”பேனாக் கத்தியின் பயன்பாடுகள் என்ன என்று தெரியுமா?” என்றுதான் அவன் தனது உரையைத் துவங்குவான். மடக்கிய பேனாக்கத்தியைத் தனது சட்டைப் பையில் இருந்து வெளியே எடுத்து அதன் கத்திப் பகுதியை வெளியே நீட்டி மடக்கியவாறே, பதில்களை செவி மடுப்பான். ”கொல்லலாம்” அனேகமாக முதல் பதிலாக வரும். உடனே தன் ஷுவைக் கழற்றி அதன் அடிப்பகுதி மீது ஓங்கிக் குத்த கத்தி துளைக்காமல் மடங்கி விடும். அனைவரும் சிரிப்பார்கள். பின்னர்தான் எலுமிச்சம் பழம் வெட்ட, சிறிய திருகாணியை இறுக்கிச் சுழற்றிப் பொருத்த, பீர்பாட்டில் மூடி திறக்க, சிப்ஸ் பாக்கெட்டைக் கிழிக்க, குளிர்பான டின்னைத் திறக்க, அழுத்தி மடித்த காகிதத்தைச் சீரான துண்டாக்க, முதுகுப் பை ‘ஜிப்’பில் மாட்டி இருக்கும் சிறு நூல்களை வெட்டி அதைச் சீராய் இயக்க என ஒவ்வொன்றாய் பதில்கள் வரும். உண்மையில் ராஜநாயகத்துக்கே தோன்றி இருக்காத பல பயன்களும் பட்டியலாகும்.
இன்று, இந்தப் பேனாக் கத்தி ஒன்று காரணமாகி இந்த முதுகுச்சுமையை ‘செக் இன் லக்கேஜ்‘ ஆக்க வேண்டி வரும். ‘லேப் டாப்‘பை அதன் சதுரப் பைக்குள் வைத்து எடுத்துப் போகலாம். விமானம் தரை இறங்கும் முன் ‘பவர் பாயிண்ட் ஸ்லைடு‘களை ஒரு முறை சரி பார்க்கலாம். நேற்று இரவு எடுத்து வந்த பெட்டிக்குள் பேனாக்கத்தி கிடையாது. அது இளைஞர்கள் பயிற்சி முகாம் அல்ல. ஆலோசக நிபுணர்களின் மாநாடு. இரவு இரண்டு மணி வீட்டுக்கு வந்தவன் வெறும் நான்கு மணி நேர இடைவெளிக்கு ஏர்போர்ட்டிலேயே தங்கி இருக்கலாம். கொஞ்ச நேரம் வீட்டில் இருந்தாலும் மனம் புத்துணர்ச்சி பெறுமென்று தோன்றிற்று. ஆனால், அரைமனப் போராட்டத்தை வெல்லாமல் கொஞ்சம் விஸ்கி அருந்தி இருக்க வேண்டாம். தலை பாரம் இன்னும் நீங்கவில்லை. கண் எரிச்சல் ஏறத்தாழ ஒருவாரத் தொடர் பயணங்களால். சிறிய பயணத்துக்கானவற்றை வைத்தாகி விட்டது என சிறு நிறைவு வந்து கொண்டிருந்தபோது, முதல் முறை வாயிலில் மணி அடித்தது. ஆணுறைப் பாக்கெட் எங்கே? நேற்று எடுத்து வந்த பயணப் பைக்குள் ஒன்றே ஒன்று தனியாக இருக்க வேண்டுமே. முதுகுச் சுமைக்குள், பின் சிறிய பெட்டிக்குள் தேடினான். சிறியது. கை நழுவுகிறதோ? எண் மேலாளும் பூட்டுள்ள வேறு ஒரு பெட்டி இருந்தது. அதனுள் கண்டிப்பாக ஒரு ‘பேக்‘ ஆணுறை இருக்க வேண்டும். அதைக் கையில் எடுத்தபோது அதன் எண் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. ‘டிங்க் டாங்க்‘ அழைப்பு மணி இரண்டாவது முறையாக ஒலித்தது. ராஜநாயகம் எண் நினைவு கூர அவகாசம் வேண்டி அறையை விட்டு வெளியே வந்தான். முதல் மணி பால் பாக்கெட் ஆள் அடிப்பது. இது செய்தித்தாள் பையன் அடித்திருப்பது. அவன் அறைக்கு எதிர் அறை செல்வராணியினுடையது சிறிய அறை அந்த ‘ட்யூப்ளே‘ வீட்டின் கீழ்க் கட்டில் இருந்தது. தாத்தா பாட்டியின் பெரிய அறை, சமையல் அறை மற்றும் வரவேற்பறையும். மங்கலான விளக்கொளியில் அம்மா உறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. அப்பா நடைப் பயிற்சிக்குப் போயிருப்பார். நான்கு பால் பாக்கெட்டுகளையும் முதலில் எடுத்து ‘பிரிட்ஜ்‘ஜூக்குள் வைத்தான். செய்தித்தாளை அப்படியே உணவு மேசைமீது வைத்தான். ஹால் கடிகாரம் இன்னும் அரை மணிக்குள் அவன் கிளம்ப வேண்டும் எனக் காட்டியது. 6464 சட்டென எண் பூட்டின் திறவுகோல்மனத்துள் உதித்தது. பெட்டியைத் திறக்கும்போது, வீட்டில் அவன் அதைப் பூட்டும் பழக்கமே இல்லை என்பதும் நினைவில் மோதியது. சிறிய அரக்கு வண்ணப் பெட்டி. உள்ளே தேட அதிக இடம் இல்லை. ஆணுறை இல்லை. யாரோ எடுத்துப் பூட்டியும் இருக்க வேண்டும். யார் அது? அப்பா அவன் அறைக்குள் வருவதே இல்லை. கௌதமுக்கு 14 வயதில் இந்த அளவு தைரியம் இருக்க இயலுமா? செல்வராணி கடையில் கேட்டு வாங்கக் கூச்சப்பட்டு இதை எடுத்திருப்பாளோ? சற்றே வியர்த்தது. அது உண்மையென்றாலும் ஏன் தாக்கம் செய்கிறது என்பதும் பதட்டத்தை அதிகப்படுத்தியது. நேரம் கடந்தபடியே இருந்தது. குளியலறைக்குள் புகுந்தான். அப்படி செல்வராணியும் இல்லை என்றால்? வீட்டுக்கு வெளியே யார் என்னும் கேள்விக்கான விடையைத் தேட அவனுக்கு இந்த மாதிரியான ஒரு இக்கட்டான நேரம் போதாது. ஆனால் விடை தெரிந்தே ஆக வேண்டும். இன்னும் சில மணிகளில் நடத்த வேண்டிய பயிற்சி வகுப்பின் மீது மனதை திசை திருப்பினான். காரை அவனிடமிருந்து வாங்கி மீண்டும் வீட்டில் விட வந்த அலுவலகத்து ஓட்டுனர், “பிரியா மேடம் இப்போதான் சார் அர்ரைவல்லே இருந்து கிளம்பினாங்க,” என்றான் பேச்சுவாக்கில். பிரியா எப்படி இவ்வளவு பிஸி? அவளுடன் கடைசியாக தனிமை எப்போது என சிந்திக்க முயன்றவன் கவனத்தை கைபேசி கலைத்தது.
ஜொனாதன் ஸ்மித்துக்கு ராஜநாயகம் என்னும் இந்திய வியாபார ஆலோசகனின் சின்னஞ்சிறிய மின்னஞ்சலில் தேவையற்ற ஒன்று இருப்பதும் தேவையான ஒன்று இல்லை என்பதும் தென்பட்டன. விமான நிலையத்தில் இருந்து எழுதுகிறேன் என்றால், அது பற்றி எனக்கென்ன? விரிவான பதில் கூறாமல் இந்தியப் பயணிகளின் விடுமுறை தினங்கள், ஆஸ்திரேலியாவில் அவர்கள் ருசிக்குப் பொருந்தும் தலங்கள் பற்றி தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் பதில். முழு வணிக சாத்தியங்களை முன் வைத்தால் என்ன குறைந்து விடும்? தொலைபேசியில் அழைத்தால் என்ன? செயற்கைக் கோள் தொலைபேசியை முதலில் கால்சராயில் தேடினான். இல்லை. முதுகுப் பையில்? இல்லை. என்னதான் ஆகி இருக்கும். டார்ஜிலிங்கில் மீண்டும் விடுதிக்குப் போவது இந்த ஹார்லி டேவிட்சன் சக்திக்குக் கூட சவாலானதே. என்னமாய் வளைத்து நெளித்து ஓட்டுகிறான்கள் இந்த இந்திய ஓட்டுனர்கள்? இடிக்கிற மாதிரி வந்து இறுதியில் நகர்த்துவதில் என்ன இத்தனை முனைப்பு? மாட்டுக்கறியும் பாஸ்தாவும் கொஞ்சம் எஞ்சி இருக்கும் தட்டை ஒரு கையில் எடுத்து மறு கையால் முதுகுப் பையை மாட்டிக் கொண்டு, உணவகத்தின் சுற்றுப்புறம் இருக்கும் திறந்த வெளி இருக்கை ஒன்றில் வந்து அமர்ந்தான். நான்கு மணிக்கே விடிந்து விட்டதால் சூரியன் நன்கு மேலெழும்பி இருந்தது. மலைச்சரிவில் பசுமையும் இடைப்பட்ட சாலைகள் எறும்பு வடிவத்தில் தென்படும் ஆட்களும் வாகனங்களும் மேகங்களால் மறைக்கப் பட்டு, மேகம் விலகியதில் கண்ணில் பட்ட காட்சி நெஞ்சை அள்ளியது. சாட்டிலைட் கைபேசியை மறந்த சூழல் நினைவுக்கு வந்தது. க்ளைர் ஒப்புக்கு நலம் விசாரித்து விட்டு, தன் மன அழுத்தத்தைத் தனிமை அதிகரிக்க வைப்பது பற்றி ஸ்மித் ஏன் கண்டு கொள்ளவே இல்லை என்று வினவி இருந்தாள். அவள் நியூசிலாந்து பயணக் குழுவுடன் போயிருக்கும்போது என்ன அழுத்தம் வேண்டிக் கிடக்கிறது என்பதை போட்டா உடைக்க முடியும்? அதில் வந்திருக்கும் கருணாகரன் எனும் இந்தியன் மிகவும் கருணையுடன் தியானம் எல்லாம் சொல்லித் தந்திருக்கிறான். ”அவன் ஆஸ்திரேலியப் பிரஜைதான். அவனோடு நட்பாயிருக்கிறேன். உன் உடைமைகளை நீ எப்போது வேண்டுமானாலும் வந்து எடுத்துக் கொள்ளலாம்,” என்று கணக்கை முடித்து விட்டாள். குளியலறையில் வெகுநேரம் அதைத் திரும்பத் திரும்பப் படித்தவன் கைபேசியை அங்கே உள்ள மதுபானத் தட்டின் மீது வைத்து அப்படியே மறந்து விட்டான்.
தென்னிந்தியாவில் கிளை அலுவலகம் வைக்கலாமா என்னும் முடிவை டெல்லியில் பிரதிநிதி அலுவலகம் வைத்திருக்கும் சந்தீப் ஷர்மாவிடமே விட்டிருக்கலாம். இதை வேறு ஆள் ஆலோசனை செய்து தரப் போகிறான் என்றதும் அவன் நிம்மதியாகி விட்டான். தனது ஹார்லி டேவிட்சன் வண்டியை இரவல் தந்தது தவிர ஷர்மாவிடம் உற்சாகம் தரும் எதுவுமே இல்லை. தனது நிறுவனம் இந்தியருக்கான ஆஸ்திரேலிய சுற்றுலாவோடு மனம் நிறைவாகக் கூடாது என்றே ஸ்மித் நினைத்தான். அதிலும் இந்தியர்களின் வழிகாட்டுதலை வழிமொழிய நான் எதற்கு? ஸ்டான்போர்டில்தான் பெற்ற எம்பிஏ அதற்காக அல்ல.இந்தியாவில் ஆஸ்திரேலியர் சுற்ற இடங்களைத் தேர்ந்தெடுக்க தான் முன்னெடுக்கும் திட்டமாகவே டார்ஜிலிங், பாங்காக்கை அவன் இரு சக்கரத்தில் சுற்ற முடிவெடுத்தான். உணவகத்தைச் சுற்றி வண்ண வண்ண ரோஜாச் செடிகள். ஏழெட்டு இதழ்கள் கீழே விரிய நடுவில் மகரந்தத்துடன் சிரிக்கும் மஞ்சள், ஊதா, வெள்ளை ஆர்சிட் செடிகளை அவனால் அடையாளம் காண இயன்றது. ஒரு பூங்கொத்து போலப் பெரிதாய், நெருக்கமான இதழ்களை விரிக்கும் சிவப்பு வண்ணப் பூவின் பெயர்தான் தெரியவில்லை. உணவக சிப்பந்தி அதன் இந்தியப் பெயர் ‘லாலி குரான்‘ என்றான். டிஷ்யூவால் கை, வாயைத் துடைத்துக் கொண்டான். சிப்பந்திக்கு ‘டிப்ஸ்‘ கொடுத்ததும் பில்லை பத்திரப்படுத்தினான். இதன் தொலைபேசி எண் நாளை வணிகரீதியாகப் பயன்படலாம். மதியத்துக்குள் பாங்காக் சென்றுவிடலாம். ஹார்லி டேவிட்சன் வண்டி பொத்தான் அழுத்தியதும் புறப்படவில்லை. பல முறை அழுத்தினான். பின்னர் ‘சோக்‘ பட்டனைப் பிடித்து இழுத்து அதைக் கிளப்ப முயன்றான். முடியவில்லை. இறுதியாக வலது கால் பக்கம் இருக்கும் ‘இயக்கி ஷாப்ட்‘ மீது பலங்கொண்ட வரை உதைத்தான். ஒருமுறை இருமுறை பலமுறை. 4 டிகிரி குளிரிலும் வியர்த்ததுதான் மிச்சம். வண்டி கிளம்பவில்லை.
தனக்குப் பின்னால் இருக்கும் ஜன்னலில் இருந்து யூனூஸ் அஹ்மது தன்னை வேவு பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது ராமநாதனுக்கு தெரியும். ராஜநாயகம் பங்களாதேஷில் இருந்து எப்படி ஒரு கறார் கந்தசாமியைப் பிடித்தான்? நேற்று இரவெல்லாம் ‘ஆம்வே டிஸ்டிபியூட்டரிடம்‘ வரும் மாதம் என்ன சரக்கு தேவை என்பதை மனைவியுடன் அமர்ந்து முடித்து இப்போது ‘இண்டெண்ட் ‘ ஒவ்வொரு ஐட்டத்துக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறது. நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசும் பெண்ணை இந்த யூனூஸ் விட்டுவிடுவான். அவள் இன்று நூறு கஸ்டமரிடம் பேசினேன், பத்து தேறும் என்று சொல்லி விட்டு ஐந்து மணிக்குக் கிளம்பி விடுவாள். (கஸ்டமர் பெயரில் அவளுக்குத் தனியறை, ஏசி!). யூனுஸ் தங்குவதே குடொனில்தான். திடீரென ஆபீஸில் தென்படுவான். முதலில் வேவு பார்த்துவிட்டுப் பின் அருகில் வந்து பேசுவான். பங்களாதேஷில் இருந்து எடுபிடி மட்டுமே வருவார்கள் முன்னெல்லாம். கையடக்க டைரியை வைத்து இவன் என்ன வித்தை காட்டுகிறான்? அதில் கிட்டத்தட்ட விற்ற சரக்கு, வர வேண்டிய சரக்கு எல்லாக் கணக்கும் உத்தேசமாக இருக்கும். கம்ப்யூட்டரில் தான் போடுவதோடு அது சரியாக வரவில்லை என்றால் தோண்டித் துருவி விடுவான். அவன் கணக்கு எப்படித்தான் சரியாக இருக்கிறதோ.
மைலாப்பூரில் ராயர் உணவகத்தின் ருசி தெரிந்தவர்கள் குறைவே. மெய்யப்பன் தோசையை அனுபவித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கச்சேரி ரோடின் வாகன இறைச்சலோ இல்லை வாயை விஞ்சி அசை போட்ட அவரது மனமோ இல்லை இரண்டுமோ எதிரில் ஒருவர் வந்து அமர்ந்ததை அவர் கவனிக்கவே இல்லை.
”மெய்யப்பா.. நான் வந்து அஞ்சு நிமிஷமாச்சு,” என்றார் நீள மூக்கு, புட்டிக் கண்ணாடிக்குப் பின் குழி விழுந்த கண்கள். ராமச்சந்திரனேதான்.
”ஹலோ சார்,”என்று இடது கையை நீட்டினார் மெய்யப்பன். ”நான் உனக்கு சீனியர். உன் ரிடையர்மெண்ட் பார்ட்டிக்கு வரலேனு கோவிச்சாலும் பழசையெல்லாம் மறக்காதே.”
”என்ன சார் நீங்க? ஒரே வெகிகிள் சத்தம் அதான். என்ன சாப்பிடறீங்க?”
”எனக்குப் பொண்டாட்டி சமையலிலேருந்து ஏதுப்பா விடுதலை? ஒரு காபி மட்டும் சொல்லு. உன் நம்பரை விட்டுட்டேன். இந்தப் பக்கம் போறப்பவெல்லாம் ராயர் ஹோட்டல்லே எட்டிப் பாப்பேன். உன் கிட்டே ஒண்ணு கேக்கணும் மெய்யப்பா. ”
”சொல்லுங்க சார். அடியேன் என்ன செய்யணும்? ”
”மின்னே ஒரு தடவை ராஜநாயகம்னு ஒரு பையன் கிட்டே அஞ்சு லட்சம் கொடுத்தேன்னியே. வட்டி தர்றானா? ஏதோ பர்மா முஸ்லீம் ஒத்தனை வெச்சி அவன் ஆம்வேலே சாதிக்காறான்னியே? ”
ஒரு நிமிடம் என்று கையைக் காட்டியவர் எழுந்து சென்று கையைக் கழுவி விட்டு வந்தார். ”ராஜ நாயகம் எனக்கு ஆம்வே பிராடக்ட்ஸ் சேல்ஸ்மேனாத்தான் அறிமுகம் ஆனான். இன்ஃபாக்ட் அவனுக்கு ஆம்வே சைடு பிஸினஸ். இன்னிக்கிக் கூட அவன் பெரிய ஒரு கன்சல்டன்சில சீனியர் கன்சல்டண்ட். அப்போ அவன் இவ்ளோ பெரிய ஏஜென்சி எடுக்கிற நிலமைலே இல்லே. என்னை ரெகுலரா மீட் பண்றதாலே என் ரிடையர்மெண்ட் பத்தி அவனுக்குத் தெரியும். ஒரு சின்னத் தொகை போடுங்க. நான் 12% தரேன்னான். அவன் மேல ஏனோ ஒரு நம்பிக்கை. முதல் வருடம் 12% வட்டி தந்தவன் அடுத்தவருடம் அதனுடன் 5% டிவிடெண்ட் வேற கொடுத்தான்“
”முஸ்லீம் முக்கியமான ஆளான கம்பெனின்னா எப்டி சரியா வரும்னுதான் யோசிக்கிறேன். எனக்கும் இன்வெஸ்ட் பண்ற ஐடியா இருக்கு. ”
”டீடெய்லா சொல்றேன் சார். ராஜ் அவனை ஒரு ஹோம் அப்ளையன்சஸ் எக்ஸிபிஷன்லேதான் முதலிலே பாத்திருக்கான். அரைகுறைத் தமிழ்லே அவன் விற்பனைக்குக் காட்டிய ஆர்வம் இவனை இம்ப்ரெஸ் பண்ண, என் கிட்டே வேலைக்கி வரியானு கேட்டப்போ, தான் பர்மாக்காரன்னும் எப்டியாவது பங்களாதேஷ்லே செட்டில் ஆகணும்னும் சொல்லி இப்போதைக்கு இங்க போலீஸ் பிடிக்காதபடி ஒரு ஐடி கிடைக்குமானு கேட்டிருக்கான். அவன் குடும்பத்திலே பாக்கி பேர் எல்லாரையும் பர்மா கலவரம் காவு வாங்கிடுச்சி. ராஜ் அவனுக்கு பங்களாதேஷ்ல ஒரு கம்பெனியில வேலை செய்ற ஐடி வாங்கித் தந்திருக்கான். அந்த உதவியிலே நெகிழ்ந்த யூனுஸ் இவங்கிட்டேயே வேல செய்றான். நா ஒரு முறை ஆம்வே பிராடக்ஸ் விக்கற அந்த ஆபீஸ்ல போய் பாத்தேன் சார். அவன்கிட்டே பொழைக்கணும் நிலைநிக்கணும்ற வைராக்கியம் தெரியுது. ராஜநாயகம் ஆளுங்களை எடை போடறதிலே கெட்டி சார்”
”சரி. நான் முதல்லே ஒன் லாக் இன்வெஸ்ட் பண்ணிப் பாக்கறேன், ” என்றார் சீனியர்.
சிட்னியில் தன் அலுவலகத்தில் ஸ்மித் வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். இந்தியாவுக்குப் போய் வந்ததும் இடுப்பில் மாட்டிக் கொள்ளும் ஒரு ‘பெல்ட் நடுவே பை‘ அவன் பயணங்களில் துணையாகி இருந்தது. அதற்குள் தனது கைபேசி, கார் சாவி மற்றும் பர்ஸ்ஸைத் திணித்து ஜிப்பை மூடினான். முதல் டேட்டிங்கில் சில்வியாவுக்கு அது மிகவும் வியப்பளித்தது. அதை அவன் மீது மாட்டிப் பார்த்து, கையில் எடுத்துப் பார்த்துக் குதூகலித்தாள்.
காரில் அமர்ந்ததும் பின்புலம், வரைபடம் காட்டும் திரையில் ‘ஷர்மாவின் மின்னஞ்சல்‘ என்று ஒளிர்ந்தது. அதன் மீது அழுத்தினான். ‘அன்பு ஸ்மித். உங்கள் விருப்பப்படி நான் ராஜநாயகத்துடன் தொடர்பு வைக்கிறேன். நான் அவர் நிறுவனத் தலைமையிடமும் பேசி விட்டேன். அவர்கள் முதலிலேயே முழுத் திட்டத்தையும் சமர்ப்பித்து விட மாட்டார்கள். ராஜநாயகம்தான் இந்த பிராஜக்ட் லீடர்.. நல்ல வியாபார மூளை. பயன்படுவார். ”ஹார்லி டேவிட்சன் பற்றி நீங்கள் கவலைப்பட்டபடி எதுவுமில்லை. ஸ்பார்க் பிளக்கை டார்ஜிலிங் மெக்கானிக் சுத்தப்படுத்திப்போட்டான். வேறு எதுவும் செய்து விடவில்லை. அவனுக்கு வண்டி பற்றி நல்ல அறிவு இருந்திருக்கிறது–ஷர்மா”
”தம்பி,ராஜநாயகம்.. கட்சி ஆபிஸ்லேருந்து பேசறேன்பா.. இன்னும் ஒரு மணி நேரத்திலே தலைவரு இங்கே வந்துடுவாரு. நீங்க எங்கே இருக்கீங்க? ”
“ஸார், கிளம்பிட்டேன். அரை மணியிலே அங்கே இருப்பேன்.“
“சமூக ஊடகம் பத்தி எங்க யாருக்குமே அதிகம் தெரியாது. மெய்யப்பன் அவரோட குடும்ப நண்பரு. அதான் தலைவரு ஓகே பண்ணிட்டாரு.“
“சார், நான் முறையா கிட்டத்தட்ட ஐநூறு பேரு கிட்டே என் ஸ்டாஃபை வெச்சிப் பேசி, சம்மதிக்க வெச்சிருக்கேன்.எலெக்சன் முடியற வரைக்கும் வீக்லி பேமெண்டுக்கு அவங்க தங்களோட வாட்ஸ் அப் குரூப்புகளுக்கு அனுப்பிச்சு அதன் ப்ரூப்ஃபை என் ஸ்டாஃப் கிட்டே காட்டுவாங்க. அனேகமும் வயசிலே பெரியவங்க. அந்தஸ்து உள்ளவங்க. பேஸ்புக்ல விவாதம் மாதிரி செய்யவும் யூத் ரெடி.“
“ரொம்ப நல்லது தம்பி. தலைவருக்கிட்டயும் இதே மாதிரி விலாவாரியா சொல்லிடுங்க. அவரே உங்களுக்கு அட்வான்ஸை கேஷா தர விரும்புறாரு.”
“அதுக்கென்ன சார்? வாய்ப்புக்கு நான்தான் நன்றி சொல்லணும்.“
பேசி முடித்ததும் தலைவருக்கென தான் வாங்கிய பொன்னாடையை முதுகுப் பையில் தேடினான். இல்லை. காரை ஓரங்கட்டி கார் டிக்கியில் தேடினான். முக்கியமானது. எங்கே வைத்திருப்பேன்? யூசுப்பை தொலைபேசியில் அழைத்தான்.
One comment