காலத்துகள்
‘நீ பேசறது உன் எழுத்தை விட கொஞ்சம் பெட்டரா இருக்கும், மாஸ்க்கால மூடிட்டு பேசினா அதுவும் ஒண்ணும் புரியாத மாதிரி ஆயிடுது’ என்றார் பெரியவர் முற்றுப்புள்ளி. பெருந்தொற்று காலத்திலும், இலக்கியம் குறித்தும், நான் எழுதவதைப் பற்றியும் அவருடன் உரையாடுவதை எப்போதும் போல் தொடர்ந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று அவர் வீட்டிற்கு வந்த காரணம் இலக்கியம் சம்பந்தப்பட்டது மட்டுமேயல்ல. கடந்த மூன்று நான்கு மாதங்களாக நான் எதையும் புதிதாக எழுதவில்லை. ‘ரைட்டர்ஸ் ப்ளாக்’ என்று சொல்ல முடியாது. நான் எழுத்தாளனா என்ற தன் சந்தேகத்தை வெளிப்படையாக முற்றுப்புள்ளி கேட்பார், நான் அதை உள்ளூர என்னை நானே கேட்டுக் கொள்வதுண்டு. இன்று மீண்டும் எழுதத் தோன்றியது.
‘இப்ப சரியா இருக்கா ஸார்’
‘ஏன்யா கத்தற, போன்ல பேசும் போது தான் சில பேர் இப்படி சத்தம் போடுவாங்க, நீ எதுத்தாப்ல தான ஒக்காந்திருக்க’
‘சாரி ஸார். ஒரு சின்ன குழப்பம், அதை பத்தி உங்க கிட்ட பேசலாம்னு தான் வந்தேன்’
‘..’
‘ரொம்ப நாளைக்குப்பறம் இன்னிக்கு எழுத ஆரம்பிச்சேன் ஸார்’
‘..’ ‘எதுக்கு’ என்று பெரியவர் வெளிப்படையாக கேட்காதது, நல்ல ஆரம்பம், அவர் மனநிலை மாறுவதற்கு சொல்லி விட வேண்டும்.
‘முதல் வரி எழுதினேன் ஸார், நான் சொல்றது நம்ப முடியாத மாதிரி இருக்கும், அந்த நொடி போன் வந்தது ஸார். அதுக்கப்பறம் நாள் முழுக்க கிட்டத்தட்ட மூணு நாலு மணி நேரம் போன்லையே இருந்திருக்கேன். தொடர்ச்சியா கால்ஸ். பர்ஸ்ட் லைனுக்கு பிறகு எதையுமே எழுத முடியலை’
‘என்ன அந்த வரி’
‘உடலெங்கும் மலம், சிறுநீரின் மணம்.’
‘ குட். நான் கூட நீ என்னமோ ‘இட் வாஸ் தி பெஸ்ட் ஆப் டைம்ஸ், இட் வாஸ் தி வர்ஸ்ட் ஆப் டைம்ஸ்’ மாதிரி ஏதோ எழுதிட்டியோன்னு நினைச்சுட்டேன். ‘
‘அந்த வரி என்னவாயிருந்த என்ன ஸார், கண்டின்யு பண்ண முடியலையே’
‘சரி, இப்ப என் கிட்ட வந்து பேசிட்டிருக்கிறதுக்கு தொடர்ந்து எழுதியிருக்கலாமே. நானும் ஈவ்னிங்கை உருப்படியா ஸ்பெண்ட் பண்ணிருப்பேன்’ பெரியவரின் இத்தகைய பேச்சுக்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
‘நாள் பூரா அடுத்து எழுத முடியாம போனது தான் எனக்கு குழப்பமா இருக்கு ஸார். இதுல ஏதாவது குறியீடா இருக்குமோ?’
‘குறியீடு எங்க திடீர்னு வருது’
‘இலக்கிய கடவுள்கள் இந்தக் கதையை நீ எழுத வேண்டாம்னு சொல்றாங்களோ’
‘சிம்பாலிக்கா சொல்றாங்களோன்னு கேக்கற? இங்க சிம்பாலிக் யூஸ் பண்ற இடத்தில், குறியீடு பொருந்துமா?’
‘..’
‘குறியீடுலாம், நல்ல மொழி வளம், சிந்தனை உள்ளவங்க உபயோகிக்கிற வார்த்தை. நீ நேரடியா எழுதறேன் பேர்வழின்னு அதையே கந்தரகோலம் பண்ற ஆளு, உனக்கு எதுக்கு’
‘சரி, குறியீடு வேண்டாம். சகுனம்னு வெச்சுக்குங்க. கதையை ஆரம்பிக்கும் போதே தடங்கல் வருதே, இலக்கிய தெய்வங்கள் தரும் கெட்ட சகுனமா எடுத்துக்கலாமா’
‘உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கா’
‘எனக்கு பேய், பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை ஸார் , ஆனா பயமாயிருக்கே’
‘அதானே, ஓரு ரைட்டர் நேம் ட்ராப்பிங் பண்ணாம, அவரை க்வோட் பண்ணாம பத்து நிமிஷம் கூட உன்னால பேச முடியாதே’
‘பேய், பிசாசு குறித்த தன்னுடைய நம்பிக்கை பற்றி இப்படி ஓரு ரைட்டர் சொன்னார்னோ, அவரை பெயரையோ நான் குறிப்பிடலையே ஸார், நீங்க தான் இட் வாஸ் தி பெஸ்ட் ஆப் டைம்ஸ்ன்னு இன்னொருத்தரை க்வோட் செஞ்சீங்க’
‘ஆனா அவர் தன் நம்பிக்கை குறித்து குறிப்பிட்டதையே தானே நீயும் சொன்ன’
‘நானும் அவர் மரபுல வந்தவன்னு….’ சொல்ல வந்ததை நிறுத்தினேன்
‘…’
பெரியவர் எதுவும் பேசவில்லையென்றாலும் , பல வருடங்களாக அவரிடம் இலக்கிய வசவு வாங்கிக்கொண்டிருக்கும் எனக்கு அவருடைய மனவோட்டம் புரிந்தது. இலக்கிய முன்னோடிகளின் மீது அபரிமிதமான பக்தி கொண்டவர் முற்றுப்புள்ளி, அதனாலேயே சாதாரணமாக ஏதாவது கூறினாலும், அவர்களை அது சிறுமைப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு பொரிந்து தள்ளிவிடுவார். அதற்கு இடம் தரக் கூடாது.
‘நான் சொன்னதை நீங்க எப்பவும் போல விபரீதமாக புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க ஸார். அவர் மரபுல வந்தவன்னு, என் எழுத்தின் தரத்தை வெச்சோ, என்னை அவருடன் ஒப்பிட்டோ சொல்லலை, அமானுஷ்யம் குறித்த அவர் நம்பிக்கை வழி வரேன்னு தான் சொல்றேன்.’
பெரியவரின் இறுக்கம் இளகியது.
‘குறியீடு, சகுனம் பத்திலாம் நீ கவலைப் படாத. நான் பல வருஷமா உன்கிட்ட நேரடியாவே மூர்க்கத்தனமா உன் எழுத்து மோசம்னு சொல்லிட்டு வரேன், அதையே நீ கண்டுக்காம எழுத்திட்டிருக்க. ஸோ நீ எழுத ஆரம்பிக்கும் போது, பூனையென்ன, புலி, பாம்பை நடுல சகுனமா விட்டால் கூட நீ மாறப் போறதில்லைன்னு லிடரரி காட்ஸுக்கு தெரியாதா என்ன. நீ வழக்கம் போல, எப்பவும் கொட்டற எழுத்துக் குப்பையை கொட்டு’
‘ ‘ப’னாக்கு ‘ப’னான்னு நீங்க பாம்பு, புலின்னு சொல்லியிருந்தாக் கூட, எனக்கு அதுலயும் ஒரு ஐடியா கிடைச்சிருக்கு ஸார். பாம்புகள் மேல் எனக்கிருக்கிற சரிசமான ஈர்ப்பும், பீதியும் பற்றியும், என் கனவுகளில் அவை அடிக்கடி வருவதும் உங்களுக்கு தெரியும். இன்னிக்கு எழுத ஆரம்பிச்ச கதையுடன் சர்ப்பம், எழுத்து, இரண்டையும் இணைக்கும் உளவியல் சிக்கல்னு இன்னொரு புனைவும் எழுதிடலாம்னு நினைக்கிறேன் ஸார். முடிஞ்சா இன்றைய தடங்கல்களையே கூட கதையா மாத்திடலாம். மூன்று புனைவுகள். வாட் டூ யு திங்க்?’
‘..’
‘ஸார்’
‘என்னை ஏன் கேக்கற’
‘என் ஐடியா பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு…’
‘நீ எப்படியும் எழுதத் தான் போற. ஒரேயடியா மூன்று கதைகளை நான் படிச்சுத் தொலைக்கணும். அதனால வரும் பாதிப்பை தடுக்க ஏதாவது தடுப்பூசியை இலக்கிய கடவுள்கள் தருவாங்களா, அவங்க கிட்டகூட உன் எழுத்திலிருந்து காப்பாற்றும் மருந்து இருக்காதே’
பிற முற்றுப்புள்ளி கதைகள்
போர்ஹெஸின் கொடுங்கனவு – காலத்துகள் குறுங்கதை
முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை