அதிகாரநந்தி

ஆடு அறியாதது

நீங்கள் வெறும் ஆடு
சிங்கமோ புலியோ இல்லை
வெறும் ஆடு
கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு ஆடு
கயிற்றின் நீளம் வரை போய்வரலாம்
இருந்த இடத்திலேயே குதிக்கலாம்
குரல்வளை நோகக் கூச்சல் போடலாம்
அதற்கு மேல் அனுமதியில்லை
வேறு வாழ்க்கை உமக்கு விதிக்கப்படவில்லை

                                                                         – அதிகாரநந்தி

பிப்ரவரி 14

நெருக்கமாக க்ஷவரம் செய்யப்பட்ட முகம்
ஏதேதோ செய்து திருத்தப்பட்ட முகம்
காற்றில் அலையும் கேசம்
புதிய வாசனை
கண்களை இம்சிக்கும் நிறத்தில்
இறுக்கமான உடை
இரண்டு வருடங்களையாவது
குறைத்துக் காண்பிக்க வேண்டிய நிர்பந்தம்
எதற்கென்றே தெரியாதொரு அசட்டுப் புன்னகை
பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது
ஆனால் இத்தனை பேரும் என்ன,
போருக்கா போகிறார்கள்?

ஏதோ, ஐம்பது  பேராவது வீழ்ந்தால் சரி.

– அதிகாரநந்தி

கிணற்றுப் பிரசங்கி

அந்தக் கிணற்றில் ஒரு தவளை இருக்கிறது

இலக்கியம் என்கிறது இசை என்கிறது
ரசனை என்கிறது கலை என்கிறது
அரசியல்கூடப் பேசுகிறது
லோகக்ஷேமத்தைப் பற்றிக்கூடச் சிந்தித்திருக்கிறது
வறுமையை ஓடஓட விரட்டுவேன் என்கிறது

எந்தப் பிரச்சனை குறித்தும் பேசும் தவ
வலிமையை அடைந்து விட்டிருக்கிறது
முந்தாநாள் நடந்த பிரசங்கத்தில்கூட
கிணற்றுள்ள தவளைகளெல்லாம் ஆச்சரியப்பட்டுப் போயின
எவ்வனொரு சிந்தனைச் செறிவென்று கொண்டாடின.

 

– அதிகாரநந்தி

 

தன்னிருப்பு – அதிகாரநந்தி

’திங்கறதுன்னா தின்னு இல்லாட்டி பட்டினிகிட’ 
என்பதைக் கேட்கும் ஒவ்வொருத்தனுக்கும் ரத்தம் 
கொதிக்கத்தான் செய்யும். 
 
                                               எனக்கும் அப்படித்தான் – 
வயிற்றுக்குத்தான் மான இழவெல்லாம் புரிவதில்லை.