திறந்த சாளரம்

Saki (H. H. Munro)

ஹெக்டர் ஹ்யூக் மன்றோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் எழுத்தாளர். ‘சகி’ என்கிற புனைப்பெயரில் பல படைப்புகள் எழுதி ஓ ஹென்றி, டோரதி பார்க்கர் போன்றவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு கூர்மையான சிறுகதைகள் எழுதியவர். இவர் கதைகளில் காணப்படும் திகில் நிறைந்த அங்கதம் தனித்துவமானது. வெளியாகி நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் The Open Window சிறுகதையின் சுவாரசியம் கடுகளவும் குறையவில்லை. 1986ல் ஷியாம் பெனகலின் இயக்கத்தில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘கதா சாகர்‘ தொடரில் இக் கதையும் இடம்பெற்றது.

oOoOoOoOoOoOoO

னது அத்தை சிறிது நேரத்தில் கீழே வந்துவிடுவார் திரு. நட்டல்’, பதினைந்து வயதான, வெகு மிடுக்கான பெண் ஒருத்தி சொன்னாள், “அதுவரை நீங்கள் என்னோடுதான் பொழுதை கடத்த வேண்டும்”

ஃப்ராம்டன் நட்டல் வரப்போகும் அவளுடைய அத்தையை மறக்காமல், எதையாவது நல்லபடியாகச் சொல்லி, அந்த கணத்தின் மகத்தான மருமகளை மகிழ்வுறச் செய்ய தீவிரமாக முயன்றுக் கொண்டிருந்தான். உண்மையில், இப்படியான அறிமுகமில்லாதவர்களை வரிசையாக சந்திப்பதால்,  அவன் அப்போது மெற்கொண்டிருக்கும் நரம்புமண்டல சிகிச்சைக்கு ஏதும் நலம் பயக்குமா என்று பலமாக சந்தேகித்தான்.

‘அது எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியும்’ அவன் கிராமப்புறத்திற்கு புலம்பெயர தயாரானபோது அவன் சகோதரி சொன்னாள். “நீ உன்னை முழுவதுமாக புதைத்துக் கொண்டு, எந்த ஜீவனோடும் உரையாடாமல் இருக்கப் போகிறாய். சோர்வால் உன்னுடைய நரம்புகள் எப்போதுமில்லாத அளவுக்கு மோசமாகிவிடும். அங்கே எனக்கு தெரிந்தவர் எல்லோருக்கும் அறிமுகக் கடிதம் தருகிறேன். அதில் சிலர், என் நினைவில் இருந்தபடிக்கு, வெகு இனிமையானவர்கள்”

ஃப்ராம்டன் தான் அறிமுகக் கடிதம் காட்ட வந்திருக்கும் திருமதி சேப்பில்டன் அப்படியான இனிமையானவர் பிரிவில் வருவாரா என்று யோசித்தான்.

“இங்கிருப்பவர் பலரை உங்களுக்கு தெரியுமா?”  அந்த மருமகள் கேட்டாள், அவர்களிடையே போதுமான அளவுக்கு மௌனம் நிலவியதை அவதானித்தபடிக்கு.

“ஒருத்தரையும் தெரியாது” என்றான் ஃப்ராம்டன். “என் சகோதரி இங்கேதான் ரெக்டரியில் தங்கியிருந்தாள், நான்கு வருடங்களுக்கு முன்னர், அவள் சிலருக்கு அறிமுகக் கடிதங்கள் தந்தாள்”

கடைசி வாக்கியத்தை தனி வருத்தம் தொனிக்க சொன்னான்.

‘அப்படியானால், உங்களுக்கு என் அத்தையைப் பற்றி உண்மையாகவே ஒன்றும் தெரியாது’, தொடர்ந்தாள் அந்த மிடுக்கான இளம்பெண்.

“அவள் பெயரும் விலாசமும் மட்டும்தான் தெரியும்’, வந்தவன் ஒத்துக்கொண்டான். திருமதி சேப்பில்டன் விதவையா, கணவனுடனிருப்பவரா என்று கூட யோசனையாக இருந்தது. விவரிக்கமுடியாத ஏதோ ஒன்று அந்த அறையில் ஆண் உறைவதை அறிவுறுத்தியது.

“அவருடைய பெருந்துன்பம் நிகழ்ந்து மூன்று வருடங்கள்தான் ஆகின்றன”,  என்றாள் சிறுமி. “உங்கள் சகோதரியின் காலத்திற்கு பின்னர் நிகழ்ந்ததாக இருக்கவேண்டும்”

“அவருடைய பெரும்துன்பம்?” வினவினான் ஃப்ராம்டன்; இந்தக் களைப்பாற்றும் நாட்டுப்புறத்தில் துன்பமெல்லாம் நிகழமுடியாதவை என்று ஏனோ தோன்றியது.

“அக்டோபர் மாத மதியவேளையில், அந்த சாளரத்தை ஏன் விரியத் திறந்து வைத்திருக்கிறோம் என்று நீங்கள் ஆச்சரிப்படலாம்” புல்வெளியை நோக்கியபடிக்கு இருந்த பெரும் ஃப்ரெஞ்சு சாளரத்தை சுட்டிக்காட்டியப்படிக்கே அவள் சொன்னாள்.

“ஆண்டின் இந்த பருவத்தில் நல்ல கதகதப்பாகத்தான் இருக்கிறது”, என்று சொன்னான் ஃப்ராம்டன்; “ஆனால், அந்த சாளரத்துக்கும் பெருந்துன்பத்திற்கும் எதுவும் தொடர்பு உண்டா?”

“அந்த சாளரம் வழியேதான், மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள், அத்தையின் கணவரும், அத்தையின் இரு தம்பிமார்களும் வேட்டைக்குப் போனார்கள். அவர்கள் திரும்பவேயில்லை. அவர்களுக்கு விருப்பமான வேட்டைத் திடலுக்கு போகும் வழியில், முள் புதற்காட்டைக் கடக்கும்போது, ஆழமான புதைசேற்றில் விழுங்கப்பட்டார்கள். அதொரு உக்கிரமான வேனல் பருவம், எப்படி என்றால், எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் இடங்கள்கூட எதிர்பாராமல் திடீரென அபாயகரமானதாகிவிடும். அவர்கள் உடல்கள் மீட்கப்படவேயில்லை. அதுதான் பயங்கரமானது”. இந்த இடத்தில் அந்தச் சிறுமியின் குரல் மிடுக்கு இழந்து தழுதழுப்பான குரலாக ஒலித்தது. “பாவம் அத்தை. என்றாவது ஒருநாள் அவர்களும், அவர்களுடன் சேர்ந்து தொலைந்து போன ஒரு பழுப்புநிற வேட்டைநாயும் மீண்டு, அந்த சன்னல் வழியே வழக்கம்போல நடந்து வருவார்கள் என்று எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அந்த சாளரம் ஒவ்வொரு மாலையும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது, அந்தி கருக்கும்வரை.  பாவம் பிரியத்துக்குரிய அத்தை, அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார், அவர்கள் எப்படி வேட்டைக்குப் போனார்கள் என்று, அவருடைய கணவர் தன் தோளின் மீது, வெள்ளை நீர்க்காப்பு மேலங்கியை அணிந்தபடிக்கும், அவருடைய கடைசித் தம்பி ரோன்னி, ‘பெர்ட்டி ஏன் நீ துள்ளுகிறாய்’ எனப் பாடியபடிக்கும், எப்போதும் போல அத்தையை கோபமூட்டும்படி கிண்டல் அடித்தபடிக்கும். உங்களுக்குத் தெரியுமா, சிலசமயம் இம்மாதிரியான அமைதியான மாலைப்பொழுதுகளில் எனக்குப் புல்லரிக்கும் உணர்வு தோன்றும், அவர்கள் எல்லோரும் இந்த சாளரம் வழியே உள்ளே வருவார்கள் என..”

அவள் ஒரு நடுக்கத்துடன் நிறுத்தினாள். தாமதமாக வர நேர்ந்ததற்கு மாய்ந்து மாய்ந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டே தடபுடலாக அத்தை உள்ளே நுழைந்தது ஃப்ராம்டனுக்கு ஆசுவாசமாக இருந்தது.

“வேரா உன்னோடு வேடிக்கையாக பேசிக்கொண்டிருந்தாள் என நம்புகிறேன்’ ,என்றார் அவர்.

“வெகு சுவாரசியமானவள்’ என்றான் ஃப்ராம்டன்.

‘அந்த திறந்த சாளரம் உனக்கு தொந்தரவாக இல்லை என நம்புறேன்”, என்ற திருமதி சேப்பில்டன், ஆர்வத்துடன், “என் கணவரும், சகோதரர்களும் நேரே வேட்டையிலிருந்து வீட்டுக்கு வந்துவிடுவார்கள். எப்போதும் இந்த சன்னல் வழியேதான் வருவார்கள். சதுப்பு நிலங்களில் இன்றைய வேட்டை என்பதால், என்னுடைய தரைவிரிப்பெல்லாம் பாழ் செய்யப்போகிறார்கள். நீங்க ஆண்பிள்ளைகள் எல்லோரும் இப்படித்தானே”

வேட்டையைப் பற்றியும், பறவைகள் குறைந்துபோய்விட்டதையும், குளிர்காலத்தில் வாத்துகள் கிடைக்கும் சாத்தியத்தைப் பற்றியும் உற்சாகமாக புலம்பிக் கொண்டிருந்தார். ஃப்ராம்டனுக்கு அது எல்லாம் கொடுமையாக இருந்தது. அவன் பரிதாபமாக, ஓரளவுக்கு வெற்றிகரமாக பேச்சை வேறு அமானுடமற்ற தலைப்புகளுக்கு திருப்ப முயன்றான். அவர் ஃப்ராம்டனுக்கு குறைந்த கவனத்தை கொடுத்தவாறு, அவனைத் தாண்டிய புல்வெளியிலேயே கண்களை தொடர்ந்து படரவிட்டப்படிக்கு இருந்தார் என்பதை உணர்ந்தான். இப்படியான பெருந்துன்பத்தை நினைவுபடுத்தும் வருடாந்திரத்தில் அவன் வருகைபுரிந்தது, உண்மையிலேயே துர்பாக்கியமான தற்செயல்.

“மருத்துவர்கள் எல்லாரும் ஒருமித்த குரலில், எனக்கு முழு ஓய்வு தேவை என்றும், மனக்கிளர்ச்சி அடையாமல் இருக்கும்படியும்,, காத்திரமான உடல் உழைப்பு சார்ந்த எதையும் தவிர்க்க வேண்டுமாயும் அறிவுறுத்தினார்கள் ” என்றான் ஃப்ராம்டன், அறிமுகமற்றவர்களுக்கும், ஓரளவுக்கு அறிமுகமானவர்களுக்கும், தன்னுடைய சாதாரண உடல்குறைகளும் நலிவுகளும், அதன் காரணமும் தீர்வும் பற்றி ஆவல் இருக்கும் என்ற எண்ண மயக்கத்தில் உழன்றவனாக. “சாப்பாட்டு பழக்கங்களைப் பற்றி அவர்கள் அவ்வளவு ஒத்துப் போகவில்லை” எனத் தொடர்ந்தான்.

“அப்படியா?” திருமதி சேப்பில்டன் கேட்கும்போதே அவருக்கு கொட்டாவி வந்தது. உடன், சட்டென சுறுசுறுப்பான கவனத்துடன் பிரகாசமானார். ஃப்ராங்க்டன் சொல்வதைக் கேட்டல்ல.

‘இதோ வந்துவிட்டார்கள்!!” எனக் கூவினார். ‘தேநீர் வேளைக்குச் சரியாக. நெற்றிவரை மண்ணில் புதைந்து கிடந்த்வர்கள் போல இருக்கிறார்கள்”

ஃப்ராம்டன் லேசாக நடுங்கியபடிக்கு மருமகளை நோக்கி திரும்பி பார்வையாலேயே பரிதாபத்தைத் தெரியப்படுத்த முயன்றான். அந்தச் சிறுமி, கண்களில் திகைப்பூட்டும் திகிலோடு திறந்த சாளரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதிர்ச்சியில் உறைந்தபடிக்கு விவரிக்கமுடியாத பீதியோடு இருக்கையிலிருந்து சுழன்று திரும்பி அதே திசையில் அவனும் நோக்கினான்.

அந்திவேளையில், மூன்று உருவங்கள் புல்வெளியைக் கடந்து சாளரத்தை நோக்கி வந்து கொண்டிருக்க, எல்லோருடைய கரங்களும் துப்பாக்கிகளை ஏந்தியபடிக்கு இருந்தன. அதில் ஒருவர் தோளில் தொங்கிய வெள்ளை மேலங்கியை கூடுதலாக தாங்கியபடிக்கு இருந்தார். ஒரு களைப்புற்ற பழுப்பு வேட்டைநாய் அவர்களை ஒட்டி வர சத்தமில்லாமல் வீட்டை நெருங்கியதும், ஒரு கரகரப்பான இளம் குரல் பாடத் தொடங்குகிறது இருளிலிருந்து. “நான் சொன்னேன், பெர்ட்டி ஏன் நீ துள்ளுகிறாய்?’.

ஃப்ராம்டன் தொப்பியையும் கைத்தடியையும் காட்டுத்தனமாக சேகரித்துக் கொண்டான்; கண்மூடித்தனமாக வெளியேபபாய்ந்தபோது கூடத்து கதவு, கற்கள் பாவிய நடைபாதை, மற்றும் வெளிக்கதவு எல்லாம் மங்கலாகத்தான் கவனப்பட்டன. சாலையோடு வந்த சைக்கிள்காரன் ஒருவன், உடனடி மோதலை தவிர்க்க விளிம்பை நோக்கி ஓட வேண்டியதாயிற்று.

‘இதோ! நாங்கள் வந்துவிட்டோம் அன்பே!” வெள்ளை மழையாடையை அணிந்திருந்தவர் சொன்னார், சன்னல் வழியே வந்தபடிக்கு. “முற்றிலும் மண்ணாகி இருந்தாலும், பெரும்பாலும் உலர்ந்திருக்கிறது. நாங்கள் வந்ததும் ஓடிப்போனது யார்?”

‘முற்றிலும் அசாதாரண மனிதன், யாரோ மிஸ்டர்..நட்டல்’ திருமதி சேப்பில்டன் சொன்னார். ‘அவனுடைய நோயைப்பற்றி மட்டும் பேசிவிட்டு, நீங்கள் வந்ததும் வருத்தமோ, மரியாதையோ தெரிவிக்காமல் ஓடிவிட்டான். யாராவது பார்த்தால் பேயைப் பார்த்துவிட்டானோ என நினைப்பார்கள்’

“அந்த வேட்டைநாயாகத்தான் இருக்க வேண்டும்” என்று அமைதியாகச் சொன்னாள் மருமகள். “நாய்களோடு அவருக்கு பயங்கர அனுபவம் என்று என்னிடம் சொன்னார். ஒருமுறை எங்கோ கங்கை நதிக்கரையில் வெறிநாய்களால் துரத்தப்பட்டு கல்லறையில், புதிதாக தோண்டப்பட்ட சவக்குழியில் பதுங்கிக்கொண்டு, தலைக்கு மேலே உறுமலும், நுரைத்தலும், இளித்தலுமாய் சுற்றிக் கொண்டிருந்த பிராணிகளுடன் இரவு முழுவதும் கழிக்க வேண்டியதாயிற்றாம். எவருடைய மனநிலையயும் பாதித்திருக்கும்.”

சடுதியில் கற்பனைசெய்து கதைவிடுவது அவளுக்கு கைவந்த கலை.

Saki (H. H. Munro)

தமிழாக்கம்:- ஸ்ரீதர் நாராயணன்

2 comments

  1. ஸ்ரீதர், மிக நல்ல மொழிபெயர்ப்பு, ஆங்கில மூலத்தை வாசித்ததால் தான் சொல்கிறேன் 🙂 மனுஷன் பிஸ்தா போல, பின்னிட்டாரு!

    1. அன்புடன் பாலா!

      வாசித்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி. 🙂

Leave a reply to அன்புடன் பாலா Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.