அரிசங்கர்
ஆந்தை தன் அலுவலகத்திற்குள் நுழைந்தார். அலுவலகம் சுத்தமாக இருந்தது. உள்ளே ஒரே ஒரு மேஜையும் அதற்கு எதிரில் மூன்று பிளாஸ்டிக் நாற்காலியும் இருக்க, மேஜைக்கு மறுபுறம் ஒரு ரோலிங் சேர் இருக்க நேராக அதில் சென்று அமர்ந்துகொண்டார். வாசல் வழியாகவும் ஜன்னல் வழியாகவும் வந்த வெளிச்சமே போதுமானதாக இருந்ததால் அவர் பகலில் மின்விளக்கை போடுவதில்லை. குளிர் காலம் என்பதால் அவர் மின்விசிறியை போடலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தார். மின்விசிறி போட்டால் குளிர்கிறது. நிறுத்தினால் என்னவோ போல் இருக்கிறது. எதற்கு செலவு என்று போடாமலேயே இருந்தார். காலையிலேயே அவருக்கு கடுப்பாக இருந்தது. எந்த வேலையுமில்லாமல் இருந்தார். சுற்றி ஒருமுறை தன் அலுவலகத்தைப் பார்த்தார். அவருக்கு இடதுபுறம் ஒட்டப்பட்டிருந்த சி.ஐ.டி. சங்கர் என்ற திரைப்படத்தின் பெரிய போஸ்டரை சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். கையில் துப்பாக்கியுடன் ஜெயசங்கர் இவரைப் பார்த்து முறைப்பதுபோலவே இருந்தது. சட்டென அவருக்கு அந்தக் குரல் கேட்டது.
“சும்மாவே இருந்தா எப்படி ஒரு டீ செல்றது…”
குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார். வலதுபக்கமாக இருந்த அலமாரியில் எதையோ தேடியபடி ஒரு பெண்மணி இருந்தார். ஆந்தையைப் போலவே அவரும் ஐம்பது வயது மதிக்கத்தக்கவாறு இருந்தார்.
ஆந்தை தன் கைப்பேசியை எடுத்து டீக்கடைக்கு போன் செய்து ஒரு டீ கொண்டுவர சொன்னார். மீண்டும் சலிப்புடன் அந்தப் பெண்மணியை எரிச்சலுடன் பார்த்து பேச ஆரம்பித்தார்.
“எத்தன துப்பறியும் கதை படிச்சிருக்கேன். ஒரு ரூபாலா மாதிரியோ, வைஜெயந்தி மாதிரியோ, சுசிலா மாதிரியோ எனக்கு ஒரு அஸிஸ்டெண்ட் கிடைச்சிருக்கக் கூடாதா… எனக்குன்னு வந்து வாச்சியே கழுவாத பிரியாணி அண்டா மாதிரி…”
“சும்மா வாய்க்கு வந்த மாதிரி பேசாதீங்க… நான் ஒன்னும் நீங்க சம்பளம் கொடுத்து வெச்சிருக்கற ஆள் இல்ல… வெறும் கற்பனை தான்… அழகா வேணும்னா நீங்க தான் அப்படி கற்பனைப் பண்ணனும்… உங்க மண்டைக்குள்ள என்ன இருக்கோ அதான வரும்…”
“ஓவரா பேசாத கிளம்பு…” என்று அவர் சொன்னதும் அந்த பெண்மணி மறைந்தாள். சற்று நேரத்தில் டீ வர, அதை குடித்துவிட்டு செய்துத்தாளை எடுத்தார். முதல்பக்கம் தாண்டுவதற்குள் மீண்டும் கைப்பேசி அடித்தது. வாடகைக்காக உரிமையாளர்தான் அடிக்கிறாரோ என்று பதட்டமாக எடுத்துப்பார்த்தார். டீக்கடைக்காரர் பெயர் இருந்தது. சலிப்பாக எடுத்து “ஹலோ” என்றார்.
“சார்.. ஒரு பார்ட்டி உங்களத்தான் தேடின்னு வருது…”
“சரி சரி.. அவன் உள்ள வர வரைக்கும் அப்படியே பேசிட்டு இரு…”
“இன்னா சார்…”
“ஆள் வர சத்தம் கேக்குது… ஓகே சார்… ஓகே சார்… நோ பிராப்ளம்… எக்ஸ்ரா பேமெண்ட்லாம் வேண்டாம் சார்… நீங்க கொடுத்தே போதும் சார்…” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒரு உருவம் வந்து அவர் எதிரில் நின்றிருந்தது. அதைத் தெரிந்துக்கொண்டு தான் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். வந்த உருவம் அலுவலகத்தை சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்க அவர் போனை வைத்துவிட்டு “எஸ்…” என்றார்.
“உண்மை டிடெக்டீவ் ஏஜென்ஸி…”
“ஆமா… இதுதான் உக்காருங்க…”
வந்தவர் உட்கார்ந்தார். ஆந்தை அவரை ஆராயத் தொடங்கினார். வந்தவர் ஏதோ ஐடி கம்பெனி ஆள் போல் அவருக்கு தோன்றியது. கண்டிப்பாக ரொம்ப மொக்கயான வேலையாகத்தான் இருக்கும் என்று நம்பினார்.
“சொல்லுங்க சார்… நான் உங்களுக்கு என்ன உதவி செய்யணும்…”
“சார்… எனக்கு ஒரு ஆள கண்டுபிடிக்கணும்…”
“ஓ… சொல்லுங்க யாரக் கண்டுபிடிக்கணும்… உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு… முழு விபரத்தையும் சொல்லுங்க…”
“சார் உங்க பீஸ்…”
“மொதல்ல கேஸ சொல்லுங்க சார்… பிஸ்லாம் அப்பறம் பேசிக்கலாம்…”
“அதுவந்து சார்… ஒரு ஆள கண்டுபிடிக்கணும்…”
“அதான் சொல்லிட்டீங்களே…”
“சார்… அவன் ஒரு கொலைய நேர்ல பார்த்த முக்கியமான சாட்சி…”
கொலை என்றதுமே ஆந்தை சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார். வந்தவருக்கு வேர்க்க ஆரம்பிக்க “சார்… கொஞ்சம் கோச்சிக்காம… அந்த ஃபேன் சுவிட்ச போடறீங்களா” என்று வந்தவரையே வேலை வாங்கினார். அவரும் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்று ஃபேன் ஸ்விட்சைப் போட்டுவிட்டு வந்து உட்கார்ந்தார்.
“சொல்லுங்க சார்… என்ன கொலை… எப்ப நடந்தது… எங்க நடந்தது… எந்த ஸ்டேஷன்ல கேஸ் ஃபைல் ஆகியிருக்கு…” என்று ஆர்வத்துடன் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தார். தன் வாழ்நாளில் முதல் கொலை கேஸ் அவரிடம் வந்திருக்கிறது என்ற படப்படப்பு அவரின் உடல் மொழியில் வெளிப்படையாக தெரிந்தது.
“சார் அவன் பேரு என்னன்னு தெரியாது சார்…”
“ஓ… அவனப்பத்தி வேற என்ன தகவல்கள் இருக்கு…”
“எனக்கு சரியா தெரியல சார்…
“என்ன சார் குழப்பறீங்க… எனக்கு மொதல்ல இருந்து முழுசா எல்லாத்தையும் சொல்லுங்க சார்…”
“முழுசா சொல்ல முடியாது சார்… அது நானூறு பக்கம்… நான் சுருக்கமா சொல்றன்…”
“என்னவோ புரியற மாதிரி சொன்னா சரிதான்… சொல்லுங்க…”
“பாண்டிச்சேரில அல்லிகிணறுங்கற ஊர்ல ஒரு கொலை நடந்தது சார். செத்தவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் பெரிய சண்ட… அவ கொஞ்சம் கோவக்காறி… ஆம்பளைங்க கூட சரிக்கு சமமா சண்டைக்கு போவா… அதனால அவதான் அவன கொன்னுருக்கணும்ன்னு ஊர்ல பேசிக்கிட்டாங்க… போலிஸுக்கும் அது வசதியா போச்சு… அவள புடிச்சி உள்ளப் போட்டாங்க… ஆனா அவ அந்தக் கொலைய செய்யல சார்… அந்தக் கொலைய பண்ணது வேற ஒருத்தன். அத ஒருத்தன் பாத்திருக்கான். அவனத்தான் கண்டுப்புடிக்கணும்…”
“ஓஹோ…”
“பாண்டிச்சேரில நடந்தக் கொலைக்கு நீங்க ஏன் சென்னையில இருக்கற டிடெக்டிவ் ஏஜென்ஸிக்கு வரீங்க… அங்கயே எதுவும் இல்லையா…”
“நான் இங்கதானே சார் இருக்கேன்…”
“கொலை எப்போ நடந்தது…”
“அப்படி எதுவும் சரியா சொல்ல முடியாது… சார்… எப்ப வேணும்னாலும் வெச்சிக்கலாம்…”
இப்போது ஆந்தை கொஞ்சம் கடுப்பானார். “சார்… நீங்க தகவல்களை சரியா சொன்னாத்தான் என்னால எதாவது உதவ முடியும்…”
“சார்… நீங்க கேக்கற எல்லா கேள்விக்கும் தான் நான் பதில் சொல்றனே…”
“எங்க சொல்றீங்க…”
“சரி… இப்ப ஒன்னொன்னா கேளுங்க… சரியா சொல்றன்…”
“பாண்டிச்சேரில அல்லிக்கிணறுங்கற கிராமம் எங்க இருக்கு…?”
“அப்படி ஒரு கிராமம் பாண்டிச்சேரில இல்ல சார்…”
“யோவ்… என்ன விளையாடறியா… காலங்காத்தால கடுப்பேத்திகிட்டு… எழுந்து போயா…”
“சார்… ஏன் சார் கோவப்படறீங்க… வழக்கமா நான் தான் டென்ஷன் ஆவேன்…”
ஆந்தைக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. எதிரில் இருப்பது உண்மையிலேயே மனிதன் தானா இல்லை இதுவும் தனது கற்பனையா என்று. மெல்ல எழுந்து எதிரில் இருந்தவனை நெருங்கினார். மெதுவாக அவனைத் தொட்டார். அவன் உடலை அவரால் உணர முடிந்தது.
“என்ன பண்றீங்க சார்…”
“இல்ல ஒன்னுமில்ல…” என்று சொல்லிவிட்டு தன் இருக்கையில் வந்து உட்கார்ந்தார். பிறகு மெல்ல டீ சாப்பிடறீங்களா…” என்றார். எதிரில் இருந்தவர் தலையசைக்க, தனது செல்போனை எடுத்து கடைக்காரனை அழைத்து இரண்டு டீ சொன்னார். பிறகு பெருமூச்சொன்றை விட்டுவிட்டு “சார்… என்னால முடியல… வயசாயிடுச்சி… எதுவா இருந்தாலும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க… இல்லனா டீ வரும் குடிச்சிட்டு கிளம்புங்க…”
“சார்… நான் தெளிவா சொல்றன் சார்… அதுக்கு முன்னாடி… ஒரு நிமிஷம்…” என்று சொல்லிவிட்டு தான் கொண்டுவந்திருந்த பையைப் பிரித்து அதிலிருந்து ஒரு பெரிய பைண்டிங் செய்யப்பட்ட புத்தகத்தை எடுத்து மேஜையின் மீது வைத்தார். ஆந்தை அதையே வைத்தக் கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
“என்ன சார் இது…”
“சார்… இதுதான் நான் புதுசா எழுதியிருக்கற நாவல்…”
ஆந்தை அதைத் தூக்க முடியாமல் தூக்கினார். பிரித்து முதல்பக்கத்தைப் பார்த்தார். அதில் முதல் வரியில் ‘ஒரேக் குத்துல பொட்டுன்னு போயிட்டான்’ என்றும் இரண்டாவது வரியில் ‘நாவல்’ என்றும் மூன்றாவது வரியில் ‘அரிசங்கர்’ என்றும் இருந்தது. அதைப் பார்த்ததும் ஆந்தைத் தலையைத் தூக்கி எதிரில் இருந்தவரிடம் “சார்… உங்கப் பேர கேக்கவே இல்ல…”
“என் பேரு அரிசங்கர்…”
“அப்படின்னா நீங்க ஒரு எழுத்தாளர்…”
“சார்… நான் சொல்லவேயில்ல… எப்படி கண்டுபிடிச்சீங்க சார்…”
அவர் பெருமையாக மெல்ல சிரித்துக்கொண்டார்.
“சரி இப்பவாது கொஞ்சம் தெளிவா சொல்லுங்க பிளீஸ்…”
“சார்… உங்க கையில இருக்கறது என்னோட புது நாவல்… இப்பத்தான் எழுதிமுடிச்சேன்… அதுல ஒரு கொலை நடந்தது… ஆனா கொலையே பண்ணாத ஒரு அப்பாவிப் பொண்ணு ஜெயிலுக்கு போயிடுச்சி… ஆனா கொலை நடந்தப்ப அதப் பாத்த ஒரு சாட்சி இருக்கற மாதிரி தான் நான் எழுதியிருக்கேன்… ஆனா அதுக்கப்பறம் அவன் எங்கப் போனான்னு எனக்கே தெரில நீங்க தான் இந்த நாவலப் படிச்சி அவனக் கண்டுபிடிக்கனும்…”
“ஓ… இது உங்க நாவல் தான… உங்க இஷ்டப்படி இருந்தாதான் என்ன… அவனக் கண்டுபிடிச்சி என்னப் பண்ணப்போறீங்க…”
“சார்… மொத்தம் ரெண்டு விஷயம் சார்… ஒன்னு ஒரு அப்பாவி பொண்ணு ஜெயிலுக்கு போயிடுச்சின்னு எனக்கே கஷ்டமா இருக்கு… ரெண்டாவது நான் இந்த நாவல் படிக்கறதுக்காக எழுத்தாளர் தென்னமரத்துகிட்டக் கொடுக்கப் போறன்… அவரு கொஞ்சம் ஸ்டிரிக்டா பாப்பாரு… லாஜிக் கேள்விலாம் கேப்பாரு… சரியா சொல்லலனா அப்பறம் காலச்சுவடுக்கு ரெகமெண்ட் பண்ணமாட்டாரு… அதனாலத்தான் எனக்கு அந்த சாட்சிய கண்டுப்பிடிச்சே ஆகணும் சார்…”
“எனக்குப் புரிது… நீங்க இதக் கொடுத்துட்டுப் போங்க… நான் படிச்சி கண்டுபிடிச்சிட்டு உங்கள கூப்பிடறன்…”
“ஓகே சார்… உங்க பீஸ்…”
“அதப் பாத்துக்கலாம்… நீங்க கிளம்புங்க…”
“சார்… டீ இன்னும் வரலயே…”
“பழைய பாக்கி நிறைய இருக்கு… டீ வராது… நீங்க கிளம்புங்க…”
அரிசங்கர் மெல்ல எழுந்து வெளியே சென்றதும் ஆந்தை அந்த பெரிய பைண்டிங் செய்யப்பட்ட புத்தகத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டத் தொடங்கினார்.
ஒருவாரத்திற்கு பிறகு…
ஆந்தை மிக உற்சாகமாக இருந்தார். அவரது உதவியாளரிடம் தான் இந்த கேஸை முடித்துவிட்டதாக பெருமையாக சொன்னார். அவர் அரிசங்கரின் வருகைக்காகக் காத்திருந்தார். அரிசங்கர் வருவது தாமதமாக அவர் முகம் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டே வந்தது. அவர் உற்சாகம் மெல்ல மெல்ல வடிந்துகொண்டே வர, அவரின் உதவியாளரின் அழகு குறைந்துகொண்டே வந்தது. சரியாக பதினொரு மணிக்கு அரிசங்கர் ஆந்தையின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். ஆந்தை கொஞ்சம் கோவமாக, “என்ன சார் பத்து மணிக்கு வரசொன்னா பதினொரு மணிக்கு வரீங்க.
“சாரிங்க சார்… வர வழியில ஏதோ போராட்டம்… டிராபிக் ஜாம்… அதான்…”
“சரிசரி விடுங்க… உங்க கேஸ் முடிஞ்சிது…”
அரிசங்கரின் முகம் பிரகாசமானது. “சொல்லுங்க சார்… அவன் எங்க இருக்கான் கண்டுபிடிச்சிட்டீங்களா… அந்தப் பொண்ணக் காப்பாத்திடலாமா…”
“கண்டுபிடிச்சிட்டேன்… ஆனா அந்தப் பொண்ணக் காப்பாத்த முடியுமான்னு தெரியல…”
“என்ன சார் சொல்றீங்க…”
“உங்க நாவல்ல நீங்க எழுதியிருக்கறதப் படிக்கறன் கேளுங்க…” என்று சொல்லுவிட்டு புத்தகத்தில் தான் குறித்து வைத்திருந்த ஒரு பக்கத்தை எடுத்து ஆந்தை வாசிக்க ஆரம்பித்தார்.
“அந்தத் தெருவில் எந்த விளக்கும் எரியவில்லை. சில வீடுகளிலிருந்து கொஞ்சம் வெளிச்சம் வந்துகொண்டிருந்தது. கட்டெரும்பு மெல்ல நடந்துவந்துகொண்டிருந்தார். அப்போது மறைவிலிருந்து ஒரு உருவம் மெல்ல வெளிப்பட்டு சத்தமெழுப்பாமல் அவரைப் பின்தொடந்தது. எந்த வெளிச்சமும் இல்லாத இடத்தில் பின்னால் வந்துகொண்டிருந்த உருவம் மெல்ல கட்டெரும்பின் தோளைத் தொட அவர் திரும்பினார். பின்னாலிருந்த உருவத்தைப் பார்த்ததும் மெல்ல புன்னகைத்து ‘டேய் கோழி’ என்றார். அடுத்த விநாடி கட்டெரும்பின் வயிற்றில் தன் கையிலிருந்த கத்தியால் கோழி ஒரே குத்து குத்தினான். கத்தி ஆழமாக இறங்கியது. வந்த வேலை முடிந்தத் திருப்தியில் கோழி மெல்ல மூச்சுவிட தூரத்தில் யாரோ நிற்பது போல் இருந்தது.”
படிப்பதை நிறுத்திவிட்டு அரிசங்கரை நிமிர்ந்துப் பார்த்தார் ஆந்தை. அரிசங்கர் எதுவும் புரியாமல் அவரைப் பார்க்க, “பிரச்சனையே இந்த கடைசி வரியில தான்.” என்றார்.
“என்ன பிரச்சனை சார்…” என்று தயங்கியவாறே கேட்டார் அரிசங்கர்.
“அவன் கொலை செய்யறத யாரோ பாத்துடறாங்கன்னு எழுதியிருக்கீங்க… அப்படி ஒருத்தன் பாத்தா கொலை செஞ்சவன் சும்மா இருப்பானா… சொல்லுங்க…?
அரிசங்கர் அமைதியாக இருந்தார்.
“ஆனா அந்த இருட்டுல நின்னு கொலையப் பாத்தது யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்…”
“அப்படியா… யாரு சார் அது…”
ஆந்தை மீண்டும் குறித்துவைத்திருந்த வேறு ஒரு பக்கத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.
“கட்டெரும்பு வழக்கமாக வேலையை விட்டு அந்தத் தெரு வழியாகத்தான் வீட்டிற்குப் போவார். அது அவரைத் தெரிந்த அனைவருக்கும் தெரியும். அவருக்கு அந்தத் தெருவில் ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் ஊடுகொள்ளுத்தி. பெரும்பாலான நேரத்தில் கட்டெரும்பு அவர் வீட்டைக் கடக்கும் போது அவர் வாசிலில் நின்றிருப்பார். நடந்துக்கொண்டே சில வார்த்தைகளை ஊடுகொளுத்தியிடம் பேசிவிட்டுச் செல்வார்.” என்று முடித்துவிட்டு அரிசங்கரைப் பார்த்தார்.
அப்போது ஆந்தைக்கு செல்போன் அடிக்க எடுத்துப் பார்த்தார். தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது. தயக்கத்துடன் எடுத்து ஹலோ என்றார்.
“ஆந்தையா”
“ஆமா சார்…”
“சார் இந்த மாச வாடகையும் இன்னும் வரல சார்…”
“சாரி சார்… ராங் நம்பர்…” என்று போனை அணைத்துவிட்டு அரிசங்கரைப் பார்த்தார்.
அரிசங்கர் அமைதியாக இருக்க, ஆந்தைத் தொடர்ந்தார்.
“ஸோ… கேஸ் க்ளோஸ்டு…”
பெருமூச்சொன்றை விட்ட அரிசங்கர், “ரொம்ப தாங்ஸ் சார்… அந்தப் பொண்ண காப்பாத்திடலாம்னு நெனச்சேன்… ம்.. அவ தலையெழுத்து… உங்க பீஸ்…?”
“பீஸ் இருக்கட்டும் விடுங்க… இனிமே தான் முக்கியமான சில விஷயங்களை உங்க கிட்ட பேசணும்…”
“சொல்லுங்க சார்…”
“கட்டெரும்ப வேணா கோழி கொன்னுருக்கலாம்… ஆனா சாட்சி செத்ததும் அந்தப் பொண்ணு தவறுதலா கைதாகி தண்டனை அனுபவிக்கறதுக்கும் நீங்க தான் காரணம். அதாவது உங்க அலட்சியம்… கதாப்பாத்திரத்தையும் கதையையும் நீங்க சரியா நகர்த்தாததுனாலதான் இன்னிக்கு ரெண்டு அப்பாவி ஜீவன் பாதிக்கப்பட்டிருக்கு… அதானால நீங்களும் குற்றவாளிதான்…”
அரிசங்கர் ஆந்தையை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிந்தார்.
“அதனால உங்கள கைது செய்ய போலிஸ் வந்துகிட்டு இருக்காங்க… நான் காலையிலயே தகவல் சொல்லிட்டேன்… ஏன் இன்னும் வரலன்னு தெரில…
“நான் தான் சொன்னனே வர வழியில போராட்டம் நடக்குதுன்னு…”
“ஒகோ… இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நான் கண்டுபிடிச்சிருக்கேன்… நீங்க அந்தப் பொண்ண வர்ணிச்சிருக்கறதப் பார்த்தா உங்களுக்கு அந்தப் பொண்ணு மேல தவறான எண்ணம் இருந்திருக்கு…”
அரிசங்கர் அமைதியாக இருந்தார்.
“நீங்க அந்தப் பொண்ண லவ் பண்ணீங்களா…”
“தெரில சார்…
“சரி… போலிஸ் வரவரைக்கும் வெயிட் பண்ணுங்க… அப்பறம் இன்னொரு முக்கியமாக விஷயம்… உங்க நாவல்ல ஏகப்பட்ட எழுத்துபிழைகள் இருந்தது…”
“சரி பண்ணிடறன் சார்…”
“சரி நான் ரெண்டு டீ சொல்றன்… அதுவரைக்கும் அந்தப் பொண்ண நீங்க முதல் முதல்ல எங்கப் பாத்தீங்கன்னு சொல்லுங்க… நீங்க அந்தப் பொண்ண நிச்சயம் லவ் பண்ணியிருக்கீங்க…”
அரிசங்கர் லேசாக வெட்கப்பட்டார். பின்பு அந்தப் பெண்ணைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
“அது ஒரு அழகான மாலைப் பொழுது சார்….”
*