கவிதையாக்கம் – விக்ரமாதித்யன்

(1987ஆம் ஆண்டு குற்றாலம் கவிதைப்பட்டறையில் வாசிக்கப்பட்டு நட்புறவுப்பாலம் இதழில் திருத்தி எழுதப்பட்ட கட்டுரையின் பகுதி)
வாழ்க்கைப் பார்வையில் மனவேகம் ஆத்மவிசாரமாக மாற்றம் பெறும்போது, உணர்வுகளும் தத்துவக்கோலம் கொண்டு விடுகின்றன என்பது என் அனுபவம்.
 
ஒரு கவிஞன் தன்னியல்பாகவே சிந்தனையாளனாகவும் இருக்கிறான்; தனக்கு வாய்க்கப்பெற்ற உள்ளுணர்வினால் விஷயங்களை ஊகித்து அறிந்து கொள்கிறான்; தர்க்கரீதியாகவோ காரண காரியங்கள் வழியாகவோ அல்லாமல், புலன்கூர்மை காரணமாகவே சூட்சுமமாக உணர்ந்து கொள்கிறான். ஒரு கட்டத்துக்குப் பிறகு, யதார்த்தங்கள் வெறும் விழுதுகள்தாம் என்று கண்டுகொள்கிறான்; அடிப்படையான உண்மைகள் என்கிற வேர்கள் அவனுக்கு மலைப்பைத் தருகின்றன. அப்போது உணர்வுக் கொந்தளிப்புகள் அடங்கி, தத்துவப்பார்வை ஏற்பட்டு விடுகிறது; சமவெளியில் இறங்கிய நதி போல் ஆகிறது அவன் கவிதை. என் சமீபத்திய கவிதைகள் பலவும் அதுபோலத்தான். இங்கே இரண்டு எடுத்துக்காட்டுகள்:

 
எழுத்தில் என்ன இருக்கிறது

இதிகாசமும்
வரிகளாலானது

வரிகளையுடைத்தால்
வாக்கியங்கள்

வாக்கியங்களை முறித்தால்
வார்த்தைகள்

வார்த்தைகளைப் பிரித்தால்
எழுத்துகள்

எழுத்தில் 
என்ன இருக்கிறது

(உள்வாங்கும் உலகம், பக்கம் 36)

எதுக்கு
 
செம்பருத்திப்பூவின் நிறம்
செண்பகப்பூவின் மணம்
செவ்வந்திப்பூவின் குணம்

(உள்வாங்கும் உலகம், பக்கம் 36)

உள்ளுணர்வை அதிகம் நம்புகிற ஒருவன், செய்திறனில் அவ்வளவாக அக்கறை காட்டாமல் இருப்பதுதான் இயற்கை; ஆனால் கவிஞன் என்று ஸ்திரப்பட்டுவிட்ட பிறகும் அப்படியே இருக்க முடியாது; மேலும், கவிதையைச் செழுமைப்படுத்தச் செய்திறன் கட்டாயம் தேவை; செய்திறன் இல்லாமல், சோதனை முயற்சிகள் மேற்கொள்வது சாத்தியமில்லை; சமீபகாலமாக செய்திறன் இல்லாமல் நான் எழுதுவது இல்லை.
 
பெரும்பாலும், போதையில், ஒரு மன அவசியத்தில் எழுதுவதே என் இயல்பு என்பதாலும், சமயங்களில், எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்ற பேராசையினாலும், நிறைய வரிகள் எழுதிவிடுகிறபோது என் கவிதைகளுக்கு ‘எடிட்டிங்’கும் திரும்ப எழுதுதலும் தவிர்க்க முடியாதவையாகி விடுகின்றன. பிரதியெடுக்கும் போதெல்லாம் வார்த்தைகளை மாற்றிக் கொண்டிருப்பதோ, திருத்திக் கொண்டிருப்பதோகூட உண்டு.
 
பொதுவாக, உத்திகளிலும் கட்டமைப்பிலும் பெரிதாக ஒன்றும் ஈடுபாடு காட்டுவதில்லை; தன் போக்கில் விட்டுவிடுவதுதான் என் போக்கு; வார்த்தைகளை மட்டுமே நம்பிக் கவிதை சொல்லும் மரபின் செல்வாக்கு இதற்குக் காரணமாக இருக்கலாம். இதனால்தானோ என்னவோ, என் கவிதைகள் நேரடித்தன்மை கொண்டதாகவும், எளிமையானதாகவும், எழுதப்படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் புரியக்கூடியதாகவும் அமைத்திருக்கின்றன.
 
(கங்கோத்ரி, 2012 பக்கம் 97 – 99)

நன்றி: கயல் கவின் புக்ஸ் – இணையத்தில் வாங்க

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.