எரிந்த கட்சி

-ஸ்ரீதர் நாராயணன்-

மங்கையொரு பங்குடைய சங்கரன் நுதல் விழியால்
மன்மதன் எரிந்த கதை பொய்யா – மெய்யா

ஆர்மோனியத்தின் சுருதியை அனுபவித்தபடிக்கு இலாவணி பாடத்தொடங்கினார். முதலில் விநாயகர் வணக்கம். அப்புறம் குருவணக்கம். பிறகு சுற்றி வந்து சலாம் போட்டபடிக்கு சபை வணக்கம் செய்துவிட்டு, அடுத்த கட்டை சுருதிக்கு தாவுகிறார்.

“இப்படியாகத்தானே………..

ராகவிருந்தன், அனங்கன், காமதேவன் என்றெல்லாம் அறியப்பட்ட மாரவேள்…. தன்னிடம்… வந்து மன்றாடிய மலைமகளாம் இமையவன் புத்திரியின் வேண்டுகோளைக் கேட்டபடிக்கு…..

‘ஆலாலக் கண்டன், சுடுகாட்டு சித்தனிடம் சிந்தையை தொலைத்த பேதையே… நானாகப் போய் எப்படி அவனிடத்தில் காமத்தை கெளப்புவது…. ஆளு ரொம்ப கோவக்காரனாச்சுது… என் ஆயுளுக்கு வந்த அபாயமாச்சுது’

மன்மதராசன் மனம் கலங்கி புலம்பும்வாக்கிலே…. அங்கே வந்த பிரும்மன்… ‘தவத்தை கலைத்தால் சிவன் சாபம். செய்யாமல் போனால் இவன் சாபம்’ என்று சினம்கொண்டு உரைக்க….

கையிலே கரும்புவில், தோளிலே மலரம்புகள், கண்ணிலே காமரசம், மார்பிலே சுடர்க்கொடி, உடலிலே சுகந்தவாசம், சொல்லிலே தேன்மாரி என்று பரிபூரண அழகோடு கிளிவாகனத்தில் கயிலாயம் ஏகி….

செக்கச்சிவந்த உடலும், செந்தாமரைக்கண்ணுமாய்
சடைமுடியும் மேனி நெடுக வெண்ணீறும் பூசி
இடையில் புலித்தோலும் எழில்நிலவை தலையில்சூடி
புடைசூழ் பூதங்களுடன் புண்ணியதவத்தில் இருக்குமான

பரமசிவனை பாணத்தால் அடிக்கப்போனானே….

ஏ… ஏ… ஏ… ஏ….

இன்பத்தின் நினைப்பைக் காட்டி
ஈசனின் புத்தியை இப்புறம் இழுக்கும்
மன்மதபானம் மனதை தைத்ததும்

கட்டிக்காத்த தவமத்தனையும்
கொண்ட சக்தி மொத்தமும்
கொட்டிதீர்ந்த குளமாப் போச்சுதடா

தானதந்தன…தந்தனதந்தன
தானதந்தன…தந்தனதந்தன

சீற்றத்தோடு எட்டிப்பார்த்த சிவனின் நெத்திக்கண் முன்னே
பதுங்கிப் பாய்ந்த காமராஜன்
கதியில் எரிந்து சாம்பலாய்ப்போகவும்….

அதிரூபசுந்தரி, ஆருயிர் மனைவி, அனங்கனின் ரதி
அழுதபடிக்கே… அங்கே ஓடி….

அக்கினி கண்ணாலே எரித்துப் போட்டீரே
அரனாருக்கு அடுக்குமா இச்செய்கை
சிவனாரே என்தகப்பா அன்பையன்றி அறியேனே
இனிஎன்ன செய்வேன் ஏதுசெய்வேன்

என்று அரற்றி புலம்பியபடிக்கு… மன்றாட….

மதனெரிந்தால் உலகமுண்டா… செய்தேன் உன் சேர்க்கையாளனை
புவனமனைத்தும் உய்வித்து வளர்க

அவள் மனதுக்கு மட்டும் அனங்கன் பூரணபுருஷனாய் தெரிவான்
என்று பெருமானும் பெருமனதோடு வெகுமதி அளித்திட்டானே…”

என்று ‘காமன் பண்டிகையின்’ மூன்றாவது நாளன்று ‘எரிந்த கட்சி’ சார்பாக இலாவணிக் கலைஞர்கள் பாடிமுடித்தார்கள்.

‘மன்மதனென்று ஒருத்தனும் இனி வரமாட்டான்கள்’ என்று ஆண்களும், அவர்களைப் பார்த்து இப்படியும் அசடுகள் இருக்கிறார்களே என்று பெண்களும் நிம்மதி பெருமூச்சு விட்டபடிக்கு கலைந்து சென்றனர்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.