிதா தனக்கு அருகில் இருந்த நாற்காலியைக் காட்டினாள்.
“இல்லே, எனக்கு ஒண்ணும் சாப்பிட வேண்டாம். நீங்க சாப்பிட்டு முடிச்சப்புறம் காப்பி குடிக்கிறப்போ நானும் எடுத்துக்கறேன்” என்று அவர்கள் எதிரே நின்று கொண்டான்.
மற்ற மூவரும் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினார்கள். பதார்த்தங்களின் வாசனை நாசியையும், ஆசை நாக்கையும் தூண்டி விட்டன.
“கேசரி ரொம்ப நன்னாயிருக்கில்லே? யார் சமையக்காராளாம்?” என்று கேட்டாள் லலிதா.
“எல்லாம் நம்ம மல்லேஸ்வரம் ரக்ஷிதாதான் ” என்றாள் விமலா.
“எப்பவும் அவா ஸ்டாண்டர்ட் மெயின்டெய்ன் பண்றா இல்லே?” என்று கேட்டாள் லலிதா.
“ஆனா கேசரிக்குக் கிருத்தியை யாரும் பீட் அடிச்சுக்க முடியாது” என்றான் கோபி.
லலிதா சாப்பிடுவதை நிறுத்தி விட்டுக் கோபியைப் பார்த்தாள்.
“சும்மா கிண்டல் பண்ணாதீங்கோ கோபி,” என்றாள் கிருத்திகா.
“இதிலே என்ன கிண்டலும் கேலியும்? நன்னாப் பண்ணினான்னா நன்னா இருக்குன்னுதானே சொல்லணும் !” என்ற கோபி லலிதாவைப் பார்த்து “ஒரு நா நானும் விமலாவும் ராஜாவைப் பார்க்கலாம்னு உங்காத்துக்கு வந்தோம். அப்ப நீங்களும் மாமாவும் ஏதோ விசேஷம்னு மதுரைக்குப் போயிருந்தேள். பொழுது போகாம போராடிக்கிறதேன்னு பண்ணினதா கேசரி கொண்டு வந்து கொடுத்தா அன்னிக்கி. அந்த கேசரி இன்னும் நாக்கிலே நிக்கறது. சூப்பர்ப்” என்றான். விமலா லலிதாவைப் பார்த்தாள். அவள் சாப்பிடுவதில் கவனமாக இருந்தாள்.
அப்போது ஒரு பரிசாரகர் “ஏதாவது வேணுமா?கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கோ” என்று சொல்லியபடி அவர்களைக் கடந்தார்.
லலிதா அவரிடம் “மாமா, இன்னும் கொஞ்சம் கேசரி போடுங்கோ” என்றாள்.
“ஓ, திவ்யமா” என்று அவர் போய்க் கேசரியை எடுத்துக் கொண்டு வந்து அவள் இலையில் போட்டார்.
அவர்கள் காப்பி குடித்து விட்டுப் பூஜை நடக்கும் இடத்துக்குச் சென்றார்கள். புகைக்கு நடுவே சாஸ்திரிகளும், வந்திருந்த ஜனமும் இரைச்சலை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். பாதிப் பேர் உள்ளேயும் மீதிப் பேர் வெளியேயும் நின்றும் உட்கார்ந்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். சந்தனம், குங்குமம், ஊதுபத்தி, சாம்பிராணி மணங்களுக்குப் போட்டியாக இன்டிமேட்டும், சானலும் ஹாலை ஊடுருவியிருந்தன.
பூஜை முடிவதற்கு பனிரெண்டு மணியாகி விட்டது. பாட்டு டீச்சரும் அவள் கணவரும் ஹாலில் அமர்ந்தவர்களை வரவேற்றபடி வந்தார்கள். பாட்டு டீச்சர் கிருத்தியும் லலிதாவும் உட்கார்ந்திருந்த இடத்துக்கு வந்த போது லலிதாவைப் பார்த்து அகலமாகக் கண்களை விரித்துத் தன்
மகிழ்ச்சியைக் காண்பித்தாள். அவர்களருகில் வந்து லலிதாவின் கையைப் பிடித்துக் கொண்டு “பெரியவாளா வந்து நீங்க ஆசிர்வாதம் பண்ணினதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.
“நாங்கதான் உங்களுக்கு தேங்க் பண்ணனும். எல்லாம் இவ்வளவு ஜோரா ஏற்பாடு பண்ணி நாக்குக்கு ருசியாப் போட்டு அமர்க்களம் பண்ணிட்டேள். வீடு பாக்க ரொம்ப அழகாயிருக்கு” என்றாள் லலிதா. கையில் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருளைப் பாட்டு டீச்சரிடம் கொடுத்தாள்.
அதை வாங்கிக் கொண்ட டீச்சர் கிருத்திகாவுக்கு இடது பக்கத்திலிருந்த பெண்மணியிடம் “அக்கா, இவ என் ஸ்டூடன்ட். கிருத்திகான்னு பேரு. இவளுக்குக் குரல்னா அப்படி ஒரு குரல் ! மேடையேறிப் பாடினா இன்னிக்கி ஃபேமஸா இருக்கற இவ வயசுப் பாடகில்லாம் ரொம்ப தூரம் பின்னாடி போய்தான் நிக்கணும். ஆனா மேடையேற மாட்டேன்னு அப்படி ஒரு பிடிவாதம். மியூசிக்கோட நுணுக்கத்தையெல்லாம் கத்துக்கணும்னு ரிசர்ச் ஸ்காலரா ஆயிண்டிருக்கா,” என்று குரலில் பெருமையும் ஏக்கமும் வழியச் சொன்னாள். கிருத்திகாவிடம் “இவா என் நாத்தனார். கோமளான்னு பேர். கோலார்லே பாத்துக்க யாரும் இல்லாத வயசான பொம்மனாட்டிகளுக்குன்னு ஒரு ஆச்ரமம் நடத்திண்டு வரா” என்றாள்.
அந்த வயதான பெண்மணியின் முகத்தில் சாந்தம் நிலவியிருந்தது. பாட்டு டீச்சர் சொன்னதைக் கேட்டு சிரித்த போது அவள் கண்களும் சேர்ந்து சிரித்தன. கிருத்திகா அந்த அம்மாளைப் பார்த்துக் கைகூப்பி நமஸ்கரித்தாள்.
“மனுஷாளுக்குக் கடவுள் கொடுத்திருக்கிற பலஹீனங்கள்லே புகழ்ச்சியும் ஒண்ணுதானே? புகழறவா புகழப்படறவா ரெண்டு பேருமே ஒரு தராசோட ரெண்டு தட்டு மாதிரிதான். இந்த சின்ன வயசிலே உனக்கு இப்படித் தெளிவா இருக்கணும்னு தோணறதே பெரிய விஷயம்னா ! உன்னைப் பாத்ததிலேர்ந்து இவ்வளவு களையா இருக்கே இந்தப் பொண்ணுன்னு நினைச்சிண்டே இருந்தேன்..அக அழகு முக அழகுன்னு பெரியவா தெரியாமலா சொன்னா?” என்று அந்த அம்மாள்
கிருத்திகாவைப் பார்த்துச் சொன்னாள்.
கூச்சத்தில் கிருத்திகா நெளிந்து நின்றாள்..அவள் பார்வை விமலா மீது விழுந்தது. விமலா அந்த அம்மாளையும் லலிதாவையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
லலிதா எழுந்து கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்தபடி “அப்ப நாங்க உத்தரவு வாங்கிக்கிறோம்” என்றாள் பாட்டு டீச்சரிடம்.
டீச்சர் “இருந்து சாப்பிட்டு விட்டு வெத்தலை பாக்கு வாங்கிண்டு போங்கோ. .அடி பத்மா, மாமியை டைனிங் ஹாலுக்கு கூட்டிண்டு போ” என்று பெண்ணைக் கூப்பிட்டாள்.
அவர்கள் வீட்டுக்குத் திரும்பும் வழியில் “ஒரே அசட்டுப் பிசட்டுக்கூட்டம். இல்லே?” என்றாள் லலிதா.
கிருத்திகாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஒருத்தியாவது பாக்கறபடி இல்லே.ஒரே பங்கரை மூஞ்சி.”
இவளுக்கு என்ன வந்து விட்டது என்று கிருத்திகா ஆச்சரியப்பட்டாள்.
“விமலா ஒருத்திதான் பேசினா கேக்கறபடி இருந்தது. மத்ததெல்லாம் ஏண்டா வாயைத் திறக்கிறதுன்னு தோணிடுத்து” என்றாள் லலிதா. அவள் குரலில் லேசான ஆங்காரம் தென்பட்டது.
ஏதாவது பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டவளாக “விமலா எப்பவுமே ரொம்பக் கெட்டிக்காரி” என்றாள் கிருத்திகா.
லலிதா “ஆனா அவ ஆம்படையான்தான் கொஞ்சம் தத்துப் பித்து. ‘நான் சாப்பிடலே, நின்னுண்டு இருக்கேன்’னு சொல்லிட்டு அங்கையும் இங்கையும் பொண்களை ஒரக் கண்ணாலே பாத்து அசடு வழிஞ்சிண்டு இருந்தான். நீ கவனிச்சயோ?” என்று கேட்டாள்.
கிருத்திகாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. கோபி இந்த மாதிரி என்று எப்போது லலிதா கவனித்தாள்? தனக்குத் தெரிந்த வரை கோபி அப்படிநடந்து கொள்ளவில்லையே என்று கிருத்திகாவுக்குத் தோன்றியது. ஆனால் இப்போது ஒன்றும் பேசாமல் இருப்பதுதான் உத்தமம். வீட்டை அடைந்ததும் திடீரென்று லலிதா “எனக்குத் தலையை வலிக்கிறது. போய்ப் படுத்துக்கறேன்” என்று அவளறையை நோக்கிச் சென்றாள்
நாலைந்து நாள் போயிருக்கும். கடைத் தெருவில் மாலையில் எதிர்பாராவிதமாக விமலாவைக் கிருத்திகா சந்தித்தாள்.
“என்ன இது ஒண்டியா? கர்ணனோட கவசகுண்டலம் மாதிரி எப்பவும் மாமியோரடன்னா ஒட்டிண்டு வருவே நீ?” என்று சிரித்தாள் விமலா. “லலிதா மாமி எப்படி இருக்கா?”
“கொஞ்சம் உடம்பு சரியில்லேன்னு ஆத்துலேதான் இருக்கா” என்றாள் கிருத்திகா.
” உடம்பா? மனசா?”
கிருத்திகா ஆச்சரியத்துடன் சிநேகிதியைப் பார்த்தாள்.
“எப்போலேர்ந்து சரியில்லே? பாட்டு டீச்சரராத்துலே பாத்தோமே அன்னிலேர்ந்தா?” என்று கேட்டாள் விமலா.
கிருத்திகா பதில் எதுவும் சொல்லவில்லை.
“அன்னிக்கே எனக்குத் தெரிஞ்சது.வந்தவா போனவா எல்லாரும் உனக்கு வாயாலே பூச்சூட்டி விட்டுண்டு போறச்சேயே நினைச்சேன்.”
“என்னன்னு?” என்றாள் கிருத்திகா.
விமலா பதில் சொல்லவில்லை.
“அன்னிக்கி வந்தவாளைப் பத்தி என்னென்ன கமெண்ட் எல்லாம் அடிச்சா உன்னோட மாமியார்?”
“உன்னை ஓகோ ஓகோன்னு புகழ்ந்து தள்ளிட்டா” என்று கிருத்திகா விமலாவைப் பார்த்து சிரித்தாள்.
“கோபியைப் பிடிச்சிருக்காதே. ஏன் பாட்டு டீச்சர், அவ சொந்தக்காரா, தெரிஞ்சவா பத்தியெல்லாம் புகழ்ந்தா தள்ளினா?” என்று கேட்டாள் விமலா.
கிருத்திகாவுக்கு ஆச்சரியம் தாளவில்லை. இவள் ஏதோ லலிதா பேசும் போது கூடவே இருந்தவள் மாதிரி அல்லவா எல்லாவற்றையும் பிட்டுப் பிட்டு வைக்கிறாள் !
“கிருத்தி! உனக்குக் கல்யாணமான இந்த ஆறு மாசத்தில் உங்க மாமியாரோட எத்தனை விசேஷத்துக்குப் போயிருப்பே?”
“ஏன், நிறைய விசேஷத்துக்குப் போயிருக்கேன்!” என்றாள் கிருத்திகா.
“உங்காத்து விசேஷத்துக்கு?” என்று மேலும் கேட்டாள் விமலா.
“ரெண்டு தடவையோ என்னமோ போயிருக்கேன். ”
“வெளி விசேஷம்னு உனக்குத் தெரிஞ்சவான்னு பாட்டு டீச்சராத்து விசேஷத்துக்கு வந்ததுதான் ஃபர்ஸ்ட்.டைம். இல்லியா?” என்று கேட்டாள் விமலா..
“ஆமா.”
“அதனாலதான்” என்று சொல்லியபடியே கிருத்திகாவின் கையைப் பற்றிக் கொண்டாள் விமலா.
கிருத்திகாவுக்கு ஏதோ புரிவது போலிருந்தது.
“இப்ப உன் மேலே கோபமா, மனஸ்தாபமா இருக்காளா உன்னோட மாமியார்?”
“அப்படின்னு காட்டிக்கலே .ஆனா கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கா” என்றாள் கிருத்திகா. ” இதனால எனக்கு ஒரு ரிலீஃப் கிடைச்சது.”
“அதென்ன கண்ராவி?” என்று ஆச்சரியப்பட்டாள் விமலா.
“டெய்லி கார்த்தாலே என் ரூம்லே வந்து பால் கொடுத்துட்டுப் போவா. நான் வேண்டாம் வேண்டாம்னு அடிச்சுண்டாலும் கேக்க மாட்டா. .இப்ப அதை நிறுத்திட்டா” என்றாள் கிருத்திகா.
விமலா அதைக் கேட்டுச் சிரித்தாள்.
இது நடந்த பின் வந்த வெள்ளிக் கிழமையன்று கிருத்திகாவின் வீட்டில் சத்தியநாராயணா பூஜா நடந்தது. நெருங்கிய சொந்தங்களும், பக்கத்து வீடுகளில் இருந்த சில வயதான சுமங்கலிகளும் வந்திருந்தார்கள். பூஜை பத்து மணிக்கு ஆரம்பித்துப் பனிரெண்டரைக்கு முடிந்தது. வந்திருந்தவர்கள் பூஜையை திருப்திகரமாக நடத்தியதாய் லலிதாவைப் பாராட்டினார்கள். பக்கத்து வீட்டுக் கல்யாணி மாமி, லலிதாவிடம் அவள் அணிந்திருந்த பட்டுப் புடவையைப் பார்த்து “மடிசார்லே மாமி அழகா இருக்காளா, இல்லே மாமி கட்டிண்டு இருக்கறதாலே மடிசார் அழகா இருக்கா?” என்று சொன்னதைக் கேட்டு லலிதா மற்றவர்களுடன் சேர்ந்து சிரித்தாள்.
“எங்கே மாட்டுப் பொண்ணைக் காணோம்?” என்று மங்களா மாமி கேட்டாள் .
அப்போது சமையல் அறையிலிருந்து கிருத்திகா வந்தாள். மஞ்சள் வாயில் புடவையும், அதே நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள்.
“இன்னிக்கி பூஜை சாப்பாடு உன் கைப்பாகமா?” என்று மங்களா கேட்டாள்.
“கேலி பண்றேளா ! எல்லாம் அம்மா கை ஜாலம். கல்யாணத்திலே எல்லாம் நளபாகமா பண்றவருக்கு ஒரு எடுபிடி இருப்பார் இல்லியா? அதுமாதிரி நான். அம்மாவோடது பெரிய கை. அனுபவம் ஓடி ஓடி அந்தத் தழும்பு ஏறியிருக்கிற கை. நானெல்லாம் கத்துக்குட்டி. அம்மா
கிட்டேர்ந்து கத்துக்க எவ்வளவோ இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா கத்துண்டுடுவேன்” என்று சிரித்தாள் கிருத்திகா. “சமையல்லே உப்பு ஓஒரப்பு குறைச்சோ, கூடவோ இருந்தா என்னைத் திட்டுங்கோ.”
“தேவலையே! மாட்டுப் பொண்ணை நன்னா தயார் பண்ணிருக்கே லலிதா” என்று கிருத்திகாவின் மாமனாரின் சித்தி சொன்னாள்.
“நீங்கள்லாம் எங்களைத் தயார் பண்ணலையா? அது மாதிரிதான்” என்றாள் லலிதா புன்னகையுடன்.
எல்லோரும் சாப்பிட்டு விட்டுக் கூடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது சமையலறையில் பாத்திரங்களை ஒழித்து வைத்துக் கொண்டிருந்த கிருத்திகாவிடம் அவளுடைய அத்தை வந்தாள். மிக மெல்லிய குரலில் “ஏண்டி உனக்குக் கட்டிக்க வேறே புடவையே கிடைக்கலையா இன்னிக்கின்னு பாத்து?” என்று கேட்டாள்.
“ஏன் அத்தை? இந்தப் புடவைக்கு என்ன? அழகாய்த்தானே இருக்கு. ரவிக்கை கூட ரொம்ப மேட்ச்சிங்கா இருக்கே!” என்றாள்.
“உங்காத்து வேலைக்காரி கூட இதை விடப் பளிச்சுன்னு கட்டிண்டிருக்கா” என்றாள் அத்தை மனத்தாங்கலுடன்.
அப்போது அங்கே யாரோ வர பேச்சு நின்று விட்டது.
வந்தவர்கள் எல்லோரும் கிளம்பிப் போன பின் கூடத்தில் படுத்துக் கொண்டிருந்த மாமியார் கிருத்திகாவைக் கூப்பிட்டாள். அவளருகே கிருத்திகா சென்றாள்.
“இன்னிக்கி எல்லாம் நன்னா நடந்தது இல்லே?” என்று மாமியார் கேட்டாள்.
“ஆமா. எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். அதுவும் அவா கிளம்பறச்சே நீங்க ஒரு கிஃப்ட் பாக்கெட் வேறே கொடுத்து அசர அடிச்சிட்டேள்” என்று சிரித்தாள் கிருத்திகா.
“ஆமா. வருஷத்திலே ஒரு நாள் கொடுக்கறோம். எல்லோரும் சந்தோஷமா இருந்தா சரி” என்றாள் மாமியார்.
மறுநாள் காலை கிருத்திகா ஆறு மணிக்கு எழுந்து பாத்ரூம் சென்று விட்டு அவள் அறைக்குள் வந்த போது டிரஸ்ஸிங் டேபிள் மீது பால் டம்ளர் இருந்தது. அதன் மீது பால் ஆறி விடாமல் இருக்க ஒரு சிறிய தட்டு மூடியிருந்தது.
.
இந்தக் கதையை வாசித்ததும் சொல்லத்தோன்றியது status quo a(u)nti