நான் எதிர்பாராமல் அறிய வந்த விஷயம் இது. நானோ வேறு பிறரோ அறிந்திருப்பதைவிட மிக அதிக அளவில் இது போன்ற நிகழ்வுகள் இருந்திருக்கலாம்.
விருந்தொன்றில் ஒரு முறை நான் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். 1950களில் ஆடன் ந்யூ யார்க்கில் வழிபட்டு வந்த செயின்ட் மார்க்ஸ் இன் த பவரி எபிஸ்கோப்பல் தேவாலயத்தில் வழிபாடுகள் செய்துவந்த பெண் அவர். அதன் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வந்தவர்களில் ஒரு மூதாட்டி கடுமையான அச்சம் காரணமாக உறக்கம் வராமல் அவதிப்படுவதாக ஆடனுக்குத் தெரிய வந்தது என்றார் அந்தப் பெண். எனவே ஆடன் ஒரு கம்பளியை எடுத்துச் சென்று, அவரது அபார்ட்மெண்ட் கதவுக்கு வெளியே இருந்த ஹால்வேயில் உறங்குவதைப் பழக்கப்படுத்திக் கொண்டார். அந்த மூதாட்டியின் அச்சம் நீங்கும்வரை ஆடன் அங்குதான் உறங்கினார்.
ஒரு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய ஒரு நண்பர் அதற்கான பணமின்றி இருந்ததை ஆடனுக்கு ஒருவர் சொன்னதை நினைவு கூர்ந்தார் அங்கிருந்த வேறொருவர். ஆடன் அந்த நண்பரை டின்னருக்கு அழைத்தார். ஆபரேஷன் பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் அவர் விடைபெறும்போது, ‘இதை நீ வைத்துக் கொள்’ என்று சொல்லி, அவரிடம் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்தார். ஆடன் எழுதிய, ‘ஏஜ் ஆஃப் ஆங்க்சைட்டி’, என்ற நூலின் கையெழுத்துப் பிரதி அது. டெக்ஸாஸ் யுனிவர்ஸிட்டி அந்த நோட்டுப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டது, நண்பர் ஆபரேஷன் செய்து கொண்டார்.
ஆடன் விட்டுச் சென்ற ஆவணங்களிலிருந்த சில கடிதங்களைக் கொண்டு வேறொரு விஷயத்தை நான் அறிந்து கொள்ள நேர்ந்தது. இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர், ஆடன் ஐரோப்பிய சேவை மையமொன்றைக் கொண்டு ஒரு ஏற்பாடு செய்திருந்தார். போரில் தம் தாய் தந்தையரை இழந்த இரு அனாதைக் குழந்தைகளுக்குத் தேவையான பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களை ஒவ்வொரு ஆண்டும் வழங்க ஆடன் உதவித்தொகை அளித்திருந்தார். இந்த ஏற்பாடு அவர் 1963ஆம் ஆண்டு அறுபத்து ஆறாம் வயதில் மறையும் வரை வெவ்வேறு அனாதைக் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு தொடர்ந்தது.
சில சமயம் அவர் தன்னலமற்ற செயல்களைச் செய்யும்போதும் வேண்டுமென்றே மற்றவர்கள் தன்னைச் சுயநலமியாக நினைக்கும்படி நடந்து கொண்டார். என்பிஸி தொலைகாட்சி தயாரித்த மாஜிக் ஃப்ளூட்டின் லிப்ரெட்டோவை அவரும் செஸ்டர் கல்மானும மொழிபெயர்த்திருந்தனர். அதன் ஒலிபரப்பு தயாராகிக் கொண்டிருந்தபோது ஓர் நாள் ஆடன் தயாரிப்பாளரின் அலுவலக அறைக்குள் வேகமாக நுழைந்தார். ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தேதிக்கு முன்னதாக இப்போதே தனக்கு பணம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவருக்குக் காசோலை கொடுக்கப்படும்வரை ஆடன் அந்த அறையை விட்டு வெளியேறவில்லை. அதுவரை அங்கு ஒரு அசௌகரியமான சூழலை உருவாக்கிவிட்டார். சில வாரங்கள் கழித்து பணமாக்கப்பட்ட காசோலை என்பிஸிக்கு திரும்பி வந்தபோதுதான் ஒரு விஷயம் தெரிந்தது. அங்கிருந்தவர்களில் ஒருவர்தான் காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை, டாரதி டே’வுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆடன் கையொப்பமிட்டிருப்பதை கவனித்தார். கத்தோலிக்க ஊழியர் அமைப்பின் சார்பாக டே நிர்வகித்து வந்த வீடற்றோருக்கான இருப்பிடத்தை பெருஞ்செலவில் செப்பனிடுமாறு ந்யூ யார்க் நகர தீயணைப்புத் துறை டாரதி டே’வுக்கு உத்தரவிட்டிருந்தது. அப்போது அவரால் மட்டும் போதுமான பணம் திரட்ட முடியாமல் போயிருந்தால் அந்த இடம் பூட்டி வைக்கப்பட்டிருக்கும்.
இலக்கியச் சந்திப்புகளில் அவர் பேராளுமைகளிடமிருந்து தப்பி, அறையில் உள்ளவர்களில் மிகவும் எளிய நபரைத் தேடிச் சென்று சந்திப்பதைப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தார். சென்ற ஆண்டு டைம்ஸ் ஆஃப் லண்டன் இதழில் ஒருவர் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் குறித்து கடிதம் எழுதினார்:
“அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், என் ஆங்கில ஆசிரியர் கிராமப்புறத்தில் இருந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்த என்னை ஒரு இலக்கிய கூடுகைக்காக லண்டன் அழைத்து வந்தார். அங்கே சென்றதும் அவர் என்னைத் தனியாக விட்டுவிட்டு தன் நண்பர்களைச் சந்திக்கச் சென்று விட்டார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். எனக்கு நாகரிகம் தெரியாது, நளினமாக நடந்து கொள்ளத் தெரியாது. என்ன செய்வது என்று எதுவும் தெரியாமல் அங்கிருந்தேன். ஆடன் என் நிலையை உணர்ந்திருக்க வேண்டும். அவர் என்னிடம் வந்து, ‘இங்கிருக்கும் எல்லாரும் உன்னைப் போன்ற தடுமாற்றத்தில்தான் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதைக் காட்டிக் கொள்ளாமல் ஏய்க்கிறார்கள். நீயும் ஏய்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார்.”
தன் வாழ்வின் பிற்பகுதியில் தன் அனுபவங்களைக் கடந்து செல்ல இயலாதவராகவும், கடந்த கால ஏக்கங்கள் நிறைந்தவராகவும் தன்னைச் சித்தரிக்கும் வகையில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதினார் ஆடன். தனது குழந்தைப்பருவத்தின் எட்வார்டிய கற்பனை உலகில் இன்னமும் வாழ்பவராகத் தன்னைக் காட்டிக் கொண்டார் அவர். ஆடனின் “Doggerel by a Senior Citizen” என்ற கவிதை, ‘1969ல் உள்ள நம் பூமி/ எனதென்று நான் அழைக்கும் கோளல்ல” என்று துவங்கி, நவீன காலத்துக்கு எதிரான அதிருப்திகளுடன் தொடர்கிறது: “எதிர்நாவலா, வசனக்கவிதையா/ எது மோசமென்று தீர்மானிக்க முடியவில்லை”. இதை அவர் எழுதிய ஓராண்டுக்குப் பின்னர், என்.ஜே. லாஃப்டிஸ் என்ற இளம் கவிஞர் ஒருவர் எழுதிய “நாடுகடத்தல்களும் யாத்திரைகளும்” என்ற முதல் கவிதைத் தொகுப்பு சந்தர்ப்பவசமாக என் கைக்குக் கிடைத்தது. அதில் இருந்த சில கவிதைகள் வசனக்கவிதைகள். மேலும் பல கவிதைகள் ஹார்லம் மற்றும் ஆப்பிரிக்காவைப் பேசின. ப்ளாக் மார்க்கெட் பிரஸ் என்ற பதிப்பகம் அந்தப் புத்தகத்தை அச்சிட்டிருந்தது, கவிஞரின் நிறப்பற்றை உணர்த்தியது. அந்தப் புத்தகத்தின் அர்ப்பணிப்பு, “என் முதல் நண்பர் டபிள்யூ. எச். ஆடன்” என்றிருந்தது.
சில ஆண்டுகளுக்குப்பின் கனடா நாட்டைச் சேர்ந்த, வீடு புகுந்து கொள்ளையடிப்பவர் ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்தார். ஆடனின் கவிதைகள் தனக்குச் சிறை நூலகத்தில் கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து தான் ஆடனுடன் நீண்ட கடிதத் தொடர்பு கொண்டிருந்ததாகவும், ஆடன் தனக்கு இலக்கியம் குறித்து நட்பாக அக்கடிதங்களில் பயிற்சி அளித்ததாகவும் கூறினார் அவர். குறிப்பாக, அவர் கஃகாவை வாசிக்கத் துவங்கியது ஆடனுக்கு மகிழ்ச்சியளித்தது. அதேபோல் ஆடன், தான் வாசிக்க கவிதைகளைத் தனக்கு அனுப்பிய முகம் தெரியாத இளம் கவிஞர்களுக்கும் அதே அளவில் உதவியாக இருந்தார். பெயரடை, என்ஜாம்ப்மெண்ட் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களுக்கு விபரமான பதில்கள் அளித்து உதவினார்.
இலக்கியம் அல்லது அறம் சார்ந்த விவகாரங்களில் கொள்கை அடிப்படையில் ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டபோது, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் அதைச் செய்தார். ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தாமல் அகங்கார வெளிப்பாடு போல் தோற்றமளித்த ராபர்ட் லவல் போன்ற எழுத்தாளர்களின் அரசியல் போராட்டங்களில் அவருக்குப் பொறுமை இருக்கவில்லை. 1967ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான தேசிய பதக்கம் வழங்கப்பட்டபோது, வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த அந்த நாட்களில் லிண்டன் ஜான்சனின் வெள்ளை மாளிகையில் அதைப் பெற்றுக் கொள்ளவும் அவருக்கு விருப்பம் இருக்கவில்லை, ‘கல் லவல் போல் வெளிப்படையாக அதை மறுத்து தன் எதிர்ப்பைக் காட்டவும்’ அவருக்கு விருப்பமில்லை. எனவே, அந்த நிகழ்வை ஸ்மித்ஸோனியனில் மேற்கொள்ளச் செய்தார். அங்கே அவர் அரசியலும் பரப்புரையும் மொழியைச் சீரழிப்பது குறித்து உரையாற்றி பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.
பதிப்பாசிரியர்களுடனும் பதிப்பகத்தினருடனும் அவர் தொழில்முறைப் பரிமாற்றங்களைப் பிழையற்ற வகையில் மேற்கொண்டார். தேவைப்பட்டபோது கட்டுரைகளை முழுக்க முழுக்க திருத்தி எழுதிக் கொடுக்கவும் செய்தார். குறைந்தது இருமுறை மட்டுமே அவர் திருத்தி எழுத மறுத்திருக்கிறார். தன் நம்பிக்கைகளுக்கு முரணான வகையில் எழுத அமைதியாக மறுத்து, புகழும் பணமும் இழந்தார் ஆடன். 1964ல் லெய்ஃப் ஜோபர்க் உடன் இணைந்து டாக் ஹாமர்ஹொல்ட் மறைந்தபின் அவரது மார்க்கிங்ஸ் என்ற நூலை மொழிபெயர்த்தபோது, அதன் முன்னுரையில், ஹாமர்ஹொல்ட்டின் ‘நார்ஸிஸ்ஸிய சுய வசீகர’த்தைக் குறிப்பிட்டு, யாரும் காணாத வகையில் ஹாமர்ஹொல்டின் சுயபால்விழைவைச் சுட்டிக் காட்டினார். அது முழுமையாக அகம் சார்ந்ததென்றும், அதை அவர் நிறைவு செய்து கொள்ளவில்லை என்றும் கருதினார் ஆடன்:
“தீவிர அன்பு ஏற்றுக்கொள்ளப்படுதல், வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியான மணவாழ்வு – பலருக்கும் உலக வாழ்வில் கிட்டக்கூடிய மிகப்பெரும் இரு இன்பங்களான,இவை தனக்கு இல்லை என்று எண்ண வைக்கும் “‘உடலில் ஒரு முள்””
ஹாமர்ஹொல்டின் உள்ளத்தின் அடியாழத்தில் இருந்த மெசியானிய, தியாக லட்சியத்தையும் அவர் சுட்டிக் காட்டினார். புரட்சிகரமான இடதுசாரி கவிஞராக, இளம்பருவத்தில் புகழ்பெற்றபோது தன்னை ஈர்த்த அதே மெசியானிய பெருங்கனவின் வேறு வடிவத்தை ஹாமர்ஹொல்டில் அடையாளம் கண்டார் ஆடன்.
நோபல் பரிசுக்காக ஆடனை நியமித்திருந்தார் ஹாமர்ஹொல்ட். 1964ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு அளிக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஹாமர்ஹொல்டின் உயிலை நடைமுறைப்படுத்துபவர்களும் அவரது நண்பர்களும் ஆடனின் தட்டச்சுப் பிரதியைப் பார்த்தபின், ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு வெளியுறவுத்துறை அதிகாரி ஆடனைச் சந்தித்தார். ஆடன் எழுதியுள்ளவை தற்போதுள்ள வடிவில் அச்சிடப்படுவது ஸ்வீடிஷ் அகாதெமிக்கு இணக்கமாக இருக்காது என்று மறைமுகமாகச் சொன்னார் அவர், அதைச் சற்றே திருத்தி எழுதலாம் என்றார். ஆடன் அவர் சொன்னதை கவனிக்காதது போலிருந்து விட்டார். இந்த நிகழ்வைக் குறித்து ஒரே ஒரு முறைதான் அவர் பேசியிருப்பதுபோல் தெரிகிறது. அன்று மாலையே அவர் தனது நண்பர் லிங்கன் கிர்ஸ்டனுடன் ஒரு ஹோட்டலில் இரவுணவு கொள்ளும்போது “நோபல் பரிசு போய் விட்டது”, என்று நடந்ததைச் சொல்லியிருக்கிறார். அந்த ஆண்டு பரிசு ழான் பால் சார்த்தருக்கு வழங்கப்பட்டது. அவர் அதை ஏற்க மறுத்தார்.
இரண்டாண்டுகளுக்குப்பின், லைப் இதழ் ரோமானியப் பேரரசின் வீழ்ச்சி பற்றி ஒரு கட்டுரை எழுத அவருக்கு 10000 டாலர்கள் கொடுக்க முன்வைத்தது. “ரோமானியர்கள்” என்ற தொடரில் பல எழுத்தாளர்கள் கட்டுரைகள் எழுதியிருந்தனர். ஆடனின் கட்டுரைதான் அத்தொடரின் இறுதி கட்டுரையாக இருந்திருக்கும். ஆடன் தன் தட்டச்சுப் பிரதியை, இரு பேரரசுகளின் வீழ்ச்சி குறித்து இவ்வாறு தன் எண்ணங்களைப் பதிவு செய்து முடித்திருந்தார்:
“நம்மில் பலரையும் ஒரு அச்சம் வதைக்கிறது என்று நினைக்கிறேன். நம் சமூகம் நொறுங்கிச் சிதறப் போகிறது என்ற உணர்வைச் சொல்கிறேன். அச்சத்தை மட்டுமல்ல, அப்படி அது அழிவது நியாயம்தான் என்ற உணர்வையும் சொல்கிறேன். இங்கே நம் சமூகம் என்று நான் சொல்வது அமெரிக்காவையோ ஐரோப்பாவையோ மட்டுமல்ல, உலகளாவிய தொழில்நுட்ப நாகரிகத்தைச் சொல்கிறேன். அது அதிகாரபூர்வமாக முதலியம், சோஷலிசம், அல்லது கம்யூனிசம் என்ற எந்த லேபல் ஒட்டப்பட்டதாகவும் இருக்கலாம்.”
அமெரிக்கா உலகாளுகிறது என்ற பெருமிதத்தில் இருந்த சகாப்தத்தில் தேசப்பற்று மிகுந்த தங்கள் பெருந்திரள் வாசகர்களுக்கு இத்தகைய விமரிசனத்தை வாசிக்கக் கொடுக்க அதன் பதிப்பாசிரியர்கள் மறுத்தனர். இதைத் திருத்தி எழுதிக் கொடுக்க வேண்டுமென்று ஆடனிடம் சொன்னார்கள். ஆடன் அதைச் செய்ய மறுத்துவிட்டார். இதனால் அவரது கட்டுரை நிராகரிக்கப்படும், தனக்கு சன்மானம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆடன் அப்படி ஒரு கட்டுரையை எழுதியிருந்தது ஆய்வாளர்கள் மத்தியில் பல்லாண்டுகள் தெரிந்திருந்த விஷயம்தான். அது அழிக்கப்படவிருந்த கோப்பு ஒன்றிலிருந்து லைப் இதழின் பதிப்பாசிரியர் ஒருவர் அதைக் காப்பாற்றி வைத்திருந்தார். ஆனால், ஏன் அந்தக் கட்டுரை பதிப்பிக்கப்படவில்லை என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்தக் கட்டுரையின் கதையை ஆடன் ஒரே ஒரு நண்பரிடம் மட்டும்தான் பகிர்ந்து கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. தெக்ளா கிளார்க் என்ற அந்த நண்பர், மைக்கேல் ப்வர்கர்மைஸ்டர் தயாரித்த, “வைஸ்டான்: ஒரு கவிஞனின் வாழ்வும் காதலும் மரணமும்” என்ற ஆவணத் திரைப்படத்தில் இதைப் பதிவு செய்திருக்கிறார்.
தன் நேரத்தையும் பணத்தையும் புரிந்துணர்வையும் கண்ணுக்குத் தெரியாத வகையில் பிறருக்குப் பரிசளித்த ஆடன், தன்னை இறுக்கமானவராகவும் இரக்கமற்றவராகவும் காட்டிக் கொள்ள பல காரணங்கள் இருந்தன. இங்கிலாந்தின் இடதுசாரிகளின் இலக்கிய நாயகனாக அவர் தன் இளம் வயதில் பெற்ற புகழோடு முரண்படும் எதிர்வினையாக இது ஓரளவுக்கு இருந்தது. 1937ல், அவர் முப்பதாவது வயதை எட்டும்முன், லண்டன் பத்திரிக்கை ஒன்று அவரது புகைப்படத்தைத் தன் முன் அட்டையில் பதிப்பித்தது. ஸ்பானிஷ் உள்நாட்டு யுத்தத்தில் பின்னடைவு கண்டிருந்த குடியரசுப் படைகளுக்கு ஆதரவாக ஆம்புலன்ஸ் ஓட்டும் பணியில் ஈடுபட அவர் மாட்ரிட் செல்லவிருக்கிறார் என்பதுதான் செய்தி. (மாறாக, அங்கு அவர் பரப்புரை ஒலிபரப்புப் பிரிவில் இணைக்கப்பட்டார். போர் முனைக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தைக் கண்டபின் அவர் மௌனமாக ஸ்பெயினை விட்டு வெளியேறினார். தன் தரப்புப் போர் வீரர்களின் சில செயல்களை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை).
1939ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடிபுகுந்தார். பொதுவெளியில் அவருக்கு இருந்த மதிப்பைத் தப்ப முயன்றதும் ஒரு காரணம். ஆறு மாதங்களுக்குப் பின்னர், ஒரு அரசியல் மேடையில் உரையாற்றிவிட்டு, அவர் தன் நண்பர் ஒருவருக்கு இவ்வாறு எழுதினார்:
“என்னால் இயலும் என்று திடீரென்று உணர்ந்தேன். என்னால் வீரமான எழுச்சியுரை ஆற்ற முடியும், கூட்டத்தில் இருந்தவர்களைக் கொந்தளிக்கச் செய்ய முடியும் என்று உணர்ந்தேன்…. அது மிகுந்த உணர்வு எழுச்சி அளிக்கும் அனுபவம், ஆனால் முழுமையாக நம்மை அசிங்கப்படுத்தும் அனுபவமும்கூட; பேசி முடித்தபின்னர், என்னை அழுக்கு போர்த்திருப்பது போல் உணர்ந்தேன்”
தனது துவக்ககால புகழ் குறித்து அவருக்கு அசூயை இருந்தது. அறம் சார்ந்த ஒரு பொது பிம்பத்தை உருவாக்கிக் கொண்டதில் கலவையான உள்நோக்கங்கள் தனக்கிருப்பதை அவர் அறிந்திருந்தார். தான் வழிபடப்படுவதும் போற்றப்படுவதும் அவருக்கு மனநிறைவளிப்பதாக இருந்தன. கலைஞர்களுக்கு எந்த விசேட புரிதலும் இல்லாத அரசியல் மற்றும் அறச் சிக்கல்கள் என்று அவர் கருதியவற்றைக் குறித்து கருத்து கூறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோது, தான் அசிங்கப்பட்டது போல் உணர்ந்தார். கலைஞர்கள் பிறரைவிட உயர்ந்தவர்கள் என்று அவர் நினைத்ததில்லை. மாறாக, கலைஞர்கள் எத்தகைய அதிகார, குரூர வசீகரங்களுக்கு ஆளாகின்றனர் என்பதைத் தன்னைக் கொண்டே கண்டார். அவர்களுக்கு, தங்கள் முனைப்புகளைத் தங்களிடமிருந்தே மறைத்துக் கொள்ளும் சிறப்புத் திறன்களும் இருப்பதை உணர்ந்திருந்தார் அவர்.
1939ல், ஆடனது முப்பத்து இரண்டாம் வயதில், அவர் செஸ்டர் கால்மனைக் காதலிக்கத் துவங்கினார். தங்கள் உறவைத் திருமண பந்தமாகக் கருதினார் ஆடன். இரு ஆண்டுகளுக்குப் பின்னர், கால்மன் உறவை முறித்துக் கொண்டார். தனக்கு விசுவாசமாக அவர் இருக்க வேண்டும் என்ற ஆடனின் விருப்பத்தை அவரால் தாள முடியவில்லை. ஆடன், கொலைகாரனுக்குரிய ஆத்திரத்துடன் நடந்து கொண்டார். அவரது கோபம் கால்மனை நோக்கி இருந்திருக்கலாம், அல்லது கால்மனுடன் உறவு கொண்ட நபரிடம் இருந்திருக்கலாம். சில மாதங்களுக்குப் பின்னர், அவர் கால்மனுக்கு கவிதை வடிவில் ஒரு கடிதம் எழுதினார், “உன் பொருட்டு, என் நோக்கத்திலும், செயலிலும்கூட, கிட்டத்தட்ட ஒரு கொலைகாரனாக இருந்திருக்கிறேன்” என்று.
இந்தக் கவிதை எழுதும்போது, அவருக்கு ஏன் இந்தப் பிளவு ஏற்பட்டது என்பது குறித்த புரிதல் ஏற்பட்டிருந்தது. தான் கால்மனை ஒரு ஆதர்ச காதலனாக உருவாக்க முயற்சித்ததே உறவு முறியக் காரணமாக இருந்திருக்கிறது, இந்தக் கற்பனைக் காதலன் மெய்க் காதலனைவிட முக்கியமானவனாக இருந்திருக்கிறான் என்பதை அவர் உணர்ந்தார். தன்னை விட இளம் வயதில் இருந்த கால்மனிடம் தனக்கு காதல் இருந்ததாக தான் நினைத்ததற்கு மாறாக, லிபிடோ டாமினான்டியால் பீடிக்கப்பட்டிருந்ததாக உணர்ந்தார் – ஒருவனை வேறோருவனாக மாற்றக்கூடிய ஆற்றலுக்கான மோகம் என்று தன் காதலை அறிந்தார். இதன் வசீகரத்தை அனைவரும் அனுபவிப்பதுண்டு, ஆனால் கலைஞர்கள் இதற்கு பலியாகும் வாய்ப்பு கூடுதலாக உண்டு என்று அவர் நினைத்தார். சில ஆண்டுகளுக்குப்பின் ஷேக்ஸ்பியரின் சானட்டுகள் பற்றி அவர் ஆற்றிய உரையொன்றில் கூறினார்: “மொழியாலான ஓர் உலகைப் வாசிப்பதில் வழுவி கலை, மானுடனை உருவாக்கும் அபாயகரமான, தடை செய்யப்பட்ட பணி மேற்கொள்ளக்கூடும்”, என்று.
முன்னதாக, தனது இருபதுகளில், அரசியல் கவிஞனாக செயல்பட முயற்சித்துக் கொண்டிருந்த காலத்தில், அவர் ஒரு பன்மைக் கூட்டத்துக்கு எழுத முயற்சித்தார் – அதாவது, தன்னையொத்த ஆர்வங்கள் கொண்ட ஓர் வாசகக் குழு அல்லது வாசகத் தொகுப்பை நோக்கி எழுத முயற்சித்தார். பின்னர், தனியொரு வாசகனை நோக்கிப் பேசுவதுபோல் எழுதுவதுதான் தனக்கு இணக்கமாக இருக்கிறது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். ஆடனுக்கு ஆயிரக்கணக்கான தனிமனிதர்கள் வாசகர்களாக இருக்கக்கூடும், ஆனால் அவர் ஒரே ஒருவரிடம் பேசுவது போலவே எழுதினார். “நான் எழுதிய கவிதைகள் அத்தனையும் காதலால் எழுதப்பட்டவை,” என்றார் அவர். “எழுதி முடித்தபின் அதைச் சந்தைக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கிறேன் என்பது இயல்பான ஒரு செயல்தான். ஆனால், அதை எழுதுவதில் சந்தைப்படுத்தப்படும் சாத்தியத்துக்கு எந்த இடமும் இருந்ததில்லை”
பன்மைப் பரப்பாய் உள்ள வாசகத் தொகையை நோக்கிப் பேசும் எழுத்தாளன், அவர்களது ஒட்டுமொத்த கவனத்தையும் பெறும் தகுதி தனக்கு இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறான். மாபெரும் நவீனர்கள் போல் அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். யேட்ஸ், ஜாய்ஸ், எலியட், பவுண்ட் முதலானவர்கள் தங்களைத் தீவிரமானவர்களாக முன்னிறுத்திக் கொண்டது போல் அவனும் செய்ய வேண்டும். ஒரு முதன்மை தரிசனத்தை அளிப்பவனாக, பண்பாட்டுத் தீர்மானங்கள் அளிக்க வல்லவனாக, தன் காலத்துக்கும் தன் தேசத்துக்கும் திட்டவட்டமான செயல்திட்டம் அளிக்கும் கலைஞன்- நாயகனாக அவன் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும். மாறாக, தனிப்பட்ட ஒற்றை வாசகனை நோக்கிப் பேசும் எழுத்தாளன், தன் துறையில் தேர்ச்சி பெற்றவனாகக் காட்டிக் கொண்டாலும், ஏனைய அத்தனை வகைகளிலும் அவன் தன்னைத் தன் வாசகனுக்கு இணையானவனாக மட்டுமே வெளிப்படுத்திக் கொள்கிறான். அவனுக்குத் தன் கலைக்கு அப்பால் எந்த ஒரு அற அதிகாரமோ, உயர்ந்த உட்புரிதலோ இருப்பதில்லை. ஆடன் அளவுக்கு இந்த விஷயங்களைச் சிந்தித்திருந்தார் வர்ஜினியா வுல்ஃப். எழுத்தாளர்களுடன் சமநிலையற்ற உறவை ஏற்றுக்கொண்ட தனது வாசகர்களை அவர் இவ்வாறு கண்டித்தார்:
“உங்கள் தன்னடக்கத்தின் காரணமாக நீங்கள் எழுத்தாளர்கள் உடலில் உங்கள் உடலில் இல்லாத வேறு ரத்தம் ஓடுவதாகவும் வேறு எலும்புகள் இருப்பதாகவும் நினைப்பதாகத் தெரிகிறது; உங்களை விட அவர்கள் திருமதி ப்ரௌனை நன்றாக அறிந்திருக்கிறார்கள் என்று நீங்கள் நம்புவது போலிருக்கிறது. இதைவிடக் கடும் பிழையொன்று இருப்பதற்கில்லை. வாசகனையும் எழுத்தாளனையும் வேறுபடுத்தும் இந்தப் பிரிவினை, உங்கள் தரப்பின் தன்னடக்கமும் எங்கள் தரப்பின் தொழில் சார்ந்த பாவனைகளும் அலட்டல்களும், நம்மிருவருக்கும் இடையே உள்ள நெருக்கமான, சமநிலையுள்ள கூட்டுறவில் பிறக்க வேண்டிய ஆரோக்கியமான மகவான புத்தகங்களைச் சீரழித்து, நசிக்கின்றன.”
உயிரையும் உள்ளத்தையும் ஆய்வு செய்யும் வீரதீரர்களாகக் கருதி தங்களைப் போற்ற வேண்டும் என்று ஹெமிங்வே முதல் எலியட் வரை பல்வகைப்பட்ட எழுத்தாளர்களும் பொதுமக்களை ஊக்குவித்த சகாப்தத்தில் தான் தவறு செய்வதாயின் தன் தவறு எதிர் திசையில் செய்வதாக இருக்கட்டும் என்று தேர்ந்தெடுத்து, தன்னை உள்ளதினும் அற்பனாகக் காட்டிக் கொண்டவர் ஆடன்.
நன்றி : நியூயார்க் புக்ஸ் (இந்தச் சுட்டியைச் சொடுக்கி முழு கட்டுரையையும் ஆங்கிலத்தில் வாசிக்கலாம்)
தமிழாக்கம் : பீட்டர் பொங்கல்.
தொடர்புடைய பதிவு : வழித்தடங்கள்