ஆகக்கூடிய இருண்மையின் அதியற்புத அற்ப எழுத்து – லோரி மோரின் ‘பார்க்’: ஜெஃப் டயர் நூல் மதிப்பீடு

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : எத்தனை இலை தழைகள் மற்றும் இதர வஸ்துக்கள் போட்டு கொதிக்க வைத்துச் சாப்பிட்டாலும் கனிபலைஸ் செய்வது சுவைக்காக அல்ல. கொடுஞ்சுவையாக இருக்குமென்றாலும் இதயத்தை எடுத்துத் துண்டம் போட்டுச் சாப்பிடுவது அன்னிய அடையாளத்தை அழித்து ஆற்றல்களை உட்கொள்ளவே. இத்தகைய கனிபலியங்கள் பிற மொழி படைப்புகளின் இதயத்தைக் கொணரும் நோக்கத்தில் செய்யப்படுகின்றன, சுவையின் பொருட்டல்ல.

ஊர்வலத்தில் பெய்யும் மழையாய் இருக்கும் விருப்பம் எனக்கில்லை- அதிலும், நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கும் ஓர் ஊர்வலத்தில், ஒப்பீட்டளவில் அபூர்வமாய் நிகழும் ஊர்வலத்தில். ஆனால் குளிரிலும் மழையிலும் வரிசை கட்டி நின்றிருந்த அனைவரின் சார்பிலும் பேசுவதானால், ஒரு சிறு விஷயத்தைப் பதிவு செய்தாக வேண்டும். சரியாகச் சொல்வதானால் இதை ஒரு குற்றமாகச் சொல்ல முடியாதுதான், இந்த ஊர்வலத்தின் சில பகுதிகள் ஏற்கனவே இந்த வட்டாரங்களைக் கடந்து சென்றிருக்கின்றன என்பதை மட்டும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

2008ஆம் ஆண்டில் லோரி மோரின் கலெக்டட் ஸ்டோரிஸ் என்ற தொகுப்பை ஃபேபர் பதிப்பித்திருக்கிறது. முன்னர் தவணை முறையில் வெளிவந்த தொகுப்புகளைச் சொந்தம் கொண்டாடி நேசித்த என்னைப் போன்ற ரசிகர்களைக் கவரும் நோக்கத்தில், மூன்று கதைகள் அண்மைக்கால ந்யூ யார்க்கரில் ஆசை காட்டப்பட்டன. அந்தக் கதைகள் இதில் மீண்டும் வந்திருக்கின்றன. நாய் வருவதற்கு முன்னரே அதன் வால் எப்படியோ வந்துவிட்டது என்று சொல்லலாம். எட்டில் மூன்று கதைகள், அல்லது 160ல் 63 பக்கங்கள், அல்லது மொத்தமாக 40%: நாய்க் கணக்கில், வால் மட்டுமல்ல, அதன் பிருஷ்ட பாகங்களின் கணிசமான பகுதி இது.

இதில் நல்ல செய்தி, கணக்காகப் பேசுவதானால், கதைகளெல்லாம் வழக்கம் போல் 100% அருமையாக இருக்கின்றன என்பதுதான். கதைகளில் ஒன்றுகூட ஊற்றிக் கொள்ளவில்லை. இதுகூடவே, இந்த தொகுப்பின் அடியாழத்தில் அழகார்ந்த, உணர்வார்ந்த ஒருமை உள்ளதென்று யூகிக்கிறேன், 1998ல் வந்த பர்ட்ஸ் ஆஃப் அமெரிக்கா என்ற முந்தைய கதைக்கூட்டில் இல்லாத, நுண்மையான வேறுபாடுகள் கொண்ட ஏதோ ஒன்று இதில் இருக்க வேண்டும். நாய் தொடர்பான மூன்று கவிதையடிகளின் மேற்கோள்கள் அப்படிப்பட்ட ஒருமையை அழுத்திச் சொல்கின்றன.

இவற்றோடு பில்லி காலின்ஸின் ரெவனன்ட்டில் இருந்து நான்காவதாக ஒன்றைச் சேர்ப்பேன் நான். இதில், சங்கேத மொழியில் தூங்கச் செய்யப்பட்ட நாயொன்று, தன் எஜமானனிடம் ஒரே ஒரு விஷயத்தைச் சொல்ல இறந்தவர்களின் உலகிலிருந்து திரும்பி வருகிறது: “நான் உன்னை விரும்பியதேயில்லை”. இதயத்தைத் தகர்க்கும் இந்த தரிசனத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான விஷயம், அந்த நாயின் எஜமானனுக்கு இருக்கும் மனமயக்கமும் அது சார்ந்த அனுமானமும் – அவன் தான் விரும்பப்படுவதாகவோ நேசிக்கப்படுவதாகவோ மட்டுமல்ல, அந்த நாயின் வாழ்வு சுற்றி வரும் சூரியன் தான்தானென்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

விசுவாசம், நேசம், கீழ்ப்படிதல் போன்ற நாய்த்தன நற்குணங்களின் மானுட வார்ப்புகள் அவற்றின் எதிரிடைகளாக வெகுவிரைவில் மாறிவிடுமென்பது 16 வயதுக்கு மேற்பட்ட எவருக்குமே தெரிந்திருக்கும். பெரியமனித அனுபவங்களான ஏமாற்றத்தையும் துரோகத்தையும் வரையறுக்க உதவ வேண்டும் என்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு இவை இருக்கின்றன என்றும்கூட நமக்குத் தோன்றலாம். நமது வாழ்வு பிறரின் வாழ்வைச் சுற்றி வந்து மோதிக் கொள்வதன் லோரி மோரிய புரிதலின் ஜீனியஸ், முதலில் இவற்றை வேறுபடுத்திக்காட்டுவதே கடினமாக இருக்கிறது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தும் உறவுகளின் உடுக்கூட்டங்களை அவரால் அடையாளம் காண முடிகிறது என்பதுதான். அல்லது, முதலும் முடிவும் அறிவதற்கு எவ்வளவு அரிதாய் இருக்கிறது என்பதைச் சொல்வது. அதிலும் குறிப்பாக, சப்ஜெக்ட் டு சேர்ச் போன்ற ஒரு கதை காலக்கிரமத்தை கலைத்துப் போடுகிறது, இறுதிச் சொற்களில் உள்ள “சுபம்” உண்மையில் கதையின் மையத்தில் உள்ள கவலைக்கிடமான காட்சிக்கு பல ஆண்டுகள் முன்னர் நடைபெறுகிறது.

இது போன்ற தீர்மானமின்மையின் நடனம் விங்க்ஸில் விரிவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கேசிக்கும் மில்ட்டுக்குமிடையிலான உண்மையான மே- டிசம்பர் நட்பின் கதை. கேசிக்கும் தோற்கப் பிறந்த அவளது நண்பன், டெஞ்சுக்குமிடையிலான சந்தேகோபஸ்தமான மே- மே காதலின் கதையும்கூட. இது ஒரு கொடுங்கதை என்பது கதையின் நடுவாந்தரத்தில் வெளிப்படும் உண்மையில் விளங்குகிறது. தீமையின் குறியீட்டுத்தன்மை கொண்டதாய் தெரிகிறது அது, ஆனால் பிற விவரங்கள் களங்கமற்ற அச்சுறுத்தல் கொண்டதாயிருக்கின்றன. ‘warted brown vest’ அணிந்திருக்கும் துரிதக்கடை காப்பி முதல் “so old he looked like the kidnapper of his own child” என்று சொல்லத்தக்க நகர்ப்புரத்து புது அப்பா வரை. புராதன மில்ட்டும்கூட, டீக்கறை படிந்த அவனது செபியா சிரிப்புடன் – “a dental x-ray from the 19th century” –, ஒட்டகச்சிவிங்கியை நினைவுபடுத்தும் லிவர் ஸ்பாட்டுகளுடன் சம அளவில் முட்டாளாக, ஆசையானவனாக, அருவருக்கத்தக்கவனாக இருக்கிறான். அவன் ஒரு காலத்தில் நாட்டம் கொண்டிருந்த ஜெர்மன் தத்துவத்தின் சாரம் எதுவென்று கேசியிடம் சொல்கிறான், “Terrible world. Great sky.” இன்னும் கொஞ்சம் மித ஹெகலிய, சற்றே கவனமான சொற்களில் சொல்வதானால், இதன் பொருள் அவன் ஆர்டர் செய்த பனானா ஃப்ளாவர்ட் கஸ்டர்ட், “doesn’t taste like real banana but more like what burped banana tastes like”.

இதைத்தான் இவரை விமரிசிப்பவர்கள் இவர் மீது ஒரு குற்றமாகச் சொல்கிறார்கள். புனைவெழுத்துக்கான மோரின் அடிப்படை ரெசிப்பிகளின் நளினமான அசுசியின் உதாரணமாக இந்த விவரணையே இருக்க முடியும்: ஒட்டுக்கேட்ட துண்டங்களையும் திரும்பத் திரும்ப வாந்தி எடுக்கப்பட்ட நகைச்சுவை துணுக்குகளையும் ஏகத்துக்கும் சார்ந்திருக்கிறார் இவர். ஃபுல் மீல்ஸ் நாவல்களுக்கான பசியில் இருக்கும் வாசகர்கள் எப்போதும் ஆர்டர் செய்யும் முழுநீள சத்தான கதைசொல்லலைக் கொடுக்காமல் இப்படிச் செய்கிறார் இவர். ஆனால் உள்ளடக்கம் என்ன, விஷயம் என்ன என்பதில் உள்ள நம் கவனத்தை. எப்படி பரிமாறப்படுகிறது என்பதன்மீது திருப்புவோம்.

இப்போது இவரது பிரதான பாத்திரங்களில் ஒருவர் நினைவுறுத்துவதை நாம் மனதில் கொள்வது நலம். டிஸ்போசபிள்களின் இந்தக் காலம், “also an age of fantastic adhesives.” உடைந்த இந்த உலகில் வேலை முடிந்ததும் வீசியெறியப்படும் வஸ்துக்களை தவிர்க்க முடியாதவையாகச் செய்ய ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறார் மோர், அவரது கதைகளும் அதன் தொட்டால் உடையும் சத்தியங்களும் பச்சக் என்று ஒட்டிக் கொள்கின்றன. இந்த உண்மைகள் வேறு எந்த புனைவிலும் உள்ளது போல் நுட்பமாகவும் தாக்கத்துடனும் நிகழ்த்தப்படுகின்றன – சுருங்கச் சொல்லப்படுகின்றன என்ற பிறிதொரு அழகும் கூட்டப்பட்டு இந்தக் கதைகள் எப்போதும் போல் ஆகச்சிறந்த நகைச்சுவையாகவும் இருப்பதால், மோர் ஓர் அசாதாரண பெருமைக்குரியவராகிறார் : இந்தச் சுற்று வட்டாரத்திலேயே ஆகச் சிறந்த வகையில் இருண்மையாய் எழுதும் அற்ப எழுத்தாளர் இவர்தான். சோகம், மனம் உடைதல், நோய்மை, துயரம், ஏமாற்றம் – இவை இத்தனை ஜாலியாக இருக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள்? அல்லது, சந்தோஷம் இப்படியொரு எழவாக இருக்குமென்று?

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் எவரும் முந்தைய கதைகளுக்குத் திரும்பிச் சென்று இன்னும் இரண்டு கேள்விகளைக் கொண்டு வருவர். இவரது முதல் தொகுப்பான செல்ஃப்- ஹெல்ப்பில் இருந்த அத்தனை வரள் கொப்பளிப்புக்கும் கலகலப்புக்குமிடையே இந்த இருண்மை மற்றும் கனத்தின் தடயங்கள் ஏற்கனவே இருந்ததா? இது தொடர்பாக இன்னொன்று. இவரது இலக்கியப் பணி இவ்வளவு நீண்ட ஆயுட்காலம் கொண்டதாக இருக்கும் என்பதைச் சுட்டுவதாக ஏதேனும் இருந்ததா? இவர் நெடுந்தொலைவு பயணிக்க வந்திருக்கிறார் என்று தெரிந்ததா? என்னை ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் இதுதான். எதிர்பார்த்தபடி தொனி இப்போது முதிர்ச்சியடைந்திக்கிறது, இவரது எழுத்தின் ஊற்றுக்கண்ணாய் இருக்கும் அனுபவ வட்டம் விரிந்திருக்கிறது என்பதைத்தவிர மோரை வாசிப்பதில் உள்ள சுகம் (இது கலப்பற்ற தூய சுகம்), அடிப்படையில் மாறவில்லை.

இன்றும் இவர் மாபெரும் சாத்தியங்களைக் கொண்ட எழுத்தாளராக இருக்கிறார் என்றால் காரணம், சாத்தியம் இன்றும் இவரது கருப்பொருளாக இருக்கிறது என்பதுதான் – அண்மைக்காலக் கதைகளின் நடுத்தர வயதினர் உலகில் ஒளிபாய்ச்சும் இளம் புத்திரிகள், அட்டகாசமான, ஆனால் அவ்வப்போது அசமஞ்சத்தன்மை கொண்ட இளம்பருவத்தினரின் உருவில் இந்த சாத்தியம் வெளிப்படுகிறது. இவரது கவனத்தின் பாதியேனும் இளமையின் தோற்றுப்போன பின்விளைவுகளில் நிலைகுத்தியிருந்தாலும் சாத்தியமே இவரது கருப்பொருள். இப்போதுதான் அந்த அதியற்புதமான பிளாஸ்திரிகள் அவசியத் தேவையாகவும் கட்டு பிரித்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போவதற்குத் தடைகளாகவும் உள்ளன.

இதையடையும் வழியென்றால் – முன்சொன்ன உருவகங்களுக்குத் திரும்பச் செல்வதானால்- கற்பனையும் பார்வையும் தெளிவாக ஒன்றனுள் ஒன்று டெலஸ்கொப்பியிருப்பதைச் சொல்ல வேண்டும். விவரணைகளை அத்தனை அர்த்தமுள்ளதாக நெருங்கிப் பார்க்கும் திறமையைச் சொல்ல வேண்டும். எத்தனை அர்த்தமுள்ளதாயெனில், பொழிப்புரைகளின் தீர்மானங்களுக்கு இடம் கொடுப்பதில்லை இவை: “She could see the creamy yellow of his teeth, his molars with their mercury eyes.” கேசி உணர்வது போல் இத்தகைய கணங்கள், “the very electricity of the real” ஆகின்றன. பெருங்காட்சியின் கணநேர உக்கிரத்தில் சூழலின் தெளிவு இவற்றுக்கு இணையாகின்றது: “Now the air was filled with the old-silver-jewellery smell of oncoming rain.”

வேறொரு கதையில், ஒரு தம்பதியரின் மணமுறிவைத் தோய்க்கும் ஒளி “the anxious conjugal dusk that was now their only life together”. ஒரு வழியில் இது லார்க்கின்னின் டாக்கிங் இன் பெட்’டின் -“not untrue and not unkind” ஆக உள்ள சொற்களைக் கண்டறிதலின் இடர்ப்பாட்டு சமரசத்தினளவு சோகமான ஒன்றுதான். ஆனால் மோருக்கு இது ஒரு முடிபாக இருப்பதில்லை, ஒரு ஜோக்கில் போய் நிற்கக்கூடிய சாத்தியங்களைக கொண்ட இடைநிலை மட்டுமே இதுவெல்லாம். இது இன்னொரு பொறி கதவாக மாறலாம். பஞ்ச்லைன் போல் தோற்றமளிப்பது பெரும்பாலும் அதைவிட தீவிர பதிலடிக்கான செட்டப்பாக இருக்கிறது. உனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்தால், என்று ஒரு பாத்திரம் சொல்கிறது, “and don’t actually kill yourself, you become known as ‘wry'”. இது செல்ஃப்-ஹெல்ப்பில் இருந்ததுதான்: அப்போது தன்னை அறிந்திருக்கவில்லை.

இது எல்லாம் நம்மை ஒரு முடிவுக்குக் கொண்டு செல்கிறது. இந்த முடிவைச் சொல்லும்போது அது நம்பமுடியாத ஆச்சரியமாக இருக்கிறது: தன் ஐம்பதுகளின் மத்தியில் இருந்தாலும் லோரி மோர் எதிர்காலத்துக்குரிய சாத்தியங்கள் கொண்ட எழுத்தாளராகவே இருக்கிறார். எதுவும் மோசம் போகாமல் இருந்தால், அவர் தனது எழுபதுகளில்தான் உச்சத்தைத் தொடக்கூடும். அது எவ்வளவு பெரிய சிகரமாக இருக்கக்கூடும்: அங்கே போய்ச் சேரும்போது அவரால் எத்தகைய ஆழங்களைத் தொடக்கூடும்.

நன்றி: கார்டியன்

– பீட்டர் பொங்கல்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.