சிறுகதை

அமேஸான் காடுகளிலிருந்து- 6: ஆவி சூழ் உலகம்

மித்யா 

அத்தியாயம் 6 – ஆவி சூழ் உலகு

“உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லப்போகிறேன்” என்று ஆரம்பித்தான் அந்த இந்தியன். நடுநிசி நேரம். வானத்தில் பல ஆயிரம் நட்சத்திரங்கள். மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. பூச்சிகளின் இடைவிடாத ஒலி. காட்டுக்குள்ளிருந்து மிருகங்களின் ஊளை. மேலே எழும்பும் அக்னி ஜ்வாலைகள் இருட்டுடன் போராடிக் கொண்டிருந்தன.

அந்த இந்தியன் நெருப்பின் முன் உட்கார்ந்து தீப்பிழம்பின் ஒளியில் மிளிரும் கிறிஸ்டோவையும் ஆலிஸ்சையும் பார்த்தான். அவர்கள் இன்னும் சிவப்பாக தெரிந்தனர். அவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.

“ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். இல்லை இல்லை. இன்னும் இருக்கிறார். அவனுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மகள் பிறந்தாள். குழந்தையே இல்லாத ராஜா ராணிக்கு மகள் பிறந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அவர்கள் இந்த வரவை எப்படி கொண்டாடியிருப்பார்கள் என்பதை நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம்.

அந்த மகள் ஒரு அழகான ராஜகுமாரியாக மாறினாள். புற அழகு மட்டுமல்ல. அவள் அகமும் அழகாக இருந்தது. யாருக்கும் தீங்கு நினைக்காத ஓர் இளவரசியாக அவள் இருந்தாள். எல்லோருடனும் ஒரு சாதாரண பிரஜை போல் பழகினாள். முதலில் ராஜாவிற்கும் ராணிக்கும் இது பிடிக்கவில்லை. “என்ன இது. இளவரசி என்றால் சும்மாவா? கை அசைத்தால் ஆட்கள் ஓடி வரவேண்டும். கண் சைகையில் எல்லா வேலையும் முடிய வேண்டும். இவளோ இப்படி எல்லோருடனும் சரிக்கு சமமாக பழகுகிறாளே?” என்று ராணி ராஜாவிடம் வருத்தப்பட்டுக்கொண்டாள். ராஜாவும் இளவரசியின் பழக்க வழக்கங்களை மாற்ற பல ஆசிரியர்களை நியமித்தார். ஆனால் இளவரசியோ ஆசிரியர்களுக்கு தக்க மரியாதை செய்தாலும் அவர்கள் சொல்லிக் கொடுத்த எதையும் கடைபிடிக்கவில்லை. எப்பொழுதும் போல் எல்லோருடனும் ஆடிக் கொண்டிருந்தாள். (more…)

மரணித்தல் – டெப் ஓஃபின் உன்ஃபர்த்

(Gigantic எந்த தளத்தில் Deb Olin Unferth எழுதிய சிறுகதையின் தமிழாக்கம்)

அவன் எழுதினான். தோழி இறந்து கொண்டிருக்கிறாள் என்று சொன்னான். இவை அவளது இறுதி நாட்கள் என்றான், இது எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அவன் நினைத்ததாகச் சொன்னான். நாங்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அவளைப் பார்த்து பல யுகங்கள் ஆகியிருந்தன. ஆனால் எப்போதும் அவளை நாங்கள் நேசித்தோம், அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். அவளுக்கு உடல் நலமில்லை என்று கேள்விப்பட்டிருந்தோம் (சில மாதங்களுக்கு ஒரு முறை அவளது உடல்நலம் குறித்து அவன் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்)- அவள் உடல்நிலை மிகவும் மோசமாகி இருந்தது. நாங்கள் பயணம் செய்யத் திட்டமிட்டோம் அல்லது, அவளைப் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணங்களாவது எங்களுக்கு இருந்தன. அவள் உடல்நலமில்லாமல் இருக்கிறாள் என்பது சென்ற ஆண்டு எங்களுக்கு முதன்முதலாய் தெரிய வந்தபோது காரை நிரப்பிக்கொண்டு அவளைப் பார்ப்பதற்கான நான்கு மணி நேர பயணத்தை மேற்கொள்ள வேண்டியதுதான் என்று நினைத்தோம். பழைய நாட்களைப் போல் அவள் வீட்டின் முன் அறையில் தங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தோம், ஆனால் அதைச் செய்யவில்லை. ஓராண்டு காலம் அதையே சொல்லிக் கொண்டிருந்தோம், “சீக்கிரம் கிளம்புவோம்,”. அவள் உடல்நிலை இன்னும் மோசமானது. அவன் எழுதும்போது, தொலைபேசியில் அழைத்தாவது பேசலாமே என்றான், கொஞ்சம் நட்பாக நாலு வார்த்தைகளை அவளுக்குச் சொல்லலாம். ஆனால் எங்களுக்குப் பேசச் சங்கடமாக இருந்தது, என்ன பேச முடியும் என்று தெரியவில்லை. “புதுப்பித்துக் கொள்ளலாம்”, என்று நினைத்தோம். ஆனால் அவள் உடல்நிலை அவ்வளவு மோசமாக இருப்பதைப் பார்க்கும்போது எங்கள் அன்றாட விவகாரங்கள் மிகவும் அற்பமாகத் தெரிந்தன. ஒரு மின்மடலாவது அனுப்பலாம் என்று நினைத்தோம். புகைப்படம் ஒன்றை இணைக்கலாம், ஆனால் அதையும் செய்யவில்லை. அதன்பின் அவன் எழுதும்போது அவள் விமானத்தில் டெக்சாஸ் செல்லப் போகிறாள் என்றான், அவளது உடலெங்கும் கீமோ நிறைத்து அகற்றப் போகிறார்கள். சோதனை முயற்சியாய் ஒரு அறுவை சிகிச்சை செய்யப் போவது குறித்துச் சொன்னான். நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம், ஓர் இழப்பை உணர்ந்தோம், எனினும் ஒன்றும் செய்யவில்லை. (more…)

இரு குறுங்கதைகள்- லிடியா டேவிஸ்

தலை, இதயம்

இதயம் அழுகிறது.
இதயத்துக்கு உதவ முயற்சி செய்கிறது தலை.
உள்ளதைச் சொல்கிறது தலை, இதயத்திடம் மீண்டும்:
நேசிப்பவர்களை நீ இழக்கவே செய்வாய். அனைவரும் போவார்கள். இந்தப் புவியும்தான் போகும், ஒரு நாள்.
இதயம் ஆசுவாசமடைகிறது, இதன்பின்.
ஆனால் தலையின் சொற்கள் இதயத்தின் செவிகளில் நீண்ட காலம் நீடிப்பதில்லை.
இதற்கெல்லாம் இதயம் ரொம்பப் புதுசு.
அவர்கள் எனக்கு திரும்பவும் வேண்டும், என்கிறது இதயம்.
இதயத்துக்கு இருப்பதெல்லாம் தலைதான்.
உதவி செய், தலையே. இதயத்துக்கு உதவி செய்.

அவளது கடந்த காலத்திலிருந்து வந்தவன்

என் அப்பா அல்லாத ஒருவனுடன் அம்மா சல்லாபித்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன், அவளது கடந்த காலத்திலிருந்து வந்திருக்கிறான் அவன். இந்த “ப்ரான்ஸ்” உடன் அம்மா முறையற்ற உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்லிக் கொள்கிறேன்! “ப்ரான்ஸ்” ஒரு ஐரோப்பியன். அப்பா இல்லாதபோது இவனை அம்மா முறையற்ற வகையில் சந்திக்கக்கூடாது என்று சொல்கிறேன்! ஆனால் நான் பழைய யதார்த்தத்தைப் புதிய யதார்த்தத்துடன் குழப்பிக் கொள்கிறேன்: அப்பா வீடு திரும்ப மாட்டார். அவர் இனி வெர்னான் ஹாலில்தான் இருப்பார். அம்மாவைச் சொல்வதானால், அவள் வயது தொண்ணூற்று-நான்கு. தொண்ணூற்று-நான்கு வயது பெண்ணுக்கு என்ன ஒரு முறையற்ற உறவு இருந்துவிடப் போகிறது? ஆனாலும் என் குழப்பம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்: அவளது உடலுக்கு வயதாகிவிட்டாலும், துரோகம் செய்வதற்கான அவளது ஆற்றல் இன்னும் இளமைத்துடிப்புடன் புதுக் கருக்கு கலையாமல் இருக்கிறது.

நன்றி – Lannon.org 

ஒளிப்பட உதவி – keithcroft.org

அமேஸான் காடுகளிலிருந்து- 5: இந்தியன்

 மித்யா

“ஹலோ மிஸ்டர் கிறிஸ்டோ” என்றாள் அந்த தேவதை.

அவள் வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தாள். திருமணத்திற்கு கிறிஸ்துவர்கள் அணியும் கவுன் போல் இருந்தது. இவ்வளவு பெரிய கவுனை இந்தப் பிரதேசத்தில் அவள் அணிந்திருந்தது அவனுக்கு ஆச்சரியம் அளித்தது. இங்கு எப்பொழுதும் புழுக்கமாக இருக்கும். இவளுக்கு இந்த கவுனை அணிந்தால் வெந்து போகாதா? அவள் ஒரு வெள்ளை தொப்பி அணிந்திருந்தாள். அதன் ஓரம் லேஸ் வைத்து தைக்கப்பட்டிருந்தது. லேசில் உள்ள சின்ன சின்ன ஓட்டை வழியாக சூரிய கிரணங்கள் அவள் முகம் மேல் திட்டு திட்டாக படிந்திருந்தன. தொப்பி அவள் முகத்தை ஓரளவுக்கு மறைக்க, லேஸ் வழியாக விழுந்த வெளிச்சம் அவள் முகத்தின் பிரகாசத்தை அதிகரித்தது. அவள் முகத்தை பார்த்தவுடன் அவள் மேல் கிறிஸ்டோ காதல் கொண்டான்.

“மிஸ்டர் கிறிஸ்டோ” (more…)

அமேஸான் காடுகளிலிருந்து- 4: தேவதை வந்தாள்

 மித்யா

அன்று இரவு கிறிஸ்டோவிற்கு தூக்கம் வரவில்லை. ஜெப்ரியின் கண்கள் இல்லாத சடலம் அவன் கண்களில் அடிக்கடி தோன்றி மறைந்தது. டேவிட் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஜெப்ரிக்கு இந்த கதி என்றால் அவருடைய கதி என்னவோ? அவர் உயிருடன் இல்லை என்பது சர்வ நிச்சயம். ஆனால் அவர் எப்படி மாண்டிருப்பார்? ஜெப்ரி போல் அவரும் துடிதுடித்திருப்பாரா? அவரை எந்த மிருகம் கொன்றிருக்கும்? ஜெப்ரியின் மரணத்துக்கும் எந்த மிருகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். மிருகத்தினால் சாவு வந்தால் ஒரு கை காணாமல் போயிருக்கலாம், அல்லது ஒரு கால் காணாமல் போயிருக்கலாம். ஏன், தலையே காணாமல் போயிருக்கலாம். இப்படி கண் மட்டும் காணாமல் போயிற்றென்றால் அது ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியின் வேலைதான் என்று இந்த குழுத் தலைவன் நேற்றுதான் எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான். சற்று நேரம் முன் எல்லோரும் வானைப் பார்த்து ஏதோ கத்தினார்கள். பல முறை காட்டை வணங்கினார்கள். அதற்கு பிறகு தூங்கச் சென்று விட்டார்கள்.

கிறிஸ்டோவின் குடிசைக்குள் அந்தப் பெண் நுழைந்தாள். கிறிஸ்டோவை தங்களுடைய குழுவில் உள்ள ஒருவனைப் போல் காட்டுவாசிகள் நடத்தினார்கள். தினமும் ஏதோ ஒரு பெண் கிறிஸ்டோவின் குடிசைக்குள் வந்து அவனுடன் படுத்துக் கொள்வாள். முதலில் கிறிஸ்டோவிற்கு இது குழப்பமாக இருந்தது. அவன் ஒரு பெண் மேல் மோகித்திருந்தான். அவளை அவனுக்கு ரொம்ப பிடித்தது. அவள் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால் அந்தப் பெண்ணோ பல ஆண்களுடன் கூடினாள். இதைக் கண்டு கிறிஸ்டோ வெகு கோபமாக இருந்தான். அவள் அவனுடைய குடிசைக்குள் இரவில் வந்தபொழுது தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு அவளைத் தொடாமல் இருந்தான். இப்படி பல முறை நடந்தபின் கிறிஸ்டோ இவர்களுடைய விழுமியங்கள் தன்னுடைய விழுமியங்களுக்கு நேர் எதிராக இருப்பதை உணர்ந்தான்.

லண்டனில் ஒரு பெண் பலருடன் செல்வதுண்டு. ஆனால் ஒருவனுடைய காதலி ஆனபின் அவள் அவனுடன்தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். இங்கு அது போல் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் யாருடனும் கூடி இருக்கலாம். யாரும் யாருக்கும் சொந்தமில்லை. கிறிஸ்டோ முதலில் இதை ஒரு காட்டுமிராண்டி சமூகமாகப் பார்த்தான். ஐரோப்பியா இவர்களுக்கு நாகரிகம் கற்றுக் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறது என்று பல ஐரோப்பியர்கள் போல் அவனும் நினைத்தான். ஆனால் மெதுவாக அவன் கருத்து மாறியது. இந்த குழுவிற்குள் கற்பழிப்பு என்பது யாரும் கேட்டதில்லை. இரு குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டாலும் ஜெயித்தவர்கள் பெண்களை வன்கொடுமைக்கு உட்படுத்துவதில்லை. இந்த குழுக்களின் தலைவன் ஆணாக இருந்தாலும் எல்லோரும் சமமாகதான் கருதப்படுகிறார்கள். கிறிஸ்டோவிற்கு இதையெல்லாம் யோசிக்கும்பொழுது மிகவும் குழப்பமாக இருந்தது. அப்பொழுதுதான் குடிசைக்குள் வந்த பெண் அவனை முத்தமிட்டாள்.

கூடல் முடிந்தபின் அவள் ஆழ்ந்த உறக்கத்தில். கிறிஸ்டோ ஆழ்ந்த சிந்தனையில். ஜெப்ரி போன்ற மாவீரர்களை தின்று துப்பிய காடு என்னை ஏன் ஒன்றும் செய்யவில்லை? அப்படி எனக்குள் என்ன இருக்கிறது? இவர்கள் நம்புவது போல் நான் ஒரு தெய்வப் பிறவியா? அப்படியானால் அதை என்னால் ஏன் உணர முடியவில்லை? நான் இவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேனா? தன்னுள் எழுந்து கொண்டிருந்த பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் குடிசையை விட்டு வெளியே வந்தான் கிறிஸ்டோ.

தரை ஈரமாக இருந்தது. மழை பேய்ந்து ஓய்ந்திருந்து. இங்கே எப்பொழுது மழை பெய்யும் என்றே சொல்ல முடியாது. இங்கு எப்பொழுதும் ஒரே போன்ற சீதோஷ்ண நிலைதான். இரவில் குளிர்ச்சி இல்லை. காற்றில் மிதமான வெப்பம் கலந்திருந்தது. மழை விட்டபின் வானம் சுத்தம் செய்யப்பட்டது போல் இருந்தது. பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன.

கிறிஸ்டோ தன் கால்கள் தானாக காட்டை நோக்கிச் செல்வதை உணர்ந்தான். தனக்கு தன் சொந்த கால்களின் மேல் எந்த அதிகாரமும் இல்லை என்பதை உணர்ந்தான். அவனை பயம் கவ்விக் கொண்டது. அவனுக்கு மறுபடியும் குடிசைக்குள் சென்றுவிடவேண்டும் என்று இருந்தது. ஆனால் அவன் கால்களோ அவனை காட்டுக்குள் அழைத்து சென்றன.

காட்டுக்குள் நுழைந்த கிறிஸ்டோவிற்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. இரவு நேரத்தில் காடு இருட்டாக இருக்கும் என்றும், தன்னால் அந்த இருளில் ஒன்று பார்க்கமுடியாது என்றும் கிறிஸ்டோ எண்ணியிருந்தான். வானில் நிலவொளியும் இல்லை. ஆனால் காட்டுக்குள் அவனுக்கு எல்லாம் தெள்ளத் தெளிவாக தெரிந்தன. எல்லா பக்கமும் மரங்களும், மரத்தில் பொந்துகளும், பொந்துக்குள் குடியிருக்கும் ஆந்தைகளும், மரத்தின் கிளை மேல் படுத்திருக்கும் சிறுத்தையும், ஊர்ந்து செல்லும் பாம்பும் அவனுக்கு தெரிந்தன. ஆனால் காட்டை யாரோ ஒரு சன்ன பச்சை நிற போர்வையால் போர்த்துவிட்டதுபோல் இருந்தது. எங்கும் எதிலும் பச்சை நிறம் குடிகொண்டிருந்தது.

இவற்றையெல்லாம் ஆச்சரியமாக பார்த்தக்கொண்டே நடந்தான் கிறிஸ்டோ, எவ்வளவு நேரம் நடந்தான் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவன் ஒரு நதிக்கரையை அடைந்திருந்தான். கால்கள் வலித்தன. ஓடும் நதியிலிருந்து தண்ணீரை கைகளால் மொண்டு குடித்தான். மிகவும் சோர்வாக இருந்தவன் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தான். அந்த இடத்தின் அமைதியை ரசித்துக்கொண்டு கண்களை மூடினான். மூடியவுடன் அவனுக்கு உறக்கம் வந்தது. அப்படியே தூங்கிவிட்டான். காட்டின் அந்தப் பகுதியில் ஒலிகள் எதுவும் இல்லாததால்தான் அமைதி குடிக்கொண்டிருந்தது என்பதை அவன் கவனிக்கவில்லை. அவனுக்கு பத்தடி தூரத்தில் ஒரு ரைஃபில் இருந்ததையும் அவன் கவனிக்கவில்லை. அதன் அருகில் துண்டிக்கப்பட்டு கிடந்த காதும் அவன் பார்க்கவில்லை.

காலையில் சூரிய வெப்பம் முகத்தில் அடித்து அவனை எழுப்பியது. கண்ணைத் திறந்து பார்த்தான். அவனுக்கு முன் வெள்ளை நிற உடையில் ஒரு தேவதை நின்று கொண்டிருந்தாள்.