வாசவதத்தை – 1

– ஸ்ரீதர் நாராயணன் –

 

சிந்தாமணி தூபம்
ராஜகிருகம்
சூன்யத்தின் இசை

‘ஆசையை அறுத்தவர்களுக்கு அரசனாக இருந்தாலும் புல்லைப் போலத்தான். ஆனால் ஆசையின் இருப்புதான் அரசனின் விழுமியங்களில் முதலானது….’ விஷ்ணுகுப்தரின் குரல் அந்த நடுநிசியிலும் தலைக்குள் ஒலித்துக் கொண்டிருப்பது போல் இருந்க்கிறது அவனுக்கு. தலையை உதறி நினைப்பைத் தள்ளியபடிக்கு புரள்கிறான்.‘பிரியதர்சி’ என்று முனகியபடிக்கே, அந்த வாளிப்பான குதிரை அவனை வளைத்து இறுகி அணைக்கிறது. கரைந்தும் கரையா மெழுகாய் அதன் உடலின் இளஞ்சூடு இரத்தநாளங்களில் அலையெழுப்ப அவனுக்கு உன்மத்தம் ஏறுகிறது. அவனுக்கு குதிரைகளுடனும், யானைகளுடனும் புழங்குவது எப்போதும் பிரியமானது. அதிலும் இது பேசும் குதிரை. மயக்கத்தில் அனத்தும் குதிரை. அவன் மஞ்சத்தை காட்டுவெளியாக மாற்றும் குதிரை. கேசிகிக்கு, செப்பு பொம்மைபோன்ற சிறிய உடல்தான் என்றாலும், முயக்கத்தின் உச்சத்தில் நான்கு குதிரை ஆற்றல் கொண்டவளாக திமிறுகிறாள். கையும், காலும், இடுப்பும், தொடையும் எங்கும் வியாபித்த மனதை, ஒரே புள்ளியில் கூட்டி நிறுத்தியபடிக்கு, எழும்பி, காற்றில் ஏகி, விண்ணில் பறக்கத் தொடங்குகிறான். உடலே பலம். உடலே ஆயுதம், உடலே நிறைவு. உடலைக் கொண்டே வெற்றி. தலையைத் தூக்கி சூழ்ந்திருக்கும் இருளை துழாவியபடிக்கு பார்க்கிறான். கண் முன்னே மெல்லிய ஒளி மின்னலாய் தெறிக்கிறது. பளபளத்து நெளியும் ஓடாய் சிறுதலையும், பிறையாய் ஒளிரும் முன்நெற்றியின் கீழேக் கனலாய் மின்னும் கண்கள். இறுக்கிப் பிணைந்த கால்களுடன் மூச்சு பதற கீழே மஞ்சத்தில் கிடக்கும் கேசிகியின் கண்களா அவை? அவ்வளவு உயரத்தில் பலகணி பக்கமாக… சட்டென சுளுந்து ஒளியில் முண்டித்த தலையும், திலகமிட்ட முன்நெற்றியும் துலங்க, விஷ்ணுகுபதரின் இறுக்கமான முகம், அவன் புறக்கண்களுக்குத் தெளிகிறது.

‘ஆச்சாரியரே’ என்று அவனறியாமல் கூவுகிறான்.

பதறியபடிக்கு புரள,  அவன் அரையோடு பின்னிக் கொண்டு கேசிகியும் புரண்டாள். அவனுடைய உடல்மயக்கத்தில் பிதற்றியபடிக்கு தழுவியவளை உதறியவாறே எழ நிர்வாணமான உடல் தடுமாறியது. கைக்கு கிடைத்த சீலைத்துணியை பற்றி எடுத்து அரையில் சுற்றுகிறான். மௌனமான பார்த்துக் கொண்டிருக்கும் விஷ்ணுகுப்தர் சைகையால் அறையின் மறுகோடியை சுட்டிக் காட்டிவிட்டு, சுவரிடுக்கில் சொருகியிருந்த சுளுந்தை கெல்லி எடுத்துக் கொண்டு அறைக்கு குறுக்கே நடந்து செல்கிறார். எப்போது வந்தார் இவர்? எவ்வளவு நேரமாக நின்றுகொண்டிருக்கிறார் இங்கே? அநிச்சையாய் மஞ்சத்தின் அருகே சுருட்டி வைக்கப்பட்ட கச்சையில் வாளைக் தேடுகிறான். அறைக்குள் வந்ததும் அவர்தான் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை. திட்டமிடுதல். நடுநிசியிலும் நிலை தடுமாறாதிருத்தல். மனதில் புகைந்தெழுந்த எரிச்சலை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான். ஆச்சாரியரின் வருகையை அறியாத கேசிகி இன்னமும் தன்நிலைக்கு திரும்பவில்லை. சுருதி கூட்டிய யாழைப்போல புன்னகையுடன் அவனைப் பார்த்தபடிக்கு கிடக்கிறாள். அகிற்ப்புகையின் மயக்கம் ஆட்கொண்டிருக்கிறது. விருஷாலியின் தயாரிப்பாக அகிலோடு சேர்த்து வெல்லி இலையின் சாறையும் கலந்திட்ட சிந்தாமணி தூபம்.

தன்னை நிலைப்படுத்திக் கொண்டபடிக்கு ‘ஆச்சாரியர் வந்திருக்கிறார்’ என்று அவளுக்கு கேட்கும்படிக்கு அறிவிக்கிறான். மேனியில் ஒட்டிக்கிடந்த பூவிதழ்களை கைகளால் தட்டி உதறியபடிக்கு விஷ்ணுகுப்தரை பின்பற்றி அறையின் மறுகோடிக்கு செல்கிறான்.

சாளரத்திரையை விலக்கி வெளியில் பார்த்தபடிக்கு நின்றுகொண்டிருந்த விஷ்ணுகுப்தர், அவன் அருகில் வந்ததை உணர்ந்தபடிக்கு, கொண்டு வந்த செய்தியை பகர்கிறார்.

‘ராஜன்! மலையகேது தூதுக்குழு அனுப்பியிருக்கிறான். குமாரச்சாவடியில் தண்டு இறக்கியிருக்கிறார்கள். நண்பகலில் கோட்டைக்குள் எதிர்ப்பார்க்கிறேன்’

நண்பகலுக்கு இன்னும் எத்தனையோ நாழிகைகள் இருக்கின்றன. நடுச்சாமத்தில் தூக்கத்தை கலைத்துக் கொண்டு விவாதிக்க வேண்டிய விஷயமா இது? விஷ்ணுகுப்தரின் வாடிக்கை அதுதான். இந்தக் கோட்டை, ராஜ்ய பரிபாலனம், கௌமுதி உற்சவம், பரிவாரங்களோடு நகர்வலம், விருஷாலியின் பெண்கள் எல்லாம் நான்கைந்து மாதங்களாகத்தானே. பாடலிபுத்திரத்துக்குள் நுழையுமுன்னர், வனங்களில், யானைக்கூட்டத்திடையே மறைந்து உறைந்த போதும், தட்சசீல வீதிகளிடையே பிரச்சாரம் செய்தபடிக்கு திரிந்த காலத்திலும் கூட விஷ்ணுகுபதர் அப்படித்தான். எதை எப்படி அணுகுகிறார் என்பது யாருக்கும் புரியாத புதிர். மகதத்தின் அரசவைக்கே அவரை சமாளிப்பது பெரும் சவால். அவருடைய ஆளுமைக்கு மேலே உயர்ந்த கை வேறொருவரும் கிடையாது. அதை உறுதிபடுத்துவது போலத்தான் இந்த அதிரடி நடுநிசி சந்திப்பு..  மகதம் முழுமைக்கும் விஷ்ணுகுப்தரின் அதிஆளுமை புரிந்துதான் இருந்தது.

நந்தர்களே சுத்த அரச இரத்தம் கிடையாது என்று மந்திரிப் பிரதானிகள் மதிக்கமாட்டார்கள். பாரம்பரிய குலப்பெருமை எதுவுமே இல்லாத அவன் எந்த மூலைக்கு. செப்புக்காசுக்குக்கூட சமானமில்லை.

‘ஏதும் அபாயம் உணர்கிறீர்களா ஆசார்யரே… மலையகேது சமரசம் செய்ய நினைப்பது தெரிந்த விஷயம்தானே’

‘ராஜன், நாம் இப்போதுதான் எழுந்து நிற்கிறோம். மகத்ததின் இப்போதைய தேவை ஸ்திரமான அரசு. அதற்கு இவர்களுடனான சமரச உடன்படிக்கைகள் தேவைதான். ஆனால், புலியின் வாழ்க்கை. பதுங்குவது அல்ல. இதை நீ நன்றாக நினைவில் வைத்திருக்க வேண்டும்’ சற்று நிதானித்துவிட்டு

‘என் கவலை மலையகேது பற்றி அல்ல’ என்கிறார்.

சற்றுத் திரும்பி அவனைப் பார்க்கிறார். இளமை பூரணமாக துலங்கும் உடலுடனும், சந்திரனுக்கு நிகரான களை ததும்பும் முகமுமாக நிற்கிறான். அவனைப் பார்த்ததும் அவர் உள்ளம் உவகை கொள்கிறது. அவருடைய விரிந்த கனவு அவன் முகத்தில் நிலைகொண்டிருப்பதாக தோன்றுகிறது. ஆனால் இப்போதெல்லாம் அவன் கண்களில் வேறொரு கனவின் சாயல் அதிகம் ஒளிர்கிறது. இளமையின் சூடு அனலாய் தெறிக்கிறது. அவன் நினைவு முழுவதும் பெண்களும், போகமும் நிறைத்திருக்கின்றன. பாடலிபுத்திரத்தின் வெற்றிக்கு முன்னர் இருந்த தீட்சண்யம் இப்போது இல்லை யானைகளின் மத்தகத்தை பணியவைத்து பழக்கியும், குதிரைகளின் உடல் சூட்சுமங்களைப் புரிந்து அபாரமாக கையாண்டும், போர்க்கலையை புதியதளத்திற்கு எடுத்து சென்று ஆயிரகணக்கான வீரர்களை உத்வேகம் கொள்ளச் செய்தும், பெரும்போர்ப்படையைத் திரட்டியவன் இல்லை இவன்.

‘ராஜன், மலையகேதுவை விட அந்த அமாத்யன்தான் அபாயகரமானவன். அவன் யாரைத் தெரியுமா தூதுக் குழுவிற்கு தலைமை தாங்க அனுப்பி வைத்திருக்கிறான்… வேகசர்மன். மசோபாவாசி என்றறிகிறேன்’

‘ஓ!’ மசோபா என்பது பாடலிபுத்திரத்தின் மேற்கே இருக்கும் மலைப்பகுதி. மகதத்தின் பெரும் இனக்குழுக்களைக் கடந்து ஒரு மலையகவாசி பெரும் அரசுப் பொறுப்பில் இருப்பது ஆச்சரியம்தான்.

விஷ்ணுகுப்தர் அவன் எண்ணவோட்டத்தை அறிந்துகொண்டது போல ‘அதற்கு காரணமிருக்கிறது. வேகசர்மனோடு வாசவதத்தையும் வந்திருக்கிறாள்’

வாசவதத்தை… பெயர் அறிமுகமானதாகத்தான் இருக்கிறது. தலைக்குள் சுழன்றுகொண்டிருந்த விருஷாலியின் மயக்க புகையும், கேசிகியின் தேகசுகந்தமும் இன்னமும் அவன் சுயநினைவை முழுமையாக மீளவிடாது அடித்துக் கொண்டிருந்தது.

சிங்கரனின் ஓவியக்கூடத்திலோ, பத்ராசலரின் நாட்டிய நாடகங்களிலோ அவள் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறான். இல்லை. இரண்டிலும்தான். வாசவதத்தையின் எழிலும், இசைப்புலமையும் மகதத்தில் பிரசித்தமானதாக்த்தான் இருக்கின்றன. தலையை நன்றாக உலுக்கியபடிக்கு

‘தூதுக்குழுவில் பெண்களா? மலையகேதுவின் அரசுமுறை விசித்திரமாக இருக்கிறதே’ இதழோரமாக கசிந்த புன்னகையில் அவன் மனதில் புரண்டோடும் எண்ணங்கள் புரிகின்றன அவருக்கு. நினைவின் இடுக்குகளிலிருந்து வாசவதத்தையின் பிம்பத்தை அவன் திரட்டிக் கொண்டிருக்கிறான்.

‘மசோபாவாசிகள் மூலிகை வசியம் அறிந்தவர்கள். அவர்களுடைய மிகப்பெரிய போர் ஆயுதமே அதுதான். ‘ அவனைக் கூர்ந்து பார்க்கிறார். ‘அதுவும் மசோபாவாசி பெண்கள் இருக்கிறார்களே…. அவர்கள்…’ நிதானிக்கிறார்.

கலைந்து கிடந்த தன் கூந்தலை சரிசெய்தபடிக்கு அவன், விஷ்ணுகுப்தன் தொடர்ந்து சொல்வதைக் கேட்கக் காத்திருக்கிறான். அவனறியாத பெண்வகை மகதத்தில் உண்டா என்ன. அரண்மணைப் பெண்டிர், அதிகாரத்திலிருக்கும் பெண்கள், அவையில் கொலுவீற்றிருக்கும் பெண்கள், ஆதுரசாலை, மதுசாலை, கல்விசாலை, படைவீடுகள், காட்டுக்குடில்கள்… எவ்வளவுப் பெண்கள்… அதுவும் நந்தர்களின் படைக் கொட்டடியில் இருந்தகாலத்தில்… அவனறியாமல் அவன் உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்குகிறது.

சொல்லவேண்டியதை சொல்லியாயிற்று என்ற தோரணையில் அவனை தீர்க்கமாகப் பார்த்த விஷ்ணுகுப்தர்

‘ராஜன், உதயநாழிகை நெருங்கிவிட்டது. சந்தி வணக்கத்திற்கு செல்லவேண்டும். அலுவல்கள் ஏகத்துக்கு இருக்கின்றன. யுக்த  பிரதானிகளுக்கு பட்டய கையளிப்பு இருக்கிறது. அவர்களின் சந்துஷ்டி நமக்கு மிகவும் முக்கியம்’ அறைவாசலை நோக்கி நடந்தவர், சற்று நிதானித்தபடிக்கு

‘ராஜன், அரசனாகப்பட்டவன் தனிமையில் உறங்குவதே சிறந்தது. அதுவே பாதுகாப்பானதும் கூட’ என்று சொல்லிவிட்டு நீங்கிச் செல்கிறார்.

அறையின் வடக்கு வாயில் வழியே வெளிப்போந்தபோது கேசிகி முன்னமேயே நீங்கிவிட்டதை கவனித்தான். கஷாயக் குவளையோடு நின்றுகொண்டிருந்த பரிசாரகனின் பார்வையிலிருந்த சிரிப்பைக் கண்டதும்தான், அவன் அவசரத்தில் அரையில் சுற்றியிருந்தது கேசிகியின் மார்ச்சீலை என உணர்கிறான். சரிகை வேலைப்பாடுகளோடு கூடிய மெல்லியத்துணி எதையும் மறைத்ததாக தெரியவில்லை. விஷ்ணுகுப்தரை நிமிர்ந்துகூட பார்க்கத் துணியாத பரிசாரகன் தன்னை பரிகாசமாக பார்ப்பதை நினைத்தபடியே, அந்தச் சீலையை அப்படியே உருவி பரிசாரக்ன் மேல் விட்டெறிகிறான்.

‘போய் குளியலுக்கு ஏற்பாடு செய். போ’ என்று எரிச்சலோடு கூச்சலிடுகிறான்.

– ஸ்ரீதர் நாராயணன்

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.