தேடன்
கொள்ளைப் புறத்தே
தண்ணீர் இறைக்கக்
கிணற்றுக்குள் சென்று வந்த
வாளியில் ஒரு சிறுவன் மேலே வந்துவிட்டான்.
வாளிக்குள் குத்தவைத்தவன்
வாளியின் சலசலப்போடு
குதித்து வெளியே வந்து
அமைதியாக நிற்கிறான்;
ஞான உருவெனவே நினைவில் தட்டுகிறது.
‘யார் நீ’ என்று கேட்டாலும் பதில் இல்லை.
அதற்குள் குளிப்பதற்குக் கொள்ளைக்கு வந்த
கருச்சிதைவின் அவஸ்தையில் சோர்ந்துவிட்ட
அவளைக் கண்டு ‘அம்மா’ என்கிறான்.
அவளும் எதுவுமே சொல்லாது
அவனை ஆரத் தழுவிக் கொள்கிறாள்.