ஓப்பன் டிக்கெட்

ரவி ரத்தினசபாபதி 

அன்று திருச்சி எக்ஸ்பிரஸ் சரியான நேரத்தில் மாயவரத்தை அடைந்துவிட்டது. பெரும்பாலும் குறைந்தது அரைமணி தாமதத்தில்தான் வரும்.

நடைமேடையில் நடக்கையில் எப்போதும்போல் கதிரின் கண்களில் ஆர்.எம்.எஸ். அலுவலகம்தான் முதலில் பட்டது. கேரள பாணியில் இருந்த இரட்டைக்கதவின் மேல்புறமாக எட்டிப் பார்த்தபோது, தெரிந்த முகம் எதுவும் தென்படவில்லை. அனேகமாக எல்லோரும் ஓய்வு பெற்றிருக்கலாம். பணியாளர்களும் மிகவும் குறைந்துவிட்டனர். ஆர்.எம்.எஸ். என்பதே ஏறத்தாழ இல்லை என்ற நிலை. இன்று மாலை ஆர்.எம்.எஸ்ஸில் ஒரு கார்டு போட்டால் சென்னைக்கு மறுநாளே அது போய்ச் சேர்ந்துவிடும். ஆனால் அந்தக் காலம் இறந்த காலம். இரவும் பகலும் இடைவிடாது செய்யப்பட்ட அந்த மக்கள் சேவை இப்போது கூரியர் கம்பெனிகள் கையில். தபால் பைகளும் சாக்கு மூட்டைகளும் தள்ளு வண்டிகளுமாக எப்போதுமே பிஸியாக இருக்கும் அலுவலகம், இன்று காலியாக இருந்தது.

தயிர், லெமன் சாதங்கள் கூவிக்கூவி விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஓர் இடத்தில் பேப்பர் தட்டில் ஆரஞ்சு நிறத்தில் கேசரி விற்பனையாகிக் கொண்டிருந்தது. கதிர் பயணித்த பெட்டியிலிருந்து இறங்கிய பரிசோதகர் வேகமாக அடுத்த பெட்டியை நோக்கிச் சென்றார். சிறு வயது. வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் போல் தெரிந்தது.

பத்தடி நடந்தவுடன், இறைந்து கிடக்கும் தீப்பெட்டிகளைப் போல நடைமேடையில், மரப்பெட்டிகள். பெட்டிகளின் பக்கவாட்டிலும், மேற்புறமும் பெயர்கள். ஏதோ எண்களும். டிக்கெட் பரிசோதகர்களின் பெட்டிகள். எந்த வண்டியில் ஏறுவார்கள், இறங்குவார்கள் என்பதைப் பொறுத்து பெட்டி நடைமேடைக்கு வரும், போகும்.

ரயில் நகரத் தொடங்கியது. இரண்டு பெட்டிகள் இவனைக் கடந்தன. சற்று வேகமெடுக்கத் தொடங்கிய நேரத்தில் யாரோ ஒருவர் வேகமாக ஓடியவாறு படிக்கட்டின் கைப்பிடியைப் பிடித்தார். உள்ளே இருந்து பதட்டமான குரல்.

கதிரும் இப்படி ஓரிரு முறைகள் ஏறியிருக்கிறான். ஒருமுறை திருவாரூர் ரயில் நிலையத்தில். குழந்தைக்கு பால் வாங்க இறங்கினான். ரயில் புறப்பட்டதை கவனிக்கவில்லை. அன்று நாகூர் வண்டியை சீக்கிரமே பிரித்துவிட்டார்கள். கம்பன் சீக்கிரமே புறப்பட்டுவிட்டார். உள்ளே மனைவியும் கைக்குழந்தையும். ரயில் வேகமெடுக்க ஆரம்பித்து விட்டது. கையில் சுடச்சுட பால் தம்ளருடன் ஓடி எப்படியோ ஏறி விட்டான். சிலர் திட்டினார்கள். சிலர் உச்சுக் கொட்டினார்கள்.

பரிசோதகர்களின் ஓய்வறையிலிருந்து வந்தவர் கதிருக்குப் பரிச்சயமானவர் போல் தோன்றினார். அவரோ? இல்லை. அவரில்லை. அவர் இந்நேரம் ஓய்வுபெற்றிருப்பார். அப்பவே அவருக்கு வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். என்ன ஓர் அற்புதமான மனிதர்! அதன் பிறகு அவரை பயணத்தில் பார்க்கவே வாய்க்கவில்லை.

 

அது நடந்து, என்ன ஒரு பதினைந்து ஆண்டுகள் இருக்குமா? செந்தில் அன்று ஸ்டேஷனுக்கு வராமல் இருந்திருந்தால், அவனிடம் டிக்கெட்டை கொடுக்காமல் இருந்திருந்தால், அந்தச் சம்பவமே நடந்திருக்காது.

பிராட்கேஜ் லைன் போட ஆரம்பித்திருந்த நேரம். பாதி வேலைகள் முடிந்திருந்தன. மீட்டர் கேஜ் நடைமேடைகள் இடிக்கப்பட்டு, பெரிய வண்டிகளுக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றிக் கொண்டிருந்தார்கள். மாயவரத்திலும் அப்போது வேலை நடந்து கொண்டிருந்தது.

மீட்டர்கேஜ் வண்டி என்றாலே ஓர் அழகுதான். செங்கோட்டை பாஸஞ்சர்தான் இந்தப் பக்கத்துக் கதாநாயகன். சென்னையிலிருந்து தென்காசி, செங்கோட்டை வரை செல்லும் பிரபலமான வண்டி. காந்தியடிகள் இந்த வண்டியில் பயணம் செய்திருக்கிறார் என்று சொல்வதுண்டு. இங்கே இறங்கி தில்லையாடியும் போயிருக்காராம்.

தஞ்சை, கும்பகோணம் மாயவரம் பகுதிகளிலிருந்து சென்னை செல்பவர்களுக்கு இதுதான் ’ஆகிவந்த’ வண்டி. இதற்கு அப்புறம் இரண்டு வண்டி இருந்தாலும் பெரும்பாலானவர்கள் இதில் பிரயாணம் செய்யத்தான் விரும்புவார்கள். கதிருக்கும் இந்த வண்டிதான் பிடிக்கும். பத்து ரூபாய் டிக்கெட்டில் மாம்பலம் போய் இறங்கியிருக்கிறான். மாயவரத்தில் ஒன்பதரை மணிக்கு ஏறிப் படுத்தால், காலை ஐந்து, ஐந்தரைக்கு மாம்பலத்தில் இறங்கிவிடலாம். சுகமான, தூக்கத்தைக் கெடுக்காத பயணம்.

கதிர் செங்கோட்டை பாஸஞ்சரில்தான் அன்று டிக்கெட் போட்டிருந்தான். தாம்பரம் வரைக்கும். அவனுடன் இரண்டு தங்கைகளின் மகள்களும். விடுமுறைக்காகச் சென்னைக்கு அழைத்துப் போய்க் கொண்டிருந்தான். வழியனுப்ப அன்றைக்குச் செந்தில் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான். பசங்க இருவரும் நாலடி தள்ளி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். சிறுவயது. விஷயமே இல்லாமல் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்.

அவ்வப்போது ஸ்டேஷன் வாசல் பக்கம் திரும்பி ’ஓஜோ’ வருகிறானா என்று பார்த்தான். வருவது சந்தேகமே. கடைகளுக்குச் சரக்குப் போட்டுக்கிட்டு இருப்பான். இல்லை. இப்போ சாயங்காலம். அவனுக்கு வசூல் நேரம். இரவு ஒன்பது வரை.

வெயிட்டிங் லிஸ்டில் இருந்த டிக்கெட் உறுதியாகிவிட்டது. எந்த பெட்டி என்று பார்ப்பதற்காக, இவனிடமிருந்து டிக்கெட்டை வாங்கிச் சென்றிருந்தான் செந்தில். வாசலருகில் ஒட்டியிருந்த சார்ட்டைப் பார்த்துவிட்டு கோச் நம்பரைச் சொல்லிக் கொண்டே வந்தான் அவன்.

பேச்சு, வழக்கம்போல், பொது அரசியல், யூனியன், அவனது அலுவலகப் பணி, நிரந்தரம் என்பதாகப் போய்க் கொண்டிருந்தது. கொள்முதல் நிறுவனத்தில் தற்காலிகப் பணி அவனுக்கு. இருவருக்கும் பல விஷயங்களில் ஒத்துப்போகும். தூரத்தில் ஓஜோவின் தலை தெரிந்தது. நாலு முழ வேட்டியில், அரைக்கைச் சட்டையில் இருந்தான். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுகிறவன். தன் கையை ஊன்றி கரணம் போடுகிறவன். எப்போதும் அக்கறையுடன் உடையணிய மாட்டான். இரண்டாம் நாள் போடுகிற சட்டை போலத்தான் இருக்கும். இன்றும் அப்படித்தான்.

வேலைச்சுமையை மறைக்கும் அந்த இயல்பான சிரிப்புடன் ‘என்ன கதிர் மறுபடியும் எப்போ’ என்றான் ஓஜோ.

அவன் தோள்மேல் கைபோட்டுக்கொண்டு செந்தில் சிரித்தான்.

’நீங்க எப்போ வந்தீங்க, செந்தில்?’

‘முக்கா மணி இருக்கும். எப்படி பிஸினெஸ் போகுது?’

‘உண்மையா சொல்லணும்னா, ரொம்ப நல்லாவே போய்ட்டிருக்கு. ரஸ்க், கோதுமை ரவை, சேமியா. இப்படியே போய்க்கிட்டு போதும்.’

தூரத்தில், வண்டியின் தலை தெரிந்தது. மேற்கு திசையிலிருந்து உள்ளே வந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு பக்கம் திரும்பி மெதுவாக நகர்ந்து வந்தது. எப்போவாவது நாம் ரசித்துப் பார்க்கும் மரவட்டை போல், கொள்ளை அழகுதான். மீட்டர் கேஜ் ரயிலும் அழகுதான். கச்சிதமான அமைப்பு. நடைமேடையில் திடீரென்று ஒரு பரபரப்பு பற்றிக்கொண்டது. தரையிலும், கான்க்ரீட் நாற்காலிகளிலும் அமர்ந்திருக்கும் பெட்டிகளும், பைகளும், மூட்டைகளும் அவசர அவசரமாக கைகளுக்கு மாறின. குழந்தைகளை இழுத்துப் பிடித்துக் கொண்ட கரங்கள். எப்போதும் இவன் வேடிக்கை பார்க்க விரும்பும் காட்சி.

தங்கைப் பெண்களைப் பெட்டியில் ஏற்றி, பின்னாலேயே சென்று, இரண்டாவது ’பே’யில் அவர்கள் இருவரையும் உட்கார வைத்தான். கீழே இறங்கி, வெளியில் நின்ற செந்திலுடன் ஓஜோவுடனும் சிறிது நேரம் பேசியிருப்பான்.

காவிரிப் பக்கம் இருந்த சிக்னல் ஆரஞ்சிற்கு மாறியது. கதிரும் பார்த்தான். ’என்ன இன்னைக்கு சீக்கிரம் எடுத்துட்டான்…!’

‘கதிர் ஏறிக்கோ. வண்டி கெளம்பப்போவுது.’ என்றான் ஓஜோ.

பெட்டியில் ஏறிக்கொண்டு இருவருக்கும் கையசைத்தான் கதிர். ‘பார்ப்போம்.’

தூரத்தில் விசில் சப்தம், தண்டவாளங்களில் தாளம் போட்டவாறு வண்டி நகர ஆரம்பித்தது. ஒன்றிரண்டு பேர் ஓடிவந்து பெட்டிகளில் ஏறினர். இவன் பெட்டியிலும் ஒருத்தன்.

வண்டி வேகமெடுத்தது. படிக்கட்டில் நின்று நண்பர்களைப் பார்த்துக் கையசைத்தவன் தங்கை மகள்கள் உட்கார்ந்திருந்த இடம் நோக்கி நகர்ந்தான்.

‘என்ன மாமா, வண்டிக்குள்ள வரமாட்டிங்களோன்னு நினைச்சோம்’ என்றாள் பெரியவள் தேவி.

சின்னவள் பாரதியும் சேர்ந்துகொண்டு ஏதோ கிண்டலடித்தாள். இவர்களிடம் மாட்டினால் தொலைந்தோம். கல்லூரி படிப்பை முடித்த பெண்கள். கதிரிடம் மதிப்பு உண்டு. ஆனால், அவ்வப்போது கதிரின் மனைவியோடு சேர்ந்து கேலி பேச ஆரம்பித்தால்… கதிருக்கு ’டெரர்’ என்று பெயர் வேறு வைத்திருந்தார்கள். எப்போதும் முகத்தை அவன் சீரியஸாக வைத்திருப்பவன் என்பதால்.

காவிரிப் பாலத்தைக் கடந்து சோழம்பேட்டைக் கேட்டையும் தாண்டிய வண்டி மேலும் வேகமெடுத்தது. அடுத்தது நீடுர், அப்புறம் ஆனந்ததாண்டவபுரம். பரிசோதகர் வந்துவிட்டால், டிக்கெட்டைக் காட்டிவிட்டு படுக்கையை இழுத்துவிட்டுப் படுத்துக் கொள்ளலாம். ஒரு நல்ல தூக்கம் வேண்டும். சித்தி வீடுகள் நண்பர்கள் என்று இரண்டு மூன்று நாட்களும் நல்ல அலைச்சல்.

இரண்டு ’பே’ தள்ளி பரிசோதகர் டிக்கெட்களைப் பரிசோதிப்பது தெரிந்தது. அவரை இதற்கு முன் பயணத்தில் பார்த்திருக்கிறான். கிட்டத்தட்ட முள்ளும் மலரும் படத்து சாமிக்கண்ணு போன்ற உடலமைப்பு. மைனஸ் அந்த அசட்டுச் சிரிப்பு. ‘ஒ’ வடிவ முகம். பேட்ஜு. திறந்த கோட். கையில் பரிட்சை அட்டையில் பயணிகளின் லிஸ்ட். கண்டிப்பான முகம்! எப்படியும் இரண்டு மூன்று பெட்டிகளாவது பார்க்க வேண்டியிருக்கும்.

ஆறு பேரில் இவர்கள் மூவரைத் தவிர வேறு யாரும் இன்னும் ஏறவில்லை. ஒருவேளை அடுத்துவ ரும் நிலையங்களில் ஏறலாம்.

இருக்கையில் வசதியாக அமர்ந்தவாறு பெயர்ப் பட்டியலைப் புரட்டினார். அந்த முஸ்தீபே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லியது. டிக்கெட்டை எடுக்க கதிர் சட்டைப் பைக்குள் கைவிட்டான். இல்லை, பேண்ட் பாக்கெட்டில்? இரண்டிலும் இல்லை. கதிருக்கு நெற்றி வியர்த்தது.

பரிசோதகர் இவன் பக்கம் கையை நீட்டினார்.

‘சார் ஒரு நிமிஷம்’, துணிப்பை ஸிப்பைத் திறந்து உள்ளே கைவிட்டான். அதிலும் இல்லை.

‘சார், டிக்கெட் வாங்கியிருந்தேன்…’ மென்று விழுங்கினான் கதிர்.

அதுவரை சிரித்துப் பேசிக்கொண்டு வந்த அந்தப் பெண்களின் முகம் மாறிவிட்டது. இவன் முகமும் பதட்டத்தில் சிறுத்தது. இம்மாதிரியான நேரங்களில் இவனுக்கு ஏற்படும் பதட்டமும் தொற்றிக்கொண்டது. கைகள் நடுங்கத் தொடங்கின. சட்டைக்குள் வியர்க்கத் தொடங்கியிருந்தது.

பரிசோதகர் முகத்தில் மெலிதான சிரிப்போடு குனிந்தவர், மேலும் கேள்விகள் கேட்காமல், அட்டையிலிருந்த காகிதங்களைப் புரட்டினார். என்ன செய்தோம் டிக்கெட்டை? பாக்கெட்டில்தானே இருந்தது. கீழே எங்காவது விழுந்திருக்குமோ?

இந்த பெண்கள் வேறு. தனியாக வந்திருந்தால், இறங்கியிருக்கலாம். இருவரையும் வைத்துக்கொண்டு இந்த இருட்டு நேரத்தில் என்ன செய்வது? வருவது ஆனந்ததாண்டவபுரம். அங்கே இறக்கிவிட்டு விடுவாரோ? இல்ல நாமே இறங்கிவிடலாமா?பணம் கொடுக்கலாம். இந்த பெர்த்தெல்லாம் காலியாத்தானே இருக்கும். மொத்தப் பணத்தையும் கொடுத்துவிடலாம். ஆனால், மனுஷனைப் பார்த்தால் கண்டிப்பான ஆள் போலத் தெரியுதே. பணம் கொடுப்பதே பிரச்சனையாகி விட்டால்?

‘சார். கன்ஃப்ர்ம்டு டிக்கெட்தான். சார்ட்ல பாத்தாலே தெரிஞ்சிருக்கும். கதிர் என் பெயர், அப்பறம் இந்த பெண்கள் பெயர் இருக்கும். பெர்த் ஏழு, எட்டு, பத்து. இந்தப் பசங்கள அழைச்சுட்டு எப்படி சார் டிக்கெட் இல்லாம வந்திருப்பேன். தாம்பரத்துக்கு மூனு பெர்த்துக்கு என்ன பணமோ பே பண்ணிடுறேன் சார்’ என்றான் கதிர்.

’சாமிக்கண்ணு’ கதிரை மேலும் கீழும் ஒருமுறைப் பார்த்தார். கண்ணாடி மூக்கில் இறங்கியிருந்தது. அப்படியே திரும்பி, தேவியையும் பாரதியையும் பார்த்தார். கண்களில் நீர் வராத குறை. முகம் சிறுத்து அமர்ந்திருந்தார்கள். அவர் வேகமாக ஏதாவது பேசினால் அழுதுவிடுவார்கள்.

‘சார். ஓபன் டிக்கெட் இருந்தா கொடுங்க. எக்ஸ்ட்ரா சார்ஜுக்கு ரசீது கொடுக்கிறேன்’ நேரடியா விஷயத்துக்கு வந்தார். அநாவசிய பேச்சே இல்லை.

ஓ… இப்போதுதான் கதிருக்கு நினைவு வந்தது. செந்திலிடமே டிக்கெட் இருக்கு. வண்டி வந்ததும் ஏறியதும் வாங்கிக் கொள்ள மறந்துவிட்டான். ’எவ்வளவு பெரிய முட்டாள் நான். அவனாவது கொடுத்திருக்கலாம். இப்ப என்ன செய்வது?’

மீண்டும் அவரிடம் கெஞ்சுவது போல் கதிர் கூறினான். ‘சார் வெயிட்டிங் லிஸ்ட் இன்னிக்குதான் கன்ஃப்ர்ம் ஆச்சு. அதப் பார்த்துட்டு வர ஃப்ரெண்டுகிட்ட டிக்கெட்டைக் கொடுத்தேன். வாங்க மறந்துட்டேன். சாரி சார்.’

’சார் இதெல்லாம் ஒரு காரணமா? டிக்கெட் இருந்தாத்தான் ட்ராவல் பண்ண முடியும். உங்களுக்குத் தெரியாதா?’

’சாரி சார். சார்ட்ல எங்க பெயர் இருக்குமே சார்’.

‘அது நீங்கதான்னு எப்படி சார் சொல்ல முடியும்? உங்க கையில டிக்கெட் இருந்தாத்தான். டிக்கெட் இல்லாம நான் ஒன்னும் பண்ண முடியாது.’ என்று சொல்லியவாறே மற்ற பயணிகளின் பக்கம் நகர்ந்தார். மனுஷன் அமைதியாக நகர்ந்தது கொஞ்சம் நம்பிக்கையைத் தந்தாலும் பயமாகவும் இருந்தது.

‘மாமா, எங்க மாமா வைச்சிங்க’ சின்னவள் கேட்டாள். பெரியவள். ‘வேண்டுமானால், சீர்காழியில் இறங்கிடலாம் மாமா’ என்றாள். இந்தப் பெண்கள் முன்னால் இப்படி அவமானப்பட வேண்டியுள்ளதே. என்ன செய்யலாம் என்று யோசித்தான் கதிர். நல்லவேளை அவர்கள் ‘என்ன இப்படி பண்ணிட்டிங்களே’ என்று பேசவில்லை. அவன் கோபத்தில் ஏதாவது சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் வாயை மூடிக்கொண்டிருக்கலாம்.

சந்திக்கப் போகிற அவமானம்தான் அவன் கண்முன் வந்தது. இந்த பரிசோதகர் அமைதியாக இருந்தாலும்… எந்த புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ? ஒரு முறை இதேபோல் அவன் பிரயாணம் செய்த வண்டியில் வந்த வயதான தம்பதியரை வயதில் மூத்தவர்கள் என்றும் பார்க்காமல் ஒரு சின்ன வயது பரிசோதகர் நடத்திய விதம் கதிரின் நினைவுக்கு வந்தது. அவர்கள் செய்ததெல்லாம், பெட்டி மாறி உட்கார்ந்ததுதான். அந்த பெர்த்துக்குரியவர்கள் இன்னும் ஏறவும் இல்லை. எழுப்பி டாய்லெட் பக்கம் போய் நிற்கச் சொல்லிவிட்டான். இந்த இடத்தில் இவர்கள் வைப்பதுதான் சட்டம். ’நமக்கும் அப்படி நிகழுமோ?’

ஆனந்ததாண்டவபுரத்தில் நிற்பதற்காக வண்டியின் வேகம் குறைந்தது. எப்படியும் இரண்டு நிமிஷம் நிற்கும். கொஞ்சம்பேர் ரெகுலரா ஏறி இறங்குவார்கள். யோசித்துக்கொண்டே இருந்த கதிருக்கு, ’ஓபன் டிக்கெட் இருந்தா கொடுங்க’ என்ற செக்கரின் குரல் காதில் ஒலித்தது. திடீரென்று இருக்கையை விட்டு எழுந்தான். படியின் பக்கம் சென்று கீழே இறங்கினான். ’மாமா, என்ன செய்யறீங்க’ என்ற குரல்கள் பின்பக்கம் கேட்டன.

அது சின்ன ஸ்டேஷன். ஒரு வீடுபோல் தான் இருக்கும். நல்லவேளை அன்றைக்கு அவன் பெட்டி டிக்கெட் கவுண்டருக்கு இருபது அடியில் நின்றிருந்தது. பச்சை சிவப்பு கொடிகளுடன் வெளிவந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம், ‘சார் ப்ளீஸ் தாம்பரத்திற்கு மூன்று டிக்கெட் கொடுங்க’ என்றான் கதிர்.

ஒருகணம் திகைத்த அவர், ’டிக்கெட்டா, தாம்பரமா’ என்றவாறு வேகமாகக் கவுண்டர் பக்கம் நகர்ந்தார். மூன்று டிக்கெட்டுகளை எடுத்து, ’பஞ்ச்’ செய்து இவனிடம் நீட்டினார். பணத்தை வாங்கிப் போட்டவர் வெளியில் வந்தபிறகுதான் திட்டினார். ’என்ன சார் நினைச்சுட்டிருக்கீங்க. டிக்கெட் வாங்காம எப்படி ஏறினீங்க. இந்த முட்டாள் தனத்தை இனிமே செய்யாதீங்க’.

டிரெயின் வேகமாக குரலெழுப்பியது.

பெட்டிகளிலிருந்து தலைகள் எட்டிப்பார்த்தன. தங்கைப் பெண்கள் இருவரும் பெட்டியின் வாசலிலேயே நின்றிருந்தனர். ‘சார் சீக்கிரம் ஏறுங்க. சிக்னல் விழப்போவுது’ என்றார் பின் தொடர்ந்து வந்த ஸ்டேஷன் மாஸ்டர். அவர் கைகள் பச்சைக்கொடியைப் பிரித்துக்கொண்டிருந்தன. இவனுக்காகவே அவர் வண்டியை ஒரு நிமிடம் தாமதப்படுத்தியிருக்கிறார். மற்றொரு கர்வ பங்கம்.

பெட்டியிலேறி, இருக்கையில் அமர்ந்த கதிரின் இதயம் வேகமாக அடித்தது. நன்றாக வியர்த்துவிட்டது. உள்ளங்கைகள் ஈரமாகியிருந்தன. இரண்டு பெண்களும் ’டெரர்’ மாமாவை மௌனமாகப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

கதிருக்கு பாரம் இறங்கியது போலிருந்தது. ’ஓபன் டிக்கெட்’ போதுமென்று பரிசோதகர் சொன்னாரே. ஆனால், மனுஷன் டிக்கெட் தருவாரா? இறங்கச் சொல்வாரா? ஆனால், கையில் ஓப்பன் டிக்கெட் இருக்கிறதே. இந்த பெண்கள் இல்லையென்றால் ஏதாவது வாதாடிப் பார்க்கலாம்.

வைத்தீஸ்வரன் கோவிலில் ஒரு நிமிடம் நின்ற வண்டி புறப்பட்டு விட்டது. அடுத்தது சீர்காழிதான். அங்கு ஒரு நிமிடம் அதிகம் நிற்கும். ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இறங்கி பேருந்து நிலையத்துக்குப் போய் சென்னைக்கு பஸ் பிடிக்கவேண்டியதுதான். உட்கார இடம் கிடைக்காது. காத்திருந்து ஏறவேண்டும். மனம் அமைதியிழந்து அடித்துக்கொண்டது. பரிசோதகர் வர பத்து நிமிடம் ஆனது.

’என்ன சார் என்று கேட்டுக்கொண்டே இருக்கையில் அமர்ந்த அவரிடம், ‘சார் ஓபன் டிக்கெட்’ என்று சொல்லி அவரிடம் மூன்று டிக்கெட்டுகளையும் நீட்டினான் கதிர்.

எதுவும் பேசாமல், ரசீது எழுத ஆரம்பித்தார். கதிருக்கு வியப்பாக இருந்தது. ஏதாவது பேசுவார். இறங்கச் சொல்லுவார். தன்னை மேலும் கெஞ்ச வைத்துப் வேடிக்கை பார்ப்பார் என்றெல்லாம் நினைத்தவன் அமைதியாகிவிட்டான். ’சரி. டிக்கெட் பணத்திற்கும் மேல் ஏதாவது கேட்பார் கொடுக்கலாம். வேறு வழி?’

ஐந்து நிமிடங்களுக்கு மேலாயிற்று, எழுதி முடியும் வரை அவர் எதுவும் பேசவில்லை. ஆனால், முகத்தில் ஏதோ ஒன்று, சின்ன சிரிப்போ?

‘இந்தாங்க’ டிக்கெட்டுகளையும் ரசீதையும் நீட்டியவர், டிக்கெட்டிற்கான பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு எழுந்தார். ‘சார், மேலே ஏதாவது…’ என்று இழுத்தான் அவன்.

தலையாட்டியவாறு அடுத்த ‘பே’ பக்கம் போனவர், கதிர் பக்கம் திரும்பினார். ’சார், இது உங்கத் தன்மையான பேச்சுக்கும் இந்த பசங்களுக்காகவும்தான். பசங்கள வண்டியில விட்டுட்டு திடீர்னு இப்படி இறங்கிட்டீங்களே. வண்டி புறப்பட்டிருந்தா… ஓபன் டிக்கெட் இல்லென்னாலும் ரசீது போட்டிருப்பேன்.’

மற்றொரு அடி. வண்டி சீர்காழியையும் தாண்டியிருந்தது. இன்னும் பதட்டம் தனியாத நிலையில் பெண்கள் இருவரும் மெதுவாக உரையாடிக் கொண்டிருந்தனர். ’நல்லவேளை மாமா’ என்றாள் ஒருத்தி.

மணி பத்தேகால். அசட்டுச் சிரிப்புடன், ‘படுக்கலாமாப்பா’ என்று கேட்டவாறே இருக்கைகளைப் போட எழுந்தான் கதிர். இரண்டு பேரும் எழுந்து அவனுக்கு உதவி செய்ய வந்தனர். அவன் மறுக்கவில்லை. உடல் அயர்ந்து கிடந்தது.

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.