சிறுகதை

சாதனம் – சத்யானந்தன் சிறுகதை

பேனாக் கத்தியின் பயன்பாடுகள் என்ன என்று தெரியுமா?” என்றுதான் அவன் தனது உரையைத் துவங்குவான். மடக்கிய பேனாக்கத்தியைத் தனது சட்டைப் பையில் இருந்து வெளியே எடுத்து அதன் கத்திப் பகுதியை வெளியே நீட்டி மடக்கியவாறே, பதில்களை செவி மடுப்பான். ”கொல்லலாம்” அனேகமாக முதல் பதிலாக வரும். உடனே தன் ஷுவைக் கழற்றி அதன் அடிப்பகுதி மீது ஓங்கிக் குத்த கத்தி துளைக்காமல் மடங்கி விடும். அனைவரும் சிரிப்பார்கள். பின்னர்தான் எலுமிச்சம் பழம் வெட்ட, சிறிய திருகாணியை இறுக்கிச் சுழற்றிப் பொருத்த, பீர்பாட்டில் மூடி திறக்க, சிப்ஸ் பாக்கெட்டைக் கிழிக்க, குளிர்பான டின்னைத் திறக்க, அழுத்தி மடித்த காகிதத்தைச் சீரான துண்டாக்க, முதுகுப் பை ஜிப்பில் மாட்டி இருக்கும் சிறு நூல்களை வெட்டி அதைச் சீராய் இயக்க என ஒவ்வொன்றாய் பதில்கள் வரும். உண்மையில் ராஜநாயகத்துக்கே தோன்றி இருக்காத பல பயன்களும் பட்டியலாகும்.

 

    இன்று, இந்தப் பேனாக் கத்தி ஒன்று காரணமாகி இந்த முதுகுச்சுமையை செக் இன் லக்கேஜ் ஆக்க வேண்டி வரும். ‘லேப் டாப்பை அதன் சதுரப் பைக்குள் வைத்து எடுத்துப் போகலாம். விமானம் தரை இறங்கும் முன் பவர் பாயிண்ட் ஸ்லைடுகளை ஒரு முறை சரி பார்க்கலாம். நேற்று இரவு எடுத்து வந்த பெட்டிக்குள் பேனாக்கத்தி கிடையாது. அது இளைஞர்கள் பயிற்சி முகாம் அல்ல. ஆலோசக நிபுணர்களின் மாநாடு. இரவு இரண்டு மணி வீட்டுக்கு வந்தவன் வெறும் நான்கு மணி நேர இடைவெளிக்கு ஏர்போர்ட்டிலேயே தங்கி இருக்கலாம். கொஞ்ச நேரம் வீட்டில் இருந்தாலும் மனம் புத்துணர்ச்சி பெறுமென்று தோன்றிற்று. ஆனால், அரைமனப் போராட்டத்தை வெல்லாமல் கொஞ்சம் விஸ்கி அருந்தி இருக்க வேண்டாம். தலை பாரம் இன்னும் நீங்கவில்லை. கண் எரிச்சல் ஏறத்தாழ ஒருவாரத் தொடர் பயணங்களால். சிறிய பயணத்துக்கானவற்றை வைத்தாகி விட்டது என சிறு நிறைவு வந்து கொண்டிருந்தபோது,  முதல் முறை வாயிலில் மணி அடித்தது. ஆணுறைப் பாக்கெட் எங்கே? நேற்று எடுத்து வந்த பயணப் பைக்குள் ஒன்றே ஒன்று தனியாக இருக்க வேண்டுமே. முதுகுச் சுமைக்குள், பின் சிறிய பெட்டிக்குள் தேடினான். சிறியது. கை நழுவுகிறதோ?  எண் மேலாளும் பூட்டுள்ள வேறு ஒரு பெட்டி இருந்தது. அதனுள் கண்டிப்பாக ஒரு பேக் ஆணுறை இருக்க வேண்டும். அதைக் கையில் எடுத்தபோது அதன் எண் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. டிங்க் டாங்க் அழைப்பு மணி இரண்டாவது முறையாக ஒலித்தது. ராஜநாயகம் எண் நினைவு கூர அவகாசம் வேண்டி அறையை விட்டு வெளியே வந்தான். முதல் மணி பால் பாக்கெட் ஆள் அடிப்பது. இது செய்தித்தாள் பையன் அடித்திருப்பது. அவன் அறைக்கு எதிர் அறை செல்வராணியினுடையது சிறிய அறை அந்த ட்யூப்ளே வீட்டின் கீழ்க் கட்டில் இருந்தது. தாத்தா பாட்டியின் பெரிய அறை, சமையல் அறை மற்றும் வரவேற்பறையும். மங்கலான விளக்கொளியில் அம்மா உறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. அப்பா நடைப் பயிற்சிக்குப் போயிருப்பார். நான்கு பால் பாக்கெட்டுகளையும் முதலில் எடுத்து பிரிட்ஜ்ஜூக்குள் வைத்தான். செய்தித்தாளை அப்படியே உணவு மேசைமீது வைத்தான். ஹால் கடிகாரம் இன்னும் அரை மணிக்குள் அவன் கிளம்ப வேண்டும் எனக் காட்டியது. 6464 சட்டென எண் பூட்டின் திறவுகோல்மனத்துள் உதித்தது. பெட்டியைத் திறக்கும்போது, வீட்டில் அவன் அதைப் பூட்டும் பழக்கமே இல்லை என்பதும் நினைவில் மோதியது. சிறிய அரக்கு வண்ணப் பெட்டி. உள்ளே தேட அதிக இடம் இல்லை. ஆணுறை இல்லை. யாரோ எடுத்துப் பூட்டியும் இருக்க வேண்டும். யார் அது? அப்பா அவன் அறைக்குள் வருவதே இல்லை. கௌதமுக்கு 14 வயதில் இந்த அளவு தைரியம் இருக்க இயலுமா? செல்வராணி கடையில் கேட்டு வாங்கக் கூச்சப்பட்டு இதை எடுத்திருப்பாளோ? சற்றே வியர்த்தது. அது உண்மையென்றாலும் ஏன் தாக்கம் செய்கிறது என்பதும் பதட்டத்தை அதிகப்படுத்தியது. நேரம் கடந்தபடியே இருந்தது. குளியலறைக்குள் புகுந்தான். அப்படி செல்வராணியும் இல்லை என்றால்? வீட்டுக்கு வெளியே யார் என்னும் கேள்விக்கான விடையைத் தேட அவனுக்கு இந்த மாதிரியான ஒரு இக்கட்டான நேரம் போதாது. ஆனால் விடை தெரிந்தே ஆக வேண்டும். இன்னும் சில மணிகளில் நடத்த வேண்டிய பயிற்சி வகுப்பின் மீது  மனதை திசை திருப்பினான். காரை அவனிடமிருந்து வாங்கி மீண்டும் வீட்டில் விட வந்த அலுவலகத்து ஓட்டுனர், “பிரியா மேடம் இப்போதான் சார் அர்ரைவல்லே இருந்து கிளம்பினாங்க,” என்றான் பேச்சுவாக்கில். பிரியா எப்படி இவ்வளவு பிஸி? அவளுடன் கடைசியாக தனிமை எப்போது என சிந்திக்க முயன்றவன் கவனத்தை கைபேசி கலைத்தது.

 

ஜொனாதன் ஸ்மித்துக்கு ராஜநாயகம் என்னும் இந்திய வியாபார ஆலோசகனின் சின்னஞ்சிறிய மின்னஞ்சலில் தேவையற்ற ஒன்று இருப்பதும்  தேவையான ஒன்று இல்லை என்பதும் தென்பட்டன. விமான நிலையத்தில் இருந்து எழுதுகிறேன் என்றால்அது பற்றி எனக்கென்னவிரிவான பதில் கூறாமல் இந்தியப் பயணிகளின் விடுமுறை தினங்கள், ஆஸ்திரேலியாவில் அவர்கள் ருசிக்குப் பொருந்தும் தலங்கள் பற்றி தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் பதில். முழு வணிக சாத்தியங்களை முன் வைத்தால் என்ன குறைந்து விடும்தொலைபேசியில் அழைத்தால் என்னசெயற்கைக் கோள் தொலைபேசியை முதலில் கால்சராயில் தேடினான். இல்லை. முதுகுப் பையில்இல்லை. என்னதான் ஆகி இருக்கும். டார்ஜிலிங்கில் மீண்டும் விடுதிக்குப் போவது இந்த ஹார்லி டேவிட்சன் சக்திக்குக் கூட சவாலானதே. என்னமாய் வளைத்து நெளித்து ஓட்டுகிறான்கள் இந்த இந்திய ஓட்டுனர்கள்இடிக்கிற மாதிரி வந்து இறுதியில் நகர்த்துவதில் என்ன இத்தனை முனைப்பு?  மாட்டுக்கறியும் பாஸ்தாவும் கொஞ்சம் எஞ்சி இருக்கும் தட்டை ஒரு கையில் எடுத்து மறு கையால் முதுகுப் பையை மாட்டிக் கொண்டுஉணவகத்தின் சுற்றுப்புறம் இருக்கும் திறந்த வெளி இருக்கை ஒன்றில் வந்து அமர்ந்தான். நான்கு மணிக்கே விடிந்து விட்டதால் சூரியன் நன்கு மேலெழும்பி இருந்தது. மலைச்சரிவில் பசுமையும் இடைப்பட்ட சாலைகள் எறும்பு வடிவத்தில் தென்படும் ஆட்களும் வாகனங்களும் மேகங்களால் மறைக்கப் பட்டுமேகம் விலகியதில் கண்ணில் பட்ட காட்சி நெஞ்சை அள்ளியது. சாட்டிலைட் கைபேசியை மறந்த சூழல் நினைவுக்கு வந்தது. க்ளைர் ஒப்புக்கு நலம் விசாரித்து விட்டுதன் மன அழுத்தத்தைத் தனிமை அதிகரிக்க வைப்பது பற்றி ஸ்மித் ஏன் கண்டு கொள்ளவே இல்லை என்று வினவி இருந்தாள். அவள் நியூசிலாந்து பயணக் குழுவுடன் போயிருக்கும்போது என்ன அழுத்தம் வேண்டிக் கிடக்கிறது என்பதை போட்டா உடைக்க முடியும்அதில் வந்திருக்கும் கருணாகரன் எனும் இந்தியன் மிகவும் கருணையுடன் தியானம் எல்லாம் சொல்லித் தந்திருக்கிறான்அவன் ஆஸ்திரேலியப் பிரஜைதான். அவனோடு நட்பாயிருக்கிறேன். உன் உடைமைகளை நீ எப்போது வேண்டுமானாலும் வந்து எடுத்துக் கொள்ளலாம்,” என்று கணக்கை முடித்து விட்டாள். குளியலறையில் வெகுநேரம் அதைத் திரும்பத் திரும்பப் படித்தவன் கைபேசியை அங்கே உள்ள மதுபானத் தட்டின் மீது வைத்து அப்படியே மறந்து விட்டான். 

 

 தென்னிந்தியாவில் கிளை அலுவலகம் வைக்கலாமா என்னும் முடிவை டெல்லியில் பிரதிநிதி அலுவலகம் வைத்திருக்கும் சந்தீப் ஷர்மாவிடமே விட்டிருக்கலாம். இதை வேறு ஆள் ஆலோசனை செய்து தரப் போகிறான் என்றதும் அவன் நிம்மதியாகி விட்டான். தனது ஹார்லி டேவிட்சன் வண்டியை இரவல் தந்தது தவிர ஷர்மாவிடம் உற்சாகம் தரும் எதுவுமே இல்லை. தனது நிறுவனம் இந்தியருக்கான ஆஸ்திரேலிய சுற்றுலாவோடு மனம் நிறைவாகக் கூடாது என்றே ஸ்மித் நினைத்தான்அதிலும் இந்தியர்களின் வழிகாட்டுதலை வழிமொழிய நான் எதற்குஸ்டான்போர்டில்தான் பெற்ற எம்பிஏ அதற்காக அல்ல.இந்தியாவில் ஆஸ்திரேலியர் சுற்ற இடங்களைத் தேர்ந்தெடுக்க தான் முன்னெடுக்கும் திட்டமாகவே டார்ஜிலிங், பாங்காக்கை அவன் இரு சக்கரத்தில் சுற்ற முடிவெடுத்தான். உணவகத்தைச் சுற்றி வண்ண வண்ண ரோஜாச் செடிகள். ஏழெட்டு இதழ்கள் கீழே விரிய நடுவில் மகரந்தத்துடன் சிரிக்கும் மஞ்சள்ஊதா, வெள்ளை ஆர்சிட் செடிகளை அவனால் அடையாளம் காண இயன்றது. ஒரு பூங்கொத்து போலப் பெரிதாய்நெருக்கமான இதழ்களை விரிக்கும் சிவப்பு வண்ணப் பூவின் பெயர்தான் தெரியவில்லை. உணவக சிப்பந்தி அதன் இந்தியப் பெயர் லாலி குரான்என்றான். டிஷ்யூவால் கை, வாயைத் துடைத்துக் கொண்டான். சிப்பந்திக்கு டிப்ஸ்‘ கொடுத்ததும் பில்லை பத்திரப்படுத்தினான். இதன் தொலைபேசி எண் நாளை வணிகரீதியாகப் பயன்படலாம். மதியத்துக்குள் பாங்காக் சென்றுவிடலாம். ஹார்லி டேவிட்சன் வண்டி பொத்தான் அழுத்தியதும் புறப்படவில்லை. பல முறை அழுத்தினான். பின்னர் சோக்‘ பட்டனைப் பிடித்து இழுத்து அதைக் கிளப்ப முயன்றான். முடியவில்லை. இறுதியாக வலது கால் பக்கம் இருக்கும் இயக்கி ஷாப்ட்மீது பலங்கொண்ட வரை உதைத்தான். ஒருமுறை இருமுறை பலமுறைடிகிரி குளிரிலும் வியர்த்ததுதான் மிச்சம். வண்டி கிளம்பவில்லை.

 

தனக்குப் பின்னால் இருக்கும் ஜன்னலில் இருந்து யூனூஸ் அஹ்மது தன்னை வேவு பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது ராமநாதனுக்கு தெரியும். ராஜநாயகம் பங்களாதேஷில் இருந்து எப்படி ஒரு கறார் கந்தசாமியைப் பிடித்தான்நேற்று இரவெல்லாம் ஆம்வே டிஸ்டிபியூட்டரிடம்‘ வரும் மாதம் என்ன சரக்கு தேவை என்பதை மனைவியுடன் அமர்ந்து முடித்து இப்போது இண்டெண்ட் ‘ ஒவ்வொரு ஐட்டத்துக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறது. நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசும் பெண்ணை இந்த யூனூஸ் விட்டுவிடுவான். அவள் இன்று நூறு கஸ்டமரிடம் பேசினேன், பத்து தேறும் என்று சொல்லி விட்டு ஐந்து மணிக்குக் கிளம்பி விடுவாள். (கஸ்டமர் பெயரில் அவளுக்குத் தனியறைஏசி!). யூனுஸ் தங்குவதே குடொனில்தான். திடீரென ஆபீஸில் தென்படுவான். முதலில் வேவு பார்த்துவிட்டுப் பின் அருகில் வந்து பேசுவான். பங்களாதேஷில் இருந்து எடுபிடி மட்டுமே வருவார்கள் முன்னெல்லாம். கையடக்க டைரியை வைத்து இவன் என்ன வித்தை காட்டுகிறான்அதில் கிட்டத்தட்ட விற்ற சரக்குவர வேண்டிய சரக்கு எல்லாக் கணக்கும் உத்தேசமாக இருக்கும். கம்ப்யூட்டரில் தான் போடுவதோடு அது சரியாக வரவில்லை என்றால் தோண்டித் துருவி விடுவான். அவன் கணக்கு எப்படித்தான் சரியாக இருக்கிறதோ.

மைலாப்பூரில் ராயர் உணவகத்தின் ருசி தெரிந்தவர்கள் குறைவே. மெய்யப்பன் தோசையை அனுபவித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கச்சேரி ரோடின் வாகன இறைச்சலோ இல்லை வாயை விஞ்சி அசை போட்ட அவரது மனமோ இல்லை இரண்டுமோ எதிரில் ஒருவர் வந்து அமர்ந்ததை அவர் கவனிக்கவே இல்லை

மெய்யப்பா.. நான் வந்து அஞ்சு நிமிஷமாச்சு,” என்றார் நீள மூக்குபுட்டிக் கண்ணாடிக்குப் பின் குழி விழுந்த கண்கள். ராமச்சந்திரனேதான்

ஹலோ சார்,”என்று இடது கையை நீட்டினார் மெய்யப்பன்நான் உனக்கு சீனியர். உன் ரிடையர்மெண்ட் பார்ட்டிக்கு வரலேனு கோவிச்சாலும் பழசையெல்லாம் மறக்காதே.”

என்ன சார் நீங்கஒரே வெகிகிள் சத்தம் அதான். என்ன சாப்பிடறீங்க?”

எனக்குப் பொண்டாட்டி சமையலிலேருந்து ஏதுப்பா விடுதலைஒரு காபி மட்டும் சொல்லு. உன் நம்பரை விட்டுட்டேன். இந்தப் பக்கம் போறப்பவெல்லாம் ராயர் ஹோட்டல்லே எட்டிப் பாப்பேன். உன் கிட்டே ஒண்ணு கேக்கணும் மெய்யப்பா.

சொல்லுங்க சார். அடியேன் என்ன செய்யணும்? ”

மின்னே ஒரு தடவை ராஜநாயகம்னு ஒரு பையன் கிட்டே அஞ்சு லட்சம் கொடுத்தேன்னியே. வட்டி தர்றானாஏதோ பர்மா முஸ்லீம் ஒத்தனை வெச்சி அவன் ஆம்வேலே சாதிக்காறான்னியே? ”

 ஒரு நிமிடம் என்று கையைக் காட்டியவர் எழுந்து சென்று கையைக் கழுவி விட்டு வந்தார். ”ராஜ நாயகம் எனக்கு ஆம்வே பிராடக்ட்ஸ் சேல்ஸ்மேனாத்தான் அறிமுகம் ஆனான்இன்ஃபாக்ட் அவனுக்கு ஆம்வே சைடு பிஸினஸ்இன்னிக்கிக் கூட அவன் பெரிய ஒரு கன்சல்டன்சில சீனியர் கன்சல்டண்ட்அப்போ அவன் இவ்ளோ பெரிய ஏஜென்சி எடுக்கிற நிலமைலே இல்லேஎன்னை ரெகுலரா மீட் பண்றதாலே என் ரிடையர்மெண்ட் பத்தி அவனுக்குத் தெரியும்ஒரு சின்னத் தொகை போடுங்கநான் 12% தரேன்னான்அவன் மேல ஏனோ ஒரு நம்பிக்கைமுதல் வருடம் 12% வட்டி தந்தவன் அடுத்தவருடம் அதனுடன் 5% டிவிடெண்ட் வேற கொடுத்தான்

முஸ்லீம் முக்கியமான ஆளான கம்பெனின்னா எப்டி சரியா வரும்னுதான் யோசிக்கிறேன். எனக்கும் இன்வெஸ்ட் பண்ற ஐடியா இருக்கு.

டீடெய்லா சொல்றேன் சார். ராஜ் அவனை ஒரு ஹோம் அப்ளையன்சஸ் எக்ஸிபிஷன்லேதான் முதலிலே பாத்திருக்கான். அரைகுறைத் தமிழ்லே அவன் விற்பனைக்குக் காட்டிய ஆர்வம் இவனை இம்ப்ரெஸ் பண்ணஎன் கிட்டே வேலைக்கி வரியானு கேட்டப்போதான் பர்மாக்காரன்னும் எப்டியாவது பங்களாதேஷ்லே செட்டில் ஆகணும்னும் சொல்லி இப்போதைக்கு இங்க போலீஸ் பிடிக்காதபடி ஒரு ஐடி கிடைக்குமானு கேட்டிருக்கான். அவன் குடும்பத்திலே பாக்கி பேர் எல்லாரையும் பர்மா கலவரம் காவு வாங்கிடுச்சி. ராஜ் அவனுக்கு பங்களாதேஷ்ல ஒரு கம்பெனியில வேலை செய்ற ஐடி வாங்கித் தந்திருக்கான். அந்த உதவியிலே நெகிழ்ந்த யூனுஸ் இவங்கிட்டேயே வேல செய்றான். நா ஒரு முறை ஆம்வே பிராடக்ஸ் விக்கற அந்த ஆபீஸ்ல போய் பாத்தேன் சார். அவன்கிட்டே பொழைக்கணும் நிலைநிக்கணும்ற வைராக்கியம் தெரியுது. ராஜநாயகம் ஆளுங்களை எடை போடறதிலே கெட்டி சார்

சரி. நான் முதல்லே ஒன் லாக் இன்வெஸ்ட் பண்ணிப் பாக்கறேன், என்றார் சீனியர். 

 

சிட்னியில் தன் அலுவலகத்தில் ஸ்மித் வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். இந்தியாவுக்குப் போய் வந்ததும் இடுப்பில் மாட்டிக் கொள்ளும் ஒரு பெல்ட் நடுவே பை‘ அவன் பயணங்களில் துணையாகி இருந்தது. அதற்குள் தனது கைபேசிகார் சாவி மற்றும் பர்ஸ்ஸைத் திணித்து ஜிப்பை மூடினான். முதல் டேட்டிங்கில் சில்வியாவுக்கு அது மிகவும் வியப்பளித்தது. அதை அவன் மீது மாட்டிப் பார்த்துகையில் எடுத்துப் பார்த்துக் குதூகலித்தாள்.

காரில் அமர்ந்ததும் பின்புலம், வரைபடம் காட்டும் திரையில் ஷர்மாவின் மின்னஞ்சல்‘ என்று ஒளிர்ந்தது. அதன் மீது அழுத்தினான். அன்பு ஸ்மித். உங்கள் விருப்பப்படி நான் ராஜநாயகத்துடன் தொடர்பு வைக்கிறேன்நான் அவர் நிறுவனத் தலைமையிடமும் பேசி விட்டேன்அவர்கள் முதலிலேயே முழுத் திட்டத்தையும் சமர்ப்பித்து விட மாட்டார்கள்ராஜநாயகம்தான் இந்த பிராஜக்ட் லீடர்.. நல்ல வியாபார மூளை. பயன்படுவார்ஹார்லி டேவிட்சன் பற்றி நீங்கள் கவலைப்பட்டபடி எதுவுமில்லைஸ்பார்க் பிளக்கை டார்ஜிலிங் மெக்கானிக் சுத்தப்படுத்திப்போட்டான். வேறு எதுவும் செய்து விடவில்லை. அவனுக்கு வண்டி பற்றி நல்ல அறிவு இருந்திருக்கிறதுஷர்மா

 

தம்பி,ராஜநாயகம்.. கட்சி ஆபிஸ்லேருந்து பேசறேன்பா.. இன்னும்  ஒரு மணி நேரத்திலே தலைவரு இங்கே வந்துடுவாரு. நீங்க எங்கே இருக்கீங்க? ”

ஸார், கிளம்பிட்டேன். அரை மணியிலே அங்கே இருப்பேன்.

சமூக ஊடகம் பத்தி எங்க யாருக்குமே அதிகம் தெரியாது. மெய்யப்பன் அவரோட குடும்ப நண்பரு. அதான் தலைவரு ஓகே பண்ணிட்டாரு.

சார், நான் முறையா கிட்டத்தட்ட ஐநூறு பேரு கிட்டே என் ஸ்டாஃபை வெச்சிப் பேசிசம்மதிக்க வெச்சிருக்கேன்.எலெக்சன் முடியற வரைக்கும் வீக்லி பேமெண்டுக்கு அவங்க தங்களோட வாட்ஸ் அப் குரூப்புகளுக்கு அனுப்பிச்சு அதன் ப்ரூப்ஃபை என் ஸ்டாஃப் கிட்டே காட்டுவாங்க. அனேகமும் வயசிலே பெரியவங்க. அந்தஸ்து உள்ளவங்க. பேஸ்புக்ல விவாதம் மாதிரி செய்யவும் யூத் ரெடி.

ரொம்ப நல்லது தம்பி. தலைவருக்கிட்டயும் இதே மாதிரி விலாவாரியா சொல்லிடுங்க. அவரே உங்களுக்கு அட்வான்ஸை கேஷா தர விரும்புறாரு.”

அதுக்கென்ன சார்வாய்ப்புக்கு நான்தான் நன்றி சொல்லணும்.

பேசி முடித்ததும் தலைவருக்கென தான் வாங்கிய பொன்னாடையை முதுகுப் பையில் தேடினான். இல்லை. காரை ஓரங்கட்டி கார் டிக்கியில் தேடினான். முக்கியமானது. எங்கே வைத்திருப்பேன்யூசுப்பை தொலைபேசியில் அழைத்தான்.

கோணங்கள் – கமலதேவி சிறுகதை

திங்கட்கிழமைக்கு உரிய சோர்வால் வெளிப்படும் அதீத உற்சாகத்தோடு இருந்தது கல்லூரி மைதானம்.மைதானத்தை சுற்றி இருந்த புங்கை ,பாதாம் மரங்களுக்கு அடியில் ஆசிரியர்கள் வந்து நின்றிருந்தார்கள்.காலைக்கூட்டத்திற்கு சத்யா வராததால் மாணவத்தலைவன் வரிசையாக நின்று மெதுவாக சலசலத்த மாணவக் கூட்டத்தைக் கண்ணளந்தான்.கண்களை கூசவைக்கும் மழைகாலத்து வெள்ளை வெயிலில் புருவங்களை சுருக்கியபடி நின்றிருந்தார்கள்.

சட்டென்று, “ ப்ரியா..” என்று உரக்க அழைத்தான். மேற்குபார்க்க நின்ற நான்காவது வரிசையில் கண்கண்ணாடியை சேலைத்தலைப்பால் துடைத்துக் கொண்டிருந்தவள் வேகமாக வந்தாள்.

சேலை முந்தனைய செருகு..”என்றவனை முறைத்தாள்.

பி..டி மேம் உன்னையே பாக்கறாங்க..ஃபைன் குடு.எனக்கென்ன வந்துச்சு.பொன்மொழி இன்னிக்கி நீதான்..”என்றபடி அவள் பதிலை எதிர்பாராமல்,நிமிர்ந்துநின்று உரத்தக்குரலில் மணிவண்ணன், “ கவனம்,” என்று தொடங்கினான்.முதல்வர் வந்து நின்றார்.

அவளுக்கு ஒருமொழியும் மனதிற்கு பிடிபடாமல் இருந்தது. அவனை அறைய வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.காலைவணக்கப்பாடல் முடிந்து பாலு திருக்குறள் சொல்லிக் கொண்டிருந்தான்.

சுந்தரி செய்தி வாசிக்கும்பொழுது ப்ரியாவிற்கு சட்டென்று முகம்பார்க்கும் கண்ணாடி என்ற வார்த்தை மட்டும் மனதில் வந்து சுழன்றது.பின்னாலிருந்து பாலு, “ போ,” என்று தள்ளாத குறையாக அதட்டினான்.சனியன்கள் என்று நினைத்தபடி சுந்தரிக்குப் பின்னால் சென்றாள்.

உலகத்தை புரிந்துகொள்ள உதவும் கண்ணாடியாக இருப்பது புத்தகங்களும் தோழமையும்,” என்றாள்.ப்ரியா திரும்பிச்செல்லும் போது முதல்வர், “வாய்க்கு வந்தத சொல்றது..”என்றார்.வலதுபுறம் நின்ற மணி அவளைப் பார்த்தான்.முறைத்தபடி நகர்ந்தாள். பதமான தரையில் பதிந்த காலடிச்சுவடுகளுடன் மைதானம் அமைதிக்கு திரும்பி வானத்தைப் பார்த்தபடி நின்றது.

கல்லூரி கட்டிடத்தின் முகப்பிலிருந்து முதல்வர்அறை வரை நீண்ட நடைபாதையின் இருபக்க சுவர்களும் நீண்ட அறிவிப்பு பலகைகளாக இருந்தன.வலதுபுறம் கல்வியியல் கல்லூரியின் அறிவிப்புப் பலகை.இடதுபுறம் ஆசிரியப்பயிற்சி பள்ளியின் அறிவிப்புப்பலகை.நீண்ட வழியெங்கும் பிள்ளைகளும்,பசங்களும் நின்று சலசலத்துக் கொண்டிருந்தார்கள்.

விளையாட்டு ஆசிரியர், “சத்தத்தக்குறைங்க,”என்றபடி அவர்களைக் கடந்து முதல்வர் அறைக்குள் நுழைந்தார்.

பாலு, “ கவிதை புரியல ப்ரியா..எதாவது ஆர்டிக்கல் எழுது,”என்றபடி, “உன்னோட ஆர்ட் எங்கடா அழகு,”என்று திரும்பினான்.

பக்கவாட்டிலிருந்து குணா, “ப்ரியாக்கா கவிதை நல்லாருக்கு..”என்று கண்சிமிட்டினாள்.

பார்த்துக்கொண்டிருந்த பாலுவிடம் ப்ரியா புருவத்தை உயர்த்த அவன், “இப்பதான் பனிரெண்டாவது முடிசிட்டு வந்திருக்கற சின்னப்பிள்ள சொல்றத பெரிசா எடுத்துக்காத..”என்று பார்வையை அழகுபக்கம் திருப்பினான்.

கணக்கு வாத்தியாரே… கவிதைக்கு நீங்க குடுக்கற மார்க் மட்டும் கணக்கில்ல..”என்றபடி அவன் பின்னாலிருந்து தோளில் கைவைத்து அழகு வரைந்த ஓவியத்தை எட்டிப்பார்த்தாள்.

சின்னப்பசங்கங்கறது சரியா இருக்கு…வீடு வரஞ்சிருகான்ய்யா,”என்று இடதுபுறத்திற்கு அவர்களை அழைத்தான் மணிவண்ணன்.

வேணுண்ணே இன்னிக்கி என்னய இழுத்து விட்டுட்டான்,”என்று ப்ரியா முகத்தை சுருக்கினாள்.

மணி,“நீ சமாளிச்சிருவன்னுதான்…மத்தபடி வேணுண்ணு பண்ணல..”என்றான்.

எப்பப்பாத்தலும் இப்பிடிதான்…”

இங்கபாரு..அஸ் எ லீடர் சொல்லுவேன்.முடியாதுன்னா ப்ரிஸ்ன்பால் சார்க்கிட்ட சொல்லிடு..எதுக்குமே உன்னய கூப்பிடல ப்ரியா,”

மரியாதையா பேசுடா..”என்றாள்.

இன்னிக்கு காலையிலையே தொடங்கிட்டியா..”என்று பேண்ட்பெல்ட்டை இழுத்துவிட்டபடி ஓடிப் படியேறினான்.திடுதிடுவென்று ஷீகாலோடு ஓடிய ஒலி கேட்டு அங்கு நின்றவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.

மதிஅக்கா,“அவன்ட்ட ஏன் எப்பவுமே ஹார்ஸா பிகேவ் பண்ற..”என்றாள்.

ப்ரியா,“ச்சை.. வந்து சேந்திருக்கான் பாரு…”என்று நெற்றியை சுருக்கினாள்.வகுப்பறைக்கு செல்வதற்கான முதல்மணி ஒலித்தது.

படியேறும் போது அவளுக்கு தன் எரிச்சலான மனநிலை பற்றிய எண்ணம் மனதினுள் ஓடியது.அவன் எத்தனை நட்பானவனாக இருந்தும் தான் குத்திக்கொண்டே இருப்பது மனதிற்கு அசௌகரியமாக இருந்தது.அவள் உள்ளே அவனுக்கென்று ஒருமுள் எந்தநேரமும் கூர்கொண்டிருந்தது.வகுப்பறைக்கான வளைவில் திரும்பி அங்கேயே நின்றாள்.

பாலு, “காலையிலேயே மூஞ்சத்தூக்காத…ஒருபாடமும் மண்டக்குள்ள போகாது..இன்னிக்கு வேற மதியானம் வரைக்கும் சைக்காலஜியாம்.அறிதல் படிநிலைகள்..பியாஜே,புரூணர்..”என்றபடி பையை அவள் கையில் திணித்துவிட்டு கழிவறைக்காக மாடியேறினான்.

கல்லூரியின் இரண்டாம் நாள் இதே இடத்தில் மதியஉணவு வேளையில் பிள்ளைகளுக்காக நின்றிருந்தாள்.

அவளை கடந்து சென்ற மணி பின்னால் வந்து, “பி.எட்..தானே,”என்றான்.

ம்,”

டிகிரியெல்லாம் எந்த காலேஜ்ல..”

இந்த கேம்பஸ்ல இருக்க ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ்,”

இந்த சொம்பு காலேஜ்க்கே இத்தன பந்தாவா..”

நா என்ன செஞ்சேன்..”

பாத்தா பாக்கமாட்டியா…”

எதாவது கேக்கனுன்னா கூப்பிட வேண்டியதுதானே?”என்றவள் சட்டென்று அவன் பார்வையை உணர்ந்து, அவனை நேராகப்பார்த்து, “நீ…பீ.ஜீ பயாலஜி தானேடா?”என்றாள்.

ஆமா..அட நம்மளப்பத்தி தெரிஞ்சிருக்க..”

அதான் நேத்தே கிளாஸ்ரெப்க்கு பேரு குடுத்தியே. நான் எம்..பில்..”

அய்யோ…”என்று உதட்டைப்பிதுக்கியவன் தலையைசாய்த்து, “பாத்தா அப்பிடித் தெரியலயே,”புருவங்களை உயர்த்தி அலட்சியமாக, “அதுகென்ன?”என்றான்.

உன்னப்பாத்தாக்கூடதான் பீ.ஜீ முடிச்சு நாலுவருஷம் ஆனமாதிரி இருக்க.மரியாதையா பேசு,” என்று அவன் கண்களைப் பார்த்தாள்.அவன் படிகளில் இறங்கத் தொடங்கினான்.

அன்று கல்விமேலாண்மை ஆசிரியர் வாசுதேவன், “ஆறுமாசமா நாங்க பாடம் நடத்தி நீங்க கேட்டது போதும்.யார் முதல்ல வகுப்பெடுக்கறீங்க?” என்றார்.முதுநிலை மாணவர்கள் எடுக்கலாம் என்று முடிவானப்பின் அனைவரும் அமைதியாக இருக்க மணிவண்ணனிடம், “ஏம்ப்பா மாணவத்தலைவா நீயாச்சும் சொல்லு..”என்றார்.

சார்…ஆள் குறைவா இருக்கற எக்கனாமிக்ஸ் முதல்ல எடுக்கட்டும்..இந்தவாரத்துக்குள்ள மத்தவங்கள லிஸ்ட் அவுட் பண்ணிக்கலாம் சார்..”என்றான்.பொருளியல் பிரிவில் ப்ரியா மட்டும்தான் இருந்தாள்.

அடுத்த நாள் அவள் வகுப்பெடுக்கும் போது மத்துப்போட்டு கடைவதைப் போல அவளை முன்பின் நகரவிடாமல் அடித்தான்.

கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த வாசுதேவன், “முதல் செமினார் சார்..ஏன் இந்தப்போடு போடுறீங்க,”என்றார்.

ப்ரியா, “சார் கேள்வி கேட்கட்டும்..சாருக்கு மட்டும் புரியல..வாழதண்டு,”என்று அவனை விழித்துப் பார்த்தாள். தலையாட்டியபடி வாசுதேவன் புன்னகைத்தார்.

ஒருநாள் ராகவி படிகளில் தவறிய போது ப்ரியாவிற்கு ரத்தம் என்றால் பதறும் என்று தெரிந்தும் மணி அவளை முதலுதவிக்கு அனுப்பினான்.அத்தனைபேர் மத்தியில் மாட்டேன் என்று சொல்லமுடியாமல் ப்ரியா அன்று முழுவதும் நிலைகொள்ளாமல் இருந்தாள்.

மதிஅக்கா அவனை தனியாக அழைத்து கோபமாக, “சைக்மாதிரி பிகேவ் பண்ணாதடா..அவப் பிரச்சனை உனக்குத் தெரியாதா..”என்றாள்.

தெரியுங்க்கா..”என்று மதியை கோபமாகப்பார்த்தான்.பேசநினைத்து பேசாமல் முழுக்கை கை சட்டையின் கைபட்டனை வேகமாக அவிழ்த்து மாட்டியபடி வேகமாக சென்றான்.

மணி மேசையைத் தட்டும் ஓசை எழுந்து அவளைக் கலைத்தது. பாலுவின் பையை அவன் இடத்தில் வைத்துவிட்டு அமர்ந்தாள்.மதிஅக்கா எதாவது சொல்லமாட்டாளா என்று எதிர்பார்த்தபடி ப்ரியா நோட்புக்கை டெஸ்கில் எடுத்துவைத்தாள்.

மதிஅக்காவிற்கு திருமணப்பேச்சுவார்த்தையும்,மாப்பிள்ளைகளும் வருவதும் போவதும் கல்லூரி அறிந்த செய்தியாக இருந்தது.திங்கட்கிழமை என்றால் தொடக்கத்தில் என்னாச்சு என்று பார்வையில், கண்ணசைவில் கேட்ட அண்ணன்கள் நாளடைவில் எதாவதுன்னா சொல்லட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

சிறியவர்கள்தான், “அக்கா..லேட்டானாலும் லேட்டஸ்ட்டா கல்யாணம் பண்ணுவீங்க..”என்று சிரித்து மதிஅக்காவை தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள்.

பேசிக்கொண்டிருக்கையில் ஒருநாள் ப்ரியா, “கல்யாணம் மட்டுமாக்கா வாழ்க்கை..அமைஞ்சா பண்ணிக்க..இல்லாட்டா விட்டுத்தொலை,”என்றாள்.

நானும் உன்வயசில அப்பிடிதான் நெனச்சேன்.யாராச்சும் இருப்பாங்கல்ல…”

உனக்கென்னக்கா கம்பீரமா இருக்க..”என்றதும் மதிஅக்கா சிரித்தபடி அவள் தலையில் தட்டினாள்.

அதான் பிரச்சனையே…பிரிஸ்பால் கூட போலீஸ்.. மிலிட்ரிகாரன் வந்தாதான் தப்பிச்சான்னு லீவ் கேட்டப்ப சொன்னார்,”

அவரு ஒரு வெள்ளவாத்து,”என்று நெற்றியை சுருக்கினாள்.

ப்ரியா..ப்ரியா…ப்ரியா..என்ற சங்கரியின் குரல்கேட்டு , “என்ன ?”என்றாள்.

அட்டண்டென்ஸ் கண்ணா..கனவுக்குள்ள வந்து வெத்தலபாக்கு வச்சு அழைக்கனுமோ? நீயும் இங்க நின்னு கத்தனும்..அன்னைக்கு இருக்கு,”என்றபடி பதிவேட்டிலிருந்த தன் ஒற்றைவிரலை கூர்ந்து நோக்கினாள்.

ப்ரியா,“சாரிப்பா,”என்று எழுந்தாள்.

உளவியல்வகுப்பில் மதி இயல்பாக இருந்தாள்.மதியஉணவு இடைவேளையில் மதி ப்ரியாவிடம், “வா..கேண்ட்டினுக்கு போயிட்டுவரலாம்..”என்றாள்.

ஏங்க்கா..எங்கூட சாப்பிடு,”

ச்ச்..கேண்டினுக்குன்னா..கேண்டினுக்கு தானா? வயசுக்கேத்தப் படியில இன்னும் ஏறல,”என்று பக்கத்திருந்த பாலு முறைத்தான்.

மணி,“அதுக்கு என்னத் தெரியும்..”என்று ப்ரியாவைப் பார்த்தான்.

மரியாதையா பேசுடா..”

மதி,“யாருட்ட பேசறதுன்னு தெரியல.மனசில இருக்கறத சொல்ல அம்மா இருக்கனும்,”என்றதும் பாலு, “பிரச்சனைய சொல்லுக்கா,”என்று தோளில் கைவைத்தான்.கொஞ்சநேரம் அமைதியாக இருந்தார்கள்.பின்னால் அமர்ந்திருந்த நண்பர்களும் வந்து பக்கத்திலமர்ந்தார்கள்.

நேத்து வந்த மாப்பிள்ளைக்கு என்ன விட வயசு கம்மி..”

சட்டென்று மணி, “நீங்க எந்தகாலத்துல இருக்கீங்கக்கா..”என்றான்.

ப்ரியா,“நீ வாயமூடு..”என்றாள்.

பின்னாலிருந்து சரவணன், “உங்களுக்கு பிடிச்சிருக்கா மதி,”என்றபடி முன்னால் வந்தார்.

ம்.வயசு தெரிஞ்சப்பறம் ஒருமாதிரி இருக்குங்க.அவருக்கு பிரச்சனையில்லைன்னு தோணுது.என்னவிட சின்னபசங்க என்ன நெனப்பீங்க….”

மனோ,“நாங்க என்ன நெனச்சா என்ன?எங்க சொந்தத்திலயும் இந்தமாதிரி ஜோடிகள் இருக்கா.குழப்பிங்காதீங்க..”என்றான்.

இடைவேளை முடிந்ததை அறிவிக்கும் மணி ஒலிக்கவும் பேசியபடி கலைந்தார்கள்.பாலு, “மேமாச ஹாலிடேஸ்ல கல்யாணத்த வைங்க.எங்க பாட்டிதாத்தாவுக்கெல்லாம் வயசே சரியா தெரியாது..”என்று சிரித்தான்.அதற்குப்பிறகு ப்ரியா மெதுவாக மணியுடனான பேச்சிலிருந்து பார்வையிலிருந்து சிரிப்பிலிருந்து கோபத்திலிருந்து விலகிச்சென்றாள்.

மேமாதம் செய்முறை தேர்வுகள் முடிந்த அன்று ப்ரியா கழிவறையில் மயங்கி விழுந்தாள்.மதியுடன் அரசுமருத்துவமனைக்கு சென்ற பொழுது கால்மணிநேரத்திற்கும்மேல் ப்ரியாவிடம் பேசிய அவர் பக்கத்து கட்டிடத்தில் ஆட்களே இல்லாத இன்னொருமருத்துவரிடம் அனுப்பினார்.

மேலும் அரைமணிநேரம் பேசிய அவர் கடைசியாக அவள் கைகளை தன் இருகைகளுக்குள்ளும் பொத்தி வைத்தபடி, “ரத்தம்ன்னா மத்தவங்களுக்கு வலின்னு மட்டும் புரிஞ்சுக்காதீங்க.ரத்தத்த சாவோட கனெக்ட் பண்ணாதீங்க.மென்சுரலை அருவருப்பானதா நெனக்கிறதால உங்களால சாப்பிடமுடியல.வாந்தி,மயக்கம் வருது.அடிபட்டா ரத்தம் வந்திருமோன்னு பயப்படாதீங்க..சிலநேரம் ரத்தம் வந்தாதான் நல்லது..ரத்தத்தக்கண்டு ஹெசிடேட் ஆகாம கண்ணத்திறந்து பாருங்க,”என்றபடி நிமிர்ந்தமர்ந்தார்.

குனிந்தே அமர்ந்திருந்த அவளின் தோளில்தட்டி, “ரத்தம்…பிளட் ங்கற வார்த்தைகள கூச்சமில்லாம சொல்லுங்க.நான் இங்கதான் இருப்பேன்..கொஞ்சநேரம் பேசலாம்..இங்க சிஸ்டர்க்கு ஹெல்ப்பா இருக்கலாம்..ஜீன்ல காலேஜ் திறந்தப்பின்னாடி அடிக்கடி வரனும்.கண்டிப்பா வரனும்,”என்றார்.அவள் தலையாட்டினாள்.

ஜீன்மாதம் யசனையில் மூன்றுநாட்கள் முகாம்வகுப்பு நடக்கவிருந்தது.காலை வெயிலேறும் பொழுதில் யசனை அரசுப்பள்ளி மைதானத்தின் ஓரத்தில் இருந்த செடிகளை அகற்றும்போது சற்று மேட்டுப்பகுதில் நீட்டிக்கொண்டிருந்த கண்ணாடி பாட்டிலின் உடைசல் புகாரியின் காணுக்காலை கிழித்தது.அதை முதலில் பார்த்த ப்ரியா பதறி நண்பர்களை அழைத்தாள்.

கைக்குட்டையில் கைகளைத்துடைத்தபடி நிலைகொள்ளாமலிருந்த அவளிடம் பாலு, “பதறாத சின்ன காயந்தான்.பசங்கன்னாக்கூட பரவாயில்ல.பொம்பளப்பிள்ள ரத்தம் பாத்து பயந்தா எப்படி வாழ்க்கைய ஓட்றது..அந்த டாக்டர்க்கிட்ட போகனும் ப்ரியா,”என்று தோளில் கைப்போட்டான்.

முதலுதவிப்பெட்டி வந்ததும் மணி, “ப்ரியா…”என்றழைத்தான்.பதறும் விழிகளுடன் வந்து நின்றாள்.“பக்கத்தில வா…கிட்டை கையில எடு…”என்றான்.

மதி,“வந்த இடத்தில அவள வம்புக்கிழுக்காத..”என்பதற்குள் , “மத்தவங்க வேலயப்பாருங்க…”என்ற ஆனந்தன்ஐயா குரலால் கலைந்தார்கள்.

உள்ளங்கை வியர்வையை கைக்குட்டையில் துடைத்தாள்.அவளையே பார்த்துக்கொண்டிருந்த புகாரி, “வலிக்குது…எடு சீக்கிரம்,”என்றான்.டெட்டால் பஞ்சை எடுத்து காயத்தில் வைக்கும் முன் அவன் முகத்தைப் பார்த்தாள்.அவன், “எம்மூஞ்சியப்பாக்காத..காயத்த மட்டும் பாரு..”என்றான்.

அவள் கைகளில் நடுக்கமிருந்ததை அவளின் ஒவ்வொரு தொடுகையிலும் உணர்ந்தான்.அவனையும் மீறி ஒரு முறை காலை இழுத்ததும் ப்ரியா கையிலிருந்த மருந்தை கீழே நழுவவிட்டாள்.அவன் மீண்டும், “காயத்த மட்டும் பாரு..”என்றான்.அவனுக்காக வந்த தேநீரை அவளிடம் நீட்டினான்.

நீ குடி..”

எனக்கு மூணுநாளும் நீதான் மருந்து போடனும்…தேங்ஸ்,”என்று புன்னகைத்தான்.

திரும்பிப்பார்த்த பாலு,“கெடா வெட்றத ஒருதரம் பாத்தா சரியா போயிடும்..இந்தவருசம் எங்க கோயிலுக்கு நீ வரனும்,”என்றான்.மணி,“எம்..பில்…”என்று உதட்டைப் பிதுக்கினான்.

அவள் அமைதியாக இருக்கவும், “மூணுநாளும் நீதான் யாருக்கு அடிபட்டாலும் முதலுதவிக்கு போகனும்..ஒரு பத்து விழுப்புண்களை பார்க்கலாம்… ப்ரியா அவர்களே,”என்றான்.மணியோடு அனைவரும் சிரித்தார்கள்.

மதி,“என்னால முடியாதுன்னுட்டு போ,”என்றாள்.

அவன் சரியான ரெப் ..அதனாலதான் இதெல்லாம்…”

மதிஅக்கா,“இவஒருத்திஅவன் பெரிய சீ.எம் பாரு,” என்றதும் அனைவரும் சிரித்தபடி மீண்டும் செடிகளை அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள்.

மூன்றாம் நாள் சாயுங்காலம் அரியலூர் பேருந்திற்காக அவர்கள் நால்வரோடு யசனைக்காரர்களும் காத்திருந்தார்கள்.

ப்ரியா,“மணி..இங்க வா,”என்றழைத்தாள்.

என்ன மரியாதை கத்துக்குடுக்க கூப்பிடுதோ என்றபடி ப்ரியாவின் அருகில் வந்தான்.மரத்தில் சாய்ந்து நின்ற அவள் எதிரே நின்றான்.அவள் அவனையே பார்த்தபடியிருந்தாள்.

மணி, “நீ சரியாவே என்னோட பேசறதில்ல..”என்றான்.

டெய்லி நீ எப்பிடி பாக்கற ,பேசற அதுக்கு நான் எப்பிடி ரியாக்ட் பண்றதுன்னு எனக்கு எரிச்சலா இருக்கு.வெளிய போனா சும்மா திரும்பி பாத்தாவே கதை எழுதி மேடையேத்துறாங்கன்னு கடிவாளம் கட்டவேண்டியிருக்கு.காலேஜ்லயும் அதே லட்சணம்,”என்று சலித்துக்கொண்டாள்.

?!”

முதல்ல நீ பேசினது பாத்தது எதுவுமே சரியில்ல..”

அப்போதுதான் புரிவதைப் போல வேகமாக தலையசைத்தான்.அவள் கண்களைப்பார்த்து, “இந்த பப்பரக்க கண்ணுதான் உனக்கு ஒரு ஸ்கூல் ஸ்டூடண்ட் லுக் தருது,”என்றான். கண்ணாடிக்குள்ளிருந்த சிறிய கண்களை விரித்தாள்.

வேணுன்னா அக்கான்னு கூப்டா..ச்..”என்று முகத்தை கோணலாக வைத்துக்கொண்டான்.

உம்மனசுதான் இப்ப தெரிஞ்சிருச்சே. இனிமே கூப்டறதுல என்ன இருக்கு.உனக்கு பிடிச்சமாதிரி கூப்பிடு,”என்று நகர்ந்து மேற்கே திரும்பினாள். அந்தப் பெரிய புங்கைமரத்தின் கிளைநீட்டி மறித்திருந்த சாலையை எட்டிப்பார்த்தாள்.

வீடு – ப.மதியழகன் சிறுகதை

விடிஞ்சா தீபாவளி. வீடே எனக்கு அந்நியமாத்தான் தெரியுது. ஆத்தா தான் சோறூட்டணும், ஆத்தா கூடத்தான் படுத்துக்கணும், ஆத்தா தான் குளிப்பாட்டணும்னு எல்லாத்துக்கும் இந்த ஆத்தா தான். இந்த நிசப்தம் என்னைய ஏதோ செய்யுது. மனுசனை உசிரோட சிலுவையில அறையறது மாதிரி. கால்ல சக்கரம் கட்டின மாதிரி அங்கேயும் இங்கேயும் பறப்பா. யானையாம் கோழியாம் என்று கதையை ஆரம்பித்த உடனேயே கண்ணு சொருக ஆரம்பிச்சுடும் அவளுக்கு.

எல்லாப் பொண்டு, பொடுசுகளும் கீர்த்தனா இல்லையா கீர்த்தனா இல்லையாகிதுங்க நான் என்னத்த சொல்ல. அவ பிறந்ததுக்கப்புறம் தான் அவரு முகத்துல சிரிப்பையே பாத்தேன். அந்த சிட்டானுக்காகத்தான் நாங்க உசிரை கையில புடிச்சிகிட்டு இருக்கோம். வீடுங்கறது சுவரும், செங்கல்லுமா மனுசா இல்லையா? வயசுல நான் ஒண்ணும் இல்லாதப்பட்டவ இல்ல. அப்பாவுக்கு தியாகி பென்ஷன் வந்தது. மூணு அண்ணன் நான் கடைசி. பிள்ளையார் மாதிரி அப்பா, அம்மாவையே சுத்திகிட்டு திரிஞ்சா சரிப்படாதுன்னு மூத்த அண்ணனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சாங்க. அங்கேயே கல்யாணம் பண்ணி அந்த நாட்டு குடிமகனாகவும் ஆயாச்சி. வந்து அப்பா அம்மாவை பார்த்து போவார் தான் வருஷத்துக்கு ஒரு முறை.

இவரு தான் நாராயணன் பார்டருல வேலை பாக்குறாரு அரசாங்க உத்தியோகம் தான் நல்ல சம்பளம் என்று அவர்களாக முடிவெடுத்துவிட்டு சமாச்சாரத்தை என்னிடம் வந்து சொன்னார்கள். அம்மா இருந்தாலாவது உனக்குச் சம்மதமா என்ன ஏதுன்னு வாய் வார்த்தையா கேட்டிருப்பா அவதான் எங்களை அனாதையா உட்டுட்டு போயிட்டாளே. அம்மா போனப்பவே அவ கூட போயிருக்கணும் எல்லாம் விதி. தலையெழுத்துண்ணு ஒன்னு இருக்குல்ல அதை யாரால மாத்த முடியும். கழுத்த நீட்டியாச்சி பத்து நாள் கூட இருந்துட்டு ரயில் ஏறுனவர்தான் முத குழந்தை பிறந்தப்பக் கூட வந்து என்ன ஏதுன்னு எட்டிப் பாக்கலை.

அப்பவே ஆஸ்பத்திரி வாட்ச்மேன் கேட்டான் பொண்ணா பொறந்துட்டு நீ கஷ்டப்படுறது பத்தாதாம்மா ஏம்மா பொண்ணைப் பெத்தேன்னு. டவுன்ல வளந்த பொண்ணு நான் கிராமத்துல குப்பை கொட்டுற மாதிரி ஆயிடிச்சி. மாமியார் அவருக்கு சின்ன வயசிலேயே தவறிட்டா. அவளுக்கும் சேர்த்து வைச்சி மாமனார் இல்லாத அக்கிரமமும் பண்ணினார். யார்கிட்ட சொல்லி நான் அழறது. எழுதுன கடிதாசியைக் கூட படிச்சுப் பார்த்துதான் போஸ்ட் செய்வாரு. தான் பொண்ணுக்கு குழந்தை இல்லைனா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்.

கலாவுக்கு ஒரு வயசு ஆனப்ப லீவுல வந்தாரு. அப்ப எடுத்த போட்டோ தான் இங்க மாட்டியிருக்கிறது. அடுத்தது தான் இவன் பொறந்தான். பேராண்டிக்கு நான் பேரு வைக்கிறேன்னு தாத்தா புகழேந்தின்னு வைச்சாரு. அவன பிழைக்க வைச்சி கொண்டு வந்ததே எனக்குப் பெரும்பாடா போச்சி. அவரு மாத்தலாகி தமிழ்நாட்டுக்கு வந்த கொஞ்ச வருஷத்துல பேராண்டியை தொட்டு தூக்கி பாத்த சந்தோஷத்துல அந்த புண்ணியவான் போய்ச் சேந்தாரு. வீட்டு மேல பஞ்சாயத்து நடந்தப்ப ஊர்ல யாரும் இவரு பக்கம் பேசலை. அதோட கொடுத்த பணத்துக்கு வித்துட்டு நாங்க ஒதுங்கிட்டோம்.

வாய கட்டி வயித்தகட்டி என் சொந்த ஊர்ல மனை வாங்குனோம். அங்க இங்க கடன் வாங்கி வீட எழுப்பங்காட்டிலும் நாக்கு தள்ளிடிச்சி. புதுசா கட்டடம் எழுப்பினா உடையவங்களை காவு வாங்கும்னு சொல்வாங்களே அதே மாதிரி ஆகிப்போச்சி. நான் செத்து பிழைச்சி வந்தேன்னா பார்த்துக்குங்க. எல்லாம் தலையெடுக்கிற காலத்துல அவரை சென்னைக்கு தூக்கி அடிச்சாங்க. கடைசி வரைக்கும் நகரத்து வாழ்க்கையோட எங்களால ஒத்துப் போக முடியலை. அங்க அப்பன் ஆத்தா கூட இருந்து புத்திமதி சொல்லியும் புகழேந்தி எந்த வேலையிலேயும் நிலைக்க மாட்டேனுட்டான். ஜோசியக்காரனுங்க சூரிய திசை முடியனும்னு சொல்லிட்டாங்க வேறன்ன செய்யிறது.

அவரு ரிட்டயர்டு ஆனாரு. சாமான் செட்டெல்லாம் தூக்கிகிட்டு சொந்த வீட்டுக்கே குடிவந்தோம். கலாவை சென்னையில இருக்கிறப்பயே கட்டிக் கொடுத்தாச்சி. அப்பப்ப இங்க வந்து இருக்கறோமா இல்லையான்னு எட்டிப்பார்ப்பா அவ்வளோதான். அடிமை வேலை ஒத்துவர மாட்டேங்கிதுன்னு புகழேந்திக்கு கடை வைத்துக் கொடுத்தோம். புகழேந்திக்கு கல்யாணப் பேச்சு எழுந்ததும் கலா கேட்டேவிட்டாள் கடையில வர்ற வருமானத்தை வச்சி எப்படி குடும்பம் நடத்துவான்னு.

இல்லாதப்பட்டவங்க அதனால நாம கேட்கக் கூடாதுன்னு கட்டுன புடவையோடதான் சுசீலாவைக் கூட்டி வந்தோம். சுசீலா நல்லவதான் ஆனா ஒருசொல் பொறுக்க மாட்டாள். இல்லாதப்பட்டவங்க வீட்டிலேர்ந்து வந்ததுனால நம்மை இளக்காரமா நினைக்கிறாங்களோ என்ற எண்ணம் அவளுக்கு. சரின்னு நானும் உட்டுட்டேன் கோவம் இருக்கற இடத்துலதானே குணம் இருக்கும்னு. இரண்டு வருஷம் கழிச்சி சுசீலாவுக்கு தங்கியது. முருகப்பயபுள்ள தான் பேரனா பொறப்பான்னு நினைச்சிருந்தேன். கீர்த்தனா பிறந்தாள். வீட்டில ஒரு குழந்தை தவழ்ந்தா குதூகலத்துக்கு கேட்கவா வேண்டும். அள்ளி அள்ளி அவளை அணைத்துக்கொண்டேன். குழந்தையும் தெய்வமும் கொண்டாடுற இடத்துலதானே. இந்த அணையப்போற தீபத்துக்கு எண்ணை வார்க்கத்தான் கடவுள் கீர்த்தனாவை அனுப்பி வைச்சிருக்கான். கீர்த்தனான்னா அவருக்கும் உசிரு என்ன இருந்தாலும் தன்னோட வாரிசு இல்லையா? அவருக்கு உடம்பு நோவு வந்து ஆஸ்பத்திரி, ஆபரேஷன்னு அலைய வேண்டி வந்துடுச்சி. கீர்த்தனாவை பாக்கும் போது அவரு முகம் பிரகாசமடையும் பாருங்க தாத்தாவின் உலகத்தில் பேத்திக்கான இடம் பாட்டிக்கான இடத்தைவிடப் பெரியது தானே.

அவரு நடமாட முடியாம வீட்டில இருந்தப்ப ஆழந்தெரியாம காலை விட்டு கடையையும் மூடிவிட்டான் புகழேந்தி. கஷ்டகாலம் குழந்தை முகத்தை பார்த்தாவது திருந்தணும். ஒரு அவசரத்துக்கு எங்க போவான். எல்லாம் எங்க தலையிலேயே வந்து விழுந்தது. பேத்திக்கு ஒண்ணுன்னா அவரு கணக்கு பாக்க மாட்டாரு. தாத்தா செல்லமா அவ இருந்தாலும் அடிப்பதற்கும், அணைப்பதற்கும் நான் தான் வேணும் அவளுக்கு. அந்த பச்ச மண்ண எதுக்க வைச்சிகிட்டு சண்டை போட வேண்டியதா போச்சி.

நான் சராசரி மாமியார் இல்ல. அதை தொட்டா குத்தம் இத தொட்ட குத்தம்னு சொல்ல மாட்டேன். சமையல் வேலை என்னுது நீ ஒத்தாசையா இருந்தா போதும் என்பேன். என்ன இருந்தாலும் மருமகளைவிட பெத்தமவ ஒருவிதத்துல உசத்தியாதான் போயிடுறா. மருமகள எந்த மாமியார் மகமாதிரி நடத்துறா சொல்லுங்க பார்ப்போம். எதுக்கெடுத்தாலும் பாம்பா படமெடுத்து ஆடுனா நான் என்ன செய்யிறது. சொல்லிக் கொடுக்கிற அக்கம்பக்கத்துக் காரங்களுக்கு நாம நல்லபடியா வாழணுங்கிற எண்ணம் இருக்காது. வெளி தெருவுக்கு போனா நம்மளபத்தி நாக்கு மேல பல்லுபோட்டு யாரும் பேசிடக்கூடாது. அதுக்கு நாம குடும்ப விஷயம் எதையும் வெளியில பேசக்கூடாது இதுதான் என் தரப்பு.

உத்தியோகம் புருஷலட்சணம் போய் சம்பாரிச்சுட்டு வாடாண்ணா. உப்பு விக்கப் போனேன் மழை பெய்யுது உமி விக்கப்போனேன் காத்து அடிச்சிதுன்னு தான் உருப்படாததுக்கு காரணம் சொல்ல ஆரம்பிச்சிட்டான் புகழேந்தி. எவ்வளவு காலத்துக்கு நாங்க முட்டுக் கொடுத்துக்கிட்டே நிற்போம் நாங்க இருக்கிறப்பவே சொந்தக் கால்ல நிக்கப் பழகிக்க வேணாம். எல்லாத்துக்கும் நம்ம கைய எதிர்பார்த்தா எரிச்சலா வராது. குழந்தைக்கு செய்யலாம் சரி அவனுக்கும் சேர்த்து நாமளே செய்யணும்ணா எப்படி. நான் பெத்தது சிங்கமா இருந்துதுன்னா இந்த விஷயம் சந்தி சிரிச்சிருக்காது. பொண்ணு பொறந்திருக்கு நாளைக்கே சடங்கு, சம்பிரதாயம்னு எடுத்து செய்ய வேண்டி வருமேன்னு பொறுப்பு வேணாம்.

சுசீலாவுக்கு எதற்கெடுத்தாலும் எங்கையையே எதிர்பார்த்து நிக்கிறது பிடிக்கலை. எரிஞ்சி எரிஞ்சி விழறாண்ணா ஏன் விழமாட்டா. பேசாம எப்படி கேட்டதுக்கெல்லாம் பணம் கொடுக்க முடியும் அப்படி இப்படி சொல்லத்தானே செய்வோம். அதை அவ உடும்பா பிடிச்சிகிட்டா. இப்ப என்னாச்சி அந்த உருப்படாதவனால ஊரே சிரிச்சிப் போச்சு. இதுல கலா வேற எரிகிற நெருப்புல எண்ணை ஊத்துற மாதிரி சம்பந்தமில்லாமல் வார்த்தையை விட்டுவிட்டாள். தனிக்குடித்தனம் போறோமென்று வேறு வீடு பாத்து போய்விட்டார்கள்.

அவருக்கு வெளி தெருவுக்கு செல்ல முடியாது. சீவனத்துப்போய் வீட்டோட இருக்கற மனுசனுக்கு கீர்த்தனா தான் ஒரே ஆறுதல். அவ இல்லாம அவருக்கு வீட்ல இருக்க முடியலை. இதுக்கெல்லாம் நான்தான் காரணம்னு ராத்திரியெல்லாம் ஒரே புலம்பல். எனக்கு அங்கேயும் இங்கேயும் கீர்த்தனா ஓடுறது கணக்கா பிரமை, அவ உருவம் என் கண்ணுக்குள்ளயே நிக்கிறதாலேயோ என்னவோ. விசேஷத்துக்கு போயிருந்தா கூட ஆத்தா என்னோட படுக்கிறதுக்கு வந்துடு என்று போன் செய்வாள். ஏனோ தெரியலை ஒருமணி நேரத்தில் இருபது தடவையாவது வாசலை வந்து பாத்துட்டேன். எவ்வளவு அழுத்தத்தைத்தான் மனசு தாங்கும். எங்க காலம்தான் மலையேறிப் போச்சில்ல. என்னால வந்த பிரச்சனையை நானே தீர்க்கறேன்னு செருப்பை போட்டுகிட்டு புகழேந்தி வீட்டுக்கு கிளம்பிட்டேன். வாசலில் வந்து நின்று கொண்டு நான் போவதை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார். இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி இருக்கும் அவருக்குத் தெரியாதா நான் மருமக காலில் விழுந்தாவது கீர்த்தனாவோட அவளையும் கூட்டிவருவேனென்று.

திரள் – ராதாகிருஷ்ணன் சிறுகதை

தூரத்திலேயே காவல் நிலையம் முன்பு கூட்டம் சூழ்ந்திருப்பது தெரிந்தது .  கூட்டத்தினை கண்டவுடன் சட்டென  உள்ளத்தில் பற்றி கொண்ட பதட்டம் காரணமாக  100 அடி முன்பாகவே சாலையின் ஓரத்தில் பைக்கை நிறுத்தி காவல் நிலையம் நோக்கி நடந்து சென்றேன் , அதிகமும்  இளைஞர்களும் நடுவயது ஆட்களுமாக இருந்தனர் , பரபரப்பாக மாறிமாறி பேசிக்கொண்டிருந்தவர்கள்  நான் வரும்போது  பேச்சை விடுத்தது  என்னை நோக்கினர் , நான் பதட்டம் காரணமாக யார் முகத்தையும் நோக்காமல் வேகமாக  ஸ்டேஷன் வாசல் நோக்கி நடந்தேன் . கூட்டத்திலிருந்து ஒரு குரல் ‘பொண்ணு சைடு ஆள் போல ” என்று  பேச ஆரம்பித்தது  காதில் விழுந்தது , கூடவே அதனை தொடர்ந்து இன்னொரு குரல் ” எவனா இருந்தா என்ன ” என்றது , நான் எதையும் உள் வாங்காதவனை பாவனையுடன் காவல் நிலைய வாசல் நோக்கி உள்ளே நுழைந்தேன் .வாசலை அடைந்ததும்  மனம் உடனடியாக கண்கள் வழியாக உள்ளே  துழாவியது , உள்ளே ஒரு இளைஞனின் பின்பக்கம் ஒட்டிக்கொண்ட படி நின்றிருந்த அவள் நின்று கொண்டிருந்தாள் . அவள் சரியாக அந்நேரம் பார்த்து எதேச்சையாக வாசலை நோக்கியவள் என்னை பார்த்ததும்  சட்டெனெ குழிக்குள் பதுங்கும் எலி போல தலை கவிழ்த்து கொண்டாள் .

பிறகுமற்றவர்களை கவனித்தேன் , வரவேற்பு அறைக்கு நேராக உள்ளே  இருந்த ஒரு அறைக்குள்  இன்ஸ்பெக்டர் எதிரில் ஈஸ்வர் சாரும் அவர் மனைவியும் அமர்ந்திருக்க அவர்கள் அருகில் முகுந்தன் நின்றிருந்தான் , நான் நேராக போய் அவன் அருகில் நின்று கொண்டேன் , பின் மனம் துறுதுறுத்து மீண்டும் திரும்பி அவளை நோக்கினேன் ,அவள் முகம் திரும்ப மேலெழவே இல்லை , ஆனால் உடன் இருந்த இளைஞன் கடுகடுக்கும் முகத்துடன் என்னையே  நோக்கி கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தேன்  , அவன் முகத்தில் சற்றும் பதட்டமில்லைலை ,மாறாக தெனாவட்டான முகபாவனைத்தான் இருந்தது , அதைப்போலவே அவன் அருகிலிருந்த இன்னொரு நடுவயது ஆளிடமும் அதே போன்று சாதரண விஷயம் ஒன்றை அணுகுவதை போன்ற முகபாவனையே இருந்தது . அவர்களை விடுத்து திரும்பவும் அவளை மட்டும் மீண்டும் கவனித்தேன் , மிக சாதரணதொரு சேலை உடுத்தியிருந்தாள் , சரியாக சீவ படாத தலை , தூக்கம் இல்லாத கண்கள் , பாதி தூக்கத்தில் எழுந்து வந்து நிற்பவள் போலவோ அல்லது ஒரு பேய் படம் பார்த்து வந்தவள் போலவோ  இருந்தாள் .  இந்த சூழல் அல்லாது வேறு எங்காவது இந்த கோலத்தில் அவளை பார்த்திருந்தால் வேறொரு பெண் என்றே எண்ணியிருப்பேன் , மனம் சோர்ந்து அவளை பார்ப்பதை தவிர்க்க எண்ணி மனதை வலுக்கட்டாயமாக திருப்பி இன்ஸ்பெக்டரின் பேச்சினுள்  கவனத்தை கொண்டு சென்றேன் .

ஈஸ்வர் சார் எனக்கு அறிமுகமானது முகுந்தன் வழியாக , நாங்கள் நண்பர்கள் பொதுவாக கூடி பேசும் இடங்கள் என்பது இங்குள்ள  பேக்கரிக்கள்தான் ,ஒவ்வொரு பகுதிக்கும் அங்கிருக்கும் பேக்கரிகளில்தான் கூடுவோம் ,முகுந்தன் வேலை செய்யும் இடமருகில் இருக்கும்  அருணா பேக்கரியில் தான் ஈஸ்வர் சாரை முதலில் சந்தித்தேன் ,அப்போது முகுந்தனோடு வந்தார் ,அவனது உயர் அதிகாரி இவர்  ,பிறகான அடுத்தடுத்த சந்திப்புகளில் என் நெருங்கிய நண்பராகவும் மாறினார் , ஈஸ்வர் சாரின் சொந்தவூர் தஞ்சை பக்கம் ,நிறைய விவசாய நிலம் என  வசதியான குடும்ப பின்னணி கொண்டிருந்தவர்  காதல் திருமணம் காரணமாக அதையெல்லாம் இல்லாமலாகி கோவையில் வந்து சேர்ந்தவர்  , இங்கு இவருக்கு சொந்தங்கள் என ஏதும் இல்லை ,  நண்பர்களும் குறைவு . ஈஸ்வர் சார்  வயதானவர் என்றாலும் பேச்சில் அது தெரியாது , பேச்சில் எதிர்மறை அம்சமே இருக்காது , அது காரணமாக என் கனவுகளை எல்லாம் அவரிடம்தான் பகிர்வேன் , என்னை பற்றி என்னை விட அவர்தான் அதிகம் நம்பிக்கை கொண்டிருந்தார் .எனக்கு  அவரை பிடிக்க இன்னொரு காரணம் அவரது தோற்றம் , எப்போதும் சீவிய தலை ,இன் செய்த உடை என இருப்பார் ,மேலும் அவரிடம் இருந்த நிதான இயல்பு எனக்கு  மிகவும் பிடிக்கும் , குடிநிகழ்வுகளில்  அவ்வளவு போதையிலும் பையனிடம் பில் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபார்த்த பின்புதான் கணக்கை முடிப்பார் . இவரது  ஒரு குடும்ப விழாவிற்கு சென்ற போதுதான் இவருக்கு இப்படியான ஒரு அழகான இளம்பெண் இருப்பது தெரிந்தது , ஒரே ஒரு மகள்தான் , அதனாலேயே உருவான தனி கவனம் அவரில் எப்போதும் இருந்தது , அன்று எனக்கு அவளை அவர் அறிமுகபடுத்தும் பொழுது அவள்  ” அங்கிள் ,அப்பாவை கொஞ்சம் செலவு பண்ண சொல்லுங்க ” என்று சிரித்துகொண்டே   தந்தையை வாரி பேச துவங்கினாள் ,அப்போது அவளில் புது நபர் என்ற கூச்சமோ தயக்கமோ சிறிதும் இருக்க வில்லை , பேசிக்கொண்டே இருந்தாள் , அவளில் ஆடை உட்பட எல்லாமே மின்னியது ,அருகிலிருந்த முகுந்தன் அவளை வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டே இருந்தான் , என் கவனமும் அவள் பேச்சில் மட்டும் இருக்க படாதுபட்டது . அதன் பிறகான  ஈஸ்வர் சாரை  சந்திக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் அவளின் நலம் நான் விசாரிப்பேன் . அவருக்கு அவளின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்ற கனவு சர்வகாலமும்  உடனிருந்துகொண்டே இருந்தது , அதை பற்றி பேச ஆரம்பித்ததுமே மனிதர் உற்சாகமாகி விடுவார் .

இன்ஸ்பெக்டர் ஈஸ்வர் சாரிடம்  ” கல்யாணம் பண்ணிட்டாங்க ,பொண்ணு மேஜர் , எங்களால இனி ஒன்னும் பண்ண முடியாது ” என்று வருத்தம் தொனிக்கும் குரலில் கூறினார் , நான் உடனே கொஞ்சம் நகர்ந்து அறைவிட்டு வெளியே சென்று தனியான இடத்தில் நின்று அலைபேசியில்  சாரதி அண்ணனை அழைத்து விஷயம் கூறினேன் ,கேட்டுக்கொண்டிருந்தவர் பிறகு  அலைபேசியை   இன்ஸ்பெக்டரிடம் கொடுக்குமாறு கூறினார் , பின்பு அந்த அறைக்குள் சென்று அலைபேசி கொடுத்த  போது நிமிர்ந்து பார்த்த அவர் பின் ஏதும் சொல்லாமல் போன் வாங்கி பேசினார் , அதன்பிறகு அலைபேசியை  என்னிடம் கொடுத்து ”அவர் உனக்கு யாரு” என்றார் ,நான் குரலை தாழ்த்தி  “ரொம்ப வேண்டியவரு” என்றேன் . சிறுது நேரம் மவுனமாக இருந்தவர் பிறகு ” ஒன்னு வேணும்னா பண்ணலாம் ,பொண்ணுட்ட பேசி பாருங்க ,அவங்க உங்க கூட வரதா சொன்னா ,உங்க கூட அனுப்பிடறேன் ” ,”ஆனா அந்த பொண்ணு மறுத்தா ஒன்னும் பண்ண முடியாது “என்றார் .அப்போது அறைக்கு வாசலுக்கு அருகில் நின்றிருந்த அந்த இளைஞன் கூட வந்திருந்த நடுவயது ஆள் ” அதுதான் கல்யாணம் பண்ணிட்டாங்களே ,அப்பறம் என்ன புள்ளையை அனுப்பறது ” என்றார் . இன்ஸ்பெக்டர் சட்டென எகிறி “இது போலீஸ் ஸ்டேஷன் ,உங்க வீடு இல்ல ” என்றார் . பின் அந்த பெண்ணை  அழைத்து  “இங்க வந்து உட்காருமா” என்றார் ,பிறகு அந்த இளைஞனையும் நடுவயது ஆளையும் “வெளிய போய்  நில்லுங்க” என்றார் . நடுவயது ஆள் ” பொண்ணை  நீங்க மிரட்டுவீங்க ” என்றார் ,இன்ஸ்பெக்டர்  பதிலுக்கு “உங்களை வெளிய போய் நிக்க சொன்னேன் ” என்றார் குரல் உயர்த்தி . பின்பு அவர்கள் வெளியேறியதும் வெளியே நின்றிருந்த கூட்டத்தில் இருந்து வாக்குவாத சத்தங்கள் அதிகரித்து உள்ளே வரைக்கும் கேட்டது . இன்ஸ்பெக்டர்எங்களிடம்  “நீங்க பொண்ணுகிட்ட பேசுங்க “என்று சொல்லி அறைவிட்டு வெளியே நகர்ந்தார் .

அவள் இன்ஸ்பெக்டர் சொன்ன  இருக்கையில்மெதுவாக அமர்ந்தாள் , தலை மேலெலெவே இல்லை ,அழும் ஒலி மட்டும்  சன்னமாக கேட்டது ,அருகில்  இருந்த ஈஸ்வர் சார் எதிரில் இருந்த சுவரை நோக்கி கண்கள்  வெறித்தபடி அமர்ந்திருந்தார் ,அவரது அருகில் அவர் மனைவி ,அப்போதுதான் உரைத்தது  அவர் மனைவியும் அவர் பெண்ணும் கிட்டத்தட்ட ஒருபோலவே இருப்பது  ,அதே உடல்வாகு ,அதே போலவே அமர்ந்திருந்தது ,அதைப்போலவே தலைகவிழ்ந்து அழுவது என ,அதை உணர்ந்ததும்  சட்டென என்னை மீறி என் முகத்தில் லேசான சிரிப்பு  வந்து போனது . மூவருமே ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தனர் , முகுந்தன் ஈஸ்வர் சாரிடம் ” சார் ஏதாவது பொண்ணுட்ட பேசுங்க சார் “என்றான் . அப்போது ஏதோ யோசித்து கொண்டிருந்தவர் போல தோன்றியவர் சட்டெனெ எழுந்து வெளியே வேகமாக நடந்து போனார் ,முகுந்தன் ” சார் கொஞ்சம் பொறுமையா இருங்க “என்று சொல்லியபடியே பின்னால் சென்றான் ,இப்போது இந்த அறைக்குள் இந்த இருபெண்கள் அருகில் நான் மட்டும் நின்றிருந்தேன் , எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ,பின்  தயக்கத்தை உடைத்துகொண்டு ஈஸ்வர் சார் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்தேன் , மெல்ல “ஸ்வேதா” என்று அந்த பெண்ணை அழைத்தேன் , அவள் பதில் ஏதும் சொல்லாமல்  அப்படியே துளி அசைவும் கூட இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் . அவளது அசைவின்மை எரிச்சலை உண்டுபண்ணியது ,உள்ளுக்குள்” கள்ளி “என்று எண்ணம் வந்து போனது  ,பின்பு பொறுமையை வரவழைத்து கொண்டு ” இங்க பாருமா ,உன்னை அந்த பையனை விட்டுடு னெல்லாம் நான் சொல்ல வரல ,ஆனா இப்ப அம்மா அப்பா கூட போ ,பிறகு பேசி க்ராண்டா கல்யாணம் வச்சுக்க்கலாம் ,இப்போதைக்கு வெளிய தெரிய வேணாம் , உனக்கே தெரியும் அப்பா அம்மா க்கு நீ மட்டும்தான் எல்லாம் , நீ இப்ப வரலைனா அப்பறம் இவங்க என்ன செய்வாங்க னு எனக்கே பயமா இருக்கு , அப்பறம் இல்லாத பிறகு ஏங்கி ஒன்னும் செய்ய முடியாது ” என்றேன் . அவள் அதற்கும் பதிலேதும் சொல்ல வில்லை ,ஆனால் அவளில் அழகை சத்தம் இப்போது அதிகமானது . திரும்பவும் ” என்ன சொல்ற ” என்றேன் , அவள் பேசவே இல்லை, எனக்கு  எரிச்சலாக இருந்தது . சிலக்கணம் ஒன்றும் சொல்லாமல் இருந்தேன் ,பிறகு ” என்ன முடிவெடுத்தாலும் அம்மா அப்பாவை ஒரு முறை நினைச்சு பார்த்து முடிவெடு ,அவ்வளவுதான் சொல்ல முடியும் ” என்றேன் . பின் எனக்கு சட்டெனெ ஓர் எண்ணம் தோன்ற ” பையன் சைடு ல இருந்து மிரட்டினாங்களா ,இல்ல வேறு ஏதாவது விஷயத்தில் மாட்டியிருக்கியா ,பயப்படாம சொல்லு நான் பார்த்துக்கறேன் ” என்றேன் ,நான் சொல்லி முடிப்பதற்குள் இல்லை என்பது போல தலையசைத்தாள் , பிறகு நான் கொஞ்சம் கோபமாக “எதுக்கு இப்படி திருட்டு கல்யாணம் ,அப்பாட்ட சொல்லி சம்மதிக்க வச்சு பண்ணியிருக்கலாமல ” என்றேன் , “அப்பா ஒத்துக்க மாட்டாரு ” என்று அழுகைக்கிடையே சொன்னாள் ,அவள் பேச ஆரம்பித்த போது அவள் மனதை மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை என் மனதுள் வந்தது , ,அந்த உற்சாகத்தை காட்டி கொள்ளாமல் பொறுமையாக ” இப்ப ஒன்னும் சிக்கல் இல்லை ,நான் பேசி அப்பாவை சம்மதிக்க வைக்கிறேன் ,நீ இப்போதைக்கு எங்க கூட வந்துடு ,மறுபடியும் சேர்த்து வைப்பது என் பொறுப்பு ” என்றேன் ,அப்படி சொல்லும் போதே மனதினுள் பெண்ணினை வேறு ஊர் மாற்றி கொண்டு சென்று விட வேண்டும் என்று எண்ணி கொண்டேன் . அவள் மனம் அசைவது போல தோன்றியது . பின் கடைசி சொல்லாக ” உங்க அம்மாவை அழ வைக்காத ,அவ்வளவுதான் சொல்ல முடியும்” என்றேன் ,அப்போது நான் சொல்லி முடிப்பதற்குள் அந்த இளைஞனும் அவனோடு இருந்த நடுவயது ஆளும் உள்ளே வந்தனர் , அவன் நேராக உள்ளே வந்து அவள் தலை மீது கைவைத்து ” என்ன மிரட்டினாங்களா ” என்றான் ,என்னை முறைத்து பார்த்தான் ,நான் அவனது பார்வை தவிர்த்தேன் , அவன் என்னை நோக்கி எதோ சொல்ல வந்தவன் பின்பு ஒன்றும்  சொல்லாமல் நின்றான் , அவன் உடல் லேசாக நடுக்கம் கொண்டிருந்தது , நன்றாக குடிப்பவன் போல தெரிந்தான் . அப்போது  இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்தார் ,என்னை பார்த்து” பொண்ணோட அப்பா எங்கே “என்றார் ,நான் பதிலேதும் சொல்லாமல் அவரை பார்த்தேன் , அவருக்கு எப்படியும் 50 வயது இருக்கும் ,இது போல நிறைய பார்த்திருப்பார் என்று எண்ணி கொண்டேன் . அவர் என்ன பேசுவது என்பதில் தெளிவாக இருந்தது தெரிந்து , தெளிவான குரலில் அவளை நோக்கி ” இங்க பாருமா ,உனக்கு யார் கூட போக விருப்பமோ அவங்க கூட போலாம் ,உன் முடிவுதான் ,எதையும் யோசிச்சு முடிவு பண்ணிக்கோ ” என்று சொல்லி எங்களையும் அந்த இளைஞனையும் வரவேற்பு அறையில் இருந்த பெஞ்சில் போய் அமருமாறு சொன்னார் , இளைஞன் நகராமல் அதே இடத்தில நின்றிருந்தான் ,” அங்க போ னு சொன்னேன் ” என்று மிரட்டல் தொனியில் சொன்னார் , நாங்கள் அதற்குள்ளாக நகர்ந்து விட்டிருந்தோம் , அப்போதுதான் உரைத்தது அவள் அம்மா ஒன்றுமே பேசவே வில்லை என்பது , சிலை போல அமர்ந்திருந்தவர் இன்ஸ்பெக்டர் சொன்னதுமே எழுந்து போய் அதே விதத்தில் பெஞ்சில் அமர்ந்து கொண்டார் ,

இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணிடம் அவள் மட்டும் கேட்கும் அளவிற்கு ” உன்னை யாரும் மிரட்ட முடியாது ,நான் இருக்கேன் , உனக்கு எது சரினு படுதோ ,அதை செய் , உன் அப்பா எல்லாம் பாவப்பட்ட ஆளா தெரியறாரு , எதையும் யோசி , அப்பா அம்மா கூட போறதுதான் எனக்கு நல்லதுன்னு தோணுது , ஆனா உன் விருப்பம்தான் ,நீ முடிவு பண்ணிக்க என்கிறார் ”

சில கணங்கள் அவள் எதுவும் பதில் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் , பிறகு திரும்பவும் இன்ஸ்பெக்டர் கேட்க அவள் ” நான் அவர் கூடயே போறேன் சார் “என்றாள் .சில கணங்கள் மவுனமாக இருந்த இன்ஸ்பெக்டர் பின் எழுந்து எங்கள் பக்கம் வந்து ” பொண்ணு பையன் கூடயே போறேன் னு சொல்றா ,விட்டுடுங்க ” என்றார் , அவள் அம்மா அப்போதும் அதைப்போலவே தலைகவிழ்ந்துதான் இருந்தாள் ,அவளிடம் “பொண்ணுட்ட திரும்பவும் ஏதாவது பேசி பாக்கறீங்களா “‘என்றேன், அவளிடம் என் வார்த்தைகள் உள்ளே செல்லவே இல்லை என்று தோன்றியது  . நான் பெண்ணின் முடிவை யூகித்திருந்தேன் என்றாலும் எங்களோடு வருவாள் என்ற சிறு நம்பிக்கை இருந்தது ,இப்போது கடும்  ஏமாற்றம் மனதில் தோன்றியது , பெண் எங்களை நோக்கி சற்றும் திரும்பாமல் அவன் அருகில் போய் பழையபடி ஒட்டிக்கொண்டு நின்று தலை கவிழ்ந்து கொண்டாள் .

இன்ஸ்பெக்டர் என்னிடம் திரும்பவும் ” விட்டுடுங்க ,அவ்வளவுதான் ” என்று சொல்லி ” சரி வெளிய போறேன் ,வரீங்களா ” என்றார்  , நான் அவள் அம்மாவை பார்க்க “அவங்க இருக்கட்டும் ,நீங்க வாங்க ” என்றார் . வெளியே செல்லும் போது  வாசலில் திரண்டிருந்த கூட்டத்தினர் எங்களையே பார்த்து கொண்டிருந்தனர் ,அவர் புல்லட்டில் இரு சாலைகள் தாண்டி இருந்த காபிசாப்  சென்றோம் , அவர் மிக ரிலாக்ஸாக இருந்தார் ,பிறகு  ” தம்பி, பொண்ணோட விருப்பம்கிறதெல்லாம் ஒரு விஷயமே இல்ல , கூட்டம் ,அதுதான் பேசும் , அதுதான் வலு , ,பொண்ணுகிறது ஒரு அசட்  மாதிரிதான் , நம்ம கிட்ட வலு இல்லைனா நம்ம கைய விட்டு போயிடும் ” என்றார் . பின் காபி ஒரு முடக்கு பருகிய பின் ” இந்த கூட்டம் இல்லைனா பொண்ணை உங்க கூட அனுப்பியியிருப்பேன் ” என்றார்

ஹைட்ரா – சுசித்ரா சிறுகதை

பின்மதிய இடைவேளையில் அட்சயாதான் வந்து சொன்னாள். “ஐஷூ ரொம்ப அழறாப்பா. என்னன்னே தெரீல…”கண்கள் விரிய லட்சுமி ஒரு கணம் அவளை ஏரிட்டுப் பார்த்தாள். காற்றில் தும்பிக்கைகள் அலைய வினோத்தின் ரெக்கார்ட் நோட்புக்கில் ஹைட்ரா படத்தை வரைந்துகொண்டிருந்தவள் அதை அப்படியே போட்டுவிட்டு அட்சயாவுடன் ஓடினாள்.

அப்போதெல்லாம் ஒவ்வொருநாளும் காலை பத்தரை மணி இடைவேளையில், அது முடியவில்லை என்றால் லஞ்ச் பிரேக்கிலாவது, லட்சுமி ஐஷ்வர்யாவை சென்று பார்த்துவிடுவாள். அல்லது இவளைப் பார்க்க அவள் வந்துவிடுவாள். ஆனால் அன்று மட்டும் லட்சுமிக்கு ஐஷ்வர்யாவை சந்திக்க முடியாமல் போயிற்று.  ஏனோ, காலையிலிருந்து வேலை. கிளாஸ் மானிட்டர் பொருப்புகள்.

முதலில் யூனிட் டெஸ்ட் தாள்களை கணக்கிட்டு டோட்டல் போட்டுத் தரச்சொல்லி உத்தரவு வந்தது. மதியம் போகலாம் என்றால் அன்று காலாண்டு பரிட்சைக்கு முந்தய வெள்ளிக்கிழமை. ரெக்கார்ட் நோட்டுகளை முடித்துத்தர வேண்டிய கடைசி நாள். வரிசையாக ஆளாளுக்கு வந்து “ஏய் ஒரு படம்தான் போட்டுத்தாயேன்” என்று நின்றார்கள். லட்சுமி “முடியாது” என்று சொல்லத் தெரியாத குட்டி. பீடி பீரியடிலும் தும்பிக்கைகளாக வரைந்துகொண்டிருந்தாள்.

ஐஷ்வர்யாவும் லட்சுமியும் எட்டாம் வகுப்புவரை ஒரே பெஞ்சில் ஒன்றாகவே படித்தவர்கள்.  ஐஷூ-லச்சு என்று இணை பெயராகத்தான் அறியப்பட்டார்கள். லட்சுமியின் ஹீரோ பேனாவை அந்த வகுப்பிலேயே பயன்படுத்தக்கூடிய ஒரே ஆள் ஐஷ்வர்யா மட்டும் தான் என்பது வித்யா விஹார் பள்ளியின் எட்டாம் வகுப்பு வரிசையே அறிந்த விஷயம். ஏனோ ஒன்பதாம் வகுப்பில், விதி –  கிருஷ்ணகுமாரி டீச்சரின் கட்டளையை அப்படியும் சொல்லலாம் – அவர்களை வெவ்வேறு செக்‌ஷன்களில் பிரித்துவிட்டது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாகவே பிள்ளைகள் சேர்ந்து படித்தால் ஒட்டிக்கொண்டுவிடுவார்கள், கவனம் குறையும் என்ற தர்க்கத்தின் அடிப்படையில் அந்த வருடம் எல்லா வகுப்புகளிலும் செக்‌ஷன்களை கலைத்துப் பிரித்தார்கள். விளைவாக லட்சுமி நைன் – ஏ. ஐஷ்வர்யா நைன் – சி.

வகுப்புகளாவது பக்கம் பக்கமாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை. அப்போது பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதியை இடித்துக்கட்டிக்கொண்டிருந்தார்கள். ஆகவே நைன் – ஏ மேலே மூன்றாம் மாடியிலும், நைன் – சி கீழே ஆடிட்டோரியம் பின்னாலேயும் அடியும் முடியுமாக இருந்தது. ஆகவே அன்று மதியம் ஐஷ்வர்யாவை பார்க்க, துப்பட்டாவும், தலைப்பின்னலும், அதிலிருந்து அவிழ்ந்து தொங்கிய கருநீலக்கலர் ரிப்பனும் முதுகுக்குப் பின்னால் படபடக்க, லட்சுமி படிகளில் தாவித்தாவி குதித்து கீழ் தளத்துக்கு ஓடினாள்.

நைன் – சி வகுப்பின் பின் வரிசையின் கடை ஓரத்தில் பெஞ்சு மீது உடலையே கூடென்றாக்கிக்கொண்டு தலையை கவிழ்த்து படுத்திருந்தவள்தான் ஐஷ்வர்யா என்று லட்சுமி கண்டுகொள்ள ஒரு நொடி பிடித்தது. வெள்ளைச்சீருடையிட்ட அந்த உரு நடுங்குக்கொண்டிருந்தது. கருநீல துப்பட்டாவின் முனை துவண்டு இருபக்கமும் தொங்கியது. உள்ளே அவள் விசும்பியிருக்கவேண்டும், உடலே தூக்கிப்போட்டு அதிர்ந்தது. லட்சுமி ஓடிப்போய், “ஐஷூ! ஐஷூ! ஏய், என்னடீ ஆச்சு? கேக்கறேன்ல?” என்று அவள் தோளை பிடித்துக் குலுக்கினாள். ஐஷ்வர்யா பந்தாகவே கிடந்தாள். ஒன்றும் சொல்லவில்லை. தலையைக்கூட நிமிரவில்லை. வகுப்பில் பத்து பேர்களுக்கு மேல் இருக்கவில்லை. முதல் பெஞ்சில் சில பையன்கள். இன்னும் சிலர் ஜன்னலோரமாக நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஐஷ்வர்யா  பக்கத்தில் உட்காரும் திவ்யா அங்கே இருந்தாள்.

“திவ்யா என்னடீ ஆச்சு இவளுக்கு?” என்று லட்சுமி குரல் கொடுத்தாள்.

திவ்யா கும்பலுக்குள்ளிருந்து எட்டிப்பார்த்து தோள் குலுக்கினாள்.  “உடம்பு சரியில்லன்னு லஞ்ச் பிரேக்லியே பின்னால போயி படுத்துகுட்டா… தெரியல” என்று நின்ற இடத்திலிருந்தே பதில் சொல்லிவிட்டு உடனே தலையை உள்ளிழுத்துக்கொண்டாள்.

என்ன செய்வதென்று தெரியாமல் லட்சுமி பதறி சுற்றும் முற்றும் பார்த்தாள். “கிருஷ்ணகுமாரி மேடத்துட்ட போய் சொல்லலாமா?” என்று அட்சயா கேட்டாள்.

குனிந்த உருவிலிருந்து ஒரு கை மட்டும் பிரிந்து வந்து லட்சுமியின் கையைத் தேடி கெட்டியாக பிடித்துக்கொண்டது. “வேண்டாமே… ப்ளீஸ்?”

ஐஷ்வர்யா தலை நிமிர்ந்தாள். முகமெல்லாம் சிவந்து கன்னங்களில் உப்புக்கரை தீட்டியிருந்தது. “திட்டுவாங்க…” குரல் கெஞ்சி சிறுத்தது. அழுகையானது.

“என்ன ஆச்சுன்னு சொன்னா தானப்பா ஏதாச்சும் செய்ய முடியும்?” என்றாள் லட்சுமி. பதற்றத்தில் அவள் குரல் அதிர்வாக தொனித்தது.

அந்தக்குரலின் ஆணைக்கு கட்டுப்பட்ட பாவைபோல் ஐஷ்வர்யா இலேசாக எழுந்து திரும்பி குர்த்தாவை இழுத்துவிட்டுக் காட்டினாள். நீளமாகத்தொங்கிய அவள் பின்னலுக்கடியில் பெரிய செம்பருத்திப்பூவாக ஒரு குருதித்தடம் பதிந்திருந்தது. எழுந்தபோது மரபெஞ்ச்செல்லாம் சிவப்பான பசபசப்பு. அதன் வீச்சம் எழ என்ன செய்வதென்று தெரியாமல் ஐஷ்வர்யா பதறி உடனே அதன் மேலேயே  திம்மென்று உட்கார்ந்தாள்.  அவளால் அதன்பின் யார் கண்ணையும் சந்திக்க முடியவில்லை.

லட்சுமி ஒரு நொடி தயங்கினாள். எழுந்து சென்றாள். முன்பெஞ்சு அருகே நின்றவனிடம், “பிரவீன்… பசங்களையெல்லம் கொஞ்சம் ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெளிய இருக்க சொல்றியா? ப்ளீஸ்?” என்றாள். பிரவீன் முழித்தான். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. அவள் சொன்னதை செய்தான்.

லட்சுமி நோட்டுப்புத்தகத்திலிருந்து தாள்களை கிழித்தாள். ஐஷ்வர்யாவை எழச்சொல்லி அவள் உட்கார்ந்த இடத்தை வழித்து எடுத்தாள். மூன்று நான்கு முறை எல்லாத் தடமும்  போக துடைத்தாள். இரத்தம் படிந்த தாள்களை மடித்து மடித்து இன்னொரு தாளில் சுருட்டி யாரோ சாப்பிட்டு குப்பையில் போட்டிருந்த காலி சிப்ஸ் பாக்கெட்டில் போட்டு அதையும் சுருட்டி ஓர் ஓரமாக வைத்தாள். அதை எங்கே போடுவதென்று அவளுக்குத் தெரியவில்லை. மற்ற எல்லோரும் எட்டியே நின்று வேடிக்கை பார்த்தார்கள். யாரும் பக்கத்தில் வரவில்லை.

அடுத்து என்ன செய்வதென்றும் அவளுக்குத் தெரியவில்லை. “ஐஷூ, வீட்டுக்குப் போறியா?” என்றாள். ஐஷூ விசும்பினாள். அந்நேரத்தில் அவள் வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று லட்சுமிக்குத் தெரியும். தவிர இந்த நிலையில் வெளியே எப்படி போவது?

“பேசாம டீச்சர்ட்டையே சொல்லிடலாமா?” என்று மீண்டும் அட்சயா கேட்டாள். “எந்த டீச்சர்?” என்றாள் லட்சுமி. ஒவ்வொரு பெயராக அவர்கள் மனதில் ஓடியது.

“செங்கொடி மிஸ் இன்னைக்கி லீவாச்சே?” என்றாள் அட்சயா. “வேற யார்ட்ட சொல்றது? சங்கரலிங்கம் சார்ட்டையா?” என்றாள் லட்சுமி. அதை யோசிக்கவே அவளுக்கு சிரிப்பாக வந்தது. ஐஷ்வர்யாவைப் பார்க்க அவளும் கண்ணீரை மீறி சிரித்துக்கொண்டிருந்தாள்.

“சரி. ஒண்ணு பண்ணு,” என்றாள் லட்சுமி. “இன்னொரு நேப்கின வச்சுகிட்டு இங்கியே உக்காரு. இன்னும் ரெண்டு பீரியட்தானே? சாய்ந்தரம் நானும் கூட வரேன். சேர்ந்தே வீட்டுக்குப் போகலாம். பஸ் வேண்டாம். ஆட்டோல போயிடலாம்,” என்றாள்.

ஐஷ்வர்யா பயந்த பார்வையுடன் பார்த்தாள். “ஏற்கனவே ரெண்டு வெச்சிருக்கேன்,” என்றாள்.

“பரவால்ல, மேல ஒண்ணு வெச்சுக்க,” என்றாள் அட்சயா.

ஐஷ்வர்யாவுக்கு பதட்டம் குறையவில்லை. “இதோட எப்பிடி டாய்லெட்டுக்கு போவேன்? எல்லாரும் பாப்பாங்களே?” என்றாள். அப்போது மூன்றரை மணி பெல் அடித்தது. கதவைத்திறந்து எல்லோரும் உள்ளே நுழையத்தொடங்கினார்கள்.

லட்சுமியின் அனிச்சையாக அதைச்செய்தாள். இரண்டு தோள்களிலிருந்து இரண்டு பின்களையும் நடு நெஞ்சிலிருந்து மூன்றாவது பின்னையும் சிவப்பு மானிட்டர் பேட்ஜையும் கழட்டி கருநீலநிற துப்பட்டாவை இழுத்து உதறினாள். இரண்டாக மடித்தாள். ஐஷ்வர்யாவை இழுத்து அவள் இடுப்பைச் சுற்றி கட்டி முடி போட்டாள்.

ஐஷ்வர்யா உடல் மெலிந்தது. இரண்டு கட்டு சுற்ற முடிந்தது. சொறுகிவிட்டு, “போ, ஒண்ணும் தெரியாது. இங்கியே திரும்ப வந்து உட்காரு. யாராவது கேட்டா உடம்பு சரியில்லன்னு சொல்லிக்கோ. கரெக்டா அஞ்சரைக்கு நான் வரேன், சரியா? நான் வரவரைக்கும் நீயா எங்கியும் போகாத. என்ன?” என்றாள். ஐஷ்வர்யா மௌனமாக தலையசைத்தாள்.  வெள்ளை குர்த்தாவில் லட்சுமி வகுப்பைவிட்டு வெளியேறினாள்.

அப்போதெல்லாம் வித்யாவிஹார் பள்ளியில் வாரத்துக்கு ஒரு முறை இந்த ‘வெள்ளைச்சீருடை’ தினம். மாணவிகள் மற்ற நாட்களில் கருநீல சல்வாரும் துப்பட்டாவும் இளநீலக்கட்டம் போட்ட குர்த்தாவும் போட்டுவர வேண்டும். வெள்ளிக்கிழமை மட்டும் வெள்ளைக் குர்த்தா. வெள்ளை கான்வாஸ் ஷூ. மாணவர்களுக்கும் இதே நியமம், என்ன சல்வார்-குர்த்தாவுக்கு பதிலாக பாண்ட்-சட்டை. துப்பட்டா கிடையாது.

ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்துக்குள் ஒரு கூட்டம் ஆசிரியர்கள் மாறி மாறி ஷிஃப்ட் போட்டு பிள்ளைகளை கண்போனபோக்கில் நிறுத்தி சீருடைகளை சரிபார்ப்பார்கள். நுணுக்கி நுணுக்கி நோட்டமிடுவார்கள். நகங்களை வெட்டியிருக்க வேண்டும். ரிப்பனை முறுக்கியிருக்க வேண்டும். முகத்தில் முடி வளர்ந்திருந்தால் மழித்திருக்க வேண்டும். துப்பட்டாவை பெரிய பதாகையாக மடித்து பின் குத்தி நிலைநிறுத்தப்பட்டிருக்கவேண்டும். அதன் முனை காற்றில் பறக்காதபடிக்கு தோளுக்குப்பின்னால் முடித்துவிடப்பட்டிருக்க வேண்டும். வெள்ளைச் சீருடை பளீரென்று ஒரு பொட்டு கறையில்லாமல் முகத்திலறையும்படி இருக்கவேண்டும்.

உடலோடு ஒட்டிய வெள்ளை குர்த்தாவின் நுணி கால்களில் படபடக்க லட்சுமி படியேறிச்சென்றாள். மூன்று மாடிகள். மூச்சு வாங்க ஓடி வகுப்பை அடைந்தாள். நல்ல வேளை அடுத்த வகுப்புக்கான ஆசிரியர் வரவில்லை. கழுத்திலிருந்து நெஞ்சுக்குள் வேர்வை வழிந்தது. தன்னுடைய இருக்கையை அடைந்தபோது எல்லோரும் அவளையே பார்த்தார்கள். பிரீதி “துப்பட்டா எங்கடீ?” என்றாள். “நீ மொதல்ல தள்ளு…” என்று அவளுக்கும் ஜெனிஃபருக்கும் நடுவே தன்னை பொருத்திக்கொண்டாள் லட்சுமி.

மேசை மேல் அவள் பாதியில் விட்டுச்சென்ற ஹைட்ரா தும்பிக்கைகளை ஆர்வமாக துழாவியபடி காத்திருந்தது. எத்தனை ஆனந்தம்! நொடிப்பொழுதில் லட்சுமிக்கு முகமெல்லாம் குன்றும் குழியுமாய் பிளந்தது. ஒருநொடிக்கு அவளும் எங்கேயோ நெல்குருத்துபோல் ஆடிக்கொண்டிருந்தாள். அந்நேரம் ஜென்னிஃபர் “கைல என்ன?” என்றாள். சிரிப்பு மறைய “ம்ம்?” என்று குனிந்தாள். இரண்டு கைகளிலும் எதையோ கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்தாள். இடது கையில் ரத்தம்படிந்த தாள்களை சுருட்டிவைத்திருந்த சிப்ஸ் பாக்கெட். வலதுகையில் சிவப்பு நிற மானிட்டர் பேட்ஜ்.

என்ன செய்வதென்று தெரியாமல் சிப்ஸ் பாக்கெட்டை தன்னுடைய ஸ்கூல் பேக்கின் ஒரு மூலையிலேயே அமுக்கி வைத்தாள். வீட்டுக்குப்போய் தூரப்போடலாம். கைகூட கழுவவில்லையே? அதனால் என்ன, பேப்பர்தானே? ஒன்றும் வியாதியெல்லாம் தொத்திக்கொள்ளாது… அவள் மானிட்டர் பேட்ஜை மீண்டும் நெஞ்சில் குத்திக்கொண்டிருந்தபோதே வைஸ் பிரின்சிபல் கிருஷ்ணகுமாரி டீச்சர் வகுப்பில் நுழைந்தார்.

அது அவருடைய வகுப்பு என்பதையே லட்சுமி மறந்துவிட்டிருந்தாள். இறுக்கிப் போர்த்திய முந்தானையும் இழுத்துக்கட்டிய கொண்டையுமாக அவருடைய குட்டி உருவம் உள்ளே உருண்டு வந்தது. வெறப்பா கைய கட்டிகிட்டு நிக்குற ஹைட்ரா! லட்சுமிக்கு சிரிப்பாக வந்தது. “ஏய், குனி. அவுங்க கண்ல பட்ட சாவுதான்,” என்று பிரீதி காதை கடித்தாள்.

கிருஷ்ணகுமாரி டீச்சர் அனாவசியமாக எந்த உடலசைவையும் செய்வதில்லை. கை உயர்த்துவதில்லை. குரல் உசத்துவதில்லை. கண்ணோட்டத்திலேயே வகுப்பை கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் கொண்டிருந்தார். இப்போதும் கண்ணாடிவிளிம்பிலிருந்து இரண்டுபக்கமும் தொங்கிய திரி ஊசலாட கண்களை உயர்த்தி வகுப்பை நோட்டம் விட்டார் டீச்சர். உடனே சலசலப்பு அடங்கியது. அமைதி.

வரலாற்றுப் பாடம் தொடங்கியது. சுதந்திரப்போராட்டப்படலம். காந்தி இரண்டாம் வட்டமேசை மாநாட்டுக்கு 1931-ல் லண்டன் செல்கிறார். கச்சையாகக்கட்டிய ஒற்றைக் கதராடையில் லண்டன் குளிரையும் அங்குள்ள பிரிட்டிஷாரையும் எதிர்கொள்கிறார் காந்தி. பிறகு அரிஜனங்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அரிஜனமும் பொதுஜனம் அல்லவா? அவர்களுக்கும் கைகொடுத்து உதவவேண்டியது கடமையல்லவா? 1932-ல் பூனா ஒப்பந்தம் கையொப்பமாகிறது. 1935-ல் இந்திய அரசுச் சட்டம்… கிருஷ்ணகுமாரி டீச்சர் ஆண்டுகளையும் நிகழ்வுகளையும் மென்மையாக பிசகில்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிச் செல்வதே வரலாற்றுப்பாடம் எடுக்கும் வழிமுறை. மாணவர்கள் அவற்றை அப்படியே வார்த்தை மாறாமல் எழுதிக்கொண்டிருந்தார்கள். 1937-ன் தேர்தல்களுக்கு வந்த போதுதான் நீல அலையாகத்தெரிந்த மாணவிகள் பக்கத்தில் ஒரு வெண்ணிற உருவை கண்டுகொண்டார்.

“லக்‌ஷ்மி!”

வெள்ளை குர்த்தாவை இழுத்துவிட்டுக்கொண்டு லட்சுமி நீலத்திரைக்குமேல் எழுந்தாள். விரல்களை இறுக்கி மடித்து தலை கவிழ்ந்தாள். எல்லோரும் திரும்பினார்கள்.

“ஒய் ஆர் யூ நாட் இன் யூனிஃபார்ம்?” டீச்சரின் குரல் அறை முழுவதும் ஒலித்தது.

லட்சுமி ஒன்றும் சொல்லாமல் நிமிர்ந்து டீச்சரின் கண்களை சந்தித்து மீண்டும் தாழ்த்திக்கொண்டாள்.

கிருஷ்ணகுமாரி டீச்சர் அவள் பெஞ்சை நோக்கி விடுவிடுவென்று நடந்து வர லட்சுமி தன்னை அறியாமலேயே பின்வாங்கினாள். கிருஷ்ணகுமாரி டீச்சர் பையன்கள் சேட்டைசெய்தால் நடுவகுப்பிலேயே தொப்புள்சதையை பிடித்து திருகுவார். அப்போது அவளையும் அப்படி செய்யுமளவுக்கு அவர் உடலில் வேகம் இருந்தது.

ஆனால் டீச்சர் அப்படியேதும் செய்யவில்லை. அவளை அடைந்தார். தாழ்வாக, நெருக்கமாக, சீரலாக, அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ஆபாசம் பேசும் குரலில், “ஏய், துப்பட்டா எங்கடீ?” என்றார்.

அவள் அப்போதும் பதில் சொல்லாமல் நின்றாள்.

டீச்சரின் பார்வை அவள் மீது ஊறிச்சென்றது. அவர் பார்வை பட்ட இடங்களிலெல்லாம் கண்களாக முளைத்துவிட்டதுபோல் இருந்தது லட்சுமிக்கு.

“ஸிட் டௌன்,” என்றார்.

தோள்களை குறுக்கியபடி லட்சுமி உட்கார்ந்தாள். தலையை குனிந்தாள்.

ரெக்கார்ட் நோட்டிலிருந்து ஹைட்ரா எல்லா கைகளையும் ஆட்டியது. அழாதே, அழாதே என்பதுபோல்.

“ஹைட்ரா ஆழத்தில் வாழும். ஹைட்ரா தண்ணீரில் நீந்தும். ஹைட்ராவுக்கு கண் தெரியாது. ஹைட்ராவுக்கு கை மட்டும் தான் உள்ளது. ஒரு கை வெட்டப்பட்டால் ஹைட்ராவுக்கு அந்த இடத்தில் மற்றொரு கை முளைக்கும்.” பாடத்தின் வரிகளை லட்சுமி தனக்குள் அனிச்சையாக மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொண்டே இருந்தாள். வார்த்தைகளை அப்படி இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருப்பது வரை அழுகை வராது என்று அவளுக்குத்தெரியும்.

“ஏய் துப்பட்டாவ என்னடீ பண்ண? அவங்கட்ட சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே?” என்று முணுமுணுத்தாள் பிரீதி. லட்சுமியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வினோதும் கார்த்தியும் திரும்பி பரிதாபமாக பார்த்தார்கள்.

வகுப்பு முடிந்த கையோடு டீச்சர் லட்சுமியை எழுப்பினார். மூன்று மாடிகள் இறங்கி கீழ்தளத்துக்கு அவர்களுடைய அறைக்கு கூட்டிச்சென்றார். தலைகுனிந்தபடியே லட்சுமி அவரை பின்தொடர்ந்து இறங்கினாள்.

தன்னுடைய அறையிலிருந்து லட்சுமியை அவள் அப்பாவுக்கு போன் போட்டுத்தரச்சொன்னார் டீச்சர். போனில் மென்மையாக, நிதானமாக, ஆனால் வலுவாக பேசினார்.  “ஆமா சார். ப்ளீஸ் கம் இம்மிடியட்லி… இல்ல, பதட்டப்பட ஒண்ணுமில்ல, ஆனா நீங்க வந்தா பெட்டர்.”

லட்சுமி அறையின் ஒரு மூலையில் அதே வெள்ளை குர்த்தாவில் உட்கார்ந்திருந்தாள். தன்னுடைய தாள்களில் மூழ்கியிருந்த கிருஷ்ணகுமாரி டீச்சர் அவ்வப்போது நிமிர்ந்து கண்ணாடிச்சில்லுக்கு மேலிருந்து அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கினார். அவருக்குப்பின்னால் ஒரு சட்டகத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் கண்சொக்கி நான் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதுபோல் இருந்தார். பக்கத்திலே வெண்சேலையில் சாரதாதேவி அந்த அரங்கை பரிவோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

டீச்சர் நிமிர்ந்தார். “நீ உள்ள ஷிமீஸ் போடுறதில்லியா?” என்றார்.

லட்சுமி குனிந்து தோளுக்குள் விரலை விட்டு ஆடையை இழுத்துவிட்டுக்கொண்டாள்.

குர்த்தாவுக்கடியில் அதே வெண்ணிறத்தில் பருத்தி ஒற்றையாடையாக ஷிமீஸ் போட்டிருந்தாள். அதற்கடியில் உள்ளாடை. பொதுவாக இந்த அமைப்புக்கு மேல் துப்பட்டாவும் இருக்கும். இன்று இல்லை. ஓடி வியர்வையில் தோலோடு ஒட்டியதால் எந்த ஆடையும் தனியாகத் தெரியவில்லை. அவள் ஏதும் சொல்லவில்லை.

குரல் மாறியது. “காலையில துப்பட்டா போட்டுட்டுதான வந்த… எதுக்கு கழட்டுன? யாராவது பாத்தா தப்பா நெனைப்பாங்கல்ல? அதானே டீச்சர் கேக்கறேன்?”

ஆனால் அதற்கும் அவள் ஏதும் சொல்லவில்லை. தலை குனிந்தபடியே இருந்தது.

கிருஷ்ணகுமாரி டீச்சர் கண்களை சுறுக்கினார். “கேக்கறேன்ல? அங்க என்ன தனியா யோசனை? இப்படி கொஞ்சம் இறங்கி வர்ரது.”

லட்சுமி கண்கள் படபடக்க நிமிர்ந்து தலையசைத்தாள். கைவிரல்களை மடியில் முஷ்டியாக மடக்கிக்கொண்டாள். மேசை மீதிருந்த தூசின் மேல் ஹைட்ராக்கள் நெளிந்தன. கைகள் காற்றை அளைந்தன. அவை கொடிகளைப்போல் படபடத்தன. சுழலாக வட்டம்போட்டன. கைகோர்த்து நடனமிட்டன. லட்சுமி அவற்றை பார்த்துக்கொண்டிருந்தாள்.

லட்சுமியின் அப்பா வர ஐந்து மணிக்கு மேல் ஆனது.

“மேடம்… என் டாட்டர்… சி.லட்சுமி…” உள்ளே செருகப்படாமல் பாண்டுக்கு வெளியே தொங்கிய சட்டைநுணி மெல்லத்திரும்பிய ஃபேன் காற்றில் துடித்தது.

“உட்காருங்க. லட்சுமியோட அம்மாவால வரமுடியலியா?”

“இல்ல மேடம்…” லட்சுமியின் அப்பா தயங்கினார். “அவ இல்ல. இவளுக்கு மூணு வயசிருக்கும். அப்ப ஒரு ஆக்சிடண்ட்ல போயிட்டா”

“ஓ… ஐ யம் சாரி.” டீச்சர் கண்களை விலக்கிக்கொண்டார். மீண்டும் அவர் முகத்தை பார்த்தார். “இல்ல, கொஞ்சம் டெலிகேட் இஷ்யூ… அதான் உங்ககிட்ட எப்படி டிஸ்கஸ் பண்ணன்னு தெரியல…”

பெருமூச்சு விட்டார். “சார், தப்பா எடுத்துக்காதீங்க. ஆனா சொல்றது எங்க கடமையில்லிங்களா? உங்க டாட்டர்… ஷீ இஸ் நாட் அ சைல்ட் எனிமோர். அவளுக்கு இன்னும் கொஞ்சம் தன்ன பத்தின சென்ஸ் இருக்கணும் சார்.”

“மேடம், என்ன நடந்துச்சு?” லட்சுமியின் அப்பா திரும்பி மகளை பார்த்த்தார். “என்ன டா?”

ஒரு ஹைட்ரா கைகளை விரித்து காற்றாடி போல் அவள் கண்ணுக்கு முன்னால் மெல்ல சுற்றிக்கொண்டிருந்தது. அப்பா பார்த்ததை லட்சுமி பார்க்கவில்லை.

டீச்சர் கண்ணாடியை கழற்றினார். “சார், இன்னைக்கு அவ துப்பட்டா… அதான் பிள்ளைங்க மேல போடுவாங்களே… அதப்போடாம என் கிளாசுக்கு வந்தா. எங்கேயோ தொலச்சிருக்கா. நானும் விசாரிச்சு பாத்திட்டேன். சொல்லமாட்டேங்குறா. என்ன கேட்டாலும் உம்முணாம்மூஞ்சி கல்லு மாதிரி உக்காந்துட்டிருக்கா.” ஒரு கோப்பைத் திறந்தார். “இதோ நீங்களே பாருங்க. காலையில ஃபுல் யூனிஃபார்ம்லதான் வந்திருக்கா. ரெக்கார்ட்ல இருக்கு. நடுவுல எங்கியோ லூஸ் பண்ணியிருக்கா.”

லட்சுமியின் அப்பா இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தார்.

“மேடம்… இது… எங்கியாவது விழுந்திருக்கும்…” என்றார்.

டீச்சர் நெற்றி சுருக்கினார். “என்ன சார் சீரியஸ்னெஸ் புரியாம பேசரிங்க? மிஸ்பிளேஸ் பன்றதுக்கு துப்பட்டா என்ன சாவிக்கொத்தா? பின்பண்ணி வரணும்னு இன்சிஸ்ட் பன்றோம். அதப்போயி எதுக்கு கழட்டணும் சொல்லுங்க? அப்புறம் துப்பட்டா போடலன்றளவுக்கு அவ்வளவு மறதியா ஒரு பொண்ணுக்கு?

“சரி, நீங்க சொன்ன மாதிரியே விழுந்திருக்கட்டும். அப்ப கேட்டா சொல்றதுக்கென்ன?” டீச்சர் அவரை ஓரக்கண்ணால் பார்த்தார். “வேறெங்கேயாவது போயிருக்கக் கூடாதில்ல?”

லட்சுமியின் அப்பா ஒன்றும் சொல்லாமல் வெறிக்க டீச்சர் கண்ணாடியை துடைத்து அணிந்தபடி தொடர்ந்தார். “துப்பட்டா தொலஞ்சுபோனதுகூட சரி சார். ஆனா பாருங்க. அதப்பத்தின அக்கறையே இல்லாம இருக்கா. புரியுதுங்களா சார்?” டீச்சர் தாள்களை சேர்த்து கொத்தாக அடுக்கி ஃபைலுக்குள் சேர்த்து அதன்மீது கைகோர்த்து பாந்தமாக இருத்தி அவர் கண்களை சந்தித்தார். “அவளுக்கு தன்னப்பதின சென்ஸே இல்ல. எங்கேயோ இருக்கா. அதத்தான் சொல்ல வர்ரேன்.”

அப்பா அவளை மீண்டும் திரும்பிப் பார்த்தார். அவளுடைய வெள்ளைச்சீருடை அப்போதுதான் அவர் கண்களில் பட்டதுபோல் ஒரு நொடி விழித்துக் கொட்டினார். பெரிய பதாகையைப்போல் நெஞ்சின்மேல் மையமாக குத்தியிருந்த சிவப்புநிற வட்டத்திலிருந்து அவரால் கண்களை எடுக்கமுடியவில்லை.

குரலை மீடெட்டுத்து லட்சுமியின் அப்பா மெல்ல, “மேடம்… தப்பா ஒண்ணும் நடந்திருக்காது…
நல்லா விசாரிச்சுப் பாத்தீங்களா?” என்றார்.

கிருஷ்ணகுமாரி டீச்சர் பொறுமையிழந்த உச்சுக்கொட்டுடன் நிமிர்ந்தார்.

“சார், தப்பா எதுவும் நடந்திருக்காதுன்னே வெச்சுக்குவோம். சரி. ஆனா கேள்வின்னு வந்திருச்சுல்ல? இப்ப நான் கேக்கறா மாதிரி அவ வெச்சுக்கலாமா, சொல்லுங்க? அந்த சென்ஸ் அவளுக்கா இருக்கணும் சார். நாமள எல்லாரும் பாக்கறாங்களே, கேள்வி கேப்பாங்களேன்ற உணர்வு உடம்போட இருக்கணும். எல்லாம் லைஃப்ல நெறைய பார்த்தாச்சு சார்… அந்த ஆதங்கத்துல சொல்றேன். அவ கொழந்த இல்ல. அம்மா இல்லாத பிள்ளைன்னு வேற சொல்றிங்க, வீட்ல யாராவது பெரியவங்கள விட்டு பேசிப் புரியவைங்க சார்…”

பேச்சுமும்முறத்தில், ஒரு ஹைட்ராவின் கை அந்த அறையிலிருந்து நீண்டு வெளிச்சென்றதை இருவருமே கவனிக்கவில்லை. அது தாழ்வாரங்களில் தலைகவிழ்த்தபடியே கண்ணில்படாமல் ஒழுகிச்சென்றது. நைன் – சி வகுப்பின் கடைசி பெஞ்சில், லட்சுமியின் துப்பட்டா முனையை கெட்டியாக பிடித்துக்கொண்டு அவள் வருவதற்க்காக அப்போதும் காத்துக்கொண்டிருந்த ஐஷ்வர்யாவின் கையை அடைந்தது. தலைதூக்கி, ‘நான்தான்’, என்று மெல்ல முட்டியது.