விஜய்

மருத்துவ பாலபாடம் – சட்டியும் அகப்பையும்

விஜய்

கோவைக்கு தென்மேற்கே கேரள எல்லைக்கு அருகில் ஒரு மிஷன் ஆஸ்பத்திரியில் நான் ஜூனியர் சர்ஜனாக பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது. கெஷுவால்ட்டி என்று சொல்லப்படும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வரும் நோயாளிகளை கவனித்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு. பெயரளவில் கெஷுவால்ட்டி சர்ஜனாக இருந்தாலும் அப்பொழுது அங்கே இருந்த சூழ்நிலையில் என் பொறுப்புகள் இன்னும் அதிகமாக இருந்தன. எம்.பி.பி.எஸ் படிப்பு முடித்து அறுவை சிகிச்சை அனுபவம் பெற எங்கள் பிரிவில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு இளம் மருத்துவர்களை கண்காணிப்பதும் அவர்களுக்கு அறுவை சிகிச்சையின் நுணுக்கங்களை சொல்லிக் கொடுப்பதும் என் முழுநேரப் பொறுப்பாக இருந்தது. அனெஸ்தடிஸ்ட் இல்லாத பல சமயங்களில் நானே மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறேன். என்னால் தனியாக சிகிச்சையளிக்க முடியாத  தருணங்களில் மருத்துவமனையின் சீனியர் சர்ஜனை அழைப்பேன். அவர் பாலக்காட்டில் உள்ள தலைமை மருத்துவமனையிலிருந்து வந்து அறுவை சிகிச்சை செய்து முடிப்பார். காயத்திற்கு தையல் போடுவது, ஒட்டுக்குடல், ஹெர்னியா, சிசேரியன் போன்ற சிக்கலில்லாத மைனர் அறுவை சிகிச்சைகள்தான் பெரும்பாலும் எங்கள் மருத்துவமனைக்கு வரும், அவற்றை என் இரண்டு உதவியாளர்களும் நானும் செய்து முடித்துவிடுவோம்.

பொள்ளாச்சிக்கும் பாலக்காட்டுக்கும் நடுவில் ஒரு கிராமத்தில் எங்கள் நிறுவனத்தின் சிறு கிளை மருத்துவமனை ஒன்று இருந்தது. அங்கே முழு நேர மருத்துவராக பொள்ளாச்சிக்காரர் மருத்துவர் முத்துராசா இருந்தார். அங்கிருந்த அடிப்படை வசதிகளுக்குமேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை எங்கள் மருத்துவமனைக்கோ அல்லது பாலக்காட்டு தலைமை மருத்துவமனைக்கோ ஆம்புலன்ஸில் அனுப்பி வைப்பார்.

ஒரு அதிகாலைப் பொழுது வயிற்று வலி என்று வந்திருந்த ஒருவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சிறுநீர் குழாயில் கல் இருப்பது போல் இருந்தது. அதை உறுதிப்படுத்த ஸ்கேன் செய்ய வேண்டும். மேலே தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சின்ன போர்டபிள் ஸ்கேன் மெஷினை எடுத்து வர ஆள் அனுப்பிவிட்டு காத்திருந்தேன். (more…)