பேட்டி

“என்ன எழுதுகிறேன் என்பது எழுதி முடித்த பின்தான் தெரிகிறது” – டெபோரா ஐஸன்பெர்க் பேட்டி

பாரிஸ் ரிவ்யூ தளத்தில் டெபோரா ஐசன்பெர்க் அளித்த நேர்முகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு பகுதி:

நான் எதையும் நினைத்துக் கொண்டு எழுதத் துவங்குவதில்லை.

கதை பண்ண முடியும் என்பதால்தான் தனக்கு கதை எழுதப் பிடித்திருக்கிறது என்று கோல்சன் வைட்ஹெட் ஒருமுறை சொல்லக் கேட்டேன். எனக்கு கதை பண்ணுவது அறவே பிடிக்கவில்லை என்று அப்போது நினைத்துக் கொண்டேன்.

அல்லது, எனக்கும் கதை பண்ண பிடித்திருக்கலாம், ஆனால் இல்லாத ஒன்றைக் கதை பண்ணுவதாக ஒரு உணர்வு வருகிறதே அந்த உணர்வை நான் வெறுக்கிறேன் என்பதுதான் உண்மையாக இருக்கலாம். நான் எழுதுவது நினைவின் நிலையை அடையும்வரை அது எவ்வகையிலும் முடிவடைந்த உணர்வு எனக்கு கிடைப்பதில்லை.

என்னிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு முழுமை இப்போது வெளிப்படுகிறது என்ற உணர்வு வர வேண்டும், அப்போதுதான் அது எனக்கு கதையாகிறது. எல்லாமே ஒரே சமயத்தில் வேலை செய்தால்தான் உண்டு. (more…)

“நாவலில் காலம் ஒரு பாத்திரம்” – லோரி மோர் நேர்முகத்தின் சில பகுதிகள்

Anagrams, Who Will Run the Frog Hospital?, A Gate at the Stairs என்று மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார் லோரி மோர். இவரது சிறுகதைகள் Self Help, Like Life, Birds of America, Bark என்று நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டிருகின்றன. இவை தவிர புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி பற்றி ந்யூ யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸில் இவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். தற்போது நாஷ்வில்லில் உள்ள வான்டர்பில்ட் யுனிவர்ஸிட்டியில் புனைவெழுத்துக் கலை கற்பிக்கிறார்.

யுவர் ஹிட்டன் செல்ஃப் என்ற தளத்தில் பதிப்பிக்கப்பட்ட நேர்முகத்தின் சில பகுதிகள் இங்கு தமிழாக்கம் செய்து அளிக்கப்படுகின்றன. நேர்முகம் கண்டவர் – டீர்ட்ரி

நீங்கள் இந்தக் கதைகளை எழுதுவதற்கான உந்துதல் என்ன?

எனக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. உண்மையில் இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வந்தன. நபகோவ் கதையைப் பொருத்தவரை, மீண்டும் “Signs and Symbols” வாசித்தேன். ஆசிரியையாக ஒவ்வொரு மறுவருடமும் நான் அதைப் படித்துக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது. இப்போது திடீரென்று நான் அதில் வெவ்வேறு பல விஷயங்களை கவனித்தேன். அதைத் தொடர்ந்து என் மனதில் ஒரு கதை நிழலாடத் துவங்கிற்று. ரே கார்வார் கதைக்கு நாதன் இங்க்லாண்டர் இதைச் செய்தது எனக்கு உந்துதல் அளித்திருக்கலாம். கார்வர் கதைக்கு நெருக்கமான நிழலாக இல்லாத ஒரு கதையை அவர் எழுதினார். நான் எந்தக் கதையைச் சொல்கிறேன் என்று தெரிகிறதா? (more…)

கதைகளை எடிட் செய்தல் – ஆலிஸ் மன்ரோ

ஆங்கில மொழியில் எழுதுபவர்களில் மிகத் துல்லியமாக எழுதுபவராக இருக்கக்கூடிய ஆலிஸ் மன்ரோ எழுதுவதையும் யாராவது எடிட் செய்ய முடியுமா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நார்மன் மெய்லர் அல்லது சல்மான் ருஷ்டி முதலானவர்கள் நிறைய எழுதுபவர்கள். அவர்களைப் போல் ஒரு வாக்கியத்தையடுத்து இன்னொரு வாக்கியம் என்று எழுதிக் கொண்டே செல்பவர் அல்ல ஆலிஸ் மன்ரோ – எந்தச் சொற்கள் தேவையில்லை என்று தேர்ந்தெடுப்பவர் அவர், தான் எழுதியதை இன்னும் நறுக்கு தெறித்தாற்போல் கத்தரிப்பதை வழக்கமாகக் கொண்டவர்.

ஆனால்கூட மன்ரோவுக்கு ஒன்றல்ல, மூன்று பதிப்பாசிரியர்கள் இருக்கின்றனர். மூவரும் அவரது ஆக்கங்கள் உருவாவதில் கைகொடுத்து உதவுகின்றனர்: ந்யூ யார்க்கரில் Deborah Treisman இருக்கிறார், அங்குதான் மன்ரோவின் கதைகளில் பலவும் பதிப்பிக்கப்படுகின்றன; McClelland & Stewartஐச் சேர்ந்த Douglas Gibson, Who Do You Think You Are?, என்ற 1978ஆம் ஆண்டு தொகுப்புக்குப்பின் அவரது கனடிய பதிப்பாசிரியராக இருக்கிறார், மன்ரோவின் நீண்ட கால அமெரிக்க பதிப்பாளர் Knopfல் Anne Close இருக்கிறார். (more…)

பதிப்பாசிரியப் பணி – ராபர்ட் காட்லீப்

(சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த மொழியாக்கத்தின் ஒரு பகுதி இது. பேட்டியை முழுமையாக இங்கே வாசிக்கலாம்)

ராபர்ட் காட்லீபுக்கு அறிமுகமே தேவையில்லை- அவர் படித்து, எழுத்தாளர்களோடு கலந்தாலோசித்து ஒரு எடிட்டராகத் திருத்திப் பதிப்பித்த புத்தகங்கள் எந்தவொரு தரமான நூலகத்தின் புத்தக அடுக்குகளையும் நிறைக்கும். வெவ்வேறு காலகட்டங்களில் சைமன் அண்ட் ஷஸ்டர் மற்றும் க்னாஃப் போன்ற பதிப்பகங்களில் எடிட்டராகவும் தலைமை எடிட்டராகவும் பணியாற்றியுள்ளார் ஜான் லென்னன், பால் சைமன், பாப் டிலன் போன்ற பண்பாட்டு ஆதர்ச ஆளுமைகள் முதல் சல்மான் ரஷ்டி, வி எஸ் நைபால், ரே ப்ராட்பரி என்று இலக்கிய சாதனையாளர்களின் பெயர்களோடு நீளும் இவரது பட்டியலில் ப்ரூனோ பெத்தேல்ஹீம், பி எப் ஸ்கின்னர் போன்ற அறிவியலாளர்களும் உண்டு. சலொன் என்ற ஆங்கில இதழில் வெளிவந்த இவரது பேட்டியின் தமிழாக்கம் சொல்வனம் இணைய இதழில் பதிப்பிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி இது:

ஒரு எடிட்டராக உங்கள் அனுபவத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட- எழுத்தாளராக மட்டுமே இருந்த ஒருவர் அறிந்து கொள்ள முடியாத-, விஷயங்கள் உண்டா?

நான் எதையும் இப்படிச் செய்ய வேண்டும் என்று நினைத்து துவங்குவதில்லை. எல்லா எடிட்டர்களையும் போல நானும் எதிர்வினை ஆற்றுபவன்தான் என்று நினைக்கிறேன்.

பொதுவாக எழுத்தாளர்களிடம் உனக்குள்ளிருக்கும் எடிட்டரை முடக்கிவிட்டு உன் எழுத்து தன்னால் வர வழி விடு என்று சொல்வதுண்டு. உனக்குள்ளிருக்கும் எடிட்டர் உன் படைப்பூக்கத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்பதே இந்த பொதுவான அறிவுரையின் அடிப்படை.

எனக்கு ‘படைக்க’ வேண்டும் என்ற ஆசை கிடையாது. நான் என்ன செய்கிறேனோ அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, நான் செய்வது ஒரு சேவகப் பணி. “முடித்துக் கொடுத்தான்” என்று என் கல்லறையில் எழுதப்பட வேண்டும் என்றுதான் நான் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்- ஆனால் அப்புறம் இப்படியும் நினைத்துப் பார்க்கிறேன், ஒரு நிமிடம் நில்: நீ அடால்ப் ஐஷ்மன் குறித்தும் இதையே சொல்ல முடியும். இருந்தாலும்கூட என் இயல்பு, என் மனப்பாங்கு, முடித்துக் கொடு, (செய்து முடி) ஒரு கட்டுரை எழுதிக் கொடுப்பதானாலும் சரி, பாத்திரங்களைத் தேய்த்துத் தருவதானாலும் சரி: செய்து விடு. எதையோ யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருக்காதே.

மறுபக்கம் பார்த்தால், நான் எதையோ யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கவும் செய்கிறேன். எழுத வேண்டும் என்று வரும்போது கணினிக்கருகில் செல்வது எனக்கு எளிதாக இல்லை. நாளெல்லாம் அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். வழக்கமாக, இரவு பதினோரு மணியளவில், என்னை அங்கே இழுத்துக் கொண்டு போகிறேன். “சரி, எதையாவது தட்டச்சு செய்தாக வேண்டும்,” என்று சொல்லிக் கொள்கிறேன். அப்புறம் எழுதத் துவங்கிய பிறகு, எல்லாம் சரியாகி விடுகிறது. எழுதுவது பிரச்சினை இல்லை, என்னை எழுத வைப்பதுதான் பிரச்சினை. எழுதி முடித்தவுடன், எழுதியதைத் திரும்பத் திரும்ப திருத்தத் துவங்கி விடுகிறேன்!

நான் இந்த மாதிரியெல்லாம் இல்லாத எழுத்தாளர்களுடன் பழகியிருக்கிறேன், அவர்களை கவனித்திருக்கிறேன். அவர்கள் தன்னிச்சையாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள். உட்கார்ந்தால் தட்டச்சு செய்யத் துவங்கி விடுகிறார்கள். எனக்கு அந்த மாதிரி மூன்று பேரைத் தெரியும், அவர்களில் இருவருடன் நான் நெருக்கமாக இருந்திருக்கிறேன்: டோரிஸ் லெஸ்ஸிங், அந்தோணி பர்கஸ், அப்டைக். இவர்களின் எண்ணத்துக்கும் செயலுக்கும் இடையில் எந்த நிழலும் விழவில்லை என்பதை உங்களால் உணர முடியும். அவர்கள் எழுதாதபோது உயிர்ப்பில்லாமல் இருப்பார்கள். அப்டைக் கோல்ஃப் விளையாடும்போது உற்சாகமாக இருந்தார் என்று நினைக்கிறேன். ஆனால் டோரிஸ்- நாற்பத்தைந்து ஆண்டுகள் போல் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறேன்–, என்றாவது எழுதவில்லையென்றால் அந்த நாளை தான் வாழ்ந்திருக்கவில்லை என்பது போலிருக்கும் என்று மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். நாமெல்லாம் சுவாசிப்பவர்கள் என்பது போல் இந்த மூன்று பேரும் எழுதுபவர்கள். நான் அப்படியல்ல. எனக்கு படிப்பதுதான் சுவாசிப்பது போன்றது.

மாக்ஸ்வெல் பெர்க்கின்ஸ் மற்றும் மார்ஜரி கின்னன் ராலிங்ஸ் பற்றிய கட்டுரையில் நீங்கள் நுண்தகவல்களில்தான் எடிட்டிங் இருக்கிறது என்று எழுதுகிறீர்கள்.

ஆமாம், ஆனால் அது பருந்துப் பார்வையிலும் இருக்கிறது. இரண்டும்தான். உங்களால் ஒரு புத்தகத்தை முழுதாகப் பார்க்க இயல வேண்டும், அதன்பின் நீங்கள் நெருங்கிச் சென்று உற்று நோக்கியாக வேண்டும்.

நான் ந்யூ யார்க்கரில் இருந்தபோது ஏராளமான கட்டுரைகளை எடிட் செய்திருக்கிறேன், ஆனால் நான் என்னை ஒரு எடிட்டராக நினைத்துப் பார்க்கிறேன் என்றால், அது புத்தகங்களின் எடிட்டராகத்தான். உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் எந்தக் குறையுமற்ற கைப்பிரதி உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் எதையும் செய்ய வேண்டாம், “நன்றாக இருக்கிறது. அற்புதம்!” என்று சொல்லிவிட்டு அதை அடுத்த கட்டத்துக்கு அனுப்பி வைத்தால் போதும். சில சமயம் பிரச்சினைகள் புறப்பகுதியில் இருக்கும், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், எந்த இடத்தில் நடை பிசகுகிறது, எங்கு முரண்பாடு அல்லது சொன்னதே திரும்ப வருகிறது என்றெல்லாம் சொல்ல வேண்டும்- இதெல்லாம் மேற்பரப்பில் உள்ள விஷயங்கள். ஆனால் சில சமயம் வடிவ அமைப்பில் பிரச்சினைகள் வரும், எழுதப்பட்ட வடிவில் புத்தகம் அர்த்தமில்லாமல் இருக்கும். அப்போது நாம் எழுத்தாளருடன் அமர்ந்து அனைத்தையும் கூட்டி எப்படி ஒருமித்த பொருள் தருவது என்று யோசித்தாக வேண்டும். மற்ற சமயங்களில், என்ன சொல்வது, புத்தகமே இருக்காது. அது ஒரு பிரச்சினைதான். காரணம், இதைச் சொல்வது எனக்கு ரொம்பப் பிடிக்கும்- இருப்பதை உன்னால் வெளியே எடுக்க முடியும், ஆனால் இல்லாததை உள்ளே சேர்க்க முடியாது.

சில சமயங்களில் மிகையான விஷயங்கள் இருக்கும். அப்போது எங்கே அதிகமாக இருக்கிறது என்றும் ஏன் அது மிகையாக இருக்கிறது என்றும் எழுத்தாளரிடம் சொல்லி அவரை ஏற்றுக்கொள்ள வைப்பது உங்கள் வேலையாகிறது- அது ஏற்றக்குறைச்சலாக இருந்தாலும் இருக்கலாம். பெரும்பாலும் அது துவக்கம் மற்றும் முடிவு தொடர்பான கேள்வியாக இருக்கும். சிலசமயம் ஒரு புத்தகம் நெருடலாகத் துவங்கலாம். எழுதியவர் இன்னும் வேகம் பிடிக்கவில்லை, அதனால் அது தட்டையாக எழுதப்பட்டிருக்கலாம். இப்போது நீங்கள், “முதல் இரண்டு பத்திகளைக் கழித்துக் கட்டிவிடு, நன்றாக வரும்” என்று சொல்ல வேண்டியிருக்கும்.

சில சமயம் காத்திரமான முடிவெடுக்க வேண்டியிருக்கும். சைம் போடோக்கின் “தேர்ந்தெடுக்கப்பட்டவன்” (The Chosen) என்ற நாவல் பெருமளவில் விற்பனையானது. இன்றும் அது பலராலும் நேசிக்கப்படும் புத்தகமாக இருக்கிறது. அதன் கைப்பிரதி என்னிடம் தரப்பட்டபோது, நான் அதை மிக உற்சாகமாகப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அதை விருப்பமில்லாமல் படித்தேன். அதன்பின் கையால் எழுதப்பட்ட இன்னொரு முன்னூறு பக்கங்களைப் படித்துவிட்டு அவரது ஏஜெண்டை அழைத்தேன். “இது எனக்கு முழுக்க முழுக்க பிடித்திருக்கிறது, ஆனால் இதை இப்போது இருக்கிறபடியே பதிப்பிக்க முடியாது. இதை நான் எடிட் பண்ணி பதிப்பிக்கத் தயாராக இருக்கிறேன் என்று இதை எழுதியவரிடம் சொல்ல முடியுமா? ஆனால் இந்தப் புத்தகம் இந்த இடத்தில் முடிந்து விட்ட பின்னாலும்கூட அதைத் தொடர்ந்து இரண்டாவது புத்தகத்தையும் எழுதியிருக்கிறார் என்பதை அவர் புரிந்து கொண்டாக வேண்டும். இரண்டையும் ஒன்றாகச் சேர்க்க முடியாது,” என்று நான் சொன்னேன். நல்ல வேளை, சைம் இதை ஏற்றுக் கொண்டார்.

எவ்வளவு தூரம் எடிட் செய்ய வேண்டும் என்பது குறித்து ஏதாவது வரைமுறைகள் வைத்திருக்கிறீர்களா?

எழுத்தாளரின் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து உங்களுக்கு ஒத்திசைவு இருக்க வேண்டும். எழுத்தாளர்களுக்கு எப்போதும் தங்கள் நோக்கம் தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லை. எடிட்டிங் குறித்த உரைகள் மற்றும் எடிட்டர்களுடனான உரையாடல்களில் நூற்றுக்கணக்கானவர்களிடம் சொல்லியிருக்கிறேன்: எப்போதாவதுதான் நான் முன் சொன்ன உதாரணம் மாதிரி முற்றிலும் எதையாவது மாற்ற வேண்டியிருக்கும். மற்றபடி, எழுத்தாளர் என்ன செய்கிறாரோ அதை இணக்கமாக அணுகி அது எப்படி இருக்கிறதோ அதை இன்னும் சிறந்ததாக அவர் படைக்க நீங்கள் உதவ வேண்டும். அதை வேறொன்றாக மாற்றுவது உங்கள் வேலையல்ல. ஏனென்றால் அப்படிச் செய்தால் அது துயரில்தான் முடியும்.

நீங்கள் இப்படிப்பட்ட தவற்றைச் செய்திருக்கிறீர்களா?

நான் இந்தப் பாடத்தை ஓரிரு முறை கற்றிருக்கிறேன். இத்தனைக்கும் அதைச் செய்யும்போதே நான் தவறு செய்கிறேன் என்பதை உணர்ந்திருந்தேன். அதெல்லாம் சரிவராது. ஒரு எழுத்தாளரின் நோக்கத்துக்கு இணக்கமாக நீ இருந்தால், அவர் ஹிஸ்டெரிக்காகவோ பாரனாய்டாகவோ அல்லாது பைத்தியமாகவோ இருந்தாலொழிய, எழுத்தாளர் உன் ஒத்திசைவைத் தன் உள்ளுணர்வால் உணர்வார். அவர் நீ சொல்வதைக் கேட்கத் தயாராகவே இருப்பார். நீ சொல்லும் குறிப்பிட்ட அந்த மாற்றத்தை அவர் செய்யாதிருக்கலாம், ஆனால் நீ கைப்பிரதி எங்கு போக வேண்டும் என்று நினைக்கிறாயோ அந்த இடத்துக்கு அதைக் கொண்டு செல்லக்கூடிய மாற்றத்தை அவர் செய்தாலும் செய்யக்கூடும். எப்படி எடிட் செய்வது என்பதை யாருக்கும் கற்றுத் தர முடியாது. அது பயனற்ற வேலை. நான் இப்போது எவ்வளவு நல்ல எடிட்டராக இருக்கிறேனோ அவ்வளவு நல்ல எடிட்டராக என் முதல் நாளன்றே இருந்தேன் என்று நினைக்கிறேன். ஒருவேளை, இன்னும் நல்ல எடிட்டராகக்கூட இருந்திருக்கலாம், அப்போது எனக்கு இன்னும் அதிக சக்தி இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக எனக்கு இப்போது உள்ள அளவு சாதுர்யம் இருந்திருக்கவில்லை. அதை நான் கற்க வேண்டியிருந்தது.

ஒரு எடிட்டருக்கும் எழுத்தாளருக்கும் இடையிலான விவாதங்கள் பொதுவில் பேசப்படக்கூடாதவை என்று நீங்கள் சொல்வீர்களா?

ஆமாம். சில எழுத்தாளர்கள் இதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. உதாரணத்துக்கு “Catch 22″க்கு மிகையான அளவில் ஜோ ஹெல்லர் என்னைப் பெருமைப்படுத்தாமலிருக்க நான் அவரைத் தடுக்க வேண்டியிருந்தது. டோனி மாரிசன், ந்யூ யார்க்கர் பற்றி ஒரு கட்டுரை எழுதியபோது ஹில்டன் அல்ஸ் என்னிடம், நான் டோனியுடன் செய்த எடிட்டோரியல் வேலை பற்றியும் அது அவரது புத்தகங்களில் எத்தகைய பாதிப்பு ஏற்படுத்தியது என்பது பற்றியும் பேச விரும்பினார். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அதன்பின் அவர், “இந்தத் தகவல்களை உங்களைப் அழைத்து பெற்றுக் கொள்ளச் சொல்லி அவர்தான் கேட்டுக் கொண்டார்,” என்று சொன்னார். நான் எங்கள் எடிட்டோரியல் விவாதங்கள் குறித்த ஆவணங்களை சேமித்து வைத்திருக்கவில்லை. அதனால் நான் டோனியை அழைத்து, “நீதான் எனக்கு நினைவூட்ட வேண்டும். நான் உன்னிடம் என்னென்ன சொன்னேன்?” என்று கேட்டேன்.

ஆனால் நான் டோனிக்குத் தந்த அறிவுரை எடிட்டோரியல் அறிவுரை அல்ல, அதுவும் நல்ல விளையாட்டு போல்தான் இருந்தது என்றாலும். எல்லாவற்றையும் விட முதன்மையாக, அவர் உடன் பணிபுரிய அருமையான பெண். நாங்களிருவரும் ஒத்த வயதினர், எங்களுக்கு ஒரே மாதிரியான வாசிப்பு அனுபவம் இருந்தது, நாங்கள் ஒரே மாதிரி படிப்பவர்கள், அதனால் விளக்கங்கள் தேவைப்படவில்லை: “இது இருக்கட்டும், இது வேண்டாம்” “புரிகிறது, சரி”. நான் அவருக்குச் செய்த பெரிய உதவி, அவரது முழுநேர வேலையில் இருந்து அவர் விடுபட நான் ஊக்குவித்தேன் என்பதுதான். அவர் ராண்டம் ஹவுசில் எடிட்டராக இருந்தார். “நீ ஒரு எழுத்தாளர். இதை நீ செய்தாக வேண்டியதில்லை. எழுத்தில் உனக்குத் தேவையான பணம் கிடைக்கும். கவலைப்படாதே,” என்று நான் அவரிடம் சொன்னேன்.

அவர் தன் குழந்தையைத் தனியாய் வளர்த்தார், இல்லையா?

ஆமாம், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். “சூலா”வை அடுத்து நான் அவரிடம் சொன்னதுதான் நான் சொன்னதிலேயே அவருக்கு மிகப் பயனுள்ளதாயிருந்த விஷயம் என்று நினைக்கிறேன். “சூலா எந்தக் குறையுமற்ற புத்தகம். நீ இதை மறுபடி எழுத வேண்டியதில்லை” என்று சொன்னேன், “இனி வெளிப்படையாக எழுது”

அது மிகுந்த கட்டுப்பாட்டுடன் எழுதப்பட்டிருந்ததால் குறையற்ற புத்தகமாக இருந்ததா?

அது கச்சிதமாக எழுதப்பட்ட, வடிவ நேர்த்தி கொண்ட நாவல். அது ஒரு சானட் போன்றது. அவருக்கு அதை மீண்டும் செய்ய வேண்டிய தேவை இனியும் இல்லை. அப்போதுதான் அவர், “Song of Solomon” எழுதினார், அதன் ஸ்கேலே வேறு. இந்தக் கதையின் பாடம் நான் எவ்வளவு பெரிய ஜீனியஸ் என்பதல்ல. தான் செய்ய வேண்டும் என்று அவர் ஏற்கெனவே உணர்ந்திருந்ததைச் செய்யும்படி நான் அவருக்கு ஊக்கம் கொடுத்தேன். இப்படித்தான் ஒரு எடிட்டர் உண்மையாக உதவ முடியும், எடிட்டரும் தன் உள்ளுணர்வை நம்பினால்.

எழுத்தாளரின் முன்னேற்றம் குறித்த உள்ளுணர்வுகளா?

வாசிப்பு குறித்த உள்ளுணர்வுகள். இங்கே, இதை நான் சொல்லியாக வேண்டும், எனக்கு வலுவான ஈகோ இருக்கிறது. என் வாசிப்பை நான் நம்புகிறேன்.

ஒரு எடிட்டராக நான் என்ன செய்கிறேன் என்பது உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை. நான் இதைப்பற்றி உண்மையாகவே யோசித்ததில்லை. என்னை பேட்டி எடுக்கும்போதுதான் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். நான் செய்து முடிக்கிறேன், அவ்வளவுதான். அது என் இயல்போடு ஒட்டியது, எழுத்து என் இயல்பல்ல. அதனால்தான் எனக்கு எடிட்டிங்கில் இல்லாத சவால் எழுத்தில் இருக்கிறது. நான் சரி செய்கிறவன். இருப்பது இன்னும் நன்றாக வரும்படி சரி செய்வது என் இயல்பு.

சாலையில் நடந்து செல்லும்போது என்னெதிரே வரும் பெண்ணைப் பார்த்து, “சற்றே பொறுங்கள் அம்மணி, நீங்கள் உண்மையாகவே அழகாக இருக்கிறீர்கள், ஆனால் ஆரஞ்சு உங்களுக்கு ஏற்ற வண்ணமல்ல,” என்று நான் சொல்ல நினைத்த கணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன், அதில் ஒரு புத்திசாலித்தனமும் இருக்கிறது பாருங்கள் – அதனால்தான் இந்தக் கதையைச் சொல்ல உங்கள் முன் இன்று இருக்கிறேன்.

நீங்கள் பாரிஸ் ரிவ்யூ பேட்டியில் சொன்னதில் இது சுவையாக இருந்தது- ஒரு எழுத்தாளன் தன் எடிட்டரிடம் எதிர்பார்க்கும் முதல் விஷயம் அவர் தன் கதை குறித்து எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதைச் செய்ய வேண்டும் என்பதுதான். பல எடிட்டர்கள் இதை உணர்வதில்லை.

பல பேருக்கு இது தெரியாது. அது ஒரு வதை.

காத்திருத்தல்?

அது யாருக்கும் வதையாகவே இருக்கும். ஒரு எழுத்தாளராக எனக்கு இப்படி நேர்ந்தபோது நான் கடுமையாக கோபப்பட்டிருக்கிறேன், விரைவாக பதில் சொல்ல அதிக அவகாசம் தேவைப்படாது என்பது எனக்குத் தெரியும். ஒரு புத்தகமென்றால் அடுத்த நாளே சொல்லி விடலாம். அதிகபட்சம் வார இறுதி வரை காத்திருக்கலாம். 350 பக்க கைப்பிரதியைப் படிக்க எவ்வளவு நேரமாகும்? அதிக அவகாசம் தேவையில்லை.

எனக்குத் தெரிந்தவர்களில் நீங்கள் மிக வேகமாக வாசிக்கக்கூடிய ஒருவர்.

நீ உன் தொழில் என்ற வகையில் ஒரு பிரதியை முதல் தடவை படிக்கும்போது ஒவ்வொரு விவரணைக்காகவும் அதைப் படிக்க வேண்டியதில்லை. நீங்கள் அது குறித்து ஒட்டுமொத்தமாக என்ன நினைக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளவே அந்த எழுத்தாளர் காத்திருக்கிறார்.

நீங்கள் ஒரு நல்ல எடிட்டரா மோசமான எடிட்டரா இல்லை எடிட்டரே இல்லையா என்பது முக்கியமில்லை: நீங்கள் மிக முக்கியமான ஒரு வாசிப்பின் பிரதிநிதி. ஆமாம் அவருடைய கணவர் அதைப் படித்திருக்கிறார். ஆமாம், அவருடைய ஏஜண்ட் அதைப் படித்திருக்கிறார். ஆனால் நீ அதிகாரத்தின் குறியீடாக இருக்கிறாய், அதற்கான தகுதி உனக்கு இல்லை என்றாலும். நீ பணத்தின் குறியீடாகவும் இருக்கிறாய். உனக்கு ஓரளவு நல்ல பெயர் இருந்தால், ஓரளவு நல்ல பெயர் இருக்கிற ஒருவர் தன் புத்தகத்தைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள அந்த எழுத்தாளர் ஆசைப்படுகிறார். நீ பல ஆண்டுகளாக இணைந்து பணிபுரிந்த எழுத்தாளராக இருந்தால், உன் வாசிப்பு இன்னும் முக்கியமானதாக ஆகிறது- visceral connection இருப்பதால்.

நம்புங்கள். 350 பக்கங்களை ஒரே நாளில் படித்து முடிப்பது என்பது மிக சுலபமான ஒன்று, உங்கள் நேரத்தை வீணாக்கும் அத்தனை இதர விஷயங்களையும் நீங்கள் செய்யாதிருந்தால்.– ஏதாவது ஒரு தொடரைப் பார்த்துக் கொண்டிருப்பது. பழைய நண்பர்களுடன் ஒரு ட்ரிங்க்ஸ் எடுத்துக் கொள்ள வெளியே போவது. காடுகளில் நடப்பது – என்பன போல் எதுவும் செய்யாமலிருந்தால். சும்மா உட்கார்ந்து படித்துப் பார்த்துவிட்டு அதைப் பற்றி சொன்னால் போதும். “நாம் இந்தப் பகுதிகளைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. நான் இப்போது திரும்பப் போய் ஒரு எடிட்டராக அதை மறுபடியும் படிக்கவிருக்கிறேன்,” என்று சொன்னால் போதும். இப்படிச் செய்யும்போது ஒரு கவலையை நாம் தீர்த்து விடுகிறோம், எழுத்தாளரின் கவலையை.

900 சொற்களில் எழுதப்படும் கட்டுரைகளில் இப்படி எனக்கு நேர்ந்திருக்கிறது. அதை ஆறு நாட்களாக படிக்குமளவுக்கு எந்த எடிட்டராவது பிசியாக இருக்க முடியுமா? அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? என்னால் அதைப் புரிந்து கொள்ள முடிவதே இல்லை. அதே போல் ஒரு விஷயம் கொடுக்கப்பட்டிருந்தாலோ, அதற்காக பணம் தந்திருந்தாலோ, எப்படி ஒரு எடிட்டரால் அது என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்த தீவிரமான ஆர்வம் இல்லாமல் இருக்க முடியும் என்பதும் எனக்குப் புரிவதில்லை. எழுத்தாளர் என்ன செய்திருக்கிறார் என்பதை எப்போதும் நான் உடனே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். என்னிடம் கொடு! நான் ஏன் சாப்பிட்ட வேண்டும்? அது கால விரயம். பிள்ளைகளுக்குக் கதை சொல்லித்தான் ஆக வேண்டுமா? (ஆமாம்தான்). ஆனால் நான் இன்றிரவு 500 பக்கங்கள் படித்தாக வேண்டும்!

நன்றி  சொல்வனம்

தொடர்புடைய பதிவுகள் :

காப்பி எடிட்டரின் வேலை : சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, தகவல்கள் – இவற்றைச் சரிபார்த்தல் குறித்த நேர்முகம் – ஈடன் லெபுகி – நன்றி சலொன்

கவிதையைத் திருத்தி எழுதுதல் : எலியட்டும் பவுண்டும் – ஹ்யூ கென்னர் – நன்றி english.illinois.edu

கதைகளை எடிட் செய்தல் – ஆலிஸ் மன்ரோ – நன்றி Quill and Quire

காப்பி எடிட்டரின் வேலை – சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, தகவல்கள் – இவற்றைச் சரிபார்த்தல் குறித்த நேர்முகம் – ஈடன் லெபுகி

கைப்பிரதியின் படியைத் திருத்தும் காப்பி எடிட்டர்கள் சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, தகவல்களின் துல்லியம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துபவர்கள். பொது எடிட்டரின் உதவியுடன் உள்ளடக்கம் தீர்மானிக்கப்பட்டபின் காப்பி எடிட்டர்களின் துணையுடன் படி திருத்தம் செய்யப்பட்டு ப்ரூப் ரீடரால் மெய்ப்பு பார்க்கப்படுகிறது. முன்னிலை ஆங்கில பதிப்பகங்கள் பலவற்றில் நீண்ட காலம் படிதிருத்தப் பதிப்பாசிரியராக பணியாற்றிய சுசன் ப்ராடனினி ப்ரெட்ஸின் நேர்முகம் இது. நேர்முகம் கண்டவர் ஈடன் லெபுகி. நன்றி- மில்லியன்ஸ் தளம்.

பதிப்புத்துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றியிருக்கிறீர்கள் – படிதிருத்த பதிப்பாசிரியர் மற்றும் பதிப்பாசிரியப் பணி சார்ந்த வேறு பல துறைகளிலும் பணிபுரிந்திருக்கிறீர்கள். இவற்றில் உங்களுக்குப் பிடித்த வேலை காப்பி எடிட்டிங் செய்வதுதான் என்று சொல்கிறீர்கள். ஏன்?

படைப்புகளைத் தருவித்துத் தரும் பதிப்பாசிரியராய் இருந்தபோது இயன்றதைவிட படி திருத்தம் செய்யும்போது என்னால் கைப்பிரதியை இன்னும் நெருக்கமாக அணுக முடிகிறது. இப்போது நான் ஒவ்வொரு சொல்லையும் வாசிக்கிறேன், ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து வாக்கிய அமைப்பின் வடிவத்தைச் சரி பார்க்கிறேன். படி திருத்தும்போது வாக்கியங்களைக் கடந்து செல்லும் மேம்போக்கான வாசிப்பைச் செய்வதில்லை. கைப்பிரதியை முழுமையாய் பாதிக்கக்கூடிய திருத்தங்களைச் சொல்வதோ, அதன் தரம் குறித்து என் கருத்துகளைப் பகிர்வதோ ஒரு காப்பி எடிட்டராக என் வேலையல்ல. எனவே கதை என்ன என்பதில் என் முழு கவனத்தையும் செலுத்த முடிகிறது, மொழியைச் சொற்கள் மற்றும் வாக்கியங்களின் தளத்தில் கவனிக்கிறேன். வாசகனை மனதில் வைத்துக் கொண்டு வாசிப்பதால் அவருக்கு எது குழப்பமாகவோ சிக்கலாகவோ இருக்கக்கூடும் என்பதை முன்கூட்டியே கணிக்க முயற்சிக்கிறேன். தகவல்களையும் தேதிகளையும் சரி பார்க்கிறேன், பாத்திரங்களும் நிகழ்வுகளும் முரண்பாடுகளற்ற ஒழுங்கு கொண்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்கிறேன். என்னால் எவ்வளவு முழுமையாக வாசிக்க இயலுமோ அவ்வளவு முழுமையாக வாசிக்கிறேன். படைப்புகளைத் தருவித்துக் கொடுக்கும் காலத்தில் சாத்தியப்படாத ஆழமான புரிதல் எனக்கு இப்போது கிடைக்கிறது. (more…)